திருக்குறள் பக்கம் 10

எங்கள் சமூகம் இப்படிகட்டமைக்கப்பட்டிருந்தது. உழவர்களை உயர் ஜாதியாக கொண்ட அமைப்புமுறை, மற்றையோரின் தேவை உழவனின் உழைப்பாக இருந்தது. அதனால் உழவனைக் கொண்டாடிய வாழக்கை முறை வழிவந்தவர்கள் நாம். உழவனை உயர் ஜாதிக்காரன் என்பதை சமூகப்பிரிவினை வாதத்தின் அடிப்படை என்று கூச்சல் இட்டால் அதில் உள்ள மடைமைத்தனம் தான் இன்றைய பிளாஸ்டிக் அரிசி பாவனைக்கு காரணம். உழவனை பின் தொடர்ந்தல் தான் மிக நிதர்சன தேவையாகும். பின் தொடர்ந்தல் என்றால் அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். முக்கியத்துவம் என்றவுடன் பத்திரிகையில் விவசாயி தூக்கில் தொங்கி பலி என முதல் பக்கத்தில் இடுவதோ விவசாயி சொல்லும் விவசாயம் என்று ஆய்வுக்கட்டுரை போடுவதோ அல்லது மட்டைகளை தூக்கிக்கொண்டு எதுக்கும் பிரயோசனம் இல்லாத போராட்டங்களில் இறங்குவதோ இல்லை. இன்றைய தமிழர்கள் எல்லாத்துறைகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கின்றோம். புறக்கணிக்கப்படுகின்றோம், என்ற கோஷம் இருந்தாலும் அடையவேண்டிய இடங்களை தாராளமாகவே அடைந்து விட்டோம். மாற்றங்களை எங்கோ தேடிக்கொண்டு இன்னும் பல்லுக்குத்தியவாறு அனைத்தையும் குறைகூறுகின்றோம்.

நான் சொல்லும் பின்தொடர்ந்தல் அதிகாரத்தால் செய்யப்படவேண்டும். இது ஒன்றும் கஷ்டமானது அல்லவே. நாங்கள் உதாசீனப்படுத்துகின்றோம்.
உலகின் வறிய சமூகம் விவசாய உற்பத்தியற்ற சமூகமே. எவ்வளவு காலம் இறக்குமதிசெய்யலாம்? ஏற்றுமதி செய்யும் நாடு தன்னிறைவு உற்பத்தியிலிருந்து தளர்வுறும் வரை. அதன் பின் ஏற்றுமதியும் இல்லை இறக்குமதியும் இல்லை.எந்த சமூகமும் உழுதுண்டு வாழ்வோரின் பின் தான்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.( குறள் 1033 )
உழவனின் பின்னே செல்ல வேண்டிய வாழ்வுதான் அர்த்தமானது.

திருக்குறள் பக்கம் 09

இன்றைய சமுதாயத்தில் ஒரு வித மனநோய் பரவலாக காணப்படுகின்றது. உலகில் உள்ள எல்லா மனிதர்களுமே சமமான படைப்புக்கள். யாரும் தங்கத்திலிருந்தோ வானத்தில் இருந்தோ அல்லது புத்தகங்களில் இருந்தோ பிறந்து வந்தது கிடையாது. உங்களுக்கு ஒரு இடத்தில் இருக்கின்ற உரிமை மற்றைய எல்லாருக்குமே இருக்கின்றது. இங்கு ஆண்டாள் அடிமை ஆட்சி நடக்கவில்லை. யாருமே யாருக்கும் பயந்தோ அடிபணிந்தோ செல்லத்தேவை இல்லை. உங்கள் எல்லாரின் உரிமைகளும் மீட்டு எடுக்கப்பட்டுவிட்டன. நாடுகளுக்கு இடையில் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமை அல்லது போதாமல் இருக்கக்கூடும். அது அவரவர் வாழ்க்கைமுறை சம்பந்தமானது. நாட்டு பிரிவினையே இனப்பிரிவினையோ தனிமனித செயற்பாடுகளை பாதிக்கும் அளவு குறுகியது. ஆனால் ஒரே சமூகத்துக்குள் அதுவும் கற்றுஅறிந்த சமூகத்துக்குள் காணப்படுகின்ற பிரிவினைப்போக்கு மிக ஆபத்தானது. தனிமனித செயற்பாடுகளை முடக்கும் அளவு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. எங்கள் சமூகம் கல்வியியலாளர்களை பின்பற்றும் சமூகம். அவர்களின் முடிவுகளில் செயற்படுகளிலும் அளவுகடந்த நம்பிக்கையை உருவாக்கிக்கொண்ட சமூகம். அவர்களின் அனைத்து தேவைகளும் கல்வியியலாளர்களினூடு தான் நிறைவேற்படுகின்றது. சரியோ பிழையோ அவர்களையே நம்புகின்ற கட்டமைப்புக்குள் வந்துவிட்டோம். இந்த போக்கை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.
மாறுதலாக மாறவேண்டியது வழிநடத்தும் சமூகமே.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். (குறள் 997 )
அறமற்ற அறிவார்ந்தோர் அஃறிணைகள் தான்.

