முதலாவது பிறந்ததினம் – அசோகமித்திரன்

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளி அரோகமித்ரனின் பிறந்த நாள். அவரின் இறப்பின் பின்னரான முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே இது அவரின் முதல்ப்பிறந்த நாளாக கொண்டாடுவதில் பிழைகள் எதுவும் இல்லை. அசோகமித்திரன் பற்றிய எனது பார்வையை  இரண்டு காலகட்டமாகப் பார்க்கிறேன். இது வாசிப்பு அனுபவத்தின் படிநிலை வளர்ச்சி/ வீழ்ச்சியின் பொருட்டு நடந்திருக்கலாம்.
அசோகமித்திரனின் முக்கியமான படைப்புக்கள் ஆரம்பத்தில் எனக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. இவற்றையெல்லாம் சொல்ல, பதிய ஒரு எழுத்தாளன் தேவை தானா? அசோகமித்திரனைப்போல் சாதாரண அறிவு உடையவர்கள் கூட எழுதிவிடமுடியுமே? எதிலும் விரிவு இன்றி மேலோட்டமான பார்வை உடைய இவர் எவ்வாறு சிறந்த எழுத்தாளர் ஆவார் ? என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் இருந்தன. தண்ணீர் நாவலை முதன் முதல் வாசித்து விட்டு மனமுடைந்து ஒரு பதிவையும் போட்டிருந்தேன். அதன் பின்னர் அசோகமித்திரனை வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். இந்தக்கால கட்டம் எழுத்தின் மேல் உள்ள அதீத நம்பிக்கையின் காலமாக இருந்திருக்கிறது. எளியவற்றைப் பதிவிடுதல் எவ்வளவு அபத்தமான படைப்புருவாக்கம் என்ற மனநிலை எனக்குள் இருந்தது.
அசோகமித்திரனின் தண்ணீரை இரண்டாம் முறை வாசித்த அனுபவம் உண்மையாகவே மறுவாசிப்பிற்குரியது. மேலோட்டமாக எழுதியிருக்கிறாரே என்று அலுத்துக்கொண்ட பல இடங்கள் என்னை ஆக்கிரமித்தன. எளிமையின் மூலம் நீண்ட கருத்தாடலை உருவாக்குகின்ற வல்லமை அமியின் எழுத்துக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். அசோகமித்திரனை வாசிக்க தொடங்கிய சிறிது நாட்களிலேயே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அதன் பின்னர் அவரை தேடி வாசித்தது தான் அதிகம் என்பேன்.
யாழ்ப்பாணத்தில் அசோகமித்திரனுக்கு நினைவுக்கூட்டம் கிரிஷாந்தன் மற்றும் அவரின் நண்பர்களால் நடத்தப்பட்டது. அசோகமித்திரன் என்ற ஆளுமை பற்றிய அவர்களின் பார்வை என்னை வியப்பூட்டியது. அதுவே மேலும் அவரை வாசிக்கவும் செய்தது. அதன் பின்னர் தமிழ் மாமன்ற ஏற்பாட்டில் வவுனியாவில் அமிக்கு நினைவுக்கூட்டம் நடத்தினோம்.
அசோகமித்திரனின் பெண்பாத்திரங்கள் மிகவும் வலிமையானவையாக கருதுகிறேன். எல்லா படைப்புகளிலும் பெண் முன்னிலைப்படுத்துகின்ற சமூகத்தை ஏதோ ஒரு வகையில் படைக்கின்றார். அசோகமித்திரனின் எளிமையில் இருக்கின்ற நுட்பமான உரையாடல்கள் வியக்கக்கூடியவை. சமூகப்பிரச்சனை ஒன்றினை முன்வைத்து எழுதப்படுகின்ற அவரின் நாவல்களில் பெரும்பாலானவை காரிய நிறைவு கொண்டவை.
அசோகமித்திரனின் நேர்காணல்களில் காலச்சுவடு இதழில் தேவிபாரதிக்கும் சுகுமாரனுக்கும் வழங்கியிருக்கின்ற நேர்காணல் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும். இதில் அவர் ” அப்படியெதுவும் எதையும் யோசிக்கவில்லை. என்னுடைய கதைகள் எல்லாமே எனக்குத் தெரிந்த மனிதர்களுக்கு நான் செலுத்துகிற அஞ்சலிதான். என்ன பெரிய மகா இலக்கியம்? அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நண்பரைப் பற்றி ஒரு கதை எழுதினேன். அவர் செத்துப் போய்விட்டார். நான் அவரைப்பற்றி எழுதினேன். நாங்கள் இரண்டுபேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவருக்கு ஹிந்தி தெரியும். எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சினிமா பார்க்கும்போது முக்கியமான வசனங்களையெல்லாம் எடுத்துச் சொல்லுவார். ஹிந்திப் பாட்டுகள் அத்துபடி. எந்தப் பாட்டைப் பற்றிச் சொன்னாலும் அது யார் பாடியது எந்தப் படம் என்று டக்கென்று சொல்லி விடுவார். இன்னொரு நண்பர் இருந்தார். அவர் சீரியசானவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பெர்னார்ட் ஷாவையெல்லாம் படித்துப் பேசுவார். ஆர்.கே. ராமசந்திரன், அவர் ஆர்.கே. நாராயணனுடைய சகோதரர்.அவரும் ரொம்ப சுவாரசியமானவர். அவரும் செத்துப் போய் விட்டார். என்னுடைய நண்பர்கள் எல்லோருமே செத்துப் போய் விட்டார்கள்.
(சிறிய மௌனமும் பிறகு பெரிய சிரிப்புமாகத் தொடர்கிறார்)
மகா இலக்கியம் செய்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி எழுத ஆள் இல்லை. எனக்கு இது போதும். ” என்பார்.
அசோகமித்ரன் எழுதுகின்ற பாணி அவருக்கு தனித்தேயான பாணி, அவரைத்தொடர்ந்து அப்பாணியை யாராலும் வெற்றிகரமாக பின்பற்ற முடியவில்லை.
அசோகமித்திரன் என்னும் எளிமையான இலக்கிய மேதை இன்று தனது முதலாவது பிறந்த நாளைக்கு கொண்டாடுகிறார்.
 
