பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
 
 
 
 
 
 
 
 

கிழிந்த இறகொன்றின் காதல் நினைவுகள்

கருநீலப்பூச்சி

 
வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை. ஒளிக்கும் வெப்பத்திற்கும் ஒத்திசைவாக்கப்பட்டவை. மழைக்காலத்தில் தன் உடலை இறக்கைகளுக்குள் சுருக்கி, ஒரு சாக்கடைப்புழுவைப் போல சுருண்டு இறப்பொன்றினை எதிர்பார்த்துக்கிடக்கும். மழைக்காலத்தின் பின்னர் வெயில் வரும் என்பதை அவை ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை. நீண்ட மழைக்காலத்தினை தம் இறப்பிற்குரிய ஆரம்ப அறிகுறியாக கருதிக்கொள்பவை. ஈரலிப்பான ஏதோ ஒன்று அவற்றின் மீது பூசப்படும் போது – அது ஒரு மழைத்துளியாக அல்லது வெள்ளத் தெறிப்பாக அல்லது எச்சிலாக அல்லது மூக்குச் சளியாக அல்லது சிறுநீராக – இறப்பின் அழைப்பாக கருத்திக்கொள்கின்றன. தம் உடல் புனித பயணம் ஒன்றிக்காக தயார் செய்யப்படுகின்றது என்று நினைக்கின்றன. அவை அனைத்திற்கும் புனித பயணம் ஒன்றைப்பற்றிய பொதுமையான கனவொன்றிருந்தது. இறந்து போன கருநீலநிற பூச்சிகளில் எதுவும் மீண்டும் தம்மிடத்தே வராததால் புனித பயணத்தைப் பற்றிய பொதுமையான கனவொன்றையே தமக்குள் சித்தரித்துக்கொண்டன. காகிதப் பூக்களை விட மென்மையான அவற்றின் உடல் காற்றில் நறுமணங்களால் கொண்டு செல்லப்படுகின்றது. மழைக்கால ஊர்வலத்தில் ஏனைய சக கருநீல பூச்சிகளால் பங்குபெற்றமுடியாததால் அவை எழுந்து தம் இறக்கைகளை விரித்து பறப்பதில்லை. ஏன் கண்களைக்கூட விரிப்பதில்லை. நறுமணத்தினை நுகர்க்கூடிய பொழுதுகளில் இறப்பொன்று நடந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும். யாருடைய இறப்பென்றதை அறியமுடியாது, அது தன்னுடைய இறப்பாக இருந்தாலும் கூட. தொடர்ந்து வருகின்ற  வெயில் காலமொன்றின் சூட்டினை உணரும் போதுதான் உயிரோடிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும். அவை இறப்பொன்றிக்கு செய்யும் அஞ்சலி மௌனமாக இருப்பது. காற்றிலே மிதந்து செல்லும் இறந்துபோன கருநீல உடலிற்கு இறக்கைகளை விரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமே ஏற்படுவதில்லை. நறுமணம் கொண்டு சென்ற கருநீலப் பூச்சிக்கு என்னானது என்று மற்றவை பேசிக்கொள்வதில்லை. புனித பயணத்தில் இணைந்துள்ளது அவ்வளவு தான். செதில்களாலான கூரிய மண்ணிற உடல் சூட்டை உணர்கின்றன தருணத்தில் வெயில் கால வருகையினை உணர்ந்துகொள்கின்றன. இறப்பிலிருந்து தப்பித்து வந்ததாக அல்லது இறந்து மீண்டும் பிறந்து வந்ததாக நினைத்துக்கொள்கின்றன. தம்முடைய இறக்கைகள் பிஞ்சுப் பசையினால் ஒட்டியிருக்க அவற்றினை கிழிந்திடாமல் விரிப்பதை பெருஞ்சிரமமாக செய்கின்றன. இறக்கைகள் இல்லாத அவை, தம்மைத் தாமே உமிழ்ந்து இறந்து போவதை பெரிதாக கருதுகின்றன. கருநீல நிறப்பூச்சி என்னை நோக்கி வருவதை சாதாரண நிகழ்ச்சியாக உணரவில்லை. சத்தம் இல்லாமல் துடிக்கின்ற இறகுகள் எனக்குள் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன.
 
வெட்ட வெளிச்சமான வானத்தில் இருள் கண்டிப்போனது. காற்று தன் உடலில் ஈரலிப்பை பொருத்தி காவிக்கொள்ளத் தொடங்கியது. சௌகரியமாக சாய்ந்திருந்த தூணிலிருந்து முதுகை விடுத்து, கருநீல பூச்சியினை நோக்கி வாயினை ஆவென்று திறக்கிறேன். அது என் வறண்ட நாக்கினை உற்றுநோக்கியதாக உணர்கிறேன். இல்லையென்றால் இப்போது எனது வாய்க்குள் புகுந்திருக்காது. உடலின் உஷ்ணக் காற்றினை வாய்க்குள் நிரப்பி பூச்சிக்கு வெம்மையளிக்கிறேன். பிரபஞ்சத்தில் உணர்வற்றுக்கிடக்கும் முகமூடி ஒன்றோடு இனி பயணிக்கப்போவதை எண்ணி வருந்தியிருக்கக்கூடும். அதைபற்றி எனக்கு கவலையில்லை. காற்றில் கனத்திருக்கின்ற ஈரலிப்பு கருநீல பூச்சியினை ஒன்றும் செய்துவிடக்கூடாது. இறப்பினைத் தாண்டி என்னிடம் ஏதோ சொல்லவோ கேட்கவோ வந்திருக்கும் இது, என் விருந்தாளி. நண்பன். வாயைத் திறந்தவுடன் குடிகொண்டுவிட்டதே. என் நண்பர்களிடம் இருந்து ஒவ்வொரு கதையினை வாங்கிக்கொள்வேன். கொடுக்க கதைகள் எதுவும் இருப்பதில்லை. நிழலை மீறி மேகத்தின் இருட்டு வெளியை  நிரப்பியது. வெங்காற்று நிரம்பிய வாயினை பொத்திக்கொண்டு அறைக்குள் விரைந்தேன். கண் கிடங்குகள் காதுச்சவ்வுகள் அடைக்கத் தொடங்கின. மூக்குத்துவாரங்களால் மூச்செடுக்க முடியும் என்ற உண்மையை அவ்விருள் கடத்திக்கொண்டு போய்விட்டது. வாய்க்குள் எச்சில் சுரக்கமுன்னர் பூச்சினை விடுத்தாகவேண்டும். இல்லையென்றால் இருட்டிடமிருந்து பூதம் கைப்பற்றியதாக ஆகிவிடும் அதன் நிலை. மேசையின் மேல் அருகாண்மையில் உதட்டினை திறந்தேன். புதைக்க மறந்த நாய்ப்பீயின் நாற்றத்தோடு பிண்டம் விழுந்தது. அருவருத்த நாக்கினை நீட்டி இரண்டுவிரல் நிகங்களாலும் வழித்துக் காறித்துப்பினேன். வாயினை நன்றாக கொப்பளித்து விட்டு மேசையின் அருகில் கதிரையில் இருந்து கருநீலப் பூச்சினை அவதானித்தேன். என்னை கருணை உணர்வோடு பார்ப்பதாக தோன்றியது. என்னிடம் சொல்லல வார்த்தைகள் இருப்பதாக. கண்ணின் மணியினை உயர்த்தி என்னைப்பார்த்து ஏழைச்சிறுவன் பிச்சைத் தட்டினை நீட்டி வயிற்றைத் தடவுவது போல தன்னை வெளிக்காட்டியது. அது இயலாமையின் அடையாளம். ஒற்றை மழைத்துளியில் கரைந்து போய்விடக்கூடிய ஒன்று இன்னமும் தன்னை வருத்தி வாழ எத்தனிக்கிறது என்றால் – என்னிடம் வந்து சரணடைந்திருக்கிறது என்றால் – நான் கேட்கவேண்டிய கதையொன்று அதனிடம் இருக்கிறது.
 

சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி

 
மென்பச்சையும் நீலமும் கலந்த மார்பிள் தரையில் ஒட்டிக்கிடந்த என் கறுத்த உடலை எழுப்பி, விறைத்தபடி கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற மழையினை கண்ணாடி யன்னலினூடாக பார்க்கிறேன். தன் எச்சத்தை கண்ணாடியின் மேல் பீய்ச்சி அடிப்பது என்னை ஏளனம் செய்வதைப்போலவே இருக்கிறது. காற்று புகமுடியாத அடைத்த அறையொன்றிலிருந்து மழையினை உணர்தல் என்பது கொடுங்காரியம். கண்ணாடிக்கு எதிரே பச்சைய வாசத்தை தீவிரமாக பரப்பிக்கொண்டிருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி, எல்லாவற்றையும் மறந்துபோய் மழையில் நடனமாடுகிறது. அது அவளின் உடலசைவுகளை எனக்குள் திரட்டுகின்றன. அவளை வெள்ளை நிற சுடிதாரில் பார்த்தது இல்லை. ஆனால் மழையோடும் குளிர்ந்த காற்றோடும் நிலத்தினை ஊடறுத்துப்பாய்கின்ற நீர்த்திவலைகளோடும் பார்த்திருக்கிறேன். சகதி பூசிய தரையினை கடந்து போக நீளமாக எறிந்து விடப்பட்ட ஓரளவான கற்களை சிரிப்போடு தாவிக் கடக்கின்ற அவளின் நளினத்தை அச்செடி ஞாபகப்படுத்துகின்றது. அகன்ற கண்ணாடியின் உடலெங்கும் மின்னல் வெளிச்சம் பரவுவதை இமைப்பொழுதில் கண்களில் தெறித்து மறைக்கின்றன. துளிகள் பெருகி கண்ணாடியில் அழுகின்ற காட்சி என்னைத் துருத்துகின்றது. தூரத்திருந்து தனக்குள்  வெடித்து அழுவதால்  தானாக கண்ணீர் வடித்தன அவளின் கண்கள். அந்தரத்தில் தொங்குகின்ற பூச்சாடிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மீதம் வழிந்த மழை ஓடிச்சென்று  கடைசில் கடலில் உவர்ப்பாகிப்போகின்றது. நிரம்பியிருந்த இருட்டின் மீது சிறிது பனி பரவத்தொடங்கியது. கண்ணாடியின் உள்புறம் அப்பழுக்களற்ற பனியினால் பூசப்படுகிறது. மில்லிமீட்டர் தடிப்புடைய கண்ணாடியின் இரண்டுபக்கமும் ஒட்டிநின்று காதல் செய்துகொண்டிருக்கிறது மழைத்துளிகளும் பனிப்படலமும். உள்ளிருக்கின்ற பனியினை அடைந்துவிடமுடியாத ஏக்கத்தில் அழுகின்றன மழைத்துளிகள். சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடியின் நடனம் என் தீர்க்கமுடியாத கனவொன்றினை ஏளனம் செய்வதைப்போல உணர்கிறேன்.
 
