ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர் ஒருவரின் தேடல். வாசகர் ஒருவர் இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத ஒன்றை, நாவல் கடத்தவேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. அது வாசகரைச் சென்றடைகிறது/ இல்லை என்பதைத் தாண்டி வரலாற்றின் ஓட்டத்தில் அது கலந்து கொள்ளப்படவேண்டும். எந்த வேறு இலக்கிய வடிவத்திற்கும் இல்லாத இந்தத் தனித்தன்மை நாவலிற்கு மட்டுமே உள்ளது. நாவல் வாசகருக்கு மட்டும் அல்ல, வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர், மாணவர், அரசியல் சார்புடையவர் என்று இன்னொரு சந்ததியின் மனிதர்களுக்கு, இன்னொரு கலாச்சாரத்தின் மனிதர்களுக்கு நாவலின் பண்பாட்டுச் சமூகத்தை கடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. எம்மால் இன்றுபரவிப் பேசப்படுகின்ற தூரத்துக் கலாச்சாரங்களெல்லாம் நாவல் வழி உள்நுழைந்தவை தான். எந்தப்பண்பாடும் எழுத்துரு பெறப்படும்போது தான், நம்பிக்கையாகக் கடத்தப்படுகிறது. எனவே சமூகம் ஒன்றில் நாவல் உருவாக்கம் பற்றிய திடமான எண்ணநிலைமை வேண்டும். நாவல் ஒரு சமூகத்தையே கடத்துகின்ற வல்லமை பெற்றது. அதே சமயம், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அப்படியே அழித்துப் பூசிவிடக்கூடியதும்.
நாவல்களின் மூலம் கடத்தப்படவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சாதியம். இது ஏன் கடத்தப்படவேண்டும்? கடத்தப்படாமல் இருந்தால் அப்படியே அழிந்து போய்விடுமே என்ற கேள்விகள் மிகவும் மேலோட்டமானவை. இன்று இலங்கை வடக்கில் யாரும்சாதிய அடிப்படையில் பிரிந்து இருக்கவில்லை, அவர்களுக்கு என்று தனித்தனி பிரதேசங்களில் வேறு வேறு சாதிய அடிப்படையில் குடியிருக்கவில்லை, இன்று எல்லோரும் சிகை அலங்கரிக்கும் கடைகளில் தான் முடிவெட்டுகிறார்கள் – இதனால் சாதியம் இறந்துவிட்டது என்பது சரியா? இன்னும் சாதியம் ஒழிந்து போய்விடவில்லை என்பதற்கு, இன்றைய மரணச் சடங்குகளும் திருமணங்களும் ஆதாரம். இன்னும் பறை அடிப்பவர்களும் கட்டாடிமார்களும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். படித்து வளர்ந்தசமூகத்தினரிடமே சாதியவெறி இன்னும் ஒழியவில்லை. எனக்கு நெருக்கமான நண்பன், அவன் மருத்துவபீடம் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் பேசுகின்ற போது, அவனுக்குச் சாதியினால் உண்டான தாழ்வு மனப்பான்மை குறித்து வருத்தத்துடன்குறிப்பிட்டான். என்ன தான் வளர்ந்தாலும் தாங்கள் டோபிகள்( சலவை செய்வோர்) என்ற சாதியக் கட்டமைப்பை உடைக்கவே முடியவில்லை என்று வருந்தினான். இது இன்னமும் ஒழிக்கப்படாத சாதிய ஊடுருவலின் கூறுகள். இதைப்பற்றிய அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனால், சாதியம் என்ற பெயர் இல்லாமல் – அதே அமைப்பு முறை உருவாகிவிடும். இது மறைத்தல் பண்பாட்டின் பெரும் சிக்கல். இந்த சாதிய அமைப்புக்கள் எல்லாம் அறிவித்தல் என்பதை காட்டிலும் கற்பித்தல் என்கிற வழியில், உண்மை நிலைகள் புலப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஈழத்து நாவல் ஒன்றில் அதிகம் பேசப்படவேண்டிய பொருள் யுத்தமாகவே உள்ளது. இது காலத்தின் இன்றியமையாத பிரதிபலிப்புச் செய்கை. போரிலக்கியங்கள் இன்று எதிர்பார்க்கின்ற அளவு, உள்ளடக்கத்திலும், எண்ணிக்கையிலும் கனதியானவை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிகமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. உண்மையான போரின் மொழியும், அணிகலன்களும் உலக சமூகத்திற்குச் சரியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலகளாவிய கலாசாரம் பற்றிய நிகழ்த்துகை விவாதங்கள் இலக்கியங்களின் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா வகையான பருப்பொருள்களைப் பற்றியும் பேச்சுக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் பரவலாகப் பேசுகின்ற, விவாதிக்கின்ற, ஆவணப்படுத்துகின்ற ஒரு சமூகத்தில் சாதியம் பற்றிய முற்போக்கு வாதங்கள் மிகவும் குறைவு. தேசியம் பற்றியும் போரின் அழிவுகள் பற்றியும் பேசுபவர்கள் சாதியம் போன்ற உள் முரண்பாடுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்போராடும்போதே அவை முற்போக்குக் கருத்தியலாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பஞ்சமர்களில் ஒரு பிரிவான அம்பட்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற நாவல் ‘குடிமைகள்’. இந்நாவல் இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெணியான் என்ற புனைபெயருடன் எழுதுகின்ற கந்தையா நடேசுவால் எழுதப்பட்டது. இலங்கை அரசினால் 2014ல் ‘சாகித்ய ரத்னா’ என்ற உயர் விருது தெணியான் அவர்களுக்குக் ‘குடிமைகள்’ நாவல் மூலம் கிடைத்தது. இலங்கையின் வடக்கிலிருக்கின்ற ஒடுக்கப்படும் சாதியாகிய சிகை திருத்தும் தொழலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை முறை, ஆசைகள் , பிரச்சினைகள், எதிர்ப்புக்கள், போராட்டம், புறக்கணிப்பு என்று எல்லாவித அக-புற வாழ்வியலினைத் தெணியான் குடிமைகள் மூலம் ஆவணம் செய்கின்றார். தனது ஐம்பது வருட அனுபவத்தையும், காட்சிப்புல நினைவுகளையும் ஒன்றிணைத்துக்குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். நாவல் இலங்கையின் வடக்கே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. இதைவிட மலையகத்தின் பதுளை நகருக்கும், கொழும்பு நகருக்கும் நாவல் நகர்ந்து போய் வருகின்றது. நாவல் 1960-70 காலப்பகுதியினை மையமாகக் கொண்டிருந்தாலும், நாவலில் நடக்கின்ற சம்பவங்கள் இன்றைய சமூகத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கிராமங்களில் ஒவ்வொரு சமூகத்தினரையும் பிரிக்க ஒரு வீதியோ ஒரு வெறும் நிலமோகாணப்படுகிறது. வளர்ந்து நிற்கின்ற நகரங்களில் இவற்றை அவதானிக்க முடியாது. எல்லாச் சமூகத்தினரும் ஒன்றோடு ஒன்று கலந்தே வாழுகின்றனர். இருந்தும் அவர்களிடையே இருக்கின்ற உளவியல் வேற்றுமை மாறாமலேயே இருக்கின்றது. தெணியானுடைய நோக்கம் நாவலிலிருந்து அம்பட்டர் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்வியலையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துவதே ஆகும். பிறப்பின் மூலம் ஆதிக்க சாதியினர் உயர்ந்தவர்கள் என்றும் அம்பட்டர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆதிக்கச் சாதியினரால் பல வகைகளில் ஒடுக்கப்படும் சாதியினர் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஆழ்ந்து பேசுகின்ற தொனியே தெணியானின் குடிமைகள்.
(01)
மிகவும் முக்கியமானதொன்று நாவல் பேசுகின்ற அழகியல். விரிந்த பண்பாட்டு அமைப்புடைய சாதியம் ஒன்றின் பண்பாட்டு வெளிப்பாடு அதிகமாகப் பௌதீக அமைப்பிலேயே தங்கியிருக்கிறது. தனக்கென்று நிலம் இல்லாமல், வேளாளர் நிலத்தில் குடியிருக்கிறகுடிமைகளின் பௌதீக, உளவியல் அழகியல் மிகவும் வித்தியாசமானது. அவர்களது பௌதீகச் சூழல் முழுதாக ஆதிக்கச் சாதியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் தேவைகளுக்கு ஏற்பக் குடிமைகளின் சுற்றுச் சூழல் வடிவமைக்கப்படுகிறது. சொந்த நிலம் ஒன்று இல்லாமல், அதில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல், அதை வெளிப்படுத்துவதிலும் பெரும் இடர்களைச் சந்திக்கின்ற ஆனால் அந்தச் சூழலுக்கே தன்னை இசைவாக்கப்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரல் நாவலில் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது. அம்பட்டர் சமூகத்தின் நீர்ப்பிரச்சனை தான் நாவலின் தொடக்கப் புள்ளி. நீர்ப்பிரச்சனை இயற்கையானது அல்ல, அதுவும் ஆதிக்கச் சாதியின் அடக்கு முறையே என்கிறார்,
‘கட்டாடிக்கு கிணறுவெட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ………….. கோடைகாலம் வந்துவிட்டால் மழைநீர் தேங்கி நிற்கும் துரவுகள் வற்றிப்போகும்…….. வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு தண்ணீருக்கு எங்கே போவது?…..நயினார்கள்மார் என்ன காரியம் செய்தாலும் தமக்குகிடைக்கக்கூடிய நன்மைகளை கணக்குப்போட்டுத்தான் செய்வார்கள்’ (குடிமைகள் : பக்கம் 29)
தெணியான் கிணற்றைச் சுற்றி வரைகின்ற வரைவுகள் முக்கியமானவை. கிணற்றில் தண்ணீரே அள்ள முடியாத சமூக இளம் பெண்களை, எந்த ஆதிக்க சமூக ஆணும் தீண்டத் தகாதவர்களாகப் பார்ப்பதேஇல்லை. அவர்களுடைய காமம் சாதியைப் பார்ப்பதுஇல்லை. தாழ்ந்த சாதியினரைக் குடிமைகள் தொழில் பார்க்க மட்டும் அல்ல, தமது இச்சைகளைத் தீர்க்கவும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க நாயினார்மார்களின் கிணற்றுக்கு வருகின்ற அம்பட்ட சமூக வயதான பொன்னிஅனுபவிக்கின்ற இன்னல், அவள் வயதோடு வேறுபட்டிருக்கின்றதே தவிர மாறவில்லை. ஆரம்பத்தில் உடலளவிலும் பின்னர் உளவியலாலும் நோகடிக்கப்படுகின்றாள். உயர் சாதிப்பெண்களிடம் இருந்து தண்ணீர் பெறுகின்ற நிலையைப் பிச்சை எடுக்கும் நிலையைவிட மோசமானதாகக் கருதுகின்றார்கள். அங்கே விழுகின்ற வசைகளுக்கும் வயது வித்தியாசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயதான பொன்னிக்குத் தண்ணீர் ஊற்றிவிட யாரும் முன்வரவில்லை, முன்வந்தவர்கள் சினக்காமல் ஊற்றிவிடவில்லை, சொந்தமாகத் தண்ணீர் ஊற்றக் கூட தகுதி அற்ற குடிமைகள். கிணற்றைச் சுற்றித் தெணியான் கட்டி எழுப்புகின்ற கேள்விகள் ஆழமானவை.
