“ நான் வாசித்த நாவல்கள் “ – எஸ்.ரா – சிறுகுறிப்பு

எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய மிகவும் முக்கியமான பல இலக்கிய உரைகள் இருக்கின்றன. எஸ்.ரா ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி முக்கியமான பேச்சாளரும் கூட. அவர் ஆற்றிய உலக இலக்கியங்கள் தொடர்பான உரைகள் பிரசித்திபெற்றவை. கிரேக்க நாடகங்களை பற்றி கிரேக்க நாடக புத்தக விழா ஒன்றில் பேசியபோது, அவரின் பரந்த அறிவை வியந்திருக்கிறேன். அப்படியான சிறந்த உரையொன்றை சமீபத்தில் புத்தக திருவிழாவின் போது ஆற்றியுள்ளார். “ நான் வாசித்த நாவல்கள் “ என்பதே தலைப்பு. ஆத்மார்த்தமான உரையாக இது அமைந்திருந்தது. நாவல்களின் முக்கியத்துவத்தையும், இன்னும் எழுதப்படாமல் இருக்கின்ற கருக்கள் பற்றியும், நாவல் வாசிப்பின் வீழ்ச்சி பற்றியும் ஈழத்து போர் இலக்கியங்கள் பற்றியும்  பேசியிருந்தார். எழுத்தாளன் என்ற உணர்வுடன் அவர் பேசிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கனவாக இருந்தன. சுதேசிய இலக்கியங்களின் அவசியம் பற்றிய ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு நிலமும் இலக்கியம் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றை எழுதவேண்டியவர்கள் வரலாற்றில் வாழ்பவர்களே என்ற அடிப்படை வாதம் அவரின் சில சொற்களில் தெரிந்தது. உலக மேடைகளில் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு எழுத்தாளனின் குரலாக அவரது உரை அமைந்திருந்தது.
 
உரையின் முழு வடிவம் Shuruthi TV யினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது ம் பேசியிருந்தார். எழுத்தாளன் என்ற உணர்வுடன் அவர் பேசிய வார்த்தைகள் அர்த்தம் மிக்கனவாக இருந்தன. சுதேசிய இலக்கியங்களின் அவசியம் பற்றிய ஆழமான கருத்தை முன்வைத்திருந்தார். ஒவ்வொரு மண்ணும் ஒவ்வொரு நிலமும் இலக்கியம் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றை எழுதவேண்டியவர்கள் வரலாற்றில் வாழ்பவர்களே என்ற அடிப்படை வாதம் அவரின் சில சொற்களில் தெரிந்தது. உலக மேடைகளில் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு எழுத்தாளனின் குரலாக அவரது உரை அமைந்திருந்தது.
 
உரையின் முழு வடிவம் Shuruthi TV யினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக இலக்கியத் தொடர் 3 – கரமசோவ் சகோதரர்கள் – THE BROTHERS KARAMAZOV-அறிதலும் புரிதலும்.

எமது இலக்கியங்களுக்கும் ருச்சியன் இலக்கியங்களும் மிக நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. உண்மையில் எமது இலக்கியங்கள் என்று மட்டும் நின்றுவிடாமல் உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கின்றது. ருச்சியர்களின் மொழி கலாசாரம் பண்பாடு வாழ்க்கை முறைகள் எல்லாம் வேறு வேறானவை. அவர்களின் பௌதீக அமைவிடம் சுற்றுச் சூழல் என்று அனைத்துமே வித்தியாசமானவை. இருந்தும் ருச்சியர்களின் இலக்கியம் எமக்கு நுணுக்கமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அவை மானுடம் என்ற கருப்பொருளின் இயலாமையும் நிதர்சன வாழ்கையின் ஒவ்வொரு சூழ்ச்சியையும் பேசுவதே ஆகும். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் எமது வாழ்கையில் ஒரு முறையேனும் சந்தித்த நபர்களை ஞாபகப்படுத்திச்செல்லும். அந்த வகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் வாழ்கையின் இருண்மை நிலையையும் இருண்மையால் ஏற்படுகின்ற பித்தநிலையையும் அதன் தொடர்ச்சியையும் அது சமூகத்தில் பிரதிபலிக்கின்ற எதிர்வினையையும் பேசுகின்றது.

கரமசோவ் சகோதரர்கள் – பிரதி பற்றி

(orig12.deviantart.net)

சுதேசமொழி வழக்கு எழுத்துகள் மிக முக்கியமானவை. ஒரு இனக் குழுமத்தின் வரலாற்று இருப்பு என்பது அவர்களின் இலக்கியங்களாலேயே சாத்தியமாகின்றது. இன்றைய இலக்கிய சூழலில் உலகத்தரமான படைப்புகள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலானவை ஏதோ ஒரு இனத்தின் வழக்கு நிலை கலாசார புனைவுகளாகவே காணப்படுகின்றன. அவை அவர்களின் சுதேச மொழியில் எழுதப்படுகின்ற போது மேலும் உயிர்ப்பு நிலையை அடைகின்றன. அவர்களின் அடையாளமாகவும் மாறுகின்றன.  கரமசோவ் சகோதரர்கள் அன்றைய பேச்சுவழக்கில் இருந்த ருச்சியன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. நாவல் முழுவதும் ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க் என்ற நபராலேயே சொல்லப்படுகின்றது. அவர் கதை நடக்கின்ற இடத்தில் வாழ்ந்த ஒருத்தர். தஸ்தாயெவ்ஸ்கி ஸ்கோட்டோ பிரிகொன்யேவ்ஸ்க்கின் குரலையே தன் குரலாக கொள்கிறார்.

ஒளியும் இருளும்.

ஒளியில்லாத இடமே இருள். யாரும் இருள் இல்லாத இடம் ஒளி என்பதில்லை. கரமசோவ் நாவல் இருளில் ஒளியினை விவாதிக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரங்கள் பலர் இருளிலேயே வாழ்பவர்களாக இருக்கின்றனர். நாவலின் பெரும் பகுதி இருண்மையாகவே இருக்கின்றது. தகப்பன் கரமசோவ் இருண்மையின் மொத்த வடிவம். பொய், காமம், சூழ்ச்சி, நடிப்பு, சுயநலம், பேராசை,சந்தேகம் என்று தீமையின் அனைத்து குணங்களையும் கொண்டவர். அவரின் வாழ்வின் நோக்கம் சந்தோசம் மட்டுமே. சந்தோசம் முழுக்க முழுக்க காமத்தால் கிடைக்கும் என்ற எண்ணத்தை தீவிரமாக கொண்டவர். அதே வழியில் அதைக் கடைப்பிடிப்பவர். குடும்ப நலம், சுற்றுச் சூழல் நலம் என்ற எதையுமே கணக்கில் கொள்ளாது சுயநலத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர். இதற்காக மகன்களை வெறுக்கவும் மனைவியரை கொடுமைப்படுத்தவும் செய்கிறார்.

