போர் மனிதர்கள் காணாத, உணராத ஒன்றல்ல. போர்களையும் அதன் கொடூரங்களையும் அழிவுகளையும் வரலாறு நெடுக மனித இனம் கண்டுகொண்டே வந்திருக்கிறது. போருக்கான சூழல், அதன் பின்னர் மூளும் மனிதர்களின் அரசாங்கங்களின் சுயநலம், தவறான வழிநடத்தல்கள், துரோகங்கள், தோல்விகள், இழப்புகள், மரணங்கள், கண்ணீர், அத்துமீறல்கள், போரில் வெற்றி, அகதிகள், ஊனமுறவர்கள், அனாதையாக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள், காணமல் போனவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், பண்பாட்டு அழிவு, வடுக்கள், ஏளனங்கள், உள்ளூர மூண்டு எழும் கோபம், ஞாபகங்களில் இருந்து அகற்றிவிடமுடியாமல் கீறலாகிப்போன நாட்கள், மீண்டும் போருக்கான சூழல். போர் எப்போதும் முடிவடைவதில்லை. போருக்கு தொடக்கம் நடுவு முடிவு என்று ஏதுமில்லை. ஒரு நிலத்தில் என்றைக்கேனும் ஒரு நாள் போருக்கான முதல் ரத்தம் விதைக்கப்படுகிறோ அன்றிலிருந்து காலம் சூன்யமாகிவிடுகிறது. எதிர்காலம் என்ற ஒன்று அந்நிலத்திலிருந்து கண்காணாத தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆச்சரியமாக போர் யார் பக்கமும் சாய்ந்திருப்பதில்லை. அதற்கென்று மொழியோ இனமோ இருப்பதில்லை. அவற்றுக்குத் தேவையானவை தோல்விகளும் மனித உடல்களும் தான். போருக்குப் பின்னர் என்பது மாயை. அது என்றைக்கும் வரையறுக்கமுடியாத ஒன்று. காண்பியலுக்கு போருக்கு பின் என்பது காலத்தை வரையறைசெய்துகொள்ள ஏதுவாயிருந்தாலும், இக்கட்டுரையில் போருக்குப் பின்னர் என்பது மிகச்சரியாக மே 19, 2009 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன மதிய நேரச் செய்திகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட போது பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த எனது அம்மா அச்செய்தியைக் கண்டு சுவரோடு சாய்ந்து தன் தலையில் மேல் கை வைத்ததோடு தொடங்குகிறது.
கட்டுரைக்கான உடல் ஒன்றினைத் தெரிவு செய்வதன் மூலம் வாசிப்புகளையும் புரிதல்களையும் ஒழுங்கமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். போருக்குப் பின்னரான சிறுகதைகளின் களங்கள் இருவேறு நிலங்களில் உயிர்கொள்கிறது. ஒன்று போர் நிலம் மற்றையது போர் நிலத்திற்கு அண்டைய நிலம். போர் நிலமென்பது விடுதலைக்காக ஆயுதங்களைத் தூக்கி மனித உயிர்களைப் பணயம் வைத்து நின்ற நிலம். அதே போன்று ஆயுதம் தாங்கிய போர் நடக்கும் நிலத்தைச் சுற்றி போரின் மௌன ஓலம் வெடித்துப் பரந்த நிலங்கள் அனைத்தும் போருக்கு அண்டைய நிலங்கள். அவை தூரங்களால் அல்ல துயரங்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. நிலம் போரின் முக்கிய பொறி. மனிதர்கள் நிலங்களின் மேல் கொண்டிருக்கும் நித்தியமான உறவும் ஆதரவும் போரில் பகடையாக உருட்டப்படுகிறது. பரந்தனில் எழுநூறு கோழிக்கால் குறியிட்ட மாடுகளுடன் தொடங்கி செல் அடிக்கு திக்கெது திசையேது என்றறியாமல் இறுதியில் மீள் குடியேற்றத்தில் பிடித்த ஒரு கோமதியும் தொலைத்த அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது மற்றைய கோமதிகளும் தன் நிலத்தின் மீது யதார்த்தன் பிடித்து நிற்கும் துண்டுக் கண்ணாடி. சுருவில் மக்கள் சட்டி பானைகளோடு தேவாலயத்திற்கு கிளம்பும் போது கப்டன் பொன்ராசா தன் நிலத்திலிருந்து வர முடியாமல் சுருள்வதும் பாழங்கிணத்திற்குள் வருடக்கணக்கில் பாசிகளையும் தவளைகளையும் நுண்ணங்கிகளையும் போல உயிர்ப்புடனிருக்கும் பெயர் தெரியாத ஊரிப்புல குடிமகனும் சோபா சக்தியின் நில அச்சாணியில் உருளும் துயரங்கள். பிண முற்றிப்போன இறுதிக்காடுகளை அவர்கள் கடந்து என் நிலத்தின் தரப்பாள்களுக்குள் திணிக்கப்படும் போது அவர்களின் உயிரைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் அந்நிலத்திற்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் புதைவிட்டு வந்தார்கள். போரின் நிலம் உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் சுடுகாடாய்ப்போனது. தமிழினிக்கு தன்னிலத்தில் கந்தக வாசத்தோடும் ரத்த வாடையோடும் பச்சிலைகளின் கருகல் வாசனையும் சேர்ந்து துயரத்தைத் தருகிறது. அது புனைவால் போரை நிகழ்த்தும் எவராலும் உணரமுடியாத வலி. களமுனையில் தன் நண்பி சங்கவியோடு மரத்தின் கீழிருந்து பேசிக்கொண்டிருக்கும் தமிழினியின் மனதில் போரைப்பற்றிய பயமில்லை. ஆனால் எதிர்காலத்தைப்பற்றிய நிச்சயமின்மையும் இழப்புகளைப்பற்றிய கவலையும் நீண்டிருந்தது. அது அவளின் கண்களுக்குள் திரண்டு மரணத்தின் வாசனையாய் நிலமெங்கும் படர்கிறது. புத்தர் அவன் மகளிடம் மரணமில்லாத வீடொன்றிலிருந்து ஒரு பிடிக் கடுகு வாங்கிவா என்றபோது எல்லா வீட்டிலும் மரணமிருந்ததைபோல எந்த வீட்டிலும் கடுகிருக்கவில்லை என்ற உண்மையும் எமக்குள் உறைக்கிறது. இழப்பு போரின் நிலத்திலிருந்து முகாம்களை நோக்கி தன் புளுத்துப்போன வாயைத் திறக்கிறது.
யதார்த்தனின் முகாம்கள் முக்கியமான அமைப்பு. போர்நிலத் தொடர்ச்சி. ஆனால் அவை உரிய மண்ணால் செதுக்கப்பட்ட சிற்பங்களா என்றால், இல்லை என்று தான் நம்புகிறேன். ஆனால் இக்கட்டுரைக்கு சிற்பங்களை விட மண்ணால் செய்யப்படுகின்றன என்பது முக்கியமாகத் தெரிகிறது. இது யதார்த்தனுக்கு மட்டுமல்ல பலருக்கும் பொருந்தும். சைவே என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்பட்ட பிரியங்கா, அப் பெயரையும் நிறத்தையும் பூச மரணமொன்றே காரணாமாயிருக்கிறது. மனிதர்களின் பெயர்களையும் மன அமைப்புகளையும் சமூக அமைப்புகளை இலக்கிய உடல்களையும் மரணங்கள் உருமாற்றியிருக்கிறன. மரணங்களும் இழப்புகளும் சிறுகதைப் போக்குகளை மாற்றுவதில் முக்கியமானதாயிருக்கின்றன. எங்களுக்கான வாழ்க்கையைப் பற்றிய அறமும், அநித்தியம் பற்றிய உண்மைகளும் மரணங்களின் மூலமே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலத்தின் புனைவு மொழி இறந்த உடல்களுக்குள் மௌனமாய் உறைந்துபோன கனவுகளின் மொழி. முன்னர் விஸ்பர் வாங்குவதைக் கூட தயக்கமாகக் கூறும் பிரியங்கா, பின்னர் வெகு லாவகமாக பெரிய மோட்டார் சைக்கிளில் ஏறி உலகத்தின் முன்னால் தன்னை திறந்து கொள்வது வரை போர் மனிதர்களை வெளிப்படையாக்கியிருக்கிறது. இந்த வெளிப்படைத்தன்மை – அவர்களின் அரசியலிலும் தென்படுகிறது. பசித்த வயிற்றுடன் சுத்தமாக்கப்பட்ட வீரை மரத்தின் கீழிருந்து என்றைக்கும் திரும்ப முடியாத தம் இழந்து போன வாழ்க்கையைப் பற்றி அந்தச் சிறுவனின் குடும்பமும் – அதே மரத்தின் கீழ் முன்னொரு மழைக்கால இரவில் கறுத்த வானத்தை நோக்கி ஒளிர்ந்துகொண்டிருந்த விழிகளுடன் விடுதலைக்கான ஆசையோடு தன் மூச்சை நிறுத்தியிருந்த தமிழினியின் தோழியும் – பல்லாயிரம் சிறுவர்களும் குடும்பங்களும் சங்கவிகளும் சாக்காட்டின் ஒவ்வொரு நிழலும் நிலைத்து நிற்கிறார்கள். வானம் அவர்களின் தோல்விகளால் இருண்டிருக்கிறது. புனைவுகளையும் சிறுகதைகளையும் தவிர எந்த விசாரணையும் அவர்களின் காயங்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை. முகாம்கள் மனித அவலத்தின் ஒட்டுமொத்தப் புகைப்படம். அன்று யூதர்களின் உடல்கள் கருக்கப்பட்டு எழுந்த புகைக்கூடத்தின் மணத்தையும் மினிக் பாம்கள் எங்கும் எழுந்த மனிதர்களின் மணத்தையும் எந்த வித்தியாசமின்றிப் பார்க்கிறேன். மரணங்களின் மணமும் போரில் தோற்றவர்களின் மணமும் வேறு வேறல்ல.
புலம்பெயர்வு என்றைக்கும் திரும்பமுடியாத வாழ்க்கை நிலைமை எமக்குத் தந்திருக்கிறது. இந்நிலம் புலம்பெயர்வுகளுக்காக சபிக்கப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து மனிதர்கள் பிரியும் போது அந்நிலம் தன் பிடிகளை இழக்கிறது. ஒவ்வொரு மனிதரும் நிலத்தை விட்டுப்பிரியும் போது தம்மோடு நிலத்தின் ஒரு துண்டத்தை பெயர்த்துக்கொண்டு கிளம்புகிறார்கள். இன்று அவர்களின் மூன்றாம் சந்ததியும் உருவாகிவிட்டது. ஆனால் என்றைக்குமான அவர்களின் நிலம் பெயர்த்தெடுத்துப்போன அத்துண்டு நிலமாகவேயிருக்கிறது. அவர்களின் கதைகளில், பயணங்களில் அந்நிலம் ஒவ்வொன்றாக உருப்பெறுகிறது. அவை களிமண்ணைப்போல ஒவ்வொரு வடிவங்களில் ஒவ்வொரு நிறங்களில் தம்மை உருமாற்றி உருமாற்றிக்காட்டிக்கொண்டிருகின்றன. வேற்றுநிலத்தின் ஆற்றுப்படுக்கைகளிலும் மலைகளிலும் தன்னிலத்தை விரித்து சாய்ந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் விருப்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விரும்பி ஏற்காத வாழ்க்கைக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் பலர் இறுதி முனையிலும் முகாம்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிளுமிருக்க தனித்திருந்து உழலும் அவர்களின் மனநிலையும், போருக்குப்பின்னர் வருவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டும் வரமுடியாமல் உழலும் மனிதர்களையும் கதைகள் நெடுக காணக்கூடியதாயிருக்கிறது. போர் அவர்களை இன்னொரு வழியில் சிறைபிடித்திருக்கிறது. தருமலிங்கமும் அசோகமலரும் இந்தியாவில் தனித்திருக்கும் இனிய காலம் இன்னமும் எத்தனையோ பேருக்கு வாய்க்காதது. சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் இந்நாட்டில் இருக்கும் சுதந்திரம் புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. சோபா சக்தி போரின் கதைகளை அரசியல் பிரசுரமாக்குகிறார். அவர் காட்டும் சாமான்ய மனிதர்களின் அலைக்கழிப்பைத் தவிர வேறு எந்தத்தரப்பையும் அணுகுவது எனக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு கதை சொல்லியென்ற அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளத்தையும் ஏற்படுத்துமளவிற்கு எனக்கு அவரின் சிறுகதைகளில் உண்மையை உணர முடியாதுள்ளது. புனைவுகளுக்கு உண்மை அவசியமில்லை என்றாலும் போர்ப் புனைவுகளில் உண்மை அற்றுப்போகும் போது போர் சந்தையாக்கப்படுகிறது. இங்கு உண்மை என்பது பொது மொழியில் பொய்க்கு எதிரானது. புனைவு மொழியில் உண்மைக்கு நிகரானது. இருந்தும் சோபா சக்தியின் சாதாரண மனிதர்களை மதிக்கிறேன். வேலும் மயிலும் பமுவும் அப்பாவிகளாக போர்நிலத்தில் பலியிடப்படும் போது இரண்டு தரப்பினரும் கொண்டாடுகின்றனர் . போரை அப்பாவி மனிதர்களின் இழப்பாக இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அவரின் பெரும்பாலான கதைகளில் போரோடு துரோகமும் கலந்துகொள்கிறது. “தமிழனை தமிழனே இப்படி செய்யக்கூடாது” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.