கொடிய கனவுகளில் மனிதர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றைத்தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சிகள் எனக்கு விரும்பியவாறே நடந்தேறுகிறது. அதனாலேயே கொடிய கனவென்கிறேன். எதை ஆசைப்படுகிறேனோ எவ்வாறு ஆசைப்படுகிறேனோ அது அவ்வாறே நடந்து முடிந்து தீர்ந்துபோவதையிட்டு கவலையடைகிறேன். கனவினை மீட்டிப்பார்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் முடிந்து விட்டதே என்ற கவலை மேலெழுந்து கொடுங்கனவாக மாறிவிடுகின்றது.
 

கணவாய்கள் நிறைந்த செவ்வகப்பெட்டிகள்

 
இயக்கமற்ற உடலொன்றாய்க் கிடக்கிறேன். ஒரு கணவாயைப் போல அருவருக்கத்தக்க கரிய உடலை நிலத்தோடு கிடத்தி மழை ஓய்ந்த பின்னிரவொன்றில் செய்வதறியாது ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக்கொள்கிறேன். மழையின் பின்னரான இவ்விரவு குளிர்மையானதாக இல்லை. இந்த செவ்வகப் பெட்டிக்குலிருக்கும் எந்த உயிரினத்திற்கும் இவ்விரவு மழையின் பின்னரான இரவொன்றாக இல்லை. மெல்லிய படையாக பிசுபிசுப்பான திரவமொன்று உடலைச் சுற்றி  சுரக்கிறது. மழையில் அச்சமூட்டுவதாக தெரிந்த வாகன விளக்குகள், இப்போது வெறும் ஒளிப்பொட்டாக தெரிகின்றன. மழைக்குப் பின்னர் எந்தப் பெரிய இரைச்சலான மாநகரமும் அணிந்துகொள்கின்ற பேரமைதி எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. மழைக்கு முன்னரும் மழையின் போதும் ஆரவாரமாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிய மனிதர்கள் மழைக்கு பின்னர் சோபையிழந்து போகிறார்கள். அவர்களின் படபடப்பு ஓய்ந்துபோகிறது. அத்தனை படபடப்பும் எனக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது. உடலுக்குள் ஆயிரம் பூரான்கள் ஊர்வதைப்போல பிறாண்டிக்கொண்டிருக்கிறது. செவ்வக அறையை விட்டு இந்த கரிய உடலை விட்டு விலகிப்போக ஏதோ ஒன்று துடித்துக்கொண்டிருக்கிறது. இணைப்பறுந்து தூக்கி எறியப்பட்ட பழைய தொலைபேசி ஒன்றினைப்போல உலகத்தோடு தொடர்பற்றுப்போயிருக்கும் ஏதோ ஒன்று வெளியேறும் கடைசி கணத்தில் செவ்வக பெட்டியைவிட்டு வெளியே வந்துவிடவே எத்தனிக்கிறேன்.
 
சாலையில் மழைக்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. மிகச்சில மனிதர்கள் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிந்துபோன நாளொன்றின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வெறுப்பவற்றை தூக்கி எறிந்தும் நேசிப்பதை தனக்குள் சேமித்துக்கொண்டும் செல்கிறார்கள். என்னைத்தவிர எல்லாமுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடைகளுக்கு முன்னிருக்கின்ற படிகளிலும் பேரூந்து தரிப்பிடங்களிலும் எங்கெல்லாம் ஒதுங்குகின்றளவு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சைக்காரர்கள் கிழிந்த துணிகளால் தம்மை இழுத்துப்  போர்த்திக்கொண்டு அமைதியாக தூங்குகிறார்கள். நீரில் தோய்ந்து நனைந்துப்போன கிழிந்த இறகொன்று காற்றில் மிதந்து முடிவின்றி அலைகின்றது.

அந்நியன்

தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண். அம்மம்மா வீட்டின் முன் விறாந்தையோடு சேர்ந்தாற்போல ஒரு அறையிருக்கிறது. பழைய பொருட்களை எல்லாம் அடுக்கி அங்கு வைத்திருக்கிறார்கள்.  மெத்தையில்லாத கட்டில், பழைய பாய்கள் இரண்டு மூன்று, மேல் விளிம்பால் வெடித்துப் போன கண்ணாடி, பழைய கொப்பிகளைப் போட்டு கட்டிவைக்கப்பட்ட பெட்டிகள்,  காலுடைந்த மின்விசிறி ஒன்று, என் உடுப்புகள் உள்ள ஒரு பக்கம் துருப்பிடித்து சுவரில் சாய்ந்து நிற்கின்ற அலுமாரி மற்றும் என்னுடைய நான்கடுக்கு  புத்தக ராக்கைகள். இவையனைத்து எலிகளும் சிலந்திகளும் வேறு பல ஜந்துக்களும் குடியிருக்கும் எல்லோராலும் கைவிடப்பட்ட அந்த மென்னீல பூச்சு அறைக்குள் சிதறிக்கிடக்கின்றன. எல்லோரது வீட்டிலும் இப்படியான அறையொன்றிருக்கும். கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் போனால் சாமியறைக்குள் தூங்கிவிடுவேன். பெரிதாக உடுப்புகள் எதையும் காவிக்கொண்டு போகமாட்டேன். முன்னறை அலுமாரிக்குள் இருக்கின்ற ஒன்றிரண்டு நல்ல உடுப்புகளே போதுமானதாக இருக்கும். முன்னர் அதே அலுமாரிக்குள் என்னுடையதும் தம்பியினுடையதும் உடுப்புகள் எமக்குரிய பகுதிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் . எமது பாடசாலைத் துணிகளும் அதற்குள் தான். பாடசாலைக் கால கடுஞ்சிவப்பான பாண்ட் உடுப்பு பத்து ரூபா பொலித்தீன் பைக்குள் கவனமாக மடித்து வைக்கப்பட்டிக்கும். சில காலத்தில் என் தம்பியின் பாண்ட் உடுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தம்பியின் எல்லா உடுப்புகளும் உள்ளறை ஒன்றிற்குள் மாற்றப்பட்டுவிட்டன. முன்னறையின் மங்கிய மஞ்சளொளியில் பொருத்தமான உடுப்பொன்றினை கிளறி எடுக்கும்போதெல்லாம், வீட்டிற்கு அந்நியனாகப் போய்விட்டதாக தோன்றுகிறது.
 
எப்போதும் என்னால் நிறைந்திருந்த வீடொன்றில்  என் நினைவுகள் இறந்து போய்க்கொண்டிருக்கின்றன. சாப்பாட்டு மேசையிலும் உடுப்புகள் தொங்குகின்ற ஹாங்கரிலும் கதிரைகளிலும் எனக்கான எதுவுமே இப்போது இருப்பதில்லை. முன்னரிருந்த ஒதுக்கமான கழிப்பறையிருந்து எல்லோரும் உள்ளக வசதியான குளியலறைக்கு மாறிவிட்டார்கள். புத்தகங்களை உருண்டு கிடந்து வாசித்து தேய்த்த சிவப்பு மை பூசிய நிலம் என் வாசத்தை அறவே மறந்து விட்டது. இப்போது அந்நியனாய்ப்போய் வெறுந்தரையின் குளிரினை வாங்கிக்கொண்டிருக்கிறேன். அண்ணாந்து வெறும் மேலுடன் வீட்டு நிலத்தின் குளிரினை உடலுக்குள் செலுத்துவதைப்போன்ற ஆனந்தம் வேறெதிலும் இல்லை. முதன் முதலாக வெறும் முதுகு குளிர்ந்த தரையினைத் தொடுகின்ற போது கரு விழித் துளைக்குள் ஊசியினைப் பாய்ச்சுவதைப்போல உடல் சிலிர்க்கும். முள்ளந்தண்டின் வழியே மூளை நரம்புகளுக்கு குளிர் சென்று அதி போதையைத் தரும். அலுமாரியில் எதிரில் தான் நான்கடுக்கு  புத்தக ராக்கை இருக்கிறது. திறந்த ராக்கையாக இருப்பதால் தூசு பிடிக்கும். இதற்காக கட்டில் விரிபொன்றினால் மூடப்பட்டிருக்கிறது. முதல் தட்டில் சிறுகதை, நாவல்கள் கீழே கவிதைகள், கட்டுரைகள் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கடைசியில் கோப்புக்கள். இது இறுதியான வரிசைப்படுத்தல்தான். இதற்கு முன்னர் வித்தியாசம் வித்தியாசமான முறைகளில் அடுக்கி வைத்திருந்தேன். நவீன இலக்கியம் ஒரு பக்கம், நவீனத்திற்கு முந்திய இலக்கியங்கள் ஒரு பக்கம். அதற்கும் முதல் அப்துல் ரகுமான் ஒரு பக்கம் மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பக்கம். நவீன இலக்கியப் பாகுபாட்டிலும் இதே கூத்துக்கள் நடக்கும். ஜெயமோகனுக்கு முன்னுரிமை பின்னர் சாருக்கு முன்னுரிமை. சுஜாதா அளவோடு தான் இருந்துகொண்டார். இப்போது எல்லாம் கெட்டு, வாசித்தவை ஒரு பக்கம் வாசிக்காதவை இன்னொருபக்கம் என்றாகிற்று.  புத்தகங்களை வாசிப்பதைப்போல அடுக்குவதிலும் எனக்கு அலாதிப் பிரியம்.
 
