இருட்டு இன்னும் ஆழப்படுத்தி கொண்டிருந்து. லைட்டர் வெளிச்சங்கள் மட்டும். ஐந்தாறு சூரியன்கள் இருப்பதுபோல். எம்மில் எத்தனை பெயர் என்று சரியாக தெரியவில்லை. என்னோடு காலையில் அண்ணளவாக அறுபது பேர் வேலை செய்வார்கள். யாரும் என் இனத்தவன் இல்லை. மங்கோலியர்களும், நீக்கிரோக்களும் , அடிமட்ட அமெரிக்கர்களும் தான். என் கசினோ பழக்கம் என்னை இந்த கேவலமான தொழிலுக்கு வழிகோரிவிட்டிருந்தது . இன்றோடு மூன்று மாதங்கள் இந்த நரகத்துக்குள் வந்து. சுரங்க தொழிலில் உள்ள அபாயம் தெரிந்திருந்தும் , என் பெயரெல்லாம் இந்த சூழ்நிலைக்கு தேவை இல்லாத விடயம். எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவன் படிக்கிறான் , இன்னொருவன் மடிக்குழந்தை. என் மனைவி அவ்வளவாக படிக்கவில்லை. நான் வேலைசெய்த பழைய டாக்ஸி நிறுவனத்தில் என் செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆஹா என்றில்லாமல் ஓரளவுக்கு நிதானமான வாழ்க்கை. செலவு போக எதுவும் சேமிப்புக்கு மிஞ்சியதில்லை. கஸ்டமர்களை இறக்கி விடுவதோடு சரி ,வங்கி பக்கம் அவசரத்துக்கு கூட போனதில்லை. எனது பெயர் அடா மாக்ஸ் என்று எந்த வங்கி ஊழியரிற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆ….. ஒருமுறை இதே கதையை ஒரு கஸ்டமருக்கு சொல்லி இருக்கிறேன். அவருக்கு தெரிந்திருக்கலாம்.
நான் சபிக்கப்பட்டவன். அன்று ஒரு கோர்ட் சூட் போட்ட பணக்காரனால் தான் இந்த நிலைமை இன்று. தேவன் கூறும் அசுத்த ஆத்மா அவனாகத்தான் இருக்க முடியும். பார்க்க எடுப்பான தோற்றம் , முரடன் போல தெரியவில்லை. தலையில் முடி இருந்ததற்க்கான எந்த அடையாளமும் இல்லை. பனி தலையில் விழுந்து வழுக்கி விளையாடும் அளவு மிருதுவானதாக தோற்றம் அளித்தது. இறுக்கமான வெள்ளை கருப்பு கலந்த கோர்ட் சூட் போட்டு இருந்தார். பழுப்பு வெள்ளி நிற ட்ரை. கையில் கனமான ஒரு பை. விலைமதிப்பு கூடிய பை என ஒரு பார்வையிலேயே தெரிந்து கொண்டேன். எப்பிடி இவளவு அழுத்தமாக நினைவு இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? குறை காலனை எப்பிடி மறக்க முடியும். அவனிடமும் என் இதே கதையை எங்கும் விலகாமல் உளறினேன். கடைசியாக உங்களுக்கு முன்னர் என் கதையை கூறியது இவனிடம் தான். எல்லாவற்றையும் அமைதியாக செவிமடுத்துக்கொண்டே வந்தான். இடைக்கிடை ” excuse me ” என்றுவிட்டு தொலைபேசியில் உரையாடுவான். இடையிடையே நான்கு அழைப்புகள் வந்திருக்கும் , எல்லாமே பண விஷயம் தான். ஆயிரம் டாலர் கணக்கில் இல்லை , மில்லியனில். பேசி முடிந்தவுடன் ” go a head ” என்பான். நானும் இறங்கும் போது ஏதும் கொஞ்சம் கூட்டி தருவான் என்ற எதிர்பார்ப்புடன் கதையை சோகமாக அவிழ்த்து விட்டேன். மேல் பக்க கண்ணாடியில் பார்வையை நகர்த்தி அவனைப்பார்த்தால் எந்த சலனமும் இல்லாமை வீதியை வெறிச்சோடியபடி பார்த்துக்கொண்டே வந்தான். கதை நடுவே ”sir ” என்பதை அழுத்தி அவனது பார்வையை திசை திருப்ப முயற்சி செய்வேன். அவன் லேசாக தலையை ஆட்டுவான், அதிலிருந்து என்னை அவன் பின் தொடர்கிறான் என்று ஊகித்துக்கொள்வேன்.
இரவு பத்தை தாண்டியிருக்கும், வாகன நெரிசலில் எந்த மாற்றமும் இல்லை. ஆமை போல ஊர்ந்தது. முக்கால் மணிநேர பயணம் அது, ஹூஸ்டன் நகரின் மிக ஆடம்பரமான பப் தான் ரிக்கோ, அவர் தன்னை அங்கே இறக்கி விட சொன்னதில் எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஸ்டேட்ஸ்இன் பெரும்புள்ளிகள் மட்டுமே அங்கு செல்வார்கள். முக்கால் மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் என் மூளையையும் வாயையும் குடைந்து கொண்டே இருந்தது, ஏன் இப்படிப்பட்டவர் டாக்ஸியில் வர வேண்டும் ? இருந்தும் ஒரு போதும் அவரிடம் இதை பற்றி விசாரிக்கவே இல்லை. என் கண்களில் அவர் தரப்போகும் எக்ஸ்ட்ரா டொலர் தான் மின்னிக்கொண்டிருந்தது. அதில் என் மகனுக்கு ஏதாவது புதிதாய் ஒரு விளையாட்டுப்பொருள் போகும் போது வாங்கிக்கொண்டு போய் அசத்திவிடவேண்டும். ஆ… அவன் நான் ஓடுவதைப்போல் டாக்ஸி கேட்ட ஞாபகம்…..
எங்கோ சில பத்து மீட்டர்களுக்கு அப்பால் மின்சார தடை போல இருந்தது , ஹோஸ்டனில் இது அசாதாரணமான ஒன்று. இல்லை…. ஒரு லைட்டர் எரிந்து முடிந்து போனது. அந்த இடம் அண்டத்தின் சூனியம் போல இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் எது என ஊகிக்க முடியவில்லை , லைட்டர்களை பிடித்திருப்போரின் முகங்கள் மட்டும் வியர்த்து கொட்டி இருந்தது.எனக்கும் சாதுவாக…., எத்தனை லைட்டர்கள் எவ்வளவு நேரம் என்ற கணக்கு தெரிந்திருக்கவில்லை. விறைத்து பொய் இருந்தவர்கள் முனகத்தொடங்கி இருந்தார்கள், அதுவரை அவர்கள் ஆங்கிலம் கதைத்துத்தான் கேட்டு இருக்கிறேன், இப்போது யாரும் பேசுவதாய் இல்லை. அவரவர் தாய் மொழிகளில் அலற ஆரம்பித்தார்கள். ஒரு பக்கம் பெயர்தெரியாத கடவுள்களின் பெயர்களெல்லாம் ஜெபிக்க தொடங்கியிருந்தார்கள்.இந்த சுரங்கத்தின் ஆழக்கணக்கெல்லாம் தெரியாது, நல்ல ஆழம், இல்லை கேட்ட ஆழம்…. ஒவ்வொரு நாளும் ஆழத்தின் அளவு பன்மடங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சதுரமான இரும்பு கன்டைனரில் நாலு பக்கமும் அடைத்து இருக்க ஆழத்துக்குள் என்னையும் மற்றவர்களையும் இறங்குவார்கள், எங்கள் பணி ஆழத்தில் உள்ள ராக் பிரேக்கர் உடைத்து தரும் பாறைகளை, நாம் இருக்கும் பெரிய கன்டைனரில் உள்ள கிரசரால் நொறுக்கி வரும் தூள்களையும் துகள்களையும் அங்கேயே நிரந்தரமாகி இருக்கின்ற இன்னொரு அசையக்கூடிய கன்டைனருக்கு உருள் வண்டியில் கொண்டுசெல்வது . எப்படியும் ஒரு நூறு தரவை நாளைக்கு கொண்டு செல்வோம். ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர வேலை, ஏற்ற சம்பளம், இருக்கும் கடனை அடைக்க , வறுமையில் வாடும் குடும்பத்தை மீட்க ஜேசு காட்டிய ஒரே வழி இதுதான்.
