’தம்பி டேய் இன்னொன்டு கொண்டு வா..’ ,
அவன் மீதிருந்த பயத்தால் அதற்கும் பார் கடை சர்வர் தலையாட்ட வேண்டியதாய் போயிற்று. தெருவின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது லாகன் பார் கடை. ஆரம்பத்தில் விசேட மது சோலை என்றிருந்த கடை தான் கால ஓட்டத்தில் மூன்றாம் தலைமுறை உரிமையாளரால் லாகன் பார் என மாற்றப்பட்டது.
‘ இதோட எத்தினயாவது, இவன் ஓசில குடிக்கிறதுக்கு என்ன இது மெயின் ரோட்டு டியூப் வெல்லா? அவனுக்கு இனி கிடையாது. ஊத்தினதுக்கு காச வாங்கிட்டு ஆள வெளிய அனுப்பு.’ , இதற்கு பழைய பலசரக்கு கடை வேலையே மேல் என்று மனதிற்குள் நொந்து கொண்டே மேசைக்கு வெறுங்கையுடன் சென்றான்.
அந்த குடிகாரன் எந்த தெரு மதுக்கடையையும் விட்டு வைத்ததில்லை. எல்லா கடையிலும் நிறைய கடன் , நிறைய சிகரட் கட்டைகள் , நிறைய பேச்சுக்கள், நிறைய மோதல்கள், கொஞ்ச அடிகள் அது தான் அந்த குடிகாரன் வைத்திருந்த சொத்து.
‘எங்கடா போத்தல்? தரமாட்டன் எண்டானா? சொல்லுடா சொல்லு, நான் யாரண்டு இவனுகளுக்கு தெரியாட்டியும் அவனு…………’ இது சர்வருக்கு சகஜமாக போன கதையாகி விட்டது.
‘ ஆமா இவன் பெரிய பட்ஸ்மான் ,பெரிய வ்லாஸ்பாக் இவன்ட கதய கேக்குறதுக்கு அடுத்த கஸ்டமர கவனிச்சா துட்டாவது தேத்தலாம்.’ என்று முணுமுணுத்தபடி பார்வையை அடுத்த மேசைக்கு திருப்பினான்.
கடையின் மேலே சிகரட் தூசு படிந்த மூலையில் ஆயிரத்து தொள்ளாயிரங்களில் வாங்கிய தொலைக்காட்சி பெட்டி அதே பழைய பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
அடுத்த மேசைக்காரன், ‘ தம்பி ஒரு பக்கட் சிகரட்.’ என்றவுடன் அவன் திரும்பி ,’ இப்ப தாரன் அண்ணா. வேற ஏதும்?’
பார்வை வேண்டாம் என்றது.
அவன் மீண்டும் திரும்பி உளறிக்கொண்டிருந்த குடிகாரன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து பொத்தான்களை அமத்தினான்.
“Thats out , great bowling from Stoac , Kali goes for a duck , and deep silence at Eden garden….”
அமைதியாக அவனும் திரும்பினான்.
சட்ட்ட்………….
அவன் அமைதி குலைந்துக்கொண்டது. அவன் நின்ற இடமெல்லாம் சிவப்பு நிற திரவம் கண்ணாடி உடைசல்களில் தக தக என்று ஜொலித்தது. தன் கதையை அலட்சியபடுத்தியதால் அந்த குடிகாரன் தான் குடித்த கால் போத்தலால் சர்வரின் நடுத்தலை பிளந்தான்.
அவன் மீண்டும் திரும்பி உளறிக் கொண்டிருந்த குடிகாரன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து பொத்தான்களை அமத்தினான்.
இவன் தன் பேச்சை கேட்பதாய் இல்லை , ‘ எவ்வளவு பெரிய மனுசன் நான் , நான் லூசன் மாரி அலம்பிட்டு இருக்கன் இவன் டீவிய புடுங்கிட்டு இருக்கான். இவன…’ என்று கொண்டு தான் குடித்து முடித்த கால் போத்தலை கைகளால் இறுக்கினான்.
