நின் கைவசம் என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை  இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச்  சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.

மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக  வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து  மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து  நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித்  தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள்  நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப்  பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.

” வாறீங்களா?” என்றேன்.

“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன  கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.

ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,

” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”

முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என  நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன.  மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.

நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான  ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின்  கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த  பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.

” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “

எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது  கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம்.  எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது.  மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில்  மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன.  சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன்.  நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப்  பதிந்தன.

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனிதஉடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில்பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோபோவது
மாதிரிதோன்றுகிறது
உற்றுப்பார்த்தால்
யாருமில்லை

நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப  வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

” பேரிசையாய்க் கொட்டும் மழையில் யாரிவர்கள் நச்சரித்துக்கொண்டு ” நகுலன் தொடர்ந்தார், ” ஓரமாக எங்காவது போவோம், அமைதியான இடமொன்றிற்கு”

கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு  அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.

மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.

அந்தி மயங்கும் வேளை-
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது
அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி  இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.

சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.

மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று  நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச்  சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக்  கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.

சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “

மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”

“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்

எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை.  முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால்  எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது.  நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப்  பொறுக்கிச்  சேர்த்தேன்.

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச்சாகத்தான்
தெரியும்
நீஎன்னசொல்வாய்
என்றுஎனக்குத்தெரியும்
நீஎப்பொழுதும்
இப்படிச்
செத்துக்கொண்டிருக்கவேண்டும்
என்பதுதான்
என்விருப்பமும்
என்றாள்

வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று  பூனையின் திடீர்  கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த  நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,

” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,

சுசீலா
செத்துக் கிடந்தாள்
கழுகொன்று
அவள் முலையைக் கொத்திற்று
அவள் துவாரம்
நோக்கி எறும்புக் கூட்டம்.
பிணவாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான்;
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார்.

இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

குறிப்புகள். 

  1. நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
  2. இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.

விநோத நூலகத்தின் புதிர்வழிப் பாதைகள்

(01)

நீங்கள் யாராவது பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி இசையைக் கேட்டதுண்டா? ஒரு மணித்தியாலம் ஐந்து நிமிடங்கள் நீளக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளின் கலவை. கண்களை மூடிக்கொண்டு காதுகளால் பார்க்கவும் கேட்கவும் நுகரவும் உணரவும் கூடிய இசைத் துணுக்குகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கிறது. இது வரை பதினாறு  முறை கேட்டிருப்பேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது பதினேழாவது முறையாக – நீங்கள் வாசிக்கும் போது இருபதோ முப்பதோ என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நீண்ட கோர்வையான இசையின் நடுவில் – எதேச்சையான ஒரு இசைத்துணுக்கின்பால் இழுபட்டு, ஆழ்மனதினுள் புதைந்து வெளிச்சமே படாத ஞாபகங்களை மீட்டிக்கொண்டுவந்துவிடும். இதை அனுபவம் என்று சொல்லமாட்டேன்.  உணர்வு – நினைவுகளில் இருந்து அகன்று போய் ஆனால் இன்னமும் அழியாமல் இருக்கின்ற சம்பவங்களை மீட்டுவதை அனுபவம் என்று சொல்லவே மாட்டேன். வதை –  மறந்து போன ஞாபகம் ஒன்றைப் பற்றிய யோசனை மீண்டும் எழுவது எவ்வளவு கொடூரம். உணர்வு நிலைக்கும் வதை நிலைக்கும் இடையே ஒரு இசைத்துணுக்கினூடு பயணம் செய்வதை நான் அதிகம் விரும்புகிறேன். நீங்களும் விரும்புவீர்கள். இதனாலேயே பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உங்களையும் கேட்கச் சொல்கிறேன்.

பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியின் இடைநடுவே வார்த்தைகளும் வசனங்களும் சேர்ந்திசைகின்ற குரல் பின்னணிகளும் கேட்கும். ஜெர்மானிய கவிஞரான Schiller இயற்றிய Ode to Joy என்ற கவிதையும் பீதோவன் சேர்த்த வார்த்தைகளும் இசைப்பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும். வலிமை மிகுந்த இசையின் மேலாக வருகின்ற கவிதை – தனது தனித்த நிலையிலிருந்து மேலும் வலிமையாகின்றது.

Your magic binds again
What convention strictly divides;
All people become brothers,
Where your gentle wing abides. 1 – மெலிதாக எழுகின்ற இசைத்துணுக்குகளுக்கு இடையே வார்த்தைகள் கனமானதாக வெளிப்படுகின்றன.

