இருதிணை – ஆழ்கடல் மரபு – அனார் மீக்காயீல் பிரதிகள்

யாத்திரிகன் ஷீத் – மீக்காயீல் – மற்றும் மூன்று சிறுவர்கள் – மீக்காயீல் பிரதி – புறத்திணை

நீல இமைகளைக் கொண்ட ஷீத் தன் விரல்களால் உவர்நீரினை மேவி லைட்கற்களை அள்ள எத்தனித்தான். அவன் உள்ளங்கைகளிரண்டிலுமிருந்து அவிழ்ந்த ரேகைகள் நீண்ட கடற்பாம்புகளைப்போல கடலுக்குளிறங்கின. அவனுடைய கைப்பிடிக்குள் அடைய மறுத்த லைட்கற்கள் வெண்ணுரைக்குள் நழுவி மறைந்துபோயின. இன்னொரு அலைக்கான மீச்சிறு இடைவெளியில் அவை இறந்து பிறந்தன. பௌர்ணமி கடந்த அடுத்த இரவில் நிலவின் வருகை தாமதித்திருந்தது. பருவமழை தொடங்கி எட்டாமிரவு ஷீத்தும் மீக்காயீலும் கடற்கரைக்கு வந்திருக்கின்றனர். ஏழடுக்கு ஆகாயத்தின் பிரதிநிதி நட்சத்திரங்கள் எல்லாமும் அவளின் வருகைக்காக பட்டயங்கட்டி மணம் முடிக்க காத்திருக்கின்றன. காத்திருப்பில் தம் ஒளியிழந்து உதிர்ந்து கடலுக்குள் கலந்த நட்சத்திரங்கள் தான் லைட்கற்கள் என்றான் ஷீத். ஆயிரமாண்டுகளாய் இசைக்கும் நதிகளின் ஓட்டத்தில் கலந்த பளிங்குக் கற்கள் – காலத்தின் அசைவில் தன் ஆகிருதியிழந்து – உருண்டு -தேய்ந்து -அருவமாகி கடற்பரப்பில் உறைகின்றன. ஷீத் காலத்தின் எச்சத்தைத் திரட்டி பளிங்குக் கிண்ணமொன்று வனைந்தான். பின்னொரு காலத்தில் மீக்காயீல் அண்டத்தின் எல்லா நட்சத்திரங்களையும் அடைக்கபோகும் கிண்ணமிதுவென்பதையும் ஷீத் அறியாமலில்லை. பெண்ணுருக்கொண்ட கிண்ணத்தை வனைந்துமுடித்த கணம் ஆகாயத்தில் முதற்சாம நிலா தோன்றிற்று. ஷீத்தின் இரு கண்களும் அந்நிலவொளியில் ஒளிர்ந்ததை மீக்காயீல் அருகில் நின்று அவதானித்தான். நிலவின் ஒளி ஷீத்தின் கண்களிருந்து பெறப்பட்டதாகவே அவன் நம்புகிறான். அவளின் வருகையின் பின்னருங்கூட நட்சத்திரங்களின் உதிர்வு நின்றபாடில்லை. அவை நிலவினால் நிராகரிக்கப்பட்டவை. தாம் வானத்திலிருக்க தகுதியற்றவை என்று கடலுக்குள் உதிர்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன. அலைகளில் மிதந்து கரையில் புதைந்து ஒளியை இழக்கின்றன. ஷீத் கரையிலிருந்து அவற்றை அள்ளி மீண்டும் ஆகாயத்திற்கு தெளிக்கவே விரும்புகிறான். பளிங்குக்கிண்ணமும் அதற்குத்தான்.

 