ரிக்கோ ஹோட்டலை அண்மித்தது வண்டி, தனது பையில் இருந்து ஒரு ஹல்ப் கோர்ட்டை எடுத்துக்கொண்டார். அவர் அணிந்திருந்த நீள கோர்ட்டையும் டையையும் கழட்டி மடித்து வைத்துவிட்டு ஹல்ப் கோர்ட்டையும் பௌவையும் மாட்டிக்கொண்டார் , முன் கண்ணாடியையே பார்த்துகொண்டுவந்த எனக்கு ஏமாற்றம் பித்தாக்கியது , அசல் ஹோட்டல் சர்வர் போலவே காட்சி தந்தார். இவளவு நேரம் அலம்பியது வீணா ? யார் எவர் எண்டு விசாரித்து அல்லவே கதையை தொடக்கி இருக்க வேண்டும் என்று மனம் அதட்டி கொண்டது, என் மகனுக்கான டாக்ஸி கனவு உறைந்து போனது. முன் பார்வைக் கண்ணாடியில் படிந்த மென் பனியை வைப்பர் அகற்றுவது போல் கனவையும் மனம் அகற்றிக்கொண்டது.ரிகாவின் அகன்ற வாயிலின் வழியே டாக்ஸி உல் நோக்கி சென்றது .அவர் நிதானமாக இறங்கிக்கொண்டார். அவரது கைப்பை இன்னும் கனத்திருந்ததை பார்த்து தலையை ஸ்டேரிங்க்களுள் புதைத்துக்கொண்டேன் . தனது பர்சினை புரட்டி கட்டணம் செலுத்தினார், எப்படியும் கூட தேறாது என்று நம்பிக்கையிலும் சலிப்பிலும் காசை எடுத்து எண்ண தொடங்கினேன். ஒரு பெனி கூட அதிகம் இல்லை. எதிர் பார்த்தது தான். நிறைய நேரம் ஆகியிருக்காது, ஆனால் அவர் உடனே மறைந்துவிட்டார். யாரோ கண்ணாடியில் தட்டுவது போல் இருந்தது, திரும்பினேன். பாதுகாப்பாளர் ஒருவர் முன்னோக்கியோ பின்னோக்கியோ டாக்ஸியை எடுக்கும் படி கூறிக்கொண்டிருப்பது, உதட்டசைவில் தெரிந்தது. கண்ணாடியை இறக்கி எடுப்பதாக கூறிவிட்டு பின்னோக்கி டாக்ஸியை செலுத்தினேன். மீண்டும் யாரோ பின் கண்ணாடியில் தட்டுவது போல இருந்தது, நான் கோவப்பட்டு விரைவாக எடுத்துவிடுவதாக அலறினேன்.

”excuse me ”
அதே குரல் , அதே ஹல்ப் கோர்ட் , அதே போவ் , வெறிச்சோடிய பார்வை மட்டும் தொலைந்து போயிருந்தது. எதையாவது மறந்து விட்டாரா என பின் பக்கம் நோட்டம் இட்டேன் , இல்லை எதுவும் இல்லை.பிறகு ஏன் என்ற கேள்வி துளைத்தது. டாக்ஸியை ஓரப்படுத்தினேன். அவர் கண்களில் ஒரு தேவ அருள் தெரிந்தது, வேறொரு மொழியில் கதைக்க தொடங்கினார். எனக்கு விளங்கியிருக்காது என அவருக்கு அப்பட்டமாக என் முகபாவனை உணர்த்தி இருக்கும். இருந்தும் நான் ஈர்க்கப்பட்டேன் , டாக்ஸியினை லாக் செய்துவிட்டு ரிகோக்குள் நடக்க தொடங்கினோம்.
வெளிக்கட்டடம் தான் பழமையானது போல தோற்றம் அழைத்தது, உள்ளே எலிசபெத் அரண்மனை போல இருந்தது. அடுக்கி அடுக்கி தேனிக்கூடு போல உள்தோற்றம். பிரமிப்பில் ஆழ்ந்து இருந்தேன்.கொஞ்ச தூரம் நடந்துபோயிருப்போம், உள்ளக விளையாட்டு அரங்கம் அது. பத்து மேஜைகள் இருந்திருக்கும், எல்லாமே நீல நிற வழவழப்பான மார்பிளால் ஆனவை. மேஜைக்கு இருபதுபேர் என்ற கணக்கில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்திருக்க வேண்டும்.
”mike author ” என்றார். திரும்பி பார்த்தேன், புன்னகையுடன் இது இந்த கிளப்புக்கு மட்டுமே தனித்துவமான கசினோ விளையாட்டின் வகை என அறிமுகம் தந்தார். என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் கணமே மூலை மேஜையில் இருந்தவர் , ” completed , take that money bag ” என்றுகொண்டு அகன்ற பெரிய பையொன்றை தூக்கிக்கொண்டார். வியப்பில் ஆழ்ந்தேன். அவர் வரும் போது ஒரே ஒரு காரினை கொண்டுவந்ததாகவும் , விளையாடிய பின்னர் ஐம்பது காருக்குரிய பணத்தினை எடுத்து செல்வதாகவும் கூறினார். பிரமாண்ட வியப்பில் ஆழ்ந்தேன். என் மகன் கேட்ட டாக்ஸியின் ஞாபகம் வந்து மனக்கண்ணில் நின்றது. அவர் சந்தோசத்துடன் அடுத்த மேஜைக்கு பணக்கட்டை எடுத்து வைத்திருந்தார், சிகார் புகையில் அவர் தேவ ஆசி பெற்றிப்பதுபோல தோன்றியது.
எனது டாக்ஸியின் திறப்பை மேஜையொன்றில் வைத்தேன், ஆட்டம் ஆரம்பமானது. என் ஆட்சி மேலோங்க ஆரம்பித்தது அருகேயே இருந்து என்னை வழிகாட்டிக்கொண்டிருந்தார் அவர், அவரை எல்லாரும் கிறிஸ்டென் என அழைத்தது ஞாபகம் இருக்கிறது, இருந்தும் நான் அவரை சார் என்றே அழைத்தேன். அவர் பங்கை பையில் வைக்க என் பங்கை அடுத்த மேஜைக்கு வைத்தேன். ஆட்சி அதிகரித்துக்கொண்டே இருந்தது , ஐந்து கார் …… இருபது கார்…….ஐம்பது கார்…… எண்பது கார்……… என காசுக்கணக்கை கார்கணக்கில் வைத்திருந்தேன். கட்டின் எண்ணிக்கை கூட கூட போதை உச்சியின் விளிம்பை அடைந்தது, விளையாட்டு போதை. ” finally won ”, அதே குரல் மூலையில் கேட்ட குரல். திரும்பி பார்த்தேன் காணவில்லை, எதிரே – விறைத்துப்போனேன். என் பையில் மூன்று டொலர் மட்டும் அனாதையாய் கிடந்தது. எல்லாவற்றையும் போதையில் அவனிடம் தோற்றுவிட்டேன். இதே மேஜையில் அடுத்த சுற்றுக்கு வரும்படி சவால் விட்டுக்கொண்டே திரும்பி சாரை பார்த்தேன். காணவில்லை என ஊர்யிதமானது. மனம் நொந்து கொள்ளவில்லை. ஜீன்ஸ் பையெல்லாம் விட்டு துழாவி பார்த்தேன் , எதுவுமே தேறுவதாக இல்லை. தலையை கவிழ்ந்தபடி வெளியே வந்தேன் சிகாரை புகைத்தபடி. டாக்ஸி அருகில் சென்று பையை துலாவினேன் , என்ன இருக்கும் …. எதுவுமே இல்லை , எல்லாவற்றையும் முதலீட்டு தானே ஆரம்பித்தோம். கன்னி வழியே கண்ணீர் பீறிட்டது. ஓடிப்போனேன் கிளப் வாசலை நோக்கி. உள்ளே தகுந்த அடையாளம் இல்லாமல் விடமாட்டார்கள் என்று நிச்சயித்து கொண்டார்கள். அந்த ஹல்ப் கோர்ட் ,போவ் அதுதான் அடையாளமா ?
ஒரே ஒரு வெளிச்சம் மட்டும் தான் இருந்தது , நட்சத்திரம் போல. அதுவும் குற்றுயிரில் ஊசலாடியது.
”Terrorist tunnel detected by the IDF, meant for attacking States, reaching from southern ……… was attacted by US army last night. No one escaped from that.”
Monthly Archives: February 2017
வடக்கின் மறக்கப்பட்ட நட்டார் இலக்கியங்கள் 03 -மணல் வாசம்
மணல், காற்றில் கலந்து வீசும் கரையோரங்களை தாண்டி தெரியும் அந்த குறுங்குடில்தான் அந்த மீனவனின் இல்லம். செங்கற்களால் அடுக்கியும் மண்ணால் அப்பியும் சீரின்மையை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது அந்த குடில். மீனவனும் அவன் மனைவியும் மட்டும்தான். ஊரார் கூடி கிராம நடுவில் உள்ள அந்தோனியார் கோயிலில் அவர்களுக்கு ஒரு மாதம் முன்தான் திருமணம் நிறைவேறியது. மன்னார் மாவட்ட கிராமங்களில் எல்லாம் காற்றில் கிருமிகளே இருக்காது. உப்பின் உவர்ப்பு கிருமிகளை இல்லாதொழித்து விடுகின்றது. அங்கு பரவியிருந்த தேவ ஒளி எல்லார் மனைகளிலும் அன்பும் சந்தோஷமும் பெருக ஆசி செய்துகொண்டிருந்தது. அந்த வீடும் அப்படித்தான். தேவ ஒளியில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
காலை புலர்ந்து விட்டிருந்தது. புலம்பெயர்ந்து வருகின்ற பெயர்தெரியாத வெளிநாட்டு பறவைகளின் விசித்திரமான கானம் அவன் காதுகளில் தேவகானத்தை மீட்டிக்கொண்டிருந்தது.
