அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.

சமகால எழுத்து வட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளில் இருந்து இலக்கியத்தை விரித்து எடுத்தல் என்ற செயற்பாடு சொற்பமாகவே நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத்தின் அடைவு மட்டம் எதைக்கொண்டு நிர்ணயிக்கபடுகின்றது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. நான் இலக்கிய அடைவு மட்டம் என்பது எம் முன்னோடிகளின் படைப்புகளை எமது படைப்புக்கள் தாண்டும் போது ஏற்படுகின்றது என்பேன். தாண்டிய பின்னர் அதை அடுத்த தலைமுறை தாண்டும் போது இன்னொரு அடைவு மட்டம் எனவும் பின்னர் இன்னொன்றாகவும் காலம் காலமாக விரித்துக்கொண்டு போகவேண்டிய ஒன்றாக கருதுகின்றேன். இந்த எழுத்து மீறல்கள் அத்தியாவசியமானவையே. இது ஆரோக்கியமான எழுத்துலகம் உருவாகும் சாத்தியத்தை உண்டு பண்ணும். இலக்கிய வரம்புகள் என்று ஒன்று உள்ளதை யாரும் மறுத்துவிடமுடியாது. நாம் காலத்தை மீறிய படைப்புக்கள் என்று கருதுகின்ற படைப்புக்கள் எல்லாமே ஒருவகையில் ஏதோ ஒரு வகையில் இலக்கிய வரம்புக்குள் நின்று தன்னை வெளிப்படுத்தியதாகவே உள்ளது. ஒரு படைப்பை இன்னொன்று மீறிச்செல்லல் என்ற அடிப்படையில் எழுகின்ற படைப்புக்கள்  இலக்கிய அத்துமீறல்களுக்கு உள்ளாகின்றன.
 
படைப்பாளி தன் நோக்கத்தை வெளிபடுத்த பயன்படுத்தப் படுகின்ற எந்த இலக்கிய வடிவமும் வெறும் அனுபவங்களின் கோப்புக்களாகவோ அல்லது புனைவுகளின் சஞ்சாரமாகவோ அமைந்து விடுகின்றது.  இது ஒரு இலக்கிய மந்த நிலையே.இதை யாராலும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை. அப்படி முயன்ற பலர் வேறு தளங்களை அடைந்தார்களே ஒழிய செம்மையான இலக்கியம் ஒன்றை வெளிக்கொண்டுவர முடியவில்லை. இந்த கட்டுரை எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் என்ற படைப்பை நாவல் என்ற வடிவத்திற்குள் கொண்டுவருவதில் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றியது.
 
தண்ணீர் என்ற படைப்பு 1973 ஆம் ஆண்டு வெளியாகி 2005 இலும் மறுபதிப்பு செய்யப்பட்ட முக்கிய இலக்கிய படைப்பு. முன்னுரையிலேயே அசோகமித்திரன் இது தண்ணீர் என்ற பொருளைத்தாண்டி வாழ்கையின் நெருக்கடி என்ற விடயத்தை வெளிபடுத்தியுள்ளதாக கூறுகின்றார். முதல் பிரச்சனை அங்கிருந்தே ஆரம்பமாகின்றது.
வாழ்கையின் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் என்று அவர் விளிக்கின்ற துன்பம் , ஏமாற்றம் , கவலை , வாழ்கையை வாழமுடியாமல் சாகின்ற முடிவை ஏற்படுத்தும் தருணங்கள் என்பவை நாவலின் மேலோட்டமான தண்ணீர் பிரச்சனை என்ற படலத்தை தாண்டி வெளிவந்திருகின்றதா என்றால் இல்லை என்ற மனநிலையையே உருவாக்குகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் நாவலில் இருக்கின்ற இருமை தன்மை. ஒரு பக்கம் ஆழமான தண்ணீர் பிரச்சனை இன்னொருபக்கம் சாதாரண வாழ்க்கைக்கு உட்பட்டிருக்க கூடிய தங்கை அக்கா வாழ்கை இன்னல்கள், இவை இரண்டையும் பிணைந்து உருவாக்கபட்டிருகின்ற எழுத்தோட்டத்தில் தண்ணீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கொடுக்கின்ற ஆழமான விவாதங்களை மற்றைய பக்கம் கொடுக்க தவறுகின்றார். இதில் சமநிலை அல்லது உட்பொருள் மேலோங்குகின்ற தன்மை இல்லாமல் போகின்றபடியால் தண்ணீர் பிரச்சனையோடே கதை முழுதும் நகர்ந்து விடுகின்றது.
 
ஒரு நாவலுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு அதன் விரிவு. இவ்விரிவை பலவிதமாக பிரித்துகொள்ளலாம். கதைக்கரு விரிவு, கதைக்கள விரிவு, கதாமாந்தர்களின் விரிவு, சம்பவங்களின் விரிவு, என கூட்டி கொண்டே செல்லலாம். இந்த விரிவில் தான் ஒரு நாவல் தனது திடமான உருவினை பெறுகின்றது. இன்றைய இலக்கிய வாசகர்களால் மகத்தான இலக்கியம் என்று பேசக்கூடிய ருச்சியன் இலக்கியங்கள் இந்த விரிவினை மிக சரியாக கையாண்டிருப்பார்கள். இந்த விரிவு வாசகனுக்கு ஒவ்வொரு முறை வாசிப்பிலும் ஒவ்வொரு கோணத்தில் நாவலை அணுக வழிசெய்யும். ஒவ்வொரு வாசலாக திறந்து விடும். ஒரு பரந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த விரிவு வழிசெய்யும்.
 
