1.
என்னிடமிருந்து
எதையாவது ஒன்றை எடுத்துச் சென்றுவிடுங்கள்
ஈரமான இந்தத் தரையிலிருந்து
ஒரு பிடி ஈரத்தையேனும்
2.
என் கைகளிலிருந்து தோமஸை விலக்கிக்கொண்டுபோய் என்ன செய்யப்போகிறீர்கள்? நேற்றும் அதற்கு முன் தினமும் அதற்கும் முதல் பல நாட்களிலும் நீங்கள் என்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோன என் நண்பர்கள் என்னானார்கள்? என் வைரமான பிடிப்பையும் தாண்டி நீங்கள் இழுத்துச்சென்றவர்கள் என்னிடம் மீண்டும் வருவதற்காக கூச்சலிட்டு அழவில்லையா? உங்கள் மார்புகளை அவர்களின் வலிமையான கால்களால் உதைத்து வீழ்த்தி என்னிடம் வர எத்தணிக்கவில்லையா? நண்பர்களை என்னிடமிருந்து பிரிக்கமுன்னர் ஏன் என் கண்களை கறுப்புத் துணியினால் இறுகக் கட்டினீர்கள். ஓவென்று அழமுடியாதவாறு வாயை அடைத்தீர்கள். ஹ்ம் என்னவோ எல்லாம் செய்தீர்கள். இருந்தும் என்னால் முடிந்த எத்தனங்களைச் செய்தேன். உங்கள் கால்களையும் கைகளையும் பிடித்து தேம்பி தேம்பி அழுதேன். சுடுமணலை அள்ளி எற்றி உங்களைத் தூற்றினேன். சபித்தேன். நீங்கள் என் நண்பர்களைப் பிடித்துச் சென்ற பின்னர் அவர்களின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்னைப் பைத்தியம் என்றார்கள். இவனுக்கென்னாயிற்று நண்பர்கள் தானே பிரிந்து போனார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அத்தனை வலிமையற்றவனா இவன் என்று என் காதலிகள் சிரித்துக்கொண்டார்கள். ஆனால் தோமஸ் மட்டும் என்மீது பரிதாபப்பட்டான். என் கிழிந்த ஆடையினை, மழிக்காத முடியினை, மெத்தையில் செரிக்காமல் வாந்தியெடுத்த வேகாத இறைச்சி துண்டுகள் மீது புழுத்த நாற்றத்தினை இன்னும் எத்தனையோ. எல்லாவற்றைப் பார்த்தும் வருத்தப்பட்டான். தோமஸ் எத்தனை பரிவான பெயர். அத்தனை பரிவானவன் அவன். மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்? மனித உறவுகள் ஏன் இத்தனை பலகீனமானதாக இருக்கிறது? தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் ஏதோ ஒரு நாள் முடிவிற்கு வருகின்றன? முடிவிற்கு வருவதற்காக தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் தொடங்கப்பட்டன தோமஸ்? என் கைகளிலிருந்து நழுவி இழுத்துச் செல்லப்பட்டபோது நீயாவது அழுதாயா தோமஸ்?
3.
இந்தப் பூனைகளை பூமியிலிருந்து அழித்துவிடுங்கள்
சாத்தானே !
நீ கத்துவது
தொலைதூரத்திலிருந்து
என் நண்பன் அழுவதைப்போல கனக்கிறது.
4.