ஏன் இசையையும் வார்த்தைகளையும் பற்றிய இவ்வளவு நுட்பமாக அவதானங்களைச்  சொல்லவேண்டிய தேவை எனக்கு ஏற்படுகின்றது என்ற சந்தேகத்தை நீங்கள் இன்னமும் என்னிடம் கேட்காமல் இருப்பது வியப்பளிக்கிறது. இப்போது கேட்கலாம்- ஆனால் அதற்கு முதல்,

(02)

இன்றைய சூழலில் இதுபோன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதில் பெரிய பிரயோசனம் ஒன்றும் இல்லை. இதைவிட அதிக வீச்சான, ஆழமான, புரியாத வார்த்தைகள் கணனி எங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு பெரும் எழுத்தாளரோ அல்லது பிரபலமான முகப்புத்தக  பதிவாளரோ தப்பித்தவறிக் கூட  ஓரிரு வசனங்கள் எழுதிவிட்டாலும் – எங்கிருந்தோ ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து, அவர்களின் வசனங்களிற்கு பெரும் பொழிப்பே உருவாக்கிவிடுவார்கள். இந்த அந்நியமான கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம்  இல்லாமல் ஒரு கலைவடிவத்தை ரசிக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியான எண்ணம் உங்களுக்குள் உருவாகிவிட்டாலே – இப்போதே இதைக் கடந்து பகுதி  03ற்கு செல்லுங்கள். இவை உங்களுக்கானவை அல்ல.

1966 களுடன் கொள்கையளவில் முடிந்துபோன வடிவம் Surrealism. இதைத் தமிழில் அடிமன வெளிப்பாட்டியம் என்கிறார்கள் (!). 1924 ஆம் ஆண்டு இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது கவிஞர் André Breton இனால் இவ்வடிவம் தலைமைதாங்கப்பட்டது.  இதை இவர் -“Psychic automatism in its pure state, by which one proposes to express…the actual functioning of thought…in the absence of any control exercised by reason, exempt from any aesthetic or moral concern.” 2 என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க – Surrealism என்பதை இவ்வாறு எளிதாக அடையாளப்படுத்துவோம் – கற்பனையின் அசல் வடிவம்.

நவீன (அதாவது அக்கால – 1924கள்) சமூகத்தின் பகுத்தறிவுக் கொள்கைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து- கடுமையான சட்டங்களுக்கு எதிராக வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாகவே Surrealism பரவத்தொடங்கியது. எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற கற்பனையின் வெளியில் தமக்கெதிரான அதிகாரத்தையும் கொள்கைகளையும் எதிர்த்துக்கொண்டிருந்தது Surrealism. ஓவியத்தில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கலைவடிவமாக பரவியது.

சிக்மன்ட் பிராய்ட் (Sigmund Freud)இன் படைப்புகள் சர்ரியலிஸ்ட்களின் மீது  ஆழமான செல்வாக்கை செலுத்தின. மிக முக்கியமாக அவரின் கனவுகளின் விளக்கம் The Interpretation of Dreams (1899) பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. பிராய்ட் கனவுகளின் முக்கியத்துவம் பற்றியும் – கனவுகள் நிஜமனிதர்களின் உணர்வுகளோடும் விருப்பங்களோடும் ஏற்படுத்துகின்ற வலிமையான பிணைப்புக்கள் பற்றியும் தெளிவாக விபரிக்கின்றார். இது சர்ரியலிஸ்ட்க்கு ஒரு நெறிப்படுத்தும் கையேடு போல மாறியது.

Existentialism மற்றும் individualism இன் வருகையினால் Surrealism நேரடிப்புழக்கத்திலிருந்து விடுபடத்தொடங்கியது.  பெயரளவில் மற்றைய சிந்தனைகள் Surrealismஇன் புழக்கத்தை மறைத்தாலும் – இன்னமும் இது கலைவடிவங்களில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

இலக்கியத்தில் இதன் வருகை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சர்ரியலிச இலக்கியத்தின் பொதுத்தன்மை என்று எதையும் வகைப்படுத்திவிட முடியாது. இருந்தும் பெரும்பாலான படைப்புகளில் கனவையும் நிஜத்தையும் இணைத்தார்கள். வாசகனால் ஊகிக்கமுடியாத பிரமிப்பூட்டத்தக்க உருவகங்களையும் கவிதை முறையில் கதை சொல்லுகின்ற பாணியையும் பின்பற்றினார்கள். கவிதை முறையில் கதை சொல்லும் போது, விரிந்த அழகியலுடன் கூடிய கனவு வெளியினை உருவாக்கிவிடலாம் என்றறிந்து பின்பற்றினார்கள்.