தண்ணீரில் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை விரிவு என்ற வடிவமே இல்லாமல் ஒரு தேக்கமாகவே சென்றுகொண்டிருகிறது. நான்கு வீட்டிற்க்குள் இரண்டு தெருவுக்குள் ஆறு ஏழு கதா மாந்தர்களோடு கதை முற்று பெறுகின்றது. இந்த பௌதீக குறுக்கம் வாசகனையும் குறுக்கி விடுகின்றது.யமுனாவும் சாயாவும் டீச்சரும் மீண்டும் மீண்டும் ஒரே உணர்வலைகளுடன் வந்து ஒரு பாத்திர குறுக்கத்தை உள்ளாக்கிறார்கள். பாத்திர பெருக்கத்திற்கு ஏற்றவாறு கதையின் போக்கு அல்லது களம் அமைந்து கொள்ளவில்லை. டீச்சர் பற்றிய விவரணத்துக்குள் சென்ற அ.மி தனது கருவிற்கான உந்துதலை மட்டுமே அளிக்கும் வகையில் சம்பவங்களை கோர்த்து விட்டு விலகுகிறார். அதே போன்று யமுனாவும் சாயாவும் தங்கள் பாட்டி வீட்டிக்கு செல்லும் போதும் அதே விரிவின்மை தலை தூகுகின்றது. சாயாவின் கணவன் பிள்ளை என்ற உறவுகள் ஆகட்டும் யமுனாவின் கள்ள காதலன் என்ற உறவாகட்டும் மேலோட்டமாக வந்து போகின்ற ஆழமற்ற பாத்திர சித்தரிப்புகளாக காணப்படுகின்றனர்.அதே போன்று தான் தூய்மையற்ற தண்ணீர் சம்பந்தமான பிரச்சனையும் இன்ஸ்பெக்டர் பிரச்சனையும் எந்த நகர்வுகளுமே கதைக்குள் செலுத்த முடியாத தட்டையான கதை சொல்லலாக முடிந்து போகின்றது. கதையின் போக்கு கதையில் மடிப்புகளை உருவாக்கி வாசகரை திறக்க செய்ய முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.
 
இவை போன்று சில குறிப்பு பிழைகள் தண்ணீரில் இருக்கத்தான் செய்கிறது.

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலைப்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில் பனி படர்கின்றது. வெறுப்பின் உச்சத்தில் போய் மணிக்கட்டை அறுத்துகொள்ளும் போது கை நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போகின்றது. முதல் கடிதத்தை காதலிக்கு கொடுத்துவிட்டு ஒளிந்திருந்து  என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் போது கண்கள் படபடத்து கொள்கின்றன. கதை மாந்தர்கள் நகரும் இடமெல்லாம் நாமும் நகர்ந்து போகின்றோம். அவர்களின் உணர்வுகள் எங்களினுள்ளும் தொற்றிகொள்கின்றது. இந்த அனுபவம் தான் சிறுகதை. இதில் உண்டாகும் தருணங்கள் மகத்தானவை. கறுப்பு புள்ளி எழுத்துகளின் ஊடு இந்த பிரபஞ்ச அசைவுகளை எல்லாம் அனுபவித்து விடுகின்றோம்.
 
அப்படித்தான் நாய் வீட்டு ராஜரத்தினத்தின் வீட்டு ஒழுங்கையும். யாழ்பாணம் என்றில்லாமல் வடக்கின் எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு ராஜரத்தினமும் ஒழுங்கையும் இருந்துகொண்டிருகிறது. எங்கள் வீட்டின் எதிர் ஒழுங்கையிலும் அந்த ராஜரத்தினம் இருந்துகொண்டிருக்கின்றார். இந்த மனநிலை உருவாக்கம் மனதினில் ஆழப்பதிவதாக ஜூட் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது. சிறுகதை ஒன்றின் நீள் கால நிலைப்பு, அதில் பதியப்படுகின்ற கூறுகளின் கனத்திலேயே தங்கியிருகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்வியலின் தடயங்களை பெரிதளவில் இலக்கியங்களிலிருந்தே சேகரித்து கொள்கிறோம். அடுத்த சந்ததிக்கு அதை பாதுகாத்து கடத்த முயற்சி செய்கிறோம். இந்த செயன்முறைக்கு ஏதுவான இலக்கியங்களே மகத்தான இலக்கியங்கள். சிறுகதைகளையும் அந்த நோக்கோடு பார்க்கலாம். ஒரு சிறுகதையால் சமூகத்தில் மாற்றம் உருவாகிவிட முடியாது. சமகால அயல் எழுத்தாளர்களை அவர்களே அறிமுகப்படுத்தும் வரை நாமறியோம் என்னும் கீழ் நிலை சமூகத்தில் இருக்கும் போது சமூக மாற்றம் இயலாத ஒன்று. ஆனால் ஒரு சிறுகதையால் மனதில் மூலைகளில் கஞ்சலாய் கிடக்கின்ற அனுபவங்களை மீட்டி கொண்டுவந்து தரமுடியும். அந்த களத்தில் எம்மை அமர்த்தி ரசித்திகொள்ள முடியும். சிறுகதை என்ற கலை வடிவத்தின் வெற்றி அந்த பிணைப்பில் தான் இருகின்றது. ஜூட் இல் வருகின்ற கீர்த்தனாவும், சியாமளனும், தங்கராசும் எம்முள் இருகின்றவர்களே. வீதியில் செல்லும் போது அந்த வீதி முடிவு மட்டும் விடாமல் துரத்திக்கொண்டு வருகின்ற ஜூட்கள் எம்மத்தியில் இருகின்றனவையே. இந்த கதைமாந்தர் அன்னியோன்யம் கதையை மூளைக்கு வலிக்காமல் செலுத்த பெரும் உதவி புரிகின்றது.
 
