திருக்குறள் பக்கம் 02

வாகனங்களை உதாரணப்படுத்தல் என்பது மிக எளியவகை வெளிப்பாட்டுக்கான ஒரு யுக்தி ஆகும். வாகனங்களில் சொகுசு கார் பயணம் தான் மிக அருமையானது. பயணத்தில் இருவகையானோர் பங்குபற்றுகின்றனர். காரை ஓடுபவன் , அருகில் இருப்பவன். இருவர்க்கும் பௌதீக ரீதியில் அருகாமை என்ற ஒற்றுமை இருந்தாலும், மனதளவில் நீண்ட காத தூர இடைவெளி உண்டு. இதை இருநிலைகளிலும் இருந்து அனுபவித்தவர்களுக்கு புரியும். ஓட்டுநர் தனது ஐம்புலன்களையும் அடக்கி பாதுகாப்பு என்ற ஒரே அரணை தன்னை சுற்றி அமைத்து, தரிப்பிடம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். புலன் சிதறினால் கார் சிதறிவிடும், பின்னர் ரத்தம், உயிர் , அடுத்தவன் உடைமை என்று பலதும் சிதறும். எந்த கவனக்கலைப்பானிலும் மாட்டிக்கொள்ளாமல் பயணிக்கவேண்டும். ஓட்டுநர் செய்வது தவம். இன்பமான நாளாக இருந்தாலும் துன்பமான நாளாக ஒரே மனநிலைதான். தவக்கலைப்பு உயிர்ச்சேதம்.

ஆனால் அண்மையில் , ஒரு அடிதூர அருகில் இருக்கும் நபரின் எண்ணங்களும் பார்வைகளும் அப்பிடியே வித்தியாசமானது. அவன் சொர்க்க வாசி. எந்த மனப்பாரமும் இல்லாமல் , தன்னுயிர் இன்னொருவன் கையில் என்ற எண்ணம் கூட இல்லால் – எப்போதாவது நாம் யோசித்ததுண்டா ? , காரின் சொகுசுத்தன்மையையும் உலகின் சுந்தரத்தையும் சமாந்திரமாக ரசித்துகொண்டுவருவான். வீதியில் ஒரு மழலையின் சிரிப்பை கண்டோ அல்லது ஊனமுற்றஒருவர் திருவோட்டோடு அளவைத்தையோ கண்டு அவனின் மனம் சஞ்சலப்படப்போவதில்லை. அப்பிடியே பட்டாலும் நீடித்து இருக்கப்போவதில்லை. ஏன் என்றால் அந்த இருக்கை அப்பிடி. அவன் மேல் ஒரு சுமை கிடையாது.
இருவருக்குமான முரண் சுமை – இது அவர்களின் ஆசனத்தில் தங்கியுள்ளது.
நல்லவழி தீயவழி என்ற பாதைப்பிரிவும் இதை ஒத்ததே.
வாழ்க்கையோடு ஓட்டுனரையும் அருகில் உள்ளவரியும் சம்பந்தப்படுத்தி பார்த்தால் உங்கள் ஆசனத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியே தீர்மானிக்கிறது என்பது திண்ணம்.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை. ( குறள் 37 )
உன் ஆசனம் உன் வழியில் தங்கியுள்ளது.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 05 – “காவடி”

மனித நாகரீகம் வளர்ந்து உச்சத்தை அடைந்திருக்கும் – என கருதப்படுவதாக எண்ணுகிறேன், இந்த காலகட்டத்தில்  மானிட மனங்களால் பல வழமைகளின்  அல்லது நிகழ்வுகளின்  தொடர்ச்சியினை பின்பற்ற முடியாமல் போகின்றது. இந்த தொடர்ச்சியற்ற போக்கு ஒரு விதத்தில் காலத்தின் தேவைதான். சில வழக்காறுகள் அழிந்து போவதே உசிதம்.
பழையன கழிதல் நாகரீக எழுச்சிக்கான அடிப்படை என்பது எனது சொந்த கருத்து. இதில் பழையது என்பது குறித்துநிற்கும் அளவுகோல் எது என்பதில்தான் நாகரீக எழுச்சி தங்கியுள்ளது. இறந்தகாலம் அல்லது பயன்படுத்தாதவை பழையது என்ற வார்த்தையை அர்த்தப்படுத்தலாம். அந்த வகையில் இறந்தகாலம் கழிய வேண்டுமா? இறந்த காலம் தேவையற்ற ஒன்றா? இறந்த கால அனுபவங்கள் மறக்க வேண்டியவையா? என்ற அடுக்கான கேள்விகள் பழையது என்பது இறந்தகாலம் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றன.

பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை (copycrave.com)

வழமையாக நீங்கள் துவிச்சக்கர வண்டியில் செல்லுவீர்கள் என வைப்போம். உங்கள் நண்பன் வெளியூர் செல்லவேண்டிய காரணத்தினால் அவரின் மோட்டார் சைக்கிளை உங்கள் வீட்டில் வைத்து விட்டு வரும் வரை பாவிக்கவும் அனுமதி   தருகிறார். நீங்கள் இப்பொழுதெல்லாம் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறீர்கள் என்பதற்காக பயன்படுத்தாத உங்கள் துவிச்சக்கர வண்டி பழையதா? துவிச்சக்கர வண்டி பயன்படவில்லை என்று கழித்துவிட்டால் அடுத்த நாள் அல்லது தொடர்ந்து வரும் நாட்களில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
இன்று பயனில்லை என்பதற்க்காக கழித்துவிடுதல் நாளைய தேவை ஒன்றிற்கான விடையினை அழித்துவிடுதல் ஆகும். இதிலிருந்து பழையன என்பது இறந்தகாலமோ அல்லது பயன்படுத்தாதவையோ இல்லை. பழையன என்பவை பொருளடக்கம் அற்றவை. இன்னும் விரிவாக சொல்லப்போனால் தனது உள்ளடக்கங்கள் அனைத்தையும் தந்து காலியாக இருக்கின்றவை அல்லது பொருந்தாத உள்ளடக்கங்களுடன் உள்ளவை என்று விளிக்கலாம். கடையில் இரண்டு ரூபாய் கொடுத்து இனிப்பு வாங்குகிறோம் , காசு கொடுத்து வாங்கினோமே என்பதற்க்காக இனிப்பின் உறையை யாரும் பத்திரப்படுத்திக் கொள்வதில்லை. இது தான் விடயம் , இனிப்பு என்னும் உள்ளடக்கம் தீர்ந்தவுடன் உறை என்னும் காவி கழிந்து போகின்றது. பழையன கழிதல் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
இதை முகவுரை என்பதை விட ஒரு பதிவாக எடுத்துக்கொண்டு தலைப்பிற்குள் நுழையலாம்.
கலைகளில் மிகவும் நளினமானது எது என்றால் ஆடற்கலையையே எல்லோரும் உரைப்பர். ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். உணர்ச்சிகளை பலவிதப்படுத்தி வெளிக்காட்டுவர். வெளிப்பாட்டின் உச்சம் நடனமாகவே இருக்கும், இது சந்தமற்ற முறையற்ற கூச்சல் நடனமாக இருந்தாலும் சரி.

ஆடற்கலையில் உள்ள நளினம் வேறு எந்த கலைகளுக்கும் கிடையாது என்பதே நிதர்சனம். (sehernow.in)

எந்த நாட்டார் கலையுமே இலக்கணங்களுக்கோ யாப்புகளுக்கோ வரைமுறைக்குட்படுத்தாமல் வளர்ச்சி கண்டவையே. ஆதிகால மனிதனிடம் மொழி இருக்கவில்லை. இதில் மனிதன் என்பது கவனிக்க வேண்டிய விடயம். அவனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் பதிந்து கொள்ளவும் ஒரு ஊடகம் தேவைப்பட்டிருக்கும். அந்த தேவைப்பாட்டின் விளைவே நடனமாகிறது. அவன் தனது சந்தோஷங்களையும், துக்கங்களையும், அதிர்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், பயத்தினையும் ஆடலின் மூலமே வெளிப்படுத்தினான். எத்தனை யுகங்கள் போனாலும் இன்னும் அங்க அசைவில் உண்டாகும் நடனங்கள் தான் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சம். உலகிலே நடமாடாத இடங்களும் இல்லை, மாந்தரும் இல்லை.
அதிலும் முக்கியமாக பயம் என்ற உணர்வின் சிறந்த வெளிப்பட்டு ஊடகம் நடமாகவே இருந்திருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய பரத நாட்டிய நிகழ்வுகளில் பயம்  என்ற நிலையில் தான் அதிக சிறப்பு காணப்படுகிறது. ஆக அன்றும் கடவுளைப்பார்த்து மனிதன் பயந்தான். பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள். சங்க இலக்கிய வரலாறுகள் வெறியாட்டு, துணங்கை , குரவை போன்ற ஆடல் கலைகளை கூறுகின்றன. இதே ஆடல் கலைகள்தான் இன்றைய நாட்டார் நடனங்களாக பெயர் பெறுகின்றன.

பயத்தின் வெளிப்பாடாக பக்தி தோன்றியது. பக்தியின் வெளிப்பாடு நடனமாகியது. இறைவனை- இயற்கையை சாந்தப்படுத்த நடமாடினார்கள் (bhmpics.com)

கிராமிய நடனங்கள் அணையற்ற ஆறு போன்றவை. எந்த இலக்கண எல்லைக்குள்ளும் இல்லாமல் இருப்பதே இதன் சிறப்பாகும். அவற்றின் வளர்ச்சியும் அப்படியே, எந்த வித்துவான்களும் அல்லது சங்கீத லக்ஷணகாரர்களும் அதற்கு அணை கட்டிவிடவில்லை. ஆதி காலத்தில் இருந்ததிலிருந்து இன்றைய காலகட்டத்தை நோக்கிய ஆடற்கலைகளின் வளர்ச்சி வியப்பான ஒன்றாகும், எந்த கட்டுப்பாடும் அற்ற கலை ஒன்று நீடித்து இருத்தல் என்பது அதீத சிறப்பு. அச்சிறப்பை நடனங்கள் பெற்றிருக்கின்றன. நாட்டார் நடனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே உவகை ஊட்டுவனவாக இருக்கின்றமை அதற்கொரு காரணமாகவும் இருக்கலாம்.
கவனிப்பில் பொதுவான நாட்டார் நடனங்களில் காணப்படும் சந்தம் நான்கு அக்ஷர காலம் கொண்ட தாளங்கள் (சதுர்சிரம்) அல்லது மூன்று அக்ஷரகாலம் கொண்ட தாளங்கள் (திரிசிரம்) ஆகவும் மேலும் சில ஏழு அக்ஷரகால தளங்களை (மிசுரம்) கொண்டதாகவும் அமைகின்றன.
நாட்டுப்புற ஆடற்கலைகள் என்ற போர்வைக்குள் காவடி , கரகம் , வசந்தன், கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவை முக்கியமானவை.

