மூப்படைந்த எமிலாக்கு நிறப்பூச்சிட்டது போல நின்றது காலை ஐந்து நாற்பத்தைந்து ரயில். முழுமையாக திறக்காத கண்களோடு தன் உடலினைப் பார்த்துக்கொண்டிருந்தது இயற்கை. தண்டவாளத்தோடு பிணைத்திருந்த தன்னை விடுதலை செய்யுமாறு சீறிச்சினந்தது ரயில். மழைக்கு வீட்டிற்குள் மறித்துவைக்கப்பட்ட சிறுவனின் நிலை அதற்கு. அதன் இயந்திர முகத்திலிருந்து உருவான மஞ்சள் ஒளிப்பாகில் தண்டவாளம் இரண்டு நீண்ட ஈட்டிகள் போல மினுங்கியது. இரவின் குளிர்ச்சியில் திரண்டிருந்த பனித்துகள்கள் ஒளிப்பாகோடு கரைந்து கோடி மின்மினிகளாய்ச் சுருண்டன. தன்னைச்சுற்றி வெறுக்க முடியாத கிரீஸ் வாசனையை கமளித்துக்கொண்டிருந்தது அந்த ரயில். தென் திசைக்குச் செல்லும் ரயில்களுக்கிருக்கும் சனநெரிசலும் அதனால் பரவும் இரைச்சலும் காலை ஐந்து நாற்பத்தைந்து ரயிலுக்கிருப்பதில்லை. என்னைத்தவிர எல்லோரிலும் நீண்ட உறக்கத்தின் பின் கனிந்திருக்கும் அதிகாலையின் உற்சாகம் தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரின் மௌனமும் ஒவ்வொரு சுதியிருந்தது. அதன் இரண்டாவது பெட்டிக்கு அருகில் நிற்கும் எனக்குள் ஈரமான நத்தை நிலத்தை இழுத்துகொண்டு ஊர்ந்தது. பிரயாணிகள் நாட்களை பைகளுக்குள் நிரப்பியிருந்தார்கள். உப்பியிருந்த பைகளின் மேல் தளுதளுப்பாக பயம் மூடியிருந்தது. இன்னும் சிலர் நீண்ட பிரிவொன்றிக்குரிய ஆயத்தங்களோடு தெரிந்தனர். எப்போதும் ரயிலுக்குள் பிரிவு நிறைந்திருக்கும். ஆனால் எல்லாப் பெட்டிகளிலும் பிரிவு மட்டுமே இருப்பதில்லை. துரதிஷ்டவசமாக அதில் என் பெட்டியுமொன்று. அதிகாலையின் மயக்கம் பிரிவிற்கான எல்லா சங்கீதங்களையும் போர்த்திக்கொண்டது. இந்நேர ரயிலுக்கு அவசரப்பட்டு ஏறுபவர்கள் மிகவும் குறைவு. என்னைக்கடந்து செல்பவர்களின் கறி ரொட்டியின் வாசம். அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு இப்படியான வாசமிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். தண்ணீருக்குள் விரல்கள் நெளிந்து அசைவதைப்போல மனிதர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். அதிகாலை ரயிலுக்கு அவசரப்படுபவர்கள் இருக்கமாட்டார்கள்.
உறக்கமில்லாத நீண்ட கொடிய இரவினைக் கடந்து துடித்துக்கொண்டிருக்கும் ரயிலினுள் மனித அசைவுகளைப் பார்க்கிறேன். ஆறு கிழமைகளில் பின் ஒட்டியிருந்த நிறத்தையும் மணத்தையும் வியர்வையையும் உரித்தெறிந்துவிட்டு இன்னொரு நகரத்திற்குப் பிரிந்து செல்வது இதயத்திற்குள் கணத்துக்கொண்டேயிருந்தது. தண்டவாளத்தோடு ரயில் உரசிக்கொள்ளும் சத்தம் உடலுக்குள் படிகமாய்த் திரண்டது. ஆயிரம் நுளம்புகளும் கரப்பான்களும் கறுத்த சிறிய கட்டமான மட்டத்தேள்களும் இன்னும் பெயர் அறியா பூச்சிகளும் நிறைந்த பெட்டிக்குள் வருடமொன்றைத் தொலைத்த நினைவு. பச்சை ஒளிவீசும் மின்மினியைக் கொன்று தாவர சாடிக்குள் புதைத்த நினைவு. காற்றே இல்லாத வெப்பத்தில் மிதக்கும் அறை அது. நகுலனும் தோமஸும் இன்னும் பலரும் தோன்றி மறைந்த பூச்சு. எப்போதும் திரும்பக்கூடாது என்று வெளியேறிய அதே அறையின் நினைவு இந்தப் பெட்டிக்குள். தன்னை உலுப்பிக்கொண்டு ரயில் நகர்ந்தது. ரயிலுக்கு யாருடைய உணர்வுகளைப் பற்றியும் கவலையில்லை, தன்னுடைய பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது. அசாதாரணமாக மூலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கையொன்றிலிருந்து மெல்ல வெளித்த வானத்தைப் பார்த்தேன். காலம் எனக்கு முன்னே நீண்டது. இதிலிருந்து பின்னோக்கி பயணிப்பது வீட்டிற்குள்ளிருந்த என்னை பலத்த விசையோடு இழுத்து வெளியேகொண்டுபோவதாக உணர்த்தியது. இருப்புக்கொள்ளாத கட்டிலும் செந்தரையும் வாழைக்குலைகளும் டொமியும் வீட்டின் பெரு அசைவுகள். முற்றத்திலிருக்கும் சாய்வுமனை துளசியில்லாத மாடம் திணை. அண்டைப்புழுக்கம். கோலத்திலிருந்த அரிசியொன்றை காற்று பெயர்த்தெடுத்துக் கொண்டுபோகிறது. வீட்டிலிருந்து வெகு தூரத்துக்குச் செல்லும் இந்த ரயில் புறப்பட்டவுடனேயே மனிதர்கள் எப்படி நிம்மதியாகத் தூங்கிவிடுகிறார்கள். அவர்களின் முகங்களில் பிரிவுக்கான எந்தச் சலனமுமில்லை. தூரத்தில் என் நிலத்திற்குள் புதையும் நிலவையும் எதிரே தோன்றும் செந்சூரியனையும் பார்க்கும் பயத்திலிருக்கிறேன். நிலவின் நிரம்பாத குழிகளுக்குள் என் நினைவுகளை புதைத்து வைத்திருக்கிறேன். வெள்ளி உடுக்கூட்டத்திற்குள் எட்டு ரகசியங்களை அலையவிட்டிருக்கிறேன். இப்போது மறையும் நிலவு இன்னொரு முறை வானில் தோன்றத்தான் செய்யும். அந்த உடுக்கூட்டம் கூட. ஆனால் அப்போது நான் இன்னொரு நிலத்தில் இன்னொரு மணத்தில் இருப்பேன். சரிந்துகொண்டிருக்கும் நெற்கதிர்களை பார்த்தபடி,
என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச் சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.
மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித் தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள் நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப் பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.
” வாறீங்களா?” என்றேன்.
“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.