(modernlib.com)

தகப்பன் கரமசொவிற்கு இரண்டு பதிவு மனைவியர், பல எச்ச மனைவியர். தஸ்தாயெவ்ஸ்கி பதிவு மனைவியரை உறுதியாகக் கூறக் காரணம் தகப்பன் கரமசொவின் வாழ்வில் இனி வருகின்ற எல்லா அத்தியாயங்களிலும் கூட இருக்கின்ற, அவருடன் பயணிக்கப்போகின்ற மூன்று மகன்மார்களைக் கொண்டே.
முதல் மனைவிக்கு பிறந்தவன் திமித்ரி. அவனை மித்யா என்றும் அழைப்பார்கள். இண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் இவான் மற்றும் அலக்ஸ்சி. திமிதிரியும் இவானும் தகப்பனின் சாயலில் ஐம்பது சதவீதம் உள்ளவர்கள். இருவருக்குமே காமத்தின் வேட்கை பலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் தகப்பனின் இருண்ட புத்தியை பின்பற்றுகிறார்கள். அதற்காக தகப்பனையே எதிர்க்கவும் செய்கிறார்கள். காமம் தகப்பனுக்கும் இரண்டு மகன்மார்களுக்கும் இடையே பெரும் விரிசலைத் தருகிறது. இருண்மை தகப்பனில் இருந்து முதலிரண்டு மகன் மார்களுக்கும் தொடர்கிறது.
அலக்ஸ்சி அப்படிப்பட்டவன் இல்லை. கரமசோவின் குணங்களை ஏற்றுக்கொள்ளாதவன். பகுத்து அறியும் பண்பினைக் கொண்டவன். அதனாலேயே இருட்டின் மத்தியில் ஒளியாக தெரிகின்றான். ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவன். அன்பும் கருணையும் உதவும் மனப்பாங்கும் உண்மையான காதலையும் உடையவன். சிதறிக்கிடக்கும் குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுபடும் ஒருத்தன். நாவலில் வருகின்ற அத்தனை இருண்மைக்கும் தனியே நின்று ஒளி கொடுக்ககூடியவன்.

மதகுருவும் சமூக பார்வை பிறழ்வுகளும்.

தஸ்தாயெவ்ஸ்கி அலக்ஸ்சியை ஒரு ஒளிர்ந்த பாத்திரமாக உருவாக்குவதற்கு பயன்படுத்திய கருவி ஆன்மிகம் ஆகும். தஸ்தாயெவ்ஸ்கி வாதப்பொருளை இங்கிருந்தே தொடங்குகிறார். ஒரு மனிதன் இருண்மையில் இருந்து வெளிவர ஆன்மிகம்தான் ஒரே வழியா? ஆன்மீகத்தை நம்பாதவர்கள் இருண்மையில் இருந்து வெளிவர முடியாதா ?
 

(pinimg.com)

தஸ்தாயெவ்ஸ்கியை ஒரு நடுநிலையான மனிதன் என்பதிலிருந்து மதவாதி என்ற போர்வைக்குள் இழுத்து வாதிக்கமுடியும். கரமசோவ் சகோதரர்கள் கிறிஸ்தவ மதத்தின் பேசு பொருளாக மாறிவிடுமோ என்ற சந்தேகம் ஆரம்பத்தில் வலுக்கிறது. இதை தஸ்தாயெவ்ஸ்கி லாவகமாக இவான் கூறுகின்ற “இயேசு மீண்டும் அவதரித்தால்” என்ற கவிதையின் ஊடாக தகர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
அலக்ஸ்சி, பாதர் சொசிமா என்ற மதகுருவின் வழிகாட்டலிலேயே வளர்ந்து வருகின்றார். தகப்பன் கரமசோவின் நேர் எதிர் வடிவம் பாதர் சொசிமா. அலக்ஸ்சியின் வாழ்கையை நெறிப்படுத்துவதில் மிகுந்த சிரத்தையுடன் இருந்தார். வயதானவுடன் அவர் இறந்து போக அவரின் உடல் பிரார்தனைக்காகவும், நோய்களை நீக்கும் வலிமை கொண்ட புனித பொருளாகவும் வைக்கப்படுகிறது. சில நாட்களியே உடல் வெடுக்கு அடிக்கத்தொடங்குகிறது. அதுவரை மக்களால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருத்தர் சடலத்திலிருந்து கெட்ட வாடை வருவதால் நிராகரிக்கப்படுகிறார். அவரின் ஆரம்ப ஆடம்பர வாழ்க்கை மீண்டும் ஒருமுறை மக்களிடையே வாதிக்கப்டுகிறது. ஒரு எளிய இயற்கை மாற்றம் மக்களின் மனதில் பிறழ்வுகளை உருவாக்கத் தொடங்குகிறது. தஸ்தாயெவ்ஸ்கி கூறுகின்ற நுட்பமான செய்திகளில் இதுவும் ஒன்று.

காதலும் நாவலும்.