காகங்கள் – சிறுகதை

“பேர்? நம ?”
“சுனித்த கமகே”
“சுன்னித நா…… சுனித்த.. சுனித்த…”
“அய்யா சுன்னித்த இல்லே சுனித்த ”
நெற்றியிலிருந்து வியர்வைத்துளிகள் அவரின் இமைகளை நனைத்துக்கொண்டு இடக்கண்ணின் கூர்மையான ஓரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. கண்ணாடியினை கழற்றி எரிச்சலூட்டிய இடக்கண்ணை மெதுவாக தேய்த்துக்கொண்டார் அந்த எண்பது மதிக்கத்தக்க கிழவர். மீண்டும் குனிந்து டைப் ரைட்டர்ஐ கைகளால் அழுத்த தொடங்கினார்.
” கமகே கீயத? ”
பெரும் சிரிப்பொலி, வந்திருந்த இரண்டு ஆமிக்காரன்களும் ஒருவரையொருவர் பார்த்து எக்காளமிட்டு சிரித்து கொண்டனர்.
” கமகே பேர் என்ன சேர் ?”
” மாத்தற ”
“மத்தர நா அய்யே ” என்று சற்று கோபம்கலந்த மொழியுடன் இருந்த கதிரையை தள்ளிவிட்டு எழுந்து கொண்டான் அதிலொருவன். மற்றவன் அவனைப்போலவே செய்துகொண்டு இருவருமாய் முணுமுணுத்துக்கொண்டு அங்காலே இருந்த இளம் டைப் ரைட்டரிடம் விலகி சென்றார்கள்.
எண்பது மதிக்கத்தக்க அந்த வயதானவர் கையை ஒரு பொக்கெட்க்குள் வைத்து அதிலிருந்த சாயம் போயும் தெரிந்துவிடாத வெள்ளை லேஞ்சியை எடுத்து எல்லாமாக வியர்த்துப்போயிருந்த தலையை ஒரு சுற்று சுற்றினார். ஹிப்பியில் இருந்த வியர்வை அவரின் கொலரை ஈரமாக்கியிருந்தது. ஒருநாளில் எப்போதாவது ஒரு முறைதான் அவருக்கு வேலை வரும் . அதில் ஏற்படுத்திக்கொள்ளும் நூறு ரூபாயை பத்திரப்படுத்தி அவரின் அடையாளஅட்டை வைக்கும் பேசுக்குள் வைத்துகொள்ளவார். இன்று காலியாகத்தான் வீடு செல்லவேண்டும் என்ற மன கசப்புடன் பையுக்குள் இருந்த பைபிளை எடுத்து கடைசியாக வாசித்த அதிகாரத்தில் வைத்திருந்த புறா இறக்கையை அப்புறப்படுத்தி மனதுக்குள் வாசிக்க தொடங்கினார்.
” நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்து………” என்று மெல்லிய சப்தத்துடன் வாசித்துக்கொண்டிருக்கும் போது பலமில்லாத காற்று அவரின் மேசையை தாண்டி சென்றது. கூடவே அவர் வைத்திருந்த புறா இறக்கையையும் அடித்து சென்றது. காற்றில் மிதந்த இறகு மேற்தளத்தின் நடு வெளியினூடாக தரையில் விழுந்தது. அதை கவனித்தும் கவனிக்காமலும் வயதானவர்,
” கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக்கொடுத்த அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார்.” என்று கொஞ்சம் விலகி வாசித்து முடித்தார். பின்னர் அவர் நெஞ்சில் கோத்திருந்த சிலுவையை ஒருமுறை தடவி விட்டு ஆமென் என்றார்.அப்பக்கத்தின் ஓரத்தை மடித்து அடையாளம் இட்டு கொண்டார்.
இன்னும் அந்த ஆமிக்காரர்கள் போய்விடாததை பார்த்து, தனக்கு சேரவேண்டிய பணம் கைமாறி செல்லுகின்றதே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார். கீழே குனிந்து அவரின் தோற்பையை எடுத்து மேசையில் வைத்தார், அதற்குள் டைப் ரைட்டரையும் பைபிளையும் ஓரிரண்டு பைல்களையும் எடுத்து திணித்தார். பின்னர் அந்த தோற்பையை முதுகில் அணிந்துகொண்டார். மதிய உணவு சுற்றிய கடதாசியையும் பொலிதீன் பாக்கையும் ஒருகையில் கசக்கி எடுத்துக்கொண்டு மறுகையால் ஜீன்சின் பின் பொக்கற்றை தடவி தன் பேர்ஸ் உள்ளதா என சரிபார்த்துக்கொண்டார். அதற்குள் காசு இல்லையே என்பது அவருக்கு வருத்தமாகவே இருந்தது. பின்னர் மேசைக்கு கீழே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து இருகைகளையும் நிரப்பி கொண்டார். வேகமாக படிக்கட்டுகளில் இருந்து இறங்கி சாலை ஓரத்தில் வழியே நடக்க தொடங்கினார். அவர் வயதுக்கு அந்த வேகம் அசாத்தியமானது.