இரண்டாம் சாமம் நெருங்கிற்று. நட்சத்திரங்களின் உதிர்வும் முற்றாக அற்றுப்போனது. ஷீத் கிண்ணம் நிறைந்த லைட்கற்களுடன் என்னைப் பார்த்தான். அவை சதைப்பற்றான நத்தைகளாகிக் கிடந்தன. உவர்நீரை உறிஞ்சி தம்முடலை பொன்னிறமாய் ஒளிர்த்துக்கொண்டு ஒன்றன்மீது ஒன்று அழுத்தி அணைத்தபடி ஊர்ந்தன. பொன்னொளியில் கிறங்கிப்போயிருந்த மீக்காயீல் தனது இரண்டு இறக்கைகளையும் அகல விரித்தான். ஒரு பெரும் புயலின் ஆக்ரோஷத்தோடு உலகளவு பரந்த அவ்விறக்கைகள் இரண்டும் காற்றில் நிலைத்து நின்றன. மீக்காயீலின் ஒவ்வொரு இதயத்துடிப்பிலும் வானத்தின் நிறம் மாறியது. ஷீத் தன் விரல்களால் மலரிதழொன்றை அவிழ்ப்பதைப்போல அப்பெரிய இறக்கைகளிலிருந்து இறகுகள் இரண்டினை கொய்தெடுத்தான். அவற்றை அப்பெண்ணுருவ பளிங்குக் கிண்ணத்தின் வாளிப்பான முதுகினில் வருட கிண்ணம் உயிர்பெற்றது. ஷீத்தின் கைகளிலிருந்து நழுவி அப்பெண் பாலி என்ற பெயர்பெற்று வானத்தை நோக்கி ஆர்ப்பரித்தவாறு பறந்தாள். பின்னாளில் பாலியே நட்சத்திரங்களின் அரசியுமானாள்.

 

பார்வைக்கெட்டுந் தூரத்தில் கடல் நடுவே ஒளிக்குளத்தை உருவாக்கிற்று நிலா. வட்டமான ஒளிக்குளம் தெப்பம் ஒன்றினைப்போல அசைந்துகொண்டிருந்தது. ஷீத் அதைக் கடலின் இதயம் என்றான். கடலின் நடுவே பாற்குடம் நிரம்பியிருப்பதைப்போலவும் மீக்காயீலுக்கு விளங்கியது. அவ்வொளிக்குளத்திற்குள் பெருங்கடலின் நீரனைத்தும் ஒடுங்கிச் சேர்ந்தன. கடல் உள்வாங்கிற்று. எல்லையற்ற பெருவிரிப்பைப் போன்ற கடல் கசங்கி ஒளிக்குளத்திற்குள் படிந்து கொண்டிருக்க கிராமத்துச் சிறுவர்கள் மூவர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் லைட்கற்களை பொறுக்கிச் சேர்க்க நேர்த்தியாக சீவப்பட்ட அரைத்தேங்காயோடு வைத்திருந்தார்கள். அவர்களின் மெல்லிய விரல்களால் நுரைத்தொதுங்கும் சிறிய அலைகளைத் துழாவி ஏமாற்றமடைந்தனர். ஈரமண்ணைத்தவிர அவர்களால் வேறொன்றையும் எடுக்கமுடியாமற் போக ஷீத்தின் முன் வந்துநின்றார்கள். மீக்காயீல் அச்சிறுவர்களின் இயலாமையால் நரைத்துப்போன அவர்களின் இமைகளைப் பார்க்கிறான். கிராமத்துக் கிணறுகள் முழுதும் அவர்கள் சேர்த்துவைத்த லைட்கற்களின் ஒளி – இனி மங்கிக்கொண்டு போகப்போவதையிட்டு அவர்கள் வருந்தி நின்றார்கள். ஒவ்வொரு இரண்டாஞ் சாமமும் அவர்கள் சிரட்டை நிறைய லைட்கற்களைச் சேர்த்து ஊர்க்கிணறுகள் நெடுக ஒவ்வொன்றாய்த் தூவி ஒளி பொருத்தி வந்தார்கள். அவ்வொளியிற்தான் கிராமத்துப் பெண்கள் அனைவரினதும் நகங்களும் மின்னுவதாயும் ஆண்களின் இமைகள் நிறமடைவதாயும் அச்சிறுவர்கள் நம்பினார்கள். ஷீத்தும் மீக்காயீலும் அவர்களின் நம்பிக்கையை பாழாக்க விரும்பவில்லை. உண்மையில் அம்மூவரின் இமைகளைத் தவிர இருட்டில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளாய் கிராமத்து ஆண்களின் இமைகளும் மின்மினிகளாய் பெண்களின் நகங்களும் பெருவெளியில் அசைந்துகொண்டிருந்தன. மூவரில் இளையவனான சிறுவன் மீக்காயீலைப் பார்த்து கண்களைக் கசக்கினான். தன் தங்கையின் மினுமினுப்பான விரல் நகங்களை இனி எப்போதும் பார்க்கவே முடியாது என்று நம்பி அழத்தொடங்கினான். அவன் கண்ணீர்த்துளிகள் அலைகளின் மேல் விழுந்து – ஒளி பெற்று – மீன்களாய்ப் பாடிக்கொண்டே ஒளிக்குளத்திற்குள் விரைந்தன. அவை ஷீத் அனுப்பிய செய்திகளை உடலிற்சுமந்து சென்றன. சிறுவர்கள் கவலையை மறந்து பாடிக்கொண்டு விரையும் கண்ணீர்மீன்களை பார்த்துகொண்டிருந்தார்கள். அழுதுகொண்டிருந்த சிறுவன் அலைக்குள் பாய்ந்து அம்மீன் ஒன்றினை பிடிக்க எத்தணித்து முகம் முழுக்க மணற்துமிக்கைகளோடு எழுந்தான். அவனது முகம் நட்சத்திர மீனொன்றைப்போல விகாரமாய்த் தெரிய ஷீத் பொத்தென்று சிரித்தான். ஷீத்தின் சிரிப்பில் வானில் நின்ற நிலா பவளப்பற்களை காட்டிச் சிரிக்க, ஒளிக்குளம் கலைந்தது. படிகமாயிருந்த ஒளிக்குழம்புகள் ஒரு ஊற்றாய் கரைக்கு படையெடுத்தன. வெள்ளி நதியொன்றினைப்போல அவை வளைந்து நெளிந்து எம்மை நோக்கி வந்தன. அவை லைட்கற்களாய் நிரம்பிப் பெருகின.