என்னடி புள்ளே விடிஞ்சல்லே போச்சுது
செல்ல வேணுமல்லே மீன் பிடிக்க
இன்னமும் நித்திரை கொள்ளலாமோ நீயும்
எழுந்திரு புள்ளே பொழுது புலந்திருச்சு
என்று உப்புக்காற்றை சுவாசித்து சுவாசித்து வரண்டு போன குரலால், முன்னைய நாள் காலை குடில் எல்லாம் சுற்றிக் காயப்போட்ட கருவாட்டுத் துண்டுகளை எடுத்துப் பக்குவமாய் குடிலுக்குள் வைப்பதில் காலம் தாழ்த்தி உறங்கிய மனைவியின் கால்களை உலுப்பி உறக்கத்தில் இருந்து விடுபட வழி செய்கிறான். ஏதோ பழகிப்போன பறவையின் கானம் போலே இருக்கிறதே என்ற யோசனையுடன் கண்களை கசக்கி எழுந்திருக்கிறாள் அவள், மீனவன் மனைவி. எழுந்தவள் தன்னை எழுப்பிய அந்த கானத்திற்குரிய பழகிய பறவை அவள் கணவன் என்று தெரிந்தவுடன் தன்னை சுதாரித்துக்கொண்டு
எழுந்திட்டேன் அத்தானே கொஞ்சம் பொறு
கோப்பித்தண்ணி வச்சுதருவன் ஐயா
தொழுவுங்கோ நம்மை படைத்தவனை
தினம் வாழ வழிவகை தந்தத்துக்கு
இன்றைய நாளில் நடந்ததொன்றும் அவளுக்கு புதுமை இல்லை. திருமணம் ஆகி ஒரே ஒரு மாதம் தான் ஆகின்றது . இருந்தும் கணவனிடம் எப்படி பழகிக்கொள்வது என்று மிக லாவகமாக அறிந்திருந்தாள் அவள். கணவரின் கோபத்துக்கு ஆளாகாமல் அவரை வேறு சில விடயங்களில் திசைதிருப்புவதன் மூலம் தன் காரியங்களை முடித்துக்கொள்ளலாம் என்று அவள் நன்றாகவே தெரிந்திருந்தாள். அதற்காக அவள் சொல்லும் காரணம் கூட உவப்பளிக்கிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கையையும் இவ்வாழ்வு அவனால் அருளப்பட்டதே என்ற உண்மையையும் அவள் சரியாக புரிந்து வைத்துக்கொண்டிருக்கின்றாள். அவனை தொழுவது இன்றியமையாதது என்று அவனிடம் கூறி, தான் தேநீர் சமைத்து தருவதாகவும் கூறுகின்றாள் . மன்னாரில் அக்காலத்தில் கோப்பித்தண்ணி பழக்கம் நிலவியமை இதில் அடிக்கோடு இடப்படவேண்டியதாகும் .
கட்டு மரம் கொண்டு கடலோரம் போகணும்
கெதியாக் கொண்டுவா பிள்ளை நீயும்
கட்டுவலை பாய்ச்சக் கனியமு மாச்சுது
மீனெழுந்து வரும் நேரமு மாச்சு
தன்னை மெத்தப்படுத்த அவள் செய்யும் மாயவேலை தான் இது எல்லாம் என புரிந்து வைத்திருந்த கணவன் , எதையும் வெளிப்படுத்தாமல் வார்த்தைகளை மெதுவாக இறுக்கி கொள்கிறான். நேரடியாக அவளை பேசிக்கொள்ளாமல் , பொய் காரணமும் சொல்லாமல் தன் நிலையை வெளிப்படுத்துகிறான். இரவெல்லாம் ஆழ் கடலில் தூங்கிக்கொண்டிருக்கின்ற மீன்களெல்லாம் சூரிய ஒளிக்காய் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது சீக்கிரப்படுத்திக்கொள் என்று நடுமொழி உரைக்கிறான்.
கோப்பித்தண்ணி ஊற்றி வச்சிருக்கே னத்தான்
எடுத்து குடியுங்கோ தாக்கம் தீர
கோபப்படாமலே போகும் போது ஒரு
முத்தமொன்று தாங்கோ ஆசை தீர
உடனே விழித்துக்கொண்ட மனைவி, கணவனின் நியாயமான கோபத்துக்கு ஆளாகிக் கொள்ளாமல் இருக்க கோப்பித்தண்ணி ஊற்றி முடிந்தது என்றும் உங்கள் கோபம் தீர குடித்துக் கொள்ளுங்கள் என்றும் சாடையாக கூறுகின்றாள். அவள் கூறும் தாகம் தீர என்பது அவனின் கோபத்தை தீர்க்கவாகவே இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அவன் கோபம் தீர்ந்ததா இல்லையா என்று அறிந்து கொள்ளவும் அவள் பெண்மையை ஆற்றிக்கொள்ளவும் முத்தம் கேட்கும் விதம் அலாதியானது. சந்தம் கூட கேட்பது போல ஆசை தீர முத்தம் கோபப்படாமல் தாருங்கள் என்று கவிதை மொழியை மேலும் மேலும் அடுக்குகிறாள்.
முத்தமொன்று தந்தேன் பத்தரை மாற்றுப்
பசும் பொன்னேத்திரு திர வியமே
முத்துப்போல பிள்ளைகள் பெற்றிடுவோம்
தினம் மீன் பிடிக்க கற்று கொடுத்திடுவோம்.
முத்தம் கேட்டவுடன் உருகிப்போன அவன் மனதோடு கோபமும் பறந்தே போகிறது. அவளை அவன் விழிக்கும் விதம் கடலோர சமூகத்தில் மக்களின் மனநிலையையும் கணவன் மனைவி என்ற உறவின் மீது அவர்கொண்டுள்ள புனிதத்துவத்தையும் உயர்த்திக்கொள்கிறது. தன் மனைவியை பசும் பொன்னாக உருவகப்படுத்திடும் அழகு அவன் பாசத்தின் உச்சம். அதையும் மீறி முத்துப் போல பிள்ளைகள் என்று கூறும் இடத்தில் கடலோர வாடையுடன் கவித்துவம் மேலோங்குகிறது. கடலோரமக்களின் அரும்பெரும் பொக்கிஷம் அவர்களிடம் கிடைக்கும் ஆழ் கடல் முத்தேயாகும். தங்கள் பிள்ளையும் அந்த ஆழ்கடல் முத்தே என விழித்தல், ஒரு தந்தை கண்டுடெடுக்கக் கூடிய முத்து அவர் பிள்ளைதான் என்ற கூரிய உண்மையை வெளிப்படுத்திடுகிறது. கூடவே பிள்ளையையும் தன் வழியே மீன் பிடித்தலுக்குள் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஓர் ஆணின் நியாயமான ஆசையும் காட்டப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க கற்றுக் கொடுத்திங்களா மென்றால்
அறிவு மலருமோ சொல்லுங்க ளத்தான்
ஈனப் பிறவிகள் நம்மளைப் போ லல்ல
கல்விமானா யாமும் வளர்ந்திடுவோம்
இந்த வரிகள் கவனிக்க வேண்டிய சமூக பிரச்சனைகள் சிலவற்றை படம் போட்டு காட்டுகிறது. கூடவே அந்நாளின் சமூக சிந்தனைகளையும் கூறுகின்றது. கணவன் மகனை மீனவனாக்க வேண்டும் என்று ஆசையை மனதுள் வளர்த்து கொள்கிறான், முத்தம் கொடுத்த உவகையுடன் அதை வெளிப்படுத்தியும் விடுகிறான். இதில் அவன் நோக்கம் இருவிதமான கண்ணோட்டத்துடன் ஆராயப்படவேண்டியதாகும். அக்கால சமூக கட்டமைப்பு மீனவனை மீனவனாகவே அழுத்திக்கொண்டு செல்லும் போக்குடையது. அப்போக்கினை ஏற்றுக்கொண்டவனாகவும் அதே வழி பயணிப்பவனாகவும் காணப்படுகிறான் கணவன். இன்னொரு பார்வையில் அவனை தன் மரபினை, வழித்தோன்றல்களை நினைவில் விழுத்தி அவனை ஒரு மீனவனாக்கும் நோக்கம் கொண்டவனாகவும் சித்தரிக்கலாம்.