அந்த இரண்டு ஆமிக்காரர்களும் தமக்குள்ள சிரித்துக்கொண்டதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அவர்கள் இன்னும் சென்றிருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு வெறுக்கென்று திரும்பி படிகளுக்கு விரைந்தார். அதற்கு முன்னரே இருவரும் கீழே இறங்கி விட்டிருந்தனர். அவர்களின் முதுகுப்புறம் மட்டுமே வயோதிபருக்கு தெரிந்திருந்தது. உடனே அவர்களை நோக்கி நடக்க தொடங்கினார். அவர்கள் பஸ் ஸ்டாண்டின் நடுவாக சென்றுகொண்டிருந்தனர். திடீரென அந்த வயதானவர் நடையை நிறுத்திக்கொண்டார்.கையில் சுருட்டி வைத்திருந்த குப்பையை அங்கேயே போட்டுவிட்டு திரும்பி வந்த வழியேயே சாலை ஓரத்தை அடைந்து மிக மெதுவாக ஊர்ந்தார். வழியெல்லாம் அவரின் மனதை ஏதோ ஒன்று குடைந்துகொண்டே இருந்தது. காதில் செப்பை ஊற்றியது போல அவர்களின் சிரிப்பொலி ஒலித்துக்கொண்டே இருந்தது.
நிலத்தை நோக்கியபடி நடந்து கொண்டிருந்தவர் தனக்கு முன்னால் சாலை ஓரத்தில் ஒரு பூனைக்குட்டி முனகிக்கொண்டிருந்ததை அவதானித்தார். தன்னைப்போலவே அதன் நிலையும் என புரிந்துகொண்டவர் அதனருகே போய் தலை முடிகளை வருடிவிட்டார். இதன் போது தன் ஹிப்பியை யாரோ வருடுவது போல உணர்ச்சியுற்றார். அந்த பூனையின் கண்களில் குடிகொண்டிருந்த வறட்சி, அவரின் கீழ் உதட்டினை நடுங்க வைத்தது. தாடைகள் ஒன்றை ஒன்று விட்டுக்கொடுக்காமல் ஆடிஅமர்ந்தன. அவர் தனது கையிலிருந்த தண்ணீர் போத்தலை வைத்துவிட்டு தோற்பையை கழட்டினார். அதன் வாய்ச்சுருக்கை அகற்றி அதிலிருந்த டைப் ரைட்டரை வெளியே எடுத்து நிலத்தில் வைத்தார். இருகைகளாலும் பூனைக்குட்டியை தூக்கி தன் தோற்பைக்குள் வைத்து விட்டு , டைப் ரைட்டரை குவிந்துபோயிருந்த சருகு குவியலுக்குள் மறைத்து வைத்தார். முதுகில் தோற்பையையும் கையில் தண்ணீர் போத்தலையும் கொண்டு எடுத்துக்கொண்டு வேகமா வீட்டு வாசலுக்கு விரைந்தார். வாசல் மதிலின் ஓரமாக நின்று மதிலின் மேலே போத்தலை வைத்து விட்டு தோற்பையை கழட்டி பூனைக்குட்டியை எடுத்து சுவருக்குள் நோகாமல் போட்டார்.
முன்னைய சந்தர்ப்பங்களை விட வேகமாய் தாய் அடிக்க துரத்தும் சிறுவனைப்போல டைப் ரைட்டர் ஒழித்துவைத்த இடத்தை நோக்கி ஓடினார். அங்கே சருகு குவியலும் இல்லை டைப் ரைட்டரும் இல்லை. கைகளை நிலத்தில் ஊன்றி அந்த ஓரத்திலிருந்த மரத்தின் தண்டில் முதுகை சாய்த்து எதிரே மின்கம்பத்தில் நின்ற காகங்களை பார்த்தவாறு சில தேவ வாக்கியங்களை உதிர்த்துக்கொண்டிருந்தார். மனதுக்குள் அந்த இரண்டு ஆமிக்காரங்களுள் ஒருவனின் பூட்சுக்குள் சிதைந்து போன புறா இறகும் தோற்பைக்குள் இறந்து கிடந்த பூனைக்குட்டியின் வறட்சியால் வெளிறிப்போன கண்களும் மாறி மாறி வந்துபோய்க்கொண்டிருந்தது. அந்த காகங்கள் மின்கம்பத்தை விட்டு பறக்க தொடங்கின.