ஒரு காலைப் பின் வைத்து ஒரு காலை முன் வைத்து நகர்வதில் தான் நடை சாத்தியமாகிறது. இரு காலையும் ஒரு சேர வைத்து நடந்தால் தடாலென்று விழத்தான் வேண்டும். எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன் அதுவாகும் விந்தை.” நெளிந்து நெளிந்து தன் வளையமாகத் தன் னையே சுற்றிக் கொண்டு கடைசியில் தலையும் வாலும் ஒன்று சேர வெறும் சுன்னமாகச் சுருண்டு கிடக்கும் நிலை
நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,
” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”
முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன. மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.
நிழல்கள் மாத்திரம் எங்குமே இருப்பதில்லை; இங்கு கூட என்று இல்லை; அங்கும்
அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின் கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.
” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “
எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம். எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது. மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில் மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன. சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன். நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப் பதிந்தன.
இந்த ஊரில் எல்லாமே தலைகீழாகத் தொங்குகிறது மனிதஉடல்களில் வீடுகள் முளைத்திருக்கின்றன இவர்களில்பலர் எப்பொழுதுமே சிடுசிடுத்த முகங்களுடனேயே காணப்படுகிறார்கள் எங்கேயோ யாரோபோவது மாதிரிதோன்றுகிறது உற்றுப்பார்த்தால் யாருமில்லை
நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.
வேளைக்குத் தகுந்த வேஷம் ஆளுக்கேற்ற அபிநயம் இதுதான் வாழ்வென்றால் சாவதே சாலச் சிறப்பு!
கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.
மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.
அந்தி மயங்கும் வேளை- அதற்கு முன்: ஒளியும் நிழலும் பக்கத்தில் பக்கத்தில் காணும் போது அவனை ஒரு விசித்திர உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில் மண்சுவரில் இலை, நிழல்களைக் காணும் பொழுது கலையின் வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது அவன் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நடுவில் யாரோ ஒருவன் அவனை நோக்கி “நீங்கள்?” என்று உசாவ அவனுக்கு அவன் பெயர் கூட மறந்துவிட்டது.
“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.
சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.
“எல்லாமே வெகு எளிமையாகத்தான் இருக்கிறது ஆனால் “எல்லாம்” என்பதுதான் என்ன என்று தெரியவில்லை” இதைச் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான். வேறொரு நண்பனைப் பார்க்கச் சென்றான் இப்பொழுதெல்லாம் இது ஒரு பழக்கமாகி விட்டது போன இடத்தில் அவன் வெளியே போய்விட்டான் என்றார்கள் “என்னைப் போலவா?” என்று கேட்கச் சென்றவன் அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும் உடல் அவனைக் கேட்டது “கஷ்டமாக இருக்கிறது இல்லையா?” என்று.
மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச் சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக் கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.
சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.
“இல்லை” என்றேன்.
” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “
மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”
“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “
நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம். நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.
எப்பொழுதும் அவள் நினைவு தான் அவள் யார் என்று கேட்காதீர்கள் சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்
எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை. முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால் எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது. நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப் பொறுக்கிச் சேர்த்தேன்.
காவியத்தின் சுவை போல சுவை போல நீள் நகரின் எழில் போல எழில் போல உன் நினைவு தான் நினைவு தான்.
நேற்று ஒரு கனவு முதல் பேற்றில் சுசீலாவின் கர்ப்பம் அலசிவிட்டதாக. இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
வழக்கம்போல் என் அறையில் நான் என்னுடன் இருந்தேன் கதவு தட்டுகிற மாதிரி கேட்டது ”யார்” என்று கேட்டேன் ”நான் தான் சுசீலா கதவைத் திற “என்றாள் எந்த சமயத்தில் எந்தக் கதவு திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும்?
நான் பேசவில்லை மீண்டும் சொன்னாள் உனக்குச்சாகத்தான் தெரியும் நீஎன்னசொல்வாய் என்றுஎனக்குத்தெரியும் நீஎப்பொழுதும் இப்படிச் செத்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதுதான் என்விருப்பமும் என்றாள்
வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று பூனையின் திடீர் கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,
” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,
சுசீலா செத்துக் கிடந்தாள் கழுகொன்று அவள் முலையைக் கொத்திற்று அவள் துவாரம் நோக்கி எறும்புக் கூட்டம். பிணவாடை வயிற்றைக் குமட்டக் கவிஞன் கறுப்புத் தின்றான்; நாலடிக்கப்பால் அவர் மாபெருங் கவிஞர் தாடி வருடித் தியானத்திலாழ்ந்தார்.
இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.
மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை மூலவராக நினைத்து எவ்வளவு ஏமாற்றங்கள்
குறிப்புகள்.
நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.
உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.
ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம்
வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை
குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம்
முகப்புத்தகம் – மற்றைய எல்லாப் படங்களும் அவரவர் முகப்புத்தகங்களில் இருந்து பெறப்பட்டது.
அனார், சுகுமாரன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் எனது வலைதளத்தில் சுயாதீனமாக வெளியிடப்பட்டவை.
முகப்பு படம் என்னால் வடிவமைக்கப்பட்டது.
இக்கட்டுரைகள் எழுதும் போது உடனிருந்து திருத்தங்கள் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் மற்றும் உன்னதம் கௌதம சித்தார்த்தன் ஆகியோருக்கு நன்றிகள்.
கட்டுரைகள்
எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்
தர்மினி – அவளொருத்தி கீறிய படம்
அனார் – வெளிச்சத்தின் குரல்
சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்
எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்
நன்றி – ரஷ்மி
நன்றி – வடலி
ஓவியம் – ரஷ்மி
(01)
போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் – சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும் சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.
“என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”
அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?
“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைக்கின்றது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.”
கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றைவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.
“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”
செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?
ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது. இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.
எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.
“எனது உடைந்த குரலில்
நானும் பாடவிரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”
ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.
(02)
மனிதர்களில் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் முடிவில்லாத கனவு வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற இயல்பை பெற்றவுடன் மனம் ஆர்ப்பரித்து எல்லையற்று விரிகின்றது.
உலகத்தின் கோரப் பற்களாலால் குதறப்பட்ட மனிதர்கள் – ஒடுக்குமுறைகளுக்குள் வாழுகின்ற மனிதர்கள் – கனவு வெளிகளின் அசாத்திய எல்லைகளை அனுபவிக்கிறார்கள். போர் சூழப்பட்ட நிலம் ஒன்றில் வாழுகின்ற மனிதர்களின் கனவுலகம் சுதந்திரக் கனவுகளால் நிரம்பியிருக்கும். விடுதலை பற்றியும் சந்தோசங்கள் பற்றியும் நிறைந்திருக்கும். நிலத்திற்கான போராட்டம் ஒன்றில் நிலம் பற்றிய கனவுகளை மனிதர்கள் அதிகமாக உருவாக்குவார்கள். தமிழர்களுக்கு நிலம் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களுக்குள் சாதிய அமைப்பே நிலத்தை அடிப்படையாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதி சுதந்திரம், பெண்விடுதலை போன்று காணி நிலத்தையும் வேண்டிப்பாடியுள்ளார். தமிழர்கள் நிலங்களை உயிருள்ளவையாக பாவிக்கிறார்கள். உயிரின் உற்பத்திக்கான களமாக நினைக்கின்றார்கள். தோட்டமும் வயலும் கால்நடைகளும் சந்தோஷங்களும் சோகங்களும் இறப்புகளும் இழப்புகளும் நினைவுகளும் நிறைந்ததாக நிலத்தை அணுகுகிறார்கள். ஈழத்து நிலங்கள் இவற்றுடன் கூடவே போரையும் வீரத்தையும் துரோகத்தையும் நினைவுபடுகின்றன.