காலச்சுவடில் தேவிபாரதி சுகுமாரன் பெற்ற நேர்காணல்
http://devibharathi.blogspot.com/2017/04/blog-post_29.html
எனது அசோகமித்திரன் தொடர்பான கட்டுரைகள்
https://brinthansite.wordpress.com/2017/04/22/அசோகமித்திரன்-குறிப்பு/
https://brinthansite.wordpress.com/2017/06/27/தற்கொலையும்-டீச்சரம்மாவ/

பெருவெளியிலிருந்து அஞ்சலிகள். – கவிக்கோ அப்துல் ரகுமான்.

இன்று முக்கியமான நாள். சிலரது வருகை நமது வாழ்கையை வேறு திசைக்கு திருப்பி விடுவதுண்டு. அவர்களின் எண்ணங்கள் எம்மை வேறு தளத்திற்கு கொண்டு சேர்ப்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஆராதித்து கொண்டே இருப்போம். அந்த அராதிப்பு சுயநலம் சார்ந்த ஒன்றுதான். அப்படி ஒரு தூய ஆராதனை அப்துல் ரகுமான் மீது எனக்குண்டு.

முன்னைய பதிவில் தான் அப்துல் ரகுமானை தேடி தேடி வாசித்தேன் என்று எழுதியிருந்தேன். தமிழ் மான்றதின் கவிதை பயிலரங்குகள் நடந்துகொண்டிருந்தது. உள் வேலைகள் இருந்தபடியால் பார்வையாளனாக பங்கேற்க முடியாமல் போனது. கவிதைகளை பற்றியும் கவிஞர்களை பற்றியும் ஒவ்வொருவரது நுட்பங்கள் பற்றியும் அனுபவங்களை வளவாளர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். நான் வெளியில் நின்று சோடா ஊற்றிக்கொண்டிருந்தேன். மண்டபத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு ஒலியிலும் மிதமான கவிக்கோவின் பெயர் உச்சரிக்க கேட்டபோதும் என்னுள் இருந்த வைரமுத்துக்கும் வாலிக்கும் பழனி பாரதிக்கும் ஆன இடைத்தை அந்த ஒலி நிரப்பிக்கொள்ள முடியவில்லை. ஆனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் கவிக்கோவின் ரசிகர்கள் என்பதை மிக ஆழமாக என்னுள் பதித்து கொண்டேன்.
அதன் பின்னர் எப்படி அப்துல் ரகுமானின் ரசிகன் ஆனேன் என்று தெரியவில்லை. ஆனால் புத்தக நிலையங்களிலும் கண்காட்சிகளிலும் அதிகம் பைகளை நிரப்பியவர் அவர்தான். எல்லோருக்குமே கவிதைகள் வாசிப்பில் ஒரு ஆரம்பம் இருக்கும். அந்த கவிதைகளை சொல் அலங்காரதிற்காகவும் உச்சரிப்பு அழகிற்காகவும் ஒழிந்திருந்த புதிர்களை லாவகமாக அவிழ்க்கும் நுட்பதிற்க்காகவும் பிடித்திருக்கும். இன்னும் சிலருக்கு கவிதைகள் காதலிக்காக பிடித்துபோயிருக்கும். அந்த நிலையில் நின்று விடமுடியாது. அதைத்தாண்டி அடுத்த தளதிற்கு செல்ல ஒரு வழிகாட்டி தேவைபடுகிறது. என்னை கைத்தாங்கலாக கூட்டி சென்ற வழிகாட்டி அப்துல் ரகுமானே. கவிதைகளின் ஆன்மாவை உணர கற்று தந்தவர். கவிதைக்குள் கவிஞனும் அவனின் வாசகனும் சஞ்சாரம் செய்யும் புள்ளியில் நின்று கவிஞன் கவிதையை திரிக்கவேண்டும் என்று இன்றளவில் நான் எழுதுகின்ற மிக சில கவிதைகளுக்கு ஆன்மாவை அளித்தவர்.
கால அந்தாதி 

நரைத்துத் தோன்றி
கறுத்து உதிரும்
தின ரோமங்களைச்
சவுரி செய்யச்
சரித்திரம் திரட்டும் ;
என் நினைவுகளும் தான்