காவடி

காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது. (bhmpics.com)

காவடி என்ற சொல்லை காவு + தடி என்ற சொற்களின் சேர்க்கையாக கருதலாம். காவுகின்ற தடி எனபதே காவடியில் பொருள். காவுகின்ற தடி என்றால் வெறும் தடியினை காவுவதா? இல்லை, தடியையும் காவுகின்றோம் அது தடி என்ற நிலையை தாண்டி, அத்தடியில் இருபுறமும் நேர்த்திக்கடன் செய்த பொருட்களை காவி அல்லது மஞ்சள் துணியில் சிறிய பொட்டலமாக கட்டி தொங்கவிட்டு அத்தடி நிற்பதற்கு இரண்டு கால்களை இரு புறமும் அமைத்து ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு வில்போன்ற அமைப்பையுடைய கூடாரம் ஒன்றை உருவாக்கி அதை பட்டால் சுற்றி மூடி கிளி பூக்கள் போன்றவற்றால் அலங்கரித்து – ஒரு தெய்வீகம் பொருந்திய புனிதப்பொருளாக அந்தஸ்தளிக்கப்படும்.  இது வெறும் தோளிற்கு சுமை என்பதை தாண்டி பிராத்தனைக்காக எடுக்கப்படும் தடி என்ற பொருளில் கையாளப்படுகிறது. காவடி என்பது சமயம் சார்ந்த ஒன்று, தனித்துவமாக முருகன் என்ற சைவ கடவுளுக்கு மிக நெருக்கமானது.
முன்னைய காலங்களில் வழிபாடு என்பது ஊரளவில் இருந்தாலும் புனித தலங்களை நோக்கிய நடைபயண பாத யாத்திரைகள் புகழ் பெற்று இருந்தன. இந்த பாத யாத்திரைகளை ஊரவர் நேர்த்திக்கடனாக செய்வது வழக்கம். எனது எண்ணப்படி, அந்தக் காலம் பயண போக்குவரத்திற்கு ஊடகங்கள் இல்லாத காலம். நடையையே ஒரே மார்க்கமாக கொண்டிருந்த காலம். பொதுவாக எல்லாரும் வடக்கு புறத்தில் இருந்து சைவர்களுக்கு காலம் காலமாக நம்பிக்கையும் அருளும் செய்துகொண்டிருக்கும் கதிக்காம கந்தனை நோக்கி விரதமிருந்து நேர்த்திசெய்வதற்காக ஊரவர் நேர்த்தி பொட்டலத்தையும் இதர தேவையான பொருள்களையும் சேர்த்து ஒரு தடியில் கட்டி எடுத்து சென்றிருக்கலாம். கால ஓட்டத்தில் சாதிப்பிரிவிற்கு ஏற்றால் போல அந்த தடி அலங்காரங்கள் உருவாகி இருக்கலாம். இதுவே இன்றைய காவடியில் வெளித்தோற்றத்திற்கு காரணமாய் இருக்கலாம் என்பது எனது எண்ணம். வழியிலே களைப்பு தெரியாமல் இருக்க அக்காவடியை சில ராக சந்தங்களுடன் நாட்டிய அசைவுகளுடனும் கொண்டு செல்வர். இதுவே பிற்கால காவடிச்சிந்துகளாகும்.

செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார் (dnaindia.com)

காவடியில் பல வகைகள் உண்டு. சேவற் காவடி , மச்சக்காவடி, அன்னக்காவடி, பாற்காவடி / பன்னீர் காவடி, செடிற் காவடி, ஆட்டக்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி என்பன வடக்கில் இருந்துள்ள காவடியின் வகைகளாகும். இதில் முதல் மூன்றுமான  சேவற் காவடி , மச்சக்காவடி , அன்னக்காவடி என்பன தற்கால வழக்கில் இல்லை.
சேவலைப்பிடித்து அதன் தலையை வெட்டி குடத்தினுள் இட்டு அதை தடியில் கட்டி ஆடுவதே சேவற் காவடி. மீன்களைப்பிடித்து குடத்தில் இட்டு ஆடுவது மச்சக்காவடி ஆகும். மச்சக்காவடிக்கு வடக்கு செல்வச்சந்நிதி ஆலயம் மிக பிரசித்தமான ஒன்றாகும். ஒரு காலத்தில் பக்தர்கள் மீன்களை பொரித்து குடத்தில் இட்டு கோவிலுக்கு கொண்டு வருவதாகவும், கோவில் அருகே உள்ள தொண்டமானாறு ஆற்றம்கரை அருகே வரும் போது பொரித்த மீன்கள் உயிர்பெற்று ஆற்றினுள் குதிப்பதாகவும் ஐதீகங்கள் உண்டு. அன்னக்காவடி எடுக்கும் வழக்கம் இன்றைய இலங்கையில் இல்லாவிட்டாலும் முற்காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. தங்களுக்கும்  தங்களை சார்ந்த சந்நியாசிகளுக்கும் உணவை வேண்டி பரதேசிகள் தங்கள் தோள்களில் வெற்று பாத்திரம் ஏந்திய தடியுடன் அன்னம் பெற செல்லல் அன்னக்காவடி எனப்படுகிறது. பால் அல்லது பன்னீர், செம்புகளில்  நிரப்பப்பட்டு தடியில் கட்டப்பட்டு எடுக்கப்படும் காவடியாகும், இதன்போது ஆடுவதில்லை. பொதுவாகவே சிறுவர்கள் இதனை எடுப்பார்கள். செடிற் காவடி எனப்படுவது, வெள்ளியிலான செடில்களை பக்தரின் முதுகுப்பகுதில் குத்தி அதன் வாலில் இருந்து கிளம்பும் நூலை ஒன்றாக்கி முடிச்சிட்டு அதை ஒருவர் இழுக்க பக்தர் காவடியை தோளில் வைத்து ஆடுவார். கூடவே வாயின் இரு பக்கத்தாலும் வேலினை அலகு என்ற நாமத்தில் குத்தி கொள்வர். இக்கவடியை இருவர் அல்லது நால்வர் ஒரே ஒழுங்கில் ஆடுவது ஆட்டக்காவடி ஆகும்  பொதுவாகவே வடக்கில் பறைமேளம் மற்றும் உடுக்கு மட்டுமே ஆதிகாலத்தில் பயன்படுத்தப்பட்டது, அனால் இன்று தவில், நாதஸ்வரம் போன்றவையும் புழக்கத்தில் உள்ளன.

உடலை வருத்தி பெற்ற பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். (deviantart.net)

ஆட்டக்காவடிக்கு தாளம் மிக முக்கியமானதொன்றாகும். பார்ப்போர் அதனால் உந்தப்பட்டு ஆடுவது வழமை. தூக்குக்காவடி நீண்ட வரலாற்றை கொண்டதல்ல. 1953களில் முதன் முதலாக செல்வசந்நிதியிலேயேதான் இது அரங்கேற்றப்பட்டது. சகடை ஒன்றின் இருபுறமும் இரண்டு மரங்களை நிறுத்துவர். மரங்கள் மிகப்பலமானவையாக இருக்கும். இருமரங்களுக்கும் நடுவே வளை ஒன்றிட்டு அதில் கப்பி இடுவர். காவடி எடுப்பவர் பத்மாசனமிட்டிருக்க அவரின் இரண்டு விலாப்புறமும் இரண்டு பெரிய கொழுக்கி முட்களை குத்துவர். இரண்டு முழங்காலுக்கருகிரும் இரண்டு முட்களை குத்துவர். அதே போன்று பின் பகுதியிலும். ஆறு கயிறுகளையும் சேர்த்து மேற்புறமாக உறிபோல கட்டி கப்பியினூடு செலுத்துவார். காவடி எடுப்பவர் தூக்கில் தொங்குவது போல பத்மாசனத்தில் இருப்பர். இவரை வீதி வீதியாக அழைத்து செல்வார். தூக்கு தண்டனை பெற்ற ஒருவர் மேல் முறையீடு செய்து வெற்றிபெற்றதன் காரணமாக இதை செய்தார் என சொல்லப்படுகிறது. இதே முறையில் அந்த ஆறு முட்களையும் அடியவரை படுக்க வைத்து தோள் தொடை கால் என்பவற்றில் குத்தி ஊர் ஊராக கொண்டு சென்றால் அது பறவைக்காவடிதூக்கு, பறவை காவடிகள் பெண்கள் எடுப்பதில்லை.
இந்த காவடி முறை இன்று வடக்கில் எல்லா கோவில்களிலும் மறக்காமல் மறுக்காமலும் நடைபெற்று வருகின்றது. உடலை வருத்தி பெற்ற  பயனுக்காய் வழிபடுதலை மிக உயர்ந்த செயலாக வடக்கு மக்கள் இன்றும் கருதுகின்றனர். ஆரம்பத்தில் கூறிய பழையன கழிதலுடன் காவடியும் கழிந்து போகாமை காவடியில் சமூக முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றது.
இன்னும் சில நாட்டார் நடனங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