கதையின் பின்னணி பெரும்பாலும் இரண்டாயிரத்து ஐந்து ஆறுகளில் இருந்திருக்க கூடும். போர் சுற்றிகொண்ட காலம். ஒரு சாதாரண எழுத்தாளான் பார்வையில் யாழ் நகர மக்கள் வாழ்வு வெறிச்சொடிப்போய் இருந்திருக்கும். புறவயமாக அவர்களின் இன்னல் நாட்கள் மனக்கசப்புகள் என போரின் மீதான கொடூரம் எழுத்துகளை எரித்துகொண்டிருக்கும். ஆனால் ஜூட் வேறுவிதமாக நகர்கின்றது. யாழில் வாழ்ந்த எழுத்தாளன் போரின் நடுவில் காணுற்ற கொண்டாட்டம் உவகையளிக்கின்றது. ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக்கிகொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை கூறுகின்றது. இயல்பற்ற அவர்களின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற சந்தோஷமான விடயங்களை கூறுகின்றது.
 

வெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது.  ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.

 

ராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம்.

 
யாழ் பற்றி கேள்வியுராத சில வாழ்வியலை அறியக்கொடியவாறு உள்ளது. இந்த தகவல் தளத்தினூடான சிறுகதையின் பயணிப்புதான் அதன் வலுவை கூட்டி கொள்ளும்.
 

சைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே புடிக்காது 

 
 
நிதர்சனமான சிக்கலையும் அதன் பின்னாலான சம்பவகோர்ப்புக்களும் கதையின் தளத்தை மாற்றிவிடாமல் கொண்டு செல்ல வழிசெய்கின்றன. இன்றைய சிறுகதைகள் உலகில் பெருவாரியான கதைகள் மிருகங்கள் பறவைகள் என்ற உயிரின வட்டத்துக்குள் நின்று பேசுகின்றன. அதில் ஒன்றகாவே இந்த கதையில் இருந்து அழகியலை எடுத்துவிட்டால் எஞ்சும். கதையின் கருவுக்கு அதிக கவனம் செலுத்து இருக்கலாம் போல தோன்றுகிறது. யாழ் செம்மண் வீதிகளில் இருந்து லண்டனுக்கு மாறியபோது உண்டாகின்ற கதைப்பிளவு தள மாற்றத்தை சீராக ஏற்படுத்துவதில் சிக்கலை உண்டாகுகின்றது. ஜூட் இன் மறைவில் எழுத்தாளர் ஏற்படுத்தி இருக்ககூடிய கனம் யாழின் பெரும் சோகத்தை கொண்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை மிக சாதாரணமாக கடந்து செல்கிறார்.
 
கதையின் நடுபகுதியில் வருகின்ற கீர்த்தனாவின் முன்னை நாள் அனுபவங்கள் தொய்வினை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதிலும் எழுத்தாளர் உருவாக்குகின்ற யாழ் பின்னேர வகுப்பின் பின்னரான மெல்லிய கூடல்கள் ரசிக்க வைக்கிறது.
மிகையில்லாமல் சாதாரண ஒரு வாழ்க்கையையும் வாழ்வியலையும் ரசிக்கும் படியாக , மிக முக்கியமாக யாழின் அழகியலை பதிகின்ற விதமாக ஜூட் என்ற சிறுகதை எல்லா வயதெல்லைக்கும் ஏற்புடையதாக எழுதப்பட்டுள்ளது. எந்த சலனமும் இல்லாமல் முற்று முழுதாக யாழையும் நாக்கில் எச்சில் வழிந்து கொண்டிருக்கும் ஜூட்களையும் அனோஜன் பாலகிருஷ்ணன் அவரின் தெளிவான விவரிப்புக்கள் மூலமும் கதை சொல்லல் மூலமும் வாசகனை அணுகியிருப்பது ஜூட் இன் வலிமையான இருப்பை உறுதிசெய்கின்றது.
ஜூட் சிறுகதையை வாசிக்க

ஜூட் – சிறுகதை

“வினோத நூலகம்” – சிறுகுறிப்பு

எந்த சிறுகதையை நான் வாசித்தபோதும் “வினோத நூலகம்” என்ற சிறுகதையை வாசித்ததில் கிடைத்த அனுபவம் அவை எதிலும் கிடைத்ததில்லை. ஜி. குப்புசாமி மொழி பெயர்ப்பில் கல்குதிரையின் கார்கால இதழ் ஆவணி புரட்டாசி 2016 இல் வெளிவந்த ஹாருகி முராகாமி இன் சிறுகதை தான் வினோத நூலகம். கதைக்கு விமர்சனம் என்றெல்லாம் எழுதமுடியாதஅளவு என்னுள் தாக்கம் செலுத்துகிறது இந்த புனைவு. ஒரு மிக சாதாரண நிகழ்ச்சியில் தொடங்கி வரிக்கு வரி விரிந்துகொண்டே போகின்ற புனைவுத்தன்மையில் மூழ்கிப்போய்விட்டேன். கதை எந்த பக்க நகர்வினை கொண்டு செல்கின்றது என்ற கேள்வி இன்னும் என்னுள் விதைத்த படியே இருக்கின்றது. மூன்று முறை வாசித்ததிலும் மூன்றுவிதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகசியமாக அதில் வருகின்ற எல்லா நிகழ்வுகளும் அதில் கொடுக்கப்படுகின்ற எல்லா உணவுகளும் அதிலே வினோதமாக சஞ்சாரம் செய்கின்ற கிழவரும் ஆட்டுத்தலை காவலரும் உருவை மாற்றிக்கொண்டே இருக்கின்ற நிலவாகவும் குருவியாகவும் மாறுகின்ற அழகிய பெண்ணும் என் மனதின் மூலைகளில் ஒளிந்துகொண்டிருக்கின்ற புதுவிதமான அழகியலை தூண்டுகின்றன.
விநோதநூலகம் என்ற சிறுகதையை வாசிக்க
https://brinthansite.wordpress.com/2017/04/16/விநோத-நூலகம்-ஹாருகி-முர/

நடனத்திற்கு பிறகு – இரு தளங்களின் கூடல்.

அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் எம்மை சென்றடைகின்றன என்ற சிறிய கேள்விக்கான விடையின் பரப்பு மிகப்பெரியது.எந்த வாழ்வில் நாம் இருந்துகொண்டிருக்கிறோமோ அந்த வாழ்வியலில் உள்ள அக புறக் கூறுகள் எம்முள் செலுத்தக்கூடிய ஆதிக்கத்தின் அளவை ஆராய்தல் மிக முக்கியமானது. புறக்கூறுகளும் அத்தியாவசியமான ஒன்றே இருந்தும் அக்கூறுகள் செலுத்தக்கூடிய நுட்பமான நகர்வுகளை புறக்கூறுகள் நடத்திவிட முடியாது. மிகச் சிறிய நிகழ்வுகளில் இருந்து பெரும் படியான நிகழ்வுகள் வரை அதன் அகக்கூறுகள் கொண்டிருக்க கூடிய கனதியினை புறக்கூறுகள் கொண்டிருக்குமா என்பது சந்தேகம். இவ்வளவு கனதியான அகக்கூறுகள் எம்முள்ளே ஏற்படுத்துகின்ற உளவியல் மாற்றங்கள் பற்றி பேசுவதே நடனத்திற்கு பிறகு என்ற டால்ஸ்டாயின் சிறுகதை.
 
நாவல்களில் தனக்கான நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட டால்ஸ்டாயால் சிறுகதைகளில் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை, என்ற குறையை போதுமானவரை நிரப்பிக்கொள்வதற்கு சான்றாக இந்த சிறுகதையை குறிப்பிடலாம். இந்த கதை அவரின் சிறுவயது அனுபவத்தின் வெளிப்பாடாகவே அவரின் 75வது வயதில் எழுதப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாய் பெரும்பாலும் தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் குறிப்புகளாக்கி வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர். அவற்றிக்கு சிறு புனைவுகளை சேர்த்து நாவல்களாயும் சிறுகதைகளாயும் எழுதுகின்றவர். சுந்தர ராமசாமி குறிப்பிடுவார்,” பெரும்பாலான காலம் கடந்து வந்திருக்கின்ற எழுத்துக்கள் எல்லாமுமே அனுபவங்களின் குறிப்புகள் தான்.”  மற்றவை எல்லாம் மின்னல் போல பளிச்சிட்டு மறைந்துவிடும் , அனுபவங்கள் வானத்தை போல நீள அகலமற்ற நிலவுகையை உடையவை.
 
ஆழ்ந்த அனுபவமுள்ள எழுத்தாளனாக கருவினை விடய சித்தரிப்புக்கள் மூலம் அணுகுகின்ற யுக்தியை இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. நடனத்தின் பின் என்ன என்ற தேடலை உருவாக்குகின்ற காதல் கலந்த அக்கால சூழ  பின்னணியிலேயே கதையின் தளம் அமைகின்றது.
 
இந்த சிறுகதை இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளில் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. இரவிரவாக சந்தோசமாக ஆடப்பட்டு முடிந்த mazurka என்ற நடன இரவொன்றை பற்றியும் அடுத்தநாள் காலை வன்மையாக தாக்கப்பட்டு இராணுவத்தால் இழுத்துவருகின்ற தாத்திரியன் பற்றியும் வெவ்வேறு உணர்வு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பொதுவானவர்கள் கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் உம் முதல் நாள் இரவு அவருடன் நடனமாடிய வரிங்கா என்ற உயர்குலப்பெண்ணின் தந்தை ஆவார்கள். வரிங்காவின் தந்தையார் ராணுவத்திலே உயர்பதவிவகிக்கின்றவர். இவர்கள் இவரோடு முதல் நாள் இரவு வரிங்கா அடுத்தநாள் காலை தாத்திரியன் என நான்கு முக்கிய பாத்திர வார்ப்புகள் இருக்கின்றன.
 
முதல் நாள் இரவில் பிரமாண்ட விருந்துபசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கூடவே mazurka என்ற போலந்தில் ஆரம்பமான ஆடற்கலையும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. அந்த விருந்து தான் கதைசொல்லிக்கும் வரிங்கா என்ற இளம் அழகிய மாதுக்குமான காதல் உருவாகிய புள்ளியாகும். அத்தனை வருட மொழி அனுபவமும் திரண்டு அந்த நடனத்தின் எழிலையும் இவான் வாசிலியேவிச் மற்றும் வரிங்காவின் காதலையும் கொண்டாடிக்கொண்டிருந்தது. அணுவணுவாக அங்க அசைவுகளையும் இருவருக்குமான ஒருங்கிணைப்பையும் ஒரு பூவின் இதழ் மேலே விழுகின்ற பனித்துளியினை போல வர்ணித்துக்கொண்டு செல்வார். காலம் ஆக ஆக இவான் வாசிலியேவிசின் காதல் ஆற்றாமை எழுகின்ற வீரியமும் இருவரும் நடனத்தின் முடிவில் பிரிந்து சென்றதும் இவான் வாசிலியேவிச் வரிங்காவை நினைத்து உழல்வதும் சொற்களோடு உணர்வுகளையும் கடத்திக்கொண்டு செல்கின்றது. இது ஒருபுறம் செல்ல இன்னொருபுறம் அதே இரவில் தந்தை மகளுக்கான உணர்வுகளை அதே பொறுமையுடன் டால்ஸ்டாய் விவரிக்கின்றார். தன் மகளின் விருப்பத்திற்கு இணங்க தனக்கு பொருத்தமில்லாத காலணியை அணிந்து கொள்ளும் தந்தையாக  காட்டப்படுகிறார். அந்த இரவை அதோடு முடித்து விடாமல் நீட்சியாக்கி இவான் வாசிலியேவிச் வீடு சென்று காதல் வழியால் துடிப்பதாகவும் காலை அவளை நேரில் சென்று சந்தித்தேஆக வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி அடுத்த நாள் நிகழ்விற்கு நிகழ்வு கோர்ப்பை ஏற்படுத்துகிறார்.
 