(02)
சாதியம் பிரிவினையை ஏற்படுத்துவது போலவே,அவ்வாறு பிளவுண்ட மனிதர்கள் தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்ற உயர்வு-தாழ்வைத் தெணியான் சித்திரிக்கின்றார். இரண்டு வெவ்வேறு இடங்களில் இதை வலியுறுத்துகின்றார்.
‘…எங்கடை சாதிக்காரர் எல்லாரும் எங்களுக்கு சமமே? ஒரு சாதிக்குள்ள எத்தினை பிரிவு எத்தனை பகுதி இருக்குது தெரியுமா?’ (குடிமைகள்:பக்கம் 112)
இளையவர்கள் சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயல்கின்ற போது, அங்கு மேலெழுகின்ற சமூகத் தலைமைகள்– இதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றது. ஒரே சாதிக்குள் கலந்து திருமணம் செய்வது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தொழில் தகைமைகள், வருமானம், வசதி போன்றவற்றை வைத்து ஒரே சாதிக்குள் பிரிவினைகள் உருவாகின்றன.ஒரே சாதிக்குள் மெலிதாக உயர்ந்தவர் மற்றவர்களை அடக்கி அதிகாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நேரடியாக இந்த முறைமை வெளிப்படாமல்இருந்தாலும் குறித்த சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. சரவணை முதலாளி, மணியன் இருவரையும் நாவலூடு கொண்டு செல்கின்ற அடிப்படை விடயம் இதுவாகும். மணியனை முதலாளி கொடுமைப்படுத்துகின்ற இடங்களிலும் மணியன் அடங்கிப்போகின்ற இடங்களிலும் வாசகரோடு எழுந்து பயணிக்கின்ற அனுபவங்கள், எங்கோ ஒரு நகரத்திற்குச் சிறிய தொழில் ஒன்றினைச் செய்வதற்காக வயது குறைந்த பிள்ளையை அனுப்பிவிட்டுத் தவிக்கின்ற ஒவ்வொரு பொன்னிக்கும் வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. கூலியே இல்லாமல் வேலை செய்கின்ற மணியனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பமும் அதன் மூலம் மணியன் அடையக்கூடிய அனுகூலங்களும் வாசகர்களைத் திருப்தி அடைய வைக்கின்றது.
தெணியான், மணியனைக் கற்றலில் நாட்டம் இல்லாத ஒரு மாணவனாகச் சித்திரித்து, அதற்கான காரணத்தை ஆசிரியர்களின் சாதி பற்றிய வசைகளே என்கிறார். தெணியான் ஆவணம் இணையத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசிய இடங்களில் அடக்கப்பட்ட சாதியப் பாடசாலை வாழ்க்கை முறை ஒன்றாகும். பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்துகின்ற/ வழி நடத்தப்படுகின்ற முறைகள் பற்றியும் தனது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். அடக்கப்பட்ட சாதி மாணவர்கள் பாடசாலை விளையாட்டுகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடியவர்கள். அவர்களின் பால்ய வாழ்க்கை அவர்கள் செய்கின்ற சிறு வேலைகள் என்பன அவர்களின் திடமான உடலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பாடசாலையில் விளையாட்டுகளை வெற்றி கொள்வதில் தான் பாடசாலைச் சமூகம் கவனம் செலுத்தியதே தவிர அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் செலுத்த எத்தனிக்கவில்லை. அந்த ஆதிக்கத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்களில் தெணியான் முக்கியமானவர் என்பதால் அவரின் எழுத்துகளும் அதையே முன்னிறுத்தி நிற்கின்றன.
(03)
மனித வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கானது.ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்டாலும் அவர்களுக்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருத்தி வைத்துக் கொண்டு வெளி உலகம் தெரியாமலே வைத்திருந்த முத்தன் –பொன்னியின் கவலையும் அதுதான். முத்தனுக்கும் வள்ளிக்கொடிக்கும் திருமணமான பின்னர் வள்ளிக்கொடி மைத்துனர் இருவருக்கும் திருக்கல் வண்டிலும் மாடும் அவளின் கொடியை விற்று வாங்கிக்கொடுத்துச் சந்தோசப்படுகிறாள். மேலேயுள்ள நிகழ்வுகள் நாவலில் நடக்கும் போது வாசகர் மனதிற்குள் அளப்பெரிய சந்தோசமும் திருப்தியும் உருவாகின்றது.
கொண்டாட்டம் எவ்வளவு திருப்தியளிக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு கவலையையும், சோகத்தையும் குடிமைகள் சுமக்கிறது.
ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராகப் போராட்டம் செய்யவில்லை, மிகச் சிறிய உரிமைகளை வேண்டிக் கேட்ட போது மறுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் போக்கில் தொழிலையும், சமூகக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கும் இடையூறாக ஆதிக்க சாதியினர் இருக்கின்றார்கள். நாவலின் மையப்பாத்திரமாகக் கருதத்தக்க முத்தன் சமூகக் கட்டமைப்புகளை உடைக்கவும் தமக்கென உரிய அடிப்படை மனித சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சமயத்தில் முயற்சி செய்கிறார். அதற்கு அவரது நண்பர்கள்களும் உதவுகின்றார்கள். நயினைமார்களை எதிர்த்து முத்தன் தொழில் செய்யத்தொடங்குகிறார். அதுவரை குடிமைகளாக இருந்த முத்தன் வீதிகளில் தலைநிமிர்ந்து நடக்கத்தொடங்குகிறார். அவருக்கான சுதந்திர வாழ்க்கையை, குடும்பதிற்கான அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் ஒரு சிறிதளவேனும் சம்பாத்தியம் செய்யக்கூடிய தொழிலினை உருவாக்கிக்கொள்கிறார். நண்பர்களான மற்றைய பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி செய்யத்தொழிலைத் தொடங்குகிறார். ஆனால், இறுதியில் சப்பாணிகளான இரண்டு சகோதரங்களையும் இழக்கிறார். அவரது சலூனும் தீ வைக்கப்படுகிறது. இறுதியில் வீடும் தீ வைக்கப்படுகின்றது. முத்தனும் குடும்பமும் அந்த ஊரை விட்டே போய்விடுகின்றனர். தெணியானின் ஐம்பது வருட அனுபவம், அவரின் கூர்ந்த அவதானிப்பு, சிந்தனை என்பவை மூலம் ஒடுக்கப்பட்டவர்களது போராட்டம் ஆதிக்க சாதியின் முன்னால் நிலைத்து நிற்கமுடியாமல், தளர்ந்து போனது. ஆனால், தோற்றுவிடவில்லை என்பதில் தெணியான் உறுதியாக இருக்கிறார்.
(04)
அடிமை முறையிலும் மிகக் கொடுமையானது சாதிய முறை என்கிறார் அம்பேத்கர். ஒரு மிகச் சாதாரண அம்பட்டர் குடும்பம், கொடிய சாதிய அடக்குமுறையால் அனுபவிக்கின்ற இன்னல்கள் குடிமைகளில் பதிவாகின்றது.
‘வரலாற்றை உருவாக்குவது ஒடுக்குமுறையாளர் தான். அவர்கள் எழுதுகின்ற வரலாறு அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவர்களது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாறை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல’ என்று ஃபிரான்ஸ் ஃபனொன் கூறுகின்றார். அந்த வகையில் தெணியான் கடத்தியிருக்கின்ற வரலாறு அத்தியாவசியமானது. டானியலோடும் டொமினிக் ஜீவாவோடும் என்.கே.ரகுநாதனோடும் சேர்ந்து சாதியத்தின் வீரியத்தை அழிக்கின்ற பணியைத் தெணியான் ‘குடிமைகள்’ மூலம்தொடர்கின்றார்.