இலக்கிய வகுப்பு ஒன்றினை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புரிகின்றது. அதனால் அதிகம் இழுத்துக்கொண்டு போகாமல் உபபகுதிக்குள் போகலாம்.

(02 – இடைச்சொருகல்)

Goodreads  இணையதளம் தெரிவு செய்த சிறந்த எண்பத்து எட்டு சர்ரியலிச இலக்கிய படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 4

1.Kafka on the Shore -Haruki Murakami
3.The Wind-Up Bird Chronicle -Haruki Murakami
4.Metamorphosis and Other Stories -Franz Kafka
6.Hard-Boiled Wonderland and the End of the World – Haruki Murakami
12.1Q84 -Haruki Murakami
13.After Dark -Haruki Murakami
20.A Wild Sheep Chase (The Rat, #3) -Haruki Murakami
53.The Elephant Vanishes – Haruki Murakami

(02- முடிப்பு )

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கக்கூடும். ஏன் இலக்கிய வகுப்பு என்று. Surrealism என்ற இலக்கிய வடிவத்திற்கு உதாரணம் கூறச்சொன்னால் ஹருகி முரகாமியின் அனைத்துப் படைப்புகளையும் பட்டியலிட்டுவிடலாம். Surrealism என்ற இலக்கிய வடிவத்தின் உருவமாக ஹருகி முரகாமியின் நாவல்கள் இருக்கின்றன என்பதற்கு மேலுள்ள பட்டியலே சாட்சி. இருந்தும் பெரும்பாலான விமர்சகர்களும் விமர்சனங்களும் ஹருகி முரகாமியை Surrealism வடிவத்தினூடு ஒத்துப் பேசி பார்த்ததே இல்லை. ஏன்? ஒரு வடிவத்தின் தூண் மாதிரி இருக்கும் ஒரு எழுத்தாளர் – அவ்வடிவத்தின் மூலமாக விமர்சிக்கப்படாமை வருத்தமளிக்கிறது.  நூல்களோடு ஒப்பிடும் அளவும் – அதைத்தாண்டிய ஆழமான கலைவடிவத்தையும் சிருஷ்டிக்கின்ற ஹருகி முரகாமியின் குறுநாவல் ஒன்றைப்பற்றியே சொல்லப்போகிறேன். இது மேலுள்ள பட்டியலில் இல்லை. பட்டியல் மட்டும் அல்ல – தமிழ் இலக்கிய சூழலில் அதிகம் கவனம் பெறாத ஒன்று.

இனி வரும் அத்தியாயங்களில் நான் பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனி பற்றியோ அல்லது Surrealism பற்றியோ பேசப்போவதில்லை. ஆனால் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் இவையிரண்டும் மிகவும் ஆழமாக ஊடுருவிச் செல்லும்.

(03)

Novella எனப்படுகின்ற இலக்கிய பிரதி வடிவை தமிழில் குறுநாவல் என்றழைப்பார்கள். இரண்டு அல்லது மூன்று கதைக்கருக்களை மையமாக கொண்டதும் நீண்ட சிறுகதையாக அல்லது குறுகிய நாவலாக கருதத்தக்க வடிவம். குறுநாவல் வடிவத்தை பெரும்பாலும் எல்லையற்ற எழுத்துப்பாணியில் (Free style) எழுதுகின்றவர்களால் கையாளப்படுகின்றது.  ஹருகி முரகாமியின் வினோத நூலகமும் வடிவ வகைக்குள் குறுநாவலாகவே கருதப்படுகின்றது. இருந்தும், பிரதி பேசுகின்ற கருவின் அடிப்படையில் இதனை சிறுகதையாகவே கருதுகின்றேன். மேலை நாடுகளில் வினோத நூலகத்தை குறுநாவலாகப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் – ஆங்கிலத்திலோ மற்றைய மொழிகளிலோ அதிக படங்களுடன்  கூடிய புத்தகமாக வெளிவந்தது. தமிழ் மொழிபெயர்ப்பை ஜி. குப்புசாமி செய்திருக்கிறார். மிகவும் நேர்த்தியான மொழிபெயர்ப்பு. கதையின் உயிரோட்டமான மொழியினை பிசகு இல்லாமல் தமிழுக்கு மொழி பெயர்த்திருப்பார்.