“Thats out , great bowling from Stoac , kali goes for a duck , and deep silence at Eden garden….”
அமைதியாக அவனும் திரும்பினான்.
சட்ட்ட்………….
போத்தல் வாய் மட்டும் கைக்குள் பிடிபட்ட நிலையில் கொஞ்சம் தரையிலும் கொஞ்சம் சர்வர் தலைக்குள்ளும் சிதறிப்போய் இருந்தன. மதுவுடன் கலந்த ரத்தம் சிதறியதால் தரையும் , சர்வரும், குடிகாரனும் தள்ளாடி சிவந்த கண்ணாடி துகள் மேல் விழுந்தனர்.
சர்வரின் முகம் ரத்ததில் சிவந்திருந்தது. உயிர் கலியை போல பவிலியன் திரும்பிக் கொண்டிருந்தது எதுவும் சாதிக்காமல்.
சர்வர் இப்போது உளற ஆரம்பித்தான்,
“நான் யாரண்டு இவனுகளுக்கு தெரியாட்டியும் அவனுக்கு நல்லா தெரியும். நான் உன்ன இங்க வேலைக்கு விடேக்கயே சொன்னான் என்ர மோன் இங்க சம்பாதிக்கிற ஒவ்வொரு சல்லி காசும் என்ர குடிக்கு மட்டும் தான் என்டு. இப்ப உன்ர சம்பளத்த ஒளிச்சு வச்சுக்கொண்டு எனக்கு ஊத்த மாட்டன் என்றானோ.. அதானே அப்பா. என்ர சம்பளத்த இந்த முறை நான் எடுத்து எட்டாம் ஆண்டு திரும்பி படிக்க பள்ளி கூடத்துக்கு நன்கொடையா குடுத்துட்டன் அப்பா. இல்லாட்டி சேக்க மாட்டினமாம். வெறிக்குட்டிட பொடியன் என்டுறதால நம்புறாங்க இல்லப்பா. அது தான் அதிபர்டயே கொண்டு போய் குடுத்துட்டன். அப்பா தலை நோகுதப்பா. அம்மா கூப்பிடுற மாரி இருக்கப்பா. அப்பா அப்ப….”
மது , இரத்தம் , கண்ணீர் இவற்றால் கரைந்து போனது சர்வர்-கஸ்டமர் என்னும் புனித உறவு.
மது – இரத்தம் – கண்ணீர்
கல்வி – தாகம் – இறப்பு
Category Archives: Short Fictions – சிறு புனைவுகள்
சீனி பாக்
காலை இன்னும் விடியவில்லை என்பது தெரிந்து இருக்கவில்லை. அப்படியே அந்த நாள் விடியாமல் அடுத்த நாள் விடிந்து இருக்கலாம். மித்திரன் போன்ற நன்றாக படிக்கும் பிள்ளைகளால் வகுப்பில் எப்போதும் முன்னிலை பெறமுடிவதில்லை. இன்று படிப்பு என்பது பாடப்புத்தகம் மட்டுமே என்ற குறுகிய எண்ணம் படிக்காத ஜனங்களுக்கு மட்டும் அல்ல படித்த (என்று கூறும்) அரசாங்கத்திற்கே இருப்பது அவன் மனதை இன்னும் பாதித்தது. அரசாங்கத்தை மாற்றிவிடவேண்டும் என்பதைவிட தான் படிக்காமல் மக்காக இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை என்பது தான் அவனை இன்னும் அதிகமாக ஆட்கொண்டிருந்தது. வகுப்பில் பின்னிலை மாணவர்கள் எல்லாம் லீவுவிடும் நாள் அன்று மகிழ்ச்சியாக கிரிகெட் விளையாடிக்கொண்டிருக்க இவனும் இவனைபோன்றவர்களும் இன்று வீட்டில் என்ன நடக்கும் என்ற பீதியில் ரன் அவுட்கள் ஆகி கொண்டு இருப்பார்கள். முகம் எல்லாம் இருண்டு போய் அசைவும் அசைவற்ற நிலையும் இரண்டற கலந்து போய் மணல் வீடு போல் நிப்பர்கள். யாரவது மெதுவாக தீண்டினால் கூட உடைந்து விழும் சோகம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். மித்திரனுக்கு ஒன்றும் இது புதிதல்ல. இன்று நேற்று இல்லை தரம் ஐந்தில் இருந்தே இந்த மனநிலை வருடத்திற்கு மூன்று முறை வந்து விடும்.
