பின்னிரவுகளின் மீது ஊற்றப்பட்ட மை

உண்மையின் 
இரைச்சல் மீது வாளிப்பாய் ஒழுகித்தூர்ந்த 
பின்னிரவுகளின் சாய்வுகளின் மேல் 
உப்பாய்க் கனக்கிறது 
அழியாச்சுடர்.

நிச்சயமான இரவொன்றில் 
பருவங்களால் மூத்த கிளியை 
துரத்திய பின்னரும் 
வளரும் நகமாய் 
உடலெங்கும் ஊர்கிறது.

நிராசைப்போர் பற்றி 
எரிகிறது நகரம்,

ஒவ்வொருமுறையும் 
தன் நிறத்தை மாற்றும் 
ஒக்டோபஸின் மையாய் 
காலம் நிலமெங்கும் ஊர்ந்து 
இரவில் இருட்டுக்குள் சுருளும் வரை 
காத்திருந்த உப்புக்கோது 
மழையில் நீர்ந்து போக
இன்னொருமுறை 
அக்கிளி மையிட்டுக்கொண்டிருக்கிறது.