Earth: One Amazing Day – 02

முன்குறிப்புகள்

  1. Earth: One Amazing Day – 01 பதின்மூன்று பெயரால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. இதில் நான் இணைப்பு அனுப்பியவர்கள் மூவர்.
  2. ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஒரே ஒருத்தரால் விமர்சிக்கப்பட்டது. அதுவும் நான் வலிந்து கேட்டுக்கொண்டபடியால்.
  3. இன்னொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். அண்ட்ராக்டிக்கா பனிமலை உருகுவதைப் பற்றியது. Earth: One Amazing Day இனை இரண்டாம் பாகத்தோடு நிறுத்திவிடப்போவதால், இதனைப் பற்றி எழுதுவது சாத்தியம் இல்லை என்றே எண்ணுகிறேன்.
  4. கௌதம சித்தார்த்தனின் சினிமா பற்றிய பார்வை எனக்கு மிகவும் பிடிக்கும். உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் என்ற அவரின் புத்தகம் மிகவும் முக்கியமானதொன்றாகும். சினிமா என்பதை தொழில்நுட்பம் சார்ந்து பார்க்கின்ற ஒருவகைப்பார்வை பரவலாக உண்டு. இதைவிட ஒரு கலைப்படைப்பாக, அரசியல் பின்னணியுடைய படைப்பாக, சமூகசிந்தனைகள் அடிப்படையில் எழுந்த படைப்பாக பல்வேறு கோணங்களில் நின்று அவதானிக்கலாம். மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி என்ற பிரசன்ன விதானகேயின் With You, Without You பற்றிய கட்டுரை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. தொகுப்பில் வாசித்தவுடன் இணையத்தில் தேடி இணைப்பொன்றையும் முகப்புத்தகத்தில் பதிந்திருந்தேன். மீண்டும் இங்கே பகிர்வதற்காக தேடியபோது அந்த இணைப்பில் கட்டுரையைக் காணவில்லை.   உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் தொகுப்பில் கட்டுரை காணப்படுகின்றது.
  5. நேற்றிரவு the killing of a sacred deer என்ற திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. திரைப்படம் பேசுகின்ற மொழி, அரசியல், உளவியல் சம்பந்தமாக பேசுவதற்காக கௌதம சித்தார்த்தனைத் தொடர்புகொண்டேன். அவரும் பார்த்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் திரைப்படத்தைப் பற்றி நான்கைந்து கட்டுரைகள் வாசித்தேன் எதுவும் திருப்தியளிக்கவில்லை. தமிழில் ஏதும் கிடைக்குமா என்று தேடியபோது, ஒன்றுமில்லை. அல்லது எதுவும் என் கண்களுக்கு சிக்கவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அறியத்தாருங்கள்.

கதை 03
முதுமலைக் கிழவி கதையை முடித்துக்கொண்டாள். தூரத்து காட்டிலிருந்து வந்த குளிர்ந்த காற்றில் கள்ளின் நெடி வீசியது. பாலைவனத்தைப் போல திரண்டுபோயிருந்த முகச்சுருக்கங்களின் இடையே நதியினைப்போல கண்ணீர் வழிந்தது. அது காலத்தின் கண்ணீர். மாய் கல்லினைப் புரட்டி எடுத்துக்கொண்டு கிளம்பிய பின்னரிலிருந்து எப்போதும் இறைக்கப்படாமல் தேங்கிநின்ற கண்ணீர். காலம் கண்ணீரால் தான் கடத்தப்படுகின்றது. வரலாற்றின் எந்தப்புள்ளியிலும் கண்ணீர் ஒன்றின் உறைநிலைப் படிமம் காணப்படும். அன்று கிழுதிப்பற்றைவாசிகள் அழுதிருந்தால் காலம் அங்கிருந்து கடந்து வந்திருக்கும். முதுமலைக் கிழவி இப்போது வடித்த உப்பற்ற வெறுந்தண்ணீரால் காலம் கடந்தது. என் கண்களின் முன்னே காலம் உருண்டது. மரங்களுக்கு வயதானது. பறந்து திரிந்த பூச்சிகள் எல்லாம் விழுந்து மடிந்து சாம்பலாகிப் போயின.  என் கால்களைச் சுற்றி புதர் எழுந்தது. கிழவியிருந்த இடத்தில் புற்றெழுந்து கணப்பொழுதில் அவள் காணாமற் போனாள். அவளையும் அவளைச்சுற்றியிருந்த அனைத்தையும் காலம் தன் பிடியிலிருந்து தளர்த்தி மோட்சமளித்தது.
