முதிரும் ஒரு சொல்

நீண்ட பகற்கனவுகளின் மீது எனக்கு எப்போதும் ஆட்சேபனைகளற்ற நெருக்கம் இருந்திருக்கிறது. காண்டா கழுகின் ஒற்றை சிறகின் மலை நிழலுக்குள் மறைத்திருக்கும் பாழ் நகரத்தைப் போல பயங்கரமும் விசித்திரமும் நிறைந்த நினைவுகள் பற்றியும், அவற்றின் உருவாக்கங்கள் பற்றியும் யோசிக்கும் போது பகற்கனவுகள் தவிர்க்கமுடியாதவையாகின்றன. நீண்ட தூர வெயிற்கால நடையின் போது வெவ்வேறு நிழல்கள் நிலத்தை மறைத்து நிற்க என்னுடைய நிழல் அவற்றினூடு ஊடறுத்து செல்வதைப்போல இந்த நகரத்தின் இருண்மைகளுக்கூடாக நகர்ந்துகொண்டிருக்கிறேன். என் வீட்டைச்சுற்றி அடர்ந்து வளர்ந்த காட்டின் வாசனை. தனித்திருக்கும் இந்த செந்தரையின் மீதிருந்து ஒரு முழு நகரத்தையும் அதன் இருண்மையையும் கக்கிக்கொண்டிருக்கும் என் கனவுகளிலிருந்து விடுவித்துக்கொள்ளமுடியாதளவு, இரண்டு பெரிய உச்சியினிடையே தேங்கிப்போயிருக்கும் அசைவற்ற நீர்நிலையாகி கட்டிலின் நடுவே அமுக்கப்பட்டிருக்கிறேன். இதிலிருந்து எனக்குள் தோன்றும் கனவுகள் என் அன்றாடத்தோடுஎவ்விதத்திலும் தொடர்பற்றவை. விழிப்பு நிலைக்கு அப்பாலிருக்கும் இன்னொரு நிலத்திற்கு உரித்தானவை. என்னால் கனவுகளின் போக்குவரத்து பற்றி எதுவும் அறியமுடியாதுள்ளது. ஆனால் அவை என்னை பீடித்துக்கொள்ளும் இடங்களிலிருந்து என்னால் விலகிக்கொள்ளக்கூடியவாறு இருக்கிறது. வீட்டின் விறாந்தையிலிருந்து, அகன்றிருக்கும் சொகுசு கதிரைகளிலிருந்து , இரண்டு சுவர்கள் முட்டிக்கொள்ளும் மூலைகளிலிருந்து விலகியிருக்கிறேன். தேய்க்க தேய்க்க துலங்கும் மாயத்தூபி எல்லையற்ற கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றது. அவற்றின் சேர்க்கை புரிந்துகொள்ளவியலாததாய் இருக்கின்றது நானற்றவற்றில் இருந்து கனவுகள் தோன்றுவதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு கனவு ஒவ்வொரு நினைவு. இவற்றை யார் எப்போது வைத்தார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. அவை நீள அகலமற்ற பெருவெளி. எனக்கு முன்னும் பின்னும் பனி படர்ந்த இரண்டு ஆளுயரக் கண்ணாடிகள். கனவுகளில் ஒளியாகி விரிந்து வெவ்வேறாவதையும் இருளாகி ஒடுங்கிப்போவதையும் உணர்கிறேன்.

முன்னெப்போதும் சந்தித்திராத மனிதர்களின் சஞ்சாரம் எனதுகனவுகளுக்குள். நிச்சயமற்ற உருவத்தை தோற்றுவிக்கின்றன. என்னை ஏமாற்றுவதற்கு நெருக்கமானவர்களின் உருவங்களாக தம்மை மாற்றிக்கொள்கின்றன சமயங்களில் என்னைபோலவும் தோன்றி மறைகிறஇச்சஞ்சாரங்களை கண்டு திகைக்கிறேன். அர்த்தமற்ற வெவ்வேறு ஒலிகளிலிருந்து தோன்றும் அவர்கள் அலங்காரமான சொற்களுக்குள் புகுந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒட்டுண்ணிகள் அல்லர். இருப்பிழந்தவர்களும் அல்லர். அவர்களிடம் பொருளற்ற வார்த்தைகளைத் தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நீண்ட ரயில் பயணமொன்றில் யன்னல் வழி தவறிப்போகும் கச்சான் கோதுகளைப்போல என்னிலிருந்து பிரிந்துபோகிறார்கள். பின்னர் அடர்ந்த தேயிலைக்காடுகளில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகளைப்போல மீளவந்துசேர்கிறார்கள். கனவுகளில் அலைபவர்கள் நிரந்தரமற்றவர்களாய் இருக்கும் வரை நான் இறுகி கனத்துப்போனதில்லை. என் ஞாபகங்களுக்கு உட்பட்ட வெள்ளிக்கிழமை முன்மதிய பகற்பொழுதொன்றின் போது நெருக்கமான குரலொன்றின் தூரத்து அழுகை காதுகளுக்குள் மெல்லிய ஊசியொன்றைப்போல ஊடறுத்துக் குத்தியது. அப்போது நான் தூக்கத்தில் இல்லை. தூரத்து கடல் அலைகளின் மெல்லிய ஆனால் கூர்மையான இரைச்சலைப்போல அழுகை நித்தியமாயிருந்தது. அழுகையின் கருநீல மணம் என் உடலெங்கும் பரவியது. என் நினைவு இரைச்சலாயிருந்து. அதே நினைவு மௌனமாயுமிருந்தது. ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட ஒளி ஊடுபாயும் தாள்களில் கீறப்பட்ட சித்திரங்களைப்போல நினைவு கள் எண்ணிக்கையற்ற ஊடுருவல்களால் நிறைந்திருக்கிறன. இத்தகைய நினைவைத்தின்று வளரும் கருநீல அழுகையே முதிர்ந்து மீண்டும் ஒரு சொல்லாகின்றது.

விடுவிக்கப்படாத வளவின் வேலிகளின் மேலிருந்து ஒரு பாடல்

என்னிடமிருக்கும் எல்லா ஞாபகங்களையும் இலகுவாக வீடொன்றிக்குள் அடைத்துவிடலாம். அல்லது என் ஞாபகங்கலெல்லாம் ஒரு வீட்டிற்குளிருந்தே உருப்பெறுகின்றன. செவ்வக தீப்பெட்டிகள் முறையற்று அடுக்கப்பட்டு வெவ்வேறு நிறமிடிட்டிருப்பதைப்போல அங்கங்கே முளைத்திருக்கும் வீடுகளின் நடுவில் உடல் முழுக்க ரவைகளால் துளைக்கப்பட்டு உலகை ஆயிரம் கண்கள் கொண்டு பார்க்கும் ராணுவக் குடியிருப்பொன்றே என் ஞாபகங்களின் இருப்பிடம் – வீடு. ஈரமான செம்மண் தரையில் உருளும் நான்கு சக்கரங்களின் கண்ணாடி யன்னல் வழி ஊதா நிற புகையாய் மிதந்தெழுகின்றன ஒன்றுக்கொன்று முரணான பார்வைகளும் ஞாபகங்களும். பெயர்த்தெடுக்கப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் என் நகரக் குடியிருப்பின் கீழ்க்கட்டடத்தின் முதிர்ந்த கதவு நிலையிலிருந்து தோன்றிய அந்துப்பூச்சி ஒன்று என் எதிரே ஆடும் நிழல் வெளியில் நின்று தன் சுதந்திரம் பற்றிப் பாடத்தொடங்கியது.

என்னால் நிச்சயமாக அந்தப்பாடலை செவிமடுக்க முடியாது. அவை என் மௌனமான இருப்பின் வயல் வெளிகள் தொலைவில் தொங்கும் லாம்பிலிருந்து மறைந்துபோன ஒளி பற்றிய பாடல். அவை மொழியற்று சொற்களற்று இசையற்று விரிந்துகொண்டிருந்தன. சதுரமான நிழல்வெளியை இன்னும் ஆழமாக உற்றுப்பார்க்கிறேன். அவ்வெளி உள்நோக்கி விரியும் ஆயிரம் அந்துகளின் அசைவிலிருந்து தூண்டப்படுகின்றது. என் நிலமே என்று உரத்துக்கத்துகிறது வயதுமுதிர்ந்த அந்தொன்று. தன் தோலின் சொரசொரப்பெல்லாமிழந்து விடுவிக்கப்படாத நிலத்தினைச் சுற்றி கொமாண்டோக் கம்பிகளின் மேல் நின்று விலாசமான விறாந்தையில் வரிசையாக அடுக்கப்பட்ட ஈரமான ராணுவக் காலணிகளைப் பார்க்கிறது. ராக்கைகளில் உதிர்ந்து கிடக்கும் ரவையையும் சுவர்களில் பூசப்பட்ட கரும்பச்சை சாயத்தையும் மாமரத்தின் மேல் அத்துமீறி இணக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் குடிலையும் பார்க்கிறது. தன் நிலத்தைக் காவல் செய்யும் அந்நியர்களைப் பார்க்கிறது. தன்னுடலைக் கிழித்தழித்த துப்பாக்கிகளை தானே காவல் செய்யும் உருக்குலைந்த வீட்டையும் பார்க்கிறது. ஆயிரம் கண்களிருந்தும் அழமுடியாத சுவர்களுக்காய் வயது முதிர்ந்த அந்து தன்னுள் அனலுகிறது. அவற்றின் கண்களிலிருந்து கிளர்ந்த வெப்பம் கூர்மையான ஊசியாய் காற்றைக்கிழித்து எதிரில் கம்பீரமாக நிறுத்திவைப்பட்டிருந்த துப்பாக்கியின் மரச்சட்டகத்தைக் கிழிக்க அந்தின் சுதந்திரம் பற்றிய பாடலின் முதற் கணம் தோன்றியிருக்கும்.

