அஞ்ஞாதம். – சிறுகதை.

கண்கள் தான் அவளின் முகம். மேகலா என் சிறுவயது முதலே நல்ல நண்பி. அன்றிலிருந்து இன்று வரை எது வாங்கினாலும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் எங்களிடம் இருந்தது. ஊர்த் தேர் திருவிழாவில் நான் வாங்கிக் கொடுத்த தஞ்ஞாவூர் பொம்மையை இன்றும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வாள். இரட்டை குடும்பி போட்டு ஒன்று முன்னே மற்றது பின்னே கழுதைக் காது போல சிறிதாக ஆடிக்கொண்டு திரியும் வயதிலிருந்து மேகலாவை நான் அவதானித்து வந்திருக்கிறேன். ஒன்றன் மீது அவள் ஆசையை வைத்துவிட்டாள் என்றால் உயிரே போனாலும் அதை அடையாமல் விடமாட்டாள். அடம்பிடித்து வீட்டு முற்றத்தில் வெறும் மேலோடு உச்சி வெயிலில் நின்று அப்பாவிடம் சைக்கிள் வாங்கினாள். அதைப் பெருமையாகவும் கருதினாள். அந்த சைக்கிளில் ஊர் உலகமெல்லாம் சுற்றித் திரிவாள். அவளின் அசட்டுத்தனமான தைரியம் ஒருமுறை என்னையும் அவளையும் ஆளில்லா கட்டில் தனியாக விட்டுவிட்டது. சைக்கிளோடு உச்சி வெயிலுக்குள் காட்டுக்குள் புகுந்த இருவருக்கும், களைப்பு மிகுந்ததால் ஓங்கி வளர்ந்திருந்த ஆல மரத்தின் கீழே நில வேர்களை தலைக்கு வைத்து நித்திரை கொண்டுவிட்டோம். களைப்பு அதிகமாக இருந்ததால் நேரம் காலம் போவது அறவே தெரியவில்லை. அவள் தான் என்னை வேகமாக தட்டி எழுப்பினாள். இருட்டில் அவள் யார் என்றே தெரியாமல் போனது. அலறியடித்துக்கொண்டு இருவரும் கைகளை கோர்த்து வீட்டுக்கு திரும்ப பாதையை தேடினோம். சைக்கிளில் தடக்குப்பட்டு குப்புற மூக்கு அடிபட நான் விழுந்தது தான் மிச்சம். இருவரும் சைக்கிளை கட்டிப்பிடித்துக்கொண்டு இரவை விளிப்போடே கழித்தோம். காலையில் வீட்டிற்கு போக, வீடு செத்தவீடு போல இருந்தது. என்னையும் மேகலாவையும் கண்ட ஊர் பெரியவர் ஒருவர் கொலை இழுவையாக இழுத்துக்கொண்டுவந்து வீட்டில் விட்டார். அன்றிலிருந்து மேகலா வெளியே எங்கேயும் போவது கிடையாது. அவளின் சைக்கிளும் பரணில் எறியப்பட்டது.
 
பின்னேரங்களில் அவளின் வீட்டிற்கு அம்மாவோடு போவேன். அவள் ஒரு சின்ன கதிரையில் இருந்து சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பாள். நான் அவளின் அருகில் போய் உட்காந்து , உகரம் எழுதும் போது சுழியை உள்ளங்கையால் அழித்து விடுவேன். அவள் என்னை அப்போது தான் திரும்பிப் பார்ப்பாள். அவளின் தனிமையை, அதனால்  உண்டான வெறுமையை அவளின் கண்களில் பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை அழித்து விடக்கூடாது என்று உறுதியாகச் செல்வேன். ஆனால்அவளின் எழுத்துக்களில் இருக்கின்ற சுழி, அவளைவிட நளினமாக தெரிவதால் மீண்டும் அழித்து விடுவேன். எப்போதும் அம்மாவால் துணைக்கு வர முடியவில்லை. நான் தனியாக செல்வதை விரும்பவில்லை. அவள் பூப்படைந்து இரண்டு வருடங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போய் விட்டாள்.
 