குறிப்பு 03
நன்பெரியல் குறிப்புக்கள் என்று எட்டு குறிப்புகள் எழுதியிருந்தேன். பதுளைக்கு அடுத்திருக்கின்ற நன்பெரியல் என்ற மலைக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியது அவை. இதில் பெருந்துயர் என்னவென்றால், இரண்டு நாட்கள் தங்கியிருந்ததில் ஒரு நாளுக்கான குறிப்புகள் மட்டுமே எழுதக்கூடியவாறு இருந்தன. உண்மையின் இரண்டாம் நாள் அனுபவங்கள் தான் அலாதியானவை. எழுதுவதற்கான காலமும் மனநிலையும் இன்னமும் எனக்கு வாய்க்கவில்லை. இரண்டாம் நாட்சம்பவங்களில் சுவாரஸ்யமான ஒன்றைப்பற்றி இங்கு எழுதுகின்றேன்.
Baker’s Bend
நன்பெரியல் மலையின் 5000 அடி உயரத்தில் இந்த பேக்கேர்ஸ் பெண்ட் இருக்கிறது. மலையின் உச்சத்திற்கு ஏறுகின்ற பாதை இந்த வளைவில் 180 பாகையூடகத் திரும்பும். முழுக்க பனி நிறைந்திருக்கின்றபடியால் வளைவிலிருந்து நேரே கீழே ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்பார்வையில் அகன்று விரிந்த மலைப்படுக்கைகளும் உதிக்க மறுத்து முகில்களுக்குள் உறங்குகின்ற சூரியனின் செம்மஞ்சள் ஒளியும் கண்ணெதிரே சொர்க்கம் ஒன்றினை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். “பத்”தை முடித்துக்கொண்டு கைகளைக் கழுவிவிட்டு பேக்கர்ஸ் பெண்டடின் கட்டிலிருந்து சப்பாத்துக்களைக் கழற்றினேன்.
மலையேறும் போது Short Cuts  என்று சொல்லி, இதற்கு முன்னர் வந்தவர்கள் சில பாதைகளைச் சொன்னார்கள். நிலைக்குத்தாக ஏறுகின்ற செம்மண் படிவுகளுக்கூடாக சிலதும் பெரும் மலை இடுக்குகளுக்கு இடையில் சிலதும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையிலான சிலதும் இருந்தன. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் செல்வது எளிது. பெரும் உழைப்பை எடுக்காது. ஆனால் செம்மண் படிவுகளோ மலை இடுக்குகளோ கடினமான பாதைகள். சிலது குத்தன ஏறுவதாகவும் இருந்தன. ஏறுவதற்கு இலகுவாக அடுக்கப்பட்டிருந்த சிறிய கற்களில் கால்களை வைத்து சமநிலையில் தேயிலைச் செடிகளுக்கூடாக இலகுவாக ஏறிவிடலாம். ஆனால் ஆபத்தும் அங்குதான் இருந்தது. அட்டைகள்.
சப்பாத்துக்களை கழற்றி போட்டத்தை உயர்த்தினால் இரண்டு குதிக்கால்களிலும் ரத்தம். உறைந்து போயும் ஓடிக்கொண்டும் இருந்தது. இரண்டு குதிகளிலும் அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சி  விழுந்துவிட்டன. இப்போது அட்டைகள் எதுவுமில்லை. ஆனால் பிசினைப்போல ரத்தம் விடாமல் வந்துகொண்டிருந்தது. சிறு வலிகூட இல்லை. இதற்கு முன்னரே ஏறும்போது எம்மில் பலருக்கு அட்டைகள் கடித்துவிட்டன. ஆனால் ரத்தம் இவ்வளவாகப்  போகவில்லை. பத் சுற்றிவந்த கடதாசியினைக் கிழித்து இரண்டு குதிகளிலும் காயத்தின் மேல் அழுத்தமாக வைத்து விட்டு மேல்நோக்கி நடந்தோம்.
