போருக்குப் பின்னரான சில சிறுகதைப்பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் – 1

போர் மனிதர்கள் காணாத, உணராத ஒன்றல்ல. போர்களையும் அதன் கொடூரங்களையும் அழிவுகளையும் வரலாறு நெடுக மனித இனம் கண்டுகொண்டே வந்திருக்கிறது. போருக்கான சூழல், அதன் பின்னர் மூளும் மனிதர்களின் அரசாங்கங்களின் சுயநலம், தவறான வழிநடத்தல்கள், துரோகங்கள், தோல்விகள், இழப்புகள், மரணங்கள், கண்ணீர், அத்துமீறல்கள், போரில் வெற்றி, அகதிகள், ஊனமுறவர்கள், அனாதையாக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள், காணமல் போனவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், பண்பாட்டு அழிவு, வடுக்கள், ஏளனங்கள், உள்ளூர மூண்டு எழும் கோபம், ஞாபகங்களில் இருந்து அகற்றிவிடமுடியாமல் கீறலாகிப்போன நாட்கள், மீண்டும் போருக்கான சூழல். போர் எப்போதும் முடிவடைவதில்லை. போருக்கு தொடக்கம் நடுவு முடிவு என்று ஏதுமில்லை. ஒரு நிலத்தில் என்றைக்கேனும் ஒரு நாள் போருக்கான முதல் ரத்தம் விதைக்கப்படுகிறோ அன்றிலிருந்து காலம் சூன்யமாகிவிடுகிறது. எதிர்காலம் என்ற ஒன்று அந்நிலத்திலிருந்து கண்காணாத தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆச்சரியமாக போர் யார் பக்கமும் சாய்ந்திருப்பதில்லை. அதற்கென்று மொழியோ இனமோ இருப்பதில்லை. அவற்றுக்குத் தேவையானவை தோல்விகளும் மனித உடல்களும் தான். போருக்குப் பின்னர் என்பது மாயை. அது என்றைக்கும் வரையறுக்கமுடியாத ஒன்று. காண்பியலுக்கு போருக்கு பின் என்பது காலத்தை வரையறைசெய்துகொள்ள ஏதுவாயிருந்தாலும், இக்கட்டுரையில் போருக்குப் பின்னர் என்பது மிகச்சரியாக மே 19, 2009 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன மதிய நேரச் செய்திகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட போது பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த எனது அம்மா அச்செய்தியைக் கண்டு சுவரோடு சாய்ந்து தன் தலையில் மேல் கை வைத்ததோடு தொடங்குகிறது.

கட்டுரைக்கான உடல் ஒன்றினைத் தெரிவு செய்வதன் மூலம் வாசிப்புகளையும் புரிதல்களையும் ஒழுங்கமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். போருக்குப் பின்னரான சிறுகதைகளின் களங்கள் இருவேறு நிலங்களில் உயிர்கொள்கிறது. ஒன்று போர் நிலம் மற்றையது போர் நிலத்திற்கு அண்டைய நிலம். போர் நிலமென்பது விடுதலைக்காக ஆயுதங்களைத் தூக்கி மனித உயிர்களைப் பணயம் வைத்து நின்ற நிலம். அதே போன்று ஆயுதம் தாங்கிய போர் நடக்கும் நிலத்தைச் சுற்றி போரின் மௌன ஓலம் வெடித்துப் பரந்த நிலங்கள் அனைத்தும் போருக்கு அண்டைய நிலங்கள். அவை தூரங்களால் அல்ல துயரங்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. நிலம் போரின் முக்கிய பொறி. மனிதர்கள் நிலங்களின் மேல் கொண்டிருக்கும் நித்தியமான உறவும் ஆதரவும் போரில் பகடையாக உருட்டப்படுகிறது. பரந்தனில் எழுநூறு கோழிக்கால் குறியிட்ட மாடுகளுடன் தொடங்கி செல் அடிக்கு திக்கெது திசையேது என்றறியாமல் இறுதியில் மீள் குடியேற்றத்தில் பிடித்த ஒரு கோமதியும் தொலைத்த அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது மற்றைய கோமதிகளும் தன் நிலத்தின் மீது யதார்த்தன் பிடித்து நிற்கும் துண்டுக் கண்ணாடி. சுருவில் மக்கள் சட்டி பானைகளோடு தேவாலயத்திற்கு கிளம்பும் போது கப்டன் பொன்ராசா தன் நிலத்திலிருந்து வர முடியாமல் சுருள்வதும் பாழங்கிணத்திற்குள் வருடக்கணக்கில் பாசிகளையும் தவளைகளையும் நுண்ணங்கிகளையும் போல உயிர்ப்புடனிருக்கும் பெயர் தெரியாத ஊரிப்புல குடிமகனும் சோபா சக்தியின் நில அச்சாணியில் உருளும் துயரங்கள். பிண முற்றிப்போன இறுதிக்காடுகளை அவர்கள் கடந்து என் நிலத்தின் தரப்பாள்களுக்குள் திணிக்கப்படும் போது அவர்களின் உயிரைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் அந்நிலத்திற்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் புதைவிட்டு வந்தார்கள். போரின் நிலம் உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் சுடுகாடாய்ப்போனது. தமிழினிக்கு தன்னிலத்தில் கந்தக வாசத்தோடும் ரத்த வாடையோடும் பச்சிலைகளின் கருகல் வாசனையும் சேர்ந்து துயரத்தைத் தருகிறது. அது புனைவால் போரை நிகழ்த்தும் எவராலும் உணரமுடியாத வலி. களமுனையில் தன் நண்பி சங்கவியோடு மரத்தின் கீழிருந்து பேசிக்கொண்டிருக்கும் தமிழினியின் மனதில் போரைப்பற்றிய பயமில்லை. ஆனால் எதிர்காலத்தைப்பற்றிய நிச்சயமின்மையும் இழப்புகளைப்பற்றிய கவலையும் நீண்டிருந்தது. அது அவளின் கண்களுக்குள் திரண்டு மரணத்தின் வாசனையாய் நிலமெங்கும் படர்கிறது. புத்தர் அவன் மகளிடம் மரணமில்லாத வீடொன்றிலிருந்து ஒரு பிடிக் கடுகு வாங்கிவா என்றபோது எல்லா வீட்டிலும் மரணமிருந்ததைபோல எந்த வீட்டிலும் கடுகிருக்கவில்லை என்ற உண்மையும் எமக்குள் உறைக்கிறது. இழப்பு போரின் நிலத்திலிருந்து முகாம்களை நோக்கி தன் புளுத்துப்போன வாயைத் திறக்கிறது.

யதார்த்தனின் முகாம்கள் முக்கியமான அமைப்பு. போர்நிலத் தொடர்ச்சி. ஆனால் அவை உரிய மண்ணால் செதுக்கப்பட்ட சிற்பங்களா என்றால், இல்லை என்று தான் நம்புகிறேன். ஆனால் இக்கட்டுரைக்கு சிற்பங்களை விட மண்ணால் செய்யப்படுகின்றன என்பது முக்கியமாகத் தெரிகிறது. இது யதார்த்தனுக்கு மட்டுமல்ல பலருக்கும் பொருந்தும். சைவே என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்பட்ட பிரியங்கா, அப் பெயரையும் நிறத்தையும் பூச மரணமொன்றே காரணாமாயிருக்கிறது. மனிதர்களின் பெயர்களையும் மன அமைப்புகளையும் சமூக அமைப்புகளை இலக்கிய உடல்களையும் மரணங்கள் உருமாற்றியிருக்கிறன. மரணங்களும் இழப்புகளும் சிறுகதைப் போக்குகளை மாற்றுவதில் முக்கியமானதாயிருக்கின்றன. எங்களுக்கான வாழ்க்கையைப் பற்றிய அறமும், அநித்தியம் பற்றிய உண்மைகளும் மரணங்களின் மூலமே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலத்தின் புனைவு மொழி இறந்த உடல்களுக்குள் மௌனமாய் உறைந்துபோன கனவுகளின் மொழி. முன்னர் விஸ்பர் வாங்குவதைக் கூட தயக்கமாகக் கூறும் பிரியங்கா, பின்னர் வெகு லாவகமாக பெரிய மோட்டார் சைக்கிளில் ஏறி உலகத்தின் முன்னால் தன்னை திறந்து கொள்வது வரை போர் மனிதர்களை வெளிப்படையாக்கியிருக்கிறது. இந்த வெளிப்படைத்தன்மை – அவர்களின் அரசியலிலும் தென்படுகிறது. பசித்த வயிற்றுடன் சுத்தமாக்கப்பட்ட வீரை மரத்தின் கீழிருந்து என்றைக்கும் திரும்ப முடியாத தம் இழந்து போன வாழ்க்கையைப் பற்றி அந்தச் சிறுவனின் குடும்பமும் – அதே மரத்தின் கீழ் முன்னொரு மழைக்கால இரவில் கறுத்த வானத்தை நோக்கி ஒளிர்ந்துகொண்டிருந்த விழிகளுடன் விடுதலைக்கான ஆசையோடு தன் மூச்சை நிறுத்தியிருந்த தமிழினியின் தோழியும் – பல்லாயிரம் சிறுவர்களும் குடும்பங்களும் சங்கவிகளும் சாக்காட்டின் ஒவ்வொரு நிழலும் நிலைத்து நிற்கிறார்கள். வானம் அவர்களின் தோல்விகளால் இருண்டிருக்கிறது. புனைவுகளையும் சிறுகதைகளையும் தவிர எந்த விசாரணையும் அவர்களின் காயங்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை. முகாம்கள் மனித அவலத்தின் ஒட்டுமொத்தப் புகைப்படம். அன்று யூதர்களின் உடல்கள் கருக்கப்பட்டு எழுந்த புகைக்கூடத்தின் மணத்தையும் மினிக் பாம்கள் எங்கும் எழுந்த மனிதர்களின் மணத்தையும் எந்த வித்தியாசமின்றிப் பார்க்கிறேன். மரணங்களின் மணமும் போரில் தோற்றவர்களின் மணமும் வேறு வேறல்ல.