முதல் நாளில் இருவேறு விதமாக காதல் என்ற மென்மையான உணர்வுநிலையை வெளிக்கொண்டுவந்த டால்ஸ்டாய் ஒரே இரவில் வாசகரின் உணர்வு போக்கை மாற்றி விடுகிறார். அன்பை உருகி கொட்டிக்கொண்டிருந்த எழுத்துக்கள் செந்தழல் போல கடுமையாகிப்போனது. காலையில் வரின்க்காவை பார்ப்பதற்க்கு வீதியில் இறங்கிய இவான் வாசிலியேவிச்க்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதுவரை ஒரு மிக சிறந்த தந்தையாக தெரிந்த வரிங்காவின் தந்தை ஒரு கொடூரமான ராணுவஅதிகாரியாக தெரிகின்றார். தாத்திரியனை ஈவுஇரக்கமின்றி தாக்குகின்ற அணியை வழிநடத்தும் கொடூரனாக காணப்படுகின்றார். அவ்விடங்களில் டால்ஸ்டாய் அன்றைய ரஸ்சியன் சமூகத்தினுள் விதைந்து கிடந்த சாதியத்தை எடுத்தாளுகிறார். உணர்வு ரீதியில் ஒரு தாத்திரியனுக்கும் உயர்குல இராணுவ அதிகாரிக்குமான முண்டல் இதில் பேசப்படுகின்றது. இதையெல்லாம் கண்ணுற்ற இவான் வாசிலியேவிச் தன் காதலை அதோடு முடித்து கொண்டு அரச வேலைக்கு இனி சேரப்போவதில்லை என்ற முடிவுடன் வீடு திரும்புகிறான். இதோடு கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் தன் அனுபவத்தை முடித்துகொள்கிறார்.
 
முதல் இரவில் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் ஆத்மாத்தமாகவும் கருதப்பட்ட காதல் இரண்டாம்நாளில் இடமற்றுப்போகின்றது. ஒரு ஆழமான உணர்வின் நிலவுகை நிரந்தரமானது இல்லை. சந்தர்ப்பங்கள் திசைதிருப்பக்கூடியன என்ற ஆழமான கருத்தியலை விதைக்கின்றது. வரிங்காவின் தந்தையின் உண்மை முகம் இராத்திரி விருந்தில் இருந்ததாகவும் அவரின் பணியே இந்த கடுகடுப்பான நிலைக்கு அவரை உருமாற்றியதாகவும் இவான் வாசிலியேவிச்நினைத்து அரசவேலையை வெறுத்திருக்கலாம். ஆனால் அவனின் தீராத காதல் தாகம் சில நொடிகளுக்குள் வற்றிப்போனதிற்கான காரணத்தை தேடிய வாசகரை கொண்டு செல்கிறது நடனத்திற்கு பிறகு. இவான் வாசிலியேவிச் ஏற்பட்ட உணர்வு நிலை போராட்டத்தில் மேலோங்கிய தடுப்புகள் அவன் ஆழமற்ற உணர்வுகளை உந்தி வெளியேற்றியிருக்க கூடும் என்றே எண்ண தோன்றுகின்றது. இப்படியான நுண்ணிய நகர்வுகளுடன் செல்வது தான் வாழ்க்கை என்ற யதார்த்தமான பார்வையையும் வாசகனுக்கு கூறிச்சென்றிருக்கின்றது.
 
After the dance ஐ ஆங்கிலத்தில் வாசிக்க
https://ebooks.adelaide.edu.au/t/tolstoy/leo/after_the_dance/

