முன்குறிப்புகள்
- Earth: One Amazing Day – 01 பதின்மூன்று பெயரால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. இதில் நான் இணைப்பு அனுப்பியவர்கள் மூவர்.
- ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஒரே ஒருத்தரால் விமர்சிக்கப்பட்டது. அதுவும் நான் வலிந்து கேட்டுக்கொண்டபடியால்.
- இன்னொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். அண்ட்ராக்டிக்கா பனிமலை உருகுவதைப் பற்றியது. Earth: One Amazing Day இனை இரண்டாம் பாகத்தோடு நிறுத்திவிடப்போவதால், இதனைப் பற்றி எழுதுவது சாத்தியம் இல்லை என்றே எண்ணுகிறேன்.
- கௌதம சித்தார்த்தனின் சினிமா பற்றிய பார்வை எனக்கு மிகவும் பிடிக்கும். உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் என்ற அவரின் புத்தகம் மிகவும் முக்கியமானதொன்றாகும். சினிமா என்பதை தொழில்நுட்பம் சார்ந்து பார்க்கின்ற ஒருவகைப்பார்வை பரவலாக உண்டு. இதைவிட ஒரு கலைப்படைப்பாக, அரசியல் பின்னணியுடைய படைப்பாக, சமூகசிந்தனைகள் அடிப்படையில் எழுந்த படைப்பாக பல்வேறு கோணங்களில் நின்று அவதானிக்கலாம். மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி என்ற பிரசன்ன விதானகேயின் With You, Without You பற்றிய கட்டுரை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. தொகுப்பில் வாசித்தவுடன் இணையத்தில் தேடி இணைப்பொன்றையும் முகப்புத்தகத்தில் பதிந்திருந்தேன். மீண்டும் இங்கே பகிர்வதற்காக தேடியபோது அந்த இணைப்பில் கட்டுரையைக் காணவில்லை. உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் தொகுப்பில் கட்டுரை காணப்படுகின்றது.
- நேற்றிரவு the killing of a sacred deer என்ற திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. திரைப்படம் பேசுகின்ற மொழி, அரசியல், உளவியல் சம்பந்தமாக பேசுவதற்காக கௌதம சித்தார்த்தனைத் தொடர்புகொண்டேன். அவரும் பார்த்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் திரைப்படத்தைப் பற்றி நான்கைந்து கட்டுரைகள் வாசித்தேன் எதுவும் திருப்தியளிக்கவில்லை. தமிழில் ஏதும் கிடைக்குமா என்று தேடியபோது, ஒன்றுமில்லை. அல்லது எதுவும் என் கண்களுக்கு சிக்கவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அறியத்தாருங்கள்.
கதை 03
முதுமலைக் கிழவி கதையை முடித்துக்கொண்டாள். தூரத்து காட்டிலிருந்து வந்த குளிர்ந்த காற்றில் கள்ளின் நெடி வீசியது. பாலைவனத்தைப் போல திரண்டுபோயிருந்த முகச்சுருக்கங்களின் இடையே நதியினைப்போல கண்ணீர் வழிந்தது. அது காலத்தின் கண்ணீர். மாய் கல்லினைப் புரட்டி எடுத்துக்கொண்டு கிளம்பிய பின்னரிலிருந்து எப்போதும் இறைக்கப்படாமல் தேங்கிநின்ற கண்ணீர். காலம் கண்ணீரால் தான் கடத்தப்படுகின்றது. வரலாற்றின் எந்தப்புள்ளியிலும் கண்ணீர் ஒன்றின் உறைநிலைப் படிமம் காணப்படும். அன்று கிழுதிப்பற்றைவாசிகள் அழுதிருந்தால் காலம் அங்கிருந்து கடந்து வந்திருக்கும். முதுமலைக் கிழவி இப்போது வடித்த உப்பற்ற வெறுந்தண்ணீரால் காலம் கடந்தது. என் கண்களின் முன்னே காலம் உருண்டது. மரங்களுக்கு வயதானது. பறந்து திரிந்த பூச்சிகள் எல்லாம் விழுந்து மடிந்து சாம்பலாகிப் போயின. என் கால்களைச் சுற்றி புதர் எழுந்தது. கிழவியிருந்த இடத்தில் புற்றெழுந்து கணப்பொழுதில் அவள் காணாமற் போனாள். அவளையும் அவளைச்சுற்றியிருந்த அனைத்தையும் காலம் தன் பிடியிலிருந்து தளர்த்தி மோட்சமளித்தது.
