கருநீலப்பூச்சி
வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை. ஒளிக்கும் வெப்பத்திற்கும் ஒத்திசைவாக்கப்பட்டவை. மழைக்காலத்தில் தன் உடலை இறக்கைகளுக்குள் சுருக்கி, ஒரு சாக்கடைப்புழுவைப் போல சுருண்டு இறப்பொன்றினை எதிர்பார்த்துக்கிடக்கும். மழைக்காலத்தின் பின்னர் வெயில் வரும் என்பதை அவை ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை. நீண்ட மழைக்காலத்தினை தம் இறப்பிற்குரிய ஆரம்ப அறிகுறியாக கருதிக்கொள்பவை. ஈரலிப்பான ஏதோ ஒன்று அவற்றின் மீது பூசப்படும் போது – அது ஒரு மழைத்துளியாக அல்லது வெள்ளத் தெறிப்பாக அல்லது எச்சிலாக அல்லது மூக்குச் சளியாக அல்லது சிறுநீராக – இறப்பின் அழைப்பாக கருத்திக்கொள்கின்றன. தம் உடல் புனித பயணம் ஒன்றிக்காக தயார் செய்யப்படுகின்றது என்று நினைக்கின்றன. அவை அனைத்திற்கும் புனித பயணம் ஒன்றைப்பற்றிய பொதுமையான கனவொன்றிருந்தது. இறந்து போன கருநீலநிற பூச்சிகளில் எதுவும் மீண்டும் தம்மிடத்தே வராததால் புனித பயணத்தைப் பற்றிய பொதுமையான கனவொன்றையே தமக்குள் சித்தரித்துக்கொண்டன. காகிதப் பூக்களை விட மென்மையான அவற்றின் உடல் காற்றில் நறுமணங்களால் கொண்டு செல்லப்படுகின்றது. மழைக்கால ஊர்வலத்தில் ஏனைய சக கருநீல பூச்சிகளால் பங்குபெற்றமுடியாததால் அவை எழுந்து தம் இறக்கைகளை விரித்து பறப்பதில்லை. ஏன் கண்களைக்கூட விரிப்பதில்லை. நறுமணத்தினை நுகர்க்கூடிய பொழுதுகளில் இறப்பொன்று நடந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும். யாருடைய இறப்பென்றதை அறியமுடியாது, அது தன்னுடைய இறப்பாக இருந்தாலும் கூட. தொடர்ந்து வருகின்ற வெயில் காலமொன்றின் சூட்டினை உணரும் போதுதான் உயிரோடிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும். அவை இறப்பொன்றிக்கு செய்யும் அஞ்சலி மௌனமாக இருப்பது. காற்றிலே மிதந்து செல்லும் இறந்துபோன கருநீல உடலிற்கு இறக்கைகளை விரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமே ஏற்படுவதில்லை. நறுமணம் கொண்டு சென்ற கருநீலப் பூச்சிக்கு என்னானது என்று மற்றவை பேசிக்கொள்வதில்லை. புனித பயணத்தில் இணைந்துள்ளது அவ்வளவு தான். செதில்களாலான கூரிய மண்ணிற உடல் சூட்டை உணர்கின்றன தருணத்தில் வெயில் கால வருகையினை உணர்ந்துகொள்கின்றன. இறப்பிலிருந்து தப்பித்து வந்ததாக அல்லது இறந்து மீண்டும் பிறந்து வந்ததாக நினைத்துக்கொள்கின்றன. தம்முடைய இறக்கைகள் பிஞ்சுப் பசையினால் ஒட்டியிருக்க அவற்றினை கிழிந்திடாமல் விரிப்பதை பெருஞ்சிரமமாக செய்கின்றன. இறக்கைகள் இல்லாத அவை, தம்மைத் தாமே உமிழ்ந்து இறந்து போவதை பெரிதாக கருதுகின்றன. கருநீல நிறப்பூச்சி என்னை நோக்கி வருவதை சாதாரண நிகழ்ச்சியாக உணரவில்லை. சத்தம் இல்லாமல் துடிக்கின்ற இறகுகள் எனக்குள் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன.
