ஒரு உரையாடலை பெரும்பாலும் தொடங்குவதற்கு இயல்பான வடிவம் கேள்விகளை எழுப்புவதாக இருக்கக்கூடும். பெரும்பாலான உரையாடல்கள் கேள்விகள் மட்டும் எஞ்சி நிற்கவே முடிவதுமுண்டு. நான் நினைப்பதைப்போலவோ நீங்கள் நினைப்பதைப்போலவோ உரையாடல்களில் கேள்விகளுக்கான விடைகள் கிடைப்பதில்லை. மாறாக கேள்விகள் மேலும் வலுப்பெறுகின்றன. கேள்விகள் இன்றி முடிந்து போகும் அசாதாரணமான வாழ்க்கையில் இணைந்துகொள்ள பெரும் கஷ்டமாக இருக்கிறது. நான், என்னோடு அதிகமாக கேள்விகளைப்பற்றி உரையாடிக்கொள்கிறேன். ஒரு பித்துநிலை உரையாடல்கள். ஒரு நாளிற்கு ஆரம்பத்தையும் முடிவையும் நாங்கள் பிரக்ஞைபூர்வமாக நிர்ணயித்துக்கொள்வதைப் போல உரையாடல்களையும் நாங்களே மட்டுப்படுத்திக்கொள்கிறோம். அது முடிவில்லாத வெளிக்குள் இரண்டு கம்பங்களை குற்றி, இடையில் உள்ளவற்றைப்பற்றி உரையாடிக்கொள்வது. என் நீண்ட முடிவில்லாத உரையாடல்களின் இரண்டு சிறிய கம்பங்களுக்கிடையிலான வெளியாகவே இதைக் கருதுகிறேன். இதற்கு உண்மையின் இசை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதற்கு முதல் புதிய சொல்லில் முரகாமியின் வினோத நூலகம் பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகக் கூட இதை எண்ணிக்கொள்கிறேன்.
எனக்கு பிடித்த புத்தகங்களைப்போல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. ஒருவேளை அப்படி இல்லாமல் போனது தான் அந்தப் புத்தகங்கள் பிடித்துப்போக காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. டொரு போல பல பெண்களோடு மனது திறந்து பேச ஆசைப்படுவதெல்லாம் நாவலிலேயே மறைந்துபோய்விடுகிறது. டொரு நவோகோவுடன் உரையாடுவதைப்போல எந்தப்பெண்ணிடமாவது அணுகினால் ஏமாளி என்ற ஏச்சோடு திரும்பிவரவேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கு. ஒரு வேளை அப்படியான பெண்கள் நாவலில் மட்டும் வருவதன் ரகசியம் எனக்குத்தெரியவில்லை. இந்த நவீன எழுத்தாளர்களுக்கு மட்டும் சுவாரஸ்யமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. அல்லது சுவாரஷ்யமாக கதை சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள். முரகாமிக்கும் அப்படித்தான். இந்த சலிப்பான வாழ்க்கையில் இருப்பதையெண்ணி கொஞ்சமாக வருந்தியிருக்கிறேன். நான் டொரு ஆக இருக்கவே விரும்புகிறேன். உலகத்து பெண்கள் எல்லோரையும் எல்லையற்று காதலித்துக்கொண்டு. ஆனால் இருப்பது என்னவோ நவோகோ மாதிரி. கிஸுகி பற்றிய துக்கத்திலும் டொரு பற்றிய குழப்பத்திலும். ஆனால் நவோகோவைத்தான் சமூகம் ஓரளவேனும் ஏற்றுக்கொள்கிறது. டொருக்கள் எத்தனை இனிமையானவர்களாக இருந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.நவோகோவாக இருந்து டொருவாக மாற எத்தணிக்கும் ஒருவர் இந்த நாவலை வாசித்த அனுபவமாக இதைக் கொள்ளலாம். அல்லது டொருவானபின்னர் நவோகோ பற்றிய ஞாபகங்களாக இந்த நாவல் வாசிப்பைக் கருத்திக்கொள்ளலாம். இதுவுமல்லாவிட்டால் இதையும் புனைவென்றெண்ணி மோசமான புனைவு இது என்று விமர்சிக்கலாம்.
