பொதுவாகவே நான் சினிமா பார்ப்பது குறைவு. முக்கியமான படைப்புகளையும் பரிந்துரைகளையும் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வேன். இருந்தும் சமீபகாலமாக சினிமாவின் முக்கிய பிரிவான ஆவணப்படங்களை விரும்பிப்பார்க்கிறேன். எழுத்திலக்கியத்தில் கட்டுரைகளுக்கு அதாவது non- fictionsக்கு இருக்கின்ற அதேயளவு கணத்தினை இந்த ஆவணப்படங்களில் காண்கிறேன். அதே போல நாவல் ஒன்றினை வாசித்துமுடித்த திருப்தியினையும் பெறுகின்றேன். எனக்கு சினிமா மீதிருந்த அவநம்பிக்கையை ஆவணப்படங்கள் இல்லாமல்செய்துகொண்டிருக்கின்றன.
வவுனியாவில் முதன் முதலில் ஆவணப்படம் ஒன்றை மோகனரங்கன் அண்ணாவின் மூலம் பார்த்தேன். அவர் இயக்கிய போர்க்கால சூழலில் தமது அங்கங்களை இழந்தவர்கள் பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் என்று நான் கேள்விப்படுவது விபீசன் அண்ணாவினுடையது. சமீபத்தில் அதற்கான ஒரு படத்தினையும்(poster) வெளியிட்டிருந்தார். ஆவணப்படம் ஒன்றினை இயக்கி வருகிறார் என்பதை முதலே அறிந்திருந்தாலும் எதைப்பற்றியது என்ற எந்த பிரக்ஞையும் இருக்கவில்லை. இப்போது தான் அறிந்தேன். நிறம் தீட்டுவோம் என்று அழகிய எழுத்துருவுடன் ஒரு பாடசாலைப்பையன் கண்ணாடியுடன் கைகாட்டி சிரித்துக்கொண்டிருக்குமாறு படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மோகனரங்கன் அண்ணாவின் ஆவணப்படத்தையும் விபிசன் அண்ணாவின் குறும்பட வெளியீட்டில்தான் திரையிட்டார்கள்.
“பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின் இன்றையநிலைப்பாட்டை தேவைகளை அவை நிவர்த்தியாக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ளல் .. அவர்களைப்பற்றிய சமூகத்தின் உணர்திறனை ஆய்வு செய்தல்..” – என்று தனது முகப்புத்தகத்தில் ஆவணப்படத்திற்கான அறிமுகத்தை செய்திருக்கிறார்.
திகதி சரியாக ஞாபகம் இல்லை, இது வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம். தமிழ் மாமன்றத்தின் விவாதப்பயிலரங்குகளில் ஒன்றிற்காக முதல் நாளே எல்லா ஆயத்தங்களையும் செய்துவிட்டு மூன்று பாடசாலைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். எப்போதும் போல நேரம் பிந்திச்செல்ல – நான் பாடசாலையின் முன் வாசலில் நின்று நிலவரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வரவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிகழ்வு நடக்கின்ற பாடசாலையைத் தவிர வேறு பாடசாலை எதுவும் வரவில்லை. இருந்தும் ஒரு நம்பிக்கையோடு வாசலில் நின்றேன். அப்போது தான் கலைச்செல்வனை முதன்முதலில் பார்த்தேன். ஒருத்தரின் உதவியோடு வாசலின் அருகில் வந்து நிகழ்வுகள் நடப்பதைப்பற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு பார்வைப்புலன் இல்லை அறிந்துகொண்டு என்னோடு நின்ற நண்பன் ஒருவனின் உதவியோடு நிகழ்வு நடக்கின்ற இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.
மாணவர்கள் பயிலரங்கிற்கு புதிது என்பதால் மௌனமாகவே இருந்தார்கள். ஆனால் ஒருத்தர் மட்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். புதிய அவையை எதிர் நோக்குவதையிட்டு பயம் எதுவும் இல்லாமல் தனது கருத்துக்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட இருந்தார் – கலைச்செல்வன். உண்மையில் மாணவர்களிடையே மிகவும் துடிதுடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார். அவர் மூலமாக ஒரு ஆவணப்படம் உருவாகியிருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
விபீசன் அண்ணாவிற்கு படக்குழுமத்திற்கும் வாழ்த்துக்கள்!