அவரிடம் ஒரு கவிதையை வாசகனுக்கு எப்படி கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நுட்பம் தெளிவாக தெரியும். அவரின் பல புத்தகங்களில் கவிதையை வெறுமனே கவிதைகளாக முடித்துவிடாமல் வாசகன் உள்ளார்ந்து செல்ல முன்னுரையும் விளக்கவுரையும் தருவார். அதுவும் மிக சிறந்த கவிதை வடிவிலேயே இருக்கும். ஆ.. எனக்கும் அவருக்குமான முதலாவது வாசிப்பு உறவு இல்லையிலும் இருக்கிறான். அந்த வடிவமைப்பு என்னை மிகவும் பாதித்தது. குறியீட்டு கவிதைகளுக்கு அவர் எழுதுகின்ற உரையில் லயித்து போயிருக்கிறேன். ஒரு கவிதையை அனுபவ வாசகனாக அணுகுகின்ற நுட்பம் அவரிடம் இருந்து உரையாடல் பகுதியில் இருந்து கற்றுகொண்டதே. நான் சொற்பமாக எழுதிவருகின்ற கவிதை ரசித்தல் தொடர் , அந்த அனுபவத்தின் நீட்சியே.
அப்துல் ரகுமான் அவரின் புத்தகங்களில் அறிமுகம் செய்யும் உருது அரபி மலையாள மேல்நாட்டு கவிஞர்கள் ஆரம்பத்தில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இப்போது அதிகமாக பாதிக்கின்றார்கள். அவர்களின் கவிதைகளுக்கான திறவுகோலும் அவரே. செம்மொழி ,கவிதை ஓர் ஆராதனை,பூக்காலம்,தட்டாதே திறந்திருகின்றது,இல்லையிலும் இருக்கிறான்,தொலைபேசிக்கண்ணீர் ,பூப்படைந்த சபதம்,பித்தன் ,அவளுக்கு நிலா என்று பெயர், மரணம் முற்றுப்புள்ளி அல்ல,மகரந்த சிறகுகள்,சொந்த சிறைகள்,முட்டைவாசிகள்,சுட்டு விரல்சோ திமிகு நவகவிதை,தாகூரின் சித்ரா,கம்பனின் அரசியல் கோட்பாடு, பால்வீதி போன்ற அவரின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். பத்திரமாக வைத்திருக்கிறேன்.

உதிரும் சிறகுகள்

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.

நான் என்னும் நப்பாசை 2 இல் நான் ,

இடையில் வாசிப்பும் அனுபவ பகிர்வும் (தமிழ் மாமன்ற நிகழ்வு , தமிழ்மாமன்றம் பற்றி விரிவாக எழுதவேண்டும் ,எழுதுகிறேன் காலதாமதமாக ) நடந்த போது தன அப்துல் ரகுமான் அறிமுகம் ஆனார். நான் வாசித்த தனிநபர் எழுதிய புத்தகங்களில் அதிகமானவை இவருடையதே. அன்று வரை இலகுவாக இருந்த கவிதைகள் இவரால் புது பரிமாணம் பெற்றன. ஒவ்வொரு வரிகளுக்கு பின்னும் சமுத்திர பரப்பு விடயங்கள் பொதிந்து இருப்பதை அவர் காட்டினார். சொற்களின் கோர்வைகள்தான் கவிதை ஏன்டா விம்பம் சிதறி பல கோர்வையான விடயங்கள் சில சொற்களில் என்று புரிய ஆரம்பித்தது. கவிதையை மட்டும் அன்றி பல கவிஞர்களையும் அறிமுகம் செய்தார் . இன்று நான் மொழிபெயர்க்கப்பட்ட அரபுக்கவிதைகளை வாசிக்கவும் இரசிக்கவும் அவரே பிள்ளையர் சுழி . அவரின் புத்தகங்கள் என்னை இன்னொரு தளத்திட்கு எடுத்து சென்றது. இன்று நான் வியந்து பார்க்கும் கவிஞர் அப்துல் ரகுமான் என்பதில் என் வாசிப்பு வட்டம் அடைந்துள்ள விருத்தியை உணரக்கூடிய அளவு உள்ளது.

என்று எழுதியிருக்கிறேன். வாசிப்பு நீட்சி இன்று அதிகமாகிவிட்டதால் சில கருத்துக்கள் மாறி இருக்கலாம். ஆனால் அப்துல் ரகுமான் மாறிவிடவில்லை.
சமீபகாலமாக கவிக்கோவின் உரைகளை இணையத்தில் பார்த்து வருகிறேன். அவை கலகலப்பானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை உணர்கிறேன்.
 
தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவ பகிர்வும் நிகழ்வில் அவரின் பித்தன் நூலை பற்றி நீண்ட விமர்சன பகிர்வு செய்திருக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமானிற்கு என் கனவுப்பெருவெளியிலிருந்து அஞ்சலிகள்…
 

ஒரு படைப்பாளியும் மூன்று மனநிலையும். – சுந்தர ராமசாமியின் பிறந்த நாள் நினைவு.

அன்று தமிழ் மாருதம் விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. இலக்கிய நிகழ்வுகளோடு மண்டபத்தின் அருகில் இருந்த நீண்ட திறந்த வெளியில் பூபாலசிங்கம் புத்தக நிலைய புத்தக விற்பனை மையமும் போடப்பட்டிருந்தது. வரிசைக்கு நான்கு ஐந்து மேசைகள் வைத்து புத்தகங்களை பரவி விட்டிருந்தார்கள். நிகழ்வுகளை கவனிக்கும் அதே வேளை பார்வையாளர்களையும் கவனிக்கவேண்டி இருந்ததால் இரண்டு மூன்று கட்டமாக புத்தகங்களை கொள்வனவு செய்தேன். அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகள் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. நிகழ்வுகளுக்கு முன்னரே இருக்கின்ற அவரின் புத்தகங்களில் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வாங்கியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அவ்வாறே அதுவும் நிறைவேறியது. இடையிடையே பலரோடு புத்தகங்களை பார்க்கவும் அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் முயன்றேன். மதுரகன் அண்ணாவுடன் புத்தகங்களை பார்த்துகொண்டு சென்றபோது தான் அந்த நிகழ்வு நடந்தது.