நிழல்வெளி ஒரு கணம் அணைகிறது. எல்லா அந்துக்களும் அவற்றுக்குப் பழக்கப்பட்ட இருட்டுக்குள் மூழ்கிப்போயின. ஒவ்வொரு ஒளிக்கீற்றிலும் கனமான ரேகைகளின் வலையமைப்பு கண்களுக்குள் படர்ந்தது. சேர்தலும் விலகுதலும். புகையும் சதையும் கலந்த திரட்சியொன்றிலிருந்து என் ஞாபகங்களின் விலகுதலுக்கான நாள் ஒன்றை நோக்கி விரைகிறேன். இறுக்கமும் கோபமும் நிறைந்த வெப்பமான பகல் பொழுதுகளையும் கண்ணீரும் விரக்தியுமான பனிக்கால இரவுகளையும் தடித்த நாவல்களையும் அணுகுகிறேன். உடலைச்சுற்றி தனிமையை மட்டுமே இருத்திக் கொண்டு உயிரை தலைக்கு மேல் எட்டமுடியாத அந்தரத்தில் வைத்துத் தூங்கிய விலக்குதலுக்கான நினைவுகள். விலகிய பின் பெயர் உருவம் அறியாத உயிரினங்களால் சூழப்பட்ட அந்நிய நிலத்தின் வெறுப்பான பார்வைக்கும் ஏளனமாக யோசனைகளுக்கும் கறுத்த திட்டான கழிவு வாய்க்காலுக்கும் நடுவில் ஒரு சிறிய ஒழுங்கற்ற கட்டிலின் மேல் மழைக்கால போர்வைக்குலிருந்து மீண்டும் வீடு சேர்வதற்கான நினைவுகள். வீடு சேர்த்தலுக்கும் விலகுதலுக்குமான கூடு. இருப்பவற்றாலும் இல்லாதவற்றாலும் நிறைவுற்றிருக்கும் அமைப்பு. மனிதர்கள், மிருகங்கள், தளபாடங்கள், உரையாடல்கள் என்று எல்லா அந்நியத்தையும் அகற்றிவிட தனித்திருக்கும் வீட்டிற்கென்று சில குணங்கள் இருக்கின்றன. அது சுவர்களின் அமைவுகளுக்கும் என் தனிமைக்குமான தொடர்பு. காற்றோட்டப்பாதைக்கும் என் சிந்தனைகளுக்கமான தொடர்பு. ஈரலிப்பான நிலத்திற்கும் என் வெற்று முதுகிற்குமான தொடர்பு. வீட்டின் ஒழுங்கும் என் ஒழுங்கின்மையும் மகிழ்ச்சியற்ற இசையாலான தடித்த வேர்களால் திரண்டிருக்கிறது. நிழல்வெளி தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் எவையும் மாறவில்லை. அதே வயதான அந்து அதே கொமாண்டோ கம்பியின் மேலிருந்து இன்னொரு அளவிலான ராணுவக் காலணிகளைப் பார்த்தபடியிருக்கிறது. அந்தப் பாடல் நிறைவுறுவதாயில்லை. அவற்றின் ஏக்கம் முதிர்வதாயில்லை.

அந்தின் இறக்கைகளுக்குப் பின்னிருந்த கண்ணாடி யன்னலை வெறித்தபடி நானிருந்தேன். என்னைச்சுற்றி திரும்புதல் பற்றிய ஏக்கம் இருந்தது. மீண்டும் நீலப் பூச்சிட்ட வீட்டையும் அதனுள்ளிருக்கும் எனக்கேயான இருட்டுக்குள்ளும் திரும்ப விரும்பினேன். என்றைக்கும் என்னை வெறுக்காத மௌனத்திற்குள்ளும் என்னைவிட குழப்பங்கள் நிறைந்த ஒழுங்கீனத்திற்குள்ளும் வாழ்க்கை பற்றிய எந்தப் புரிதலும் தேவையற்ற என் சூன்ய வெளிக்குள் திரும்புதல் பற்றிய எண்ணம் எனக்குள் ஊறத்தொடங்கியது. என்றைக்கும் திரும்ப முடியாதென்று தெரிந்தும் காத்திருக்கும் அந்தின் உருவம். பலமுறை திரும்பியும் என்றைக்கும் கிடைக்காத என் சூன்யவெளி. நிழல்வெளி எனக்குள் தொடர்ச்சியாக மிதந்தும் அமிழ்ந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னர் வேலியிடப்பட்ட வீட்டை நோக்கிய எனது பாடல் கண்முன்னே உடையும் நீர்குமிழிக்குள்ளிருந்து வெடித்துப்பரந்தது.

அடிவானில் விரியும் துயர்

மூப்படைந்த எமிலாக்கு நிறப்பூச்சிட்டது போல நின்றது காலை ஐந்து நாற்பத்தைந்து ரயில். முழுமையாக திறக்காத கண்களோடு தன் உடலினைப் பார்த்துக்கொண்டிருந்தது இயற்கை. தண்டவாளத்தோடு பிணைத்திருந்த தன்னை விடுதலை செய்யுமாறு சீறிச்சினந்தது ரயில். மழைக்கு வீட்டிற்குள் மறித்துவைக்கப்பட்ட சிறுவனின் நிலை அதற்கு. அதன் இயந்திர முகத்திலிருந்து உருவான மஞ்சள் ஒளிப்பாகில் தண்டவாளம் இரண்டு நீண்ட ஈட்டிகள் போல மினுங்கியது. இரவின் குளிர்ச்சியில் திரண்டிருந்த பனித்துகள்கள் ஒளிப்பாகோடு கரைந்து கோடி மின்மினிகளாய்ச்  சுருண்டன. தன்னைச்சுற்றி வெறுக்க முடியாத கிரீஸ் வாசனையை கமளித்துக்கொண்டிருந்தது அந்த ரயில். தென் திசைக்குச் செல்லும் ரயில்களுக்கிருக்கும் சனநெரிசலும் அதனால் பரவும் இரைச்சலும் காலை ஐந்து நாற்பத்தைந்து ரயிலுக்கிருப்பதில்லை. என்னைத்தவிர எல்லோரிலும் நீண்ட உறக்கத்தின் பின் கனிந்திருக்கும் அதிகாலையின் உற்சாகம் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் மௌனமும் ஒவ்வொரு சுதியிருந்தது. அதன் இரண்டாவது பெட்டிக்கு அருகில் நிற்கும் எனக்குள் ஈரமான நத்தை நிலத்தை இழுத்துகொண்டு ஊர்ந்தது. பிரயாணிகள் நாட்களை பைகளுக்குள் நிரப்பியிருந்தார்கள். உப்பியிருந்த பைகளின் மேல் தளுதளுப்பாக பயம் மூடியிருந்தது. இன்னும் சிலர் நீண்ட பிரிவொன்றிக்குரிய ஆயத்தங்களோடு தெரிந்தனர். எப்போதும் ரயிலுக்குள் பிரிவு நிறைந்திருக்கும். ஆனால் எல்லாப் பெட்டிகளிலும் பிரிவு மட்டுமே இருப்பதில்லை. துரதிஷ்டவசமாக அதில் என் பெட்டியுமொன்று. அதிகாலையின் மயக்கம் பிரிவிற்கான எல்லா சங்கீதங்களையும் போர்த்திக்கொண்டது. இந்நேர ரயிலுக்கு அவசரப்பட்டு ஏறுபவர்கள் மிகவும் குறைவு. என்னைக்கடந்து செல்பவர்களின் கறி ரொட்டியின் வாசம். அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு இப்படியான வாசமிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். தண்ணீருக்குள் விரல்கள் நெளிந்து அசைவதைப்போல மனிதர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். அதிகாலை ரயிலுக்கு அவசரப்படுபவர்கள் இருக்கமாட்டார்கள்.


உறக்கமில்லாத நீண்ட கொடிய இரவினைக் கடந்து துடித்துக்கொண்டிருக்கும் ரயிலினுள் மனித அசைவுகளைப் பார்க்கிறேன். ஆறு கிழமைகளில் பின் ஒட்டியிருந்த நிறத்தையும் மணத்தையும் வியர்வையையும் உரித்தெறிந்துவிட்டு இன்னொரு நகரத்திற்குப் பிரிந்து செல்வது இதயத்திற்குள் கணத்துக்கொண்டேயிருந்தது. தண்டவாளத்தோடு ரயில் உரசிக்கொள்ளும் சத்தம் உடலுக்குள் படிகமாய்த் திரண்டது. ஆயிரம் நுளம்புகளும் கரப்பான்களும் கறுத்த சிறிய கட்டமான மட்டத்தேள்களும் இன்னும் பெயர் அறியா பூச்சிகளும் நிறைந்த பெட்டிக்குள் வருடமொன்றைத் தொலைத்த நினைவு. பச்சை ஒளிவீசும் மின்மினியைக் கொன்று தாவர சாடிக்குள் புதைத்த நினைவு. காற்றே இல்லாத வெப்பத்தில் மிதக்கும் அறை அது. நகுலனும் தோமஸும் இன்னும் பலரும் தோன்றி மறைந்த பூச்சு. எப்போதும் திரும்பக்கூடாது என்று வெளியேறிய அதே அறையின் நினைவு இந்தப் பெட்டிக்குள். தன்னை உலுப்பிக்கொண்டு ரயில் நகர்ந்தது. ரயிலுக்கு யாருடைய உணர்வுகளைப் பற்றியும் கவலையில்லை, தன்னுடைய பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. அசாதாரணமாக மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையொன்றிலிருந்து மெல்ல வெளித்த வானத்தைப் பார்த்தேன். காலம் எனக்கு முன்னே நீண்டது. இதிலிருந்து பின்னோக்கி பயணிப்பது வீட்டிற்குள்ளிருந்த என்னை பலத்த விசையோடு இழுத்து வெளியேகொண்டுபோவதாக உணர்த்தியது. இருப்புக்கொள்ளாத கட்டிலும் செந்தரையும் வாழைக்குலைகளும் டொமியும் வீட்டின் பெரு அசைவுகள். முற்றத்திலிருக்கும் சாய்வுமனை துளசியில்லாத மாடம் திணை. அண்டைப்புழுக்கம். கோலத்திலிருந்த அரிசியொன்றை காற்று பெயர்த்தெடுத்துக் கொண்டுபோகிறது. வீட்டிலிருந்து வெகு தூரத்துக்குச் செல்லும் இந்த ரயில் புறப்பட்டவுடனேயே மனிதர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்கிவிடுகிறார்கள். அவர்களின் முகங்களில் பிரிவுக்கான எந்தச் சலனமுமில்லை. தூரத்தில் என் நிலத்திற்குள் புதையும் நிலவையும் எதிரே தோன்றும் செந்சூரியனையும் பார்க்கும் பயத்திலிருக்கிறேன். நிலவின் நிரம்பாத குழிகளுக்குள் என் நினைவுகளை புதைத்து வைத்திருக்கிறேன். வெள்ளி உடுக்கூட்டத்திற்குள் எட்டு ரகசியங்களை அலையவிட்டிருக்கிறேன். இப்போது மறையும் நிலவு இன்னொரு முறை வானில் தோன்றத்தான் செய்யும். அந்த உடுக்கூட்டம் கூட. ஆனால் அப்போது நான் இன்னொரு நிலத்தில் இன்னொரு மணத்தில் இருப்பேன். சரிந்துகொண்டிருக்கும் நெற்கதிர்களை பார்த்தபடி,

ஆமாம்.

இரவின் நிழலே பகல்;

இருளின் சாயை ஒளி.   

– பிரமிள்
எழுத்து, டிசம்பர் 1961.

