
ஒரு மொழியின் பெருந்தத்துவ எல்லையென்பது என்றும் நிலைத்து நிற்கும் ஒரு நீளமான கனவின் ஞாபகம் – அல்லது – ஒரு நீளமான கனவென்பது பொய் ஒன்றின் உருவமில்லா இருப்பு.
மீக்காயீல் பிறந்தான். மென்னீலமும் பொன்னிறமுமாய் அந்நிலம் விரிந்திருந்தது. பிறப்பின் பூமியென்று நெடுங்காலமாய் நம்பப்பட்டுவந்த நிலத்திலிருந்து அந்நிலம் வெகு தொலைவிருந்தது. நத்தையுடலின் மேல் மிதக்கும் கோளநிலத்தின் சாயல். அன்பின் நிலமெல்லாம் கோளந்தான். மலைகளைப்போல் பரந்தும் நீண்டும் வளர்ந்துநிற்கின்ற மரங்கள். காற்றில் வலிமையாய் சிறகுவிரித்து நிற்கும் பருந்தினைப்போல அந்நிலம் தரையுமில்லை; அந்தரமுமில்லை. அங்கு இசையுமில்லை, மணமுமில்லை. பருவங்கள் நிறங்களாய்த் தோன்றி அவ்வெளியின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தன. நிறங்கள் ஒவ்வொன்றும் பருவங்கள். இது மழையும் பனியும் நிறை கூதல் பருவத்தின் இறுதிக்கணங்கள். பளிங்காற்றின் நடுவில் கோலொன்று ஆச்சரியமாய் நிற்கிறது. நிலையில்லாமல் அசைந்துருகும் நீர்த் திவலைகள் அதனடியில் மோதித் தெறிக்க அக்கோலின் மேல் பொருந்திநிற்கும் என்தலை வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பேரலைகளைப் போல வானத்து நட்சத்திரங்கள் இரைவதை உணர்ந்தேன். அது சீற்றமில்லை. கொந்தளிப்புமில்லை. ஒரு பருவத்தின் முடிவிற்கும் இன்னொரு பருவத்தின் தொடக்கத்திற்கும் இடையிலான காலத்தில் மட்டும் இரையும் இந்நட்சத்திரங்கள் என் தலையின்மேல் இரைந்துகொண்டிருந்தது பிறப்பொன்றின் அறிகுறி. பெருமழையொன்றின் வெள்ளத்தில் பூமியிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட என் தலை காலக்கோலின் உச்சியில் பிணைந்திருப்பது பிறப்பொன்றினை அறியத்தான். ஆற்றிலிருந்து தவறி நட்சத்திரங்களை நோக்கி நகரும் நீர்த்துமிகள் இடையிலேயே உறைந்து பனியாகின்றன. ஈற்றில் தொலைந்து போனதென நம்பப்படுகின்றவை நட்சத்திரங்களாகின்றன. அந்நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளின் உறைவிடங்களாயின. அவை தேவதைகளின் பரபரப்பினால் இரைகின்றன. பிறப்பின் பரபரப்பு யாரைத்தான் விட்டுவைத்தது. அவர்கள் நட்சத்திரங்களிலிருந்து அக்கோலை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் பளபளக்கும் பச்சிலைகள் நிறைந்திருந்தன. பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.