சுடர்.

கடிதத்தை நீட்டிய போது அவன் வியப்படையவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டு வழமையான தனது கறுப்பும் சாம்பலும் கலந்த சீருடையை கொடியிலிருந்து எடுத்து இஸ்திரி போடும் பெட்டி உள்ள மேசைக்கு அருகில் நீளமாக இருந்த வரிசையில் அமர்ந்தான். சுற்றியிருந்த எல்லாருமே ஒவ்வொரு கையடக்க தொலைபேசிகளை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் முகங்களும்  தொலைபேசி வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஒருத்தன் வேகமாக இரண்டு கட்டை விரல்களையும் திரையில் அமத்திகொண்டிருந்தான். இன்னொருத்தன் தொலைபேசியை கிடையாக மடியில் வைத்து யாருடைய பேட்டியோ அல்லது செய்தியோ பார்த்துகொண்டிருந்தான். பெரும்பாலனவர்கள் கைகளில் நவீனமான தொலைபேசிகளையே வைத்திருந்தார்கள். ஒருத்தன் கையில் மூடிவைத்திருந்த தொலைபேசியின் திரை விட்டு விட்டு மின்னியது. அதைப்பார்த்த போது அவனுக்கு சிறிய வயதில் கோவில் திருவிழாக்களின்  வண்ண விளக்குகளின் ஞாபகத்தில் வந்தது. அப்பாவின் கையையும் அம்மாவின் கையையும் பிடித்து தொங்கியபடியே பார்த்து முடித்த தேர் திருவிழாவும் அடுத்த நாள் தீர்த்தத்திற்கு வந்திருந்த அன்றைய பிரபல வழக்கறிஞ்சறின் மனைவிக்காக வைத்திருந்த குண்டில் அவன் அம்மா அகப்பட்டு இறந்து போனதையும் அந்த மின்னும் ஒளியின் பின்னணியில் மனம் படம் போட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதிரைகளில் இருந்தபடி தங்களின் அம்மாவிடமோ அப்பவிடமோ சகோதரங்களிடமோ மனைவியிடமோ உறவுகளில் யாரவது ஒருவருடனோ கதைத்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு நாள் பயணமும் அடுத்த நாளின் விடிவை நிச்சயிக்க முடியாததாகவே இருக்கும். அவனோடு சேர்த்து வெகு சிலர் மட்டுமே இன்னும் பழைய நோக்கியாவை வைத்து காலம் தள்ளுகிறார்கள்.
மகிழன் தரம் ஆறு மட்டுமே படித்திருக்கிறான். அம்மா குண்டு வெடிப்பில் இறந்த பின்னர் தனது தந்தையுடன் தோட்டவேலைகளுக்கு போய்க்கொண்டிருந்தான். இருபது வயதுகளை அவன் நெருங்கும் போது மெலிந்த உயரமான தோற்றத்தையும் சுறுசுறுப்பான போக்கையும்  கொண்டிருந்தான். அவனின் கண்களில் யாரிடமும் இல்லாத தனிமை எப்பொழும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அதற்காக அவன் தனிமையில் இருப்பவன் என்று சொல்லி விடமுடியாது. அவனுக்கென நண்பர்கள்  இருந்தார்கள். அவனுடனே தரம் ஆறு மட்டும் படித்து பின்னர் சாதாரண தரம் வரை படித்த சுகந்தன் அவனுடைய நல்ல நண்பன். காலையிலும் மாலையிலும் பாத்திகளுக்கு தண்ணீர் கட்டும் வேளைகளையும் தவிர்த்து மற்றைய பொழுதை சுகந்தனுடனே கழித்து வந்தான். சுகந்தன் தனக்கென ஒரு சிறிய சாப்பாட்டு கடை வைத்திருந்தான். உரிமையாளனும் ஊழியனும் அவனே. சுகந்தனுக்கு ஒத்தாசையாகவும் தனது பொழுதை போக்கவும் சாப்பாட்டு கடையை மகிழன் அணுகினான். அங்கிருக்கும் பணிசையும் டீயையும் காலை உணவாகவும் பின்னேரம் சுகந்தன் போடுகின்ற சுடச் சுட அப்பத்தை இரவுக்கு தனக்கும் அப்பாவுக்கும் உணவாகவும் கட்டிக்கொண்டு போவான். மத்தியானங்களில் பெரும்பாலும் அப்பாவுடனே வீட்டில் சோறும் ஒரு கறியும் வைத்து இருவருமாக சாப்பிடுவார்கள். அப்பாவிற்கு வயதாவதை அவரின் சாப்பாடு மகிழனுக்கு காட்டிக்கொண்டே இருந்தது. சுகந்தனுடன் கதைக்கும் போதெல்லாம் அப்பாவையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளத்தக்க வேலை ஒன்றில் வெகு சீக்கிரம் சேர்ந்தாகவேண்டும் என்று கூறுவான். சுகந்தனுக்கும் ஒரு சத பிரயோசனம் இல்லாத சாப்பாட்டு கடையை மூடிவிட்டு நிரந்தர தொழில் ஒன்றில் சேரவேண்டும் என்று ஆசை இருந்தது. இருவரும் பலதடவைகள் வேலை வாய்ப்புகள் பற்றி பேசிக்கொள்வார்கள்.ஒரு தடவை மத்தியான நேரத்தில் மகிழன் பேச்சை தொடங்கினான்.
“ அடேய் , இண்டைக்கு காலம அப்பா காணிண்ட மூலையில இருந்த மரக்குந்து ஒண்ட வெட்ட கோடரியால ஒன்கியிருக்காரு. அது குந்துல பட்டு தெறிச்சு அப்பாட முழங்காலுக்கு கீழ நேர வந்து அடிச்சிட்டு. அவர் அய்யோ எண்டு கத்தேக்க தான் நான் பாத்தன். காலில பெரிய வீக்கம். பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போவம் எண்டா வேணாம் எண்டுட்டார்.”
“பேயா நீ எல்லோ கொண்டுபோயிருக்கணும், எலும்பு கிலும்பு முறின்சிட்டா என்ன செய்வா. “
“நான் எவளவோ கேட்டுட்டன்டா. அவர் வரவே மாட்டன் எண்டுட்டார். போய் ஏதோ இல குல எடுத்து கட்டி வச்சிருக்கார். “
“ அவருக்கும் அறுபதுக்கு மேல ஆயிடிச்சு, இனியும் கொத்தி குனிச்சு வேல செய்ய ஏலுமா? “
“என்னடா செய்வம் ? எனக்கெண்டா ஒண்டுமா விளங்கல”
“ பேசாம இயக்கத்தோட போய்டுவமாடா?”
“ உனக்கென விசரா, ஒரு கொஞ்ச காசும் வராது. ஆமியோட சேந்தா மாசம் மாசம் காசாவது வரும்”
“அதுக்கு உங்க அப்பா ஓமாம ? உன்ன அடிச்சே கொண்டு போடுவார் “
‘இனியும் பொறுக்க ஏலதுடா”
இருவருக்குமான  உரையாடலை நீட்டிக்கொள்ளாமல் மகிழன் எழுந்தான். மத்தியான சாப்பாட்டிற்கு வீட்டை நோக்கி புறபட்டான்.
மகிழன் தன்னுடன் கதைத்த வார்த்தைகள் அவனுக்கு உறுத்திக்கொண்டு இருந்தது. ஆமியில் சேர்வது என்னவோ சரியான வழிமுறைதான், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? இயக்கத்திற்கு போவது தானே வீரம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் தமிழுக்காய் இறப்பது தானே சிறப்பு. இங்கு வாண்டுகளில் இருந்து வயதானார்கள் வரை போராடுகிறார்களே. நமக்கு என்ன குறைச்சல். பக்கத்து வீட்டு ராஜன் வயது பத்தொன்பது தான். பதினேழு வயதில் இயக்கத்துக்கு போனான். இப்போது தனக்கென ஒரு அணியை வழிநடத்தில் செல்கிறான். அவனின் தாத்தா பாட்டி அப்பா அம்மா எல்லோரும் எவ்வளவு பெருமையாக பேசிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு வீரனாக அல்லவா இருக்க வேண்டும். உடல் முழுக்க சீருடையும் தலையில் கவசமும் மார்பில் கவசமும் கையில் உயர் ரக துப்பாக்கியும் கால்களில் பூட்சும் இடுப்பு பட்டியில் எறிவெடிகளும். ஒரு ஐந்து பேரை கூட்டிக்கொண்டு காட்டின் வழியே போர்டரை அடைந்து ஆமியின் தளம் ஒன்றை வெடிக்க செய்தால் எவ்வளவு மதிப்பு மரியாதை. வெடிப்பில் அங்கேயே இறந்தாலும் பறுவாயில்லை. பெயர் சுகந்தன் இல்லை! கப்டன் சுகந்தன்.
“தம்பி ஒரு டீ “
கதிரையில் அண்ணாந்து கிடந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். வாயிலிருந்து வழிந்திருந்த வீணீரை துடைத்து சின்க் அருகில் போய் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக்கொண்டான். அருகிலிருந்த கண்ணாடி குவளைக்குள் தண்ணீரை நிரப்பி ஒரு அலசு அலசி சின்க்இற்குள் ஊற்றி விட்டு பால்மா பெட்டியை திறந்தான்.
அப்போது சண்டை பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை. ஊரில் இருந்த பல குடியினர் ஊரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டை தொடங்கபோவதை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு பக்கத்தாலும் பெரும் நெருக்கடி உருவாகிவிடும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஒரு பக்கம் ஆமி, மற்றப்பக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் சின்ன சின்ன குழுக்கள். வயது பால் பேதமின்றி தத்தம் அணிக்கு பலம் சேர்க்கும் ஆட்சேகரிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் எல்லோரும் இயக்கபக்கம் தான். எல்லோருக்குமே இயக்கம் வெல்லவேண்டும் தனி தேசியம் வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. அதற்காக குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் துப்பாக்கி ஏந்திய குடும்பமும் இருந்தது. இப்போது இல்லை. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இயக்கத்தை மதமாகவும் மொழியாகவும் செயலாகவும் சொல்லிகொடுத்தே வளர்த்து விட்டார்கள்.
வெயிலுக்குள் சென்றவனின் உச்சந்தலையில் சூடு பொக்கென இறங்கியது. போனதும் செருப்பை வீட்டு வாசலில் சுழற்றி விட்டு வெறுந் தரையில் கையிரண்டையும் தலைக்கு முட்டு கொடுத்து மல்லாக்காகப்படுத்தான். அப்பா சாப்பாட்டை பற்றி கேட்ட போது காலம் தாழ்த்தி சாப்பிடுவதாக சொல்லி விட்டான். அப்பா ஒரு காலை கதிரையில் வைத்து மட்டையால் விசிக்கியபடி சாய்ந்திருந்தார். வீடு முழுக்க புழுக்கம்.
“ அப்பா ஒரு பேன் வாங்கணும்”