நாவல் முழுக்க காமதிற்கான போராட்டமாக இருந்தாலும் காமத்தை தேடிக்கொள்ள காதலையே அணுகுகின்றார்கள். நாவலில் லிசாவின் பக்கங்கள் அறிமுகம் ஆகும் வரை தஸ்தாயெவ்ஸ்கி காதல் காமதிற்க்கான முன்னாயத்தம் போலவே குறிப்பிடுகின்றார். காதலின் எந்த அசைவும் காமத்திற்கானதே என்பதை வருகின்ற எல்லாப் பாத்திரங்கள் மூலமும் உறுதி செய்தபடியே நகர்ந்தார். லிசாவின் அறிமுகமும் லிசா அலக்ஸ்சி காதலும் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் புரிதலை காட்டுகின்றது. லிசா அங்கவீனமாக இருந்தாலும் அலக்ஸ்சி அவள் மீது கொண்ட காதல் உடலைத் தாண்டி உள்ளம் சார்ந்தது என நிரூபணம் செய்கிறார்.
இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி பெரும்பாலான உண்மை விடயங்களை, ஒளிர்மை வாய்ந்த கருத்துகளை வாசகனுக்கு கொண்டுசேர்க்க பயன்படுத்திய உத்திகளில் இதுவும் ஒன்றாகும். தஸ்தாயெவ்ஸ்கி முதலில் ஒரு கருத்தைப் பற்றிய புறவயமான எண்ணக்கருக்களை ஏற்படுத்துகிறார். பின்னர் அவற்றின் மறை விம்பங்களை காட்டுகிறார். வாசகன் மறையான விம்பத்தை நெருங்கும் போது அதை லாவகமாக உடைத்து மெய் விம்பத்தை காட்டுகிறார். இந்த புரிதல் நுட்பம் வாசகனின் மனதில் ஆழமாக இரு வேறான எல்லைகளையும் காட்டிவிடுகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்ச்சி வாசகனை அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத நீண்ட பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது.

(huisjenphilosophy.files.wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது மனித மனதின் இருண்மைகளுக்குள் பயணிப்பதை போன்றது, அந்தப் பயணத்தில் நாம் அடையும் வெளிச்சமும் தைரியமும் செவ்விலக்கியத்தின் உன்னதத்தைப் புரிந்து கொள்ள வைப்பதுடன் இந்த உலகில் நமது இருப்பின் அடையாளத்தையும், நோக்கத்தையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் உதவுகிறது, அவ்வகையில் கரமசோவ் சகோதரர்கள் அவசியம் வாசிக்கவும் ஆழ்ந்து விவாதிக்கப்படவும் வேண்டிய முக்கிய நாவலாகும். – எஸ். ராமகிருஷ்ணன்
Sparknotes  இலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வசனங்கள்.

“Listen: if everyone must suffer, in order to buy eternal harmony with their suffering, pray tell me what have children got to do with it? It’s quite incomprehensible why they should have to suffer, and why they should buy harmony with their suffering.”
Very different is the monastic way. Obedience, fasting, and prayer are laughed at, yet they alone constitute the way to real and true freedom: I cut away my superfluous and unnecessary needs, through obedience I humble and chasten my vain and proud will, and thereby, with God’s help, attain freedom of spirit, and with that, spiritual rejoicing!”
“But hesitation, anxiety, the struggle between belief and disbelief—all that is sometimes such a torment for a conscientious man like yourself, that it’s better to hang oneself. . . . I’m leading you alternately between belief and disbelief, and I have my own purpose in doing so. A new method, sir: when you’ve completely lost faith in me, then you’ll immediately start convincing me to my face that I am not a dream but a reality—I know you know; and then my goal will be achieved. And it is a noble goal. I will sow a just a tiny seed of faith in you, and from it an oak will grow—and such an oak that you, sitting in that oak, will want to join ‘the desert fathers and the blameless women’; because secretly you want that ver-ry, ver-ry much.. . .”

முடிப்பு.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன். கரமசோவ் சகோதர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே இது. ஒரு குறுகிய கட்டுரையின் மூலமாக கரமசோவ் சகோதரர்களையோ தஸ்தாயெவ்ஸ்கியையோ விவரித்து விட முடியாது. இரண்டு முறை வாசித்து மூன்றாம் முறை வாசிக்கும் போது கூட புதிய பொருள்களை அறிந்துகொள்ளகூடியவாறு இருக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு முடுக்குகளையும் தஸ்தாயெவ்ஸ்கி காட்டியவாறே கொண்டுசெல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி இருட்டில் இருந்து ஒளியை காண்பிக்கும் மாயவித்தைக்காரனாகவே ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகின்றார்.

பேரூந்து – மெடூசா – குறியீடு

(01)

காலையில் அந்தரப்பட்டு என்னைத் தயார் செய்து கொண்டு அப்பாவுடன் பேரூந்து நிலையத்திற்கு யாழ்பாணம் போவதற்காக சென்றேன். பேரூந்து நிலையம் போவதற்கு முதலே பேரூந்தை இடையில் மறித்து ஏறிக்கொண்டேன். ஏறும் கணமே நடத்துனரும் பேரூந்து படியில் நின்றவரும் ஏதோ பேசிக்கொண்டனர். நான் அதைப் பொருட்படுத்திகொள்ளாமல் என் பாட்டில் ஏறினேன். படியில் நின்ற இருபத்தைந்து மதிக்கத்தக்கவர் என்னை இறுதி ஆசனத்தில் அமரச் சொன்னார். ஏற்கனவே அதில் ஐந்து பேர் உறங்கியும் கலங்கியும் இருந்தார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த ஒருவரை தள்ளி இருக்கச் சொல்லி விட்டு குறுகிய இடத்தில் வளைந்து அமர்ந்தேன். இதற்குள் மேலோட்டமாக முன்னே எங்கும் ஆசனங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தேன். எதுவுமே தென்படவில்லை. குறுகிய இடத்திற்குள் நான் செருகிக்கொண்டேன். எனக்கு அருகில் ஒருத்தர் தன் மார்புகளைக் கைகளால் கட்டிக்கொண்டும் மற்ற அருகில் இருந்த ஒருவர் கைகளை தொடைகள் அருகில் வைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்கள். மார்புகளைக் கைகளால் கட்டிக்கொண்டு இருந்தவர் ஓரளவு பருத்திருந்தார். அவரின் பருமனை விடவும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்திருந்தார். கூடவே நித்திரை வேறு. இடக்கையின் முழங்கை என் மூட்டை இடித்துக் கொண்டிருக்க நான் மேற்ப்பக்கமாக சாதுவாக வளைந்தேன். அப்படியே மற்றப்பக்கம் இருந்தவரின் கைகள் அண்ட இடுப்புப் பக்கமாகவும் வளைந்து என் உடலின் மேற்ப்பக்கத்தை ஆங்கில எழுத்து S போல வளைத்து இருவருக்கும் வளைந்துகொடுத்தபடி நொந்துகொண்டிருந்தேன். என் நிலைமையை படியில் நின்றவர் அவதானித்துக்கொண்டே வந்தார். இத்தனை நடந்தும் எனக்கு பெரிய தாக்கம் எதுவும் மனதளவில் ஏற்படவில்லை. பேரூந்து ஓட்டத்தில் வழிகளில் நின்று ஏறிய நான்கு ஐந்து பேருக்கு படியில் நின்றவர் முன்னுக்கு ஆசனங்களை ஒதுக்கி கொடுத்துகொண்டிருப்பதைப் பார்க்கும் போது தான் மனித மனதின் இறுக்கமான தன்மை தானாக கவலையை ஏற்படுத்தியது.

