இருட்டு இன்னும் ஆழப்படுத்தி கொண்டிருந்து. லைட்டர் வெளிச்சங்கள் மட்டும். ஐந்தாறு சூரியன்கள் இருப்பதுபோல். எம்மில் எத்தனை பெயர் என்று சரியாக தெரியவில்லை. என்னோடு காலையில் அண்ணளவாக அறுபது பேர் வேலை செய்வார்கள். யாரும் என் இனத்தவன் இல்லை. மங்கோலியர்களும், நீக்கிரோக்களும் , அடிமட்ட அமெரிக்கர்களும் தான். என் கசினோ பழக்கம் என்னை இந்த கேவலமான தொழிலுக்கு வழிகோரிவிட்டிருந்தது . இன்றோடு மூன்று மாதங்கள் இந்த நரகத்துக்குள் வந்து. சுரங்க தொழிலில் உள்ள அபாயம் தெரிந்திருந்தும் , என் பெயரெல்லாம் இந்த சூழ்நிலைக்கு தேவை இல்லாத விடயம். எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவன் படிக்கிறான் , இன்னொருவன் மடிக்குழந்தை. என் மனைவி அவ்வளவாக படிக்கவில்லை. நான் வேலைசெய்த பழைய டாக்ஸி நிறுவனத்தில் என் செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆஹா என்றில்லாமல் ஓரளவுக்கு நிதானமான வாழ்க்கை. செலவு போக எதுவும் சேமிப்புக்கு மிஞ்சியதில்லை. கஸ்டமர்களை இறக்கி விடுவதோடு சரி ,வங்கி பக்கம் அவசரத்துக்கு கூட போனதில்லை. எனது பெயர் அடா மாக்ஸ் என்று எந்த வங்கி ஊழியரிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆ….. ஒருமுறை இதே கதையை ஒரு கஸ்டமருக்கு சொல்லி இருக்கிறேன். அவருக்கு தெரிந்திருக்கலாம்.
நான் சபிக்கப்பட்டவன். அன்று ஒரு கோர்ட் சூட் போட்ட பணக்காரனால் தான் இந்த நிலைமை இன்று. தேவன் கூறும் அசுத்த ஆத்மா அவனாகத்தான் இருக்க முடியும். பார்க்க எடுப்பான தோற்றம் , முரடன் போல தெரியவில்லை. தலையில் முடி இருந்ததற்க்கான எந்த அடையாளமும் இல்லை. பனி தலையில் விழுந்து வழுக்கி விளையாடும் அளவு மிருதுவானதாக தோற்றம் அளித்தது. இறுக்கமான வெள்ளை கருப்பு கலந்த கோர்ட் சூட் போட்டு இருந்தார். பழுப்பு வெள்ளி நிற ட்ரை. கையில் கனமான ஒரு பை. விலைமதிப்பு கூடிய பை என ஒரு பார்வையிலேயே தெரிந்து கொண்டேன். எப்பிடி இவளவு அழுத்தமாக நினைவு இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? குறை காலனை எப்பிடி மறக்க முடியும். அவனிடமும் என் இதே கதையை எங்கும் விலகாமல் உளறினேன். கடைசியாக உங்களுக்கு முன்னர் என் கதையை கூறியது இவனிடம் தான். எல்லாவற்றையும் அமைதியாக செவிமடுத்துக்கொண்டே வந்தான். இடைக்கிடை ” excuse me ” என்றுவிட்டு தொலைபேசியில் உரையாடுவான். இடையிடையே நான்கு அழைப்புகள் வந்திருக்கும் , எல்லாமே பண விஷயம் தான். ஆயிரம் டாலர் கணக்கில் இல்லை , மில்லியனில். பேசி முடிந்தவுடன் ” go a head ” என்பான். நானும் இறங்கும் போது ஏதும் கொஞ்சம் கூட்டி தருவான் என்ற எதிர்பார்ப்புடன் கதையை சோகமாக அவிழ்த்து விட்டேன். மேல் பக்க கண்ணாடியில் பார்வையை நகர்த்தி அவனைப்பார்த்தால் எந்த சலனமும் இல்லாமை வீதியை வெறிச்சோடியபடி பார்த்துக்கொண்டே வந்தான். கதை நடுவே ”sir ” என்பதை அழுத்தி அவனது பார்வையை திசை திருப்ப முயற்சி செய்வேன். அவன் லேசாக தலையை ஆட்டுவான், அதிலிருந்து என்னை அவன் பின் தொடர்கிறான் என்று ஊகித்துக்கொள்வேன்.