ஆனால் மனைவியின் பார்வை எழுச்சியுடையது. அக்கால பெண்களின் மனநிலையும் கருத்து நிலைகளும் பிரமிக்கத்தக்கனவாக இருந்திருக்கின்றது. ஒரு ஆணாக கணவனானவன் தனது சமூக கட்டுப்பாட்டை மீறத் துணிவற்றவனாய் இருக்கும் போது ஒரு பெண்ணாக அவள் சிந்தனை மறுமலர்ச்சி காண்கிறது. இன்றைய மீனவ சமூகத்தில் இருந்து நாம் அண்ணார்ந்து பார்க்கும் நிலையில் எத்தனையோ சாதனையாளர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்த மனைவி போல் எத்தனையோ பெண்களினது தூரநோக்கானதும் துணிவானதுமான சிந்தனையே முதன்மைக் காரணம் எனலாம். தன் மகன் மீனவனாக வருவதனால் அவன் அறிவில் மேம்பாடு வருமோ வராதோ என கவலையுறுகிறாள் மனைவி. சீரிய கல்வியை தனது பிள்ளைக்கு வழங்குவதால் தன்னைப்போன்று, வெயில், மழை, கடும் காற்று என சீரில்லா காலநிலைகளின்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து நிச்சயமில்லாத கடற்றொழிலில் ஈடுபட்டு, இன்னுயிரைப் பணயம் வைத்து, வலையில் சிக்குவதில் இருந்து கையில் சிக்குவதை கண்ணும் காரியமுமாய் பார்த்து சேமிக்க திண்டாடி அலைகளைப்போலே அலைவுறும் கிளிஞ்சல் வாழ்க்கை வேண்டாம், கல்வி கற்றவர்களாக இஸ்திரமான நிலையில் நாமும் வாழவேண்டும் என்று மனதின் வலிகளை கூறும் மொழிகள் நெகிழ்ச்சி ஊட்டுவனவாகின்றது.
சரிப்பிள்ளை போயிட்டு வருகிறேன் பால்கஞ்சி
கலயத்தை கொண்ட நீ வந்துவிடு
பொரிச்ச கருவாடும் சேர்த்துக்கொண்டே வந்து
கஞ்சி குடிக்கயில தந்து விடு
அவளின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவனாய், மனைவியின் கனவுகளை கலைக்க முடியாதவனாய் கதையின் போக்கை மாற்றுகிறான். உண்மையில் மாற்றவேண்டிய சூழ் நிலையில் இருக்கிறான். நாழிகள் கடந்து கொண்டே இருந்தன அவன் வேலைக்கு புறப்பட.. அவன் அவளிடம் பால்கஞ்சியும் பொரித்த கருவாடும் மதிய உணவுக்காக கேட்கிறான்.
சரியாத்தான் வலைபோட செல்லுங்கோ கஞ்சி
கலயத்தை கொண்டு நான் வந்திடுவன்
பொரிச்ச கருவாடும் அரைச்ச துவையலும்
கஞ்சி குடிக்கயில தந்திடுவன்
எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனைவியாக கருவாடும் துவையலும் கஞ்சியும் கொண்டுவருவதாக கூறுகின்றாள். இதோடு மனைவியின் ஏக்கத்தை உணர்ந்த கணவனும், கணவனின் மனநிலையைஉணர்ந்த மனைவியாகவும் உடல்கள் பிரிய உணர்வுகாளால் பிணைந்திருக்கின்ற அந்த கடலோர குடிசையின் காலைப்பொழுது இதுவாகும்.
நிலையளவில் தாழ்ந்தவர்களாக சித்தரித்துக்கொள்ளும் அவர்கள் மனதளவில் உறுதியானவர்களாயும் அன்பளவில் இறுக்ககட்டுண்டவர்களாயும் காட்டிய அற்புத படைப்பு இந்த நாட்டார் பாடலாகும். மன்னார் என்ற அழகியல் இந்த பாடலில் இழையோடியுள்ளதை உணர்ந்துகொள்ளக்கூடியவாறு இருக்கின்றது.
வாசனை
தனி மனித வாசனை எதில் எல்லாம் தென்படும் என்று என்னிடம் நானே கேட்டுக்கொள்வதுண்டு. ஒரு சில ஏற்றுக்கொள்ளத்தக்க பதில்களை மனமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு. நாம் எடுக்கும் முடிவுகளில் எம்மை அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்தும் நான் எடுக்கும் முடிவுகள் தனி மனித சிந்தனைகளின் வெளிப்பாடுதானா என்பதில் நிச்சய ஐயம் உண்டு. உங்களது முடிவுகளில் வேறு யாரும் இல்லையா ? இல்லை என்றால் இத்தோடு புதிய தலைமுறைக்கான ஆட்சேர்ப்பினை உங்களில் இருந்து தொடங்குகிறேன். ஆம் என்றால் நீங்களும் நானும் ஒரே ஓலைச்சுவடிகள் தான். தனி மனித வாசனை தெரியவே தெரியாத பல காலமாய் தூசுகளும் கரையான்களும் படிந்த ஓலைச்சுவடிகள் தான் நாம். எம் முடிவுகளில் மூத்தோரின் அனுபவங்களும் வரலாற்றின் பாதிப்பும் கட்டாயம் தலை தூக்கிநிற்கும். இவற்றை மீறி முடிவுகளை எடுத்துக்கொள்ள நாம் அதிக சிரத்தை காட்டுவதில்லை. ஏன் எனில் எம்மால் எடுக்கப்படும் சார்பான முடிவுகள் எமக்கு சிரமங்களை தருவதில்லை. எனவே நாம் சுயமான முடிவுகளை எடுக்க கூடிய மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. எமது முடிவுகளில் தனி மனித வாசனை விசுவதே இல்லை.
கண்களை மூடி பிராணாயாமம் செய்து விட்டு மனக்கண்ணால் பாருங்கள் அதோ அங்கு ஓடும் அதிசய மான் தான் நீங்கள். அங்கு ஒரு வேளை உங்கள் தனி மனித வாடை வீசலாம்….
உலக தாய்மொழித் தினம் 2017
எனக்கு இன்னும் அதிகமா ஞாபகம் இருக்கின்றது.அந்த வெளிறிய கண்கள், நரைத்த ஐதான கேசம், நரம்போடியிருந்த கைகள் கால்கள், கசக்கி போட்டிருந்த டிஸு போன்ற முகம் , நடையில் அதிக தளர்வு, நிதானமின்மை, என அடையாளப்படுத்தலுக்கு குறைவில்லாத தேகம்.
”நான் உன்னோடு அதிக காலம் பழகி இருக்கிறேன். உன்னில் அக்கறை எடுத்து கொள்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. நெடுகாலமாய் இந்த கேள்வி என் ஆழ் மனதின் சுரங்கங்களில் தீர்க்கமுடியாத ஊற்றாய் பீறிட்டுக்கொண்டிருக்கிறது. ” என்று நான் அந்த உருவத்திடம் போலியான வசனங்களை சேர்த்துக்கொண்டு கேள்விக்கான தயார்படுத்தலை ஆரம்பிக்க தொடங்கினேன்.
அது வழி எங்கும் சீழ் கொட்ட மறைந்துகொண்டே சென்றது.
கேள்விகளை தயார்படுத்திய என்னால் அந்த உருவத்தை சேர்த்துக்கொள்ள முடியாமல் போனது.
உலக தாய்மொழித் தினம்
குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா
கி மு 6000 ஆண்டு காலப்பகுதிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் பயிர்செய்கையின் மூலம் அவனது உணவுத்தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளத் தொடங்கினான். பயிர்களுக்காக அவன் தனது இருப்பிடத்தை நிலையாக்கி கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பயிர்களின் அடிப்படை தேவையான நீருக்காக அவன் குளக்கரை ஆற்றங்கரை ஓடைகள் என்பவற்றுக்கு அருகில் குடியேற ஆரம்பித்தான். கால ஓட்டத்தில் மக்கள் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. இடவசதிகள் கருதியும் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதற்காகவும் மக்கள் குழுமங்களாக பிரிய ஆரம்பித்தனர். இவ்வாறு பிரிந்துசென்ற மக்கள் மற்றுமொரு நீர்நிலையை அண்டியே தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். காலப்போக்கில் ஒவ்வொரு குடியேற்றமும் அதன் இருப்பிடம், மற்றும் அம்சங்களைக்கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன. இந்த அடையாளப்படுத்தலில் இயற்கை அம்சங்களாக தாவரங்கள், மிருகங்கள், பறவைகள், நீர்நிலைகள், நில இயல்புகள் போன்றவை ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனை விட இதிகாச புராண இலக்கிய பெயர்களும் , தொழில் ரீதியான பெயர்களும் , அரசர் ,மேல்நிலை அதிகாரிகள்,தலைவர்கள் போன்றோரின் பெயர்களும் ஆதிக்கம் செலுத்துவதையும் காணலாம்.
இலங்கையின் வடக்கு வாயிலாக கருதப்படுகின்ற வவுனியாவின் இடப்பெயர்வுகளும் இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இந்தக் கட்டுரையின் பெரும்பாலான மூலங்கள் ஞா.ஜெகநாதன் என்பவரால் வவுனியா பிரதேச கலாசார விழா 2016 ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட இடப்பெயர் ஆய்வு என்ற ஆய்வில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இதைவிட வேறு சில புத்தகங்கள் மற்றும் கேள்வி அறிவு என்பவற்றின் மூலமும் தொகுக்கப்படுகின்றது.