Baker’s Bend பின்குறிப்பு
Baker’s Bend பற்றி விரிவாக எழுதவில்லை. இவ்வளவும் போதும். நன்பெரியல் குறிப்புகளில்
Baker’s Bend ஐப் பற்றி விரிவாக எழுதுவது எழுதுவது ஏற்புடையது. இங்கு அல்ல.
நூற்குறிப்பு 01
இப்போது மடுப் பிரதேசத்தில் கால்நடை வைத்தியராக இருக்கிறார் கிருபானந்த குமாரன் அண்ணா. உயர்தரம் முடிந்து பல நாட்களின் மாலைப் பொழுதும் முன்னிரவுப் பொழுதுகளும் அவரின் கிளினிக்கிலேயே கழிந்து போய்விடும். இருவரும் கரடி பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். கரடிகள் வாழ்வியலைப் பற்றியும் கரடிகள் பற்றி வெளியான திரைப்படங்கள் பற்றியும் மடுப்பிரதேசத்தில் நடந்த கரடியோடு தொடர்புடைய உண்மைச்சம்பவங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். பேசியதில் அணுவளவு சம்பவங்களையும் தரவுகளையும் தமிழ் மாருத இதழில் எழுதியிருக்கிறார். வாசித்துப்பார்க்கலாம் நண்பர்களே.
நூற்குறிப்பு 02
புதிய சொல் 08 இல் கபிலின் மோசஸ் ஜனித்திருப்பார் என்றொரு சிறுகதை வெளிவந்திருக்கிறது. மோசஸுடன் ஒரு நாயும் சுற்றிக்கொண்டே இருக்கும். நான் ஏழாம் எட்டாம் ஆண்டு படிக்கும் போது பொக்கட் நாய்க்குட்டி ஒன்றை வாங்கிவந்தார்கள். வெள்ளை பூல் போன்று காற்றில் மிதந்து திரிந்தது.  ஒரு மாதம் கூட எங்களோடு இருக்கவில்லை. என் தம்பிக்கு ஆஸ்துமா இருப்பதனால் அம்மம்மாவின் அக்காவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அதைப்பிரிந்ததில் எனக்கு பெரிய வருத்தம் எதுவும் இருக்கவில்லை. அங்கு ஒன்றிரண்டு வருடங்கள் இருந்திருக்கலாம் அந்த நாய். ஒருநாள் மாலை யாரோ ஒரு வழிப்போக்கன் ” ச்சு ச்சு ” என்றுகூப்பிட என்னைப்போலவே இதுவும் வாலைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டது. இதற்கு முன்னர் எங்கள் வீட்டில் கட்டையான மண்ணிற நாய் ஒன்று நின்றிருக்கிறது. பெயர் லக்கி.  ஆனால் அது அன்லக்கி. யாரோ இரவோடு இரவாக மருந்துவைத்துக் கொன்றுவிட்டார்கள். இப்போது எங்கள் வீட்டில் கிளி ஒன்று இருக்கிறது. என்னைத் தவிர எல்லோரது பெயரையும் சொல்லும். இவையெல்லாம் இருக்கட்டும் , மோசஸ் ஜனித்திருப்பார் ஐ ஒரு முறை எல்லோரும் வாசித்துப்பாருங்கள். நல்ல கதை.
பின்குறிப்புகளும் முடிப்பும்

  1. the killing of a sacred deerஐப் பெற http://www.foumovies.com/the-killing-of-a-sacred-deer-full-movie-download-free-hd-fm2/
  2. நன்பெரியல் குறிப்புகளை வாசிக்க https://brinthansite.wordpress.com/2017/12/30/நன்பெரியல்-குறிப்புகள்-01-06/
  3. இதன் முதல் பாகத்தை வாசிக்க  https://brinthansite.wordpress.com/2018/03/15/earth-one-amazing-day-01/
  4. முகப்பு ஓவியம் – “Treasure Lost”

 

Earth: One Amazing Day – 01

முன்குறிப்பு 
 

வரலாறு எனப்படுவதும் கதைகள் எனப்படுபவையும் எங்கிருந்தோ  தான்தோன்றித்தனமாக தோன்றியவை அல்ல. உலகில் எங்கோ, யாரோ ஒருத்தர் ஒவ்வொரு நொடியும் புனைந்துகொண்டிருப்பவை.