புலம்பெயர்வு என்றைக்கும் திரும்பமுடியாத வாழ்க்கை நிலைமை எமக்குத் தந்திருக்கிறது. இந்நிலம் புலம்பெயர்வுகளுக்காக சபிக்கப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து மனிதர்கள் பிரியும் போது அந்நிலம் தன் பிடிகளை இழக்கிறது. ஒவ்வொரு மனிதரும் நிலத்தை விட்டுப்பிரியும் போது தம்மோடு நிலத்தின் ஒரு துண்டத்தை பெயர்த்துக்கொண்டு கிளம்புகிறார்கள். இன்று அவர்களின் மூன்றாம் சந்ததியும் உருவாகிவிட்டது. ஆனால் என்றைக்குமான அவர்களின் நிலம் பெயர்த்தெடுத்துப்போன அத்துண்டு நிலமாகவேயிருக்கிறது. அவர்களின் கதைகளில், பயணங்களில் அந்நிலம் ஒவ்வொன்றாக உருப்பெறுகிறது. அவை களிமண்ணைப்போல ஒவ்வொரு வடிவங்களில் ஒவ்வொரு நிறங்களில் தம்மை உருமாற்றி உருமாற்றிக்காட்டிக்கொண்டிருகின்றன. வேற்றுநிலத்தின் ஆற்றுப்படுக்கைகளிலும் மலைகளிலும் தன்னிலத்தை விரித்து சாய்ந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் விருப்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விரும்பி ஏற்காத வாழ்க்கைக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் பலர் இறுதி முனையிலும் முகாம்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிளுமிருக்க தனித்திருந்து உழலும் அவர்களின் மனநிலையும், போருக்குப்பின்னர் வருவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டும் வரமுடியாமல் உழலும் மனிதர்களையும் கதைகள் நெடுக காணக்கூடியதாயிருக்கிறது. போர் அவர்களை இன்னொரு வழியில் சிறைபிடித்திருக்கிறது. தருமலிங்கமும் அசோகமலரும் இந்தியாவில் தனித்திருக்கும் இனிய காலம் இன்னமும் எத்தனையோ பேருக்கு வாய்க்காதது. சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் இந்நாட்டில் இருக்கும் சுதந்திரம் புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. சோபா சக்தி போரின் கதைகளை அரசியல் பிரசுரமாக்குகிறார். அவர் காட்டும் சாமான்ய மனிதர்களின் அலைக்கழிப்பைத் தவிர வேறு எந்தத்தரப்பையும் அணுகுவது எனக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு கதை சொல்லியென்ற அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளத்தையும் ஏற்படுத்துமளவிற்கு எனக்கு அவரின் சிறுகதைகளில் உண்மையை உணர முடியாதுள்ளது. புனைவுகளுக்கு உண்மை அவசியமில்லை என்றாலும் போர்ப் புனைவுகளில் உண்மை அற்றுப்போகும் போது போர் சந்தையாக்கப்படுகிறது. இங்கு உண்மை என்பது பொது மொழியில் பொய்க்கு எதிரானது. புனைவு மொழியில் உண்மைக்கு நிகரானது. இருந்தும் சோபா சக்தியின் சாதாரண மனிதர்களை மதிக்கிறேன். வேலும் மயிலும் பமுவும் அப்பாவிகளாக போர்நிலத்தில் பலியிடப்படும் போது இரண்டு தரப்பினரும் கொண்டாடுகின்றனர் . போரை அப்பாவி மனிதர்களின் இழப்பாக இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அவரின் பெரும்பாலான கதைகளில் போரோடு துரோகமும் கலந்துகொள்கிறது. “தமிழனை தமிழனே இப்படி செய்யக்கூடாது” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

பொன்ராசாவின் கதைக்கருக்கு ஏறக்குறைய ஒத்த கதையை புனைகிறார் கபில். கபிலோடு தர்மு பிரசாத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டியிருக்கிறது. சோபா சக்தி, கபில், தர்மு மூன்று பெயரையும் ஒரே முக்கோணத்தில் வைத்து சுழற்றிப் பார்க்க உடலெது கதையெது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று மேவிக்கொண்டிருக்கினர். தர்மு பிரசாத்திடம் வலிமையான கதைகள் இருக்கின்றன. தன்னுள் தனித்து ஊறும் நிலமும் சொற்களுமிருக்கின்றன. களவாடப்பட்ட உடல்களுக்குள் வலிமையான இக்கதைகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. தனிமையின் நூறு ஆண்டுகளில் தண்டனைக்குட்படும் அக்கா, தமிழ் சமூகத்தின் மொத்த பெண்ணுருவாய்த் தெரிகிறார். போர் பெண்களை வலிமையாக்கியது. வரலாற்றின் பனியாய் எம் பெண்கள் உருக்கொண்டார்கள். தனிமையின் நூறு ஆண்டுகள் மூன்று கோடைகளாக விரிகிறது. என்றைக்குமே மாரியைப் பார்க்கமுடியாத நிலத்தின் தனி மனிதப் பிறழ்வை, தனிமனித அழிவை திருகுவதன் மூலம் சமநிலையற்ற போர் விதிகளின் மீது தறிகெட்டாடும் மொத்த சமுகத்தின் பிறழ்வை மொழிக்குள் கொணர்கிறது. மோசஸ் மீளுயிர்க் கொண்டதும் அக்காவின் உயிர் எடுக்கப்படாமல் அந்தரத்தில் விடுத்துப் போனதும் கதைகளின் போக்கை ஆணுயிர், பெண்ணுயிர் என்று மொழிபடுத்துகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் சோபாசக்தியின் சக்கைகளாவே எனக்குத் தோன்றுகின்றன. கதையுடல்கள் போரின் கதைகளுக்கு அவசியமானவையா என்ற கேள்வி எப்போதும் எமக்குள் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக்கு ஆதி காரணம் எங்களை அடையாளப்படுத்தியவர்கள். ஒரு துளியை பாலாகவும் ரத்தமாகவும் பார்க்கப்படவேண்டியிருக்கிறது. இன்னமும் அதிகாரத்தின் பார்வையில் சிறுபான்மையாக ஊரும் எமக்கு வரலாறு பன்முக வாசிப்பினைக் கோருகிறது. இலையின் கீழ் ரவையை மறைத்து கைமாற்றவேண்டியிருக்கிறது. நியம புத்தரை காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கும் ராகவனின் பொறி கதையுடல்களுக்கு சிறந்த உதாரணம். எல்லோரும் போரின் தொடக்கத்தில் மிகத் திடமான குறிக்கோள்களுடனிருந்து உயிருக்காய் ஒவ்வொன்றாகக் கைவிட்டு கடைசியில் உயிரோடு மட்டுமே திரும்பிய பொதுவான போக்கை சிறுகதைகள் கொண்டிருக்கின்றன. அன்று கைவிட்டுப் போன நிலமும் பின்னர் எம் கைகளுக்குக் கிடைத்த நிலமும் ஒன்றல்ல. பௌதீகத்தாலும் மனத்தாலும் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடைய இரண்டு நிலங்கள். இது போர் நிலத்திற்கு மட்டுமேயுரிய குணமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. வாழ்க்கை சாமான்ய மனிதர்களின் மீது தொடுக்கும் எல்லாவகையான போர்களிலும் போராட்டமும் தோல்விகளும் பெரும்பங்காயிருக்கிறன. அதிகாரம் மனிதர்களின் அன்றாடத்தை பூனைகளைப்போல நசுங்கித் தின்கின்றன. எல்லா வளைகளிலும் வாய்வைத்திருக்கும் பூனையின் பிடியில் திசேராவின் புனைவுகள் உருப்பெறுகின்றன.