இரண்டு மாதங்களுக்கு முதல் தான் அவளை லண்டன் அல்லங்காடி ஒன்றில் சந்தித்தேன். அதே இரட்டை பின்னல் ஒன்று முன்னே மற்றையது பின்னே, மாட்டின் வாலைப்போலே நீளமாக கரும்பின் தாளைபோல அகலமாகவும் கரிய நிறமாகவும் இருப்பதை வைத்தே அவளை மட்டுப்பிடித்து விட்டேன். கணவருடன் சந்தோசமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். இடுப்புயர குழந்தைகள் இரண்டு. மேகலா நீங்கள் தானே என்பதற்குள் அவள் என்னை கண்டுபிடித்து விட்டாள். கண்களில் முன்னைய தனிமையும் வெறுப்பும் இப்போது இல்லவே இல்லை. அவளின் கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாள். அவளது கணவன் என்னைப்பார்த்த போது பல ஆண்டு பழகிய நண்பனைப்போல வாயை அகலமாக விரித்து அசட்டுத்தனமாக சிரித்தார். அவரின் புன்னகைக்கும் அவளின் கண்களின் தணிப்பிற்கும் இருந்த உறவை என்னால் அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர் என்கைகளை இறுக்கமாக குலுக்கி வீட்டில் இன்னும் அவள் பொம்மையை பத்திரமாக வைத்திருப்பதை மகிழ்ச்சியாக சொன்னார். அவளின் கண்கள் வேட்கத்தால் சுருங்கிப்போனதை என்னால் மட்டுமே உணரமுடிந்தது. அவளின் பையன்கள் கைகளை பிசைந்து கொண்டு இருவருக்கும் இடையில் கடக்கமுடியாத தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு நிற்பது போல உணர்வுகள் குவிந்து கொண்டிருக்கும் அங்காடியில் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை.
 
சாலையின் இரண்டு புறங்களிலும் பனியை குவித்துக்கொண்டிருந்தது வாகனங்கள்.பொடி நடையாக ஐவரும் நடந்து சென்றோம். அவள் கைகளை கணவனின் கைகளோடு கோர்த்து விலாசமாக விசுக்கி விசுக்கி நடந்தாள். இப்பொது தலைக்கு குளிர் குல்லா ஒன்று போட்டிருப்பதால் பின்னல்கள் ஆடுவதை அவதானிக்கமுடியாமல் போனது. கதைகளின் இடைகளில் எல்லாமே அவள் சந்தோசமாக இருப்பதாக சொன்னாள். அவளின் கண்கள் அப்போதெல்லாம் மிகப் பிரகாசமாக மின்னியது.பையன்களுக்கு பழக்கபட்ட வீதிகளின் புறங்களில் குவிந்திருந்த பனியின் விளிம்புகளை தமது சப்பத்துக்களால் உதைந்து கொண்டே வந்தார்கள். மேகலா என்னை இராப்போசனம் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தாள். வீட்டிற்குள் புக முதலே போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் அடிப்படையிலேயே உள்ளே நுழைந்தேன். நுழைந்ததும் உட்காராமல் நேரே புகைப்படங்கள் தொங்கவிட்டிருக்கும் சுவரை நோக்கி நடந்தேன். முதலில் பையன்கள் இருவரும் சிறு வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படம். அதில் ஆளுக்கொருவர் அவர்களின்  சட்டைக்கலரில் ஒவ்வொரு சைக்கிள் வைத்திருந்தார்கள். அடுத்த புகைப்படம் இவர்கள் இருவரது திருமணம். ஜோடியாக கைகளில் பூக்கொத்துடன் நின்றனர். மேகலாவின் பார்வை அப்போது வெறித்தபடியே இருந்தது. புகைப்படம் எடுத்த பெரியவருக்கே அது தெரிந்திருந்தது. மேகலாவின் சம்மதம் இல்லாமலே தான் திருமணம் நடந்தது. அவள் கணவனின் புகைப்படம் கூட பார்க்கவில்லை.வீட்டின் பெரியவர்கள் பார்தார்காளா என்று கூட தெரியவில்லை. அடுத்து முதல் பையனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம். பையன் அழுதபடியும் மேகலா சிரித்தபடியும் இருக்க கணவன் மேகலாவின் ஒரு தோளில் கையை இறுக்கமாக பிடித்திருக்க மேகலா அவரை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் மேகலாவிற்கு அவளின் கணவனை அதிகம் பிடித்திருக்க வேண்டும். கல்யாணமாகி இரண்டாம் நாள் மேகலாவின் வீட்டிற்கு சந்தோசமாகத்தான் வந்திருந்தாள். அப்போது தான் முதன் முறை மேகலாவை பெரிய பெண்ணாக பார்த்தேன்.  அடுத்தது இரண்டாவது மகனை தூக்கி வைத்திருக்கும் இருவரது தனிப்படம். முதலானவன் முகம் முழுக்க பௌடர் அடித்துக்கொண்டு கையில் கார் ஒன்றை வைத்திருந்தான். வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டு சென்று முடிவில் இருந்த கதிரையில் அமர்ந்தேன். மேகலாவின் கணவன் கையில் தஞ்ஞாவூர் பொம்மையுடன் சிரித்தபடியே வந்தார். அவரின் சிரிப்பில் மேகலாவின் சந்தோசமான வாழ்க்கை தெரிந்தது.
 