கதை 01
எங்கள் அம்மம்மாவின் ஊர் கொந்தக்காரன்குளம். அதனை அடுத்து வண்ணாங்குளம். ஒரு வருடத்திற்கு முதல் கொந்தக்காரன்குளம் போயிருந்த போது வண்ணாங்குளத்திற்கும் தனியாகச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பொற்கோவில் இருக்கின்றது. செருப்பை வாகனத்தின் அருகில் வைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தேன். திருகோணமலையிலும் பொற்கோவில் ஒன்று உள்ளது. இதனைப் போல பன்மடங்கு பெரியதும் ஆடம்பரமானதும். அங்கும் இரண்டு முறை சென்றிருக்கின்றேன். அந்தக் கோவில் ஆடம்பரத்தின் உருவமாகத் தெரிந்தது. எங்கும் நிரம்பியிருக்கின்ற பக்தர்கள்,உல்லாசப்பயணிகள், கோஷங்கள், பஜனைகள் என்று மெல்லிய அருவருப்பையும் அணுக்கமின்மையையும் தோற்றுவித்தது. அங்கிருக்கின்ற சுருவங்கள், சிலைகள், பீடங்கள் என்று அனைத்தும் ஒவ்வாமையை கூட்டிகொண்டே போயின. ஆனால் வண்ணாங்குளம் பொற்கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே மனதிற்கு ஈசலைப்போல ஒன்று துருத்திக்கொண்டிருந்தது. கோவிலை நான்கு ஐந்து முறை சுற்றிவந்து எதையோ ஒன்றினைத் தேடிக்கொண்டிருந்தன கண்கள். மனதின் பெருத்த இடைவெளியில் உருவமில்லாத ஒன்று கணத்துக்கொண்டிருந்தது. இயற்கைக்கு கோவில் திறந்துவிடப்பட்டிருந்தது. சுற்றியிருந்த காடுகளிலிருந்து கிளம்பிவருகின்ற குளிந்த தூய்மையான காற்று காட்டின் வாசனையை கோவிற் கட்டடங்கள் எங்கும் பூசிவிட்டுச் சென்றன.
பீடங்களிலிருக்கின்ற சிலைகள் ஒவ்வொன்றாக கண்கள் துருத்தி துருத்திப் பார்த்தன. இன்மை கோவில் முழுக்க நிறைந்திருந்தது. அத்தனை சுவாத்தியமான நிலப்பரப்பிலும் மனம் நெளிந்து சுழன்றது. எல்லாச் சிலைகளையும் கூர்ந்து பார்த்து மீண்டும் வெறுமையாக அதே மனக் கனப்புடன் ஓய்ந்தன கண்கள். மூலஸ்தானதிற்கு எதிரிலிருந்த தூணில் சாய்ந்தேன். களைப்பு மனதிலிருந்து உடலுக்கும் பரவியிருந்தது. மனதிற்குள் நிற்கும் அருவம் பற்றிய தேடலில் கிடைத்த இன்மை கோவிலைச் சோபையிழக்கச் செய்தது. விரல்கள் நிலத்தின் மீது வளைவுகளாக வரைந்துகொண்டிருந்தன. நிலத்திலிருக்கின்ற குறுனிக் கற்களை ஒவ்வொன்றாக அணைத்தும் விலத்தியும் வளைகோடுகள் நீண்டன. உள்ளுணர்வு அருவம் பற்றிய பிரஞையை ஏற்படுத்தத்தொடங்கியது. இன்மையில் நீடித்திருந்த மனதின் இடைவெளிகள் குருணிக்கற்கள் மூலம் இணைந்த உருவத்தால் நிரம்பத்தொடங்கின. எல்லாப் பௌதீக விதிகளையும் மீறி கற்கள் ஒன்றிணையத் தொடங்கின. தூரத்து காட்டிலிருந்து வந்த காற்று பச்சையத்தின் மணத்தைக் காவிக்கொண்டு வந்தன.