வினோத நூலகத்தின் புத்தக வடிவமைப்பு கவனிக்கத்தக்க ஒன்று. சிறுகதையைப் போலவே நூற்பிரதியும் ஆச்சரியங்களும் புதிர்களும் நிரம்பியவை. நூலாக்கம் பொதுவான இலக்கியப் பிரதிகளைப் போல அல்லாமல் வித்தியாசமானதாகவும் பார்த்த மாத்திரத்தில் கவரக்கூடிய வகையிலும் ஆக்கப்பட்டுள்ளது. பிரதியின் ஆரம்பத்திலேயே நீள்பக்கமாக திறக்க வைக்கிறார். சமாந்தர பக்கங்களில் ஒரு பக்கம் எழுத்துப் பிரதியும் மற்றைய பக்கம் ஓவியங்களும் அச்சிடப்பட்டிருக்கும். எழுத்துருக்கள் வழமையான அளவிலும் சற்று அதிகமாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வருகின்ற ஓவியங்கள் கதையின் நீட்சியினை சொல்லிக்கொண்டு போகும். ஒரு பக்கத்தில் அரை நிலவும் தொடர்ந்து அரை டொனல்ட்டும் அதைத் தொடர்ந்து மிகுதி நிலவும் அச்சிடப்பட்டிருக்கும். பிரத்தியேகமான அட்டை வடிவமைப்பு. தமிழில் பூனைகள் நகரம் தொகுப்பில் வினோத உலகம் ஒளிந்துகொண்டிருக்கிருக்கிறது. பூனைகள் நகரம் ஜி. குப்புசாமியால் மொழி பெயர்க்கப்பட்ட முரகாமியின் சிறுகதைகளைக் கொண்ட புத்தகம்.

“……..முரகாமி இதற்குமுன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம்‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது……” 5

முரகாமியின் வினோத நூலகம் வெளிவந்த ஆரம்ப காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வெறுமனே ஒற்றைத் தளத்தில் நகர்வதாகவும் கனவுகள் கோர்வைகள் மட்டுமே எஞ்சுகின்றன  என்றும் இகழப்பட்டது. பின்னரான விரிவான வாசிப்பு – வினோத நூலகத்தின் பூட்டப்பட்ட கதவுகள் அனைத்தையும் திறந்தது; திறந்துகொண்டிருக்கின்றது. முதலாம் வாசிப்பின்போதே வினோத நூலகம்  என்னளவில்  சிறந்த படைப்பாக உணரப்பட்டது. வழமையாக குறைவான சொற்கள் வேகமான நடையை ஏற்படுத்தும். ஆனாலும்  குறைவான சொற்களினூடு மெதுவான உணர்வுப் பரிமாற்றத்தை முரகாமி ஏற்படுத்தக்கூடியவர்.

கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகர் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வினோத நூலகத்தை இன்றைய வாசகர்கள் பலவாறு திறந்து அணுகுகின்றார்கள். இன்னும் பலர் அதனை மிகவும் சாதாரணமாகவே – சாகசக் கதைகள் கேட்பது போல கடந்து போகின்றார்கள். Lewis Carroll எழுதிய Alice in Wonderland ஐ ஒட்டிய கனவுலகங்களை சிருஷ்டித்து எழுதியிருக்கிறார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது. 6 எது எவ்வாறாக இருந்தும் வினோத நூலகத்தை நெருங்கி வாசிப்பது அதிக சுவையைத் தரும். வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் வினோத நூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்கள் அனைத்தும் குறியீடாக கதையை நகர்த்திச் செல்கின்றன. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லமுடியாது. ஆழ்மன உணர்வுகளைத், தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்வதன்  மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆன தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் கூட இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளைக் கடத்துகின்ற பிரதியே. ஹருகி முரகாமியின் வினோத நூலகத்தை  அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.

வினோத நூலகம், ஒரு உணர்வின் வெவ்வேறு  பரிமாணங்களைப் பற்றிப் பேசுகின்றது. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய அல்லது ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டிய இன்னொரு அக உலகினை உருவாக்குகின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக் கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்களால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அல்லது செய்ய முடியாத அசாத்தியங்களின் தொகுப்பாக இருக்கும்.  அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லாக் கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதர்கள் உருவாக்கிக்கொள்வார்கள்.  இதையே உணர்வு ஒன்றின் வெவ்வேறான  பரிமாணங்கள் என்கிறேன். வினோத நூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின்  வெவ்வேறான  உணர்வுகளின்  பரிமாணங்கள் பற்றியது.

தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகத்தை வினோத நூலகம் என்றும் கருதலாம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது.

“நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.” 7

அதுவரை அவன் அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய உணர்வானது  அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாக்குகின்றது. அதையே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிக்கின்றார்.

அந்த அறையில் நடைபெறுகின்ற  ஒவ்வொரு நிகழ்வும் – மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.

“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.” 7

அவனைப் பிரிவு வதைக்கின்றது. மனதிலிருக்கின்ற பழைய உணர்ச்சிகள் உழல வைக்கின்றன. தனது தாய் அவனைத் தேடுவார் என்றும்; தனது கிளி தன்னைத் தேடும் என்றும்  ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுக் கொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவான உணர்ச்சி ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.

“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.” 7

“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?” 7

பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. ஆட்டுத் தலை மனிதரும் இளம்பெண்ணும். பின்னர் ஒரே பாத்திரமாகி-  அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறுகின்றன. இதை வாசகர்கள் மீது  மயக்கமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதாக  முரகாமி எழுதுகின்றார்.  இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன், குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள். கூடவே அவனது  சப்பாத்தும்.

இப்படியாகவும்  வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாக உணரலாம். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலகக் கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்கக் கூடிய கொடிய உணர்ச்சிகளும் கனவுகளும் மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூட்டிய  கனவாகவும்  முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் அல்லது இதைவிட அதிகமாகவும் – வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முரகாமி வடிவமைத்திருக்கிறார்.

“அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.” 7

“சென்ற செவ்வாய்க்கிழமை என் அம்மா இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.” 7

“அம்மா இல்லை.

செல்லக்குருவி இல்லை.

ஆட்டுமனிதன் இல்லை.

அந்தப் பெண் இல்லை.” 7

“பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னைச் சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.”
 

பல்வேறு அனுபவங்களை பிரதி முழுக்க முரகாமி விதைத்திருக்கிறார். வினோத நூலகம் பின் நவீனத்துவ படைப்புகளில் கவனிக்கப்படவேண்டிய படைப்பாகும்.
இப்போது நீங்கள் மெதுவாக பீதோவனின் ஒன்பதாம் சிம்பொனியை உணரத்தொடங்கியிருப்பீர்கள்.

You millions, I embrace you.
This kiss is for all the world! 1

பின்குறிப்புகள்.

  1. https://www.thoughtco.com/beethovens-ode-to-joy-lyrics-history-724410

 

  1. https://www.moma.org/learn/moma_learning/themes/surrealism

 

  1. https://www.goodreads.com/list/show/9755.Best_Surrealist_Literature

மேலும் முக்கியமாக கருதக்கூடிய – வாசிக்க பரிந்துரை செய்யக்கூடிய நூல்கள் . ( என்னால் வாசிக்கப்பட்டவையுள்)
The Trial -Franz Kafka
Story of the Eye -Georges Bataille
Surrealities -Bruce Boston

  1. இப்படியாக கட்டுரை ஒன்றினை எழுதுவதற்காக ஜி. குப்புசாமியிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தேன். அவற்றிலிருந்துதேவைக்கமைய எடுத்துக்கொண்டேன். அதன் முழு வடிவம்:

நான்  – முதல்முறையாக ‘வினோத நூலகம்‘ வாசித்த அனுபவம் எப்படியானது?

அவர் –முரகாமி இதற்கு முன் அவருடைய சில நாவல்களிலும் சிறுகதைகளிலும் மாய எதார்த்த வகைமையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் வினோத நூலகம் சிறுவர்களுக்கான ‘ சித்திரப் புத்தகம் ‘ என்ற பாவனையில் எழுதப்பட்ட ஒரு ‘அடல்ட்‘ நாவல். முரகாமியின் எழுத்தில் தென்கிழக்கு ஆசியாவின் உடலில் தென்னமெரிக்க உடை அணியப்பட்டிருப்பதாக வாசிப்பின்போது தோன்றியது.

நா  – வினோத நூலகம் முரகாமியின் பிற படைப்புகளைப் போல ஏன் அதிகம் பிரபலம் அடையவில்லை?

அ – அப்படிச் சொல்லமுடியாது. எழுத்தாளர் தரப்புக்கும் ஆங்கில பதிப்பாளர்களுக்கும் இடையில் எழுந்த சில வேறுபாடுகள் காரணமாக மூலத்தில் வெளிவந்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆங்கிலத்தில் வெளிவந்த குறுநாவல் இது. முரகாமியின் வழக்கமான பதிப்பாளர்கள் வெளியிடவில்லை. போதிய விளம்பரமும் அளிக்கப்படவில்லை. இவையனைத்தையும் மீறி வினோத நூலகம் பரவலாக வாசிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருவதாகவே நினைக்கிறேன்.