நாங்கள் ஒரு இரவில் நூறு கனவுகளைக் காண்கிறோம்
பிரிவு பற்றிய கனவுகள்
பிரிவு பற்றிய கனவுகள்
எல்லாமே அது தான்.
எங்கள் கனவுகளில்
பாலைவனங்கள் எங்கள் தலைகளின் மேலே சுழல்கின்றன.
மனிதர்களற்ற தெருக்களில்
கூரைகள் இல்லாத வீடுகளில்
பயிர்களற்ற தோட்டங்களில்
காளான்கள் பூத்தன
முட்கள் பெருகிப் பெருகி வானையளந்தன.
கற்பனை சாத்தியமாகின்ற பெருவெளியிலும் நாங்கள் பிரிவையே கனவு காண்கிறோம். எங்களுக்குள் சாத்தியமான எல்லா வெளியையும் பிரிவு நிரப்பிவிடுகின்றது. பிரிவு என்பது எங்களோடு பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. போராட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருத்தரை இணைக்கவேண்டிய கட்டாயத்தின் மூலம் எல்லாக் குடும்பத்திலும் பிரிவு வலுக்கட்டாயமாக சேர்ந்துகொண்டது. கூடவே இடப்பெயர்வு. நிலங்களைச் செல்கள் உழுது தள்ள – உயிரைக் காப்பாற்ற சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் லட்சக்கணக்கில் கிளம்பிய மனிதர்களின் கனவுகளில் பிரிவைத் தவிர வேறு எது ஆக்கிரமிக்க முடியும். இயற்கையினையும் சொந்தங்களையும் கட்டிக்கொண்டு வனப்பாக வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்து ஆளரவம் அற்ற தெருக்களையும் செல்களாலும் கிளைமோர்களாலும் சிதறடிக்கப்பட்ட வீடுகளையும் குருதியுறைந்த தெருக்களையும் இராத்திரிகளில் கேட்கின்ற அழுகுரல்களையும் சிதைந்து போன உடல்களையும் கடந்து இடம்பெயரும் போது பிரிவுத்துயர் அன்றி வேறெதுவும் நினைவிலும் கனவிலும் எழாது.
ஒவ்வொரு கிராமமாக இடம் பெயர்ந்து செல்லும் போதும் அவர்களை வரவேற்க புதிய கிராமங்கள் மீதம் வைத்திருப்பது முன்னைய மக்களின் பிரிவுத்துயர் மட்டுமே. ஆட்கள் இல்லாமல் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போதும் அங்கே கவனிக்க ஆட்கள் இல்லாமல் பற்றை எழும்பிப்போன நிலங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே சேதி பிரிவு. அகதிகளின் கனவுகள் நிலம் ஒன்றின் பிரிவைப் பற்றியதாகவே இருக்கும்.
காலத்தை நெய்தவனை
சபித்தன உக்கிப்போன பொம்மைகள்.
எங்களைக் கடந்துபோகின்ற ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும்
பெருமூச்சு விடுகின்ற பட்சிகள்
எங்கள் கனவுகளின் காட்சிகள்
தெளிவற்றும் உருவமற்றும்
இரவில் சிதறின
திசைகளில் எது சூரியனின் திசை
எது நாங்கள் பயணிக்கின்ற திசை?
மக்கள் கொத்துக்கொத்தாக இடம் பெயர்கின்றார்கள். தங்கள் உடமைகளை சைக்கிளிலும் வாகனங்களிலும் கட்டிக்கொண்டு பிள்ளைகளை இடுப்பில் சுமந்தபடி மழை வெயில் இரவு பகல் என்று எதையும் பொறுப்படுத்தாமல் இடம்பெயர்கிறார்கள். அடர்ந்த வன்னிக்காடுகளுக்குள்ளாக இருட்டினில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நடக்கிறார்கள். முன்னரே மக்கள் நடந்த தடங்களிலும் – இனி வரப்போகின்ற மக்கள் நடப்பதற்காக தங்களையும் உருவாக்கியபடி நடக்கிறார்கள். நிலத்தைப்பற்றிய கனவுகள் இருட்டில் சிதற அழிய இந்த கொடூர காலங்களை நெய்தவனை சபித்தபடியே திசையறியாத வனாந்தரத்துக்குள் உக்கிப்போன பொம்மைகளாக நடக்கிறார்கள்.
நாங்கள் பிரிந்து விட்டோம்
எமது நிலத்தை, எமது பூர்வீகத்தை
எமது பொறுமையை, எமது மௌனத்தை.
பின்குறிப்பு.
எஸ் போஸின் “காலத்தை நெய்தவனைச் சபித்தன பொம்மைகள்” என்ற கவிதையினை முன்னிறுத்தி இக்கட்டுரையின் பகுதி (02) எழுதப்பட்டிருக்கிறது.
* எஸ் போஸின் படைப்புகள் முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில் ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர் இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில படைப்புகள் மறைந்து வாழுகின்றன.
தர்மினி – அவளொருத்தி கீறிய படம்
நன்றி – முகப்புத்தகம்
நன்றி – முகப்புத்தகம்
இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளினையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களைப் பற்றியும் , இன்னொரு தொகுதி இடம்பெயர்வு – புலம்பெயர்வுகள் பற்றியும் இன்னுமொரு தொகுதிக் கவிதைகள் புலம்பெயர் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.
என்று ” குரல்கள் ” என்ற கவிதையில் கேள்வி கேட்கின்ற தர்மினி
இருளே உண்மை
இருளோ வெட்கம் அறியாது
அது கசிந்த மனதுகளைத் துடைக்கும் கடுதாசி.
என “இருளைத் தரிசிக்க…. ” என்ற கவிதையில் அவரே பதிலளிக்கிறார்.
சுதந்திரம் என்பதை என்னவென்றே அறியாத காலத்தில் உழன்ற மக்களின் உணர்வுகளை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. போராட்ட குழுவும் அரசாங்கமும் ஒப்பந்தங்கள் செய்வதும் – குறுகிய காலத்திலேயே அவை அனைத்தும் மீறப்பட்டு மீண்டும் இருள் சூழ்வதும் ஈழத்து மக்களுக்கு புதிதான ஒன்றும் இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் சுதந்திரத்தைப் பற்றிய கனவு மேலெழுகிறது. சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே சுதந்திரத்தை அளிப்பதைப் போன்ற அவல நிலைமையை அடைந்துவிட்டார்கள். இதனால் சுதந்திரம் என்பதே என்னென்று அறியாமல் – அதற்காக காத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தைப் பற்றி பாடியும் எழுதியும் அலுத்துவிட்டார்கள். எழுதிய அனைத்துமே சருகுகளாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
வெளியே மழையில்லை
கருமுகிலில்லை
புழுக்கமில்லை
ஆயினும் மழை பற்றிக் கதைக்கலாம் தானே?