(02)

 

யதார்த்தனின் சிறுகதைத் தொகுப்பு வெகு சீக்கிரம் வெளிவரப் போவது மகிழ்ச்சியான விடயமாகும். அவர்களின் குழுமத்தில் எனக்கு அனோஜன் அவர்களின் சதைகள் சிறுகதை தொகுப்பு கிடைத்திருந்தது. அதைத்தொடர்ந்து யதார்த்தனின் தொகுப்பும் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கின்ற 47வது இலக்கிய ஒன்றுகூடலில் வெளியிட்டு வைக்கபட இருக்கின்றது. இந்த ஒன்று கூடல் மலையகத்தில் கொட்டக்கலை என்ற இடத்தில் இம்மாத இறுதி தினங்களான 29 மற்றும் 30 இல் நடைபெறுகின்றது. யதார்த்தனைப் பொறுத்தவரையில் புனைவு அபுனைவு என இரண்டு தளத்திலும் இயங்கி வருகின்றவர். புனைவுகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய கதை சொல்லியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அவரின் அபுனைவுகளில் நான் மிக ரசித்து வாசித்ததும் அனேகமான தகவல்களைத் திரட்டிக்கொண்டதுமான படைப்பு இயற்கை மரபின் இருப்பு – குருவிக்காடு ஆகும். இது சமீபத்திய விவரணக் கட்டுரை. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்” சிறுகதைத் தொகுப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

(03)

 

இன்று அ.மார்க்ஸ் இன் வலை தளத்தில் மணிமேகலையை ஒரு பௌத்த காப்பியமாகவும் பார்க்ககூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். எமது அடையாளங்கள் என்பவை எவை என்ற கேள்வி உள்ளூர எழுந்தது. நேற்று அருண்மொழிவர்மன் அவர்களுடன் பேசியதில் அவர் ஈழத்து தமிழர் என்பதையே தான் அடையாலகுறியீடாக பயன்படுத்துவதாகச் சொன்னார். இந்திய தமிழ் நாட்டு இதழ்களும் ஈழத்து தமிழர் என்பதையே எமக்கான குறியீடாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எமது சமூகத்தின் எழுத்தாளர்களையும் அதே வரையறைக்குள்ளேயே அறிமுகப்படுத்துகிறோம். இதுவரை காலமும் நடந்து முடிந்த யுத்தம் (என்று கூறப்படும்) முழுவதும் எமது அடையாளம் ஈழத்து தமிழர்கள் தான். ஈழம் என்ற சொல்லின் உள்ளடக்கம் பற்றிய கருத்து எதிர்ப்பு இருந்தாலும் அதை அடையாளப் படுத்தல் என்பது இப்போதைக்கு கட்டயமானதே. அ.மார்க்ஸ் ஐப்போல நின்று இறங்கி ஆராய்ந்து எமது வரலாற்றையும் தொன்மையையும் இலக்கியத்தின் மூலம் நிறுவிக்கொள்ளமுடியாது. எம்மிடம் வலிதான இலக்கிய ஆதாரப் பிரதிகள் எதுவுமே இல்லை. எமது ஆதிகால முன்னோர்கள் எமக்கான எழுத்துரு இலக்கியங்கள் எதையுமே உருவாக்கியிருக்கவில்லை. எமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தொல்பொருட்கள் தான். ஈழத்து தமிழர் என்ற அடையாளக் குறியீட்டை வலுப்படுத்தகூடிய ஒரே வழிமுறை தொல்பொருள் ஆய்வுகள். இதற்கு அரசாங்கமும் ஈழத்து தமிழர்களும் ஒத்துழைக்கவேண்டும். எமது அடையாளத்தை நாம் நிறுவ வேண்டிய காலம் வெகு விரைவில் வந்துவிடும். இது இருப்பு சார்ந்த அடிப்படைப் பிரச்சனை.

புதிய சொல். – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.
 
சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றது. சமகால ஈழத்து எழுத்தாளர்களின் செயற்திறன் எல்லை மிகக் குறுகியதாகவே இருக்கின்றது. அவர்களின் செயற்பாட்டு எல்லைக்கு வெளியே சென்று சாதாரண சமூகத்தினரிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்க முடியாமல் உள்ளது. படைப்பாளிகளையும் அவர்களின் வாசகர்களையும் தவிர ஏனையோருக்கு ஒரு இலக்கியப் பதிவு போய்ச்சேருவது மிக மந்தமாக இருக்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஏறத்தாள இதே நிலைதான். எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோ எழுத்தாளர்கள் அனைவரும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக எழுதிக்கொண்டு இருப்பது போல சாதாரண மக்கள் அவர்களை கடந்து செல்கின்றார்கள். அவர்களின் தனித்த படைப்புக்கள் வெளிவருகின்றபோதும் இதே நிலை தான். அது ஒரு புறம் இருக்க, இன்றைய சிற்றிதழ்களின் நிலையை கவனிக்க வேண்டும். அதிலும் ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் மிக குறுகிய வாசிப்பு வட்டத்தையே கொண்டிருக்கின்றன. நலிந்த வாசகர்களைக் கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்துவது என்பது மிகக் கடுமையான காரியம். இதனாலேயே பல சிற்றிதழ்கள் இன்றைய சமூகத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கின்றன.