போதுமென்றளவு பேசிக்கொள்ள நண்பர்கள் இருந்த அந்த நாளில் தான் முதன்முதலாக நான் தனிமையை விரும்பத்தொடங்கினேன். அந்த நாளை என்னால் இன்னமும் சரியாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பனி படர்ந்த சவரக்கண்ணாடியின் மீது தெறித்தொதுங்கும் விம்பங்களைப்போல பல நாட்களை அடையாளங்கண்டு கொள்கிறேன். மிகச்சரியான அந்த நாளை, நொடியை என் பார்வையின் முன் நிறுத்தமுடியவில்லை. எரிந்து முடிந்த கடிதமொன்றிலிருந்து வார்த்தைகளைத் தேடி எடுப்பதைப்போல மழுங்கிப்போய்க்கொண்டிருக்கும் ஞாபகங்களிலிருந்து இவற்றை மீட்டி எடுப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது. அந்த நாளைப் பற்றிய நினைவுகளை ஓரளவேனும் மீட்டியெடுத்துவிட்டேன் என்று நினைத்த அந்தக்கணமே முடிவுறா வலியைத் தரும் அந்தக் கேள்வி எழுந்தது. காற்றாடிக்குள் சிக்கிக்கொண்ட ஈசலைப்போல சிறகுரிந்து உடல் சிதறிப் போனேன். “என் ஞாபகங்களில் எவை நியம்? எவை புனைவு?”. நிச்சயமாக என் ஞாபகங்கள் பொய்யில்லை. நியத்திலோ புனைவிலோ எனக்குள் வாழ்பவர்கள் யாருமே பொய்யில்லை. அவர்கள் அலட்சியமானவர்கள் அல்ல. சிந்திப்பவர்கள் இல்லை. அன்பைப் பற்றியும் தேவைகள் பற்றியும் சிந்தித்தவர்கள் இல்லை. வெள்ளைக் காகிதத்தின் மீது எறும்புகள் ஊர்வதைப்போல என்னுள்ளே அலைந்து திரிபவர்கள். அவர்களால் நான் அழுததில்லை. நான் அழுவதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து இறுக்கமாக முகத்தைப் பொத்தி நான் ரகசியமாக அழுவதைக்கூட அவர்கள் இலகுவாக அறிந்துவிடுகிறார்கள். தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்பேன். அவர்களுக்கு விடை தெரிந்திருக்காது. இருந்தும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சுவாரஷ்யமே இல்லாத கதைகளை சொல்லிக்கொண்டிருப்பேன், சற்றும் சம்பந்தமே இல்லாமல் சம்பவங்களை கோர்த்துச் சொல்வேன், பூக்கள் பறக்கின்றன என்பேன், மரம் பேசுகின்றது என்பேன், மின்மினிப்பூச்சிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது என்பேன், இப்படி ஆயிரம் என்பேன். அவர்களும் சலிக்காமல் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக பொய்யில்லை, ஆனால் என் ஞாபகங்கள் நியமானவையா ? புனைவுகளா? தச்சனொருத்தன் மரக்குற்றியொன்றிலிருந்து சிற்பமொன்றை செதுக்கி எடுத்ததைப்போல தூய்மையாக மட்டுமே நினைவிலிருக்கின்ற ஞாபகங்கள் எனக்குள் பெருஞ்சலனத்தை ஏற்படுத்துகிறன. கல்லொன்றில் மோதி தெறித்தழியும் நீர்த் திவலைபோல சிதறியொதுங்குகிறேன்.
இங்கிருந்து முன்னும் பின்னும் அருகிலும் இன்னும் எங்கெல்லாம் பார்வையும் அறிவும் படர்கிறதோ அங்கெல்லாம் நியமும் புனைவும் ஊடறுத்துக் கலந்த ஓவியமாகவே தெரிகிறது. எங்கெல்லாம் மனிதர்கள் கனமாகவும் கூரிய ஆயுதங்களோடும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் கறுப்பை அள்ளி எற்றிவிடுகிறேன். எங்கெல்லாம் என் புருவங்கள் தாழ்ந்து இதயத்தின் ஆழத்தில் ஒரு பிடியளவு ரத்தம் உலர்கிறதோ அங்கும் ஈரமான கறுப்பை ஊற்றிவிடுகிறேன். கரைத்தும் கலந்தும் ஊற்றி ஊற்றி எங்கும் இருளின் வண்ணமாயிற்று. எதுவுமில்லா ஒன்றிலிருந்து உண்டான ஞாபகங்களில் நியத்தையும் புனைவையும் எப்படிப் பிரித்தறிய. இத்தனை கனமான கேள்வியின் பின்னர் தனித்துப்போன நாளைப்பற்றிய ஞாபகங்களை ஒழுங்குபடுத்துவது எனக்கு இலகுவானதல்ல.
