நன்றி
உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.
ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம்
வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை
குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம்
முகப்புத்தகம் – மற்றைய எல்லாப் படங்களும் அவரவர் முகப்புத்தகங்களில் இருந்து பெறப்பட்டது.
அனார், சுகுமாரன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் எனது வலைதளத்தில் சுயாதீனமாக வெளியிடப்பட்டவை.
முகப்பு படம் என்னால் வடிவமைக்கப்பட்டது.
இக்கட்டுரைகள் எழுதும் போது உடனிருந்து திருத்தங்கள் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் மற்றும் உன்னதம் கௌதம சித்தார்த்தன் ஆகியோருக்கு நன்றிகள்.
கட்டுரைகள்
-
எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்
-
தர்மினி – அவளொருத்தி கீறிய படம்
-
அனார் – வெளிச்சத்தின் குரல்
-
சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்
எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்
ஓவியம் – ரஷ்மி
(01)
போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் – சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும் சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.
“என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”
அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?
“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைக்கின்றது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.”
கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றைவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.
“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”
செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?
ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது. இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.
எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.
“எனது உடைந்த குரலில்
நானும் பாடவிரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”
ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.
(02)
மனிதர்களில் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் முடிவில்லாத கனவு வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற இயல்பை பெற்றவுடன் மனம் ஆர்ப்பரித்து எல்லையற்று விரிகின்றது.
உலகத்தின் கோரப் பற்களாலால் குதறப்பட்ட மனிதர்கள் – ஒடுக்குமுறைகளுக்குள் வாழுகின்ற மனிதர்கள் – கனவு வெளிகளின் அசாத்திய எல்லைகளை அனுபவிக்கிறார்கள். போர் சூழப்பட்ட நிலம் ஒன்றில் வாழுகின்ற மனிதர்களின் கனவுலகம் சுதந்திரக் கனவுகளால் நிரம்பியிருக்கும். விடுதலை பற்றியும் சந்தோசங்கள் பற்றியும் நிறைந்திருக்கும். நிலத்திற்கான போராட்டம் ஒன்றில் நிலம் பற்றிய கனவுகளை மனிதர்கள் அதிகமாக உருவாக்குவார்கள். தமிழர்களுக்கு நிலம் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களுக்குள் சாதிய அமைப்பே நிலத்தை அடிப்படையாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதி சுதந்திரம், பெண்விடுதலை போன்று காணி நிலத்தையும் வேண்டிப்பாடியுள்ளார். தமிழர்கள் நிலங்களை உயிருள்ளவையாக பாவிக்கிறார்கள். உயிரின் உற்பத்திக்கான களமாக நினைக்கின்றார்கள். தோட்டமும் வயலும் கால்நடைகளும் சந்தோஷங்களும் சோகங்களும் இறப்புகளும் இழப்புகளும் நினைவுகளும் நிறைந்ததாக நிலத்தை அணுகுகிறார்கள். ஈழத்து நிலங்கள் இவற்றுடன் கூடவே போரையும் வீரத்தையும் துரோகத்தையும் நினைவுபடுகின்றன.
நாங்கள் ஒரு இரவில் நூறு கனவுகளைக் காண்கிறோம்
பிரிவு பற்றிய கனவுகள்
பிரிவு பற்றிய கனவுகள்
எல்லாமே அது தான்.
எங்கள் கனவுகளில்
பாலைவனங்கள் எங்கள் தலைகளின் மேலே சுழல்கின்றன.
மனிதர்களற்ற தெருக்களில்
கூரைகள் இல்லாத வீடுகளில்
பயிர்களற்ற தோட்டங்களில்
காளான்கள் பூத்தன
முட்கள் பெருகிப் பெருகி வானையளந்தன.
கற்பனை சாத்தியமாகின்ற பெருவெளியிலும் நாங்கள் பிரிவையே கனவு காண்கிறோம். எங்களுக்குள் சாத்தியமான எல்லா வெளியையும் பிரிவு நிரப்பிவிடுகின்றது. பிரிவு என்பது எங்களோடு பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. போராட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருத்தரை இணைக்கவேண்டிய கட்டாயத்தின் மூலம் எல்லாக் குடும்பத்திலும் பிரிவு வலுக்கட்டாயமாக சேர்ந்துகொண்டது. கூடவே இடப்பெயர்வு. நிலங்களைச் செல்கள் உழுது தள்ள – உயிரைக் காப்பாற்ற சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் லட்சக்கணக்கில் கிளம்பிய மனிதர்களின் கனவுகளில் பிரிவைத் தவிர வேறு எது ஆக்கிரமிக்க முடியும். இயற்கையினையும் சொந்தங்களையும் கட்டிக்கொண்டு வனப்பாக வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்து ஆளரவம் அற்ற தெருக்களையும் செல்களாலும் கிளைமோர்களாலும் சிதறடிக்கப்பட்ட வீடுகளையும் குருதியுறைந்த தெருக்களையும் இராத்திரிகளில் கேட்கின்ற அழுகுரல்களையும் சிதைந்து போன உடல்களையும் கடந்து இடம்பெயரும் போது பிரிவுத்துயர் அன்றி வேறெதுவும் நினைவிலும் கனவிலும் எழாது.