போர்க்கவிதைகள் வெறுமனே வார்த்தைகளையும் உணர்வுகளையும் மட்டும் கொண்டுவருவன அல்ல. போர்க்கவிதை ஒன்றின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. கவிதையுடன், அதன் பின்னணியில் ஓடுகின்ற வரலாறும் கடத்தப்படுகிறது. எந்த ஒரு இலக்கியத்தின் பின்னும் அதன் பின்னணி வரலாறு காலம் காலமாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் போரிலக்கியங்கள் கடத்துகின்ற வரலாறு மிகவும் வலிமையானது. “1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி ” என்ற கவிதை பொதுவான வாசிப்பில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் தர்மினி குறித்த தினத்தைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்,
” இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.
அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள் உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம். ” – அவரின் தூமை வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
கவிதையாக உருவெடுக்கின்ற பொழுது,
அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
அதே ஆதரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.
தர்மினியை – பொதுவாக கலைஞர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பின்னர் அடிமையாகிப்போகின்ற தனிமை சூழ்ந்துகொள்கிறது. அகதியாக அந்நியதேசத்து சென்ற எல்லா சாதாரண மனிதர்களையும் தனிமை வாட்டும் என்றால் ஒரு கலைஞரை எத்தனை சித்திரவதை செய்திருக்கும். ஊரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஞாபகத்திலிருந்து பாடவேண்டிய துர்பாக்கிய நிலையை புலம்பெயர் கலைஞர்கள் அடைந்துவிடுகின்றார்கள். இதனால் தர்மினியின் கவிதைகளில் தனிமையோடு ஏக்கமும் பிரிவுத்துயரும் சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது.
” சுவர்கள் ஒட்டிக் கிடக்கின்றன
விளக்கின் நிழல்
ஒரு பூச்சி
தனித்துலையும் மனது ”
– இருளோடு
” ஒன்றொன்றாய் …
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்து
கிழித்தபடி
இதோ மிச்சமாக
தனியாக
நானும் இக்கணமும் ”
– நாட்களைக் கழித்தல்
” மறுபக்கம் திரும்பி என்னிடம்
நீயொரு அகதி என்கிறது
மற்றொரு நாவு
பொது வெளியில்
ஒளிந்துகொள்கிறது
உயர்த்த முடியாத
குரலுக்காக மௌனிக்கிறது ”
– என் நாவு பிளந்து
தர்மினியின் ” முத்தங்கள் ” என்ற கவிதை முக்கியமானதொன்று. கவிதை முழுதும் உணர்வுகள் கொட்டிக்கிடந்தாலும் – அதை மீறி கவிதை எடுத்துக்கொண்ட கலாசார வேற்றுமை மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் முத்தங்கள் சாதாரணமானவை. முத்தங்கள் ஆதரவின் குறியீடு. அன்பின் வெளிப்பாடு. எல்லாச் சந்திப்புகளிலும் முத்தங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் எமது பணப்பாடுச் சூழல் அப்படியானதல்ல. அந்நியர்களுடனான முத்தம் காமத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. சொந்தங்களுக்கு முத்தம் கொடுப்பது ஐந்து ஆறு வயதுகளோடு மறைந்துபோய் விடுகிறது. பின்னர் முத்தம் சொந்தகளுக்கு வெட்கத்தின் குறியீடாகவும் அந்நியர்களுக்கு அருவருப்பின் குறியீடாகவும் மாற்றமைடைகின்றது. அம்மா- மகன் முத்தங்கள் வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களை விட; அப்பா- மகள் முத்தங்கள் விமர்சனப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் இந்த மண்டிப்போன கலாசாரத்தின் குப்பைகளாக இருக்க தர்மினி இன்னொரு முத்தத்தைப் பற்றிப் பாடுகிறார். கொடுக்கப்படாத முத்தம். மகள் அம்மாக்கு கொடுக்க மறந்த முத்தத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்த தேசத்தில் யார்யாருக்காகவோ ஒட்டுகின்ற கன்னங்கள் குவிக்கின்ற உதடுகள் – அம்மாவிற்காக ஒட்டவும் குவியவும் மறந்ததைப்பாடுகின்றார்.
“யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக்
கொஞ்சி அணைத்திருக்கலாமோ?”
– முத்தங்கள்
மழையைப் பற்றி கவனத்துக்குரிய மூன்று கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது மழையும் நெருப்பும். ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டம் – போராட்டக் குழுவும் அரசாங்கமும் போரில் உக்கிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது போக்குவரத்து , பண்டப்பரிமாற்றம் என்பன கூடுதலாக தடைப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்க – பொருட்கள் தீர்ந்துவிட்டன. கள்ளமாக பொருட்களை கொண்டுவந்து சேர்த்தாலும் கேள்வியின் அளவிற்கு போதாமல் போனது. கூடவே ஒவ்வொன்றினது விலையும் பத்து பன்னிரண்டு மடங்காக உயர்ந்தது. காரணம் பொருட்களுடன் உயிரையும் பணயம் வைத்தே பண்டப் பரிமாற்றம் நடந்தது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பால்மாக்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதே சமயம் வெளிநாட்டு உதவிகள் நிறையைக் கிடைத்து கைநிறையப் பணம் புழங்கியது. ஆனால் பொருட்கள் தான் இல்லை.
” கொள்ளைக்காசிருந்தும் விற்கயாருமில்லை ”
– மழையும் நெருப்பும்
மற்றைய இரண்டு மழைக் கவிதைகளும் ஒப்பீட்டுக் கவிதைகள். ” சத்தமில்லாத மழை ” மற்றையது ” மழைச்சத்தம்” . இவ்விரண்டு கவிதைகளும் வெவ்வேறான மனநிலைகளிலிருந்து எழுதப்பட்டவை. வெவ்வேறான நிலச்சட்டகம். எங்கள் ஊர்களில் மழையின் சத்தம் என்பது வெறும் முகில்களில் இருந்து நீர்த்தாரைகள் வீழ்வது மட்டுமல்ல –
இதையெல்லாம் பார்த்து கேட்டு சிலிர்த்த உடல் அந்நிய தேசம் ஒன்றில் மழையின் சத்தத்தை –
” மின்னி ஒரு வெளிச்சம்
என் முன் விழ
திரைவிலக்கி வானம் பார்த்தால்
மழைக் கயிறுகள்
மண்ணில் ”
– சத்தமில்லாத மழை
ஊர்களில் –
” கூதலும் சத்தமுமாக மழை ”
– மழைச்சத்தம்
அந்நிய தேசத்தில்
” மண்ணில் கரைந்து கொண்டிருந்தன ”
– சத்தமில்லாத மழை
” ஒரு குருவி
அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பத்தைத் தவிர
வேறு வழியில்லை ”
– முடிவற்றது
பின்குறிப்பு
தர்மினியால் “1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி” என்ற தலைப்பில் தூமை இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தூமை இணையதளத்தை மேலும் துலாவிய பொழுது – இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக தர்மினி மற்றும் மோனிக்கா ஆகியோர் செயற்படுகிறார்கள் என்றும் பெண்ணியம் சார்ந்த உரையாடல்கள் பெண்களின் படைப்புக்கள் என்று முற்றுமுழுதாக பெண் இயக்கத்தால் நடத்தப்படுகிறதும் என்றும் புரிந்துகொண்டேன். தொடர்ச்சியான இயங்குகையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தூமை -ஒரு காரணப்பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. “இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
அனார் – வெளிச்சத்தின் குரல்
நன்றி – முகப்புத்தகம்
நன்றி – முகப்புத்தகம்
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்”
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக் கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும் அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும். கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும் நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது படைப்பு வெளியிலிருந்து கவிதையினை உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும் என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை” என்கிறார்.