உசாத்துணைகள்:
வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபாசக்தி
அசோகமித்திரன் கட்டுரைகள் – 2
ஆவணம் இணையதளம்
Category Archives: Reviews – மறுபார்வைகள்
“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள் கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும் குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU
நிகனோர் பரா – 01
ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தேவைப்பட்டது. ஒவ்வொரு இடைவெளியிலும் மனம் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. கவிதைகள் தருகின்ற அமானுஷ்ய உணர்வு இடைவெளிகளில் பரவும் போது முற்றிலும் வேறு ஒரு சூழல் உருவாகி விடுகிறது. புகையிரதம் எத்தனை வீரியமாக சத்தம் எழுப்பிக்கொண்டு விரைந்த்தாலும், மெல்லிய மேகத்தின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜன்னலினூடாக தென்றல் முகத்தின் தசைகளை வருடினாலும், பாலைவனம் போன்ற வெம்மை இருக்கும். எதிரிலே இருக்கின்ற அத்தனை மனிதர்களும் அழகாக தோன்றுவார்கள் அல்லது அலங்கோலமாக தோன்றுவார்கள் அல்லது மறைந்து போவார்கள். கவிதைகள் மேற்ப்பரிப்பினூடு மகிழ்சியையும் ஆழ்ந்து போகும் போது இறுக்கத்தையும் தரலாம். ஆறு மணிநேரமும் எத்தனையோ சூலுக்கும் உலகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைந்து கொடுத்து வந்திறங்கினேன்.
சிலி நாட்டு கவிஞர்களான நிகனோர் பராவையும்(Nicanor Parra) என்றிக் லிஹ்னையும்(Enrique Lihn) முதன் முதலில் வாசித்தேன். இருவரும் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள். நிகனோர் பரா தனது நூற்றி மூன்றாவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1914இல் பிறந்தவர். என்றிக் லிஹ்ன் 1929- 1988 காலப்பகுதியில் வாழ்ந்தவர். நிகனோர் பரா இன்றும் தனது கவிதைகளை எழுதி பிரசுரித்து வருகின்றார்.
The Pilgrim – Nicanor Parra
எங்களது சாதாரண தர ஆங்கில இலக்கிய தொகுப்பில் Monkeys என்ற ஒரு சிறுகதை இருந்தது- பெயர் சரியாக ஞாபகம் இல்லை. ஒரு சிறிய வயதுடைய சமனேரா என்னும் பையன், பௌத்த பிக்கு ஆவதற்காக பௌத்த மடம் ஒன்றில் சேர்க்கப்படுகிறான். அவனின் ஆசைகள் பற்றிய வரைவாக அந்த சிறுகதை நகர்ந்து செல்லும். அதில் சமனேரா அதிக நேரத்தை குன்றுகளில் குரங்குகளோடு களிப்பான். அது அவனிற்கு உவகை ஊட்டுவதாக அமையும். இதே போன்ற ஒரு பௌதீக சூழலை இந்த கவிதை நினைவூட்டியது.
மிகவும் சிறிய வயதில் துறவுநிலைக்கு கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுவன், – உலக சந்தோசங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற சாதாரண மனிதர்களை நோக்கி இறைஞ்சுவதாக பரா எழுதுகின்றார். சிறுவனை அடையாளப்படுத்த பரா பயன்படுத்துகின்ற யுத்தி ஆழமானது. அதே நேரத்தில் எனக்கு கவலையை அளித்ததும் கூட.
But, I am a child calling to its mother from behind rocks,
I am a pilgrim who makes stones jump as high as his nose
சாதாரண குன்றின் பின்னால் நின்றுகொண்டு, குன்றை மீறி எட்டிப் பார்த்து தனது அம்மாவை அழைக்க பாய்கின்றபோது மூக்கு உயரம் மட்டுமே மேலேளும்பக்கூடிய சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். நான் வசித்துவந்த நகரத்தின் வீட்டிற்கு எதிரே பௌத்த விகாரை ஒன்றிருக்கிறது. அங்கே பௌத்ததுறவிகள் ஆவதற்காக சிறுவர்கள் வந்திருப்பார்கள். மிகவும் சிறியவயதில் முழுமையாக முடிகளை அகற்றி காவித்துணியும் உடுத்தி உலகின் எல்லா சுகங்களையும் துறந்தவர்கள் போல விகாரைக்கும் அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கும்(அருகில்) ஓடித்திரிவார்கள். பின்னேரங்களில் தங்களை மறந்து இயங்குவதையும் விகாரைக்கு வருகின்ற சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்து விளையாட அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். இவையெல்லாம் சமயத்தின் படி தவறுகள் என்றாலும் மனிதத்தின் படி?
நிகனோர் பரா இதையே வினவுகின்றார். எல்லா மனிதர்களைப்போலவும் தானே நாங்களும் – கனவுகளையும் ஆசைகளையும் வெறுத்து ஒதுக்கிவிட முடியாத போதும் கட்டாயப்படுத்தி அடைத்துவைக்கின்ற நிலைமையை கேள்வி கேட்கின்றார். புத்தர்கூட உலக சந்தோசங்களை அனுபவித்துத் தான் துறவறம் பூண்டார். தங்கள் சொந்த தேவைகளுக்காக பிள்ளைகளின் சந்தோசங்களை அழிக்கின்ற தானம் பற்றி கேட்கின்றார்.
A tree crying out to be covered with leaves.
எல்லாவற்றையும் மரத்துக்கு தருகின்ற இலைகளை போல அனைத்தையும் வேண்டி நிற்கின்ற சிறுவர்களின் மனநிலையை நிகனோர் பரா எழுதுகின்றார்.
இந்தக்கவிதையை ஸ்பானிஷ் மொழியிலிருந்து W.S.Merwin ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருகின்றார்.
இந்தக்கவிதையை வாசித்து முடித்தபின்னர் பேரமைதி சூழ்ந்துகொள்கிறது.
தற்கொலையும் டீச்சரம்மாவும். – அசோகமித்திரனின் தண்ணீர்.
தண்ணீர் நாவலின் பதினெட்டாவது அத்தியாயம் நாவலிற்கும் சரி வாசகனிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். தற்கொலைக்கு முயற்சி செய்த யமுனாவை அந்தத் தெரு ஆசிரியை ஒருத்தி ஆற்றுப்படுத்துவதாய் அந்த அத்தியாயம் நகரும். யமுனா வாழ்கையின் சிக்கற் தன்மையை எதிர்கொள்ளமுடியாது உழன்று போய் தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவளின் வீட்டு முதலாளி அம்மா அதைத் தடுத்து விடுவார். யமுனாவுடன் ஓரளவுக்குப் பழக்கம் உடைய ஆசிரியைக்கு இது ஏதோ வகையில் தெரிந்து போக, ஆசிரியர்- இனி கதையின் படி டீச்சரம்மா, யமுனாவை தேற்றிகொள்ள முயற்சி செய்வதாக அந்த உரையாடல் அமையும்.
ஒரு தனிமனிதனின் வாழ்க்கை என்பது தனிமைப்பட்டது அல்லது அந்தரங்கமானது என்ற கூற்று உண்மையில் கருத்துப்பிழை உடையது. எந்தளவு ஒருத்தரின் வாழ்க்கை அந்தரங்கமாகிக் கொள்கிறதோ அந்தளவு வாழ்கையின் விஸ்தரிப்பு குறுகிக் கொள்கிறது. அதே போல தனிமைப்பட்ட வாழ்க்கை என்று ஏதுமில்லை. ஒரு சூழ்நிலை ஒருத்தரின் வாழ்கையின் போக்கை அப்படியே திருப்பிப் போடக்கூடியது. இதில் தன்னிலை நியாயம் என்பதை விட சூழ்நிலை நியாயத்தை புரிந்துகொண்டு அதன்படி சிந்தித்து செயலாற்றுதல் தான் சரியான வாழ்க்கைமுறை. பிரச்சனை என்பதை சவால் என்று எடுத்துகொள்ளல் ஒருபுறம் இருக்க, அதைத் தாண்டி செயலாற்றல் என்பது முக்கியமானது. விரைவாக எதிர்க்கொண்டு அதைத்தாண்டிச் செல்லல் என்பது சாதாரணமானதே. வாழ்கையின் ஒரு புள்ளியில் ஏற்படுகின்ற விபத்து, வாழ்நாள் முழுவதுமே ஆக்கிரமிக்கப் போகிறது என்று தெரிந்த பின்னும், மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தும் மீளாமை, அதை கொண்டு நடத்தி வெற்றி பெறல் என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இப்படியான சூழ்நிலை சிக்கலால் வாழ்நாள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டவர் தான் டீச்சரம்மா.
பதினைந்து வயதிலேயே திருமணம் செய்தவர். கணவர், – என்பதைவிட நோயாளி என்பதே சரியான பதம்; முழுமையாக காச நோயால் பீடிக்கப்பட்டவர். எழுந்து திரிந்து வாழ்கையை நடத்தத் திராணி அற்றவர். பார்வைக்கோலத்தில் மிக பயங்கரமானவர். அருவருப்புகுரியவர். இத்தனையையும் சகித்துக்கொண்டு திருப்பதியே இல்லாத வாழ்க்கைக்குள் நுழைகிறார் டீச்சரம்மா. அவரின் கணவரோடு பழகிப்போன கணவரின் குடும்பம் எதுவும் செய்வது போலத் தெரியவில்லை. பதினைந்து வயது சிறுமிக்கு இந்த சூழ்நிலை மிகக் கொடுமையானதே. இருந்தும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்கிறார். நிலைத்து நிதானித்து முடிவு செய்கிறார். குடும்பம் என்பதைத் தாண்டி சமூகத்திலும் வேலைத்தளத்திலும் பிரச்சனைகள் வருகின்றன, உருவாக்கப்படுகின்றன. அத்தனையையும் சமாளித்து தாண்டுகின்றார். வாழ்க்கை என்பது பிரச்சனைகளின் நீண்ட கோர்வை தான் என்ற மனப்பக்குவம் வருகின்றது. இத்தனைக்குப் பின்னும் டீச்சரம்மா ஒருமுறை கூட தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தன்னுடைய அனுவத்தின் மூலம் யமுனாவின் வாழ்கையை தொகுத்துக்கொள்கிறார்.