ஒவ்வொரு கிராமமாக இடம் பெயர்ந்து செல்லும் போதும் அவர்களை வரவேற்க புதிய கிராமங்கள் மீதம் வைத்திருப்பது முன்னைய மக்களின் பிரிவுத்துயர் மட்டுமே. ஆட்கள் இல்லாமல் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போதும் அங்கே கவனிக்க ஆட்கள் இல்லாமல் பற்றை எழும்பிப்போன நிலங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே சேதி பிரிவு. அகதிகளின் கனவுகள் நிலம் ஒன்றின் பிரிவைப் பற்றியதாகவே இருக்கும்.
காலத்தை நெய்தவனை
சபித்தன உக்கிப்போன பொம்மைகள்.
எங்களைக் கடந்துபோகின்ற ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும்
பெருமூச்சு விடுகின்ற பட்சிகள்
எங்கள் கனவுகளின் காட்சிகள்
தெளிவற்றும் உருவமற்றும்
இரவில் சிதறின
திசைகளில் எது சூரியனின் திசை
எது நாங்கள் பயணிக்கின்ற திசை?
மக்கள் கொத்துக்கொத்தாக இடம் பெயர்கின்றார்கள். தங்கள் உடமைகளை சைக்கிளிலும் வாகனங்களிலும் கட்டிக்கொண்டு பிள்ளைகளை இடுப்பில் சுமந்தபடி மழை வெயில் இரவு பகல் என்று எதையும் பொறுப்படுத்தாமல் இடம்பெயர்கிறார்கள். அடர்ந்த வன்னிக்காடுகளுக்குள்ளாக இருட்டினில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நடக்கிறார்கள். முன்னரே மக்கள் நடந்த தடங்களிலும் – இனி வரப்போகின்ற மக்கள் நடப்பதற்காக தங்களையும் உருவாக்கியபடி நடக்கிறார்கள். நிலத்தைப்பற்றிய கனவுகள் இருட்டில் சிதற அழிய இந்த கொடூர காலங்களை நெய்தவனை சபித்தபடியே திசையறியாத வனாந்தரத்துக்குள் உக்கிப்போன பொம்மைகளாக நடக்கிறார்கள்.
நாங்கள் பிரிந்து விட்டோம்
எமது நிலத்தை, எமது பூர்வீகத்தை
எமது பொறுமையை, எமது மௌனத்தை.
பின்குறிப்பு.
எஸ் போஸின் “காலத்தை நெய்தவனைச் சபித்தன பொம்மைகள்” என்ற கவிதையினை முன்னிறுத்தி இக்கட்டுரையின் பகுதி (02) எழுதப்பட்டிருக்கிறது.
* எஸ் போஸின் படைப்புகள் முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில் ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர் இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில படைப்புகள் மறைந்து வாழுகின்றன.
தர்மினி – அவளொருத்தி கீறிய படம்
இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளினையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களைப் பற்றியும் , இன்னொரு தொகுதி இடம்பெயர்வு – புலம்பெயர்வுகள் பற்றியும் இன்னுமொரு தொகுதிக் கவிதைகள் புலம்பெயர் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.
வெளிச்சத்தின் உண்மைகள்
இருட்டில் மன்னிக்கப்படுகின்றனவா?
மறைக்கப்படுகின்றனவா?
என்று ” குரல்கள் ” என்ற கவிதையில் கேள்வி கேட்கின்ற தர்மினி
இருளே உண்மை
இருளோ வெட்கம் அறியாது
அது கசிந்த மனதுகளைத் துடைக்கும் கடுதாசி.
என “இருளைத் தரிசிக்க…. ” என்ற கவிதையில் அவரே பதிலளிக்கிறார்.