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு படிக்க வந்தபோது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய புத்தகங்களைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டேன். இருந்தும் இன்னமும் அரைவாசிக்கு மேல் அந்த புத்தக ராக்கைகளில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் இரண்டாவது வாசிப்பிற்கு உவர்ப்பில்லாதவை. என்னுடைய தம்பி சமீபகாலமாக அவற்றைப் புரட்டத் தொடங்கியிருக்கிறான். இப்போது வவுனியா செல்லுகின்ற வேளைகளில் வைரமுத்துவோ மேத்தாவோ அல்லது அப்துல் ரகுமான் வீட்டு மேசையில் இருப்பார்கள்.  கண்டவுடனே எடுத்துகொண்டுபோய் ராக்கையில் சேர்த்துவிடுவேன். புத்தகம் அனாதையாகக் கிடப்பது என்னை முடமாக்குவது போல இருக்கும். நானில்லாத வீட்டில் என் புத்தகங்கள் அலைவது என்னை ஒரு போதும் திருப்திப்படுத்தப்போவதில்லை. இப்போது வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கின்ற எனது புத்தகங்களில், தம்பியின் வாசமே வீசுகிறது. அவை மீண்டும் ராக்கையை சென்றடையும் போது தான் எனதாகின்றது. அலுமாரியைப் போலன்றி புத்தக ராக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. அதில் இன்னொருவனின் நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்துகொண்டிருக்கின்றன. புத்தகங்கள் மறுபிறப்படைகின்றன. அந்த அறையின் இருட்டும், படிந்திருக்கின்ற தூசின் வாசனையும் மறந்து போய்விட்டேன். இப்போதிருக்கின்ற வாடகை அறையில் என் தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண் வாஞ்சையோடு பார்த்துக்கொண்டும் கண்ணாடி யன்னலின் இடுக்குகளிற்கூடாக கசிந்து  பரணில் பட்டுத்தெறித்து வருகின்ற காற்றினை  ஆழமாக சுவாசித்தவாறும் நிற்கிறேன். அணுவளவு கூட எனக்குள் திருப்தி  வரவில்லை.
 
நேற்றிரவு முன்னறையினை வாடகைக்கு விடப்போவதாக அறிந்தேன். மனம் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது. ஐம்புலன்களில் ஒன்று ஊனமாகிக்கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன்.  ப்ளேட் துண்டு ஒன்றினால் உடலின் மென்மையான சவ்வுகள் கிழிக்கப்படுகின்றன. நான் என்பது வெறும் உணர்வுகள் மட்டுமா? என் நினைவுகள் பலமிழந்தவையா? வெறும் தசையும் என்பும் ரத்தமும் தான் மனிதர் என்றால் அவையிருந்தும்  வெளியை  நிரப்பமுடியாமல் போகின்றது ஏன்? அப்படியானால்  இருப்பு என்பது எதனால் அடையாளப்படுத்தப்படுகிறது?  புத்தக ராக்கைகள் பற்றிய கவலை இப்போது எனக்கில்லை. எல்லாம் அந்த அலுமாரியும் என் பழைய உடுப்புகளும் அதிலிருக்கும் என்  வாசனையும் பற்றியவை தான். விறாந்தையில் நான்  குழந்தையாக இருக்கும்  புகைப்படம் ஒன்று தொங்குகிறது. நான் வீடற்றவனாகிக் கொண்டிருக்கிறேன்.
 
புகைப்படம் –

© The Estate of Francis Bacon. All rights reserved, DACS/Artimage 2018. Photo: Prudence Cuming Associates Ltd

Stephen Hawking – அஞ்சலி

Stephen Hawking தனது 76 ஆவது வயதில் காலமாகிவிட்டார்.  “காலமாகுதல்” என்ற வினைப்பிரயோகம் Stephen Hawkingஐப்  பொறுத்தவரையில் மிகவும் பொருத்தமானதொன்று.
 
சிறுவயதில் அப்பாவைப் போலவும் எனக்குப் படிப்பித்த ஆசிரியர்கள் போலவும் விசித்திரமாகத் தெரிகின்ற மனிதர்கள் போலவும் ஒருமுறையாவது நடித்துப் பார்த்திருப்பேன். முன்னர் இயற்கையாக நடந்த இந்தச் சம்பவங்கள் பின்னர் Dubmash என்ற செயலி மூலம் பிரபலமாக்கப்பட்டது.  எப்போதாவது அகண்ட நீளமான கதிரை ஒன்றில் இருக்கும் போது உடனே மனத்திற்குள் தோன்றுகின்ற ஒரு நபர் Stephen Hawking. கதிரையின் சாய்வுப் பக்கமாக முதுகினைத் தாழ்த்தி – தலையை ஒருபுறம் தொய்வாக விட்டு – கண்களை அதீத கருணையுடனும் வாயினை ஒரு பக்க கோணலுடனும் வைத்து Stephen Hawking போல பத்துக்கு குறையாமல் செய்திருக்கிறேன். இப்படிச் செய்கின்ற ஒவ்வொரு முறையும் நானும் அவரைபோலத்தான் என்று  பூரித்துக்கொள்வேன். மார்க்ஸைப் பற்றி அறியாமல் அவர்மீதும் மார்க்சியம் மீதும் ஈர்ப்புவருவதைப் போல – ஐன்ஸ்டீன், பெரியார், ஜாப்ஸ் என்று மேலும் பலரையும் சேர்க்கலாம் – Stephen Hawking பற்றி எதுவும் அறியமுன்னமே ஒரு ஈர்ப்பு எனக்குள் உண்டானது.
 
2016 ஆம் ஆண்டு தமிழ் மாருத புத்தகக் கண்காட்சியில் வைத்து “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” என்ற “A Brief History of Time” இன் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்கினேன். நெடுங்காலம் கிடப்பில் கிடந்தது. 2017 இன் பின்பகுதிகளில் ஒருமுறை கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புகையிரதத்தில் வந்த போது    ” The Theory of Everything ”   திரைப்படத்தைப் பார்த்தேன். Traveling to Infinity என்ற Jane Hawking இன் குறிப்புகளை வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். அதுவரை பெரும் சக்தியாகவும் மேதையாகவும் எனக்குள் இருந்தவர், திரைப்படத்தைப் பார்த்தபின்னர் “எளிமையான மனிதர்” ஆனார்.  திரைப்படம் முழுக்க  Stephen Hawking மெல்லிய சிரிப்பும் சடுதியான கோபமும் ஆழந்த காதலும் உடையவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். மனதளவில் எந்நேரமும் குழந்தையாகத் திரிபவராகவும் அதே நேரம் வாழ்க்கை தொடர்பாகவும் மற்றவர்களின் உணர்வுகள் தொடர்பாகவும் ஆழ்ந்த புரிந்த உடையவராவாகவும் இருந்தார்.  திரைப்படம் பார்த்த ஒரு கிழமைக்குள் “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” வாசித்து முடித்தேன்.
 
Stephen Hawking இன் மரணம் இப்போதுவரை எனக்குள் ஒரு செய்தியாகவே இருக்கின்றது. அவரைப் பற்றிய தேடல் இல்லாத காலங்களில் எனக்குள் இருந்த விம்பத்தை முக்கியமானதொன்றாக கருதுகிறேன். Stephen Hawking என்ற மனிதர் அதே விம்பத்துடன் என்னுள் இருந்திருந்தால் இந்த மரணம் எனக்குள் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.
 
இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இன் பிறந்த தினம் கூட.
 
“My expectations were reduced to zero when I was 21. Everything since then has been a bonus.” – Stephen Hawking
 

கோமாளி கிங்ஸ் – அவதானங்களும் புரிதல்களும்

(01)
 
நேற்றிரவு கொட்டஹெனா சினிவேர்ல்ட் இல் – இரவு ஒன்பதரைக் காட்சியாகக்  கோமாளி கிங்சைப் பார்த்தேன். ஒன்பது மணிக்கே திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். ஓரளவேனும் கூட்டமாக இருந்தால் தான் ஒன்பதரைக்குக் காட்சி, இல்லாவிட்டால் சற்று நேரமெடுக்கும் என்று பின்னேரமே காட்சிகள் குறித்து விசாரிக்கப் போனபோது அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். நான் நுழையும் போது ஐந்து பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். நான் ஆறாவது. வவுனியாவில் வசந்தி திரையரங்கில் நயன்தாராவின் மாயா திரைப்படத்தை மூன்று பேரோடு மட்டுமே இருந்து பார்த்தேன். படம் முடிந்த போது திரையரங்கில் நான்  தனித்து இருந்தேன். மற்றவர்கள் இடையிலேயே நழுவி விட்டிருந்தார்கள். அந்த வகையில் ஆறு பேர் என்பது ஓரளவு உவகையளித்தது. வழமை போல ஐந்நூறு ரூபா டிக்கெட்டினை எடுத்துக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த போது மணி ஒன்பதே காலாகிவிட்டது. ஓரளவு முன் வரிசையில் சாவகாசமாக இருந்து ஆட்களின் வருகையை அவதானித்துக்கொண்டிருந்தேன். நேரத்தோடு ஆட்களின் வருகை அதிகரித்து அரங்கத்தின் அரைவாசியை நிறைக்க கோமாளி கிங்ஸ் திரையிடப்பட்டது. இதற்கிடையில் எனக்குப் பின்னாலிருந்த இளைஞர்கள் சிலர் அவர்களின் இன்னொரு நண்பனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ” அவன் இந்தியப் படங்களே பாக்கமாட்டான், இதுல இதுக்கு வரவா போறான் ” என்று அவர்களில் ஒருத்தன் சொன்னான். எம்மவர்கள் இடையே  திரைப்படம் என்றாலே இந்தியத் திரைப்படங்கள் தான் என்ற கருத்து இல்லாமற் போய்விட்டது. இன்று “படம் பார்த்துவிட்டீர்களா?” என்றால், “எது கோமாளி கிங்ஸா?” என்று பதிலளிப்பதைக் கேட்கின்ற போது  வெகுசன அடையாளம் ஒன்று இலங்கைத்  சினிமாக்கு ஏற்பட்டுவிட்டது என்பது  மகிழ்ச்சியாக இருந்தது.
 
