போருக்குப் பின்னரான சில சிறுகதைப்பிரதிகள் மீதான வாசிப்பும் புரிதலும் – 1

போர் மனிதர்கள் காணாத, உணராத ஒன்றல்ல. போர்களையும் அதன் கொடூரங்களையும் அழிவுகளையும் வரலாறு நெடுக மனித இனம் கண்டுகொண்டே வந்திருக்கிறது. போருக்கான சூழல், அதன் பின்னர் மூளும் மனிதர்களின் அரசாங்கங்களின் சுயநலம், தவறான வழிநடத்தல்கள், துரோகங்கள், தோல்விகள், இழப்புகள், மரணங்கள், கண்ணீர், அத்துமீறல்கள், போரில் வெற்றி, அகதிகள், ஊனமுறவர்கள், அனாதையாக்கப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள், காணமல் போனவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், பண்பாட்டு அழிவு, வடுக்கள், ஏளனங்கள், உள்ளூர மூண்டு எழும் கோபம், ஞாபகங்களில் இருந்து அகற்றிவிடமுடியாமல் கீறலாகிப்போன நாட்கள், மீண்டும் போருக்கான சூழல். போர் எப்போதும் முடிவடைவதில்லை. போருக்கு தொடக்கம் நடுவு முடிவு என்று ஏதுமில்லை. ஒரு நிலத்தில் என்றைக்கேனும் ஒரு நாள் போருக்கான முதல் ரத்தம் விதைக்கப்படுகிறோ அன்றிலிருந்து காலம் சூன்யமாகிவிடுகிறது. எதிர்காலம் என்ற ஒன்று அந்நிலத்திலிருந்து கண்காணாத தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆச்சரியமாக போர் யார் பக்கமும் சாய்ந்திருப்பதில்லை. அதற்கென்று மொழியோ இனமோ இருப்பதில்லை. அவற்றுக்குத் தேவையானவை தோல்விகளும் மனித உடல்களும் தான். போருக்குப் பின்னர் என்பது மாயை. அது என்றைக்கும் வரையறுக்கமுடியாத ஒன்று. காண்பியலுக்கு போருக்கு பின் என்பது காலத்தை வரையறைசெய்துகொள்ள ஏதுவாயிருந்தாலும், இக்கட்டுரையில் போருக்குப் பின்னர் என்பது மிகச்சரியாக மே 19, 2009 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன மதிய நேரச் செய்திகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட போது பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த எனது அம்மா அச்செய்தியைக் கண்டு சுவரோடு சாய்ந்து தன் தலையில் மேல் கை வைத்ததோடு தொடங்குகிறது.

கட்டுரைக்கான உடல் ஒன்றினைத் தெரிவு செய்வதன் மூலம் வாசிப்புகளையும் புரிதல்களையும் ஒழுங்கமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். போருக்குப் பின்னரான சிறுகதைகளின் களங்கள் இருவேறு நிலங்களில் உயிர்கொள்கிறது. ஒன்று போர் நிலம் மற்றையது போர் நிலத்திற்கு அண்டைய நிலம். போர் நிலமென்பது விடுதலைக்காக ஆயுதங்களைத் தூக்கி மனித உயிர்களைப் பணயம் வைத்து நின்ற நிலம். அதே போன்று ஆயுதம் தாங்கிய போர் நடக்கும் நிலத்தைச் சுற்றி போரின் மௌன ஓலம் வெடித்துப் பரந்த நிலங்கள் அனைத்தும் போருக்கு அண்டைய நிலங்கள். அவை தூரங்களால் அல்ல துயரங்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. நிலம் போரின் முக்கிய பொறி. மனிதர்கள் நிலங்களின் மேல் கொண்டிருக்கும் நித்தியமான உறவும் ஆதரவும் போரில் பகடையாக உருட்டப்படுகிறது. பரந்தனில் எழுநூறு கோழிக்கால் குறியிட்ட மாடுகளுடன் தொடங்கி செல் அடிக்கு திக்கெது திசையேது என்றறியாமல் இறுதியில் மீள் குடியேற்றத்தில் பிடித்த ஒரு கோமதியும் தொலைத்த அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது மற்றைய கோமதிகளும் தன் நிலத்தின் மீது யதார்த்தன் பிடித்து நிற்கும் துண்டுக் கண்ணாடி. சுருவில் மக்கள் சட்டி பானைகளோடு தேவாலயத்திற்கு கிளம்பும் போது கப்டன் பொன்ராசா தன் நிலத்திலிருந்து வர முடியாமல் சுருள்வதும் பாழங்கிணத்திற்குள் வருடக்கணக்கில் பாசிகளையும் தவளைகளையும் நுண்ணங்கிகளையும் போல உயிர்ப்புடனிருக்கும் பெயர் தெரியாத ஊரிப்புல குடிமகனும் சோபா சக்தியின் நில அச்சாணியில் உருளும் துயரங்கள். பிண முற்றிப்போன இறுதிக்காடுகளை அவர்கள் கடந்து என் நிலத்தின் தரப்பாள்களுக்குள் திணிக்கப்படும் போது அவர்களின் உயிரைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் அந்நிலத்திற்குள்ளும் பதுங்கு குழிகளுக்குள்ளும் புதைவிட்டு வந்தார்கள். போரின் நிலம் உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் சுடுகாடாய்ப்போனது. தமிழினிக்கு தன்னிலத்தில் கந்தக வாசத்தோடும் ரத்த வாடையோடும் பச்சிலைகளின் கருகல் வாசனையும் சேர்ந்து துயரத்தைத் தருகிறது. அது புனைவால் போரை நிகழ்த்தும் எவராலும் உணரமுடியாத வலி. களமுனையில் தன் நண்பி சங்கவியோடு மரத்தின் கீழிருந்து பேசிக்கொண்டிருக்கும் தமிழினியின் மனதில் போரைப்பற்றிய பயமில்லை. ஆனால் எதிர்காலத்தைப்பற்றிய நிச்சயமின்மையும் இழப்புகளைப்பற்றிய கவலையும் நீண்டிருந்தது. அது அவளின் கண்களுக்குள் திரண்டு மரணத்தின் வாசனையாய் நிலமெங்கும் படர்கிறது. புத்தர் அவன் மகளிடம் மரணமில்லாத வீடொன்றிலிருந்து ஒரு பிடிக் கடுகு வாங்கிவா என்றபோது எல்லா வீட்டிலும் மரணமிருந்ததைபோல எந்த வீட்டிலும் கடுகிருக்கவில்லை என்ற உண்மையும் எமக்குள் உறைக்கிறது. இழப்பு போரின் நிலத்திலிருந்து முகாம்களை நோக்கி தன் புளுத்துப்போன வாயைத் திறக்கிறது.