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு சிறந்த முன்னுதாரணமாக மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
பின்குறிப்புகள்
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்
நன்றி – குங்குமம்
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும். மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும். வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும் பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன. நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
இதுவரை சுகுமாரன், இனி நான்
இல்லை
ஒன்றே ஒன்று
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும். மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும். வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும் பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன. நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
இதுவரை சுகுமாரன், இனி நான்
இல்லை
ஒன்றே ஒன்று
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கையை முன்னிறுத்தி எழுதிய குறிப்பில் அவரின் கவிதைகள் பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்,
“இத்தொகுப்பில்இருக்கின்றபெரும்பாலானகவிதைகள்இருளைப்பற்றியதாவேஇருக்கின்றன. தலைக்குமேலேசெல்கள்சிதறிக்கொண்டிருக்கவளவிற்குள்நிலத்திற்குகீழேவெட்டப்பட்டிருக்கின்றபங்கர்களில்நாட்கணக்கில்ஒளிந்துவாழ்ந்தமக்கள்வெளிச்சம்படாதஇடங்கள்மட்டும்தான்இருள்என்பதைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள்புகுந்துஆண்கள்பெண்கள்குழந்தைகள்என்றுவித்தியாசமேஇல்லாமல்கொன்றுகுவித்துக்கொண்டிருக்கும்போதுஇளைஞர்களும்யுவதிகளும்திருட்டுத்தனமாகசொந்தநிலங்களைவிட்டுவெளிநாடுகளுக்குஓடிஒழிந்தார்கள் – இவர்களுக்குஇருள்என்பதுஇரவுமட்டுமல்ல. தஸ்தாவஸ்கிஎழுதியவாழ்க்கையின்இருட்டுப்பற்றியகதைகள்அல்லஇவை. வாழ்க்கையேஇருட்டாகிப்போனஒருஇனத்தின்கதறல்கள்.”¹
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்” ²
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “²
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”²
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக் கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும் அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும். கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும் நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”²
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”²
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது படைப்பு வெளியிலிருந்து கவிதையினை உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும் என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”² என்கிறார்.
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு சிறந்த முன்னுதாரணமாக மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தேவைப்பட்டது. ஒவ்வொரு இடைவெளியிலும் மனம் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. கவிதைகள் தருகின்ற அமானுஷ்ய உணர்வு இடைவெளிகளில் பரவும் போது முற்றிலும் வேறு ஒரு சூழல் உருவாகி விடுகிறது. புகையிரதம் எத்தனை வீரியமாக சத்தம் எழுப்பிக்கொண்டு விரைந்த்தாலும், மெல்லிய மேகத்தின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜன்னலினூடாக தென்றல் முகத்தின் தசைகளை வருடினாலும், பாலைவனம் போன்ற வெம்மை இருக்கும். எதிரிலே இருக்கின்ற அத்தனை மனிதர்களும் அழகாக தோன்றுவார்கள் அல்லது அலங்கோலமாக தோன்றுவார்கள் அல்லது மறைந்து போவார்கள். கவிதைகள் மேற்ப்பரிப்பினூடு மகிழ்சியையும் ஆழ்ந்து போகும் போது இறுக்கத்தையும் தரலாம். ஆறு மணிநேரமும் எத்தனையோ சூலுக்கும் உலகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைந்து கொடுத்து வந்திறங்கினேன்.
சிலி நாட்டு கவிஞர்களான நிகனோர் பராவையும்(Nicanor Parra) என்றிக் லிஹ்னையும்(Enrique Lihn) முதன் முதலில் வாசித்தேன். இருவரும் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள். நிகனோர் பரா தனது நூற்றி மூன்றாவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1914இல் பிறந்தவர். என்றிக் லிஹ்ன் 1929- 1988 காலப்பகுதியில் வாழ்ந்தவர். நிகனோர் பரா இன்றும் தனது கவிதைகளை எழுதி பிரசுரித்து வருகின்றார்.
The Pilgrim – Nicanor Parra
எங்களது சாதாரண தர ஆங்கில இலக்கிய தொகுப்பில் Monkeys என்ற ஒரு சிறுகதை இருந்தது- பெயர் சரியாக ஞாபகம் இல்லை. ஒரு சிறிய வயதுடைய சமனேரா என்னும் பையன், பௌத்த பிக்கு ஆவதற்காக பௌத்த மடம் ஒன்றில் சேர்க்கப்படுகிறான். அவனின் ஆசைகள் பற்றிய வரைவாக அந்த சிறுகதை நகர்ந்து செல்லும். அதில் சமனேரா அதிக நேரத்தை குன்றுகளில் குரங்குகளோடு களிப்பான். அது அவனிற்கு உவகை ஊட்டுவதாக அமையும். இதே போன்ற ஒரு பௌதீக சூழலை இந்த கவிதை நினைவூட்டியது.
மிகவும் சிறிய வயதில் துறவுநிலைக்கு கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுவன், – உலக சந்தோசங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற சாதாரண மனிதர்களை நோக்கி இறைஞ்சுவதாக பரா எழுதுகின்றார். சிறுவனை அடையாளப்படுத்த பரா பயன்படுத்துகின்ற யுத்தி ஆழமானது. அதே நேரத்தில் எனக்கு கவலையை அளித்ததும் கூட.
But, I am a child calling to its mother from behind rocks,
I am a pilgrim who makes stones jump as high as his nose
சாதாரண குன்றின் பின்னால் நின்றுகொண்டு, குன்றை மீறி எட்டிப் பார்த்து தனது அம்மாவை அழைக்க பாய்கின்றபோது மூக்கு உயரம் மட்டுமே மேலேளும்பக்கூடிய சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். நான் வசித்துவந்த நகரத்தின் வீட்டிற்கு எதிரே பௌத்த விகாரை ஒன்றிருக்கிறது. அங்கே பௌத்ததுறவிகள் ஆவதற்காக சிறுவர்கள் வந்திருப்பார்கள். மிகவும் சிறியவயதில் முழுமையாக முடிகளை அகற்றி காவித்துணியும் உடுத்தி உலகின் எல்லா சுகங்களையும் துறந்தவர்கள் போல விகாரைக்கும் அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கும்(அருகில்) ஓடித்திரிவார்கள். பின்னேரங்களில் தங்களை மறந்து இயங்குவதையும் விகாரைக்கு வருகின்ற சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்து விளையாட அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். இவையெல்லாம் சமயத்தின் படி தவறுகள் என்றாலும் மனிதத்தின் படி?
நிகனோர் பரா இதையே வினவுகின்றார். எல்லா மனிதர்களைப்போலவும் தானே நாங்களும் – கனவுகளையும் ஆசைகளையும் வெறுத்து ஒதுக்கிவிட முடியாத போதும் கட்டாயப்படுத்தி அடைத்துவைக்கின்ற நிலைமையை கேள்வி கேட்கின்றார். புத்தர்கூட உலக சந்தோசங்களை அனுபவித்துத் தான் துறவறம் பூண்டார். தங்கள் சொந்த தேவைகளுக்காக பிள்ளைகளின் சந்தோசங்களை அழிக்கின்ற தானம் பற்றி கேட்கின்றார்.
A tree crying out to be covered with leaves.