அப்பா ஒண்டுமே சொல்ல வில்லை. விசிக்கி கொண்டே இருந்தார். மழையே இல்லாத வறண்ட காலநிலையால் வயலாலும் தோட்டதாலும் இலாபம் கிடையாது. இரண்டு மாதத்திற்கு முதல் விற்ற கெளப்பியால் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்திற்கு அதை வைத்து சமாளித்து விடலாம். அதற்கு பிறகு என்ன செய்வது? எங்காவது கூலி வேலை தான் செய்ய வேண்டும். வயதும் ஆகிவிட்டது. இனி எங்கே கூலி வேலைக்கு கூப்பிட போகிறார்கள். கூப்பிட்டாலும் எவ்வளவு நேரம் வேலை செய்ய முடியும். பேசாமல் இருக்கின்ற ஒரு தோட்டக்காணியை விற்று விடவேண்டியது தான். வேறு வழியில்லை. விற்று விட்டு எங்கேயும் ஒரு சிங்கள குடியேற்றமாய்ப்போய் இருந்து விட வேண்டியது தான். மகிழனுக்கு ஒரு சிறிய வேலையை எடுத்து குடுக்க வேண்டும். விற்று வருகின்ற பணத்தில் எப்படியும் இரண்டு வருடங்கள் தள்ளி விடலாம். அப்புறம் மகிழன் பார்த்து கொள்வான். அவன் என்ன சின்ன பொடியனா?
“ அப்பா நான் வேலைக்கு போகணும். உங்களுக்கும் உடம்புக்கு ஏலாம வந்திட்டு. இனி நீங்க கஷ்டப்பட முடியாது. நான் போறன், எங்கயாவது ஏதோ ஒரு வேலை பாக்கிறன்.”
அவர் இதற்கும் பதில் அளிக்க வில்லை. அவர் மனதில் நினைத்த எதையும் காட்டிக்கொள்ளாமல் மட்டையை  இன்னும் வேகமாக விசுக்கிகொண்டிருந்தார்.
பின்னேரம் மகிழன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சுகந்தனின் கடைக்கு போய் டீ ஒன்றை போட்டன். மேசைக்கு எடுத்துக்கொண்டுவந்து சுகந்தனுக்கு ஒன்று தனக்கு ஒன்றாக பிரித்து தனித்தனி கண்ணாடி குவளைக்குள் ஊற்றிவிட்டு காத்திருந்தான். சுகந்தன் எல்லாம் முடியும் வரை பாத்துகொண்டிருந்துவிட்டு எழுந்து வந்து மகிழனின் எதிரில் அமர்ந்தான். இருவரும் பேசிக்கொள்ளாமல் டீயை குடித்தார்கள். ஒவ்வொரு இழுவையின் பின்னும் ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொள்வது போல பார்த்தார்கள். மகிழனின் பார்வை சுகந்தனுக்கு கவலையின் குறியீடாகவே தெரிந்தது. சுகந்தனின் பார்வையை மகிழன் அறிந்து கொள்ளுமளவு நிதானத்தில் இருக்கவில்லை.
ஒவ்வொரு கைத்தொலைபேசியும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பதாக அவனுக்கு தோன்றியது. தனக்கு அருகிலும் முன்னாலும் இருந்தவனுக்கு அழைப்பு வர அவன் பெரு மகிழ்ச்சி பிரவாகத்தில்  எழுந்து யன்னல் ஓரத்தில் இருந்த இரும்பு வலைகளில் கை விரல்களை கோர்த்துக்கொண்டு கதைக்க தொடங்கினான். மகிழன் எழுந்து தனது சீருடையை எடுத்து மேசையில் வைத்து இஸ்திரி பெட்டியின் சூட்டை கூட்டி இழுக்க தொடங்கினான். கொலர், தோள், கை, வயிறு என்று ஒவ்வொன்றாக இழுக்கப்பட்டு கசங்கியிருந்த பகுதியெல்லாம் சீர் செய்யப்பட்டது. அடுத்து காற்சட்டை , இன்னும் இஸ்திரி பெட்டியின் சூட்டை அதிகரித்தான். முன்னதைப்போல இல்லாமல் வேகமாக இரண்டு இழுவை இழுத்துக்கொண்டு சூட்டினை வழமையான நிலைக்கு திருப்பி விட்டு அவனின் அறைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் தான் சுகந்தன் அந்த கடிதத்தை நீட்டினான். மற்றவர்களைப்போல அவனுக்கு யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை.அவன் அவசரப்படாமல் அந்த கடித்ததை வாங்கி இஸ்திரி போட்டு கொண்டுவந்த சீருடைகளோடு கையில் ஏந்திக்கொண்டு சுகந்தனோடு அவர்களின் அறைக்கு சென்றான். நேரம் ஆறைத்தாண்டி விட்டது.
சுகந்தன் ஏற்கனவே சீருடை உடுத்தவனாக நின்றான். இன்னும் பூட்ஸ் போடவில்லை. அதற்குள் மகிழனுக்கு கடிதம் வந்திருப்பதாக அறிவிக்கப்பட , மகிழன் குளித்துகொண்டிருந்தான். அதனால் சுகந்தானே சென்று கையொப்பம் இட்டு கடிதத்தை வாங்கிகொண்டான். இது ஒன்றும் முதல் முறையல்ல. மகிழன் அப்பாவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்து மாதா மாதம் அப்பா மறக்காமல் கடிதம் போடுவார். பதிலுக்கு இவனும் எழுதுவான். இடைக்கிடை தொலைபேசியில் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொள்வார்கள். கடிதம் எழுதுவது வீண்வேலைதானே என்று மகிழன் அப்பாவிடம் சொல்லும் போதெல்லாம், தொலைபேசி எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி விடாது. ஆனால் எழுத்துக்கள் அப்படியில்லை, என்று உறுதியாக கடிதங்கள் எழுதுவதில் இருந்தார். மகிழனுக்கு அப்பாவின் கையெழுத்தை கடிதத்தில் பார்க்கும் போதெல்லாம் அவர் அருகில் இருப்பது போல இருக்கும். அதனால் அவனும் கடிதங்களை ஒரு வகையில் விரும்பினான்.அப்பாவின் கையெழுத்துக்கள் அவரைப்போலவே வர வர நோய்வாய்ப்பட்டுக்கொண்டே வந்தன. மகிழன் சீருடையை மேசையின் மீது வைத்து விட்டு, போட்டிருந்த காற்சட்டையை கழற்றி உள்ளாடைகளையும் சீருடையையும் அணிந்தான். அவனின் மெல்லிய உடம்பிற்கு சீருடை தொழ தொழ என்றிருந்தது. அவனின் சகபாடிகள் எல்லோரும் இதை பலமுறை கிண்டல் செய்துள்ளார்கள்.
அவன் சீருடையில் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துகொண்டான். கண்ணாடியில் சீருடையின் மங்கிய விம்பம் பிரதிபலித்தது. அதற்குள் சுகந்தன் பூட்ஸ் போட்டுக்கொண்டு வந்து விட்டான். சுகந்தன் ஆரம்பித்தான்,
“ என்ன மாப்பிள்ளை மாரி நிக்கிற, அடுத்த வருஷம் எப்பிடியும் புது மாப்பிளை தானே, இந்த கடிதமும் அது சம்பந்தமா தான் இருக்கும்.”
“ அப்பிடித்தான் நினைக்கிறன், இந்த ஏலாதவயசிலையும் அப்பா பண்ற வேலைய பாரடா”
“அப்பா எண்டா அப்பிடித்தான்”
“அதுக்காக சேந்த நாலு மாசத்திலேயா ?”
“வயசுக்கு தெரியுமா வேலை பத்தி “
“மனசுக்கு தெரியுமே “
தனது கட்டிலின் கீழிருந்த பூட்சை எடுத்து சொக்சால் பூட்ஸின் மேல்பக்கங்களை தட்டி விட்டு சொக்சை இரண்டு காலிலும் போட்டு விட்டான் மகிழன் பேசியபடியே.
“அப்பா தனிய தான் இருக்கார் , சமச்சு கொடுக்க ஒருத்தி வேணும் அதுக்காகத்தான் ஒம் என்டன்”
“சரி கடிதத்த பிரி “
“இல்ல இருக்கட்டும் வந்து பாப்பம் , நேரமாச்சு . எப்பிடியும் ஒருத்திய முடிவு பண்ணிட்டு தான் கடிதத்த போட்டிப்பார், வேணுமெண்டால் பாரன்” என்று சிரித்துக்கொண்டே கட்டிலிருந்து எழுந்து நிலத்தில் ஒரு துள்ளு துள்ளி மகிழன் எழுந்து நின்றான்.
சுகந்தனுக்கு இது புதுசாக இருந்தது.
மகிழனின் அப்பா மேசையில் அரசாங்க முத்திரை குத்திய சில கடதாசிகளை வைத்திருந்தது பற்றி அப்பாவிடம் முகிழன் எதுவும் பெரிதாக கேட்டு கொள்ளவில்லை. அந்த தாள்கள் வீட்டினதும் தோட்ட காணியினதும் என்று அவனால் ஊகித்துகொள்ளக்கூடியதாகஇருந்தது. அப்பா, முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார் என்பது மட்டுமல்ல மகிழனுக்கும் ஒரு காரணத்தேவை இருந்தது. அடுத்தநாளே பத்திரங்கள் ஒப்பமிடப்பட்டது. வந்திருந்தவர்களுக்கு டீயினை சுகந்தன் கடையிருந்து மகிழன் வாங்கிகொண்டுவந்ததை பார்த்தவர்கள் வீட்டிற்க்கு ஒரு பெண்ணாவது வேண்டும் என்று அப்பாவிற்கு சாடமாடையாக சொன்னார்கள். மகிழனின் அப்பாவிற்கு அது முக்கிய சொற்களாக பட்டது. காணியிலிருந்து இருவரும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கிளம்பிவிட்டர்கள். சுகந்தன் தான் கட்டில் அலமாரி எடுத்து ட்ரக்டரில் ஏற்றுவதற்கு ஒத்தாசையாக நின்றான்.அவனுக்கு மகிழன் எந்த தேசம் போனாலும் டீ குடிக்க அவனின் காடைக்கு வந்தே தீருவான் என்று ஆழமான நம்பிக்கை வைத்திருந்தான். சுகந்தன் மிக நிதானமாக சாமான்களை பெட்டியில் அடுக்குவதிலும் பின்னர் புது வீட்டில் இறக்கி ஒழுங்குபடுத்துவதிலும் மும்முரமாக வேலை செய்தான். மகிழனுக்குத் தான் சங்கடமாக இருந்தது, அவனை விட்டு பிரிந்து போகபோகின்றோமே என்று மனதுக்குள்ளே கவலைபட்டுக்கொண்டான். எல்லாக்கவலையும் இருவரும் கூம்இற்கு போகும் மட்டும் தான் இருந்தது.
கூம் ஒரு மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம். தனியார் நிறுவனம் என்றால் சம்பளம் அதிகம். வேலைப்பழு அதிகம் தான் ஆனால் அதற்கு ஏற்ற சம்பளம் ஆகிற்றே. கூம் இலங்கையில் ஆரம்பித்து சில வாரங்களே என்பதால் பெரும் திரளான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அவர்களுக்குள் மகிழனும் சுகந்தனும் இணைந்து கொண்டார்கள். சுகந்தன் அந்த டீ கடையை மூடிவிட்டான். முதல் இரண்டு மாதம் பயிற்சி, பின்னர் வேலை.இப்போது நான்கு மாதங்களாகி விட்டது. மகிழனின் அப்பா அவனுக்கு பெண் பார்க்க தொடங்கியும் ஆறு மாதங்கள் ஆகின்றது.
கூமைபற்றி இருவரும் ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களது எண்ணங்கள் எல்லாம் இயக்கத்திலும் ஆமியிலும் மட்டுமே இருந்தன. இளைஞர்கள் பெரும்பாலானோர் இயக்கதிற்க்கே சென்று கொண்டிருந்தனர். வெகு சிலர் வேறு தனியார் குழுக்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். எழுந்து நடக்க தெரிந்தால் போதும் ஏதாவது ஒரு படையில் சேர்ந்துகொள்ள. மகிழனின் அப்பாவிற்கு சண்டைக்குள் மகனை விட விருப்பமே இல்லை. எங்காவது ஒரு சிறிய வியபாரமாவது அவன் செய்தால் போதும் என்று நினைத்துகொண்டிருந்தார். அவ்வேளை தான் இந்த கூமிற்கு ஆக்கள் சேர்க்கும் நடவடிக்கை மெதுவாக தொடங்கியது. மூவருக்கும் கூம் பாதுகாப்பானதாக தோன்றியது.