 

யாத்திரிகன் ஷீத் – நீல இமைகள் ஒளிர்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்க சிறுவர்கள் சிரட்டைக்குள் லைட்கற்களை நிரப்பினர். அலைகளால் நிரப்ப முடியாத பெலத்த காற்தடயங்கள் ஆறு மணற்பரப்பில் பதிய கிணறுகளை நிரப்பும் ஆசையுடன் சிறுவர்கள் கிராமத்திற்குள் நடந்தார்கள். உவர் காற்று மெல்லிய இழையாய்ப் பிணைய மீக்காயீல் ஷீத்தின் இடது உள்ளங்கையை பற்றினான். ஒளிக்குளம் முழுதாய் கரைந்துபோனது. கடைச்சிறுவன் தன் தங்கையின் விரல்கள் அழகின் ஒளியாய் மினுங்கப்போவதை எண்ணி பாடிக்கொண்டே நடந்தான்.

 

பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னி – அனார் பிரதி – அகத்திணை

கடற்கன்னி பாடுவதை   யார் கேட்டிருக்கிறீர்கள்  அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல் இருகரைகளில் எதிரொலித்து துறைமுகங்களைத் தாண்டி விழுவதை அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி மதுநெடியுடன் பிதற்றுகிறான்

கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன கரைமணலில் சிறுமிகளின்  மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக

நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில் மாலுமிகளின் தனியறைகளில் கடற்கன்னியின் வாசனை வியாபித்து  திரைச்சீலைகள் படபடக்கின்றன

அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும்  மீன்குஞ்சுப் பட்டாளங்கள்  பிரயாசையுடன் பின்தொடர்கின்றன

அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள் நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன


கற்படுக்கைகளிடையே சுழியோடிகள் அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு  எடுத்துச் செல்கின்றார்கள் நள்ளிரவில் கடற்கன்னி மேகங்களை வேட்டையாடுகிறாள் அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே பதுக்கி வைத்து ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்

சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்துகொண்டு நீருக்குள் நழுவும் அற்புதத்தை தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற கருங்கற்பாறைகள்தம்மை அறியாமலேயே  உருகிக்கொண்டிருக்கின்றன

உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது


மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம் கடற்கன்னியின் பெயரைத்தான் என மலைவாசிகள் நம்புகின்றார்கள்


புராதனகால கடல் அரக்கனின் தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே பருவகாலங்களை அருளும் கடற்கன்னி ஒவ்வொரு கடலினிலும்  நீந்திக் கொண்டே இருக்கிறாள் பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி