அறையைப் பற்றி எழுதுதல்.

எல்லோரும்
அவர்களின் அறையைப் பற்றி
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்?

நான் காணாத
எவற்றையெல்லாம் அது வைத்திருக்கிறது?
ஒரு நாளில்
சராசரியாக பத்து மணித்தியாலங்கள்
அதற்குள் தூங்குகிறேன் ;
இரண்டு மணித்தியாலங்கள்
அதற்குள் தூங்குவது போன்று
புரள்கின்றேன்.
அத்தனை நேர சொப்பனத்திலும்
காணாத ஒன்றை,
மிகுதி நேர
விழிப்பிலும் காணாத ஒன்றை,
அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்?
வலிந்து நின்று தவிர்த்தாலும்
அறை மட்டும்
லாவகமாக புகுந்து கொள்கிறது
அனைத்திலும்.
பெரிய தேவாலயத்தின்
முகப்பு போல
அதன் வாசல்:
இல்லை – ஏழை விவசாயியின்
குறுகிய ஓடை போல
வாசல்;
இல்லை ,
அது எது போலவும் இல்லை.
அதற்குள் எத்தனை தடவை
நுழைந்திருப்பேன்,
லட்சம் முறை?
கோடி முறை?
ஆனால் ஒரு முறை கூட
சரியாக பார்க்கவில்லையே!
அலுப்பாகத்தான் இருக்கிறது
அறைக்குள் செல்ல
என்ன செய்ய,
என்
தொடக்கமும் முடிவும்
அது தானே!
எல்லோரும்
அவர்களின் அறையைப் பற்றி_யே
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன்.

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக
உத்தேசித்திருக்கிறேன்.
1.சம்பவம்.

நான்
இருட்டின் வெளிச்சத்தில்
உறங்கிக்கொண்டிருந்தேன்.
அது ஒரு முழுப் பௌர்ணமி நிலவு.
என் படுக்கை அறையின்
கதவு ஓரத்திலிருந்து
நிலத்தாலும்
சுவராலும்
எறும்புகள் என் கட்டிலுக்கு
படையெடுத்தன.
ஜன்னல் ஊட்டாலும்
பூக்கற்களின் ஓட்டைகளாலும்
கதவு திறப்பிடும் துளைகளாலும்
ஈக்களும் பூச்சிகளும்
முட்டி மோதிக்கொண்டு
மொய்த்தன.
கட்டிலின் மேலே
ஒரு மரக்குற்றி சரிந்து கிடப்பதைப்போல
நான் பிரண்டு கிடந்தேன்.
2.குற்றம்.
இறந்தது நான் தான்,
பிணமாய் கிடப்பது என் உடல் தான்,
எறும்புகளும் ஈக்களும்
மொய்ப்பது என் மேல் தான்,
இவை அனைத்தையும்
என்னைப் பார்க்க வைத்தது ஏன்?
எல்லாம் பிரிந்து இறந்த பின்னர்
இத்தனை அவலத்தையும்
காண செய்தது ஏன்?
3.காரணம்.
பொது நூலக வீதியின்
முடக்கு சந்திக்குள்
புதராய் வளர்ந்துபோயிருந்த
காட்டுச் செடிகளின் மேலே
அவளை கண்டேன்.
எத்தனை அவலம் அது.
ஒரு புழுவை கம்பியால் குற்றி
வேக வைத்தது போல
குறண்டு வெளுத்து போயிருந்தது
அவளின் உடல்.
நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
4.பின்புலம்.
பத்து நாட்களுக்கு முன்னர்…..
ஆலயத்தை சுற்றி வளைத்தனர்,
பூசாரி உட்பட நான் அவள் என அனைவரையும்
சம்பவ விசாரிப்பிற்க்காய் அழைத்துச் சென்றனர்.
பூசாரியையும் என்னையும் உடனே
அனுப்பி விட்டனர்.
பின்னர் ஒவ்வொருவராய் அனுப்பினார்கள்.
அவளைத் தவிர
5.குற்றப்பத்திரிகை வாசிப்பு
இன்ன திகதி இன்ன இடத்தில்
இன்ன பெயரைக்கொண்டவர்
தன் காதல் தோல்வியால்
தற்கொலை செய்து கொண்டார்.
6.முடிப்பு.
அவள் யாரோ
நான் யாரோ
குற்றப்பத்திரிகை வேறு என்னவோ

தேவை.