கதையுடல்களின் சாத்தியங்களையும் கட்றற்ற மொழிச் சோதனைகளையும் புனைவுகளில் பரிசோதித்துப்பார்க்கிறார் திசேரா. எண்களையும் தாவரங்களையும் கவிதை மொழிகளையும் குழந்தையொன்றின் முதல் முயற்சிகள் போல கையாண்டுபார்க்கிறார். தன் மொழியின் கூறு நிலைகளை மாற்றுவதனாலும் மொழிக்குள் வெறுமையையும் இறுக்கத்தையும் ஏற்படுவதுவதன் மூலமும் கதைகளைப் புனைய விரும்புகிறார். வழிகள் அதிகமிருந்தும் இயற்கையை சவாலுக்கு அழைத்து ஆடும் பகடையை நிகழ்த்திப்பார்க்க தவறுகிறார். பன்மைப்பால் நிலைகளால் புனைவு மனத்தை வனையும் தன்மை உரையாடப்படவேண்டிய ஒன்று. தன்னுடைய பால் நிலையைக் கழைந்து எழுதுவது என்பதும் அதற்குரிய பிரக்ஞையுடன் மொழியைக் கையாள்வது என்பதும் இன்று பலரிடம் இல்லாத ஒன்று. தமிழில் போதுமானளவு உரையாடல்கள் நிகழ்த்தப்பட்ட பிறகும் ஆண், பெண் விகுதிகளை கையாள்வதில் தடித்த ஆண் மனோபாவமும் அலட்சியமும் நிறைந்திருக்கிறது. மொழியை அதன் பாட்டில் நகரவிட்டு பின்தொடரும் திசேரா அவற்றில் மிகவும் பிரக்ஞை உணர்வோடு செயற்பட்டிருக்கிறார். கதைகளைப்பற்றியும் அதன் விவாதங்கள் வாசக பார்வைகள் என்று கதைகளின் எல்லாக் கூறுகளின் மீதும் விருப்பமும் ஈடுபாடுமுள்ளவர்கள் சமூகத்தின் அடிப்படை உண்மையை மொழியில் கையாள்வதிலுள்ள தயக்கம், தங்களைத் திருத்திக்கொள்வதில் உள்ள அலட்சியமும் ஏமாற்றமளிக்கிறது. திசேரா வெறுமையான நிலத்தின் ஒழிந்திருக்கும் கருமௌனங்களைப் புனைகிறார். இழத்தலின் காலம் பரிசோதனைகளின் உயிர்ப்புள்ள குழந்தையாக உணர்கிறேன்.

போரின் நிலத்திற்கும் அண்டைய நிலத்திற்கும் இடையில் மனித அலைச்சல்களின் வேர் பிணைந்து கிடக்கிறது. அதன் நுண்மையான வேர் மயிர்களின் கசப்பு இந்நிலத்தின் மீது எழுதப்பட்ட, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும், எழுதப்போகும் எல்லாப் புனைவுகளிலும் தோய்ந்து அலைந்துகொண்டிருக்கும். காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இது என்கிறார் கற்சுறா. எம்முன் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது, புனைவுகள் சுவர்களில் துளைக்கப்பட்ட ரவைக் கலன்களுக்குள் நிறைத்து நிற்கின்றன. குடியேற்றப்பட்ட நிலங்களின் மீது கலங்கி ஓடும் தொலைக்காட்சி பெட்டிகளில் கூட ரூபமாய் மனிதர்களின் அலைச்சல். போரில் தோற்றவர்கள் மீண்டும் தம் நிலங்களின் மீது வெறும்பாதங்களை அழுத்தும் போது உணரப்படுவது மண்ணின் கண்ணீரா அல்லது மனிதர்களின் ரத்தமா என்ற ஞாபகக்கலப்பு. போர்ப் புனைவுக்காலம் முடிவற்றது. துயரங்கள் என்றும் அழிக்கமுடியாதவை. காலம் உளுத்து நனைந்த குற்றியின் மேல் பூக்கும் சாம்பல் பூக்களுக்காக காத்திருக்கிறது .

மேலதிகமாக சொல்லப்படவேண்டிய குறிப்புகள்

  1. 29 புரட்டாதி 2019 அன்று வன்னியில் நடந்த 49வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். இது.
  2. இக்கட்டுரையின் உடலுக்குள் எழுதப்படாத சிறுகதைகளும் புனைவுகளும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு பொருத்தமான உடலுக்குள் பேசப்படவேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். என் வாசிப்பு அனுபவமும் எல்லையும் மிகக்குறுகியது. இங்கு தவறவிடக்கூடாதவையென்று நீங்கள் நினைக்கும் சிறுகதைகளை வாசித்து எனக்கு கிடைக்கூடிய மற்றைய சந்தர்ப்பத்தில் பொருத்தமானவற்றை குறிப்பிடத் தவறமாட்டேன் என்று நம்புகிறேன். மின்னஞ்சல் – kanesalingambrinthan187@gmail.com

அம்மாவின் காடு – தேவிபாரதி

ஆதாரமற்ற நெடுங்கனவொன்றின் மீதமரும் புனைவு என் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளோடு உரையாடத் தொடங்குகிறது. புனைவுலகு அகன்ற ஆழி. மிகத் தளர்வான கரைகளைக் கொண்ட ஆறு. எந்தக் குறிக்கோளும் பிரக்ஞையுமற்று செந்தரையின் குளிர்ச்சியில் நிரந்தமாய் உறங்கிப்போன எனக்கு, மிக நிதானமான உலகொன்றையும் அவற்றிக்குத் தோதான உணர்வுகளையும் உருவாக்கித்தந்தது புனைவு. வாழ்க்கையின் நிரந்த உணர்வுகள் புனைவிற்குள் அவற்றிக்கான மெய்வெளியினை பெருக்கிக்கொள்கின்றன. என் புனைவுகள் ஒரு பெண்ணின் நெற்றிக்குள் சுற்றும் சுழல். புனைவொன்றிற்குள் வாழவும் சிந்திக்கவும் பழகிய ஒருத்தர், எப்போதும் வாழ்கையின் மீது கொள்ளும் சலிப்பு ஒரு பொறி போன்றது. எல்லா வெளிகளையும் நிரப்பிக்கொள்ளும் பொறி, தாரை தாரையாய் பாயும் பொறி மூலமாகிறது. இம்மூலத்தின் ஒவ்வொரு நதியும் எனக்குரியதே. புனைவு புரிதலைத்தாண்டி ஏதோ ஒன்றை என்னிடம் கோருகிறது என்பதிலிருந்து அம்மாவின் காடு தழைக்கிறது.

குளிர் பொருந்திய இரவுகளை நினைத்துவாடும் பெருஞ்சொகமான இரவொன்றில் ஆளரவம் அற்ற எலிக்காடொன்றில் உலகம் மலையொன்றின் அமைதியைப்போல உறங்கிக்கொண்டிருந்த கணம் அம்மாவின் காடு வாசித்தேன். ரசம் பூசப்பட்ட சதுரக்கண்ணாடிக்கு முன்னின்று என் கண்களை வெறித்துப்பார்த்துக்கொண்டே நெய்யல் கரையில் எண்ணைப்பிசுக்கேறிய என் தாயின் உருவத்தைக் கண்டேன். அது நிச்சயமாக தேவிபாரதி கண்ட தாய் அல்ல. குதி நிறைய வெடித்துப்போய் மணலின் ஈரம் கசிய நிற்கும் என் தாய். கண்ணாடியின் முன் சிவந்த கண்களோடு உறைந்துபோய்நிற்கும் ஒருத்தனின் அத்தனை துன்பத்தையும் தன் சிவந்த குங்குமத்தால் சூடி நிற்கிறாள் அவள். முடிச்சிலிட்ட மலரொன்றைப்போல அவளின் இளமையும் சந்தோஷமும் மீளவும் உயிர்ப்பிக்கமுடியாமல் வாடிப்போனது. ஒரு கணம் நானும் இன்னொரு கணம் அவளும் குருதி தோய்ந்த கத்தி முனையின் மேல் நகர்ந்துகொண்டே இருக்கிறோம்.

 

அம்மாவின் காடு 

https://devibharathi.blogspot.com/2019/02/blog-post_27.html

குர்ரத்துலைன் ஹைதர் – உதிரும் இலைகளின் ஓசை

“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), மற்றும்   1Q84 (2009–10) என்பன குறிப்பிடத்தக்கன.
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள்  கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
 
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU

“கூனல்” – தெளிவத்தை ஜோசப் – மௌனிக்கும் குரல்கள்.