ஈஸ்டர் ஞாயிறு

அன்புள்ள நண்பர்களே ,
ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த துயரத்தின் பின்னரான இந்நான்கு நாட்களும் மனதளவில் சோர்ந்துபோயிருக்கிறேன். என்னைச்சூழ இருந்த மனிதர்களும் ஊடகங்களும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தம்மை வெளிப்படுத்திக்கொண்ட விதங்கள் உயிரிழப்புகளை மீறி மனதிற்குள் நோவாக குடியேறிவிட்டது. ஞாயிறன்று மொறட்டுவையில் தனித்திருந்த நாளிலிருந்து பின்னர் கொட்டஹேனா சென்று நேற்று வவுனியா திரும்பியவரை நான் எதிர்கொண்ட மனிதர்களும் அவர்களின் மனநிலைகளும் இங்கிருக்கும் அனைவரின் மீதும் வெறுப்பையே ஏற்படுத்திக்கொண்டிருந்தன. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கூறி அவர்களை தாழ்த்துவதோ உணர்ச்சிகளைத்தூண்டுவதோ என் நோக்கமல்ல. இத்தனை வருட கால போர் அனுபவங்களின் பின்னரும் நாம் அடிப்படை மனித உணர்வு அற்றவர்கள் என்றே காட்டிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலை தான். இன்னொரு தனித்த சுதந்திரம் உள்ள மதத்தவர்களை எத்தனை இழிவாக அவமதிக்க முடியுமோ அத்தனை இழிவாக அவமதித்துவிட்டோம். அவர்களின் வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் மதக்கொள்கைகளையும் எல்லாமும் அறிந்தவர்கள் போலும் எல்லாவற்றிலும் சுத்தமானவர்கள் போலும் திட்டித்தீர்த்தோம். இந்த உலகத்தில் ஒவ்வொரு இனத்திலும் மதத்திலும் மொழியிலும் மூடர்கள், பயங்கரவாதிகள், கொலையாளிகள் குறைந்தபட்சம் திருடரேனும் இருக்கிறார்கள் என்பதையும், ஒவ்வொரு மதத்திலும் அம்மதநம்பிக்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து ஒரு கணத்தில் புனிதர்களாகிவிடுகிறோம். அவர்களை வசைச்சொற்களால் திட்டவும் செய்கிறோம். இலங்கையில் பௌத்தம் – “பேரினவாதம்” தான் என்றும் இங்கிருக்கும் நானறிந்த, என்னைச் சூழஉள்ள பலர் முஸ்லீம்களை வெறுக்கிறார்கள் என்றும் இந்நாட்களில் கண்களூடாக கண்டுகொண்டேன். இதற்கு முதலே என்னை “மீக்காயீல்” என்று அடையாளப்படுத்தியதற்கு எழுந்த ஏளனச்சிரிப்புகளையும் நானறிவேன். தாக்குதல்களை IS  பொறுப்பேற்றபிறகு மௌனித்தும் பகைமறந்தும் பொய்ச் சோகம் தரித்தும் சகோதரத்துவம் பாராட்டுபவர்களையும் நான் கவனியாமலில்லை. கடந்த கால யுத்தத்தின் உண்மைகளை கோருவதற்கு தகுதியற்றவர்களாகிவிட்டோம். ஆயுதங்களை தூக்கிய கைகளை தூற்றவும் அம்மக்களை வசைக்கவும் நாம் புதிதாக கற்றுக்கொண்டுவிட்டோம். தாடி வைப்பது குற்றமென்றும் புத்துணர்வு பிறந்துள்ளது. இங்கு மதங்களை எதிர்ப்பவர்களும் அவற்றை புறக்கணிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இங்கு பர்தாவுடன் நுழையக்கூடாது, அவற்றை அழிக்கவேண்டும் என்ற பதாதைகளை வெறுப்பின் அடையாளம்.கட்டுப்பெத்தையில் தனித்திருக்கும் எனக்கு துணையாய் இதுகாலமும் நிற்பது ஒரு முஸ்லீம் நண்பரே. இனி நாங்கள் முஸ்லீம்களை எம்முகத்திதோடு எதிர்கொள்ளப்போகிறோம், சிரிக்கப்போகிறோம். இவ்வளவு நாளும் கொட்டித்தீர்த்த வன்மம் போதும். நான் அவற்றால் அதிகம் காயப்பட்டிருக்கிறேன். என் சிறகுகளை உங்கள் நச்சு உமிழ்நீர் எரிக்கிறது. என் இனிய முஸ்லீம் நண்பர்களே, என் இயலாமையால் உங்களிடம் மன்னிப்புக்கோருகிறேன். நான் சிறகடிக்க நிறம்மாறும் மீக்காயீலாகவே எழுதவும் வாழவும் புனையவும் விரும்புகிறேன்.
மீக்காயீல்.

கறிமிளகாயும் சுருக்குப்பையும்

எட்வார்ட் லாவா மீதிருந்த பயத்தில் தியோ வாக்னர் என்று ஆல்ஃபிரட் பென்ட்டிங் தன் பெயரை மாற்றிச்சொன்னது போலல்ல இப்போது என்நிலை. தோமஸ் இன்னமும் உயிரோடிருக்கிறாரா என்று கேட்ட நண்பரிடம், தட்டுத் தடுமாறி ஓம் என் ஞாபக அடுக்குகளில் உயிரோடுதானிருக்கிறார் என்ற போது ஞாபகங்களையும் நியத்தையும் புனைவையும் பிரித்தறியமுடியாது தவித்தேன். பெருநாவலைப்போல உலகம் விரிவதை மெல்லிய கண்ணாடியிலான யன்னலூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். புனைவின் உருக்களை நியத்திலும் நிய உருக்களை புனைவிலும் கோர்க்கிறேன். அதனை சுயநினைவோடு தான் செய்துகொண்டிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லிச்சிரித்தாலும் எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. எனக்கு சுயநினைவுகளைப் பற்றியும் சந்தேகமாயிருக்கிறது. உங்களை நண்பர்களே என்று விளிக்கலாம் என்று தோன்றுகிறது, நீங்கள் கோபப்படாமலிருந்தீர்களானால் மட்டும்.

நண்பர்களே,
நான் சந்தேகமாக உங்களைப் பார்க்கிறேன் என்றாலோ அல்லது உங்களையறியாமல் வசியம் செய்து ஞாபகங்களைத் திருடப்போகிறேன் என்றாலோ அல்லது உங்களை உளவு பார்க்கப்போகிறேன் என்றாலோ என் பெயரை நிச்சயமாக தியோ வாக்னர் என்று சொல்லியிருப்பேன். நான் அப்படி செய்யப்போவதில்லை. ஆனால் இங்கு தியோ வாக்னர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள். ஒரு கிலோ கறிமிளகாயின் விலையை விட அதிகமாக.
மேற்பனி மூடிய ஒத்ரிஸ் மலைகளின் அடிவாரத்தில் சிறு தீ மூட்டப்பட்டு, உறை நதிகளான மௌரிசும் தீக்குவானும் இணையும் முக்கோண நிலத்தின் மேலுறையும் கிரேக்க அரசர் பிரைம் மற்றும் அரசி ஹெகியூபாவின் மகனான பிரிஸ் தன் நீண்ட கீழ்வானம் போன்று வளைந்த வாளால் உறைநீரைக் கீறி உருவான தவாளிப்பின் வழி தன் கனவுலகத்திற்குள் நுழைந்தான். அன்றிலிருந்து இனி எல்லாக்காலமும் அந்நீர் உறைந்துபோயிருக்கும் என்று பகற்கனவில் அவனறிந்தான். உறை நீர் வளமான மண்ணைவிட அதிக பயன்மிக்கதாயிருந்தது. இதமான பளிங்கு மாளிகைகளையும் நீர்த்தவர தோட்டங்களையும் உருவாக்கினான். ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் போன்று அவன் எல்லைகளாலும் ராச்சியங்களாலும் அவஸ்தைப்படவில்லை. நண்பர்களே, பிரிஸின் வாழ்நிலத்தை ஒத்தது என் உலகம். வாழக்கையின் எல்லாக்கணமும் எடையான அடையாளங்களைச் சுமந்துகொண்டே அலைந்துதிரிகிறேன். என் பெயர் உட்பட. அணில் என்றவுடன் பழம் கொறிக்கும் என்பது போல.
தகிக்கும் பாலை நிலத்தின் மீது தேன் துளியொன்று விதைக்கப்படுகிறது. அது சூல்கொள்கிறது. ஹ்ம், இதையெல்லாம் நீங்கள் கேட்கவா போகிறீர்கள். பாருங்கள் சுருக்-குப்பை யோடு தியோ வாக்னர்கள். தூண்டிற் புழுப்போட்டு மீன் பிடித்து நிரப்பி வைத்திருக்கிறார்கள். கடைக்குள் ஆக்கள். தியோ வாக்னர்களும் இருக்கிறார்கள். தூண்டிற் புழுக்களை வாங்க. பிறகேன் மீக்காயீல். என் காதுகளுக்குள் கனவுகளை ஓதுபவன் என்றால் நம்பவா போகிறீர்கள்.
நன்றி நண்பர்களே.
49519665_2731822807042716_1206915454040276992_o

மீக்காயீலின் மாதுளை நிலம்

மீக்காயீல் பிறந்தான். மென்னீலமும் பொன்னிறமுமாய் அந்நிலம் விரிந்திருந்தது. பிறப்பின் பூமியென்று நெடுங்காலமாய் நம்பப்பட்டுவந்த நிலத்திலிருந்து அந்நிலம் வெகு தொலைவிருந்தது. நத்தையுடலின் மேல் மிதக்கும் கோளநிலத்தின் சாயல். அன்பின் நிலமெல்லாம் கோளந்தான். மலைகளைப்போல் பரந்தும் நீண்டும் வளர்ந்துநிற்கின்ற மரங்கள். காற்றில் வலிமையாய் சிறகுவிரித்து நிற்கும் பருந்தினைப்போல அந்நிலம் தரையுமில்லை; அந்தரமுமில்லை. அங்கு இசையுமில்லை, மணமுமில்லை. பருவங்கள் நிறங்களாய்த் தோன்றி அவ்வெளியின் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்தன. நிறங்கள் ஒவ்வொன்றும் பருவங்கள். இது மழையும் பனியும் நிறை கூதல் பருவத்தின் இறுதிக்கணங்கள். பளிங்காற்றின் நடுவில் கோலொன்று ஆச்சரியமாய் நிற்கிறது. நிலையில்லாமல் அசைந்துருகும் நீர்த் திவலைகள் அதனடியில் மோதித் தெறிக்க அக்கோலின் மேல் பொருந்திநிற்கும் என்தலை வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பேரலைகளைப் போல வானத்து நட்சத்திரங்கள் இரைவதை உணர்ந்தேன். அது சீற்றமில்லை. கொந்தளிப்புமில்லை. ஒரு பருவத்தின் முடிவிற்கும்  இன்னொரு பருவத்தின் தொடக்கத்திற்கும் இடையிலான காலத்தில் மட்டும் இரையும் இந்நட்சத்திரங்கள் என் தலையின்மேல் இரைந்துகொண்டிருந்தது பிறப்பொன்றின் அறிகுறி. பெருமழையொன்றின் வெள்ளத்தில் பூமியிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட என் தலை காலக்கோலின் உச்சியில் பிணைந்திருப்பது பிறப்பொன்றினை அறியத்தான். ஆற்றிலிருந்து தவறி நட்சத்திரங்களை நோக்கி நகரும் நீர்த்துமிகள் இடையிலேயே உறைந்து பனியாகின்றன. ஈற்றில் தொலைந்து போனதென நம்பப்படுகின்றவை நட்சத்திரங்களாகின்றன. அந்நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தேவதைகளின் உறைவிடங்களாயின. அவை தேவதைகளின் பரபரப்பினால் இரைகின்றன. பிறப்பின் பரபரப்பு யாரைத்தான் விட்டுவைத்தது. அவர்கள் நட்சத்திரங்களிலிருந்து அக்கோலை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் பளபளக்கும் பச்சிலைகள் நிறைந்திருந்தன. பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன். 