இரவு பத்தை தாண்டியிருக்கும், வாகன நெரிசலில் எந்த மாற்றமும் இல்லை. ஆமை போல ஊர்ந்தது. முக்கால் மணிநேர பயணம் அது, ஹூஸ்டன் நகரின் மிக ஆடம்பரமான பப் தான் ரிக்கோ, அவர் தன்னை அங்கே இறக்கி விட சொன்னதில் எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஸ்டேட்ஸ்இன் பெரும்புள்ளிகள் மட்டுமே அங்கு செல்வார்கள். முக்கால் மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் என் மூளையையும் வாயையும் குடைந்து கொண்டே இருந்தது, ஏன் இப்படிப்பட்டவர் டாக்ஸியில் வர வேண்டும் ? இருந்தும் ஒரு போதும் அவரிடம் இதை பற்றி விசாரிக்கவே இல்லை. என் கண்களில் அவர் தரப்போகும் எக்ஸ்ட்ரா டொலர் தான் மின்னிக்கொண்டிருந்தது. அதில் என் மகனுக்கு ஏதாவது புதிதாய் ஒரு விளையாட்டுப்பொருள் போகும் போது வாங்கிக்கொண்டு போய் அசத்திவிடவேண்டும். ஆ… அவன் நான் ஓடுவதைப்போல் டாக்ஸி கேட்ட ஞாபகம்…..
எங்கோ சில பத்து மீட்டர்களுக்கு அப்பால் மின்சார தடை போல இருந்தது , ஹோஸ்டனில் இது அசாதாரணமான ஒன்று. இல்லை…. ஒரு லைட்டர் எரிந்து முடிந்து போனது. அந்த இடம் அண்டத்தின் சூனியம் போல இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் எது என ஊகிக்க முடியவில்லை , லைட்டர்களை பிடித்திருப்போரின் முகங்கள் மட்டும் வியர்த்து கொட்டி இருந்தது.எனக்கும் சாதுவாக…., எத்தனை லைட்டர்கள் எவ்வளவு நேரம் என்ற கணக்கு தெரிந்திருக்கவில்லை. விறைத்து பொய் இருந்தவர்கள் முனகத்தொடங்கி இருந்தார்கள், அதுவரை அவர்கள் ஆங்கிலம் கதைத்துத்தான் கேட்டு இருக்கிறேன், இப்போது யாரும் பேசுவதாய் இல்லை. அவரவர் தாய் மொழிகளில் அலற ஆரம்பித்தார்கள். ஒரு பக்கம் பெயர்தெரியாத கடவுள்களின் பெயர்களெல்லாம் ஜெபிக்க தொடங்கியிருந்தார்கள்.இந்த சுரங்கத்தின் ஆழக்கணக்கெல்லாம் தெரியாது, நல்ல ஆழம், இல்லை கேட்ட ஆழம்…. ஒவ்வொரு நாளும் ஆழத்தின் அளவு பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சதுரமான இரும்பு கன்டைனரில் நாலு பக்கமும் அடைத்து இருக்க ஆழத்துக்குள் என்னையும் மற்றவர்களையும் இறங்குவார்கள், எங்கள் பணி ஆழத்தில் உள்ள ராக் பிரேக்கர் உடைத்து தரும் பாறைகளை, நாம் இருக்கும் பெரிய கன்டைனரில் உள்ள கிரசரால் நொறுக்கி வரும் தூள்களையும் துகள்களையும் அங்கேயே நிரந்தரமாகி இருக்கின்ற இன்னொரு அசையக்கூடிய கன்டைனருக்கு உருள் வண்டியில் கொண்டுசெல்வது . எப்படியும் ஒரு நூறு தரவை நாளைக்கு கொண்டு செல்வோம். ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர வேலை, ஏற்ற சம்பளம், இருக்கும் கடனை அடைக்க , வறுமையில் வாடும் குடும்பத்தை மீட்க ஜேசு காட்டிய ஒரே வழி இதுதான்.