என்னதான் நாங்கள் சமத்துவமும் சமஉரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத  மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும் மிக குறுகிய மாத சம்பளத்திற்கும் அடிமைகளாக தேயிலை தோட்டங்களில் இன்னமும் மிஞ்சி இருக்கின்ற சாதாரண மனிதர்களின் அவலம் மிகக் கொடியது. குறுகிய லயன்களில் போதிய வசதி எதுவும் இல்லாமல் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் சரிவர இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் குளிரில் வாடி மடிகின்ற மலையக  தொழிலாளர் வர்க்கத்தின் குரல்கள் வெளிப்படுத்தப் படவேண்டும். என்னதான் வாக்குரிமை வசதிகள் என்று நுண்மையாக அரசியல் வழிநடத்தல்களோடு உரிமைகள் கொடுக்கப்பட்டுகொண்டிருந்தாலும், அதே சமயத்தில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்னொரு சமூகம் இருந்துகொண்டே இருக்கின்றது. எல்லோரின் போர்வையிலும் அவர்களும் அடிபட்டுப் போனாலும் அங்காங்கே எழுகின்ற இலக்கிய குறிப்புக்களில் தெளிவாக பதிவிடப்படுகின்றனர். சாதியத்தாலும் அவர்களின் ஆரம்ப கால வருகை நோக்கத்தினாலும் புண்படுத்தப்பட்டு, இறைச்சி சதையின் மேல் நெளிகின்ற புழுவைப்போல அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பாட்டாளி வர்க்கத்தினர்  இன்னமும் பார்க்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.
 
இந்த தொழிலாளர் முதலாளி  வர்க்க பேதம் பற்றி மிக நுண்மையான கதையாடல் மூலம் வெளிபடுத்துகின்ற தெளிவத்தை ஜோசப்பின் படைப்புத் தான் கூனல் சிறுகதை.
 
சிறுகதை இலக்கியத்தின் ஒரு கூறான மெய் தரிசனத்தை இந்த கதையின் பின்னணியில் காணலாம். கதையின் ஆரம்பத்திலிருந்து சாதாரண தேயிலை ஆலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நகர்வுகளோடு தொடங்குகின்றது கூனல். மேற்ப்பார்வையாளர் தனது மேற்பார்வைக்கு வருகின்ற கணம் வரை , அவர்களின் வேலை பரபரப்பிலாமலும் அமைதியாகவும் நடந்துகொண்டிருக்கின்றது. மேற்பார்வையாளரின் முன் வேலையை பரபரப்பாக்கிக் கொள்கின்ற முறையும், அந்த பரபரப்பு வெறும் செய்கையில் மட்டுமே இன்றி உற்பத்தி வேகத்தை ஒரு போதும் அதிகரித்ததில்லை என்ற நிதர்சனமான பார்வையையும் ஜோசப்பின் மொழியாடலின் மிக லாவகாமாக வெளிப்படுகின்றது. தொழிற்சாலையின் ஒவ்வொரு கூறுகளும் அதில் வேலைசெய்கின்ற தொழிலாளர்களும் அவர்களின் உடல் அசைவுகள் , மன சிக்கல்கள், தேவைகள் , கஷ்டங்கள் என்று நுட்பமான விபரித்தல் ஊடாக கொண்டு சென்று கதையின் மைய பகுதிக்குள் நுழைகின்றார்.
 
கதையின் மைய பகுதி ‘பெனிங்சின்’ என்கிற உயர் வகைத் தேயிலையை கையாள்கின்ற பெயர் குறிப்பிடாத தொழிலாளி பற்றியது. அந்த பெயர் குறிப்பிடாத நபர் முழு தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமாக நகர்த்தபடுகின்றார். அவனின் மனநிலை பற்றிய சித்திரமாக ஜோசப் ஒவ்வொரு மலையக தொழிலாளியையும் முன்நிறுத்துகின்றார்.
 
லயன்களில் வசிக்கின்ற மக்களின் பொதுமையான தொழில் தேயிலை தோட்டம் சார்ந்ததாகவே இருக்கும். தேயிலை களத்தில் வேலைசெய்கின்ற ஒரு சாரார், தேயிலை ஆலையில் வேலைசெய்கின்ற ஒரு சாரார் , தேயிலை போக்குவரத்தில் வேலை செய்கின்ற இன்னொரு சாரார் என தேயிலையின் உற்பத்திகளோடு ஒன்றித்து வேலைசெய்கின்ற மக்கள் அவர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு மிக பொருத்தமான உதாரணம் அவர்கள் குடிக்கின்ற தேநீர். என்னதான் உயர் ரக தேயிலையுடன் வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ கடைசி தரத்திற்கு முன்னைய தர தேயிலையாகும். கடைசி தர தேயிலை மரங்களுக்கு உரங்களாக பயன்படுத்தப்படும். ரேசன் அரிசி வாங்குவது போல தேயிலையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இரண்டாம் வடித்தலுக்கு சாயம் வராத கஞ்சல்கள்(தேயிலை) சீக்கிரம் தீர்ந்து போக அயலவர்களிடம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள். எத்தனை நாட்களுக்கு இதே போக்கில் செல்வது. மாத முடிவுகளில் வெறும் சுடு தண்ணீர் குடித்துவிட்டு குளிருக்குள் வேலைக்கு செல்கின்ற துயரம் மிக்க வாழ்க்கை அவர்களது. கதையின் நாயகனது.
 
மனதின் பாய்ச்சலில் நல்ல தேநீர் அருந்தி விடவேண்டும் என்று உயர் ரக தேயிலை சிறிய அளவை தனது கைகளில் மடிப்புக்குள் நிறைத்து சுருட்டி விடுகின்றான். மாடு மாதிரி வேலைகளை செய்து விட்டு இறுதியாக சோதனை செய்யும் இடத்தில், முகத்தில் வெறுமையும் பயமும் மிரட்சி கொள்ள காத்திருக்கிறான். துரதிஷ்டவசமாக அவனின் திருட்டு பிடிபட்டு விட்டது. எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுகிறான். குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். அவன் வியாபாரத்திற்க்கோ அல்லது வேறு தீய நோக்கத்திலோ தேயிலையை திருடியிருக்கவில்லை. அவனின் சிறிய ஆசைக்கு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிக சிறிய விருப்பிற்கு அங்கே முட்டுக்கட்டை போடப்படுகிறது.
 
சிறுகதையின் இறுதி வரிகள், இதுவரை வாசகன் சுற்றிக்கொண்டிருக்கும் உலகத்தின் இருண்ட பக்கங்களை வெளிபடுத்துகிறது. இரவில் மூடை மூடையாக தேயிலை ஒரு கருப்பு காரில் ஏற்றப்படுவதும் அதை காவலாளி சலனமின்றி அவதானிப்பதும் திட்டமிட்ட முதலாளித்  திருட்டை அமபலபடுத்துகிறது. ஒரு சிறிய அளவு தேயிலையை விருப்பிற்காக கொண்டு செல்லும்போது குற்றவாளியாக பிடிபட்ட தொழிலாளியும், அதே தேயிலையை இருட்டில் மூடை மூடையாக சொந்த லாபத்திற்காக முதலாளி களவாடும் போது காவலாளி மௌனமாக ஆதரிப்பதும் வர்க்க பேதத்தின் பரவலாக்கத்தை விளிகின்றது. சோதனை செய்யும் இடத்தில் அவன் ஒரு பெருமனதோடு விடுவிக்கப்பட்டிருக்கலாம், இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் அந்த விடுதலையை தடுப்பது தொழிலாளி என்ற வர்க்க நிலையே. இதுவே முதலாளி  வர்க்கம் சுரண்டு மூடையாக குவிக்கும் போது “ யான் ஒன்றும் அறியேன் பராபரமே” என்றிருப்பதும் வர்க்க நிலையே.
 
தெளிவத்தை ஜோசப் கூனல் என்ற சிறுகதையின் மூலம் கூனலாகிப்போன மலையாக தொழிலாளர் வர்க்க உணர்வு நிலை போராட்டத்தை பதிவிடுகின்றார்.

மாண்ட்டோ படைப்புகள்.- சிறுகதை 1 – “காலித்” – ஊடறுக்கும் மனப்பிறழ்வுகள்.