அவ்வாறான சில நாட்களில் இந்த நாளை அவன் மறந்திருக்கவே மாட்டான். பாடசாலையில் பரிட்சைகள் தாமதமாகி போனது. திருத்தும்பணியும் தாமதமானது.அவனுக்கு மனதார அன்று மிகவும் சந்தோசமான ஒரு நாள். அவன் கல்வீடு போல இருந்தான். மெதுவாக பிள்ளையாரை நோக்கி வணங்கி வணங்கி படல்களை மிதித்து இருக்கவேண்டிய கால்கள் விரைவாக வீட்டை நோக்கி உதைத்தன.மனதுக்குள் சினிமா பாட்டுக்கள்.அன்று மித்திரன் அவுட் ஆகவே இல்லை. இவ்வளவுக்கும் காரணம் இவன் முதல் மாணவன் என்று நினைத்தால் மிகத்தப்பு. அவன் அதே ஐந்து தான். திருத்தம் தாமதம் ஆனதால் தேர்ச்சி அறிக்கை வழங்கவில்லை. இப்படியே இந்த லீவினை கடத்தி விடுவோம், என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு சைக்கிளின் முன் சில்லால் கதவை தள்ளி ஸ்டான்ட் போட்டன்.
அவனது அப்பா தபால் கந்தோரில் வேலை செய்கிறார். பெரிய பதவி , நிறைய ஆளுமை அதற்கு காரணமாக இருந்தது. கெட்ட பழக்கம் எதுவுமே இல்லை என்பது ஊருக்குள் பேச்சு. ஆனால் அவரது அயலுக்கு மட்டுமே திருத்த முடியாத பழக்கம் இருப்பது தெரிந்து இருந்தது. சிறுவயதில் ஒருநாள் மித்திரனின் காற்சட்டைக்குள் இருபது ருபாய் இருப்பதை பார்த்து விட்டார். அவ்வளவு தான் மித்திரன் இன்று மட்டும் ஒரு சல்லி காசு அவன் வைத்திருப்பதில்லை. அதனால் மித்திரன் சிக்கனவாதி என்ற பகட்டு பெயருடன் வாழ்ந்து மடிந்தான் என்பது வேற கதை. மித்திரன் ஸ்டான்ட்ஐ போட்டு இறங்கி வீட்டுக்குள் சென்றான். அப்பாவிடம் ,”அப்பா , ஸ்கூல்ல ஹிஸ்ட்ரி மார்க்ஸ் தரல , திருத்தி எடுக்க லேட் ஆகும் எண்டு ரிப்போர்ட் ஷீட் உம் தரல அப்பா, மதஸ் தொனூறு …..” என்று கூடிய புள்ளியில் இருந்து அடுக்கி கொண்டு வந்தான் . அப்பாவும் மெதுவாக கேட்டு கொண்டு இருந்தார். வழமையான பேச்சு இல்லை . எல்லாம் நல்ல புள்ளிகள். அப்பா மனதுக்குள் அந்த பாடம் வந்தவுடன் மித்திரன் இரண்டாம் முதலாம் பிள்ளையை அண்மித்து விடுவான் என்று நினைத்தாரோ தெரியவில்லை. நாட்கள் இவனுக்கு சாதகமாகவே ஓடின.