இந்த உரையாடலை மேற்சொன்ன சம்பவ கோர்ப்பின் அடிப்படையில் அசோகமித்ரன் புனைந்திருப்பார்.
அமியின் உட்பொருள் பற்றி பேசியாகவேண்டும். ஒரு மனிதனின் இருப்பு சார்ந்து உரையாடல் நிகழ்கிறது என்பது தெளிவு. வாழ்கையின் வளைவு நெளிவுகளுக்கு திரும்பி திரும்பி இன்னும் ஒரு முறை வளைய முடியாது என்கிற நிலையில் இருக்கின்ற யமுனாவின் பாதையில் இன்னும் வளைவுகள் வருகின்ற சாத்தியத்தையும் , அதை எதிர்க்கொள்ளுகின்ற துணிவையும் இந்த உரையாடல் அவளுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு தனி மனித இருப்பும் ஏதோ ஒரு வகையில் அவசியமாகின்றது. உலகின் நீண்ட இயக்கத்தின் சாரமே இருப்பின் அடிப்படியில் தான் அமைகின்றது. இந்த இருப்பை தகர்கின்றபோது ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகின்றது. இயற்கையின் சூட்சுமத்தில் சாதாரணமான மரணங்களால் ஏற்படுகின்ற வெற்றிடம் நிரப்பிகொள்ளபடுகிறது. ஆனால் இயற்கையை மீறிய மரணங்களுக்கு? தற்கொலைகளுக்கு?
தற்கொலைகள் இயற்கை இயக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகள்.
யமுனா இன்னொரு தற்கொலைக்கு முயற்சி செய்யக் கூடாது என்பதும் வாசகர்களில் இருக்கின்ற, இனி ஏதோ ஒரு எளிய நிகழ்ச்சியால் யமுனா அகப்போகின்ற, யமுனாவை அருகிலும் சுற்றத்திலும் வேறு எங்கோ ஒரு மூலையிலும் காணப்போகின்ற டீச்சரம்மாக்களும் சார்ந்தோருக்கு நிகழ்த்தவேண்டிய பாடம் இதுவாகும்.
அசோகமித்திரன் என்னும் எழுத்தாளன் இவற்றைக்கூறும் போது மகத்தான எழுத்தாளனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான்.
கலகக் குரலின் ஆன்மீகம். – குற்றம் கடிதல்.
கலகக் குரலின் ஆன்மிகம் என்ற தலைப்பில் கத்தார் பற்றிய குறிப்புக்களோடு இரா. திருநாவுக்கரசு காலச்சுவடு மே 2017 இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதில் கோவிலுக்கு செல்வதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும் மத சார்பின்மை என்றவாறு கட்டுரையை நகர்த்தியிருப்பார். இது எவ்வளவு சதவீதம் உண்மை?
கடவுள் என்ற சக்தியின் திணிப்பு பிறந்தது முதலே எமக்குள் ஊட்டபடுகிறது. இன்று நாத்திகன் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் ஏதோ ஒரு காலத்தில் ஆத்திகராக இருந்து மாறியிருகிறார்கள். இது ஒரு நீண்ட புரிதலால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது குறுகிய வெறுப்பினால் ஏற்பட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் தன் சுய விருப்பு வெறுப்பின் பெயரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அனுபவங்களின் முதிர்ச்சியே ஒருத்தனை ஆத்திகன் நாத்திகன் என்று வேறு பிரிக்கக் கூடிய ஒரே பொருள். எல்லோருக்கும் மேலும் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி ஏதோ ஒருவகையில் உலக இயக்கத்தில் பங்காற்றுகிறது என்பதையும் நம்புகிறோம். பிறப்பின் போதும் இறப்பின் போதும் உயிரின் உண்மையினை புரிந்துகொள்கிறோம். இவை எல்லாவற்றையும் ஒரு சக்தி இயக்குகிறது. அது இயற்கையோ கடவுளோ. ஒன்று உள்ளது.
ஒரு வேலைத்தளத்தில் மேலதிகாரிக்கு ஏதோ ஒரு வகையில் நாம் வணக்கம் செலுத்துகிறோம். அவரின் நிலை அதிகாரத்திற்கு மதிபளிக்கிறோம். அதே சமயம், அவற்றை கருத்தில் கொள்ளாது நடக்கின்ற ஊழியர்களும் இருப்பார்கள். ஆனால் இருவருமே ஒரே அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்த் தான் இயங்குவார்கள். இதில் முதலாமவர் ஆத்திகர் மற்றவர் நாத்திகர்.
ஆதிகால மனிதன் கல்லையும் மரத்தையும் இடியையும் மின்னலையும் இயற்கையையும் வணங்கினார்கள். கற்கள் காலம் செல்லச் செல்ல உருவங்களாக மாறத்தொடங்கின. தமக்கு ஏற்றவாறு கற்களை செதுக்கினார்கள். உருவம் கொடுத்தார்கள். வர்ணம் தீட்டினார்கள். அவர்களை மீறிய சக்தியை கொண்டாடினார்கள். அதுவே மதமானது. மனிதனின் சிந்தனை வளச்சியில் சிந்தனைகள் வேறுபட மார்க்கங்கள் பிரியத்தொடங்கின. பொதுமை மதம் பிரிவுக்குள்ளானது. மதங்கள் உருவாகின. மனிதனின் சிந்தனை இன்னமும் வேறுபட மதங்களை நிராகரித்தான். பின்னர் மதங்களின் உருக்களான தெய்வங்களை நிராகரித்தான். நாத்திகன் ஆனான். அவ்வளவே. இருப்பு இல்லை என்பது அவரவர் சிந்தனை வழியே.
இதில் ஆத்திக அடையாளபடுத்தல் என்றொரு விடயம் இருக்கின்றது. ஆத்திகனாக தன்னை பிரகடனபடுத்தியவன் அவனுக்குரிய மார்க்க அடையாத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. அதை அவன் கட்டயப்படுத்துகிறான். இந்த நிகழ்வின் பின்னணி ஒரு மத பரப்பு கொள்கையாகவும் இருக்கலாம். கூட்டம் சேர்க்கும் நோக்கமாகவும் இருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவனுக்கு அடையாளபடுத்தல் அவசியமாகிறது.
கத்தாரின் கோவில் பிரவேசமும் அப்படியே.
கட்டுரையை வாசிக்க
இங்கே சொடுகவும்.
மாண்ட்டோ படைப்புகள்.- சிறுகதை 1 – “காலித்” – ஊடறுக்கும் மனப்பிறழ்வுகள்.
எங்கள் எல்லோரிடமும் அழிக்கமுடியாத, அதே நேரத்தில் காரணமும் தெரியாத ஒரு வழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. ஒரு நேரத்தில் அதிகம் சிரித்தால் அடுத்து அதே அளவு அழவேண்டிவரும். அதற்காக எமது மகிழ்ச்சியான தருணங்களை வலுக்கட்டாயமாக குறைத்துக் கொண்டாடுவோம். இது சிறியவர்களில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌதீக ரீதியில் சமானன எதிர் வினை எதற்கும் உண்டு என்பதை மீறிய உள்மன அடுக்குகளின் ஒரு எண்ணமே இது எனலாம். அதிகம் சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை ஒன்று குறுகிய நேரத்தில் வீரியமாக அழுவதை பார்த்திருப்போம். அதை உதாரணமாகவே முன்னோர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். இந்த வழக்கம் சிறுவர்களாக இருந்து வளந்த பின்னரும் தொடரப்படுகின்றது. இந்த எண்ணம் மனதில் இருக்கின்ற ஒருவர், கொண்டாடுகின்ற மகிழ்ச்சிக்குப் பின்னால் அவருக்கு வருகின்ற துக்கம், மகிழ்ச்சியின் காரணமாக உருவானதே என்ற ஆழமான முடிவு ஒன்றை எடுத்துவிட செய்கின்றது. மனதளவில் வலிமை இல்லாதோருக்கு இப்படியான சூழ்நிலைகள் வருகின்ற போது மனப் பிறழ்வுகள் ஏற்படுகின்ற சந்தர்பங்கள் உருவாகின்றது.

சாதத் ஹசன் மண்ட்டோவின் காலித் சிறுகதையும் அவ்வாறான மனப் பிறழ்வை சந்திக்கபோகின்ற ஒரு சாதாரண அப்பாவையும்(மும்தாஜ்) நோய்வாய்ப் பட்டிருக்கின்ற அவரின் மகன் காலித்தை சுற்றியும் நகர்கின்றது. காலித் தனது முதலாவது பிறந்தநாளுக்கு முன்னரே இறந்துவிடுவான் என்பது உறுதியானதே. இந்த உறுதியை மும்தாஜின் மனைவி அவ்வளவு தூரம் நம்பிவிடவில்லை. காலித்தின் ஆரம்ப கால செயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாகவும் அவனின் வளர்ச்சி மற்றைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அதிகமாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் இந்த விடயத்தால் மிகவும் சோர்வுற்றிருந்தான். எந்த நேரமும் காலித் இறந்துவிடக்கூடும் என்கின்ற நினைப்பு அவனை வாட்டியது. அதுவும் காலித்தின் முதல் பிறந்தநாள் நெருங்க நெருங்க இன்னும் அதிகமானது.
