கண்ணீர் ஊட்டப்ப இரவுகள்

ஒரு முழுமையான கட்டுரையினை – மொழித் தொடர்ச்சியினை எழுதுவதற்கு வேலைகளும் சூழ்நிலைகளும் ஒத்துழைக்காததன் பொருட்டு குறிப்புகளாக நாவலைப் பற்றி உங்களோடு உரையாடிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மனிதர்களோடு மிகவும் குறைவாக தொடர்பாடலிருக்கும் மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், உண்மைகள் போன்றவற்றோடு என்னையும் அடையாளப்படுத்திக்கொள்வதால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை. அடையாளங்கள் என்ற சொல்லோடும் கசார்களின் அகராதி மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. பெருங்கடலை சுருட்டி ஒரு நூற்பைக்குள் நழுவ விட்டது போன்ற இந்நாவலை என் ஒழுங்கற்ற – நிச்சயமற்ற – அவதியான குறிப்புகளின் மூலம் உங்கள் கோப்பைகளுக்குள் நிறைப்பதையிட்டு கவலையடைகிறேன். இதற்கு முதல் இதே போன்ற ஒரு உரையாடலில் நோர்வேர்ஜியன் வூட் பற்றிய கட்டுரையை வாசித்தபோது இருந்த எனக்கும் இன்று கசார்களின் அகராதி பற்றிய முறையற்ற திருட்டுச்சாவிகளோடு கைநடுங்க இருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. கேள்விகள். வயதும் அனுபவமும் அதிகரிக்க அதிகரிக்க கேள்விகளுக்கான பதில்கள் பெறப்படும் என்று நம்பினேன். வயதாவதை பதில்களுக்காக இனிமையாக ஏற்றுக்கொள்ளத்தொடங்கினேன். ஆனால் நடந்தது வேறொன்று. நாட்களோடு கேள்விகள் இன்னமும் சிக்கலாயின. வாழ்க்கை அந்நியமாகத் தொடங்கியது. சரியாகச் சொல்லப்போனால் வாழ்க்கை அந்நியமாகிக்கொண்டிருக்க கேள்விகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. முன்னைய உரையாடலைப்போல என்னுடைய கேள்விகளை உங்களிடம் பரப்பும் தவறை இம்முறை செய்யாதிருப்பேன் என்றே நம்புகிறேன். கசார்களுக்கு மதங்கள் துரோகமிழைத்ததைப் போலல்லாமல் நேர்மையோடு நடந்துகொள்ள முயல்கிறேன். என்னை மீறியும் அவை உருப்பெரும் எனில் அது கசார் காகனின் அழகிய மனைவியான – கசார் அகராதியின் பெண்பிரதியை தொகுத்த அதேக்கு உண்டான அதே காலத்தின் நிழல் என்னையும் தொடர்கிறது என்பதையும் தெரியப்படுத்துகிறேன்.

வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் மனிதன்

இது ஆண்பிரதி என்பதால் நிர்வாணமாக ஒரு ஆணை வரைவதில் மிலோராத் பாவிச்ற்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்காது என்ற வகையிலேயே மனிதன் என்ற ஆண்பாலை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இன்னொரு வகையான சிந்தனையும் என் மூளைக்குள் சுற்றுகிறது. ஒரு முகம் என்று சொல்லி வட்டத்தைக் கீறிக் காட்டும் போது, ஒரு ஆண் அதை ஆணின் முகமாகவா பெண்ணின் முகமாக உணர்ந்து கொள்வான். அதே வட்டத்தை ஒரு பெண்ணிடம் காட்டும் போது. அல்லது பால்புதுமையினர் அதைப் பார்க்கும் போது. வெற்றுப்பக்கத்தில் கால்களையும் கைகளையும் விரித்து நிற்கும் உருவம் எனக்கு மனிதனாகவே தென்பட்டது. தோராயமாக மீன்களும் யாழிசைப்பவரும் உயிரை உடலாய்க் கொண்டவன் தலையிருந்து செம்மறியாடும் அதனுடலில் பரவியிருக்கும் ரோமமும் அவனின் உடலிலிருந்து தான் இவ்வுலகமும் உயிர்களும் வாழ்க்கையும் விரிகிறது என்பதை எனக்கு உணர்த்தியது. அவன் ஒரு நிறைவான மனிதனாகவே அல்லது குறைகளின் மொத்த உருவமாகவோ தோன்றவில்லை. ஒன்றோடு ஒன்று கலந்த கலப்புலோகம் போல தூய மினுமினுப்பை தரக்கூடிய கலவையாக நிற்கிறான். இவ்வுருவம் ஆண்கள் ஆனது என்றாலும் அவனின் சமச்சீரில் டாவின்சியின் வெறுமையின் பாழ் நிலத்தில் பெண்ணின் உருவம் ஒடுங்கியிருக்கிறது. அவளின் மறைவும் பதுமையும் நாவலின் மீது வெறுப்பை ஏற்படுத்திடுகிறது. பிரமாண்டமான ஆண் உடலின் நடுவில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணின் மௌனத்திலிருந்து நாவலை உள்வாங்கிக்கொள்கிறேன். ஆண்களாகிக்கொண்டிருக்கும் வரலாற்று உருவங்களுக்குள் என்றைக்கும் மறைந்திருக்கும் மூதாட்டி ஒருத்தியின் முகச்சாயலை இவ்வுயிர்களாலான உடலின் உச்சியில் காண்கிறேன். இவ்வுடலில் பரந்து நிற்கும் நட்சத்திர கூட்டங்களை அவெர்கி ஸ்கீலா கவர்ந்து வந்த ராசிகளை ஞாபகப்படுத்துகின்றன.

கசார்களின் அகராதி மூன்று புத்தகங்களாலானது. ஒன்றிலிருந்து ஒன்று வளர்ச்சியடையும் தரவுகளுடன், முரண்படும் கதைகளுடன், ஆவணங்களுடன், மொழியின் பிரமாண்டமான உடலுடன் விரிந்துகொண்டிருக்கும். நிறங்களான புத்தங்களின் மீது ஊற்றப்பட்ட மதம் என்னும் மை, பஞ்சொன்றினூடாக இரத்தம் கசிந்து ஊடுருவதைப்போல ஒவ்வொரு பக்கங்களிலும் கசிந்து கசார்களை திரிபுபடுத்துகின்றது. வரலாற்றில் தமக்கென உறுதியான ஆவணங்கள் ஏதுமற்ற அவர்களின் வாழ்நிலமும் பண்பாடும் ஒவ்வொரு முகமூடிகளையோடு அணுகப்படுகிறது. ஒன்றில் கண்கள் தெரிகின்றன. இன்னொன்றில் காதுகள், இன்னொன்றில் கழுத்து. மூன்று புத்தங்களிலும் ஒரே நபர் வெவ்வேறு பெயர்களோடு வந்து போகிறார். அதே போல வெவ்வேறு நபர்கள் ஒரே பெயரோடு வந்து போவதையும் உணர முடிகிறது. இந்நாவலைத் திறக்க சிவப்புப் புத்தகத்தில் மரித்துப்போன முனைவர் இசைலோ சூக்கின் தங்கக் கைபிடி கொண்ட சிறியதொரு சாவி தேவைப்படுகிறது. எல்லாச்சாவிகளைப்போலவும் திறப்பு அதன் அடியில் இல்லை, கைப்பிடியில் தானிருக்கிறது. திறப்பு “தே” என்ற எழுத்து. அது அதே யின் இறுதி எழுத்து. நாவல் அதேயிலிருந்து தொடங்கினாலும் வாசிக்கத்தொடங்கிய எனக்கு அது உவப்பாக இல்லை. ஆனால் ஒரு அகராதி அ வில் தொடங்குவதைத்தவிர வேறு வழியில்லை.

சஷெங்காவின் தாயும் கலீனாவும் மகிழ்ச்சியை நெடுநாள் ஞாபகங்களில் பாதுகாக்க துயரத்தை அழைத்துக்கொள்வது பற்றிய குறிப்புகள்.

” யாருக்காவது ஏதேனும் நல்லது நடந்தால் – அதை பெத்குதினுக்கு விளக்கினாள் – அது எப்போதும் கொஞ்சம் துக்கத்தோடு கலந்திருக்க வேண்டும். அப்போதுதான் அக்கணம் நன்றாக நினைவிலிருக்கும். ஒருவர் மகிழ்ச்சியான தருணங்களை விட மகிழ்ச்சியற்ற தருணங்களையே எப்போதும் அதிகநாள்கள் நினைவில் வைத்திருக்கிறார்.. ” (பக்கம் 63)