எல்லாவற்றையும் மரத்துக்கு தருகின்ற இலைகளை போல அனைத்தையும் வேண்டி நிற்கின்ற சிறுவர்களின் மனநிலையை நிகனோர் பரா எழுதுகின்றார்.
இந்தக்கவிதையை ஸ்பானிஷ் மொழியிலிருந்து W.S.Merwin ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருகின்றார்.
மீண்டும் ஒரு முறை பித்தன் கவிதை தொகுப்பை வாசித்துப் பார்த்தேன். 26.11.2016 அன்று நடந்த தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வில் பித்தன் கவிதை தொகுதிக்கு அறிமுக அனுபவ பகிர்வு ஒன்றைச் செய்திருந்தேன். ஆனால் பதிவு செய்து இருக்கவில்லை. அதன் குறிப்புக்களும் என்னிடம் இப்போது இல்லை. பித்தன் தொடர்பாக விரிவாக எழுதவேண்டும் என்று ஆசையிருந்தது. தொகுப்பை நான் அணுகிய முறை, அதிலிருந்து விரிந்த கவி உலகம், அது வெளிப்படுத்தும் மானிட அடிப்படைவாத கேள்விகள், அதற்கு முன்வைக்கும் பதில்கள் என இன்னபிற நிறைய விடயங்களை பதிவுசெய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.
அறிமுகம்.
எப்போதுமே ஒரு கவிஞன் அவன் வாழ்ந்த காலத்தின் குறியீடாகவே கருதப்படுகிறான். அவனது எழுத்துக்கள் வழியே வெளிவருகின்ற உணர்வுகள் ஒவ்வொன்றும், அந்த சமுதாயத்தின் உணர்ச்சிகளே. கவிஞன் ஒரு கருவி. ஒரு கவிஞனின் எழுத்தில் பிரதிபலிக்க கூடிய பல்வகைமை, அவனுள் பதிந்த மானிடர்களின் அனுபவங்கள். பித்தன் தொகுப்பும் அப்படித்தான். ஒட்டுமொத்த சமூகத்தின் கேள்விகள், அவர்களின் அறியாமை, அவர்கள் கண்மூடித்தனமாக செய்கின்ற பழக்கவழக்கங்கள் என்பவை குறித்துத் தான் அப்துல் ரகுமான் எழுதுகின்றார்.
பித்தனின் அறிமுக கவிதையில் ரகுமான், இந்த தொகுப்பு முழுவதிலும் உலகத்தை தான் நின்று பார்த்த கோணத்தை விபரிக்கிறார். உலகின் ஒவ்வொரு தூண்டலிலும் இரண்டு துலங்கல்கள் இருக்கும். ஒன்று நேரானது மற்றையது மறையானது. எல்லோரது கண்களுக்கும் இரண்டுமே தெரியும். இரண்டையும் உணர்ந்து கொள்வார்கள். அப்துல் ரகுமான் அப்படி இல்லை. அவர் நேர் என்று நாம் குறிக்கும் துலங்கலில் உள்ள மறையை கண்டுகொள்கிறார். எல்லோராலும் வெறுக்கத்தக்க மறையான துலங்கல்களை ஆதரிக்கிறார். அதன் அழகை போற்றுகிறார். நேரானதில் காணாத இன்பம் மறையில் இருப்பதை விளக்குகிறார்.
பித்தன்
எதிர்களின் உபாசகன்
அதனால்
இருளிலிருந்து ஒளிக்கு என்ற
முழக்கத்திற்கு எதிராக
ஒளியிலிருந்து இருளுக்கு
என்று முழங்குபவன்.
அவன்
இல்லையின் தூதுவன்.
உண்மைக்குப்
பலமுகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்
முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
அப்துல் ரகுமானின் இல்லையிலும் இருக்கிறான் தொகுப்பு கடவுளின் இருப்பு தொடர்பானதாக இருக்கும். அதில் ஒரு வலிதான வாதம் ஒன்றை முன்வைப்பார். இன்று மேசையில் ஒரு மெழுகுவர்த்தி இருந்தது. நாளை இல்லை என்றால் இருந்திருக்கிறது என்று தானே பொருள். அது போலத் தான் கடவுள் இல்லை என்றால் இங்கு இப்போது இல்லை என்று அர்த்தபடுத்திகொள்ளலாமே தவிர இல்லை என்று முடிவு கொள்ள முடியாது என்கிறார். இந்த நூலில் அவர் இல்லையின் தூதுவானாக வந்திருக்கிறார். எப்போதோ இருந்து இன்று இல்லாமல் போன ஒன்றை பேச வந்திருப்பது போல, நாமெல்லாம் மறந்து போன ஒன்றை ஆராய வந்திருப்பது போல, எமது அறியாமையை விலக்க முயற்சி செய்வது போல இல்லையின் மகத்துவத்தை எழுதுகிறார்.
உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்கிறார் அப்துல் ரகுமான், எங்களுக்கு பொய்களை திரித்தும் திருத்தியும் பேசித்தான் பழக்கம். பொய்களுக்கு வித்தியாசமான முகங்களை உருவாக்கிக் கொள்கிறோம்- எமக்கு சாதகமாக. ஆனால் உண்மைக்கே பல முகங்கள் உண்டு என்கிறார். அது அத்தனையையும் அறிந்தவன் பித்தன் என்கிறார். ஒரு உலகியல் உண்மையை அசைக்கிறார்.
அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகிவிட்டேன். – கலைஞர் மு. கருணாநிதி .
முன்னுரையில் இவ்வாறு கூறுகின்றார், –
பாசிடிவ், நெகடிவ் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அது தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக சேர்ந்தால்தான் ஒளியே கிடைக்கும். முதலில் நெகடிவ் தயாராகிறது. புகைப்படத்திலே கூட முதலில் தயாராவது நெகடிவ்; பிறகு அது பாசிடிவ் ஆக படமாக உருவாகிறது. அதை மனதில் வைத்துகொண்டு படித்தால் எல்லாம் பாசிடிவ்விலேயே – அந்த அணுகுமுறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகியிருகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
என்கிறார்.
அம்பலம்
கவிதைக்கு செல்லமுன்னர் surrealism பற்றி தெரிந்து கொள்வோம்.
Surrealism
1920களை உலகம் தாண்டிக்கொண்டிருக்கும் போது நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் சில மரபுகள் உருவாக்கப்பட்டன. வழமையான பண்பாட்டு சித்திரங்களை மாற்றி புதிய அணுகுமுறை தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. வாசகர்களின் ரசனை மாற்றப்பட்டது. அதுவரை வாசர்களுக்கு கருத்துக்கள் கொடுக்கப்பட்ட முறைமை மாற்றப்பட்டது. நேரடியாக கருத்துக்களை வாங்கப்பழகியவர்கள், ஒரே வாசிப்பில் கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு அவர்கள் கொண்டுவந்த புதுமுறை எழுத்துருவாக்கமும் ஓவிய முறைமையும் அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. வாசகர்கள் தங்களை வருத்தாமல் வாசித்தும் அறிந்துகொண்டிருந்த காலத்துக்கு விடைகொடுக்க தொடங்கினர். வருத்தி வாசித்தறிதல் என்ற கோட்பாட்டுக்குள் உள்நுழைந்தார்கள். ஆரம்ப கட்டமாக வாசிப்பும் ஓவியங்களும் படிப்பறிவுள்ளவர்களுக்கு விளங்கிக்கொள்ள ஓரளவு இலகுவாயும் மற்றையவர்களுக்கு புரிதல் கஷ்டமாகவும் தென்பட்டது. காலம் நகர கீழ் மட்டத்தினரும் வாசிக்கவும் அறியவும் தொடங்கினர். இந்த வாசிப்பனுபவத்தைத் தான் surrealism என்போம்.