அந்த வகையில் புதிய சொல்லில் தற்போதைய நிலைமை ஓரளவுக்கு ஈழத்து சிற்றிதழ் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் புதிய சொல்லின் செயற்பாட்டுக் குழு இளைஞர்களாக இருக்கின்றமை. அவர்களின் தீவிர பரப்பு நடவடிக்கைகள் புதிய சொல்லில் இருப்புக்கு வழி செய்கின்றது. அதே போல புதிய சொல்லில் வெளிவருகின்ற ஆக்கங்களின் புதுமைத்தன்மையும் ஒரு காரணம். என்னதான் எத்தனை புதுமைகளைச் செய்தாலும் வாசிப்பு வட்ட விஸ்தரிப்பு இன்றி நிலைக் கொண்டுவிடமுடியாது. பொழுதுபோக்கு இதழுக்கு ஏற்படுத்தக்கூடிய வாசிப்பு வட்டத்தின் அளவை ஒரு போதும் இலக்கிய சிற்றிதழ்கள் ஏற்படுத்திவிடமுடியாது. இது சம்பிரதாயம். ஆனால் வாசிப்பு ஊடகத்தை பரவலாக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
 
எனக்கு புதிய சொல்லின் ஆசிரிய குழுமத்தை தெரிந்துகொள்வதற்கு முதலே புதிய சொல்லை தெரிந்தும் வாசித்தும் இருந்தது புதிய சொல்லில் வாசிப்பு விஸ்தரிப்பின் எழுச்சியான போக்கைக் காட்டியது. பல சிற்றிதழ்களை வற்புறுத்தித் திணித்தி அனுப்புகின்ற சூழலில் தனக்கென வாசகர் பரப்பை குறுகிய காலத்தில் புதிய சொல் ஏற்படுத்தியிருப்பது அவர்களின் வெற்றி. அதைத் தொடர்ந்து தக்கவைத்துகொண்டிருப்பது இலகுவானதல்ல. அதையும் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
 
புதிய சொல் 06
 
எப்போதுமே புதிய சொல்லில் அட்டைப்படம் ஆழ்ந்த குறியீட்டு மொழியிலேயே இருக்கும். இந்தமுறையும் நல்லையா சவேசனின் கைவண்ணத்தில் child art முறையில் அரசியல் – பாலியல் – வன்முறைகள் அடிப்படையில் வரையப்பட்டு பிரசுரிக்கப்ட்டிருக்கின்றன. ஆசிரியர் குறிப்பில் உரையாடல்களுக்கான தளத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து இலக்கிய வளர்ச்சிக்கான அழைப்பை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முன்னைய இரண்டொரு இதழ்களில் நான் கண்ட வாசக இலக்கிய வாத பிரதிவாதங்களை  இதில் காணாதது கவலையே. அதற்கான அழைப்பும் ஆசிரியர் குறிப்பில் விடுக்கபடுகின்றது.
 
புத்தகாயம் – இராகவன் ,துயர் மிகு இருள் – தீபன் சிவபாலன் , ஒழுங்குபடுத்தலின் வன்முறை – அருண்மொழிவர்மன் , Silence in the Courts அதிகாரத்தின் துஷ்பிரயோகம் – அத்தியா , காலங்களை கண்களில் நிரப்பியவன் – அனார் , மக்ரலின் அறுபதாயிரம் புறாக்கள் – யதார்த்தன் , சோலையூர் காண்பியக்காட்சி பற்றிய ஒரு பார்வை – தனுசியா , சல்வீனியா – தர்மு பிரசாத் , விளமீன் – ஜே கே , சாக வாய்க்காத நாட்கள் – நபீல் ,நான்கு காட்சிகள் ஒரு கவிதை – கேயல்.நப்லா , நட்சத்திரங்கள் சேகரிப்பவள் , கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள் – விருபா குமரேசன் , சினிமா வட்டங்களும் ஓர் இயக்கமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் , விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு – எஸ்.சத்தியதேவன் என கட்டுரைகளும் கவிதைகளும் சிறுகதைகளும் உள்ளடங்கலாக புதியசொல் 06 வெளிவந்துள்ளது.
 
 
இறுதி உள் மட்டையில் தொன்மையாத்திரை என்ற நிகழ்வு சம்பந்தமான புகைப்பட ஆவணப்படுத்தலும் சிறுகுறிப்பும் உள்ளது.
 
மற்றைய புதிய சொற்களுடன் ஒப்பிடும் போது இது பௌதீக அளவில் குறுக்கம் உடையதாக இருக்கின்றது கவலை அளிக்கின்றது. அத்தோடு இந்த இதழில் கட்டுரைப் பல்வகைமை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் கவலையே.
 
எல்லா இலக்கிய ஆர்வலர்களும் , சாதாரண மக்களும் புதிய சொல்லை வாசித்து அறிந்து பகிர்ந்து கொள்ளுதல் இதழின் வளர்ச்சி என்பதைத் தாண்டி ஈழத்தில் சிற்றிதழுக்கான அங்கீகாரத்தையும் அவர்களுக்கான சரியான தளத்தையும் அமைத்துக்கொடுக்கும் என நம்புக்கின்றேன்.
 
அதே போல இந்த இதழில் உள்ள கட்டுரைகள் அதன் மையம் அடிப்படையில் அடுத்தகட்ட விவாதத்திற்கு உரியவை. ஆசிரியர் குழு அதற்கான ஆவலுடன் இருப்பதும் தெரிகின்றது. வாசகர்கள் அவர்களின் வாதப்பொருளையும் வாதங்கள் பிரதிவாதங்களையும் முன்னகர்த்திச் செல்லவேண்டியது மேலும் அவர்களுக்கு ஊட்டம் அளிக்கும் என திடமாக நம்புகிறேன்.
 
புதிய சொல் குழுமத்திற்கு வாழ்த்துக்களும் அன்பையும் பரிமாறிக்கொள்கிறேன்.

பெண்ணியம் – கருத்து நிலை விளக்கம்.

சமூகத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற அடிப்படை அத்துமீறல்கள் காரணமாக ஏற்படுகின்ற கருத்துருவாக்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செறிந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கருத்துருவாக்கங்கள் அக்கால கட்டத்தின் சமூக நிலைமையையும் மக்களின் எண்ணப் பரவலாக்கத்தையும் காட்டும். ஒரு வலிமையான கருத்து எழுந்த போது ஆதரவுகளும் வளர்ச்சியும் பரவலாக்கமும் மாறுதல்களும் எதிர்ப்பும் மிகச் சாதாரணமாக எழுந்துவிடுகின்றன. சில கருத்தியல்கள் காலம் காலமாக கடத்தப்பட்டும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கருத்தின் நீண்டநாள் இருப்பு இரண்டு விடயங்களை வெளிப்படையாக சுட்டும். ஒன்று கருத்தின் ஆழம், மற்றையது கருத்தின் அமுலாக்கமின்மை. இவ்விரண்டும் ஒரு கருத்தியலின் நீண்ட இருப்பிற்கு காரணம்.
 
பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகிய கருத்தியல், இன்று வரை அதே வீச்சுடன் பேசபட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது என்றால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் அந்த கருத்தியலின் நோக்கம் நிறைவேற்றப்படாமையே ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டு மேன்னாட்டு மக்களிடையே மெதுவாக பரவிய முற்போக்கான சிந்தனையே பெண்ணியம். பெண்ணியம் என்ற வார்த்தைக்குள் பெண்களின் அகம் புறம் சார் அத்தனை கூறுகளும் உள்ளடக்கப்படும். வாழ்க்கைமுறை, கல்வி, திருமணம், ஆசைகள், நிராசைகள், பொறுப்புக்கள், சட்டங்கள் என்று எல்லா துறைசார் விடயங்களும் அடங்கும். வார்த்தை என்பதை தாண்டி பெண்ணியம் என்ற உணர்வுக்குள் உள்ள உள்ளடக்கம் வித்தியாசமானது. பெண்ணியம் என்ற உணர்வு சொல்லுகின்ற செய்திகள் ஆழமானவை.
 
படைப்பின் அடிப்படையிலேயே பெண்கள் மென்மையானவர்கள் என்ற விஞ்ஞான கோட்பாடுகள் உண்டு. மென்மையானவர்கள் என்ற காரணத்தினால் அடிப்படை உரிமைகளை பெறவும் விவாதிக்கவும் பொருத்தமில்லாதவர்கள் என்ற பொருள் அல்ல. எங்கோ ஒரு இடத்தில் உருவாகிய ஆண் மேலாதிக்க இயல்பு கேள்விகள் எதுவுமின்றி தொடர்ந்துகொண்டே வந்தது. எப்போதும் குற்றமுள்ளவர்கள் தான் ஆதிக்கம் உடையவர்கள் என்ற கோட்பாட்டின் படியே காலம் காலமாக இந்த மரபு முறையை பேணிக்கொண்டு வந்தார்கள். மறுப்புகளை பேணுவதில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் அந்த மரபிலிருந்து எழுகின்ற பிரச்சனைகளை தீர்த்து கொள்ளமுடியாமல் மீண்டும் மரபு என்ற பெயரிலே ஆதிக்கம் செலுத்துவது தான் பெண்ணியம் என்ற கருத்தியல் ஆரம்பிக்க கருவாக இருந்தது.
 
பெண்ணியம் என்கிற உரையாடல் வழக்கு மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. மிதவாதப்பெண்ணியம், தீவிரவாதப்பெண்ணியம் மற்றும் சம தர்ம பெண்ணியம் என்பவை அவை.
பதினெட்டாம் நூற்றாண்டிலே மேன்னாட்டு மக்களிடையே முதலாவது அலை பெண்ணியம், இரண்டாவது அலை பெண்ணியம் என்று அவ்வப்போது பெண்கள் தமக்குரிய சில அடிப்படை உரிமைகளுக்காக குரல்களை எழுப்ப தொடங்கினர். குறுகிய பிரதேசத்துக்கு ஒலித்த குரல் ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்படும். பின்னர் வேறொங்கோ ஒலிக்கும் அங்கேயும் இதே நிலைமையை காணலாம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வப்போது ஒலித்த குரல்களின் சேர்க்கை கொஞ்சம் தீவிரமாக பரவ தொடங்கியது.
 
ஒவ்வொரு பிராந்திய குரல்களும் ஒவ்வொரு பிரச்சனையை முன்வைத்து ஒலித்தன. பொதுப்படையாக கல்வி கற்கும் உரிமை, விரும்பியவரை மணக்கும் உரிமை, பணி புரியும் உரிமை, சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, வாக்குரிமை, தத்தெடுக்கும் உரிமை என்பன முக்கியமானவை. இதில் அதிக கவனமாக வாக்குரிமை தொடர்பான குரல்கள் மேல்லோங்கி ஒலித்தது. மேலை நாடுகளின் இருந்த மேட்டுக்குடி மற்றும் பாட்டாளி  சமூக பெண்களின் பிரச்சனைகள் வேறு வேறாக இருந்தன. மேட்டுக்குடி பெண்கள் எல்லோருமே மனையுறை மகளீராகவே இருந்தனர். அவர்களின் பொழுதுகள் எல்லாம் தமது ஆண்களுக்கு பணிவிடை செய்வதிலேயே கழிந்து போனது. அவர்கள் ஆண்களின் குறைகளை தேடித்தேடி அறிந்து நிவர்த்தி செய்யும் பொறுப்பிலேயே இருந்தார்கள். அவர்களிடம் படிப்பறிவு இருந்தது, ஆனால் அனுபவ அறிவு சுத்தமாக இருந்திருக்க வில்லை. மேட்டுக்குடியினரிடம் வினையே ஆடவர்க்கு மனையே மகளீர்க்கு என்ற பொதுத் தன்மை காணப்பட்டது. இதனால் மேட்டுக்குடி பெண்களின் பிரச்சனை அவர்களின் சுதந்திரமாகவே இருந்தது. அவர்கள் வெளிஉலகை காணவும் , உலக நடவடிக்கைகளோடு தாமும் பங்கு பற்றவும் முனைந்தார்கள். இவர்களின் குரல்கள் இப்படியாக இருக்க பாட்டாளி வர்க்க பெண்களின் குரல்கள் வேறுவிதமாக இருந்தன.
 
வயலில் தொழில் புரியும் உழத்திகள், கடையர் , தயிர் விற்கும் ஆச்சியர், பூவிலைப் பெண்டீர், உப்பு விற்கும் உமட்டியர், பண்ணியம் விற்கும் சிறு வணிகப்பெண்கள், தினைப்புனம் காக்கும் மகளீர் என்று பாட்டாளி வர்க்க பெண்களின் தேவை கல்வி அறிவாகவும், அடிப்படை சமூக அந்தஸ்தை பெற்றுகொள்வதாகவுமே அமைந்திருந்தது. அவர்கள் இருந்த சமூகம் அவர்களுக்கான உரிமைகளை கொடுக்க மறுத்தது. சாதி வர்க்க பிரிவனை அவர்களை வாட்டியது. ஆண் ஆதிக்க சமூகத்தின் இச்சைகளை நிவர்த்தி செய்கின்றதும் மற்றைய நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றதுமான நிலைமை காணப்பட்டது. மேட்டுக்குடியினரின் சுதந்திரம் புறமாகவும் பட்டளிமக்களின் சுதந்திரம் அகம் புறம் இரண்டுமாகவும் இருந்தது.
 