வவுனியாவின் எந்தப் பக்கமும் கடலின் வாடை இல்லாததாலும் ஆங்கங்கே குன்றுகளும், பரந்து விரிந்த எண்ணற்ற செழிப்பான குளங்களும், காடுகளும் இருப்புகளும், ஊர்களும், ஓடைகளும், கட்டுகளும், கரைகளும், கற்களும், குழிகளும், சூரிகளும், சோலைகளும், தாழிகளும், தோட்டங்களும் பள்ளங்களும், பளைகளும், புராணங்களும், புரங்களும், மடுக்களும், மலைகளும், முறிப்புகளும், மோட்டைகளும், வத்தைகளும், வனப்பு சேர்ப்பதனால் வவுனியாவின் இடப்பெயர்களில் இவற்றின் ஆதிக்கமே பரவலாகி காணப்படும்.
இவற்றை விட வவுனியா பிரதேசங்களில் பரவிக்காணப்படுகின்ற தாவரங்களான அரசு, ஆத்தி , இத்தி , இலந்தை , இலுப்பை, இறம்பை , ஈஞ்சு , கரம்பை, கறிவேம்பு, கருங்காலி, கள்ளி, கான்ச்சூரை, காயா, கூமா, கூழா, சமிழ், சாளம்பை, செங்காராயத்தி, தம்பனை, தான்றி , தேக்கு, நறுவிலி, நெளு, நொச்சி, பம்பை, பனிச்சை, பயறி, பரசு, பாலை, பாவட்டை, பிரம்பு, புளி, பூசினி, பூவரசு, பொடுங்கண், மகிழ், மண்டு, மருது, மரக்காரை, மாறலுப்பை, முள்ளி, விண்ணானை, விளா , வேம்பு என்பனவும் உயிரினங்களான ஆமை, உக்கிளான், எருமை, பன்றி, மரை, மான், கொக்கு என்பனவும், மீன் இனமான குறவையும் தானியங்களான எள், நெல் என்பனவும் இடப்பெயரியலில் முக்கிய இடம் பெறுகின்றன.
இத்தாக்கங்களால் வவுனியாவில் ஊர் பெயர்களில் ஆழ்ந்த அர்த்தங்களும் அழகியலும் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது வவுனியா மக்களின் தமிழ் புலமையையும் ஆழ்ந்த பாண்டித்தியத்தையும் புலப்படுத்தி நிற்கிறன. இனி சில ஊர்களின் பெயர்களினூடு கவனம் செலுத்தலாம்.
பறங்கி என்பது பூசணியை குறிக்கும் பெயராகும். பூசணி பயிர் செய்கைக்கு அருகில் ஆறு இருந்தமையால் அக்குடியிருப்பு பறங்கியாறு என அழைக்கப்படுகின்றது. பறங்கியாறு புத்துக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் நீர் பாய்ந்தோடும் இயற்கை கால்வாய்களை ஓடை என்று அழைப்பார்கள். மருத மரங்களின் சோலையினூடக அது பாய்ந்து ஓடுகின்றமையால் அவ்விடம் மருதோடை எனப்படுகிறது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. கண்டி என்பது குளத்தை குறிக்கும். உட்பகுதியை வெட்டி ஆழமாக்கி உருவாக்கப்பட்ட குளம் வெட்டுக்கண்டி என பெயர்பெற்றுக் கொண்டது. தற்போது இந்தக்குளம் நெளுக்குளத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இது நெளுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது.
இதைவிட மரங்களை பகுதியாக கொண்ட குளங்களில் முடியும் பெயர்களை கொண்ட கிராமங்களும் காணப்படுகின்றன. கோழிய குளம் என்பது கோலிக்குளம் என்பதன் திரிபாகும் .கோலி என்பது இலந்தை மரத்தை குறிக்கும். நீர்நிலை நெடுகில் இந்த மரம் அதிகமாக காணப்பட்டபடியால் கோலியகுளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது மருதங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. சோபாலிகை என்பது பற்றைக்காட்டை குறிக்கும். பற்றைக்காடுகள் நிறைந்த புளியங்குளம் சோபாலிகை புளியங்குளம் என்றிருந்தது. நாளடைவில் சோபால புளியங்குளம் என மருவியது. வவுனியாவுக்கு வியாபாரநோக்கில் வந்த வணிகப்பெண் ஒருத்தி வாங்கியதால் புளியங்குளம் அவள் மரபான பட்டாணியை கொண்டு பட்டாணிச்சியூர் புலங்குளம் என்று பெயர் பெற்றது. புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாகவும் அவை தரித்து நின்று செல்லும் இடமாகவும் இருந்த புளியங்குளம் புலிதரித்த புளியங்குளம் ஆனது. இப்பெயர் மருவி நாளடைவில் புலிதறித்த புளியங்குளம் ஆனது.
இராசேந்திரம் என்ற ஒரு உடையாரால் திருத்தி அமைக்கப்பட்டகுளம் இராசேந்திரகுளம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது . நாகர் இலுப்பைக்குளம் என்ற இடம் ஞாபகப்பெயர் என்று கருதப்படுகின்றது சிலோனுக்கு வந்த நாகா இனத்தவர்கள் நாகநாட்டை ஆக்கிரமித்து வன்னி இராச்சியங்களை நிறுவும்வகையில் ஈழத்தின் நாக நாட்டை ஆண்டுவந்த நாகர் இனத்தவர்களின் ஞாபகார்த்தமாக நிலைத்து நிற்கும் பெயர் நாகர் இலுப்பைக்குளம் ஆகும். இது கந்தபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளது. வைரவர் கோவில் இருந்த புளியங்குளம் வைரவர்புளியங்குளம் ஆனது.
தாயம் என்பது தந்தை வழி உறவை சுட்டிக்காட்டுகிறது. தந்தை வழியாக கடத்தப்பட்டு வந்த குலஉரிமையை உடைய குளம் தாயக்குளம் என்றும் அக்குளத்தைச்சுற்றி அதிகமாக எய்பன்றிகள் வாழ்ந்து வந்ததால் எய் பண்டி தாயங்குளம் எனவும் அவ்வூர் பெயர்பெற்றது.
குளக்கட்டுக்களை அலை தாக்காமல் இருப்பதற்கு உட்புற குளக்கட்டில் கற்களை அடுக்கி வைப்பர். இதன் பொருட்டு அந்த குளம் அலைக்கல்லு போட்டக்குளம் ஆனது. நாப்பண் என்பது நடு என்னும் பொருள் கொண்ட சொல்லாடல் ஆகும். சுற்றிவர பலகுளங்கள் இருக்கும் போது நடுவில் அணைக்கப்பட்டபடியால் நாப்பண் குளம் என பெயர்பெற்றது. நாளடைவில் இது நாம்பன் குளம் என மருவி காணப்படுகின்றது. குளமானது தாழி வடிவில் ஆழமான அமைப்பை கொண்டபடியால் தாழிக்குளம் என அழைக்கப்பட்டது பின்னர் தலிக்குளமாக மருவிப்போனது. யானைகளின் தந்தம் மிக விலைமதிப்பானது. யானைத்தந்தங்களை இறந்த யானைகளில் இருந்து எடுத்து ஊருக்கு கொண்டு செல்ல பயந்து ஒளித்துவைத்து சென்ற கிராமம் கொம்பு வைத்த குளம் என அழைக்கப்பட்டது.
சூரி என்பது சிறிய நீர்நிலைகளை குறிக்கும், எருமை மாடுகளில் ஆண் மாட்டை கடா என்பார்கள். பழக்கிய எருமை மாடுகளை கொண்டு சென்று, காட்டு குழுவின் மாடுகளை, நீர்நிலைகளுக்கு அருகே காலில் சுருக்கு போட்டு பிடிப்பது வழக்கமாகும். இப்படியான வழக்கம் உடைய ஊர் கடாச்சூரி என பெயர்பெற்றது நாளடைவில் கிடாசூரி ஆனது. பாளை என்பது நீர்நிலை அருகே மக்கள் தங்கி வாழும் இடங்களை குறிப்பது. அவ்விடங்களுக்கு அருகே மருக்காரை என்ற மரம் செறிந்து காணப்பட்டபடியால் அவ்விடம் மருக்காரம்பாளை ஆனது. மடு என்பது ஒரு நீர் நிலையை குறிக்கும். மாரி காலங்களில் நீர் பாய்ந்து ஓடுவதால் அதை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் கட்டப்பட்ட பின்பும் அந்த பூமி மடு என்றே அழைக்கப்படுகின்றது. சேமம் என்றால் புதை பொருட்களையும் அரண்களையும் குறிக்கும். இதனால் சேமம் கொண்டபிரதேசங்களில் இருக்கின்ற மடு சேமமடு எனப்படுகின்றது.