இந்த நுட்பம் கவிதைகளின் ஆரம்பத்திலிருந்தே அவதானிக்க கூடியவாறு உள்ளது. அம்பலம் பித்தனை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருக்கிறது. வாசகன் இனி நான், நான் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன். ஆடைகள் கிழிந்த முகங்களில் சுருக்கம் விழுந்த கிழவன் ஒருத்தனை மக்கள் கூட்டம் திருடனை அடிப்பதைப்போல கற்களால் தாக்கிகொண்டு இருக்கிறார்கள். அவன் சிரித்துக்கொண்டு இருக்கிறான். அவனின் உடலின் அனைத்து பாகங்களிலும் காயம் உருவாகி விட்டது. முதன் முதலாக அவனை அன்று தான் பார்கிறேன்.
அவன் சிரித்துகொண்டிருந்தான்
அவன் காயங்களும்
சிரித்துகொண்டிருந்தன.
அருகில் போன நான் அவனிடம் இப்படி அடிவாங்கியும் சிரித்துகொண்டு இருக்கிறாயே நீ என்ன பித்தானா என்று கேட்கிறான். அவன் லாவகமாக நீ கல்லா என்றான். அவனை நோக்கி கற்கள் மட்டுமே வந்திருக்கின்றன. அவனை நோக்கி வெறுப்புகள் தான் வந்திருக்கின்றன. என்னையும் அவற்றில் ஒன்றாக, இதுவரை வந்த வெறுப்புகளில் ஒன்றாக, இனி வரப்போகும் வெறுப்புகளின் ஆரம்பமாக பார்கிறான். அவனின் பார்வை என்னுள் மிக ஆழமான தாகத்தை ஏற்படுத்தியது. அவனிடம் தொடுத்த கேள்விகளுக்கான பதில்களின் சாரம் இப்படித்தான் இருந்தது.
அவன் உண்மையின் இன்னொரு பக்கத்தை பார்த்ததால் பித்தனாகி இருக்கிறான். உலக மக்களின் அந்தரங்கங்களை – அப்படி அவர்கள் நினைத்துகொள்ளும் ஒன்றை – உடைத்து உண்மையை வெளிபடுத்த எத்தனிக்கிறான், அதனால் தான் கல்லடி படுகிறான். தங்களின் சுயத்தை மறைத்து பொய் முகமூடிக்குள் வாழுகின்ற மனிதர்களை அம்பலப்படுத்துகிறான். அதனால் வெறுக்கப்படுகிறான். அதனால் தான் அவனை எல்லோரும் பித்தன் என்கிறார்கள்.
பித்தன் முடிக்கிறான்,
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
தனது வருகையால் காலா காலமாக தம்மை மறைத்து வைத்திருந்தோரின் முகத்திரைகள் ஒழிந்து போகின்ற, என்கிறான்.
எதை உந்துதலாக்கி எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பதை சிறிய நேர இடைவெளிகளில் சிந்தித்ததுண்டா?
தர்க்க பாடங்களை தவிர்த்து , நீண்ட நெடும் கோர்வைகளை வசமாக்கிக்கொள்ளவதில் எழுத்தின் வலிமை குன்றிவிடும் . சொல் , பொருள் ,உணர்வு என்பதில் ஓசையின் மூன்றாம் பரிமாணம் தான் வெற்றி கொள்கிறது. எத்தனை நீண்ட கோவைகளும் கொள்கின்ற பொருள் திரிபடையக்கூடிய சாத்தியம் அதிகமே. பொருள் வேற்றுமை உருவாக கூடிய சொற்களே வலிமை பெற்றவை என்ற மறையான சிந்தனையால் நாம் பீடிக்கப்பட்டுள்ளோம். இந்த நோய் உணர்வு என்ற மூன்றாம் பரிமாணத்தை அதன் பொருளடக்கம் எய்துவதை மெதுவாக்குகின்றது. சரியோ பிழையோ இந்த முகவுரை இனி வர இருக்கும் textக்கு அடிப்படையே.
ஒரு பெண்ணால் மலர்கின்ற – பெண்ணை பூவுக்கு உருவகிப்பதால் மலர்கின்ற என்பதில் எந்த குற்றமும் இல்லை , சொற்கள் எத்தனையாம் பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான் கேள்வி.போற்றுவதிலும் தூற்றுவதிலும் பெண் என்ற சக்தி கொண்டிருக்கும் வல்லமை வேறு எந்த சக்திக்கும் கிடையாது. இதில் என்னோடு உடன்படவேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. போற்றுதல் தூற்றுதல் என்பதை மீறி சாதாரணமான ஒரு சொல் பெண் பல்வகைமையினால் பரிமாணங்களை மாற்றிக்கொள்வதை நாம் அறியாமல் உணர்ந்துவருகிறோம். ஒரு நித்திய நாளின் பல்வேறு சந்தர்ப்பங்கள் இதை வெளிப்படுத்துகின்றது. எங்கேயாவது உறவினர் வீட்டில் போய் இருந்துகொண்டு சல்லாபம் இட்டுக்கொண்டு பேச்சின் இடைநடுவே அவ்வீட்டுக்கார அம்மா ,” தம்பி சாப்பிட்டு போங்கோவன் ” என்று எதை சித்தத்துள் வைத்து கேட்டாலும் , யோசிக்காமல் மறுத்துவிடுகின்ற மனப்பாங்கினை உருவாக்கி கொள்ளும் தன்மையை சாப்பாடு என்ற ஒற்றை பரிமாண சொல் உருவாக்கி கொள்கின்றது. சாலைவழியாக நடந்தோ வாகனத்திலோ செல்லும் போது சாலை ஓரங்களிலிலும் சமிஞ்சைகளில் வாகன அருகிலும் வந்து ” பசிக்குது அய்யா /அம்மா சாப்பாடு வாங்க காசு தாங்கோ ? ” என்று கேட்டு நிற்கும் ஒரு ஏழைப்பெண்ணின் வாயிலிருந்து வரும் சாப்பாடு எம்காதுகளுடன் முடியக்கூடிய பரிமாணத்தை மீறி சில அர்த்தப்படுத்தல்களுக்கு உள்வாங்கப்படுகிறது.உடனே ஐந்தோ பத்தோ எடுத்து கொடுக்கின்ற செயலை உந்தப்படுத்தும் தன்மையை இந்த சாப்பாடு என்ற சொல் ஏற்படுத்துகின்றது என்றால் அச்சொல் பொருள் என்ற இரண்டாம் பரிமாணத்தை எட்டுகிறது.