என்னுள்ளே ஒவ்வொன்றும் கேள்விகள் தான். தனிமை என்றால் என்ன? நான் உணர்கின்ற உணர்விற்கு தனிமை என்பது சரியான அடையாளமா? அல்லது எனக்கு முன்னர் இந்த உலகத்தில் வாழ்ந்து முடித்த என்னைப்போன்ற பலகீனமானவர்கள் தங்கள் சௌகரியங்களுக்காக வைத்துக்கொண்ட பெயரொன்றை என் உணர்வோடு பொருத்திப்பார்க்கிறேனா? எப்போது இந்த உணர்வு எனக்குள் உருவாகியது? அல்லது தொற்றிக்கொண்டது? யார் வைத்த சூனியம் இது? உண்மையில் ஏதோ ஒன்றை உணர்கிறேனா? அல்லது நாடகமாடுகிறதா இந்த மூளை? மூளை சிந்திக்கிறது என்றால் எப்போது எனக்குள் அந்த உணர்வு பற்றிய சிந்தனைகள் வந்தேறியது? நான் உணரும் உணர்வு என்னுடையது தானா? அல்லது பிரபலமான கவிஞரோ புனைவாசிரியரோ எழுதிவைத்த சொற்களின் வெளிப்பாடு தான் என் தனிமையா? இந்தத் தனிமை என்ன செய்துவிடும்? சிரிப்பதைப் போல அழுவதைப்போல வலிப்பதைப்போல பசிப்பதைப்போல இதை ஏன் எளிதாக தீர்க்கமுடிவதில்லை? தனிமை நண்பர்களை, உறவினர்களை, காதலியை மற்றும் எல்லோரையும் அந்நியமாக்கிவிடுமா? என்னை என்னிலிருந்தே பிரித்து சிறுகச் சிறுக அழிந்துவிடுமா? எல்லாம் அழிந்த வெறுமையில் வெறும் ஆன்மாவோடு மட்டும் நின்று தனிமை என்ன செய்துவிடப்போகிறது? தனிமை பயங்கரவாதியா? தீவிரவாதியா? அல்லது மனநோயாளியா? கேள்விகள் கேள்விகள் தான் எல்லாம்.
இவையனைத்தையும் யாரிடம் பேசித்தீர்த்துவிட முடியும். கேள்விகளில் இருந்து தப்பிக்க வழிகளைத்தேடுகிறேன். இந்தக் கேள்விகள் ஆபரணங்களைப்போல வீணாக ஒட்டியிருப்பவை அல்ல. இந்த கேள்விகளும் மற்றைய கேள்விகளும் வேறு அனைத்து கேள்விகளும் மட்டும் தான் நான். என்னிலிருந்து நான் தப்பிக்கவே வழிதேடுகிறேன். பாலூனுக்குள்ளிருக்கும் காற்று வெளியேறி பரந்த ஆகாயத்தில் கலப்பதைப்போல.
5.
அன்புள்ள நண்பன் தோமஸுக்கு,
உன் தோழி என்னிடம் கதறியழுதாள். என் அறையிலிருந்து அப்போது தான் ஓரான் பாமுக்கின் ” Memories of Istanbul” வாசித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் பல முறை கெஞ்சியும் நீ வாசிக்க மறுத்த அதே பாமுக் தான். பாமுக்கை மட்டுமா நீ மறுத்தாய். நகுலனையும் சுந்தர ராமசாமியையும் ஆதவனையும் சுகுமாரையும் அனாரையும் ரமேஷையும் மார்கோசையும் ருஷ்டியையும் நெருதாவையும் இன்னும் நான் சொன்ன அனைவரையும் வேண்டாம் என்று ஒதுக்கினாய். உனக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறொன்றும் தேவையாகயிருக்கவில்லை. என் எதிர் வீட்டில் நகுலன் இருப்பதையும் பின்னேரங்களில் இரண்டாம் மாடியில் சுந்தர ராமசாமி உடுப்புக்களை உலரவிடுவதையும் சொன்னபோது என்னைப் பைத்தியம் என்றாய். போகட்டும். உனது பிறந்தநாளுக்கு நான் பரிசளித்த ” என் பெயர் ராமசேஷன் ” எங்கே. இருக்கட்டும். எனக்கு பாமுக்கின் பனி பிடித்திருக்கிறது என்றேன். நீயோ உனக்கு பனியில் தோழியுடன் நெருக்கமாக நடப்பது பிடிக்கும் என்றாய். உனக்கு நான் அத்தனை முக்கியமானவன் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் தோமஸ். நான் உன் கன்னங்களில் மென்மையாக