அடங்கிப்போகும் சலசலப்புகள் – கவிதா பாரதி

( 5.4.17 ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதா பாரதியின் கட்டுரைக்கான விமர்சனம்)
தலைப்பை பார்த்தவுடனேயே வாசித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளூறியது. “ஆண்பால் பெண்பால் அன்பால் ” என்று வெள்ளை , கறுப்பு , வெள்ளை என்ற வரிசையில் அடுக்கப்பட்டிருந்தது தலைப்பு. இந்த குறியீடு பெண்ணியத்தின் இருள்மையை நோக்கிய வழமையான கட்டுரை என்ற சலிப்பையும் ஏற்படுத்தவே செய்திருந்தது, பழக்கப்படாத எழுத்தாளர் வேறு – கவிதா பாரதி.
கதையையும் கருத்தையும் பின்னணியையும் தேக்க நிலை பெண்ணியத்தையும் அதன் தீர்வுகளையும் ஒரு சலனமற்ற நீரோட்டம் போல பின்னி பின்னி குழைத்து தந்திருக்கின்றார் கவிதா பாரதி. பாரதியையும் வள்ளுவனையும் உதாரணமாக ஆரம்பத்தில் எடுத்தாளப்படும் போது காலம் கடந்த இலக்கிய கட்டுரையோ என்றிருக்கும் போது அப்படியே சமகாலத்துக்குள் குதித்தது முகவுரை. மூத்த ஆண்மகனாக தன்னை சித்தரித்து கொள்ளும் சுய அனுபவக்கதையினூடு கட்டுரை விரிகின்றது. கிராமத்தில் காணப்படுகின்ற ஆண் பெண் சமத்துவமின்மை , ஒரு மூத்த ஆண்மகனை எப்படியெல்லாம் அல்லலுறச்செய்யும் என்ற நிதர்சன நோக்கு பாராட்டுக்குரியது. அந்த ஆணின் மனநிலை பிறழ்வுகள் என்பதை விட மனநிலை விரிவுகளை கூறும் இடங்களில் வாசகனின் தன்னிலை சார் உணர்வுகள் தூண்டப்படுகிறது. வாசிப்பில் என்னை படம்போட்டு கட்டிய உணர்வுநிலை தொடர்பை அது ஏற்படுத்தி இருந்தது.
பால்யத்தில் ஏற்படுகின்ற முதல் காதலையும் அதன் விறுவிறுப்பையும் பற்றிக்கொண்டு நகர்கின்ற கதையோட்டம் வழமையான காதல் கதைகள் கொடுக்கின்ற இழுவை நிலையை ஏற்படுத்தியது. இருந்தும் முடிவாக கூறவிழைந்த கரு மிக முக்கியமானது.
” காதலிக்கும் போது நீங்க எல்லாரும் சேர்ந்து ஆரவாரத்தோட அவனை உற்சாகப்படுத்தினீங்க. அதுக்கு பிறகு அவன் வாழ்க்கையைத் தேடிப்போகும் போது அவனைக்கையை பிடிச்சு கூட்டிட்டு போகலேயே. தோற்றுப்போன மைதானத்துல அப்பிடியே விட்டுட்டுபோய்ட்டிங்களே ” என்று இறந்த நண்பனின் முன்னாள் காதலி அவளை சந்திக்கும் கதைசொல்லிக்கு கூறுவதை உலகத்துக்கு சில நுண்ணிய பொருட்செறிவுள்ள கருத்துக்களை விட்டு செல்கிறாள். இதில் வெளிப்படையான கருத்துக்களை விட உள்ளூர ஓடுகின்ற தன்னிலை நியாயப்படுத்தலும் நண்பர்கள் என்ற சக்தி தடப்பிறழ்வான நிலையை எதிர்கொள்ளும் பிழையான வழிப்படுத்தலுமே தென்படுகின்றது. துண்டாக ஒன்றை கூறுகின்ற படிம நிலையை அந்த கூற்று ஏற்படுத்துகிறது. தனிமையில் விளைகின்ற தூண்டுதலின்றிய எந்த உணர்வுக்கும் , சரியான தன்னிலை மருந்து கட்டாயம் இருக்கும் என்பதாகும்.
கதை சொல்லலில் ஏற்பட்ட சலிப்பை இந்த கரு ஓரளவு தாழ்த்திவிடுகிறது. காதலர்களை விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும் தன்மை ரசிக்கக்கூடியவாறு உள்ளது. பின்னால் அவள் கூறுகின்ற தன்னிலை நியாயப்படுத்தல்கள் இந்தியாவின் சமூக பின்னணியை காரணம் காட்டியும் பெண்மையின் விநோதங்களை காரணம் காட்டியும் தன்னை தப்பித்துக்கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டவை போல தென்படுகின்றது. தலைப்பை தாக்குகின்ற போக்கினை உண்டுபண்ணுகின்றன.
கதைசொல்லி அப்படியே தன்வயதினை குறைத்து கொண்டு அடுத்த அனுபவத்திற்குள் செல்லுகிறார். அதே வழமையான பேயோட்டும் கிராம பின்னணியில் கதை நகர்கிறது. கதை நகர்தலில் பாவிக்கப்படுகின்ற மொழியின் தன்மை வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமான எந்த விரிசலையும் ஏற்படுத்தாமல் கூட்டிசெல்கின்றது.