காலை இன்னும் விடியவில்லை என்பது எனக்கு எழுந்திருக்கும் போது தெரிந்து இருக்கவில்லை. அப்படியே அந்த நாள் விடியாமல் அடுத்த நாள் விடிந்து இருக்கலாம்.மித்திரனை அப்பா கூப்பிட்டார் என்று அழைப்பு வந்தது. அவன் வீட்டின் அருகால் முன்பக்கத்தை வந்து அடைந்திருந்தான். அப்பா கதிரையின் சேட்டு இல்லாமல் உட்காந்து இருந்தார்.
அவனிடம் ,”ரிப்போர்ட் தந்தாச்சா ? ”
“இல்லப்பா ”
“தோலை உரிச்சு போடுவன் எங்கடா ரிப்போர்ட்?”
“உண்மையா தரல அப்பா ”
“இவளவு நாளை தராம வச்சிருக்காங்களா ?எடுத்திட்டு வா எரும”
மித்திரன் கால்கள் நடுங்க தொடங்கின அவன் கண்கள் இருண்டுபோய் இருந்தன. சமாளிக்க முடியாது என்பதை அவன் நன்றாக அறிந்திருந்தான். இருந்தும்
“தரலயே அப்பா”
“வெளிக்கிடுடா போய் எடுத்திட்டு வா ”
அவன் அடிவயிறு கலங்கி போனது . அவனுக்கு யாரோ அப்பாவிடம் ரிப்போர்ட் பற்றி கதைத்துள்ளதும் அதை அவர் செவிமடுத்து மித்ரனிடம் நிச்சயமாக கேட்பதும் மெதுவாக விளங்கியது.
“எடுத்திட்டு வாறன் அப்பா ”
அப்பாவின் முகம் கறுத்திருந்தது, கிளீன் ஷாவேரில் அவர் அவனுக்கு கொடூரன் போல காட்சி அளித்தார்.கண்கள் முட்டு குடம் போல் இருந்தன. அப்பா இப்பிடி அதட்டுவது ஒன்றும் மித்ரனுக்கு புதுசு இல்லை. ரிப்போர்ட் எடுக்க திரும்பியவன் கண்கள் இரண்டிலிருந்தும் கண்ணீர் கசிய தொடங்கி இருந்தது. நித்திரை முழுவதுமாக கலைந்திருந்தது .

மித்ரன் ரெண்டு மாதமாக கட்டிவைத்திருந்த ரகசியம் அவிழ்ந்துபோனது. அவன் தன் புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த ரிப்போர்ட் சீட் ஐ எடுத்து மெது மெது வாக அடியெடுத்துவைத்தான். அப்பாவை நோக்கி நகர்ந்தான் . அப்பா மித்ரனை ஒரு புழுவினை பார்ப்பது போல அருவருப்புடன் கூடிய கோபத்துடன் பாத்துக்கொண்டிருந்தார். மித்திரன் குனிந்து கொண்டே நகர்ந்து அப்பாவிடம் நீட்டி விட்டு விலகிச்சென்றான் . அப்பா ரிப்போர்ட் ஐ புரட்டினார் .அவருக்கு அவன் ஐந்து என்பதிலோ இல்லை வரலாறு அறுபது என்பதிலோ கோபம் இல்லை. வேகமாக புரட்டியவர் பெரிதாக சீட் இல் எதையும் பார்க்கவில்லை. மித்ரனை நோக்கி
“உனக்கு ஒருக்கா சொன்ன காணாதா எல்லாம் பொய்யும் புரட்டும் உனக்கு படிப்பு தேவை இல்ல. நீ …நீ…. போ அங்க சீனி மூட்ட கிடக்குது தராச எடுத்து நெறு ஒரு ஒரு கிலோவா …கொஞ்ச சீனி கூட கீழ கொட்டக்கூடா …. உனக்கு படிப்பு தேவை இல்லை ….. போய் ஸ்கூல்ல லீவிங் செர்டிபிகேட் எடுத்திட்டுவாறன் ……இங்கயே கிட ……” என்று மக்சிமம் சத்தத்தோடு பேசினார்.
