வாசனை

தனி மனித வாசனை எதில் எல்லாம் தென்படும் என்று என்னிடம் நானே கேட்டுக்கொள்வதுண்டு. ஒரு சில ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்களை மனமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு. நாம் எடுக்கும் முடிவுகளில் எம்மை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்தும் நான் எடுக்கும் முடிவுகள் தனி மனித சிந்தனைகளின் வெளிப்பாடுதானா என்பதில் நிச்சய ஐயம் உண்டு. உங்களது முடிவுகளில் வேறு யாரும் இல்லையா ? இல்லை என்றால் இத்தோடு புதிய தலைமுறைக்கான ஆட்சேர்ப்பினை உங்களில் இருந்து தொடங்குகிறேன். ஆம் என்றால் நீங்களும் நானும் ஒரே ஓலைச்சுவடிகள் தான். தனி மனித வாசனை தெரியவே தெரியாத பல காலமாய் தூசுகளும் கரையான்களும் படிந்த ஓலைச்சுவடிகள் தான் நாம். எம் முடிவுகளில் மூத்தோரின் அனுபவங்களும் வரலாற்றின் பாதிப்பும் கட்டாயம் தலை தூக்கிநிற்கும். இவற்றை மீறி முடிவுகளை எடுத்துக்கொள்ள நாம் அதிக சிரத்தை காட்டுவதில்லை. ஏன் எனில் எம்மால் எடுக்கப்படும் சார்பான முடிவுகள் எமக்கு சிரமங்களை தருவதில்லை. எனவே நாம் சுயமான முடிவுகளை எடுக்க கூடிய மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. எமது முடிவுகளில் தனி மனித வாசனை விசுவதே இல்லை.

எமது எழுத்துக்கள் ? கட்டாயம் இல்லை என்ற முடிவு தான் என்னைப்பொறுத்தவரைக்கும் நிதர்சனமானது. எங்கள் எழுத்துக்களில் எம் வாசனையிலும் பார்க்க எம்மை ஆட்கொண்ட எழுத்தாளர்களின் வாசனை தான் மேல்தூக்கி நிட்கும். ஏன் என்றால் எங்கள் அனுபவங்களை விட அவர்கள் அனுபவங்கள் தான் வலிமையானவை. இதில் எம்மேல் எந்த .குற்றமும் இல்லை. எவ்வளவு தூரம் எமது எழுத்துக்கள் எமது ஆழ்மனதின் பிரதிபலிப்பாய் இருக்கின்றன என்பதன் பொருட்டே தனி மனித வாசனையின் ஆதிக்கம் இருக்கும். கற்பனையில் முற்றுமுழுதாய் எம்மை வெளிப்படுத்தலாம் என்கிறீர்களா? உங்கள் கற்பனையின் மூலம் எங்கிருக்கிறது அல்லது எதைத்தழுவியது என்பது நீங்கள் மட்டுமே அறிந்த பரம ரகசியம் என்கிறீர்களா? ஆக அங்கும் நீங்கள் இல்லை , ரகசிய வாசனை தான் வீசுகிறது.
கண்களை மூடி பிராணாயாமம் செய்து விட்டு மனக்கண்ணால் பாருங்கள் அதோ அங்கு ஓடும் அதிசய மான் தான் நீங்கள். அங்கு ஒரு வேளை உங்கள் தனி மனித வாடை வீசலாம்….

உலக தாய்மொழித் தினம் 2017

எனக்கு இன்னும் அதிகமா ஞாபகம் இருக்கின்றது.அந்த வெளிறிய கண்கள், நரைத்த ஐதான கேசம், நரம்போடியிருந்த கைகள் கால்கள், கசக்கி போட்டிருந்த டிஸு போன்ற முகம் , நடையில் அதிக தளர்வு, நிதானமின்மை, என அடையாளப்படுத்தலுக்கு குறைவில்லாத தேகம்.
”நான் உன்னோடு அதிக காலம் பழகி இருக்கிறேன். உன்னில் அக்கறை எடுத்து கொள்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. நெடுகாலமாய் இந்த கேள்வி என் ஆழ் மனதின் சுரங்கங்களில் தீர்க்கமுடியாத ஊற்றாய் பீறிட்டுக்கொண்டிருக்கிறது. ” என்று நான் அந்த உருவத்திடம் போலியான வசனங்களை சேர்த்துக்கொண்டு கேள்விக்கான தயார்படுத்தலை ஆரம்பிக்க தொடங்கினேன்.

பேசுவதில் நான் எடுத்துக்கொண்ட சிரத்தையை அந்த உருவத்தை கவனிப்பதில் ஏற்படுத்திக்கொள்ள தவறிவிட்டேன்.
அது வழி எங்கும் சீழ் கொட்ட மறைந்துகொண்டே சென்றது.
கேள்விகளை தயார்படுத்திய என்னால் அந்த உருவத்தை சேர்த்துக்கொள்ள முடியாமல் போனது.
உலக தாய்மொழித் தினம்

குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா

ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் மாறி மாறி பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. இத்தேவையினால் அவனுக்கான நிரந்தர வதிவிடத்தின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. குறுகிய நாட்களுக்குள் அவர்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை அடிக்கடி உருவானது.
கி மு 6000 ஆண்டு காலப்பகுதிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் பயிர்செய்கையின் மூலம் அவனது உணவுத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளத் தொடங்கினான். பயிர்களுக்காக அவன் தனது இருப்பிடத்தை நிலையாக்கி கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பயிர்களின் அடிப்படை தேவையான நீருக்காக அவன் குளக்கரை ஆற்றங்கரை ஓடைகள் என்பவற்றுக்கு அருகில் குடியேற ஆரம்பித்தான். கால ஓட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. இடவசதிகள் கருதியும் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்காகவும் மக்கள் குழுமங்களாக பிரிய ஆரம்பித்தனர். இவ்வாறு பிரிந்துசென்ற மக்கள் மற்றுமொரு நீர்நிலையை அண்டியே தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். காலப்போக்கில் ஒவ்வொரு குடியேற்றமும் அதன் இருப்பிடம், மற்றும் அம்சங்களைக்கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன. இந்த அடையாளப்படுத்தலில் இயற்கை அம்சங்களாக  தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், நீர்நிலைகள், நில இயல்புகள் போன்றவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனை விட இதிகாச புராண இலக்கிய பெயர்களும் , தொழில் ரீதியான பெயர்களும் , அரசர் ,மேல்நிலை அதிகாரிகள்,தலைவர்கள் போன்றோரின் பெயர்களும் ஆதிக்கம் செலுத்துவதையும் காணலாம்.

வவுனியா நீர்த்தேக்கம் (panoramio.com)

இலங்கையின் வடக்கு வாயிலாக கருதப்படுகின்ற வவுனியாவின் இடப்பெயர்வுகளும் இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இந்தக் கட்டுரையின் பெரும்பாலான மூலங்கள் ஞா.ஜெகநாதன் என்பவரால் வவுனியா பிரதேச கலாசார விழா 2016 ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட இடப்பெயர் ஆய்வு என்ற ஆய்வில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதைவிட வேறு சில புத்தகங்கள் மற்றும் கேள்வி அறிவு என்பவற்றின் மூலமும் தொகுக்கப்படுகின்றது.

வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லாததாலும் ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும் இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும் பள்ளங்களும், பளைகளும், புராணங்களும், புரங்களும், மடுக்களும், மலைகளும், முறிப்புகளும், மோட்டைகளும், வத்தைகளும், வனப்பு சேர்ப்பதனால் வவுனியாவின் இடப்பெயர்களில் இவற்றின் ஆதிக்கமே பரவலாகி காணப்படும்.