காட்டு பிரதேசங்களின் நகரமயமாக்கலின் போது பெரிய மரங்களை வெட்டி எடுத்து விடுவார்கள். அதன் பின்பு சிறிய மரங்களே எஞ்சி இருக்கும். இப்படி சிறிய மரங்களினால் எஞ்சிய காடு குருமன் காடு என பெயர் பெற்றது நாளடைவில் குருமண்காடு ஆகியது. கரம்பை மரங்களால் செழிக்கப்பட்ட இடத்தை உடைய காட்டு பிரதேசம் கரப்பன் காடு ஆனது. இவை வைரவர்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவை சார்ந்தவை.
பயிச்செய்கை நடைபெறும் இடங்களை தோட்டம் என அழைத்தார்கள், நீர்ப்பாசன விவசாயம் செய்யப்படும் இடங்களை பூ என பூரிப்புடன் அழைப்பர். அதை தாண்டி அதற்கு அருகில் தோட்டம் செய்யப்படும் இடம் பூந்தோட்டம் என அழைக்கப்படுகிறது. அதோடு வத்தை என்பதும் தோட்டத்தை குறிக்கும். அரச தேக்கம் தோட்டங்களில் குடியேறிய மக்கள் அவ்விடத்தை தேக்கத்தை என அழைத்தனர். மந்தை என்பது ஆடு மாடுகள் கூட்டமாக உள்ளதை குறிக்கும் பெயராகும். ஓ என்பது சென்று தங்குவதைக்குறிக்கும். மந்தைகள் சென்று தாங்குகின்ற இடமாக அமைவதால் ஓமந்தை என்ற ஊர் பெயர் பெறுகிறது.
இதில் பெயர்பெற்ற வவுனியா நிலையங்களையே சுட்டிக் காட்டியுள்ளேன். இதை விடவும் ஏனைய இடங்கள் அவற்றின் தனித்துவமான காரண ஊர் பெயர்களுடன் இன்றும் விளங்குவதை காணக்கூடியதாக அமைகின்றது. இப்படி செழுமையும் செழிப்பும் நிறைந்த ஊர்ப்பெயர்கள் குடியேற்றங்களால் அளிக்கப்படுவது மனவருத்தத்துக்குரியதொன்றாகும். மருவிப்போன பெயர்களைக்கூட ஆதாரப்படுத்தி விடலாம் ஆனால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கி அழிக்கப்பட்ட தமிழ்க்கிராமங்களின் அடையாளங்கள் ஆதாரப்படுத்த முடியாதன. நவீனமயமாக்கலின் போது ஊர்ப்பெயர்களும் நவீனமாக்கப்படுகின்றமை வரலாறுகளை மறைப்பதாக அமைந்து விடுகின்றது. அழகிய தமிழ்ப் பெயர்களை உடைய எமது வரலாற்றுச் சிறப்பைக்கூறும் ஊர்களின் காரணப்பெயர்களின் செழுமைமிக்க காரணமறிந்து அவற்றை நிலைபெறச் செய்வது தமிழர்களின் தலையாய கடமையன்றோ
எது பாலம்? – கவிதை ரசித்தல் 02
இன்று மன அமைதி தேடி ஆலயங்களையும் ஆச்சிரமங்களையும் தியான யோகா வகுப்புக்களை நுகர்கின்ற மானிடர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.சரி, உரிய இடங்களை அடைந்து விடுப்பவர்களின் மனங்களில் மன அமைதி குடிகொண்டு அவர்களின் வாழ்வு மாறிவிடுகிறதா? அங்கு செல்பவர்களின் பலர் தம்மைப்போலும் இவ்வளவு மானிடரா என்று அற்ப சந்தோசம் அடைகின்றனர். இந்த அற்ப சந்தோசத்தில் மன அமைதி கிடைத்து விடப்பபோவதில்லை.எல்லாம் வல்ல பரம்பொருளை அடைந்தால் அவரின் அடிகளில் சரண் அடைந்தால் இந்த மன அமைதி கிடைத்து விடும் என்று காலகாலமாக கூறுகின்றார்கள்.அப்பிடி இருந்தும் ஏன் மிக சிலரை தவிர பெரும்பாண்மையானோர் ஏமாற்றத்தோடு திரும்புகிறார்கள்?
இதெற்கெல்லாம் ஒரே பதில் அவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளவில்லை என்பதேயாகும். மன அமைதி என்ற தீபத்தில் கலக்க வேண்டுமானால் அந்த ஒளி எங்கள் சரீரங்களிலும் வீசவேண்டுமானால் அறம் என்ற தயார்படுத்தல் தேவைப்படுகின்றது.எம்மை சுற்றி விழிபார் தூரத்துக்கு எல்லாரும் ஆழ்ந்து தியானத்தில் இருந்தாலும் அறம் செய்யா மனம் ஊசலாடும் தளர்வுறும். அடுத்தவன் தவத்தையும் சுரண்டும்.

இன்றைய உலகின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்றபடி வறியவர்கள் வளர்ச்சியும் (எண்ணிக்கையில்) சலிக்காமல் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஒப்பிட்ட அளவில் உலகின் சனத்தொகை பெருக்கத்தை உலக உணவு உற்பத்தியால் ஈடுசெய்ய முடியாமலே இருக்கின்றது. இதனால் வறியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு வறியவர்கள் வாழ்வாதாரம் இன்னும் பின் தயங்கியவாறே செல்கிறது. ஒரு பக்கமாக ஏழ்மையினால் இறப்புகள் அதிகரித்து செல்வதோடு மறுபக்கம் ஏழ்மையையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக குற்றங்களில் ஈடுபடுகின்ற தன்மை அதிகரித்து செல்கின்றது.

இந்த வறிய சமூக மக்களின் தேவைக்கும் சாதாரண அல்லது மேம்பட்ட (பொருளாதாரத்தில்) மக்களின் தேவைக்குமான உறவும் தேவைகளின் நிவர்த்தியும் அறத்தினில் தங்கியுள்ளது. பாரினில் உள்ள அறங்களிலேயே மேலான அறம் பசிப்பிணி போக்கல் என்கிறது வளையாபதி. பசிப்பிணி போக்கல் என்ற மேலான அறம் இரு தட்டு மக்களின் வாழ்வாதார தேவைகளான உணவு , மன அமைதி என்ற இரண்டையும் நிவர்த்தி செய்கிறது.
“அற்றம் இல் தானம் எனைப்பல ஆயினும்
துற்றவிழ் ஒவ்வாத் துணிவு என்னு மாறே “
கேட்டல் இனிது.
எங்கு அறிவுரை கேட்பது ? யாரிடம் அறிவுரை கேட்பது ? எம்மை சரியாக வழிநடத்த கூடியவர்கள் யார் ? போன்ற கேள்விகள் இந்த தலைமுறையினரிடம் பரவலாக காணப்படுகிறது. மங்கிய ஒளியினை நம்பி அதன் வழி நடத்தலின் கீழ் சென்று தமக்கான சரியான பாதைகளை தவறவிடுகின்ற ஆட்கள்தான் இந்த தலைமுறையினர்களில் அதிகம். ஒருவேளை அப்படியான தவறான வழி நடத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கிறவர்களுக்கு வழிநடத்தல்களே இல்லாமல் போய் விடுகின்றன. வழிநடத்தல் இன்றிய பிரயாணங்கள் சீரானதாகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும் முடிந்த நிகழ்தகவுகள் மிகக் குறைவு. தண்டவாளம் அற்ற புகைவண்டி முடிவிடத்தை அடைவதில் சிரமமும் இயலாமையும் தானே அதிகம். இந்த எதிர்மறையான மங்கலான போக்குக்கு எம்மிடையேயான இலக்கிய அறிவின் மந்தகரமான நிலையும் முக்கிய காரணமாகும். எம் வரலாறுகளையும் எத்தனையோ யுக வாழ்க்கையை சீர்படுத்திய இலக்கியங்களால் , இத்தலைமுறையினரின் நடத்தை கோலங்களை சீர்மைப்படுத்துவது என்பது பெரிய காரியம் இல்லை. இருந்தும் இது நிகழாமைக்கான காரணம் இலக்கியங்கள் நோக்கிய எமது பார்வைப் பிறழ்வே ஆகும். …………………….எது பாலம் ? என்பது இலக்கியம் கூறும் நல்வழி ஒன்றினை பற்றியது. கவிதை ரசித்தல் என்ற தொடரின் 2 வது பகுதியாக எழுதப்பட்டது.
https://brinthansite.wordpress.com/2017/02/16/எது-பாலம்-கவிதை-ரசித்தல/
தீராத பால்யம்.