எங்கள் எல்லோரிடமும் அழிக்கமுடியாத, அதே நேரத்தில் காரணமும் தெரியாத ஒரு வழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. ஒரு நேரத்தில் அதிகம் சிரித்தால் அடுத்து அதே அளவு அழவேண்டிவரும். அதற்காக எமது மகிழ்ச்சியான தருணங்களை வலுக்கட்டாயமாக குறைத்துக்  கொண்டாடுவோம். இது சிறியவர்களில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌதீக ரீதியில் சமானன எதிர் வினை எதற்கும் உண்டு என்பதை மீறிய உள்மன அடுக்குகளின் ஒரு எண்ணமே இது எனலாம். அதிகம் சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை ஒன்று குறுகிய நேரத்தில் வீரியமாக அழுவதை பார்த்திருப்போம். அதை உதாரணமாகவே முன்னோர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். இந்த வழக்கம் சிறுவர்களாக இருந்து வளந்த பின்னரும் தொடரப்படுகின்றது. இந்த எண்ணம் மனதில் இருக்கின்ற ஒருவர், கொண்டாடுகின்ற மகிழ்ச்சிக்குப் பின்னால் அவருக்கு வருகின்ற துக்கம், மகிழ்ச்சியின் காரணமாக உருவானதே என்ற ஆழமான முடிவு ஒன்றை எடுத்துவிட செய்கின்றது. மனதளவில் வலிமை இல்லாதோருக்கு இப்படியான சூழ்நிலைகள் வருகின்ற போது மனப் பிறழ்வுகள் ஏற்படுகின்ற சந்தர்பங்கள் உருவாகின்றது.
images
சாதத் ஹசன் மண்ட்டோவின் காலித் சிறுகதையும் அவ்வாறான மனப் பிறழ்வை சந்திக்கபோகின்ற ஒரு சாதாரண அப்பாவையும்(மும்தாஜ்)  நோய்வாய்ப்  பட்டிருக்கின்ற அவரின் மகன் காலித்தை சுற்றியும் நகர்கின்றது. காலித் தனது முதலாவது பிறந்தநாளுக்கு முன்னரே இறந்துவிடுவான் என்பது உறுதியானதே. இந்த உறுதியை  மும்தாஜின் மனைவி அவ்வளவு தூரம் நம்பிவிடவில்லை. காலித்தின் ஆரம்ப கால செயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாகவும் அவனின் வளர்ச்சி மற்றைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அதிகமாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் இந்த விடயத்தால்  மிகவும் சோர்வுற்றிருந்தான். எந்த நேரமும் காலித் இறந்துவிடக்கூடும் என்கின்ற நினைப்பு அவனை வாட்டியது. அதுவும் காலித்தின் முதல் பிறந்தநாள் நெருங்க நெருங்க இன்னும் அதிகமானது.
 
இவ்வளவு கதையோட்டத்திலும் இரண்டு நிதர்சன சமூகவியல் பார்வையும் அதனோடு தனிமனித எண்ணங்கள் திரிக்கப்படுகின்ற விதமும் சித்தரிக்கப்படுகின்றது. ஒன்று- ஒரு மனிதனின் இறப்பின் பின்னர் அவரை சுற்றியிருந்தவர்கள் இறந்தவரை பற்றி கதைப்பதை கேட்டிருக்கிறோம். அதன் சாரம் இதுவாகத்தான் இருக்கும். – இறப்பதற்கு முன்னர் மிகவும் பொலிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். எல்லோரது மனதையும் கவர்ந்தவராகவும் எல்லா விடயங்களிலும் ஆளுமை மிக்கவராகவும் இருந்தார். வழமையான அவரின் செயற்பாடுகளை விட சமீபத்திய செயற்பாடுகள் மிக நேர்த்தியாக இருந்தன. எல்லாம் அவரின் இறப்பிற்க்கான அறிகுறியாக இருந்து விட்டது. இந்த கதையின் ஓட்டத்தில் மும்தாஜின் மனதிலும் இந்த பார்வை இருந்தது, அவரின் மனைவியின் மனதிலும் இதே  பார்வை இருந்தது. ஆனால் பார்வைகள் இரண்டு ஒன்றுகொண்டு வித்தியாசமானவை. மும்தாஜின் பார்வை இறப்பை நோக்கிய அறிகுறியாகவும் மனைவியின் பார்வை ஆரோக்கியமான குழந்தைக்குரிய அறிகுறிகளாகவும் தென்படுகின்றது. இந்த இடம் மும்தாஜை மனதளவில் வலிமையற்றவராக வெளிக்காட்டுகின்றது. இரண்டாவது முடிவுப் புள்ளியை நோக்கிய நெருக்குதல்கள். ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையிலும் அல்லது போனால் ஒரு வியாபர வேலையிலும் காலக்கேடு முடிகின்ற நேரம் ஏற்படுகின்ற மன அழுத்தம் மிகக் கொடியது. சாதாரண மனிதனின் நிலையிலிருந்து அவனின் நாளாந்தத்தை பறித்து விடுகின்றது. தன்னிலையிலிருந்து தள்ளாட வைக்கின்றது. இது சாதாரண வாழ்வில் வாழுகின்ற எல்லோருக்கும் பொருத்தமானது.
 
பிறந்தநாளுக்கான ஆயத்தங்களை மனைவி விமர்சையாக செய்துகொண்டிருக்கின்றாள். அவளின் சுற்றம் நண்பர்கள் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுகின்றாள். ஆனால் மும்தாஜால் விரைவில் நடக்கப்போகின்ற இழப்பை நினைத்துக்கொண்டே நாட்களை கடத்துகின்றார். மும்தாஜின் எண்ணம் போலவே அந்த நாட்கள் அமைந்து கொண்டு வந்தன. ஒருநாள் மனைவியின் கூக்குரலுக்கு ஓடிப்போய் குளியலறையில் பார்க்க, எப்போதும் கைகளை விலாசமாகவும் குதூகலமாகவும் அசைத்து குழைந்து தண்ணீரில் விளையாடுகின்ற காலித் சோர்ந்து போனவானாக நின்றான். மும்தாஜுக்கு இன்னும் இழப்பின் நாள்நோக்கிய வருத்தம் அதிகமாகின்றது. அந்த நேரத்திலும் அவனின் மனைவி தன்னையும் கணவனையும் சுதாகரித்துக்கொள்ளுமாறு சாட்டுகளைச் சொல்லுகிறாள். காலித் சோர்ந்தும் துவண்டும் போகின்ற சந்தர்பங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. வருகின்ற மருத்துவர்களும் காலிதிற்கு ஏற்பட்ட நோய் கொடியது இல்லை என்றும் அதற்கான மாத்திரைகளை உபயோகிப்பதன் மூலம் குணப்படுத்திவிடலாம் என்றும் ஆறுதல் கூறுகின்றனர். இருந்தும் நாட்கள் செல்லச் செல்ல காலித் தீவிரமாக நோய்வாய்ப்படுகின்றான். அவனோடு மும்தாஜின் நிலைமையும் மோசமாகின்றது. மும்தாஜ் உளவியல் ரீதியாக பாதிப்பையும் நெருக்கத்தையும் உணர்கின்றான். காலிதிற்கு நோய் தீவிரமடைய மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கபடுகின்றான்.
 
இதன் பின்னரான மும்தாஜின் செய்கைகள், அவரின் மனப்பிம்பங்கள் அதில் உண்டாகுகின்ற பிறழ்வுகள் அதன் பின்னணி – இவை வாததிற்க்குரியவை. காலித்தின் தந்தையாக மும்தாஜ் என்கிற தனிநபர் செய்கின்ற ஒவ்வொரு சிறிய செயல்களும் காலித்தை பாதிப்பதாக தன்னுள் எண்ணிக்கொள்கின்றார். வயிறு நிரம்ப தண்ணீர் குடிப்பதிலும் சிகரட் புகைப்பதிலும் காலித்தை மருத்துவ மனையில் சென்று பார்பதிலும் தான் அடைகின்ற நிறைவு காலிதிற்க்கு ஆபத்தை உண்டாகும் என நினைக்கின்றார். அவற்றையெல்லாம் செய்வதில் பின்வாங்குகின்றார். அவரின் உடலை இயக்குகின்ற மூளையின் பகுதியும் உணர்வுகளை இயக்குகின்ற மூளையின் பகுதியும் வேறுவேறாக செயற்படுகின்றது. இதையே மும்தாஜ் அசரீரியாக உணர்கின்றார். வலிமை குன்றிய மனதினை  வலிமையான மறை எண்ணங்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைகின்றது. ஒவ்வொன்றையும் செய்வதால் உன் மகன் இறந்து விடுவான் என்று கூறி கூறியே பாசத்தால் பணியவைத்து அசரீரி காய்களை நகர்த்திக்கொண்டு போகின்றது. ஒவ்வொரு நகர்விற்க்குப் பின்னும் மும்தாஜால் நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தும் மீண்டும் வலிமையாக சூழ்ந்துகொள்கின்ற அசரீரியை மீறி/ உடைத்துக்கொண்டு எழுகின்ற சக்தி அவன் மனதில் இல்லை. அதனால் முழுமையாக ஆட்கொள்ளப்படுகின்றான்.
 