மகிழ்ச்சியான தருணங்களின் மீது கோபத்தின் நிழல் விழுந்து நாட்களைக் கரியாக்கியது. ஒரு பொறியாய்த் தோன்றும் கோபம் பெருங்காடு முழுதும் பற்ற வண்ணத்திகள் நெருப்பில் உழன்றன. பொறி எப்போதும் பொறியாயேயிருக்கிறது. தணலை அது ஒருகாலமும் உணர்ந்ததில்லை, ஏனெனில் அது பொறி. பனிக்கு குளிரும் தணலுக்கு சூடும் உறைப்பதில்லை. அதன் குணமும் உடலும் பொறி தான். ஆனால் இந்நாவலில் யாரும் கோபக்காரர்களாக இல்லை. எல்லோரும் ஏமாளிகளாவே தெரிகின்றனர். அவர்களின் செயல்களே அவர்களை ஏமாற்றுகிறது. அவர்களின் நம்பிக்கைகள் மரணத்திற்குள் தள்ளுகின்றன. மனிதர்கள் தோன்றுவதும் நீண்ட நேரம் கனவு காண்பதும் பின்னர் கனவுகளால் மரணித்ததுபோவதும் சோர்ந்துவிடாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. ” ஒவ்வொரு தலைவனும் தன் சொந்த இறப்பைத் தழுவிக்கொள்வான்” (பக்கம் 73) அதனால் இதை ஏமாளிகளின் பிரதி என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு வகையில் நம் எல்லோரது வாழ்க்கையும் இந்தச் சுழற்சிக்குள் அகப்பட்டதைப்போலவே தோன்றுகிறது. குறைந்தபட்சம் என் வாழ்க்கையாவது. ஒவ்வொரு பக்கமாக நகர நகர தன்னை நிறமாற்றிக்கொள்ளும் ஒக்ட்டோபஸ் போல இசைக் கொற்றர்கள் நிறுத்திய பாறையுப்புக்கற்களின் மீது உரசியும் பற்றியும் நீளமான புரிதலுக்கும் விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட இசையாக நீண்டுகொண்டிருக்கிறது நாவல். பின்னைய பக்கம் ஒவ்வொன்றும் முன்னைய பக்கத்தைத் தின்று செரித்து வளர்கிறது. முதற்பக்கம் ஒரு நிகழ்த்துகை என்றால் அதைக் கொன்று இரண்டாம் பக்கம் இன்னொரு நிகழ்த்தலைச் செய்கிறது. இதுவும் புரிதலோடு துன்பத்தை ஏற்படுத்திக்கொள்ளும் சஷெங்காவின் தாய் மற்றும் கலீனாவைப் போலவும் ஆயிரம் எத்தனமெடுத்தும் இன்பத்தோடு துன்பமும் சேர்ந்துகொள்வதை தடுக்கமுடியாத என்னைப்போவும் விசித்திரமாயிருக்கின்றன.

இன்மையின் முடிவற்ற சுழற்சியிலிருந்து உருப்பெற்ற நாங்கள் தரித்துக்கொள்ளும் சந்தோஷமும் துக்கமும் தங்க ஆபரணத்தைப்போல விலையுயர்ந்ததாயிருக்கிறது. அவற்றிக்காக எல்லாவற்றையும் பணயம் வைக்கிறோம். வாழ்க்கை பணயங்களால் ஆனது. சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை நாணயத்தின் இருபக்கங்கள் என்று சமத்துவம் சொல்லுபவர்களே, பிறகேன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே விலைக்கு – ஒரே பணயத்திற்குப் பெறமுடிவதில்லை. என் ஞாபகங்களில் நெடுநாள் சந்தோஷமும் துக்கமும் ஒன்றாகவே பிணைந்து கிடக்கின்றன. பாம்புகளும் ஓணான்களும் வண்ணத்திகளும் உருத்தெரியாமல் பிணைந்துகிடக்கும் ஞாபகங்களில் சந்தோசமெது துக்கமெதென்றே பிரித்துக் காணமுடியவில்லை.

கனவின் குழந்தைகள் மற்றும் கனவு வேட்டையர்கள் பற்றிய குறிப்புகள்.

கசார் காகன் கனவுகளுக்கு விளக்கம் கேட்கப் போய்தான் தன் கசார் இனைத்தையே துடைத்தழிகிறான். கனவுகள் விளக்கப்படவேண்டியவை அல்ல என்பதற்காகவே அவை கனவுகளாக மந்தமான மொழியில் நடந்தேறுகிறது. நாவல் முழுதும் கனவுகளும் விளக்கங்களும் நித்தியமாக பூத்தபடியே வருகின்றன. கசார்களின் துயரம் மிக எளிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து தொடங்குகிறது. “இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் கனவில் காணும் போது, ஒருவரின் கனவே மற்றவரின் யதாரமாகும் நிலையில் எப்போதும் கனவின் சிறு பகுதி எஞ்சும். இவை கனவின் குழந்தைகள்.” (பக்கம் 46)

இரவுக்காக பகலைக் கைவிட்ட அவ்ரம் ப்ராங்கோவிச் போலத்தான் நானும். உலகம் சுறுசுறுப்பாக தீமைகளையும் சூழ்ச்சிகளையும் வன்மங்களையும் கக்கிக்கொண்டிருக்கும் பகல் பொழுதை நெளியும் புழுவைப்போல் பார்க்கிறேன். எல்லாமும் கண்களுக்குத் தெரியும் அவலம். கண்களில் குற்றத்தோடும் முகம் முழுக்க சிரிப்போடு உடலைச் சலவை செய்து கொள்ளும் மனிதர்களின் வாசம் நிறைந்த காலத்தை கடப்பது பெருந்துயராயிருக்கிறது. இடக்கண்ணில் பொறாமையும் வலக்கண்ணின் சூழ்ச்சியும் நிறைந்தவர்களின் முன்னால் ஒரு நீர்த்துளியாய் ஆவியாகிறேன். கொடுஞ்சூட்டில் தகிக்கிறேன். ஆனால் இரவு அவ்வாறானததல்ல. எல்லா வன்மமும் நிறைந்த உலகத்தின் மீது கறுப்புத் திரையிடுகிறது. குற்றங்கள் பார்வைக்குதொலைவாக நடந்தேறுகிறது. எதுவும் புலன்களுக்குள் உணரப்படும் போது தான் குழப்பம். இதை தப்பித்தல் என்று எல்லோரும் நினைக்கலாம். உண்மையும் அது தான், பகலின் கொடூரக்கண்களில் இருந்து தப்பித்து இரவிடம் அடைகிறேன். விபத்திலிருந்தது தப்பித்த ஒருவரை அருள்நிறைந்தவராய்ப் பார்க்கும் மனிதர்கள் பகலிலிருந்து தப்பிப்பவர்களை அதே கண்கொண்டு பார்க்கத் தவறுகிறார்கள். அவ்ரம் ப்ராங்கோவிசிற்கு அந்தக் கவலையிருக்கவில்லை. அவருக்கு குரோஸ் பற்றியே நினைப்பிருந்தது. கசார்களைப் பற்றிய தேடலை தன் கனவில் வரும் குரோஷிற்காகவே நடத்தினார்.

அவ்ரம் ப்ராங்கோவிச் அடுத்தவர்களின் கண்ணீர் ஊட்டப்பட்டு இரவுகளில் அலைந்தார். பகலில் ஒரு மசியப் பூனைபோல சுருண்டு கிடந்தது கனவுகளைக் கண்டார். சாமுயேல் கோஹென் கனவுகளிலிருந்து பிரிந்த இறகுகள் அவரின் இரவுகளை வனைந்துகொண்டிருந்தன. பகலிலிருந்து தப்பிக்க எனக்கிருக்கும் ஒரே வழி உறக்கம் தான். மூன்று அல்லது நான்கு நீண்ட தூக்கங்களில் ஒரு பகலைக் கடந்துவிடலாம். என் நினைவிற்கு ஒரு போதும் அறிந்திராத பண்புகளின் கட்டமைப்புக்களை பயத்தால் தயக்கத்தால் தீண்டும் போது ஒளிந்திருக்கும் அற அமைப்புக்கள் தூண்டப்படுகின்றன. இது பாசியை விலக்கி தெரிந்த நீரை காண்பதைப்போன்றதொன்றாகும். ஆனால் நீரில் தெரிவது உண்மையா விம்பமா என்ற குழப்பம் எப்போதுமிருக்குமளவுற்கு தண்ணீர் தெளிந்திருக்கும். ஒரு விளையாட்டைப்போல ஒரு அரசாங்கத்தைப்போல மனிதர்களுக்கு தங்களைப்பற்றிய விதிகள் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை. மனிதர்கள் அதிக குழப்பமான – சிக்கலான இயங்குநிலையையும் சிந்தனைகளையும் கொண்டவர்கள். அவர்களின் இயக்கம் எதனால் வழிநடத்தப்படுகிறது என்பதையும் இதுகாலமும் கூறப்பட்டுவரும் கூட்டறிவு என்பது என்னவென்றும் அறிவார் யாருமில்லை. கூட்டறிவை உணர்தல் அல்லது தேடிக்கொள்வதை அறிவு எனக்கொண்டாலும் நிக்கோல்ஸ்கி கூறுவதைப்போல ” அறிவென்பது அழியக்கூடிய பண்டம்; நொடியில் புளித்துபோகக்கூடியது. எதிர்காலத்தைப்போலவே” (பக்கம் 372) என்பதை மறுக்கவும் முடியவில்லை. தோற்றத்தைப்போல உடற்தசைகளைப்போல வயதாகும் போது ஒருவருடைய அறிவும் அழிந்து போவதை உணர்கிறோம். ஞாபகங்களை மட்டுமல்ல திறன்களையும் கருத்தில் கொண்டே அறிவு அழிவடைகிறது என்கிறேன். இதே நேரத்தில் ஞானம்(wisdom) என்பதைப்பற்றியும் உரையாடவேண்டிய தேவையிருக்கிறது. அறிவும் ஞானமும் வெவ்வேறானவை. அறிவு பரிசோதிக்கத்தக்கது, ஞானம் உணரக்கூடியது. பிரச்சனை ஞானம் உண்டா இல்லையா என்பதிலில்லை. ஞானம் எல்லோருக்கும் ஒரேயளவில் இருக்கிறதா என்பது தான். யூதா ஹலேவி சொல்கிறார், ” ஒரே ஞானம் தான் உள்ளது. பிறபெஞ்சமெனும் கோளத்தில் விரவியிருக்கும் ஞானம் என்பது மீச்சிறு விலங்குகள் கொண்டிருக்கும் ஞானத்தினின்றும் பெரிதல்ல.” (பக்கம் 360) நாவல் தன் விரிந்த உடலால் கனவிலிருந்து ஞானத்தை கண்டடைய முயற்சிசெய்கிறது. துன்பங்களை விளங்கிக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்வதன் மூலம் ஞானத்தினை அடைய முயற்சிக்கிறது. கனவுகள் அவர்களின் செயல்களையும் விருப்பங்களையும் அவர்களால் உள்வாங்கப்பட்ட மற்றவர்களின் நடத்தைகளையும் மீளுருவாக்கம் செய்கிறன. இவை கனவுகளை வார்க்கின்றன. புலனுக்கு எட்டாத எதொன்றும் கனவாய் பரிணமிப்பதில்லை. கனவுகள் சுயபிரதிபலிப்பாக எண்ணங்களின் சேர்கையாக விரிவாக இன்னமும் எத்தனையோவாக உருவாகிறது. உணர்ச்சிகளின் மையத்திலிருந்து வெளிப்படும் யோசனைகளைத் தொடர்பவர்கள் கனவுகளைத் தொடர்பவர்கள். ஆனால் அந்தக் கனவுகளை மின்மினிப் பூச்சியொன்றை இரண்டு கைகளுக்குள் பொத்தி பிடிப்பது போல அள்ளி உடலெங்கும் ஊரவிட்டு ஹங்கேரியன் வாசித்த வயலின் இசையைப்போல உடலைச்சுருட்டி நத்தைச்சுரியமாக உருமாறுவதை கனவு வேட்டையர்கள் கற்றிருந்தார். தர்க்கங்களைத் தளர்த்தி உலகை விரிவடையச்செய்யும் பலம் வாய்ந்தவை கனவுகள். கனவு பிரச்சனைகளை மட்டுமல்ல, அவற்றுக்கான தீர்வுகளையும் தருகிறது. மிக மோசமாக, பகல்களைக் கடப்பதற்கு கனவுகள் தரும் தீர்வு நித்திரையாகவேயிருக்கிறது. தொடர்ச்சியாக கனவுகாண்பதால் கனவுகளையும் கனவுகள் அல்லாதவற்றையும் பிரித்தறிவது எனக்குச் சுலபமானதாகத்தெரியவில்லை.

