திருக்குறள் பக்கம் 07

நிலைத்து நிற்றல் அல்லது முன்னேறல் என்பதற்கு இரு விடயங்கள் ஆதாரமானவையாக இருக்கின்றது. ஒன்று தன்னிலை மற்றது தளம். ஒன்றன் மீது ஒன்று வலிய பிணைப்பை கொண்டவை. முன்னேற்றம் என்பது இரண்டு எருது கட்டி இழுக்கும் உருள் வண்டி போன்றது. ஒரு எருது முன்னேறி மற்றது வில்லங்கப்படுத்தியது என்றால் வண்டி உருளாது. எவ்வளவுதான் தன்னிலையில் நின்று உந்தினாலும் முன்னேற்றம் வராது. அதையும் மீறி தளத்தின் பக்குவம் அறியாமல் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியும் வீழ்ச்சிக்குரிய அடிகளே. வலிமையான தளத்தை தேர்வுசெய்தல் என்பதும் இங்கே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. தனிமனித ஆளுமை எவ்வளவு வீரியமாகவும் உள்ளடக்கம் மிக்கதாகவும் இருந்தாலும் அதை தாங்கும் தளத்தின் மீது தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. மரமேறும் மிருகங்களுக்கு ஒரு குணமுண்டு , மரத்தின் கிளைகளில் வலிமையான கிளையை பிடித்தே தங்கும். அவை தளத்தின் மீது நேர்த்தியானதும் ஆழமானதுமான பார்வை கொண்டவை. மனிதன் அவ்வாறான ஒரு பார்வையை தன் தளத்தின் மீது வைக்க தவறிவிடுகிறான். இதுவே அவள் நோக்கங்களை அடைய தவறுவதற்கும் ஒரு காரணம். ஒரு தளத்தின் கொள்ளளவுக்கு மீறிய உட்செலுத்தல் விரயமானதே. வெற்றியடைந்தவர்கள் தாங்கள் தங்கும் தளத்தினை விவரமாக உற்றுநோக்கியவர்கள்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். ( குறள் – 476 )
முன்னேறுவதற்கு பாதை அமைக்காமல் முன்னேற முயல்வது அசாத்தியமான செயலாகும். விளைவுகளும் சீற்றமுடையதாய் இருக்கும்.

திருக்குறள் பக்கம் 06

ஒரு நாள் அந்தியில் தொடங்கியிருந்தது அந்த விவாதம். இத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் யாருமே அறிந்திருக்கவில்லை. புத்தியீவிகள், விஞ்ஞானிகள் , எழுத்தாளர்கள் , பாமரர்கள் , குழந்தைகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் மேட்குலம் கீழ்குலம் என்ற பேதமே இல்லாமல் கலந்துகொண்டார்கள். மரங்களும் விலங்குகளும் , அஃறிணைகளும் கூட. தத்துவங்களும் விஞ்ஞான முடிவுகளும் சித்தர்தாமும் மதமும் அனுபவங்களும் எல்லாமே கொண்டுவரப்பட்டு தத்தம் பக்க சார்பான கருத்துக்களை அள்ளி எரிந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் முடிய இன்னொருவர் , அவரைத்தொடர்ந்து வேறுவர் என நிறுத்தம் இல்லாத யுத்தம் நடந்துகொண்டிருந்தது. நாள் செல்ல செல்ல குரல்களின் வலிமை குன்றியது, பொருட்செறிவும் கூட. வன்மம் குடிகொண்டது. கைகளும் பின்னர் ஆயுதங்களும் பேச தொடங்கின. எல்லாம் முடிந்து ஓய்ந்து போயிருந்த நாள் அது. மழையின் பின்னான சாரலைப்போல முணுமுணுத்துக்கொண்டு எல்லோரும் பிரிந்து சென்றார்கள். கொஞ்ச நாட்களில் அவர்கள் இதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாட்கள் ஓட ஓட அவர்கள் இந்த நிகழ்வையே மறந்து பொய் விட்டார்கள். வரலாறும் ஆன்மாவின் இறுதி நிலை ஆரூபமா உருவமா என்ற விவாதத்தை மறந்து போனது. ஆனால் அவ்விவாதத்தில் எடுபடா பேச்சாயிருந்த ஒருத்தனின் குரல் மட்டும் இதுவரை ஒலித்துக்கொண்டிருந்தது.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. ( குறள் 336 )
இதுவும் அழிந்து போகும் , படைக்கப்பட்ட எல்லாமே , படைப்பாளியும்.