பொன்ராசாவின் கதைக்கருக்கு ஏறக்குறைய ஒத்த கதையை புனைகிறார் கபில். கபிலோடு தர்மு பிரசாத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டியிருக்கிறது. சோபா சக்தி, கபில், தர்மு மூன்று பெயரையும் ஒரே முக்கோணத்தில் வைத்து சுழற்றிப் பார்க்க உடலெது கதையெது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று மேவிக்கொண்டிருக்கினர். தர்மு பிரசாத்திடம் வலிமையான கதைகள் இருக்கின்றன. தன்னுள் தனித்து ஊறும் நிலமும் சொற்களுமிருக்கின்றன. களவாடப்பட்ட உடல்களுக்குள் வலிமையான இக்கதைகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. தனிமையின் நூறு ஆண்டுகளில் தண்டனைக்குட்படும் அக்கா, தமிழ் சமூகத்தின் மொத்த பெண்ணுருவாய்த் தெரிகிறார். போர் பெண்களை வலிமையாக்கியது. வரலாற்றின் பனியாய் எம் பெண்கள் உருக்கொண்டார்கள். தனிமையின் நூறு ஆண்டுகள் மூன்று கோடைகளாக விரிகிறது. என்றைக்குமே மாரியைப் பார்க்கமுடியாத நிலத்தின் தனி மனிதப் பிறழ்வை, தனிமனித அழிவை திருகுவதன் மூலம் சமநிலையற்ற போர் விதிகளின் மீது தறிகெட்டாடும் மொத்த சமுகத்தின் பிறழ்வை மொழிக்குள் கொணர்கிறது. மோசஸ் மீளுயிர்க் கொண்டதும் அக்காவின் உயிர் எடுக்கப்படாமல் அந்தரத்தில் விடுத்துப் போனதும் கதைகளின் போக்கை ஆணுயிர், பெண்ணுயிர் என்று மொழிபடுத்துகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் சோபாசக்தியின் சக்கைகளாவே எனக்குத் தோன்றுகின்றன. கதையுடல்கள் போரின் கதைகளுக்கு அவசியமானவையா என்ற கேள்வி எப்போதும் எமக்குள் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக்கு ஆதி காரணம் எங்களை அடையாளப்படுத்தியவர்கள். ஒரு துளியை பாலாகவும் ரத்தமாகவும் பார்க்கப்படவேண்டியிருக்கிறது. இன்னமும் அதிகாரத்தின் பார்வையில் சிறுபான்மையாக ஊரும் எமக்கு வரலாறு பன்முக வாசிப்பினைக் கோருகிறது. இலையின் கீழ் ரவையை மறைத்து கைமாற்றவேண்டியிருக்கிறது. நியம புத்தரை காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கும் ராகவனின் பொறி கதையுடல்களுக்கு சிறந்த உதாரணம். எல்லோரும் போரின் தொடக்கத்தில் மிகத் திடமான குறிக்கோள்களுடனிருந்து உயிருக்காய் ஒவ்வொன்றாகக் கைவிட்டு கடைசியில் உயிரோடு மட்டுமே திரும்பிய பொதுவான போக்கை சிறுகதைகள் கொண்டிருக்கின்றன. அன்று கைவிட்டுப் போன நிலமும் பின்னர் எம் கைகளுக்குக் கிடைத்த நிலமும் ஒன்றல்ல. பௌதீகத்தாலும் மனத்தாலும் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடைய இரண்டு நிலங்கள். இது போர் நிலத்திற்கு மட்டுமேயுரிய குணமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. வாழ்க்கை சாமான்ய மனிதர்களின் மீது தொடுக்கும் எல்லாவகையான போர்களிலும் போராட்டமும் தோல்விகளும் பெரும்பங்காயிருக்கிறன. அதிகாரம் மனிதர்களின் அன்றாடத்தை பூனைகளைப்போல நசுங்கித் தின்கின்றன. எல்லா வளைகளிலும் வாய்வைத்திருக்கும் பூனையின் பிடியில் திசேராவின் புனைவுகள் உருப்பெறுகின்றன.
கதையுடல்களின் சாத்தியங்களையும் கட்றற்ற மொழிச் சோதனைகளையும் புனைவுகளில் பரிசோதித்துப்பார்க்கிறார் திசேரா. எண்களையும் தாவரங்களையும் கவிதை மொழிகளையும் குழந்தையொன்றின் முதல் முயற்சிகள் போல கையாண்டுபார்க்கிறார். தன் மொழியின் கூறு நிலைகளை மாற்றுவதனாலும் மொழிக்குள் வெறுமையையும் இறுக்கத்தையும் ஏற்படுவதுவதன் மூலமும் கதைகளைப் புனைய விரும்புகிறார். வழிகள் அதிகமிருந்தும் இயற்கையை சவாலுக்கு அழைத்து ஆடும் பகடையை நிகழ்த்திப்பார்க்க தவறுகிறார். பன்மைப்பால் நிலைகளால் புனைவு மனத்தை வனையும் தன்மை உரையாடப்படவேண்டிய ஒன்று. தன்னுடைய பால் நிலையைக் கழைந்து எழுதுவது என்பதும் அதற்குரிய பிரக்ஞையுடன் மொழியைக் கையாள்வது என்பதும் இன்று பலரிடம் இல்லாத ஒன்று. தமிழில் போதுமானளவு உரையாடல்கள் நிகழ்த்தப்பட்ட பிறகும் ஆண், பெண் விகுதிகளை கையாள்வதில் தடித்த ஆண் மனோபாவமும் அலட்சியமும் நிறைந்திருக்கிறது. மொழியை அதன் பாட்டில் நகரவிட்டு பின்தொடரும் திசேரா அவற்றில் மிகவும் பிரக்ஞை உணர்வோடு செயற்பட்டிருக்கிறார். கதைகளைப்பற்றியும் அதன் விவாதங்கள் வாசக பார்வைகள் என்று கதைகளின் எல்லாக் கூறுகளின் மீதும் விருப்பமும் ஈடுபாடுமுள்ளவர்கள் சமூகத்தின் அடிப்படை உண்மையை மொழியில் கையாள்வதிலுள்ள தயக்கம், தங்களைத் திருத்திக்கொள்வதில் உள்ள அலட்சியமும் ஏமாற்றமளிக்கிறது. திசேரா வெறுமையான நிலத்தின் ஒழிந்திருக்கும் கருமௌனங்களைப் புனைகிறார். இழத்தலின் காலம் பரிசோதனைகளின் உயிர்ப்புள்ள குழந்தையாக உணர்கிறேன்.
போரின் நிலத்திற்கும் அண்டைய நிலத்திற்கும் இடையில் மனித அலைச்சல்களின் வேர் பிணைந்து கிடக்கிறது. அதன் நுண்மையான வேர் மயிர்களின் கசப்பு இந்நிலத்தின் மீது எழுதப்பட்ட, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும், எழுதப்போகும் எல்லாப் புனைவுகளிலும் தோய்ந்து அலைந்துகொண்டிருக்கும். காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இது என்கிறார் கற்சுறா. எம்முன் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது, புனைவுகள் சுவர்களில் துளைக்கப்பட்ட ரவைக் கலன்களுக்குள் நிறைத்து நிற்கின்றன. குடியேற்றப்பட்ட நிலங்களின் மீது கலங்கி ஓடும் தொலைக்காட்சி பெட்டிகளில் கூட ரூபமாய் மனிதர்களின் அலைச்சல். போரில் தோற்றவர்கள் மீண்டும் தம் நிலங்களின் மீது வெறும்பாதங்களை அழுத்தும் போது உணரப்படுவது மண்ணின் கண்ணீரா அல்லது மனிதர்களின் ரத்தமா என்ற ஞாபகக்கலப்பு. போர்ப் புனைவுக்காலம் முடிவற்றது. துயரங்கள் என்றும் அழிக்கமுடியாதவை. காலம் உளுத்து நனைந்த குற்றியின் மேல் பூக்கும் சாம்பல் பூக்களுக்காக காத்திருக்கிறது .
மேலதிகமாக சொல்லப்படவேண்டிய குறிப்புகள்
29 புரட்டாதி 2019 அன்று வன்னியில் நடந்த 49வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். இது.
இக்கட்டுரையின் உடலுக்குள் எழுதப்படாத சிறுகதைகளும் புனைவுகளும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு பொருத்தமான உடலுக்குள் பேசப்படவேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். என் வாசிப்பு அனுபவமும் எல்லையும் மிகக்குறுகியது. இங்கு தவறவிடக்கூடாதவையென்று நீங்கள் நினைக்கும் சிறுகதைகளை வாசித்து எனக்கு கிடைக்கூடிய மற்றைய சந்தர்ப்பத்தில் பொருத்தமானவற்றை குறிப்பிடத் தவறமாட்டேன் என்று நம்புகிறேன். மின்னஞ்சல் – kanesalingambrinthan187@gmail.com
உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.
ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம்
வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை
குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம்
முகப்புத்தகம் – மற்றைய எல்லாப் படங்களும் அவரவர் முகப்புத்தகங்களில் இருந்து பெறப்பட்டது.
அனார், சுகுமாரன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் எனது வலைதளத்தில் சுயாதீனமாக வெளியிடப்பட்டவை.
முகப்பு படம் என்னால் வடிவமைக்கப்பட்டது.
இக்கட்டுரைகள் எழுதும் போது உடனிருந்து திருத்தங்கள் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் மற்றும் உன்னதம் கௌதம சித்தார்த்தன் ஆகியோருக்கு நன்றிகள்.
கட்டுரைகள்
எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்
தர்மினி – அவளொருத்தி கீறிய படம்
அனார் – வெளிச்சத்தின் குரல்
சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்
எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்
நன்றி – ரஷ்மி
நன்றி – வடலி
ஓவியம் – ரஷ்மி
(01)
போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் – சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும் சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.
“என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”
அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?
“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைக்கின்றது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.”
கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றைவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.
“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”
செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?
ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது. இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.
எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.
“எனது உடைந்த குரலில்
நானும் பாடவிரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”
ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.
(02)
மனிதர்களில் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் முடிவில்லாத கனவு வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற இயல்பை பெற்றவுடன் மனம் ஆர்ப்பரித்து எல்லையற்று விரிகின்றது.