கதையின் நிறைவில் மும்தாஜ் தன் மகனை எடுத்துக்கொண்டாவது அசரீரியை தன்னை பிரியும் படி வேண்டுகின்ற அளவு மனதளவில் பிறழ்வுஅடைந்திருப்பார். இறுதியில் காலித் இறந்து போனான். கதையை மாண்ட்டோ இப்படி முடித்திருப்பார்
பிறகு அவன் தன் மகனிடம் “ காலித் தயவு செய்து இந்தக் குரலை அழைத்துப் போவாயா ?” என்று கெஞ்சினான்.
காலித் தன் தலையை அசைத்து “ சரி “ என்று சொன்னதைகேட்டதாக அவன் சத்தியம் செய்தான்.
 
ஆரம்பத்தில் ஏதோ ஒன்றைப்  பொருட்டு அதிகம் சிரத்தைகொள்வதனால் அதன் மூலம் அதிகம் கவலை அடைவதனால் மனப் பிறழ்வு அடைந்ததோ கடைசியில் அந்த கவலையே பொருட்டில்லாமல் ஆக்கும் அளவு அவை சக்தி வாய்ந்தவையாக மாறிக்கொள்கின்றன.

ஒரு மணி நேரம் முன்பு. – முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் நிறைவு.

ஆ.முத்துலிங்கம் ஈழ இலக்கியத்தின் முக்கிய அடையாளம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. ஒரு கதை சொல்லியின் மிக தேர்ந்த வடிவமே முத்துலிங்கம். கதைகளை வாசகர் சிரமப்பட்டு அணுகாமல் மெல்லிய நீட்சியுடன் விரிகின்ற நுட்பமான கதைசொல்லல் அவரது. முத்துலிங்கத்தின் பல கதைகளின் முடிவும் அதனால் வாசகனுக்கு  நீளுகின்ற வாசிப்பின் பின்னான அமைதியும் அவரின் எழுத்தாளுமையின் வலிமையே.
 
இறுதி காலச்சுவட்டில் வெளியான ஒரு மணி நேரம் முன்பு என்ற சிறுகதையும் வாசிப்பின் பின்னான நீண்ட அமைதியை தருகின்ற அவரின் படைப்பாகும். கல்வியை ஆதாரமாகக் கொண்டு  வறுமையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் தாய் மகன் உறவினை கதையாடலாக கொண்டு எழுதப்பட்டிருகின்றது. நிதர்சனமாக பேசப்படவேண்டிய கரு. இன்றைய சூழலில் கல்வி நிறுவனங்களில் காணப்படுகின்ற அயர்ச்சியான போக்கு வறிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றது. பொதுவாக பல்கலைக்கழக தேர்வு முறை எந்த தரப்பினையும் சாராது சமத்துவமாக இருந்தாலும் அதைத்தாண்டி விரிந்துபோய்க்கொண்டிருக்கின்ற தனியார் கல்வி மையங்களும் இதர அரச கல்வி நிலையங்களும் வறிய மாணவர்களை அடைகின்ற விகிதம் மிக சொற்பமாகவே உள்ளது. கையில் பணம் இருக்கின்ற எவரும் எவ்வித  தகுதிகளும் இன்றி பொறியியலாளர்களாவும் மருத்துவர்களாகவும் கணக்காளர்களாகவும் வேறு வேறு உயர்நிலை உத்தியோகத்தர்களாகவும் உருவாக்க கூடிய கல்வியல் நிலைமை இன்று எழுந்துள்ளது.
 
இதில் வறுமை கோட்டின் கீழ் மிக திறமையுடன் இருக்கின்ற மாணவர்கள் வெளிப்படையாக ஒதுக்கப்படுகிறார்கள். இன்றைய இலங்கையில் இருக்கின்ற பல்கலைகழக நுழைவு முறையில் உட்புக தவறுகின்ற வறிய மாணவர்களின் எதிகாலம் கேள்விக்குறியாகின்றது. அவர்களுக்கான சரியான வழிநடத்தல் அதன் பின்னர் கிடைப்பதில்லை. அவர்கள் வழமை போலவே அவர்களின் குடும்ப தொழிற்கு திரும்பி விடுகின்றனர். இலங்கையில் இருக்கின்ற ஏனைய தொழில் துறை சார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சரியான விளக்கம் உரிய நேரத்தில் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இதிலிருந்து வறிய சமூகத்தின் பின்னடைவு இன்னும் அதிகரிகின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்தின் அறிகுறி அல்ல.
 
இதே பிரச்சனையின் மையத்தில் தான் கதை நகர்கின்றது. சிறந்த கல்வி வலிமை உடைய ஒரு சிறுவனை பெரிய பாடசாலை ஒன்றில் சேர்க்க தாய் எடுக்கின்ற அடுக்குகளோடு கதை ஆரம்பமாகின்றது. கதையின் ஆரம்பத்தில் சிறுவன் கடைக்கு சென்று , ஒரு வீட்டின் அடிப்படை உணவு விகுதி உப்பை கேட்பதும்; கடைக்காரனால் பழைய மிகுதியை செல்லுத்தும்படியும் உப்பு கொடுக்க மறுக்கப்பட்ட நிலையிலும் வீடுவந்து சேர்கிறான். உப்பில்லாத கஞ்சியை சிறுவன் குடித்துவிட்டு தாய் வெறும் வயிறுடன் கிளம்புகின்ற வறுமைக்குறிப்புகள் கதையின் ஆரம்பத்தில் பரவுகின்றன.
 
ஒரு தாயின் மனநிலையை, தனது மகனை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கை உடைய ஒரு தாயின் தாயார்ப்படுத்தல்கள் ஆழமான குறியீடுகளால் உணர்த்தப்பட்டிருகின்றது. படித்த, வசதியான சமூகத்தில் இருந்து வருகின்ற பெண்களின் லட்சணங்களை அவனின் தாய் உருவகித்திருந்த பாங்கில் தன்னையும் ஒரு வசதியான பெண்ணாக அலங்கரித்துகொள்ளும் இடம்; அந்த தாயின் ஆழமான மனசிக்கல்களை எடுத்து நிற்கின்றது. தன் அலங்கோலமே மகனின் கல்விக்கு முட்டு போடக்கூடாது என்கிற மனநிலையை முத்துலிங்கம் சொல்லாமல் சொல்லுகின்றார்.
 
அதே தாய் காலதாமதத்தால் நழுவப்படுகின்ற வாய்ப்பின் பின்னர் மீண்டும் வழக்கமாக அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற பக்குவம் வறுமையின் மிக சிறந்த படிப்பினையாக தோன்றுகின்றது. ஏமாற்றங்களும் வலிகளும் தினம் தினம் பழக்கிப்போன ஒன்றாகவும் கவலைகள் தோன்றுவதும் மறைவது வறிய சமூகத்தின் எழுதபடாத வழக்கமாகவும் இருகின்றது.
 
அதிக கவனமாக சிரத்தையுடன் பள்ளிக்கு மாகாணத்தில் முதல்நிலை பெற்ற மகனை அழைத்து செல்லுகின்ற அந்த தாயின் ஆர்வமும் , வாய்ப்பின் மீது பற்றிருந்தும் வறுமையை நோக்கி விழிப்படைந்த மகனின் ஆறுதல்களும் காலைக்கும் மாலைக்குமான வித்தியாசத்தை சரியாக புரிந்து வைத்துள்ள குடும்பங்களின் பிரதிநிதிகள்.
 
முத்துலிங்கம் என்ற கதை சொல்லி யாரோ ஒரு பிரதிநிதிக்கு முழுமையாக கதைசொன்ன நிறைவை வாசகன் பெற்றுக்கொள்கிறான்.

நிதர்சனம். அன்டன் செக்காவின் வலிமையான மனப்பதிவுகள்

தி இந்துவின் 2016ஆம் ஆண்டின் தீபாவாளி சிறப்புமலரில் பிரசுரமாகியிருந்த அன்டன் செக்காவ் இன் வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எனக்கு சில நிதர்சன உண்மைகளை வெளிக்காட்டியது. வழமையான செக்காவின் சிறுகதைகள் போலவே நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு படைப்பு தான் வலிமையான மனப்பதிவுகள்.
 