எனது மிக நெருங்கிய உறவினர் இறந்து விட்டார்
ஏதோ கண்காணாத தேசத்தில்,
 
அவருக்கென
ஒரு சவப்பெட்டி
ஆறடியில்.
 
நானும் அந்த மலர்ச்சாலைக்கு
போயிருந்தேன்.
 
விதம் விதமாக
ஒவ்வொரு விலையில்
பல மரங்களின் அர்ப்பணிப்பில்.
 
ஒரு பூ மட்டும் இரண்டு கதவுகளில்
இரண்டு பூக்கள் இரண்டு கதவிலும்
ஒரு பூச்செண்டு
அதனுடன் ஒரு பூ
 
நீங்கள் என்ன ரசனையில் எதிர்பார்கிறீர்கள்?
 
என்னோடு வந்தவர்
கஷ்டப்பட்டு ஒன்றை முடிவு செய்தார்.
 
எனக்கும் பிடித்திருந்தது,
ஆனால் கதவுகள் மூடும் விளிம்பில்
ஏதாவது ஒரு அலங்காரம் இருந்திருக்கலாம்,
இறந்தவர் வெளிநாட்டவர் ஆச்சே.
 
அவர் சுற்றி சுற்றி ஏதும்
உடைசல்கள் இருகின்றதா என்று பார்த்துகொண்டார்.
 
வெளிநாட்டவர் இறைத்த
சில்லறைகள் எங்காவது ஒரு சின்ன உடைசலுக்குள்லாலும்
வெளியே விழுந்து விடலாம்.
 
என் பேர்சில் இருந்த
அப்பா அம்மா  அக்கா
எனது நான்கு மாத தம்பி  எல்லோருடனும்
நான் நின்று எடுத்த
புகைப்படைத்தை பார்த்துவிட்டு
 
ஒரு முறை
அந்த
சவப்பெட்டியின்
விளிம்பில் விரலால் தேய்த்து
தொட்டேன்.
 
விளிம்பு கீறி
தரையெல்லாம் ரத்தம்.

அணுக்கம்.

நீங்கள் கவிதையினை எப்படி அணுகுவீர்கள்?
 
எந்த வசனத்திலிருந்து
அல்லது எந்த எழுத்திலிருந்து
அப்படியும் இல்லையா
அப்போது எந்த புள்ளியிலிருந்து ஆரம்பிப்பீர்கள்?
 
யாராவது தொட்டு காட்டுவார்களா ?
இல்லை அவர்களே வாசிப்பார்களா ?
 
காலையிலா ?
மாலையிலா ?
நடு நிசியிலா ?
அல்லது தூக்கத்தை இடையிலே கலைத்து விட்டு
அரை நித்திரையிலா ?
 
எப்படி தொடங்குவீர்கள் ?
முதல் பந்தியிலேயே ஆரம்பித்துவிடுவீர்களா?
கடைசி வரியிலிருந்து ஆரம்பிப்பீர்களா ?
அல்லது  இடையிடே தொட்டு தொட்டு போவீர்களா ?
 
எந்த நிலையில் இருப்பீர்கள் வாசிக்கும் போது
இருந்து
கிடந்தது
கால்மேல் கால் போட்டு
குப்புற கிடந்து
தலைகீழாக
கன்னத்தில் கை வைத்தபடி
கால்களை ஆட்டிய படி
எப்படி ?
 
இந்த எறும்புகள் போகுமே அப்படியா ?
வெட்ட வெளியில்
மக்கள் நடுவிலே
நின்று சிரிக்கும் ஏமாற்றி வித்தைக்காரனின்
கோமாளி குரங்கை போலாவா ?
 
எப்படி ?
 
ஆழ் சமுத்திரத்தில் முத்து எடுப்பதை போலவா ?
அகன்ற வானில் பட்டம் விடுவதை போலவா ?
 