கைகளிரண்டையும் நிலத்தில் ஊன்றி வேகமாக எழுந்தேன். கோவில் காரியாலயத்திற்குச் சென்று ஆட்கள் இருக்கின்றனரா என்று நோட்டமிட்டேன். மூவர் நின்றார்கள். ஒருத்தரை மெதுவாக வெளியே அழைத்துவந்தேன். அவரிடம் எதுவும் பேசவில்லை. தன்னை எதற்க்காக இழுச்செல்கிறான் என்று தெரியாமல் என்னுடைய  வலுக்கட்டாயமாக இழுப்பில் ஓரமாக வந்து சேர்ந்தான். எனக்குள்ளிருந்த படபடப்பினை அவனுணர்த்திருக்கக் கூடும். அவனது இடக்கையினை வெடுக்கெனப் பிடித்தேன். என் நடுக்கம் அவனுக்குள் பாய்ந்தது. தொடுகையின் மூலம் உணர்வுரீதியான ஒன்றிணையலாம் என்று நம்பினேன். அவனுக்குளிருந்து , அவனறியாமலே காலம் காலமாக கடத்தப்பட்டுவருகின்ற ஒன்றினை அறிந்துவிட இந்தத் தொடுகை உறுதுணையாக இருக்கும். இழையாகத் தொடர்ந்துவருகின்ற வரலாறு ஒன்று அவனுக்குள்ளும் இருப்பதாக நம்பினேன்.  பதினாறு தலை நாக சிலையைப் பற்றி விசாரித்தேன். விழித்தான். இது உண்மை இல்லை. அவனுக்கு எப்படியும் சிலை பற்றித் தெரிந்திருக்கும். மீண்டும் அதட்டிக்கேட்டேன், அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்போது மனம் பதபதைக்கவில்லை. மெதுவாக அவனது கையிருந்த பிடியைத் தளர்த்தினேன். அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நெடுங்காலமாக ஊரில் வசித்துவருகின்றவர்களைப் பற்றி விசாரித்தேன். முதுமலைக் கிழவி பற்றி அப்படித்தான் முதன்முதலாக அறிந்துகொண்டேன்.
குறிப்பு 01
வவுனியா, முல்லைதீவு எங்கும் நாகர் வழிபாட்டுத்தலங்கள் விரவிக்கிக் கிடக்கின்றன. ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை இவற்றைப்பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். வழிபாட்டிற்கான நாக சிலைகள் முழுமையாகவும் சிதைத்தவாறும் காணப்படுகின்றன. ஒன்று, இரண்டு, மூன்று என்று பதினாறு வரையான தலைகளை உடைய நாக சிலைகளை வைத்து வழிபட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.
கதை 02
முதுமலைக் கிழவியின் மீது காலம் உறைந்திருந்தது. அவரின் எழுபத்தாறு வயதிற்குப் பின்னர் காலம் நகர்ந்து செல்லவில்லை. இப்போது அவருக்கு இருநூற்றுப் பத்து வயது இருக்கலாம். இன்னும் பொல்லுபிடித்து நடக்கிறார். பற்கள் வெண்மையாகத் தெரிகின்றன. முகச்சுருக்கங்கள். வெண்ணிறமான அடர்த்திக்குறைந்த தலைமுடி. கண்பார்வையை முழுமையாகவும் குரலைப் பகுதியாகவும் இழந்திருந்தார். உருவங்களை ஓரளவு அடையாளப்படுத்துகிறார். வெளிக் கேற்றுத் தடிகளை ஒவ்வொன்றாக விலக்கிவிட்டு கிழவிக்கு அருகில் நடந்தேன். கிழவியிடம் சிலை பற்றிய தகவல்கள் ஏதும் இருக்கலாம். இருநூற்றுப் பத்து ஆண்டுகளுக்குள் ஒரு முறையேனும் சிலையினைப்பற்றி அறிந்திருக்க மாட்டாளா என்ன. அவளது வீடு பொற்கோவிலுக்கு அண்மையில் நூறு மீற்றருக்குள் இருந்தது. சுற்றி பற்றை வளந்து, பூச்சி பூரான்களின் நடமாட்டம் அதிகமாக தென்பட்டது. முதுமலைக் கிழவியின் வெண் சவ்வு படர்ந்த கண்களினை உற்றுப் பார்த்தபடி அருகில் போனேன். இளமஞ்சள் ஒளியில் கருத்த நிழலின் அசைவில் துணுக்குற்றாள். தடியின் மேல் சீத்தைத் துணி படர்ந்தாற்போல என்புகளின் மேலே மெல்லிய தோல் தொங்கியது. முழங்கை மூட்டு கரகரத்த சத்தத்தோடு அசைந்தது. மேசையினை நிலத்தில் வைத்து இழுக்கும் போது உருவாகும் சத்தத்தை ஒத்தது. மென்மையான குரலில் பதினாறு தலை நாக சிலையைப் பற்றி விசாரித்தேன்.