கசார் காகனின் கனவில் தோன்றும் தேவதை ” படைத்தவர் உன் எண்ணங்களினால் மகிழ்வுற்றிருந்தாலும் உன் செயல்கள் குறித்து மகிழ்வுற்றிருக்கவில்லை.” (பக்கம் 101) என்கிறாள். இதே நேரத்தில் நாவலின் வேறொரு பகுதியில் தோன்றும் உண்மை – பொய் பற்றிய உரையாடலை தொலைத்த நான், நாவலை இரண்டு முறை புரட்டியும் விரால் மீன்களைப்போல அவையும் அகப்படாமலே போயின. கசார் காகனின் கனவிற்கு விளக்கமளிக்கும் கனவு வேட்டையரின் பதில் அபூர்வமானது. ” ஒரு தேவதை உங்கள் கனவில் வந்து அலைந்துகொண்டிருக்கின்றாள் என்றால் அதற்கு இரவில் செல்வதற்கு வேறு இடமில்லை என்றே அர்த்தம், அநேகமாக மழைபெய்திருக்கலாம்… ஏன் அது அதிக நேரம் உங்கள் கனவில் தாங்கவில்லை என்றால் உங்கள் கனவு அநேகமாக துர்நாற்றத்தைக் கொண்டிருக்கலாம். அடுத்த முறை உங்கள் கனவுகளை துவைத்துப்போடுங்கள்… ” (பக்கம் 101) காகனின் விதி அத்தனை எளிதானதல்ல. இந்நாவல் முழுவதும் ஒரு (உண்மையான)நீதிபதிக்குரிய கூர்மையான புத்தியை கொண்டு அணுகவேண்டும், மூன்று மதங்களும் சாதுரியமாக பகடையை சுழற்றி விடுகின்றன. எங்கேனும் ஏமாந்து உருட்டப்படுவோமானால் அவை தங்களின் மதங்களுக்கு வாசகரை மாற்றிவிடும் தந்திரம் உள்ளவை.

நாவலின் தொடங்கத்தில் தவறிழைக்கும் வாசகர் எப்போதும் நாவலின் இறுதியிருக்கும் துருப்புகளால் புலன்கள் தூண்டப்படாது போவார்.

நாவலின் இரண்டாம் புத்தகமான கசார் குறித்த இஸ்லாமிய ஆதாரங்கள் – பச்சைபுத்தகம் – வரும் வரை நிலத்திற்குள் விதைகளை புதைப்பதைப் போல தகவல்கள் நெருக்கமாவும் அயர்சியாகவும் சேர்ந்துகொண்டேயிருக்கும். அவ்ரம் ப்ராங்கோவிச் வாசிக்கும் போதே நாவல் தனது வேர்களை நிலத்தின் மீது ஆழமாக பதியவைப்பதாக உணரத்தொடங்கினேன், பின்னர் யூசுஃப் மசூதியிலும் மஞ்சள் புத்தகத்தின் சாமுயேல் கோஹெனிலும் வளர்ச்சி அடையத்தொடங்கியதும் எங்கோ விதைக்கப்பட்ட விதைக்களனைத்தும் உருப்பெற்று ஒரு பெருவிருட்சம் தோன்றியது. நான் முதன்முதலில் கசார்களின் அகராதியை வாசிக்கத்தொடங்கிய கருநீல இரவையும் அதற்குள் சிவப்பைப் பூசிக்கொண்டு வைத்தியசாலைக்கு விரையும் ஆம்புலன்லின் அவதியான ஒலியையும் ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அந்தக் காலை கைகளும் கால்களும் தோளும் சீவப்பட்டு மொட்டையாக அரிந்துவிடப்பட்ட முன் நிலத்துப் பலாவிற்காக வருத்தப்பட்டுக்கொண்டே நாவலைத் திறக்கும் போது காலம் சூன்யத்திற்குள் அகப்பட்டு எரிந்துகொண்டிருந்தது. எழுத்துக்களுக்கும் வசனங்களும் அவற்றின் இடைவெளிகளுக்கும் காலத்தை கவர்ந்து உள்ளீர்த்துக்கொள்ளும் வசீகரமிருக்கிறது. அது எழுத்துகளுக்கே மட்டுமான பண்பு, ஒரு காலப்பயணத்தை ஒத்தது அது. துர்நினைவிலிருந்து, அலைச்சல்படும் யோசனைகளிலிருந்து என்னை பாதுகாக்க – காலத்தைக் கரைக்க கசார்களின் அகராதியைத் திறந்த போது எனக்கான முதல் ஆச்சரியம் காத்திருந்தது.

” இப்புத்தகத்தை ஒருபோதும் திறக்காத வாசகன் இங்குதான் உறங்குகிறான். என்றைக்குமாக அவன் இங்கே மரணித்துள்ளான்.”

அதன் பின்னர் கசார்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூதப் பிடியில் அலைவதையும் மரணித்து மரணித்து உயிர்பெறுவதையும், மதங்களின் பிடிகளுக்குள் அவர்களின் ஆன்மா நசிந்து அழுவதையும் கேட்டபடியேயிருந்தேன். வெளிப்படையாக கசார்கள் மூன்று புத்தகத்திலும் மூன்று மதங்களுக்கு நிம்மதியாக மாறியிருந்தாலும் அவர்களின் ஆன்மா நிலையில்லாமல் அலைந்துகொண்டேயிருந்தது. மொகத்தசா அல் சஃபர் உடைத்த கசார் ஜாடியைப்போல அவர்களின் ஆன்மாவின் தேவை எப்போதும் உணரப்படவேயில்லை. அது இன்றுவரை அலைந்துகொடியிருக்கிறது. நாவலை வாசித்துக்கொண்டிருக்கும் வாசகர் கசார்களின் அலைச்சலின் கொடூரத்தை உணர்வார். முறையான வரலாற்றையும் பண்பாட்டையும் எழுத மறந்த இனம் ஒன்றின் ஆன்மா எத்தனை மோசமாக வரலாற்றில் அலைக்கழிக்கப்படுவதையும், தடமற்று புனைவுகளில் உருப்பெரும் ஆதாமின் உடலை மதங்களை குதறி எறிவதையும் உணர்வர். திசைகளேதும் தெரியாமல் குறிப்பில் என் வீட்டை நோக்கிப்பார்க்கிறேன். என்றைக்குமாக உருகுலைந்திருக்கும் அது, அரசமரத்தின் கீழ் நசுங்கிக்கொண்டிருக்கும் புழுக்களை உற்பத்திசெய்தபடியிருந்தது.

அதே கிளிகளுக்கு கசார் அகராதியை பயிற்றுவித்தாள். அக்கிளிகளிடம் ” செல்லுங்கள், உங்களிடத்தேயுள்ள கவிதைகளை மற்ற பறவைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்,ஏனெனில் வெகுவிரைவில் இங்கிதை அறிந்தவரென்று எவரும் இருக்கப்போவதில்லை. ” என்று சொல்லி கானகத்திற்குள் அனுப்பிவைக்கிறாள்.