யதார்த்தனின் முகாம்கள் முக்கியமான அமைப்பு. போர்நிலத் தொடர்ச்சி. ஆனால் அவை உரிய மண்ணால் செதுக்கப்பட்ட சிற்பங்களா என்றால், இல்லை என்று தான் நம்புகிறேன். ஆனால் இக்கட்டுரைக்கு சிற்பங்களை விட மண்ணால் செய்யப்படுகின்றன என்பது முக்கியமாகத் தெரிகிறது. இது யதார்த்தனுக்கு மட்டுமல்ல பலருக்கும் பொருந்தும். சைவே என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்பட்ட பிரியங்கா, அப் பெயரையும் நிறத்தையும் பூச மரணமொன்றே காரணாமாயிருக்கிறது. மனிதர்களின் பெயர்களையும் மன அமைப்புகளையும் சமூக அமைப்புகளை இலக்கிய உடல்களையும் மரணங்கள் உருமாற்றியிருக்கிறன. மரணங்களும் இழப்புகளும் சிறுகதைப் போக்குகளை மாற்றுவதில் முக்கியமானதாயிருக்கின்றன. எங்களுக்கான வாழ்க்கையைப் பற்றிய அறமும், அநித்தியம் பற்றிய உண்மைகளும் மரணங்களின் மூலமே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலத்தின் புனைவு மொழி இறந்த உடல்களுக்குள் மௌனமாய் உறைந்துபோன கனவுகளின் மொழி. முன்னர் விஸ்பர் வாங்குவதைக் கூட தயக்கமாகக் கூறும் பிரியங்கா, பின்னர் வெகு லாவகமாக பெரிய மோட்டார் சைக்கிளில் ஏறி உலகத்தின் முன்னால் தன்னை திறந்து கொள்வது வரை போர் மனிதர்களை வெளிப்படையாக்கியிருக்கிறது. இந்த வெளிப்படைத்தன்மை – அவர்களின் அரசியலிலும் தென்படுகிறது. பசித்த வயிற்றுடன் சுத்தமாக்கப்பட்ட வீரை மரத்தின் கீழிருந்து என்றைக்கும் திரும்ப முடியாத தம் இழந்து போன வாழ்க்கையைப் பற்றி அந்தச் சிறுவனின் குடும்பமும் – அதே மரத்தின் கீழ் முன்னொரு மழைக்கால இரவில் கறுத்த வானத்தை நோக்கி ஒளிர்ந்துகொண்டிருந்த விழிகளுடன் விடுதலைக்கான ஆசையோடு தன் மூச்சை நிறுத்தியிருந்த தமிழினியின் தோழியும் – பல்லாயிரம் சிறுவர்களும் குடும்பங்களும் சங்கவிகளும் சாக்காட்டின் ஒவ்வொரு நிழலும் நிலைத்து நிற்கிறார்கள். வானம் அவர்களின் தோல்விகளால் இருண்டிருக்கிறது. புனைவுகளையும் சிறுகதைகளையும் தவிர எந்த விசாரணையும் அவர்களின் காயங்களுக்கு பதில் சொல்லப்போவதில்லை. முகாம்கள் மனித அவலத்தின் ஒட்டுமொத்தப் புகைப்படம். அன்று யூதர்களின் உடல்கள் கருக்கப்பட்டு எழுந்த புகைக்கூடத்தின் மணத்தையும் மினிக் பாம்கள் எங்கும் எழுந்த மனிதர்களின் மணத்தையும் எந்த வித்தியாசமின்றிப் பார்க்கிறேன். மரணங்களின் மணமும் போரில் தோற்றவர்களின் மணமும் வேறு வேறல்ல.

புலம்பெயர்வு என்றைக்கும் திரும்பமுடியாத வாழ்க்கை நிலைமை எமக்குத் தந்திருக்கிறது. இந்நிலம் புலம்பெயர்வுகளுக்காக சபிக்கப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து மனிதர்கள் பிரியும் போது அந்நிலம் தன் பிடிகளை இழக்கிறது. ஒவ்வொரு மனிதரும் நிலத்தை விட்டுப்பிரியும் போது தம்மோடு நிலத்தின் ஒரு துண்டத்தை பெயர்த்துக்கொண்டு கிளம்புகிறார்கள். இன்று அவர்களின் மூன்றாம் சந்ததியும் உருவாகிவிட்டது. ஆனால் என்றைக்குமான அவர்களின் நிலம் பெயர்த்தெடுத்துப்போன அத்துண்டு நிலமாகவேயிருக்கிறது. அவர்களின் கதைகளில், பயணங்களில் அந்நிலம் ஒவ்வொன்றாக உருப்பெறுகிறது. அவை களிமண்ணைப்போல ஒவ்வொரு வடிவங்களில் ஒவ்வொரு நிறங்களில் தம்மை உருமாற்றி உருமாற்றிக்காட்டிக்கொண்டிருகின்றன. வேற்றுநிலத்தின் ஆற்றுப்படுக்கைகளிலும் மலைகளிலும் தன்னிலத்தை விரித்து சாய்ந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் விருப்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விரும்பி ஏற்காத வாழ்க்கைக்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களின் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் பலர் இறுதி முனையிலும் முகாம்களிலும் புனர்வாழ்வு நிலையங்களிளுமிருக்க தனித்திருந்து உழலும் அவர்களின் மனநிலையும், போருக்குப்பின்னர் வருவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டும் வரமுடியாமல் உழலும் மனிதர்களையும் கதைகள் நெடுக காணக்கூடியதாயிருக்கிறது. போர் அவர்களை இன்னொரு வழியில் சிறைபிடித்திருக்கிறது. தருமலிங்கமும் அசோகமலரும் இந்தியாவில் தனித்திருக்கும் இனிய காலம் இன்னமும் எத்தனையோ பேருக்கு வாய்க்காதது. சீனர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும் இந்நாட்டில் இருக்கும் சுதந்திரம் புலம் பெயர் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. சோபா சக்தி போரின் கதைகளை அரசியல் பிரசுரமாக்குகிறார். அவர் காட்டும் சாமான்ய மனிதர்களின் அலைக்கழிப்பைத் தவிர வேறு எந்தத்தரப்பையும் அணுகுவது எனக்கு வெறுப்பாயிருக்கிறது. ஒரு கதை சொல்லியென்ற அடையாளத்தைத் தவிர வேறெந்த அடையாளத்தையும் ஏற்படுத்துமளவிற்கு எனக்கு அவரின் சிறுகதைகளில் உண்மையை உணர முடியாதுள்ளது. புனைவுகளுக்கு உண்மை அவசியமில்லை என்றாலும் போர்ப் புனைவுகளில் உண்மை அற்றுப்போகும் போது போர் சந்தையாக்கப்படுகிறது. இங்கு உண்மை என்பது பொது மொழியில் பொய்க்கு எதிரானது. புனைவு மொழியில் உண்மைக்கு நிகரானது. இருந்தும் சோபா சக்தியின் சாதாரண மனிதர்களை மதிக்கிறேன். வேலும் மயிலும் பமுவும் அப்பாவிகளாக போர்நிலத்தில் பலியிடப்படும் போது இரண்டு தரப்பினரும் கொண்டாடுகின்றனர் . போரை அப்பாவி மனிதர்களின் இழப்பாக இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அவரின் பெரும்பாலான கதைகளில் போரோடு துரோகமும் கலந்துகொள்கிறது. “தமிழனை தமிழனே இப்படி செய்யக்கூடாது” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