அவள் பதிலளிக்கவில்லை. ஒரே இருக்கையில் இருந்து காதுகளுக்குள் தூசுகள் அடைந்திருக்கும். சிலந்தியும் இன்னபிற பூச்சிகளும் காதுகளுக்குள் குடிகொண்டிருக்கலாம். மேலும் அருகிற் போய் சத்தமாக கேட்டேன். எங்கிருந்தோ வந்த ஓணான் ஒன்று சத்தத்தைக்கேட்டு திமிறிக்கொண்டு ஓடியது. முதுமலைக்கிழவி கண்களை உருட்டி என்னைப் பார்த்தாள். அவளுக்குள் உறைந்திருந்த காலம் உருகி ஒழுக்கத் தொடங்கியது.
முதுமலைக் கிழவி சொன்ன கதை
வண்ணாங்குளத்திற்கு அடுத்து இப்போதிருக்கின்ற காட்டுப்பிரதேசம் நெடுகாலத்திற்கு முன்னர் முதுமலை என்று அழைக்கப்பட்டது. வன்னியின் ஓரளவு உயரமான குன்றுகள் செறிந்த இடம் முதுமலை. மலைத்தேனுக்கு எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். இங்கிருக்கின்றவர்கள் பெரிய மரங்களில் லாவகமாக ஏற்கக்கூடிய திறமைவாய்ந்தவர்கள். இன்று கூட ஊர்களில் தேய்ங்காய் ஏறிப்பிடுங்கி தொழில் செய்பவர்கள் முதுமலையை அண்டிய கிராமப்புறங்களிலிருந்தே வருகின்றார்கள். வலிமையான உடற்கட்டு உடைய இவர்கள் எதற்கும் பயந்தவர்களில்லை. காட்டு எருமைகளை தனித்து நின்று வேட்டையாடி குடில்களுக்கு தனித்தே தூக்கிவருவார்கள். இரவுகளில் வெளிச்சமின்றிய பாதைகளில் கூட தைரியமாக அலைந்து திரிவார்கள். பெரும் மரக்கொப்புகளில் இரவுகளில் உறங்குவார்கள். அகன்ற தாடையும் பின்பக்க கூனலும் சிலிர்த்த ரோமமும் குரங்கு ஒன்றின் மூப்பினைப்போல இவர்களை அடையாளப்படுத்தும். முழங்கால் சற்று முன்னே மடிந்திருப்பது மரங்களில் ஏற வசதியாக இருக்கும். இவர்களில் ஒருத்தன் மாய். மாயவன்.