தோமஸிலிருந்து புறப்படுதல் அல்லது “பொத்”தென விழுதல்.

1.

என்னிடமிருந்து
எதையாவது ஒன்றை எடுத்துச் சென்றுவிடுங்கள்
ஈரமான இந்தத் தரையிலிருந்து
ஒரு பிடி ஈரத்தையேனும்

2.

என் கைகளிலிருந்து தோமஸை விலக்கிக்கொண்டுபோய் என்ன செய்யப்போகிறீர்கள்? நேற்றும் அதற்கு முன் தினமும் அதற்கும் முதல் பல நாட்களிலும் நீங்கள் என்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோன என் நண்பர்கள் என்னானார்கள்? என் வைரமான பிடிப்பையும் தாண்டி நீங்கள் இழுத்துச்சென்றவர்கள் என்னிடம் மீண்டும் வருவதற்காக கூச்சலிட்டு அழவில்லையா? உங்கள் மார்புகளை அவர்களின் வலிமையான கால்களால் உதைத்து வீழ்த்தி என்னிடம் வர எத்தணிக்கவில்லையா? நண்பர்களை என்னிடமிருந்து பிரிக்கமுன்னர் ஏன் என் கண்களை கறுப்புத் துணியினால் இறுகக் கட்டினீர்கள். ஓவென்று அழமுடியாதவாறு வாயை அடைத்தீர்கள். ஹ்ம் என்னவோ எல்லாம் செய்தீர்கள். இருந்தும் என்னால் முடிந்த எத்தனங்களைச் செய்தேன். உங்கள் கால்களையும் கைகளையும் பிடித்து தேம்பி தேம்பி அழுதேன். சுடுமணலை அள்ளி எற்றி உங்களைத் தூற்றினேன். சபித்தேன். நீங்கள் என் நண்பர்களைப் பிடித்துச் சென்ற பின்னர் அவர்களின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்னைப் பைத்தியம் என்றார்கள். இவனுக்கென்னாயிற்று நண்பர்கள் தானே பிரிந்து போனார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அத்தனை வலிமையற்றவனா இவன் என்று என் காதலிகள் சிரித்துக்கொண்டார்கள். ஆனால் தோமஸ் மட்டும் என்மீது பரிதாபப்பட்டான். என் கிழிந்த ஆடையினை, மழிக்காத முடியினை, மெத்தையில் செரிக்காமல் வாந்தியெடுத்த வேகாத இறைச்சி துண்டுகள் மீது புழுத்த நாற்றத்தினை இன்னும் எத்தனையோ. எல்லாவற்றைப் பார்த்தும் வருத்தப்பட்டான். தோமஸ் எத்தனை பரிவான பெயர். அத்தனை பரிவானவன் அவன். மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்? மனித உறவுகள் ஏன் இத்தனை பலகீனமானதாக இருக்கிறது? தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் ஏதோ ஒரு நாள் முடிவிற்கு வருகின்றன? முடிவிற்கு வருவதற்காக தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் தொடங்கப்பட்டன தோமஸ்? என் கைகளிலிருந்து நழுவி இழுத்துச் செல்லப்பட்டபோது நீயாவது அழுதாயா தோமஸ்?

3.

இந்தப் பூனைகளை பூமியிலிருந்து அழித்துவிடுங்கள்

சாத்தானே !
நீ கத்துவது
தொலைதூரத்திலிருந்து
என் நண்பன் அழுவதைப்போல கனக்கிறது.

4.

போதுமென்றளவு பேசிக்கொள்ள நண்பர்கள் இருந்த அந்த நாளில் தான் முதன்முதலாக நான் தனிமையை விரும்பத்தொடங்கினேன். அந்த நாளை என்னால் இன்னமும் சரியாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பனி படர்ந்த சவரக்கண்ணாடியின் மீது தெறித்தொதுங்கும் விம்பங்களைப்போல பல நாட்களை அடையாளங்கண்டு கொள்கிறேன். மிகச்சரியான அந்த நாளை, நொடியை என் பார்வையின் முன் நிறுத்தமுடியவில்லை. எரிந்து முடிந்த கடிதமொன்றிலிருந்து வார்த்தைகளைத் தேடி எடுப்பதைப்போல மழுங்கிப்போய்க்கொண்டிருக்கும் ஞாபகங்களிலிருந்து இவற்றை மீட்டி எடுப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது. அந்த நாளைப் பற்றிய நினைவுகளை ஓரளவேனும் மீட்டியெடுத்துவிட்டேன் என்று நினைத்த அந்தக்கணமே முடிவுறா வலியைத் தரும் அந்தக் கேள்வி எழுந்தது. காற்றாடிக்குள் சிக்கிக்கொண்ட ஈசலைப்போல சிறகுரிந்து உடல் சிதறிப் போனேன். “என் ஞாபகங்களில் எவை நியம்? எவை புனைவு?”. நிச்சயமாக என் ஞாபகங்கள் பொய்யில்லை. நியத்திலோ புனைவிலோ  எனக்குள் வாழ்பவர்கள் யாருமே பொய்யில்லை. அவர்கள்  அலட்சியமானவர்கள் அல்ல. சிந்திப்பவர்கள் இல்லை. அன்பைப் பற்றியும் தேவைகள் பற்றியும் சிந்தித்தவர்கள் இல்லை. வெள்ளைக் காகிதத்தின் மீது எறும்புகள் ஊர்வதைப்போல என்னுள்ளே அலைந்து திரிபவர்கள். அவர்களால் நான் அழுததில்லை. நான் அழுவதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து இறுக்கமாக முகத்தைப் பொத்தி நான் ரகசியமாக அழுவதைக்கூட அவர்கள் இலகுவாக அறிந்துவிடுகிறார்கள். தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்பேன். அவர்களுக்கு விடை தெரிந்திருக்காது. இருந்தும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சுவாரஷ்யமே இல்லாத கதைகளை சொல்லிக்கொண்டிருப்பேன், சற்றும் சம்பந்தமே இல்லாமல் சம்பவங்களை கோர்த்துச் சொல்வேன், பூக்கள் பறக்கின்றன என்பேன், மரம் பேசுகின்றது என்பேன், மின்மினிப்பூச்சிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது என்பேன், இப்படி ஆயிரம் என்பேன். அவர்களும் சலிக்காமல் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக பொய்யில்லை, ஆனால் என் ஞாபகங்கள் நியமானவையா ? புனைவுகளா? தச்சனொருத்தன் மரக்குற்றியொன்றிலிருந்து சிற்பமொன்றை செதுக்கி எடுத்ததைப்போல தூய்மையாக மட்டுமே நினைவிலிருக்கின்ற ஞாபகங்கள் எனக்குள் பெருஞ்சலனத்தை ஏற்படுத்துகிறன. கல்லொன்றில் மோதி தெறித்தழியும் நீர்த் திவலைபோல சிதறியொதுங்குகிறேன்.

இங்கிருந்து முன்னும் பின்னும் அருகிலும் இன்னும் எங்கெல்லாம் பார்வையும் அறிவும் படர்கிறதோ அங்கெல்லாம் நியமும் புனைவும் ஊடறுத்துக் கலந்த ஓவியமாகவே தெரிகிறது. எங்கெல்லாம் மனிதர்கள் கனமாகவும் கூரிய ஆயுதங்களோடும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் கறுப்பை அள்ளி எற்றிவிடுகிறேன். எங்கெல்லாம் என் புருவங்கள் தாழ்ந்து இதயத்தின் ஆழத்தில் ஒரு பிடியளவு ரத்தம் உலர்கிறதோ அங்கும் ஈரமான கறுப்பை ஊற்றிவிடுகிறேன். கரைத்தும் கலந்தும் ஊற்றி ஊற்றி எங்கும் இருளின் வண்ணமாயிற்று. எதுவுமில்லா ஒன்றிலிருந்து உண்டான ஞாபகங்களில் நியத்தையும் புனைவையும் எப்படிப் பிரித்தறிய. இத்தனை கனமான கேள்வியின் பின்னர் தனித்துப்போன நாளைப்பற்றிய ஞாபகங்களை ஒழுங்குபடுத்துவது எனக்கு இலகுவானதல்ல.

என்னுள்ளே ஒவ்வொன்றும் கேள்விகள் தான். தனிமை என்றால் என்ன? நான் உணர்கின்ற உணர்விற்கு தனிமை என்பது சரியான அடையாளமா? அல்லது எனக்கு முன்னர் இந்த உலகத்தில் வாழ்ந்து முடித்த என்னைப்போன்ற பலகீனமானவர்கள் தங்கள் சௌகரியங்களுக்காக வைத்துக்கொண்ட பெயரொன்றை என் உணர்வோடு பொருத்திப்பார்க்கிறேனா? எப்போது இந்த உணர்வு எனக்குள் உருவாகியது? அல்லது தொற்றிக்கொண்டது? யார் வைத்த சூனியம் இது? உண்மையில் ஏதோ ஒன்றை உணர்கிறேனா? அல்லது நாடகமாடுகிறதா இந்த மூளை? மூளை சிந்திக்கிறது என்றால் எப்போது எனக்குள் அந்த உணர்வு பற்றிய சிந்தனைகள் வந்தேறியது? நான் உணரும் உணர்வு என்னுடையது தானா? அல்லது பிரபலமான கவிஞரோ புனைவாசிரியரோ எழுதிவைத்த சொற்களின் வெளிப்பாடு தான் என் தனிமையா? இந்தத் தனிமை என்ன செய்துவிடும்? சிரிப்பதைப் போல அழுவதைப்போல வலிப்பதைப்போல பசிப்பதைப்போல இதை ஏன் எளிதாக தீர்க்கமுடிவதில்லை? தனிமை நண்பர்களை, உறவினர்களை, காதலியை மற்றும் எல்லோரையும் அந்நியமாக்கிவிடுமா? என்னை என்னிலிருந்தே பிரித்து சிறுகச் சிறுக அழிந்துவிடுமா? எல்லாம் அழிந்த வெறுமையில் வெறும் ஆன்மாவோடு மட்டும் நின்று தனிமை என்ன செய்துவிடப்போகிறது? தனிமை பயங்கரவாதியா? தீவிரவாதியா? அல்லது மனநோயாளியா? கேள்விகள் கேள்விகள் தான் எல்லாம்.