இவற்றை விட வவுனியா பிரதேசங்களில் பரவிக்காணப்படுகின்ற தாவரங்களான அரசு, ஆத்தி , இத்தி , இலந்தை , இலுப்பை, இறம்பை , ஈஞ்சு , கரம்பை, கறிவேம்பு, கருங்காலி, கள்ளி, கான்ச்சூரை, காயா, கூமா, கூழா, சமிழ், சாளம்பை, செங்காராயத்தி, தம்பனை, தான்றி , தேக்கு, நறுவிலி, நெளு, நொச்சி, பம்பை, பனிச்சை, பயறி, பரசு, பாலை, பாவட்டை, பிரம்பு, புளி, பூசினி, பூவரசு, பொடுங்கண், மகிழ், மண்டு, மருது, மரக்காரை, மாறலுப்பை, முள்ளி, விண்ணானை, விளா , வேம்பு என்பனவும் உயிரினங்களான ஆமை, உக்கிளான், எருமை, பன்றி, மரை, மான், கொக்கு என்பனவும், மீன் இனமான குறவையும்   தானியங்களான எள், நெல் என்பனவும்  இடப்பெயரியலில் முக்கிய இடம் பெறுகின்றன.
இத்தாக்கங்களால் வவுனியாவில் ஊர் பெயர்களில் ஆழ்ந்த அர்த்தங்களும் அழகியலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது வவுனியா மக்களின் தமிழ் புலமையையும் ஆழ்ந்த பாண்டித்தியத்தையும் புலப்படுத்தி நிற்கிறன. இனி சில ஊர்களின் பெயர்களினூடு கவனம் செலுத்தலாம்.
பறங்கி என்பது பூசணியை குறிக்கும் பெயராகும். பூசணி பயிர் செய்கைக்கு அருகில் ஆறு இருந்தமையால் அக்குடியிருப்பு பறங்கியாறு என அழைக்கப்படுகின்றது. பறங்கியாறு புத்துக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் நீர் பாய்ந்தோடும் இயற்கை  கால்வாய்களை ஓடை என்று அழைப்பார்கள். மருத மரங்களின் சோலையினூடக அது பாய்ந்து ஓடுகின்றமையால் அவ்விடம் மருதோடை எனப்படுகிறது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. கண்டி என்பது குளத்தை குறிக்கும். உட்பகுதியை வெட்டி ஆழமாக்கி உருவாக்கப்பட்ட குளம் வெட்டுக்கண்டி என பெயர்பெற்றுக் கொண்டது. தற்போது இந்தக்குளம் நெளுக்குளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இது நெளுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது.

மணியார் குளம் வவுனியா (panoramio.com)

இதைவிட மரங்களை பகுதியாக கொண்ட குளங்களில் முடியும் பெயர்களை கொண்ட கிராமங்களும் காணப்படுகின்றன. கோழிய குளம் என்பது கோலிக்குளம் என்பதன் திரிபாகும் .கோலி என்பது இலந்தை மரத்தை குறிக்கும். நீர்நிலை நெடுகில் இந்த மரம் அதிகமாக காணப்பட்டபடியால் கோலியகுளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. சோபாலிகை என்பது பற்றைக்காட்டை குறிக்கும். பற்றைக்காடுகள் நிறைந்த புளியங்குளம் சோபாலிகை புளியங்குளம் என்றிருந்தது. நாளடைவில் சோபால புளியங்குளம் என மருவியது. வவுனியாவுக்கு வியாபாரநோக்கில் வந்த வணிகப்பெண் ஒருத்தி வாங்கியதால் புளியங்குளம் அவள் மரபான பட்டாணியை கொண்டு பட்டாணிச்சியூர் புலங்குளம் என்று பெயர் பெற்றது. புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகவும் அவை தரித்து நின்று செல்லும் இடமாகவும் இருந்த புளியங்குளம் புலிதரித்த புளியங்குளம் ஆனது. இப்பெயர் மருவி நாளடைவில் புலிதறித்த புளியங்குளம் ஆனது.
இராசேந்திரம் என்ற ஒரு உடையாரால் திருத்தி அமைக்கப்பட்டகுளம் இராசேந்திரகுளம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது . நாகர் இலுப்பைக்குளம் என்ற இடம் ஞாபகப்பெயர் என்று கருதப்படுகின்றது சிலோனுக்கு வந்த நாகா இனத்தவர்கள் நாகநாட்டை ஆக்கிரமித்து வன்னி இராச்சியங்களை நிறுவும்வகையில் ஈழத்தின் நாக நாட்டை ஆண்டுவந்த நாகர் இனத்தவர்களின் ஞாபகார்த்தமாக நிலைத்து நிற்கும் பெயர் நாகர் இலுப்பைக்குளம் ஆகும். இது கந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. வைரவர் கோவில் இருந்த புளியங்குளம் வைரவர்புளியங்குளம்  ஆனது.
தாயம் என்பது தந்தை வழி உறவை சுட்டிக்காட்டுகிறது. தந்தை வழியாக கடத்தப்பட்டு வந்த குலஉரிமையை உடைய குளம் தாயக்குளம் என்றும் அக்குளத்தைச்சுற்றி அதிகமாக எய்பன்றிகள் வாழ்ந்து வந்ததால் எய் பண்டி தாயங்குளம் எனவும் அவ்வூர் பெயர்பெற்றது.
குளக்கட்டுக்களை அலை தாக்காமல் இருப்பதற்கு உட்புற குளக்கட்டில் கற்களை அடுக்கி வைப்பர். இதன் பொருட்டு அந்த குளம் அலைக்கல்லு போட்டக்குளம் ஆனது. நாப்பண் என்பது நடு என்னும் பொருள் கொண்ட சொல்லாடல் ஆகும். சுற்றிவர பலகுளங்கள் இருக்கும் போது நடுவில் அணைக்கப்பட்டபடியால் நாப்பண் குளம் என பெயர்பெற்றது. நாளடைவில் இது நாம்பன் குளம் என மருவி காணப்படுகின்றது. குளமானது தாழி வடிவில் ஆழமான அமைப்பை கொண்டபடியால் தாழிக்குளம் என அழைக்கப்பட்டது பின்னர் தலிக்குளமாக மருவிப்போனது. யானைகளின் தந்தம் மிக விலைமதிப்பானது. யானைத்தந்தங்களை இறந்த யானைகளில் இருந்து எடுத்து ஊருக்கு கொண்டு செல்ல பயந்து ஒளித்துவைத்து சென்ற கிராமம் கொம்பு வைத்த குளம் என அழைக்கப்பட்டது.
சூரி என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும், எருமை மாடுகளில் ஆண் மாட்டை கடா என்பார்கள். பழக்கிய எருமை மாடுகளை கொண்டு சென்று, காட்டு குழுவின் மாடுகளை, நீர்நிலைகளுக்கு அருகே காலில் சுருக்கு போட்டு பிடிப்பது வழக்கமாகும். இப்படியான வழக்கம் உடைய ஊர் கடாச்சூரி என பெயர்பெற்றது நாளடைவில் கிடாசூரி ஆனது. பாளை என்பது நீர்நிலை அருகே மக்கள் தங்கி வாழும் இடங்களை குறிப்பது. அவ்விடங்களுக்கு அருகே மருக்காரை என்ற மரம் செறிந்து காணப்பட்டபடியால் அவ்விடம் மருக்காரம்பாளை ஆனது. மடு என்பது ஒரு நீர் நிலையை குறிக்கும். மாரி காலங்களில் நீர் பாய்ந்து ஓடுவதால் அதை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் கட்டப்பட்ட பின்பும் அந்த பூமி மடு என்றே அழைக்கப்படுகின்றது. சேமம் என்றால் புதை பொருட்களையும் அரண்களையும் குறிக்கும். இதனால் சேமம் கொண்டபிரதேசங்களில் இருக்கின்ற மடு சேமமடு எனப்படுகின்றது.
காட்டு பிரதேசங்களின் நகரமயமாக்கலின் போது பெரிய மரங்களை வெட்டி எடுத்து விடுவார்கள். அதன் பின்பு சிறிய மரங்களே எஞ்சி இருக்கும். இப்படி சிறிய மரங்களினால் எஞ்சிய காடு குருமன் காடு என பெயர் பெற்றது நாளடைவில் குருமண்காடு ஆகியது. கரம்பை மரங்களால் செழிக்கப்பட்ட இடத்தை உடைய காட்டு பிரதேசம் கரப்பன் காடு ஆனது. இவை வைரவர்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவை சார்ந்தவை.
பயிச்செய்கை நடைபெறும் இடங்களை தோட்டம் என  அழைத்தார்கள், நீர்ப்பாசன விவசாயம் செய்யப்படும் இடங்களை பூ என பூரிப்புடன் அழைப்பர். அதை தாண்டி அதற்கு அருகில் தோட்டம் செய்யப்படும் இடம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகிறது.  அதோடு வத்தை என்பதும் தோட்டத்தை குறிக்கும். அரச தேக்கம் தோட்டங்களில் குடியேறிய மக்கள் அவ்விடத்தை தேக்கத்தை என அழைத்தனர். மந்தை என்பது ஆடு மாடுகள் கூட்டமாக உள்ளதை குறிக்கும் பெயராகும். ஓ என்பது சென்று தங்குவதைக்குறிக்கும்.  மந்தைகள் சென்று தாங்குகின்ற இடமாக அமைவதால் ஓமந்தை என்ற ஊர் பெயர் பெறுகிறது.
இதில் பெயர்பெற்ற வவுனியா நிலையங்களையே சுட்டிக் காட்டியுள்ளேன். இதை விடவும் ஏனைய இடங்கள் அவற்றின் தனித்துவமான காரண ஊர் பெயர்களுடன் இன்றும் விளங்குவதை காணக்கூடியதாக அமைகின்றது. இப்படி செழுமையும் செழிப்பும் நிறைந்த ஊர்ப்பெயர்கள் குடியேற்றங்களால் அளிக்கப்படுவது மனவருத்தத்துக்குரியதொன்றாகும். மருவிப்போன பெயர்களைக்கூட ஆதாரப்படுத்தி விடலாம் ஆனால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கி அழிக்கப்பட்ட  தமிழ்க்கிராமங்களின் அடையாளங்கள் ஆதாரப்படுத்த முடியாதன. நவீனமயமாக்கலின் போது ஊர்ப்பெயர்களும் நவீனமாக்கப்படுகின்றமை வரலாறுகளை மறைப்பதாக அமைந்து விடுகின்றது. அழகிய தமிழ்ப் பெயர்களை உடைய எமது வரலாற்றுச் சிறப்பைக்கூறும் ஊர்களின் காரணப்பெயர்களின் செழுமைமிக்க காரணமறிந்து அவற்றை நிலைபெறச் செய்வது தமிழர்களின் தலையாய கடமையன்றோ