ஒன்றைப்பற்றி விரும்பாமல் வேண்டாவெறுப்பாக பேசவிரும்பவில்லை. இந்த நாட்களில் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் இன் நூற்றாண்டு தனிமை பற்றியோ அல்லது மரியோ வர்கஸ் லோஸா இன் நாவல்கள் பற்றியோ பேசுவது எனக்கு செயற்கையாகப்படுகிறது. அதற்காக அவர்கள் ஒருபோதும் குறைத்தவர்களில்லை. அவர்களைப்பற்றிய உரையாடல்கள் மிகவும் இனிமையானவை. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மனநிலையிலிருக்கிறேன். எளிமையாக அம்மனநிலைகளிலிருந்து தொலைந்துபோக ஒவ்வொரு விதமான வடிவங்களைக் கையாள்கிறேன். அது இசையாகவும் புத்தகங்களாகவும் மோசமான முறையில் சொன்னால் முகப்புத்தகமாவும் அமைந்துவிடுகிறது. இங்கு தொலைதல் என்பதை மறத்தல் என்று அர்த்தப்படுத்தவில்லை. சரியாகச் சொன்னால் விலகி – சிந்தனைகளை மாற்றி வைத்திருக்கிறேன். “இலக்கியம் பெரும்பாலும் எனக்கு கவனக்கலைப்பான்” ஆக இருந்திருக்கிறது. எல்லா நாட்களும் எனக்குப் பிடித்த நாளாக அமைந்துவிடுவதில்லை. அதிகமான நாட்களை வெறுப்போடே கடந்து செல்லவேண்டியிருக்கிறது. வெறுப்பு மிகுந்த நாட்களில் உருவாகக்கூடிய எண்ணங்கள் கொடூரமானவை. அவை ஊசியையும் நூலையும் கொண்டு எல்லாச் சம்பவங்களுக்கும் முடிச்சைபோட்டு மனதை சுதாகரிக்க முடியாத பெரும் குழப்பத்தில் அமிழ்த்திவிடுகின்றன. அந்த நேரங்களில் எழுத்துக்கள் நேரத்தை கடித்து செரித்துக்கொண்டிருந்தன. நானாக புனைவுலகம் ஒன்றை உருவாக்கவோ அல்லது இன்னொருவர் உருவாக்கிய புனைவுலகில் வாழவோ முடிகிறது. கஷ்டமான தருணங்களில் தாயின் மடியில் சாய்ந்துகொள்வதைப்போன்ற ஆறுதல் இவற்றில் கிடைப்பதாக நம்புகிறேன்.
ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணத்தை உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? அந்தப் பாடலின் முழு வடிவத்தையும் நான் ஒருபோதும் கேட்டதில்லை. இந்த பிரதி திரைப்படமாகவும் வந்திருக்கிறது. எனக்கு சந்தர்ப்பமும் மனநிலையும் பார்க்க உருவாகவில்லை. ஆனால் ரெய்கோ கிதார் இசைகின்ற பகுதியை மட்டும் பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது. அந்த நிலவொளியில் டொரு, நவோகோ, ரெய்கோ என்று மூன்று பேர் இருந்தார்கள். நான் நோர்வேர்ஜியன் வூட் வாசிக்கின்ற தருணங்களில் டொரு, நவோகோ ,ரெய்கோ மூன்று பேராகவும் நானே இருக்கிறேன். மூன்று வெவ்வேறு மனிதர்களாக. சில சமயங்களில் கூடியும் குறைந்தும் மனிதர்கள் இருக்கலாம். நவோகோவைப்போல கடந்த காலத்தின் மீது எனக்கிருக்கின்ற ஒழுங்கீனமான ஞாபகங்களை நினைத்துக்கொண்டும், அதே சமயம் நான் நினைப்பதை ஏதோ ஒரு வகையில் நிறுத்தமுயற்சிக்கும் இன்னொரு டொரு ஆக -அதாவது நானாகவும்- இவை எல்லாவற்றையும் தூண்டிக்கொண்டும் அதை இசையைப்போல எழுத்துக்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இன்னொன்றாகவும், அதை வேடிக்கை பார்க்கும் இன்னொன்றாகவும் அப்படி எத்தனையோ இன்னொன்றுகளாகவும் விரிந்து ஆழ்ந்தும் மிதந்தும் அலைந்தும் அழிந்தும் உருவாகியும் இருப்பதும் பெரும் வாதைதானே. தன்னை இன்னும் அழகாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும் ஒருத்தர் கண்ணாடியின் முன்னால் விரும்பியோ விரும்பாமலோ நிற்பதைப்போல நானும் நோர்வேர்ஜியன் வூட்வாசிக்கிறேன். கண்ணாடி அழகாக்கிறதோ இல்லையோ நோர்வேர்ஜியன் வூட் அழகாக்கிறது.