எழுத்தாளின் அஞ்சலி

அசோகமித்திரனுக்கு அஞ்சக்கூட்டம் நேற்று ( 31.03.17 ) மைலாப்பூரில் கவிகோ மன்றில் நடந்தேறியது. எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்வதற்காக இருந்ததால் நிகழ்வு மீதான பார்வை எனக்கு இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் மனுஷின் முகப்புத்தக பதிவில் , ” இன்று மாலை கவிக்கோ மன்றத்தில் ‘’ driving experiences of a tamil writer எனற பொருளில் ஒரு இலக்கிய பேருரை ஆற்றுகிறேன். அது நிச்சயம் உங்கள் முதுகுத்தண்டை சில்லிடச் செய்வதாக இருக்கும் தவறாமல் கலந்து கொள்ளவும் ” என்றிருந்ததில் இருந்து சற்று ஆவலாகவே காத்திருந்தேன். மணி 11 க்கு யூடூப்பில் காணொளி பதிவிடப்படும் என அறிவிப்பு இருந்தது. இருந்தும் இன்று காலை தான் என்னால் பார்க்க முடிந்தது.

மனுஷ் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும். யாராலும் எந்த காரணத்தாலும் புறக்கணிக்க முடியாத ஒரு கவிஞர் மனுஷ். கவிஞன் என்ற ரீதியில் கட்டுக்கோப்புக்குள் நின்று அதீத கற்பனை வாதத்தை முன்வைக்கும் கவிஞர்களுள் இவரை அடக்கிவிடமுடியாது. மொழியியல் பண்பாட்டு கவிதைகள் ஒரு புறம் இருக்க சமூகத்தை நோக்கியும் அதன் கட்டமைப்புகள் , வழிநடத்தல்கள் , பிரச்சனைகள் , சமகால நிதர்சனங்கள் என்பவற்றை பற்றிய இவரது கவிதைகள் மிக்க வரவேற்புக்குரியவை. அந்த வகையில் நேற்றைய அவரது அஞ்சலியுரையும் அமைந்திருந்தது. கவிஞன் ஒருவன் முக்கியமாக மனுஷ் என்ற கவிஞன் தன்னை சுற்றிய சமூகம் மீதான விழிப்புணர்வை எவ்வளவு செம்மையாக வைத்திருக்கிறான் என்பது இந்த உரையில் எனக்கு புலப்படுகிறது. அசோகமித்திரனை பாடுபொருளாக வைத்து எல்லா எழுத்தாளர் சமூகத்தின் நிலையையும் புறக்கணிப்பையும் பாடியுள்ளார், இந்த உரையில்.
எழுத்தாளர் சமூகத்தின் ஒட்டுமொத்த குரலாக அந்த உரை இருந்தது. ஒவ்வொரு எழுத்தாளனினதும் ஏதோ ஒரு கருத்தியலிலாவது அவருடன் உடன்பட்டு போகும் என்பது எனது எண்ணம். பொதுவாக எழுத்தாளர்களை இருட்டின் நடுவில் தீக்குச்சி அல்லது மெழுகுவர்த்தி என புகழ் பாடுவதுண்டு, – எழுத்தாளர்களே. ஆனால் நிதர்சனம் இதுவல்ல. கறையின் மீது விழுந்த பனித்துளிகள் அவர்கள்.
காணொளியை காண
https://www.youtube.com/watch?v=vSA42IO8owk&t=10s

திருக்குறள் பக்கம் 08

தங்கி வாழும் முறை தான் அனைத்து உயிரினங்களினதும் வாழ்க்கை முறையாக இருந்துகொண்டிருக்கிறது. நான் யாரையும் சாராதவன் என்று யாராவது சொன்னால் அது அவர்களின் மூடத்தனத்தின் உச்சம். உலகில் எந்த சக்தியும் தனிமையானது அல்ல. பௌதீக உலகின் சக்திகள் எல்லாமே சோடியாக்கப்பட்டவை. மனித சக்தியும் அவ்வாறே. படைக்கப்பட்டபோதே சோடியாக படைக்கப்பட்டதன் சூட்சுமம் மனிதன் தனிமையை எதிர்கொள்ளமாட்டான் என்பதுவே. பலர் தாங்கள் தனிமையில் உழல்வதாக கூறுகின்றார்கள். அவர்களது தனிமை என்ற சொல் ஒதுங்கி என்ற பொருள் கொள்கிறதே ஒழிய தனிமை என்ற நிஜப்பொருளில் வருவதில்லை.