திருக்குறள் பக்கம் 01

நாம் எல்லாரும் தேவைகளுக்கு உட்பட்டவர்கள். தேவைகள் என்றால் நிரந்தர தேவை தற்காலிக தேவை என்று விடலாம். இது வெளிப்படையான வாதம். மறுப்பில்லை. தேவைகளை நான் இப்படி பார்க்கிறேன் அல்லது வகைப்படுத்துகிறேன். உடனடி தேவை ஒன்று காலம் தாழ்த்தி நிறைவேற்றக்கூடிய தேவை மற்றொன்று. உடனடித்தேவைகளை நிறைவேற்றும் ஊடகம் எது என்பதெல்லாம் எமக்கு பொருட்டல்ல. உடனடித்தேவை கால அவகாசத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டியதொன்று. உதாரணமாக என்னிடம் ஒரு பழைய அம்பாசிடர் கார் ஒன்று உள்ளது. காரின் நிலை இன்றைய பொருளாதாரத்தை போன்றே. நிற்க மட்டுமே தகுதியுடையது. முன்னேற இல்லை. சில வேளைகளில் நிற்கும் போதே பஞ்சர் ஆகிவிடுவதும் உண்டு. ஒரு முறை என் ஊருக்கு அவசரமாக செல்லவேண்டிய கட்டாயம். அம்பாசிடரை அழுத்தி உதைத்து இழுக்க பண்ணிவிட்டேன். அம்பாசிடர் வேகம் அதீதமாக இருந்தது. தெரிந்தே பயணத்திற்கான நேர தேவையை விட ஒரு மணிநேரம் முன்னதாக ஆயத்தம் ஆகிவிட்டேன். நினைத்தது வழியில் நிறைவேறியது. அம்பாசிடர் உடன் நான் வீதியில் நாதியற்று போய் பஞ்சரான பின் சில்லை தனியாக மாற்றிக்கொண்டு , ஊருக்கு கொஞ்ச நேரம் தாமதமாக போய் சேர்ந்தேன். வழியில் எப்பிடியாவது ஒரு தரமான புதிய கார் வாங்கிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே மெதுவாக செலுத்தியதால் அந்த தாமதம். சரி விடயத்துக்குள் வருவோம் இந்த சந்தர்ப்பத்தில் எது உடனடி தேவை ? எது காலம் தாழ்த்தி செய்யப்படவேண்டிய தேவை ? சில்லை மாற்றவேண்டியது முதலாவது வகை , காரையே மாற்றவேண்டியது இரண்டாம்வகை. சில்லை மாற்றவேண்டிய உடனடித்தேவைக்கு காரை மாற்றியே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து கொண்டு உதிரி சக்கரம் எடுக்காமல் வந்திருந்தால் என்ன நிலை. உடனடித்தேவைகளுக்கு நாங்கள் எங்களை தயார்நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிறிதோருக்கு கருத்துக்காக ஒரு உதாரணம். நான் வாழும் இடம் ஒரு பின்தங்கிய கிராமம். நகரத்துக்கோ கடைத்தெருவுக்கோ செல்லவேண்டும் என்றால் பலமணிநேரம் பயணிக்கவேண்டும். நான் ஒரு நோஞ்சான்.நான் தினமும் ஆஸ்துமா குளுசைகள் பாவிப்பவன். என் பொறுப்பின்மை நேற்றோடு மாத்திரைகள் முடிந்ததை நினைவுபடுத்திக்கொண்டு அதை வாங்கவில்லை. இன்று காலை அதிகமாக இழுக்க தொடங்கிவிட்டது. எங்கள் கிராமத்தில் இருக்கும் ஒரேயொரு பார்மசிக்கு என் அப்பாவை அனுப்பி மாத்திரை வாங்கிவரச்சொன்னேன். அவர் வெற்று கையுடன் திரும்பினார். அந்த பார்மசியில் எல்லாமே இருப்பதாகவும் அந்த மாத்திரை மட்டும் முடிந்துவிட்டதாகவும் கூறினார். பின்னர் நான் அயல் கிராம நோஞ்சானான என் நண்பனிடம் அனுப்பி வாங்கிக்கொண்டேன் என்பது வேற கதை.
இந்த இரண்டு கதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு நுட்பமான கருத்துக்களை காவிச்செல்லுகின்றன.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( குறள் 13 )
உன் அவசர தேவையை நிறைவு செய்யாத ஒன்று உலகளவு இருந்தும் நீ பீடிக்கப்படுவாய்.

நாட்குறிப்பு

அகன்று போய்
விரிந்து போய் இருக்கின்ற
வானத்தின் குறிப்புகளை
எழுத்திக்கொள்ளலாம் – என்ற
நம்பிக்கையுடன்
இருட்டு அறையில் நான்
மூடிப்போன நாட்குறிப்புடன்

நுட்பம்

ஒரு ஒழுங்கீனத்தை
அவதானித்துக்கொண்டிருந்தேன்
தெரு நாய்ச்சண்டையில்
கைகளை
இறுக்கி கட்டிக்கொண்டு
யாரும் பார்த்துவிடாமல்
அது ஒழுங்கீனமாகவே இருந்தது
கைகளை
அகல விரித்தேன்
அனைவரும் பாத்தார்கள்
அதிலும் ஒரு ஒழுக்கம்
மேலோங்கியது.

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 04 “ஆனை மறி காரன் மகள்”

விலங்குகளுக்கும்  மனிதனுக்குமான உறவு எல்லைப்படுத்தப்பட முடியாத ஒன்று. மனிதனை நாகரிக விலங்கு என்று அழைப்பதுவும் இந்த எல்லையற்ற உறவின் விகுதிதானோ என்று பலமுறை நான் எண்ணியதுண்டு. மனித வர்ணனைகள் விலங்கியலுக்குள் ஊடுருவுவதும் இதன் தாக்கம் தான். கண்களை மீன்கள் என்பதுவும், நடையை அன்னநடை என்பதுவும், கோபத்தில் எருமை மாடு என்பதுவும் விலங்கியலோடு பின்னிய வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது.

அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக்கூட இந்த விலங்குகள் திசைப்படுத்துகின்றன என்பது தமிழர் வாழ்வியலை பேணும் சமூகத்திற்கு தெரிந்த ஒன்றே. பூனை குறுக்கிடுதல், கன்றுக்குட்டி ஓடி ஒழித்தல் , பல்லி சொல்லல் என சில சம்பிரதாய கோட்பாடுகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சில விலங்குகளை தெய்வத்திற்கு சமானமாக கொண்டாடுவது இந்துக்களின் வழக்கம்.
அதிகமாக, குடியிருப்புக்களை முதன்மைப்படுத்திய விலங்கு வளர்ப்பு சுவாரஸ்யமானதாகும். இவனோடு அறுவர் என்னும் பதங்கள் பெரும்பாலான செல்லப்பிராணி வளர்ப்பு வீடுகளில் அதிகம் ஒலிப்பதாகும். இந்த அன்னியோன்யம் எதனால் என்ற விளக்கம் இப்போதைக்கு அவசியம் இல்லை. ஆனால் இந்த அன்னியோன்யம் ஒருவகையான மனநோய்க்கு காரணமாக இருந்துவிடுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். எது எப்படியோ பூனையின் கால்களில் காயம் வந்துவிட்டால் மணிக்கணக்கில் அழுது , உணவை தவிர்க்கும் குடும்பங்களும் எம்மத்தியில் உண்டு.
இது ஒருபக்கம் என்றால், என் தலைப்பு மறுபக்கம். காதை கிழிக்கும் அலறல் ஒலிகள். மான்களும் பசுக்கன்றுகளும் குருவிகளும் கத்திக்கொண்டு ஓடவும் பறக்கவும் செய்கின்றன. தூரத்தில் கொஞ்சப்பேர் ஏதோ விபரீதமாய் கத்திக்கொண்டு காடுகளின் இடுக்குகள் வழியே மேடுகளில் கால்கள் இடரிட சாரமும் பெனியனுமாய் ஊருக்குள் குதிக்கின்றார்கள். அவர்கள் எல்லாரையும் மீறிய சத்தம்.
காட்டின் தூரத்தில் மேல் மரங்கள் அசைவதை மட்டும் காணக்கூடியதாக உள்ளது. காட்டுக்குள் பலமணிநேரம் அது செலவிடாது என்பதை அவ்வூரினர் நன்றாய் அறிந்திருந்தனர். கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னராக இதே எச்சரிக்கைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த நாள் இரவு கருப்பன் கோவில் திருவிழாவுக்காக ஊரே சேர்ந்திருந்தது. யாரும் தொழிலுக்குச்  செல்லவில்லை. வருடம் ஒருமுறை வரும் இந்த திருவிழா தான் அந்த ஊரினதும் அயல் ஊரினதும் கொண்டாட்ட நாள். ஊர் ஜனங்கள் எல்லாம் ஒன்றாகி சமையல், சாப்பாடு , வழிபாடு, விளையாட்டு, கூத்து , நாடகம் கேளிக்கைகள் என பிரமித்துப்போய் இருந்தது.

(vikatan.com)

இரவை போக்குவதற்காக படங்கெடுக்க இரு வாலிபர்கள் தங்கள் வீட்டை நோக்கி சென்றிருந்தார்கள். இருளில் மூழ்கியிருந்த அவர்களது குடிசைகளில் லாந்தர் விளக்கில் எல்லாம் அலங்கோலமாய் இருந்தது தெரிந்தது. என்ன நடந்ததென்று அறிந்திராதவர்கள் குடிசைகளை நோக்கி விரைந்தனர்.திருடர்களின் பயம் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால் கட்டைகளை ஏந்திக்கொண்டு விரைந்தார்கள். பக்கங்களை பார்த்தவர்கள் சமயோசிதமாக இது மனிதர்களால் ஏற்பட்டதல்ல என்று உணர்ந்து கோயிலுக்கு ஓடினார்கள். ஒரே பிடி …… அப்பிடியே தூக்கி மதகோடு போட்டு அடித்து உசுப்பியது அந்த யானை. பீறிட்ட ரத்தம் மதகை சிவப்பாக்கியிருந்தது. இராக் கொண்டாட்டத்தில் போனோர்களை மறந்துபோய் இருந்தனர் ஊரவர், சில சகபாடிகள் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க கூடும் என்று எண்ணினார்கள்.
பொழுது புலர்ந்தது, அதிகாலை பண்டமெடுப்பதற்காக சிலர் அரசடி பிள்ளையார்கோவிலுக்கு சென்றிருந்தனர். வழியில் மதகைத்தாண்டி செல்லும் போது கசங்கியிருந்த ,உருத்தெரியாத அளவு கொடூரமாய் தாக்கப்பட்டவர்களையும், அங்கால் பீடித்திருந்த சீரின்மையையும் கண்டுகொண்டனர். பயத்தாலும் கவலையாலும்   வெருண்டுபோனவர்கள் கூவிக்கொண்டு ஊரவர்களை அழைத்தார்கள் , ஊரே அலங்கோலத்தின் அடையாளமாய் காட்சி தந்தது. அந்த எண்பது வயது மூதாட்டியின் வீடு விறகுக்கு குவித்த மரக்குவியல் போல் சிதைந்திருந்தது. மணல் சுவர்கள் எல்லாம் இடிந்துபோயும் சில தெம்பான குற்றிகள் வளைந்துபோயும் இருந்தன. ஆறேழு வீடுகளின் சுவார்ப்பக்கங்கள் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தன. வயல் நடுப்பக்கங்களில் பெரிய பெரிய கால்த்தடங்கள் அரையாடிக்கொருக்கால் பதிந்திருந்தது. தடங்களில் மாட்டுப்பட்ட நெற்கதிர்களெல்லாம் தலை சாய்ந்து போய் காணப்பட்டன. வாழைத்தோப்புகள் எல்லாம்  அரைவாசியாகவும் அடியோடும் பிடுங்கப்பட்டு வாழைக்குலைகள் கவ்வப்பட்டும் இருந்தன. அவ்விடம் ஒரே வாழை சாற்று வாடையாய் இருந்தது. தடித்த நீண்ட பனைமரங்களும் தென்னை மரங்களும் குலுக்கப்பட்டு சாய்த்துவிடப்பட்டிருந்தன. குவித்து வைக்கப்பட்டிருந்த நெற்கள் எல்லாம் சிதறிப்போய் கிடந்தன. நெல்மணிகள் எல்லாம் தூரத்தூர விதைந்துபோய் இருந்தன. இறந்தவர்களின் குடும்பத்தினரும் அயலவர்களும் ஒப்பாரிவைத்துக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொள்கிறார்கள்.