நான் ரெய்கோவைப் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். அவள் கிதாரையும் சுருக்கங்களையும். அவளின் குழந்தை- அவளைவிட இளமையான கணவன் இவர்கள் எல்லோரையும். முரகாமியின் மிகச் சிறந்த அனுபவம் ரெய்கோ என்றே தோன்றுகிறது. வலிமையற்று தற்கொலை செய்துகொண்ட நவொகோவை விடவும் இசைப்பள்ளிக்கு ரயிலில் ஏறிய ரெய்கோ சிறந்தவள். நோர்வேர்ஜியன் வூட் இரண்டு எதிர் நிலைகளுக்குள் அறத்தைப்பற்றி சொல்லவில்லை. தர்மம் அதர்மம், சட்டம் ஆராயகம், உண்மைகள் பொய்கள், நேர்மை புரட்டு என்று எதிர் நிலைகளுக்குள் இருக்கும் போராட்டம் அல்ல இது. ஒரு உண்மைக்கும் இன்னொரு உண்மைக்கும் இடையிலான போராட்டம். ஒரு நேர்மைக்கும் இன்னொரு நேர்மைக்குமான போராட்டம். யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது. இந்தப் போராட்டம் மிகவும் நுண்மையானது. இங்கு அறம், எதிர் அறம் பற்றிய உரையாடல்கள் இல்லை. அறத்துக்குள்ளேயே எதிர் நிலைகளைப்பற்றியும், சந்தர்ப்பம் ஒன்றிற்க்கான அறம் பற்றியும் உரையாடுகிறது. ரெய்கோவைத் தவிர எல்லோருக்கும் யாரோ ஒருத்தர் எப்போதும் உறுதுணையாக இருக்கிறார்கள். கைவிடப்பட்டவளாகிறாள். ஆனால் மிகவும் பிரஞையுடம் எல்லோரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறாள். உறவுகளே இல்லாத ஒரு நிலையில் கூட அடுத்த கட்டம் நகர்கிறாள். டோருக்கு கடைசியாக ரெய்கோ எழுதிய கடிதம் என்னை பாதித்தது. நீங்கள் எவ்வளவு தூரம் அந்த கடிதம் இலக்கியத் தரம் மிகுந்தது என்று கேட்கலாம். இப்போது நான் இலக்கியத்தில் இல்லை. நான் ஒப்புக்கொடுத்த பிரதி ஒன்றில் எனக்கு இலக்கியம் தெரியவில்லை. நான் அன்பை பார்க்கிறேன். யாராவது யாருடனும் முத்தமிட்டுக்கொள்ளும் போதோ உறவில் இணையும் போதோ எனக்குள் சந்தோசம் பெருகுகிறது. டொரு மழைக்குள் மிடோரியை முத்தமிடும் கணத்தில் என்னைச்சுற்றி மழையின் குளிரும் எனக்குள் முத்தத்தின் சூடும் பரவிக்கொண்டது. மிடோரியை நினைக்கும் போதெல்லாம் inside edge இல் வருகின்ற analyst ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.
