நகரம் ஒன்றினைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவது எளிதான விடயம் ஒன்றல்ல. மனிதனின் ஆதி முதல் – ஒவ்வொருவரும் தங்கள் நகரங்களைப் பற்றியும் தாங்கள் வாழ்ந்த நகரங்கள் பற்றியும் வாழ விரும்புகின்ற நகரங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்ட நகரங்கள் பற்றியும் அவர்களே தமக்குள்ள உருவாக்கிக்கொண்ட நகரங்கள் பற்றியும் பேசி, எழுதி விவாதித்திருக்கிறார்கள். இவற்றில் ஏதோ ஒரு வகை நகரத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். இந்த நகரம் பற்றிச் சொல்ல முதல் – இன்னொரு நகரத்தைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்கள்.
-“……..ட கட்டடங்களுக்கு இடையே அந்த நதி ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர்தான் அந்த நதியின் பெயரை யூசோ என்றறிந்தேன். தெளிந்த வெள்ளை நீரினூடாக நதியின் ஆழத்திலிருக்கின்ற கற்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. அவை செயற்கையாக அங்கே பதிக்கப்பட்டவை. அவற்றின் இருப்பில் நேர்த்தியான ஒழுங்கின்மை இருக்கிறது. நீருக்குள் நிறைய வண்ணங்களில் மீன்கள் நீந்திக்கொண்டு திரியும். அவை எல்லாமே ஒரே இனம். பார்ப்பதற்கு மின்சாரத்தில் இயங்குகின்ற மீன்கள் போலவே இருக்கும். ஆனால் அவை உயிருள்ளவை.எல்லாம் ஒன்றாக தமது உடலை வளைத்து உன்னோக்கி உதைப்பது போல நீந்தும். கொத்துக் கொத்தாக ஆற்றில் பரவிக்காணப்படும்………”
இது புகழ்பெற்ற லத்தின் அமெரிக்கா எழுத்தாளர் ஒருவரின் பிரசுரிக்கப்படாத குறிப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். இவற்றை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனது நகரத்தை ஊடறுத்து செல்லுகின்ற ஆறுகள் ஞாபகத்திற்கு வந்தன. அதில் ஒன்றைப்பற்றித்தான் இப்போது எழுதப்போகிறேன்.
-“……..பாலத்தின் மீது நின்றுகொண்டு கீழே ஓடுகின்ற ஆற்றைப் பார்க்கிறேன். எந்த சலசலப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது . ஆற்றின் வேகத்தைப்பற்றி ஊகிக்க முடியவில்லை. அகன்ற ஆறு அது. ஒழுங்கற்ற கரைகளைக்கொண்டது. கரையின் ஓரங்களில் பொலிதீன் பைகளும் உணவுக்குப்பைகளும். அவை குமியலாக ஓரங்கள் எங்கும் பரவிக்கிடந்தன. ஒவ்வொரு குமியாலும் மெதுவாக அதிரகரிக்கின்ற குப்பைச்சுமைகள் ஆற்றுக்குள் விழுத்திக்கொண்டிருந்தன. ஆறு -நகரத்தின் பெரிய கட்டடங்களின் பின்பக்கமாக இருக்கிறபடியால் – கட்டடங்களின் குப்பைகளை எளிதாக அகற்றிவிடமுடிகிறது. ஆற்றின் கரைகளுக்குப் பல கிளைகளிலிருந்து கழிவுநீர் திசைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழாய்க்குள்ளாகவுமிருந்து ஆற்றுக்குள் வீழ்கின்ற கழிவு நீர் கருமையான திட்டுக்களாக வழிந்துகொண்டிருந்தது. ஆற்றின் ஓட்டத்துடன் கலந்து ஆற்றின் ஒரு பகுதியாக மாறுகின்றன.ஆக இந்த ஆற்றின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு குழாய்க்குலிருந்து வெளியேறிய திண்மத்திட்டுத்தான். அதிலிருக்கின்ற கழிவு நீர்தான் இந்த ஆற்றை உருவாக்கியிருக்கிறது……..”
நீண்ட நாட்களுக்கு முன்னர் நண்பன் ஒருத்தன் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் ஒன்றின் பகுதியினை வாசிக்க அனுப்பியிருந்தான். அவனுக்கு நாவல் எழுத வரவேயில்லை. அவனால் நாவல் ஒன்றின் உருவாக்கம் பற்றிய சரியான புரிதல் இருக்கவில்லை. அவனின் மொழி பயங்கரமாக இருந்தது. வார்த்தைகளை ஒன்றிணைத்து வாக்கியம் ஒன்றினை எழுதுவதிலும், அவற்றை ஒன்றிணைத்து பந்தியாக்குவதிலும் நிறையப் பிழைகள் இருந்தன. இருந்தும் அந்தப்பகுதியில் உள்ளடக்கம் அபாரமானது. அது நகரம் ஒன்றின் ஆற்றங்கரைக் குடியிருப்புக்கள் பற்றியது. அவனின் மோசமான எழுத்துக்களால் சரியான முறையில் வசனங்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் அவை இவ்வாறு அமைந்திருக்கும்.