இவ்வளவு கதையோட்டத்திலும் இரண்டு நிதர்சன சமூகவியல் பார்வையும் அதனோடு தனிமனித எண்ணங்கள் திரிக்கப்படுகின்ற விதமும் சித்தரிக்கப்படுகின்றது. ஒன்று- ஒரு மனிதனின் இறப்பின் பின்னர் அவரை சுற்றியிருந்தவர்கள் இறந்தவரை பற்றி கதைப்பதை கேட்டிருக்கிறோம். அதன் சாரம் இதுவாகத்தான் இருக்கும். – இறப்பதற்கு முன்னர் மிகவும் பொலிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். எல்லோரது மனதையும் கவர்ந்தவராகவும் எல்லா விடயங்களிலும் ஆளுமை மிக்கவராகவும் இருந்தார். வழமையான அவரின் செயற்பாடுகளை விட சமீபத்திய செயற்பாடுகள் மிக நேர்த்தியாக இருந்தன. எல்லாம் அவரின் இறப்பிற்க்கான அறிகுறியாக இருந்து விட்டது. இந்த கதையின் ஓட்டத்தில் மும்தாஜின் மனதிலும் இந்த பார்வை இருந்தது, அவரின் மனைவியின் மனதிலும் இதே பார்வை இருந்தது. ஆனால் பார்வைகள் இரண்டு ஒன்றுகொண்டு வித்தியாசமானவை. மும்தாஜின் பார்வை இறப்பை நோக்கிய அறிகுறியாகவும் மனைவியின் பார்வை ஆரோக்கியமான குழந்தைக்குரிய அறிகுறிகளாகவும் தென்படுகின்றது. இந்த இடம் மும்தாஜை மனதளவில் வலிமையற்றவராக வெளிக்காட்டுகின்றது. இரண்டாவது முடிவுப் புள்ளியை நோக்கிய நெருக்குதல்கள். ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையிலும் அல்லது போனால் ஒரு வியாபர வேலையிலும் காலக்கேடு முடிகின்ற நேரம் ஏற்படுகின்ற மன அழுத்தம் மிகக் கொடியது. சாதாரண மனிதனின் நிலையிலிருந்து அவனின் நாளாந்தத்தை பறித்து விடுகின்றது. தன்னிலையிலிருந்து தள்ளாட வைக்கின்றது. இது சாதாரண வாழ்வில் வாழுகின்ற எல்லோருக்கும் பொருத்தமானது.
பிறந்தநாளுக்கான ஆயத்தங்களை மனைவி விமர்சையாக செய்துகொண்டிருக்கின்றாள். அவளின் சுற்றம் நண்பர்கள் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுகின்றாள். ஆனால் மும்தாஜால் விரைவில் நடக்கப்போகின்ற இழப்பை நினைத்துக்கொண்டே நாட்களை கடத்துகின்றார். மும்தாஜின் எண்ணம் போலவே அந்த நாட்கள் அமைந்து கொண்டு வந்தன. ஒருநாள் மனைவியின் கூக்குரலுக்கு ஓடிப்போய் குளியலறையில் பார்க்க, எப்போதும் கைகளை விலாசமாகவும் குதூகலமாகவும் அசைத்து குழைந்து தண்ணீரில் விளையாடுகின்ற காலித் சோர்ந்து போனவானாக நின்றான். மும்தாஜுக்கு இன்னும் இழப்பின் நாள்நோக்கிய வருத்தம் அதிகமாகின்றது. அந்த நேரத்திலும் அவனின் மனைவி தன்னையும் கணவனையும் சுதாகரித்துக்கொள்ளுமாறு சாட்டுகளைச் சொல்லுகிறாள். காலித் சோர்ந்தும் துவண்டும் போகின்ற சந்தர்பங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. வருகின்ற மருத்துவர்களும் காலிதிற்கு ஏற்பட்ட நோய் கொடியது இல்லை என்றும் அதற்கான மாத்திரைகளை உபயோகிப்பதன் மூலம் குணப்படுத்திவிடலாம் என்றும் ஆறுதல் கூறுகின்றனர். இருந்தும் நாட்கள் செல்லச் செல்ல காலித் தீவிரமாக நோய்வாய்ப்படுகின்றான். அவனோடு மும்தாஜின் நிலைமையும் மோசமாகின்றது. மும்தாஜ் உளவியல் ரீதியாக பாதிப்பையும் நெருக்கத்தையும் உணர்கின்றான். காலிதிற்கு நோய் தீவிரமடைய மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கபடுகின்றான்.
இதன் பின்னரான மும்தாஜின் செய்கைகள், அவரின் மனப்பிம்பங்கள் அதில் உண்டாகுகின்ற பிறழ்வுகள் அதன் பின்னணி – இவை வாததிற்க்குரியவை. காலித்தின் தந்தையாக மும்தாஜ் என்கிற தனிநபர் செய்கின்ற ஒவ்வொரு சிறிய செயல்களும் காலித்தை பாதிப்பதாக தன்னுள் எண்ணிக்கொள்கின்றார். வயிறு நிரம்ப தண்ணீர் குடிப்பதிலும் சிகரட் புகைப்பதிலும் காலித்தை மருத்துவ மனையில் சென்று பார்பதிலும் தான் அடைகின்ற நிறைவு காலிதிற்க்கு ஆபத்தை உண்டாகும் என நினைக்கின்றார். அவற்றையெல்லாம் செய்வதில் பின்வாங்குகின்றார். அவரின் உடலை இயக்குகின்ற மூளையின் பகுதியும் உணர்வுகளை இயக்குகின்ற மூளையின் பகுதியும் வேறுவேறாக செயற்படுகின்றது. இதையே மும்தாஜ் அசரீரியாக உணர்கின்றார். வலிமை குன்றிய மனதினை வலிமையான மறை எண்ணங்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைகின்றது. ஒவ்வொன்றையும் செய்வதால் உன் மகன் இறந்து விடுவான் என்று கூறி கூறியே பாசத்தால் பணியவைத்து அசரீரி காய்களை நகர்த்திக்கொண்டு போகின்றது. ஒவ்வொரு நகர்விற்க்குப் பின்னும் மும்தாஜால் நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தும் மீண்டும் வலிமையாக சூழ்ந்துகொள்கின்ற அசரீரியை மீறி/ உடைத்துக்கொண்டு எழுகின்ற சக்தி அவன் மனதில் இல்லை. அதனால் முழுமையாக ஆட்கொள்ளப்படுகின்றான்.
கதையின் நிறைவில் மும்தாஜ் தன் மகனை எடுத்துக்கொண்டாவது அசரீரியை தன்னை பிரியும் படி வேண்டுகின்ற அளவு மனதளவில் பிறழ்வுஅடைந்திருப்பார். இறுதியில் காலித் இறந்து போனான். கதையை மாண்ட்டோ இப்படி முடித்திருப்பார்
பிறகு அவன் தன் மகனிடம் “ காலித் தயவு செய்து இந்தக் குரலை அழைத்துப் போவாயா ?” என்று கெஞ்சினான்.
காலித் தன் தலையை அசைத்து “ சரி “ என்று சொன்னதைகேட்டதாக அவன் சத்தியம் செய்தான்.
ஆரம்பத்தில் ஏதோ ஒன்றைப் பொருட்டு அதிகம் சிரத்தைகொள்வதனால் அதன் மூலம் அதிகம் கவலை அடைவதனால் மனப் பிறழ்வு அடைந்ததோ கடைசியில் அந்த கவலையே பொருட்டில்லாமல் ஆக்கும் அளவு அவை சக்தி வாய்ந்தவையாக மாறிக்கொள்கின்றன.
ஒரு மணி நேரம் முன்பு. – முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் நிறைவு.
ஆ.முத்துலிங்கம் ஈழ இலக்கியத்தின் முக்கிய அடையாளம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. ஒரு கதை சொல்லியின் மிக தேர்ந்த வடிவமே முத்துலிங்கம். கதைகளை வாசகர் சிரமப்பட்டு அணுகாமல் மெல்லிய நீட்சியுடன் விரிகின்ற நுட்பமான கதைசொல்லல் அவரது. முத்துலிங்கத்தின் பல கதைகளின் முடிவும் அதனால் வாசகனுக்கு நீளுகின்ற வாசிப்பின் பின்னான அமைதியும் அவரின் எழுத்தாளுமையின் வலிமையே.
இறுதி காலச்சுவட்டில் வெளியான ஒரு மணி நேரம் முன்பு என்ற சிறுகதையும் வாசிப்பின் பின்னான நீண்ட அமைதியை தருகின்ற அவரின் படைப்பாகும். கல்வியை ஆதாரமாகக் கொண்டு வறுமையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் தாய் மகன் உறவினை கதையாடலாக கொண்டு எழுதப்பட்டிருகின்றது. நிதர்சனமாக பேசப்படவேண்டிய கரு. இன்றைய சூழலில் கல்வி நிறுவனங்களில் காணப்படுகின்ற அயர்ச்சியான போக்கு வறிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றது. பொதுவாக பல்கலைக்கழக தேர்வு முறை எந்த தரப்பினையும் சாராது சமத்துவமாக இருந்தாலும் அதைத்தாண்டி விரிந்துபோய்க்கொண்டிருக்கின்ற தனியார் கல்வி மையங்களும் இதர அரச கல்வி நிலையங்களும் வறிய மாணவர்களை அடைகின்ற விகிதம் மிக சொற்பமாகவே உள்ளது. கையில் பணம் இருக்கின்ற எவரும் எவ்வித தகுதிகளும் இன்றி பொறியியலாளர்களாவும் மருத்துவர்களாகவும் கணக்காளர்களாகவும் வேறு வேறு உயர்நிலை உத்தியோகத்தர்களாகவும் உருவாக்க கூடிய கல்வியல் நிலைமை இன்று எழுந்துள்ளது.