அப்துல் ரகுமானின் சில புத்தகங்களை காட்டிவிட்டு ஒரு அறுபது பக்க அளவுள்ள சிறிய கருமை நிற மட்டையில் பென்சிலால் யாரோ ஒரு கிழவனின் சித்திரம் வரையப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். பள்ளம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது கீழே சுந்தர ராமசாமி என்று அச்சிடப்பட்டிருந்தது. வித்தியாசமான எழுத்து பிடித்திருந்தால் வாசித்து பார்க்கலாம் என்று கூறி அதை அன்பளிப்பாகவும் தந்தார். உண்மையில் ஒதுக்கியிருந்த பணத்தை ஏற்கனவே அப்துல் ரகுமான் கைப்பற்றி விட்டதால் பள்ளம் அன்பளிப்பனது. இது மற்றவர்கள் கூறுவது போல எதேச்சையாக கிடைத்த பொக்கிசமாக எல்லாம் நான் கருதவே இல்லை. சிறுகதை வாசிப்பிலும் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. வாங்கிகொண்டுவந்து ஒதுக்கி வைத்து விட்டேன். உள்ளே திறந்து கூட பார்க்கவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அப்துல் ரகுமானை முழுமையாக வாசித்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தேன். எல்லோர் போலும் இல்லாமல் கல்கியை ஆரம்பத்தில் வாசிக்கவில்லை, சாண்டில்யனை வாசிக்கவில்லை, சுஜாதாவை வாசிக்கவில்லை, ராஜேஷ்குமாரை வாசிக்கவில்லை. நான் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தனினுடையது. காலத்தால் பிந்திப்போன முற்போக்கு சிறுகதைகளை வாசித்த மாத்திரத்தில் எனக்குள் எந்த சஞ்சலமும் ஏற்படவில்லை. அவரிலிருந்து வாசிப்பை கொஞ்ச பரவலாக்கி மற்றைய எல்லோரையும் சமாந்தரமாக வாசிக்க தொடங்கினேன். இதில் கூட சுந்தர ராமசாமின் அகப்படவில்லை. ஒருவர்  தனது உரையில் சுந்தர ராமசாமியை பற்றியும் அவரின் கருத்து நிலையை பற்றியும் தொட்டு செல்ல பள்ளம் ஞாபகம் வந்தது. சுந்தர ராமசாமியை விக்கிபீடியாவில் தேடிய அறியாமை என்னுள் இருந்தது. காலச்சுவட்டின் பிரதம ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது சுந்தர ராமசாமியை எனக்குள் ஒரு உச்ச நிலைக்கு உயர்த்தியது. பின்னரான காலத்தில் எனது ஒப்பியல் அறிவை நினைத்து சிரித்துக்கொள்ள இதுவும் சான்றானது. பின்னர்தான் பள்ளம் சிறுகதை தொகுப்பை திறந்தேன்.

முதலாவது கதையே ரத்னாபாயின் ஆங்கிலம், அவ்வளவு கொடுமையான வாசிப்பு அனுபவம் சாரு நிவேதிதாவின் மொழிபெயர்ப்பு கதைகளில் தவிர வேறு எதிலும் வந்ததில்லை. அத்தோடு மூடி வைத்து விட்டேன். சுந்தர ராமசாமியாவது? பள்ளமாவது?

2006 ம் ஆண்டு காலச்சுவட்டில் அரவிந்தன் எழுதிய சுந்தர ராமசாமி பற்றிய மதிப்புரை போன்ற கட்டுரை ஒன்றை வாசித்தேன். அந்த கட்டுரையில் சுந்தர ராமசாமியை அரவிந்தன் உயர்த்திக்கொண்ட பாங்கு என்னை வியக்க வைத்தது. மிக கொடுமையான எழுத்துகளை எழுதுபவர் ஒருவரையா இவர் இப்படி எழுதுகின்றார்? என்ற எண்ணம் ஓடியது. அதில் அறிமுகமாகியது தான் குரங்குகள் சிறுகதை.

குரங்குகள் பெயரை கேட்ட மாத்திரத்தில் பள்ளம் சிறுகதை தொகுப்பில் தலைப்பை மட்டும் பார்த்த நினைவு எழுந்தது. குரங்குளை வாசித்தேன். அதுவரையில் யாருடைய மொழி நடையிலும் கதை சொல்லலிலும் ஒன்றிப்போகாத நான், குரங்குகளோடும் சுராவோடும் ஒன்றிப்போனேன். குரங்குகளில் இருந்த முற்போக்கு தனம், அவரின் கருத்து நிலை ஆழம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டேன். வாசித்த உடனேயே ரத்னாபாயின் ஆங்கிலத்தையும் வாசித்தேன். எனது வாசிப்பின் பரிமாண வளர்ச்சிக்கு ரத்னாபாயின் ஆங்கிலம் ஒரு அளவுகோலாக இருந்தது. கொடூரமான எழுத்து என்று வசை பாடிய ரத்னாபாயின் ஆங்கிலம் இன்றுவரை வாசித்த மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகியது. சாருவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இன்றைய நாளில் வாசிக்க சுவைப்பவையாக இருகின்றதிற்கு காரணம்  சாருவா அல்லது அசல் எழுத்தர்களின் ஆளுமையா தெரியவில்லை.