உலகத்தின் கோரப் பற்களாலால் குதறப்பட்ட மனிதர்கள் – ஒடுக்குமுறைகளுக்குள் வாழுகின்ற மனிதர்கள் – கனவு வெளிகளின் அசாத்திய எல்லைகளை அனுபவிக்கிறார்கள். போர் சூழப்பட்ட நிலம் ஒன்றில் வாழுகின்ற மனிதர்களின் கனவுலகம் சுதந்திரக் கனவுகளால் நிரம்பியிருக்கும். விடுதலை பற்றியும் சந்தோசங்கள் பற்றியும் நிறைந்திருக்கும். நிலத்திற்கான போராட்டம் ஒன்றில் நிலம் பற்றிய கனவுகளை மனிதர்கள் அதிகமாக உருவாக்குவார்கள். தமிழர்களுக்கு நிலம் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களுக்குள் சாதிய அமைப்பே நிலத்தை அடிப்படையாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதி சுதந்திரம், பெண்விடுதலை போன்று காணி நிலத்தையும் வேண்டிப்பாடியுள்ளார். தமிழர்கள் நிலங்களை உயிருள்ளவையாக பாவிக்கிறார்கள். உயிரின் உற்பத்திக்கான களமாக நினைக்கின்றார்கள். தோட்டமும் வயலும் கால்நடைகளும் சந்தோஷங்களும் சோகங்களும் இறப்புகளும் இழப்புகளும் நினைவுகளும் நிறைந்ததாக நிலத்தை அணுகுகிறார்கள். ஈழத்து நிலங்கள் இவற்றுடன் கூடவே போரையும் வீரத்தையும் துரோகத்தையும் நினைவுபடுகின்றன.
நாங்கள் ஒரு இரவில் நூறு கனவுகளைக் காண்கிறோம்
பிரிவு பற்றிய கனவுகள்
பிரிவு பற்றிய கனவுகள்
எல்லாமே அது தான்.
எங்கள் கனவுகளில்
பாலைவனங்கள் எங்கள் தலைகளின் மேலே சுழல்கின்றன.
மனிதர்களற்ற தெருக்களில்
கூரைகள் இல்லாத வீடுகளில்
பயிர்களற்ற தோட்டங்களில்
காளான்கள் பூத்தன
முட்கள் பெருகிப் பெருகி வானையளந்தன.
கற்பனை சாத்தியமாகின்ற பெருவெளியிலும் நாங்கள் பிரிவையே கனவு காண்கிறோம். எங்களுக்குள் சாத்தியமான எல்லா வெளியையும் பிரிவு நிரப்பிவிடுகின்றது. பிரிவு என்பது எங்களோடு பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. போராட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருத்தரை இணைக்கவேண்டிய கட்டாயத்தின் மூலம் எல்லாக் குடும்பத்திலும் பிரிவு வலுக்கட்டாயமாக சேர்ந்துகொண்டது. கூடவே இடப்பெயர்வு. நிலங்களைச் செல்கள் உழுது தள்ள – உயிரைக் காப்பாற்ற சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் லட்சக்கணக்கில் கிளம்பிய மனிதர்களின் கனவுகளில் பிரிவைத் தவிர வேறு எது ஆக்கிரமிக்க முடியும். இயற்கையினையும் சொந்தங்களையும் கட்டிக்கொண்டு வனப்பாக வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்து ஆளரவம் அற்ற தெருக்களையும் செல்களாலும் கிளைமோர்களாலும் சிதறடிக்கப்பட்ட வீடுகளையும் குருதியுறைந்த தெருக்களையும் இராத்திரிகளில் கேட்கின்ற அழுகுரல்களையும் சிதைந்து போன உடல்களையும் கடந்து இடம்பெயரும் போது பிரிவுத்துயர் அன்றி வேறெதுவும் நினைவிலும் கனவிலும் எழாது.
ஒவ்வொரு கிராமமாக இடம் பெயர்ந்து செல்லும் போதும் அவர்களை வரவேற்க புதிய கிராமங்கள் மீதம் வைத்திருப்பது முன்னைய மக்களின் பிரிவுத்துயர் மட்டுமே. ஆட்கள் இல்லாமல் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போதும் அங்கே கவனிக்க ஆட்கள் இல்லாமல் பற்றை எழும்பிப்போன நிலங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே சேதி பிரிவு. அகதிகளின் கனவுகள் நிலம் ஒன்றின் பிரிவைப் பற்றியதாகவே இருக்கும்.
காலத்தை நெய்தவனை
சபித்தன உக்கிப்போன பொம்மைகள்.
எங்களைக் கடந்துபோகின்ற ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும்
பெருமூச்சு விடுகின்ற பட்சிகள்
எங்கள் கனவுகளின் காட்சிகள்
தெளிவற்றும் உருவமற்றும்
இரவில் சிதறின
திசைகளில் எது சூரியனின் திசை
எது நாங்கள் பயணிக்கின்ற திசை?
மக்கள் கொத்துக்கொத்தாக இடம் பெயர்கின்றார்கள். தங்கள் உடமைகளை சைக்கிளிலும் வாகனங்களிலும் கட்டிக்கொண்டு பிள்ளைகளை இடுப்பில் சுமந்தபடி மழை வெயில் இரவு பகல் என்று எதையும் பொறுப்படுத்தாமல் இடம்பெயர்கிறார்கள். அடர்ந்த வன்னிக்காடுகளுக்குள்ளாக இருட்டினில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நடக்கிறார்கள். முன்னரே மக்கள் நடந்த தடங்களிலும் – இனி வரப்போகின்ற மக்கள் நடப்பதற்காக தங்களையும் உருவாக்கியபடி நடக்கிறார்கள். நிலத்தைப்பற்றிய கனவுகள் இருட்டில் சிதற அழிய இந்த கொடூர காலங்களை நெய்தவனை சபித்தபடியே திசையறியாத வனாந்தரத்துக்குள் உக்கிப்போன பொம்மைகளாக நடக்கிறார்கள்.
நாங்கள் பிரிந்து விட்டோம்
எமது நிலத்தை, எமது பூர்வீகத்தை
எமது பொறுமையை, எமது மௌனத்தை.
பின்குறிப்பு.
எஸ் போஸின் “காலத்தை நெய்தவனைச் சபித்தன பொம்மைகள்” என்ற கவிதையினை முன்னிறுத்தி இக்கட்டுரையின் பகுதி (02) எழுதப்பட்டிருக்கிறது.
* எஸ் போஸின் படைப்புகள் முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில் ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர் இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில படைப்புகள் மறைந்து வாழுகின்றன.
தர்மினி – அவளொருத்தி கீறிய படம்
நன்றி – முகப்புத்தகம்
நன்றி – முகப்புத்தகம்
இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளினையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களைப் பற்றியும் , இன்னொரு தொகுதி இடம்பெயர்வு – புலம்பெயர்வுகள் பற்றியும் இன்னுமொரு தொகுதிக் கவிதைகள் புலம்பெயர் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.
என்று ” குரல்கள் ” என்ற கவிதையில் கேள்வி கேட்கின்ற தர்மினி
இருளே உண்மை
இருளோ வெட்கம் அறியாது
அது கசிந்த மனதுகளைத் துடைக்கும் கடுதாசி.
என “இருளைத் தரிசிக்க…. ” என்ற கவிதையில் அவரே பதிலளிக்கிறார்.
சுதந்திரம் என்பதை என்னவென்றே அறியாத காலத்தில் உழன்ற மக்களின் உணர்வுகளை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. போராட்ட குழுவும் அரசாங்கமும் ஒப்பந்தங்கள் செய்வதும் – குறுகிய காலத்திலேயே அவை அனைத்தும் மீறப்பட்டு மீண்டும் இருள் சூழ்வதும் ஈழத்து மக்களுக்கு புதிதான ஒன்றும் இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் சுதந்திரத்தைப் பற்றிய கனவு மேலெழுகிறது. சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே சுதந்திரத்தை அளிப்பதைப் போன்ற அவல நிலைமையை அடைந்துவிட்டார்கள். இதனால் சுதந்திரம் என்பதே என்னென்று அறியாமல் – அதற்காக காத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தைப் பற்றி பாடியும் எழுதியும் அலுத்துவிட்டார்கள். எழுதிய அனைத்துமே சருகுகளாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
வெளியே மழையில்லை
கருமுகிலில்லை
புழுக்கமில்லை
ஆயினும் மழை பற்றிக் கதைக்கலாம் தானே?
போர்க்கவிதைகள் வெறுமனே வார்த்தைகளையும் உணர்வுகளையும் மட்டும் கொண்டுவருவன அல்ல. போர்க்கவிதை ஒன்றின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. கவிதையுடன், அதன் பின்னணியில் ஓடுகின்ற வரலாறும் கடத்தப்படுகிறது. எந்த ஒரு இலக்கியத்தின் பின்னும் அதன் பின்னணி வரலாறு காலம் காலமாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் போரிலக்கியங்கள் கடத்துகின்ற வரலாறு மிகவும் வலிமையானது. “1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி ” என்ற கவிதை பொதுவான வாசிப்பில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் தர்மினி குறித்த தினத்தைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்,
” இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.
அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள் உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம். ” – அவரின் தூமை வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
கவிதையாக உருவெடுக்கின்ற பொழுது,
அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
அதே ஆதரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.
தர்மினியை – பொதுவாக கலைஞர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பின்னர் அடிமையாகிப்போகின்ற தனிமை சூழ்ந்துகொள்கிறது. அகதியாக அந்நியதேசத்து சென்ற எல்லா சாதாரண மனிதர்களையும் தனிமை வாட்டும் என்றால் ஒரு கலைஞரை எத்தனை சித்திரவதை செய்திருக்கும். ஊரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஞாபகத்திலிருந்து பாடவேண்டிய துர்பாக்கிய நிலையை புலம்பெயர் கலைஞர்கள் அடைந்துவிடுகின்றார்கள். இதனால் தர்மினியின் கவிதைகளில் தனிமையோடு ஏக்கமும் பிரிவுத்துயரும் சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது.
” சுவர்கள் ஒட்டிக் கிடக்கின்றன
விளக்கின் நிழல்
ஒரு பூச்சி
தனித்துலையும் மனது ”
– இருளோடு
” ஒன்றொன்றாய் …
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்து
கிழித்தபடி
இதோ மிச்சமாக
தனியாக
நானும் இக்கணமும் ”
– நாட்களைக் கழித்தல்
” மறுபக்கம் திரும்பி என்னிடம்
நீயொரு அகதி என்கிறது
மற்றொரு நாவு
பொது வெளியில்
ஒளிந்துகொள்கிறது
உயர்த்த முடியாத
குரலுக்காக மௌனிக்கிறது ”
– என் நாவு பிளந்து
தர்மினியின் ” முத்தங்கள் ” என்ற கவிதை முக்கியமானதொன்று. கவிதை முழுதும் உணர்வுகள் கொட்டிக்கிடந்தாலும் – அதை மீறி கவிதை எடுத்துக்கொண்ட கலாசார வேற்றுமை மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் முத்தங்கள் சாதாரணமானவை. முத்தங்கள் ஆதரவின் குறியீடு. அன்பின் வெளிப்பாடு. எல்லாச் சந்திப்புகளிலும் முத்தங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் எமது பணப்பாடுச் சூழல் அப்படியானதல்ல. அந்நியர்களுடனான முத்தம் காமத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. சொந்தங்களுக்கு முத்தம் கொடுப்பது ஐந்து ஆறு வயதுகளோடு மறைந்துபோய் விடுகிறது. பின்னர் முத்தம் சொந்தகளுக்கு வெட்கத்தின் குறியீடாகவும் அந்நியர்களுக்கு அருவருப்பின் குறியீடாகவும் மாற்றமைடைகின்றது. அம்மா- மகன் முத்தங்கள் வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களை விட; அப்பா- மகள் முத்தங்கள் விமர்சனப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் இந்த மண்டிப்போன கலாசாரத்தின் குப்பைகளாக இருக்க தர்மினி இன்னொரு முத்தத்தைப் பற்றிப் பாடுகிறார். கொடுக்கப்படாத முத்தம். மகள் அம்மாக்கு கொடுக்க மறந்த முத்தத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்த தேசத்தில் யார்யாருக்காகவோ ஒட்டுகின்ற கன்னங்கள் குவிக்கின்ற உதடுகள் – அம்மாவிற்காக ஒட்டவும் குவியவும் மறந்ததைப்பாடுகின்றார்.
“யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக்
கொஞ்சி அணைத்திருக்கலாமோ?”