வெளியில் எத்தனை வேலைப்பளுவுடனும் , மனத்திலோ மூளையிலோ சிந்திக்க இடம் இல்லாமல் – பேச்சளவில் இடம் இல்லை என்கிறோம் , அலைவுறும் போதும் சிந்தனையும் செயலும் மிகக் கடினமான ஒன்றை நோக்கி செல்லுகின்ற போதும் வேறு எத்தனையோ ஆழமான செயல்களின் போதும் தொலைபேசி அழைப்பிலிருந்து அம்மா , ” தம்பி சாப்பிட்டியா ?” என்று கூறுகின்ற போது அத்துனை வேலையும் சோர்வும் தொலைந்து போய் வயிறு பசிக்கான தூண்டுதல்களை மும்முரப்படுத்திக்கொள்ளும். பசிக்கும் , சாப்பாடு என்ற சொல் மூன்றாம் பரிமாணம் பெறுகின்றது. சொல் , பொருள் என்பதை மீறி உணர்வு என்ற நிலையை அடையும் போதே அச்சொல் வெற்றி பெற்றதாகின்றது. உறவினர் வீட்டம்மா , ஏழைப்பெண் என்ற இருவரும் தத்தம் பிள்ளைகளுக்கு அம்மா என்ற இஸ்தானத்தில் இருந்து அதே சொல்லை உச்சரிக்கும் போது அச்சொல் அவர்கள் பிள்ளைகளுக்கு மூன்றாம் பரிமாணத்தில் ஒலிக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டீரோ ?
பாரதியின் இந்த நவீனங்கள் – பெரும் தரப்பு விஞ்ஞானத்தை கருத்தாக்கினாலும் , சொல்லின் பரிமாணங்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.ஏன் என்றால் எந்த ஆண் கூறும் சாப்பாடு என்ற சொல்லும் சொல் என்ற பரிமாணத்தை தாண்டி செல்வதே இல்லையே, அப்பொழுது நங்கை கூறும் நவீனம் தானே சொற்கள்.
இன்று மன அமைதி தேடி ஆலயங்களையும் ஆச்சிரமங்களையும் தியான யோகா வகுப்புக்களை நுகர்கின்ற மானிடர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.சரி, உரிய இடங்களை அடைந்து விடுப்பவர்களின் மனங்களில் மன அமைதி குடிகொண்டு அவர்களின் வாழ்வு மாறிவிடுகிறதா? அங்கு செல்பவர்களின் பலர் தம்மைப்போலும் இவ்வளவு மானிடரா என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர். இந்த அற்ப சந்தோசத்தில் மன அமைதி கிடைத்து விடப்பபோவதில்லை.எல்லாம் வல்ல பரம்பொருளை அடைந்தால் அவரின் அடிகளில் சரண் அடைந்தால் இந்த மன அமைதி கிடைத்து விடும் என்று காலகாலமாக கூறுகின்றார்கள்.அப்பிடி இருந்தும் ஏன் மிக சிலரை தவிர பெரும்பாண்மையானோர் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்கள்?
இதெற்கெல்லாம் ஒரே பதில் அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவில்லை என்பதேயாகும். மன அமைதி என்ற தீபத்தில் கலக்க வேண்டுமானால் அந்த ஒளி எங்கள் சரீரங்களிலும் வீசவேண்டுமானால் அறம் என்ற தயார்படுத்தல் தேவைப்படுகின்றது.எம்மை சுற்றி விழிபார் தூரத்துக்கு எல்லாரும் ஆழ்ந்து தியானத்தில் இருந்தாலும் அறம் செய்யா மனம் ஊசலாடும் தளர்வுறும். அடுத்தவன் தவத்தையும் சுரண்டும்.
இன்றைய உலகின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்றபடி வறியவர்கள் வளர்ச்சியும் (எண்ணிக்கையில்) சலிக்காமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒப்பிட்ட அளவில் உலகின் சனத்தொகை பெருக்கத்தை உலக உணவு உற்பத்தியால் ஈடுசெய்ய முடியாமலே இருக்கின்றது. இதனால் வறியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு வறியவர்கள் வாழ்வாதாரம் இன்னும் பின் தயங்கியவாறே செல்கிறது. ஒரு பக்கமாக ஏழ்மையினால் இறப்புகள் அதிகரித்து செல்வதோடு மறுபக்கம் ஏழ்மையையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக குற்றங்களில் ஈடுபடுகின்ற தன்மை அதிகரித்து செல்கின்றது.
இந்த வறிய சமூக மக்களின் தேவைக்கும் சாதாரண அல்லது மேம்பட்ட (பொருளாதாரத்தில்) மக்களின் தேவைக்குமான உறவும் தேவைகளின் நிவர்த்தியும் அறத்தினில் தங்கியுள்ளது. பாரினில் உள்ள அறங்களிலேயே மேலான அறம் பசிப்பிணி போக்கல் என்கிறது வளையாபதி. பசிப்பிணி போக்கல் என்ற மேலான அறம் இரு தட்டு மக்களின் வாழ்வாதார தேவைகளான உணவு , மன அமைதி என்ற இரண்டையும் நிவர்த்தி செய்கிறது.
“அற்றம் இல் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னு மாறே “
இன்று ஒரு மனிதன் தன் சமூகம் சார்ந்த பார்வையை எவ்வாறு செலுத்துகிறான் என்ற கேள்விக்கு வினோதமான பதில்களை அறியக்கூடியவாறு உள்ளது. அவனின் ஒற்றை எண்ணம் தன்னை தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். அதற்கான அவனின் ஏற்பாடுகள் மிக சுவாரஸ்யமானவை. வருங்காலம் என்ற எதிர்பார்ப்பிற்கு நிகழ்காலத்தை வெறுப்புடன் எதிர் கொள்கிறான். முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதற்கு வாலிபத்தை தொலைகிறான். மனிதனின் நாளாந்தம் மகிழ்ச்சிக்கான கஸ்டம் , அன்பிற்க்கான வெறுப்பு என்ற எதிரோட்ட எண்ணங்களால் நிரம்புகிறது.
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ……..
இந்த சமூகத்தில் இருக்கின்ற இப்படியான எண்ண அலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதர்களுக்குள் நானும் ஒருவன். எனது என்ற பெரும் ஏக்கம் என் ஆழ்மனத்துக்குள் படிந்துபோய் இருக்கிறது. அப்பிடியென்றால் எனது சமூகம் என்பதுவும் படிமமாகித்தானே இருக்க வேண்டும்? ஆம் அப்பிடியே தான் , படிமம் உண்டாகி இருக்கிற விதம் தான் கேள்விகளை உருவாக்குகின்றது. எனது சமூகத்தில் நான் யார்? என்னை எவ்வாறு எனது சமூகம் கருத்திக்கொள்கிறது? என்ற சிறு வட்டத்திற்கான கேள்விகளே எனது சமூகம் என்ற படிமத்தில் ஊறிப்போய் உள்ளது. இந்த அற்பமான தேடல்களுக்காக தன் வாலிபத்தையும் அதனை சுற்றி உள்ள இன்பங்களையும் தொலைத்து விட்டு வடுக்களை மட்டும் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு முதுமைக்கு பயணம் செய்கிறான். அலைந்து திரிந்து அனுபவங்களையும் தருணங்களையும் சேர்க்கவேண்டியவன் அவற்றை எல்லாம் அர்ப்பணித்து விட்டு அனுபவங்களை மீட்ட வேண்டிய பருவத்திற்கு வெறும் நிறைவுறா ஆசைகளுடன் சென்று அடைகிறான். ஈயைப்போல பறந்து தெரியவேண்டிய பருவத்தை தின்றுவிட்டு எறும்பை போல சிறு நிலப்பரப்புக்குள் வாழவேண்டிய காலத்துக்குள் அடங்கிப்போகிறான்.
இதையே கவிஞர் மஸோக்கா ஷிக்கி
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக் கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.
– மஸோக்கா ஷிக்கி
ஜப்பான் 1867-1902
ஜென் கவிதை .