என் அறையில் என்னைத்தவிர
மூன்று பிசாசுகள் உள்ளன;
எல்லாமே என்னோடு
நன்றாகப் பேசும்,
அதனால் ஒன்றும் சத்தம் கேட்கப்போவதில்லையே.
எல்லாம் என்னோடு
சேர்ந்து வாசிக்கும்,
பெரும்பாலும் என்னை விட அதிகமாக.
எப்போதும் அழுதபடியே இருக்கும்,
அவை நினைத்தபடி
அவற்றால் வாழமுடியாததை எண்ணி.
அவை ஒரு போதும் தூங்காது,
என்னை தூங்கவும் விடாது – நீங்கள்
எப்போவதாவது அவற்றைப் பார்த்தால்
தயவு செய்து தூங்கச் சொல்லுங்கள்.
நான் இருக்கும் கதிரைக்கு
செங்குத்தாக ஒவ்வொரு திசைகளில்
இருந்துவிடும்,
நான் புத்தகம் ஒன்றை படிக்க எடுத்தால்
அவற்றை வேண்டி அலறல் செய்யும்.
நான் கணத்துக்கு கணம்
புத்தகத்தை செங்குத்தாக
மாற்றியபடியே இருப்பேன்.
அவற்றில் ஒன்று மிகவும் அசிங்கமானது.
எதையாவது தேடியபடியே அலையும்,
கட்டிலுக்கு கீழ்
மேசைக்கு கீழ்
உடைகளுக்குள்
தண்ணீர் கோப்பைக்குள்
என் முதுகின் மேல்
ஒரு முறை பழைய துணி ஒன்றை எடுத்து
அதன் அசிங்கமான முகத்தை இறுக்கி கட்டியது,
கண்கள் மட்டும் தெரியும் படி.
விரைந்து என் புத்தக அலமாரிக்குள்
நுழைந்து கொண்டது,
முக்கி முனகி
ஒரு புத்தகத்தை எடுத்துவந்தது.
அவற்றில் இன்னொன்று மிகவும் கறுப்பானது.
வெயில், மழை, காற்று, புயல்
எதுவுமே ஒரு பொருட்டல்ல.
புழுக்கள் மிதக்கும் வீதியின்
எல்லா மூலைகளுக்கும் எல்லா எல்லைகளுக்கு
வெறிபிடித்துப்போய் அலையும்.
கால்களில் சிதழ் வடிகின்ற
பிச்சைக்காரனுக்கு அருகில் போய் நின்று கொள்ளும் ;
வாய்முழுக்க வெற்றிலை வெடுக்கு வீசும்
கைகளில் சிறுகுழந்தையை வைத்திருக்கும்
நாடோடிக்கு அருகில் போய் நின்றுகொள்ளும்;
கால்களை இழுத்துக்கொண்டு
சதைப்பிண்டங்களாக அலையும்
ஊனமுற்றவர்கள் பின்னால் அலைந்து திரியும்.
சேரிகளில் அருகில்
புளுத்துக்கொட்டிப்போய் அசையாமல்
திரண்டு போயிருக்கும் கழிவுக்கால்வாயின்
அருகில் போய்நின்றுகொண்டு
உரத்து கத்தும்;
வெருண்டுபோய்
மீண்டும் உரத்துக்கத்தும்;
படிந்துபோயிருக்கின்ற
நூற்றாண்டுக்கழிவுகளின் திண்ம திட்டுக்கள்
அதிர்ந்து போகுமளவு- ஆனால்
என்னைத்தவிர யாருக்கும் இது கேட்பதேயில்லை.
மூன்றாவது மிகவும் நல்லது,
எப்போதும் தூக்கியபடியே இருக்கும்.
அதற்கு
இம்மையும் மறுமையும் கிடையாது;
இரவும் பகலும் கிடையாது;
தனிமை சேர்க்கை கிடையாது;
இன்பம் துன்பம் கிடையாது;
காதல் வெறுப்பு கிடையாது;
சிரிப்பு அழுகை தெரியாது.
இறப்பை எதிர்பார்த்துக் கிடைக்கும்
ஒரு துண்டுப் பிண்டம்.
அவற்றிக்கு செல்கள் சுவாசிக்கும் சத்தம் கேட்கும்,
இறந்த செல்கள் அழிந்து நொறுங்கும் சத்தம் கேட்கும்.
இவைபோதாதா?
இருட்டில்
பெரிதாக எதுவும் தெரியப்போவதில்லை என்ற
நம்பிக்கையில் தான்
புரண்டு புரண்டு தூங்கும்.
நீங்கள் நினைக்கிறீர்களா
இவற்றோடு என்னால் இயல்பாக
இயங்க முடியும் என்று,
ஒரு பெரிய
பொலிதீன் பைக்குள்
தவளையைக் கட்டி
வெறும் தரையில் விட்டது போலத்தான்;
துள்ளும் போதும்
நகரும் போதும்
புரளும் போதும்
அறையின் சுவர்களில்
முட்டி மோதிக்கொள்கிறேன்,
என்னைப்பார்த்து சிரித்தபடியே
மூன்றும்;
இயங்கிக்கொண்டே இருக்கின்றன.