சூசன் பாஸன்ட், “பெண்ணியம் வர்க்கம் இனம் தொடர்பானது. இருவரது பின்னணியும் தேவைகளும் புரட்சிகளும் வேறுவேறானவை. அவர்களுக்கான சுதந்திரம் வேறு வேறாக வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.
 
1975 இல் உலக நாடுகளின் பேரவை அந்த ஆண்டை அகில உலக பெண்கள் ஆண்டாக பிரகனப்படுத்தியது. 1975- 1985 வரையான பத்து ஆண்டுகளும் அனைத்துலக மகளீர் பத்தாண்டுகளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகளும் அங்கீகாரமும் பின்னைய காலங்களில் பெண்ணியம் பெரும் கருத்தியலாக ஊன்றி நிற்க மிகப்பெரும் இட்டது.
 
இவ்வாண்டுகளுக்கு முதலே இலங்கையின் உட்கட்டமைப்பு பிரிவுகளில் பெண்களின் வருகை நடந்தேறியது. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்த பெண்கள் கல்வியின்மை காலத்தோடு குறைந்து, பெண்கள் ஒவ்வொரு துறைகளிலும் தங்கள் பங்களிப்பை செய்யதொடங்கினார்கள். 1881 இல் 3 சதவீதமாக இருந்த பெண்கள் கல்வியறிவு 1921 இல் 21 சதவீதமாக வளர்ச்சி கண்டது. இது இலங்கையில் பெண்ணிய கருத்துகளின் பரவலாக்கதிற்கு சான்றாகிறது. எப்போதுமே ஒரு சமூகத்தில் ஒரு இனமோ ஜாதியோ தமக்கனான இடத்தை காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்றால் அவர்கள் தங்களை கல்வி மட்டத்தில் உயர்த்திக்கொள்ளவேண்டும். கற்ற சமூகம் அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற கோட்பாடு பெண்ணிய கருத்தியல் செயற்பாட்டாளர்களிடம் வலிமையாக காணப்பட்டது.
 
இலங்கையில் 1890 களில் பறங்கிய இனப் பெண் ஒருவர் இலங்கை மருத்துவ கல்லூரிக்கு தெரிவானார். அவரைத்தொடர்ந்து அலிஸ் டி போயர், வினி பிரெட் என்ற இரு பறங்கிய பெண்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு மருத்துவம் கற்க சென்றார்கள். (Brohier-1994) 1904 இல் முதல் சிங்களபெண் லூசி டி ஆப்று மருத்துவ கல்லூரிக்கு சென்றார். 1930 இல் சட்ட கல்லூரி பெண்களுக்கான கல்விக்கு அனுமதி அளித்தது. 1934இல் இரண்டு பெண்கள் சட்ட கல்லூரிக்கு பிரவேசித்தார்கள். இதைவிட வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் இங்கே ஏற்படுத்தப்படிருகின்றன.  1933 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் படித்த எசிலின் ஒபெசெகரா ( தரணிகல) 1930 இல் இந்திய பார்ஸி சமூகப்பெண் அவபாய் மேத்தா போன்றோர் சட்டதரனிகளாக வேலைசெய்திருக்கின்றனர்.
 
இவையெல்லாம் உலகம் பெண்ணிய கருத்தியலை தீவிரமாக்குவதற்க்கு முன்னரே இலங்கையில் உண்டான புரட்சிகள். இவை ஒரு புறமிருக்க, இன்னொரு சமூகத்தின் நிலை இன்றுவரை மோசமாகவே உள்ளது. இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒருவகையில் பெண் அடிமைத்தனம் தலை தூக்கியவாறே உள்ளது. இன்று கல்விகற்ற பெண் சமூகம் தமது ஆதிகத்தை செலுத்துகின்ற அதே நேரம் அடிப்படை கல்வி அறிவை பெறமுடியாத நிலையில் பின்தங்கிய கிராமத்து பெண்களின் நிலை இருக்கிறது. இன்றைய தமிழ் சமூகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற பாலியல் வன்முறைகள் இன்னும் பெண் பாகுபாடு ஒழிந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. இதை ஆணாதிக்கம் அல்லது பெண் நிலை இழிவு என்பதை தாண்டி பெண்ணிய கருத்தியல் சரியான முறையில் சென்றடையவில்லை எனலாம்.
 
எல்லா நிலை சமூகத்திலும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. கற்று அறிந்த சமூகத்தில் ஓரளவுக்கு குறைவு என்றாலும் மறைமுகமாக இன்னும் நடத்தப்பட்டுகொண்டே இருக்கின்றன. கிராமியபுறங்களில் இன்னும் அதே வழக்கத்தில் படிதாண்டா பெண்களை காணக்கூடிய நிலைமை இருக்கின்றது. அப்படியும் அதிலிருந்து கிளர்ந்து வருகின்ற பெண்கள் மேலிடங்களில் சுயலாபத்திற்காக கொடுமைப்படுத்தபடுகின்றதும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதையும் தினசரி அறிகிறோம். இவையல்லாவற்றையும் கடந்து மிளிர்கின்ற கோடியில் ஒரு பெண்ணால் பெண்ணியம் என்ற கருத்தியல் வலுப்பெறுகிறது. ஆனால் முடக்கபடுகின்ற மற்றைய பெண்களும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் போதே முழுமையாக பெண்ணிய கருத்துகள் வெற்றி பெறும்.
 
இன்னும் பெண்ணிய கருத்தியல் பரவலாக இருக்கின்றமைக்கு காரணம் கருத்தியலின் சரியான அமுலாக்கமின்மையும் சரியான விழிப்புணர்வு இன்மையுமே ஆகும். இதிலிருந்து மீள பெண்ணிய கருத்துக்கள் சமூகத்தின் எல்லா மட்டத்திற்கும் எல்லா மக்களிற்கும் ஒரே அளவில் தெளிவாக்கப்படவேண்டும். பெண்களின் சமத்துவம் அவர்களின் உரிமைகள் எல்லோருக்கும் தெரிவிக்கப்படவேண்டும். மீறுகின்ற பட்சத்தில் சரியான தண்டனைகளை கொடுக்கப்படவேண்டும்.
 