சுதந்திரம் என்பதை என்னவென்றே அறியாத காலத்தில் உழன்ற மக்களின் உணர்வுகளை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. போராட்ட குழுவும் அரசாங்கமும் ஒப்பந்தங்கள் செய்வதும் – குறுகிய காலத்திலேயே அவை அனைத்தும் மீறப்பட்டு மீண்டும் இருள் சூழ்வதும் ஈழத்து மக்களுக்கு புதிதான ஒன்றும் இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் சுதந்திரத்தைப் பற்றிய கனவு மேலெழுகிறது. சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே சுதந்திரத்தை அளிப்பதைப் போன்ற அவல நிலைமையை அடைந்துவிட்டார்கள். இதனால் சுதந்திரம் என்பதே என்னென்று அறியாமல் – அதற்காக காத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தைப் பற்றி பாடியும் எழுதியும் அலுத்துவிட்டார்கள். எழுதிய அனைத்துமே சருகுகளாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
வெளியே மழையில்லை
கருமுகிலில்லை
புழுக்கமில்லை
ஆயினும் மழை பற்றிக் கதைக்கலாம் தானே?
– மழை முறியுமா?
உதிரும் மிகுதி வார்த்தைகளின்
குவியலைச் சுமக்கிறது அடிமரம்.
– அவளொருத்தி கீறிய படம்
போர்க்கவிதைகள் வெறுமனே வார்த்தைகளையும் உணர்வுகளையும் மட்டும் கொண்டுவருவன அல்ல. போர்க்கவிதை ஒன்றின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. கவிதையுடன், அதன் பின்னணியில் ஓடுகின்ற வரலாறும் கடத்தப்படுகிறது. எந்த ஒரு இலக்கியத்தின் பின்னும் அதன் பின்னணி வரலாறு காலம் காலமாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் போரிலக்கியங்கள் கடத்துகின்ற வரலாறு மிகவும் வலிமையானது. “1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி ” என்ற கவிதை பொதுவான வாசிப்பில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் தர்மினி குறித்த தினத்தைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்,
” இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.
அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள் உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம். ” – அவரின் தூமை வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
கவிதையாக உருவெடுக்கின்ற பொழுது,
அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
அதே ஆதரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.
தர்மினியை – பொதுவாக கலைஞர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பின்னர் அடிமையாகிப்போகின்ற தனிமை சூழ்ந்துகொள்கிறது. அகதியாக அந்நியதேசத்து சென்ற எல்லா சாதாரண மனிதர்களையும் தனிமை வாட்டும் என்றால் ஒரு கலைஞரை எத்தனை சித்திரவதை செய்திருக்கும். ஊரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஞாபகத்திலிருந்து பாடவேண்டிய துர்பாக்கிய நிலையை புலம்பெயர் கலைஞர்கள் அடைந்துவிடுகின்றார்கள். இதனால் தர்மினியின் கவிதைகளில் தனிமையோடு ஏக்கமும் பிரிவுத்துயரும் சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது.
” சுவர்கள் ஒட்டிக் கிடக்கின்றன
விளக்கின் நிழல்
ஒரு பூச்சி
தனித்துலையும் மனது ”
– இருளோடு
” ஒன்றொன்றாய் …
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்து
கிழித்தபடி
இதோ மிச்சமாக
தனியாக
நானும் இக்கணமும் ”
– நாட்களைக் கழித்தல்
” மறுபக்கம் திரும்பி என்னிடம்
நீயொரு அகதி என்கிறது
மற்றொரு நாவு
பொது வெளியில்
ஒளிந்துகொள்கிறது
உயர்த்த முடியாத
குரலுக்காக மௌனிக்கிறது ”
– என் நாவு பிளந்து
தர்மினியின் ” முத்தங்கள் ” என்ற கவிதை முக்கியமானதொன்று. கவிதை முழுதும் உணர்வுகள் கொட்டிக்கிடந்தாலும் – அதை மீறி கவிதை எடுத்துக்கொண்ட கலாசார வேற்றுமை மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் முத்தங்கள் சாதாரணமானவை. முத்தங்கள் ஆதரவின் குறியீடு. அன்பின் வெளிப்பாடு. எல்லாச் சந்திப்புகளிலும் முத்தங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் எமது பணப்பாடுச் சூழல் அப்படியானதல்ல. அந்நியர்களுடனான முத்தம் காமத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. சொந்தங்களுக்கு முத்தம் கொடுப்பது ஐந்து ஆறு வயதுகளோடு மறைந்துபோய் விடுகிறது. பின்னர் முத்தம் சொந்தகளுக்கு வெட்கத்தின் குறியீடாகவும் அந்நியர்களுக்கு அருவருப்பின் குறியீடாகவும் மாற்றமைடைகின்றது. அம்மா- மகன் முத்தங்கள் வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களை விட; அப்பா- மகள் முத்தங்கள் விமர்சனப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் இந்த மண்டிப்போன கலாசாரத்தின் குப்பைகளாக இருக்க தர்மினி இன்னொரு முத்தத்தைப் பற்றிப் பாடுகிறார். கொடுக்கப்படாத முத்தம். மகள் அம்மாக்கு கொடுக்க மறந்த முத்தத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்த தேசத்தில் யார்யாருக்காகவோ ஒட்டுகின்ற கன்னங்கள் குவிக்கின்ற உதடுகள் – அம்மாவிற்காக ஒட்டவும் குவியவும் மறந்ததைப்பாடுகின்றார்.
“யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக்
கொஞ்சி அணைத்திருக்கலாமோ?”
– முத்தங்கள்
மழையைப் பற்றி கவனத்துக்குரிய மூன்று கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது மழையும் நெருப்பும். ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டம் – போராட்டக் குழுவும் அரசாங்கமும் போரில் உக்கிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது போக்குவரத்து , பண்டப்பரிமாற்றம் என்பன கூடுதலாக தடைப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்க – பொருட்கள் தீர்ந்துவிட்டன. கள்ளமாக பொருட்களை கொண்டுவந்து சேர்த்தாலும் கேள்வியின் அளவிற்கு போதாமல் போனது. கூடவே ஒவ்வொன்றினது விலையும் பத்து பன்னிரண்டு மடங்காக உயர்ந்தது. காரணம் பொருட்களுடன் உயிரையும் பணயம் வைத்தே பண்டப் பரிமாற்றம் நடந்தது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பால்மாக்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதே சமயம் வெளிநாட்டு உதவிகள் நிறையைக் கிடைத்து கைநிறையப் பணம் புழங்கியது. ஆனால் பொருட்கள் தான் இல்லை.
” கொள்ளைக்காசிருந்தும் விற்கயாருமில்லை ”
– மழையும் நெருப்பும்
மற்றைய இரண்டு மழைக் கவிதைகளும் ஒப்பீட்டுக் கவிதைகள். ” சத்தமில்லாத மழை ” மற்றையது ” மழைச்சத்தம்” . இவ்விரண்டு கவிதைகளும் வெவ்வேறான மனநிலைகளிலிருந்து எழுதப்பட்டவை. வெவ்வேறான நிலச்சட்டகம். எங்கள் ஊர்களில் மழையின் சத்தம் என்பது வெறும் முகில்களில் இருந்து நீர்த்தாரைகள் வீழ்வது மட்டுமல்ல –
” மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி
கிணறு வழிய
பள்ளத்து வெள்ளங்களில்
தவளைகள் கத்தும் ”
– மழைச்சத்தம்
இதையெல்லாம் பார்த்து கேட்டு சிலிர்த்த உடல் அந்நிய தேசம் ஒன்றில் மழையின் சத்தத்தை –
” மின்னி ஒரு வெளிச்சம்
என் முன் விழ
திரைவிலக்கி வானம் பார்த்தால்
மழைக் கயிறுகள்
மண்ணில் ”
– சத்தமில்லாத மழை
ஊர்களில் –
” கூதலும் சத்தமுமாக மழை ”
– மழைச்சத்தம்
அந்நிய தேசத்தில்
” மண்ணில் கரைந்து கொண்டிருந்தன ”
– சத்தமில்லாத மழை
” ஒரு குருவி
அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பத்தைத் தவிர
வேறு வழியில்லை ”
– முடிவற்றது
பின்குறிப்பு
தர்மினியால் “1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி” என்ற தலைப்பில் தூமை இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தூமை இணையதளத்தை மேலும் துலாவிய பொழுது – இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக தர்மினி மற்றும் மோனிக்கா ஆகியோர் செயற்படுகிறார்கள் என்றும் பெண்ணியம் சார்ந்த உரையாடல்கள் பெண்களின் படைப்புக்கள் என்று முற்றுமுழுதாக பெண் இயக்கத்தால் நடத்தப்படுகிறதும் என்றும் புரிந்துகொண்டேன். தொடர்ச்சியான இயங்குகையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தூமை -ஒரு காரணப்பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. “இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
அனார் – வெளிச்சத்தின் குரல்
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்”
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக் கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும் அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும். கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும் நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது படைப்பு வெளியிலிருந்து கவிதையினை உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும் என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை” என்கிறார்.
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு சிறந்த முன்னுதாரணமாக மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
பின்குறிப்புகள்
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும். மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும். வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும் பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன. நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
இதுவரை சுகுமாரன், இனி நான்
இல்லை
ஒன்றே ஒன்று
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
****************