தொடர்ந்து அவரின் புத்தகங்களை வவுனியாவில் தேடிப்போனால் வேறு ஏதாவது புத்தகங்களோடு தான் வந்து சேரவேண்டிய நிலைமை இருந்தது. இலக்கிய பகுதியை காட்டச் சொன்னால் , அப்படி ஒரு பிரத்தியோக பகுதி இல்லை என்றார்கள். நாவல்கள் சிறுகதைகள் கேட்டால் , ரமணிச்சந்திரனின் பக்கம் கையை நீட்டுகிறார்கள். ஒரு முறை ராமனிச்சந்திரனுடன் இருந்த சாதத் ஹசன் மண்ட்டோ அலட்சியப்படுத்தப்பட்டு சில காலத்திற்கு முதல் அதே இடத்திலிருந்து அணுவளவும் அசையாமல் கிடைக்கப்பெற்றார். இந்த நிலையில் எங்குபோய் சுராவை தேடுவது?

அவரின் சிறுகதைகளை இணையத்தில் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொள்வேன். ஒரு முறை அவரின் கவிதை ஒன்றையும் காணுற்ற போது தான் சுரா கவிதைகளையும் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையில் அதுவரையில் சுந்தர ராமசாமியை  வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளராகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் நூலகத்தில் அங்கத்துவமும் கிடைத்தது. முதலில் சென்று எடுத்த புத்தகம் டால்ஸ்டாயின் போரும் அமைதியும். வாசிக்காமலே திரும்பி கொடுத்து விட்டு காகங்கள் சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். ஒவ்வொரு சிறுகதையாக வாசிக்க தொடங்கி மூன்று நாட்களுக்குள் முடித்துக்கொண்டு உடனே ஆளுமைகள் மதிப்பீட்டினையும் வாசிக்க தொடங்கினேன். ஆளுமைகள் மதிப்பீடு இன்று வரை என் வாசிப்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்ற ஒரு படைப்பாகவே இருக்கின்றது.

தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஒரு புளியமரத்தின் கதை , ஜே ஜே சில குறிப்புகள், பிரசாதம், தொலைவிலிருக்கும் கவிதைகள் , நடுநிசி நாய்கள், இதம் தந்த வரிகள் ,விரிவும் ஆழமும் தேடி , யாரோ ஒருவனுக்காக போன்றவற்றை வரவழைத்து உடைமை ஆக்கிக்கொண்டேன். நூலகத்தில் குழந்தை பெண்கள் ஆண்கள், மற்றும் சில கட்டுரைகளையும் வாசித்தேன்.
சுந்தர ராமசாமியின் கதைகளை பிராமணிய தொனியுடன் , நளினத்துடன் வாசிக்கும் போது எனக்கு இன்னும் உவர்ப்பாக இருந்தது. எழுத்தாளன் என்பதை தாண்டி ஒரு சிறந்த விமர்சன உரையாளனாகவும் பேச்சாளனாகவும் இருந்தார்.
சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம் பார்த்து அவரின் வாழ்க்கை மீதும் அவரின் எழுத்துநிலை விளக்கங்கள் பற்றியும் அறிந்தேன். சுந்தர ராமசாமியின் கருத்தியலை ஆதாரமாக்கி பல எழுத்தாளர்கள் தமது விமர்சனங்களை செய்வதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். இன்றைய சூழலில் ஆளுமைகள் மதிப்பீடு என்னை மிகவும் பாதித்த/ எனக்குள் சுய விமர்சனம் செய்யகூடிய திறனை வளர்க்க உதவிய/ எனக்கான கருத்தியலுக்கு அடித்தளமிட்ட படைப்பாகி விட்டது.

அப்போது வித்தயாசமான எழுத்து என்றும் கொடுமையான எழுத்து என்றும் ஒதுக்கிய எழுத்துகள் இன்று என்னுள் பரந்து விரிந்து போய் இருக்கின்ற மாயம் சுந்தர ராமசாமி என்னும் மகத்தான படைப்பாளியால் செய்ய முடிந்தது.

சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம்.

அரவிந்தனின் சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரை.
https://azhiyasudargal.wordpress.com/2010/10/14/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/
அழியாச்சுடரில்
http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦1