பொன்ராசாவின் கதைக்கருக்கு ஏறக்குறைய ஒத்த கதையை புனைகிறார் கபில். கபிலோடு தர்மு பிரசாத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டியிருக்கிறது. சோபா சக்தி, கபில், தர்மு மூன்று பெயரையும் ஒரே முக்கோணத்தில் வைத்து சுழற்றிப் பார்க்க உடலெது கதையெது என்று தெரியாமல் ஒன்றை ஒன்று மேவிக்கொண்டிருக்கினர். தர்மு பிரசாத்திடம் வலிமையான கதைகள் இருக்கின்றன. தன்னுள் தனித்து ஊறும் நிலமும் சொற்களுமிருக்கின்றன. களவாடப்பட்ட உடல்களுக்குள் வலிமையான இக்கதைகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. தனிமையின் நூறு ஆண்டுகளில் தண்டனைக்குட்படும் அக்கா, தமிழ் சமூகத்தின் மொத்த பெண்ணுருவாய்த் தெரிகிறார். போர் பெண்களை வலிமையாக்கியது. வரலாற்றின் பனியாய் எம் பெண்கள் உருக்கொண்டார்கள். தனிமையின் நூறு ஆண்டுகள் மூன்று கோடைகளாக விரிகிறது. என்றைக்குமே மாரியைப் பார்க்கமுடியாத நிலத்தின் தனி மனிதப் பிறழ்வை, தனிமனித அழிவை திருகுவதன் மூலம் சமநிலையற்ற போர் விதிகளின் மீது தறிகெட்டாடும் மொத்த சமுகத்தின் பிறழ்வை மொழிக்குள் கொணர்கிறது. மோசஸ் மீளுயிர்க் கொண்டதும் அக்காவின் உயிர் எடுக்கப்படாமல் அந்தரத்தில் விடுத்துப் போனதும் கதைகளின் போக்கை ஆணுயிர், பெண்ணுயிர் என்று மொழிபடுத்துகிறது. ஆனால் அவர்களின் உடல்கள் சோபாசக்தியின் சக்கைகளாவே எனக்குத் தோன்றுகின்றன. கதையுடல்கள் போரின் கதைகளுக்கு அவசியமானவையா என்ற கேள்வி எப்போதும் எமக்குள் தொக்கி நிற்கிறது. இந்தக் கேள்விக்கு ஆதி காரணம் எங்களை அடையாளப்படுத்தியவர்கள். ஒரு துளியை பாலாகவும் ரத்தமாகவும் பார்க்கப்படவேண்டியிருக்கிறது. இன்னமும் அதிகாரத்தின் பார்வையில் சிறுபான்மையாக ஊரும் எமக்கு வரலாறு பன்முக வாசிப்பினைக் கோருகிறது. இலையின் கீழ் ரவையை மறைத்து கைமாற்றவேண்டியிருக்கிறது. நியம புத்தரை காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கும் ராகவனின் பொறி கதையுடல்களுக்கு சிறந்த உதாரணம். எல்லோரும் போரின் தொடக்கத்தில் மிகத் திடமான குறிக்கோள்களுடனிருந்து உயிருக்காய் ஒவ்வொன்றாகக் கைவிட்டு கடைசியில் உயிரோடு மட்டுமே திரும்பிய பொதுவான போக்கை சிறுகதைகள் கொண்டிருக்கின்றன. அன்று கைவிட்டுப் போன நிலமும் பின்னர் எம் கைகளுக்குக் கிடைத்த நிலமும் ஒன்றல்ல. பௌதீகத்தாலும் மனத்தாலும் இரண்டும் வெவ்வேறு குணங்களை உடைய இரண்டு நிலங்கள். இது போர் நிலத்திற்கு மட்டுமேயுரிய குணமா என்றால், இல்லை என்றே தோன்றுகிறது. வாழ்க்கை சாமான்ய மனிதர்களின் மீது தொடுக்கும் எல்லாவகையான போர்களிலும் போராட்டமும் தோல்விகளும் பெரும்பங்காயிருக்கிறன. அதிகாரம் மனிதர்களின் அன்றாடத்தை பூனைகளைப்போல நசுங்கித் தின்கின்றன. எல்லா வளைகளிலும் வாய்வைத்திருக்கும் பூனையின் பிடியில் திசேராவின் புனைவுகள் உருப்பெறுகின்றன.

கதையுடல்களின் சாத்தியங்களையும் கட்றற்ற மொழிச் சோதனைகளையும் புனைவுகளில் பரிசோதித்துப்பார்க்கிறார் திசேரா. எண்களையும் தாவரங்களையும் கவிதை மொழிகளையும் குழந்தையொன்றின் முதல் முயற்சிகள் போல கையாண்டுபார்க்கிறார். தன் மொழியின் கூறு நிலைகளை மாற்றுவதனாலும் மொழிக்குள் வெறுமையையும் இறுக்கத்தையும் ஏற்படுவதுவதன் மூலமும் கதைகளைப் புனைய விரும்புகிறார். வழிகள் அதிகமிருந்தும் இயற்கையை சவாலுக்கு அழைத்து ஆடும் பகடையை நிகழ்த்திப்பார்க்க தவறுகிறார். பன்மைப்பால் நிலைகளால் புனைவு மனத்தை வனையும் தன்மை உரையாடப்படவேண்டிய ஒன்று. தன்னுடைய பால் நிலையைக் கழைந்து எழுதுவது என்பதும் அதற்குரிய பிரக்ஞையுடன் மொழியைக் கையாள்வது என்பதும் இன்று பலரிடம் இல்லாத ஒன்று. தமிழில் போதுமானளவு உரையாடல்கள் நிகழ்த்தப்பட்ட பிறகும் ஆண், பெண் விகுதிகளை கையாள்வதில் தடித்த ஆண் மனோபாவமும் அலட்சியமும் நிறைந்திருக்கிறது. மொழியை அதன் பாட்டில் நகரவிட்டு பின்தொடரும் திசேரா அவற்றில் மிகவும் பிரக்ஞை உணர்வோடு செயற்பட்டிருக்கிறார். கதைகளைப்பற்றியும் அதன் விவாதங்கள் வாசக பார்வைகள் என்று கதைகளின் எல்லாக் கூறுகளின் மீதும் விருப்பமும் ஈடுபாடுமுள்ளவர்கள் சமூகத்தின் அடிப்படை உண்மையை மொழியில் கையாள்வதிலுள்ள தயக்கம், தங்களைத் திருத்திக்கொள்வதில் உள்ள அலட்சியமும் ஏமாற்றமளிக்கிறது. திசேரா வெறுமையான நிலத்தின் ஒழிந்திருக்கும் கருமௌனங்களைப் புனைகிறார். இழத்தலின் காலம் பரிசோதனைகளின் உயிர்ப்புள்ள குழந்தையாக உணர்கிறேன்.

போரின் நிலத்திற்கும் அண்டைய நிலத்திற்கும் இடையில் மனித அலைச்சல்களின் வேர் பிணைந்து கிடக்கிறது. அதன் நுண்மையான வேர் மயிர்களின் கசப்பு இந்நிலத்தின் மீது எழுதப்பட்ட, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும், எழுதப்போகும் எல்லாப் புனைவுகளிலும் தோய்ந்து அலைந்துகொண்டிருக்கும். காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இது என்கிறார் கற்சுறா. எம்முன் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது, புனைவுகள் சுவர்களில் துளைக்கப்பட்ட ரவைக் கலன்களுக்குள் நிறைத்து நிற்கின்றன. குடியேற்றப்பட்ட நிலங்களின் மீது கலங்கி ஓடும் தொலைக்காட்சி பெட்டிகளில் கூட ரூபமாய் மனிதர்களின் அலைச்சல். போரில் தோற்றவர்கள் மீண்டும் தம் நிலங்களின் மீது வெறும்பாதங்களை அழுத்தும் போது உணரப்படுவது மண்ணின் கண்ணீரா அல்லது மனிதர்களின் ரத்தமா என்ற ஞாபகக்கலப்பு. போர்ப் புனைவுக்காலம் முடிவற்றது. துயரங்கள் என்றும் அழிக்கமுடியாதவை. காலம் உளுத்து நனைந்த குற்றியின் மேல் பூக்கும் சாம்பல் பூக்களுக்காக காத்திருக்கிறது .

மேலதிகமாக சொல்லப்படவேண்டிய குறிப்புகள்

  1. 29 புரட்டாதி 2019 அன்று வன்னியில் நடந்த 49வது இலக்கிய சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். இது.
  2. இக்கட்டுரையின் உடலுக்குள் எழுதப்படாத சிறுகதைகளும் புனைவுகளும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு பொருத்தமான உடலுக்குள் பேசப்படவேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். என் வாசிப்பு அனுபவமும் எல்லையும் மிகக்குறுகியது. இங்கு தவறவிடக்கூடாதவையென்று நீங்கள் நினைக்கும் சிறுகதைகளை வாசித்து எனக்கு கிடைக்கூடிய மற்றைய சந்தர்ப்பத்தில் பொருத்தமானவற்றை குறிப்பிடத் தவறமாட்டேன் என்று நம்புகிறேன். மின்னஞ்சல் – kanesalingambrinthan187@gmail.com

சூன்ய மினுப்பு

(01)