ரிக்கோ ஹோட்டலை அண்மித்தது வண்டி, தனது பையில் இருந்து ஒரு ஹல்ப் கோர்ட்டை எடுத்துக்கொண்டார். அவர் அணிந்திருந்த நீள கோர்ட்டையும் டையையும் கழட்டி மடித்து வைத்துவிட்டு ஹல்ப் கோர்ட்டையும் பௌவையும் மாட்டிக்கொண்டார் , முன் கண்ணாடியையே பார்த்துகொண்டுவந்த எனக்கு ஏமாற்றம் பித்தாக்கியது , அசல் ஹோட்டல் சர்வர் போலவே காட்சி தந்தார். இவளவு நேரம் அலம்பியது வீணா ? யார் எவர் எண்டு விசாரித்து அல்லவே கதையை தொடக்கி இருக்க வேண்டும் என்று மனம் அதட்டி கொண்டது, என் மகனுக்கான டாக்ஸி கனவு உறைந்து போனது. முன் பார்வைக் கண்ணாடியில் படிந்த மென் பனியை வைப்பர் அகற்றுவது போல் கனவையும் மனம் அகற்றிக்கொண்டது.ரிகாவின் அகன்ற வாயிலின் வழியே டாக்ஸி உல் நோக்கி சென்றது .அவர் நிதானமாக இறங்கிக்கொண்டார். அவரது கைப்பை இன்னும் கனத்திருந்ததை பார்த்து தலையை ஸ்டேரிங்க்களுள் புதைத்துக்கொண்டேன் . தனது பர்சினை புரட்டி கட்டணம் செலுத்தினார், எப்படியும் கூட தேறாது என்று நம்பிக்கையிலும் சலிப்பிலும் காசை எடுத்து எண்ண தொடங்கினேன். ஒரு பெனி கூட அதிகம் இல்லை. எதிர் பார்த்தது தான். நிறைய நேரம் ஆகியிருக்காது, ஆனால் அவர் உடனே மறைந்துவிட்டார். யாரோ கண்ணாடியில் தட்டுவது போல் இருந்தது, திரும்பினேன். பாதுகாப்பாளர் ஒருவர் முன்னோக்கியோ பின்னோக்கியோ டாக்ஸியை எடுக்கும் படி கூறிக்கொண்டிருப்பது, உதட்டசைவில் தெரிந்தது. கண்ணாடியை இறக்கி எடுப்பதாக கூறிவிட்டு பின்னோக்கி டாக்ஸியை செலுத்தினேன். மீண்டும் யாரோ பின் கண்ணாடியில் தட்டுவது போல இருந்தது, நான் கோவப்பட்டு விரைவாக எடுத்துவிடுவதாக அலறினேன்.

”excuse me ”
அதே குரல் , அதே ஹல்ப் கோர்ட் , அதே போவ் , வெறிச்சோடிய பார்வை மட்டும் தொலைந்து போயிருந்தது. எதையாவது மறந்து விட்டாரா என பின் பக்கம் நோட்டம் இட்டேன் , இல்லை எதுவும் இல்லை.பிறகு ஏன் என்ற கேள்வி துளைத்தது. டாக்ஸியை ஓரப்படுத்தினேன். அவர் கண்களில் ஒரு தேவ அருள் தெரிந்தது, வேறொரு மொழியில் கதைக்க தொடங்கினார். எனக்கு விளங்கியிருக்காது என அவருக்கு அப்பட்டமாக என் முகபாவனை உணர்த்தி இருக்கும். இருந்தும் நான் ஈர்க்கப்பட்டேன் , டாக்ஸியினை லாக் செய்துவிட்டு ரிகோக்குள் நடக்க தொடங்கினோம்.
வெளிக்கட்டடம் தான் பழமையானது போல தோற்றம் அழைத்தது, உள்ளே எலிசபெத் அரண்மனை போல இருந்தது. அடுக்கி அடுக்கி தேனிக்கூடு போல உள்தோற்றம். பிரமிப்பில் ஆழ்ந்து இருந்தேன்.கொஞ்ச தூரம் நடந்துபோயிருப்போம், உள்ளக விளையாட்டு அரங்கம் அது. பத்து மேஜைகள் இருந்திருக்கும், எல்லாமே நீல நிற வழவழப்பான மார்பிளால் ஆனவை. மேஜைக்கு இருபதுபேர் என்ற கணக்கில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்திருக்க வேண்டும்.