பாடல் 01

சொல்லக்கேளும் வன்னி மன்னனே
துன்பமெல்லாம் இங்கு கூறவே
அல்லல் ஒண்டிரண்டல்லவே
ஆனை செய்யும் அட்டகாசமே
கொல்லை புலம் வயல் யாவுமே
கூறுந்தரமல்ல நாசமே
தென்னை பனை பலா மாவெல்லாம்
சின்னாபின்னமாக வீழ்ந்ததே
முன்னால் குவிந்த நெற் போரெல்லாம்
முற்றாக தின்று முடிந்ததே
இன்றுமெங்கள் குடில் கொட்டில்கள்
எல்லாம் பிடுங்கியே வீசுதே
நாங்கள் மிரட்டி துரத்தவே
நம்மை நாடிச் சாடி ஓடுதே
எத்தனை பேர் இருந்தார்களோ
எண்ணிக்கணித்தார் யாவரே
முத்து நிறைந்திடு கொம்பனே
முற்றும் பரப்பும் சுணங்கனே
சுத்த முளமதோர் ஏழாதே
மத்தக மித்திரை மீதிலே

பாடல் 02


இது யானை பிடிக்கும் பணிக்கர்கள் வாயிலாக கூறுவதாகவுள்ளது,

சொல்லக்கேளும் வன்னி மன்னனே – இந்த
தொண்டு செய்வாரில்லை திண்ணமே
வல்லதொருவருமில்லை – மத
யானை படுத்திடல் தொல்லையே
சொல்ல வொண்ணாத்துயர் தாங்கியே – சென்று
சேர்ந்து மடிந்தனர் ஏங்கியே
எல்லையுண்டோ இறந்துற்றவர் – இந்த
யானைமுன்னே கண்ணிற்பட்டவர்
மந்திர தந்திர சாலமே -எங்கள்
மாயமெல்லாம் வெறும் சாலமே
எந்த விதத்துமடங்கிடா – திந்த
யானை எவர்க்கும் மொடுங்கிட
நன்றோ நாம் சென்று மடிவதே – நாட்டில்
நமக்கிலையே புவி வாழ்வதே
இன்று நீர் எம்மீத்திறங்கியே – எங்கள்
இன்னுயிர் காத்தருள் தாங்கியே
அலைகடல் போலவே முழங்குமே – அந்த
அதிர்ச்சியில் அண்டம் நடுங்குமே
மலையெனவே முழம் ஏழதே – அதன்
மத்தகம் இத்தரை மீதிலே
மேனி முற்றுபடர் சுணங்கனே – அதை
மேதினியில் காண்டோர் பிணங்களே(வேழம்படுத்த வீராங்கனை – பக் 32)

பாடல் 03

இம்மதயானை குறித்து ஒப்பாரி பாடல் ஒன்றிலே
நாகன் திருக்கோவிலிலே என அஞ்சுகலை
நஞ்சையுண்ட அஞ்சாத ஐங்கரனே அப்பரே ஆத ரவே
அங்கே நிற்குதாம் நல்ல கொம்பன்
எங்காள் ஆகாது எங்காளை யாளும் சின்ன வன்னி யனாரே – அது
ஏழு முழ யானையல்லோ
அது கோபமுள்ள யானையது
எங்களையாளும் சின்னவன்னியனாரே – அது
குளறுதே மாமுகில் போல்.

மதம்கொண்ட யானையால் எந்நேரமும் பாதிப்புவரும் , எந்நேரமும் ஊருக்குள் இறங்கிவிடக்கூடும் என்ற பயத்தினை வன்னி அரசனுக்கு கூறிய வழிமுறைப்பாடல்கள் தான் மேற்கூறியவை.ஊரின் வளங்களெல்லாம் ஒன்றுசேர கருங்கல்லாலும், இறுக்க மண்ணாலும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது சின்ன வன்னியனின் அரச பீடம். ஊரவர் நிலையை உணர்ந்து கொள்கிறான் சின்னவன்னியன். அவன் சிற்றரசின் கீழ் இருந்த ஏழு ஊர்களின் பணிக்கர்கள் குறித்த கிராமத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். பல ஊர்களின் யானை அச்சத்தை போக்கிய வீரப்பின்னணி இந்த ஏழு பணிக்கர்களது. அதிலும் வேழப்பணிக்கன் ஆகச்சிறந்தவன். எத்தனையோ மதங்கொண்ட யானைகளை அடக்கி, மீண்டும் ஊர்ப்பக்கம் வரவிடாமல் செய்து மக்களின் மனங்களில் நீங்காத இடத்தில் வீரனாய் இருப்பவன். இருந்தும், இன்றைய நிலவரம் இதுவல்ல. வேலப்பணிக்கனுற்க்கும் இது தெரியாத ஒன்றல்ல. கூட்டம் கூடிற்று

பாடல் 04

ஏழு ஊருப் பாணிக்கரும் என்
அஞ்சுகலை நஞ்சையுடைய ஐங்கரனே
அன்பரே ஆதரவே – அவர்
எழுதிவிட்டார் ஓலை தனை
எல்லாப்பணிக்கருமாய் இன்பமுடன்
தான் நடந்து அன்புடன் நீங்கள் சென்று -அந்த
ஆனைக்கட்டி வாருமெண்டார்.

தனியொருவராக அடக்கமுடியாது என்பதை அறிந்திருந்த சின்ன வன்னியர், எல்லாப்பணிக்கருமாய் சேர்ந்து அடக்கி விட முடியும் என எடுத்துரைக்கிறார். பணிக்கர்கள் முகங்களில் மரண பயம் தோன்றுகின்றது. தங்களால் அடக்கிவிட முடியாது என்பதை – வேலப்பணிக்கரால் அடக்கிவிட முடியும் என பதிலளிக்கின்றனர். இது வேலப்பணிக்கர் வீரத்தை உயர்த்தினாலும்  மற்றையோரின் கீழ்மையை எடுத்துக்காட்டுகிறது.

பாடல் 05

இந்த ஆனை கட்டிவர
எங்களை ஆளும் சின்னவன்னியரே – எங்களால்
ஆகாது, வேலப்பணிக்கனால் ஆகுமென்றார்.
அதிலொருவன் நின்றுகொண்டு,
வேலப்பணிக்கனால் ஆகாது
வேலப்பணிக்கன் பெண்சாதியினால் ஆகுமென்றார்.

இந்த கருத்து யாரையும் அங்கே அதிர்ச்சியுற செய்யவில்லை, மாறாக வேலப்பணிக்கனை தலைகுனிய செய்தது. வேலப்பணிக்கனின் மனைவி அரியாத்தை. பெயரை போலவே அரி போன்று வீரம் மிக்கவள். முன்னரே சில யானைகளை அடக்கி வீரத்தை வெளிக்காட்டியவள். ஆனால் அதெல்லாம் அவ்வளவு கஷ்டமான விடயங்கள் அல்ல. இந்த முறை எல்லாப்பணிக்கர்களாலும் இயலாது என தெரிந்தும் அரியாத்தையை இக்கணக்கிற்கு இழுப்பது வேலப்பணிக்கனுக்கு மன உளைச்சலை தந்தது. மற்றைய பணிக்கர் வம்பிற்கே கூறியிருப்பினும், வேலப்பணிக்கனுக்கு அது அவன் வீரத்திற்கு ஏற்பட்ட இழுக்காகவே தோன்றியது. சோகங்களை கட்டிக்கொண்டு வீடு திரும்பிகிறான்.நடந்தவற்றை மனைவியிடம் கூறி கவலையுறுகிறான்.

பாடல் 06

இத்தனைக்கோ நீர் சலித்தீர்
என்னுயிரே ஆண்டவனே – எழும்பி
நீர் சாப்பிடன்றாள்

ஆனால் அரியாத்தைக்கு இது பெரிய விடயமாகவே தெரியவில்லை, அவள் இதை எண்ணி சோர்வுறவும் இல்லை மாறாக, கணவனுக்கு ஆறுதல் மொழியே அளிக்கிறாள். கணவனின் ஒப்புதலோடு , குறை மனதாகவே வேலப்பணிக்கன் அவளை அனுப்புகிறான் என்று எந்த சான்றும் இல்லை – அவள் மதயானையை அடக்க விரைகிறாள்.