குறிப்பு 03
நன்பெரியல் குறிப்புக்கள் என்று எட்டு குறிப்புகள் எழுதியிருந்தேன். பதுளைக்கு அடுத்திருக்கின்ற நன்பெரியல் என்ற மலைக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியது அவை. இதில் பெருந்துயர் என்னவென்றால், இரண்டு நாட்கள் தங்கியிருந்ததில் ஒரு நாளுக்கான குறிப்புகள் மட்டுமே எழுதக்கூடியவாறு இருந்தன. உண்மையின் இரண்டாம் நாள் அனுபவங்கள் தான் அலாதியானவை. எழுதுவதற்கான காலமும் மனநிலையும் இன்னமும் எனக்கு வாய்க்கவில்லை. இரண்டாம் நாட்சம்பவங்களில் சுவாரஸ்யமான ஒன்றைப்பற்றி இங்கு எழுதுகின்றேன்.
Baker’s Bend
நன்பெரியல் மலையின் 5000 அடி உயரத்தில் இந்த பேக்கேர்ஸ் பெண்ட் இருக்கிறது. மலையின் உச்சத்திற்கு ஏறுகின்ற பாதை இந்த வளைவில் 180 பாகையூடகத் திரும்பும். முழுக்க பனி நிறைந்திருக்கின்றபடியால் வளைவிலிருந்து நேரே கீழே ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்பார்வையில் அகன்று விரிந்த மலைப்படுக்கைகளும் உதிக்க மறுத்து முகில்களுக்குள் உறங்குகின்ற சூரியனின் செம்மஞ்சள் ஒளியும் கண்ணெதிரே சொர்க்கம் ஒன்றினை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். “பத்”தை முடித்துக்கொண்டு கைகளைக் கழுவிவிட்டு பேக்கர்ஸ் பெண்டடின் கட்டிலிருந்து சப்பாத்துக்களைக் கழற்றினேன்.
மலையேறும் போது Short Cuts என்று சொல்லி, இதற்கு முன்னர் வந்தவர்கள் சில பாதைகளைச் சொன்னார்கள். நிலைக்குத்தாக ஏறுகின்ற செம்மண் படிவுகளுக்கூடாக சிலதும் பெரும் மலை இடுக்குகளுக்கு இடையில் சிலதும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையிலான சிலதும் இருந்தன. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் செல்வது எளிது. பெரும் உழைப்பை எடுக்காது. ஆனால் செம்மண் படிவுகளோ மலை இடுக்குகளோ கடினமான பாதைகள். சிலது குத்தன ஏறுவதாகவும் இருந்தன. ஏறுவதற்கு இலகுவாக அடுக்கப்பட்டிருந்த சிறிய கற்களில் கால்களை வைத்து சமநிலையில் தேயிலைச் செடிகளுக்கூடாக இலகுவாக ஏறிவிடலாம். ஆனால் ஆபத்தும் அங்குதான் இருந்தது. அட்டைகள்.
சப்பாத்துக்களை கழற்றி போட்டத்தை உயர்த்தினால் இரண்டு குதிக்கால்களிலும் ரத்தம். உறைந்து போயும் ஓடிக்கொண்டும் இருந்தது. இரண்டு குதிகளிலும் அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சி விழுந்துவிட்டன. இப்போது அட்டைகள் எதுவுமில்லை. ஆனால் பிசினைப்போல ரத்தம் விடாமல் வந்துகொண்டிருந்தது. சிறு வலிகூட இல்லை. இதற்கு முன்னரே ஏறும்போது எம்மில் பலருக்கு அட்டைகள் கடித்துவிட்டன. ஆனால் ரத்தம் இவ்வளவாகப் போகவில்லை. பத் சுற்றிவந்த கடதாசியினைக் கிழித்து இரண்டு குதிகளிலும் காயத்தின் மேல் அழுத்தமாக வைத்து விட்டு மேல்நோக்கி நடந்தோம்.