ரெய்கோ டொருவிடம் கடிதமொன்றாவது எழுதக்கோருவதைப் பற்றி மிகச்சிலருடன் பகிர்ந்திருக்கிறேன். இந்த மிகச்சிலர் இரண்டு அல்லது மூன்று பேர் தான். நான் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாக இருந்து கடிதம் எழுதும் பழக்கமுடையவன். அப்போது பெரும்பாலும் நடுச்சாமம் கடந்து போயிருக்கும். இதற்கு முதல் டொரு நாவொகோவிற்கும், நாவொகோ டொருவிற்கும் சில நீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அவை அன்பின் நிமித்தம் வலிமையானவை. கடிதம் நீண்டகாலமாக காத்துவருகின்ற ரகசியங்கள் பெறுமதிமிக்கவை. மிகச்சிறிய வயதில் நீங்கள் நினைத்து சிரிக்கப்போவதை விட அதிகமான வயதில் எனக்கிருந்த ஒரே ஒரு காதலிக்கும், அவளோடு சண்டைபோட்டுக்கொண்ட தருணங்களில் அவளின் நண்பிக்கும் நானெழுதிய கடிதங்களில் மாறி மாறி ஒரே காதலை விதம்விதமான சொற்களால் விபரித்ததை அன்றி வேறெதுவும் செய்யவில்லை. அதற்கு பின்னர் பல்கலைக்கழகமானியத்திற்கு தான் கடிதம் அனுப்பினேன். ஆனால் மிகக்குறைவாக சிறுகுறிப்புக்களாக சில கடிதங்களை நெருக்கமானவர்களுக்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறேன். அவற்றைப்போன்ற ஒரு விரிவான நீட்சியாக இந்தக் கடிதங்களை உணர்கிறேன். கடிதமொன்றில் பெரும்பாலும் உண்மைகளே எழுதப்படுகின்றன என்று நம்புகிறேன். இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் நானெழுதிய அச்சிறுவயது கடிதங்களில் என் காதலும் டொரு நாவொக்கவிற்கு மிடோரியைப்பற்றிய மறைத்து எழுதிய கடிதங்களிலும் சந்தர்ப்ப உண்மை இருப்பதாய் நம்புகிறேன். பயத்தைப்பற்றிய என்னிடம் கேட்டால் இயலாமை என்றும் ஜிட்டுவிடம் கேட்டால் இறந்த கால நிகழ்கால இணைப்புணர்வு என்றும் யுயியிடம் கேட்டார் ” idiot i dont see that ” என்றும் சொல்வோம். என் நெருங்கிய நண்பர் சொல்வதைப்போல இங்கு சமனான நிறைய உண்மைகள் இருக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள எனக்கு நிறைய நாட்கள் தேவைபட்டன. இந்த சமனான உண்மைகள் பற்றிய சிந்தனையை உணர்ந்துகொள்ள நிறைய நாட்கள் தேவைப்பட்டன. நோர்வேர்ஜியன் வூட்இலும் எல்லோரிடமும் உண்மைகள் இருக்கின்றன. சமனான உண்மைகள். இந்த சமனான உண்மைகளுக்கு இடையிலான போராட்டம்/ ஆரோக்கியமான உரையாடல் என்றும் norwegian wood ஐ சொல்லலாம்.