பாடல் 07

வாற பொழுதிலையோ ஆனையது
மும்மதமும் தான் பொழிந்து
கை மடித்து தான் குளறி – அரியாத்தை முன்பு
கொம்பன் வந்து நின்றதுவே
யானையைக்கண்டவுடன்
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அரியாத்தை அவ
கால் கை தடுமாறி நின்றாள்.
பாலை மரம் வீரை மரம்
வேலப்பணிக்கன் பெண்ஜாதி – அரியாத்தை அவ
படு மரத்தோடு நின்றாவே
காலாலே மண்ணை அள்ளி
தந்த வீர பத்திரனே
மால் மருக வேல் முருக – உன்
தஞ்சம் என முன் போட்டாள்
கற்புடையாள் நானாகில்
ஆனையடி ஆனையடி
ஆணமறி க்காரன் மகள்
ஆனை மயில் வாகனமே – உன்
கையைத்தான் நீட்டுமென்றாள்.
அந்த மொழி கேட்டவுடன்
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே – உன்
ஆனை கையைத்தான் நீட்டியதே
கையாலே கை பிடித்து
அஞ்சகலை நஞ்சையுண்ட
அஞ்சாத ஐங்கரனே
அன்பரே ஆதரவே – அதன் மேல்
கொடு முத்தல்லவோ
காலிலிரு தேமலல்லோ
யானையடி யானையடி
யானை மறி காரன் மகள்
ஆனை மயில் வாகனமே -உனது
காலிரண்டும் நற்தேமலல்லோ
பொல்லை எடுத்தல்லவோ
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ
போட்டாளே ஆனை முன்பு
பொல்லை எடுத்து என் கையிலே
ஆனை மத யானையது
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
நாச்சன் அரியாத்தை கையில்
பொற்புடனே தான் கொடுக்க
உன் காலைத் தா தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே – நானும்
கனத்த வடம் போட்டு இறுக்க
முன்னங்கால் தான் கிளப்பி
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
நாச்சன் அரியாத்தைக்கு
முடுக்கிட்டு நின்றதுவே
மான் வார்க்கயிறு எடுத்து
வேலப்பணிக்கன் பெஞ்சாதி – அவ
மனங்குளிர போட்டிறுக்கி
முன்னங்கால் முடக்கு கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
நானயடியாள் பெண் பேதை – உன்
குப்பத்தில் பயந்து ஏற
முன்னங்கால் தான் மடிக்க
வேலப்பணிக்கன் பெஞ்சாதி
முன்னே நின்று தோள் பிடிக்க
உக் கோட்டைத் தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
வேலப்பணிக்கன் பெஞ்சாதி- யானையிட
குப்பத்தில் ஏறினாளே
செவியைத் தா கந்தா
ஆனையடி ஆனையடி
ஆனை மறி காரன் மகள்
ஆனை மயில்வாகனமே
நானயடியாள் பெண் பேதை
துறட்டிதனை போட்டிறுக்க
செவியைத் தான் கொடுக்க
துறட்டிதனை போட்டிறுக்க
வேலப்பணிக்கன் பெஞ்சாதி அரியாத்தை
செப்பினாள் ஓர் வசனம்


தன் துணிச்சலாலும், தனது கற்பின் சிறப்பாலும் அரியாத்தை மதயானையை அடக்கி முடிக்கிறாள் – என்பதாக பாடல் முடிகிறது. வடக்கு நாட்டார் இலக்கியங்களில் ஒரு பெண்ணின் வீரம் கற்பு என்பவை இவ்வளவு விமர்சையாக தெரிவிக்கப்படுவது வேறெங்கிலும் இல்லை. மத யானையை அடக்கியதற்காக அரியாத்தை அரசவையில் சிறப்பிக்கப்படுகிறாள்.

பாடல் 08

வெள்ளை விரும்பித்தாளே
எங்களையாளும் சின்ன வன்னியர்
பெண்சாதி, அரியாத்தை தான் இருக்க
மேலாப்பு போடுவித்தாள்.

பதினெட்டு வரிசைகளும் பெற்றவள், வீடு திரும்புகிறாள். இது வரை வீரம் கொளித்த புராணம் – சூழ்ச்சிகளாலும் வஞ்சனைகளாலும் சூழப்படுகிறது . இருள் நிறைந்த வானில் அரியாத்தை என்னும் மின்மினியும் அடங்கிப்போகிறது. இடையிலே வரும் சில காரணங்கள் கர்ண பரம்பரைக்கதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை .
அரியாத்தை வீடு திரும்புகிறாள், தன்னில் நிலை மாற்றங்களை உணரத்தொடங்குகிறாள் வழியில். அவளின் கண்கள் கடிப்பதாகவும் , கால்கள் என்றும் இல்லாதவாறு மிக சோர்வு அடைவதாகவும், கண்கள் இரண்டும் மயங்கிப்போவது போலவும், வாய் வரள்வதாகவும் ,வீடு செல்ல வழி தெரியவில்லை என்றும் கூறியவாறே குலதெய்வம் நாகதம்பிரானை துதித்துக்கொண்டே  இருண்டு போகிறாள். வழியிலேயே மடிந்து போகிறாள். இதற்க்கான காரணம் அரசவையில் யாரோ ஒரு பணிக்கன் , அரியாத்தை செய்தது ஆண் குலத்திற்கு அவமானமாக கருதி அவள் உண்ணும் வெற்றிலையில் நஞ்சு தடவி கொடுக்கிறான், – கர்ண பரம்பரைக்கதை. இருந்தும் எம்மவர் வரலாற்றில் இறப்பிற்க்கான சரியான காரணம் பதியப்படவில்லை. அது சரி இக்கால நவீன இறப்புகளுக்கே காரணம் தெரியாத பொழுது, அரியாத்தையின் இறப்பின் மர்மம் பெரிய பொருட்டல்ல. ஆனால் மரணத்தின் பின்னணியில் ஆண் வர்க்க மேலாதிக்கம் காரணம்செலுத்துகிறது என்பது மிக பெரிய அழுக்கே.
வேலப்பணிக்கருக்கு சேதி செல்லுகிறது. செய்தியை கேட்டவுடன் வேலப்பணிகரின் செய்கை தான் மற்றைய ஆண்களால் அவர்களின் வர்க்கத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கிறது. சேத்தி அறிந்த வேலப்பணிக்கர் அரியாத்தையுடன் உடன்கட்டை ஏற முடிவு செய்கிறார். இதனை அறிந்த மக்கள் அவனை ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிட்டு அரியாத்தையை எரிக்க கொண்டு செல்கிறார்கள். கட்டுண்டு துன்பத்தால் துவண்ட வேலப்பணிக்கர்

பாடல் 09

கற்புடையாள் நீரானால்
என்னுயிரே கண்மணியே
எனக்கிணங்கும் நாயகியே – என்னுடைய
கையில் கட்டு தெறியாதோ
என உரைக்கிறான்.
கலங்கியழும் பொழுது வேலப்பணிக்கனுடைய
கைக்கட்டு தெறித்திட்டதே
கைக்கட்டு அறுந்து விட அரியாத்தையுடன் உடன்கட்டை ஏறுகிறான்
வேலப்பணிக்கன் என்னும் வீரன்.

இத்தோடு அரியாத்தை காதை முற்றுகிறது , கூடவே நாட்டார் இலக்கியங்களின் முதல் பாகம் நாட்டார் பாடல்களும் நிறுத்தப்பட்டு மற்றைய பாகங்களுக்குள் அடுத்ததடுத்த தொடர்களில் செல்லலாம் என எண்ணுகிறேன்.

நவீனம் – கவிதை ரசித்தல் 03

எதை உந்துதலாக்கி எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பதை சிறிய நேர இடைவெளிகளில் சிந்தித்ததுண்டா?
தர்க்க பாடங்களை தவிர்த்து , நீண்ட நெடும் கோர்வைகளை வசமாக்கிக்கொள்ளவதில் எழுத்தின் வலிமை குன்றிவிடும் . சொல் , பொருள் ,உணர்வு என்பதில் ஓசையின் மூன்றாம் பரிமாணம் தான் வெற்றி கொள்கிறது. எத்தனை நீண்ட கோவைகளும் கொள்கின்ற பொருள் திரிபடையக்கூடிய சாத்தியம் அதிகமே. பொருள் வேற்றுமை உருவாக கூடிய சொற்களே வலிமை பெற்றவை என்ற மறையான சிந்தனையால் நாம் பீடிக்கப்பட்டுள்ளோம். இந்த நோய் உணர்வு என்ற மூன்றாம் பரிமாணத்தை அதன் பொருளடக்கம் எய்துவதை மெதுவாக்குகின்றது. சரியோ பிழையோ இந்த முகவுரை இனி வர இருக்கும் textக்கு அடிப்படையே.
ஒரு பெண்ணால் மலர்கின்ற – பெண்ணை பூவுக்கு உருவகிப்பதால் மலர்கின்ற என்பதில் எந்த குற்றமும் இல்லை , சொற்கள் எத்தனையாம் பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான் கேள்வி.போற்றுவதிலும் தூற்றுவதிலும் பெண் என்ற சக்தி கொண்டிருக்கும் வல்லமை வேறு எந்த சக்திக்கும் கிடையாது. இதில் என்னோடு உடன்படவேண்டிய கட்டாயம் யாருக்கும் இல்லை. போற்றுதல் தூற்றுதல் என்பதை மீறி சாதாரணமான ஒரு சொல் பெண் பல்வகைமையினால் பரிமாணங்களை மாற்றிக்கொள்வதை நாம் அறியாமல் உணர்ந்துவருகிறோம். ஒரு நித்திய நாளின் பல்வேறு சந்தர்ப்பங்கள் இதை வெளிப்படுத்துகின்றது. எங்கேயாவது உறவினர் வீட்டில் போய் இருந்துகொண்டு சல்லாபம் இட்டுக்கொண்டு பேச்சின் இடைநடுவே அவ்வீட்டுக்கார அம்மா ,” தம்பி சாப்பிட்டு போங்கோவன் ” என்று எதை சித்தத்துள் வைத்து கேட்டாலும் , யோசிக்காமல் மறுத்துவிடுகின்ற மனப்பாங்கினை உருவாக்கி கொள்ளும் தன்மையை சாப்பாடு என்ற ஒற்றை பரிமாண சொல் உருவாக்கி கொள்கின்றது. சாலைவழியாக நடந்தோ வாகனத்திலோ செல்லும் போது சாலை ஓரங்களிலிலும் சமிஞ்சைகளில் வாகன அருகிலும் வந்து ” பசிக்குது அய்யா /அம்மா சாப்பாடு வாங்க காசு தாங்கோ ? ” என்று கேட்டு நிற்கும் ஒரு ஏழைப்பெண்ணின் வாயிலிருந்து வரும் சாப்பாடு எம்காதுகளுடன் முடியக்கூடிய பரிமாணத்தை மீறி சில அர்த்தப்படுத்தல்களுக்கு உள்வாங்கப்படுகிறது.உடனே ஐந்தோ பத்தோ எடுத்து கொடுக்கின்ற செயலை உந்தப்படுத்தும் தன்மையை இந்த சாப்பாடு என்ற சொல் ஏற்படுத்துகின்றது என்றால் அச்சொல் பொருள் என்ற இரண்டாம் பரிமாணத்தை எட்டுகிறது.
வெளியில்  எத்தனை வேலைப்பளுவுடனும் , மனத்திலோ மூளையிலோ சிந்திக்க இடம் இல்லாமல் – பேச்சளவில் இடம் இல்லை என்கிறோம் , அலைவுறும் போதும் சிந்தனையும் செயலும் மிகக் கடினமான ஒன்றை நோக்கி செல்லுகின்ற போதும் வேறு எத்தனையோ ஆழமான செயல்களின் போதும் தொலைபேசி அழைப்பிலிருந்து அம்மா , ” தம்பி சாப்பிட்டியா ?”  என்று கூறுகின்ற போது அத்துனை வேலையும் சோர்வும் தொலைந்து போய் வயிறு பசிக்கான தூண்டுதல்களை மும்முரப்படுத்திக்கொள்ளும். பசிக்கும் , சாப்பாடு என்ற சொல் மூன்றாம் பரிமாணம் பெறுகின்றது. சொல் , பொருள் என்பதை மீறி உணர்வு என்ற நிலையை அடையும் போதே அச்சொல் வெற்றி பெற்றதாகின்றது. உறவினர் வீட்டம்மா , ஏழைப்பெண் என்ற இருவரும் தத்தம் பிள்ளைகளுக்கு அம்மா என்ற இஸ்தானத்தில் இருந்து அதே சொல்லை உச்சரிக்கும் போது அச்சொல் அவர்கள் பிள்ளைகளுக்கு மூன்றாம் பரிமாணத்தில் ஒலிக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.
e796ff049a50e4fa4e1eb39563dceea7
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டீரோ ?
பாரதியின் இந்த நவீனங்கள் – பெரும் தரப்பு விஞ்ஞானத்தை கருத்தாக்கினாலும் , சொல்லின் பரிமாணங்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.ஏன் என்றால் எந்த ஆண் கூறும் சாப்பாடு என்ற சொல்லும் சொல் என்ற பரிமாணத்தை தாண்டி செல்வதே இல்லையே, அப்பொழுது நங்கை கூறும் நவீனம் தானே சொற்கள்.