கிட்டத்தட்ட நானும் அவர்கள் குறிப்பிட்ட நண்பனும் ஒரே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறோம். படங்களே பார்ப்பதில்லை என்பதல்ல. கோமாளி கிங்ஸ் வெளியாகிய இரவு, நண்பரொருவர் முகப்புத்தகத்தினூடு தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி விசாரித்தார். ” இப்போதெல்லாம் கார்ட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் ” என்று பதிலளித்தேன். அவர் சிரிப்பு எமோஜி ஒன்றை அனுப்பினார். ஆனால் உண்மையும் அதுதான். இப்போது கார்ட்டூன்கள் மற்றும் ஆவணப்படங்களையே அதிகமாகப் பார்க்கிறேன். பரவலாக பேசப்படுகின்ற தொடர்களையோ அல்லது உலக சினிமாக்களையோ(!) பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. கடைசியாகப் பார்த்தபடம் என்றால் The Death of Stalin. இதுவும் கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு சார்ந்த நகைச்சுவையான திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் Coco என்ற கார்ட்டூன் படம் பார்த்தேன். இப்படியெல்லாம் இருக்க , கோமாளி கிங்ஸை பார்த்தாக வேண்டும் என்று உறுதியோடிருந்தேன். காரணம் இலங்கையிலேயே  முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட தமிழ் வணிகத் திரைப்படம். இலங்கைத் தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயத்தைத் தொடக்கிவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பினை உருவாக்குவதன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. நம்மவர்களின் படைப்பு என்று மனதளவில் திரைப்படத்தைப் பற்றிய நெருக்கமான சிந்தனைகள் உருவாக்கி உலாவவிடப்பட்டது.  மீண்டும் பின்னாலிருந்த இளைஞர் ஒருவர், மற்றப்பக்க வரிசையில் இருந்தவரிடம் ” எப்படா உண்ட படம் வருது ” என்றார். அதற்கு சீக்கிரம் கொண்டுவந்துவிடுவோம் என்று பதிலளித்தார் மற்றவர். கோமாளி கிங்ஸின் வருகை சினிமா என்ற கனவோடு காத்திருக்கின்ற பல இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான திருப்பம். படைப்புகளை உருவாக்கிவிடுவதை எளிமையாக முடித்துவிடலாம் என்று நம்பக்கூடிய பலருக்கு, அதை வெளிப்படுத்துவதும் சந்தைப்படுத்துவதும் கடினமான ஒன்றாகவே இதுவரை இருந்தது. ஆனால் கோமாளி கிங்ஸ் இவற்றை உடைத்து சந்தைப்படுத்தல் வெளியை உருவாகியிருக்கிறது. இதற்காக படக்குழு அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  முழுநீளத் தமிழ் திரைப்படம் ஒன்றை   மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது எளிதான விடயம் அல்ல. இனிவருகின்ற திரைப்படங்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகளவில் இருக்காது.
 
(02)
 
போரின் பின்னரான தமிழ்த் திரைப்படம் ஒன்றாகவே கோமாளி கிங்ஸை அணுகவேண்டிய தேவை எமக்குள்ளது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் போரின் குரல்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. போர் முடிந்துவிட்டது, இது மறுமலர்ச்சிக்காலம் என்றெல்லாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. இன்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்கள், காணி மீட்ப்புப் போராட்டங்கள, அத்துமீறிய குடியிருப்புக்கள் என்று தமிழ்ப் பிரதேசங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை போரின் தொடர்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் இன்னமும் நாங்கள் வேறொருவகையில் எமக்கான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிடருகிறோம். எம் பண்பாட்டுக் கூறுகள் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. எம் இனத்தின் மீது மௌனமாக பெரும் அரசியல் போரே நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து வருகின்ற ஒரு சினிமா என்ற அடிப்படையில் தான் கோமாளி கிங்ஸ் முதலாவதாக அடையாளப்படுத்தப்படும்.
 
கோமாளி கிங்ஸ் வெளிப்படுத்திய சமூகம் சார்ந்த பிரச்சனைகளாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சனைகள் என்றே எதையும் குறிப்பிட முடியாது. ஒரு நகைசுவை திரைப்படமாக இருந்தாலும் உள்ளோட்டமாக நெருக்கடி ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நெருக்கடி தான் சுயம். நகைச்சுவைத் திரைப்படம் கடத்த வேண்டியது நகைச்சுவைகளை அல்ல, அதற்குள் ஊடுருவியிருக்கின்ற சமூகம் பற்றிய கருத்தினை¹.  இக்கருத்து கனமான செய்தி ஒன்றினை பார்வையாளருக்குக் கொடுக்கவேண்டும். சினிமா என்பதை எம்மிடையே ஒரு  பொழுதுபோக்கு அம்சமாக கருதுகின்ற சூழ்நிலையை நாம் இன்னும் அடைந்துவிடவில்லை. இன்னும் நிறைவேற்றப்படாதா எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. இன்னும் எங்கள் வரலாற்றையும் போராட்டத்தையும் சரியாக பதிவு செய்யவில்லை. இயங்கு நிலை சமூகம் ஒன்றின் அடிப்படை நோக்கமே வாழ்வியலை ஆவணப்படுத்துவது தான். போருக்குப் பிந்திய சமூகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய பார்வை இன்னும் இன்னும் விஸ்தாரமாக இருக்கவேண்டும். இன அழிப்பின் பின்னரான எதிர்ப்பு ஒன்றினையும் அவற்றைப் பற்றிய சரியான புரிதல்களையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமும் சினிமாவும் ஊடகங்களும் அவற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கவேண்டும். கோமாளி கிங்ஸ் இவை எதையும் செய்ய மறந்துவிட்டது.
 
மாறாக, கோமாளி கிங்ஸ் உருவாக்கிய பிம்பங்கள் கடும் விமர்சனத்திற்குரியவை. இந்திய முழு வணிகத் திரைப்படங்களில் கூட ஏதோ ஒரு பிரச்சனையினை மையக் கருவாகக் கொண்டு நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கோமாளி கிங்ஸ், வெளிநாட்டிலிருந்து தன் தாய் நாட்டிற்கு வருபவன் – இயந்திர வாழ்க்கையை வெறுத்து நாட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் – தாய் நாட்டிலேயே இருப்பதற்கு செய்கின்ற முயற்சிகள் தான் கதைக் கரு. வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்ததைக் கூட சாதாரணமாக வெளியேறியதாகவே வெளிக்காட்டுகின்றனர். அதற்காக எங்கும் போரைப் பிரதிபலிக்கவேண்டும், எப்போதும் போரையே பற்றிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று கூறவில்லை. இங்கு இனஅழிப்பு ஒன்று நடந்ததாக சிறு குறிப்புக்கூட திரைப்படத்தில் இல்லை. முழுக்க முழுக்க அழகிய இலங்கையை ஒளிப்பதிவு செய்கின்றார்கள். வடக்கு என்றால் நல்லுரையும் மன்னர் கருவாடையும் அடையாளப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் போரொன்றை முழுதாக மறந்துவிட்ட சமுதாயமாக எங்களை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னரான அரசியல் கேள்விகேட்கப்படவேண்டிய ஒன்று. உலகத்திற்கு எம்மைப் பற்றிய பிழையான விம்பம் கடத்தப்பட்டுவிட்டது.
 
(03)
திரைப்படத்தில் இரண்டு பகுதிகளாக கதை மாந்தர்களைப் பகுத்துள்ளார்கள். ஒன்று யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றவர்கள் மற்றையது கொழும்பில் பேசப்படுகின்ற கலப்புத் தமிழைப் பேசுகிறவர்கள். திரைப்படத்தின் படி யாழ்பாணத் தமிழைப் பேசுகின்றவர்களை நல்லவர்கள் போலவும், மற்றையவர்களை கெட்டவர்கள் அல்லது சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் போலவும்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சாதாரணமாக இதைக் கடந்துவிட முடியாது. இந்திய சினிமாவில் முஸ்லிம்களை எப்படி தீவிரவாதிகளாகவே மாற்றி வைத்திருக்கிறதோ இந்திய சினிமா அதே நிலையை இவர்களுக்கும் உருவாக்கிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களின் நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று  அனைத்தும் அநாகரீகமானதாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டும். முக்கியமாக அவர்களின் குழுவில் இருக்கின்ற பெண்ணின் பிரதிபலிப்புகள். கட்டையான உடைகளும் மற்றைய ஆண்கள் மீது இலகுவில் மையல் கொள்வது போல சித்தரிப்பதும், அந்தச் சமூகத்தின் எல்லாப் பெண்கள் பற்றிய விம்பமாகவே எடுத்துக்கொள்ளப்படப்போகிறது. ஆனால் அங்கு வந்திருக்கின்ற வெளிநாட்டுக் குடும்பம் பற்றியோ அல்லது கொழும்பிலேயே தங்கிருக்கின்ற யாழ்பாணக் குடும்பம் பற்றியோ எந்தக் குறையும் கூறிவிடாதபடி காட்டப்பட்டுள்ளது.  வயதான ஒருத்தர் தன் மனைவிக்கு பயந்து பயந்து மது அருந்துவதும் அதே மதுவினை மற்றைய  குழுவினர் பெண்களின் முன்னால் எந்தச் சலனமும் இன்றி குடிப்பதும் நகைப்புக்குரிய காட்சிகள் அல்ல.  வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்திலுகின்ற யுவதி ஒருத்தர் சிகரெட்டோ மதுவோ குடிப்பது கிடையாது என்றும் தான் மிகவும் சுத்தமானவள் என்றும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்ற காட்சிகள் மேலும் மேலும் பிரிவினைக்கான அத்திவாரத்தை ஏற்படுத்திக்கொண்ட நகர்கின்றது. இதனை இயக்குனர் தெரிந்து செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்று தெரியவில்லை.
 