”mike author ” என்றார். திரும்பி பார்த்தேன், புன்னகையுடன் இது இந்த கிளப்புக்கு மட்டுமே தனித்துவமான கசினோ விளையாட்டின் வகை என அறிமுகம் தந்தார். என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் கணமே மூலை மேஜையில் இருந்தவர் , ” completed , take that money bag ” என்றுகொண்டு அகன்ற பெரிய பையொன்றை தூக்கிக்கொண்டார். வியப்பில் ஆழ்ந்தேன். அவர் வரும் போது ஒரே ஒரு காரினை கொண்டுவந்ததாகவும் , விளையாடிய பின்னர் ஐம்பது காருக்குரிய பணத்தினை எடுத்து செல்வதாகவும் கூறினார். பிரமாண்ட வியப்பில் ஆழ்ந்தேன். என் மகன் கேட்ட டாக்ஸியின் ஞாபகம் வந்து மனக்கண்ணில் நின்றது. அவர் சந்தோசத்துடன் அடுத்த மேஜைக்கு பணக்கட்டை எடுத்து வைத்திருந்தார், சிகார் புகையில் அவர் தேவ ஆசி பெற்றிப்பதுபோல தோன்றியது.
எனது டாக்ஸியின் திறப்பை மேஜையொன்றில் வைத்தேன், ஆட்டம் ஆரம்பமானது. என் ஆட்சி மேலோங்க ஆரம்பித்தது அருகேயே இருந்து என்னை வழிகாட்டிக்கொண்டிருந்தார் அவர், அவரை எல்லாரும் கிறிஸ்டென் என அழைத்தது ஞாபகம் இருக்கிறது, இருந்தும் நான் அவரை சார் என்றே அழைத்தேன். அவர் பங்கை பையில் வைக்க என் பங்கை அடுத்த மேஜைக்கு வைத்தேன். ஆட்சி அதிகரித்துக்கொண்டே இருந்தது , ஐந்து கார் …… இருபது கார்…….ஐம்பது கார்…… எண்பது கார்……… என காசுக்கணக்கை கார்கணக்கில் வைத்திருந்தேன். கட்டின் எண்ணிக்கை கூட கூட போதை உச்சியின் விளிம்பை அடைந்தது, விளையாட்டு போதை. ” finally won ”, அதே குரல் மூலையில் கேட்ட குரல். திரும்பி பார்த்தேன் காணவில்லை, எதிரே – விறைத்துப்போனேன். என் பையில் மூன்று டொலர் மட்டும் அனாதையாய் கிடந்தது. எல்லாவற்றையும் போதையில் அவனிடம் தோற்றுவிட்டேன். இதே மேஜையில் அடுத்த சுற்றுக்கு வரும்படி சவால் விட்டுக்கொண்டே திரும்பி சாரை பார்த்தேன். காணவில்லை என ஊர்யிதமானது. மனம் நொந்து கொள்ளவில்லை. ஜீன்ஸ் பையெல்லாம் விட்டு துழாவி பார்த்தேன் , எதுவுமே தேறுவதாக இல்லை. தலையை கவிழ்ந்தபடி வெளியே வந்தேன் சிகாரை புகைத்தபடி. டாக்ஸி அருகில் சென்று பையை துலாவினேன் , என்ன இருக்கும் …. எதுவுமே இல்லை , எல்லாவற்றையும் முதலீட்டு தானே ஆரம்பித்தோம். கன்னி வழியே கண்ணீர் பீறிட்டது. ஓடிப்போனேன் கிளப் வாசலை நோக்கி. உள்ளே தகுந்த அடையாளம் இல்லாமல் விடமாட்டார்கள் என்று நிச்சயித்து கொண்டார்கள். அந்த ஹல்ப் கோர்ட் ,போவ் அதுதான் அடையாளமா ?
ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் தான் இருந்தது , நட்சத்திரம் போல. அதுவும் குற்றுயிரில் ஊசலாடியது.
”Terrorist tunnel detected by the IDF, meant for attacking States, reaching from southern ……… was attacted by US army last night. No one escaped from that.”
”-COOK”