வெட்ட வெளிச்சமான வானத்தில் இருள் கண்டிப்போனது. காற்று தன் உடலில் ஈரலிப்பை பொருத்தி காவிக்கொள்ளத் தொடங்கியது. சௌகரியமாக சாய்ந்திருந்த தூணிலிருந்து முதுகை விடுத்து, கருநீல பூச்சியினை நோக்கி வாயினை ஆவென்று திறக்கிறேன். அது என் வறண்ட நாக்கினை உற்றுநோக்கியதாக உணர்கிறேன். இல்லையென்றால் இப்போது எனது வாய்க்குள் புகுந்திருக்காது. உடலின் உஷ்ணக் காற்றினை வாய்க்குள் நிரப்பி பூச்சிக்கு வெம்மையளிக்கிறேன். பிரபஞ்சத்தில் உணர்வற்றுக்கிடக்கும் முகமூடி ஒன்றோடு இனி பயணிக்கப்போவதை எண்ணி வருந்தியிருக்கக்கூடும். அதைபற்றி எனக்கு கவலையில்லை. காற்றில் கனத்திருக்கின்ற ஈரலிப்பு கருநீல பூச்சியினை ஒன்றும் செய்துவிடக்கூடாது. இறப்பினைத் தாண்டி என்னிடம் ஏதோ சொல்லவோ கேட்கவோ வந்திருக்கும் இது, என் விருந்தாளி. நண்பன். வாயைத் திறந்தவுடன் குடிகொண்டுவிட்டதே. என் நண்பர்களிடம் இருந்து ஒவ்வொரு கதையினை வாங்கிக்கொள்வேன். கொடுக்க கதைகள் எதுவும் இருப்பதில்லை. நிழலை மீறி மேகத்தின் இருட்டு வெளியை நிரப்பியது. வெங்காற்று நிரம்பிய வாயினை பொத்திக்கொண்டு அறைக்குள் விரைந்தேன். கண் கிடங்குகள் காதுச்சவ்வுகள் அடைக்கத் தொடங்கின. மூக்குத்துவாரங்களால் மூச்செடுக்க முடியும் என்ற உண்மையை அவ்விருள் கடத்திக்கொண்டு போய்விட்டது. வாய்க்குள் எச்சில் சுரக்கமுன்னர் பூச்சினை விடுத்தாகவேண்டும். இல்லையென்றால் இருட்டிடமிருந்து பூதம் கைப்பற்றியதாக ஆகிவிடும் அதன் நிலை. மேசையின் மேல் அருகாண்மையில் உதட்டினை திறந்தேன். புதைக்க மறந்த நாய்ப்பீயின் நாற்றத்தோடு பிண்டம் விழுந்தது. அருவருத்த நாக்கினை நீட்டி இரண்டுவிரல் நிகங்களாலும் வழித்துக் காறித்துப்பினேன். வாயினை நன்றாக கொப்பளித்து விட்டு மேசையின் அருகில் கதிரையில் இருந்து கருநீலப் பூச்சினை அவதானித்தேன். என்னை கருணை உணர்வோடு பார்ப்பதாக தோன்றியது. என்னிடம் சொல்லல வார்த்தைகள் இருப்பதாக. கண்ணின் மணியினை உயர்த்தி என்னைப்பார்த்து ஏழைச்சிறுவன் பிச்சைத் தட்டினை நீட்டி வயிற்றைத் தடவுவது போல தன்னை வெளிக்காட்டியது. அது இயலாமையின் அடையாளம். ஒற்றை மழைத்துளியில் கரைந்து போய்விடக்கூடிய ஒன்று இன்னமும் தன்னை வருத்தி வாழ எத்தனிக்கிறது என்றால் – என்னிடம் வந்து சரணடைந்திருக்கிறது என்றால் – நான் கேட்கவேண்டிய கதையொன்று அதனிடம் இருக்கிறது.
சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி
மென்பச்சையும் நீலமும் கலந்த மார்பிள் தரையில் ஒட்டிக்கிடந்த என் கறுத்த உடலை எழுப்பி, விறைத்தபடி கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற மழையினை கண்ணாடி யன்னலினூடாக பார்க்கிறேன். தன் எச்சத்தை கண்ணாடியின் மேல் பீய்ச்சி அடிப்பது என்னை ஏளனம் செய்வதைப்போலவே இருக்கிறது. காற்று புகமுடியாத அடைத்த அறையொன்றிலிருந்து மழையினை உணர்தல் என்பது கொடுங்காரியம். கண்ணாடிக்கு எதிரே பச்சைய வாசத்தை தீவிரமாக பரப்பிக்கொண்டிருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி, எல்லாவற்றையும் மறந்துபோய் மழையில் நடனமாடுகிறது. அது அவளின் உடலசைவுகளை எனக்குள் திரட்டுகின்றன. அவளை வெள்ளை நிற சுடிதாரில் பார்த்தது இல்லை. ஆனால் மழையோடும் குளிர்ந்த காற்றோடும் நிலத்தினை ஊடறுத்துப்பாய்கின்ற நீர்த்திவலைகளோடும் பார்த்திருக்கிறேன். சகதி பூசிய தரையினை கடந்து போக நீளமாக எறிந்து விடப்பட்ட ஓரளவான கற்களை சிரிப்போடு தாவிக் கடக்கின்ற அவளின் நளினத்தை அச்செடி ஞாபகப்படுத்துகின்றது. அகன்ற கண்ணாடியின் உடலெங்கும் மின்னல் வெளிச்சம் பரவுவதை இமைப்பொழுதில் கண்களில் தெறித்து மறைக்கின்றன. துளிகள் பெருகி கண்ணாடியில் அழுகின்ற காட்சி என்னைத் துருத்துகின்றது. தூரத்திருந்து தனக்குள் வெடித்து அழுவதால் தானாக கண்ணீர் வடித்தன அவளின் கண்கள். அந்தரத்தில் தொங்குகின்ற பூச்சாடிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மீதம் வழிந்த மழை ஓடிச்சென்று கடைசில் கடலில் உவர்ப்பாகிப்போகின்றது. நிரம்பியிருந்த இருட்டின் மீது சிறிது பனி பரவத்தொடங்கியது. கண்ணாடியின் உள்புறம் அப்பழுக்களற்ற பனியினால் பூசப்படுகிறது. மில்லிமீட்டர் தடிப்புடைய கண்ணாடியின் இரண்டுபக்கமும் ஒட்டிநின்று காதல் செய்துகொண்டிருக்கிறது மழைத்துளிகளும் பனிப்படலமும். உள்ளிருக்கின்ற பனியினை அடைந்துவிடமுடியாத ஏக்கத்தில் அழுகின்றன மழைத்துளிகள். சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடியின் நடனம் என் தீர்க்கமுடியாத கனவொன்றினை ஏளனம் செய்வதைப்போல உணர்கிறேன்.