நா  – ஒரு மொழிபெயர்ப்பாளராக – சமகால உலக இலக்கியங்களில் அதிக ஈடுபாடும் வாசிப்பனுபவமும் உடையவராக – வினோத நூலகம் மற்றைய படைப்புகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

அ  – எல்லா எழுத்தாளர்களுமே தமது ஒவ்வொரு படைப்பும் முந்தைய படைப்புகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்றே விழைவார்கள். அந்தளவில் ஒவ்வொரு காத்திரமான படைப்பும் தன்னளவில் வேறுபட்டதாகவே இருக்கும். முரகாமியின் வாசகனுக்கு அவருடைய படைப்புலகத்தின் ஒவ்வொரு வழியும் அதன் திருப்பங்களும் புதிய அனுபவங்களைத் தருபவையே.

நா  – முரகாமிக்கும் இசைக்கும் அவரது படைப்புகளில் அதிகத் தொடர்பு எப்போதுமே இருக்கும். வினோத நூலகத்தின் கதையோட்டத்தில் அப்படி இசைக்குறிப்பு எதையாவது உணர்ந்தீர்களா ?

அ  – முரகாமிக்கு அமெரிக்க கலாச்சார அடையாளங்கள் மீது அதிகமான மனச்சாய்வு உண்டு. நவீன ஜப்பானிய தலைமுறையினரின் பிரதிநிதி அவர். கோபோ அபே, யாசுநாரி கவாபாதா போல முழுமையான பாரம்பரிய ஜப்பானிய கலாச்சார மனம் கொண்டவரல்ல. இதுவே அவரது பலமும் பலவீனமும். உள்ளூரில் பலவீனம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பலம். ஜாஸ் இசையின் மீதும் பேஸ் பால் விளையாட்டின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். அவருடைய பல புனைவுகளில் இவை பின்னணியாக அமைந்திருக்கின்றன. அவருக்கு இயல்பான அகத்தூண்டல் ஜாஸ் இசையிலிருந்துதான் கிடைப்பதாக ஒப்புகொண்டிருக்கிறார். இசைக்கும் அவருக்கும்  உள்ள இறுக்கமான பிணைப்பு குறித்து அவர் அளித்த மிக நீளமான நேர்காணல் Absolutely on music  என்ற நூலாகவே வந்துள்ளது. முரகாமியின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே ரூபின், முரகாமியின் எழுத்தில் உள்ள இசைத்தன்மை குறித்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளார். வினோத நூலகத்தில் இசை பற்றிய நேரடியான குறிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் உருவெளித்தோற்றமாக அறைச்சுவருக்குள் ஊடுருவி வரும் அந்தப் பெண் இசை வடிவமின்றி வேறென்ன ?

  1. https://www.npr.org/2014/12/02/363836249/watch-your-head-when-checking-out-murakamis-strange-library

 

  1. ஜி. குப்புசாமியின் வினோத நூலக மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

 

This slideshow requires JavaScript.

மீண்டும் சில குறிப்புகள்

நீண்ட நாட்களுக்குப்பிறகு இக்கட்டுரையினை வாசிக்கின்றேன். இலக்கியக் கோட்பாடுகளின்  மீது நிறைந்த நம்பிக்கை இருந்த நாட்களில் எழுதியவற்றை மிகுந்த கவனமெடுத்து வாசித்து, அதைப்பற்றி உரையாடி பிரசுரிக்கவும் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் இருவருக்கும் நன்றிகள். பின்னொரு நாளில் வெண்பளிங்கு மாளிகைக்குள் பிணைக்கப்பட்டிருந்த கல்குதிரைகளுக்குள் இப்புனைவினைப் பார்த்தேன். கட்டுரையின் எப்பகுதியிலும் கல்குதிரை பற்றி குறிப்பிடாதது என் அறியாமை. இப்புனைவின் முதலுருவம் கல்குதிரை. நானறிந்து தகவல்கள், ஒற்றுப்பிழைகள், எழுத்துப்பிழைகள் பார்த்த முகமறியா யாழினிக்கு நன்றிகள்.

சில திருத்தங்கள்

Surrealism தொடர்பான வரைவிலக்கணம் ஒன்று ஜெயமோகனால் கொடுக்கப்பட்டதாக இந்தக் கட்டுரையில் மின், அச்சுவடிவம் இரண்டிலும் பிரசுரமாகியிருந்தது. பிரக்ஞையுடன் அதை அழிக்கிறேன்.