கதைக்கற்றைகளாக எழுதப்படாத வரலாற்றினை எழுதி, மறைத்து வைக்கப்படுகின்ற சம்வங்களை எழுதி அல்லது தொன்மங்களை, பண்பாட்டை, துரோகத்தை, இனஅழிப்பை, பகைமையை என்று எல்லாவற்றையும் எழுதி அச்சிட்டு கனதியான புத்தகங்களாக அடுக்கிவைக்கப்பட்ட அலமாரியில் நகுலனின் நாய்களும் வந்து சேர்ந்தது. ” கலை என்ற அதீதத்தின் நிஜப்பரிமாணம் பழஞ்சுவடிகளின் கீறலில் சுரந்த முலைகளில் ஒவ்வொரு சொட்டுக் கண்ணிமை பால் கோடுகளாய் பனுவலின் அசைந்து கூத்து நாடகம் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் போது தான் நாம் உணர்த்தே இருக்கமுடியாத விதங்களில் பிரமாண்டமாக வெளிப்படுகிறது” என்று பாழி நிறைய பொறிகளாகவும் சாவிகளாகவும் வரலாற்றுக் கிண்ணத்தின் கரு மைத்துளிகளை விதைத்தார் கோணங்கி. மூன்றாம் மாடியின் ஓரளவுக்கு வசதியான அறையொன்றிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் எனக்கென்ற எந்த தொன்மமும் பண்பாடும் வரலாறும் இல்லாத வெறுமை தான் கிடைக்கப்பெற்றிருக்கிறது. மைதானமளவு வெறுப்பும் வயல் வெளியளவு அன்பும் என்னிடம் எஞ்சியிருக்கின்றன. வாசித்த எல்லாப் பனுவல்களும் இசையாகவும்  ஓவியங்களாகவும் கொத்துக் கொத்தாக விரிகின்றன. சிலது வெறுங்காகிதங்களாகவும் இன்னும் சில அட்டை திறக்கப்படாமலும் கிடக்கின்றன. ஆனால் மிகச்சிலதிலிருந்தே இருகை விரிப்பளவு மூளையின் மடிப்புகள் பிரமாண்டமான கடற்கரையாக விரிகின்றன. அவை பிரமாண்டத்திற்கு எழுதப்பட்டவை அல்ல. நகுலன் தனித்த மனதின் குறியீடு. தனித்த மனத்தின் பிரமாண்டத்திற்கு இணையாக வேறொன்றுமில்லை. காற்றைப்போல வெகுளித்தனமாக எல்லா இடங்களையும் நிரப்பிச்செல்லும் மௌனம் அதனுடையது. விரிந்து விரிந்து ஏதுமற்றதாகிவிடாது. உலகத்தின் எல்லாக் கூறுகளையும் தின்று பருத்து விரிந்துகொண்டே போகும். நகுலனின் நாய்கள் அத்தகைய ஒரு விரிவு. தனித்த மனமொன்றின் விரிவு. கோணங்கி சொன்ன அதே பிரமாண்டம் எனக்குள் நிறைகிறது. நாய்கள் எனக்கு பிடிக்காது. இங்கிருக்கும் நாய்கள் எல்லாம் வாய் நிறைய சீழ்வடியத் திரிகின்றன.

(02)

அழுக்கு நிறைந்த உலகம் முழுதும் முற்றுப்பெற்ற கதைகள் மண்ணுக்குள்ளும் முற்றுபெறாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்ற கதைகள்யாவும் நிலத்தின் மேலும் தேவதைக்கதைகள் எல்லாம் வானத்திலும் மிதந்துகொண்டிருக்க, சட்டைப்பைக்குள் ஒரு கதையும் வாய் நிரம்ப புலம்பல்களுடனும் திரியும் எனக்கு இன்னொரு புலம்பலைக் கேட்கும் போது சந்தோஷமாயிருக்கிறது. புரியாத மொழிகளில் கதைகள் நிரம்பிப்போய்க்கிடக்கின்றன. பழுத்த மஞ்சட் சாக்கடை நீர் வடிகின்ற நகரத்தின் நாற்றத்திற்குள் ஊறிப்போய்க்கிடக்கின்ற ஆயிரம் ஆயிரம் துயரக்கதைகளோடு என் கதையும் ஒட்டிக்கொள்கிறது. வெளிச்சம் முழுக்க மீன் விற்றுவிட்டு இருட்டில் தன்னை விற்க காத்திருக்கும் குட்டைப் பாவாடைக்காரியின் சுருக்கு பைக்குள் ஆயிரம் இரவுகளின் கதைகள் நிறைந்திருக்கின்றன. நான் வசிக்கின்ற கட்டடத்தின் ஒவ்வொரு மாடிப் படிகளையும் எத்தனையோ கதைகளை உந்தித்தள்ளிவிட்டு ஏறிமுடிக்கின்றேன். பின்னர் என் கதை எனக்குள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்து பெருமூச்சொன்றும் விடுகிறேன்.நகுலனின் கதையில் இந்தப் பரபரப்பு இல்லை. யாரோ ஒருவரின் கதையொன்றிற்குள் அந்நியமாய் நின்று எட்டிபார்ப்பதைப்போலில்லை. நிர்வாண நடனமென்றாலும் ஒரு கணம் மனம் பதைபதைத்து குற்றவுணர்வொன்று ஏற்படும். நகுலன்  ரகசிய கதை சொல்லியாயிருந்தாலும் எனக்குள் குற்றவுணர்வில்லை. எளிமையாக உருவாகி விரிகின்ற உரையாடல்களில் அழுத்தமேதுமின்றி இணைத்துக்கொள்கிறேன். இடமழிந்து பொருட்கள், உருவங்கள் அழிந்து உடலழிந்து உயிரும் அதன் எண்ணங்களும் மட்டுமே உரையாடிக்கொள்ளும் வெளி ஒன்றிற்குள் நுழைந்து பேசிக்கொள்வதைப்போல உணர்கிறேன்.

(03)

இச்சிறையை வெறுமையென்றும் இருளென்றும் அடையப்படுத்திவிடமுடியாது. வாசல்கள் அற்ற காற்று வழியற்ற புழுத்துப்போன அறையொன்றிக்குள் நானில்லை. இவ்வறை எதிரே விரிந்திருக்கின்ற மைதானத்தின் தொடர்ச்சி. காற்று என்று முன்னொரு நாள் பெயர்வைத்த மரத்தின் கிளை. நானும் என் புத்தகங்களும் சில உடுப்புகளும் இன்னமும் திருத்தப்படாத கட்டிலும் மட்டுமே இவ்வறைக்குள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். உசும்பியின் தாய் இசைத்துக்கொண்டிருக்கும் பியானோவின் இசை ஒவ்வொரு இடுகளிலிருந்தும் கசிகின்றன. கனவொன்றில் அந்நாள் அலைந்த கருநீலப்பூச்சியும் பேகனின் ஓவியக்கூடமும் இதுதான். முள்ளில்லாக் கடிகாரம் காலத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. பின்னிரவில் போத்தலுக்குள் அடைத்து இரவு முழுக்க எரிந்து காலையில் இறந்துபோன மின்மினிப்பூச்சி கடிகாரத்திற்குள் புகுந்து காலத்தை நகர்த்துகிறது. நிறை போதையில் அழுக்கு நிறைந்த குப்பை மேடுகள் மேல் சாரம் கழர தன்னைமறந்து மிதக்கும் குடிகாரர்களை தினமும் சந்திக்கிறேன். உலகத்தின் விளிம்பிலிருந்து விரியும் புனைவுலகத்தின் பேரரசர்களாகத் திரியும் அவர்களின் கனவிலிருந்து என்னறை விரிவது ஆச்சரியமாயிருக்கிறது. பொறுப்பில்லாமல் கீழறைக்குள் புகைத்துக்கொண்டிருக்கும் இளைஞனின் புகையில் கொஞ்சம் – தனக்கும் தலையணைக்கு உறையில்லாமல் இருபத்தோராயிரத்து தொண்ணூறு இரவுகள் படுத்தெழும்பிக்கொண்டிருக்கும் கிழவனின் நிர்வாணத்தில் கொஞ்சம் – பைத்தியம் பிடித்து இன்னமும் தன் மகளை தேடிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுக் கிழவியின் அலைச்சலில் கொஞ்சமமுமாய்ச் சேர்ந்து என்னறையை விரிகின்றன. நடுச்சாமத்தில் கறுப்புப் பையோடு படியேறிய என்னையொரு பேயென்று நம்பி அறை வரை தொடர்ந்து ஏமாந்துபோகிறது நாய். மின்மினியால் சுழற்றப்படும் இந்தக் காலக்கூட்டின் தொடர்ச்சி அந்த ஏமாற்றத்தாலும் விரிவடையும் என்பதை நாய்  அறியாமலில்லை.