மனிதன் ஒருவனின் ஆழப்பதிந்த நினைவுகள் என்று தோண்டி எடுக்கும் போது அந்த நினைவுகளில் பல அவனின் பால்யத்தை சுற்றியே இருக்கும் என்பது நிதர்சனம். பால்யம் தீராத கனவுகளின் பெட்டகம். எல்லாருக்கும் எல்லாமும் இந்த பருவத்தில் விதைக்கப்படுவதில்லை. விதைக்கப்பட்டவை எல்லாம் சரியானவையும் அல்ல. விதைக்கப்பட்டவைக்கும் விதிக்கப்பட்டவைக்கும் தீராக் கனவுகளின் பெட்டகத்திற்குமான போராட்டம் பால்யத்தை சுவைக்க வைக்கிறது. இந்த சுவையான சுளைகளுக்கு தேனும் நெய்யும் ஊற்றி சுற்றத்தாருக்கு கொடுக்கும் போது அதன் மதிப்பு பல படிகள் உயர்கின்றது. ஆனால் அந்த சுவையான அனுபவங்கள் எழுத்தாளனுக்கு உரியதுதானே. தீராக் கனவு பெட்டகம் அவனுக்குரியதுதானே. அவன் நினைவுகளை பகிர்வதில் அவன் அந்தரங்கம் வெளிப்பட்டு விடும் என்பதை மீறி அவன் தனிமையில் மீட்டவேண்டிய அனுபவங்கள் தொலைந்துவிடுமே என்ற அச்சம் மேல்தூக்கி கொள்கிறது. இதனால் யாரும் அவர் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் பெரும் தயக்கம் காட்டுவார்கள். நானும் அப்பிடித்தான் ……….. சீனிபாக் அனுபவம் இல்லை , இதில் நகர்ப்பவர்களில் யாரும் நான் இல்லை. இங்கு காட்சிகள் சட்டகத்துக்குள் மறைக்கப்படாமல் வெட்டவெளிக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் எங்கேனும் நீங்கள் உங்களைப்பார்த்தால் அதில் என் கற்பனைகளை மீறிய உண்மைகள் எங்கோ நடமாடியிருக்கின்றன அல்லது நடமாடுகின்றன அல்லது நடமாடலாம் என்ற வெளிப்படை மேலோங்கலாம் ….
வடக்கு நாட்டார் இலக்கியங்கள்-அரிவி வெட்டு
ஒரு பேரூந்திலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ நகர்ப்புற வீதிகளில் செல்லும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் வித்தியாசமும் மாற்றமும் உணர்வீர்கள். விதவிதமான வான்முட்டும் கட்டடங்களும் தொழில்நுட்பமும் எம்மைச்சூழ விரிந்து கிடந்தாலும் நீண்ட முடிவில்லா வயல்களையும், பனந்தோப்புக்களையும், கொட்டில் வீடுகளையும் அதில் கொத்தி திரியும் கோழிகளையும் பார்க்கும்போது மனதின் ஓரத்தில் ஆனந்தமாய் இனம்தெரியாத ஒரு பூரிப்புவரும். கலை இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாடுள்ளவர்களுக்கு இது கூடுதல் குதூகலம் என்பதை மறுத்து கூறமுடியாது.
தொலைதூர புகைவண்டிப் பயணங்களில் எமது புகைப்படக் கருவிகள் அதிகம் படம் பிடிப்பது கிராமங்களையே. தேடித் தேடி சேர்த்துக்கொள்ளும் புகைப்படங்களில் கவனம் செலுத்திய நாங்கள் இதம் தந்த தென்றலையும், பரந்து விரிந்த வயல் தேசத்தில் கையில் மண்வெட்டியுடன் வியர்வையை உரமிட்டு எங்கள் உணவுக்காக உழைக்கும் விவசாயியின் வாழ்வியலையும் இன்னும் சமூகவலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அச்சமூக வலை தளங்களில் மீன் பிடிக்கும் மீனவர்களின் நாளாந்தத்தையும் கவனிக்க தவறிவிடுகிறோம். இவ்வாறு தவறி விடப்பட்டவையே எதிர்காலத்தில் எங்கள் அடையாளங்களை கேள்விக்குறியாக்கி விடப்போகின்றன.
நாட்டார் வழக்காற்றியல் என்பதை அறிமுகம் செய்து உள்நுழையவேண்டிய துர் அதிஷ்ட நிலை என் எழுத்துக்களுக்கு ஏற்பட்டுள்ளதை நினைத்து ஒருகணம் வருந்திக்கொள்கிறேன். நாட்டார் இலக்கியம் என்பதை வரையறுப்பதில் காலம் காலமாக வேற்றுமையான எண்ணப்பாடுகள் காணப்பட்டு வருகின்றது. வரலாற்றில் நாட்டார் இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள் அக்காலநிலைக்கும் தங்கள் சுவாத்தியத்திற்கும் இணங்க அதனை வரைவிலக்கணப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். இருந்தும் எல்லோரையும் பொதுமைப்படுத்தி அவர்களின் கருத்தாழங்கள் விடயப் பரப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அறிஞர் போக்ஸ்
புராதனமாகவோ அல்லது நாகரிகம் வாய்ந்ததாகவோ ஒரு சமூகப்பகுதி அல்லது உறவுக்குழுக்கள் அல்லது பழங்குடி மக்கள் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு நாட்டு மக்களின் வழக்காற்றுத்தொகுதியே நாட்டார் வழக்காற்றியல் என வரையறைசெய்கிறார்.
இந்த நாட்டார் வழக்காற்றியல் இரு பெரும் பிரிவாக பிரிகின்றது.
- நாட்டார் இலக்கியம்
2.நாட்டார் நம்பிக்கைகள்
இந்த தொடர் நாட்டார் இலக்கியம் என்ற பெரும் பிரிவையே முழு நோக்காக கொண்டு எழுதப்படுகிறது. வடக்கு தமிழ் மக்களின் வரலாற்று பாரம்பரியம் தொன்மையானது. நாட்டார் இலக்கியத்திற்குள்அவர்களின் வரலாற்று வாழ்க்கை முறையை ஆராய்வது மிக திருத்தமான செயலாகும்.
நாட்டார் இலக்கியம் பொதுவாக நாட்டுப்புற கதைகள் , நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புற கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், புராணக் கதைகள், கூத்து என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பான்மையானவை வாய்மொழி வழக்காறு உடையனவையாகவே காணப்படுகின்றன. நாட்டார் இலக்கியம் என்று வரும்போதே நாட்டாரியல் மேலோங்கி நிற்கிறது. ஆதிகால வடக்கு மக்களின் சூழலியல் சார்ந்த அம்சங்கள் வயலும் வயல்சார்ந்த இடங்களுமாக இருந்தமையால் அம்மக்கள் கல்வித்துறையில் பெரும்பான்மை நாட்டம் செலுத்த தடையாக இருந்தது. இதனால் எழுத்து மொழி இலக்கியங்களை விட வாய் மொழி இலக்கியங்களிலேயே அதிக ஈடுபாடு காட்டியிருந்தார்கள் அம்மக்கள். வடக்கு பகுதியின் நாட்டார் பாடல்கள் பெரும்பாலானவை பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் கூத்து, கதைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன.
வடக்கின் நாட்டார் இலக்கியங்களை இரசிக்க வாசகர்களை இன்றிலிருந்து மிகவேகமாக பின்னோக்கி ஒருமுறை அழைத்துச் செல்வோம்……

அதோ வயல்காணிகள் தெரிகின்றன, அளந்து மண் கோதி இடப்பட்ட வரம்புகள், எங்கு பார்த்தாலும் சலசலக்கும் வாய்க்கால்கள், வாய்க்கால்களில் நீந்தி விளையாடும் கச்சல், வரால், கெளிறு, மங்கன், மசரி, உழுவைகள், கொஞ்ச தூரம் தள்ளி மதகு அருகே தூண்டிலோடு சில நடுத்தர வயதுகாரர்கள். வாய்க்கால் திரும்பும் இடம் ஓலையால் நேர்த்தியாக பின்னப்பட்டு களிமண் சுவர்கள் இடப்பட்டு வெளியே குந்துடன் சிறிய அளவான வீடு, வீட்டின் முன்னே ஓலைப்பின்னலினாலான கூடாரம் கோழிகளுக்கும் சாவல்களுக்கும், விவசாயத்திற்குச்செல்ல கணவன் தயாராகி விரிந்து செழித்த ஆலமரத்தின் கீழ் அடிஅகன்ற முடி கூரான பிள்ளையார் சிலை முன்
“முடியோடு தேங்காய் கையில் எடுத்தோம்
மூத்தோர் கணபதியை தோத்திரம் செய்தோம்.” என தேங்காய் உடைப்பார்.
வீட்டோடு அருகே உள்ள வயலுக்கு சென்றவன் ஏர்பூட்டி உழ முன்…..
“பட்டி பெருகவேணும் தம்பிரானே
பால்ப்பானை பொங்க வேணும் தம்பிரானே……
மேழி பெருகவேணும் தம்பிரானே
மாரிமழை பெய்யவேணும் தம்பிரானே ………”
என மழை சிறப்பாக பெய்யவேண்டும் என வருண பகவானை வணங்கிக்கொள்வார்கள்.
என்னதான் மழையும் மனிதர்களும் ஒத்துழைத்தாலும் விவசாயியின் பெரும் நம்பிக்கை அவன் எருதிலேயே இருக்கும். எருதை சமாதானப்படுத்தி வேலை செய்யவைக்க
“சார்பார்த்த கள்ளனடா …..