இங்கு யாரையும் ஏற்றியோ தாழ்த்தியே பேசவில்லை, கோமாளி கிங்ஸின் வெளிப்பாடுகள் இவை.
 
இலங்கை தமிழ் சினிமா, ஈழத்து சினிமா என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் பற்றிய கேள்வி என்னுள் எழுகின்றது. இன்று இவற்றைப்பற்றிய தெளிவான புரிதல்களை எமக்குள் உருவாக்காது கடந்துபோய்விட்டால், இலங்கையில் சினிமா தனிச் சக்தியாக இயங்குகின்ற காலத்தில் எமக்கான அனைத்து அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
 
(04)
 
சினிமா பற்றிய கனவுகளோடு இருப்பவர்களும் திரைப்படக்குழு  மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் திரைப்படத்தைக் கொண்டாட காரணங்கள் நிறைய இருக்கின்றன. சினிமா பற்றிய கனவுகளோடு இருக்கின்ற இளைஞர்கள் கோமாளி கிங்ஸை கொண்டாடக் காரணம், அவர்களின் படைப்புகளும் இன்னொரு நாள் வெளிவரப்போகிறது என்பதாகவே இருக்கிறது. எனக்கு சினிமா ஒன்றினை தொழில்நுட்ப ரீதியில் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. முன்னரே கூறியது போல நான் கார்ட்டூன்களை ரசிப்பவன். ஆனால் ஒரு கலைவடிவம் ஒன்றின் சமூகப் பார்வை பற்றியும் அதன் பிரதிபலிப்புகள் பற்றியும் எனது பார்வைகளை முன்வைக்க முடியும். கோமாளி கிங்ஸ் ஒரு முன்னுதாரண சினிமா அல்ல. தவறான வழி ஒன்றிற்கு அத்திவாரம் தீட்டிவிட்டுப் போயிருக்கிறது. என் கவலைகள் அனைத்தும் இனி வரப்போகின்ற முழு நீளத் தமிழ் திரைப்படங்கள் பற்றியது தான்.
 
பின்குறிப்பு

  1. ஒரு கலைப் படைப்பாக இந்தத்  திரைப்படத்தை அணுகவேண்டிய கட்டாயத்தை இங்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுமையாக வெளிப்பாடுகள் பற்றிய அவதானங்கள் அடிப்படையிலேயே அணுகுகின்றேன்.

 
 
 
 
 

கொழுக்கட்டைத் திருவிழா

எனக்கு உருவாகின்ற கனவுகளைப் பற்றி ஏற்கனவே ஒரு தடவை எழுதியுள்ளேன். ” கனவும் சமூகமும் ” என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பதிவில் – ஒரே மாதிரியான கனவுகள் பல தடவைகள் வருவதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். கனவுகளைப் பற்றி நிறைய கேட்டும் வாசித்தும் அறிந்திருக்கிறேன். எல்லோருக்கும் போல விதம் விதமான கனவுகள் எனக்கு ஏற்படுவதில்லை. குறிப்பிடத்தக்க சில கனவுகளே மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவத்தில் வந்து போகும். அப்படியான கனவுகளுக்கு விளக்கங்களையும் தேடி வாசித்திருக்கிறேன். அதில் Sigmund Freud இன் The Interpretation of Dreams உம் C.G. Jung இன் The Undiscovered Self உம் முக்கியாமானவையாகத் தெரிகின்றன. அதை விட காலம் காலமாக நம்பப்பட்டு வருகின்ற கனவுகள் பற்றிய விளக்கங்களையும் அறிந்துகொண்டேன். இந்தக் கனவின் விளக்கத்தையும் கேளுங்கள்.
எப்போதும் என் பற்கள் ஒவ்வொன்றாக விழுகின்ற மாதிரிக் கனவுகள் காண்பேன். கொத்தாக விழாமல் – ஒவ்வொன்றாக – என் முழுப் பிறக்ஞையுடன் விழுவதைப்போல. பற்கள் விழுந்தால் நெருங்கிய சொந்தத்தில் யாரவது இறப்பார்கள் என்பது பொதுவான கருத்து. அப்படிப்பார்த்தால் இன்று என் வம்சமே அழிந்திருக்க வேண்டும். அத்தனை முறை பற்கள் விழுவதைப்போன்று கனவுகள் ஏற்பட்டுள்ளன. இப்படியான கனவுகள் வருகின்ற நாட்களின் முன்னைய பகலை ஆராய்ந்தேன். அன்றைய பகல் வேளைகளில் நான் அறிந்து ஒரு சிறு பொய்யையேனும் சொல்லியிருக்கிறேன். என்னை அறிந்து பொய்கள் சொல்கின்ற நாட்களில் பற்கள் விழுவதைப்போல கனவுகள் ஏற்படுகின்றன என்ற பொதுத் தன்மையை அறிந்தேன். ஒரு முறை என் கொடுப்பு பல்லொன்று விழுவதைப்போல கனவு கண்டேன். சாதாரணமாக அல்ல. அகோர வலி. கொடுப்புக்குள் குண்டூசிகளால் குத்துவதைப்போல. சிறிது நேரத்தில் அந்தப்பல் முரசோடு கழன்று விழுந்தது. முழுதும் அழுகிப்போன முரசு. கறுத்து துளைகள் விழுந்து கல் போன்றிருந்தது. அந்த அழுக்குக் முரசின் கீழ் என் பல் தூய்மையாகத் தெரிந்தன. இதைக் கனவு கண்டு சில நாட்களிலேயே எனக்குத் தெரியாத நெருக்கமான உறவினர் ஒருத்தர் இறந்து போனார். அதிக வயது – இயற்கை இறப்பு. அதன் பின்னரும் பொய் சொல்லும் நாட்களில் இதே கனவுகள் வந்துகொண்டிருந்தன.
ஒன்று முப்பத்திற்கு பல்கலைக்கழகத்தை முடித்துக்கொண்டு சாப்பிடாமல் பேரூந்து எடுக்க நடந்து வந்துகொண்டிருந்தேன். கொளுத்தும் வெயில். அகன்ற வீதி ஒன்றைக் கடக்கவேண்டும். சமிஞ்சை வீதியைக் இன்னும் எண்பத்தாறு வினாடிகள் காத்திருக்க வேண்டும் என்றது. இலேசாக பசித்தது. ஆனால் பொறுத்துக்கொள்ளக்கூடிய பசி தான். இருந்தும் அருகிலிருந்த கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பேஸ்ட்ரி ஒரு முறை ருசிக்கத் தூண்டியது. வேகமாக கடைக்குள் நுழைந்து காசைக்கொடுத்து பேஸ்ட்ரியை வாங்கிக்கொண்டன். பார்க்க மொறு மொறு என்று திட்டு திட்டாக அவித்துப் பொரித்த மா எச்சில் ஊற வைத்தது.வேகமாக எடுத்து முன்வாயில் வைத்துக் கடித்தேன். நறுக்.
நான் பல பேரோடு இதைபற்றிக் கதைத்திருக்கிறேன். சம்பவம் நிகழ முன்னரும் பின்னரும். பல்வரிசையில் மம்பட்டிப் பற்கள் இரண்டிற்கும் நேரே கீழிருக்கின்ற இரண்டு பற்களும் முளைத்ததிலிருந்து இன்னமும் விழுந்து மீண்டும் முளைக்கவில்லை. பாற்பற்கள் இரண்டும் இன்னமும் புதிதாகவே இருக்கின்றன. கறையோ சூத்தையோ பிடிக்காமல் மற்றைய எல்லாப் பற்கள் மாதிரியும் புதிதாக இருந்தன. தற்போது இரண்டு மூன்று மாதங்களாக அப்பற்களின் கீழுள்ள முரசு கரைவதும் வலி உண்டாவதுமாக இருக்கின்றது. இரண்டு பற்களில் ஒன்றில் வேர் மட்டும் சாதுவான நோவை ஏற்படுத்துகிறது. நானறிந்த மட்டில் இன்னமும் பாற்பற்களுடன் அலைகின்ற இருபது அல்லது அண்டிய வயதுடையவர்களைக் காணவில்லை. அப்பற்கள் இரண்டும் சிறியதாகவே இருப்பதனால் சிலருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவ்விடம் ஒட்டையைப் போலத் தெரியும். அவர்கள் விசாரித்தபோது பற்களைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்வேன். அப்பற்களை அண்டிய பகுதிகளில் அதற்கான புதிய பற்கள் முளைக்கவில்லை. அதனால் மருத்துவரிடம் அணுக வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இப்படியான பாற்பற்களாற் தான் பேஸ்ட்ரியைக் கடித்தேன்.
பார்க்க மொறு மொறு என்றிருந்த பேஸ்ட்ரி என் பாற்பற்களில் ஒன்றைப் பதம்பார்த்து விட்டது. பேஸ்ட்ரி அத்தனை கடிமையாக இருந்தது. அந்தப் பல் ஆடத்தொடங்கி விட்டது. இருபது வருட இருப்பின் ஆட்டம் அது. பேஸ்ட்ரியை ஏறிய மனமில்லாமல் பைக்குள் வைத்துக்கொண்டு சோகமாக நடக்கத் தொடங்கினேன். இன்னமும் அந்தப் பல் விழவில்லை. ஆடிக்கொண்டே இருக்கிறது. ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. கொடுப்பிற்குள் வைத்து சாப்பிடுவதற்கு என்ன பிரச்சனை என்று கேட்டீர்களா? காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தாற் தான் தெரியும் என்று கடந்துவிடுகிறேன். அந்த இடத்தில் மீண்டும் பல் முளைக்குமா தெரியவில்லை. அப்படி முளைத்தாலும் அதற்கான இடம் சரியாக பொருந்துமா என்பது பெரிய பிரச்சனை. விழுந்தது பாற்பல். சிறியது . முளைக்காவிட்டால் ஓட்டை வாயாகிவிடும். சொத்தியாக முளைத்தால் சொத்திப்பல். இப்படிப் பல பிரச்சனை.
ஆனால் இந்தப் பல் இப்போது துருத்துவது எனது சிறிய வயது ஞாபகங்களை மீட்டுகிறது. மற்றைய பற்கள் ஆடி விழும் போது ஏற்படுகின்ற பயம், பல் விழுந்த பின்னர் முரசில் இருக்கின்ற அதன் வேரை நாக்கால் வருடும் போது உருவாகும் சிலிர்ப்பு , நாக்கால் ஆடுகின்ற பல்லை விழும் வரை தள்ளித் தள்ளி ஆட்டுகின்ற சுகம் என்று அத்தனை சிறுவயது ஞாபகங்களை இரண்டு நாட்களாக என்னைப் பின்தொடர்ந்து வருகின்றது. ஆச்சி கொழுக்கட்டை கொட்டிவிடுவோம் என்றார். ஜோடியாக இருந்த பற்களில் ஒன்று இரண்டு மூன்று நாட்களுக்குள் விழுந்துவிடும். விழுத்திவிடுவேன். காதலர்கள் பிரியப்போகிறார்கள். பல்லியிடம் ஒரு பல் தஞ்சமடையப்போகிறது. இந்த முறை பல்லிக்கு பற்களைக் கொடுக்காமல் வருகின்ற கனவுகளுக்கு சமர்ப்பணம் செய்து அவ்வகைக் கனவுகளை சாந்தி செய்வோமா என்று தீவிரமாக யோசிக்கிறேன்.
“பற்கள் விழுவதான கனவுகளின் விளக்கம் – பற்கள் விழுவது தான் அன்றி வேறொன்றும் இல்லை.”