இவையனைத்தையும் யாரிடம் பேசித்தீர்த்துவிட முடியும். கேள்விகளில் இருந்து தப்பிக்க வழிகளைத்தேடுகிறேன். இந்தக் கேள்விகள் ஆபரணங்களைப்போல வீணாக ஒட்டியிருப்பவை அல்ல. இந்த கேள்விகளும் மற்றைய கேள்விகளும் வேறு அனைத்து கேள்விகளும் மட்டும் தான் நான். என்னிலிருந்து நான் தப்பிக்கவே வழிதேடுகிறேன். பாலூனுக்குள்ளிருக்கும் காற்று வெளியேறி பரந்த ஆகாயத்தில் கலப்பதைப்போல.

5.

அன்புள்ள நண்பன் தோமஸுக்கு,

உன் தோழி என்னிடம் கதறியழுதாள். என் அறையிலிருந்து அப்போது தான் ஓரான் பாமுக்கின் ” Memories of Istanbul” வாசித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் பல முறை கெஞ்சியும் நீ வாசிக்க மறுத்த அதே பாமுக் தான். பாமுக்கை மட்டுமா நீ மறுத்தாய். நகுலனையும் சுந்தர ராமசாமியையும் ஆதவனையும் சுகுமாரையும் அனாரையும் ரமேஷையும் மார்கோசையும் ருஷ்டியையும் நெருதாவையும் இன்னும் நான் சொன்ன அனைவரையும் வேண்டாம் என்று ஒதுக்கினாய். உனக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறொன்றும் தேவையாகயிருக்கவில்லை. என் எதிர் வீட்டில் நகுலன் இருப்பதையும் பின்னேரங்களில் இரண்டாம் மாடியில் சுந்தர ராமசாமி உடுப்புக்களை உலரவிடுவதையும் சொன்னபோது என்னைப் பைத்தியம் என்றாய். போகட்டும். உனது பிறந்தநாளுக்கு நான் பரிசளித்த ” என் பெயர் ராமசேஷன் ” எங்கே. இருக்கட்டும். எனக்கு பாமுக்கின் பனி பிடித்திருக்கிறது என்றேன். நீயோ உனக்கு பனியில் தோழியுடன் நெருக்கமாக நடப்பது பிடிக்கும் என்றாய். உனக்கு நான் அத்தனை முக்கியமானவன் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் தோமஸ். நான் உன் கன்னங்களில் மென்மையாக தந்த முத்தங்களை வேண்டாம் என உதறினாய். எனக்குத்தெரியும், உனக்கு காமத்தில் ஊறிய முத்தங்கள் தான் பிடிக்குமென்று. என்ன செய்வது ஆணாகப்பிறந்து விட்டேனே. உன் தோழியுடன் நீ இருப்பதையே அதிகம் விரும்பினாய். நீங்கள் நெருக்கமாக அலைவதைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் வஞ்சித்ததில்லை. உன்னைச்சுற்றி நூற்றுக்கணக்கில் நண்பர்கள் இருக்கிறார்கள். காலையில் தொடங்கிய சம்பாசனை நள்ளிரவு தாண்டியும் முடியாமல் போய்க்கொண்டிருப்பதை நீ சொல்லி அறிந்திருக்கிறேன். உன் தோழியுடனும் மற்றைய நண்பிகளுடனும் மணிக்கணக்கில் நேரிலும் எழுத்திலும் நீ பேசிக்கொள்வதை சாதாரணமாகச் சொல்லும் போது வியப்போடு பார்க்கிறேன். உன் கடிகாரம் மட்டும் பாரபட்சம் பார்க்காமல் வேகமாக சுழல்வதாக நினைக்கிறேன். தோமஸ், உன் தோழி மூடியிருந்த கதவினை வேகமாகத் திறந்து என்னருகில் வந்து நின்றாள். அன்று நீ காணாமல் போயிருந்த மூன்றாம் நாள். அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. என் உள்ளங்கைகள் இரண்டாலும் அவள் முகத்தை மூடி புதைந்திருந்து  அழுதாள். உள்ளங்கையில் சுடுநீரை ஊற்றியது போல அவளது கண்ணீர் எரித்துக்கொண்டு நனைத்தது. அவளால் எப்போதும் அழுகையை நிறுத்தமுடியாது என்று தோன்றியது. உள்ளங்கைகளை உயர்த்தி அவள் முகத்தை திறந்தேன். ரத்தநாளங்கள் ஓடிப்போயிருந்த முகத்தில் உன்னைக்காணாத வாட்டம் தெரிந்தது. அவளின் புருவங்கள் துடித்துக்கொண்டிருந்தன. நெற்றி சுருங்கியிருந்தது. அழுதழுது மூக்குச் சிவந்திருந்தது. நானும் நீயும் பிரிந்து மூன்று நாளாயிற்று என்று அவள் அறிந்திருக்கவில்லை. இந்தப் பிரிவைப்பற்றி சொல்ல எதுவுமிருக்கவில்லை என்பதுவும் உண்மைதான். எனக்குத்தெரிந்து பிரிவினை எளிதாக எடுத்துக் கடந்துவிடும் ஒரே ஒரு உயிரினம் மனிதாராகத்தான் இருக்கமுடியும். எனக்கு பலத்த நம்பிக்கையிருக்கிறது. உன் காதலி பிரிவின் துயரத்திலிருந்து இரண்டாவது மூன்றாவதோ நாள் நிச்சயம் மீண்டுவிடுவாள். உனக்கு மனிதர்கள் எளிமையானவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் உனக்கு எதையும் தரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாய். நீயும் அவர்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை. இந்த உண்மையை உன் தோழியிடம் எப்படி எடுத்துச்சொல்வேன். அன்பு சிந்தனைகளின் உற்பத்தி இல்லை தோமஸ். இப்படியெல்லாம் பேசுவது உனக்கு அயர்ச்சியளிக்கும். என்னசெய்வது. எனக்குத்தெரிந்த ஒரே மந்திரம் தந்திரம் எல்லாம் இந்த அன்பு தானே. நான் அன்பென்னும் பெரும் மலக்கிடங்கு. தோமஸ் ஒரு முறையாவது உன் தோழியிடம் வா. என்னிடம் வரவேண்டும் என்றில்லை. உன்னோடே இருந்து உனக்காகவே வாழ்ந்த அவளுக்காக ஒரு முறை வா. மென்மையான அவளின் கைகளைப்பிடித்து இந்த உலகத்தில் வாழும் ரகசியம் பற்றி ஓரிரு வார்த்தைகளேனும் சொல்லிவிட்டுப் போ. உன் தோழி என்னருகில் கதறி அழுகிறாள். உன் கண்கள் கலங்கவில்லையா தோமஸ்?

தோமஸிற்குத் திவசம்

மெல்லிய சாம்பல் நிறமாக முன்காலை வெளித்திருந்தது. பருவம் தவறி சுழன்றடிக்கும் ஆடிக்காற்று பழுத்த மஞ்சள் நிற இலைகளை லாவகமாக பிடுங்கி எறிந்துகொண்டிருந்தது. அவை சருகுகளாக முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன. போஃகி தன் உடலை  வளைத்து பின்னங்காலினை நக்கியது. அது தன் உடல் முழுதும் படிந்திருந்த புழுதியை பாம்பொன்றின் லாவகத்துடன் வளைத்து உதறிக் கொட்டியது. என்னை அண்மித்து காலடியில் சுருண்டு கொண்ட கணம், நான் தோமஸின் திவசம் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன். தோமஸ் இறந்து இருபத்தொரு நாளாகியும் யாரும் திவசம் பற்றி சிந்திப்பதாய் இல்லை. தோமஸின் இறப்பைப் பற்றி சிறிதளவேனும் வருந்துவோர் கூட இதைச் சட்டை செய்வதாய் தெரியவில்லை. அது சரி, நெடுஞ்சாலையில் அனாதையாய்க் கிடந்தவனை பெக்கோவால் அள்ளி புதைத்தவர்களாயிற்றே.
 
தோமஸ் எந்த மதத்தையும் பின்பற்றிகொண்டவனாய் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எந்த மார்க்கத்தையும் பண்பாட்டையும் கூட. அவன் தன் தாய் தந்தையர் பற்றியோ குலம் கோத்திரம் பற்றியோ எப்போதும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எங்களுக்கு முகங்களையோ அடையாளங்களோ தேவைப்படவில்லை. அவன் எதன் மீதும் பயத்திலிருக்கவில்லை. அதனால் அவனுக்கு அடையாளங்கள் தேவைப்படவில்லை. பயத்திலிருப்பவர்கள் தானே அடையாளங்களை தரித்துக்கொள்வார்கள். என்னிடம் ஒரு முறை மெதுவாகச் சொன்னான், ” நான்  மனிதர்கள் மீது பயத்திலிருக்கிறேன்” என்று. நானும் அவனும் பயத்தைப்பற்றி பேசிக்கொண்ட இரவை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அவன்  வலிமையான மனதினைக் கொண்டவனாயிருந்தான். மிகச்சிறிய விஷயத்திற்கே உடைந்து அழுதுவிடும் என்னோடு அவனிருந்தது ஆச்சரியமான ஒன்றுதான். அன்றைய இரவு என் பகற்கனவுகளை எண்ணி  பயந்துபோயிருந்தேன். நிலத்திலும் கட்டிலிலும் கதிரையில்  கண்களை மூடமுடியாதளவு பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. தடிப்பான கரும் போர்வை ஒன்றைப்போல பயம் என்மீது கவிந்திருந்தது. இரக்கமற்ற சொற்களும் வசைகளும் என்னைச்சுற்றிக் குடைந்துகொண்டிருந்தன. அறைக்கதவு இறுக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சிறிய யன்னல் ஓட்டைக்கூடாக உடலை செலுத்தி இறந்துவிடலாம் என்று எத்தனித்த போதும் என் பருத்த உடல் நுழைய மறுத்தது. பருமமான என்னுடல் முதன்முறையாக  என்னை வஞ்சித்தது. முகமூடியுடன் உடலற்றவர்களும் உடலோடு முகமற்றவர்களும் நிறைந்து போயிருந்தார்கள். அவர்களின் நெருக்கத்தில் என்னால் மூச்செடுக்கக் கூட முடியவில்லை. இறப்பு இப்படியாவது என்னை அழித்துவிடட்டும் என்று அடங்கிக்கொண்டிருந்த கணம் தூரத்திலிருந்து தோமஸின் குரல் கேட்டது. அது நிச்சயமாக தோமஸின் குரல் தான் என்பதை உணர்ந்துகொண்டேன். அவனது குரல் வெள்ளிக் குவளைக்குள் சல்லிக்கற்களை போட்டது போல கூர்மையாக இருக்கும்.  நான் உயிர்பிழைப்பதற்கான எல்லாச் சாத்தியங்களையும் அந்தக்குரல் கரகரத்து இரையும் வரை உரக்கக் கத்திக்கொண்டிருந்தது.  கும்மிருட்டுக்குள் மின்மினி ஒன்று தன்னுடலிலிருந்து வெளிச்சத்தை எனக்குள் பாய்ச்சியது. அது மிக மிக நுண்ணிய வெளிச்சம். இரண்டு விரல்களால் பிடித்துக்கொள்ள முடியாதளவிருந்து. அறைகுளிருந்த கதிரையொன்றிலேறி கழுத்தை உயர்த்தி விட்டத்தைப் பார்த்து மூச்செடுத்தேன். காற்றின் வழியாக உயிர் உடலை நிரப்பியது. தன் வாழ்நாளின் கடைசிக் கணங்களில் இருந்துகொண்டிருக்கும் காற்றாடி தலைக்கு மேலே கீறீச் சத்தத்தோடு என்னை நோக்கி சிரித்தது. தலைக்கு மேலும் காலுக்கு கீழும் இறப்பு காத்திருக்க தோமஸ் முன்கதவைத் திறந்தான்.
 