(04)

தோமஸ் நகுலனிற்கும் நண்பராய் இருந்திருக்கிறார் என்றறிந்த  போது அதிர்ச்சியடைந்தேன். தோமஸ் காலமற்று இடமற்று அலையும் அஃறிணை நாடோடி. சந்தர்பத்திற்கேற்றாற்போல் உருவமொன்றினுள் அடைந்து பின்னர் காரியம் முடிய வெளிக்குத் திரும்புகிறது. தோமஸ் நகுலனிற்கு சுந்தர ராமசாமியின் வடிவத்தை எடுத்திருகிரார். அது நகுலனின் நாவல்கள் நெடுகிலும் வந்திருக்கிறது. நகுலன் ஒரு குட்டி நாயைப்போல தோமஸைப் பின்தொடர்கிறார். நான் தோமஸை முதன்முதலிற் கண்டபோது பிரகாசமான ஒளி என்றே நம்பினேன். என்னோடிருந்து வெளிக்கு திரும்பும் வரையிலும் அது பிரகாசமாகவே இருந்தது. வெளியில் அலைந்து கொண்டிருக்கும் தோமஸிற்குக் கல்லறை எழுப்பியதை எண்ணிப் பார்க்கிறேன். தோமஸ் தன்னை எல்லாக் கணமும் மாயப்பொருளாகவே வைத்துக்கொண்டிருந்திருக்கிறது. அணுக அணுக ஒவ்வொன்றாய் மாறி இறுதி வரை எதுவென்றே தெரியாத அலைகளாய் இருந்திருக்கிறது. அஃறிணை நாடோடி இறந்துபோனதாய் நம்பியதோடு மட்டுமில்லாமல் திவசம் செய்ய விசாரணை நடத்துமளவு என்னை ஏமாற்றியிருக்கிறது. உருவமளவில் என்னை ஏமாற்றியிருந்தாலும் எனக்குள் அது உண்டாக்கிய சிந்தனைகள் உண்மையானவை. ” சிந்தனை என்பது ஒரு வியாதி “என்று தேரை நவீனனிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சிந்தனை ஒரு தொற்று வியாதி. ஆதியிலே நிறைந்து போன சிந்தனை காலம் காலமாக தூதுவர்களால் கடத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. யாரும் புதிதாக சிந்திப்பது கிடையாது. சிந்தனைகளை ஒன்று சேர்க்கிறார்கள். உடைக்கிறார்கள். பகுக்கிறார்கள். இவற்றையன்றி எதையும் செய்துவிடமுடியாது. தொற்றுவியாதியின் காவி தோமஸ். பரிதாபகரமாக தோமஸ் எல்லாவற்றிக்கும் பொருந்திப்போகிறார்.

(05)

நாய் என்னும் வசை முடிந்த முடிவாயிற்று. ஆனால் சிங்களவர்கள் நாயே என்று யாரையும் திட்டுவதில்லையாம். வசைகள் மட்டுமல்ல எல்லாமே இங்கு முடிந்த முடிவாயிற்று. சமூக அசைவுகள் அனைத்தும் கேள்விகள் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காரணங்கள் எதுவும் இன்றிய மரபு வழி நடைமுறைகள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எல்லோரும் விகுதிகள் தொடர்ச்சியையே விரும்புகிறார்கள். அது எளிமையாயும் சுயநலமாயுமிருக்கிறது. நாய் என்ற வசை விகுதியும் அப்படித்தான். இந்த வசையில் உணர்த்தப்படுகிற நாய் வேட்டை நாயில்லை. வேட்டை நாயிலிருந்து வசைக்குரியவர் ஒரு படி கீழாகவே பார்க்கப்படுகிறார். நகுலன் நாயிலிருந்து தொடங்கி மனித சமத்துவம் நோக்கி நகர்கிறார். அது இருண்ட குகைக்குள் கூரிய ஒளிப்பொட்டொன்று நகர்வதைப்போல நாவலுக்குள் அசைகிறது.

(06)

நகுலன் தன்னை மீண்டும் மீண்டும் சுயபரிசீலனை செய்து கொள்கிறார். வசனத்தின்  ஒழுக்கொன்றில் கூட சுயபரிசீலனை என்ற வார்த்தை இரைச்சலாகத் தெரிகிறது. நாங்கள் இரைச்சலான எதுவொன்றையும் வெறுக்கிறோம். அதுவும் எங்களுக்குள்ளே இரைச்சலை உருவாக்கிற விஷயங்கள் அறவே பிடிக்காமல் போகிறது. நகுலனின் எல்லா மனிதர்களும் நகுலன் தான். தன்னை ஒவ்வொரு நிலையிலும் நிறுத்தி ஒவ்வொரு கணத்திலும் நின்று கேள்வி கேட்கிறார். ஒரு கணத்தில்  நகுலன் என்ற வார்த்தை அற்றுப்போய் நான் புகுந்துகொள்கிறேன். பைத்தியக்கார மனைவியின் கோரப்பிடியிலிருந்து உசும்பியை காப்பாற்ற நான் எத்தனித்ததைப்போல நகுலன் நவீனன் தேரை ஐயர் நாய் பூனை சுசீலா அவர்கள் நீ நான் அது எல்லாவற்றிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார். ஒவ்வொன்றும் நிழல்களாய் அவரைப் பயப்படுத்துகின்றன. நிழல்கள் உண்மையானவை என்றே தோன்றுகிறது. அப்பழுக்கற்ற கருமை. மனிதர்கள் தோரணங்கள் தான். எல்லா நிழல்களும் இயற்கையோடும் ஒளியோடும் எல்லோருக்கும் ஒன்றுபோல மாறுபவை. மனிதர்கள் அவ்வாறில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவராக மாறுகிறார்கள். தங்களுக்குள்ளேயே ஆயிரமாய் விரிந்து போய்க்கிடப்பவர்கள். நியத்தில் ஒன்று பன்மையாகி பன்மை ஒன்றாகும் போராட்டம் தான் வாழ்க்கை என்றும் சொல்லிவிடலாம். நாய்கள் பன்மையுடனான மோதல். நேர்கோடுகளை வெறுக்கும் ஒருத்தரின் பன்மைகளோடான அலைச்சல்.

(07)

வாழ்க்கையைப்பற்றி முடிவொன்றெடுத்த அடுத்த நிமிடமே நகுலன், ” ஒரு பீடி நுனியில் தான் என் வாழ்க்கை எரிந்துகொண்டிருந்தது ” என்றார். நான் நகுலனில்லை. எனக்கு பீடி பிடித்து பழக்கமில்லை. நகுலனாயிருந்தால் தானே வாழ்க்கை பீடி நுனியில் எரியவேண்டும். பீடி பிடிக்காத எனக்கு வாழக்கை இல்லையா? இருக்கிறது, நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். காலம் காலமாக நம்பப்படுகின்றதைப்போல நான் உயிரோடிருக்கிறேன். எனவே நான் நகுலனில்லை.

(08)

உலகத்தில் இருக்கிற எல்லாவற்றாலும் வாழ்க்கை பிரதிபலிக்கப்படுகிறது. “நாய்களாலும்”.

