கோபம் என்பதை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் வேறு எதையும் வெளிப்படுத்துவதில் உள்ளதை விட கஷ்டமானது. பொதுவாகவே உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் என்பது எல்லோராலும் செய்துவிடமுடியாத ஒரு செயல். எளிதானதும் இல்லை. எந்த உணர்வையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமா என்றால் இல்லை. கட்டுக்குள் வைத்திருத்தல் , குளக்கட்டை எடுத்து கொள்ளவோம். குளத்திற்குள் நீர் தேங்க தேங்க கட்டு கட்டுப்படுத்திக்கொள்ளும், ஒரு எல்லை வரை. எல்லையை தாண்டிய பிறகு நீர் பாய்ந்து ஓட்டிச்செல்லும். இது கட்டை தாண்டிய நிலை. குளத்து நீர் கட்டிற்குள் நிற்கும் வரைதான் வெள்ளாண்மைக்கோ பயனைப்பெறக்கூடிய எதோ நல்ல விடத்திற்கோ. கட்டை தாண்டிய நிலையில் ஒன்றுக்கும் உதவாத கடலுக்குள் அடங்கி போகும். எதுவுமே கட்டுக்குள் இருக்கும் போது தான் சிறப்பு.
நீரின் அழகே கட்டைத்தாண்டிய பிறகு கெட்டு விடும் என்றால் உணர்வுகள் , உணர்வுகளை தாங்குகின்ற மனிதன், உணர்வுகளும் கட்டுக்குள் இருக்கும் போது தான் உயர்வு. உணர்வுகளில் மனிதனை மீறிய ஒரு நிலையை அடையவைக்கும் சக்தி கோபத்துக்கு இருக்கிறது. விஞ்ஞான ரீதியில் மனித மூளைக்கோளத்தில் amygdala என்ற உறுப்பு உணர்ச்சிகள் , அதன் நடவடிக்கைகள், அதற்கான ஊக்கம் என்பவற்றை உருவாக்குகிறது. இந்த செயன்முறையின் போது ஏற்படுகின்ற உணர்வு பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக சுரக்கின்ற epinephrine மற்றும் norepinephrine நொதியங்கள் இரத்தத்தை போக்கை அதிகரிக்கின்றது. இரத்தம் வேகமாக முகம் போன்ற பகுதிகளுக்கும் முக்கியமாக ப்ரீஃபிரன்டல் புறணி (இடது கண்ணின் மேல் என்று மூளையின் பகுதி) இடத்திற்கு விரையும். இப்பகுதியின் செயற்பட்டு முடிவுகளை கட்டுப்படுத்தவும் கோபத்தில் இருந்து நம்மை விலக்கவும் உதவும். இச்செயற்பாடுகள் அனைத்தும் இரண்டு செகண்ட்களுக்குள் நடைபெற்று முடிந்துவிடும் . இந்த இரண்டு செகண்ட்களுக்குள் உந்தப்படும் நாம் விபரீதமான செயல்களை செய்துவிடுகிறோம். இதனால் தான் கோபம் வரும் போது தண்ணீர் குடிக்கவோ அல்லது பத்துவரை எண்ணவோ கூறுகின்றார்கள் பெரியவர்கள்.
கோபம் எல்லாருக்கும் வரும். அதை சரியான வழியில் திசைப்படுத்த தெரியாதோர் தான் அதிகம். தவறான திசைப்படுத்தல் பலவழிகளில் நடந்தேறுகிறது. அதில் மிக கொடிய வழி வன் சொற்பிரயோகம். கோபத்தை நிர்வகிக்க முடியாமல் பல வழிகளில் வெளிப்படுத்துவோரில் ஆக கொடிய வழியை தெரிவு செய்வோர் கடுஞ்சொற்களை பிரயோகிக்க எத்தணிப்போர், பிரயோகிப்போர். கோபத்த்தால் சொல்லப்படுகின்ற சொற்கள் சூடு தழலை போன்றது. சொல்லுகின்ற சந்தர்ப்பம் சரியோ பிழையோ சொற்களை உள்வாங்கியவர் உகந்தவரோ இல்லையோ ,சொல்லப்பட்ட சொற்கள் மற்றவரை அடையும் போது அதன் வலிமையான தாக்கம் பலகாலம் ஆனாலும் மாறாத வடுவாக இருந்துகொண்டே இருக்கும். அவர்களின் நியாயம் இப்பிடி இருக்கும், கோபத்தில் தன்னிலை அறியாமல் பேசிவிட்டேன். இதை எல்லாவற்றையும் விட கொடுமை பின் நவீனத்துவம் என்ற பெயரில் சரளமாக உச்சரிக்கப்படுகின்றதும் எழுதப்படுகின்றதுமான கடும் சொற்கள். அந்த சொற்களின் அசாத்திய வலிமை தெரியாமல் பேசப்பட்டு விடுகின்றன. நண்பர்களுக்குள் என்றும் , இது தான் இலக்கிய மொழி என்றும் இன்று சகஜமாகிப்போன கடும்சொற்பிரயோகம் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். ( குறள் 139 )
மறந்தேனும் கூறிய கடும் சொற்கள் , நல்ஒழுக்கத்திற்கு எதிரானது. நல் ஒழுக்கம் உள்ளோர் மறந்தும் அதை பாவிக்கார்.