தோமஸிற்கு திவசம் செய்வதை அவன் விரும்புவானோ தெரியவில்லை. ஒரு வேளை இறப்பின் பின்னர் கடவுளை அவன் கண்டிருக்கலாம். இறை நம்பிக்கையுள்ளவனாய் மாறியிருக்கலாம். தோமஸும் மிகச் சாதாரணமான மனிதர் தானே. என்னோடிருந்த போது குழந்தைகளிடத்தே அதிக அன்பு செலுத்தினான். குழந்தைகளை ஒளி என்றான். ஒளியைப் பேசவிடாமல் இயற்கை எப்போதும் தடைவிதித்தபடியே வைத்திருக்கிறது.  அதனால் குழந்தைகள் பேசமாட்டார்கள் என்றான். குழந்தைகள் மௌனமாக்கப்பட்டார்கள், நானும் நீயும் மௌனித்திருக்கிறோம் தோமஸ். குழந்தைகளுக்கு அழுக்கும் இனிப்பும் ஒன்றுதான். தாய்ப்பால் மறந்த குழந்தை தான் ஞானி என்றேன். அவன் ஆமோதித்தான். முழுதும் திறந்த நீலவிழியன் இறந்து போகக்கூட ஒரு சாண் நிலம் தேவையாய் போயிற்றே. ஏதுமற்ற வெளி ஒன்றை இந்த புறவுலகில் புத்தனாலும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. தோமஸ் நீ கிறிஸ்தவனா?” In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. “, அவன் கிறிஸ்தவன் இல்லை. அவனிடம் பைபிள் இருந்திருந்தால் பற்றவைத்து ஆற்றில் கரைத்திருப்பான். முடிந்த முடிவாய் ஒன்றைச்சொல்லும் மதத்திடம் அவன் எக்காலமும் ஒன்றியிருந்திருக்கமாட்டான். பிறகெப்படி நீ தோமஸாவாய்? அது சரி நீ எப்போது உன்னை தோமஸ் என்றாய்.
 
எல்லோரிடமும் முன்கூட்டியே பதிலளிக்கப்பட்ட புத்தகம் ஒன்றுள்ளது. அதில் எல்லாக் கேள்விகளும் கதைகளும் போதனைகளும் கூடவே பதில்களும் உள்ளது. மனிதர்களை எளிமையாக ஏமாற்றிவிடலாம். அந்தக் கதைகளால் எனக்கு பதிலளிப்பதன் மூலம் என்னையும் ஏமாற்றிவிடுகிறார்கள். உண்மையில் ஏமாற்றப்பட்டேன். ஆயிரம் முறையேனும். பதிலளிக்கப்பட்ட  புத்தகங்களிலிருந்து இந்த உலகம் தோன்றியது என்று நம்பவைக்கப்படுகிறார்கள். தடிப்பான அந்தப் புத்தக அட்டைகளுக்குள் உலகம் சுருங்கியும் விரிந்தும் காலம் காலமாக சுழன்று வருகிறது என்கிறார்கள். மதப்புத்தகங்கள் இன்னொரு வரலாற்று நாவல்கள் என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. அவர்களின் நம்பிக்கையின் மீதான கேள்விகளை அபத்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதையும் தீட்டு என்கிறார்கள். தோமஸ் சில பத்தாயிரம் சடலங்கள் குவிந்து கிடந்த இந்த மண்ணை விடவா இந்தக் கேள்விகள் பெருந்தீட்டு. யேசுவிடம் கல்லை அப்பமாக்க கேட்ட துஷ்டனைப் போல என்னைப் பார்க்கிறார்கள். தோமஸ் நாங்கள் எக்காலமும் மதங்களைப்பற்றி உரையாடியதில்லை. ஆனால் இப்போது நான் அதைப்பற்றி சிந்திக்கிறேன். உனக்காக. உனக்கு திவசம் செய்வதா வேண்டாமா என்று ஒரு தீர்க்கமான முடிவு காணவேண்டும். மீண்டும் மீண்டும் உன்னை இவர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொள்ளும் சடங்கொன்று தேவைப்படுகிறது. இவர்கள் அந்த சில பத்தாயிரம் போல் உன்னையும் காற்றில் கரைக்கப்பார்கிறார்கள். நான் விடமாட்டேன். தோமஸ் இங்கு தீர்க்கப்படாத கணக்குகள் மிச்சமிருக்கின்றன.
 
 
 

தூர்ந்துபோன தோமஸிற்கு கடிதம்

அன்புள்ள தோமஸிற்கு,
 
உன் உடல் சீராக எரிந்து சாம்பலாகும் கணம் வரை எனக்கும் உனக்குமான உறவைப்பற்றி யாரிடமும் நான் சொன்னதில்லை. இப்போதும் அதற்கான தேவைகள் வரவில்லை. இங்கு எல்லோரும் அவர்களின் தோமஸை எண்ணி அவதானமாயிருக்கிறார்கள் அல்லது அது போன்று பாவனை செய்கிறார்கள். சுடுகாட்டின் வாசலில் நின்றுகொண்டும் கூட உன் இறப்பை சந்தேகப்பட்டேன். நீ இறந்ததில் பெருந்துயர் உன் காதலிக்கோ, தாய் தந்தையருக்கு, மனைவிக்கோ கிடையாது. அவர்கள் உன் இறப்பை வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த உலகத்து மக்களில் பெரும்பாலானோர் உன் இறப்பை ஆதரிக்கிறார்கள். நீ இறந்தேயிருப்பது அவர்களுக்கு இலகுவாய் போயிற்று. அவர்கள் உன்னைப் பார்க்கவிரும்பவில்லை. உன்னிடம் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை. தோமஸ் இறந்ததன் மூலம் அவர்கள் உருப்பெறுகின்றார்கள். உனக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகிறதா? நீ ஒன்றும் யேசு கிடையாதே, மீண்டும் உயிர்த்தெழ. அதனால் அவர்கள் சந்தோசமாக கொண்டாடுகின்றார்கள். ஒரு அரக்கன் அழிந்த நாளாக இனிப்புகளையும் பட்டாசுகளை கொளுத்தி அவர்கள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். நள்ளிரவு பன்னிரண்டைத்தாண்டி அரைமணித்தியாலத்தின் பின் “போஃகி” ஊளையிடுவதைக்கேட்டு சந்தோசித்து கதவைத்திறந்து உன் வரவை எதிர்பார்த்து ஏமாற்றமடைகிறேன். இது நீ இறந்து ஒரு வார காலமாகியும் தவறாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. எனக்கு பைத்தியம் என்றோ பேய் பிடித்துவிட்டதொன்றோ பட்டம் கட்டுவதன் மூலம் எல்லோரும் தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள். அதை அவர்கள் பாட்டிற்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள். உலகத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் செய்கைகளும் இயல்பாக நடக்கிறது என்று நம்புகிறார்கள். இயல்பானவர்களையும் இயல்பானவற்றையும் சிந்தித்து சிந்தித்து முடியாமல் போயிற்று. பூக்கள் மலர்வதை இயல்பாக பார்ப்பது போல தோமஸ் இறப்பையும் இயல்பாக பார்க்கிறார்கள்.  உனக்கு அந்தநாளைப்பற்றிய ஞாபகம் இருக்கிறதா? நீ தான் இறந்து போயிற்றியே அதனால்  உன் ஞாபகங்களும் இறந்துபோயிருக்குமா என்ன? நாங்கள் சுயநலமாவார்கள். எங்களுக்கு உவப்பானவற்றையும் வெறுப்பானவற்றையும் மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். மற்றைய எல்லாவற்றையும் இயல்பாக நடந்தேறுகிறது என்று விட்டுவிடுகிறோம். ஞாபகங்களைக் கூட தேர்வு செய்து அடுக்கிவைக்கிறோம். இருந்தும் உன் ஞாபகங்கள் பற்றி எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவை நித்தியமானவை. எதையும் புறக்கணிக்காதவை. அவர்கள் எனக்கு “பத்”தும் “கூல் ட்ரிங்ஸ்”உம் தந்து என் சகோதரர்கள் இறப்பை கொண்டாடிய போது நீ கூடத்தானே இருந்தாய். உனக்கு அவற்றை அள்ளித் தின்னும் போது மலத்தை தின்பதைபோல அருவருத்ததாக சொன்னாயே. நீ கடுங்கோபமுற்று அந்த மனிதர்களை தாக்க முயன்ற போது நான் படாதபாடுபட்டு உன்னை அடக்கி அறைக்குள் திணித்தேன். ஆனால் என்னையும் உன்னையும் தவிர மிச்ச எல்லோரும் ” கட்டச்சம்பல் நல்லா இருக்கு ” என்று இயல்பாக சாப்பிட்டார்கள். அவர்கள் உன்மீது கடுங்கோபமுற்றிருந்ததை அறிவேன். ஆனால் உன் இறப்பை திருவிழாவாக்கி கொண்டாடுமளவு நீயும் நானும் மலினமானவர்களா என்ன. சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் உன்னைப் புதைக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது ஒருக்காலும் முடியாது என்று உணர்ந்தேன். ஏனென்றால் அவர்கள் தங்களை புத்திசாலியாக காட்டிக்கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். இப்போது கூட உன்னை சுடுகாட்டில் ஏதோ பெருஞ்சாலை ஒன்றில் அடிபட்டு அழுகிப்போன விசர் நாயொன்றைப் புதைப்பதைப்போல ஓரமாய் புதைத்திருக்கிறார்கள்.
 