இதில் வறுமை கோட்டின் கீழ் மிக திறமையுடன் இருக்கின்ற மாணவர்கள் வெளிப்படையாக ஒதுக்கப்படுகிறார்கள். இன்றைய இலங்கையில் இருக்கின்ற பல்கலைகழக நுழைவு முறையில் உட்புக தவறுகின்ற வறிய மாணவர்களின் எதிகாலம் கேள்விக்குறியாகின்றது. அவர்களுக்கான சரியான வழிநடத்தல் அதன் பின்னர் கிடைப்பதில்லை. அவர்கள் வழமை போலவே அவர்களின் குடும்ப தொழிற்கு திரும்பி விடுகின்றனர். இலங்கையில் இருக்கின்ற ஏனைய தொழில் துறை சார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சரியான விளக்கம் உரிய நேரத்தில் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இதிலிருந்து வறிய சமூகத்தின் பின்னடைவு இன்னும் அதிகரிகின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்தின் அறிகுறி அல்ல.
இதே பிரச்சனையின் மையத்தில் தான் கதை நகர்கின்றது. சிறந்த கல்வி வலிமை உடைய ஒரு சிறுவனை பெரிய பாடசாலை ஒன்றில் சேர்க்க தாய் எடுக்கின்ற அடுக்குகளோடு கதை ஆரம்பமாகின்றது. கதையின் ஆரம்பத்தில் சிறுவன் கடைக்கு சென்று , ஒரு வீட்டின் அடிப்படை உணவு விகுதி உப்பை கேட்பதும்; கடைக்காரனால் பழைய மிகுதியை செல்லுத்தும்படியும் உப்பு கொடுக்க மறுக்கப்பட்ட நிலையிலும் வீடுவந்து சேர்கிறான். உப்பில்லாத கஞ்சியை சிறுவன் குடித்துவிட்டு தாய் வெறும் வயிறுடன் கிளம்புகின்ற வறுமைக்குறிப்புகள் கதையின் ஆரம்பத்தில் பரவுகின்றன.
ஒரு தாயின் மனநிலையை, தனது மகனை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கை உடைய ஒரு தாயின் தாயார்ப்படுத்தல்கள் ஆழமான குறியீடுகளால் உணர்த்தப்பட்டிருகின்றது. படித்த, வசதியான சமூகத்தில் இருந்து வருகின்ற பெண்களின் லட்சணங்களை அவனின் தாய் உருவகித்திருந்த பாங்கில் தன்னையும் ஒரு வசதியான பெண்ணாக அலங்கரித்துகொள்ளும் இடம்; அந்த தாயின் ஆழமான மனசிக்கல்களை எடுத்து நிற்கின்றது. தன் அலங்கோலமே மகனின் கல்விக்கு முட்டு போடக்கூடாது என்கிற மனநிலையை முத்துலிங்கம் சொல்லாமல் சொல்லுகின்றார்.
அதே தாய் காலதாமதத்தால் நழுவப்படுகின்ற வாய்ப்பின் பின்னர் மீண்டும் வழக்கமாக அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற பக்குவம் வறுமையின் மிக சிறந்த படிப்பினையாக தோன்றுகின்றது. ஏமாற்றங்களும் வலிகளும் தினம் தினம் பழக்கிப்போன ஒன்றாகவும் கவலைகள் தோன்றுவதும் மறைவது வறிய சமூகத்தின் எழுதபடாத வழக்கமாகவும் இருகின்றது.
அதிக கவனமாக சிரத்தையுடன் பள்ளிக்கு மாகாணத்தில் முதல்நிலை பெற்ற மகனை அழைத்து செல்லுகின்ற அந்த தாயின் ஆர்வமும் , வாய்ப்பின் மீது பற்றிருந்தும் வறுமையை நோக்கி விழிப்படைந்த மகனின் ஆறுதல்களும் காலைக்கும் மாலைக்குமான வித்தியாசத்தை சரியாக புரிந்து வைத்துள்ள குடும்பங்களின் பிரதிநிதிகள்.
முத்துலிங்கம் என்ற கதை சொல்லி யாரோ ஒரு பிரதிநிதிக்கு முழுமையாக கதைசொன்ன நிறைவை வாசகன் பெற்றுக்கொள்கிறான்.
நிதர்சனம். அன்டன் செக்காவின் வலிமையான மனப்பதிவுகள்
தி இந்துவின் 2016ஆம் ஆண்டின் தீபாவாளி சிறப்புமலரில் பிரசுரமாகியிருந்த அன்டன் செக்காவ் இன் வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எனக்கு சில நிதர்சன உண்மைகளை வெளிக்காட்டியது. வழமையான செக்காவின் சிறுகதைகள் போலவே நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு படைப்பு தான் வலிமையான மனப்பதிவுகள்.
எங்கள் எல்லோரிடமும் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. யாரும் அறவே இல்லை என்று மறுக்க முடியாது. பலர் வாழ்நாளில் தாங்கள் ஏமாற்றபட்டோமா என்று தெரியாமலே இறந்து போகின்றனர். சிலர் நெடுகாலத்தின் பின்னர் அறிகின்றனர். நான் கூறும் குணம் ஏமாற்றம் அடைவதே. எந்த பேதமுமே இல்லாமல் எல்லா தேசங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம் என்ற செயற்பாடு வெற்றிகரமாக நடைபெறுகின்றது. ஏமாறுகின்ற செய்கை நெடுகாலமாக இருந்து கொண்டே வருகின்றது. இந்த செய்கையில் பயன்படுத்தப்படும் உத்தியை மையமாக வைத்தே வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது.
1880களில் எழுதபட்டிருக்க கூடிய இந்த சிறுகதையில் , அதில் வருகின்ற வழக்கறிஞர் என்ற பாத்திரம் பயன்படுத்துகின்ற உத்தி இன்றைய நவீன சூழலிலும் அதே வழிமுறையில் பயன்படுத்தபடுகின்றது ஆச்சரியமாக இருந்தது. எம்மை விமர்சனம் செய்கின்ற ஒருவர் முதலில் எப்போதுமே எம்மில் உள்ள நல்ல விடயங்களை ஆரவாரமாக சொல்வார். அந்த புகழ்ச்சியில் மதி மயங்கிப்போய் நாமும் அவரின் சொற்களுக்குள் ஒன்றித்து அவரின் மேல் அதீத நம்பிக்கை வைத்துவிடுவோம். அவரின் கருத்துக்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்ற மனநிலையை அவரின் புகழ்ச்சி ஏற்படுத்தி விடும். அவரின் புகழ்ச்சியின் வீரியத்தில் அவரின் சொற்கள் எல்லாமே வேத வாக்கியங்கள் ஆகிப்போகும். அப்படியே அவர் சற்று இறங்கி ஆனால்… என்று ஆரம்பிக்கும் மற்றைய பக்க விமர்சனமும் உண்மை பொய் என்ற வாதங்களுக்கு அப்பால் சரியானதாகவே இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற மனநிலையை நாம் உருவாக்கிகொள்வோம். மனம் பகுத்து அறிதல் என்பதையே மறந்து விமர்சகரின் மூளையில் சிந்தனை ஓட்டத்தோடு கலந்து போகும். மிக அப்பட்டமான பொய்யையும் மெய்யாக்குகின்ற வல்லமை அந்த விமர்சன உத்திக்கு இருக்கிறது.
இந்த நுட்பத்தில் தான் அந்த வழக்கறிஞர் தனது நண்பனின் மனதை மாற்றுவான். இதே நுட்பம் நம் வாழ்விலும் பல முறை சந்தித்திருப்போம். நம்முடன் பேச்சு கொடுத்து நம்மை அளந்து ஒரு உயரத்தில் வைத்து விட்டு பின்னர் அவர்கள் பேசுகின்ற வசையையெல்லாம் உள்வாங்குகின்ற மனநிலைக்கு எம்மை தயார்படுத்துவார்கள். இதை சாதாரண நபர்களால் செய்து விடமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் எல்லோராலும் இந்த உத்தியை பயன்படுத்த முடிகின்றது. பயன் படுத்துகின்றார்கள். சாதாரண வாழ்வில் ஒரு நாளில் பலமுறை இந்த அணுகுமுறையை இனி கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம். முக்கியமாக ஒதுங்கி கொள்ளலாம்.
வலிமையான மனப்பதிவு சிறுகதையில் இந்த நிதர்சன ஒன்றிப்பை உணரக்கூடிய சந்தர்பங்கள் அதிகம் இருகின்றன.
சிற்பி – கழைக்கூத்தாடியின் இசை – தேவி பாரதி
(01)
எழுத்தாளன் என்ற தொழிலின் புரவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளன் என்பவன் அதனாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளன் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவனின் வீச்சு எல்லையை அவன் நிர்ணயிப்பதில் தான் இருகின்றது. இந்த நிர்ணயிப்பில் வெற்றி பெறுகின்ற எழுத்தாளர்கள் தான் இலக்கியத்தில் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களின் விஸ்தரிப்பான எழுத்தின் வலிமையை , உருவாகின்ற அவர்களின் எழுத்துலக சிருஷ்டிப்புக்கள் தான் காட்டும். ஒரு சம்பவத்தை அல்லது ஒரு காட்சியை வாசகன் ஊடாக படரவிடுவதும் அதில் உலவுகின்ற பாத்திரங்களை வாசகனுடன் பேசவைப்பதும் அதனூடாக உணர்வுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதும் என்ற பொது மொழியைத்தாண்டி இலக்கியங்களையும் சினிமாவையும் கலக்கின்ற களத்தை உண்டாகிகொண்டு அதில் உணர்வுகளை பேசுகின்ற தனித்துவமான எழுத்து கழைக்கூத்தாடியின் இசை.