ஜனவரி ஒன்றிற்கான கனவு!

எனக்குப்  புதுவருடம் ஒன்றைப்பற்றிய கனவொன்று உள்ளது. இதுவரையில் ஜனவரி ஒன்றைப்  புதுவருடமாகக் கொண்டாடியதில்லை.எனது எண்ண அடுக்குகளில் ஜனவரி ஒன்றிற்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. சரியான முறையில் வெடி கொளுத்தத் தெரியாது என்ற காரணத்தினால் ஒழுங்கை நெடுக வெடி கொளுத்திய அனுபவமும் இல்லை. வில்லியம் ஜோசப்பின் Nothing Else Matters என்கிற அற்புதமான இசையினைக் கேட்டுக்கொண்டே எனது ஞாபக அடுக்குகள் ஒவ்வொன்றிலும் கடந்து வந்த புத்தாண்டுகளில் ஏதாவது ஒன்றைப்பற்றிய பதிவுகளேனும் கிடைக்குமா தேடிக்கொண்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது குறைந்தளவு கிறிஸ்தவர்களைக் கொண்ட வவுனியா நகரம் என்பதால் புத்தாண்டைப் பற்றிய நினைவுகள் எதையும் மீட்டமுடியவில்லை. ஒரு சில நிகழ்வுகளைத் தவிர கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முந்தைய எதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. குழந்தையாக இருக்கும் போது அல்லது சிறுவனாக இருக்கும் போது புத்தாண்டைக் கொண்டாடியிருக்கலாம்.
 
ஒன்றிரண்டு வயதுகளில் வவுனியாவில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வாழுகின்ற இறம்பைக்குளத்தில் கூட்டுக்குடும்பமாக நாங்கள் இருந்ததாக அம்மம்மா சொல்வார். அங்கே பெரிய கிறிஸ்தவத் தேவாலயம் ஒன்றிருக்கிறது. எனது நண்பர்கள் இப்போதும் கிறிஸ்மஸ், வருடப்பிறப்பு அந்த தேவாலயத்திற்குப்  பிரார்த்திக்கப் போய்விடுவார்கள். அவ்வளவு முக்கியத்துவமான தேவாலயம் அருகில் இருந்தமையால் குழந்தையாகவிருக்கும் போது கொண்டாடியிருக்கலாம். என்னைப் பக்குவமாய் ஒரு மூலையில் தூக்கிவைத்துக்கொண்டு மாமாவும் பெரியம்மாக்களும் சித்தியாக்களும் வெடி, சீறுவானம், சக்கரவானம் போன்றவைக் கொளுத்தி என்னைச் சந்தோசப்படுத்தியிருக்கலாம். வெறும் தடியிலிருந்தும் தாள்களிலிருந்தும் வெளிச்சமும் சத்தமும் உண்டாவதைப் பார்த்து ரசித்திருக்கலாம். அந்தத் தேவாலயத்தில் பலர் மெழுகுவத்தியேற்றி கவலைகள் நீங்கியதாகவும் ஆனால் தான் எவ்வளவு கவலைகள் பிரச்சனைகள் வந்தாலும் மெழுகுவத்தி ஏற்றியதே கிடையாது என்று அம்மம்மா என்னிடம் சொல்லியதை ஞாபகப்படுத்தும் போது குழந்தையிலும் ஜனவரி ஒன்றை சாதாரணமாகக் கடந்து சென்றிருப்பேன் என்று தோன்றுகிறது. இப்போது Brooklyn Duo இன் All of Me இசைத்துக்கொண்டிருக்கிறது. இன்று ஜனவரி இரண்டு.
 
இருபது வருடங்களுக்குப் பிறகு புதுவருடக் கொண்டாட்டம் ஒன்றைப்பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. கொழும்பு கொட்டஹேன வீதி நெடுக வெடிகளை  நூறு மீட்டர் தூரம் அடுக்கி முதலாம் திகதி  இரவு பன்னிரண்டுக்கும் மதியம் பன்னிரண்டிற்கும் என்று இப்போது வரை ஓயாமல் கொளுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கும் எல்லோரும் பொறாமையைக் கிளப்புகிறார்கள். இது இரண்டு காட்சியறைகளின் ஊழியர்களுக்கு இடையிலான போட்டியாக கடந்த பல வருடங்களாக நடந்துவருகிறது. வெடித்துச் சிதறும் போது அவர்களின் ஆன்மாவும் காற்றில் வெடித்துச் சிதறுவது போல பூரிக்கிறார்கள். தேவாலய வீதிகளாலும் கோவில் வீதிகளாலும் காரை நகர்த்த முடியவில்லை. ஒரு வருடத்திற்கும் சேர்த்து  முழுமையாக பிரார்த்தித்துவிடும் உத்தேசத்தில் பக்த கோடிகள் அறக்கப் பறக்க செயற்பட்டார்கள். அவர்களின் முகம் புதுவருட களிப்பில் மலர்ந்திருந்தது. தேவதைகள் பூமிக்கு இறங்கி வந்தாற்போல பெண்கள் மினுங்கினார்கள்.
 
எல்லாவற்றையும் கண்காணித்தபடி செட்டியார் தெருவில் நடந்தேன். எத்தனை மகிழ்ச்சியான முகங்கள். இரண்டு நண்பர்கள் என்னைக்கண்டு கைகுலுக்கி  வாழ்த்துத் தெரிவித்தார்கள். கூடவே பூபாலசிங்கம் புத்தகசாலை இன்று அரைநேரம் – மூடிவிட்டோம் என்றார்கள்.
 
எனக்குப்  புதுவருடம் ஒன்றைப்பற்றிய கனவொன்று உள்ளது.

பொருட்காட்சி – இரவு ஒன்று முப்பது.