Baker’s Bend பின்குறிப்பு
Baker’s Bend பற்றி விரிவாக எழுதவில்லை. இவ்வளவும் போதும். நன்பெரியல் குறிப்புகளில்
Baker’s Bend ஐப் பற்றி விரிவாக எழுதுவது எழுதுவது ஏற்புடையது. இங்கு அல்ல.
நூற்குறிப்பு 01
இப்போது மடுப் பிரதேசத்தில் கால்நடை வைத்தியராக இருக்கிறார் கிருபானந்த குமாரன் அண்ணா. உயர்தரம் முடிந்து பல நாட்களின் மாலைப் பொழுதும் முன்னிரவுப் பொழுதுகளும் அவரின் கிளினிக்கிலேயே கழிந்து போய்விடும். இருவரும் கரடி பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். கரடிகள் வாழ்வியலைப் பற்றியும் கரடிகள் பற்றி வெளியான திரைப்படங்கள் பற்றியும் மடுப்பிரதேசத்தில் நடந்த கரடியோடு தொடர்புடைய உண்மைச்சம்பவங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். பேசியதில் அணுவளவு சம்பவங்களையும் தரவுகளையும் தமிழ் மாருத இதழில் எழுதியிருக்கிறார். வாசித்துப்பார்க்கலாம் நண்பர்களே.
நூற்குறிப்பு 02
புதிய சொல் 08 இல் கபிலின் மோசஸ் ஜனித்திருப்பார் என்றொரு சிறுகதை வெளிவந்திருக்கிறது. மோசஸுடன் ஒரு நாயும் சுற்றிக்கொண்டே இருக்கும். நான் ஏழாம் எட்டாம் ஆண்டு படிக்கும் போது பொக்கட் நாய்க்குட்டி ஒன்றை வாங்கிவந்தார்கள். வெள்ளை பூல் போன்று காற்றில் மிதந்து திரிந்தது. ஒரு மாதம் கூட எங்களோடு இருக்கவில்லை. என் தம்பிக்கு ஆஸ்துமா இருப்பதனால் அம்மம்மாவின் அக்காவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அதைப்பிரிந்ததில் எனக்கு பெரிய வருத்தம் எதுவும் இருக்கவில்லை. அங்கு ஒன்றிரண்டு வருடங்கள் இருந்திருக்கலாம் அந்த நாய். ஒருநாள் மாலை யாரோ ஒரு வழிப்போக்கன் ” ச்சு ச்சு ” என்றுகூப்பிட என்னைப்போலவே இதுவும் வாலைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டது. இதற்கு முன்னர் எங்கள் வீட்டில் கட்டையான மண்ணிற நாய் ஒன்று நின்றிருக்கிறது. பெயர் லக்கி. ஆனால் அது அன்லக்கி. யாரோ இரவோடு இரவாக மருந்துவைத்துக் கொன்றுவிட்டார்கள். இப்போது எங்கள் வீட்டில் கிளி ஒன்று இருக்கிறது. என்னைத் தவிர எல்லோரது பெயரையும் சொல்லும். இவையெல்லாம் இருக்கட்டும் , மோசஸ் ஜனித்திருப்பார் ஐ ஒரு முறை எல்லோரும் வாசித்துப்பாருங்கள். நல்ல கதை.
பின்குறிப்புகளும் முடிப்பும்
- the killing of a sacred deerஐப் பெற http://www.foumovies.com/the-killing-of-a-sacred-deer-full-movie-download-free-hd-fm2/
- நன்பெரியல் குறிப்புகளை வாசிக்க https://brinthansite.wordpress.com/2017/12/30/நன்பெரியல்-குறிப்புகள்-01-06/
- இதன் முதல் பாகத்தை வாசிக்க https://brinthansite.wordpress.com/2018/03/15/earth-one-amazing-day-01/
- முகப்பு ஓவியம் – “Treasure Lost”