உலகத்தில் உள்ள எல்லோரும் எல்லோரிலும் தங்கியிருக்கிறோம். தனிமைப்பட்ட யாருமே இல்லை. தங்கியிருத்தலில் மிக அதிகமாக தாக்கம் செலுத்துபவர்கள் அவரவர் குடும்பத்தினர். அடுத்தது நண்பர்கள் பின்னர் உறவினர்கள் என விரித்துக்கொள்ளலாம். தங்கியிருத்தல் என்ற நிலையில் பிரச்சனைகளும் உருவாக்கிக்கொள்கிறது. உருவாக்கிக்கொள்கிறோம். அந்த சிறு விரிசல் பகைவர் என்று சிலருக்கு முகமூடி போட்டு அவர்களிலும் எங்களை தங்கவைத்து கொள்ள செய்கிறது. அவர்களது முகமூடியில் ஒரு கொடூரனின் படமோ அல்லது அழுக்கின் படமோ வரையப்பட்டிருக்கும். இந்த விரிசல் நமக்கு தெரிந்ததே. இதனால் அவர்களிடம் இருந்து விலத்தியும் நாம் சாரும் அளவை குறைத்தும் கொள்வோம். அவர்களது நடவடிக்கைகள் எமக்கு முக்கியமாகிப்போகும். இருந்தும் நாம் அவர்களிடம் தங்கியிருப்போம்.
சில விரிசல்கள் எங்கள் கண்களுக்கு புலப்படாது. ஊசியளவு விரிசல் தான் மெல்லியது , கூர்மையானது. எம்மால் அதை இலகுவாக விலத்திக்கொண்டு வந்துவிட முடியும்.ஆனால் அந்த குண்டூசியளவு விரிசல் எம்மை பின்தொடர்ந்துகொண்டே இருக்கும். தன்னை இன்னும் இன்னும் கூர்மையாக்கிக்கொண்டு. அவர்கள் முகமூடிஅணிந்து இருப்பார்கள். நிஜ முகத்திலேயே. நாம் அவர்களை அதிகமா சார்ந்திருப்போம். அவர்களின் செயல்கள் எல்லாமே நம்மை வலிமைப்படுத்துவதாகவே தெரியும். அவர்கள் வலைவிரித்துக்கொண்டிருப்பார்கள்.
நேற்று மாலை சிகை அலங்கரிக்கும் இடம்,- இனி சலூன் க்கு சென்றிருந்தேன். அங்கு எனக்கு நேரே தொலைக்காட்சியில் கவண் திரைப்பட விளம்பரம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சவரம் செய்துகொண்டிருந்த தொழிலாளி என்னிடம் கே வி ஆனந்த் படங்களில் பெரும்பாலும் கூட நாயகனுடன் கூட இருப்பவர்கள் தான் வில்லனாகிறார்கள் என்றார். நான் உடனே நிஜத்திலும் அது தானே என்று பேச்சை முடித்துக்கொண்டேன். ஏன் என்றால் என் உயிர் அவர் சவர கத்தி விளிம்பில் நின்றுகொண்டிருந்தது. இந்த உரையாடல் அப்போது பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் கழித்து இதை யோசித்து பார்த்தேன். நிஜமும் அது தானே.
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.( குறள் 882 )
பகைவன் முன் முதுகை காட்டியாவது உறவினர் முன் நெஞ்சை காட்டு, விழித்திரு.