இருவரும் ஒன்றாகவே அவர்களின் வீடுகளுக்கு திரும்புவார்கள். இந்த ஆறு மாதங்களில் இருவரும் மூன்றுமுறைதான் வீடுகளுக்கு போயிருக்கிறார்கள். மூன்று முறை தான் அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இன்று நான்காவது முறை.
அவசரம் அவசரமாக அறைக்கு வந்த மகிழனும் சுகந்தனும் அவர்களது நீண்ட காலுறையை கழற்றி கட்டிலின் கீழே போட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளையும் பேஸ்ட் பிரஷ் சோப் என்பவற்றையும் பைகளுக்குள் உருட்டி திணித்தனர். எல்லா அறைகளிலும் இந்த நிகழ்ச்சி சமாந்தரமாக நடந்துகொண்டிருந்தது. மேசையில் இருந்த கைபேசியையும் வண்டி திறப்பையும் மகிழன் எடுத்துகொண்டு சுகந்தனை வேகப்படுத்தினான்.
“ எடுடா எடுடா ஏற்கனவே நேரமாகீற்று “
“அப்பவே சொன்னான் தானே, கடைல மினகடதா எண்டு “
“என்னடா செய்ய வாங்க வேண்டியதா போயிற்று”
“ சரி கதைய குடுக்காம இரு, லெட்டர் எடுத்திட்டியா ?”
“ இல்லடா பாத்தியா , இன்னும் பிரிக்க கூட இல்ல “
மகிழன் அவசரம் அவசரமாக அவனின் மடித்து வைக்கபட்டிருந்த உடைகளை கிளறினான்.
“ எடுத்திட்டியா ?”
“ இல்லடா நீ வெளிக்கிட்டியா ?”
“ ஓமடா “
“அப்ப வா போவம், எப்பிடியும் இண்டைக்கு அவர நேர்ல பாக்க தானே போரம் “
“சரி சாவி எடுத்தியா “
மகிழன் திறப்பை உயர்த்திக்காட்ட சுகந்தன் சிரித்துக்கொண்டே முதுகை தட்டினான்.
மணி 11 ஐ தாண்டிய நிலையில் தார்வீதிகளில் இருந்து வண்டி மண் வீதிக்கு இறங்கியது. சனநடமாட்டமே இல்லாத இருண்ட வெளியாக இரவு இருந்தது. காற்று வேகமாக இன்னும் வேகமாக வண்டியின் வேகத்திற்கு இணை கொடுத்து ஜக்கெட்டுகளை கிழித்தது. தென்னை இடுக்குகளில் இருந்த சந்திரன் வெட்ட வெளிக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தான். உலகில் எதுவுமே தூய்மை இல்லை என்பது போல இருட்டின் கனதி மிக அதிகமாக இருந்தது. பகல் முழுக்க வேலை செய்த அயர்ப்பும் காகிதத்தில் என்ன இருக்கும் என்ற யோசிப்பும் மகிழனை ஒரு முறை உலுப்பியது. மகிழன் மெதுவாக வண்டியின் வேகத்தை குறைத்து சுகந்தனிடம் பேச்சை கொடுத்தான்.
வண்டி மண் வீதியின் ஏற்றதில் ஏறி இறங்கியது.
பேச்சு கொடுக்க திரும்பிய மகிழன் தூரத்தில் நான்கைந்து வட்ட மஞ்சள் ஒளிபொருந்திய சில வண்டிகள் எதிர்த்துக்கொண்டு வருவதை கண்டான். பேச்சை கொடுக்காமல் திரும்பி வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.பொதுவாக இந்த நேரத்தில் யாரும் கூட்டமாக பயணம் போகமாட்டார்கள். தனியாகவே செல்லுவார்கள். இப்படி ஒரு குழுமமாக வண்டிகளை பார்த்ததும் மகிழன் சுகந்தனை தயார்படுத்தினான். சுகந்தனுக்கு இந்த வீதிக்கு கிளை வீதிகள் எதுவுமே கிடையாது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. இருந்தும் ஒன்றாவது உருவாகியிருக்க கூடாத என்று கடவுளிடம் கெஞ்சி கேட்டான். அவர்களிடம் கூமில் வேலை செய்யும் அடையாள அட்டை இருந்தது. அப்படி மறித்தால் அதைக்காட்டி சென்று விடலாம் என்று இருவரும் பேசிக்கொண்டார்கள். வெளிச்சங்களை நெருங்க நெருங்க அங்கிருந்து எந்த அசைவும் தெரியவில்லை. இன்னும் நெருங்க வாகனங்கள் சில நகராமல் வெளிச்சத்தை மட்டும் பாய்ச்சிய வண்ணம் நின்றது. கட்டாயம் அது ஆமியோ போலிசோ கிடையாது. சில நேரம் உளவுத்துறையாக இருக்குமோ?
நன்கு வளர்ந்த பருமனான ஒருவன் கைகளை காட்டி இறங்க சொன்னான். வண்டி முழு வேகத்தையும் குறைத்து படபடப்புடன் அவர்கள் இறங்கி பின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு பேர்செய் திறந்து அடையாள அட்டைகளை எடுத்து காட்டினார்கள். அவன் அடையாள அட்டைகளை வாங்கி கொண்டு போய் அங்கிருந்த இருவரிடம் நீட்டினான்.
அவ்விடத்தில் இரண்டு ஆட்டோக்களும் ஒரு மோட்டார் வண்டியும் நின்றது. சிவப்புநிற ஆட்டோக்கள் தான் இரண்டும். வெளிச்சத்தில் அங்கிருந்த எட்டு பேரின் முகத்தையும் உடல் வாகுவையும் மகிழனால் அறிய முடிந்தது. கைத்தொலைபேசியில் இருந்து வந்த ஒளியில் மின்னிய அவனின் தோழர்களின் முகங்களை போல வாகன வெளிச்சத்தில் இவர்களின் முகமும் ஒரு இறுக்கமான பிடியுடன் தெரிந்தது. எல்லோரது முகங்களிலும் நெடுநாளாக மழிக்காத தாடியும் மீசையும் அழுக்காக படிந்திருந்தது. யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் சிங்களவர்கள் அல்ல.
இவை அனைத்தையும் கவனிக்க முன்னரே அவர்கள் மகிழனையும் சுகந்தனையும் சுற்றி கொண்டார்கள். இருவர் ஆட்டோக்குள் சென்று ஒரு பெரிய லாரி டயரை தூக்கிக்கொண்டு வந்தார்கள். சுற்றிருந்தவர்களில் ஒருத்தன் கைகளில் கயிறுடன் வந்தான், இன்னொருத்தன் ஒரு கானுடன் வந்தான். சுற்றியிருந்தவர்கள் இருவரையும் நெருங்க மகிழனும் சுகந்தனும் மிக சத்தமாக தம்மை விடும் படி அலற ஆரம்பித்தார்கள். சுற்றி எங்குமே வீடில்லாத வீதியில் அவர்களின் குரல் காற்றோடு கலந்து நிசப்தமாய் போனது. மகிழன் ஒரு முறை திமிறி அவர்களின் பிடியிலிருந்து விலக எத்தனித்தான். அவர்களின் பிடியிலிருந்து அணுவும் விலக முடியவில்லை. இன்னும் சத்தாமாக கத்தினான். சுகந்தன் மெதுவாக முனகினான். மகிழன் உரத்தை கூட்டி கத்தினான். அடித்தொண்டையின் வளை அதிருமாறு தலையை மேலும் கீழும் ஆட்டி திமிறியவாறு கால்களை நிலத்தில் குத்தி எம்பி எழ எத்தனித்து கத்தினான். சுற்றியிருந்தவர்காளால் அவனின் அலறலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருத்தன் விறகு குற்றி ஒன்றை கொணர்ந்து மகிழனின் வாய்க்குள் அடித்து இறுக்கினான். விறகின் சிராய்கள் வாய்களின் புறங்களை கிழித்து ரத்தம் சீறி பாய்ந்தது. மகிழன் வலியால் கண்களாலும் காதுகளாலும் மூக்காலும் முனகினான். வாயிலிருந்து ரத்தம் அவனின் மார்பெல்லாம் வழிந்தது.
கையில் கயிறுடன் நின்றவன் இருவரையும் இணைத்து கைகளை மடக்கி கால்களையும் சேர்த்து கால் வயிறு கைகள் கழுத்து என மகிழனையும் சுகந்தனையும் இறுக்கி ஒன்றாக கட்டி விட்டான். அவர்களில் இன்னொருத்தன் மற்றவர்களின் பிடிகளை தளர்த்தி விட்டு தன் கால்களால் இருவரையும் அழுத்தமாக உதைந்தான். இருவரும் மண்ணின் மீது ஒன்றாக கவிழ்ந்தார்கள். விறகு கட்டை மகிழனின் வாயினை இன்னும் ஆழமாக தாக்கியது. மகிழன் மயங்கி போனான். சுகந்தன் சுயநினைவை இழந்து போய் இரண்டு சடலாங்களாகி போனார்கள்.
இருவரையும் சிலர் இழுத்துக்கொண்டு வந்து அருகில் இருந்த நீரோடாத வாடிப்போன வாய்க்காலுக்குள் தள்ளி விட டயரை இருவர் கொணர்ந்து இருவரின் மேலே போட்டார்கள். கொணர்தவர்களின் கண்களில் எந்த சலனமும் இல்லை. நடந்து திரிகின்ற பிணங்கள் போலவே அவர்களும் இருந்தனர். இதுவரை அவர்கள் எவரும் பேசிக்கொண்டாதாய் இல்லை. அவர்களின் உடலும் இயக்கமும் எந்திரதனமாக இருந்தது. நள்ளிரவிலும் அவர்களின் நேர்த்தியான முனைப்பும் இறுக்கமும் உறுதியாக இருந்தது.
அடுத்தவன் கானிலிருந்த மஞ்சள் திரவத்தை அவர்களின் மேலே ஊற்றினான். ஒரு கடவுளுக்கு பாலாபிசேகம் செய்வதை போல மிக மெதுவாக எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றினான். அவர்களில் யாருமே ரசித்ததையும் வெறுத்ததாயும் தெரியவில்லை. மஞ்சள் ஒளியின் மங்கிய பிரகாசத்தில் திரவம் மினுக்கம் கட்டியது. ஒருத்தன் கட்டிபோட்ட இருவரின் அருகிலும் வந்து அவர்களின் அடியாள அட்டைகளை அவர்கள் மீது எறிந்தான்.
மற்றையவன் தனது பின் ஜீன்சுக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்து சுகந்தனின் தலைக்கு குறிவைத்து சன்னத்தை பாய்ச்சினான். துப்பாக்கி முனை ஒரு கணம்  இருட்டில் பற்றி பிடித்து அணைந்தது போல இருந்தது.
குபுக்கென பற்றிக்கொண்டு எரிந்தது டயர், கூடவே இரண்டு பிண்டங்களும்.அந்த வீதி முழுக்க ஒளி அவ்வளவு பிரகாசமாக பரவியது. முனுமுனுத்துக்கொண்டே இருந்து அவர்களின் இறுதி நேரத்து சொற்கள் எல்லாம் வெளிச்சத்தில் கலந்து காத தூரம் போய் அடையாளங்கள் அற்று மறைந்து போயின. தண்ணீரே படாத மண்வீதியின் வாய்கால் திரவத்திலும் ரத்தத்திலும் உறைந்து போனது. டயருடன் மகிழனும் சுகந்தனும் கருகிப்போனார்கள்.
அவ்வளவு நேரம் எரித்தவர்கள் நிற்கவில்லை. அவர்களுக்கு கட்டளையும் அப்படி வழங்க படவில்லை.சன்னம் பாய்ந்த அடுத்த நிமிடம் அவர்களும் வண்டிகளில் பாய்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இது வெறும் தொழிலே. கொள்கைகள் இல்லாமல் சுற்றித்திரிந்த அவர்கள் தெரிந்தெடுத்த பிழையான பாதையினால் மிக சரியாக குழிக்குள் விழுத்தப்பட்ட நிலையே அவர்களது.
ஒரு வாய்க்காலுக்குள் இரண்டு புழுக்கள் நெளிவதைப்போல முடிந்து போனது அந்த இரவும் முகிழன் சுகந்தன் இருவரின் வாழ்கையும்.
மகிழனின் வண்டிக்கு பின் கட்டியிருந்த இருவரது பைகளுக்குள் மகிழனின் பைக்குள் இருந்த  திணித்த உடைகளுக்குள் கண்ணீர் வழிய அப்பாவின் கடிதம் எல்லாவற்றியும் மௌனமாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தது.
 