அவன் எந்த காலமும் அவரின் சொல்லை எதிர்த்து பேசியதே இல்லை. கண்ணீர் கண்களின் ஊடு வாய் நாடி என கழுத்தை அடைந்துகொண்டிருந்தது. கண்களை துடைத்து கொள்ளக்கூட அவனால் முடியவில்லை. அவன் சீனி பாக்கை கத்தியால் திறந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு சீனி மீதான கத்தி வெட்டையும் தன்மீதான கீறல்கள் போல் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு ஒரு ரூபாய் சொப்பினையும் பிரட்டி தராசில் நெறுக்க தொடங்கினான். சீனி மூடை அரைவாசியால் குறைந்து போய் இருந்தது. மித்ரனுக்கு சீனி அளப்பது கஷ்டமாக தெரியவில்லை , அப்பா பேசிய வார்த்தைகளின் கணம் அவனால் தாங்க முடியவில்லை. அவனின் அழுகை அவன் பாரத்தை குறைப்பதாய் இல்லை. கண்ணுக்குள் இருந்த கண்ணீர் எப்படி கழுத்து வீட்டுக்குள் செல்வதனால் பாரம் குறையும் அல்லது உடலுள் வியர்வை வெளியே சென்று உடல் வெளியே படிவதனால் எப்படி பாரம் குறையும் என்ற தத்துவம் அவனுக்கு நிரூபணம் ஆகிக்கொண்டிருந்தது. சீனி முட்டையின் கணம் குறைந்து கொண்டே போனது. அவனுக்கு அவன் வீட்டின் மேல் இருந்த வெறுப்பு அதிகமாய் போனது.
மித்ரன் சித்தப்பா வந்தார். யாரும் வீட்டில் இல்லை . அப்பா பேசி விட்டு ஸ்கூல் போவது என்று சொல்லி விட்டு கந்தோருக்கு சென்று விட்டார். கையில் ஒரு சோப்பினுடன் தினசரி பத்திரிகை சுற்றி பொட்டலம் போல் ஒன்றை தாங்கியவாறு சித்தப்பா வந்தார் .
“ஏன் தம்பி இப்பிடி செய்தனி காட்டியிருக்கலாம் தானே ரிப்போட்ட” என்றார் கண்ணீர் மல்கியபடி,
கூடவே
“இந்தா சாப்பிடு” என்று சோப்பினை நீட்டினார். சோப்பினுக்குள் இருந்த ரோலை வாங்கியதில் இருந்து சீனி மூட்டை அளவு சோகம் குறைந்தது போல் உணர்ந்தான் . அந்த சொப்பின் தான் அவன் பாரத்தை குறைக்கும் என்பதை சித்தப்பா மட்டுமே அறிந்து வைத்திருந்தார்.