திருக்குறள் பக்கம் 07

நிலைத்து நிற்றல் அல்லது முன்னேறல் என்பதற்கு இரு விடயங்கள் ஆதாரமானவையாக இருக்கின்றது. ஒன்று தன்னிலை மற்றது தளம். ஒன்றன் மீது ஒன்று வலிய பிணைப்பை கொண்டவை. முன்னேற்றம் என்பது இரண்டு எருது கட்டி இழுக்கும் உருள் வண்டி போன்றது. ஒரு எருது முன்னேறி மற்றது வில்லங்கப்படுத்தியது என்றால் வண்டி உருளாது. எவ்வளவுதான் தன்னிலையில் நின்று உந்தினாலும் முன்னேற்றம் வராது. அதையும் மீறி தளத்தின் பக்குவம் அறியாமல் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியும் வீழ்ச்சிக்குரிய அடிகளே. வலிமையான தளத்தை தேர்வுசெய்தல் என்பதும் இங்கே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. தனிமனித ஆளுமை எவ்வளவு வீரியமாகவும் உள்ளடக்கம் மிக்கதாகவும் இருந்தாலும் அதை தாங்கும் தளத்தின் மீது தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. மரமேறும் மிருகங்களுக்கு ஒரு குணமுண்டு , மரத்தின் கிளைகளில் வலிமையான கிளையை பிடித்தே தங்கும். அவை தளத்தின் மீது நேர்த்தியானதும் ஆழமானதுமான பார்வை கொண்டவை. மனிதன் அவ்வாறான ஒரு பார்வையை தன் தளத்தின் மீது வைக்க தவறிவிடுகிறான். இதுவே அவள் நோக்கங்களை அடைய தவறுவதற்கும் ஒரு காரணம். ஒரு தளத்தின் கொள்ளளவுக்கு மீறிய உட்செலுத்தல் விரயமானதே. வெற்றியடைந்தவர்கள் தாங்கள் தங்கும் தளத்தினை விவரமாக உற்றுநோக்கியவர்கள்.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். ( குறள் – 476 )
முன்னேறுவதற்கு பாதை அமைக்காமல் முன்னேற முயல்வது அசாத்தியமான செயலாகும். விளைவுகளும் சீற்றமுடையதாய் இருக்கும்.

திருக்குறள் பக்கம் 06

ஒரு நாள் அந்தியில் தொடங்கியிருந்தது அந்த விவாதம். இத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் யாருமே அறிந்திருக்கவில்லை. புத்தியீவிகள், விஞ்ஞானிகள் , எழுத்தாளர்கள் , பாமரர்கள் , குழந்தைகள் என எந்த வேறுபாடும் இல்லாமல் மேட்குலம் கீழ்குலம் என்ற பேதமே இல்லாமல் கலந்துகொண்டார்கள். மரங்களும் விலங்குகளும் , அஃறிணைகளும் கூட. தத்துவங்களும் விஞ்ஞான முடிவுகளும் சித்தர்தாமும் மதமும் அனுபவங்களும் எல்லாமே கொண்டுவரப்பட்டு தத்தம் பக்க சார்பான கருத்துக்களை அள்ளி எரிந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் முடிய இன்னொருவர் , அவரைத்தொடர்ந்து வேறுவர் என நிறுத்தம் இல்லாத யுத்தம் நடந்துகொண்டிருந்தது. நாள் செல்ல செல்ல குரல்களின் வலிமை குன்றியது, பொருட்செறிவும் கூட. வன்மம் குடிகொண்டது. கைகளும் பின்னர் ஆயுதங்களும் பேச தொடங்கின. எல்லாம் முடிந்து ஓய்ந்து போயிருந்த நாள் அது. மழையின் பின்னான சாரலைப்போல முணுமுணுத்துக்கொண்டு எல்லோரும் பிரிந்து சென்றார்கள். கொஞ்ச நாட்களில் அவர்கள் இதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாட்கள் ஓட ஓட அவர்கள் இந்த நிகழ்வையே மறந்து பொய் விட்டார்கள். வரலாறும் ஆன்மாவின் இறுதி நிலை ஆரூபமா உருவமா என்ற விவாதத்தை மறந்து போனது. ஆனால் அவ்விவாதத்தில் எடுபடா பேச்சாயிருந்த ஒருத்தனின் குரல் மட்டும் இதுவரை ஒலித்துக்கொண்டிருந்தது.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. ( குறள் 336 )
இதுவும் அழிந்து போகும் , படைக்கப்பட்ட எல்லாமே , படைப்பாளியும்.