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 02

தமிழ் அரங்குகளில் இருந்த புத்தக பல்வகைமை பற்றி பேசியே ஆகவேண்டும். புத்தக தேர்வு என்பது இன்றைய இலங்கை தமிழ் சமூகத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கொழும்பு போன்ற அவசர நகரங்களில் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறைக்குள் இலக்கிய வாசிப்பு என்பதை எதிர்பார்க்க முடியாத ஒன்று. அவர்களுக்கு கிடைக்கின்ற ஓரளவு நேரங்களில் மனதை சந்தோசப்படுத்தக் கூடிய சில நாவல்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் அரங்கங்களில் முழுமையாக வணிக நாவல்களே இருந்தன. பாலகுமாரன், லட்சுமி, எட்மூரி, ராஜேஷ்குமார், அனுராதா என்று இன்னும் பலர். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவை அவர்களின் ராக்கைகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், ஒரு வணிக நிறுவனம் அதிகம் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய புத்தகங்கள் வணிக நாவல்களாகவே இருப்பதில் எந்தப்பிழையும் இல்லை. ஆனால் அங்கு வருகின்ற நூறில் எப்போதாவது ஒருத்தர், சிறந்த இலக்கியத்தை தேடுகிறார். பல சிறந்த புத்தகங்களை தேடி, இல்லை என்னும் போது மனவருத்தத்துடன் திரும்புகிறார். அவருக்கு இலக்கிய சமூகம் கொடுக்க கூடிய பதில் என்ன? அவரின் வாசிப்பை ஊக்குவிக்காமல் முற்றுமுழுதாக வணிக நோக்கத்துடன் இயங்குதல் என்பது பிழை இல்லை, இழுக்கு.
குறுகிய கால இடைவெளிக்குள் என்னால் இரண்டு புத்தக கண்காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாண நல்லூரில் நடந்த கண்காட்சியில் பங்குபற்றிய சில இலக்கிய வாசகர்கள் ஜெயமோகனை அதிகமாக தெரிவு செய்தார்கள். கொற்றவை, விஷ்ணுபுரம் , வெண்முரசு போன்றவை அதிகம் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் சிலரால் அதிகம் தேடப்பட்டவர்கள் சாரு, காரல் மார்க்ஸ்(தற்போதைய) , பெருமாள் முருகன், பிரபு காளிதாஸ் போன்றோர். அங்கு அகிலனின் புத்தகத்தை கையில் வைத்திருந்த ஒருவரை  புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்போடு வழியனுப்பினேன்.நான் இங்கு வாசிப்பின் பல்வகைமையை அவதானித்தேன். என்ன தான் இருந்தும் வந்தவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
ஓரளவு வயது வந்து வேலைக்கு செல்பவர்கள் தான் வணிக எழுத்தை பொழுதுபோக்குக்காக வாசிக்கிறார்கள் என்றால் பாடசாலை மாணவர்களும் அதையே தெரிவுசெய்கின்றனர். கல்கி சாண்டிலியன் கூட அவர்களால் வாசிக்க முடியவில்லை. வாசிக்க தெரியவில்லை. அவர்கள் தெரிவு செய்யும் புத்தகங்களில் பெரும்பாலானவை குடும்ப நாவல்களாகவே இருந்தன. சில மாணவர்களிடம் வேறு சில புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் பரிந்துரைத்தால் அவர்களுக்கே உரிய திமிருடன் கடந்து செல்கின்றார்கள். அவர்கள் காந்தியையும் சேகுவாராவையும் ஹொப்கின்ஸையும் கூட வாசிக்க நினைக்கவில்லை. எதேர்ச்சியாக YouTube இல் அமெரிக்காவின் நடுத்தர பாடசாலை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினைப் பார்த்தேன். அதில் மாணவர்களிடம் யாரை நீங்கள் வாசிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் உலக இலக்கிய மேதைகளையும் தற்போதைய லத்தீன் அமெரிக்கன் எழுத்தாளர்களையும்  வசிப்பதாக சொன்னர்கள். இவற்றை உண்மையாக வாசிப்பார்களா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. அவர்களுக்கு அவர்களின் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் தெரிந்திருக்கிறது. எம்மவர்களுக்கு அது கூடத் தெரியவில்லை.

பாதி வெளிச்சம்.

பாதி வெளிச்சம் உள்ள ஒரு அறையினைத் திறந்து
நீண்ட நேரம் காத்திருக்கிறேன்,
செக்கு நாற்றம் வீசும் மேனியின் மேல்
செம்மஞ்சள் காவி ஒன்றை சுற்றியபடி :

சுற்றல் ,
அலைதல் ,
தோண்டுதல் ,
பிரித்தல் ,
கிழித்தல்.
இந்த நாற்றம் வீசும் கந்தல் புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும் தான்
என்னை செதுக்கியது,
மன்னிக்கவும் – ஒதுக்கியது
அறையின் சுவர்களில் எதுவுமே எழுதியிருக்கவில்லை
அதனால்,
எழுத கைகள் அற்றவன் என்றோ,
எழுத சக்தி அற்றவன் என்றோ ,
எழுத தெரியாதவன் என்றோ ,
எழுத பழகாதவன் என்றோ அர்த்தமில்லை.
ஒரு பச்சை காகிதத்தின்
மீது பென்சில் கூர் ஒன்றினால் தான் எழுதவேண்டும் ,
பாதி வெளிச்சம் உள்ள பக்கம்
மெல்லிய அதிசயம் ஒன்றிற்காய்
காத்திருக்கிறேன்.
என் இருட்டிய பக்கத்தில்
இருக்கின்ற கிறுக்கல்கள் எல்லாம்
அந்த மெல்லிய வெளிச்சத்தில்
பூக்கட்டும்.

முதலாவது பிறந்ததினம் – அசோகமித்திரன்

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளி அரோகமித்ரனின் பிறந்த நாள். அவரின் இறப்பின் பின்னரான முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே இது அவரின் முதல்ப்பிறந்த நாளாக கொண்டாடுவதில் பிழைகள் எதுவும் இல்லை. அசோகமித்திரன் பற்றிய எனது பார்வையை  இரண்டு காலகட்டமாகப் பார்க்கிறேன். இது வாசிப்பு அனுபவத்தின் படிநிலை வளர்ச்சி/ வீழ்ச்சியின் பொருட்டு நடந்திருக்கலாம்.
அசோகமித்திரனின் முக்கியமான படைப்புக்கள் ஆரம்பத்தில் எனக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. இவற்றையெல்லாம் சொல்ல, பதிய ஒரு எழுத்தாளன் தேவை தானா? அசோகமித்திரனைப்போல் சாதாரண அறிவு உடையவர்கள் கூட எழுதிவிடமுடியுமே? எதிலும் விரிவு இன்றி மேலோட்டமான பார்வை உடைய இவர் எவ்வாறு சிறந்த எழுத்தாளர் ஆவார் ? என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் இருந்தன. தண்ணீர் நாவலை முதன் முதல் வாசித்து விட்டு மனமுடைந்து ஒரு பதிவையும் போட்டிருந்தேன். அதன் பின்னர் அசோகமித்திரனை வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். இந்தக்கால கட்டம் எழுத்தின் மேல் உள்ள அதீத நம்பிக்கையின் காலமாக இருந்திருக்கிறது. எளியவற்றைப் பதிவிடுதல் எவ்வளவு அபத்தமான படைப்புருவாக்கம் என்ற மனநிலை எனக்குள் இருந்தது.
அசோகமித்திரனின் தண்ணீரை இரண்டாம் முறை வாசித்த அனுபவம் உண்மையாகவே மறுவாசிப்பிற்குரியது. மேலோட்டமாக எழுதியிருக்கிறாரே என்று அலுத்துக்கொண்ட பல இடங்கள் என்னை ஆக்கிரமித்தன. எளிமையின் மூலம் நீண்ட கருத்தாடலை உருவாக்குகின்ற வல்லமை அமியின் எழுத்துக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். அசோகமித்திரனை வாசிக்க தொடங்கிய சிறிது நாட்களிலேயே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அதன் பின்னர் அவரை தேடி வாசித்தது தான் அதிகம் என்பேன்.
யாழ்ப்பாணத்தில் அசோகமித்திரனுக்கு நினைவுக்கூட்டம் கிரிஷாந்தன் மற்றும் அவரின் நண்பர்களால் நடத்தப்பட்டது. அசோகமித்திரன் என்ற ஆளுமை பற்றிய அவர்களின் பார்வை என்னை வியப்பூட்டியது. அதுவே மேலும் அவரை வாசிக்கவும் செய்தது. அதன் பின்னர் தமிழ் மாமன்ற ஏற்பாட்டில் வவுனியாவில் அமிக்கு நினைவுக்கூட்டம் நடத்தினோம்.
அசோகமித்திரனின் பெண்பாத்திரங்கள் மிகவும் வலிமையானவையாக கருதுகிறேன். எல்லா படைப்புகளிலும் பெண் முன்னிலைப்படுத்துகின்ற சமூகத்தை ஏதோ ஒரு வகையில் படைக்கின்றார். அசோகமித்திரனின் எளிமையில் இருக்கின்ற நுட்பமான உரையாடல்கள் வியக்கக்கூடியவை. சமூகப்பிரச்சனை ஒன்றினை முன்வைத்து எழுதப்படுகின்ற அவரின் நாவல்களில் பெரும்பாலானவை காரிய நிறைவு கொண்டவை.
அசோகமித்திரனின் நேர்காணல்களில் காலச்சுவடு இதழில் தேவிபாரதிக்கும் சுகுமாரனுக்கும் வழங்கியிருக்கின்ற நேர்காணல் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும். இதில் அவர் ” அப்படியெதுவும் எதையும் யோசிக்கவில்லை. என்னுடைய கதைகள் எல்லாமே எனக்குத் தெரிந்த மனிதர்களுக்கு நான் செலுத்துகிற அஞ்சலிதான். என்ன பெரிய மகா இலக்கியம்? அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நண்பரைப் பற்றி ஒரு கதை எழுதினேன். அவர் செத்துப் போய்விட்டார். நான் அவரைப்பற்றி எழுதினேன். நாங்கள் இரண்டுபேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவருக்கு ஹிந்தி தெரியும். எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சினிமா பார்க்கும்போது முக்கியமான வசனங்களையெல்லாம் எடுத்துச் சொல்லுவார். ஹிந்திப் பாட்டுகள் அத்துபடி. எந்தப் பாட்டைப் பற்றிச் சொன்னாலும் அது யார் பாடியது எந்தப் படம் என்று டக்கென்று சொல்லி விடுவார். இன்னொரு நண்பர் இருந்தார். அவர் சீரியசானவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பெர்னார்ட் ஷாவையெல்லாம் படித்துப் பேசுவார். ஆர்.கே. ராமசந்திரன், அவர் ஆர்.கே. நாராயணனுடைய சகோதரர்.அவரும் ரொம்ப சுவாரசியமானவர். அவரும் செத்துப் போய் விட்டார். என்னுடைய நண்பர்கள் எல்லோருமே செத்துப் போய் விட்டார்கள்.
(சிறிய மௌனமும் பிறகு பெரிய சிரிப்புமாகத் தொடர்கிறார்)
மகா இலக்கியம் செய்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி எழுத ஆள் இல்லை. எனக்கு இது போதும். ” என்பார்.
அசோகமித்ரன் எழுதுகின்ற பாணி அவருக்கு தனித்தேயான பாணி, அவரைத்தொடர்ந்து அப்பாணியை யாராலும் வெற்றிகரமாக பின்பற்ற முடியவில்லை.
அசோகமித்திரன் என்னும் எளிமையான இலக்கிய மேதை இன்று தனது முதலாவது பிறந்த நாளைக்கு கொண்டாடுகிறார்.
 