திருக்குறள் பக்கம் 05

கோபம் என்பதை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் வேறு எதையும் வெளிப்படுத்துவதில் உள்ளதை விட கஷ்டமானது. பொதுவாகவே உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் என்பது எல்லோராலும் செய்துவிடமுடியாத ஒரு செயல். எளிதானதும் இல்லை. எந்த உணர்வையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமா என்றால் இல்லை. கட்டுக்குள் வைத்திருத்தல் , குளக்கட்டை எடுத்து கொள்ளவோம். குளத்திற்குள் நீர் தேங்க தேங்க கட்டு கட்டுப்படுத்திக்கொள்ளும், ஒரு எல்லை வரை. எல்லையை தாண்டிய பிறகு நீர் பாய்ந்து ஓட்டிச்செல்லும். இது கட்டை தாண்டிய நிலை. குளத்து நீர் கட்டிற்குள் நிற்கும் வரைதான் வெள்ளாண்மைக்கோ பயனைப்பெறக்கூடிய எதோ நல்ல விடத்திற்கோ. கட்டை தாண்டிய நிலையில் ஒன்றுக்கும் உதவாத கடலுக்குள் அடங்கி போகும். எதுவுமே கட்டுக்குள் இருக்கும் போது தான் சிறப்பு.
நீரின் அழகே கட்டைத்தாண்டிய பிறகு கெட்டு விடும் என்றால் உணர்வுகள் , உணர்வுகளை தாங்குகின்ற மனிதன், உணர்வுகளும் கட்டுக்குள் இருக்கும் போது தான் உயர்வு.  உணர்வுகளில் மனிதனை மீறிய ஒரு நிலையை அடையவைக்கும் சக்தி கோபத்துக்கு இருக்கிறது.  விஞ்ஞான ரீதியில் மனித மூளைக்கோளத்தில் amygdala என்ற உறுப்பு உணர்ச்சிகள் , அதன் நடவடிக்கைகள், அதற்கான ஊக்கம் என்பவற்றை உருவாக்குகிறது. இந்த செயன்முறையின் போது ஏற்படுகின்ற உணர்வு பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக சுரக்கின்ற epinephrine மற்றும்  norepinephrine  நொதியங்கள் இரத்தத்தை போக்கை அதிகரிக்கின்றது. இரத்தம் வேகமாக முகம் போன்ற பகுதிகளுக்கும் முக்கியமாக ப்ரீஃபிரன்டல் புறணி (இடது கண்ணின் மேல் என்று மூளையின் பகுதி)  இடத்திற்கு விரையும். இப்பகுதியின் செயற்பட்டு முடிவுகளை கட்டுப்படுத்தவும்  கோபத்தில் இருந்து நம்மை விலக்கவும் உதவும்.  இச்செயற்பாடுகள் அனைத்தும் இரண்டு செகண்ட்களுக்குள் நடைபெற்று முடிந்துவிடும் . இந்த இரண்டு செகண்ட்களுக்குள் உந்தப்படும் நாம் விபரீதமான செயல்களை செய்துவிடுகிறோம். இதனால் தான் கோபம் வரும் போது தண்ணீர் குடிக்கவோ அல்லது பத்துவரை எண்ணவோ கூறுகின்றார்கள் பெரியவர்கள்.
கோபம் எல்லாருக்கும் வரும். அதை சரியான வழியில் திசைப்படுத்த தெரியாதோர் தான் அதிகம். தவறான திசைப்படுத்தல் பலவழிகளில் நடந்தேறுகிறது. அதில் மிக கொடிய வழி வன் சொற்பிரயோகம். கோபத்தை நிர்வகிக்க முடியாமல் பல வழிகளில் வெளிப்படுத்துவோரில் ஆக கொடிய வழியை தெரிவு செய்வோர் கடுஞ்சொற்களை பிரயோகிக்க எத்தணிப்போர், பிரயோகிப்போர். கோபத்த்தால் சொல்லப்படுகின்ற சொற்கள் சூடு தழலை போன்றது. சொல்லுகின்ற சந்தர்ப்பம் சரியோ பிழையோ சொற்களை உள்வாங்கியவர் உகந்தவரோ இல்லையோ ,சொல்லப்பட்ட சொற்கள் மற்றவரை அடையும் போது அதன் வலிமையான தாக்கம் பலகாலம் ஆனாலும் மாறாத வடுவாக இருந்துகொண்டே இருக்கும்.  அவர்களின் நியாயம் இப்பிடி இருக்கும், கோபத்தில் தன்னிலை அறியாமல் பேசிவிட்டேன். இதை எல்லாவற்றையும் விட கொடுமை பின் நவீனத்துவம் என்ற பெயரில் சரளமாக உச்சரிக்கப்படுகின்றதும் எழுதப்படுகின்றதுமான கடும் சொற்கள். அந்த சொற்களின் அசாத்திய வலிமை தெரியாமல் பேசப்பட்டு விடுகின்றன. நண்பர்களுக்குள் என்றும் , இது தான் இலக்கிய மொழி என்றும் இன்று சகஜமாகிப்போன கடும்சொற்பிரயோகம் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். ( குறள் 139 )

மறந்தேனும் கூறிய கடும் சொற்கள் , நல்ஒழுக்கத்திற்கு எதிரானது. நல் ஒழுக்கம் உள்ளோர் மறந்தும் அதை பாவிக்கார்.