எங்கள் எல்லோரிடமும் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. யாரும் அறவே இல்லை என்று மறுக்க முடியாது. பலர் வாழ்நாளில் தாங்கள் ஏமாற்றபட்டோமா என்று தெரியாமலே இறந்து போகின்றனர். சிலர் நெடுகாலத்தின் பின்னர் அறிகின்றனர். நான் கூறும் குணம் ஏமாற்றம் அடைவதே. எந்த பேதமுமே இல்லாமல் எல்லா தேசங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம் என்ற செயற்பாடு வெற்றிகரமாக நடைபெறுகின்றது. ஏமாறுகின்ற செய்கை நெடுகாலமாக இருந்து கொண்டே வருகின்றது. இந்த செய்கையில் பயன்படுத்தப்படும் உத்தியை மையமாக வைத்தே வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது.
 
1880களில் எழுதபட்டிருக்க கூடிய இந்த சிறுகதையில் , அதில் வருகின்ற வழக்கறிஞர் என்ற பாத்திரம் பயன்படுத்துகின்ற உத்தி இன்றைய நவீன சூழலிலும் அதே வழிமுறையில் பயன்படுத்தபடுகின்றது ஆச்சரியமாக இருந்தது. எம்மை விமர்சனம் செய்கின்ற ஒருவர் முதலில் எப்போதுமே எம்மில் உள்ள நல்ல விடயங்களை ஆரவாரமாக சொல்வார். அந்த புகழ்ச்சியில் மதி மயங்கிப்போய் நாமும் அவரின் சொற்களுக்குள் ஒன்றித்து அவரின் மேல் அதீத நம்பிக்கை வைத்துவிடுவோம். அவரின் கருத்துக்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்ற மனநிலையை அவரின் புகழ்ச்சி ஏற்படுத்தி விடும். அவரின் புகழ்ச்சியின் வீரியத்தில் அவரின் சொற்கள் எல்லாமே வேத வாக்கியங்கள் ஆகிப்போகும். அப்படியே அவர் சற்று இறங்கி ஆனால்… என்று ஆரம்பிக்கும் மற்றைய பக்க விமர்சனமும் உண்மை பொய் என்ற வாதங்களுக்கு அப்பால் சரியானதாகவே இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற மனநிலையை நாம் உருவாக்கிகொள்வோம். மனம் பகுத்து அறிதல் என்பதையே மறந்து விமர்சகரின் மூளையில் சிந்தனை ஓட்டத்தோடு கலந்து போகும். மிக அப்பட்டமான பொய்யையும் மெய்யாக்குகின்ற வல்லமை அந்த விமர்சன உத்திக்கு இருக்கிறது.
 
இந்த நுட்பத்தில் தான் அந்த வழக்கறிஞர் தனது நண்பனின் மனதை மாற்றுவான். இதே நுட்பம் நம் வாழ்விலும் பல முறை சந்தித்திருப்போம். நம்முடன் பேச்சு கொடுத்து நம்மை அளந்து ஒரு உயரத்தில் வைத்து விட்டு பின்னர் அவர்கள் பேசுகின்ற வசையையெல்லாம் உள்வாங்குகின்ற மனநிலைக்கு எம்மை தயார்படுத்துவார்கள். இதை சாதாரண நபர்களால் செய்து விடமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் எல்லோராலும் இந்த உத்தியை பயன்படுத்த முடிகின்றது. பயன் படுத்துகின்றார்கள். சாதாரண வாழ்வில் ஒரு நாளில் பலமுறை இந்த அணுகுமுறையை இனி கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம். முக்கியமாக ஒதுங்கி கொள்ளலாம்.
 
வலிமையான மனப்பதிவு சிறுகதையில் இந்த நிதர்சன ஒன்றிப்பை உணரக்கூடிய சந்தர்பங்கள் அதிகம் இருகின்றன.

எளிமை சொல்லும் அனுபவங்கள் – அகளங்கன்

சொந்த வட்டார வழக்கில் ஒரு கதையை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒன்றிப்பு ஆலாதியானது. அத்தோடு கதைக்களமும் சம்பவங்களும் கண்களின் முன்னே இருக்கும் போது கதைசொல்லி ஒரு வீதியினூடாக கதைமாந்தர்களை அழைத்துச் சென்றால் வாசகனின் மனம் அதன் கிளைவீதிகளை எல்லாம் நினைவுபடுத்திக்கொள்ளும். இது வீதிகளைப் போலவே சம்பவங்களுக்கும் பொருந்தும். ஒரு சில சம்பவங்களில் நாம் முதலாம் நிலையிலும் பல சம்பவங்களில் நாம் மூன்றாம் நிலையிலும் நின்று பாக்கின்ற வழக்கத்தை உடையவர்கள். முதலாம் நிலை கதை சொல்லியின் உணர்வு எப்போதும் மூன்றாம் நிலை வாசகனை எளிதாக அடைந்து விடுவதில்லை. இருந்தும் அதிகளவான எழுத்தாளர்கள் இந்த பிளவினை இல்லாது உணர்வுநிலை ஓட்டத்தை கதையில் ஏற்படுத்துவதற்கு கதைகள வட்டார வழக்கினை பயன்படுத்துகின்றனர். இந்த வட்டார வழக்கில் எழுதபடுகின்ற கதைளை இன்னொரு சாராரால் அணுக முடியாமல் போவது , ஒரு சில வட்டாரவழக்கு கதைகளின் வழுவே. இந்த நிலை பெரும்பாலும் இலங்கையில் இருக்கின்ற வட்டார வழக்கு கதைகளுக்கு ஏற்படுவதில்லை. ஈழத்தின் பேச்சு வழக்கு இலக்கண தமிழை அண்மித்ததாகவே இருக்கின்றது.
 
ஒரு கதையின் எளிமை அக்கதைக்கு சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் அமைந்துவிடுகின்றது.  இந்த எளிமை கதை கேட்பவருக்கு சௌகர்யமாக இருக்கிறது, இருந்தும் கதையினை வாசிப்பவருக்கு ? வாசகன் என்ற நிலையில் ஒரு சிறுகதை எளிமையாக இருபதனால் ஏற்படுகின்ற ஒன்றிப்பின்மை தவிர்க்க முடியாதது. ஒரு வேற்று களத்தை வாசகனுக்கு விபரிக்கும் போது அல்லது ஒரு மூன்றாம் நிலை வாழவியலை கூறும் போது எளிமையாக கூறல் என்ற நுட்பம் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இருந்தும் அதே களத்தில் அதே வாழ்வியலில் வாழ்ந்த ஒருவர்க்கு அந்த கதை விரிக்கின்ற கோண பரிமாணங்கள் மிக பெரியவை. இதை வேற்று வாசகாரால் உணர்ந்துகொள்ள கடினமாக இருக்கும்.
 
வவுனியாவின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை அகளங்கள்(நா.தர்மராஜா) ஆவார். அவரது சிறுகதைகளின் தொகுப்பு முற்றத்துகரடி. அதிலுள்ள யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும் என்ற இருசிறுகதைகள் பற்றிய எனது பார்வையும் இவ்வாறான ஒன்றே. அவருக்கே உரிய மிக தெளிவான மொழிநடையும் எளிமையான கதைசொல்லலும் முற்றத்துக்கரடி முழுவதும் காணப்படுகின்றது. வவுனியாவின் இரு கிராமங்களை களமாகக் கொண்டு இரு வேறான பொருளாதார நிலையை உடைய மக்களின் கதைகள் தான்  யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும். யாழ்தேவி தாண்டிக்குளத்தில் வசிக்கின்ற ஒரு ஏழை சிறுவனையும் குடும்பத்தையும் பற்றியும் நாளைக்கும் பூ மலரும் நடுத்தர பொருளாதார நிலையை உடைய ஆசிரியரின் குடும்பத்தை பற்றியும் இருவருக்குமிடையேயான பொதுமையான போர் சூழல் பற்றியும் பேசுகின்றது.
 
யாழ்தேவி
 
விளிம்பு நிலை மனிதர்கள் என்பதற்கு செம்மையான உதாரணம் கூறக்கூடிய குடும்பம் ஒன்றிலிருந்து பாத்திரங்கள் வார்க்கபடுகின்றன. குடும்பத்தின் வறுமையாலும் அம்மாவின் இயலாமையாலும் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் பாடசாலைக்கும் செல்லகூடிய திறமையாக கற்க கூடிய ஒரு பத்து வயது சிறுவனின் ஒரு நாள் வாழ்கையை தான் யாழ்தேவி. போரின் நிலவுகையை விரும்பக்கூடிய தொழில் செய்கின்ற சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். அப்படியான மனநிலையில் உள்ள ஒருவனை தாய் , அவர்களது வாழ்வில் போரினால் உண்டான இழப்புகளை பற்றி கூறி போரின் கொடூரத்தை விவரிப்பதாக கதையை ஆசிரியர் முடித்துக்கொள்வார். ஒரு எளிமையான கதைகூறலின் ஊடாக இந்த உணர்வுநிலை பரிமாற்றத்தை நிகழ்த்தியிருப்பார்.
 