(09)

நாட்கள் வேகமாக நகர்ந்து விட்டன. நகுலனின் நாய்கள் வாசித்த பகலின் பின்னர்  நீண்ட இரவு வந்தாயிற்று. நீண்ட இரவின் மழை ஓசையில் படிகளின் கீழ் ஒன்றோடு ஒன்று சுருண்டு குறண்டிப்போய்க் கிடக்கும் வெள்ளையும் கறுப்பும் கலந்த நாயொன்றும் தனிக்கறுப்பு நாயொன்றும் எனது வருகையை அறியாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இளவரசன் போல இரவின் கருமைக்குள் என்னை மறைத்துக்கொண்டு ஓயாமல் ஊற்றிக்கொண்டிருக்கும் மேகக் கிண்ணத்தின் ஏலக்காய்த்தேநீருக்குள் நனைகிறேன். விறைத்த நாய் உடலை சிலிர்ப்பிக்கொள்வதைப்போல மேற்சட்டையினூடாக மார்புக்குள் ஈரம் இறங்கச் சில்லிடுறேன். நாடகமொன்றிற்குள் எல்லா வேஷங்களையுமிட்டு நடிக்கும் அந்தக் கிழவனைப்போல இந்த மழைக்குள் நான் இளவரசனாயும் அந்த தேநீர்க் கடைக்குள் வியாபாரியாயும் தெரு முனையில் உடலை விற்பவனாயும் தொலைதூரத்தில் மறையும் ஜோடிக்கைகளின் குடையாயும் வேஷமிடப்போகிறேன். ஒரு சூறாவளி சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உதிர்ந்த நாயின் இம்மி முடியையும் இந்த உடலுக்குள் தொலைந்துபோன என்னையும் தேட ஒவ்வொரு வேஷமாயிடுகிறேன். நான் என்ற ஒற்றைச் சொல்லுக்குள்  இத்தனை ஆயிரம் அணுக்களும் எண்ணங்களும் அன்பும் வெறுப்பும்  ஒடுங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பருத்த உடலுக்குள் தொலைந்திருக்கும் நானுக்குள் மீண்டும் இவ்வுடல் ஒடுங்கிப்போவதை தோமஸும் ஏற்றுக்கொள்ளமாட்டான். நகக் கண்ணுக்குள் குளிரிறங்கி விரல்கள் விறைக்கத்தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களும் ஏன் ஆயிரம் கனவுலகவாசிகளுடன் வாழ்கிறேன்?என்றிலிருந்து அவர்கள் எனக்குரியவர்களாகினார்கள்? அவர்கள் என்னும் என்னை ஏன் இன்னமும் அலையவிட்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கு முன்னர் பேகன் செய்ததைப்போல என்னை நானே வரைந்து பார்க்கிறேனா? ஆனால் எனக்கு பேகனை இப்போதுதான் தெரியும். நானறியும் போது பேகன் தான் என்னைப்பார்த்து போலச்செய்கிறார். மழைக்குள் ஓவியம் ஒன்று கரைந்து தானற்றுப் போவதைப்போல நானற்றுப்போக இந்த மழைக்குள் நிற்கிறேன். முதலில் நானென்பதென்ன என்று தெரியவேண்டும். ஒவ்வொரு அலைச்சலிலும் ஏதோவொன்றை அடைகிறேன். குறுக்கெழுத்து புதிரொன்றை நிரப்புவதைப்போல வாழக்கையின் கட்டங்களை நிரப்புகிறேன். என்றும் நிரப்பிவிடமுடியாத நீண்ட புதிரென்று தெரிந்தும் ஏதோ ஒன்று உந்தித் தள்ளுகிறது. தூரத்தில் இன்னொரு உருவம் தெரிகிறது. முற்றும் நனைந்து போய் விறைத்திருக்கிறது. கிழடாகிப்போனாலும் கண்களில் அதே ஒளியுடன். தன் பாட்டனிடம் அத்திமரத்தடியின் கீழ் விரவிப்போட்ட வைக்கோற் படுக்கையின் மேல் வியந்து கதை கேட்ட அதே கண்கள். யோஸே ஸரமாகோ. தன் பாட்டன் பாட்டியிடமிருந்து தன்னை அறிந்துகொள்ள இத்தனை காலமும் எழுதித்தீர்த்து முடியாமல் இன்னமும் அவனென்னும் நான் கரைந்து போக மழைக்குள் ஒவ்வொரு இடைவெளிகளையும் நிரப்பிக்கொண்டு விறைத்துப்போய் நிற்கிறார். இருட்டும் மழையும் எக்காலமும் முடிந்ததில்லை. எல்லோருக்கும் தெரிவதுமில்லை. நகுலன் இருட்டை மொழி பெயர்கிறார். மழையை மொழிபெயர்கிறார். இருட்டின் கருமையும் மழையின் குளிரும் தாங்கமுடியாமல் மொழிபெயர்த்தழிக்கிறார். அவரின் இருட்டு. அவரின் மழை. அவரின் மொழி. அது எனக்குரியதுமாகிறது. இருட்டில் மறைந்திருக்கிற பாதைகளை வனங்களை மைதானங்களை வயல்வெளிகளை அவ்வொளி  வெளிக்காட்டுகிறது. எதிர் அறைக்குள் குறை பீடி எரிந்துகொண்டிருக்கிறது. என் அறை முழு இருட்டில். நிலம் குளிரில்.

(10) 

” என்னுடைய அபிப்பிராயத்தில் இலக்கியம் என்பது மெய்யான உலகம் என்று நம்மை நம்பச்செய்யும் ஒரு பொய் உலகம் தான்” என்று நகுலன் கூறியதைப்பார்க்க பஷீரின் நாராயணீ தொடங்கி நேற்றுப் பிறந்த மீக்காயீல் வரை குருடரின் கைப்பிரம்பு தான்.

[envira-gallery id="1655"]