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
 
எனது சுஜாதா – அவரின் வாசகர்கள் என்ற பதிவு தொடர்பாக எழுந்த கருத்து பகிர்வுகள்.
https://brinthansite.wordpress.com/2017/05/03/சுஜாதா-அவரின்-வாசகர்கள-2/
இந்த பதிவின் பின்னர்
மதன் குமார்  :-  சுஜாதா வெகுஜன எழுத்தாளர் என்ற புள்ளியிலிருந்து அவ்வப்போது விலகி தீவிர இலக்கியப் பக்கமும் தலைகாட்டிப் போயிருக்கிறார். தீவிர இலக்கியத்தில் ஈடுபட காரணமாக இருந்தவை அவரின் வாசிப்பாககூட இருக்கலாம். சுஜாதா நல்ல சிறுகதையாளன் என்ற பிம்பத்தை வெகுஜன இலக்கியமே தந்தது தீவிர இலக்கியம் இல்லை.
அவர்காலத்திய எந்த எழுத்தாளரும் இப்படி நிலையில் இல்லை. பின்னர் வந்த நல்ல சொம்பு தூக்கிகலால் பேருறுவாக மாற்றப்பட்டார்.
நான் :-  சுஜாதா என்ற ஆளுமை மீது எனக்கு விமர்சனம் கிடையாது. வெறும் ஜனரஞ்சக எழுத்துக்குள்ளேயே ஒரு எழுத்தாளனை அடக்கிவைத்த அவர் வாசகர்களைத் தான் விமர்சிக்கிறேன். சுஜாதாவை சிறிய வட்டத்துக்குள் குறுக்கிய சுயநலம் கொண்டவர்கள் அவரின் வாசகர்கள் என்கிறேன். சுஜாதாவை ஜனரஞ்சக எழுத்துலகு பீடித்திருக்காவிட்டால் அவரின் எழுத்துகள் வலிமையாகியிருக்கும். அவரின் கோட்பாடுகள் விரிவடைந்து இருக்கும். சுஜாதாவிற்கு இருக்கும் இலக்கிய கேள்விக்குறிகள் சில வேளை அவரின் வாசகர்கள் நினைத்திருந்தால் இல்லாமல் போயிருக்கலாம். இப்போது பிரயோசனம் அற்ற கூச்சல்கள் தான் மிஞ்சும்.
மதன் குமார் :- சுஜாதா என்ற ஆளுமை வெகுஜன எழுத்தில் பிரபலமடைந்தவர். நல்ல இலக்கியப் படைப்பை அவர் எழுத வாசகர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. சில நல்ல சிறுகதைகளும் தீவிர இலக்கியப் புலத்தில் வந்திருக்கிறது. எந்த இடத்தில் அவருக்கான வரவேற்ப்பு அதிகமோ அந்த இடத்தில் நின்று தன் படைப்பை தந்திருக்கிறார் அவ்வளவே.
அசோகமித்திரனுக்கும் அவ்வாரான வரவேற்ப்புகளும் இருந்திருக்கக்கூடும். அவர் ஏன் தீவிர இலக்கிய விசிறிகளால் கொண்டாடப்படுகிறார். சுஜாதா ஏன் வெகுஜன எழுத்துலகில் போற்றப்பட்டார் என்பதை கொஞ்சமாக ஆராய்ந்தால் போதும் விளங்கிவிடக்கூடும்.
வெகுசிலருக்கு சுஜாதா தெரிந்த அளவு அ.மியை தெரியவில்லை. இலக்கிய பரிச்சியம் உள்ளவர்களுக்கு சுஜாதா எந்த நிலையிவ் வைக்கப்படுகிறார் என்பது அவரவர் வாசிப்பைப் பொருத்தே அமைகிறது.
 
நான்  :-  இதில் சில கருத்துக்களோடு உடன்படுகிறேன். சுஜாதா வெற்றி பெற்ற வெகுஜன ஊடகம் , அதே சுஜாதவை கேள்விக்கும் உட்படுத்துகிறது. சாதாரண வாசிப்பு படிநிலையில் தாண்டிய ஒரு வாசகன் சுஜாதாவை உடனே விமர்சனப் படுத்துகின்ற மேற்போக்கான இலக்கிய எழுத்துகளை சாட்சிப் படுத்துவது ஏற்கமுடியாது. அவரது எழுத்துக்கள் வரவேற்புக்கே என்ற பிறகு இலக்கிய ஆழத்தை தேடுவானேன். அசோகமித்திரன் ஆரம்ப நிலைகளில் (பின்னரும் கூட ) அறியப்படாத எழுத்தாளராக இருந்தார். இந்த நிலை தான் அவரின் வலுபெற்ற எழுத்துகளுக்கும் உள்ளடக்கங்களுக்கும் காரணம். அங்கீகாரம் ஏற்படவேண்டும் என்ற முனைப்பு தான் அசோகமித்திரனின் இலக்கிய பிரவேசத்துக்கு காரணம். சுஜாதா தன் வாசகனுக்கு மகுடி ஊத தொடங்கியதில் இருந்து தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டார். தமிழ் வாசகர் வட்டத்தின் தற்கால நிலையில் இருந்து உங்கள் கருத்துடன் முரண் படுகின்றேன் . ரமணிச்சந்திரனை சுஜாதாவை விட பலருக்கு பரிச்சயம் என்பதால் இலக்கிய உலகில் ரமணிச்சந்திரனின் இடத்தை பற்றி விவாதிப்பது எவ்வளவு அபத்தம். பொழுதுபோக்கு வாசகர்கள் சுஜாதவை அடுத்த இடத்திற்கு இப்போது கொண்டு செல்ல நினைப்பது அவர்களின் காரணப்பெயருக்கு இழுக்கு.
 
இதோடு வாதம் நிறைவு பெற்றது.

சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦2

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
இது லதீபன் அண்ணா அவர்களால் வாசிப்பு , சுஜாதா தொடர்பாக பகிரப்ட்ட பதிவிற்க்கான பின்னூட்டங்கள்

பதிவு

மற்றவர் பாராட்ட வேண்டும்,நம்மை கொண்டாட வேண்டும் என்ற நினைப்பிலே எழுத்துற்கு வந்தால் நீ நாசம்.
இங்கே நிறைய குப்பைமேடுகள் உண்டு அதிலே போய் உறக்கம் கொள்ளும் உன் எழுத்து.ஒருநாள் சரியத்தான் போகுது.
நிறைய விடயங்கள் வாசிக்க உண்டு.உலகம் போய்க்கொண்டிருக்கும் கடைசி விம்பநிலையினை நுனிப்புல் தனை மேய்ந்து விட்டேனும் எழுத்துக்கு வரலாம்
பாகுபலிகள், IPL, அனைவருக்கும் பிடிக்கிறது, ஆகா ஓகோ என்கிறார்கள்.ஆனால் உள்ளுக்குள் இருப்பதென்ன உன் id மனநிலையை காவு கொள்ளும் விடயங்கள் தான்.
வெறும் Cake இன் Icing மட்டும் நன்றாக இருப்பதால் அதை சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம் தானே?
அவ்வாறு தான் வாசிப்பற்ற எழுத்தும், வேண்டும் என்றால் சுஜாதாவின் சீடனாகலாம்.

எழுதுவதற்கு முதல் வாசிக்க நிறையவே உண்டு.வாசித்தவற்றை மற்றவர்களுடன் கலந்துரையாடும் போதே அது முழுமையாகும்.
ஆகவே இளந்தலைமுறையான நாங்கள் நிறைய வாசிப்போம் கலந்து பேசும் அதன் பின் எழுதுவோம்.

எனது பின்னூட்டம்

 
இங்கு சொடுகப்பட்டேன் என்னும் காரணத்தினால் எனக்கும் இந்த வாதங்களில் பங்குண்டு என்று எடுத்துக்கொள்கிறேன்.
பதிவின் நோக்கம் வலிமையான இலக்கிய எழுத்துக்கள் எம்மிடையே எழ வேண்டும் என்ற நோக்கில் எழுதபட்டிருப்பதாக எனக்கு தெரிகின்றது. பதிவை ஒரு பொழுதுபோக்கு வாசகன் என்ற நிலையில் இருந்து பார்க்காமல் தமிழ் இலக்கிய நலன் விரும்பி என்ற நிலையில் பார்க்கும் போது பதிவின் அத்தியாவசியத்தை விளங்கிக்கொள்ளலாம். என் தலைமுறை வாசகர்கள் வணிக எழுத்து என்ற மீளமுடியா வட்டத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை இன்று விஸ்தரித்து போய் விட்டது. வணிக எழுத்துகள் அளவுக்கு மீறி எம்மை சுற்றி இருப்பதால் வாசகன் அவற்றை படித்து பகுத்து அறிந்து கொள்ளும் கால எல்லை மிக நீளமானதாகவே நினைக்கிறன். பலர் மீளமுடியாமல் போன இடங்களும் உண்டு. இந்த அதிக கனமான எழுத்துக்குவியல் வாசகனை வாசகன் என்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டுவராது.
ஆரம்ப நிலை வாசகன் சுஜாதாவிலிருந்து ஆரம்பித்தல் பொருத்தமானதே. ஆனால் அவனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு தகுந்த வழிகாட்டல் அவசியமே. எம் சமூகத்தில் பலரின் வழிகாட்டல் மேலும் மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிடகூடும். இதனால் வாசிப்பை பற்றிய வாதங்களும் பகிர்வுகளும் கலந்துரையாடல்களும் எம்மிடையே அவசியம். இன்று எம்மவர்கள் பலர் சரியான வாசிப்பு வழிநடத்தல்கள் இன்றி மட்டமான படைப்புகளை வெளிக்கொண்டுவருவது அவர்களின் பிழை இல்லை. சரியான வழிநடத்தல்கள் இன்மையே காரணம். இதை அனுபவம் உள்ளவர்கள் செய்வது மிக குறைவு.
 

சுஜாதா – அவரின் வாசகர்கள்.

இன்று தமிழின் முக்கிய எழுத்தாளுமையான சுஜாதா என்கிற ரங்கராஜனின் பிறந்தநாள் ஆகும்.
 
வணிக எழுத்துலகு என்றால் அதுவும் தமிழ் வணிக எழுத்துலகு என்றால் மிக முக்கியமாக பலரின் புலன்களுக்குள் அகப்படுபவர் சுஜாதா. தமிழ் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நம்பியிருக்கும் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் உற்பத்தியாகிய எழுத்தாளர்ளுள் முக்கியமானவர். அன்றைய தமிழ் சமூக அறிவுநிலையையும், அவர்களின் பொழுதுபோக்கு தேவையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எழுததொடங்கினார். இந்த புள்ளி தான் சுஜாதாவின் எழுத்தாளுமையின் அளவு கோல் ஆகும். எழுத்தாளன் ஒரு வரையறைக்குள் தனது சிந்தனைகளையும் எழுதும் புலன்களையும் ஒடுக்கும் போது உள்ளடக்க பற்றாக்குறையும் அழகியல் பற்றாக்குறையும் எழுந்து விடும். சுஜாதாவிற்கு நடந்ததும் இதுவே. சுஜாதாவின் ஆரம்ப எழுத்துகள் ஒரு எழுத்தாளனின் கீழ் நிலையையும் எழுத்தாளன் வாசிப்பாளர் உறவு நிலையையும் மையபடுதியதாகவே இருந்தது. இந்த எழுத்தியல் உறவு நிலையை பற்றி பிடித்துக்கொண்ட சுஜாதா வாசகர்களின் கவனத்தை பெறுகின்றார்.
 