நாவல் மூன்று புத்தகங்களோடு கசார்களை முடிவுக்குக்கொண்டவரவில்லை, பின்னிணைப்புகளில் நடுக்கமும் பதபதைப்பும் நிறைந்த சொற்கள் காத்திருந்தன. உப்புக்கற்களால் கட்டப்பட்ட விரிந்து செழித்த மாளிகையொன்றின் மீது மழை பெய்வதைப்போல சிறுக சிறுக நாவல் கரைந்து ஊற்றியது. இளைத்த எலி மாவு மூட்டையின் ஓட்டைக்குள் நுழைந்து தின்று மாட்டிக்கொண்டது போல(பக்கம் 119) பெற்றதை இழக்காவிட்டால் நாவலுக்கிலிருந்து எக்காலமும் வெளிவரவே முடியாது. பாவிச் சொல்லும் ஒரு போதும் திறக்காமை நாவலை வாசிப்பதிலில்லை, அதை துறப்பதிலேயேயிருக்கிறது.

ஆண்பிரதியை மூன்று பேர் தொகுக்க தனித்திருந்து பெண்பிரதியை தொகுத்திருக்கிறார் அதே. ஆண் பிரதியின் வாசிப்பும் பெண் பிரதியின் வாசிப்பும் எழுத்துக்களும் வசனங்களும் ஒன்றுபோலவேயிருந்தாலும் வாசிப்புகள் வித்தியாசமானவை என்பதை உணர முடிகிறது. 14 வரிகளால் மாறுபடக்கூடிய இரண்டு பிரதிகளும் நூறாயிரம் சொற்களைக்கொண்ட ஒரு நாவலின் வாசிப்பை மாற்றியமைத்துவிடுகிறது. இந்த வித்தியாசம் ஆண், பெண் பிரதிகள் என்று இருவேறாக பிரித்தமைக்கும் போதே ஏற்பட்டுவிடுகிறது. மிக நிச்சயமாக எல்லா வகையிலும் இரண்டு பிரதிகளும் ஒத்திருந்தாலும் வாசிப்புகள் வேறுபட்டிருக்கும். ஒரு துறவி தாவுப்மன்னூஸிற்கு ” நாம் படிக்கும்போது, எழுதப்பட்டுள்ள அத்தனையும் நம்மை வந்தடைவதில்லை. நம் சிந்தனைகள் பொறாமைமிக்கவை… ” என்று இவ்வாறு தொடர்கிறார் , ” நீயும் உன் தம்பியும் ஒரே புத்தகத்திலுள்ள ஒரே வரிகளை வாசிக்கப்போவதில்லை, ஏனெனின் எங்களுடைய புத்தகங்கள் ஆண் மற்றும் பெண் தன்மைச் சின்னங்களை உடையவை.” (பக்கம் 118)

சொல்லே தசையானது (பக்கம் 373)

இறுதியில் உண்மை – பொய் பற்றிய உரையாடலை நாவலுக்குள் கண்டடைந்திருக்கிறேன். நிகான் செவாஸ்ட் சொல்வதைப்போல, ” நிறங்களைக் குழைப்பது நானல்ல, உங்களின் பார்வைதான்.” (பக்கம் 131) நாவலுக்குள் முன்னொரு நாள் தொலைத்த உண்மை- பொய் பற்றிய உரையாடல் என்னால் இருப்பதாக நம்பட்ட ஒன்று என்றே எண்ணினேன். நாவலின் மூன்று நிறங்களையும் குழைப்பதிலிருந்து தோன்றிய இல்லாத ஒன்று என்னை நம்பச்செய்வது என் கடந்த காலம் ஆதாரமாயிருந்தது. எல்லாப் புனைவுகளிலும் எனக்கான அமைதியான நிலமொன்றை தெரிவுசெய்து என்னைச்சுற்றி நடக்கும் நடனத்தை ரசித்தபடியிருக்கிறேன். அவற்றின் சொற்களே என் தசையானது. உண்மையான சொற்களின் இசையில் அன்பு தாங்கப்படுகின்றது. “உண்மையான சொல் என்பது எப்போதும் பாம்பினால் சுற்றப்பட்ட மரத்திலுள்ள ஆப்பிளைப் போன்றது “(பக்கம் 235) எளிதில் வசப்படாது. சொற்களை அதன் இசையோடு மிழற்றுவது கிதாரை பதினோராம் விரல் கொண்டு வாசிப்பதைபோலாகும். அவை ஆற்றில் கிடக்கும் கூழாங்கற்கள் போல தன் மினுமினுப்பை எக்காலமும் இழக்காமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும். சாமுயேல் கோஹென் “எழுத்து மனிதச்செயல் அன்று” (பக்கம் 305) என்று எழுதுகிறார். நாவலின் உண்மையான சொற்கள் உண்மை – பொய் பற்றிய உரையாடலிலேயே தோன்றுகிறது. தோன்றிப் பின்னர் மறைந்துபோகிறது. ஒரு கிரகணம் போல. மதங்கள் – உண்மை – கசார்கள் மூன்றும் ஒரு நேர்கோட்டில் வரும், பின்னர் தங்கள் சுயரூபங்களோடு மறைந்து போகவோ, ஆட்சிசெய்யவோ தொடங்கும். உண்மையான கசார் அகராதியிலிருக்கும் உண்மை – பொய் பற்றிய பகுதி –

“உண்மை எப்போதும் ஒளியூடுருவக்கூடியது மற்றும் கவனிக்கப்படாதது, ஆனால் பொய் என்பது ஒளிபுகாத் தன்மையுடையது, அது ஒளியை அல்லது பார்வையைத் தனக்குள் அனுமதிப்பதில்லை. மூன்றாம் நிலையொன்றும் உள்ளது, அதில் இவ்விரண்டும் இணையும், அதுவே அதிகமும் வழக்கமான ஒன்று. ஒரு கண்ணால் நாம் உண்மையின் ஊடாகத் காண்கிறோம், அந்தப்பார்வை முடிவிலியில் எப்போதைக்குமாகத் தொலைகிறது; மறுகண்ணால் பொய்மையின் உள்ளே ஓர் அங்குலத்துக்குக்கூட நம்மால் காணமுடிவதில்லை, அப்பார்வை அதற்குமேல் துளைத்துச்செல்வதில்லை, ஆனால் இங்கேயே நம்முடையதாகத் தங்கிவிடுகிறது; இவ்வகையில் வாழ்க்கையை மேலும் குழப்பத்திற்குள் தள்ளுகிறோம். எனவே உண்மை என்பது பொய்யைப்போல அதனளவில் அறிந்துகொள்ளப்பட இயலாதது, ஆனால் பொய்யோடு ஒப்பிட்டுப் பார்த்து மட்டுமே அறியத்தக்கதாய் உள்ளது, நம் புத்தகத்தின் எழுத்துகளை அதற்கு இடையே உள்ள வெள்ளை வெளியை ஒப்பிட்டு அறிவதுபோல் ஏனெனில் கசார் அகராதியில் இருக்கும் அவ்வெள்ளை வெளிகள் புனிதமான உண்மை மற்றும் பெயரின் (ஆதம் சத்மோன்) ஒளியூடுவக்கூடிய இடங்களைக் குறிக்கிறது, மேலும் வெள்ளை வெளிகளுக்கு இடையேயுள்ள கருப்பு எழுத்துகளின் மேற்பரப்பைத் தாண்டி நம் பார்வை துளைக்க முடியாது.”(பக்கம் 288)

இவ் அகராதி ஒன்றின் முன்னர் வாசித்து ஒப்புப்பார்க்கபடவேண்டும், அதன் பின்னர் இது பயனற்றதாகிவிடுகிறது. கசார்களின் அகராதி திறக்கப்படுவதில்லை, எழுதப்படுகிறது.

நின் கைவசம் என் கைப்பிரதி

என் அறையினை வெளிச்சமிட்டுத் துலக்கிவிடமுடியாது என்றே தோன்றுகிறது. மொறட்டுவ தன் மழைக்காலத்தை அனுபவிக்கத் தொடங்கிற்று. மங்கலான காலையின் மூட்டமான பனியும், முடிந்த  இரவின் ஈரலிப்பான காற்றும் கலந்து யன்னலைத் தாண்டி அறையினை நிரப்புகிறது. வெறுமை நிறைந்திருந்த மைதானம் மெல்ல மெல்ல சூரியக் கதிர்களை உள்வாங்குகிறது. இருட்டு ஆடை கழன்று அது  நிர்வாணமாகிக்கொண்டிருக்கிறது. இரவின் வெறுமையில் ஆடித்தீர்த்த ஆட்டம் ஒன்றின் மாறாத தடமாய் வியர்வைத் துளிகளை  இன்னும் நீர்த்துக்கொண்டே இருந்தன புற்கள். காற்றின் வேகமும் பனியின் அடர்த்தியும் வெயிலோடு குறைந்துகொண்டே போகிறது. மழைக்கால அங்கியை அணிந்துகொண்ட செந்தழல் ஒன்றினைப்போல் அறை மீண்டும் வழக்கமான வெம்மையைச்  சூடிக்கொள்கிறது. குழந்தை ஒன்றின் மேகச்சித்திரம் காற்றில் கலைந்து சிதிலமடைவதை செய்வதறியாது பார்த்துக்கொண்டு நிற்கும் தந்தையினைப்போல மழைக்கால அங்கியினை இந்தப் பகல் கழற்றுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சூரியன் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்க முழுமையாக நிறம் மாறிய இந்தப் பகலை பைக்குள் போட்டு அடைத்துவிட்டு உறங்கப்போகிறேன்.