– முத்தங்கள்
மழையைப் பற்றி கவனத்துக்குரிய மூன்று கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது மழையும் நெருப்பும். ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டம் – போராட்டக் குழுவும் அரசாங்கமும் போரில் உக்கிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது போக்குவரத்து , பண்டப்பரிமாற்றம் என்பன கூடுதலாக தடைப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்க – பொருட்கள் தீர்ந்துவிட்டன. கள்ளமாக பொருட்களை கொண்டுவந்து சேர்த்தாலும் கேள்வியின் அளவிற்கு போதாமல் போனது. கூடவே ஒவ்வொன்றினது விலையும் பத்து பன்னிரண்டு மடங்காக உயர்ந்தது. காரணம் பொருட்களுடன் உயிரையும் பணயம் வைத்தே பண்டப் பரிமாற்றம் நடந்தது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பால்மாக்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதே சமயம் வெளிநாட்டு உதவிகள் நிறையைக் கிடைத்து கைநிறையப் பணம் புழங்கியது. ஆனால் பொருட்கள் தான் இல்லை.
” கொள்ளைக்காசிருந்தும் விற்கயாருமில்லை ”
– மழையும் நெருப்பும்
மற்றைய இரண்டு மழைக் கவிதைகளும் ஒப்பீட்டுக் கவிதைகள். ” சத்தமில்லாத மழை ” மற்றையது ” மழைச்சத்தம்” . இவ்விரண்டு கவிதைகளும் வெவ்வேறான மனநிலைகளிலிருந்து எழுதப்பட்டவை. வெவ்வேறான நிலச்சட்டகம். எங்கள் ஊர்களில் மழையின் சத்தம் என்பது வெறும் முகில்களில் இருந்து நீர்த்தாரைகள் வீழ்வது மட்டுமல்ல –
இதையெல்லாம் பார்த்து கேட்டு சிலிர்த்த உடல் அந்நிய தேசம் ஒன்றில் மழையின் சத்தத்தை –
” மின்னி ஒரு வெளிச்சம்
என் முன் விழ
திரைவிலக்கி வானம் பார்த்தால்
மழைக் கயிறுகள்
மண்ணில் ”
– சத்தமில்லாத மழை
ஊர்களில் –
” கூதலும் சத்தமுமாக மழை ”
– மழைச்சத்தம்
அந்நிய தேசத்தில்
” மண்ணில் கரைந்து கொண்டிருந்தன ”
– சத்தமில்லாத மழை
” ஒரு குருவி
அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பத்தைத் தவிர
வேறு வழியில்லை ”
– முடிவற்றது
பின்குறிப்பு
தர்மினியால் “1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி” என்ற தலைப்பில் தூமை இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தூமை இணையதளத்தை மேலும் துலாவிய பொழுது – இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக தர்மினி மற்றும் மோனிக்கா ஆகியோர் செயற்படுகிறார்கள் என்றும் பெண்ணியம் சார்ந்த உரையாடல்கள் பெண்களின் படைப்புக்கள் என்று முற்றுமுழுதாக பெண் இயக்கத்தால் நடத்தப்படுகிறதும் என்றும் புரிந்துகொண்டேன். தொடர்ச்சியான இயங்குகையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தூமை -ஒரு காரணப்பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. “இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
அனார் – வெளிச்சத்தின் குரல்
நன்றி – முகப்புத்தகம்
நன்றி – முகப்புத்தகம்
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்”
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக் கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும் அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும். கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும் நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது படைப்பு வெளியிலிருந்து கவிதையினை உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும் என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை” என்கிறார்.
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு சிறந்த முன்னுதாரணமாக மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
பின்குறிப்புகள்
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்
நன்றி – குங்குமம்
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும். மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும். வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும் பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன. நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
இதுவரை சுகுமாரன், இனி நான்
இல்லை
ஒன்றே ஒன்று
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும். மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும். வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும் பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன. நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
இதுவரை சுகுமாரன், இனி நான்
இல்லை
ஒன்றே ஒன்று
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை. ஒளிக்கும் வெப்பத்திற்கும் ஒத்திசைவாக்கப்பட்டவை. மழைக்காலத்தில் தன் உடலை இறக்கைகளுக்குள் சுருக்கி, ஒரு சாக்கடைப்புழுவைப் போல சுருண்டு இறப்பொன்றினை எதிர்பார்த்துக்கிடக்கும். மழைக்காலத்தின் பின்னர் வெயில் வரும் என்பதை அவை ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை. நீண்ட மழைக்காலத்தினை தம் இறப்பிற்குரிய ஆரம்ப அறிகுறியாக கருதிக்கொள்பவை. ஈரலிப்பான ஏதோ ஒன்று அவற்றின் மீது பூசப்படும் போது – அது ஒரு மழைத்துளியாக அல்லது வெள்ளத் தெறிப்பாக அல்லது எச்சிலாக அல்லது மூக்குச் சளியாக அல்லது சிறுநீராக – இறப்பின் அழைப்பாக கருத்திக்கொள்கின்றன. தம் உடல் புனித பயணம் ஒன்றிக்காக தயார் செய்யப்படுகின்றது என்று நினைக்கின்றன. அவை அனைத்திற்கும் புனித பயணம் ஒன்றைப்பற்றிய பொதுமையான கனவொன்றிருந்தது. இறந்து போன கருநீலநிற பூச்சிகளில் எதுவும் மீண்டும் தம்மிடத்தே வராததால் புனித பயணத்தைப் பற்றிய பொதுமையான கனவொன்றையே தமக்குள் சித்தரித்துக்கொண்டன. காகிதப் பூக்களை விட மென்மையான அவற்றின் உடல் காற்றில் நறுமணங்களால் கொண்டு செல்லப்படுகின்றது. மழைக்கால ஊர்வலத்தில் ஏனைய சக கருநீல பூச்சிகளால் பங்குபெற்றமுடியாததால் அவை எழுந்து தம் இறக்கைகளை விரித்து பறப்பதில்லை. ஏன் கண்களைக்கூட விரிப்பதில்லை. நறுமணத்தினை நுகர்க்கூடிய பொழுதுகளில் இறப்பொன்று நடந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும். யாருடைய இறப்பென்றதை அறியமுடியாது, அது தன்னுடைய இறப்பாக இருந்தாலும் கூட. தொடர்ந்து வருகின்ற வெயில் காலமொன்றின் சூட்டினை உணரும் போதுதான் உயிரோடிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும். அவை இறப்பொன்றிக்கு செய்யும் அஞ்சலி மௌனமாக இருப்பது. காற்றிலே மிதந்து செல்லும் இறந்துபோன கருநீல உடலிற்கு இறக்கைகளை விரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமே ஏற்படுவதில்லை. நறுமணம் கொண்டு சென்ற கருநீலப் பூச்சிக்கு என்னானது என்று மற்றவை பேசிக்கொள்வதில்லை. புனித பயணத்தில் இணைந்துள்ளது அவ்வளவு தான். செதில்களாலான கூரிய மண்ணிற உடல் சூட்டை உணர்கின்றன தருணத்தில் வெயில் கால வருகையினை உணர்ந்துகொள்கின்றன. இறப்பிலிருந்து தப்பித்து வந்ததாக அல்லது இறந்து மீண்டும் பிறந்து வந்ததாக நினைத்துக்கொள்கின்றன. தம்முடைய இறக்கைகள் பிஞ்சுப் பசையினால் ஒட்டியிருக்க அவற்றினை கிழிந்திடாமல் விரிப்பதை பெருஞ்சிரமமாக செய்கின்றன. இறக்கைகள் இல்லாத அவை, தம்மைத் தாமே உமிழ்ந்து இறந்து போவதை பெரிதாக கருதுகின்றன. கருநீல நிறப்பூச்சி என்னை நோக்கி வருவதை சாதாரண நிகழ்ச்சியாக உணரவில்லை. சத்தம் இல்லாமல் துடிக்கின்ற இறகுகள் எனக்குள் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன.
வெட்ட வெளிச்சமான வானத்தில் இருள் கண்டிப்போனது. காற்று தன் உடலில் ஈரலிப்பை பொருத்தி காவிக்கொள்ளத் தொடங்கியது. சௌகரியமாக சாய்ந்திருந்த தூணிலிருந்து முதுகை விடுத்து, கருநீல பூச்சியினை நோக்கி வாயினை ஆவென்று திறக்கிறேன். அது என் வறண்ட நாக்கினை உற்றுநோக்கியதாக உணர்கிறேன். இல்லையென்றால் இப்போது எனது வாய்க்குள் புகுந்திருக்காது. உடலின் உஷ்ணக் காற்றினை வாய்க்குள் நிரப்பி பூச்சிக்கு வெம்மையளிக்கிறேன். பிரபஞ்சத்தில் உணர்வற்றுக்கிடக்கும் முகமூடி ஒன்றோடு இனி பயணிக்கப்போவதை எண்ணி வருந்தியிருக்கக்கூடும். அதைபற்றி எனக்கு கவலையில்லை. காற்றில் கனத்திருக்கின்ற ஈரலிப்பு கருநீல பூச்சியினை ஒன்றும் செய்துவிடக்கூடாது. இறப்பினைத் தாண்டி என்னிடம் ஏதோ சொல்லவோ கேட்கவோ வந்திருக்கும் இது, என் விருந்தாளி. நண்பன். வாயைத் திறந்தவுடன் குடிகொண்டுவிட்டதே. என் நண்பர்களிடம் இருந்து ஒவ்வொரு கதையினை வாங்கிக்கொள்வேன். கொடுக்க கதைகள் எதுவும் இருப்பதில்லை. நிழலை மீறி மேகத்தின் இருட்டு வெளியை நிரப்பியது. வெங்காற்று நிரம்பிய வாயினை பொத்திக்கொண்டு அறைக்குள் விரைந்தேன். கண் கிடங்குகள் காதுச்சவ்வுகள் அடைக்கத் தொடங்கின. மூக்குத்துவாரங்களால் மூச்செடுக்க முடியும் என்ற உண்மையை அவ்விருள் கடத்திக்கொண்டு போய்விட்டது. வாய்க்குள் எச்சில் சுரக்கமுன்னர் பூச்சினை விடுத்தாகவேண்டும். இல்லையென்றால் இருட்டிடமிருந்து பூதம் கைப்பற்றியதாக ஆகிவிடும் அதன் நிலை. மேசையின் மேல் அருகாண்மையில் உதட்டினை திறந்தேன். புதைக்க மறந்த நாய்ப்பீயின் நாற்றத்தோடு பிண்டம் விழுந்தது. அருவருத்த நாக்கினை நீட்டி இரண்டுவிரல் நிகங்களாலும் வழித்துக் காறித்துப்பினேன். வாயினை நன்றாக கொப்பளித்து விட்டு மேசையின் அருகில் கதிரையில் இருந்து கருநீலப் பூச்சினை அவதானித்தேன். என்னை கருணை உணர்வோடு பார்ப்பதாக தோன்றியது. என்னிடம் சொல்லல வார்த்தைகள் இருப்பதாக. கண்ணின் மணியினை உயர்த்தி என்னைப்பார்த்து ஏழைச்சிறுவன் பிச்சைத் தட்டினை நீட்டி வயிற்றைத் தடவுவது போல தன்னை வெளிக்காட்டியது. அது இயலாமையின் அடையாளம். ஒற்றை மழைத்துளியில் கரைந்து போய்விடக்கூடிய ஒன்று இன்னமும் தன்னை வருத்தி வாழ எத்தனிக்கிறது என்றால் – என்னிடம் வந்து சரணடைந்திருக்கிறது என்றால் – நான் கேட்கவேண்டிய கதையொன்று அதனிடம் இருக்கிறது.
சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி
மென்பச்சையும் நீலமும் கலந்த மார்பிள் தரையில் ஒட்டிக்கிடந்த என் கறுத்த உடலை எழுப்பி, விறைத்தபடி கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற மழையினை கண்ணாடி யன்னலினூடாக பார்க்கிறேன். தன் எச்சத்தை கண்ணாடியின் மேல் பீய்ச்சி அடிப்பது என்னை ஏளனம் செய்வதைப்போலவே இருக்கிறது. காற்று புகமுடியாத அடைத்த அறையொன்றிலிருந்து மழையினை உணர்தல் என்பது கொடுங்காரியம். கண்ணாடிக்கு எதிரே பச்சைய வாசத்தை தீவிரமாக பரப்பிக்கொண்டிருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி, எல்லாவற்றையும் மறந்துபோய் மழையில் நடனமாடுகிறது. அது அவளின் உடலசைவுகளை எனக்குள் திரட்டுகின்றன. அவளை வெள்ளை நிற சுடிதாரில் பார்த்தது இல்லை. ஆனால் மழையோடும் குளிர்ந்த காற்றோடும் நிலத்தினை ஊடறுத்துப்பாய்கின்ற நீர்த்திவலைகளோடும் பார்த்திருக்கிறேன். சகதி பூசிய தரையினை கடந்து போக நீளமாக எறிந்து விடப்பட்ட ஓரளவான கற்களை சிரிப்போடு தாவிக் கடக்கின்ற அவளின் நளினத்தை அச்செடி ஞாபகப்படுத்துகின்றது. அகன்ற கண்ணாடியின் உடலெங்கும் மின்னல் வெளிச்சம் பரவுவதை இமைப்பொழுதில் கண்களில் தெறித்து மறைக்கின்றன. துளிகள் பெருகி கண்ணாடியில் அழுகின்ற காட்சி என்னைத் துருத்துகின்றது. தூரத்திருந்து தனக்குள் வெடித்து அழுவதால் தானாக கண்ணீர் வடித்தன அவளின் கண்கள். அந்தரத்தில் தொங்குகின்ற பூச்சாடிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மீதம் வழிந்த மழை ஓடிச்சென்று கடைசில் கடலில் உவர்ப்பாகிப்போகின்றது. நிரம்பியிருந்த இருட்டின் மீது சிறிது பனி பரவத்தொடங்கியது. கண்ணாடியின் உள்புறம் அப்பழுக்களற்ற பனியினால் பூசப்படுகிறது. மில்லிமீட்டர் தடிப்புடைய கண்ணாடியின் இரண்டுபக்கமும் ஒட்டிநின்று காதல் செய்துகொண்டிருக்கிறது மழைத்துளிகளும் பனிப்படலமும். உள்ளிருக்கின்ற பனியினை அடைந்துவிடமுடியாத ஏக்கத்தில் அழுகின்றன மழைத்துளிகள். சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடியின் நடனம் என் தீர்க்கமுடியாத கனவொன்றினை ஏளனம் செய்வதைப்போல உணர்கிறேன்.
கொடிய கனவுகளில் மனிதர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றைத்தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சிகள் எனக்கு விரும்பியவாறே நடந்தேறுகிறது. அதனாலேயே கொடிய கனவென்கிறேன். எதை ஆசைப்படுகிறேனோ எவ்வாறு ஆசைப்படுகிறேனோ அது அவ்வாறே நடந்து முடிந்து தீர்ந்துபோவதையிட்டு கவலையடைகிறேன். கனவினை மீட்டிப்பார்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் முடிந்து விட்டதே என்ற கவலை மேலெழுந்து கொடுங்கனவாக மாறிவிடுகின்றது.
கணவாய்கள் நிறைந்த செவ்வகப்பெட்டிகள்
இயக்கமற்ற உடலொன்றாய்க் கிடக்கிறேன். ஒரு கணவாயைப் போல அருவருக்கத்தக்க கரிய உடலை நிலத்தோடு கிடத்தி மழை ஓய்ந்த பின்னிரவொன்றில் செய்வதறியாது ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக்கொள்கிறேன். மழையின் பின்னரான இவ்விரவு குளிர்மையானதாக இல்லை. இந்த செவ்வகப் பெட்டிக்குலிருக்கும் எந்த உயிரினத்திற்கும் இவ்விரவு மழையின் பின்னரான இரவொன்றாக இல்லை. மெல்லிய படையாக பிசுபிசுப்பான திரவமொன்று உடலைச் சுற்றி சுரக்கிறது. மழையில் அச்சமூட்டுவதாக தெரிந்த வாகன விளக்குகள், இப்போது வெறும் ஒளிப்பொட்டாக தெரிகின்றன. மழைக்குப் பின்னர் எந்தப் பெரிய இரைச்சலான மாநகரமும் அணிந்துகொள்கின்ற பேரமைதி எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. மழைக்கு முன்னரும் மழையின் போதும் ஆரவாரமாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிய மனிதர்கள் மழைக்கு பின்னர் சோபையிழந்து போகிறார்கள். அவர்களின் படபடப்பு ஓய்ந்துபோகிறது. அத்தனை படபடப்பும் எனக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது. உடலுக்குள் ஆயிரம் பூரான்கள் ஊர்வதைப்போல பிறாண்டிக்கொண்டிருக்கிறது. செவ்வக அறையை விட்டு இந்த கரிய உடலை விட்டு விலகிப்போக ஏதோ ஒன்று துடித்துக்கொண்டிருக்கிறது. இணைப்பறுந்து தூக்கி எறியப்பட்ட பழைய தொலைபேசி ஒன்றினைப்போல உலகத்தோடு தொடர்பற்றுப்போயிருக்கும் ஏதோ ஒன்று வெளியேறும் கடைசி கணத்தில் செவ்வக பெட்டியைவிட்டு வெளியே வந்துவிடவே எத்தனிக்கிறேன்.
சாலையில் மழைக்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. மிகச்சில மனிதர்கள் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிந்துபோன நாளொன்றின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வெறுப்பவற்றை தூக்கி எறிந்தும் நேசிப்பதை தனக்குள் சேமித்துக்கொண்டும் செல்கிறார்கள். என்னைத்தவிர எல்லாமுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடைகளுக்கு முன்னிருக்கின்ற படிகளிலும் பேரூந்து தரிப்பிடங்களிலும் எங்கெல்லாம் ஒதுங்குகின்றளவு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சைக்காரர்கள் கிழிந்த துணிகளால் தம்மை இழுத்துப் போர்த்திக்கொண்டு அமைதியாக தூங்குகிறார்கள். நீரில் தோய்ந்து நனைந்துப்போன கிழிந்த இறகொன்று காற்றில் மிதந்து முடிவின்றி அலைகின்றது.
தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கையை முன்னிறுத்தி எழுதிய குறிப்பில் அவரின் கவிதைகள் பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்,
“இத்தொகுப்பில்இருக்கின்றபெரும்பாலானகவிதைகள்இருளைப்பற்றியதாவேஇருக்கின்றன. தலைக்குமேலேசெல்கள்சிதறிக்கொண்டிருக்கவளவிற்குள்நிலத்திற்குகீழேவெட்டப்பட்டிருக்கின்றபங்கர்களில்நாட்கணக்கில்ஒளிந்துவாழ்ந்தமக்கள்வெளிச்சம்படாதஇடங்கள்மட்டும்தான்இருள்என்பதைஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள்புகுந்துஆண்கள்பெண்கள்குழந்தைகள்என்றுவித்தியாசமேஇல்லாமல்கொன்றுகுவித்துக்கொண்டிருக்கும்போதுஇளைஞர்களும்யுவதிகளும்திருட்டுத்தனமாகசொந்தநிலங்களைவிட்டுவெளிநாடுகளுக்குஓடிஒழிந்தார்கள் – இவர்களுக்குஇருள்என்பதுஇரவுமட்டுமல்ல. தஸ்தாவஸ்கிஎழுதியவாழ்க்கையின்இருட்டுப்பற்றியகதைகள்அல்லஇவை. வாழ்க்கையேஇருட்டாகிப்போனஒருஇனத்தின்கதறல்கள்.”¹
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்” ²
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “²
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”²
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக் கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும் அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும். கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும் நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”²
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”²
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது படைப்பு வெளியிலிருந்து கவிதையினை உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும் என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”² என்கிறார்.
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு சிறந்த முன்னுதாரணமாக மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
கோமாளி கிங்ஸ் பற்றிய எனது பார்வையினை பலர் விமர்சித்திருந்தார்கள். நான்கைந்து நேரடி விவாதங்களிலும் கலந்துகொண்டேன். எனக்கு எதிராக வைக்கப்படுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் அதே கட்டுரையில் பதிலிருக்கின்றது. நான் எதிராக விமர்சிக்கிறேன் என்ற புள்ளியில் நின்று என்னை அணுகுபவர்கள் “எதற்காக விமர்சிக்கிறேன்” என்று கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இதனால் அவர்களுடனான விவாதங்கள் அயற்சியளிக்கின்றன. “எப்போது சினிமா என்ற பொழுதுபோக்கு கலையாகின்றது” என்ற கேள்வியினை மீண்டும் மீண்டும் தமக்குள் கேட்டுக்கொண்டும் அகமும் புறமும் தேடிக்கொண்டும் இயங்க வேண்டிய தேவையினை நம்மவர்கள் உணரவேண்டும்.
பிரெஞ்சு திரைப்பட இயக்குனரும் கதாசிரியருமான Alain Resnais, சினிமாவை “Manipulation of Reality through image and sound“¹ என்கிறார். எதார்த்தத்தை என்பதை வெளிப்படுத்துவதில் நுட்பமான பல விடயங்களைக் கையாளலாம். அதற்கான வெளி-சுதந்திரம் சினிமாவில் உண்டு. எல்லையற்ற இந்தச் சுதந்திரத்தின் மூலம் எதார்த்தத்தை மூடி மறைத்துவிட முடியும். ஆனால் இது அறமாகாது. இந்த அறம் ஒவ்வொரு மொழிக்கும் தேசத்திற்கும் தனிநபருக்கு வேறுபடும். ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய தனித்த அறத்தில் நின்று செயற்படுகின்றோம். இலங்கை – ஈழத்து சினிமாவை பொறுத்தவரையில் எமக்கான கூட்டு அறம் ஒன்றினை வரையறுக்கவேண்டிய கட்டாயத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். அது சுதந்திரம் ஒன்றை வேண்டிநிற்கின்ற ஒரு இனத்தின் அறமாக இருக்கவேண்டும்.
மதி சுதாவின் குறும்படமான “பாதுகை“² யினை முகப்புத்தகத்தினூடாக பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. கதைப் போக்கிலிருந்து உண்மைக்கதை ஒன்றின் தழுவலாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கிறேன். தொழில்நுட்ப உத்திகள், நேர்த்தியான ஒலிப்பதிவு போன்றவை இல்லாமலும் ஒரு நெருக்கமான கலைப்படைப்பினை உருவாக்கியிருக்கிறார் மதிசுதா. இன்று கிராமங்களுக்கு மின்சாரம், வசதியான குடிமனைகள், சீரான வீதிகள் என்று எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டாலும், எப்போதும் போல இவை ஒவ்வொன்றிலிருந்தும் விலக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் தனி ஒருவராக குடும்பத்தை நடத்துகின்றவர்களையே பாதிக்கின்றது. பாதுகை இங்கிருந்து அணுக்கமாகத் தொடங்கின்றது. குறும்படத்தில் வருகின்ற பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் எமது நாளாந்தத்தின் பிரதிபலிப்புகளாக காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. இதுவே காட்சிகள் – கலையாக மாறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. கீரைப் புட்டிலிருந்து அதை வைத்து சாப்பிடும் கோப்பையின் வடிவம் வரை எமக்குரியது என்ற மனநிலையை உருவாக்குவதன் மூலம், இது ஈழத்து சினிமா என்று உணர்வினை இயக்குனர் ஏற்படுத்திவிடுகிறார். இயல்பான வன்னியின் மொழிப் பிரயோகம் உணர்வு நிலை உரையாடல்களை பலமாக்குகிறது.
