நீண்ட நாட்களாக நடைபெற்ற Big Bad Wolf Books புத்தக கண்காட்சிக்கு இரண்டு தடவை சென்றுவந்தேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் ஏற்பட்ட சலிப்பும் உறுத்தல்களும் இதில் ஏற்படவில்லை. முக்கியமான காரணம் இது முழுக்க முழுக்க ஆங்கில புத்தகங்களுக்கான சந்தையாக இருந்தது. ஆரம்பித்து இரண்டாம் நாள் ஒரு முறையும் கடைசி தினத்திலொரு முறையும் போனேன். எழுபத்தைந்து வீத கழிவில் புத்தகங்கள் இருப்பதனால், ஒன்றிரண்டை வாங்கி கொள்ளவும் முடிவோடு போனேன். அகன்ற இலங்கை கண்காட்சி கூடத்தில் புத்தகங்கள் பகுதி பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தன. Fictions, Non-Fictions, Cookery, Architecture, Childern section என்று பலவாறு வகைப்படுத்தப்பட்டு புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இடக்கைப் பக்க சுவரினூடு நீளுகின்ற மேசைகளில் நாவல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நவீன சூப்பர் சந்தைகளில் பொருட்களை தள்ளுகின்ற வண்டி ஒன்றை தந்து அனுப்பினார்கள். அதற்குள் ஐம்பது புத்தகங்கள் வைக்குமளவு இடமிருக்கும். இரண்டு தடவையும் பெரும்பாலானோர், அவர்களின் குழந்தைகளை அதற்குள் வைத்து ஒன்றிரண்டு புத்தகங்களோடு தள்ளிச்சென்றதையே அவதானித்தேன். மேலும் சிலர் புத்தகங்கள் நிறைய அடுக்கிக்கொண்டு போனதையும் பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானோர் வயதான வெளிநாட்டவர்கள். அந்த வண்டியை வைத்து அங்கிருக்கும் சிறுவர்கள் வண்டில் பந்தயம் நடத்திக்கொண்டிருந்தார். நாவல்கள் ஒன்றிரண்டை பிரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த வெளிநாட்டவரோடு அறிமுகமானேன். அவர் ஒரு நாவலை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தார். இடையில் ஒருமுறை தனது கைபேசியையும் எடுத்து ஏதோ செய்துவிட்டு என்னிடம் திரும்பினார். நான் மௌனமாக புன்னகை செய்தேன். அவர் தாழ்ந்த குரலில், ” இந்தப்புத்தகத்தை எனது நாட்டில் அறுபது டாலர் கொடுத்து வாங்கினேன், இப்போது இங்கே நான்கு டாலர் பெறுமதியில் கிடைக்கிறது.” என்றார். அது என்னவோ உண்மைதான் பெரும்பாலான நாவல்கள் 550, 600, 700 ரூபாய் மட்டில் தான் இருந்தன. அப்போதிலிருந்து அவரும் நானும் கையிலிருக்கின்ற புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். சில புகழ்பெற்ற நாவல்களைத் தவிர மிகுதி எல்லாம் சமீபத்தில் வெளியான நாவல்கள். மெல்லிய ஜாஸ் இசையுடன் அனைத்து நாவல்களையும் கையில் தூக்கி அழகு பார்த்தேன். அதிலிருந்து மூன்றை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இரண்டாவது முறை போவதற்கு முக்கியமான காரணம் Umberto Eco இன் Numero Zero. முதல்தடவை பார்த்துவிட்டு வந்தாலும் என்னுள் அந்த நாவல் சலசலப்பை ஏற்படுத்தியபடியே இருந்தது. எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று கொட்டும் மழைக்குள் கண்காட்சி கூடத்திற்குள் வந்து சேர்ந்தேன். மழையை விட அதிகமாக நான் கண்ட காட்சி என்னை நனைய வைத்தது.இடப்பக்க மூலையில் இருந்த அந்த நீண்ட நாவல்கள் பகுதியை அடையாளமே இல்லாமல் முடித்து விட்டார்கள். அங்கே அப்படியான ஒரு பகுதி இருந்ததிற்க்கான அடையாளமே இல்லை. ஆங்கில நாவல்கள் வாசிக்கின்ற வாசகர்கள் மிகவும் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன். Numero Zero சில பிரதிகள் வேறு புத்தகங்களோடு கலந்து இருந்தன. நம்பிக்கை இன்மையில் ஒரு முறை அங்கிருக்கின்ற ஏற்பாட்டாளர்களிடம் போய் விசாரித்தேன், அவர்களும் மகிழ்ச்சியாக விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். மற்றைய பகுதிகள் இன்னமும் மீதமிருக்கின்றனவே என்றேன். அவர் , மற்றைய பகுதிக்குரிய புத்தகங்களில் ஒன்று 200 பிரதிகள் வைத்திருந்தால் நாவல்கள் 10 பிரதிகள் தான் வைத்திருப்போம் என்றார். Umberto Eco இன் Numero Zero நாவலின் அட்டைப்படத்தில் 0 பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஒரு முறை மௌனித்துப்போய் நகர்ந்தேன்.