நாளைக்கும் பூ மலரும்
 
அதே ஒரு நாள் வாழ்க்கை , அதே போர்ச்சூழல் ஆனால் தனிமனித உணர்வு போராட்டம். நாளைக்கும் பூ மலரும் கதையின் மைய பாத்திரம் ஒரு ஆசிரியர். நான்கு குழந்தைகளுடனும் மனைவியுடனும் சாதாரண நடுத்தர குடும்பத்திற்குரிய வாழ்வியலை வாழுகின்றார். குண்டு வெடிப்பினால் உருவாகின்ற மன அலைச்சலே மேலோட்டமான கதை.ஆனால் அதில் கதாசிரியர்  உள்ளோட்டமாக சொல்லுகின்ற போரின் போக்கு முதலில் காப்பாற்றபட்டும் பின்னர் இறந்து போகின்ற நாய்க்குட்டியால் படிமபடுத்தபடுகின்றது.
 
நூலகம் இணையத்தளத்தினால் ஆவணபடுத்தப்பட்ட முற்றத்துக்கரடியை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
ஆசிரியரின் ஏனைய நூல்களை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலைப்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில் பனி படர்கின்றது. வெறுப்பின் உச்சத்தில் போய் மணிக்கட்டை அறுத்துகொள்ளும் போது கை நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போகின்றது. முதல் கடிதத்தை காதலிக்கு கொடுத்துவிட்டு ஒளிந்திருந்து  என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் போது கண்கள் படபடத்து கொள்கின்றன. கதை மாந்தர்கள் நகரும் இடமெல்லாம் நாமும் நகர்ந்து போகின்றோம். அவர்களின் உணர்வுகள் எங்களினுள்ளும் தொற்றிகொள்கின்றது. இந்த அனுபவம் தான் சிறுகதை. இதில் உண்டாகும் தருணங்கள் மகத்தானவை. கறுப்பு புள்ளி எழுத்துகளின் ஊடு இந்த பிரபஞ்ச அசைவுகளை எல்லாம் அனுபவித்து விடுகின்றோம்.
 
அப்படித்தான் நாய் வீட்டு ராஜரத்தினத்தின் வீட்டு ஒழுங்கையும். யாழ்பாணம் என்றில்லாமல் வடக்கின் எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு ராஜரத்தினமும் ஒழுங்கையும் இருந்துகொண்டிருகிறது. எங்கள் வீட்டின் எதிர் ஒழுங்கையிலும் அந்த ராஜரத்தினம் இருந்துகொண்டிருக்கின்றார். இந்த மனநிலை உருவாக்கம் மனதினில் ஆழப்பதிவதாக ஜூட் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது. சிறுகதை ஒன்றின் நீள் கால நிலைப்பு, அதில் பதியப்படுகின்ற கூறுகளின் கனத்திலேயே தங்கியிருகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்வியலின் தடயங்களை பெரிதளவில் இலக்கியங்களிலிருந்தே சேகரித்து கொள்கிறோம். அடுத்த சந்ததிக்கு அதை பாதுகாத்து கடத்த முயற்சி செய்கிறோம். இந்த செயன்முறைக்கு ஏதுவான இலக்கியங்களே மகத்தான இலக்கியங்கள். சிறுகதைகளையும் அந்த நோக்கோடு பார்க்கலாம். ஒரு சிறுகதையால் சமூகத்தில் மாற்றம் உருவாகிவிட முடியாது. சமகால அயல் எழுத்தாளர்களை அவர்களே அறிமுகப்படுத்தும் வரை நாமறியோம் என்னும் கீழ் நிலை சமூகத்தில் இருக்கும் போது சமூக மாற்றம் இயலாத ஒன்று. ஆனால் ஒரு சிறுகதையால் மனதில் மூலைகளில் கஞ்சலாய் கிடக்கின்ற அனுபவங்களை மீட்டி கொண்டுவந்து தரமுடியும். அந்த களத்தில் எம்மை அமர்த்தி ரசித்திகொள்ள முடியும். சிறுகதை என்ற கலை வடிவத்தின் வெற்றி அந்த பிணைப்பில் தான் இருகின்றது. ஜூட் இல் வருகின்ற கீர்த்தனாவும், சியாமளனும், தங்கராசும் எம்முள் இருகின்றவர்களே. வீதியில் செல்லும் போது அந்த வீதி முடிவு மட்டும் விடாமல் துரத்திக்கொண்டு வருகின்ற ஜூட்கள் எம்மத்தியில் இருகின்றனவையே. இந்த கதைமாந்தர் அன்னியோன்யம் கதையை மூளைக்கு வலிக்காமல் செலுத்த பெரும் உதவி புரிகின்றது.
 
கதையின் பின்னணி பெரும்பாலும் இரண்டாயிரத்து ஐந்து ஆறுகளில் இருந்திருக்க கூடும். போர் சுற்றிகொண்ட காலம். ஒரு சாதாரண எழுத்தாளான் பார்வையில் யாழ் நகர மக்கள் வாழ்வு வெறிச்சொடிப்போய் இருந்திருக்கும். புறவயமாக அவர்களின் இன்னல் நாட்கள் மனக்கசப்புகள் என போரின் மீதான கொடூரம் எழுத்துகளை எரித்துகொண்டிருக்கும். ஆனால் ஜூட் வேறுவிதமாக நகர்கின்றது. யாழில் வாழ்ந்த எழுத்தாளன் போரின் நடுவில் காணுற்ற கொண்டாட்டம் உவகையளிக்கின்றது. ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக்கிகொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை கூறுகின்றது. இயல்பற்ற அவர்களின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற சந்தோஷமான விடயங்களை கூறுகின்றது.
 

வெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது.  ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.

 

ராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம்.

 
யாழ் பற்றி கேள்வியுராத சில வாழ்வியலை அறியக்கொடியவாறு உள்ளது. இந்த தகவல் தளத்தினூடான சிறுகதையின் பயணிப்புதான் அதன் வலுவை கூட்டி கொள்ளும்.
 

சைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே புடிக்காது 

 
 
நிதர்சனமான சிக்கலையும் அதன் பின்னாலான சம்பவகோர்ப்புக்களும் கதையின் தளத்தை மாற்றிவிடாமல் கொண்டு செல்ல வழிசெய்கின்றன. இன்றைய சிறுகதைகள் உலகில் பெருவாரியான கதைகள் மிருகங்கள் பறவைகள் என்ற உயிரின வட்டத்துக்குள் நின்று பேசுகின்றன. அதில் ஒன்றகாவே இந்த கதையில் இருந்து அழகியலை எடுத்துவிட்டால் எஞ்சும். கதையின் கருவுக்கு அதிக கவனம் செலுத்து இருக்கலாம் போல தோன்றுகிறது. யாழ் செம்மண் வீதிகளில் இருந்து லண்டனுக்கு மாறியபோது உண்டாகின்ற கதைப்பிளவு தள மாற்றத்தை சீராக ஏற்படுத்துவதில் சிக்கலை உண்டாகுகின்றது. ஜூட் இன் மறைவில் எழுத்தாளர் ஏற்படுத்தி இருக்ககூடிய கனம் யாழின் பெரும் சோகத்தை கொண்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை மிக சாதாரணமாக கடந்து செல்கிறார்.
 
கதையின் நடுபகுதியில் வருகின்ற கீர்த்தனாவின் முன்னை நாள் அனுபவங்கள் தொய்வினை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதிலும் எழுத்தாளர் உருவாக்குகின்ற யாழ் பின்னேர வகுப்பின் பின்னரான மெல்லிய கூடல்கள் ரசிக்க வைக்கிறது.
மிகையில்லாமல் சாதாரண ஒரு வாழ்க்கையையும் வாழ்வியலையும் ரசிக்கும் படியாக , மிக முக்கியமாக யாழின் அழகியலை பதிகின்ற விதமாக ஜூட் என்ற சிறுகதை எல்லா வயதெல்லைக்கும் ஏற்புடையதாக எழுதப்பட்டுள்ளது. எந்த சலனமும் இல்லாமல் முற்று முழுதாக யாழையும் நாக்கில் எச்சில் வழிந்து கொண்டிருக்கும் ஜூட்களையும் அனோஜன் பாலகிருஷ்ணன் அவரின் தெளிவான விவரிப்புக்கள் மூலமும் கதை சொல்லல் மூலமும் வாசகனை அணுகியிருப்பது ஜூட் இன் வலிமையான இருப்பை உறுதிசெய்கின்றது.
ஜூட் சிறுகதையை வாசிக்க

ஜூட் – சிறுகதை