நீயும் நானும் பேசிகொண்டவற்றையெல்லாம் எந்தப் புதைகுழிக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அவர்கள் நாங்கள் உரையாடுவதை விரும்பவேயில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து உரையாடினோம். நேரம் காலம் இடம் என்று எந்த பேதமுமின்றி. உன்னோடு முரண்பட்டு உன்னை தூற்றிய போதெல்லாம் சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். நானே உன்னை அழித்து விடுவேன் என்று பலமாக நம்பினார்கள். அவர்களிடம் எதன் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள் என்றேன். எதுவும் நிலையில்லை என்றேன். இப்போது நான் இங்கு இருப்பது கூட என்னளவிலும் என்னை உணர்பவர்கள் அளவிலும் மட்டும் தான் உண்மை என்றேன். நான் பார்ப்பது மரம் ஒன்றினையா அல்லது நான் மரமாக நினைத்த ஒன்றினையா என்று வினவினேன். நீங்கள் உணர்வது இருப்பது ஒன்றைத்தானா அல்லது நீங்கள் அறிந்துவைத்திருக்கின்ற இல்லாத ஒன்றையா என்றேன். உங்களிடம் எதுவுமில்லை எல்லாம் புகுத்தப்பட்டது என்றேன். நீங்கள் சிந்திக்கவில்லை, தெரிந்துகொண்ட ஒன்றை திரும்பிச் சொல்வதை சிந்தனை என்று பொய்ப்பேர் சூட்டுகிறீர்கள் என்றேன். அவர்கள் வெகு எளிமையாக ” நிறையப் புத்தகங்கள் படிக்காதே என்று இதான் சொல்றது ” என்றார்கள். ஆனால் புத்தகங்கள் எனக்கோ உனக்கோ எதையும் தரவில்லை என்பதை உணரும் திறனை அவர்கள்  மழுங்கடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நானும் நீயும்  இதைப்பற்றியெல்லாம் கதைத்தோம் என்றபொழுது அவர்கள் சிரித்தார்கள். வேலையில்லாதவர்கள் என்றார்கள். சந்நியாசி ஆகப்போறான் என்றார்கள். ஆனால் தாங்கள் ஞானம் அடைந்ததாக சொல்லிக்கொள்கிறர்கள். அதுவும் பிரபஞ்ச ஞானம். அதைபார்த்தீர்களா என்றேன். எந்த தயக்கமுமில்லாமல் என்னை அடிமுட்டாள் இது தெரியாதா என்றார்கள். நீயே சொல்லு தோமஸ் உனக்கு புத்துயிர்ப்பு அவசியம் தானா?
 
அன்புடன்,
உன் அறைத்தோழன்.

at the drop of the hat – நான்கு கவிஞர்கள் பற்றிய அறிமுக குறிப்புகள்

at the drop of the hat

 

நன்றி

உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.
 
ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம்
வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை
குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம்
முகப்புத்தகம் – மற்றைய எல்லாப் படங்களும் அவரவர் முகப்புத்தகங்களில் இருந்து பெறப்பட்டது.
 
அனார், சுகுமாரன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் எனது வலைதளத்தில் சுயாதீனமாக வெளியிடப்பட்டவை.
முகப்பு படம் என்னால் வடிவமைக்கப்பட்டது.
இக்கட்டுரைகள் எழுதும் போது உடனிருந்து திருத்தங்கள் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் மற்றும் உன்னதம் கௌதம சித்தார்த்தன் ஆகியோருக்கு நன்றிகள்.

கட்டுரைகள்

 

  • எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்

  • தர்மினி – அவளொருத்தி கீறிய படம்

  • அனார் – வெளிச்சத்தின் குரல்

  • சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

 
 

எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்

 


ஓவியம் – ரஷ்மி
(01)
போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த  உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ  அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் –  சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும்  சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.
 
“என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”
 
அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?
 
“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைக்கின்றது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.”
 
கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றைவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.
 
“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”
 
செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?
 
ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த  நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது.  இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.
 
எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.
 
“எனது உடைந்த குரலில்
நானும் பாடவிரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”
 
ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.
 
(02)
 
 
மனிதர்களில் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் முடிவில்லாத கனவு வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற இயல்பை பெற்றவுடன் மனம் ஆர்ப்பரித்து எல்லையற்று விரிகின்றது.
 
உலகத்தின் கோரப் பற்களாலால் குதறப்பட்ட மனிதர்கள் – ஒடுக்குமுறைகளுக்குள் வாழுகின்ற மனிதர்கள் – கனவு வெளிகளின் அசாத்திய எல்லைகளை அனுபவிக்கிறார்கள். போர் சூழப்பட்ட நிலம் ஒன்றில் வாழுகின்ற மனிதர்களின் கனவுலகம் சுதந்திரக் கனவுகளால் நிரம்பியிருக்கும். விடுதலை பற்றியும் சந்தோசங்கள் பற்றியும் நிறைந்திருக்கும். நிலத்திற்கான போராட்டம் ஒன்றில் நிலம் பற்றிய கனவுகளை மனிதர்கள் அதிகமாக உருவாக்குவார்கள். தமிழர்களுக்கு நிலம் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களுக்குள் சாதிய அமைப்பே நிலத்தை அடிப்படையாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதி சுதந்திரம், பெண்விடுதலை போன்று காணி நிலத்தையும் வேண்டிப்பாடியுள்ளார். தமிழர்கள் நிலங்களை உயிருள்ளவையாக பாவிக்கிறார்கள். உயிரின் உற்பத்திக்கான களமாக நினைக்கின்றார்கள். தோட்டமும் வயலும் கால்நடைகளும் சந்தோஷங்களும் சோகங்களும் இறப்புகளும் இழப்புகளும் நினைவுகளும் நிறைந்ததாக நிலத்தை அணுகுகிறார்கள். ஈழத்து நிலங்கள் இவற்றுடன் கூடவே போரையும் வீரத்தையும் துரோகத்தையும் நினைவுபடுகின்றன.
 
நாங்கள் ஒரு இரவில் நூறு கனவுகளைக் காண்கிறோம்
பிரிவு பற்றிய கனவுகள்
பிரிவு பற்றிய கனவுகள்
எல்லாமே அது தான்.
எங்கள் கனவுகளில்
பாலைவனங்கள் எங்கள் தலைகளின் மேலே சுழல்கின்றன.
மனிதர்களற்ற தெருக்களில்
கூரைகள் இல்லாத வீடுகளில்
பயிர்களற்ற தோட்டங்களில்
காளான்கள் பூத்தன
முட்கள் பெருகிப் பெருகி வானையளந்தன.
 
கற்பனை சாத்தியமாகின்ற பெருவெளியிலும் நாங்கள்  பிரிவையே கனவு காண்கிறோம். எங்களுக்குள் சாத்தியமான எல்லா வெளியையும் பிரிவு நிரப்பிவிடுகின்றது. பிரிவு என்பது எங்களோடு பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. போராட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும்  ஒருத்தரை இணைக்கவேண்டிய கட்டாயத்தின் மூலம் எல்லாக்  குடும்பத்திலும் பிரிவு வலுக்கட்டாயமாக சேர்ந்துகொண்டது. கூடவே இடப்பெயர்வு. நிலங்களைச் செல்கள் உழுது தள்ள – உயிரைக் காப்பாற்ற சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் லட்சக்கணக்கில் கிளம்பிய மனிதர்களின் கனவுகளில் பிரிவைத் தவிர வேறு எது ஆக்கிரமிக்க முடியும். இயற்கையினையும் சொந்தங்களையும் கட்டிக்கொண்டு வனப்பாக வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்து ஆளரவம் அற்ற தெருக்களையும் செல்களாலும் கிளைமோர்களாலும் சிதறடிக்கப்பட்ட வீடுகளையும் குருதியுறைந்த தெருக்களையும் இராத்திரிகளில் கேட்கின்ற அழுகுரல்களையும் சிதைந்து போன உடல்களையும் கடந்து இடம்பெயரும் போது பிரிவுத்துயர் அன்றி வேறெதுவும் நினைவிலும் கனவிலும் எழாது.
 
ஒவ்வொரு கிராமமாக இடம் பெயர்ந்து செல்லும் போதும் அவர்களை வரவேற்க  புதிய கிராமங்கள் மீதம் வைத்திருப்பது முன்னைய மக்களின் பிரிவுத்துயர் மட்டுமே. ஆட்கள் இல்லாமல் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போதும் அங்கே கவனிக்க ஆட்கள் இல்லாமல் பற்றை எழும்பிப்போன நிலங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே சேதி பிரிவு. அகதிகளின் கனவுகள் நிலம் ஒன்றின் பிரிவைப் பற்றியதாகவே  இருக்கும்.
 
காலத்தை நெய்தவனை
சபித்தன உக்கிப்போன பொம்மைகள்.
எங்களைக் கடந்துபோகின்ற ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும்
பெருமூச்சு விடுகின்ற பட்சிகள்
எங்கள் கனவுகளின் காட்சிகள்
தெளிவற்றும் உருவமற்றும்
இரவில் சிதறின
திசைகளில் எது சூரியனின் திசை
எது நாங்கள் பயணிக்கின்ற திசை?
 
மக்கள் கொத்துக்கொத்தாக இடம் பெயர்கின்றார்கள். தங்கள் உடமைகளை சைக்கிளிலும் வாகனங்களிலும் கட்டிக்கொண்டு பிள்ளைகளை இடுப்பில் சுமந்தபடி மழை வெயில் இரவு பகல் என்று எதையும் பொறுப்படுத்தாமல் இடம்பெயர்கிறார்கள். அடர்ந்த வன்னிக்காடுகளுக்குள்ளாக இருட்டினில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நடக்கிறார்கள். முன்னரே மக்கள் நடந்த தடங்களிலும் – இனி வரப்போகின்ற மக்கள் நடப்பதற்காக தங்களையும் உருவாக்கியபடி நடக்கிறார்கள். நிலத்தைப்பற்றிய கனவுகள் இருட்டில் சிதற அழிய இந்த கொடூர காலங்களை நெய்தவனை சபித்தபடியே திசையறியாத வனாந்தரத்துக்குள் உக்கிப்போன பொம்மைகளாக நடக்கிறார்கள்.
 
 
நாங்கள் பிரிந்து விட்டோம்
எமது நிலத்தை, எமது பூர்வீகத்தை
எமது பொறுமையை, எமது மௌனத்தை.
 
பின்குறிப்பு.
எஸ் போஸின் “காலத்தை நெய்தவனைச் சபித்தன பொம்மைகள்” என்ற கவிதையினை முன்னிறுத்தி இக்கட்டுரையின் பகுதி (02)   எழுதப்பட்டிருக்கிறது.
 
