ஆலயம் தொழுவது சாலவும் நன்று

கண்களை இறுக மூடி தூங்கிக் கொண்டிருந்தான். தூங்க முயற்சி செய்துகொண்டிருந்தான். ஆலய மணி ஓசை அவனை தூங்க விடுவதாய் இல்லை. அவனுக்கு மணி ஓசையை மீறி தூங்கி விட வேண்டும் என்ற கட்டாயம். அடுத்த நாள் அதிகாலை விடிவது அவனுக்காக மட்டும் தான். நேற்றோடு மாதங்கள் ஆறு ஆகி விட்டது. யாரோ செய்த நேர்த்திக்காக இங்கு அனுப்பப்பட்டவன் தான் அவன். அவனோடு நூற்றுக்கணக்கில் அவர்கள், இதையிட்டு அவன் அவ்வப்போது சந்தோசப்பட்டதுண்டு. ஆலயமணி ஓசையின் சத்தம் கொஞ்சமாக குறைந்தது. அவனை தூக்கம் அழைத்து சென்று ஓரமாய் ஒரு மூலையில் போட்டது. இருட்டி இருந்த அறையில் ஆங்கங்கே வெள்ளொளியாய் நினைவுகள் அலைய தொடங்கின. ஒவ்வொன்றாய் அவன் பிடித்து அறைக்கு வெளியே எறிந்தான். அம்மா , அப்பா , தங்கை , அப்பம்மா, தாத்தா, பால்ய நண்பன், பள்ளித்தோழி என எல்லா நினைவுகளையும் தூக்கிப்போட்ட அவனுக்கு ஒரு நினைவு மட்டும் தூக்க முடியாத கனமாய் இருந்தது.

சமய ஆசிரியர் கூறிய அந்த வார்த்தைகள், அப்போது அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அவனை அந்த வார்த்தைகள் பெரிதாக தாக்கவும் இல்லை. அவன் அன்று அதை பொருட்படுத்தி இருந்தாலும் அதில் பிரயோசனமில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த நினைவுகள், கட்டாய தூக்கம், ஆலயமணி ஓசை எல்லாம் விடியும் வரை மட்டும் தான். ஆலய மணியின் ஓசை சற்று கனமான இருந்தது முன்னயதை விட இப்போது. அவன் இருட்டு அறை வெள்ளொளியால் நிரம்பியது. ஆனால் அவன் மனதைத் தான் நிரப்ப முடியவில்லை. அவன் விழித்ததும் கண்கள் கண்ட காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தின. அவனுக்கு முதல் எழுந்த அவர்கள் தத்தம் வேலைகளை பார்க்க தொடங்கி விட்டனர். அவனால் நீண்ட நேரம் அவர்களை பார்க்க முடியவில்லை. கொத்து மணியின் ஓசை அவனின் பார்வையை மறைத்தது.
அவன் ஆவலுடன் காத்திருந்த விடியல் விடிந்து விட்டது. அவன் முற்றத்தில் பொறுக்கிய சிலுவைத் தகடை கைகளில் பொத்திக்கொண்டான், கூடவே சில புத்தகங்கள். குனிந்து செருப்புகளை போட்டுக்கொண்டான். இந்த சோடி செருப்புக்கு இது தான் கடைசி நாள். வெளி உலகை விட இந்த ஆலய வாழ்க்கை தான் உண்மைகளை அதிகம் கற்று தந்தது. அறை வாயிலில் வந்தவன் அவர்களை பார்த்தான், அவர்களின் முகங்கள் புன்னகையால் வாழ்த்துக்கள் சொன்னது. அவர்களின் புன்னகையின் அர்த்தம் அவனுக்கு மேலும் ஊக்கம் தந்தது. ஆறு மாதம் வாழ்ந்த இந்த ஆலயத்தை வெளியேற மனம் இல்லாமல் கால் அடிகள் மெதுவாக எடுத்து வைக்கப்பட்டன. அவன் ஆறு மாத காலத்தில் உழைத்ததிற்காய் கொஞ்ச பணம் சன்மானம் வழங்கப்பட்டது. அதையும் பொத்தி பிடித்துக்கொண்டு ஆலய வாயிலுக்கு வந்தான். அவன் தங்கை கணவனுடன் அங்கு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள், கூடவே அந்த சமய ஆசிரியரும். அவன் கைகளில் உள்ள அனைத்தையும் தங்கையிடம் கொடுத்துவிட்டு ஏதும் பேசாமல் நேராக ஆசிரியரிடம் சென்று காதுக்குள் ஏதோ கூறினான். முடித்துக் கொண்டு கருவறை நோக்கி நடந்தான். ஆசிரியர் கண்கள் நீரில் கரைந்தன. அவனுக்கான தூக்கு கயிறு அவனை அன்போடு அழைத்தது அவன் எதிர் பார்த்த அந்த விடியலுக்காய்.