எது பாலம்? – கவிதை ரசித்தல் 02

இன்று மன அமைதி தேடி ஆலயங்களையும் ஆச்சிரமங்களையும் தியான யோகா வகுப்புக்களை நுகர்கின்ற மானிடர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.சரி, உரிய இடங்களை அடைந்து விடுப்பவர்களின் மனங்களில் மன அமைதி குடிகொண்டு அவர்களின் வாழ்வு மாறிவிடுகிறதா? அங்கு செல்பவர்களின் பலர் தம்மைப்போலும் இவ்வளவு மானிடரா என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர். இந்த அற்ப சந்தோசத்தில் மன அமைதி கிடைத்து விடப்பபோவதில்லை.எல்லாம் வல்ல பரம்பொருளை அடைந்தால் அவரின் அடிகளில் சரண் அடைந்தால் இந்த மன அமைதி கிடைத்து விடும் என்று காலகாலமாக கூறுகின்றார்கள்.அப்பிடி இருந்தும் ஏன் மிக சிலரை தவிர பெரும்பாண்மையானோர் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்கள்?
இதெற்கெல்லாம் ஒரே பதில் அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவில்லை என்பதேயாகும். மன அமைதி என்ற தீபத்தில் கலக்க வேண்டுமானால் அந்த ஒளி எங்கள் சரீரங்களிலும் வீசவேண்டுமானால் அறம் என்ற தயார்படுத்தல் தேவைப்படுகின்றது.எம்மை சுற்றி விழிபார் தூரத்துக்கு எல்லாரும் ஆழ்ந்து தியானத்தில் இருந்தாலும் அறம் செய்யா மனம் ஊசலாடும் தளர்வுறும். அடுத்தவன் தவத்தையும் சுரண்டும்.
shutterstock_307093163-e1468444410244
இன்றைய உலகின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்றபடி வறியவர்கள் வளர்ச்சியும் (எண்ணிக்கையில்) சலிக்காமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒப்பிட்ட அளவில் உலகின் சனத்தொகை பெருக்கத்தை உலக உணவு உற்பத்தியால் ஈடுசெய்ய முடியாமலே இருக்கின்றது. இதனால் வறியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு வறியவர்கள் வாழ்வாதாரம் இன்னும் பின் தயங்கியவாறே செல்கிறது. ஒரு பக்கமாக ஏழ்மையினால் இறப்புகள் அதிகரித்து செல்வதோடு மறுபக்கம் ஏழ்மையையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக குற்றங்களில் ஈடுபடுகின்ற தன்மை அதிகரித்து செல்கின்றது.
ob-kc527_imdg09_d_20100921074702
இந்த வறிய சமூக மக்களின் தேவைக்கும் சாதாரண அல்லது மேம்பட்ட (பொருளாதாரத்தில்) மக்களின் தேவைக்குமான உறவும் தேவைகளின் நிவர்த்தியும் அறத்தினில் தங்கியுள்ளது. பாரினில் உள்ள அறங்களிலேயே மேலான அறம் பசிப்பிணி போக்கல் என்கிறது வளையாபதி. பசிப்பிணி போக்கல் என்ற மேலான அறம் இரு தட்டு மக்களின் வாழ்வாதார தேவைகளான உணவு , மன அமைதி என்ற இரண்டையும் நிவர்த்தி செய்கிறது.

“அற்றம் இல் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னு மாறே “

கேட்டல் இனிது.