-“…….எங்களுக்கு அந்த நோய் பற்றி தெரிந்திருக்கவில்லை. தொட்டால் பரவுமா, நுளம்புகளால் பரவுமா, நீரின் மூலம் பரவுமா, காற்றிலே பரவுமா அல்லது உணவுகள் மூலம் பரவுமா என்று எந்த அறிவும் இல்லை. ஆனால் பரவியது. மிகவும் வேகமாக. இங்கே சாதாரணமாக எல்லோரும் கீழ் மட்டத்தொழில்கள் தான் செய்கிறோம். பெரும்பாலான சாலைகளில் சப்பாத்துக்கள் தைப்பவர்களாகவும் அதிஷ்டலாபச் சீட்டு விற்பவர்களாகவும் கால்வாய்கள் துப்பரவு செய்பவர்களாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்பவர்களாகவும் இருக்கின்றோம். நகரத்தின் எந்தப் பகுதியில் பரவுகின்ற நோய் உண்டானாலும்; அது எமது குடியிருப்புகளில் பரவத்தொடங்கிவிடும். அப்படியான ஒன்றாகக் கூட இந்த நோய் இருக்கலாம்.
எங்கள் வீடுகளுக்கு முன்னே இருக்கின்ற வீதியினால்த்தான் இரவு நேரங்களில் பெரிய வாகனங்கள் குப்பைகளை எடுத்து வந்து எதிரில் இருக்கின்ற ஆற்றுக்குள் கொட்டுவார்கள். அப்போது நாற்றம் மூச்சுத் துவாரங்களை அடைத்துவிடும். வழமையாகவே எவ்வளவு நாற்றத்தையும் பொறுத்துக்கொள்கின்ற எம்மால், இந்த நாற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு கடியும் சொறியும் அடுத்த நாளே வந்துவிடும். குமட்டி குமட்டி அழத்தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளால் சொறியவும் முடியாது. அவர்களின் கருமையான தேகத்தில் வட்ட வட்டமாக கொப்புளங்களும் அவற்றில் நுண் துளைகளும் வந்து விடும். அவற்றின் மீது நாம் சித்தலெப்பை தேய்ப்போம். அது அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும். நான்கு ஐந்து நாட்கள் இது நீடிக்கும். பின்னர் அதுவே பழகிப்போகும். இப்போது பிறக்கின்ற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வருவதில்லை.அவர்கள் கடி சொறி இல்லாமல் தமது குழந்தைப் பருவத்தை தாண்டுகிறார்கள். பெரியவர்களுக்கு எப்போதுமே இந்தப்பிரச்சனை வருவதில்லை. ஆனால் இந்த நோய் எல்லோரையும் பிடித்திருக்கின்றது. எல்லோரும் மெலிந்து போகின்றார்கள், அவர்களால் சரியாக நடக்க முடியவில்லை. விரல்களும் நகங்களும் சூம்பிப்போகின்றன. சிறுவர்கள் தங்கள் கால்ப்பகுதியை சொறிந்தபடியே திரிகிறார்கள். குழந்தைகள் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. முகங்களிலும் மெல்லிய தோல்ப் பகுதிகளிலும் தேமல்கள். தேமல்கள் காய்ந்து போகின்ற நேரத்தில் இளைஞர்கள் அவற்றை உரித்து எடுப்பார்கள். கடும் எரிச்சலுக்குட்படுத்திய தேமல்களை உரிப்பது சுகமாக இருக்கும். சில வயதானவர்கள் அதை உரிக்கும் போது தோலும் சேர்ந்து உரிந்து, எரிச்சலை கிளப்பும். சிலரின் பாதி முகம் முழுவது தேமல் படர்ந்திருக்கும்…..”
இப்படி அது நீண்டு செல்லும். இருந்தும் அவனால் அந்த நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. நகரத்தின் பெரிய சாப்பிட்டு கடை ஒன்றில் வேலையாளாக பணியாற்றுகிறான். அவனுக்கு அதைத் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்பொழுது அவனின் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றமையால் – கடையில் அதிக நேரம் வேலைசெய்யவேண்டியதாக இருக்கின்றது. அதற்கேற்ற சம்பளமும் கிடைக்கின்றது. அது போதுமே, உடல் வேலைக்கேற்ற சம்பளம்.