அந்த நாள் ஓடியது. நிறுத்த சீனி பைகளை அவனின் அப்பா நிறுத்து பார்க்கவே இல்லை . ஏன் என்றால் அந்த வகுப்பில் அவன் ஐந்தாம் பிள்ளை , பிழை விட்டிருக்கமாட்டான் என்று நினைத்திருப்பார் போலும். மித்ரன் வழமை போல் ஐந்தாம் பிள்ளையாகத்தான் வந்தான். ஆனால் ரிப்போர்ட் மட்டும் காட்ட தவறுவதில்லை.அவன் சித்தப்பாக்கும் ரோல்ஸ் ஓடு ஆறுதல்களையும் வைக்கவேண்டிய தேவை வந்ததில்லை. ஆனால் வேறுவடிவங்களில் மித்ரனுக்கு தேவைப்பட்டன. மித்ரன் பின்னரும் ரன் அவுட்கள் ஆகிக்கொண்டு தான் இருந்தான்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கண்களை இறுக மூடி தூங்கிக் கொண்டிருந்தான். தூங்க முயற்சி செய்துகொண்டிருந்தான். ஆலய மணி ஓசை அவனை தூங்க விடுவதாய் இல்லை. அவனுக்கு மணி ஓசையை மீறி தூங்கி விட வேண்டும் என்ற கட்டாயம். அடுத்த நாள் அதிகாலை விடிவது அவனுக்காக மட்டும் தான். நேற்றோடு மாதங்கள் ஆறு ஆகி விட்டது. யாரோ செய்த நேர்த்திக்காக இங்கு அனுப்பப்பட்டவன் தான் அவன். அவனோடு நூற்றுக்கணக்கில் அவர்கள், இதையிட்டு அவன் அவ்வப்போது சந்தோசப்பட்டதுண்டு. ஆலயமணி ஓசையின் சத்தம் கொஞ்சமாக குறைந்தது. அவனை தூக்கம் அழைத்து சென்று ஓரமாய் ஒரு மூலையில் போட்டது. இருட்டி இருந்த அறையில் ஆங்கங்கே வெள்ளொளியாய் நினைவுகள் அலைய தொடங்கின. ஒவ்வொன்றாய் அவன் பிடித்து அறைக்கு வெளியே எறிந்தான். அம்மா , அப்பா , தங்கை , அப்பம்மா, தாத்தா, பால்ய நண்பன், பள்ளித்தோழி என எல்லா நினைவுகளையும் தூக்கிப்போட்ட அவனுக்கு ஒரு நினைவு மட்டும் தூக்க முடியாத கனமாய் இருந்தது.
அவன் ஆவலுடன் காத்திருந்த விடியல் விடிந்து விட்டது. அவன் முற்றத்தில் பொறுக்கிய சிலுவைத் தகடை கைகளில் பொத்திக்கொண்டான், கூடவே சில புத்தகங்கள். குனிந்து செருப்புகளை போட்டுக்கொண்டான். இந்த சோடி செருப்புக்கு இது தான் கடைசி நாள். வெளி உலகை விட இந்த ஆலய வாழ்க்கை தான் உண்மைகளை அதிகம் கற்று தந்தது. அறை வாயிலில் வந்தவன் அவர்களை பார்த்தான், அவர்களின் முகங்கள் புன்னகையால் வாழ்த்துக்கள் சொன்னது. அவர்களின் புன்னகையின் அர்த்தம் அவனுக்கு மேலும் ஊக்கம் தந்தது. ஆறு மாதம் வாழ்ந்த இந்த ஆலயத்தை வெளியேற மனம் இல்லாமல் கால் அடிகள் மெதுவாக எடுத்து வைக்கப்பட்டன. அவன் ஆறு மாத காலத்தில் உழைத்ததிற்காய் கொஞ்ச பணம் சன்மானம் வழங்கப்பட்டது. அதையும் பொத்தி பிடித்துக்கொண்டு ஆலய வாயிலுக்கு வந்தான். அவன் தங்கை கணவனுடன் அங்கு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள், கூடவே அந்த சமய ஆசிரியரும். அவன் கைகளில் உள்ள அனைத்தையும் தங்கையிடம் கொடுத்துவிட்டு ஏதும் பேசாமல் நேராக ஆசிரியரிடம் சென்று காதுக்குள் ஏதோ கூறினான். முடித்துக் கொண்டு கருவறை நோக்கி நடந்தான். ஆசிரியர் கண்கள் நீரில் கரைந்தன. அவனுக்கான தூக்கு கயிறு அவனை அன்போடு அழைத்தது அவன் எதிர் பார்த்த அந்த விடியலுக்காய்.