விளக்கவுரை வாசிப்பீர்களா ?
யாருடையது ?
 
சாப்பிட முன்
நன்றாக கழுவிய  இலையை சுற்றி
தண்ணீர் தெளிப்பதை போல
விளங்காமலே வாசிப்பீர்களா ?
 
இல்லை
வாகனம் மோதிய
நாயின் அலறலை கேட்காத மாதிரி
போகும் சாரதியினை போல
விளங்கியும் விளங்காத மாதிரி வாசிப்பீர்களா?
 
விளங்கவில்லை.
எப்படி ஒரு கவிதையினை
நீங்கள் அணுகுவீர்கள் என்று.
 
அது சரி
பக்கங்களே  இல்லாத
புத்தகங்களில் எழுத்துகள் எப்படி இருக்கும்.
 
அதை அணுகவும்
மூட்டை கணக்கில்
வழிகாட்டிகள்.
 
இப்போதும் அதே சந்தேகம் தான்
 
நீங்கள் மூட்டைகளை எப்படி அணுகுவீர்கள்?

உருவாக்கம்.

மனநோயாளியிடம்
கதைத்துக் கொண்டிருந்த
வைத்தியர்,
தன்னறைக்குள் சென்று
தலையை
சோறிந்து கொண்டார்.

மனநோயாளிகள் பிறப்பதில்லை ; உருவாக்கப்படுகிறார்கள்.

நீள்வட்ட இறப்பு.

எப்போதாவது நீங்கள்
இறந்திருகிறீர்களா?
ஒரு முறையாவது ?
மெல்லிய மழைத்துளி
கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல
சிதறியிருகிறீர்களா ?
ஆழமான கடலின் அடியில்
யாரையாவது சந்திக்கபோகும் போது,
சில வேளைகளில் சந்தித்த பிறகு
எப்போதாவது
இறந்திருகிறீர்களா?

இறந்திருப்பீர்கள்
தெரியாமலே.
அவர்களின் கை குலுக்கல்கள்
புன்சிரிப்பு
நட்பான பார்வை
இதில் எதாவது
உங்களை கவர்ந்திருக்கலாம்.
உங்கள் தூக்கத்தை
அவர்கள் கெடுக்க விரும்பாமல்
மிக மெதுவாக
செய்திருக்கலாம்.
யாருமே உங்களை
எழுப்ப நினைத்திருக்க மாட்டார்கள்,
அவர்களும்
இதோ
இப்பொது
அந்த ஆழ் கடலின்
அடிக்கு அவர்களுக்கு நெருக்கமானவரை
சந்திக்க சென்றுகொண்டு இருப்பார்கள்.
அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்
“மெல்லிய மழைத்துளி
கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல
சிதறியிருகிறீர்களா ?’’
அவர்கள் ஏளனமாக
சிரிப்பார்கள்.
உங்களால் பொறுக்கமுடியாமல் போகும்
நீங்கள் அடுத்த இறப்பிற்கு
தயாரகிக்கொண்டிருபீர்கள்.

தவிப்பு

என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது,
ஊரில் நீண்ட கடற்கரை இருந்தது,
உளக்கி உளக்கி
மண்ணை பதப்படுத்திக்கொள்கிறேன்,

எப்போதோ வரப்போகும்
பஞ்சத்திற்காய்.

காவி

சமர்ப்பணம் செய்யும் முன்பே
சாம்பலாகிப்போன
காகிதங்கள் ,
உச்சியில் இட்ட
குங்கும சிவப்பு ,

இருட்டில்
ஒழித்து வைக்க முயன்ற
எல்லாமே தீப்பற்றிகொள்கின்றன
குங்குமம் சாம்பலாக்கிக்கொண்டிருக்கின்றது

நாட்குறிப்பு

அகன்று போய்
விரிந்து போய் இருக்கின்ற
வானத்தின் குறிப்புகளை
எழுத்திக்கொள்ளலாம் – என்ற
நம்பிக்கையுடன்
இருட்டு அறையில் நான்
மூடிப்போன நாட்குறிப்புடன்