மாலையில் மொறட்டுவ மீண்டும் மழையைப் பெறுகின்றது. ஏழைப்பெண் பிச்சைப்பாத்திரத்தில் சில்லறைகளை சேர்பதைப் போல மெது மெதுவாக ஒவ்வொரு துளியையும் நிலம் கவர்கிறது. அடைத்த இருட்டு. மழைத் துமிகளோடு மோதிப் பிணைந்து ஈரலிப்பாக காற்று என்னை வந்தடைகிறது. எழுந்து யன்னலுக்கூடாக மைதானத்தைப் பார்க்கிறேன். இளம் பெண்ணொருத்தியின் வனப்பான உடலைப்போல ஈரத்தில் நனைந்து திரண்டிருந்தது மைதானம். நிறமிழந்த நீலகுடையொன்றினை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வருகிறேன். மழை பலத்திருந்தது. பெருத்த சத்தத்தோடு கனமான துளிகளாக  வானம் கரைந்து கொட்டியபடி நின்றது. அறைக்கு நேரெதிர் வீட்டு வாசலை நிறைத்து  மழை பெய்துகொண்டிருக்க, எங்கிருந்தோ தோன்றித் தெறிக்கின்ற மெல்லிய மங்கிய ஒளியில் நகுலன் தெரிகிறார். கனத்த மழைக்குள் நனைந்து  நடுங்கியபடி நிற்கின்ற பலகீனமான கோழி போல உடல் சுருங்கித்  தளர்ந்து ஒடிந்து போய் நிற்கின்றார். தனது கவிதைகளை மழைத்துளிகளின் இடுக்குகளுக்குள் தொலைத்துவிட்டு நகுலன் தேடிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். கண்கள்  நிலத்தை அனிச்சையாகத் தேடுகின்றன. மழைத்துளி ஒவ்வொன்றும் நிலத்தில் பட்டுத் தெறிக்கும் போது வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் மௌனங்களாகவும் சிதறுகின்றன. சிறிய குடையைப்  பிடித்துக்கொண்டு நகுலனின் வாசலை அடைந்தேன். தந்தையின் அதட்டலுக்கு நடுங்கும் சிறுவனைப்போல எனது உருவத்தை திடீர் நடுக்கத்தோடு பார்க்கிறார். இந்தச் சிறிய குடைக்குள் என்னோடு அடங்கக்கூடிய உருவம் தான் அது.

” வாறீங்களா?” என்றேன்.

“எனக்கும் ஆசைதான்” என்றார். தீக்குச்சி ஒன்றின் மேல் பாலாடை கவிந்தது போல மெலிந்திருந்தன  கைகள். கரைந்துவிடாமல் அவரைப் பிடித்துக் குடைக்குள் சேர்த்துக்கொண்டேன். தூவானம் எத்துகின்ற படிகளில் இருவரும் ஒன்றாக இறங்கினோம். அவர் இறங்குவதை மிகவும் விரும்புகிறார். படிகளில் ஒரு குழந்தையைப்போல அவதானமாகவும் குறுகுறுப்புடனும் என்னை அணைத்து மெல்லிய முறுவல் பூத்தபடி பனித்திருந்த தரையின் நீர்க்குமிழ்கள் உடையாதவாறு அடிகளை எடுத்து வைக்கிறார். படிகளை அடைத்திருந்த பூக்கற்கள் நிறைந்த சுவரின் இடுக்குகளால் கசிந்து வந்த தூறல்கள் மென்மையாக ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்றில் எழுதத் தொடங்கின.

ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

நகுலனால் குளிர்ந்த காற்றில் எழுதப்படுகின்ற வரிகளை அவதானிக்கமுடியவில்லை. மிகுந்த கவனத்தோடு படிகளில் இறங்கினார். முதலாம் மாடியின் படிகளுக்கு வந்துவிட்டோம். எல்லாவிதமான மழைக்கும் பழக்கப்பட்ட குடை தன் உரிமையாளரைப் பாதுகாப்பது போல வெள்ளையும் மண்ணிறமும் கலந்த பூனை அதன் நான்கு குட்டிகளையும் சுருட்டிக்கொண்டு கிடந்தது. நகுலனிடம் கேட்கவா வேண்டாமா கேட்கவா வேண்டாமா என்ற குறுகியநேர பலத்த யோசனையின் பின்னர் வாய்திறந்தேன்,

” பூனைகளைப் பற்றி நான் எழுதினத வாசிச்சீங்களா?”

முழுக்கவனத்தையும் என் வார்த்தைகளின் மேல் திருப்பி, படியில் தன் அசைவினை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தார். அவரின் கண்கள் கிணற்றுக்குள் விழுந்த உதைபந்து போல அசைந்தது. குறுகிய நேரத்திற்குள் பார்வையை விலக்கி பூக்கற்களுக்கூடாக வானத்தைப் பார்த்தேன். கருமையும் நீலமும் சேர்ந்து வழிந்தது. நான் எழுதியவற்றைப்பற்றி எதுவும் கேட்கக்கூடாது என  நினைத்துக்கொண்டேன். மனம் முழுதும் தூண்டிற் புழுக்கள் அருவருப்பாக நெளிந்தன.  மீண்டும் கண்களைப் பார்க்கவோ சொற்களைக் கேட்கவோ திராணியற்று அடுத்த அடியை எடுத்து வைத்தேன். என்னை இறுக்கமாக பிடித்து நிறுத்தினார். தன் கையினை நீட்டி எதிரே இறங்கிக்கொண்டிருந்த படிகளில் அரைகுறையாக நனைந்த பூனையிலிருந்து கழன்று விரவிக்கிடக்கின்ற பூனைமுடிகள் காற்றில் அசைந்து எழுத்துருக்களாகின்றதைக் காட்டினார்.

நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்

அவை திரண்டெழுந்து காற்றில் எழுதியவற்றினைப் பார்த்த பிரமிப்போடு நகுலனைப் பார்த்தேன். இந்தக் கனத்த மழையிலும் தூரத்தில் ஒதுக்கமாக ஒளிர்கின்ற நட்சத்திரம் ஒன்றினைப்போல மெலிதான  ஓரப் புன்னகை. சூடான ரொட்டித் தட்டில் விழுந்த நீர்த்துளியாக அது கணப்பொழுதில் மறைந்தது. படிகளில் இருந்து முழுமையாக இறங்கிவிட்டிருந்ததை நகுலனால் நம்பவே முடியவில்லை. ஒரு எட்டில் குதித்து வந்த சாகசக்காரனைப்போல இருந்தது அவரின் பார்வை. இருவரும் நெருக்கமாக குடைக்குள் அடங்கிக்கொண்டோம். நகுலனின் உடலிலிருந்து முதுமையின் வாடையும் பலகீனமான சூடும் என்னை சூழ்ந்தது. வலுவிழந்த கிழவனை ஏந்திக்கொண்டு வாலிபனொருத்தன் இந்த மழைக்குள் என்ன செய்யப்போகிறான் என்ற தோரணையில் மழைக்குள் ஒதுங்கிநின்ற காகங்கள் கரைந்தன. மழைக்கு மனிதர்கள் எங்கெங்கோவெல்லாம் ஒதுங்கிநின்றார்கள். உடல் பருத்து – சட்டையின்  கிழிசலுக்குள்ளாக தசை பிதுங்கி நிற்க பிச்சையெடுக்கும் பெண்ணின் இடத்தில் மீன் வாங்கிக்கொண்டுவந்த  பணக்காரனையும் நிற்கவைத்திருக்கிறது மழை. பாதைகள் நிரம்ப வழிந்தோடும் நீருக்குள் இருவரும் துடுப்போடம் போல நகர்ந்துகொண்டிருக்க எதிரே இளம் ஜோடி எங்களைவிட நெருக்கமாக பெரிய குடைக்குள் நடந்துவருகிறது. பெரு மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.  சரீரம் உரசிக்கொள்ளும் கணத்தில் பெருமழைக்கு நடுவிலும் தீப்பொறிகள் உருவாகின. இதுவரை எதையும் பெரிதாக கவனிக்காமல் வந்த நகுலன், இந்த ஜோடியை கூர்மையாக அவதானிப்பதை பார்க்கிறேன். ஒரு வேளை அவர்கள் நகுலனின் சுசீலாவை ஞாபகப்படுத்தியிருக்கலாம். மென்மையாக அந்த இரைச்சலுக்குள்ளிருந்து குரலை உயர்த்துகிறேன்.