மணி இரவு ஒன்று முப்பது. குளிரூட்டப்பட்ட பேருந்திலிருந்து இறங்கி – பின்பக்கமாக சாப்பாட்டுக் கடைக்குள் நுழைவதற்காக நடந்தேன். முழு நித்திரைக் கலக்கத்தில் இருந்ததால் மந்தமான பார்வையில் இன்னொரு பேரூந்து எமக்கருகில் நிறுத்தப்பட்டிருந்தது. தனியார் பேரூந்து. மேலும் முன்னே நடந்து கடைக்குள் செல்வதற்கு முன்னர்- வழமையை விட அவ்விடம் அதிக சனக்கூட்டமாக இருந்தது , வெள்ளை தலைக்கவசத்துடன் பொலிஸார் வீதிக்குக் குறுக்க மறுக்க நடந்து திரிந்தார்கள், இருவர் அளவு நாடா கொண்டு வீதியின் நீளத்தை அளந்துகொண்டிருந்தார்; அந்த இடம் வழமையை விட விசித்திரமாக இருந்தது. அதுவரை தூக்கக் கலக்கம் குறையவில்லை. கடைக்குள் சென்று கறி ரொட்டி ஒன்றும் பிளேன் டீ ஒன்றும் வாங்கிக்கொண்டு வாசலில் நின்று நிதானமாக ஒவ்வொன்றாக அவதானித்தேன்.
வீதியில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிப் போயிருந்தன. அண்ணளவாக முப்பது மீட்டர் தூரத்திற்கு வீதியில் கீறல்கள். அப்படியே திரும்பி பேரூந்தைப் பார்த்தபோது தான் முழு நித்திரைக் கலக்கமும் கலைந்தது. எமது பேரூந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து – அதன் சாரதியால் நிதானமாக நிறுத்தப்படவில்லை என்பதை உணர்ந்தேன். விபத்து. எல்லோரும் அதைப்பார்த்துக்கொண்டுதான் நின்றார்கள். அவர்கள் கைகளிலும் தின்பண்டங்களும் குடிபானங்களும் இருந்தன. அந்த விபத்தின் நிகழ்த்துகைக்குப் பின்னரான காட்சியினை ரசித்துக்கொண்டிருந்தார்கள். தெளிவாக சுற்றிலும் பார்த்தேன். கடைக்கு அடுத்ததாக அவ்வளவு ஆழமில்லாத பள்ளம். அந்தப் பள்ளத்தில் விழாமலும் கடையுடன் மோதாமலும் வீதி நெடுகிலும் நிற்கின்ற மின்சாரக் கம்பங்களை முறிக்காமலும் அந்தரத்தில் ஆனால் பாதுகாப்பாக பேரூந்து நிறுத்தப்பட்டிருந்தது. கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழக்குவியலுடன் இடித்திருக்கிறது. மின்சாரக் கம்பம் இல்லை அது தொலைபேசி வயர்கள் செல்லுகின்ற கம்பம். அதுவும் இடையில் கொஞ்சமாக முறிந்திருந்தது. இவ்விடத்தில் இருந்த சைகைப்பலகை ஒன்றையும் பேரூந்து மோதி கிளப்பி விட்டதாக அருகில் நின்ற சிங்களவர் ஒருத்தருக்கு இன்னொருவர் சொல்லிக்கொண்டிருந்தார். வீதியில் வருகின்ற வாகனங்கள் வேகத்தை குறைத்து விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்க, போலீசார் முகங்களைக் கடுமையாக வைத்துக்கொண்டு – வாகனங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
நான் பேரூந்தின் மற்றைய பக்கமா நடந்து வந்தேன். அது தனியார் பேரூந்து. ஏறுகின்ற வாசலுக்கு அடுத்த ஆசனத்தின் கண்ணாடியில் வவுனியா – அனுராதபுர – கொழும்பு என்று சிங்களத்தில் எழுதியிருந்தது. பேரூந்தின் சாரதி ஆசனத்திற்கு மேல் இன்னமும் காற்றாடி சுழன்றது. உள்ளே ஒருத்தர் பொறிகளுடன் ஏதோ வேலைசெய்துகொண்டிருந்தார். யாரிடமும் இதைப்பற்றி விசாரிக்க மனம் வரவில்லை. அவர்கள் ஒரு பொருட்காட்சியை ரசிப்பது போல விபத்தின் காரணத்தையும் சாரதியின் சமயோசிதத்தையும் பற்றி பேசிக்கொண்டார்கள்.
எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் நானில்லை. கையிலிருந்த கறிரொட்டியை தூக்கி பற்றைக்குள் எறிந்துவிட்டு பிளேன் டீயினை உதடுகளுக்கு அருகில் கொண்டுவர மனமே இன்றி அதையும் பற்றைக்குள்ளே ஊற்றி நேராகக் கடைக்குள்ச் சென்று கோப்பையை வைத்து விட்டு எனது பேரூந்திற்குள் ஏறினேன். மணி இரண்டைக் காட்டியது. வழமையாக இங்கே பத்து பதினைந்து நிமிடம் தான் சாப்பிட நிறுத்துவார்கள். இப்போது அரைமணித்தியாலம் ஆகிவிட்டது. ஆசனத்தில் இருந்து முகப்புத்தகத்தைத் திறந்தேன். கிரிஷாந்த் “சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா! ” என்ற பாரதியின் பாடலைப் பதிந்து அதற்கு கீழே சுவேதா மோகன் பாடிய இணைப்பையும் வழங்கியிருந்தார். காதுகளுக்குள் கேட்பொறியை (headphone) அணிந்து பாடலை கேட்டேன்.
“நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!”
பொருட்காட்சி முக்கால் மணிநேரம் நடந்தது. பின்னர் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டனர். அத்தனை பொருட்காட்சியையும் ரசித்துப்பார்த்த அவர்கள் ஒவ்வொருவரது முகத்தையும் ஏறிக்கொண்டிருக்கும் போது உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ! “

Big Bad Wolf Books – Numero Zero

நீண்ட நாட்களாக நடைபெற்ற Big Bad Wolf Books புத்தக கண்காட்சிக்கு இரண்டு தடவை சென்றுவந்தேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் ஏற்பட்ட சலிப்பும் உறுத்தல்களும் இதில் ஏற்படவில்லை. முக்கியமான காரணம் இது முழுக்க முழுக்க ஆங்கில புத்தகங்களுக்கான சந்தையாக இருந்தது. ஆரம்பித்து இரண்டாம் நாள் ஒரு முறையும் கடைசி தினத்திலொரு முறையும் போனேன். எழுபத்தைந்து வீத கழிவில் புத்தகங்கள் இருப்பதனால், ஒன்றிரண்டை வாங்கி கொள்ளவும் முடிவோடு போனேன். அகன்ற இலங்கை கண்காட்சி கூடத்தில் புத்தகங்கள் பகுதி பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தன. Fictions, Non-Fictions, Cookery, Architecture, Childern section என்று பலவாறு வகைப்படுத்தப்பட்டு புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இடக்கைப் பக்க சுவரினூடு நீளுகின்ற மேசைகளில் நாவல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நவீன சூப்பர் சந்தைகளில் பொருட்களை தள்ளுகின்ற வண்டி ஒன்றை தந்து அனுப்பினார்கள். அதற்குள் ஐம்பது புத்தகங்கள் வைக்குமளவு இடமிருக்கும். இரண்டு தடவையும் பெரும்பாலானோர், அவர்களின் குழந்தைகளை அதற்குள் வைத்து ஒன்றிரண்டு புத்தகங்களோடு தள்ளிச்சென்றதையே அவதானித்தேன். மேலும் சிலர் புத்தகங்கள் நிறைய அடுக்கிக்கொண்டு போனதையும் பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானோர் வயதான வெளிநாட்டவர்கள். அந்த வண்டியை வைத்து அங்கிருக்கும் சிறுவர்கள் வண்டில் பந்தயம் நடத்திக்கொண்டிருந்தார். நாவல்கள் ஒன்றிரண்டை பிரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த வெளிநாட்டவரோடு அறிமுகமானேன். அவர் ஒரு நாவலை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தார். இடையில் ஒருமுறை தனது கைபேசியையும் எடுத்து ஏதோ செய்துவிட்டு என்னிடம் திரும்பினார். நான் மௌனமாக புன்னகை செய்தேன். அவர் தாழ்ந்த குரலில், ” இந்தப்புத்தகத்தை எனது நாட்டில் அறுபது டாலர் கொடுத்து வாங்கினேன், இப்போது இங்கே நான்கு டாலர் பெறுமதியில் கிடைக்கிறது.” என்றார். அது என்னவோ உண்மைதான் பெரும்பாலான நாவல்கள் 550, 600, 700 ரூபாய் மட்டில் தான் இருந்தன. அப்போதிலிருந்து அவரும் நானும் கையிலிருக்கின்ற புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். சில புகழ்பெற்ற நாவல்களைத் தவிர மிகுதி எல்லாம் சமீபத்தில் வெளியான நாவல்கள். மெல்லிய ஜாஸ் இசையுடன்  அனைத்து நாவல்களையும் கையில் தூக்கி அழகு பார்த்தேன். அதிலிருந்து மூன்றை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இரண்டாவது முறை போவதற்கு முக்கியமான காரணம் Umberto Eco இன் Numero Zero. முதல்தடவை பார்த்துவிட்டு வந்தாலும் என்னுள் அந்த நாவல் சலசலப்பை ஏற்படுத்தியபடியே இருந்தது. எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று கொட்டும் மழைக்குள் கண்காட்சி கூடத்திற்குள் வந்து சேர்ந்தேன். மழையை விட அதிகமாக நான் கண்ட காட்சி என்னை நனைய வைத்தது.இடப்பக்க மூலையில் இருந்த அந்த நீண்ட நாவல்கள் பகுதியை அடையாளமே இல்லாமல் முடித்து விட்டார்கள். அங்கே அப்படியான ஒரு பகுதி இருந்ததிற்க்கான அடையாளமே இல்லை. ஆங்கில நாவல்கள் வாசிக்கின்ற வாசகர்கள் மிகவும் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன். Numero Zero சில பிரதிகள் வேறு புத்தகங்களோடு கலந்து இருந்தன. நம்பிக்கை இன்மையில் ஒரு முறை அங்கிருக்கின்ற ஏற்பாட்டாளர்களிடம் போய் விசாரித்தேன், அவர்களும் மகிழ்ச்சியாக விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். மற்றைய பகுதிகள் இன்னமும் மீதமிருக்கின்றனவே என்றேன். அவர் , மற்றைய பகுதிக்குரிய புத்தகங்களில் ஒன்று 200 பிரதிகள் வைத்திருந்தால் நாவல்கள் 10 பிரதிகள் தான் வைத்திருப்போம் என்றார். Umberto Eco இன் Numero Zero நாவலின் அட்டைப்படத்தில் 0 பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஒரு முறை மௌனித்துப்போய் நகர்ந்தேன். 

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் – புதியசொல் – காற்றுவெளி

“புதிய சொல் – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்” – காற்றுவெளி இணையஇதழில் வெளியான எனது கட்டுரை.

ஈழத்து சிற்றிதழ்களின் சமகால போக்கு பற்றியும் சமீபத்திய புதிய சொல் பற்றியும் லண்டனில் இருந்து வெளிவருகின்ற காற்றுவெளி இணைய இதழில் எனது கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.
 
சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றது. சமகால ஈழத்து எழுத்தாளர்களின் செயற்திறன் எல்லை மிகக் குறுகியதாகவே இருக்கின்றது. அவர்களின் செயற்பாட்டு எல்லைக்கு வெளியே சென்று சாதாரண சமூகத்தினரிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்க முடியாமல் உள்ளது. படைப்பாளிகளையும் அவர்களின் வாசகர்களையும் தவிர ஏனையோருக்கு ஒரு இலக்கியப் பதிவு போய்ச்சேருவது மிக மந்தமாக இருக்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஏறத்தாள இதே நிலைதான். எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோ எழுத்தாளர்கள் அனைவரும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக எழுதிக்கொண்டு இருப்பது போல சாதாரண மக்கள் அவர்களை கடந்து செல்கின்றார்கள். இந்த மனநிலைக்கு வெகுஜன எழுத்துக்களும் ஒரு காரணம் ஆகும். மக்கள் இலக்கியத்தை பொழுதுபோக்கு ஊடகாம பார்கிறார்களே ஒழிய ஒரு அடையாளமாக பார்க்கவில்லை. மிகவும் நெருக்கமான பிணைப்புகளை ஏற்படுத்தியிருக்கும் சமூகவலை தளங்கள் இலக்கியத்தின் தரத்தை சீரழிக்கின்றன. எழுத்தாளர்கள் யார் கவிஞர்கள் யார் படைப்பாளி யார் என்ற பிரக்ஞையே இல்லாமல் எழுத்துகளின் குப்பைகளை கொண்டாடுகின்ற மந்தநிலை சமூகம் உருவாகிக்கொண்டு வருகின்றது. அதற்கு சமாந்தரமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் சிறந்த இலக்கியங்களை பரப்புகின்ற ஒரு சாராரும் இருந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களின் கவனிப்பும் நிலையும் பரிதாபத்திற்குரியது. இந்த கவனிப்பின்மை அவர்களை வணிக எழுத்துக்குள் உந்துவதாக அமைகின்றது.
அச்சு ஊடகங்களில் பத்திரிகை சமூகத்திற்கு கொடுக்கவேண்டிய அறிவுறுத்த வேண்டிய அறிவிக்க வேண்டிய எதையுமே சரிவர செய்யவில்லை. செய்திகளிலேயே உண்மைத்தன்மையை பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பியே சரிபார்க்கவேண்டிய இழிநிலையை பத்திரிகைகள் அடைந்துள்ளன.
இன்றைய சிற்றிதழ்களின் நிலையையும் கவனிக்க வேண்டும். அதிலும் ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் மிக குறுகிய வாசிப்பு வட்டத்தையே கொண்டிருக்கின்றன. நலிந்த வாசகர்களைக் கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்துவது என்பது மிகக் கடுமையான காரியம். இதனாலேயே பல சிற்றிதழ்கள் இன்றைய சமூகத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கின்றன. சிற்றிதழ்களின் உள்ளடக்கம் எப்போதுமே பெரும் சவாலான ஒன்றாக அமைந்துவிடுகின்றது. எவருக்கான இதழாக வடிவமைப்பது என்பது ஒரு பக்கம் இருக்க, இலக்கிய தரமான ஆக்கங்களை பெற்றுக்கொள்வது மிக கஷ்டமாக உள்ளது. வாசிப்பின் பரவலாக்கம் இன்மை தமிழில் ஒரு சாதாரண மனிதனின் எழுத்துகளில் நலிமையை உண்டாக்குகின்றது. இதனால் பரந்துபட்ட எழுத்தாளர் குழுமத்தையும் உருவாக்குவது முடியாத காரியம்.
அந்த வகையில் புதிய சொல்லில் தற்போதைய நிலைமை ஓரளவுக்கு ஈழத்து சிற்றிதழ் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் புதிய சொல்லின் செயற்பாட்டுக் குழு இளைஞர்களாக இருக்கின்றமை. அவர்களின் தீவிர பரப்பு நடவடிக்கைகள் புதிய சொல்லில் இருப்புக்கு வழி செய்கின்றது. அதே போல புதிய சொல்லில் வெளிவருகின்ற ஆக்கங்களின் புதுமைத்தன்மையும் ஒரு காரணம். என்னதான் புதுமைகளைச் செய்தாலும் வாசிப்பு வட்ட விஸ்தரிப்பு இன்றி நிலைக் கொண்டுவிடமுடியாது. பொழுதுபோக்கு இதழுக்கு ஏற்படுத்தக்கூடிய வாசிப்பு வட்டத்தின் அளவை ஒரு போதும் இலக்கிய சிற்றிதழ்கள் ஏற்படுத்திவிடமுடியாது. இது சம்பிரதாயம். ஆனால் வாசிப்பு ஊடகத்தை பரவலாக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
 
எனக்கு புதிய சொல்லின் ஆசிரிய குழுமத்தை தெரிந்துகொள்வதற்கு முதலே புதிய சொல்லை தெரிந்தும் வாசித்தும் இருந்தது புதிய சொல்லில் வாசிப்பு விஸ்தரிப்பின் எழுச்சியான போக்கைக் காட்டியது. பல சிற்றிதழ்களை வற்புறுத்தித் திணித்தி அனுப்புகின்ற சூழலில் தனக்கென வாசகர் பரப்பை குறுகிய காலத்தில் புதிய சொல் ஏற்படுத்தியிருப்பது அவர்களின் வெற்றி. அதைத் தொடர்ந்து தக்கவைத்துகொண்டிருப்பது இலகுவானதல்ல. அதையும் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
 
புதிய சொல் 06
 
எப்போதுமே புதிய சொல்லில் அட்டைப்படம் ஆழ்ந்த குறியீட்டு மொழியிலேயே இருக்கும். இந்தமுறையும் நல்லையா சவேசனின் கைவண்ணத்தில் child art முறையில் அரசியல் – பாலியல் – வன்முறைகள் அடிப்படையில் வரையப்பட்டு பிரசுரிக்கப்ட்டிருக்கின்றன. ஆசிரியர் குறிப்பில் உரையாடல்களுக்கான தளத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து இலக்கிய வளர்ச்சிக்கான அழைப்பை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முன்னைய இரண்டொரு இதழ்களில் நான் கண்ட வாசக இலக்கிய வாத பிரதிவாதங்களை  இதில் காணாதது கவலையே. அதற்கான அழைப்பும் ஆசிரியர் குறிப்பில் விடுக்கபடுகின்றது.
 
புத்தகாயம் – இராகவன் ,துயர் மிகு இருள் – தீபன் சிவபாலன் , ஒழுங்குபடுத்தலின் வன்முறை – அருண்மொழிவர்மன் , Silence in the Courts அதிகாரத்தின் துஷ்பிரயோகம் – அத்தியா , காலங்களை கண்களில் நிரப்பியவன் – அனார் , மக்ரலின் அறுபதாயிரம் புறாக்கள் – யதார்த்தன் , சோலையூர் காண்பியக்காட்சி பற்றிய ஒரு பார்வை – தனுசியா , சல்வீனியா – தர்மு பிரசாத் , விளமீன் – ஜே கே , சாக வாய்க்காத நாட்கள் – நபீல் ,நான்கு காட்சிகள் ஒரு கவிதை – கேயல்.நப்லா , நட்சத்திரங்கள் சேகரிப்பவள் , கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள் – விருபா குமரேசன் , சினிமா வட்டங்களும் ஓர் இயக்கமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் , விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு – எஸ்.சத்தியதேவன் என கட்டுரைகளும் கவிதைகளும் சிறுகதைகளும் உள்ளடங்கலாக புதியசொல் 06 வெளிவந்துள்ளது.
 
 
இறுதி உள் மட்டையில் தொன்மையாத்திரை என்ற நிகழ்வு சம்பந்தமான புகைப்பட ஆவணப்படுத்தலும் சிறுகுறிப்பும் உள்ளது.
 
மற்றைய புதிய சொற்களுடன் ஒப்பிடும் போது இது பௌதீக அளவில் குறுக்கம் உடையதாக இருக்கின்றது கவலை அளிக்கின்றது. அத்தோடு இந்த இதழில் கட்டுரைப் பல்வகைமை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் கவலையே.
 
எல்லா இலக்கிய ஆர்வலர்களும் , சாதாரண மக்களும் புதிய சொல்லை வாசித்து அறிந்து பகிர்ந்து கொள்ளுதல் இதழின் வளர்ச்சி என்பதைத் தாண்டி ஈழத்தில் சிற்றிதழுக்கான அங்கீகாரத்தையும் அவர்களுக்கான சரியான தளத்தையும் அமைத்துக்கொடுக்கும் என நம்புக்கின்றேன்.
 
அதே போல இந்த இதழில் உள்ள கட்டுரைகள் அதன் மையம் அடிப்படையில் அடுத்தகட்ட விவாதத்திற்கு உரியவை. ஆசிரியர் குழு அதற்கான ஆவலுடன் இருப்பதும் தெரிகின்றது. வாசகர்கள் அவர்களின் வாதப்பொருளையும் வாதங்கள் பிரதிவாதங்களையும் முன்னகர்த்திச் செல்லவேண்டியது மேலும் அவர்களுக்கு ஊட்டம் அளிக்கும் என திடமாக நம்புகிறேன். எமது சமூகம் வாதங்களை இன்னமும் செய்யாமல் அமைதியாக இருப்பது எமது பிற்போக்கு தனத்தைக் காட்டுகிறது. அதிலும் இன்றைய சமூக வலைதளங்களில் ஏற்படுகின்ற அடிமட்ட வாதங்களில் பிரயோசனம் இல்லாமல் நிலைத்து வாதாடுவது, அதன் எல்லா பகுதிகளையும் அலசி தேர்ச்சி பெற்று நாட்கள் வாரங்கள் என்று வாதாடுவது கீழ்மையின் உச்சம். மிக பின்னடைவான இனமாக எங்களை பிரகடனப்படுத்த நாங்களே எடுக்கின்ற முயற்சிகள். ஆரோக்கியமான விவாதங்களில் அறுவரோ எழுவர் மட்டுமே நின்று வாதிடும் சந்தர்ப்பங்களை அதிகம் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் எமது சமூகத்தின் கருத்து பரவலாக்கத்தை மட்டுப் படுத்தும் காரணிகள். கருத்துப் பரிமாற்றமே இல்லாத ஒரு சந்ததியினர் அழிந்து போன வரலாறுகள் கூட எங்களை இன்னமும் திருத்தி விடவில்லை. பிரயோசனமான அறிவு சமூக அரசியல் விவாதங்கள் வளரவேண்டும். எல்லோரும் பங்கேற்க்கவேண்டும். இதுவே புதிய சொல்லின் ஆசிரியரின் உள்ளார்ந்த ஆசையாக இருக்கும் என நம்புகின்றேன்.
 
புதிய சொல் குழுமத்திற்கு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கிறேன்.
 

காற்றுவெளி இணையதளம் –  http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
 
இதழை மின்பிரதியாக பெற –  இங்கே சொடுகவும்.