எங்கு அறிவுரை கேட்பது ? யாரிடம் அறிவுரை கேட்பது ? எம்மை சரியாக வழிநடத்த கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகள் இந்த தலைமுறையினரிடம் பரவலாக காணப்படுகிறது. மங்கிய ஒளியினை நம்பி அதன் வழி நடத்தலின் கீழ் சென்று தமக்கான சரியான பாதைகளை தவறவிடுகின்ற ஆட்கள்தான் இந்த தலைமுறையினர்களில் அதிகம். ஒருவேளை அப்படியான தவறான வழி நடத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கிறவர்களுக்கு வழிநடத்தல்களே இல்லாமல் போய் விடுகின்றன. வழிநடத்தல் இன்றிய பிரயாணங்கள் சீரானதாகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும் முடிந்த நிகழ்தகவுகள் மிகக் குறைவு. தண்டவாளம் அற்ற புகைவண்டி முடிவிடத்தை அடைவதில் சிரமமும் இயலாமையும் தானே அதிகம். இந்த எதிர்மறையான மங்கலான போக்குக்கு எம்மிடையேயான இலக்கிய அறிவின் மந்தகரமான நிலையும் முக்கிய காரணமாகும். எம் வரலாறுகளையும் எத்தனையோ யுக வாழ்க்கையை சீர்படுத்திய இலக்கியங்களால் , இத்தலைமுறையினரின் நடத்தை கோலங்களை சீர்மைப்படுத்துவது என்பது பெரிய காரியம் இல்லை. இருந்தும் இது நிகழாமைக்கான காரணம் இலக்கியங்கள் நோக்கிய எமது பார்வைப் பிறழ்வே ஆகும். …………………….எது பாலம் ? என்பது இலக்கியம் கூறும் நல்வழி ஒன்றினை பற்றியது.  கவிதை ரசித்தல் என்ற தொடரின் 2 வது பகுதியாக எழுதப்பட்டது.
 
https://brinthansite.wordpress.com/2017/02/16/எது-பாலம்-கவிதை-ரசித்தல/

தீராத பால்யம்.

மனிதன் ஒருவனின் ஆழப்பதிந்த நினைவுகள் என்று தோண்டி எடுக்கும் போது அந்த நினைவுகளில் பல அவனின் பால்யத்தை சுற்றியே இருக்கும் என்பது நிதர்சனம். பால்யம் தீராத கனவுகளின் பெட்டகம். எல்லாருக்கும் எல்லாமும் இந்த பருவத்தில் விதைக்கப்படுவதில்லை. விதைக்கப்பட்டவை எல்லாம் சரியானவையும் அல்ல. விதைக்கப்பட்டவைக்கும் விதிக்கப்பட்டவைக்கும் தீராக் கனவுகளின் பெட்டகத்திற்குமான போராட்டம் பால்யத்தை சுவைக்க வைக்கிறது. இந்த சுவையான சுளைகளுக்கு தேனும் நெய்யும் ஊற்றி சுற்றத்தாருக்கு கொடுக்கும் போது அதன் மதிப்பு பல படிகள் உயர்கின்றது. ஆனால் அந்த சுவையான அனுபவங்கள் எழுத்தாளனுக்கு உரியதுதானே. தீராக் கனவு பெட்டகம் அவனுக்குரியதுதானே. அவன் நினைவுகளை பகிர்வதில் அவன் அந்தரங்கம் வெளிப்பட்டு விடும் என்பதை மீறி அவன் தனிமையில் மீட்டவேண்டிய அனுபவங்கள் தொலைந்துவிடுமே என்ற அச்சம் மேல்தூக்கி கொள்கிறது. இதனால் யாரும் அவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் பெரும் தயக்கம் காட்டுவார்கள். நானும் அப்பிடித்தான் ……….. சீனிபாக் அனுபவம் இல்லை , இதில் நகர்ப்பவர்களில் யாரும் நான் இல்லை. இங்கு காட்சிகள் சட்டகத்துக்குள் மறைக்கப்படாமல் வெட்டவெளிக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் எங்கேனும் நீங்கள் உங்களைப்பார்த்தால் அதில் என் கற்பனைகளை மீறிய உண்மைகள் எங்கோ நடமாடியிருக்கின்றன அல்லது நடமாடுகின்றன அல்லது நடமாடலாம் என்ற வெளிப்படை மேலோங்கலாம் ….

சீனிபாக் சிறுகதையை வாசிக்க

https://brinthansite.wordpress.com/2017/01/26/சீனி-பாக்/

வடக்கு நாட்டார் இலக்கியங்கள்-அரிவி வெட்டு

ஒரு பேரூந்திலோ  அல்லது மோட்டார் சைக்கிளிலோ நகர்ப்புற வீதிகளில் செல்லும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் வித்தியாசமும் மாற்றமும் உணர்வீர்கள். விதவிதமான வான்முட்டும் கட்டடங்களும் தொழில்நுட்பமும் எம்மைச்சூழ விரிந்து கிடந்தாலும் நீண்ட முடிவில்லா வயல்களையும், பனந்தோப்புக்களையும், கொட்டில் வீடுகளையும் அதில் கொத்தி திரியும் கோழிகளையும் பார்க்கும்போது மனதின் ஓரத்தில் ஆனந்தமாய் இனம்தெரியாத ஒரு பூரிப்புவரும். கலை  இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இது கூடுதல் குதூகலம்  என்பதை மறுத்து கூறமுடியாது.
தொலைதூர புகைவண்டிப் பயணங்களில் எமது புகைப்படக் கருவிகள் அதிகம் படம் பிடிப்பது கிராமங்களையே. தேடித் தேடி சேர்த்துக்கொள்ளும் புகைப்படங்களில் கவனம் செலுத்திய நாங்கள் இதம் தந்த தென்றலையும், பரந்து விரிந்த வயல் தேசத்தில் கையில் மண்வெட்டியுடன் வியர்வையை  உரமிட்டு எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியின் வாழ்வியலையும் இன்னும் சமூகவலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அச்சமூக வலை தளங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களின் நாளாந்தத்தையும் கவனிக்க தவறிவிடுகிறோம். இவ்வாறு தவறி விடப்பட்டவையே எதிர்காலத்தில் எங்கள் அடையாளங்களை கேள்விக்குறியாக்கி விடப்போகின்றன.
நாட்டார் வழக்காற்றியல் என்பதை அறிமுகம் செய்து உள்நுழையவேண்டிய துர் அதிஷ்ட நிலை என் எழுத்துக்களுக்கு ஏற்பட்டுள்ளதை நினைத்து ஒருகணம் வருந்திக்கொள்கிறேன். நாட்டார் இலக்கியம் என்பதை வரையறுப்பதில் காலம் காலமாக வேற்றுமையான எண்ணப்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. வரலாற்றில் நாட்டார் இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள் அக்காலநிலைக்கும் தங்கள் சுவாத்தியத்திற்கும் இணங்க அதனை வரைவிலக்கணப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். இருந்தும் எல்லோரையும் பொதுமைப்படுத்தி அவர்களின் கருத்தாழங்கள் விடயப் பரப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அறிஞர் போக்ஸ்

புராதனமாகவோ அல்லது நாகரிகம் வாய்ந்ததாகவோ ஒரு சமூகப்பகுதி அல்லது உறவுக்குழுக்கள் அல்லது பழங்குடி மக்கள் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு நாட்டு மக்களின் வழக்காற்றுத்தொகுதியே நாட்டார் வழக்காற்றியல் என வரையறைசெய்கிறார்.

இந்த நாட்டார் வழக்காற்றியல் இரு பெரும் பிரிவாக பிரிகின்றது.