” சுசீலாவை அவ்வளவு காதலிச்சீங்களா? “

எப்போதும் மௌனமாகவே இருக்கின்ற நகுலனிடம் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் எனது  கேள்வி இதுவுமில்லை. வெறும் முன்னாயத்தம்.  எனக்குள் எப்போதும் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்பதில் தயக்கத்தை விட சங்கடங்கள் தான் அதிகம். நகுலனும் மனிதன் தானே. எல்லாப் பலகீனமுமுடைய ஒரு சாதாரண எழுத்தாளன். இரண்டு மூன்று அடிகள் மேலும் நடந்திருப்போம். பாதம் மறையுமளவு வெள்ளம் போட்டிருந்தது. நகுலன் மிகுந்த கஷ்டப்பட்டுக்கொண்டு அடியடியாக நகர்ந்தார். மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஒதுக்கமான இடமொன்றிற்கு இருவரும் நடந்தோம். யாரென்று பாராமல் வெள்ளம் என்னும் புனித நதி எல்லோரின் பாதங்களையும் கழுவுகிறது.  மூடியிருந்த கடையொன்றின் முன் கூரையின் கீழ் அடிமட்டம் வைத்துக்கீறிய தடிப்பான நேர்கோடுகளைப் போல கூரை முடிவிலிருந்து மழைநீர் தாரை தாரையாக இறங்கியது. நகுலன் சுற்றியிருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அவர்களும் நகுலனைப் பரிதாபத்தோடு பார்த்தார்கள். அடுத்த மழை மட்டும் நிலைக்குமோ இவ்வுடல் என்று சுற்றியிருந்தவர்கள் நினைப்பதை அவர்களின் கண்களிலிருந்து வருகின்ற பரிவுப்பார்வை உணர்த்தியது. அவர்களின் பார்வை அதிக நேரம் நீடிக்கவில்லை. குறுகிய நேரத்திலேயே மீண்டும் அவர்கள் வேலையில்  மழை ஏற்படுத்திய குறுக்கீடுகள் பற்றியும் மழைக்கு பின்னரான ஆயத்தங்கள் பற்றியும் கடுமையாக சிந்திக்கத்தொடங்கினார்கள். சிலர் கைத்தொலைபேசியில் திரைகளில் எதையோ வேகமாக தேடிக்கொண்டிருந்தார்கள். மழை என்னும் பிரமாண்டம் அனாதையாக பெய்துகொண்டிருந்தது. நகுலன் எல்லாவற்றையும் சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தார். வலிமையான காற்று எங்களை நோக்கி வீச, நேர்கோடுகளாய் விழுந்த நீர்த்தாரைகள் வளைந்து நெளிந்து என் மீது எழுத்துக்களாய் தெரிந்தன.  சிறு துளியும் படாதவாறு நகுலனை நெருக்கமாக அணைத்துக்கொண்டேன்.  நான் அணிந்திருந்த ஆடையினூடாக மழைநீர் ஊடுருவி வரிகளாய்ப்  பதிந்தன.

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனிதஉடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில்பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோபோவது
மாதிரிதோன்றுகிறது
உற்றுப்பார்த்தால்
யாருமில்லை

நகுலனால் அந்த சிறிய கூட்டத்திற்குள் நிற்கமுடியவில்லை. எனக்கும் கூட. எத்தனை பொய்யாக இந்த உலகத்தின் முன் ஆடவேண்டியுள்ளது. யாருக்கு முன்னால் எவ்வாறு பாவனை செய்யவேண்டும் என்று பிஞ்சு மனது கூட அறிந்திருக்கிறது. ஒவ்வொரு ஒப்பனையாக அணிந்து கலைத்து அணிந்து கலைத்து கடைசியில் ஒப்பனைகள் எவை சொந்த முகம் எதுவென்றே தெரியாமல் குழம்பிப்போயிருந்தோம். தன்னைவருத்தி நிற்பதை கக்கா இருந்த குழந்தைபோல முகத்தை அம்மலாக வைத்து வெளிக்காட்டினார். மீண்டும் நெருக்கமாக குடைக்குள் எங்களை குவித்துக்கொண்டு கிழம்ப  வெள்ளம் சற்றுக்குறைந்திருந்தது. மழை இன்னமும் வேகமாகவும் அடர்த்தியாகவும் பெய்துகொண்டிருந்த கொழும்பு காலி நெடுஞ்சாலையின் நடைபாதையினூடாக இருவரும் நடக்கத்தொடங்கினோம். வாகன இரைச்சலை நகுலன் வெறுத்தார். வளர்ந்த நகரமொன்றில் இன்னமும் புதுப்பிக்கப்படாத பேரூந்து ஒன்று கருமையான புகை மூட்டத்தை கக்கிச்சென்றது. கரும்புகை மழைத்துளிகளோடு கலந்து கபில நிறமாக உருமாறியது. அது வெட்டவெளியில் வரிகளை எழுதிச் சென்றது.

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!

” பேரிசையாய்க் கொட்டும் மழையில் யாரிவர்கள் நச்சரித்துக்கொண்டு ” நகுலன் தொடர்ந்தார், ” ஓரமாக எங்காவது போவோம், அமைதியான இடமொன்றிற்கு”

கோரப் பற்கள் கொண்ட நாயினைப்போல வெறிபிடித்து அலையும் இந்த நகரத்தில் அமைதியையும் நிம்மதியையும் தரக்கூடிய துண்டு நிலத்தையேனும் என்னால் காட்ட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லையா. அத்தனை பிரக்ஞை இல்லாமலா நகுலன் இருக்கிறார். ஒரு வேளை தன்னை வீட்டிற்குள்ளே மீண்டும் கொண்டுபோய் விடவே குறிப்பால் உணர்த்துகிறாரோ. மௌனமாகவும் மெதுவாகவும் மேலும் நடந்தோம். என் உள்ளங்கையை யாரோ இறுகப்பிடிப்பது போல உணர்தேன். நகுலன்தான் அது. விரல் எலும்புகள் உள்ளங்கையை குத்துகிறது. வயலின் நரம்புகளை அந்தக் குச்சி மீட்டத் தொடங்குகின்றது. பனிமலை ஒன்றின் பனி கரைந்து மலை மிளிர்வதைப்போல என் ஞாபகங்களை மூடியிருந்த காலம் கரையத் தொடங்கியது. உலகத்தின் எல்லாவற்றையும் நான் ஞாபகங்களால் சேமித்துவைத்திருக்கிறேன். ஞாபகங்கள் அடையாளங்கள். உயிரினங்களையும் பொருட்களையும் சம்பவங்களையும் உணர்வுகளையும் ஞாபகங்கள் தான் எனக்கு  அடையாளப்படுத்துகின்றன. இந்த உலகம் எனக்கு ஞாபகத் துண்டங்களின் சேர்க்கை. காலம் கரைந்து ஞாபகங்களை உணரத்தொடங்குகிறேன்.

மலை முழுக்க வார்த்தைகள். நகுலனின் கைவிரல் அடையாளங்கள்.

அந்தி மயங்கும் வேளை-
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது
அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

“உனக்கு நண்பர்கள் இல்லையா? யாரும் உன் அறைக் கதவை தட்டும் சத்தத்தை நான் கேட்டதே இல்லை. உன்னோடு யாரும் சிரித்துப் பேசி  இருப்பதை நான் அறிந்ததும் இல்லை ” என்றார்.

சிறிது நேரம் மழை மட்டும் இரைந்துகொண்டிருக்க, நகுலனின் இடது காதுகளில் மெலிதாக வளர்ந்திருக்கின்ற முடி மழை நீரில் நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது. அந்த சொட்டுநீர் வெள்ளத்தை மோதி எழுப்புகின்ற ஓசை என் காதுகளை வந்தடைந்தது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
என்று.

மழை அழுதது. துளிகள் எங்கு விழுந்தாலும் “ஓம் ஓம்” என்று ஆமோதித்தன. இத்தனை யுகங்களாக நண்பர்களைத் தேடி அலைந்த மழை, இன்று  நகுலனிடம் எப்போதும் கிடைக்கமாட்டார்கள் எனச்  சொல்லி அழுதது. அழுகையின் ஓரமாக எனது குரலும் சேர்ந்து அனுங்கியது. நகுலன் இவற்றைக்  கேட்பதாகத் தெரியவில்லை. தான் தொலைத்த நண்பர்களையே இன்னும் தேடிப்பிடிக்காமல், அந்த “கோட் – ஸ்டாண்ட்” பக்கம் திரும்பியே பார்க்காமல் இருக்கின்ற நகுலனுக்கு மழையின் அழுகை அழ மட்டுமே தெரிந்த குழந்தையின் அழுகையைப்போல இருந்திருக்கும்.

சிறிது நேரத்தில்,மீண்டும் தன் தணிந்த குரலில் “யாரையாவது காதலிக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

” அவள் சுசீலாவின் இன்னொரு உருவமா? “

மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

“நியத்தில் எப்போதாவது பார்த்திருக்கிறாயா?”

“ம்ம் ஓம், அறை நிறைய வார்த்தைகளைக் குவித்து வைத்துக்கொண்டு கடிதத்தை எழுதவும் கொடுக்கவும் மனமில்லாமல் வார்த்தைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் மீளுருவாக்கம் செய்து இசைத்தும் பாடியும் ஆடியும் சந்தோசித்து அழுது – ம்ம் பார்த்திருக்கிறேன் “

நகுலன் தளர்ந்து போனார். நிலத்தில் வெகுளியாக ஓடுகின்ற வெள்ளத்தைப் பார்த்தவாறே, இன்னும் இறுக்கமாக கைகளைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தார். அது சுசீலாவை மறக்க முடியாமல் திணறுகின்ற கிழவன் ஒருத்தனின் இயலாமைக் கண்ணீர். எறும்புகளின் வரிசை போல மெலிந்திருந்தது அந்தக் கண்ணீர்த் தடம். என்னால் நகுலனை பார்க்கமுடியவில்லை. காதுகளும் மூக்கும் அடைக்கத்தொடங்கியது. குரல் வளை நிரம்பியது. மூளை நரம்புகள் குறுகுறுத்தன. அத்தனை இயல்பாக அழ நகுலனால் முடிகிறது, ஆனால் என்னால் இந்த மின்விளக்குகளின் ஒளியில் இரும்பு மனிதர்களின் முன்னால் அழ முடியவில்லை. இன்றில்லை, என்றுமே வெளிப்படையாக அழுவதை தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன். அறைக் கட்டிலுக்கு கீழும் கதிரைக்கு மேலும் யன்னல் கரையிலும் அழுவதையே சுதந்திரமாக உணர்கிறேன். நகுலன் வெடித்தழுத போதெல்லாம் சுசீலா கூடவே இருந்திருக்கிறாள். ஆறுதல் சொல்லியிருக்கிறாள். ஸலம் சிகரட்டும் குப்பி கான்யாக்கும் கொடுத்திருக்கிறாள். நகுலன் இன்னும் இன்னும் தோற்றுகொண்டே போக அவள் நகுலனோடு  நிறைந்திருக்கிறாள். இவை எதுவுமறியாமல் இன்னொரு சுசீலா என் கண்முன்னே அலைகின்றாள். தூய்மையாக. பசும் பால் நிறத்தில். தெளிந்த வானத்தில் நிறைந்து நிற்கும் வெள்ளை மேகமாக. நினைவில் சுசிலாக்களின் உருவம் மாறினாலும் சுசிலா மாறவில்லை. சுசீலா உருவம் இல்லை. நினைவு. ஞாபகம்.  நான் கடந்துவந்த எல்லா சுசிலாக்களும் என் சுசிலாவின் ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நகுலன் அனுங்குகிறார். வார்த்தைகள் தெளிவில்லாமல் புலம்புகிறார், அலைவரிசை சரியாக பிடிபடாத வானொலியைப்போல.