திருக்குறள் பக்கம் 05

கோபம் என்பதை வெளிப்படுத்துவதில் உள்ள சிக்கல் வேறு எதையும் வெளிப்படுத்துவதில் உள்ளதை விட கஷ்டமானது. பொதுவாகவே உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருத்தல் என்பது எல்லோராலும் செய்துவிடமுடியாத ஒரு செயல். எளிதானதும் இல்லை. எந்த உணர்வையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாமா என்றால் இல்லை. கட்டுக்குள் வைத்திருத்தல் , குளக்கட்டை எடுத்து கொள்ளவோம். குளத்திற்குள் நீர் தேங்க தேங்க கட்டு கட்டுப்படுத்திக்கொள்ளும், ஒரு எல்லை வரை. எல்லையை தாண்டிய பிறகு நீர் பாய்ந்து ஓட்டிச்செல்லும். இது கட்டை தாண்டிய நிலை. குளத்து நீர் கட்டிற்குள் நிற்கும் வரைதான் வெள்ளாண்மைக்கோ பயனைப்பெறக்கூடிய எதோ நல்ல விடத்திற்கோ. கட்டை தாண்டிய நிலையில் ஒன்றுக்கும் உதவாத கடலுக்குள் அடங்கி போகும். எதுவுமே கட்டுக்குள் இருக்கும் போது தான் சிறப்பு.
நீரின் அழகே கட்டைத்தாண்டிய பிறகு கெட்டு விடும் என்றால் உணர்வுகள் , உணர்வுகளை தாங்குகின்ற மனிதன், உணர்வுகளும் கட்டுக்குள் இருக்கும் போது தான் உயர்வு.  உணர்வுகளில் மனிதனை மீறிய ஒரு நிலையை அடையவைக்கும் சக்தி கோபத்துக்கு இருக்கிறது.  விஞ்ஞான ரீதியில் மனித மூளைக்கோளத்தில் amygdala என்ற உறுப்பு உணர்ச்சிகள் , அதன் நடவடிக்கைகள், அதற்கான ஊக்கம் என்பவற்றை உருவாக்குகிறது. இந்த செயன்முறையின் போது ஏற்படுகின்ற உணர்வு பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக சுரக்கின்ற epinephrine மற்றும்  norepinephrine  நொதியங்கள் இரத்தத்தை போக்கை அதிகரிக்கின்றது. இரத்தம் வேகமாக முகம் போன்ற பகுதிகளுக்கும் முக்கியமாக ப்ரீஃபிரன்டல் புறணி (இடது கண்ணின் மேல் என்று மூளையின் பகுதி)  இடத்திற்கு விரையும். இப்பகுதியின் செயற்பட்டு முடிவுகளை கட்டுப்படுத்தவும்  கோபத்தில் இருந்து நம்மை விலக்கவும் உதவும்.  இச்செயற்பாடுகள் அனைத்தும் இரண்டு செகண்ட்களுக்குள் நடைபெற்று முடிந்துவிடும் . இந்த இரண்டு செகண்ட்களுக்குள் உந்தப்படும் நாம் விபரீதமான செயல்களை செய்துவிடுகிறோம். இதனால் தான் கோபம் வரும் போது தண்ணீர் குடிக்கவோ அல்லது பத்துவரை எண்ணவோ கூறுகின்றார்கள் பெரியவர்கள்.
கோபம் எல்லாருக்கும் வரும். அதை சரியான வழியில் திசைப்படுத்த தெரியாதோர் தான் அதிகம். தவறான திசைப்படுத்தல் பலவழிகளில் நடந்தேறுகிறது. அதில் மிக கொடிய வழி வன் சொற்பிரயோகம். கோபத்தை நிர்வகிக்க முடியாமல் பல வழிகளில் வெளிப்படுத்துவோரில் ஆக கொடிய வழியை தெரிவு செய்வோர் கடுஞ்சொற்களை பிரயோகிக்க எத்தணிப்போர், பிரயோகிப்போர். கோபத்த்தால் சொல்லப்படுகின்ற சொற்கள் சூடு தழலை போன்றது. சொல்லுகின்ற சந்தர்ப்பம் சரியோ பிழையோ சொற்களை உள்வாங்கியவர் உகந்தவரோ இல்லையோ ,சொல்லப்பட்ட சொற்கள் மற்றவரை அடையும் போது அதன் வலிமையான தாக்கம் பலகாலம் ஆனாலும் மாறாத வடுவாக இருந்துகொண்டே இருக்கும்.  அவர்களின் நியாயம் இப்பிடி இருக்கும், கோபத்தில் தன்னிலை அறியாமல் பேசிவிட்டேன். இதை எல்லாவற்றையும் விட கொடுமை பின் நவீனத்துவம் என்ற பெயரில் சரளமாக உச்சரிக்கப்படுகின்றதும் எழுதப்படுகின்றதுமான கடும் சொற்கள். அந்த சொற்களின் அசாத்திய வலிமை தெரியாமல் பேசப்பட்டு விடுகின்றன. நண்பர்களுக்குள் என்றும் , இது தான் இலக்கிய மொழி என்றும் இன்று சகஜமாகிப்போன கடும்சொற்பிரயோகம் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். ( குறள் 139 )

மறந்தேனும் கூறிய கடும் சொற்கள் , நல்ஒழுக்கத்திற்கு எதிரானது. நல் ஒழுக்கம் உள்ளோர் மறந்தும் அதை பாவிக்கார்.