எழுத்தாளர்கள் கையாள்கின்ற மொழியின் உரு , அவர்களின் கதைகருவின் மீதான அதீதத்தை கூட்டுவதாக இருக்கும். எந்த வகை கருவிற்கும் இது பொருத்தமானது. சரியான மொழியின் உருவில் உணர்வுகள் வெளிக்கொண்டுவரும் போது அதில் உருவாக்கப்படுகின்ற அழகியல் அற்புதமானதாக இருக்கும். பெரும்பான்மையான கதைகளில் இந்த உணர்வழகியல் கதை மாந்தர்களுக்கூடாகவே வெளிபடுத்தப்படும். வெகுசில படைப்புக்களில் தான் அதன் சூழலும் அதில் உள்ள உயிரற்றவையும் கூட உணர்வழகியலை வெளிக்கொண்டுவரும். அந்த கதைக்களம் மற்றும் உணர்வுப்பின்னணி இரண்டும் ஒன்று சேரும் போது வாசனுக்கு கதையின் மீது ஏற்படுகின்ற ஒன்றிப்பு மிக பலமானதாக இருக்கும். வாசகன் களத்தில் நின்று ஒரு முறை களத்தை சுற்றி பார்க்கும் போது அங்கிருக்கின்ற சிலையிலிருந்து அசையும் மனிதர்கள் வரை எல்லோரிடமும் பீடித்துபோயிருகின்ற கதைப்பின்னணி உணர்வழகியலின் உச்சம்.
எந்த சந்தர்ப்பத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடக்கூடிய இந்த நுட்பம் கழைக்கூத்தாடியின் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் சில போதைக்குறியீடுகள் மூலம். சினிமா, சிகரட், மாது, காப்பி, காதல், இலக்கியம் எல்லாமே போதையின் குறியீடுகள் தான். அவை ஒவ்வொன்றிலும் இந்த உணர்வழகியல் ஊடுருவி செல்கின்றது. கதை மாந்தர்களிடம் பீடித்திருகின்ற அவலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக பேசப்படுகின்றது. எங்கிருந்தோ கடற்கரைக்கு காற்று வாங்க வருகின்றவர்களிடம் கூட.
“அந்த இடம் அரவாணிகளுக்கும் ஹோமோ செக்சுவல்களுக்குமுரியது. முகத்தைச் சுழித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் சுழித்துக்கொள்ளலாம். அடுத்த ஐம்பது மீட்டரில் வேசிகளின் உலகம் தொடங்குகிறது. கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நீண்டும் விரிந்தும் பரந்தும் கிடக்கும் அவ்வுலகமே இப்பெருநகரவாசிகளுக்கு அந்தப்புரம். உயரமான விளக்குத் தூண்களிலிருந்து கசியும் பாலொளிக்குக் கீழே படர்ந்திருக்கும் புகையிருளுக்குள் தம் மஞ்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இம்மாநகர ராஜாக்களும் ராணிகளும் கூத்திகளும் சேடிகளும். இப்பெருநகரில் காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்ள வேறு உருப்படியான இடமெதுவும் இல்லை. காற்று வாங்க வந்தவர்களுக்கு அருவருப்புத் தாளவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டு உறுமும் கடலை நோக்கி வேகமாக நடக்கிறார்கள். சிலர் கள்ளப் பார்வை பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு ஆச்சரியமளிக்கிறது,
“அம்மா, அம்மா”
“என்ன?”
“அந்த அங்கிளும் ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க?”
“வெளையாடறாங்க”
சங்கடத்துடன் பதிலளித்தபடி தாய் அவர்களை இழுத்துச் செல்கிறாள்.
“அது என்ன வெளையாட்டு அம்மா?”
“கண்றாவி, இதுகளுக்குக் கொஞ்சமாச்சும் வெக்க மிருக்குதா? பப்ளிக் பிளேஸ்ல இதென்ன நியூசென்ஸ்?”
“நீங்க பேசாம நடங்க”
(02)
சிறுகதை என்ற வரையறைக்குள் கதைக்குள் உலாவ வேண்டிய மாந்தர்களும் சம்பவங்களும் ஏற்ற இறக்கங்களும் சம்பவங்களும் வரையறைக்குட்பட்டவை. அந்த வகையில் சிறுகதை என்ற பரிமாணத்தை தாண்டி குறுநாவல் என்ற பரிமாணத்தை கழைக்கூத்தாடியின் இசை பெறுகின்றது. என்னால் வாசிக்கப்பட்ட தமிழை மூலமொழியாக கொண்டு எழுதப்பட்ட முதல் குறுநாவல் இதுவே. புனைவுகளை ஆங்கிலத்தில் Flash fiction ,Short story ,Novelette ,Novella ,Novel என்று ஐந்து விதமாக வகைபடுத்துகின்றனர். கழைக்கூத்தாடியின் இசை Novelette என்கிற வடிவத்திற்குள் உட்புகுகிறது. ஒரு குறுநகர வாழ்வியலை ஒவ்வொரு அணுவாக பேசிக்கொண்டே நீள்கிறது கழைக்கூத்தாடியின் இசை. ஒரு பழைய மான்சனில் தொடங்கி வீதிகள், சாப்பாட்டு கடைகள், சிலைகளின் அடிவாரம், சினிமா தளங்கள், கடற்கரை, புகையிரத நிலையம், ஒரு அழுக்கான அறை என்று ஒரு மனிதன் சாதரணமாக நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் கதையினை ஓடவிட்டு ஒவ்வொரு சந்திலும் ஒவ்வொரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். எல்லா சந்திகளும் ஏதோ ஒரு சுமையுடன் செல்லும் வாசனுக்கு இன்னொருபடி சுமையினை ஏற்றிவிடுகின்றது. ஒரு நிதர்சன தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை ஒவ்வொரு புள்ளியும் விரிக்கின்றது.
ஆரம்பத்தில் எழுத்தாளர் உருவாகுகின்ற இலக்கிய உட்புகுத்தல்கள் ஒரு வாசகனாக கதையின் வீரியத்தை குறைப்பதாக தோன்றுகின்றது. ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. நிதர்சன வாழ்க்கை என்ற புள்ளியில் நின்று சம்பவம் ஒன்றை விரித்துக்கொண்டு செல்லும் போது அந்த சுவாரஸ்யமான வாசிப்பு தன்மைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற உணர்வை உண்டாகியது. தெளிவாக சொல்ல போனால் இலக்கிய திணிப்பு போன்றது.
அங்கிருந்து நேர் கிழக்கே நடந்தால் காற்சிலம்பை உயர்த்திப்பிடித்தபடி ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருக்கும் கண்ணகியின் பொற்பாதங்களைச் சேரலாம். “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?” எனப் பரிவுடன் கேட்க அங்கே அவளுக்கு யாருமில்லை. சாலை நெடுகிலுமுள்ள கோட்டைக் கொத்தளங்களுக்குச் சுழலும் விளக்குகளுடன் விரையும் அமைச்சர் பெருமக்களுடையவும் துறைச் செயலாளர்களுடையவும் இயக்குனர்களுடையவும் காவல்துறை அதிகாரிகளுடையவும் வாகனங்களின் இடையறாத சைரன் ஒலி. அடிக்கொருதரம் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், இளைய சமுதாயத்தின் அசுரவேக இருசக்கர வாகனங்கள். எல்லாக் கண்காணிப்புக்களையும் மீறிச் சிலசமயங்களில் யாருக்காவது மண்டை சிதறுகிறது, முட்டிகள் உடைகின்றன. ‘ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தன் அரும்பெறர்ப் புதல்வனை யாழியின் மடித்தோனின் பெரும்பெயர் புகாரை’ப் போல இல்லை அவளுக்குக் காற்சிலம்பை உயர்த்திக்காட்டி நிற்கக் கிடைத்திருக்கும் மேடை அமைந்துள்ள காமராஜர் சாலை.
இது போன்ற மிக சொற்பமான இடங்களில் அவரின் வழமையான நடையில் கடந்திருக்க மிகத்தரமான அகச்சூழல் பார்வையினை ஏற்படுத்திஇருக்கும்.
(03)
குறுநாவல் ஒன்றுக்குள் பல சம்பவங்கள் அனுபவங்கள் கருத்துகள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். ஒவ்வொரு இடத்தையும் கோர்த்து எடுத்துக்கொள்ள கதைமாந்தர்கள் பயன்படுத்தபடுவார்கள். கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி கதைமாந்தர்கள் உலாவுவார்கள். ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு ஒரு நகரத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவருவது என்பது, அவனின் பயணிப்பிலும் நாளாந்ததிலும் கேள்விகளை ஏற்படுத்தி உயிர்ப்பை இல்லாமல் செய்துவிடும். கழைக்கூத்தாடியின் இசை எல்லா முடுக்குகளிலும் பயணிக்கும் பாத்திரம் ஒன்றை எதிர்பார்கிறது. அந்த எதிர்பார்ப்பை எழுத்தாளர் கைக்கொண்ட விதம் போற்றுதலுக்குரியது.
சினிமா என்ற ஊடகம் தோற்றத்தில் பிரமிப்பையும் உள்ளடக்கத்தில் சொல்லமுடியாத வேதனைகளையும் துயர்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்பையும் கொண்டது. சினிமாவுக்கு சமவுடமை வாதம் கிடையாது. ஒருவகையான மேலாதிக்க வாத போக்குடைய சினிமாவில் அதிகம் உழன்று போகின்ற உழைப்பாளர் வர்க்கம் தான் உதவி இயக்குனர்கள். இதிலும் மூன்றாம் படி நான்காம் படி உதவி இயக்குனர்கள். ஒரு நகர வாழ்க்கைக்கு அதன் எல்லா பிரவாகங்களுக்கும் மிக கச்சிதமான படைப்புகள் அவர்கள். அவர்கள் அனைத்து விதமான மக்களுடனும் பழகும் பாக்கியம் பெற்றவர்கள். எல்லா தட்டு மக்களின் வாழ்கையையும் வாழ்பவர்கள். நகரின் பெரும்பாண்மையை தம்முள் இணைத்து கொண்டவர்கள்.