இன்று மதியம் மூன்று மணியளவில் தொலைபேசி மூலம் செய்தியறிந்தேன். விறுக்கென எழுந்து காரை எடுத்துக்கொண்டு மேகலாவின் வீட்டிற்கு புறப்பட்டேன். பாதையெங்கும் சூரியனின் வெளிச்சம். லண்டன் வாசிகள் எல்லாம் அரைகுறையாக நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். லண்டன் வெய்யில் காலங்களில் தான் அழகாகத் தெரியும். கடைகளில் எல்லாம் மட்டைகளும் தோரணங்களும் நீக்கமற நிறைந்திருக்கும். இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்தவர்களுக்கு லண்டனின் வெய்யிலையும் அழகையும் ரசிக்க கொடுத்துவைத்திருக்காது. அவர்களுக்கு இது தான் இலங்கைக்கு போக சரியான காலம். ஒவ்வொரு ஜோடியும் கைகளை கோர்த்து விலாசமாக விசுக்கி நடக்க, மேகலா என்னை ஞாபகப்படுத்தினாள்.
 
என்னையறியாமல் கண்கள் எல்லாம் கண்ணீரால் முட்டிப் போயிருந்தன.வாசல் கதவைத்திறந்து  வேகமாக விறாந்தைக்குள் நுழைந்தேன். ஒரு மூலையில் மேகலா கதிரைபோட்டு சுவரைபார்க்க திரும்பி இருந்தாள். பையன்களில் ஒருவன் என் கால்களைப்பிடித்து தலையை தொடையில் முட்டிக்கொண்டான். அவனை தூக்கிக்கொண்டு மேகலாவை நோக்கி நடந்தேன். அவள் அதை உணர்ந்திருக்க முடியாது. அவளின் தலைமுடி குலைந்து அசிங்கமாக இருந்தது. வீடே இருட்டி இருந்தது. யன்னல்கள் சூரியக்கதிர்களை தடுத்துவைத்திருந்தன.
 
அவளின் தோளில் மெதுவாக சென்று கையை வைத்தேன். கண்கள் சிவந்து வீங்கி ரத்த நாளம் எல்லாம் கண்களுக்குள் புடைத்துப்போய் முன்முடி கொஞ்சம் கீழே படர என்னை வெறித்து பார்த்தாள். அதே பார்வை அவளின் உகரத்தில் இருந்து நளினத்தை அழித்தபோது அவள் பார்த்த அதே பார்வை.

Leave a Comment