திருக்குறள் பக்கம் 04

எல்லாருக்குமே உண்மையாக இருக்கவேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். இருந்தும் சந்தர்ப்பங்கள் இந்த ஆசையை தொடர்ந்து பேண உறுதுணையாக இருப்பதில்லை. அதை எதிர்த்து உண்மையாகவே இருந்துவிட்டாலும் நிறைவேற்றவேண்டியவற்றை நிறைவாக முடிக்க முடியாத அல்லது உரிய காலத்துக்கு முடிக்க முடியாத நிலை ஏற்படும். கைக்கொண்ட காரிய செம்மை குறைவுறும்.இதனால் உண்மையாக இருத்தல் என்பதை  சில முக்கிய தேவையான இடங்களில் தளர்த்துதல் குற்றம் என்பதை மீறி அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் அளவுக்கு மீறிய தளர்த்தல் பிரச்சனைகளையும் உருவாக்கும். உலகின் மிக முக்கியமான அழிவுகளுக்கும் அதே போல் மிக முக்கியமான வெற்றிகள் கண்டுபிடிப்புகளுக்கும் சிறிய மெய்ப்பிறழ்வுகளே காரணம். நீங்கள் சொல்லும் பொய் எதைநோக்கியது என்பதைப்பொறுத்து தான் அழிவோ ஆக்கமோ.
உங்கள் நிலை  அந்த சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளவேண்டிய முறை என்பன தான் உங்கள் சொற்களை தீர்மானிக்கும். தளர்வுற்ற வாய்மை -அதுவே பொய் , குற்றம் இல்லாத நம்மையே ஏற்படுத்துமாயின் அதுவும் வாய்மையே என்கிறார்கள்.இருளைத்தாண்டித்தான் ஒளியென்றால் , இருளை கடந்து செல்லல் குற்றம் இல்லை.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். ( குறள் 292 )
பொய் , உண்மையை நிலைநாட்டுவதாயின் அதுவும் மெய்யே.

திருக்குறள் பக்கம் 03

சேமிப்பு என்பது செலவழிப்பு என்பதன் முன்னாயத்தம் ஆகும். உலகில் எல்லோரும் ஒரு காரணத்துக்காய் சேமிக்கின்றோம். எதை எல்லாம் சேமிக்கின்றோம் , பணம் ,பொருள், பதவி ,அன்பு ,ஆசை ,பழி , அறிவு, உறவு . இதில் பெரும்பாலான சேமிப்பின் இலக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுதல் என்பதாகவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியாக இருந்துவிட முடிகிறதா? சேமித்த எல்லாம் உங்கள் வாழக்கை முழுவதையும் மகிழ்ச்சியாக நிரப்ப வழி செய்கிறதா ? என்றால் இல்லை.  மாளிகையில் இருப்பவன் மடத்தில் இருக்கும் அமைதியையும் தனிமையையும் பார்த்து ஏங்குகிறான்,- இல்லாமலும் இருக்கலாம். அங்கு அவன் சேமித்துவைத்த அனைத்தும் பொய்த்து போகிறது. ஏழையாக இருப்பவன் மாளிகையில் இருப்பவனின் ஆடம்பரத்தை பார்த்து வியந்து போகிறான். அங்கேயும் எல்லாமே பொய்த்து கொள்கிறது. அப்போது ஒரு சாரார் சேமித்த பணம் பொருளும் மாரு சாரார் சேமித்த அன்பும் உறவும் வெற்று சேமிப்பு தானே. பருப்பு இல்லா வெறும் கச்சான் கோது.
இரண்டு பெரிய செல்வந்தர்கள் உலகை இரு வெவ்வேறு திசைகளில் சுற்றிவருவதற்க்காக பணம் பொருள் எல்லாவற்றோடும் புறப்படுகிறார்கள். இருவரது செல்வமும் பாதிவழியிலேயே செலவழிந்து விடுகிறது. ஒருவர் செல்வமெல்லாம் இழந்து வறுமையிலும் நோயிலும் வாடி இறந்து போனார்.மற்றவர் அவரின் சமாதிக்கு ஒரு பெரும் தாராள மக்களுடன் வந்து சேர்கிறார். அந்த சம்மதியில் இருந்து எழுந்த குரல் , எப்படி நீ மட்டும் தப்பினாய் என்று கேட்டது. அதற்கு அவர் நான் கொண்டு சென்ற செல்வமெல்லாம் பாதியில் ஒழிந்தது. நான் அங்கே சேர்த்துவைத்த செல்வங்கள் மட்டுமே என்னை இங்கு வரை அழைத்துவந்து இனியும் அழைத்து செல்லும் என்று கூறினார்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. ( குறள் -39 )
அறம் செய்வதால் வருவதே நிறைந்த செல்வம் , மகிழ்ச்சியின் ஆதாரம். மற்றன எல்லாம் வெறும் பருப்பற்ற கோதுகளே.