பாதுகையின் கதை மீது எனக்கு ஈர்ப்பில்லை. “Land without people are lands without History“³என்ற J.R.Michell இன் புகழ்பெற்ற கூற்று ஒன்றிருக்கிறது. இன்று வன்னி நிலப்பரப்பின் குக்கிராமங்களின் சுதேச குடிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மறுப்பதன்மூலம் – அல்லது தட்டிக்கழிப்பதன் மூலம் அக்கிராமங்கள் “Land without people” ஆக்கப்படுகின்றன. அக்கிராமங்களின் அயல் காடுகளை செப்பனிட்டு சிங்களக்குடியேற்றங்களை அமர்த்துவதன் மூலம் வரலாறு மாற்றியெழுதப்படுகின்றது. இந்தக் களத்தில் நின்று மதிசுதா பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கதை நகர்வில் இதனை வலிமையாக காட்டியிருக்கலாம். மதிசுதா கதையின் மீது இன்னும் அவதானம் செலுத்தியிருக்கலாம். நீண்ட காலத்திற்கு ஆவணப்படுத்தல்களை காட்சிப்படுத்துவதன் மூலம் மட்டும் எமக்கான சினிமாவினை உருவாகிவிடமுடியாது.
குறும்படம் வெளிப்படுத்துகின்றன இன்னொரு முக்கியமான உண்மை, போருக்கு பின்னாலான வாழ்க்கை. தான் கட்டமைத்து வைத்திருக்கின்ற எல்லா சமூக கட்டமைப்புகளையும், பேரழிவு ஒன்றின் பின்னலான ஈழத்து தமிழ் சமூகம் மீண்டும் உருவாக்குகின்றது என்பதை குறும்படம் காட்டுகிறது. அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலை என்று ஒன்றிருக்க, தன் சமூகத்தாலேயே கைவிடப்பட்ட இன்னொரு நிலையும் எமக்குள் இருக்கின்றது. இதனை சாதியத்துடன் இணைக்கிறார். புற, அக காரணிகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் எளிமையான யதார்த்த உரையாடல்கள் மூலம் குறும்படம் நிரப்பப்படுகிறது.
தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண். அம்மம்மா வீட்டின் முன் விறாந்தையோடு சேர்ந்தாற்போல ஒரு அறையிருக்கிறது. பழைய பொருட்களை எல்லாம் அடுக்கி அங்கு வைத்திருக்கிறார்கள். மெத்தையில்லாத கட்டில், பழைய பாய்கள் இரண்டு மூன்று, மேல் விளிம்பால் வெடித்துப் போன கண்ணாடி, பழைய கொப்பிகளைப் போட்டு கட்டிவைக்கப்பட்ட பெட்டிகள், காலுடைந்த மின்விசிறி ஒன்று, என் உடுப்புகள் உள்ள ஒரு பக்கம் துருப்பிடித்து சுவரில் சாய்ந்து நிற்கின்ற அலுமாரி மற்றும் என்னுடைய நான்கடுக்கு புத்தக ராக்கைகள். இவையனைத்து எலிகளும் சிலந்திகளும் வேறு பல ஜந்துக்களும் குடியிருக்கும் எல்லோராலும் கைவிடப்பட்ட அந்த மென்னீல பூச்சு அறைக்குள் சிதறிக்கிடக்கின்றன. எல்லோரது வீட்டிலும் இப்படியான அறையொன்றிருக்கும். கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் போனால் சாமியறைக்குள் தூங்கிவிடுவேன். பெரிதாக உடுப்புகள் எதையும் காவிக்கொண்டு போகமாட்டேன். முன்னறை அலுமாரிக்குள் இருக்கின்ற ஒன்றிரண்டு நல்ல உடுப்புகளே போதுமானதாக இருக்கும். முன்னர் அதே அலுமாரிக்குள் என்னுடையதும் தம்பியினுடையதும் உடுப்புகள் எமக்குரிய பகுதிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் . எமது பாடசாலைத் துணிகளும் அதற்குள் தான். பாடசாலைக் கால கடுஞ்சிவப்பான பாண்ட் உடுப்பு பத்து ரூபா பொலித்தீன் பைக்குள் கவனமாக மடித்து வைக்கப்பட்டிக்கும். சில காலத்தில் என் தம்பியின் பாண்ட் உடுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தம்பியின் எல்லா உடுப்புகளும் உள்ளறை ஒன்றிற்குள் மாற்றப்பட்டுவிட்டன. முன்னறையின் மங்கிய மஞ்சளொளியில் பொருத்தமான உடுப்பொன்றினை கிளறி எடுக்கும்போதெல்லாம், வீட்டிற்கு அந்நியனாகப் போய்விட்டதாக தோன்றுகிறது.
எப்போதும் என்னால் நிறைந்திருந்த வீடொன்றில் என் நினைவுகள் இறந்து போய்க்கொண்டிருக்கின்றன. சாப்பாட்டு மேசையிலும் உடுப்புகள் தொங்குகின்ற ஹாங்கரிலும் கதிரைகளிலும் எனக்கான எதுவுமே இப்போது இருப்பதில்லை. முன்னரிருந்த ஒதுக்கமான கழிப்பறையிருந்து எல்லோரும் உள்ளக வசதியான குளியலறைக்கு மாறிவிட்டார்கள். புத்தகங்களை உருண்டு கிடந்து வாசித்து தேய்த்த சிவப்பு மை பூசிய நிலம் என் வாசத்தை அறவே மறந்து விட்டது. இப்போது அந்நியனாய்ப்போய் வெறுந்தரையின் குளிரினை வாங்கிக்கொண்டிருக்கிறேன். அண்ணாந்து வெறும் மேலுடன் வீட்டு நிலத்தின் குளிரினை உடலுக்குள் செலுத்துவதைப்போன்ற ஆனந்தம் வேறெதிலும் இல்லை. முதன் முதலாக வெறும் முதுகு குளிர்ந்த தரையினைத் தொடுகின்ற போது கரு விழித் துளைக்குள் ஊசியினைப் பாய்ச்சுவதைப்போல உடல் சிலிர்க்கும். முள்ளந்தண்டின் வழியே மூளை நரம்புகளுக்கு குளிர் சென்று அதி போதையைத் தரும். அலுமாரியில் எதிரில் தான் நான்கடுக்கு புத்தக ராக்கை இருக்கிறது. திறந்த ராக்கையாக இருப்பதால் தூசு பிடிக்கும். இதற்காக கட்டில் விரிபொன்றினால் மூடப்பட்டிருக்கிறது. முதல் தட்டில் சிறுகதை, நாவல்கள் கீழே கவிதைகள், கட்டுரைகள் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கடைசியில் கோப்புக்கள். இது இறுதியான வரிசைப்படுத்தல்தான். இதற்கு முன்னர் வித்தியாசம் வித்தியாசமான முறைகளில் அடுக்கி வைத்திருந்தேன். நவீன இலக்கியம் ஒரு பக்கம், நவீனத்திற்கு முந்திய இலக்கியங்கள் ஒரு பக்கம். அதற்கும் முதல் அப்துல் ரகுமான் ஒரு பக்கம் மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பக்கம். நவீன இலக்கியப் பாகுபாட்டிலும் இதே கூத்துக்கள் நடக்கும். ஜெயமோகனுக்கு முன்னுரிமை பின்னர் சாருக்கு முன்னுரிமை. சுஜாதா அளவோடு தான் இருந்துகொண்டார். இப்போது எல்லாம் கெட்டு, வாசித்தவை ஒரு பக்கம் வாசிக்காதவை இன்னொருபக்கம் என்றாகிற்று. புத்தகங்களை வாசிப்பதைப்போல அடுக்குவதிலும் எனக்கு அலாதிப் பிரியம்.
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு படிக்க வந்தபோது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய புத்தகங்களைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டேன். இருந்தும் இன்னமும் அரைவாசிக்கு மேல் அந்த புத்தக ராக்கைகளில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் இரண்டாவது வாசிப்பிற்கு உவர்ப்பில்லாதவை. என்னுடைய தம்பி சமீபகாலமாக அவற்றைப் புரட்டத் தொடங்கியிருக்கிறான். இப்போது வவுனியா செல்லுகின்ற வேளைகளில் வைரமுத்துவோ மேத்தாவோ அல்லது அப்துல் ரகுமான் வீட்டு மேசையில் இருப்பார்கள். கண்டவுடனே எடுத்துகொண்டுபோய் ராக்கையில் சேர்த்துவிடுவேன். புத்தகம் அனாதையாகக் கிடப்பது என்னை முடமாக்குவது போல இருக்கும். நானில்லாத வீட்டில் என் புத்தகங்கள் அலைவது என்னை ஒரு போதும் திருப்திப்படுத்தப்போவதில்லை. இப்போது வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கின்ற எனது புத்தகங்களில், தம்பியின் வாசமே வீசுகிறது. அவை மீண்டும் ராக்கையை சென்றடையும் போது தான் எனதாகின்றது. அலுமாரியைப் போலன்றி புத்தக ராக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. அதில் இன்னொருவனின் நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்துகொண்டிருக்கின்றன. புத்தகங்கள் மறுபிறப்படைகின்றன. அந்த அறையின் இருட்டும், படிந்திருக்கின்ற தூசின் வாசனையும் மறந்து போய்விட்டேன். இப்போதிருக்கின்ற வாடகை அறையில் என் தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண் வாஞ்சையோடு பார்த்துக்கொண்டும் கண்ணாடி யன்னலின் இடுக்குகளிற்கூடாக கசிந்து பரணில் பட்டுத்தெறித்து வருகின்ற காற்றினை ஆழமாக சுவாசித்தவாறும் நிற்கிறேன். அணுவளவு கூட எனக்குள் திருப்தி வரவில்லை.
நேற்றிரவு முன்னறையினை வாடகைக்கு விடப்போவதாக அறிந்தேன். மனம் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது. ஐம்புலன்களில் ஒன்று ஊனமாகிக்கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன். ப்ளேட் துண்டு ஒன்றினால் உடலின் மென்மையான சவ்வுகள் கிழிக்கப்படுகின்றன. நான் என்பது வெறும் உணர்வுகள் மட்டுமா? என் நினைவுகள் பலமிழந்தவையா? வெறும் தசையும் என்பும் ரத்தமும் தான் மனிதர் என்றால் அவையிருந்தும் வெளியை நிரப்பமுடியாமல் போகின்றது ஏன்? அப்படியானால் இருப்பு என்பது எதனால் அடையாளப்படுத்தப்படுகிறது? புத்தக ராக்கைகள் பற்றிய கவலை இப்போது எனக்கில்லை. எல்லாம் அந்த அலுமாரியும் என் பழைய உடுப்புகளும் அதிலிருக்கும் என் வாசனையும் பற்றியவை தான். விறாந்தையில் நான் குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்று தொங்குகிறது. நான் வீடற்றவனாகிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றிரவு கொட்டஹெனா சினிவேர்ல்ட் இல் – இரவு ஒன்பதரைக் காட்சியாகக் கோமாளி கிங்சைப் பார்த்தேன். ஒன்பது மணிக்கே திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். ஓரளவேனும் கூட்டமாக இருந்தால் தான் ஒன்பதரைக்குக் காட்சி, இல்லாவிட்டால் சற்று நேரமெடுக்கும் என்று பின்னேரமே காட்சிகள் குறித்து விசாரிக்கப் போனபோது அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். நான் நுழையும் போது ஐந்து பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். நான் ஆறாவது. வவுனியாவில் வசந்தி திரையரங்கில் நயன்தாராவின் மாயா திரைப்படத்தை மூன்று பேரோடு மட்டுமே இருந்து பார்த்தேன். படம் முடிந்த போது திரையரங்கில் நான் தனித்து இருந்தேன். மற்றவர்கள் இடையிலேயே நழுவி விட்டிருந்தார்கள். அந்த வகையில் ஆறு பேர் என்பது ஓரளவு உவகையளித்தது. வழமை போல ஐந்நூறு ரூபா டிக்கெட்டினை எடுத்துக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த போது மணி ஒன்பதே காலாகிவிட்டது. ஓரளவு முன் வரிசையில் சாவகாசமாக இருந்து ஆட்களின் வருகையை அவதானித்துக்கொண்டிருந்தேன். நேரத்தோடு ஆட்களின் வருகை அதிகரித்து அரங்கத்தின் அரைவாசியை நிறைக்க கோமாளி கிங்ஸ் திரையிடப்பட்டது. இதற்கிடையில் எனக்குப் பின்னாலிருந்த இளைஞர்கள் சிலர் அவர்களின் இன்னொரு நண்பனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ” அவன் இந்தியப் படங்களே பாக்கமாட்டான், இதுல இதுக்கு வரவா போறான் ” என்று அவர்களில் ஒருத்தன் சொன்னான். எம்மவர்கள் இடையே திரைப்படம் என்றாலே இந்தியத் திரைப்படங்கள் தான் என்ற கருத்து இல்லாமற் போய்விட்டது. இன்று “படம் பார்த்துவிட்டீர்களா?” என்றால், “எது கோமாளி கிங்ஸா?” என்று பதிலளிப்பதைக் கேட்கின்ற போது வெகுசன அடையாளம் ஒன்று இலங்கைத் சினிமாக்கு ஏற்பட்டுவிட்டது என்பது மகிழ்ச்சியாக இருந்தது.