“ஒழுங்குபடுத்தலின் வன்முறை” – உரையாடல்களின் அவசியம்

ஆறாவது புதிய சொல்லில் அருண்மொழிவர்மன் எழுதிய “ஒழுங்குபடுத்தலின் வன்முறை” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, ஏழாவது புதிய சொல்லில் எனது கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சமகால சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தலின் வன்முறை பற்றிய உரையாடல்கள் அவசியப்படுகின்றன. பொதுஜனங்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் பரவலாக்கப்படவேண்டும். எட்டாவது புதிய சொல் வருகை தந்த நிலையிலும் பொதுவெளி உரையாடல்கள் எதுவும் இடம்பெறாமை வருத்தமளிக்கிறது.
அருண்மொழிவர்மனின் ” ஒழுங்குபடுத்தலின் வன்முறை ” யை வாசிக்க
'Good morning.  I'm Mr Elton.  Your teacher-security guard.'
புதிய சொல் 07 இல் வெளிவந்த எனது கருத்துக்கள்
இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கும் அதன் தவறிய பாதைக்கும் காரணமான சமூக கலாசாரம் ஒன்றின் மீதான கேள்வி எழுப்பப்படுகின்ற போது தான் மனிதனின் உயிர்ப்பு உறுதிசெய்யப்படுகின்றது. மாற்றத்தின் தேவை உணரப்படும் இன்னும் முன்னேற்றமே இல்லாத துர்ப்பாக்கிய அரசியல் அமைப்புக்குள் இருக்கின்ற நாம், எமது தேவையினை உணர்த்துகின்ற போது  அது சமூகத்தில் விழிப்படையும். சமூகத்தின் அமைப்பில் கேட்கப்படவேண்டிய கேள்விகள் பல கேட்கப்படாமலே அமர்ந்து போவதனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு பாதிக்கப்படுபவர்களுக்கு கூட கிடைப்பதில்லை. இதை பற்றிய பேச்சுக்கள் சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்படவேண்டும். அது வாதிக்கப்படவேண்டும். அது பற்றிய பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் முன் கொண்டுவரப்பட்டு ஆராயப்படவேண்டும். இவை எல்லாம் எச்சமூகத்தில் பொறுப்பாக நடைபெறுகின்றதோ அச்சமூகம் முன்னேற்றமடைந்த சமூகமாக மாறுகின்றது.
ஒழுங்குபடுத்தலின் வன்முறை என்ற அருண்மொழிவர்மனின் கட்டுரையும் அதற்கான  அழைப்பே. ஒரு மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பாடசாலை என்பதன் பங்கு முக்கியமானது. மனிதனின் மூளை வளர்ச்சியின் பெரும்பாண்மைக்காலம் பாடசாலைக்காலம். இதனால், பாடசாலைகளில் மாணவர் எவ்வாறு வழிநடத்தப்படுகிறாரோ அதுவே சமூகத்தின் அமைப்பாகப்போகின்றது. இலங்கையில் இன்றைய பாடசாலைக் கல்வி முறை பற்றிய விவாதம் இன்று அவசியமாகிப்போய்க்கொண்டிருக்கின்றது. இன்று முன்னேறிய உலக நாடுகளில் இருக்கின்ற கல்வி முறைமையிலிருந்து நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கின்றோம். அதனாலேயே சமூக பொருளாதார அடிப்படையிலும் பின்தங்குகின்றோம். இது அடிப்படைப் பிரச்சனையாகும். ஆசிரிய மாணவர் உறவு பற்றியே அவரின் கட்டுரை ஆராய்கிறது. பாடசாலையின் நடவடிக்கைகளில் அதிகமானவை ஆசிரிய மாணவ உறவினாலேயே முன்நகர்த்தப்படுகின்றது.