” பிடிப்பவளாகவும் பிடிக்கப்பட்டவர்களாகவும் அவற்றை ஓட்டுபவர்களாகவும் பெண்களே இருந்தனர். ”
” சொல்லப்போனால் இன்றைய தேதியில் விரட்டப்படவேண்டிய பேய்கள் எல்லாம் வாழ்வது, கத்தியும் ஆசிட் பாட்டிலுமாக திரியும் ஆண்களின் உடல்களில் தான்.”
என்னதான் இருந்தாலும் இதில் பெண்களின் அடக்குமுறையிலிருந்து அவர்கள் மிகச் சரியாக மீள்வதாக கூறுகின்ற இடங்கள் உரசிப்பாக்க வேண்டியவை. இலங்கையில் ஏற்படுகின்ற பெண் தற்கொலைகள் எல்லாம் சரியான முடிவுகள் தானா என்று வாதம் உருவாக்குகின்ற போது எதிர்த்து ஆண் தற்கொலைகளை முன்வைப்பவர்கள் இரு பால் தற்கொலைக்கான பின்னணியை ஆராய்தல் உசிதமாகும்.
கட்டுரை ஒன்றின் உயிர்ப்பு புள்ளி தான் கட்டுரையின் தரத்தை தீர்மானிக்கும் என்பது எனது கருதுகோள். அந்த வகையில் இருவேறுபட்ட உணர்வுகளோடு ஒரே களத்தில் சலசலத்துக்கொண்டிருந்த இரு கோண பெண்ணிய நோக்கு போராட்டம் என்ற கடலுள் சேரும் போது அதன் சலசலப்பு அற்றுப்போய் , அது கொண்டுவந்த கருத்துக்குவியல்கள் சிதறடிக்கப்படுகின்றன. ஈழப்போரினை அனுதாப குறியீடாக்கி அதில் பள்ளி கொள்ளும் சமகால ஈன இலக்கிய பதிவுகளுள் பெண்ணிய போராட்டத்தை நிர்வகிக்கும் பெண் போரளிகளை மையப்படுத்திய நகர்வு கட்டுரையின் உயிர்ப்பு புள்ளியாக அமைந்துவிடுதல் சிறந்த கட்டுரைக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்துகிறது. முன் இரு கதைகளிலும் ஏற்பட்ட தொய்வு குறித்த விமர்சனத்திற்கு பதிலளிப்பது போல, முன் கதைகள் விறுவிறுப்பிற்காக எழுதப்பட்டவை அல்ல என்ற புரிதலை உருவாக்குகின்றன. காதல் , பற்றுதல் , போராட்டம் என மூன்று மனநிலை பதிவுகளையும் வரலாறுகளாக சுமந்துகொண்டு சமகாலத்துக்குள் நுழைகிறது நிறைவுரை.
சமகால போராட்டங்களுள் பெண்ணின் பங்கினை மரீனா போராட்டத்திலும் சாந்தன், பேரறிவாளன் , முருகன் மரணதண்டனை ரத்து சம்பந்தமாக கோயம்பேடு கல்லூரிமாணவிகள் போராட்டங்களை உதாரணப்படுத்தி உறுதிசெய்துகொள்கிறார். பெண்கள் இன்று இன்னும் போராட்டக்குணம் அதிகரித்தவர்களாக காட்டுகிறர். அப்படியே தலைகீழாக்கி பெண்ணின் பாதுகாப்புக்குள் ஒரு தந்தையாக தன மனநிலையை வெளிப்படுத்தி கட்டுரையை முடித்துக்கொள்கிறார்.
” இதே நேரம் திருவனந்தபுரத்தில் ஏதேனு ஒரு சாலையை கடக்கத் தயங்கும் என் மகளை , இதேபோல் பத்திரமாக அனுப்பிவைக்கும் ஒரு வாகன ஓட்டிக்கு செய்யும் பதில் மரியாதையாகவே இதை நான் கருதுகிறேன்.”
கூடவே அங்கங்கே இருக்கிற கவிதை வரிகள் என்பதை விட உணர்வெழுத்துக்கள். கட்டுரையின் போக்குக்கு இடையூறு தராத தகுதியான வரிகளை எழுத்தாளர் சேர்த்திருப்பது வாசிக்க பொருந்துதலாகின்றது. கப்டன் வானதி எழுதிய எழுதுங்களேன் என்ற கவிதை என்னை மிக பாதித்தது. அதிலும் இந்த வரி கூறும் துயரம் உச்சரிப்புகளை ஈரமாக்குகின்றன.
“ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வரமுடியவில்லை
எல்லையில் என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால் ”
கட்டுரையை முழுமையாக வாசித்த பிறகு கவிதா பாரதியின் எழுத்தின் மீதான பற்றுதல் உண்டாகிறது. வாசகனை வழிப்படுத்தி கருத்தை கொடுக்கும் பாணியை கைவரப்பெற்றிருக்கிறார். தொய்வுகள் அங்கங்கே தலைதூக்கினாலும் விடயப்பரப்பை சரியாக கையாண்ட விதம் அமர்த்திக்கொள்கிறது. நலமான விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய சிறு சிறு கருக்களை கட்டுரையெங்கும் சிதறவிடுகிறார்.சமத்துவ நிலை கட்டுரையாக இல்லாவிட்டாலும் பெண் என்ற தனி மனநிலை சித்திரமாக , அந்த தனி மனநிலை ஆழமான ஊடுருவல்கள் செய்ததில் கவிதா பாரதியின் ஆண்பால் பெண்பால் அன்பால் வாசிக்க சுவைக்கிறது.
04.04.2017

