Stephen Hawking தனது 76 ஆவது வயதில் காலமாகிவிட்டார். “காலமாகுதல்” என்ற வினைப்பிரயோகம் Stephen Hawkingஐப் பொறுத்தவரையில் மிகவும் பொருத்தமானதொன்று.
சிறுவயதில் அப்பாவைப் போலவும் எனக்குப் படிப்பித்த ஆசிரியர்கள் போலவும் விசித்திரமாகத் தெரிகின்ற மனிதர்கள் போலவும் ஒருமுறையாவது நடித்துப் பார்த்திருப்பேன். முன்னர் இயற்கையாக நடந்த இந்தச் சம்பவங்கள் பின்னர் Dubmash என்ற செயலி மூலம் பிரபலமாக்கப்பட்டது. எப்போதாவது அகண்ட நீளமான கதிரை ஒன்றில் இருக்கும் போது உடனே மனத்திற்குள் தோன்றுகின்ற ஒரு நபர் Stephen Hawking. கதிரையின் சாய்வுப் பக்கமாக முதுகினைத் தாழ்த்தி – தலையை ஒருபுறம் தொய்வாக விட்டு – கண்களை அதீத கருணையுடனும் வாயினை ஒரு பக்க கோணலுடனும் வைத்து Stephen Hawking போல பத்துக்கு குறையாமல் செய்திருக்கிறேன். இப்படிச் செய்கின்ற ஒவ்வொரு முறையும் நானும் அவரைபோலத்தான் என்று பூரித்துக்கொள்வேன். மார்க்ஸைப் பற்றி அறியாமல் அவர்மீதும் மார்க்சியம் மீதும் ஈர்ப்புவருவதைப் போல – ஐன்ஸ்டீன், பெரியார், ஜாப்ஸ் என்று மேலும் பலரையும் சேர்க்கலாம் – Stephen Hawking பற்றி எதுவும் அறியமுன்னமே ஒரு ஈர்ப்பு எனக்குள் உண்டானது.
2016 ஆம் ஆண்டு தமிழ் மாருத புத்தகக் கண்காட்சியில் வைத்து “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” என்ற “A Brief History of Time” இன் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்கினேன். நெடுங்காலம் கிடப்பில் கிடந்தது. 2017 இன் பின்பகுதிகளில் ஒருமுறை கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புகையிரதத்தில் வந்த போது ” The Theory of Everything ” திரைப்படத்தைப் பார்த்தேன். Traveling to Infinity என்ற Jane Hawking இன் குறிப்புகளை வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். அதுவரை பெரும் சக்தியாகவும் மேதையாகவும் எனக்குள் இருந்தவர், திரைப்படத்தைப் பார்த்தபின்னர் “எளிமையான மனிதர்” ஆனார். திரைப்படம் முழுக்க Stephen Hawking மெல்லிய சிரிப்பும் சடுதியான கோபமும் ஆழந்த காதலும் உடையவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். மனதளவில் எந்நேரமும் குழந்தையாகத் திரிபவராகவும் அதே நேரம் வாழ்க்கை தொடர்பாகவும் மற்றவர்களின் உணர்வுகள் தொடர்பாகவும் ஆழ்ந்த புரிந்த உடையவராவாகவும் இருந்தார். திரைப்படம் பார்த்த ஒரு கிழமைக்குள் “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” வாசித்து முடித்தேன்.
Stephen Hawking இன் மரணம் இப்போதுவரை எனக்குள் ஒரு செய்தியாகவே இருக்கின்றது. அவரைப் பற்றிய தேடல் இல்லாத காலங்களில் எனக்குள் இருந்த விம்பத்தை முக்கியமானதொன்றாக கருதுகிறேன். Stephen Hawking என்ற மனிதர் அதே விம்பத்துடன் என்னுள் இருந்திருந்தால் இந்த மரணம் எனக்குள் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.
இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இன் பிறந்த தினம் கூட.
“My expectations were reduced to zero when I was 21. Everything since then has been a bonus.” – Stephen Hawking