இன்றைய ஆசிரியர்களின் போக்கு, அவர் குறிப்பிடுகின்ற ஆசிரியர்களின் போக்கிலிருந்து வித்தியாசமானது. உடலியல் தாக்குதல்களைக் குறைத்து உளவியல் தாக்குதல்களை ஏற்படுத்தும் இழிவான முன்னேற்றம் இன்றைய ஆசிரியர் சமூகம் அடைந்துள்ளது. உடலளவில் ஒருவனை பலவீனப்படுத்துவதை விட மனதளவில் பலவீனப்படுத்துதல் அதிக கொடூரமானது என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய ஆசிரியர்கள் இயங்குகிறார்கள். இதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தவில்லை. பத்தில் ஒன்றாக இருக்கின்ற களைகள் மொத்த பயிரையே நாசம் செய்வது போல. ஒரு ஆசிரியரின் தொழில் இயலாமை நிலை மாணவனைத் தூண்டி இயங்க வைப்பது தான். பல இடங்களில் இயலாமை நிலை  மாணவன் இன்னும் இன்னும் பின்தங்கிப்போதல் சாதாரணமாகிப் போகின்றது. மாணவருக்கு ஆசிரியர் மேல் வெறுப்பும் : அதுவே பின்னர் பாடத்தின் மீதான வெறுப்பாகவும் : தொடர்ந்து பாடசாலை, கல்வி , சமூகம் என்று தன்னை வெறுக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். அருண்மொழிவர்மன் கூறிய உடலியல் தாக்குதல்கள் செய்யமுடியாத கொடூரத்தை மனதளவிலான தாக்குதல்கள் செய்கின்றன. ஆசிரியர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்கள் தம்மைப் புகழ்கின்ற தமக்கு பின்னர் வால் பிடிக்கின்ற மாணவர்களை ஆதரித்து தனித்து சிந்திக்கின்ற மாணவனை அளவுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்லிச் சிரிப்பதை நேரடியாகவே கண்டிருக்கிறேன். பாட நடுவில் எழும்பி கல்விகளை சரியானமுறையில் மாணவர்கள் கேட்கும் போது, ஆசிரியருக்கு அதற்கான பதில் தெரியாதவிடத்து அவனை அவமானப்படுத்தி தன்னை நியாயப் படுத்துகின்ற ஆசிரியர்கள் இன்னும் மறையவில்லை. இன்று பிரம்பின் பாவனை குறைந்திருந்தாலும் சொற்களின் பாவனை அதிகமாகி விட்டன. குடும்ப பின்னணியை வைத்து மாணவனை பேசுதல், ஆசிரியருக்கு பிடித்தமான இன்னொரு மாணவனுடன் ஒப்பீடு செய்து பேசுதல், வகுப்பின் நாசுக்காக இழிதல், வகுப்பிலிருந்து ஒதுக்கிவைத்தல், பொதுத் தண்டனைப் பாகுபாடு என்பன அவர்களின் செயல்களில் சில. அதை விட ஒரு நிகழ்ச்சிக்கோ போட்டிக்கோ போகின்ற போது ஆசிரியப் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை மிக அபத்தமானது. இது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகியது  என்று தெரியவில்லை. இதனால் எத்தனையோ மாணவர்களின் திறமை வளர்க்கப்படாமலே அழிந்து போயிருக்கின்றது. இந்த சமூகத்தின் பார்வையில் ஒவ்வாதவன் ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு ஆசிரியரின் கையிலிருந்து நழுவி விழுந்தவனாகவே இருக்கின்றான். ஆசிரியர்களின் பிடி உறுதியானதாயின் அவ்வாறான நழுவல்கள் ஏற்படாது: அல்லது குறையும்.
9877339_orig
(கோட்டுச் சித்திரம் – http://assessingteachers.weebly.com/assessment-by-students.html)
அடிமைகளை உருவாக்குதல், அவற்றை பயன்படுத்திக்கொள்ளல்-ஆதிக்க மனநிலை என்பதன் அடிப்படை எண்ணக்கரு பாடசாலைகளிலேயே இன்றைய நாட்களில் விதைக்கப்படுகின்றன. பாடசாலைகள் போராட்ட குணமுள்ள மாணவர்களின் வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது. ஆசிரிய மாணவர் இடைவெளி என்பது ஆதிக்க சக்தியின் இடைவெளியாக கருத்தப்படுகின்றதே ஒழிய அறிதலுக்கானதும் அறியாமையின் தேடலுக்கானதுமான இடைவெளியாக உணரப்படவே இல்லை. இந்த இடைவெளியால் உருவாகின்ற மந்தைத் தனமே பல்கலைக்கழகத்திலும் தொடரப்படுகின்றது. சிந்தனைக்கான திறவுகோல் இயலாமை உணரப்படும்போதே திறக்கப்படுகிறது.
ஒழுங்கு படுத்தலின் வன்முறை நீண்ட விவாதம் ஒன்றின் தொடகப்பொருளாக்கப்படுகின்றது. இது ஒரு விவாதமாக மட்டும் அன்றி சமுகத்தில் தாக்கம் ஒன்றினையும் இதற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப் படவேண்டும்.
(முகப்பு ஓவியம் – https://www.aft.org/ae/fall2015/blank_villarreal)