எப்பொழுதும்
அவள் நினைவு
தான் அவள்
யார்
என்று கேட்காதீர்கள்
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்

எல்லா நினைவுகளும் ஒவ்வொன்றாக பெருக்கெடுகின்றன. எதையும் பிடித்து நிறுத்தவோ விரித்துப்பார்க்கவோ முடியவில்லை.  முன்னால் பாய்கின்ற வெள்ளத்தோடு கரைந்துவிட முடிந்தால்  எத்தனை சந்தோசமாக இருக்கும். உடைந்த கண்ணாடி துகள்களைப்போல வெள்ளத்து நீர் கூர்மையாக பாதங்களை மேவிச்சென்றது.  நகுலனின் கண்ணீர் துளிகள் வெள்ளத்தில் விழுந்து சொற்களாவதை எதேச்சையாக கண்டேன். மிகுந்த எத்தனத்தோடு ஒவ்வொன்றாகப்  பொறுக்கிச்  சேர்த்தேன்.

காவியத்தின் சுவை போல
சுவை போல
நீள் நகரின் எழில் போல
எழில் போல
உன் நினைவு தான்
நினைவு தான்.

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச்சாகத்தான்
தெரியும்
நீஎன்னசொல்வாய்
என்றுஎனக்குத்தெரியும்
நீஎப்பொழுதும்
இப்படிச்
செத்துக்கொண்டிருக்கவேண்டும்
என்பதுதான்
என்விருப்பமும்
என்றாள்

வார்த்தைகளை சேர்த்துக்கொண்டிருந்த நான் திடீரென்று  பூனையின் திடீர்  கம்பீர சிலிர்ப்புடன் மெலிந்த  நகுலனை இறுக்கமாக பிடித்துக் குலுக்கி,

” பித்தா சுசீலா இறந்து கிடக்க , நீ வரட்டுக் கவிஞாய் தானே போய்ப் பார்த்தாய்? ” என்று கத்திக்கேட்டுவிட்டு வெடித்து அழுதேன். அந்த கிழவன் முதன் முதலாக தன் கவிதை ஒன்றை நினைவுக்குள் கொண்டு வருகிறான். நடுக்கமான குரலில்,

சுசீலா
செத்துக் கிடந்தாள்
கழுகொன்று
அவள் முலையைக் கொத்திற்று
அவள் துவாரம்
நோக்கி எறும்புக் கூட்டம்.
பிணவாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான்;
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார்.

இவன் வெறுங் கிழவன் தான், நகுலன் அல்ல என்றே தோன்றுகிறது.

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

குறிப்புகள். 

  1. நின் கைவசம் என் கைப்பிரதி – தலைப்பாக நகுலனின் வரியொன்றினை இட்டிருக்கிறேன்.
  2. இங்கிருக்கின்ற கவிதை வரிகள் எல்லாம் நகுலனினுடையது.

அம்மாவின் காடு – தேவிபாரதி

ஆதாரமற்ற நெடுங்கனவொன்றின் மீதமரும் புனைவு என் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளோடு உரையாடத் தொடங்குகிறது. புனைவுலகு அகன்ற ஆழி. மிகத் தளர்வான கரைகளைக் கொண்ட ஆறு. எந்தக் குறிக்கோளும் பிரக்ஞையுமற்று செந்தரையின் குளிர்ச்சியில் நிரந்தமாய் உறங்கிப்போன எனக்கு, மிக நிதானமான உலகொன்றையும் அவற்றிக்குத் தோதான உணர்வுகளையும் உருவாக்கித்தந்தது புனைவு. வாழ்க்கையின் நிரந்த உணர்வுகள் புனைவிற்குள் அவற்றிக்கான மெய்வெளியினை பெருக்கிக்கொள்கின்றன. என் புனைவுகள் ஒரு பெண்ணின் நெற்றிக்குள் சுற்றும் சுழல். புனைவொன்றிற்குள் வாழவும் சிந்திக்கவும் பழகிய ஒருத்தர், எப்போதும் வாழ்கையின் மீது கொள்ளும் சலிப்பு ஒரு பொறி போன்றது. எல்லா வெளிகளையும் நிரப்பிக்கொள்ளும் பொறி, தாரை தாரையாய் பாயும் பொறி மூலமாகிறது. இம்மூலத்தின் ஒவ்வொரு நதியும் எனக்குரியதே. புனைவு புரிதலைத்தாண்டி ஏதோ ஒன்றை என்னிடம் கோருகிறது என்பதிலிருந்து அம்மாவின் காடு தழைக்கிறது.

குளிர் பொருந்திய இரவுகளை நினைத்துவாடும் பெருஞ்சொகமான இரவொன்றில் ஆளரவம் அற்ற எலிக்காடொன்றில் உலகம் மலையொன்றின் அமைதியைப்போல உறங்கிக்கொண்டிருந்த கணம் அம்மாவின் காடு வாசித்தேன். ரசம் பூசப்பட்ட சதுரக்கண்ணாடிக்கு முன்னின்று என் கண்களை வெறித்துப்பார்த்துக்கொண்டே நெய்யல் கரையில் எண்ணைப்பிசுக்கேறிய என் தாயின் உருவத்தைக் கண்டேன். அது நிச்சயமாக தேவிபாரதி கண்ட தாய் அல்ல. குதி நிறைய வெடித்துப்போய் மணலின் ஈரம் கசிய நிற்கும் என் தாய். கண்ணாடியின் முன் சிவந்த கண்களோடு உறைந்துபோய்நிற்கும் ஒருத்தனின் அத்தனை துன்பத்தையும் தன் சிவந்த குங்குமத்தால் சூடி நிற்கிறாள் அவள். முடிச்சிலிட்ட மலரொன்றைப்போல அவளின் இளமையும் சந்தோஷமும் மீளவும் உயிர்ப்பிக்கமுடியாமல் வாடிப்போனது. ஒரு கணம் நானும் இன்னொரு கணம் அவளும் குருதி தோய்ந்த கத்தி முனையின் மேல் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்.

 

அம்மாவின் காடு 

https://devibharathi.blogspot.com/2019/02/blog-post_27.html

குர்ரத்துலைன் ஹைதர் – உதிரும் இலைகளின் ஓசை

முதல்ப் புனைவு

சரியோ பிழையோ – எப்போதுமே முதன்முதல் செய்தவற்றை மீட்டிப்பார்க்கும் போது ஒரு வித சந்தோசம் உருவாகும். அதுவும் முதன்முதலில் உருவான கலைப்படைப்பு ஒன்றை மீட்டுதல் அலாதியான சந்தோசம். சரியாக இதே நாளில்த் தான் எனது முதலாவது கதையினைச் சொன்னேன். இது மிகவும் ஆரம்ப வாசிப்பு நிலையில், கதையா இல்லையா என்றெல்லாம் தெரிந்திராத போது எழுதப்பட்டது. எனது நண்பர்களால் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த பொய்யர் என்னும் முகப்புத்தக பக்கம் ஒன்றில் வெளியானது. இதை பின்னர் அப்போது இயங்கிக்கொண்டிருந்த வலைத்தளத்திலும் வெளியிட்டேன். இந்த நாள் பொய்யரில் வெளிவந்த நாளா இல்லை வலைதளத்தில் பதிவேற்றிய நாளா என்று தெரியவில்லை. ஆனால் முதன்முதலில் எழுதிய நினைவுகள் சந்தோசத்தை அளிக்கின்றன. கதை ஒன்றை எழுதவேண்டும் என்றால் எப்படியும் முடிவில் வாசகன் ஊகிக்க முடியாத பெரிய திருப்பம் ஒன்றைவைக்கவேண்டும். அந்தத் திருப்பத்தை எந்த விதத்திலும் வாசகன் முன்கூட்டியே ஊகிக்க முடியாதபடி கதையின் போக்கை நகர்த்தவேண்டும். முக்கியமாக அதுவரை பொய்யரில் வெளிவந்திராத – மனதை உலுக்கக்கூடிய புதிய தளத்தில் இருக்கவேண்டும். கதையினைப்பற்றிய இப்படியான சிந்தனைகளோடு எழுத ஆரம்பித்தேன். குறுகிய கதையாதலினால் முழுவதும் கைபேசியிலேயே எழுதி பொருத்தமான பி.சி.சிறிராமின் புகைப்படம் ஒன்றையும் இணைத்து அனுப்பினேன். இதற்கு முன்னர் எழுதிய இரண்டொரு கவிதைகள் தவிர்த்து எழுதிய முதலாவது புனைவு வடிவம் இதுவாகும். இதிலுள்ள எழுத்துப்பிழைகள், வசனப் பிழைகள்உட்பட கதையே பிழையாக இருந்தாலும் – இது தான் எனது முதல் புனைவின் பிரதி என்று முகப்புத்தகம் காட்டியபோது இதயத்திற்குள் உருவாகி உடலெல்லாம் பரவுகின்றது பூரிப்பு ரத்தம்.