தந்த முத்தங்களை வேண்டாம் என உதறினாய். எனக்குத்தெரியும், உனக்கு காமத்தில் ஊறிய முத்தங்கள் தான் பிடிக்குமென்று. என்ன செய்வது ஆணாகப்பிறந்து விட்டேனே. உன் தோழியுடன் நீ இருப்பதையே அதிகம் விரும்பினாய். நீங்கள் நெருக்கமாக அலைவதைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் வஞ்சித்ததில்லை. உன்னைச்சுற்றி நூற்றுக்கணக்கில் நண்பர்கள் இருக்கிறார்கள். காலையில் தொடங்கிய சம்பாசனை நள்ளிரவு தாண்டியும் முடியாமல் போய்க்கொண்டிருப்பதை நீ சொல்லி அறிந்திருக்கிறேன். உன் தோழியுடனும் மற்றைய நண்பிகளுடனும் மணிக்கணக்கில் நேரிலும் எழுத்திலும் நீ பேசிக்கொள்வதை சாதாரணமாகச் சொல்லும் போது வியப்போடு பார்க்கிறேன். உன் கடிகாரம் மட்டும் பாரபட்சம் பார்க்காமல் வேகமாக சுழல்வதாக நினைக்கிறேன். தோமஸ், உன் தோழி மூடியிருந்த கதவினை வேகமாகத் திறந்து என்னருகில் வந்து நின்றாள். அன்று நீ காணாமல் போயிருந்த மூன்றாம் நாள். அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. என் உள்ளங்கைகள் இரண்டாலும் அவள் முகத்தை மூடி புதைந்திருந்து அழுதாள். உள்ளங்கையில் சுடுநீரை ஊற்றியது போல அவளது கண்ணீர் எரித்துக்கொண்டு நனைத்தது. அவளால் எப்போதும் அழுகையை நிறுத்தமுடியாது என்று தோன்றியது. உள்ளங்கைகளை உயர்த்தி அவள் முகத்தை திறந்தேன். ரத்தநாளங்கள் ஓடிப்போயிருந்த முகத்தில் உன்னைக்காணாத வாட்டம் தெரிந்தது. அவளின் புருவங்கள் துடித்துக்கொண்டிருந்தன. நெற்றி சுருங்கியிருந்தது. அழுதழுது மூக்குச் சிவந்திருந்தது. நானும் நீயும் பிரிந்து மூன்று நாளாயிற்று என்று அவள் அறிந்திருக்கவில்லை. இந்தப் பிரிவைப்பற்றி சொல்ல எதுவுமிருக்கவில்லை என்பதுவும் உண்மைதான். எனக்குத்தெரிந்து பிரிவினை எளிதாக எடுத்துக் கடந்துவிடும் ஒரே ஒரு உயிரினம் மனிதாராகத்தான் இருக்கமுடியும். எனக்கு பலத்த நம்பிக்கையிருக்கிறது. உன் காதலி பிரிவின் துயரத்திலிருந்து இரண்டாவது மூன்றாவதோ நாள் நிச்சயம் மீண்டுவிடுவாள். உனக்கு மனிதர்கள் எளிமையானவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் உனக்கு எதையும் தரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாய். நீயும் அவர்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை. இந்த உண்மையை உன் தோழியிடம் எப்படி எடுத்துச்சொல்வேன். அன்பு சிந்தனைகளின் உற்பத்தி இல்லை தோமஸ். இப்படியெல்லாம் பேசுவது உனக்கு அயர்ச்சியளிக்கும். என்னசெய்வது. எனக்குத்தெரிந்த ஒரே மந்திரம் தந்திரம் எல்லாம் இந்த அன்பு தானே. நான் அன்பென்னும் பெரும் மலக்கிடங்கு. தோமஸ் ஒரு முறையாவது உன் தோழியிடம் வா. என்னிடம் வரவேண்டும் என்றில்லை. உன்னோடே இருந்து உனக்காகவே வாழ்ந்த அவளுக்காக ஒரு முறை வா. மென்மையான அவளின் கைகளைப்பிடித்து இந்த உலகத்தில் வாழும் ரகசியம் பற்றி ஓரிரு வார்த்தைகளேனும் சொல்லிவிட்டுப் போ. உன் தோழி என்னருகில் கதறி அழுகிறாள். உன் கண்கள் கலங்கவில்லையா தோமஸ்?