கிட்டத்தட்ட நானும் அவர்கள் குறிப்பிட்ட நண்பனும் ஒரே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறோம். படங்களே பார்ப்பதில்லை என்பதல்ல. கோமாளி கிங்ஸ் வெளியாகிய இரவு, நண்பரொருவர் முகப்புத்தகத்தினூடு தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி விசாரித்தார். ” இப்போதெல்லாம் கார்ட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் ” என்று பதிலளித்தேன். அவர் சிரிப்பு எமோஜி ஒன்றை அனுப்பினார். ஆனால் உண்மையும் அதுதான். இப்போது கார்ட்டூன்கள் மற்றும் ஆவணப்படங்களையே அதிகமாகப் பார்க்கிறேன். பரவலாக பேசப்படுகின்ற தொடர்களையோ அல்லது உலக சினிமாக்களையோ(!) பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. கடைசியாகப் பார்த்தபடம் என்றால் The Death of Stalin. இதுவும் கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு சார்ந்த நகைச்சுவையான திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் Coco என்ற கார்ட்டூன் படம் பார்த்தேன். இப்படியெல்லாம் இருக்க , கோமாளி கிங்ஸை பார்த்தாக வேண்டும் என்று உறுதியோடிருந்தேன். காரணம் இலங்கையிலேயே முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட தமிழ் வணிகத் திரைப்படம். இலங்கைத் தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயத்தைத் தொடக்கிவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பினை உருவாக்குவதன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. நம்மவர்களின் படைப்பு என்று மனதளவில் திரைப்படத்தைப் பற்றிய நெருக்கமான சிந்தனைகள் உருவாக்கி உலாவவிடப்பட்டது. மீண்டும் பின்னாலிருந்த இளைஞர் ஒருவர், மற்றப்பக்க வரிசையில் இருந்தவரிடம் ” எப்படா உண்ட படம் வருது ” என்றார். அதற்கு சீக்கிரம் கொண்டுவந்துவிடுவோம் என்று பதிலளித்தார் மற்றவர். கோமாளி கிங்ஸின் வருகை சினிமா என்ற கனவோடு காத்திருக்கின்ற பல இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான திருப்பம். படைப்புகளை உருவாக்கிவிடுவதை எளிமையாக முடித்துவிடலாம் என்று நம்பக்கூடிய பலருக்கு, அதை வெளிப்படுத்துவதும் சந்தைப்படுத்துவதும் கடினமான ஒன்றாகவே இதுவரை இருந்தது. ஆனால் கோமாளி கிங்ஸ் இவற்றை உடைத்து சந்தைப்படுத்தல் வெளியை உருவாகியிருக்கிறது. இதற்காக படக்குழு அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முழுநீளத் தமிழ் திரைப்படம் ஒன்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது எளிதான விடயம் அல்ல. இனிவருகின்ற திரைப்படங்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகளவில் இருக்காது.
(02)
போரின் பின்னரான தமிழ்த் திரைப்படம் ஒன்றாகவே கோமாளி கிங்ஸை அணுகவேண்டிய தேவை எமக்குள்ளது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் போரின் குரல்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. போர் முடிந்துவிட்டது, இது மறுமலர்ச்சிக்காலம் என்றெல்லாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. இன்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்கள், காணி மீட்ப்புப் போராட்டங்கள, அத்துமீறிய குடியிருப்புக்கள் என்று தமிழ்ப் பிரதேசங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை போரின் தொடர்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் இன்னமும் நாங்கள் வேறொருவகையில் எமக்கான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிடருகிறோம். எம் பண்பாட்டுக் கூறுகள் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. எம் இனத்தின் மீது மௌனமாக பெரும் அரசியல் போரே நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து வருகின்ற ஒரு சினிமா என்ற அடிப்படையில் தான் கோமாளி கிங்ஸ் முதலாவதாக அடையாளப்படுத்தப்படும்.
கோமாளி கிங்ஸ் வெளிப்படுத்திய சமூகம் சார்ந்த பிரச்சனைகளாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சனைகள் என்றே எதையும் குறிப்பிட முடியாது. ஒரு நகைசுவை திரைப்படமாக இருந்தாலும் உள்ளோட்டமாக நெருக்கடி ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நெருக்கடி தான் சுயம். நகைச்சுவைத் திரைப்படம் கடத்த வேண்டியது நகைச்சுவைகளை அல்ல, அதற்குள் ஊடுருவியிருக்கின்ற சமூகம் பற்றிய கருத்தினை¹. இக்கருத்து கனமான செய்தி ஒன்றினை பார்வையாளருக்குக் கொடுக்கவேண்டும். சினிமா என்பதை எம்மிடையே ஒரு பொழுதுபோக்கு அம்சமாக கருதுகின்ற சூழ்நிலையை நாம் இன்னும் அடைந்துவிடவில்லை. இன்னும் நிறைவேற்றப்படாதா எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. இன்னும் எங்கள் வரலாற்றையும் போராட்டத்தையும் சரியாக பதிவு செய்யவில்லை. இயங்கு நிலை சமூகம் ஒன்றின் அடிப்படை நோக்கமே வாழ்வியலை ஆவணப்படுத்துவது தான். போருக்குப் பிந்திய சமூகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய பார்வை இன்னும் இன்னும் விஸ்தாரமாக இருக்கவேண்டும். இன அழிப்பின் பின்னரான எதிர்ப்பு ஒன்றினையும் அவற்றைப் பற்றிய சரியான புரிதல்களையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமும் சினிமாவும் ஊடகங்களும் அவற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கவேண்டும். கோமாளி கிங்ஸ் இவை எதையும் செய்ய மறந்துவிட்டது.
மாறாக, கோமாளி கிங்ஸ் உருவாக்கிய பிம்பங்கள் கடும் விமர்சனத்திற்குரியவை. இந்திய முழு வணிகத் திரைப்படங்களில் கூட ஏதோ ஒரு பிரச்சனையினை மையக் கருவாகக் கொண்டு நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கோமாளி கிங்ஸ், வெளிநாட்டிலிருந்து தன் தாய் நாட்டிற்கு வருபவன் – இயந்திர வாழ்க்கையை வெறுத்து நாட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் – தாய் நாட்டிலேயே இருப்பதற்கு செய்கின்ற முயற்சிகள் தான் கதைக் கரு. வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்ததைக் கூட சாதாரணமாக வெளியேறியதாகவே வெளிக்காட்டுகின்றனர். அதற்காக எங்கும் போரைப் பிரதிபலிக்கவேண்டும், எப்போதும் போரையே பற்றிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று கூறவில்லை. இங்கு இனஅழிப்பு ஒன்று நடந்ததாக சிறு குறிப்புக்கூட திரைப்படத்தில் இல்லை. முழுக்க முழுக்க அழகிய இலங்கையை ஒளிப்பதிவு செய்கின்றார்கள். வடக்கு என்றால் நல்லுரையும் மன்னர் கருவாடையும் அடையாளப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் போரொன்றை முழுதாக மறந்துவிட்ட சமுதாயமாக எங்களை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னரான அரசியல் கேள்விகேட்கப்படவேண்டிய ஒன்று. உலகத்திற்கு எம்மைப் பற்றிய பிழையான விம்பம் கடத்தப்பட்டுவிட்டது.
(03)
திரைப்படத்தில் இரண்டு பகுதிகளாக கதை மாந்தர்களைப் பகுத்துள்ளார்கள். ஒன்று யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றவர்கள் மற்றையது கொழும்பில் பேசப்படுகின்ற கலப்புத் தமிழைப் பேசுகிறவர்கள். திரைப்படத்தின் படி யாழ்பாணத் தமிழைப் பேசுகின்றவர்களை நல்லவர்கள் போலவும், மற்றையவர்களை கெட்டவர்கள் அல்லது சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சாதாரணமாக இதைக் கடந்துவிட முடியாது. இந்திய சினிமாவில் முஸ்லிம்களை எப்படி தீவிரவாதிகளாகவே மாற்றி வைத்திருக்கிறதோ இந்திய சினிமா அதே நிலையை இவர்களுக்கும் உருவாக்கிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களின் நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று அனைத்தும் அநாகரீகமானதாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டும். முக்கியமாக அவர்களின் குழுவில் இருக்கின்ற பெண்ணின் பிரதிபலிப்புகள். கட்டையான உடைகளும் மற்றைய ஆண்கள் மீது இலகுவில் மையல் கொள்வது போல சித்தரிப்பதும், அந்தச் சமூகத்தின் எல்லாப் பெண்கள் பற்றிய விம்பமாகவே எடுத்துக்கொள்ளப்படப்போகிறது. ஆனால் அங்கு வந்திருக்கின்ற வெளிநாட்டுக் குடும்பம் பற்றியோ அல்லது கொழும்பிலேயே தங்கிருக்கின்ற யாழ்பாணக் குடும்பம் பற்றியோ எந்தக் குறையும் கூறிவிடாதபடி காட்டப்பட்டுள்ளது. வயதான ஒருத்தர் தன் மனைவிக்கு பயந்து பயந்து மது அருந்துவதும் அதே மதுவினை மற்றைய குழுவினர் பெண்களின் முன்னால் எந்தச் சலனமும் இன்றி குடிப்பதும் நகைப்புக்குரிய காட்சிகள் அல்ல. வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்திலுகின்ற யுவதி ஒருத்தர் சிகரெட்டோ மதுவோ குடிப்பது கிடையாது என்றும் தான் மிகவும் சுத்தமானவள் என்றும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்ற காட்சிகள் மேலும் மேலும் பிரிவினைக்கான அத்திவாரத்தை ஏற்படுத்திக்கொண்ட நகர்கின்றது. இதனை இயக்குனர் தெரிந்து செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்று தெரியவில்லை.
இங்கு யாரையும் ஏற்றியோ தாழ்த்தியே பேசவில்லை, கோமாளி கிங்ஸின் வெளிப்பாடுகள் இவை.
இலங்கை தமிழ் சினிமா, ஈழத்து சினிமா என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் பற்றிய கேள்வி என்னுள் எழுகின்றது. இன்று இவற்றைப்பற்றிய தெளிவான புரிதல்களை எமக்குள் உருவாக்காது கடந்துபோய்விட்டால், இலங்கையில் சினிமா தனிச் சக்தியாக இயங்குகின்ற காலத்தில் எமக்கான அனைத்து அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
(04)
சினிமா பற்றிய கனவுகளோடு இருப்பவர்களும் திரைப்படக்குழு மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் திரைப்படத்தைக் கொண்டாட காரணங்கள் நிறைய இருக்கின்றன. சினிமா பற்றிய கனவுகளோடு இருக்கின்ற இளைஞர்கள் கோமாளி கிங்ஸை கொண்டாடக் காரணம், அவர்களின் படைப்புகளும் இன்னொரு நாள் வெளிவரப்போகிறது என்பதாகவே இருக்கிறது. எனக்கு சினிமா ஒன்றினை தொழில்நுட்ப ரீதியில் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. முன்னரே கூறியது போல நான் கார்ட்டூன்களை ரசிப்பவன். ஆனால் ஒரு கலைவடிவம் ஒன்றின் சமூகப் பார்வை பற்றியும் அதன் பிரதிபலிப்புகள் பற்றியும் எனது பார்வைகளை முன்வைக்க முடியும். கோமாளி கிங்ஸ் ஒரு முன்னுதாரண சினிமா அல்ல. தவறான வழி ஒன்றிற்கு அத்திவாரம் தீட்டிவிட்டுப் போயிருக்கிறது. என் கவலைகள் அனைத்தும் இனி வரப்போகின்ற முழு நீளத் தமிழ் திரைப்படங்கள் பற்றியது தான்.