கொடிய கனவுகளில் மனிதர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றைத்தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சிகள் எனக்கு விரும்பியவாறே நடந்தேறுகிறது. அதனாலேயே கொடிய கனவென்கிறேன். எதை ஆசைப்படுகிறேனோ எவ்வாறு ஆசைப்படுகிறேனோ அது அவ்வாறே நடந்து முடிந்து தீர்ந்துபோவதையிட்டு கவலையடைகிறேன். கனவினை மீட்டிப்பார்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் முடிந்து விட்டதே என்ற கவலை மேலெழுந்து கொடுங்கனவாக மாறிவிடுகின்றது.
கணவாய்கள் நிறைந்த செவ்வகப்பெட்டிகள்
இயக்கமற்ற உடலொன்றாய்க் கிடக்கிறேன். ஒரு கணவாயைப் போல அருவருக்கத்தக்க கரிய உடலை நிலத்தோடு கிடத்தி மழை ஓய்ந்த பின்னிரவொன்றில் செய்வதறியாது ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக்கொள்கிறேன். மழையின் பின்னரான இவ்விரவு குளிர்மையானதாக இல்லை. இந்த செவ்வகப் பெட்டிக்குலிருக்கும் எந்த உயிரினத்திற்கும் இவ்விரவு மழையின் பின்னரான இரவொன்றாக இல்லை. மெல்லிய படையாக பிசுபிசுப்பான திரவமொன்று உடலைச் சுற்றி சுரக்கிறது. மழையில் அச்சமூட்டுவதாக தெரிந்த வாகன விளக்குகள், இப்போது வெறும் ஒளிப்பொட்டாக தெரிகின்றன. மழைக்குப் பின்னர் எந்தப் பெரிய இரைச்சலான மாநகரமும் அணிந்துகொள்கின்ற பேரமைதி எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. மழைக்கு முன்னரும் மழையின் போதும் ஆரவாரமாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிய மனிதர்கள் மழைக்கு பின்னர் சோபையிழந்து போகிறார்கள். அவர்களின் படபடப்பு ஓய்ந்துபோகிறது. அத்தனை படபடப்பும் எனக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது. உடலுக்குள் ஆயிரம் பூரான்கள் ஊர்வதைப்போல பிறாண்டிக்கொண்டிருக்கிறது. செவ்வக அறையை விட்டு இந்த கரிய உடலை விட்டு விலகிப்போக ஏதோ ஒன்று துடித்துக்கொண்டிருக்கிறது. இணைப்பறுந்து தூக்கி எறியப்பட்ட பழைய தொலைபேசி ஒன்றினைப்போல உலகத்தோடு தொடர்பற்றுப்போயிருக்கும் ஏதோ ஒன்று வெளியேறும் கடைசி கணத்தில் செவ்வக பெட்டியைவிட்டு வெளியே வந்துவிடவே எத்தனிக்கிறேன்.
சாலையில் மழைக்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. மிகச்சில மனிதர்கள் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிந்துபோன நாளொன்றின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வெறுப்பவற்றை தூக்கி எறிந்தும் நேசிப்பதை தனக்குள் சேமித்துக்கொண்டும் செல்கிறார்கள். என்னைத்தவிர எல்லாமுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடைகளுக்கு முன்னிருக்கின்ற படிகளிலும் பேரூந்து தரிப்பிடங்களிலும் எங்கெல்லாம் ஒதுங்குகின்றளவு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சைக்காரர்கள் கிழிந்த துணிகளால் தம்மை இழுத்துப் போர்த்திக்கொண்டு அமைதியாக தூங்குகிறார்கள். நீரில் தோய்ந்து நனைந்துப்போன கிழிந்த இறகொன்று காற்றில் மிதந்து முடிவின்றி அலைகின்றது.