காலச்சுவடில் தேவிபாரதி சுகுமாரன் பெற்ற நேர்காணல்
http://devibharathi.blogspot.com/2017/04/blog-post_29.html
எனது அசோகமித்திரன் தொடர்பான கட்டுரைகள்
https://brinthansite.wordpress.com/2017/04/22/அசோகமித்திரன்-குறிப்பு/
https://brinthansite.wordpress.com/2017/06/27/தற்கொலையும்-டீச்சரம்மாவ/

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 01

சினிமா அரங்குகளிலும் திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்களிலும் மட்டுமே இவ்வளவு மக்கள் கூட்டத்தை கண்டிருக்கிறேன். இந்திய புத்தகக்கண்காட்சிகளில்  புத்தக அரங்குகளில் விநியோகஸ்தர்கள் ஈக்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள் என்று பரவலாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இது உண்மையாக இருந்தால் இப்படி நியாயப்படுத்தலாம் – இந்தியாவின் தமிழ் நாட்டில் புத்தக கண்காட்சிகள் அதிகம் நடைபெறும், அதனால் அதிக மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் புத்தக கண்காட்சி விற்பனையின் அளவை விட புதிய புத்தகங்களின் அறிமுக அளவு அதிகமாகி விட்டது. இதனால் எல்லாமும் வாசித்து முடித்துவிட்டார்கள் என்றும் கூறிவிட முடியவில்லை. வாசிப்பு நுகர்ச்சி குறைந்து போய் விட்டது என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.  ஆனால் இலங்கையில் நிலை வேறு. புத்தக கண்காட்சிகள் எப்போதாவது ஒரு முறை தான் நடைபெறும். அதுவும் களவு செய்வதைப்போன்று சத்தமில்லாமலே நிறைந்து முடியும்.
BMICH இற்கு புத்தக கண்காட்சிக்காக சிறப்பு பேரூந்து சேவை. ஒரு புத்தக கண்காட்சிக்கு சிறப்பு போக்குவரத்து சேவை செய்கின்ற ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கும். மிகவும் சனசஞ்சாரம் மிக்க சந்தை ஒன்றைப்போல புத்தக கண்காட்சி திடல்கள் காட்சியளித்தன. எல்லோருமே தமக்கு தேவையானவற்றைத் தேடி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தனித்தனியாக பிரித்து ஒதுக்கப்பட்டு நிறைய அரங்கங்கள். எந்த இடத்திலும் மனிதர்களின் வியர்வை வாடையைத் தாண்டிய புத்தக வாசம். இருபது ரூபாய் கடவுச் சீட்டுடன் கண்காட்சிக்குள்  நுழைந்தேன். மனிதர்களின் புத்தக வேட்கையைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொரு திடலாக ஏறிஇறங்கி புத்தகங்களை அள்ளுவதையும் பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டு பிரதான அரங்கிற்குள் நுழைந்தேன்.
பிரச்சனை 01 –
அங்கிருக்கின்ற கிட்டத்தட்ட 300 புத்தக விற்பனை அரங்கங்களில் இரண்டே இரண்டு அரங்கம் தான் தமிழ் மொழிக்குரிய புத்தகங்களை பெரும்பான்மையாகக் கொண்ட அரங்கங்கள். பூபாலசிங்கம் – கிழக்கு பதிப்பகம். சிங்கள புத்தக அரங்குகளுக்கும்  ஆங்கிலப் புத்தக அரங்குகளுக்கும் இடையே இவையிரண்டும் அடையாளம் தெரியாமல் நுண்மையானவையாக இருந்தன. கிழக்கு பதிப்பகம், அவற்றின் பாதிப்புகளையே மட்டும் கொண்டிருந்தமையால் நிறைந்த தெரிவுகள் பெரிதாக கொண்டிருக்கவில்லை. பூபாலசிங்கம் புத்தகசாலை எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களையும் வைத்திருந்தமையால் தேர்வு செய்யக்கூடிய அளவு புத்தக வகைமை இருந்தது. 300 அரங்கங்களில் கடைசி ஐம்பது அரங்கங்களிலேனும் தமிழ் புத்தகங்கள் இருந்திருக்க வேண்டும். இந்திய பதிப்பகங்கள் இந்த கண்காட்சிக்கு வந்து அவர்களின் சிறுதொகை புத்தகங்களையாவது காட்சிப்படுத்தியிருக்கவேண்டும். இலங்கையின் எழுத்தாளர்களும் வெளியீட்டாளர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் படைப்புகளை முன்னிலைப்படுத்தி நான்கைந்து அரங்கங்களாவது வைத்திருக்கவேண்டும். இது ஒரு கண்காட்சி என்பதைத் தாண்டி சமூகத்தின் முன் ஆவணப்படுத்தல். பூபாலசிங்கம் புத்தகசாலையின் அரங்கிலும் சுதேச படைப்புகள் ஓரங்கட்டுப்பட்டே இருந்தன. பாலகுமாரனும் ராஜேஷ்குமாரும் லக்சுமியும் அனுராதாவும் விற்றுத் தீர்ந்துபோயின. ஒரு புத்தக நிலைய ஒழுங்கு குழுவை இதில் வசை பாடிப்பிரயோசனம் இல்லை. உள்நாட்டு படைப்புகள் சம்பந்தமான அறிவு இன்னும் என் மக்களுக்கு போய்ச் சேரவில்லை. இன்று இரண்டாய் இருப்பவை வருடக்கணக்கில் இல்லமே போய்விடும் அபாயம் தெரிகின்றது. ஒரு போட்டியிலிருந்து நாமே விலக்கிக்கொள்கின்ற நிலைமையை ஊக்குவிக்கின்றோம்.
பிரச்சனை 02-
பாடசாலை நூலகங்கள் மிகவும் முக்கியமான ஆளுமை விருத்தி தளங்களாகும். மாணவர்கள் இளமையில் தேடிக்கற்கின்ற ஒவ்வொன்றும் அவர்களின் எதிர்காலத்தின் அடிப்படைகள். இது சிங்களப் பாடசாலைகளில் நடக்கிறதா என்று தெரியவில்லை. புத்தக கண்காட்சி நேரம் அதிகமான பாடசாலைகள் தமது நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்வர். இதனை கொள்வனவு செய்ய வருபவர் ஓரளவாவது புத்தகங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? கடமைக்கு புத்தகங்களை கொள்வனவு செய்ய வருகின்ற ஆசியர்களால் ஒரு வருட கொள்வனவு மட்டுமன்றி, மாணவர்களின் வாசிப்பில் பிழையான வழிநடத்தல் உருவாகி விடும். குறிப்பிட்ட தொகைக்கு புத்தகங்களை நிரப்பித் தரக்கேட்கின்ற கொள்வனவு ஆசிரியர்கள், ஒரு சமுதாயத்தின்  எதிர்க்காலத்தில் கேள்வியினை உண்டாக்குகிறார்கள். அதைத் தாண்டி ஒரு பட்டியலுடன் சில கொள்வனவு ஆசிரியர்களைக் காணக்கூடியதாக இருக்கும். அவர்கள் கையில் வைத்திருக்கும் பட்டியலில் முக்கால் வாசி கடந்த கால வினாத்தாள்கள், – அதை தரம் ஒன்று தொடக்கம் பதின் மூன்றுவரை வரிசையில் எழுதிவைத்திருப்பார்கள். அடுத்தது பயிற்சி புத்தகங்கள், அதையும் அப்படியே அதே வரிசையில். இந்த அசிங்கமான மனசாட்சியற்ற ஒழுங்கின்மை மாற்றப்படவேண்டிய ஒன்று. இலங்கையில் இருக்கின்ற 99 சதவீத தமிழ் பாடசாலைகளுக்கு இவ்வாறான ஒரு கண்காட்சி நடப்பதே தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை.
சந்தோஷமும் கவலையும் –
புத்தக கண்காட்சியின் எல்லா இடமும் சிங்கள புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. சிங்கள புத்தகங்களில் முழுமையானவையும் இலங்கையின் அச்சு துறையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டவை. சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சியும் விஸ்தரிப்பும் மேய் சிலிர்க்க வைத்தது. புனைவுகளும் அபுனைவுகளும் இந்த சிறிய தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுதி குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனிப்புத்தகம் என்றாலும் மக்கள் தொகையை விட அவர்களின் புத்தகங்கள் அதிகமானவையாகத் தான் இருக்கும். புத்தக வடிவமைப்பு சீரானதாக இருக்கின்றது. அட்டைப்படங்கள் அட்டைகள் காகிதங்கள் என்று எல்லாமுமே செய்நேர்த்தியுடன் இருக்கின்றது. அவர்களின் தனித்துவ இலக்கிய இருப்பிற்க்கான முயற்சியும் படைப்பூக்கமும் மேய்ச்சத்தக்கது. அதே நிலையில் எமது படைப்புக்கள்?
கூட்டத்திற்க்கன காரணம்?
அத்தனை அலை மோதும் கூட்டம் புத்தக கண்காட்சிக்கா என்று யோசித்து விடைகாணமுன்னர், புத்தக விற்பனை அரங்குகளை விட அலைமோதுகின்ற கூட்டம் அப்பியாசக்கொப்பிகள் மலிவு விற்பனை அரங்கிற்குள் இருந்தது. எப்படியும் வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி அந்த அரங்கை முற்றுகையிட்டு கொள்வனவு செய்தனர். அதிகமான விலையில் வெளியில் விற்கப்படுகின்ற அப்பியாசக்கொப்பிகள் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஒரு வருடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கேயே கொள்வனவு செய்துகொள்ளுகின்ற கூட்டம் தான் புத்தக கண்காட்சியின் பெரும்பாண்மைக்கூட்டம்.