முதுமலையில் கள்ளு கிடையாது. குன்றுகள் மிகுந்த இடத்தில் கள்ளு மரம் முளைக்காது என்று நம்பியிருந்தார். இப்போது வண்ணாங்குளம் என்றழைக்கப்படும் கிழுதிப்பற்றையில் நன்றாகக் கள்ளு கிடைக்கும். ஆறேழு நாட்கள் மலை முகடெல்லாம் அலைந்து திரிந்து களைத்த முதுமலைவாசிகள் ஒரு நேர நித்திரைக்காக கள்ளுக் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.  மாய் கள்ளிற்காக கிழுதிப்பற்றைக்கு தேங்காய் இறக்கப்போவான். மாய்க்கு கள்ளிறக்க அனுமதி கிடையாது. கள்ளு நாக தேவிக்குரியது. நாகதேவி என்றால் சர்ப்பம். ஒன்றல்ல இரண்டல்ல பதினாறு சர்ப்பம். ஊருக்குள் பிறக்கின்ற கரிய குழந்தைகளை நெடுகாலமாக முறுக்கிக் கொல்லும் கொடிய உடும்பு ஒன்றினை பதினாறு பாம்புகள் ஒன்று சேர்ந்து திரண்டு அழுத்தி கொன்றதனாலேயே நாகதேவி உருவானாள் என்ற ஐதீகம் இன்னமும் வண்ணாங்குளம் மக்களிடம் பலமாக இருக்கிறது. தினமும் நாகதேவிக்கு கள்ளுச் சாத்துவார்கள். கள்ளு திரையும் முன்னர் கிழுதிப்பற்றைவாசிகள் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். மீதத்தை மாய்க்குக் கொடுப்பார்கள். மாய்க்கு போதுமானளவு கிடைப்பதேயில்லை. ஊர்வாசிகளிடம் கேட்டாலும் கொடுப்பதில்லை.  மாய்யிற்கு இது பெரும் உளைச்சலாக இருந்தது.
மாய்யிற்கு நாகதேவியைத் தூக்க பெருஞ்சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. நாகதேவியே இதை விரும்புவதாக அவன் நினைத்துக்கொண்டான். முதுகில் அந்த இரண்டடிக் கல்லை கவிட்டு முதுமலைக்கு சுமந்துசென்றான். நாகதேவியைக் காணாத கிழுதிப்பற்றைவாசிகள் நாகதேவி இருளோடு கரைந்துவிட்டாள் என்றும் இனி கள்லென்பது இந்த மண்ணில் கிடையாது என்றும் நம்பினார்கள். கள்ளு அவர்களின் கள்ளு மரத்திலேயே திரைந்து மறைந்தது. இரவுகளில் நாகதேவி கள்ளுக்குடிக்க வானத்திலிருந்து இறங்குவதாகவும் கதைகள் சொல்லப்பட்டன.
குறிப்பு 02
BBC Earth Films இன் Earth: One Amazing Day என்கிற ஆவணப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். நான் பார்த்த ஆவணப்படங்களுக்குள் மிகவும் நெருக்கமான படம் இதுவாகும். பூமியை அத்தனை தூரம் நேசிக்க வைக்கும்.  இருத்தலியல் சிக்கலில் இன்றுள்ள பலர் இருக்கின்றனர். வவுனியாவில் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டு போகிறது. உலகத்தின் மீதான பற்றற்ற நிலையை எல்லோரும் உணரத்தொடங்கியிருக்கிறார்கள். காதல் பிரிவிலும், சிறிய சிறிய பிரச்சனைகளிலுமிருந்து விடுபட தற்கொலையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். இறத்தல் பிரச்சனைகளை விடுவித்துவிடும் என்று பலமாக நம்புகிறார்கள். கிழுதிப்பற்றைவாசிகள் போல. குழந்தைகள் முதல் எல்லோரும் ஒரு முறையாவது Earth: One Amazing Dayஐயை பாருங்கள்.
 
Earth: One Amazing Day இல் ஒரு காட்சிவரும். வருடக்கணக்கில் நிலத்திற்குள் ஒழிந்து கிடக்கின்ற உடும்புகளுக்காக பெருந்தொகையான பாம்புகள் கடற்கரை வெளிகளில் காத்திருக்கும். உடும்புகளுக்கும் இது தெரிந்திருக்கும். மணற்பரப்பை மெதுவாக கிளப்பிக்கொண்டு உடும்புகள் வெளியேற , பொறுத்த நேரத்தில் பாம்புகளும் பாய்ந்துவிடும். வாழ்வுக்கும் இறப்பிற்கும் ஆனா போராட்டத்தில் நெடுகாலம் உணவற்றிருந்த பலமில்லாத உடும்புகள் வெகுண்டு ஓடும். பாம்புகளின் சுற்றுகைக்குள் மாட்டி இறப்பவையும் உண்டு, தப்பித்துக் கொள்பவையும் உண்டு.
 
 
இணையத்தில் Earth: One Amazing Day யினைப் பெற
http://ajhdmovies.com/earth-one-amazing-day-bluray-1080p-full-hd-direct-download/
 
ஓவியம் – Raphael