பின்குறிப்பு
ஒரு கலைப் படைப்பாக இந்தத் திரைப்படத்தை அணுகவேண்டிய கட்டாயத்தை இங்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுமையாக வெளிப்பாடுகள் பற்றிய அவதானங்கள் அடிப்படையிலேயே அணுகுகின்றேன்.
மொறட்டுவையில் கட்டுபெத்தை சந்தி மிகவும் முக்கியமானதொன்று. கொழும்பிலிருந்து காலிக்கான அகன்ற வீதியிலிருந்து கொட்டவைக்குச் செல்ல பிரிகின்ற இடம் தான் கட்டுபெத்தை சந்தி. ஏழு சமாந்தர வீதிகள். நிறைய நிற விளக்குகள். எப்போதும் சன நடமாட்டம் மிகுதியாகவே இருக்கும். தோள்களில் பைகளைப் போட்டுக்கொண்டு கைகளில் தொலைபேசியுடன் நடக்கின்ற கம்பஸ் மாணவர்களால் எப்போதுமே கட்டுபெத்தை சந்தி ஆரவாரமாகத் தெரியும். கட்டுபெத்தை சந்தியிலிருந்து கம்பஸிற்கு ஒரு கிலோமீட்டர் தூரமிருக்கும். முச்சக்கர வண்டியிற் போக எழுபது ரூபா. பேரூந்திற்குப் பத்து ரூபா. முன்பொருமுறை நகரத்தின் குறிப்புகளில் இந்த பேரூந்தைப் பற்றி எழுதியிருந்தேன். பெரும்பாலும் எல்லோரும் இந்தப் பேருந்து வழிப் பயணத்தையே விரும்புகின்றோம். ஏனென்றால் இதில் சேமிக்கின்ற அறுபது ரூபாய்க்கு இரண்டு கோழி இறைச்சி சாப்பாடு அல்லது ஒரு நூடுல்ஸ் அல்லது பன்னிரண்டு தேநீர் அல்லது இரண்டு பணிஸ் என்று ஏதாவது ஒன்றைச் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுவிடலாம். அல்லது இரவுத் தேவைக்கு ஒரு இணைய மீள்நிரப்பு அட்டை. என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னும் பத்து ரூபா சேர்த்து சிற்றுண்டிச்சாலையில் ஒரு போத்தல் கொத்மலே பால். எப்போதாவது யோர்கட். கட்டுபெத்தை சந்தியில் வந்திறங்கி, ஒரு சமிஞ்ஞையை கடந்து கடை வரிசையின் முன்னால் பேரூந்திற்குக் காத்திருக்கவேண்டும். அதனருகிலேயே சிறிய சந்து ஒழுங்கைக்குள் முச்சக்கர வண்டிக்காரர்களும் வரிசையில் நிற்பார்கள். கம்பஸ்சிற்குப் போக இரண்டு வகையான பெயர்பலகையுடன் பேரூந்துகள் வரும். ஒன்று 255 மற்றையது 255/1. கல்கிசையிலிருந்து தொடங்கி கொட்டவைக்கு 255உம், கட்டுபெத்தையிலிருந்து மொல்பேற்கு 255/1உம் சேவையிலிருக்கும். இரண்டுமே கம்பஸைத் தாண்டித்தான் செல்லும்.
255 சாதாரண பேரூந்து. கட்டுபெத்தை சந்தியில் நின்று காத்திருக்கின்ற ஆட்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றுவிடும். கல்கிசையிலிருந்து ரத்மலான, கட்டுபெத்தை, பிலியந்தல ஊடாக கொட்டவையை அடையும் என்பதால் கட்டுபெத்தை சந்தியில் அதிக நேர மினக்கெடல் தேவையற்றது. ஆனால் 255/1 அளவில் சிறிய மினி ரகப் பேரூந்து. பழைய அலுமினியத் தகடுகளைக் பொருத்தி விளையாட்டு வாகனம் செய்தாற்போல ஆங்காங்கே வழிந்து தொங்கும். இரண்டு வேலை செய்யாத உருண்டை விளக்குகள், ஒரு சிறிய மாத நாட்காட்டி, பூக்கள் வைக்க சிறிய தட்டு கூடவே சில்லறைகள் இருக்கின்ற ஒரு தட்டு என்று சிறிய சிறிய பொருட்களால் பேரூந்து அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கக் கூடும். இப்போது வெயில் சுட்டு மண்ணிறமாகிவிட்டது. அதில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று ஓட்டுனர்களை மட்டுமே சந்தித்திருக்கிறேன். அவர்களும் பேரூந்தைப் போலவே வறட்சியாகத் தெரிவார்கள். மங்கிய பழுப்பு நிற மேற்சட்டையையும் அதற்குச் சற்றும் குறைவில்லாத நீளக் காற்சட்டையையும் அணிந்திருப்பார்கள். அவர்கள் கண்களில் அலைச்சலோ அல்லது கடுகடுபோத் தெரியாது. கட்டுபெத்தை சந்தியிலிருந்து மொல்பேக்கு வெறும் ஒன்றரை கிலோமீட்டர் தூர பயணத்திற்காக சேவையிலிருக்கிறது இந்தப் பேரூந்து. அனேகமான நேரங்களில் சந்தியில் தொடங்கி கம்பஸோடு பயணத்தை முடித்துவிடும். மொல்பேக்கு போக ஆட்கள் இருக்காது. 255 ஐ விடச் சற்று தாமதமானது. காலையில் கம்பஸிற்கு போகின்றவர்களாலும் பின்னேரங்களில் கம்பஸிலிருந்து திரும்புபவர்களாலும் மட்டுமே ஓரளவு நிறைந்த ஆட்களுடன் 255/1 சேவையில் ஈடுபடும். மற்றைய நேரங்களில் நான்கோ ஐந்தோ பேரோடு தான் பயணம். ஒரு சமயம் தனித்தே பயணித்திருக்கிறேன். அந்தச் சமயமும் நடத்துனர் சிரித்துக்கொண்டே காசை வாங்கினார். சில நேரங்களில் பேரூந்து நிரம்பி வழியும் கூட்டத்துடன் செல்லும். நடத்துனர் கூட்டத்தை உள்ளே தள்ளி, ஏறுகின்ற படிகளில் இருக்கின்ற அலுமினிய கைப்பிடிகளில் தனது கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தலையை வெளியே நீட்டுவார். பேரூந்து வாரிபோட்ட காற்றில் அவரின் செம்பட்டை முடி அலை அலையாக மிதக்கும். அந்தக் காற்றிலே , நிரம்பிய கூட்டத்தை எண்ணி மகிழ்ந்தவாறு புன்னகையினை உதிர்ப்பார். நிரந்தரமில்லாத அந்தப் புன்னகை கட்டுபெத்தை நாற்றத்தில் அமிழ்ந்து போய் விடும். நான் 255/1 இற்குள் யன்னல் கரையோரம் களைத்துப்போயிருந்தேன். வியர்வை பெனியனை நனைத்து மெல்லிய நீல அரைக் கை மேற்சட்டையினை ஈரமாக்கிக்கொண்டிருந்தது. கம்பஸிற்கு முன்னிருந்த தரிப்பில் பேரூந்து நின்றுகொண்டிருந்தது. அதிஷ்ட லாப சீட்டுக்களை பரப்பியபடி தகரக் கூட்டுக்குள் வாய்நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு பெண்ணொருவர் பேரூந்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவரிற்கு அருகில் தோடம்பழ கரைசல் விற்றுக்கொண்டிருந்தார் இன்னொரு பெண். மத்தியான வெயில் தலைக்குள் இறங்கிக்கொண்டிருக்கும் போது முப்பது ரூபாய் மதிப்புள்ள தோடம்பழக் கலவை சிறந்த நிவாரணியாகத் தோன்றும். கரைசல் தொண்டைக்குள் சுழற்றிக் கொண்டு இறங்கும் போது ஊடுருவியிருந்த வெப்பம் அனைத்தும் கணப்பொழுதில் மறைந்துவிடும். என்னோடு கூட நான்கைந்து பேர். இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் கிளம்பிவிடும். நடத்துனர் தனது இடது கையினை பேரூந்தில் பிடித்தவாறு வலது கையினால் தனது இறுதி அழைப்பினை விடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், 255 வேகமாக வந்து நானிருந்த பேரூந்திற்கு முன்னே நிறுத்தியது. நானிருந்த பேரூந்தில் சாரதி இயந்திரத்தினை உறுமி, பயண ஆயத்தத்தை உணர்த்திக்கொண்டிருந்தார். நானிருந்த பேரூந்திற்குளிருந்து முன்னிறுத்தப்பட்ட பேரூந்தைக் கண்ட மூவர் – கிளர்ச்சியுடன் இதிலிருந்து வேகமாக இறங்கி அதற்குள் பாய்ந்தார்கள். யாரின் வருகையையும் எதிர்பாராத 255 சாதாரணமாகக் கிளம்பியது. இதனை அவதானித்த நடத்துனர், இன்னொரு முறை இறுதிக் கூவலை விடுத்தார். எப்போதும் போல அது யாரின் காதுகளையும் சேர்ந்துவிடாமல் கிளம்பிய 255 இன் சத்தத்தில் மறைந்துபோனது. எங்கள் மூவருடன் அந்த எந்திர வாகனம் கிளம்பியது.
இது என்னைச் சுற்றியிருந்த எல்லோருக்கும் சாதாரணமாகப்பட்டிருக்கலாம். எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் மீண்டும் எனது சுற்றத்தின் மீதான வெறுப்பை அதிகரித்தது. கம்பஸ் முடிந்து போகின்றபோது, அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் பெரிய பொருட்டல்ல. அந்தக் குறுகிய காத்திருப்பு மூவருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. அவர்களின் இயங்கு நிலைச் சூழலின் மீதான அக்கறையின்மை என்னைப் பாதித்தது. நானிருக்கும் பேரூந்தின் சாரதி மீதும் நடத்துனர் மீதும் உயிரற்று இயக்கிக்கொண்டிருக்கின்ற பேரூந்தின் மீதும் கவலை படர்ந்தது. என் சமூகத்தின் எளிமையான அலட்சியம் பல கேள்விகளை உண்டாக்கியது. மிகவும் இலகுவாக அற்ப காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கின்ற மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள், நினைவுகள் அனைத்தும் ஏதோ ஒரு இயங்கு நிலையின் பிரதான காரணிகளாக இருக்கும். அந்த அலற்சியம் என் உணர்தலைப் பெரிதும் சலசலப்பிற்கானதாக மாற்றிவிடுகிறது. இந்தச் சம்பவம் கூடவே இன்னொன்றையும் நினைவுபடுத்தியது.
நதியா பெரேராவின் ” நீ உறங்கிய வேளை ” என்ற குறுந்திரைப்படத்தை கடந்த வருட மார்கழி மாத இரண்டாம் திகதி உலக மகளிர் உச்சி மாநாட்டுத் திரையிடல் பகுதியில் பார்த்தேன். சீன முதலீடுகளின் வருகை போருக்கு பின்னர் அதிகரித்துள்ளது – சுதேச முதலீடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை குறியீடாக உணர்த்துகின்றது. அதே போல சமீப காலமாக பாதைகள் நெடுகிலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நடமாட்டத்தை அதிகமாகக் காணக்கிடைக்கிறது. அதில் பெரும்பாண்மையானோர் சீனர்கள். அத்தோடு, சில கிழமைகளுக்கு முன்னர் வீதியோரத்தில் கைகளில் சீனக்குழந்தையை ஏந்தியபடி இலங்கைத் தாய் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்ததையும் அவதானித்தேன். அவளின் கண்கள் இனம் புரியாத மிரட்சியுடன் இன்னொரு பத்து ரூபாய்க்காக காத்திருந்தது. அந்தக் குழந்தை முகத்தில் எந்த சலனமும் இல்லை.
இவையனைத்தும் அந்தக் கணப்பொழுதில் தோன்றிப் பயணம் முழுதும் ஆக்கிரமித்துவிட்டன.