இல்லையெனில் பெண்ணியம் பெயர் அளவில் காலா காலமாக எம்முள் இருந்துகொண்டே இருக்கின்ற வலிதற்ற கருத்தியலாகவே போய் விடும்.

அறையைப் பற்றி எழுதுதல்.

எல்லோரும்
அவர்களின் அறையைப் பற்றி
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்?

நான் காணாத
எவற்றையெல்லாம் அது வைத்திருக்கிறது?
ஒரு நாளில்
சராசரியாக பத்து மணித்தியாலங்கள்
அதற்குள் தூங்குகிறேன் ;
இரண்டு மணித்தியாலங்கள்
அதற்குள் தூங்குவது போன்று
புரள்கின்றேன்.
அத்தனை நேர சொப்பனத்திலும்
காணாத ஒன்றை,
மிகுதி நேர
விழிப்பிலும் காணாத ஒன்றை,
அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்?
வலிந்து நின்று தவிர்த்தாலும்
அறை மட்டும்
லாவகமாக புகுந்து கொள்கிறது
அனைத்திலும்.
பெரிய தேவாலயத்தின்
முகப்பு போல
அதன் வாசல்:
இல்லை – ஏழை விவசாயியின்
குறுகிய ஓடை போல
வாசல்;
இல்லை ,
அது எது போலவும் இல்லை.
அதற்குள் எத்தனை தடவை
நுழைந்திருப்பேன்,
லட்சம் முறை?
கோடி முறை?
ஆனால் ஒரு முறை கூட
சரியாக பார்க்கவில்லையே!
அலுப்பாகத்தான் இருக்கிறது
அறைக்குள் செல்ல
என்ன செய்ய,
என்
தொடக்கமும் முடிவும்
அது தானே!
எல்லோரும்
அவர்களின் அறையைப் பற்றி_யே
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்

வாசிப்பும் பகிர்வும்.

நமது வாசிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாசிப்பு வேட்கை இருக்கும். நாம் நாளாந்தம் நெருக்கமான உணர்வுகளைச் சீண்டிவிடுகின்ற வாசிப்பியையும் கடந்துபோகின்றோம். வாசித்தவுடன் தொடர்பற்றுப்போகின்ற வாசிப்பையும் கடந்து தான் போகின்றோம். இதை எந்நிலை வாசிப்பு அனுபவம் கொண்டவராலும் தவிர்க்கமுடியாது. நாம் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்றாலும் அதில் பல அணுக்கமாகவும் அதே அளவு பல அந்நியமாகவும் இருந்துவிடுகின்றன. அதே நேரம் தேர்ந்தெடுகின்றவற்றிற்கு அப்பால் பல நல்ல படைப்புகளை தவறவிடுகின்றோம். இது சூழ்நிலை விதியே ஒழிய வேறொன்றும் இல்லை.
 
வாசிக்கின்ற பலதில் இன்னொருவர் வாசிக்க பொருத்தமானதாக இருக்கும் என நாம் நினைக்கின்ற படைப்புகளை சிறந்த வாசகர்கள் வெளிவிடுவார்கள். சுயலாபம் என்பது இல்லாமல் பொதுமையான வாசிப்பு பெருக்கத்திற்கு இது அதிகம் பயன்படும். தேர்வுகளில் இல்லாத தவறவிடக்கூடிய நல்ல படைப்புகளை நுகரக்கூடியவாறு இருக்கும். இதை சிறந்த வாசகன் மட்டும் செய்வது என்றில்லாமல் எல்லா வாசகர்களும் செய்யவேண்டும். சிறந்த வாசகன் என்பது அவனை விட சிறந்த வாசகனை பார்க்கும் வரை மட்டும் தானே.
 
இன்று பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொடுக்க பாடசாலைகளோ சமய கூடங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ முன்நிற்பது இல்லை. அனுபவங்களை எடுத்துக்கொள்ளும் சூழலையும் ஏற்படுத்தித் தருவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் இரண்டு பேர் தப்பிப் பிழைக்கின்றனர். அது மட்டும் போதுமா? சமூகத்தின் ஆயிரங்களில் இருவர் தனிய நின்று என்ன செய்துவிடமுடியும்? அவர்களின் கதி தேர் கூட்டத்தில் தவறவிட்ட பலூனின் நிலை தான். இன்றைய சமய கூடங்களின் நிலை இன்னும் பரிதாபம். இங்கொன்றும் அங்கொன்றுமாய்த் தான் வளரும் பருவதினரைக் காணமுடிகிறது. அவர்களின் நோக்கம் சுயலாபமாகவே இருக்கிறது. கோவில் கருவறை தவிர்ந்த எல்லா இடங்களிலும் செல்பியும் கையுமாகத்தான் திரிகின்றனர். இங்கிருந்து பண்பாட்டை எடுத்துச் செல்லல் என்பது நடக்கமுடியாத காரியம்.
 
எதிலிருந்து எமது சமூகத்தைப் பண்படுத்துவது என்று அவர்களிடமே கேட்டாலே புத்தகங்களின் மூலம் என்கிறார்கள். புத்தகம் என்று உச்சரிப்பதோடு சமூகம் பண்பாட்டுப் போய்விடுமா? வாசிப்புத் தான் பண்பாட்டு இடப்பெயர்வின் அஸ்திவாரம். உள்ளூர தேடவும் வெளியே வாழவும் வாசிப்பு அவசியமாகிறது. அடுத்த நபருக்கு பழக்க பகிர்வு அவசியமாகிறது.
 
அடுத்தவர் ஏற்றுக்கொள்ளல் அல்லது மறுத்தல் , சரியானவற்றைப் பகிர்தல் என்ற வாதங்களை எல்லாம் தாண்டி பகிர்வு என்னும் செய்கை அவசியமாகிறது. ஒவ்வொருவரது வாசிப்பு வட்டமும் வெவ்வேறானவை. அவரகளின் தேடலுக்கு எட்டாதவை பல நம் வாசிப்பில் இருந்திருக்கும். பகிர்வதால் அவை பயன்பட்டுப்போகும். வாசிப்பனுபவம் உருவாக்கிகொடுக்கின்ற பண்பாடே இனி வருகின்ற சமூகத்தின் பண்பாடாக இருக்கும் என்பது எனது சொந்த கருத்தாகும்.