”-COOK”

இருட்டு இன்னும் ஆழப்படுத்தி கொண்டிருந்து. லைட்டர் வெளிச்சங்கள் மட்டும். ஐந்தாறு சூரியன்கள் இருப்பதுபோல். எம்மில் எத்தனை பெயர் என்று சரியாக தெரியவில்லை. என்னோடு காலையில் அண்ணளவாக அறுபது பேர் வேலை செய்வார்கள். யாரும் என் இனத்தவன் இல்லை. மங்கோலியர்களும், நீக்கிரோக்களும் , அடிமட்ட அமெரிக்கர்களும் தான். என் கசினோ பழக்கம் என்னை இந்த கேவலமான தொழிலுக்கு வழிகோரிவிட்டிருந்தது . இன்றோடு மூன்று மாதங்கள் இந்த நரகத்துக்குள் வந்து. சுரங்க தொழிலில் உள்ள அபாயம் தெரிந்திருந்தும் , என் பெயரெல்லாம் இந்த சூழ்நிலைக்கு தேவை இல்லாத விடயம். எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவன் படிக்கிறான் , இன்னொருவன் மடிக்குழந்தை. என் மனைவி அவ்வளவாக படிக்கவில்லை. நான் வேலைசெய்த பழைய டாக்ஸி நிறுவனத்தில் என் செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆஹா என்றில்லாமல் ஓரளவுக்கு நிதானமான வாழ்க்கை. செலவு போக எதுவும் சேமிப்புக்கு மிஞ்சியதில்லை. கஸ்டமர்களை இறக்கி விடுவதோடு சரி ,வங்கி பக்கம் அவசரத்துக்கு கூட போனதில்லை. எனது பெயர் அடா மாக்ஸ் என்று எந்த வங்கி ஊழியரிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆ….. ஒருமுறை இதே கதையை ஒரு கஸ்டமருக்கு சொல்லி இருக்கிறேன். அவருக்கு தெரிந்திருக்கலாம்.
நான் சபிக்கப்பட்டவன். அன்று ஒரு கோர்ட் சூட் போட்ட பணக்காரனால் தான் இந்த நிலைமை இன்று. தேவன் கூறும் அசுத்த ஆத்மா அவனாகத்தான் இருக்க முடியும். பார்க்க எடுப்பான தோற்றம் , முரடன் போல தெரியவில்லை. தலையில் முடி இருந்ததற்க்கான எந்த அடையாளமும் இல்லை. பனி தலையில் விழுந்து வழுக்கி விளையாடும் அளவு மிருதுவானதாக தோற்றம் அளித்தது. இறுக்கமான வெள்ளை கருப்பு கலந்த கோர்ட் சூட் போட்டு இருந்தார். பழுப்பு வெள்ளி நிற ட்ரை. கையில் கனமான ஒரு பை. விலைமதிப்பு கூடிய பை என ஒரு பார்வையிலேயே தெரிந்து கொண்டேன். எப்பிடி இவளவு அழுத்தமாக நினைவு இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? குறை காலனை எப்பிடி மறக்க முடியும். அவனிடமும் என் இதே கதையை எங்கும் விலகாமல் உளறினேன். கடைசியாக உங்களுக்கு முன்னர் என் கதையை கூறியது இவனிடம் தான். எல்லாவற்றையும் அமைதியாக செவிமடுத்துக்கொண்டே வந்தான். இடைக்கிடை ” excuse me ” என்றுவிட்டு தொலைபேசியில் உரையாடுவான். இடையிடையே நான்கு அழைப்புகள் வந்திருக்கும் , எல்லாமே பண விஷயம் தான். ஆயிரம் டாலர் கணக்கில் இல்லை , மில்லியனில்.  பேசி முடிந்தவுடன் ” go  a  head ” என்பான். நானும் இறங்கும் போது ஏதும் கொஞ்சம் கூட்டி தருவான் என்ற எதிர்பார்ப்புடன் கதையை சோகமாக அவிழ்த்து விட்டேன். மேல் பக்க கண்ணாடியில் பார்வையை நகர்த்தி அவனைப்பார்த்தால் எந்த சலனமும் இல்லாமை வீதியை வெறிச்சோடியபடி பார்த்துக்கொண்டே வந்தான். கதை நடுவே ”sir ” என்பதை அழுத்தி அவனது பார்வையை திசை திருப்ப முயற்சி செய்வேன். அவன் லேசாக தலையை ஆட்டுவான், அதிலிருந்து என்னை அவன் பின் தொடர்கிறான் என்று ஊகித்துக்கொள்வேன்.
இரவு பத்தை தாண்டியிருக்கும்,  வாகன நெரிசலில் எந்த மாற்றமும் இல்லை. ஆமை போல ஊர்ந்தது. முக்கால் மணிநேர பயணம் அது, ஹூஸ்டன் நகரின் மிக ஆடம்பரமான பப் தான் ரிக்கோ, அவர் தன்னை அங்கே இறக்கி விட சொன்னதில் எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஸ்டேட்ஸ்இன் பெரும்புள்ளிகள் மட்டுமே அங்கு செல்வார்கள். முக்கால் மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் என் மூளையையும் வாயையும் குடைந்து கொண்டே இருந்தது, ஏன் இப்படிப்பட்டவர் டாக்ஸியில் வர வேண்டும் ? இருந்தும் ஒரு போதும் அவரிடம் இதை பற்றி விசாரிக்கவே இல்லை. என் கண்களில் அவர் தரப்போகும் எக்ஸ்ட்ரா டொலர் தான் மின்னிக்கொண்டிருந்தது. அதில் என் மகனுக்கு ஏதாவது புதிதாய் ஒரு விளையாட்டுப்பொருள் போகும் போது வாங்கிக்கொண்டு போய் அசத்திவிடவேண்டும். ஆ… அவன் நான் ஓடுவதைப்போல் டாக்ஸி கேட்ட ஞாபகம்…..
எங்கோ சில பத்து மீட்டர்களுக்கு அப்பால் மின்சார தடை போல இருந்தது , ஹோஸ்டனில் இது அசாதாரணமான ஒன்று. இல்லை…. ஒரு லைட்டர் எரிந்து முடிந்து போனது. அந்த இடம் அண்டத்தின் சூனியம் போல இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் எது என ஊகிக்க முடியவில்லை , லைட்டர்களை பிடித்திருப்போரின் முகங்கள் மட்டும் வியர்த்து கொட்டி இருந்தது.எனக்கும் சாதுவாக…., எத்தனை லைட்டர்கள் எவ்வளவு நேரம் என்ற கணக்கு தெரிந்திருக்கவில்லை. விறைத்து பொய் இருந்தவர்கள் முனகத்தொடங்கி இருந்தார்கள், அதுவரை அவர்கள் ஆங்கிலம் கதைத்துத்தான் கேட்டு இருக்கிறேன், இப்போது யாரும் பேசுவதாய்  இல்லை. அவரவர் தாய் மொழிகளில் அலற ஆரம்பித்தார்கள். ஒரு பக்கம் பெயர்தெரியாத கடவுள்களின் பெயர்களெல்லாம் ஜெபிக்க தொடங்கியிருந்தார்கள்.இந்த சுரங்கத்தின் ஆழக்கணக்கெல்லாம் தெரியாது, நல்ல ஆழம், இல்லை கேட்ட ஆழம்…. ஒவ்வொரு நாளும் ஆழத்தின் அளவு பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சதுரமான இரும்பு கன்டைனரில் நாலு பக்கமும் அடைத்து இருக்க ஆழத்துக்குள்  என்னையும் மற்றவர்களையும் இறங்குவார்கள், எங்கள் பணி ஆழத்தில் உள்ள ராக் பிரேக்கர் உடைத்து தரும் பாறைகளை,  நாம் இருக்கும் பெரிய கன்டைனரில்  உள்ள கிரசரால் நொறுக்கி வரும் தூள்களையும் துகள்களையும் அங்கேயே நிரந்தரமாகி இருக்கின்ற இன்னொரு அசையக்கூடிய கன்டைனருக்கு உருள் வண்டியில் கொண்டுசெல்வது . எப்படியும் ஒரு நூறு தரவை நாளைக்கு கொண்டு செல்வோம். ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர வேலை, ஏற்ற சம்பளம், இருக்கும் கடனை அடைக்க , வறுமையில் வாடும் குடும்பத்தை மீட்க ஜேசு காட்டிய ஒரே வழி  இதுதான்.
ரிக்கோ ஹோட்டலை அண்மித்தது வண்டி, தனது பையில் இருந்து ஒரு ஹல்ப் கோர்ட்டை எடுத்துக்கொண்டார். அவர் அணிந்திருந்த நீள கோர்ட்டையும் டையையும்  கழட்டி மடித்து வைத்துவிட்டு ஹல்ப் கோர்ட்டையும் பௌவையும் மாட்டிக்கொண்டார் , முன் கண்ணாடியையே பார்த்துகொண்டுவந்த எனக்கு ஏமாற்றம் பித்தாக்கியது , அசல் ஹோட்டல் சர்வர் போலவே காட்சி தந்தார். இவளவு நேரம் அலம்பியது வீணா ?  யார் எவர் எண்டு விசாரித்து அல்லவே கதையை தொடக்கி இருக்க வேண்டும் என்று மனம் அதட்டி கொண்டது, என் மகனுக்கான டாக்ஸி கனவு உறைந்து போனது. முன் பார்வைக் கண்ணாடியில் படிந்த மென் பனியை வைப்பர் அகற்றுவது போல் கனவையும் மனம் அகற்றிக்கொண்டது.ரிகாவின் அகன்ற வாயிலின் வழியே டாக்ஸி உல் நோக்கி சென்றது .அவர் நிதானமாக இறங்கிக்கொண்டார். அவரது கைப்பை இன்னும் கனத்திருந்ததை பார்த்து தலையை ஸ்டேரிங்க்களுள் புதைத்துக்கொண்டேன் . தனது பர்சினை புரட்டி கட்டணம் செலுத்தினார், எப்படியும் கூட தேறாது என்று நம்பிக்கையிலும் சலிப்பிலும் காசை எடுத்து எண்ண தொடங்கினேன். ஒரு பெனி கூட அதிகம் இல்லை. எதிர் பார்த்தது தான். நிறைய நேரம் ஆகியிருக்காது, ஆனால் அவர் உடனே மறைந்துவிட்டார். யாரோ கண்ணாடியில் தட்டுவது போல் இருந்தது, திரும்பினேன். பாதுகாப்பாளர் ஒருவர் முன்னோக்கியோ பின்னோக்கியோ டாக்ஸியை எடுக்கும் படி கூறிக்கொண்டிருப்பது, உதட்டசைவில் தெரிந்தது. கண்ணாடியை இறக்கி எடுப்பதாக கூறிவிட்டு பின்னோக்கி டாக்ஸியை செலுத்தினேன். மீண்டும் யாரோ பின் கண்ணாடியில் தட்டுவது போல இருந்தது, நான் கோவப்பட்டு விரைவாக எடுத்துவிடுவதாக அலறினேன்.
x354-q80
”excuse me ”
அதே குரல் , அதே ஹல்ப் கோர்ட் , அதே போவ் , வெறிச்சோடிய பார்வை மட்டும் தொலைந்து போயிருந்தது. எதையாவது மறந்து விட்டாரா என பின் பக்கம் நோட்டம் இட்டேன் , இல்லை எதுவும் இல்லை.பிறகு ஏன் என்ற கேள்வி துளைத்தது. டாக்ஸியை ஓரப்படுத்தினேன். அவர் கண்களில் ஒரு தேவ அருள் தெரிந்தது, வேறொரு மொழியில் கதைக்க தொடங்கினார். எனக்கு விளங்கியிருக்காது என அவருக்கு அப்பட்டமாக என் முகபாவனை உணர்த்தி இருக்கும். இருந்தும் நான் ஈர்க்கப்பட்டேன் , டாக்ஸியினை லாக் செய்துவிட்டு ரிகோக்குள் நடக்க தொடங்கினோம்.
வெளிக்கட்டடம் தான் பழமையானது போல தோற்றம் அழைத்தது, உள்ளே எலிசபெத் அரண்மனை போல இருந்தது. அடுக்கி அடுக்கி தேனிக்கூடு போல உள்தோற்றம். பிரமிப்பில் ஆழ்ந்து இருந்தேன்.கொஞ்ச தூரம் நடந்துபோயிருப்போம், உள்ளக விளையாட்டு அரங்கம் அது. பத்து மேஜைகள் இருந்திருக்கும், எல்லாமே நீல நிற வழவழப்பான மார்பிளால் ஆனவை. மேஜைக்கு இருபதுபேர் என்ற கணக்கில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்திருக்க வேண்டும்.
”mike author ” என்றார். திரும்பி பார்த்தேன், புன்னகையுடன் இது இந்த கிளப்புக்கு மட்டுமே தனித்துவமான கசினோ விளையாட்டின் வகை என அறிமுகம் தந்தார். என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் கணமே மூலை மேஜையில் இருந்தவர் , ” completed , take that money bag ” என்றுகொண்டு அகன்ற பெரிய பையொன்றை தூக்கிக்கொண்டார். வியப்பில் ஆழ்ந்தேன். அவர் வரும் போது ஒரே ஒரு காரினை கொண்டுவந்ததாகவும் , விளையாடிய பின்னர் ஐம்பது காருக்குரிய பணத்தினை எடுத்து செல்வதாகவும் கூறினார். பிரமாண்ட வியப்பில் ஆழ்ந்தேன். என் மகன் கேட்ட டாக்ஸியின் ஞாபகம் வந்து மனக்கண்ணில் நின்றது. அவர் சந்தோசத்துடன் அடுத்த மேஜைக்கு பணக்கட்டை எடுத்து வைத்திருந்தார், சிகார் புகையில் அவர் தேவ ஆசி பெற்றிப்பதுபோல தோன்றியது.
எனது டாக்ஸியின் திறப்பை மேஜையொன்றில் வைத்தேன், ஆட்டம் ஆரம்பமானது. என் ஆட்சி மேலோங்க ஆரம்பித்தது அருகேயே இருந்து என்னை வழிகாட்டிக்கொண்டிருந்தார் அவர், அவரை எல்லாரும் கிறிஸ்டென் என அழைத்தது ஞாபகம் இருக்கிறது, இருந்தும் நான் அவரை சார் என்றே அழைத்தேன். அவர் பங்கை பையில் வைக்க என் பங்கை அடுத்த மேஜைக்கு வைத்தேன். ஆட்சி அதிகரித்துக்கொண்டே இருந்தது , ஐந்து கார் …… இருபது கார்…….ஐம்பது கார்…… எண்பது கார்……… என காசுக்கணக்கை கார்கணக்கில் வைத்திருந்தேன். கட்டின் எண்ணிக்கை கூட கூட போதை உச்சியின் விளிம்பை அடைந்தது, விளையாட்டு போதை. ” finally won ”, அதே குரல் மூலையில் கேட்ட குரல். திரும்பி பார்த்தேன் காணவில்லை, எதிரே – விறைத்துப்போனேன். என் பையில் மூன்று டொலர் மட்டும் அனாதையாய் கிடந்தது. எல்லாவற்றையும் போதையில் அவனிடம் தோற்றுவிட்டேன். இதே மேஜையில் அடுத்த சுற்றுக்கு வரும்படி சவால் விட்டுக்கொண்டே திரும்பி சாரை பார்த்தேன். காணவில்லை என ஊர்யிதமானது. மனம் நொந்து கொள்ளவில்லை. ஜீன்ஸ் பையெல்லாம் விட்டு துழாவி பார்த்தேன் , எதுவுமே தேறுவதாக இல்லை. தலையை கவிழ்ந்தபடி வெளியே வந்தேன் சிகாரை புகைத்தபடி. டாக்ஸி அருகில் சென்று பையை துலாவினேன் , என்ன இருக்கும் …. எதுவுமே இல்லை , எல்லாவற்றையும் முதலீட்டு தானே ஆரம்பித்தோம். கன்னி வழியே கண்ணீர் பீறிட்டது. ஓடிப்போனேன் கிளப் வாசலை நோக்கி. உள்ளே தகுந்த அடையாளம் இல்லாமல் விடமாட்டார்கள் என்று நிச்சயித்து கொண்டார்கள். அந்த ஹல்ப் கோர்ட் ,போவ் அதுதான் அடையாளமா ?
ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் தான் இருந்தது , நட்சத்திரம் போல. அதுவும் குற்றுயிரில் ஊசலாடியது.
”Terrorist tunnel detected by the IDF, meant for attacking States, reaching from southern ……… was attacted by US army last night. No one escaped from that.”

வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 -மணல் வாசம்

மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான். ஊரார் கூடி கிராம நடுவில் உள்ள அந்தோனியார் கோயிலில் அவர்களுக்கு ஒரு மாதம் முன்தான் திருமணம் நிறைவேறியது. மன்னார் மாவட்ட கிராமங்களில் எல்லாம் காற்றில் கிருமிகளே இருக்காது. உப்பின் உவர்ப்பு கிருமிகளை இல்லாதொழித்து விடுகின்றது. அங்கு பரவியிருந்த தேவ ஒளி எல்லார் மனைகளிலும் அன்பும் சந்தோஷமும் பெருக ஆசி செய்துகொண்டிருந்தது. அந்த வீடும் அப்படித்தான். தேவ ஒளியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
 
காலை புலர்ந்து விட்டிருந்தது. புலம்பெயர்ந்து வருகின்ற பெயர்தெரியாத வெளிநாட்டு பறவைகளின் விசித்திரமான கானம் அவன் காதுகளில் தேவகானத்தை மீட்டிக்கொண்டிருந்தது.

என்னடி புள்ளே விடிஞ்சல்லே போச்சுது
செல்ல வேணுமல்லே மீன் பிடிக்க
இன்னமும் நித்திரை கொள்ளலாமோ நீயும்
எழுந்திரு புள்ளே பொழுது புலந்திருச்சு

என்று உப்புக்காற்றை சுவாசித்து சுவாசித்து வரண்டு போன குரலால், முன்னைய நாள் காலை குடில் எல்லாம் சுற்றிக் காயப்போட்ட கருவாட்டுத் துண்டுகளை எடுத்துப் பக்குவமாய் குடிலுக்குள் வைப்பதில் காலம் தாழ்த்தி உறங்கிய மனைவியின் கால்களை உலுப்பி உறக்கத்தில் இருந்து விடுபட வழி செய்கிறான். ஏதோ பழகிப்போன பறவையின் கானம் போலே இருக்கிறதே என்ற யோசனையுடன் கண்களை கசக்கி எழுந்திருக்கிறாள் அவள், மீனவன் மனைவி. எழுந்தவள் தன்னை எழுப்பிய அந்த கானத்திற்குரிய பழகிய பறவை அவள் கணவன் என்று தெரிந்தவுடன் தன்னை சுதாரித்துக்கொண்டு

எழுந்திட்டேன் அத்தானே கொஞ்சம் பொறு
கோப்பித்தண்ணி வச்சுதருவன் ஐயா
தொழுவுங்கோ நம்மை படைத்தவனை
தினம் வாழ வழிவகை தந்தத்துக்கு

இன்றைய நாளில் நடந்ததொன்றும் அவளுக்கு புதுமை இல்லை. திருமணம் ஆகி ஒரே ஒரு மாதம் தான் ஆகின்றது . இருந்தும் கணவனிடம் எப்படி பழகிக்கொள்வது என்று மிக லாவகமாக அறிந்திருந்தாள் அவள். கணவரின் கோபத்துக்கு ஆளாகாமல் அவரை வேறு சில விடயங்களில் திசைதிருப்புவதன் மூலம் தன் காரியங்களை முடித்துக்கொள்ளலாம் என்று அவள் நன்றாகவே தெரிந்திருந்தாள். அதற்காக அவள் சொல்லும் காரணம் கூட உவப்பளிக்கிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கையையும் இவ்வாழ்வு அவனால் அருளப்பட்டதே என்ற உண்மையையும் அவள் சரியாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றாள். அவனை தொழுவது இன்றியமையாதது என்று அவனிடம் கூறி, தான் தேநீர் சமைத்து தருவதாகவும் கூறுகின்றாள் . மன்னாரில் அக்காலத்தில் கோப்பித்தண்ணி பழக்கம் நிலவியமை இதில் அடிக்கோடு இடப்படவேண்டியதாகும் .