  1. நாட்டார் இலக்கியம்

2.நாட்டார் நம்பிக்கைகள்
இந்த தொடர் நாட்டார் இலக்கியம் என்ற பெரும் பிரிவையே முழு நோக்காக கொண்டு எழுதப்படுகிறது. வடக்கு தமிழ் மக்களின் வரலாற்று பாரம்பரியம் தொன்மையானது. நாட்டார் இலக்கியத்திற்குள்அவர்களின் வரலாற்று வாழ்க்கை முறையை ஆராய்வது மிக திருத்தமான செயலாகும்.
நாட்டார் இலக்கியம் பொதுவாக நாட்டுப்புற கதைகள் , நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணக் கதைகள், கூத்து என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை வாய்மொழி வழக்காறு உடையனவையாகவே காணப்படுகின்றன. நாட்டார் இலக்கியம் என்று வரும்போதே நாட்டாரியல் மேலோங்கி நிற்கிறது. ஆதிகால வடக்கு மக்களின் சூழலியல் சார்ந்த அம்சங்கள் வயலும் வயல்சார்ந்த இடங்களுமாக இருந்தமையால்  அம்மக்கள் கல்வித்துறையில் பெரும்பான்மை  நாட்டம் செலுத்த தடையாக இருந்தது. இதனால் எழுத்து மொழி இலக்கியங்களை விட வாய் மொழி இலக்கியங்களிலேயே அதிக ஈடுபாடு காட்டியிருந்தார்கள் அம்மக்கள். வடக்கு பகுதியின் நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவை பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் கூத்து, கதைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன.
வடக்கின் நாட்டார் இலக்கியங்களை இரசிக்க வாசகர்களை இன்றிலிருந்து மிகவேகமாக பின்னோக்கி ஒருமுறை அழைத்துச் செல்வோம்……
untitled-design-20
அதோ வயல்காணிகள் தெரிகின்றன, அளந்து மண் கோதி இடப்பட்ட வரம்புகள், எங்கு பார்த்தாலும் சலசலக்கும் வாய்க்கால்கள், வாய்க்கால்களில் நீந்தி விளையாடும் கச்சல், வரால், கெளிறு, மங்கன்,  மசரி,  உழுவைகள், கொஞ்ச தூரம் தள்ளி மதகு அருகே தூண்டிலோடு சில நடுத்தர வயதுகாரர்கள். வாய்க்கால் திரும்பும் இடம் ஓலையால் நேர்த்தியாக பின்னப்பட்டு களிமண் சுவர்கள் இடப்பட்டு வெளியே குந்துடன் சிறிய அளவான வீடு, வீட்டின் முன்னே ஓலைப்பின்னலினாலான கூடாரம் கோழிகளுக்கும் சாவல்களுக்கும், விவசாயத்திற்குச்செல்ல கணவன் தயாராகி விரிந்து செழித்த ஆலமரத்தின் கீழ் அடிஅகன்ற முடி கூரான பிள்ளையார் சிலை முன்

“முடியோடு தேங்காய் கையில் எடுத்தோம்
மூத்தோர் கணபதியை தோத்திரம் செய்தோம்.”  என தேங்காய் உடைப்பார்.

வீட்டோடு அருகே உள்ள வயலுக்கு சென்றவன் ஏர்பூட்டி உழ முன்…..

“பட்டி பெருகவேணும் தம்பிரானே
பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே……
மேழி பெருகவேணும் தம்பிரானே
மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே ………”

என மழை சிறப்பாக பெய்யவேண்டும் என வருண பகவானை வணங்கிக்கொள்வார்கள்.
என்னதான் மழையும் மனிதர்களும் ஒத்துழைத்தாலும் விவசாயியின் பெரும் நம்பிக்கை அவன் எருதிலேயே இருக்கும். எருதை சமாதானப்படுத்தி வேலை செய்யவைக்க

“சார்பார்த்த கள்ளனடா …..
தாய்வார்த்த கேளனடா …..
பாரக்கலப்பையடா செல்லனுக்கு ….
பாரமேத்தத் தோணுதடா……
வரம்போ தலகாணி செல்லனுக்கு ……
வாய்க்காலோ பஞ்சுமெத்த ……. ”

என்று பெற்ற பிள்ளையை போல தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவார்கள்.
 
இப்பிடி பிள்ளைபோல் வளர்த்த உழவு மாடுகள் இடைக்கிடை கட்டவிழ்த்து காடுகளுக்கிடையே மறைந்து விடுவதுண்டு. இப்பிடி தொலைந்த மாடுகளை தேடி காடு மேடுகளெல்லாம் அலையவேண்டி வரும். அலையும் நேரங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வார்கள். ஊர் எல்லையெங்கும் காவலிருக்கும் ஐயனாருக்கு நல்ல கேட்டித் தடி வெட்டி சாத்தி வைப்பார்கள். இதை வதனமார் சிந்தில் வரும் பாடல் வரிகளில்

“நாவியும் கீரியும் நுழையாத குருமனில
நாங்கள் நுழைந்தொரு குரும் பொல்லு வெட்டி
பொல்லு நல்ல பொல்லு, வெட்டிக் கட்டிய பொல்லு
மட்டடக்கும் பொல்லு இது ……”

என்றும்

” அட்ட திசை எல்லாம் கவரிவீச
ஆடர்ந்து சில மனிதர் வந்தடி பணிந்தேத்த
மட்டுலவு மச்சிலாய் வாளுமையானாரை
மலரடிகளென்று மனதிலயராமே …..”

என்னும்

“சல்லியொரு கொம்பு முழவதிர
வெள்ளையானை மேலேறிவரும்
ஆதி சடவைக்குளம் வாளுமையானரே …..”

என்றும் வரும் வரிகள் அவர்களின் உணர்வுகளை இனிமையான சந்தத்துடன் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான பாடல்கள் வடக்கில் இன்னும் வழக்கில் உள்ளன.
அரிவு வெட்டும் காலம் வந்தாலே கேளிக்கைகளுக்கும் நையாண்டிகளுக்கும் குறைவே இருக்காது, அந்த மக்களின் மனங்களைப்போலவே வேளாண்மையும் என்றும் செழித்தே இருக்கும். இந்தக் காலங்களில் பாடப்படும் பள்ளு பாடல்கள் ரசனை மிக்கவை.  அரிவு வெட்டும் கத்தியின் சிறப்புக்களை பாடும் போது

“மட்டு கருக்காலே அரிவாளை தீட்டி
மாவிலங்கம் பிடி தன்னில் இறுக்கி
வெட்டும் பிடியை சிரிக்கவே வெட்டி
வெள்ளித்தகட்டாலே விரல் கூட்டமிட்டு ….”

என பாடுகின்றனர்.
 
மட்டு என்பது மட்டக்கிளப்பின் சுருக்கம். அங்கிருந்து பெறப்பட்ட தாக்கத்தி, ஒன்றரை அல்லது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவானது. இந்த கத்தி வீசினால் இரண்டு அல்லது மூன்று வீச்சுக்கு கைநிறையும். தொடர்ந்து உப்பட்டி விழும். முதல் மூன்று கத்தி வீச்சு நான்கு உப்பட்டி விழல் என்ற தொழில் சந்தத்தில் அருவி வெட்டு பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.
1.மாட்டு கருக்காலே 2.அரிவாளைத் தீட்டி 3. மாவிலங்கம்படி என மூன்று வீச்சுகளோடு நான்காவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். இந்த ஒழுங்கு பாடல் தொடங்கி முடியும் மட்டும் மாறாமல் பேணப்படும்.

“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம்
குளக்கட்டு நீளம் புளியாமினலாம் ……
யாரடா எந்தன் குளக்கட்டு தனிலே ?….
நாங்கள்தான் அந்த சிந்து கவி பாடியோர் ….”