திருவிழா – தளமாற்றம் 

*இலங்கை சட்டக்கல்லூரியில் சட்ட மாணவர் இந்துமகா சபையின் வருடாந்த இதழான நக்கீரம் 2017இல்    வெளிவந்தது.
சிலருக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது தற்கொலைக்கு முயற்சி செய்வதுண்டு. கண் திருஷ்டியை கழிப்பதற்கு நாற்சந்தியில் சமய அனுட்டனங்களைச் செய்து எரிப்பர். மனதில் நீண்ட சோகம் பரவும் போது வீட்டின் சுவர்களில் ஒட்டப்பட்ட அழகிய ஓவியங்களும் சிற்பங்களும் சாந்தியை ஏற்படுத்துகிறது. அதிகாரத்தின் நெருக்கம் உண்ணாவிரதம் போராட்டம் என்று தள மாற்றம் செய்யபடுகிறது. இந்த தளமாற்றம் தான், மனிதனின் நீண்ட இருப்பிற்க்கான அத்திவாரம். மனிதனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தான் உலகின் தொடர்ச்சிக்கான வழிவகையாக இருக்கிறது. மனிதனின் சீரற்ற வாழ்க்கை முறை, அவன் சூழல் சார்ந்த இயல்பான நெருக்கடிகள், அவனின் ஆழ்மனத்தின் சஞ்சலங்கள், உறவுகளினால் ஏற்படுகின்ற சிக்கல்கள், தொழில் ரீதியான அழுத்தங்கள் என்று அவன் வாழ்வின் அத்தனை நிகழ்சிகளும் ஏதோ ஒரு வகையில் இருப்பின் பிரச்சனையாக அமைந்துவிடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் அவனுக்கும் இயற்கைக்குமான தளமாற்றம் தேவைப்படுகின்றது. அதற்கான வழிமுறையை மனிதன் தேடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின்றான்.
தளமாற்றதிற்க்கான மிக முக்கியமான கருவி திருவிழாக்கள். உலகில் திருவிழாக்களை வெறுப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. கொண்டாட்டம், கேளிக்கை என்பதைத் தாண்டி திருவிழாக்கள் செய்கின்ற சமூகமாற்றங்கள் பெறுமதிமிக்கவை. அதனாலேயே பண்பாட்டின் மிகுதியாக திருவிழாக்கள் இன்றும் ஓரளவு பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றது. தனி மனித வாழ்வில் பிறப்பு, அறிவிப்பு, பூப்பு, திருமணம் முதிர்ச்சி, வயோதிபம், இறப்பு என்று ஏற்படுகின்ற தளமாற்றங்கள் எவ்வாறு அவ்வவ் பருவத்தின் அறிதல்களையும் புரிதல்களையும் கற்பிதம் செய்கின்றனவோ, – அப்பருவங்களில் வருகின்ற தனி மனித உளவியல் உடலியல் மாற்றங்களையும் அழுத்தங்களையும் நிவர்த்தி செய்கின்றனவோ, அவ்வாறான தொழிலையே மனிதக் கூட்ட இயங்கு தளமான சமூகத்திற்கு திருவிழாக்கள் செய்கின்றன.
ஒரு தொகுதி மக்கள் என்பது கிராமிய அடிப்படையிலோ நகர அடிப்படையிலோ சாதிய இன அடிப்படையிலோ வகுத்துக்கொண்டிருந்தாலும், முக்கியமாக தேவை அடிப்படையில் தான் அந்த தொகுதி உருவாகியிருக்கும். அந்தத் தொகுதிக்கான தேவை நிவர்த்தியாக்களில் ஏற்படுகின்ற இழுவை நிலையில்  அல்லது தேக்கநிலையில் அவர்களுக்கான உந்து சக்தி ஒன்றின் தேவை புலப்படுகின்றது. லெவிஸ்ராஸ் கூற்றின் படி எப்போதெல்லாம் சமூகத்தில் நெருக்கடிகள் உருவாகின்றதோ அப்போதெல்லாம் கூட்டுமானம் வலுவாக புதுப்பிக்கபடுகின்றது. இற்றைக்கு பற்பல ஆண்டுகளுக்கு முன்னராகவே உணரப்பட்டு செயற்பாட்டில் கொண்டுவரப்பட்ட நிகழ்வு திருவிழா. “திரு” என்பது புனிதம் என்ற பொருளில் வருகின்றது போது புனிதமான விழா என்று புரிந்துகொள்ளபடுகின்றது. எமது மரபின் ஆரம்பத்திலேயே திருவிழாக்கள் குறிப்பு பெயரில்லாமல் சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. சமூக அழுத்தத்தின் தளம் திருவிழா என்ற சடங்கின் மூலம் இயற்கைக்கு மாற்றப்படுகின்றது. இது நம்பிக்கையின் வாதமாக இருந்தாலும் உளவியல் அடிப்படையில் சமூக மீள் கட்டுமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
திருவிழா என்றதும் ஊர் முழுதும் புனிதம் நிறைந்து விடுகின்றது. எல்லோரிடமும் எல்லா செயல்களிலும் புனிதத்தின் கூறுகள் செயல்படத் தொடங்குகின்றன. அதுவரை பிறழ்வான வாழ்வியலை கொண்டுநடத்திய மக்கள் கூட சரியான வழிக்கு திரும்புவார்கள். தனிமனித சமூக குளறுபடிகள் ஓய்ந்து போயிருக்கும். அமைதியும் ஒழுங்கும் எங்கும் பரந்திருக்கும். சமூகம் முழுக்க உளவியல் ரீதியில் பண்படுத்தப்பட்டிருக்கும். இந்த பண்படுத்தலின் ஆரம்பம் தான் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு வழிகாட்டியாக அமையும். இதனாலேயே திருவிழாக்களுக்கென குறித்த தேதியும் காலமும் இருக்காது. எப்போதெல்லாம் சமூக ஒன்றிணைப்பு தேவைப்படுகிறதோ அப்போது திருவிழாக்கள் நடந்தேறும்.
திருவிழாக்களின் பின்னைய போக்கு சற்று வித்தியாசமானதாக அமைந்தது. திருவிழாக்கள் ஒழுங்கமைக்கும் காரணமும் முறையும் ஆகமம் சார்ந்ததாக மாறத் தொடங்கியது. இன்றைய காலத்தில் காணப்படுகின்ற ஆகம, நாட்டார் வழிபாடுகள் என்ற பாகப் பிரிவினை உருவான காலமாக திருவிழாக்களின் தளமாற்றம் நிகழ்ந்த காலமாக கருத முடியும். காரணம், நாட்டார் வழிபாட்டிலிருந்து ஆகம முறைக்கு வழிபாடுகள் மாறத் தொடங்கியபோது வரைமுறைகளும் கட்டாயங்களும் ஆகமத் திருவிழாக்களில் அதிகமானது. சமூகக் காரணம் கருதி செய்யப்படாமல் பஞ்சாங்கங்களும் ஆகம கோப்புக்களும் திருவிழாக்களின் தேதியையும் காலத்தையும் நிர்ணயிக்கத் தொடங்கின. திருவிழாக்கள் பிராமணிய சமூகத்தின் குறியீடாக மாறத் தொடங்கியது. இருந்தும் மக்களின் பங்குபற்றலும் ஒன்றிணைப்பும் குறிப்பிடும் அளவு இருந்தது. சமயம் என்ற நிறுவனத்தின் பரவலாக்கம் அப்போது அதிகமாக இருந்தது. திருவிழாக் கிரியைகளோடான சாதாரண மக்களின் புழக்கம் நலிந்துகொண்டே வந்தது.
கூடவே நவீன கோட்பாடுகளும் தத்துவங்களும் மேலோங்க தொடங்க தனித்த வாழ்க்கை முறையை மனிதன் தேர்ந்தெடுக்க தொடங்கினான்.சாதியம், இனம், மதம் என்பதைத் தாண்டி கற்ற சமூகம் கல்லாத பாமர சமூகம் என்ற வேற்றுமை உருவாகத் தொடங்கியது. நாட்டார் வழக்கியல் பாமர சமூகத்தினருக்கே என்ற கோசமும் மேலோங்கியதால் திருவிழாக்கள் பிரிவினைக்குரிய பொருளாகிப் போனது. சாதிச் சண்டைகளும், தனிப்பட்ட குரோதங்களும் தீர்த்துக்கொள்ளும் இடமானது. எந்தக் காரணத்திற்காக திருவிழா என்ற சம்பிரதாயம் உருவாக்கபட்டதோ அது தளமாற்றம் அடையத் தொடங்கியது.
இன்றைய திருவிழாக்கள், திரு என்பதை எடுத்து கூத்து என்று மாற்றி வைக்கும் நிலையை அடைந்துள்ளன. உளம், உடல், சுற்றாடல், கிராமம், நகரம் என்று அனைத்திலும் புனிதத்தை விதைக்கின்ற பொறுப்பிலிருந்து திருவிழாக்களும் அவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் விலகிவிட்டனர். திருவிழாக்கள் என்றவுடனேயே கேளிக்கைகளுக்கு பஞ்சம் இல்லாத தினமாக மாறிவிட்டது. புனிதம் அமைதி என்ற சொற்கள் எல்லாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் வந்து அதைசுற்றி இருண்மை குடிகொண்டு விட்டது. இன்று ஆகம திருவிழாக்கள்  நாட்டரியல் திருவிழாக்கள்  இரண்டிலும் இருண்மை பற்றிக்கொண்டே இருக்கிறது. இன்றைய திருவிழாகளை அகம் புறம் என்று நிலையியல் சார்பாக பிரித்துக் கொள்கிறேன். திருவிழாவின் அகம் என்பது ஆகம முறையில் பிராமண சமூகத்திடமும் நாட்டார் வழக்கியலில் உரித்து குடும்பத்திடமும் சென்று விட்டது. அகத்தைப் பற்றிய எந்த அறிவும் சாதாரண பொதுமகனிடம் இல்லை. அகத்தின் கூறுகள் எல்லாம் பிராமணர்களின் வசதிக்கு ஏற்ப / உரித்து குடும்பத்தினரின் வசதிக்கு ஏற்ப தளமாற்றம் செய்யபடுகின்றன.
இன்றைய திருவிழாக்களுக்கு கூட்டம் கூட்டாமாக மக்கள் வருகை தருகின்றனர் என்றால் காரணம் திருவிழாகளின் புறம் தான். புறக்கூறுகள் தான் இன்றைய சமுதாயத்தின் அழிவின் சின்னம். இன்றைய திருவிழாக்களின் புறத்தை கார்னிவெல்(carnival) என்றும் கூறலாம். எப்படி ஒரு கார்னிவெல் அத்தனை சமூக இழுக்குகளுக்கும் தளமாக அமைகின்றதோ அதே போன்ற அமைப்பையே திருவிழாக்களின் புறம் கொண்டிருக்கின்றது. திருவிழா என்றாலே இசைக் கச்சேரி காட்டாய காரியம் ஆகிவிட்டது. ஒரு வகையில் இன்றைய திருவிழாக்களுக்கு ஆள் சேர்க்கும் வழிமுறை கூட. மரபிற்கு ஒன்றிரண்டு பக்திப் பாடல்களைப் பாடிவிட்டு ஒரே வேகமாக சினிமா பாடல்களை அடைந்து விடுவார்கள். ஆட்டமும் பாட்டமுமாக திருவிழா  கொண்டாட்டத்தில் மூழ்கும். இசைக்கச்சேரிக்கு வந்த கூட்டத்தில் கூட்டமாக போதை தரும் சரக்குகளும் விற்பனை ஆகும். போதையும் இசையும் நடனமும் வயது பேதமின்றி சமூகத்தின் எல்லா நிலைகளையும் ஆட்கொண்டு விடும். காரணமற்ற சண்டைகளின் பிறப்பிடமாக அமைந்து விடுகிறது.
எந்தப் பகைகளையும் தீர்க்க சிறந்த களம் இன்றைய திருவிழாக்கள் தான். இதற்கு காரணம் திருவிழாக்கள் பெரும்பாலும் இரவில் நடப்பவையாக இருக்கின்றது  தானோ தெரியவில்லை. இருட்டில் முகம் தெரிவதில்லை; குணம் தெரிவதில்லை. அதனால் குற்றங்களுக்கு இருட்டின் மறைவு சாதமாகிப் போகின்றது. திருடவும் இது வசதியாகிப் போகின்றது. திருவிழா மண்ணில் நடுவே இருந்து தலையை விரித்து அழுகின்ற பெண்களை இன்றும் காணமுடிகின்றது. ஆண்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. திருட்டில் சமீபகாலமாக குழந்தை திருட்டு அதிகம் நடக்கின்றது. மத்திய காலத்தில் திருவிழாகளை கள்ளுக் குடிக்கவும் திருடவும் பயன்படுத்தினார்கள் என்பதில் இருந்து தொடங்கி இன்று அதைத் தொழிலாக செய்கின்ற இடமாகவே மாறி விட்டது. கும்பல் சண்டைகளுக்கு இன்றைய திருவிழாக்கள் மிகப் பிரபலம். வாட்கள், போத்தல்கள், கொட்டன்கள், கத்தி என்று பஞ்சமே இல்லாமல் சண்டையிட்டுக்கொள்வர். பல முக்கிய சண்டைகள் திருவிழா நாட்களிலேயே தேதி குறிக்கபடுகின்றது.
இன்று இளைஞர் யுவதியர் என்பதை தாண்டி எல்லாப் பிரிவினரும் காட்டுகின்ற அலங்கோலம் திருவிழாக்களில் நடந்தேறும். ஒரு முறை திருவிழாக் காலத்தில் பலவகையான வாசனைத்திரவியங்கள் ஒன்று சேர்ந்த நாற்றத்தில் நிற்கமுடியாமல் திண்டாடிய அனுபவங்கள் பலருக்கு உண்டு. இங்கு தான் அவர் அவர்களின் பொருளாதார வசதியைக் காட்டுகின்ற இடமாக இருக்கின்றது. அலங்காரங்கள் எல்லாம் ஒன்றிப்போய் அலங்கோலமாக காட்சி தரும்.
திருவிழாக்களின் அகத்தையும் புறத்தையும் ஆக்கிரமித்துள்ள இன்னொரு பெரும் சக்தி தொழில்நுட்பமாகும். இதன் வருகையையும் ஆக்கிரமைப்பையும் எம் சமூகத்தால் தடுக்கமுடியாமலே போனது. முஸ்லின் சமூகத்தில் இருந்து விலகியிருக்க கூடிய இந்த ஆக்கிரமிப்பு தமிழ் திருவிழாக்களை ஆக்கிரமிப்பது, எமது பண்பாட்டின் பின்னடைவே. மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பரந்தளவில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதன் பலத்தை நிருபிக்கின்றது. அதன் முன்னர் நாம் அடிமையாக்கப்பட்ட சமுதாயமாகவே தோன்றுகின்றோம்.
அமைதியையும் ஒற்றுமையையும் பலப்படுத்த உருவாகிய சம்பிரதாயம் எல்லாப் பாவச் செயல்களின் இருப்பிடமாக தளமாற்றம் அடைந்துள்ளது.
எந்த பொருளும் நிகழ்வும் தனது உற்பத்தி நோக்கிலிருந்து விலகும் போது அது வழக்கிலிருந்து அழிந்து போகின்ற நிலையை அடையும். இன்றைய திருவிழாக்களும் வழக்கொழிந்து போகின்றன என்பதன் உட்பொருளும் அதே. மனிதனின் நடவடிக்கைகள் அழித்துவருகின்ற மிக தொன்மையான பண்பாட்டில் திருவிழாவும் ஒன்று. இன்றைய திருவிழாக்கள் குற்றங்களின் குறியீடாக மாறிவிட்டன. இதனை மீண்டும் தளமாற்றம் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம். மீண்டும் புனிதத்தையும் ஒற்றுமையையும் சமூக வலிமையையும் ஏற்படுத்துகின்ற பழைய திருவிழாக்கள் வழக்கொழிந்து போய்விட்டன. இன்றைய நாளைய சமூகம் திருவிழாக்கு பிரதியீடாக இன்னொன்றை உருவாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.
திருவிழாக்கள் தளமாற்றம் அடைந்து விட்டன.

