விநோத நூலகம் – ஹாருகி முராகாமி தமிழில்: ஜி. குப்புசாமி

1
நூலகம் வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது.
எனது புதிய தோல் காலணிகள் சாம்பல் நிற லினோலியத் தரையில் எழுப்பிய கடகடப்பொலி, எனது இயல்பான காலோசையைவிட வலுவாக, கடுமையாகக் கேட்டது. ஒவ்வொருமுறை புதிய ஷுக்களை அணியும்போதும் அதன் ஒசைக்கு பழக்கப்படுத்திக்கொள்ள கொஞ்ச நாட்கள் ஆகின்றன.
விநியோக மேசையில் இதுவரை நான் பார்த்திராத ஒரு பெண், கனமான புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். எவ்வளவு அகலமான புத்தகம்! அவளைப் பார்க்கும்போது, புத்தகத்தின் வலது பக்கத்தை அவளுடைய வலது கண்ணாலும், இடது பக்கத்தை இடது கண்ணாலும் படித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.
“தொந்தரவுக்கு மன்னியுங்கள்,” என்றேன்.
புத்தகத்தை அடித்து மூடி மேசைமேல் வைத்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
கையில் வைத்திருந்த புத்தகங்களை அவளெதிரே வைத்துவிட்டு, “இவற்றைத் திருப்புவதற்காக வந்தேன்,” என்றேன். ஒரு புத்தகம் ‘நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவது எப்படி?’ இன்னொன்று ‘ஒரு மேய்ப்பனின் நினைவுக்குறிப்புகள்.’
நூலகப் புத்தகங்களைப் பிரித்து முதல் பக்கத்தில் திருப்பவேண்டிய தேதியை சரிபார்த்தாள். காலம் கடந்திருக்கவில்லை. எப்போதுமே சரியான நேரத்தில் திருப்பிவிடுவேன். எந்த வேலையையும் நான் தாமதப்படுத்துவதில்லை. அப்படித்தான் அம்மா என்னை பழக்கியிருக்கிறார். மேய்ப்பர்களும் அப்படித்தான் இருப்பார்கள். கால நேரத்தைப் பின்பற்றாவிட்டால் ஆடுகள் திசைமாறித் தொலைந்துவிடும்.
அட்டையில் ’திருப்பிக் கொடுக்கப்பட்டது’ என்று முத்திரையிட்டுவிட்டு, மூடிவைத்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள்.
“இன்னும் சில புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றேன்.
“நேராகப் போய் அந்தப் படிக்கட்டுகளில் கீழே இறங்கி வலதுபுறம் திரும்பு,” என்றாள் தலையை நிமிராமல். “அந்தத் தாழ்வாரத்தில் நேராகப் போனால் அறைஎண் 107 வரும். அங்கே போ.”
2
அந்தப் படிக்கட்டுகள் முடிவில்லாமல் இறங்கிக்கொண்டே இருந்தன. எவ்வளவு படிக்கட்டுகள்! இறுதியில் முடிவை அடைந்து வலப்பக்கம் திரும்பி, பாதி இருண்டிருந்த நடைவழியில் நடந்தேன். அவள் சொன்னதைப் போல அறைக்கதவு ஒன்றில் 107 என்றிருந்தது. இதுவரை இந்த நூலகத்துக்கு பலமுறை வந்திருக்கிறேன், ஆனால் இப்படி ஓர் அடித்தளம் இங்கே இருக்கும் என்று தெரியாது.
கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது. தாழ்வாரத்தில் அது மேலும் பயங்கரமாக எதிரொலிக்க, திருப்பி, திரும்பி ஓடிவிடலாமென்று யத்தனித்தேன். ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் அப்படி வளர்க்கப்படவில்லை. அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார், கதவைத் தட்டினால் அவர்கள் வந்து திறக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று.
“உள்ளே வரலாம்” என்று உள்ளேயிருந்து குரல் கேட்டது அடங்கின, ஆனால் கூர்மையான குரல்.
கதவைத் திறந்தேன்.
அறையின் மத்தியில் ஒரு சிறிய பழைய மேசைக்குப் பின்னால் அந்தக் குள்ளமான கிழவர் உட்கார்ந்திருந்தார். முகத்தில் ஈ மொய்த்திருப்பதைப் போல சிறிய கரும்புள்ளிகள். வழுக்கைத் தலை. கனமான கண்ணாடி அணிந்திருந்தார். முழு வழுக்கை என்று சொல்ல முடியாமல் தலையின் பக்கவாட்டில் வெள்ளை முடிக்கற்றைகள் சுருள் சுருளாக ஒட்டிக்கொண்டிருந்தன. பெரிய காட்டுத்தீக்குப் பிறகான மலையைப் போலிருந்தது அவர் தலை.