என்று தொடர்ந்து செல்லும்.
அரிவு வெட்டு முடிந்தது நெல்லெல்லாம் வீட்டு முற்றத்திலே காய விடுகிறார்கள். காயவிட்டால் குருவி விடுமா? குருவியின் தொல்லையை பாடுகிறார்கள்

“கோலமலை நீலமலை குந்துமலை கண்டல்
கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குறுந்தேர்
கன்னியங் குமரிமலை ஓதியமலையேகி
பொதியமலை நாயாறு தட்டாமலை குருவி முதலாய்
தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு
சோல்லரிய பூநேரி சூழுமலையாளம்
குருவிக்கிளை பறந்து வருதே …….”

இதெல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது நாம் இப்போது உலவிக்கொண்டிருக்கும் கிராமத்துள் என்று சொற்களால் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனம் பண்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு கற்பனை பார்வையிலே இவ்வளவு பண்படல் என்றால் நாட்டார் வழக்கியலும் நாட்டார் இலக்கியங்களும் அதனுள் உள்ள நாட்டார் பாடல்களும் எவ்வளவு பண்பட்டவை என்பது சொல்லிலடங்கா. இன்னும் நாட்டார் பாடல்களுடனும் நாட்டார் இலக்கியத்துடனும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
மீண்டும் இந்த இயந்திர நூற்றாண்டுக்குள் வந்துவிடுங்கள் இன்னும் எம்மை விட்டு உலக இலக்கியங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
Image Credits : Sajath Nijamudeen

இளமையின் முதுமை – கவிதை ரசித்தல் 01

இன்று ஒரு மனிதன் தன் சமூகம் சார்ந்த பார்வையை எவ்வாறு செலுத்துகிறான் என்ற கேள்விக்கு வினோதமான பதில்களை அறியக்கூடியவாறு உள்ளது. அவனின் ஒற்றை எண்ணம் தன்னை தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். அதற்கான அவனின் ஏற்பாடுகள் மிக சுவாரஸ்யமானவை. வருங்காலம் என்ற எதிர்பார்ப்பிற்கு நிகழ்காலத்தை வெறுப்புடன் எதிர் கொள்கிறான். முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதற்கு வாலிபத்தை தொலைகிறான். மனிதனின் நாளாந்தம் மகிழ்ச்சிக்கான கஸ்டம் , அன்பிற்க்கான வெறுப்பு என்ற எதிரோட்ட எண்ணங்களால் நிரம்புகிறது.
 
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ……..
 
இந்த சமூகத்தில் இருக்கின்ற இப்படியான எண்ண அலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதர்களுக்குள் நானும் ஒருவன். எனது என்ற பெரும் ஏக்கம் என் ஆழ்மனத்துக்குள் படிந்துபோய் இருக்கிறது. அப்பிடியென்றால் எனது சமூகம் என்பதுவும் படிமமாகித்தானே இருக்க வேண்டும்? ஆம் அப்பிடியே தான் , படிமம் உண்டாகி இருக்கிற விதம் தான் கேள்விகளை உருவாக்குகின்றது. எனது சமூகத்தில் நான் யார்? என்னை எவ்வாறு எனது சமூகம் கருத்திக்கொள்கிறது? என்ற சிறு வட்டத்திற்கான கேள்விகளே எனது சமூகம் என்ற படிமத்தில் ஊறிப்போய் உள்ளது. இந்த அற்பமான தேடல்களுக்காக தன் வாலிபத்தையும் அதனை சுற்றி உள்ள இன்பங்களையும் தொலைத்து விட்டு வடுக்களை மட்டும் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு முதுமைக்கு பயணம் செய்கிறான். அலைந்து திரிந்து அனுபவங்களையும் தருணங்களையும் சேர்க்கவேண்டியவன் அவற்றை எல்லாம் அர்ப்பணித்து விட்டு அனுபவங்களை மீட்ட வேண்டிய பருவத்திற்கு வெறும் நிறைவுறா ஆசைகளுடன் சென்று அடைகிறான். ஈயைப்போல பறந்து தெரியவேண்டிய பருவத்தை தின்றுவிட்டு எறும்பை போல சிறு நிலப்பரப்புக்குள் வாழவேண்டிய காலத்துக்குள் அடங்கிப்போகிறான்.
882_f37dcf4383acee4f1207d932998e450d
 
இதையே கவிஞர் மஸோக்கா ஷிக்கி
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக் கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.
– மஸோக்கா ஷிக்கி
ஜப்பான் 1867-1902
ஜென் கவிதை .

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகம்

இன்றைய காலகட்டம் இரண்டாயிரம் ஆண்டுகள் பரிணாம உலகின் விளைவாகும். உலக அரங்கில் நடந்தேறும் எல்லா நிகழ்வுகளுக்கு பின்னும் மிக வலிதான வரலாற்றுப் பின்னணி மேலோங்கி நிற்கிறது. வலியது பிழைத்தல் என்ற கொள்கையின் உச்சம் தான் இந்த இருபத்தோராவது நூற்றாண்டு என்பதில் எந்த ஐயமும் இல்லை. சாதாரண எறும்புகளின் சேமிப்பு தொடக்கம் ரோபோக்களின் உற்பத்தி வரை எல்லாமே தக்கன பிழைத்தல் தான். இன்றைய சமூகத்தில் ஒரு நிலையான இடத்தினைத்  தேடல் என்பது மிகச் சிரமமான விடயம். எத்தனையோ கலாசாரங்கள் தோன்றி அழிந்து நாமம் இல்லாமலே போன வரலாறுகள் இந்த உலகின் பக்கங்களின் கறைபடிந்த எழுத்துக்களாக பதியப்படுள்ளன. நான் முதலே கூறிய வலிதான வரலாற்று பின்னணி, கரைந்து போன கலாசாரங்களுக்கும் உண்டு. இருந்தும், அக்கலாச்சாரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்ன? இன்னும் எத்தனை கலாச்சாரங்கள் இவ்வாறு அழிந்து ஒழிந்து போய்விடும் ? இதை மீட்க அல்லது தடுக்க வழி இல்லையா ?
 
பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ உகந்ததென கண்டுபிடிக்கப்பட்ட ஒரே கிரகம் பூமி. அதில் ஏற்படும் அதீத மக்கள் வளர்ச்சியும் பொதுப்பண்பாட்டு நிலையும் தொன்மையான பண்பாட்டு கலாச்சாரங்களும் மிகுந்த சவாலாக காணப்படுகின்றன. ஒருசில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த  ஆராய்விற்கு அல்லது இப்படியான ஒரு விழிப்புணர்வு கட்டுரைக்கான தேவைப்பாடு காணப்படவில்லை. உலகின் வளர்ச்சித்தன்மை வெளிப்பட்டது என்பது உண்மைதான் ஆனால் பண்பாட்டு கலாச்சாரங்களை மழுங்கடிக்கும் அளவு அதி தீவிரமான முறையில் அது காணப்படவில்லை. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற வலை எப்போது உலகின் மூலை  முடுக்கெல்லாம் தனது ஆக்கிரமிப்பால் போர்த்தி தன் வசம் இழுத்துக்கொண்டதோ அன்றிலிருந்தே பொதுப்பண்பாட்டுக் கொள்கை விகாரமடையத் தொடங்கியது. அதுவரை தங்கள்  சுதேசிய கலாச்சாரங்களுக்குள் இருந்து பண்பட்ட சமூகம், ஒரு திறந்த கட்டுப்பாடு அற்ற பண்பாட்டு அலையில் சிக்கிக்கொள்கிறது. ஒரு குறிப்பிட்டகாலம் வரை படிப்பறிவு மட்டம் கூடிய கூட்டத்துக்குள் இருந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பாமரன் வரை கொண்டு செல்லப்பட்டது. இந்த பரவலாக்கம் சரி பிழை என்பதை மீறி பண்பாட்டின் மீதான அதன் தாக்கம் என்பது மறையான பாதிப்பாகவே காணப்படுகிறது.
இலங்கையின் ஆதிக்குடிகள் எனப்படும் இயக்கரும் நாகரும் வாழ்ந்த பழம்பெரும் நிலப்பரப்பு இலங்கை வடக்காகும். வடக்கின் மண்ணுக்கு உள்ள அதே வரலாற்று முக்கியத்துவம் வடக்கு மக்களுக்கும் உண்டு. இன்றைய உலக அரங்கில் இலங்கைத்தமிழர் என்ற அடையாளம் ஈழ யுத்தத்தால் ஏற்பட்டதே. கொஞ்சம் சில இருபது ஆண்டுகளில் இருந்து தொடங்கினால் வடக்கு தமிழனின் நிலைப்பாடு வேறு. எமது வரலாற்று பின்னணி,எமது இலக்கிய பதிவுகள் , எமது சாதனைகள் , என்பதைப்பற்றி நொடிகூட நினைக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் அவர்கள். அவர்கள் எண்ணம் எல்லாம் அவர்களுக்கான இருப்பிடம் தான். அவர்கள் தங்கள் அடையாளங்களை தேடிக்கொள்ள முற்படவில்லை அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதே பெரும் போராட்டமாக இருந்தது. உலகம் இலவச கணனி இணைய இணைப்பை வழங்கிக்கொண்டிருந்த காலம் பனம் காயில் உடல் தேய்த்து சீனியில்லாமல் வெறும் தண்ணீர் குடித்திருந்த வடுவான காலம் வடக்கு மக்களினது. இந்த போராட்ட காலம் அவர்களுக்கு உயிரை பாதுகாத்து கொள்வதில் போனதே ஒழிய வரலாற்றை கடத்துவதில் கவனம் செலுத்த தோன்றியதே இல்லை. இதில் வடக்கு மக்களுக்கு எந்த பழியும் சாராது. அவர்களில் நிலை அது. எந்த சமூகமும் இவ்வாறான ஒரு நிலையில் தங்கள் இருப்பை உறுதிசெய்யுமே தவிர வேறு நோக்கங்களில் ஈடுபடாது. இந்த இக்கட்டான நிலை, இதில் கடந்து சென்ற காலங்கள் உலக அரங்கிற்கும் வடக்கு தமிழருக்குமான ஒரு விரிசலை ஏற்படுத்தியது .
(c1.staticflickr.com)
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி வடக்குத் தமிழரின் வரலாற்று இருப்பை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இன்றைய தலைமுறையினருக்கு சரியான வரலாற்றுப் பண்பாடுகள் கடத்தப்படவில்லை. இந்த கடத்தப்படாத பண்பாட்டு விழுமியங்கள் போன தலைமுறையினரோடு முடிந்து போவது மிக வருத்தத்திற்குரிய செய்தியாகும். கடத்த இயலாமல் போன வடக்கு தமிழரின் பண்பாட்டு கலாசாரங்கள் முந்தைய தலைமுறையினரோடு தேக்கி வைக்கப்பட, இன்றைய சமூகத்தினர் இடையே ஒரு பண்பாட்டு வெறுமை தோன்றுகின்றது. இந்த பண்பாட்டு வெறுமை பரவலாக இருந்த காலத்தில்தான் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அவர்கள் கைகளில் வந்தது. இந்த தொழில்நுட்பம் பரப்பிய பொதுப்பண்பாடே இன்றைய  தலைமுறையினரால் எதிர்கொள்ளப்பட்ட  முதலாவது பண்பாட்டுக் கொள்கையாகும். பொதுப்பண்பாட்டில் உள்ள வெளி, அதில் உள்ள சுவாத்தியம் இன்றைய தலைமுறையினரின் எண்ணஓட்டத்திற்கு ஏதுவாக இருந்ததால் அதில் அவர்கள் தொற்றிக்கொண்டனர் . ஆகையால் இதற்கு இன்றைய தலைமுறையினரையும் குறை சொல்லமுடியாது.
இந்த யார் பொறுப்பு கூறுவது என்ற போராட்டம் இன்னும் கால இடைவெளியையும் விமர்சனங்களையும் பொதுப்பண்பாட்டின் மேலதிக ஊடுருவலையும் அதிகரிக்குமே தவிர வேகமான இந்த காலஓட்டத்தில் எந்த பயனுள்ள விடயத்தையும் முன்வைக்காது. மேலும் மேலும் உலக அரங்கில் வடக்கு தமிழரை பின்னோக்கி நகர்த்தும் சுயஇழிவுச்செயலே இதுவாகும். இதிலிருந்து விடுபட்டு எமது இருப்பை உறுதி செய்துகொள்ள போனதலைமுறையினர் வரலாற்று பண்பாட்டினை இந்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்துவதோடு இந்த தலைமுறையினர் பண்பாட்டு தேடலை அதிகரித்து ஆவணப்படுத்தவேண்டிய வழிமுறையே சரியானதாகும். இதில் ஒவ்வொரு வடக்கு வாழ் தமிழனும் தனக்கான பங்கினை சரிவர செய்வதன் மூலம் தொலைந்து போன பண்பாட்டு கலாசாரங்களை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
இந்த பண்பாடு கலாசாரம் என்பன எதன் மூலம் கடத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே ஏற்றுக்கொள்ளத்தக்க பதில் இலக்கியங்கள் தான். இற்றைக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி தமிழன் வாழ்ந்தான்என்னும் வரலாறு, வாய்வழி எமக்கு கிடைக்கப்பட்டது இல்லை. தமிழர் வரலாற்றை இன்று கூறுகிறோம் என்றால் அன்று இப்படி இருந்தோம் , எங்களிடம் இவ்வளவு தேசம் இருந்தது, எம்மிடம் உலகையாண்ட படைகளும், தேவரும், அரக்கரும், பாய்ந்தோடும் முப்படையும் இருந்தது என்று கூவிக்கொள்கிறோம் என்றால் அதற்கு காரணம் எம் இலக்கியங்களே. இன்றைய காலத்தில் தமிழுக்கென சிறப்பிடம் இருக்கின்றது என்றால் அதற்கு இந்திய இலக்கியங்களே மூலம். ஒரு மொழியின் செம்மை , அதன் தொன்மை எல்லாவற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஒரே விளக்கு இலக்கியங்கள் தான். இவ்வளவு சிறப்பு ஏன் இலக்கியங்களுக்கு என்று பார்க்கப்போனால் , அது இன்றைய நிதர்சன நிலைக்கு ஒரு முறை திரும்பிப் பார்க்கச்சொல்கிறது.
 
இன்றைய நாளில் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்? அதிகம் புனைவுகளையா? அதிகம் சுயசரிதத்தையா? பொதுவான விடை சுயசரிதமாகத்தான் இருக்கும். கூடப்போனால் புனைவு கலந்த சுயசரிதம். இதற்கு விதிவிலக்கானவர்களும் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையினரின் எழுத்துக்கள் எதைநோக்கி இருக்கின்றன என்ற கேள்வியே முன்னைய கேள்வியின் பதிலாகும். இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.
இக்கட்டுரைத் தொடர் வடக்கின் நாட்டார் இலக்கியங்களைப் பற்றியது. வடக்கு மக்களிடையே ஏற்பட்ட விரிசல்களில் தொலைந்து போனதையும் , விரிசல்களால் உண்டானதையும்பற்றியதே இக்கட்டுரை. எனவே எனது இக்கட்டுரை ஆராய்ச்சி கட்டுரை இல்லை. என் தேடல்களின் சாராம்சம் . நான், இங்கே முதலில் கூறிய இன்றைய தலைமுறை பயிர்தான். வடக்கின்  இலக்கியம் சம்பந்தமான தேடல்களுள் நான்  தேற்றியவற்றைத்தான் இனி வரும் கட்டுரைகளில் தொகுக்க உள்ளேன். இதை தொடராக எழுதலாம் என்ற கோரிக்கையில் முதல் பாகமாக “தொடங்க முன் ” என்று தொடங்கி இருக்கிறேன். இதன் விமர்சனங்களில் பயிர் வாடிவிடப்போவதில்லை. எல்லாமே எனக்கிட்ட உரங்கள்தான். மிகவிரைவில் இரண்டாவது தொகுப்புடன் சந்திக்கிறேன்
தொடரும்…

கல்வி – தாகம் – வாழ்வு

’தம்பி டேய் இன்னொன்டு கொண்டு வா..’ ,
அவன் மீதிருந்த பயத்தால் அதற்கும் பார் கடை சர்வர் தலையாட்ட வேண்டியதாய் போயிற்று. தெருவின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்தது லாகன் பார் கடை. ஆரம்பத்தில் விசேட மது சோலை என்றிருந்த கடை தான் கால ஓட்டத்தில் மூன்றாம் தலைமுறை உரிமையாளரால் லாகன் பார் என மாற்றப்பட்டது.
‘ இதோட எத்தினயாவது, இவன் ஓசில குடிக்கிறதுக்கு என்ன இது மெயின் ரோட்டு டியூப் வெல்லா? அவனுக்கு இனி கிடையாது. ஊத்தினதுக்கு காச வாங்கிட்டு ஆள வெளிய அனுப்பு.’ , இதற்கு பழைய பலசரக்கு கடை வேலையே மேல் என்று மனதிற்குள் நொந்து கொண்டே மேசைக்கு வெறுங்கையுடன் சென்றான்.
அந்த குடிகாரன் எந்த தெரு மதுக்கடையையும்  விட்டு வைத்ததில்லை. எல்லா கடையிலும் நிறைய கடன் , நிறைய சிகரட் கட்டைகள் , நிறைய பேச்சுக்கள், நிறைய மோதல்கள், கொஞ்ச அடிகள் அது தான் அந்த குடிகாரன் வைத்திருந்த சொத்து.
‘எங்கடா போத்தல்? தரமாட்டன் எண்டானா? சொல்லுடா சொல்லு, நான் யாரண்டு இவனுகளுக்கு தெரியாட்டியும் அவனு…………’ இது சர்வருக்கு சகஜமாக போன கதையாகி விட்டது.
‘ ஆமா இவன் பெரிய பட்ஸ்மான் ,பெரிய வ்லாஸ்பாக் இவன்ட கதய கேக்குறதுக்கு அடுத்த கஸ்டமர கவனிச்சா துட்டாவது தேத்தலாம்.’ என்று முணுமுணுத்தபடி பார்வையை அடுத்த மேசைக்கு திருப்பினான்.
கடையின் மேலே சிகரட் தூசு படிந்த மூலையில் ஆயிரத்து தொள்ளாயிரங்களில் வாங்கிய தொலைக்காட்சி பெட்டி அதே பழைய பாடல்களை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.
அடுத்த மேசைக்காரன், ‘ தம்பி ஒரு பக்கட் சிகரட்.’ என்றவுடன் அவன் திரும்பி ,’ இப்ப தாரன் அண்ணா. வேற ஏதும்?’
பார்வை வேண்டாம் என்றது.
அவன் மீண்டும் திரும்பி உளறிக்கொண்டிருந்த குடிகாரன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து பொத்தான்களை அமத்தினான்.
“Thats out , great bowling from Stoac , Kali goes for a duck , and deep silence at Eden garden….”
அமைதியாக அவனும் திரும்பினான்.
சட்ட்ட்………….
அவன் அமைதி குலைந்துக்கொண்டது. அவன் நின்ற இடமெல்லாம் சிவப்பு நிற திரவம் கண்ணாடி உடைசல்களில் தக தக என்று ஜொலித்தது. தன் கதையை அலட்சியபடுத்தியதால் அந்த குடிகாரன் தான் குடித்த கால் போத்தலால் சர்வரின் நடுத்தலை பிளந்தான்.
அவன் மீண்டும் திரும்பி உளறிக் கொண்டிருந்த குடிகாரன் மேசையில் இருந்த ரிமோட்டை எடுத்து பொத்தான்களை அமத்தினான்.
இவன் தன் பேச்சை கேட்பதாய் இல்லை , ‘ எவ்வளவு பெரிய மனுசன் நான் , நான் லூசன் மாரி அலம்பிட்டு இருக்கன் இவன் டீவிய புடுங்கிட்டு இருக்கான். இவன…’ என்று கொண்டு தான் குடித்து முடித்த கால் போத்தலை கைகளால் இறுக்கினான்.
“Thats out , great bowling from Stoac , kali goes for a duck , and deep silence at Eden garden….”
அமைதியாக அவனும் திரும்பினான்.
சட்ட்ட்………….
போத்தல் வாய் மட்டும் கைக்குள் பிடிபட்ட நிலையில் கொஞ்சம் தரையிலும் கொஞ்சம் சர்வர் தலைக்குள்ளும் சிதறிப்போய் இருந்தன. மதுவுடன் கலந்த ரத்தம் சிதறியதால் தரையும் , சர்வரும், குடிகாரனும் தள்ளாடி சிவந்த கண்ணாடி துகள் மேல் விழுந்தனர்.
சர்வரின் முகம் ரத்ததில் சிவந்திருந்தது. உயிர் கலியை போல பவிலியன் திரும்பிக் கொண்டிருந்தது எதுவும் சாதிக்காமல்.
சர்வர் இப்போது உளற ஆரம்பித்தான்,
“நான் யாரண்டு இவனுகளுக்கு தெரியாட்டியும் அவனுக்கு நல்லா தெரியும். நான் உன்ன இங்க வேலைக்கு விடேக்கயே சொன்னான் என்ர மோன் இங்க சம்பாதிக்கிற ஒவ்வொரு சல்லி காசும் என்ர குடிக்கு மட்டும் தான் என்டு. இப்ப உன்ர சம்பளத்த ஒளிச்சு வச்சுக்கொண்டு எனக்கு ஊத்த மாட்டன் என்றானோ.. அதானே அப்பா. என்ர சம்பளத்த இந்த முறை நான் எடுத்து எட்டாம் ஆண்டு திரும்பி படிக்க பள்ளி கூடத்துக்கு நன்கொடையா குடுத்துட்டன் அப்பா. இல்லாட்டி சேக்க மாட்டினமாம். வெறிக்குட்டிட பொடியன் என்டுறதால நம்புறாங்க இல்லப்பா. அது தான் அதிபர்டயே கொண்டு போய் குடுத்துட்டன். அப்பா தலை நோகுதப்பா. அம்மா கூப்பிடுற மாரி இருக்கப்பா. அப்பா அப்ப….”
மது , இரத்தம் , கண்ணீர் இவற்றால் கரைந்து போனது சர்வர்-கஸ்டமர் என்னும் புனித உறவு.
மது – இரத்தம் – கண்ணீர்
கல்வி – தாகம் – இறப்பு