கனவும் சமூகமும்

சமூகத் தொடர்புகள் பற்றி என்னுடன் உரையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றது. மற்றவர்களோடு உரையாடுதல், அவர்களின் கருத்துக்களை செவிமடுத்தல், அவர்களோடு வேலைகளில் ஈடுபடுதல் , அவர்களோடு சந்தோசமாகவும் உற்சாகமாகவும் நேரத்தை கழித்தல் என்ற பல வேறுபட்ட விடயங்களை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னைத் திருத்தி இந்த சமூகத்தில் வினைத் திறன் மிக்க மனிதனாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என்னை இந்த சமூகத்திற்கு பழக்கப்படுத்துகிறார்கள். என்னைப்பற்றி யாரிடமாவது கூறும் போது நான் ஒரு வித்தியாசமான வகை என்கிறார்கள். எப்போதுமே புத்தகங்களையும் நித்திரையையும் தனிமையும் விரும்புகிறேன் என்கிறார்கள். புத்தகப் பூச்சி, நான் வாசிக்கும் புத்தகங்கள் எனக்குரியவை அல்ல என்றெல்லாம் என்னோடு இருப்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். என்னிடம் நீண்ட உரையாடல்கள் செய்பவர்கள் இறுதியில் என்னைப்பற்றிய அச்சத்துடனேயே முடித்துக்கொள்கிறார்கள். எதிலும் நான் அதிகம் ஈடுபடாததால் என்னைச் சுயநலவாதி என்கிறார்கள்.
அவர்கள் சொல்கின்ற வாழ்வியலுக்குள் என்னால் போகவே முடியவில்லை. அழுகிய முட்டை வெடுக்கு நாற்றமுள்ள அவர்களின் கருத்தியலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தனிமனித சுதந்திரம் மீறப்படுகின்ற இடங்களில் இருப்புக் கொள்ளவில்லை. மனிதர்களை மனிதராக மதிக்காத இடங்களிலும் மனிதர்கள் மனிதனாக இல்லாத இடங்களிலும் என்னால் இசைந்து கொடுத்து போவது அத்தனை சிரமமா இருக்கின்றது. அவர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்துகின்ற நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போகவும் அதை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் இருக்கின்றது. அவர்களின் பிரயோசனமற்ற நீண்ட உரையாடல்கள் என்கிற இரைச்சல்களை கேட்கவே முடிவதில்லை. சகித்து வாழுதல் என்ற முறையின் மிக இழிவான நடைமுறைப்படுத்தலை தெரிந்துகொண்டே அனுசரிக்க முடியவில்லை.
மேற்கு ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் ஒரு இந்தியத்துறவி வசித்து வந்தார். வழமையான கதை போல இது ஒரு ஊரில் என்று தான் சொல்லாமல் சொல்லித் தொடங்குகிறது. வெகு சிரமப்பட்டு ஒவ்வொரு நாளும் மலையில் ஏறி, வட்ட குவளை ஒன்றிற்குள் தண்ணீர் நிறைய எடுத்து இன்னும் அதிக சிரமத்துடன் அடிவாரத்தில் சேமித்து குடித்து வந்தார். அதற்காக மலையின் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை என்பதில்லை. இந்தியத்துறவிக்கு அசுத்தமான தண்ணீர் குடிப்பதில் சம்மதமில்லை. வயது அதிகரிக்க அவருக்கு மலையில் ஏறுவதும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து சேமித்து வைப்பதும் இலகுவாகப்போனது. துறவியின் வயது தொன்னூறை அடையும் போது அவர் இருபது வயது சிறுவன் போல உற்ச்சாகமாக ஏறி இறங்கி வந்தார். சில காலத்தின் பின்பு மலை அடிவார குடிநீர் ஊற்றுக்கள் எல்லாம் மொத்தமாக அசுத்தமாகிப் போயின. அங்கு குடியானவர்கள் குடிக்க தண்ணீருக்காக மலை உச்சிக்கு ஏறவேண்டிய கட்டாயநிலை உண்டானது. அப்போது அந்த துறவி உயிரோடு இல்லை. கரடு முரடான மலைப்பாதையில் அவர் வழமையாக நடந்து சென்ற பாதை மட்டும் சீராகவும் நடக்க ஏதுவானதாகவும் இருந்தது.குடிமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி பிரயோசனம் அடைந்து கொண்டார்கள்.
இந்தக் கதையை கனவாக எப்போதும் காண்பேன். இருபதிற்கும் அதிகமான தரம். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காட்சி மனதில் பதிந்து கொள்ளும். அப்படித்தான் இந்த கதையின் புறவுருவத்தை உருவாக்கினேன். இந்தக் கனவின் ஒரு கட்டத்தில் அந்தத் துறவி மெதுவாக சிரிப்பது போல இருக்கும். அவர் தனது பாதத்தை உயர்த்தி காட்டும் போது, அது அத்தனை சிதைவுகளோடும் புண்களோடும் இருக்கும். அத்தோடு இன்னொரு கனவும் அதிகமாக வரும். இதையும் கொஞ்ச கொஞ்சமாகவே பொருத்தினேன். இரண்டு மூன்று மாடிகள் மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன். சுற்றி மனிதர்கள் அவர்களின் தொழிலைப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் யாரின் அருகில் போனாலும் அவர் எனக்கு நெருக்கமான ஒருவரின் உருவமாக மாறி கத்தி ஒன்றினால் என்னை குத்த துரத்துவார். நான் மீண்டும் ஓடி ஏறி இறங்கி அவரிடம் இருந்து தப்பித்தேன் என்று நினைத்த அடுத்த கணமே அருகில் இருப்பவர் அவராக மாறி என்னைத் துரத்தத் தொடங்குவார். இது தொடர்ச்சியாக இடம்பெறும். இவையிரண்டும் எனக்கு அதிகமாக வருகின்ற கனவுகள்.