திருக்குறள் பக்கம் 02

வாகனங்களை உதாரணப்படுத்தல் என்பது மிக எளியவகை வெளிப்பாட்டுக்கான ஒரு யுக்தி ஆகும். வாகனங்களில் சொகுசு கார் பயணம் தான் மிக அருமையானது. பயணத்தில் இருவகையானோர் பங்குபற்றுகின்றனர். காரை ஓடுபவன் , அருகில் இருப்பவன். இருவர்க்கும் பௌதீக ரீதியில் அருகாமை என்ற ஒற்றுமை இருந்தாலும், மனதளவில் நீண்ட காத தூர இடைவெளி உண்டு. இதை இருநிலைகளிலும் இருந்து அனுபவித்தவர்களுக்கு புரியும். ஓட்டுநர் தனது ஐம்புலன்களையும் அடக்கி பாதுகாப்பு என்ற ஒரே அரணை தன்னை சுற்றி அமைத்து, தரிப்பிடம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். புலன் சிதறினால் கார் சிதறிவிடும், பின்னர் ரத்தம், உயிர் , அடுத்தவன் உடைமை என்று பலதும் சிதறும். எந்த கவனக்கலைப்பானிலும் மாட்டிக்கொள்ளாமல் பயணிக்கவேண்டும். ஓட்டுநர் செய்வது தவம். இன்பமான நாளாக இருந்தாலும் துன்பமான நாளாக ஒரே மனநிலைதான். தவக்கலைப்பு உயிர்ச்சேதம்.

ஆனால் அண்மையில் , ஒரு அடிதூர அருகில் இருக்கும் நபரின் எண்ணங்களும் பார்வைகளும் அப்பிடியே வித்தியாசமானது. அவன் சொர்க்க வாசி. எந்த மனப்பாரமும் இல்லாமல் , தன்னுயிர் இன்னொருவன் கையில் என்ற எண்ணம் கூட இல்லால் – எப்போதாவது நாம் யோசித்ததுண்டா ? , காரின் சொகுசுத்தன்மையையும் உலகின் சுந்தரத்தையும் சமாந்திரமாக ரசித்துகொண்டுவருவான். வீதியில் ஒரு மழலையின் சிரிப்பை கண்டோ அல்லது ஊனமுற்றஒருவர் திருவோட்டோடு அளவைத்தையோ கண்டு அவனின் மனம் சஞ்சலப்படப்போவதில்லை. அப்பிடியே பட்டாலும் நீடித்து இருக்கப்போவதில்லை. ஏன் என்றால் அந்த இருக்கை அப்பிடி. அவன் மேல் ஒரு சுமை கிடையாது.
இருவருக்குமான முரண் சுமை – இது அவர்களின் ஆசனத்தில் தங்கியுள்ளது.
நல்லவழி தீயவழி என்ற பாதைப்பிரிவும் இதை ஒத்ததே.
வாழ்க்கையோடு ஓட்டுனரையும் அருகில் உள்ளவரியும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் உங்கள் ஆசனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியே தீர்மானிக்கிறது என்பது திண்ணம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. ( குறள் 37 )
உன் ஆசனம் உன் வழியில் தங்கியுள்ளது.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 05 – “காவடி”

மனித நாகரீகம் வளர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் – என கருதப்படுவதாக எண்ணுகிறேன், இந்த காலகட்டத்தில்  மானிட மனங்களால் பல வழமைகளின்  அல்லது நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை பின்பற்ற முடியாமல் போகின்றது. இந்த தொடர்ச்சியற்ற போக்கு ஒரு விதத்தில் காலத்தின் தேவைதான். சில வழக்காறுகள் அழிந்து போவதே உசிதம்.
பழையன கழிதல் நாகரீக எழுச்சிக்கான அடிப்படை என்பது எனது சொந்த கருத்து. இதில் பழையது என்பது குறித்துநிற்கும் அளவுகோல் எது என்பதில்தான் நாகரீக எழுச்சி தங்கியுள்ளது. இறந்தகாலம் அல்லது பயன்படுத்தாதவை பழையது என்ற வார்த்தையை அர்த்தப்படுத்தலாம். அந்த வகையில் இறந்தகாலம் கழிய வேண்டுமா? இறந்த காலம் தேவையற்ற ஒன்றா? இறந்த கால அனுபவங்கள் மறக்க வேண்டியவையா? என்ற அடுக்கான கேள்விகள் பழையது என்பது இறந்தகாலம் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றன.

பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை (copycrave.com)

வழமையாக நீங்கள் துவிச்சக்கர வண்டியில் செல்லுவீர்கள் என வைப்போம். உங்கள் நண்பன் வெளியூர் செல்லவேண்டிய காரணத்தினால் அவரின் மோட்டார் சைக்கிளை உங்கள் வீட்டில் வைத்து விட்டு வரும் வரை பாவிக்கவும் அனுமதி   தருகிறார். நீங்கள் இப்பொழுதெல்லாம் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறீர்கள் என்பதற்காக பயன்படுத்தாத உங்கள் துவிச்சக்கர வண்டி பழையதா? துவிச்சக்கர வண்டி பயன்படவில்லை என்று கழித்துவிட்டால் அடுத்த நாள் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
இன்று பயனில்லை என்பதற்க்காக கழித்துவிடுதல் நாளைய தேவை ஒன்றிற்கான விடையினை அழித்துவிடுதல் ஆகும். இதிலிருந்து பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தனது உள்ளடக்கங்கள் அனைத்தையும் தந்து காலியாக இருக்கின்றவை அல்லது பொருந்தாத உள்ளடக்கங்களுடன் உள்ளவை என்று விளிக்கலாம். கடையில் இரண்டு ரூபாய் கொடுத்து இனிப்பு வாங்குகிறோம் , காசு கொடுத்து வாங்கினோமே என்பதற்க்காக இனிப்பின் உறையை யாரும் பத்திரப்படுத்திக் கொள்வதில்லை. இது தான் விடயம் , இனிப்பு என்னும் உள்ளடக்கம் தீர்ந்தவுடன் உறை என்னும் காவி கழிந்து போகின்றது. பழையன கழிதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
இதை முகவுரை என்பதை விட ஒரு பதிவாக எடுத்துக்கொண்டு தலைப்பிற்குள் நுழையலாம்.
கலைகளில் மிகவும் நளினமானது எது என்றால் ஆடற்கலையையே எல்லோரும் உரைப்பர். ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். உணர்ச்சிகளை பலவிதப்படுத்தி வெளிக்காட்டுவர். வெளிப்பாட்டின் உச்சம் நடனமாகவே இருக்கும், இது சந்தமற்ற முறையற்ற கூச்சல் நடனமாக இருந்தாலும் சரி.

ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். (sehernow.in)

எந்த நாட்டார் கலையுமே இலக்கணங்களுக்கோ யாப்புகளுக்கோ வரைமுறைக்குட்படுத்தாமல் வளர்ச்சி கண்டவையே. ஆதிகால மனிதனிடம் மொழி இருக்கவில்லை. இதில் மனிதன் என்பது கவனிக்க வேண்டிய விடயம். அவனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் பதிந்து கொள்ளவும் ஒரு ஊடகம் தேவைப்பட்டிருக்கும். அந்த தேவைப்பாட்டின் விளைவே நடனமாகிறது. அவன் தனது சந்தோஷங்களையும், துக்கங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், பயத்தினையும் ஆடலின் மூலமே வெளிப்படுத்தினான். எத்தனை யுகங்கள் போனாலும் இன்னும் அங்க அசைவில் உண்டாகும் நடனங்கள் தான் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சம். உலகிலே நடமாடாத இடங்களும் இல்லை, மாந்தரும் இல்லை.
அதிலும் முக்கியமாக பயம் என்ற உணர்வின் சிறந்த வெளிப்பட்டு ஊடகம் நடமாகவே இருந்திருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய பரத நாட்டிய நிகழ்வுகளில் பயம்  என்ற நிலையில் தான் அதிக சிறப்பு காணப்படுகிறது. ஆக அன்றும் கடவுளைப்பார்த்து மனிதன் பயந்தான். பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள். சங்க இலக்கிய வரலாறுகள் வெறியாட்டு, துணங்கை , குரவை போன்ற ஆடல் கலைகளை கூறுகின்றன. இதே ஆடல் கலைகள்தான் இன்றைய நாட்டார் நடனங்களாக பெயர் பெறுகின்றன.

பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள் (bhmpics.com)

கிராமிய நடனங்கள் அணையற்ற ஆறு போன்றவை. எந்த இலக்கண எல்லைக்குள்ளும் இல்லாமல் இருப்பதே இதன் சிறப்பாகும். அவற்றின் வளர்ச்சியும் அப்படியே, எந்த வித்துவான்களும் அல்லது சங்கீத லக்ஷணகாரர்களும் அதற்கு அணை கட்டிவிடவில்லை. ஆதி காலத்தில் இருந்ததிலிருந்து இன்றைய காலகட்டத்தை நோக்கிய ஆடற்கலைகளின் வளர்ச்சி வியப்பான ஒன்றாகும், எந்த கட்டுப்பாடும் அற்ற கலை ஒன்று நீடித்து இருத்தல் என்பது அதீத சிறப்பு. அச்சிறப்பை நடனங்கள் பெற்றிருக்கின்றன. நாட்டார் நடனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே உவகை ஊட்டுவனவாக இருக்கின்றமை அதற்கொரு காரணமாகவும் இருக்கலாம்.
கவனிப்பில் பொதுவான நாட்டார் நடனங்களில் காணப்படும் சந்தம் நான்கு அக்ஷர காலம் கொண்ட தாளங்கள் (சதுர்சிரம்) அல்லது மூன்று அக்ஷரகாலம் கொண்ட தாளங்கள் (திரிசிரம்) ஆகவும் மேலும் சில ஏழு அக்ஷரகால தளங்களை (மிசுரம்) கொண்டதாகவும் அமைகின்றன.
நாட்டுப்புற ஆடற்கலைகள் என்ற போர்வைக்குள் காவடி , கரகம் , வசந்தன், கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவை முக்கியமானவை.

காவடி

காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது. (bhmpics.com)

காவடி என்ற சொல்லை காவு + தடி என்ற சொற்களின் சேர்க்கையாக கருதலாம். காவுகின்ற தடி எனபதே காவடியில் பொருள். காவுகின்ற தடி என்றால் வெறும் தடியினை காவுவதா? இல்லை, தடியையும் காவுகின்றோம் அது தடி என்ற நிலையை தாண்டி, அத்தடியில் இருபுறமும் நேர்த்திக்கடன் செய்த பொருட்களை காவி அல்லது மஞ்சள் துணியில் சிறிய பொட்டலமாக கட்டி தொங்கவிட்டு அத்தடி நிற்பதற்கு இரண்டு கால்களை இரு புறமும் அமைத்து ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு வில்போன்ற அமைப்பையுடைய கூடாரம் ஒன்றை உருவாக்கி அதை பட்டால் சுற்றி மூடி கிளி பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து – ஒரு தெய்வீகம் பொருந்திய புனிதப்பொருளாக அந்தஸ்தளிக்கப்படும்.  இது வெறும் தோளிற்கு சுமை என்பதை தாண்டி பிராத்தனைக்காக எடுக்கப்படும் தடி என்ற பொருளில் கையாளப்படுகிறது. காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது.
முன்னைய காலங்களில் வழிபாடு என்பது ஊரளவில் இருந்தாலும் புனித தலங்களை நோக்கிய நடைபயண பாத யாத்திரைகள் புகழ் பெற்று இருந்தன. இந்த பாத யாத்திரைகளை ஊரவர் நேர்த்திக்கடனாக செய்வது வழக்கம். எனது எண்ணப்படி, அந்தக் காலம் பயண போக்குவரத்திற்கு ஊடகங்கள் இல்லாத காலம். நடையையே ஒரே மார்க்கமாக கொண்டிருந்த காலம். பொதுவாக எல்லாரும் வடக்கு புறத்தில் இருந்து சைவர்களுக்கு காலம் காலமாக நம்பிக்கையும் அருளும் செய்துகொண்டிருக்கும் கதிக்காம கந்தனை நோக்கி விரதமிருந்து நேர்த்திசெய்வதற்காக ஊரவர் நேர்த்தி பொட்டலத்தையும் இதர தேவையான பொருள்களையும் சேர்த்து ஒரு தடியில் கட்டி எடுத்து சென்றிருக்கலாம். கால ஓட்டத்தில் சாதிப்பிரிவிற்கு ஏற்றால் போல அந்த தடி அலங்காரங்கள் உருவாகி இருக்கலாம். இதுவே இன்றைய காவடியில் வெளித்தோற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்பது எனது எண்ணம். வழியிலே களைப்பு தெரியாமல் இருக்க அக்காவடியை சில ராக சந்தங்களுடன் நாட்டிய அசைவுகளுடனும் கொண்டு செல்வர். இதுவே பிற்கால காவடிச்சிந்துகளாகும்.

செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார் (dnaindia.com)

காவடியில் பல வகைகள் உண்டு. சேவற் காவடி , மச்சக்காவடி, அன்னக்காவடி, பாற்காவடி / பன்னீர் காவடி, செடிற் காவடி, ஆட்டக்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி என்பன வடக்கில் இருந்துள்ள காவடியின் வகைகளாகும். இதில் முதல் மூன்றுமான  சேவற் காவடி , மச்சக்காவடி , அன்னக்காவடி என்பன தற்கால வழக்கில் இல்லை.
சேவலைப்பிடித்து அதன் தலையை வெட்டி குடத்தினுள் இட்டு அதை தடியில் கட்டி ஆடுவதே சேவற் காவடி. மீன்களைப்பிடித்து குடத்தில் இட்டு ஆடுவது மச்சக்காவடி ஆகும். மச்சக்காவடிக்கு வடக்கு செல்வச்சந்நிதி ஆலயம் மிக பிரசித்தமான ஒன்றாகும். ஒரு காலத்தில் பக்தர்கள் மீன்களை பொரித்து குடத்தில் இட்டு கோவிலுக்கு கொண்டு வருவதாகவும், கோவில் அருகே உள்ள தொண்டமானாறு ஆற்றம்கரை அருகே வரும் போது பொரித்த மீன்கள் உயிர்பெற்று ஆற்றினுள் குதிப்பதாகவும் ஐதீகங்கள் உண்டு. அன்னக்காவடி எடுக்கும் வழக்கம் இன்றைய இலங்கையில் இல்லாவிட்டாலும் முற்காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. தங்களுக்கும்  தங்களை சார்ந்த சந்நியாசிகளுக்கும் உணவை வேண்டி பரதேசிகள் தங்கள் தோள்களில் வெற்று பாத்திரம் ஏந்திய தடியுடன் அன்னம் பெற செல்லல் அன்னக்காவடி எனப்படுகிறது. பால் அல்லது பன்னீர், செம்புகளில்  நிரப்பப்பட்டு தடியில் கட்டப்பட்டு எடுக்கப்படும் காவடியாகும், இதன்போது ஆடுவதில்லை. பொதுவாகவே சிறுவர்கள் இதனை எடுப்பார்கள். செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார். கூடவே வாயின் இரு பக்கத்தாலும் வேலினை அலகு என்ற நாமத்தில் குத்தி கொள்வர். இக்கவடியை இருவர் அல்லது நால்வர் ஒரே ஒழுங்கில் ஆடுவது ஆட்டக்காவடி ஆகும்  பொதுவாகவே வடக்கில் பறைமேளம் மற்றும் உடுக்கு மட்டுமே ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்டது, அனால் இன்று தவில், நாதஸ்வரம் போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.

உடலை வருத்தி பெற்ற பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். (deviantart.net)

ஆட்டக்காவடிக்கு தாளம் மிக முக்கியமானதொன்றாகும். பார்ப்போர் அதனால் உந்தப்பட்டு ஆடுவது வழமை. தூக்குக்காவடி நீண்ட வரலாற்றை கொண்டதல்ல. 1953களில் முதன் முதலாக செல்வசந்நிதியிலேயேதான் இது அரங்கேற்றப்பட்டது. சகடை ஒன்றின் இருபுறமும் இரண்டு மரங்களை நிறுத்துவர். மரங்கள் மிகப்பலமானவையாக இருக்கும். இருமரங்களுக்கும் நடுவே வளை ஒன்றிட்டு அதில் கப்பி இடுவர். காவடி எடுப்பவர் பத்மாசனமிட்டிருக்க அவரின் இரண்டு விலாப்புறமும் இரண்டு பெரிய கொழுக்கி முட்களை குத்துவர். இரண்டு முழங்காலுக்கருகிரும் இரண்டு முட்களை குத்துவர். அதே போன்று பின் பகுதியிலும். ஆறு கயிறுகளையும் சேர்த்து மேற்புறமாக உறிபோல கட்டி கப்பியினூடு செலுத்துவார். காவடி எடுப்பவர் தூக்கில் தொங்குவது போல பத்மாசனத்தில் இருப்பர். இவரை வீதி வீதியாக அழைத்து செல்வார். தூக்கு தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து வெற்றிபெற்றதன் காரணமாக இதை செய்தார் என சொல்லப்படுகிறது. இதே முறையில் அந்த ஆறு முட்களையும் அடியவரை படுக்க வைத்து தோள் தொடை கால் என்பவற்றில் குத்தி ஊர் ஊராக கொண்டு சென்றால் அது பறவைக்காவடிதூக்கு, பறவை காவடிகள் பெண்கள் எடுப்பதில்லை.
இந்த காவடி முறை இன்று வடக்கில் எல்லா கோவில்களிலும் மறக்காமல் மறுக்காமலும் நடைபெற்று வருகின்றது. உடலை வருத்தி பெற்ற  பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். ஆரம்பத்தில் கூறிய பழையன கழிதலுடன் காவடியும் கழிந்து போகாமை காவடியில் சமூக முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றது.
இன்னும் சில நாட்டார் நடனங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