 வாசிக்க –

“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), மற்றும்   1Q84 (2009–10) என்பன குறிப்பிடத்தக்கன.
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள்  கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
 
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU

வாசிப்பும் பகிர்வும்.

நமது வாசிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாசிப்பு வேட்கை இருக்கும். நாம் நாளாந்தம் நெருக்கமான உணர்வுகளைச் சீண்டிவிடுகின்ற வாசிப்பியையும் கடந்துபோகின்றோம். வாசித்தவுடன் தொடர்பற்றுப்போகின்ற வாசிப்பையும் கடந்து தான் போகின்றோம். இதை எந்நிலை வாசிப்பு அனுபவம் கொண்டவராலும் தவிர்க்கமுடியாது. நாம் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்றாலும் அதில் பல அணுக்கமாகவும் அதே அளவு பல அந்நியமாகவும் இருந்துவிடுகின்றன. அதே நேரம் தேர்ந்தெடுகின்றவற்றிற்கு அப்பால் பல நல்ல படைப்புகளை தவறவிடுகின்றோம். இது சூழ்நிலை விதியே ஒழிய வேறொன்றும் இல்லை.
 
வாசிக்கின்ற பலதில் இன்னொருவர் வாசிக்க பொருத்தமானதாக இருக்கும் என நாம் நினைக்கின்ற படைப்புகளை சிறந்த வாசகர்கள் வெளிவிடுவார்கள். சுயலாபம் என்பது இல்லாமல் பொதுமையான வாசிப்பு பெருக்கத்திற்கு இது அதிகம் பயன்படும். தேர்வுகளில் இல்லாத தவறவிடக்கூடிய நல்ல படைப்புகளை நுகரக்கூடியவாறு இருக்கும். இதை சிறந்த வாசகன் மட்டும் செய்வது என்றில்லாமல் எல்லா வாசகர்களும் செய்யவேண்டும். சிறந்த வாசகன் என்பது அவனை விட சிறந்த வாசகனை பார்க்கும் வரை மட்டும் தானே.
 
இன்று பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொடுக்க பாடசாலைகளோ சமய கூடங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ முன்நிற்பது இல்லை. அனுபவங்களை எடுத்துக்கொள்ளும் சூழலையும் ஏற்படுத்தித் தருவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் இரண்டு பேர் தப்பிப் பிழைக்கின்றனர். அது மட்டும் போதுமா? சமூகத்தின் ஆயிரங்களில் இருவர் தனிய நின்று என்ன செய்துவிடமுடியும்? அவர்களின் கதி தேர் கூட்டத்தில் தவறவிட்ட பலூனின் நிலை தான். இன்றைய சமய கூடங்களின் நிலை இன்னும் பரிதாபம். இங்கொன்றும் அங்கொன்றுமாய்த் தான் வளரும் பருவதினரைக் காணமுடிகிறது. அவர்களின் நோக்கம் சுயலாபமாகவே இருக்கிறது. கோவில் கருவறை தவிர்ந்த எல்லா இடங்களிலும் செல்பியும் கையுமாகத்தான் திரிகின்றனர். இங்கிருந்து பண்பாட்டை எடுத்துச் செல்லல் என்பது நடக்கமுடியாத காரியம்.
 
எதிலிருந்து எமது சமூகத்தைப் பண்படுத்துவது என்று அவர்களிடமே கேட்டாலே புத்தகங்களின் மூலம் என்கிறார்கள். புத்தகம் என்று உச்சரிப்பதோடு சமூகம் பண்பாட்டுப் போய்விடுமா? வாசிப்புத் தான் பண்பாட்டு இடப்பெயர்வின் அஸ்திவாரம். உள்ளூர தேடவும் வெளியே வாழவும் வாசிப்பு அவசியமாகிறது. அடுத்த நபருக்கு பழக்க பகிர்வு அவசியமாகிறது.
 
அடுத்தவர் ஏற்றுக்கொள்ளல் அல்லது மறுத்தல் , சரியானவற்றைப் பகிர்தல் என்ற வாதங்களை எல்லாம் தாண்டி பகிர்வு என்னும் செய்கை அவசியமாகிறது. ஒவ்வொருவரது வாசிப்பு வட்டமும் வெவ்வேறானவை. அவரகளின் தேடலுக்கு எட்டாதவை பல நம் வாசிப்பில் இருந்திருக்கும். பகிர்வதால் அவை பயன்பட்டுப்போகும். வாசிப்பனுபவம் உருவாக்கிகொடுக்கின்ற பண்பாடே இனி வருகின்ற சமூகத்தின் பண்பாடாக இருக்கும் என்பது எனது சொந்த கருத்தாகும்.

கேட்டல் இனிது.

எங்கு அறிவுரை கேட்பது ? யாரிடம் அறிவுரை கேட்பது ? எம்மை சரியாக வழிநடத்த கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகள் இந்த தலைமுறையினரிடம் பரவலாக காணப்படுகிறது. மங்கிய ஒளியினை நம்பி அதன் வழி நடத்தலின் கீழ் சென்று தமக்கான சரியான பாதைகளை தவறவிடுகின்ற ஆட்கள்தான் இந்த தலைமுறையினர்களில் அதிகம். ஒருவேளை அப்படியான தவறான வழி நடத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கிறவர்களுக்கு வழிநடத்தல்களே இல்லாமல் போய் விடுகின்றன. வழிநடத்தல் இன்றிய பிரயாணங்கள் சீரானதாகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும் முடிந்த நிகழ்தகவுகள் மிகக் குறைவு. தண்டவாளம் அற்ற புகைவண்டி முடிவிடத்தை அடைவதில் சிரமமும் இயலாமையும் தானே அதிகம். இந்த எதிர்மறையான மங்கலான போக்குக்கு எம்மிடையேயான இலக்கிய அறிவின் மந்தகரமான நிலையும் முக்கிய காரணமாகும். எம் வரலாறுகளையும் எத்தனையோ யுக வாழ்க்கையை சீர்படுத்திய இலக்கியங்களால் , இத்தலைமுறையினரின் நடத்தை கோலங்களை சீர்மைப்படுத்துவது என்பது பெரிய காரியம் இல்லை. இருந்தும் இது நிகழாமைக்கான காரணம் இலக்கியங்கள் நோக்கிய எமது பார்வைப் பிறழ்வே ஆகும். …………………….எது பாலம் ? என்பது இலக்கியம் கூறும் நல்வழி ஒன்றினை பற்றியது.  கவிதை ரசித்தல் என்ற தொடரின் 2 வது பகுதியாக எழுதப்பட்டது.
 
https://brinthansite.wordpress.com/2017/02/16/எது-பாலம்-கவிதை-ரசித்தல/

தீராத பால்யம்.

மனிதன் ஒருவனின் ஆழப்பதிந்த நினைவுகள் என்று தோண்டி எடுக்கும் போது அந்த நினைவுகளில் பல அவனின் பால்யத்தை சுற்றியே இருக்கும் என்பது நிதர்சனம். பால்யம் தீராத கனவுகளின் பெட்டகம். எல்லாருக்கும் எல்லாமும் இந்த பருவத்தில் விதைக்கப்படுவதில்லை. விதைக்கப்பட்டவை எல்லாம் சரியானவையும் அல்ல. விதைக்கப்பட்டவைக்கும் விதிக்கப்பட்டவைக்கும் தீராக் கனவுகளின் பெட்டகத்திற்குமான போராட்டம் பால்யத்தை சுவைக்க வைக்கிறது. இந்த சுவையான சுளைகளுக்கு தேனும் நெய்யும் ஊற்றி சுற்றத்தாருக்கு கொடுக்கும் போது அதன் மதிப்பு பல படிகள் உயர்கின்றது. ஆனால் அந்த சுவையான அனுபவங்கள் எழுத்தாளனுக்கு உரியதுதானே. தீராக் கனவு பெட்டகம் அவனுக்குரியதுதானே. அவன் நினைவுகளை பகிர்வதில் அவன் அந்தரங்கம் வெளிப்பட்டு விடும் என்பதை மீறி அவன் தனிமையில் மீட்டவேண்டிய அனுபவங்கள் தொலைந்துவிடுமே என்ற அச்சம் மேல்தூக்கி கொள்கிறது. இதனால் யாரும் அவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் பெரும் தயக்கம் காட்டுவார்கள். நானும் அப்பிடித்தான் ……….. சீனிபாக் அனுபவம் இல்லை , இதில் நகர்ப்பவர்களில் யாரும் நான் இல்லை. இங்கு காட்சிகள் சட்டகத்துக்குள் மறைக்கப்படாமல் வெட்டவெளிக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் எங்கேனும் நீங்கள் உங்களைப்பார்த்தால் அதில் என் கற்பனைகளை மீறிய உண்மைகள் எங்கோ நடமாடியிருக்கின்றன அல்லது நடமாடுகின்றன அல்லது நடமாடலாம் என்ற வெளிப்படை மேலோங்கலாம் ….

சீனிபாக் சிறுகதையை வாசிக்க

https://brinthansite.wordpress.com/2017/01/26/சீனி-பாக்/