இலக்கியம் தெரிந்த உதவி இயக்குனர்கள் என்றால் என்ற கற்பனை உத்திதான் கதையின் முழு நகர்விற்கும் அச்சாணி. காணுமிடமெல்லாம் இலக்கியத்தாலும் இலக்கிய கர்த்தாகளாலும் அவர்களின் சிருஷ்டிபுக்களினாலும் கதா மாந்தர்களை நகர்த்தி அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நகர்வையும் இலக்கிய ரசனைக்குட்படுத்தி இருக்கிறார்.
(04)
கழைக்கூத்தாடியின் இசை.
ஒரு பிரமிப்பான தலைப்பும் பொருத்தமும்.ஒரு அவலத்தின் குறியீடாக ஒரு இறுக்கமான முயற்சியும் அதற்க்கான மிக குறைவான கூலியும் என்ற துன்பியல் வாழ்க்கை கழை கூத்தாடிகளின் உடையது. ஒரு சீரான என்ற எதிர்பார்ப்புடன் உயரத்தில் வைக்கப்படும் தடியின் மேல் இன்னொரு தடியை கைகளின் அகலங்களில் விரிந்து புடித்துக்கொண்டு அசைவுகளுக்கு ஏற்ப தடியை சமநிலைப்படுத்தி தள்ளாட்டத்தில் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுள் மிக சிறிய பெண் குழந்தையிடம் தட்டினை கொடுத்து சன்மானம் கேட்டு அனுப்புவார்கள். அந்த குழந்தையோ ஒரு தட்டு ராபானையோ அல்லது ஏதாவது ஒரு ரலிய இசைக்கருவியை வாசித்துக்கொண்டு சோக கீதம் பாடிக்கொண்டு கூத்தடியினை சுற்றி சுற்றி வரும். அந்த இசையின் கொடூரம் கூத்தாடியின் கவனத்தை இன்னும் கூர்மையாகும். இந்த உளவியல் பின்னணி அந்த இசைக்குண்டு.
அதே வாழ்க்கை தான் ஒவ்வொருவரினதும் எம்மா சுற்றி இருகின்ற இசை இன்னும் கவனிக்கிசெய்வதற்கு உரியதே தவிர சேர்ந்து உழல்வதற்கு அல்ல.
அந்த குழந்தை கேட்கும் பணம் பிச்சை அல்ல உழைப்பின் கூலி.
மிக கச்சிதமான குறுநாவல் ஒன்றை வாசித்த திருப்தி கழைக்கூத்தாடியின் இசையினை வாசித்த போது கிடைத்தது. தேவி பாரதி என்ற ஆளுமையின் ஆழமான எழுத்து இன்னும் கொண்டாடப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனாக வாசகனுக்கு தேவி பாரதி வெற்றி கழைக்கூத்தாடியின் இசையில் கௌதம நீலாம்பரனின் இதழ்களிலிருந்து சத்தமில்லாமல் உதிர்ந்து தன் காலடியில் விழுந்து நசுங்கிய பழுப்பு நிறப் புன்னகை போன்றது.
தேவி பாரதியின் கழைக்கூத்தாடியின் இசை என்ற குறுநாவலை வாசிக்க
http://www.kalachuvadu.com/archives/issue-197/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
அவரின் ஏனைய படைப்புக்களை வாசிக்க
http://devibharathi.blogspot.in/
எளிமை சொல்லும் அனுபவங்கள் – அகளங்கன்
சொந்த வட்டார வழக்கில் ஒரு கதையை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒன்றிப்பு ஆலாதியானது. அத்தோடு கதைக்களமும் சம்பவங்களும் கண்களின் முன்னே இருக்கும் போது கதைசொல்லி ஒரு வீதியினூடாக கதைமாந்தர்களை அழைத்துச் சென்றால் வாசகனின் மனம் அதன் கிளைவீதிகளை எல்லாம் நினைவுபடுத்திக்கொள்ளும். இது வீதிகளைப் போலவே சம்பவங்களுக்கும் பொருந்தும். ஒரு சில சம்பவங்களில் நாம் முதலாம் நிலையிலும் பல சம்பவங்களில் நாம் மூன்றாம் நிலையிலும் நின்று பாக்கின்ற வழக்கத்தை உடையவர்கள். முதலாம் நிலை கதை சொல்லியின் உணர்வு எப்போதும் மூன்றாம் நிலை வாசகனை எளிதாக அடைந்து விடுவதில்லை. இருந்தும் அதிகளவான எழுத்தாளர்கள் இந்த பிளவினை இல்லாது உணர்வுநிலை ஓட்டத்தை கதையில் ஏற்படுத்துவதற்கு கதைகள வட்டார வழக்கினை பயன்படுத்துகின்றனர். இந்த வட்டார வழக்கில் எழுதபடுகின்ற கதைளை இன்னொரு சாராரால் அணுக முடியாமல் போவது , ஒரு சில வட்டாரவழக்கு கதைகளின் வழுவே. இந்த நிலை பெரும்பாலும் இலங்கையில் இருக்கின்ற வட்டார வழக்கு கதைகளுக்கு ஏற்படுவதில்லை. ஈழத்தின் பேச்சு வழக்கு இலக்கண தமிழை அண்மித்ததாகவே இருக்கின்றது.
ஒரு கதையின் எளிமை அக்கதைக்கு சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் அமைந்துவிடுகின்றது. இந்த எளிமை கதை கேட்பவருக்கு சௌகர்யமாக இருக்கிறது, இருந்தும் கதையினை வாசிப்பவருக்கு ? வாசகன் என்ற நிலையில் ஒரு சிறுகதை எளிமையாக இருபதனால் ஏற்படுகின்ற ஒன்றிப்பின்மை தவிர்க்க முடியாதது. ஒரு வேற்று களத்தை வாசகனுக்கு விபரிக்கும் போது அல்லது ஒரு மூன்றாம் நிலை வாழவியலை கூறும் போது எளிமையாக கூறல் என்ற நுட்பம் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இருந்தும் அதே களத்தில் அதே வாழ்வியலில் வாழ்ந்த ஒருவர்க்கு அந்த கதை விரிக்கின்ற கோண பரிமாணங்கள் மிக பெரியவை. இதை வேற்று வாசகாரால் உணர்ந்துகொள்ள கடினமாக இருக்கும்.
வவுனியாவின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை அகளங்கள்(நா.தர்மராஜா) ஆவார். அவரது சிறுகதைகளின் தொகுப்பு முற்றத்துகரடி. அதிலுள்ள யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும் என்ற இருசிறுகதைகள் பற்றிய எனது பார்வையும் இவ்வாறான ஒன்றே. அவருக்கே உரிய மிக தெளிவான மொழிநடையும் எளிமையான கதைசொல்லலும் முற்றத்துக்கரடி முழுவதும் காணப்படுகின்றது. வவுனியாவின் இரு கிராமங்களை களமாகக் கொண்டு இரு வேறான பொருளாதார நிலையை உடைய மக்களின் கதைகள் தான் யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும். யாழ்தேவி தாண்டிக்குளத்தில் வசிக்கின்ற ஒரு ஏழை சிறுவனையும் குடும்பத்தையும் பற்றியும் நாளைக்கும் பூ மலரும் நடுத்தர பொருளாதார நிலையை உடைய ஆசிரியரின் குடும்பத்தை பற்றியும் இருவருக்குமிடையேயான பொதுமையான போர் சூழல் பற்றியும் பேசுகின்றது.
யாழ்தேவி
விளிம்பு நிலை மனிதர்கள் என்பதற்கு செம்மையான உதாரணம் கூறக்கூடிய குடும்பம் ஒன்றிலிருந்து பாத்திரங்கள் வார்க்கபடுகின்றன. குடும்பத்தின் வறுமையாலும் அம்மாவின் இயலாமையாலும் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் பாடசாலைக்கும் செல்லகூடிய திறமையாக கற்க கூடிய ஒரு பத்து வயது சிறுவனின் ஒரு நாள் வாழ்கையை தான் யாழ்தேவி. போரின் நிலவுகையை விரும்பக்கூடிய தொழில் செய்கின்ற சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். அப்படியான மனநிலையில் உள்ள ஒருவனை தாய் , அவர்களது வாழ்வில் போரினால் உண்டான இழப்புகளை பற்றி கூறி போரின் கொடூரத்தை விவரிப்பதாக கதையை ஆசிரியர் முடித்துக்கொள்வார். ஒரு எளிமையான கதைகூறலின் ஊடாக இந்த உணர்வுநிலை பரிமாற்றத்தை நிகழ்த்தியிருப்பார்.
நாளைக்கும் பூ மலரும்
அதே ஒரு நாள் வாழ்க்கை , அதே போர்ச்சூழல் ஆனால் தனிமனித உணர்வு போராட்டம். நாளைக்கும் பூ மலரும் கதையின் மைய பாத்திரம் ஒரு ஆசிரியர். நான்கு குழந்தைகளுடனும் மனைவியுடனும் சாதாரண நடுத்தர குடும்பத்திற்குரிய வாழ்வியலை வாழுகின்றார். குண்டு வெடிப்பினால் உருவாகின்ற மன அலைச்சலே மேலோட்டமான கதை.ஆனால் அதில் கதாசிரியர் உள்ளோட்டமாக சொல்லுகின்ற போரின் போக்கு முதலில் காப்பாற்றபட்டும் பின்னர் இறந்து போகின்ற நாய்க்குட்டியால் படிமபடுத்தபடுகின்றது.
நூலகம் இணையத்தளத்தினால் ஆவணபடுத்தப்பட்ட முற்றத்துக்கரடியை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
ஆசிரியரின் ஏனைய நூல்களை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D