திருக்குறள் பக்கம் 01

நாம் எல்லாரும் தேவைகளுக்கு உட்பட்டவர்கள். தேவைகள் என்றால் நிரந்தர தேவை தற்காலிக தேவை என்று விடலாம். இது வெளிப்படையான வாதம். மறுப்பில்லை. தேவைகளை நான் இப்படி பார்க்கிறேன் அல்லது வகைப்படுத்துகிறேன். உடனடி தேவை ஒன்று காலம் தாழ்த்தி நிறைவேற்றக்கூடிய தேவை மற்றொன்று. உடனடித்தேவைகளை நிறைவேற்றும் ஊடகம் எது என்பதெல்லாம் எமக்கு பொருட்டல்ல. உடனடித்தேவை கால அவகாசத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டியதொன்று. உதாரணமாக என்னிடம் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஒன்று உள்ளது. காரின் நிலை இன்றைய பொருளாதாரத்தை போன்றே. நிற்க மட்டுமே தகுதியுடையது. முன்னேற இல்லை. சில வேளைகளில் நிற்கும் போதே பஞ்சர் ஆகிவிடுவதும் உண்டு. ஒரு முறை என் ஊருக்கு அவசரமாக செல்லவேண்டிய கட்டாயம். அம்பாசிடரை அழுத்தி உதைத்து இழுக்க பண்ணிவிட்டேன். அம்பாசிடர் வேகம் அதீதமாக இருந்தது. தெரிந்தே பயணத்திற்கான நேர தேவையை விட ஒரு மணிநேரம் முன்னதாக ஆயத்தம் ஆகிவிட்டேன். நினைத்தது வழியில் நிறைவேறியது. அம்பாசிடர் உடன் நான் வீதியில் நாதியற்று போய் பஞ்சரான பின் சில்லை தனியாக மாற்றிக்கொண்டு , ஊருக்கு கொஞ்ச நேரம் தாமதமாக போய் சேர்ந்தேன். வழியில் எப்பிடியாவது ஒரு தரமான புதிய கார் வாங்கிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே மெதுவாக செலுத்தியதால் அந்த தாமதம். சரி விடயத்துக்குள் வருவோம் இந்த சந்தர்ப்பத்தில் எது உடனடி தேவை ? எது காலம் தாழ்த்தி செய்யப்படவேண்டிய தேவை ? சில்லை மாற்றவேண்டியது முதலாவது வகை , காரையே மாற்றவேண்டியது இரண்டாம்வகை. சில்லை மாற்றவேண்டிய உடனடித்தேவைக்கு காரை மாற்றியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து கொண்டு உதிரி சக்கரம் எடுக்காமல் வந்திருந்தால் என்ன நிலை. உடனடித்தேவைகளுக்கு நாங்கள் எங்களை தயார்நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிறிதோருக்கு கருத்துக்காக ஒரு உதாரணம். நான் வாழும் இடம் ஒரு பின்தங்கிய கிராமம். நகரத்துக்கோ கடைத்தெருவுக்கோ செல்லவேண்டும் என்றால் பலமணிநேரம் பயணிக்கவேண்டும். நான் ஒரு நோஞ்சான்.நான் தினமும் ஆஸ்துமா குளுசைகள் பாவிப்பவன். என் பொறுப்பின்மை நேற்றோடு மாத்திரைகள் முடிந்ததை நினைவுபடுத்திக்கொண்டு அதை வாங்கவில்லை. இன்று காலை அதிகமாக இழுக்க தொடங்கிவிட்டது. எங்கள் கிராமத்தில் இருக்கும் ஒரேயொரு பார்மசிக்கு என் அப்பாவை அனுப்பி மாத்திரை வாங்கிவரச்சொன்னேன். அவர் வெற்று கையுடன் திரும்பினார். அந்த பார்மசியில் எல்லாமே இருப்பதாகவும் அந்த மாத்திரை மட்டும் முடிந்துவிட்டதாகவும் கூறினார். பின்னர் நான் அயல் கிராம நோஞ்சானான என் நண்பனிடம் அனுப்பி வாங்கிக்கொண்டேன் என்பது வேற கதை.
இந்த இரண்டு கதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு நுட்பமான கருத்துக்களை காவிச்செல்லுகின்றன.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( குறள் 13 )
உன் அவசர தேவையை நிறைவு செய்யாத ஒன்று உலகளவு இருந்தும் நீ பீடிக்கப்படுவாய்.

நாட்குறிப்பு

அகன்று போய்
விரிந்து போய் இருக்கின்ற
வானத்தின் குறிப்புகளை
எழுத்திக்கொள்ளலாம் – என்ற
நம்பிக்கையுடன்
இருட்டு அறையில் நான்
மூடிப்போன நாட்குறிப்புடன்