திருக்குறள் பக்கம் 04

எல்லாருக்குமே உண்மையாக இருக்கவேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். இருந்தும் சந்தர்ப்பங்கள் இந்த ஆசையை தொடர்ந்து பேண உறுதுணையாக இருப்பதில்லை. அதை எதிர்த்து உண்மையாகவே இருந்துவிட்டாலும் நிறைவேற்றவேண்டியவற்றை நிறைவாக முடிக்க முடியாத அல்லது உரிய காலத்துக்கு முடிக்க முடியாத நிலை ஏற்படும். கைக்கொண்ட காரிய செம்மை குறைவுறும்.இதனால் உண்மையாக இருத்தல் என்பதை  சில முக்கிய தேவையான இடங்களில் தளர்த்துதல் குற்றம் என்பதை மீறி அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் அளவுக்கு மீறிய தளர்த்தல் பிரச்சனைகளையும் உருவாக்கும். உலகின் மிக முக்கியமான அழிவுகளுக்கும் அதே போல் மிக முக்கியமான வெற்றிகள் கண்டுபிடிப்புகளுக்கும் சிறிய மெய்ப்பிறழ்வுகளே காரணம். நீங்கள் சொல்லும் பொய் எதைநோக்கியது என்பதைப்பொறுத்து தான் அழிவோ ஆக்கமோ.
உங்கள் நிலை  அந்த சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளவேண்டிய முறை என்பன தான் உங்கள் சொற்களை தீர்மானிக்கும். தளர்வுற்ற வாய்மை -அதுவே பொய் , குற்றம் இல்லாத நம்மையே ஏற்படுத்துமாயின் அதுவும் வாய்மையே என்கிறார்கள்.இருளைத்தாண்டித்தான் ஒளியென்றால் , இருளை கடந்து செல்லல் குற்றம் இல்லை.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். ( குறள் 292 )
பொய் , உண்மையை நிலைநாட்டுவதாயின் அதுவும் மெய்யே.

திருக்குறள் பக்கம் 03

சேமிப்பு என்பது செலவழிப்பு என்பதன் முன்னாயத்தம் ஆகும். உலகில் எல்லோரும் ஒரு காரணத்துக்காய் சேமிக்கின்றோம். எதை எல்லாம் சேமிக்கின்றோம் , பணம் ,பொருள், பதவி ,அன்பு ,ஆசை ,பழி , அறிவு, உறவு . இதில் பெரும்பாலான சேமிப்பின் இலக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுதல் என்பதாகவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியாக இருந்துவிட முடிகிறதா? சேமித்த எல்லாம் உங்கள் வாழக்கை முழுவதையும் மகிழ்ச்சியாக நிரப்ப வழி செய்கிறதா ? என்றால் இல்லை.  மாளிகையில் இருப்பவன் மடத்தில் இருக்கும் அமைதியையும் தனிமையையும் பார்த்து ஏங்குகிறான்,- இல்லாமலும் இருக்கலாம். அங்கு அவன் சேமித்துவைத்த அனைத்தும் பொய்த்து போகிறது. ஏழையாக இருப்பவன் மாளிகையில் இருப்பவனின் ஆடம்பரத்தை பார்த்து வியந்து போகிறான். அங்கேயும் எல்லாமே பொய்த்து கொள்கிறது. அப்போது ஒரு சாரார் சேமித்த பணம் பொருளும் மாரு சாரார் சேமித்த அன்பும் உறவும் வெற்று சேமிப்பு தானே. பருப்பு இல்லா வெறும் கச்சான் கோது.
இரண்டு பெரிய செல்வந்தர்கள் உலகை இரு வெவ்வேறு திசைகளில் சுற்றிவருவதற்க்காக பணம் பொருள் எல்லாவற்றோடும் புறப்படுகிறார்கள். இருவரது செல்வமும் பாதிவழியிலேயே செலவழிந்து விடுகிறது. ஒருவர் செல்வமெல்லாம் இழந்து வறுமையிலும் நோயிலும் வாடி இறந்து போனார்.மற்றவர் அவரின் சமாதிக்கு ஒரு பெரும் தாராள மக்களுடன் வந்து சேர்கிறார். அந்த சம்மதியில் இருந்து எழுந்த குரல் , எப்படி நீ மட்டும் தப்பினாய் என்று கேட்டது. அதற்கு அவர் நான் கொண்டு சென்ற செல்வமெல்லாம் பாதியில் ஒழிந்தது. நான் அங்கே சேர்த்துவைத்த செல்வங்கள் மட்டுமே என்னை இங்கு வரை அழைத்துவந்து இனியும் அழைத்து செல்லும் என்று கூறினார்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. ( குறள் -39 )
அறம் செய்வதால் வருவதே நிறைந்த செல்வம் , மகிழ்ச்சியின் ஆதாரம். மற்றன எல்லாம் வெறும் பருப்பற்ற கோதுகளே.