குடிமைகள் – சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத ஒன்றை, நாவல் கடத்தவேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. அது வாசகரைச்  சென்றடைகிறது/ இல்லை என்பதைத் தாண்டி வரலாற்றின் ஓட்டத்தில் அது கலந்து கொள்ளப்படவேண்டும். எந்த வேறு இலக்கிய வடிவத்திற்கும் இல்லாத இந்தத்  தனித்தன்மை நாவலிற்கு மட்டுமே உள்ளது. நாவல் வாசகருக்கு மட்டும் அல்ல, வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர், மாணவர், அரசியல் சார்புடையவர் என்று இன்னொரு சந்ததியின் மனிதர்களுக்கு, இன்னொரு கலாச்சாரத்தின் மனிதர்களுக்கு நாவலின் பண்பாட்டுச் சமூகத்தை கடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. எம்மால் இன்றுபரவிப் பேசப்படுகின்ற தூரத்துக் கலாச்சாரங்களெல்லாம் நாவல் வழி உள்நுழைந்தவை தான். எந்தப்பண்பாடும் எழுத்துரு பெறப்படும்போது தான், நம்பிக்கையாகக் கடத்தப்படுகிறது. எனவே சமூகம் ஒன்றில் நாவல் உருவாக்கம் பற்றிய திடமான எண்ணநிலைமை வேண்டும். நாவல் ஒரு சமூகத்தையே கடத்துகின்ற வல்லமை பெற்றது. அதே சமயம், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அப்படியே அழித்துப் பூசிவிடக்கூடியதும்.   
நாவல்களின் மூலம் கடத்தப்படவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சாதியம். இது ஏன் கடத்தப்படவேண்டும்? கடத்தப்படாமல் இருந்தால் அப்படியே அழிந்து போய்விடுமே என்ற கேள்விகள் மிகவும் மேலோட்டமானவை. இன்று இலங்கை வடக்கில் யாரும்சாதிய அடிப்படையில் பிரிந்து இருக்கவில்லை, அவர்களுக்கு என்று தனித்தனி பிரதேசங்களில் வேறு வேறு சாதிய அடிப்படையில் குடியிருக்கவில்லை, இன்று எல்லோரும் சிகை அலங்கரிக்கும் கடைகளில் தான் முடிவெட்டுகிறார்கள் – இதனால் சாதியம் இறந்துவிட்டது என்பது சரியா? இன்னும் சாதியம் ஒழிந்து போய்விடவில்லை என்பதற்கு, இன்றைய மரணச் சடங்குகளும் திருமணங்களும் ஆதாரம். இன்னும் பறை அடிப்பவர்களும் கட்டாடிமார்களும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். படித்து வளர்ந்தசமூகத்தினரிடமே சாதியவெறி இன்னும் ஒழியவில்லை. எனக்கு நெருக்கமான நண்பன், அவன் மருத்துவபீடம் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் பேசுகின்ற போது, அவனுக்குச் சாதியினால் உண்டான தாழ்வு மனப்பான்மை குறித்து வருத்தத்துடன்குறிப்பிட்டான். என்ன தான் வளர்ந்தாலும் தாங்கள் டோபிகள்( சலவை செய்வோர்) என்ற சாதியக் கட்டமைப்பை உடைக்கவே முடியவில்லை என்று வருந்தினான். இது இன்னமும் ஒழிக்கப்படாத சாதிய ஊடுருவலின் கூறுகள். இதைப்பற்றிய அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனால், சாதியம் என்ற பெயர் இல்லாமல் – அதே அமைப்பு முறை உருவாகிவிடும். இது மறைத்தல் பண்பாட்டின் பெரும்  சிக்கல். இந்த சாதிய அமைப்புக்கள் எல்லாம் அறிவித்தல் என்பதை காட்டிலும் கற்பித்தல் என்கிற வழியில், உண்மை நிலைகள் புலப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஈழத்து நாவல் ஒன்றில் அதிகம் பேசப்படவேண்டிய பொருள் யுத்தமாகவே உள்ளது. இது காலத்தின் இன்றியமையாத பிரதிபலிப்புச் செய்கை. போரிலக்கியங்கள் இன்று எதிர்பார்க்கின்ற அளவு, உள்ளடக்கத்திலும், எண்ணிக்கையிலும் கனதியானவை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிகமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. உண்மையான போரின் மொழியும், அணிகலன்களும் உலக சமூகத்திற்குச் சரியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலகளாவிய கலாசாரம் பற்றிய நிகழ்த்துகை விவாதங்கள் இலக்கியங்களின் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா வகையான பருப்பொருள்களைப் பற்றியும் பேச்சுக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் பரவலாகப் பேசுகின்ற,  விவாதிக்கின்ற, ஆவணப்படுத்துகின்ற ஒரு  சமூகத்தில் சாதியம் பற்றிய முற்போக்கு வாதங்கள் மிகவும் குறைவு. தேசியம் பற்றியும் போரின் அழிவுகள் பற்றியும் பேசுபவர்கள் சாதியம் போன்ற உள் முரண்பாடுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்போராடும்போதே அவை முற்போக்குக் கருத்தியலாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பஞ்சமர்களில் ஒரு பிரிவான அம்பட்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற நாவல் குடிமைகள்’. இந்நாவல்  இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெணியான் என்ற புனைபெயருடன் எழுதுகின்ற கந்தையா நடேசுவால் எழுதப்பட்டது. இலங்கை அரசினால் 2014ல் சாகித்ய ரத்னா என்ற உயர் விருது தெணியான் அவர்களுக்குக் ‘குடிமைகள்’ நாவல் மூலம் கிடைத்தது. இலங்கையின் வடக்கிலிருக்கின்ற ஒடுக்கப்படும் சாதியாகிய சிகை திருத்தும் தொழலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை முறை, ஆசைகள் , பிரச்சினைகள், எதிர்ப்புக்கள், போராட்டம், புறக்கணிப்பு என்று எல்லாவித அக-புற வாழ்வியலினைத் தெணியான் குடிமைகள் மூலம் ஆவணம் செய்கின்றார். தனது ஐம்பது வருட அனுபவத்தையும், காட்சிப்புல நினைவுகளையும் ஒன்றிணைத்துக்குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். நாவல் இலங்கையின் வடக்கே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. இதைவிட மலையகத்தின் பதுளை நகருக்கும், கொழும்பு நகருக்கும் நாவல் நகர்ந்து போய் வருகின்றது. நாவல் 1960-70 காலப்பகுதியினை மையமாகக் கொண்டிருந்தாலும்,  நாவலில் நடக்கின்ற சம்பவங்கள் இன்றைய சமூகத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கிராமங்களில் ஒவ்வொரு சமூகத்தினரையும் பிரிக்க ஒரு வீதியோ ஒரு வெறும் நிலமோகாணப்படுகிறது. வளர்ந்து நிற்கின்ற நகரங்களில் இவற்றை அவதானிக்க முடியாது. எல்லாச் சமூகத்தினரும் ஒன்றோடு  ஒன்று கலந்தே வாழுகின்றனர். இருந்தும் அவர்களிடையே இருக்கின்ற உளவியல் வேற்றுமை மாறாமலேயே இருக்கின்றது. தெணியானுடைய நோக்கம் நாவலிலிருந்து அம்பட்டர் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்வியலையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துவதே  ஆகும். பிறப்பின் மூலம் ஆதிக்க சாதியினர் உயர்ந்தவர்கள் என்றும் அம்பட்டர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆதிக்கச் சாதியினரால் பல வகைகளில் ஒடுக்கப்படும் சாதியினர் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஆழ்ந்து பேசுகின்ற தொனியே தெணியானின் குடிமைகள்.
(01)
மிகவும் முக்கியமானதொன்று நாவல் பேசுகின்ற அழகியல். விரிந்த பண்பாட்டு அமைப்புடைய சாதியம் ஒன்றின் பண்பாட்டு வெளிப்பாடு அதிகமாகப் பௌதீக அமைப்பிலேயே தங்கியிருக்கிறது. தனக்கென்று நிலம் இல்லாமல், வேளாளர் நிலத்தில் குடியிருக்கிறகுடிமைகளின் பௌதீக, உளவியல் அழகியல் மிகவும் வித்தியாசமானது. அவர்களது பௌதீகச் சூழல் முழுதாக ஆதிக்கச்  சாதியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் தேவைகளுக்கு ஏற்பக் குடிமைகளின் சுற்றுச் சூழல் வடிவமைக்கப்படுகிறது. சொந்த நிலம் ஒன்று இல்லாமல், அதில் அடிப்படை  வசதிகள் சரியாக இல்லாமல், அதை வெளிப்படுத்துவதிலும் பெரும் இடர்களைச் சந்திக்கின்ற ஆனால் அந்தச் சூழலுக்கே தன்னை இசைவாக்கப்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட  சமூகத்தின் குரல் நாவலில் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது. அம்பட்டர் சமூகத்தின் நீர்ப்பிரச்சனை தான் நாவலின் தொடக்கப் புள்ளி. நீர்ப்பிரச்சனை இயற்கையானது அல்ல, அதுவும் ஆதிக்கச் சாதியின் அடக்கு முறையே என்கிறார்,
‘கட்டாடிக்கு கிணறுவெட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ………….. கோடைகாலம் வந்துவிட்டால் மழைநீர் தேங்கி நிற்கும் துரவுகள் வற்றிப்போகும்…….. வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு தண்ணீருக்கு எங்கே போவது?…..நயினார்கள்மார் என்ன காரியம் செய்தாலும் தமக்குகிடைக்கக்கூடிய நன்மைகளை கணக்குப்போட்டுத்தான் செய்வார்கள்’ (குடிமைகள் : பக்கம் 29)
தெணியான் கிணற்றைச் சுற்றி வரைகின்ற வரைவுகள் முக்கியமானவை. கிணற்றில் தண்ணீரே அள்ள முடியாத சமூக இளம் பெண்களை, எந்த ஆதிக்க சமூக ஆணும் தீண்டத் தகாதவர்களாகப் பார்ப்பதேஇல்லை. அவர்களுடைய காமம் சாதியைப் பார்ப்பதுஇல்லை. தாழ்ந்த சாதியினரைக் குடிமைகள் தொழில் பார்க்க மட்டும் அல்ல, தமது இச்சைகளைத் தீர்க்கவும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க நாயினார்மார்களின் கிணற்றுக்கு வருகின்ற அம்பட்ட சமூக வயதான பொன்னிஅனுபவிக்கின்ற இன்னல், அவள் வயதோடு வேறுபட்டிருக்கின்றதே தவிர மாறவில்லை. ஆரம்பத்தில் உடலளவிலும் பின்னர் உளவியலாலும் நோகடிக்கப்படுகின்றாள். உயர் சாதிப்பெண்களிடம் இருந்து தண்ணீர் பெறுகின்ற நிலையைப் பிச்சை எடுக்கும் நிலையைவிட மோசமானதாகக் கருதுகின்றார்கள். அங்கே விழுகின்ற வசைகளுக்கும் வயது வித்தியாசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயதான பொன்னிக்குத் தண்ணீர் ஊற்றிவிட யாரும் முன்வரவில்லை, முன்வந்தவர்கள் சினக்காமல் ஊற்றிவிடவில்லை, சொந்தமாகத் தண்ணீர் ஊற்றக் கூட தகுதி அற்ற குடிமைகள். கிணற்றைச் சுற்றித் தெணியான் கட்டி எழுப்புகின்ற கேள்விகள்  ஆழமானவை.
(02)
சாதியம் பிரிவினையை ஏற்படுத்துவது போலவே,அவ்வாறு பிளவுண்ட மனிதர்கள் தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்ற உயர்வு-தாழ்வைத் தெணியான் சித்திரிக்கின்றார். இரண்டு வெவ்வேறு இடங்களில் இதை வலியுறுத்துகின்றார்.
‘…எங்கடை சாதிக்காரர் எல்லாரும் எங்களுக்கு சமமே? ஒரு சாதிக்குள்ள எத்தினை பிரிவு எத்தனை பகுதி இருக்குது தெரியுமா?’ (குடிமைகள்:பக்கம் 112)
இளையவர்கள் சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயல்கின்ற போது, அங்கு மேலெழுகின்ற சமூகத் தலைமைகள்– இதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றது. ஒரே சாதிக்குள் கலந்து திருமணம் செய்வது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தொழில் தகைமைகள், வருமானம், வசதி போன்றவற்றை வைத்து ஒரே சாதிக்குள் பிரிவினைகள் உருவாகின்றன.ஒரே சாதிக்குள் மெலிதாக உயர்ந்தவர் மற்றவர்களை அடக்கி அதிகாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நேரடியாக இந்த முறைமை வெளிப்படாமல்இருந்தாலும் குறித்த சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. சரவணை முதலாளி, மணியன் இருவரையும் நாவலூடு கொண்டு செல்கின்ற அடிப்படை விடயம் இதுவாகும். மணியனை முதலாளி கொடுமைப்படுத்துகின்ற இடங்களிலும் மணியன் அடங்கிப்போகின்ற இடங்களிலும் வாசகரோடு எழுந்து பயணிக்கின்ற அனுபவங்கள், எங்கோ ஒரு நகரத்திற்குச் சிறிய தொழில் ஒன்றினைச் செய்வதற்காக வயது குறைந்த பிள்ளையை அனுப்பிவிட்டுத் தவிக்கின்ற ஒவ்வொரு பொன்னிக்கும் வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. கூலியே இல்லாமல் வேலை செய்கின்ற மணியனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பமும் அதன் மூலம் மணியன் அடையக்கூடிய அனுகூலங்களும் வாசகர்களைத் திருப்தி அடைய வைக்கின்றது.
தெணியான், மணியனைக் கற்றலில் நாட்டம் இல்லாத ஒரு மாணவனாகச் சித்திரித்து, அதற்கான காரணத்தை ஆசிரியர்களின் சாதி பற்றிய வசைகளே என்கிறார். தெணியான் ஆவணம் இணையத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசிய இடங்களில் அடக்கப்பட்ட சாதியப் பாடசாலை வாழ்க்கை முறை ஒன்றாகும். பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்துகின்ற/ வழி நடத்தப்படுகின்ற முறைகள் பற்றியும் தனது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். அடக்கப்பட்ட சாதி மாணவர்கள் பாடசாலை விளையாட்டுகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடியவர்கள். அவர்களின் பால்ய வாழ்க்கை அவர்கள் செய்கின்ற சிறு வேலைகள் என்பன அவர்களின் திடமான உடலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பாடசாலையில் விளையாட்டுகளை வெற்றி கொள்வதில் தான் பாடசாலைச் சமூகம் கவனம் செலுத்தியதே தவிர அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் செலுத்த எத்தனிக்கவில்லை. அந்த ஆதிக்கத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்களில் தெணியான் முக்கியமானவர் என்பதால் அவரின் எழுத்துகளும் அதையே முன்னிறுத்தி நிற்கின்றன.
(03)
மனித வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கானது.ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்டாலும் அவர்களுக்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருத்தி வைத்துக் கொண்டு வெளி உலகம் தெரியாமலே வைத்திருந்த முத்தன் –பொன்னியின் கவலையும் அதுதான். முத்தனுக்கும் வள்ளிக்கொடிக்கும் திருமணமான பின்னர் வள்ளிக்கொடி மைத்துனர் இருவருக்கும் திருக்கல் வண்டிலும் மாடும் அவளின் கொடியை விற்று வாங்கிக்கொடுத்துச் சந்தோசப்படுகிறாள். மேலேயுள்ள நிகழ்வுகள் நாவலில் நடக்கும் போது வாசகர் மனதிற்குள் அளப்பெரிய சந்தோசமும் திருப்தியும் உருவாகின்றது.
கொண்டாட்டம் எவ்வளவு திருப்தியளிக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு கவலையையும், சோகத்தையும் குடிமைகள் சுமக்கிறது.
 
ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராகப் போராட்டம் செய்யவில்லை, மிகச் சிறிய உரிமைகளை வேண்டிக் கேட்ட போது மறுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள்  தம் போக்கில் தொழிலையும், சமூகக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கும் இடையூறாக ஆதிக்க சாதியினர் இருக்கின்றார்கள். நாவலின் மையப்பாத்திரமாகக் கருதத்தக்க முத்தன் சமூகக் கட்டமைப்புகளை உடைக்கவும் தமக்கென உரிய அடிப்படை மனித சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சமயத்தில் முயற்சி செய்கிறார். அதற்கு அவரது நண்பர்கள்களும் உதவுகின்றார்கள். நயினைமார்களை எதிர்த்து முத்தன் தொழில் செய்யத்தொடங்குகிறார். அதுவரை குடிமைகளாக இருந்த முத்தன் வீதிகளில் தலைநிமிர்ந்து நடக்கத்தொடங்குகிறார். அவருக்கான சுதந்திர வாழ்க்கையை, குடும்பதிற்கான அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் ஒரு சிறிதளவேனும் சம்பாத்தியம் செய்யக்கூடிய தொழிலினை உருவாக்கிக்கொள்கிறார். நண்பர்களான மற்றைய பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி செய்யத்தொழிலைத் தொடங்குகிறார். ஆனால், இறுதியில் சப்பாணிகளான இரண்டு சகோதரங்களையும் இழக்கிறார். அவரது சலூனும் தீ வைக்கப்படுகிறது. இறுதியில் வீடும் தீ வைக்கப்படுகின்றது. முத்தனும் குடும்பமும் அந்த ஊரை விட்டே போய்விடுகின்றனர். தெணியானின் ஐம்பது வருட அனுபவம், அவரின் கூர்ந்த அவதானிப்பு, சிந்தனை என்பவை மூலம் ஒடுக்கப்பட்டவர்களது போராட்டம் ஆதிக்க சாதியின் முன்னால் நிலைத்து நிற்கமுடியாமல், தளர்ந்து போனது. ஆனால், தோற்றுவிடவில்லை என்பதில் தெணியான் உறுதியாக இருக்கிறார்.
(04)
   
அடிமை முறையிலும் மிகக் கொடுமையானது சாதிய முறை என்கிறார் அம்பேத்கர். ஒரு மிகச் சாதாரண அம்பட்டர் குடும்பம், கொடிய சாதிய அடக்குமுறையால் அனுபவிக்கின்ற இன்னல்கள் குடிமைகளில் பதிவாகின்றது.  
     ‘வரலாற்றை உருவாக்குவது ஒடுக்குமுறையாளர் தான். அவர்கள் எழுதுகின்ற வரலாறு அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவர்களது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாறை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல’ என்று ஃபிரான்ஸ் ஃபனொன் கூறுகின்றார். அந்த வகையில் தெணியான் கடத்தியிருக்கின்ற வரலாறு அத்தியாவசியமானது.  டானியலோடும் டொமினிக் ஜீவாவோடும் என்.கே.ரகுநாதனோடும் சேர்ந்து சாதியத்தின் வீரியத்தை அழிக்கின்ற பணியைத் தெணியான் ‘குடிமைகள்’ மூலம்தொடர்கின்றார்.
உசாத்துணைகள்:
வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபாசக்தி
அசோகமித்திரன் கட்டுரைகள் –  2
ஆவணம் இணையதளம்