* எஸ் போஸின் படைப்புகள்  முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில்  ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர்  இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில  படைப்புகள் மறைந்து வாழுகின்றன.
 

தர்மினி – அவளொருத்தி கீறிய படம்

 


 
இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளினையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களைப் பற்றியும் , இன்னொரு தொகுதி இடம்பெயர்வு – புலம்பெயர்வுகள் பற்றியும் இன்னுமொரு தொகுதிக் கவிதைகள் புலம்பெயர் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.
 
வெளிச்சத்தின் உண்மைகள்
இருட்டில் மன்னிக்கப்படுகின்றனவா?
மறைக்கப்படுகின்றனவா?
 
என்று ” குரல்கள் ” என்ற கவிதையில் கேள்வி கேட்கின்ற தர்மினி
 
இருளே உண்மை
இருளோ வெட்கம் அறியாது
அது கசிந்த மனதுகளைத் துடைக்கும் கடுதாசி.
 
என “இருளைத் தரிசிக்க…. ” என்ற கவிதையில் அவரே பதிலளிக்கிறார்.
 
சுதந்திரம் என்பதை என்னவென்றே அறியாத காலத்தில் உழன்ற மக்களின் உணர்வுகளை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. போராட்ட குழுவும் அரசாங்கமும் ஒப்பந்தங்கள் செய்வதும் – குறுகிய காலத்திலேயே அவை அனைத்தும் மீறப்பட்டு மீண்டும் இருள் சூழ்வதும் ஈழத்து மக்களுக்கு புதிதான ஒன்றும் இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் சுதந்திரத்தைப் பற்றிய கனவு மேலெழுகிறது. சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே சுதந்திரத்தை அளிப்பதைப் போன்ற அவல நிலைமையை அடைந்துவிட்டார்கள். இதனால் சுதந்திரம் என்பதே என்னென்று அறியாமல் – அதற்காக காத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தைப் பற்றி பாடியும் எழுதியும் அலுத்துவிட்டார்கள். எழுதிய அனைத்துமே சருகுகளாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
 
வெளியே மழையில்லை
கருமுகிலில்லை
புழுக்கமில்லை
ஆயினும் மழை பற்றிக் கதைக்கலாம் தானே?
 
– மழை முறியுமா?
 
உதிரும் மிகுதி வார்த்தைகளின்
குவியலைச் சுமக்கிறது அடிமரம்.
 
– அவளொருத்தி கீறிய படம்
 
போர்க்கவிதைகள் வெறுமனே வார்த்தைகளையும் உணர்வுகளையும் மட்டும் கொண்டுவருவன அல்ல. போர்க்கவிதை ஒன்றின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. கவிதையுடன், அதன் பின்னணியில் ஓடுகின்ற வரலாறும் கடத்தப்படுகிறது. எந்த ஒரு இலக்கியத்தின் பின்னும் அதன் பின்னணி வரலாறு காலம் காலமாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் போரிலக்கியங்கள் கடத்துகின்ற வரலாறு மிகவும் வலிமையானது. “1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி ” என்ற கவிதை பொதுவான வாசிப்பில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் தர்மினி குறித்த தினத்தைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்,
 
” இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.
 
அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள் உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம். ” – அவரின் தூமை வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
 
கவிதையாக உருவெடுக்கின்ற பொழுது,
 
அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
அதே ஆதரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.
 
தர்மினியை – பொதுவாக கலைஞர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பின்னர் அடிமையாகிப்போகின்ற தனிமை சூழ்ந்துகொள்கிறது. அகதியாக அந்நியதேசத்து சென்ற எல்லா சாதாரண மனிதர்களையும் தனிமை வாட்டும் என்றால் ஒரு கலைஞரை எத்தனை சித்திரவதை செய்திருக்கும். ஊரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஞாபகத்திலிருந்து பாடவேண்டிய துர்பாக்கிய நிலையை புலம்பெயர் கலைஞர்கள் அடைந்துவிடுகின்றார்கள். இதனால் தர்மினியின் கவிதைகளில் தனிமையோடு ஏக்கமும் பிரிவுத்துயரும் சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது.
 
” சுவர்கள் ஒட்டிக் கிடக்கின்றன
விளக்கின் நிழல்
ஒரு பூச்சி
தனித்துலையும் மனது ”
 
– இருளோடு
 
” ஒன்றொன்றாய் …
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்து
கிழித்தபடி
இதோ மிச்சமாக
தனியாக
நானும் இக்கணமும் ”
 
– நாட்களைக் கழித்தல்
 
” மறுபக்கம் திரும்பி என்னிடம்
நீயொரு அகதி என்கிறது
மற்றொரு நாவு
பொது வெளியில்
ஒளிந்துகொள்கிறது
உயர்த்த முடியாத
குரலுக்காக மௌனிக்கிறது ”
 
– என் நாவு பிளந்து
 
தர்மினியின் ” முத்தங்கள் ” என்ற கவிதை முக்கியமானதொன்று. கவிதை முழுதும் உணர்வுகள் கொட்டிக்கிடந்தாலும் – அதை மீறி கவிதை எடுத்துக்கொண்ட கலாசார வேற்றுமை மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் முத்தங்கள் சாதாரணமானவை. முத்தங்கள் ஆதரவின் குறியீடு. அன்பின் வெளிப்பாடு. எல்லாச் சந்திப்புகளிலும் முத்தங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் எமது பணப்பாடுச் சூழல் அப்படியானதல்ல. அந்நியர்களுடனான முத்தம் காமத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. சொந்தங்களுக்கு முத்தம் கொடுப்பது ஐந்து ஆறு வயதுகளோடு மறைந்துபோய் விடுகிறது. பின்னர் முத்தம் சொந்தகளுக்கு வெட்கத்தின் குறியீடாகவும் அந்நியர்களுக்கு அருவருப்பின் குறியீடாகவும் மாற்றமைடைகின்றது. அம்மா- மகன் முத்தங்கள் வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களை விட; அப்பா- மகள் முத்தங்கள் விமர்சனப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் இந்த மண்டிப்போன கலாசாரத்தின் குப்பைகளாக இருக்க தர்மினி இன்னொரு முத்தத்தைப் பற்றிப் பாடுகிறார். கொடுக்கப்படாத முத்தம். மகள் அம்மாக்கு கொடுக்க மறந்த முத்தத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்த தேசத்தில் யார்யாருக்காகவோ ஒட்டுகின்ற கன்னங்கள் குவிக்கின்ற உதடுகள் – அம்மாவிற்காக ஒட்டவும் குவியவும் மறந்ததைப்பாடுகின்றார்.
 
“யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக்
கொஞ்சி அணைத்திருக்கலாமோ?”
 
– முத்தங்கள்
 
மழையைப் பற்றி கவனத்துக்குரிய மூன்று கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது மழையும் நெருப்பும். ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டம் – போராட்டக் குழுவும் அரசாங்கமும் போரில் உக்கிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது போக்குவரத்து , பண்டப்பரிமாற்றம் என்பன கூடுதலாக தடைப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்க – பொருட்கள் தீர்ந்துவிட்டன. கள்ளமாக பொருட்களை கொண்டுவந்து சேர்த்தாலும் கேள்வியின் அளவிற்கு போதாமல் போனது. கூடவே ஒவ்வொன்றினது விலையும் பத்து பன்னிரண்டு மடங்காக உயர்ந்தது. காரணம் பொருட்களுடன் உயிரையும் பணயம் வைத்தே பண்டப் பரிமாற்றம் நடந்தது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பால்மாக்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதே சமயம் வெளிநாட்டு உதவிகள் நிறையைக் கிடைத்து கைநிறையப் பணம் புழங்கியது. ஆனால் பொருட்கள் தான் இல்லை.
 
” கொள்ளைக்காசிருந்தும் விற்கயாருமில்லை ”
 
– மழையும் நெருப்பும்
 
மற்றைய இரண்டு மழைக் கவிதைகளும் ஒப்பீட்டுக் கவிதைகள். ” சத்தமில்லாத மழை ” மற்றையது ” மழைச்சத்தம்” . இவ்விரண்டு கவிதைகளும் வெவ்வேறான மனநிலைகளிலிருந்து எழுதப்பட்டவை. வெவ்வேறான நிலச்சட்டகம். எங்கள் ஊர்களில் மழையின் சத்தம் என்பது வெறும் முகில்களில் இருந்து நீர்த்தாரைகள் வீழ்வது மட்டுமல்ல –
 
” மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி
கிணறு வழிய
பள்ளத்து வெள்ளங்களில்
தவளைகள் கத்தும் ”
 
– மழைச்சத்தம்
 
இதையெல்லாம் பார்த்து கேட்டு சிலிர்த்த உடல் அந்நிய தேசம் ஒன்றில் மழையின் சத்தத்தை –
 
” மின்னி ஒரு வெளிச்சம்
என் முன் விழ
திரைவிலக்கி வானம் பார்த்தால்
மழைக் கயிறுகள்
மண்ணில் ”
 
– சத்தமில்லாத மழை
 
ஊர்களில் –
 
” கூதலும் சத்தமுமாக மழை ”
 
– மழைச்சத்தம்
 
அந்நிய தேசத்தில்
 
” மண்ணில் கரைந்து கொண்டிருந்தன ”
 
– சத்தமில்லாத மழை
 
” ஒரு குருவி
அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பத்தைத் தவிர
வேறு வழியில்லை ”
 
– முடிவற்றது
 
 
பின்குறிப்பு
 
தர்மினியால் “1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி” என்ற தலைப்பில் தூமை இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தூமை இணையதளத்தை மேலும் துலாவிய பொழுது – இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக தர்மினி மற்றும் மோனிக்கா ஆகியோர் செயற்படுகிறார்கள் என்றும் பெண்ணியம் சார்ந்த உரையாடல்கள் பெண்களின் படைப்புக்கள் என்று முற்றுமுழுதாக பெண் இயக்கத்தால் நடத்தப்படுகிறதும் என்றும் புரிந்துகொண்டேன். தொடர்ச்சியான இயங்குகையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தூமை -ஒரு  காரணப்பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. “இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
 
 

அனார் – வெளிச்சத்தின் குரல்

 
 


 
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
 
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
 
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
 
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்”
 
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
 
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “
 
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”
 
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக்  கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும்  அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
 
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும்.  கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும்  நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
 
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”
 
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”
 
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது  படைப்பு வெளியிலிருந்து கவிதையினை  உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
 
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
 
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
 
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும்  என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”  என்கிறார்.
 
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு  சிறந்த முன்னுதாரணமாக  மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
 
பின்குறிப்புகள்
 
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு        “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
 

சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

 

9
நன்றி – குங்குமம்

 
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
****************