ரெய்கோவிற்கு டொரு, நாவொகோ மற்றும் மிடோரி பற்றி ஒரு கடிதத்தில் எழுதுவான்,
” நான் எப்போதும் நவோகோவை நேசித்து வந்திருக்கிறேன். இப்போதும் நான் அவளை நேசிக்கிறேன். ஆனால் மிடோரிக்கும் எனக்கும் இருப்பதென்னவென இறுதியாக தீர்மானிக்கும் கட்டம் வந்திருக்கிறேது. என்னைத் தடுக்கவியலாத சக்தி ஒன்று எதிர்காலத்திற்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. நவோகோவிடம் நான் உணர்வது பெரிதும் அமைதியான, நாகரிகமான வெளிப்படைத்தன்மையான காதல், ஆனால் மிடோரியிடம் நான் உணர்வது முற்றிலும் மாறுபட்ட உணர்வு. அது தன்போக்கில் செயற்படுகிறது, அதன் உயிர்ப்பும் சுவாசமும் துடிப்பும் என் இருப்பின் ஆழம் வரை நுழைந்து என்னை வேரோடு அசைக்கிறது. “
என்னைப்பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான சூழ்நிலை. ஒரு நடுநிலையான ருசியைக் கொண்டவர் டீ, கோப்பி இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதைவிட மிகவும் கடினமான ஒன்று. காதலின்- உண்மையில் அன்பின், இருவேறு சமமான நிலைகளுக்கிடையிலான அந்தரிப்பு. ரெய்கோ பதில் எழுதும் போது மிக உன்னதமான ஒன்றை எழுதுவார், நாவல் எளிமையாக மனதிற்கு மிக அருகில் சென்று உரசும் இடமாக இதைக்கருத்துகிறேன். ரெய்கோவின் பதில் இவ்வாறிருக்கும்,
“நமது மகத்தான பெரிய உலகில் இது மாதிரியான விஷயங்கள் எல்லாநேரமும் நிகழ்த்தபடிதான் இருக்கிறது. இது அழகான நாளொன்றில் அழகான ஏரியில் படகில் சென்றபடி, ஆகாயமும் ஏரியும் அழகாக இருப்பதாக இருப்பதாக சிந்திப்பதைப்போன்றது.”
இந்த நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா, நான் பெரும்பாலும் உணர்ந்ததுண்டு, வேறு வேறு சந்தர்ப்பங்களில். அன்பும் விழிப்புணர்வும் எதிரெதிரே உரையாடிக்கொள்ளும் போது. கல்வியும் நானும் உரையாடிக்கொள்ளும் போது நானும் இன்னொருவரும் உரையாடிக்கொள்ளும் போது. ஒரு இசையைப்போல. அது நிச்சயமாக “உண்மையின் இசை” தான்.
பின்குறிப்புக்கள்
- பத்தொன்பதாம் திகதி ஆவணி மாதம் தேசிய காலை இலக்கியப் பேரவை நடத்திய உரையாடலில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.

2. கட்டுரை வாசிப்பிற்கு முன்னைய நாட்களில் முகப்புத்தகத்தில் கட்டுரை வாசிப்பு சம்பந்தமாக எழுதிய சிறுகுறிப்பு.
எந்தவொரு பிரதியையும் ஆய்வுசெய்து கட்டுரையாக்குவதோ அல்லது விமர்சனம் செய்வதோ அதுவுமன்றி அறிமுகம் செய்வதும்கூட என்னளவில் கடினமான விஷயம். அவற்றை நான் முயற்சிக்கவில்லை. ஆனால் இன்று அனேகமாக இது மலிந்துபோயிருக்கிறது. வாசிப்பதற்கான அளவுகோல்கள், வரையறைகள், வரையறையின்மைகள், கோட்பாடுகள், அரசியல் என்று எல்லாத்தரப்பாலும் ஒரு பிரதி அணுகப்படுகிறது. இது ஒரு பிரதிக்கு மட்டுமன்றி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். இவை ஒரு கூட்டு அறிவின் பிரதிபலிப்பாகவோ அல்லது தனித்த மனிதரின் புரிதலாகவோ வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்றாக நோர்வேஜியன் வுட் பற்றிய எனது உரை அமைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் எந்த அடிப்படையுமின்றிய வாசிப்பு என்னுடையது. ஒரு தொழில், பொழுதுபோக்கு, ஆத்மார்த்தமான உணர்வு என்பதெல்லாம் அன்றி வேறொரு புரிதலும் தளமும் வாசிப்பிற்கிருக்கிறது. அது பின்னர் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்குமாக விரிகிறது என்று நம்புகிறேன். நோர்வேஜியன் வுட் எவற்றையெல்லாம் எனக்கு ஒவ்வொரு வாசிப்பிலும் நினைவூட்டியது என்பதிலிருந்து உரை தொடங்கலாம் அல்லது வேறொன்றிலிருந்தும் தொடங்கலாம்.
3. ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணம்
4. நோர்வேர்ஜியன் வூட் தமிழில் க. சுப்பிரமணியால் மொழிபெயர்க்கப்பட்டு எதிர் வெளியீடாக 2014 ஜீன் மாதம் வெளியாகியது.