இந்த உடன் கவனிப்பும் ஆதரவும் தான் சுஜாதா என்ற எழுத்தாளனை முடங்க செய்ததாக உணர்கின்றேன். ஒரு எழுத்தாளனுக்கான அடிப்படை போராட்டம் அவற்றிற்கு இருக்கவில்லை. வெகுஜன ஊடக வாசகர்கள் சுஜாதாவை ஆதரித்த விதம் சுஜாதாவின் பேனைகள் தொடவேண்டிய பல இடங்களுக்கு முட்டுகையாக இருந்திருக்கிறது. எல்லா தரப்பு வாசகர்களையும் கவர வேண்டிய ஊடக கட்டாயம் அவரின் பரந்த கற்பனை உலகை இல்லாமல் செய்து விட்டது. தனது எழுத்துலக வாசகர் என்ற அளவுகோலையே தன் எழுத்துகளின் அளவுகோலாக மாற்றி அமைத்து கொண்டார். அவரின் சிந்தனைகளை வாசனுக்காய் குவியப்படுத்த வேண்டிய கட்டாயம் அவரின் எழுத்தழகியலை மழுங்கடித்து விட்டது. வாசகனுக்காய் எழுதியவற்றிலிருந்து உன்னத புனைவுகளை பிரித்தெடுப்பது சுஜாதா வாசகர்களுக்கு மிக கடுமையான விடயம். ஒரு வகையில் அவர்கள் அதை செய்யபோவதும் இல்லை.
 
சுஜாதாவின் மொழிநடை எளிமை என்று வரையறைபடுத்தமுடியாது. எளிமையான மொழிநடையை கையாண்ட அசோகமித்திரனின் தாக்கம் சுஜாதாவின் மொழிநடையில் இருப்பதனால் அவ்வாறான முடிவினை எடுத்துவிடுகின்றோம். ஆனால் சுஜாதா கொண்டிருந்த மொழி வணிகத்தனமானது. இருவழிகளில் அதை நிறுவலாம். ஒன்று அவரின் வாசகர்களில் அதிகரிப்பதால் பத்திரிகையோ சஞ்சிகையோ ஏற்படுத்தக்கூடிய வணிகம். இரண்டு எழுத்தியல் கூறுகளில் ஏற்படுத்தக்கூடிய வியாபர வணிகம். இவை இரண்டையும் ஒருங்கே சேர்த்த மொழிநடை அவரது. ஒரு லாபநோக்கான மொழிநடையில் புலமைக்கான கூறுகள் பஞ்சமே.
 
சிறுகதைகளிலும் சரி நாவல்களிலும் சரி விடயபரப்பை  தாண்டிய பார்வை சுஜாதாவிடம் இருந்திருக்கவில்லை. இன்று மகத்தான இலக்கியங்கள் எல்லாமே ஒரு பரந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். சாதாரண பொழுது போக்கி வாசகன் எதிர்பார்க்கின்ற விறுவிறுப்பு அசாத்திய ஏற்ற இறக்கம் சுஜாதாவை விடயபரப்பின் மீது கொள்ள கூடிய கரிசனையை குறைகின்றது. பொழுதுபோக்கு என்பதை தாண்டி வாசிக்க நகர்கின்ற வாசனுக்கு வெறும் எழுத்துக்களையே மிச்சம் வைக்கின்றன. இந்த வெறுமையை வாசகன் ஏதோ ஒரு நிலையில் அடைந்துவிடுகிறான். அதன் பின்னர் விமர்சிக்க தொடங்குகிறான். சுஜாதவை ஆதரித்ததும் அவனாகவே விமர்சிப்பவனும் அவனாகவே இருக்கின்ற படிநிலை மாற்ற கால எல்லைக்குள் சுஜாதா வணிக எழுத்தாளனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.

ஜெயகாந்தன்- அருண்மொழி வர்மன்

சில விமர்சனங்கள் எனது மனதிற்கு மிக அண்மித்ததாக இருக்கும்.  விமர்சனத்தின் முழு உள்ளடக்கத்தை விளங்கும் அளவு அறிவும் அனுபவமும் இல்லை என்றாலும் , விமர்சனத்தில் வருகின்ற சில குறிப்புக்கள் எனது மன எண்ணங்களாகவும் இருக்கும். ஜெயகாந்தன் பற்றி முதன்முதலில் அறிந்த விதம் ஒரு கசப்பான அனுபவ பகிரவாகவே இருந்தது. அது தான் என்னை வாசிக்கவும் தூண்டியது.  அவரின் எழுத்துலக பின்னணியையும் சொந்த வாழ்க்கை பின்னணியையும் தேடவைத்தது. அவரின் சொற்பொழிவுகளையும் கறாரான விமர்சனங்களையும் ரசிக்க தொடங்கினேன். இன்று அருண்மொழி வர்மன் அண்ணாவின் ஜெயகாந்தன் பற்றிய பதிவை வாசித்த போதும் மனதிற்கு அண்மித்த பார்வைவையாக இருந்தது.
 
அருண்மொழி வர்மன் அண்ணாவின் ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை என்ற பதிவை வாசிக்க

ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை


 
ஜெயகாந்தன் பற்றிய ஆவண படத்தை பார்வையிட

தொடர்ந்து youtube இல் ஆவணப்படத்தை பார்க்கலாம்.