கட்டு மரம் கொண்டு கடலோரம் போகணும்
கெதியாக் கொண்டுவா பிள்ளை நீயும்
கட்டுவலை பாய்ச்சக் கனியமு மாச்சுது
மீனெழுந்து வரும் நேரமு மாச்சு

 
தன்னை மெத்தப்படுத்த அவள் செய்யும் மாயவேலை தான் இது எல்லாம் என புரிந்து வைத்திருந்த கணவன் , எதையும் வெளிப்படுத்தாமல் வார்த்தைகளை மெதுவாக இறுக்கி கொள்கிறான். நேரடியாக அவளை பேசிக்கொள்ளாமல் , பொய் காரணமும் சொல்லாமல் தன் நிலையை வெளிப்படுத்துகிறான். இரவெல்லாம் ஆழ் கடலில் தூங்கிக்கொண்டிருக்கின்ற மீன்களெல்லாம் சூரிய ஒளிக்காய் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது சீக்கிரப்படுத்திக்கொள் என்று நடுமொழி உரைக்கிறான்.

கோப்பித்தண்ணி ஊற்றி வச்சிருக்கே னத்தான்
எடுத்து குடியுங்கோ தாக்கம் தீர
கோபப்படாமலே போகும் போது ஒரு
முத்தமொன்று தாங்கோ ஆசை தீர

உடனே விழித்துக்கொண்ட மனைவி, கணவனின் நியாயமான கோபத்துக்கு ஆளாகிக் கொள்ளாமல் இருக்க கோப்பித்தண்ணி ஊற்றி முடிந்தது என்றும் உங்கள் கோபம் தீர குடித்துக் கொள்ளுங்கள் என்றும் சாடையாக கூறுகின்றாள். அவள் கூறும் தாகம் தீர என்பது அவனின் கோபத்தை தீர்க்கவாகவே இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவன் கோபம் தீர்ந்ததா இல்லையா என்று அறிந்து கொள்ளவும் அவள் பெண்மையை ஆற்றிக்கொள்ளவும் முத்தம் கேட்கும் விதம் அலாதியானது. சந்தம் கூட கேட்பது போல ஆசை தீர முத்தம் கோபப்படாமல் தாருங்கள் என்று கவிதை மொழியை மேலும் மேலும் அடுக்குகிறாள்.

முத்தமொன்று தந்தேன் பத்தரை மாற்றுப்
பசும் பொன்னேத்திரு திர வியமே
முத்துப்போல பிள்ளைகள் பெற்றிடுவோம்
தினம் மீன் பிடிக்க கற்று கொடுத்திடுவோம்.

முத்தம் கேட்டவுடன் உருகிப்போன அவன் மனதோடு கோபமும் பறந்தே போகிறது. அவளை அவன் விழிக்கும் விதம் கடலோர சமூகத்தில் மக்களின் மனநிலையையும் கணவன் மனைவி என்ற உறவின் மீது  அவர்கொண்டுள்ள புனிதத்துவத்தையும் உயர்த்திக்கொள்கிறது. தன் மனைவியை பசும் பொன்னாக உருவகப்படுத்திடும் அழகு அவன் பாசத்தின் உச்சம். அதையும் மீறி முத்துப் போல பிள்ளைகள் என்று கூறும் இடத்தில் கடலோர வாடையுடன் கவித்துவம் மேலோங்குகிறது. கடலோரமக்களின் அரும்பெரும் பொக்கிஷம் அவர்களிடம் கிடைக்கும் ஆழ் கடல் முத்தேயாகும். தங்கள் பிள்ளையும் அந்த ஆழ்கடல் முத்தே என விழித்தல், ஒரு தந்தை கண்டுடெடுக்கக் கூடிய முத்து அவர் பிள்ளைதான் என்ற கூரிய உண்மையை வெளிப்படுத்திடுகிறது. கூடவே பிள்ளையையும் தன் வழியே மீன் பிடித்தலுக்குள் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஓர்  ஆணின்  நியாயமான ஆசையும் காட்டப்பட்டுள்ளது.
 

மீன் பிடிக்க கற்றுக் கொடுத்திங்களா மென்றால்
அறிவு மலருமோ சொல்லுங்க ளத்தான்
ஈனப் பிறவிகள் நம்மளைப் போ லல்ல
கல்விமானா யாமும் வளர்ந்திடுவோம்

இந்த வரிகள் கவனிக்க வேண்டிய சமூக பிரச்சனைகள் சிலவற்றை படம் போட்டு காட்டுகிறது. கூடவே அந்நாளின் சமூக சிந்தனைகளையும் கூறுகின்றது. கணவன் மகனை மீனவனாக்க வேண்டும் என்று ஆசையை மனதுள் வளர்த்து கொள்கிறான், முத்தம் கொடுத்த உவகையுடன் அதை வெளிப்படுத்தியும் விடுகிறான். இதில் அவன் நோக்கம் இருவிதமான கண்ணோட்டத்துடன் ஆராயப்படவேண்டியதாகும். அக்கால சமூக கட்டமைப்பு மீனவனை மீனவனாகவே அழுத்திக்கொண்டு செல்லும் போக்குடையது. அப்போக்கினை ஏற்றுக்கொண்டவனாகவும் அதே வழி பயணிப்பவனாகவும் காணப்படுகிறான் கணவன். இன்னொரு பார்வையில் அவனை தன் மரபினை, வழித்தோன்றல்களை நினைவில் விழுத்தி அவனை ஒரு மீனவனாக்கும் நோக்கம் கொண்டவனாகவும் சித்தரிக்கலாம்.
ஆனால் மனைவியின் பார்வை எழுச்சியுடையது. அக்கால பெண்களின் மனநிலையும் கருத்து நிலைகளும் பிரமிக்கத்தக்கனவாக இருந்திருக்கின்றது. ஒரு ஆணாக கணவனானவன் தனது சமூக கட்டுப்பாட்டை மீறத் துணிவற்றவனாய் இருக்கும் போது  ஒரு பெண்ணாக அவள் சிந்தனை மறுமலர்ச்சி காண்கிறது. இன்றைய மீனவ சமூகத்தில் இருந்து  நாம் அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் எத்தனையோ  சாதனையாளர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த மனைவி போல் எத்தனையோ பெண்களினது தூரநோக்கானதும் துணிவானதுமான சிந்தனையே முதன்மைக் காரணம் எனலாம். தன் மகன் மீனவனாக வருவதனால் அவன் அறிவில் மேம்பாடு வருமோ வராதோ என கவலையுறுகிறாள் மனைவி. சீரிய கல்வியை தனது பிள்ளைக்கு வழங்குவதால் தன்னைப்போன்று, வெயில், மழை, கடும் காற்று என சீரில்லா காலநிலைகளின்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து நிச்சயமில்லாத கடற்றொழிலில் ஈடுபட்டு, இன்னுயிரைப் பணயம் வைத்து,  வலையில் சிக்குவதில் இருந்து கையில் சிக்குவதை கண்ணும் காரியமுமாய் பார்த்து சேமிக்க திண்டாடி அலைகளைப்போலே அலைவுறும் கிளிஞ்சல் வாழ்க்கை வேண்டாம், கல்வி கற்றவர்களாக இஸ்திரமான நிலையில் நாமும் வாழவேண்டும் என்று மனதின் வலிகளை கூறும் மொழிகள் நெகிழ்ச்சி ஊட்டுவனவாகின்றது.
 

சரிப்பிள்ளை போயிட்டு வருகிறேன் பால்கஞ்சி
கலயத்தை கொண்ட நீ வந்துவிடு
பொரிச்ச கருவாடும் சேர்த்துக்கொண்டே வந்து
கஞ்சி குடிக்கயில தந்து விடு

அவளின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவனாய், மனைவியின் கனவுகளை கலைக்க முடியாதவனாய் கதையின் போக்கை மாற்றுகிறான். உண்மையில் மாற்றவேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான். நாழிகள் கடந்து கொண்டே இருந்தன அவன் வேலைக்கு புறப்பட.. அவன் அவளிடம் பால்கஞ்சியும் பொரித்த கருவாடும் மதிய உணவுக்காக கேட்கிறான்.

சரியாத்தான் வலைபோட செல்லுங்கோ கஞ்சி
கலயத்தை கொண்டு நான் வந்திடுவன்
பொரிச்ச கருவாடும் அரைச்ச துவையலும்
கஞ்சி குடிக்கயில தந்திடுவன்

எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனைவியாக கருவாடும் துவையலும் கஞ்சியும் கொண்டுவருவதாக கூறுகின்றாள். இதோடு மனைவியின் ஏக்கத்தை உணர்ந்த கணவனும், கணவனின் மனநிலையைஉணர்ந்த மனைவியாகவும் உடல்கள் பிரிய உணர்வுகாளால் பிணைந்திருக்கின்ற அந்த கடலோர குடிசையின் காலைப்பொழுது இதுவாகும்.
நிலையளவில் தாழ்ந்தவர்களாக சித்தரித்துக்கொள்ளும் அவர்கள் மனதளவில் உறுதியானவர்களாயும் அன்பளவில் இறுக்ககட்டுண்டவர்களாயும் காட்டிய அற்புத படைப்பு இந்த நாட்டார் பாடலாகும். மன்னார் என்ற அழகியல் இந்த பாடலில் இழையோடியுள்ளதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறு இருக்கின்றது.