இளமையின் முதுமை – கவிதை ரசித்தல் 01

இன்று ஒரு மனிதன் தன் சமூகம் சார்ந்த பார்வையை எவ்வாறு செலுத்துகிறான் என்ற கேள்விக்கு வினோதமான பதில்களை அறியக்கூடியவாறு உள்ளது. அவனின் ஒற்றை எண்ணம் தன்னை தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். அதற்கான அவனின் ஏற்பாடுகள் மிக சுவாரஸ்யமானவை. வருங்காலம் என்ற எதிர்பார்ப்பிற்கு நிகழ்காலத்தை வெறுப்புடன் எதிர் கொள்கிறான். முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதற்கு வாலிபத்தை தொலைகிறான். மனிதனின் நாளாந்தம் மகிழ்ச்சிக்கான கஸ்டம் , அன்பிற்க்கான வெறுப்பு என்ற எதிரோட்ட எண்ணங்களால் நிரம்புகிறது.
 
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ……..
 
இந்த சமூகத்தில் இருக்கின்ற இப்படியான எண்ண அலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதர்களுக்குள் நானும் ஒருவன். எனது என்ற பெரும் ஏக்கம் என் ஆழ்மனத்துக்குள் படிந்துபோய் இருக்கிறது. அப்பிடியென்றால் எனது சமூகம் என்பதுவும் படிமமாகித்தானே இருக்க வேண்டும்? ஆம் அப்பிடியே தான் , படிமம் உண்டாகி இருக்கிற விதம் தான் கேள்விகளை உருவாக்குகின்றது. எனது சமூகத்தில் நான் யார்? என்னை எவ்வாறு எனது சமூகம் கருத்திக்கொள்கிறது? என்ற சிறு வட்டத்திற்கான கேள்விகளே எனது சமூகம் என்ற படிமத்தில் ஊறிப்போய் உள்ளது. இந்த அற்பமான தேடல்களுக்காக தன் வாலிபத்தையும் அதனை சுற்றி உள்ள இன்பங்களையும் தொலைத்து விட்டு வடுக்களை மட்டும் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு முதுமைக்கு பயணம் செய்கிறான். அலைந்து திரிந்து அனுபவங்களையும் தருணங்களையும் சேர்க்கவேண்டியவன் அவற்றை எல்லாம் அர்ப்பணித்து விட்டு அனுபவங்களை மீட்ட வேண்டிய பருவத்திற்கு வெறும் நிறைவுறா ஆசைகளுடன் சென்று அடைகிறான். ஈயைப்போல பறந்து தெரியவேண்டிய பருவத்தை தின்றுவிட்டு எறும்பை போல சிறு நிலப்பரப்புக்குள் வாழவேண்டிய காலத்துக்குள் அடங்கிப்போகிறான்.
882_f37dcf4383acee4f1207d932998e450d
 
இதையே கவிஞர் மஸோக்கா ஷிக்கி
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக் கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.
– மஸோக்கா ஷிக்கி
ஜப்பான் 1867-1902
ஜென் கவிதை .

கிராமியத்தை பதிவிடும் சுரா – 01

அதிகாலை பனியின் குளிர் போர்வைகளை கழற்ற விடாமல் இறுக்கி கொண்டது. இருந்தும் எழுந்தன வேண்டிய கட்டாயம் , என்னை கால் மனதுடன் எழுப்பி விட்டிருந்தது. வழமையாக டீ கொண்டுவரும் குட்டியும் இன்றில்லை, இனியும் வர மாட்டாள். அவளுக்கான வாழ்க்கை பனிக்காட்டில் காத்திருந்தது. டீ இப்போதெல்லாம் வெளி மேசையில் தான். ஆறிய பின்தான் பெரும்பாலான நாட்களில் டீ குடித்து இருக்கிறேன், எனக்கு அதிகாலையில் தூங்கித்தான் பழக்கம். மூன்று அல்லது மூன்றரை மணிக்கு தான் என் நாளாந்தம் நிறைவுபெறும். எழுந்திருக்க ஏழு , பின்தான் என் ரூட்டின்.
இன்று அதிகாலை வழமை போல் இல்லை, கூப்பிடு குரல்கள் அதிகமாகவே இருந்தது. போர்வையை அகற்றிக்கொண்டு எழுந்தேன். அம்மம்மா ,” தம்பீ , இங்கபாருடா இதுகள் செய்யுற அட்டகாசத்த , குப்ப பாக் எல்லாம் கிளறுதுகள்.”
சுந்தர ராமசாமி ஒரு தலை சிறந்த புத்தியல் (modern ) எழுத்தாளர். இவரது படைப்புகளில் அதிகம் எதிர்காலவியல் சார்ந்த கொள்கைகள் மிக ஆழமாக தென்படும். அப்படியான ஒரு சிறுகதை தொகுப்புதான் தான் “குரங்குகள்”. யாத்ரா என்னும் சஞ்சிகையில் 1978ஆம் ஆண்டு வெளிவந்தது குரங்குகள். எதிர்கால தர்க்கவியல் சார்ந்த ஒரு புத்தியல் படைப்பு தான் குரங்குகள். சுராவின் வழமையான , நேர்த்தியான மொழிநடையில் குரங்குகளின் பரிணாமத்தை அவற்றின் வழமையான வாழ்க்கை நிலையையும் சொற்களின் ஊடு கட்டமைத்து வெளிப்படுத்தும் விதம் குரங்குகளில் அதீதமாக தென்படுகிறது.
oru-puliyamarathin-kathai
சுரா பெயரில்லா கிராமத்தை கூறும் சந்தர்ப்பங்களில் இலக்கிய சுவை ததும்ப ததும்ப சொற்களை குழைக்கின்றார் . இயற்கை வனப்பையும் குரங்குகளின் வாழ்விடங்களை சொல்லும் போது முற்போக்கு எழுத்தாளர் என்ற பரிமாணத்தை தாண்டி தன்னுள் உள்ள கவிஞர் தனத்தை குழைக்கிறார் .
“கட்டை விரல் போல் நகரை விட்டு விலகியும் ஒட்டியும் இருந்த இடம் ”
“பரவசத்தால் குனியும் பயிரின் தலையை கோதிக்கொண்டு காற்று ஓடுவதை எப்போதும் பார்க்கலாம்.”
மக்களை சித்தரிக்கும் இடங்களில் வெறுமனே கிராம மக்களை படிப்பறிவு அற்றவர்கள் என்று தரம் தாழ்த்தி விடாமல் 78களில் கிராம மக்களிட்க்குள் விலங்கியல் படித்தவர்களும், பண்டிதர்களும் வாழ்ந்தார்கள் என்று கூறுமிடங்கள் முற்போக்கானவை. இன்று இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி கல்வியில் முன்னேறிய கிராம மக்கள் இதற்கு எடுத்துக்காட்டு.பெண்களின் அழகில் குரங்குகள் கவரப்படுத்தலும் ஆண்களின் கவலையும் கூறுமிடங்களில் சுரா சுவாரசியமாக கையாண்டுள்ளார்.
“அப்படியானால் பெண்களை குரங்குகள் பிடிங்கி கொள்ளும் காலம் வருமோ என்ற சந்தேகம் ஆண்கள் மனதில் ஊசலாட ஆரம்பித்தது.”
பெண்களுக்கு பிரச்சனை என்றவுடன் கொத்தித்தெழுந்த கிராம வாசிகளின் நாகரிகமான கோவம் கிராத்தின் சாதுவையும் சுராவின் அனுபவத்தையும் வெளிக்காட்ட கின்றன.