இசை – Rohingya – அனிதா

(1)
நேற்று புகையிரதப் பெட்டிக்குள் வியர்த்து விறுவிறுக்க ஏறி, தோளில் இருந்த பயணப்பையை மேலே வைத்துவிட்டு ; காலையிலிருந்து உடுத்தியிருந்த மேற்சட்டையையும் பெனியனையும் கழற்றி புதிய மேற்சட்டை ஒன்றை வேகமாக மாற்றினேன். அந்த பேட்டியில் பெரிதாக எவருமே இல்லை என்பதால் எனக்கு மாற்றுவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. சப்பாத்தைக் கழற்றி வைத்துவிட்டு, துணி ஒன்றினால் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் கிளம்ப பத்து நிமிடத்திற்கு முதல், என்னைவிட ஆரவாரமாக வயது முதிர்ந்த பாட்டி, நடுத்தரவயதில் ஆண்கள் பெண்கள் யுவதிகள் சிறுவர்கள் என்று சுமார் பதினைந்து பேர்கொண்ட படை அத்தனை ஆசனங்களையும் நிரப்பியது. எனது ஆசன இலக்கம் பதினெட்டு, அருகில் பதினேழு. பதினேழும் அவர்கள் பதிவு செய்த ஆசனமே. ஆரவாரமாக அவர்களது பயணப்பைகளையும் கிட்டார் ஒன்றரையும் வேறு சில கைப்பைகளையும் ஒழுங்குபடுத்தி அடுக்கிவைத்தார்கள். அவர்கள் முகம் முழுக்க எதிர்பார்ப்பு இருந்தது; கவலையோடு. அவர்கள் யாரையோ எதிர்பார்த்தார்கள். கைத்தொலைபேசியை வேகமாக அழுத்தி காதில் வைப்பதும் பின்னர் தமக்குள்ள கதைப்பதுமாக இருந்தார்கள். கடைசியில் அவர்கள் எதிர்பார்த்த அந்த நபர் பெட்டிக்குள் ஏறினார். அவருக்கான ஆசனம் பதினேழு.
ஆரம்பத்தில் குலுக்கமாக அசையாத தொடங்கியது புகையிரதம். சிறிது நேரம் எவராலும் எதையும் செய்துகொள்ளமுடியவில்லை. அவ்வளவு குலுக்கம். கூடவே அருகில் இருந்த மலசலகூட கதவு திறக்கப்படும் போதெல்லாம் மூச்சை சூறையாடும் வெடுக்கு நாற்றம். இத்தனைக்கும் நடுவில் அமைதியாக தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்ற அழகான குடும்பம். அல்லது நண்பர்கள். அல்லது….
அருகில் இருந்த ஆச்சியிடம் பேச்சைக் கொடுத்தேன். அவர்கள் எங்கே போவதாக விசாரித்தேன். அவர்கூறிய எதுவுமே விளங்கவில்லை. காரணம் அவரது ஓட்டைப் பற்களாக இருக்கலாம். அல்லது என் மொழிக் குறைபாடாக இருக்கலாம். அவரது கண்களின் அசைவுகளில்,அது அவரின் முழுக்குடும்பம் என்றும் நிகழ்வு ஒன்றிக்கு எல்லோருமாகச் செல்கிறார்கள் என்றும் புரிந்துகொண்டேன். அவரின் தாமதம் பற்றி விசாரிக்க நினைத்திருந்தாலும், அவர் பேசுகின்ற சிங்களத்தின் வேகமான நடைக்கு ஈடுகொடுக்கமுடியாது என்று பேசாமலே இருந்துவிட்டேன். புகையிரத ஆட்டம் குறைய, அவர்களில் நடுத்தர வயதை உடைய ஒருத்தர் எழுந்து கைகளில் கிட்டாரை எடுத்துக்கொண்டு, அவர்களில் யுவதிகளும் குழந்தைகளும் இருக்கின்ற ஆசனங்களின் நடுவே போயிருந்தார். அவரைத் தொடர்ந்து, அந்த வீட்டின் எல்லோரும் பெட்டியின் முன் ஆசனங்களை அருகிலும் ஆசன கைகளிலும் இருந்தார்கள். இரண்டு சிறுவர்கள் கைகளில் றபான்களை எடுத்தார்கள். என்னருகில் இருந்த ஆச்சியும் எழுந்து அவர்கள் அருகில் சென்று, உள்ளே அமர்ந்து கொண்டார். அவர்கள் இருந்த ஆசனங்களில் அறுபது சதவீதம் இப்போது வெறிச்சோடிப்போனது. பெட்டி கலகலக்கத் தொடங்கியது.
அவர்கள் பாடவும், இசைக்கருவிகளை இசைக்கவும் தொடங்கினார்கள். சிங்களத்தில் தான் பாடினார்கள். அவர்களில் கிட்டார் வைத்திருந்தவர் தன்னை மறந்து இசைத்துக்கொண்டிருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்தும், கண்களால் அன்பினைப் பரிமாறியும், இடையிடை மெல்லிய நடன அசைவுகளை ஆடியும் ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். யுவதிகளின் தடிமனான உதட்டு சாயம் பாடலுக்கு மிக குதூகலமாக அசைந்துகொண்டிருந்தது. அவர்கள் இசையின் மூலம் பேசிக்கொண்டார்கள். இசையை அவர்களின் சந்தோசத்தின் வெளிப்பாடாக கருதினார்கள். சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் போது அனைவரும் ஒன்று சேர்ந்து தோள்களுக்கு மேல் கைகளைகளைப் போட்டு ஒற்றுமையை காட்டினார்கள். வேறு சில சொற்களுக்கு வானத்தை நோக்கி வணங்கியும், சிலவற்றுக்கு இயற்கையை ரசிப்பது போலவும் சைகைகள் செய்தார்கள். அங்கிருந்த யுவதிகளின் அழகிற்கு ஏற்ப அவர்களின் குரலோ இசையோ இருக்கவில்லை. ஆனாலும் அவற்றைத் தாண்டி அவர்களின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் பெட்டிமுழுக்க பரவியது. ஜன்னல் ஓரத்தினூடாக வெளியே பார்த்தேன். அருகில் நீண்டு அகன்று விரிந்திருந்த மலை, அவர்களின் முன்னால் சிறிய நீர்க்குமிழ் போலத் தோன்றியது.
(2)
மியன்மாரில் நடக்கின்ற மனித அவலங்களை தினமும் காணக்கூடியதாக இருக்கின்றது. மனிதர்கள் மீது மனிதர்களே நடத்துகின்ற இழிவுக்கொடூரம் இது. புகைப்படங்களிலும் காணொளிகளிலும் அங்கங்கள் சிதைந்தும் உரு அற்றுப்போயும் குற்றுயிர் குறையுயிராக மனிதர்கள் சிதிலமடைவதைப் பார்க்கும் போது உலக நாடுகளும் பொது அமைப்புக்களும் இன்னும் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை. இனங்களுக்கிடையிலான பிரச்சனையாக இருந்தாலும் Aung San Suu Kyi கருத்துப்போல ஒரே இனக்குழுமத்தின் பிரச்சனையாக இருந்தாலும் பலியாவதும் முடமாவதும் மனித உயிர்களே. வன்முறை என்ற வழி எப்போது உலகில் கையாளத் தொடங்கப்பட்டதோ அப்போதே மனிதம் இறந்துபோனது. ஒரு கொடூர மனித அவலங்களின் அரங்கேறிய நாட்டிலிருந்து, இன்னொரு மனித அவலம் நடந்துகொண்டிருக்கின்ற தேசத்திற்கு என்ன கூறிவிடமுடியும்? எங்களுக்கு எப்படி முழு உலகமும் மௌனமாக பதில் செய்ததோ அதே போன்ற பதிலைத்தான் Rohingya மக்களும் எதிர்பார்க்க முடியும். கிராமங்களை தீவைப்பதும் அதனுள் குழந்தைகளை தூக்கி எறிவதும், வெட்டை வெளியில் கழுத்தறுப்பதும் கொடிய மனநிலை பாதிக்கப்பட்டவர்களால் கூட முடியாத ஒன்று.
400 ற்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள் என்பது இன்றைய நாளில் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய விடயம் இல்லை. இதை நான் இனஅழிப்பு என்றே சொல்லுவேன். மனிதர்கள் இறப்பது மட்டுமல்ல இனஅழிப்பு. 73000 ற்கு அதிகமானோர் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் குழந்தைகள் போசனைக்குறைபாடான நிலையில் இருக்கின்றனர். இதெல்லாம் ஒரு இருபது ஆண்டுகள் பின்தங்கிய நிலையை அம்மக்களுக்கு ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் அடிப்படைகளை நிவர்த்தி செய்து, உலக போட்டிக்குள் நுழைய இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது எடுக்கும். வறுமை நோய் மக்கள் விரட்டும். வெறுமனே நான்கு ஐந்து நாட்கள் நடக்கின்ற பிரச்சனை அரை நூற்றாண்டு வாழ்வியலையே பாதிக்கும். இப்படியான பாதிப்புக்கள் ஒரு தேசத்தின் சிறுபான்மை மக்களுக்கு நிகழ்வதே பெரும் துயர்.
கடந்த வியாழக்கிழமை Nat நதியின் கரையில் இருபது மனித உடல்கள் எடுக்கப்பட்டன, அதில் பன்னிரண்டு குழந்தைகள். இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் புதைந்து போன நிகழ்வுகள் இன்னும் சில இனக்குழுமங்களுக்கு நடந்துகொண்டிருப்பது கவலைக்குரியது. வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்த பெண்ணொருவரின் பேட்டியை வாசித்தேன், அதில் அவர் மியன்மாரில் நிறைய சிறுபான்மை இனங்கள் இருந்தும் நாம் மட்டுமே அவர்களால் அதிகமாக வெறுக்கப்பட்டோம் என்கிறார். வங்கதேசத்தில் குவிக்கின்ற அகதிகள் பற்றிய கேள்விகள் அதிகமாகின்றன. எமது நாட்டின் போரில் அகதிகளாக தஞ்சமடைந்த மக்கள், தங்கள் சொந்தங்களின் நிலத்தில் அகதி முகாம்களில் பட்ட அவதியும் துன்பங்களும் கொடியது. அவர்களுக்கான வசதிகள் சரியான முறையில் கொடுக்கப்படாமையும் அதனுள் நடக்கின்ற அசிங்கமான அரசியல் நகர்வுகளும் மேலும் மேலும் அகதிகளின் நிலைமையை பிரச்சனைக்குள்ளாக்கும். சொந்த நாட்டின் உள்ளக அகதிகளுக்கே இந்த நிலைமை என்றால் இன்னொரு நாட்டில் தஞ்சம் கோரிக் போகின்ற Rohingya மக்களின் நிலைமை இன்னும் மோசமானதாகவே இருக்கும்.
Rohingya மக்களின் பிரச்சனை இன்னும் இன்னும் மௌனமாக்கப்படும் போது வீரியமடையக்கூடும். இதைவிட பலமான ஆதிக்கசக்திகள் Rohingya மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். சர்வதேச ரீதியில் இதற்கான ஆயத்தங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும். இது முன்னர் எங்களுக்கும் இப்போது Rohingya மக்களுக்கும் இனி இன்னொரு இனக்குழுமத்திற்கும் நடக்கும். மனிதாபிமானம் இல்லாத உலகம் உருவாகி, அதன் ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கிறது.
(3)
NEET தேர்வும் அனிதாவின் மரணமும் இன்றைய கல்வி முறை குறித்த வெளிப்படுத்தல்களை எல்லா சாராருக்கும் தெரிவித்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா என்ற தேசத்திற்குள் இந்த சம்பவத்தை அடக்கிவிடாமல் நாமும் இதைப் பற்றிய விழிப்புணர்வை அடையவேண்டும். இலங்கை கல்வி முறை குறித்த பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், அதை அமுல்ப்படுத்துவதிலும் பரிசோதிப்பதிலும் அரசாங்கம் தயக்கம் தெரிவிப்பது பல மானவர்க்ளுக்கு கெடுதலாக அமைகின்றது. புள்ளிகள் மூலம் திறமையை வரையறுத்துக்கொள்ளும் கல்வி முறைமை எம்மைப்போன்ற சில நாடுகளிலேயே இன்னமும் அமுலில் இருக்கின்றது. இதனால் இன்னமும் பல மாணவர்கள் பல்கலைக்கழக தகுதியினை, அவர்களுக்கு குறித்த துறையில் புலமை பெற ஆற்றல் இருந்தும் இழக்கின்றனர். தனியார் பல்கலைக்கழங்கள் இருந்தும் அவர்கள் கேட்கின்ற தொகைப்பணத்தை கொடுத்து படித்து வெளியேறும் அளவு பொருளாதார வசதியினைக்கொண்டிராத திறமையான மாணவர்கள் முழுக்க முழுக்க புள்ளிகள் அடிப்படை தேர்வு முறையினை நம்பியிருக்கவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அதில் போராடி தோற்றுப்போகின்ற மாணவர்களின் நிலைமை என்ன? அவர்கள் தமது கனவுகளை புதைக்கொண்டு இன்னொரு வேலைக்கு போகின்ற அல்லது இன்னொரு துறையை தெரிகின்ற துர்ப்பாக்கிய நிலையை அடைகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கையில் SAITM இற்கு எதிராக போராடுகிறார்கள். SAITM இற்கு முதல் இப்படியாக தட்டிக்கழிக்கப்படுகின்ற மாணவர்களின் எதிர்காலம் பற்றிய நிலைப்பாடு என்ன? அசம்பாவிதங்கள் நடக்கின்ற போது தான் அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுகின்றது. அனிதாவின் மரணம் ஒரு சம்பவமாக முடிந்துவிடாமல் கல்வி முறைமை பற்றிய பல கேள்விகளையும் கேள்விகள் சிறந்த கல்வி முறைமையையும் ஏற்படுத்தவேண்டும்.