தாய்வார்த்த கேளனடா …..
பாரக்கலப்பையடா செல்லனுக்கு ….
பாரமேத்தத் தோணுதடா……
வரம்போ தலகாணி செல்லனுக்கு ……
வாய்க்காலோ பஞ்சுமெத்த ……. ”
என்று பெற்ற பிள்ளையை போல தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவார்கள்.
இப்பிடி பிள்ளைபோல் வளர்த்த உழவு மாடுகள் இடைக்கிடை கட்டவிழ்த்து காடுகளுக்கிடையே மறைந்து விடுவதுண்டு. இப்பிடி தொலைந்த மாடுகளை தேடி காடு மேடுகளெல்லாம் அலையவேண்டி வரும். அலையும் நேரங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள உடற்கட்டு மந்திரம் சொல்லிக்கொள்வார்கள். ஊர் எல்லையெங்கும் காவலிருக்கும் ஐயனாருக்கு நல்ல கேட்டித் தடி வெட்டி சாத்தி வைப்பார்கள். இதை வதனமார் சிந்தில் வரும் பாடல் வரிகளில்
“நாவியும் கீரியும் நுழையாத குருமனில
நாங்கள் நுழைந்தொரு குரும் பொல்லு வெட்டி
பொல்லு நல்ல பொல்லு, வெட்டிக் கட்டிய பொல்லு
மட்டடக்கும் பொல்லு இது ……”
என்றும்
” அட்ட திசை எல்லாம் கவரிவீச
ஆடர்ந்து சில மனிதர் வந்தடி பணிந்தேத்த
மட்டுலவு மச்சிலாய் வாளுமையானாரை
மலரடிகளென்று மனதிலயராமே …..”
என்னும்
“சல்லியொரு கொம்பு முழவதிர
வெள்ளையானை மேலேறிவரும்
ஆதி சடவைக்குளம் வாளுமையானரே …..”
என்றும் வரும் வரிகள் அவர்களின் உணர்வுகளை இனிமையான சந்தத்துடன் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறான பாடல்கள் வடக்கில் இன்னும் வழக்கில் உள்ளன.
அரிவு வெட்டும் காலம் வந்தாலே கேளிக்கைகளுக்கும் நையாண்டிகளுக்கும் குறைவே இருக்காது, அந்த மக்களின் மனங்களைப்போலவே வேளாண்மையும் என்றும் செழித்தே இருக்கும். இந்தக் காலங்களில் பாடப்படும் பள்ளு பாடல்கள் ரசனை மிக்கவை. அரிவு வெட்டும் கத்தியின் சிறப்புக்களை பாடும் போது
“மட்டு கருக்காலே அரிவாளை தீட்டி
மாவிலங்கம் பிடி தன்னில் இறுக்கி
வெட்டும் பிடியை சிரிக்கவே வெட்டி
வெள்ளித்தகட்டாலே விரல் கூட்டமிட்டு ….”
என பாடுகின்றனர்.
மட்டு என்பது மட்டக்கிளப்பின் சுருக்கம். அங்கிருந்து பெறப்பட்ட தாக்கத்தி, ஒன்றரை அல்லது இரண்டங்குல அகலமான முனை சுருட்டிய வளைவானது. இந்த கத்தி வீசினால் இரண்டு அல்லது மூன்று வீச்சுக்கு கைநிறையும். தொடர்ந்து உப்பட்டி விழும். முதல் மூன்று கத்தி வீச்சு நான்கு உப்பட்டி விழல் என்ற தொழில் சந்தத்தில் அருவி வெட்டு பாடல்கள் அமைந்திருப்பதை காணலாம்.
1.மாட்டு கருக்காலே 2.அரிவாளைத் தீட்டி 3. மாவிலங்கம்படி என மூன்று வீச்சுகளோடு நான்காவது சொல்லுக்கு உப்பட்டி கீழே விழும். இந்த ஒழுங்கு பாடல் தொடங்கி முடியும் மட்டும் மாறாமல் பேணப்படும்.
“கூழாவடியாம் குளிர்ந்த நிழலாம்
குளக்கட்டு நீளம் புளியாமினலாம் ……
யாரடா எந்தன் குளக்கட்டு தனிலே ?….
நாங்கள்தான் அந்த சிந்து கவி பாடியோர் ….”
என்று தொடர்ந்து செல்லும்.
அரிவு வெட்டு முடிந்தது நெல்லெல்லாம் வீட்டு முற்றத்திலே காய விடுகிறார்கள். காயவிட்டால் குருவி விடுமா? குருவியின் தொல்லையை பாடுகிறார்கள்
“கோலமலை நீலமலை குந்துமலை கண்டல்
கொக்கிளாய் பரந்தமலை மெம்மலை குறுந்தேர்
கன்னியங் குமரிமலை ஓதியமலையேகி
பொதியமலை நாயாறு தட்டாமலை குருவி முதலாய்
தோற்றமுள்ள கந்தளாய் குளமேவு மலையினொரு
சோல்லரிய பூநேரி சூழுமலையாளம்
குருவிக்கிளை பறந்து வருதே …….”
இதெல்லாம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது நாம் இப்போது உலவிக்கொண்டிருக்கும் கிராமத்துள் என்று சொற்களால் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனம் பண்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு கற்பனை பார்வையிலே இவ்வளவு பண்படல் என்றால் நாட்டார் வழக்கியலும் நாட்டார் இலக்கியங்களும் அதனுள் உள்ள நாட்டார் பாடல்களும் எவ்வளவு பண்பட்டவை என்பது சொல்லிலடங்கா. இன்னும் நாட்டார் பாடல்களுடனும் நாட்டார் இலக்கியத்துடனும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
மீண்டும் இந்த இயந்திர நூற்றாண்டுக்குள் வந்துவிடுங்கள் இன்னும் எம்மை விட்டு உலக இலக்கியங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
Image Credits : Sajath Nijamudeen
இளமையின் முதுமை – கவிதை ரசித்தல் 01
இன்று ஒரு மனிதன் தன் சமூகம் சார்ந்த பார்வையை எவ்வாறு செலுத்துகிறான் என்ற கேள்விக்கு வினோதமான பதில்களை அறியக்கூடியவாறு உள்ளது. அவனின் ஒற்றை எண்ணம் தன்னை தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். அதற்கான அவனின் ஏற்பாடுகள் மிக சுவாரஸ்யமானவை. வருங்காலம் என்ற எதிர்பார்ப்பிற்கு நிகழ்காலத்தை வெறுப்புடன் எதிர் கொள்கிறான். முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதற்கு வாலிபத்தை தொலைகிறான். மனிதனின் நாளாந்தம் மகிழ்ச்சிக்கான கஸ்டம் , அன்பிற்க்கான வெறுப்பு என்ற எதிரோட்ட எண்ணங்களால் நிரம்புகிறது.
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ……..
இந்த சமூகத்தில் இருக்கின்ற இப்படியான எண்ண அலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் சாதாரண மனிதர்களுக்குள் நானும் ஒருவன். எனது என்ற பெரும் ஏக்கம் என் ஆழ்மனத்துக்குள் படிந்துபோய் இருக்கிறது. அப்பிடியென்றால் எனது சமூகம் என்பதுவும் படிமமாகித்தானே இருக்க வேண்டும்? ஆம் அப்பிடியே தான் , படிமம் உண்டாகி இருக்கிற விதம் தான் கேள்விகளை உருவாக்குகின்றது. எனது சமூகத்தில் நான் யார்? என்னை எவ்வாறு எனது சமூகம் கருத்திக்கொள்கிறது? என்ற சிறு வட்டத்திற்கான கேள்விகளே எனது சமூகம் என்ற படிமத்தில் ஊறிப்போய் உள்ளது. இந்த அற்பமான தேடல்களுக்காக தன் வாலிபத்தையும் அதனை சுற்றி உள்ள இன்பங்களையும் தொலைத்து விட்டு வடுக்களை மட்டும் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு முதுமைக்கு பயணம் செய்கிறான். அலைந்து திரிந்து அனுபவங்களையும் தருணங்களையும் சேர்க்கவேண்டியவன் அவற்றை எல்லாம் அர்ப்பணித்து விட்டு அனுபவங்களை மீட்ட வேண்டிய பருவத்திற்கு வெறும் நிறைவுறா ஆசைகளுடன் சென்று அடைகிறான். ஈயைப்போல பறந்து தெரியவேண்டிய பருவத்தை தின்றுவிட்டு எறும்பை போல சிறு நிலப்பரப்புக்குள் வாழவேண்டிய காலத்துக்குள் அடங்கிப்போகிறான்.

இதையே கவிஞர் மஸோக்கா ஷிக்கி
அன்பு கருதியும்
வெறுப்பு கருதியும் ஒரு
ஈயை அடித்துக் கொன்று
எறும்புக்கு வழங்குகிறேன்.
– மஸோக்கா ஷிக்கி
ஜப்பான் 1867-1902
ஜென் கவிதை .