“நல்வரவு, சிறுவனே,” என்றழைத்தார் கிழவர். “என்ன உதவி என்னிடமிருந்து வேண்டும்?”
“சில புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றேன் பலவீனமான குரலில். நீங்கள் வேலையாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நான் பிறகு வருகிறேன் . . .”
“அபத்தம்!” என்று வெடித்தார். “இது என் வேலை. பிஸி எல்லாம் ஒன்றும் கிடையாது! சொல்லு, என்ன மாதிரியான புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? அவை எங்கே இருக்குமென்று இடத்தைக் காட்டுகிறேன்.”
சுவர் பேசும் விதமே வேடிக்கையாக இருப்பதாகத் தோன்றியது. அவர் முகமே முழு வினோதம். செவிமடல்களிலிருந்து நீளமான முடிகள் துருத்திக் கொண்டிருந்தன. காற்றுப்போன பலூனைப்போல முகவாய்க்குக் கீழே தோல் மடிப்புகள் தளர்ந்திருந்தன.
“நீ தேடிக்கொண்டிருப்பது என்னவென்று சரியாகச் சொல், என் இளம் நண்பனே.”
“ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் வரிவசூல் எப்படி செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றேன்.
கிழவரின் கண்கள் பளிச்சிட்டன. “ ஓ அப்படியா?” என்றார். “ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் வரிவசூல்! ஆச்சரியமூட்டும் ஆர்வம்தான் உனக்கு. இதுவரை யாரும் கேட்டதில்லை!”
3
அவர் சொன்னது என்னை நெளிய வைத்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆட்டமன் வரி வசூலைப் பற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கு அந்தளவுக்கு ஆர்வமெல்லாம் ஒன்றும் கிடையாது. பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று முளைத்த சிந்தனைதான் அது: ஆட்டமன்கள் எப்படி வரிவசூல் செய்திருப்பார்கள்? இப்படி ஒரு யோசனை. மிகவும் சின்னவனாக இருந்த காலத்திலிருந்தே அம்மா சொல்லி வந்திருக்கிறார், எதையாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நூலகத்துக்குச் சென்று தேடு.
“பரவாயில்லை,” என்றேன். “அதுவொன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை. சும்மா தெரிந்துகொள்ளலாமே என்றுதான் . . .” இந்த அமானுஷ்யமான சூழலிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறிவிட வேண்டும் என்ற துடிப்பில் அங்கிருந்து இடத்தை காலி செய்யத் தயாரானேன்.
“என்ன விளையாடுகிறாயா?” கிழவர் இடைமறித்தார். “ஆட்டமன் சாம்ராஜ்ஜிய வரிவசூல் குறித்து நிறைய நூல்கள் எங்களிடம் இருக்கின்றன. நூலகத்தில் குறும்பு விளையாட்டு விளையாடலாம் என்ற எண்ணத்தோடு வந்திருக்றாயா? கிண்டலா உனக்கு?”
“இல்லை சார்,” நான் திக்கித் திணறினேன். “அது என் நோக்கம் அல்ல. யாரையும் கிண்டல் செய்வதற்காக வரவில்லை.”
“அப்படியானால் நல்ல பையனாக இங்கேயே காத்திரு.”
“சரி, சார்.”
கிழவர் நாற்காலியிலிருந்து எழுந்தார். கூனல் முதுகோடு, அறையில் பின்னால் இரும்புக்கதவைத் திறந்து மறைந்து போனார்.
அவர் திரும்பி வருவதற்காக அங்கேயே பத்து நிமிடங்களுக்கு நின்றிருந்தேன். விளக்கின் மேல்தட்டின் அடியில் குட்டியான கருவண்டுகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
கடைசியில் மூன்று கனமான புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு கிழவர் வந்தார். அவையெல்லாமே பயங்கரப் பழசானவை. புராதன காகித நெடி அறைக்குள் பரவியது.
கிழவர் பெருமிதத்தோடு, “உனக்கு விருந்துதான்,” என்றார். “ஆட்டமன் வரிவிதிப்பு முறைகள், ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள், ஆட்டமன்-துருக்கிய சாம்ராஜ்ஜியத்தில் எழுந்த வரி கலகமும் முறியடிப்பும். அபாரமான நூல்கள்தான், நீயே ஒப்புக்கொள்வாய்.”
பணிவுடன் “மிகவும் நன்றி,” என்றேன். புத்தகங்களை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.
“நில்!” என்றார் கிழவர் பின்னாலிருந்து. “இந்த மூன்று புத்தகங்களும் வெளியே கொண்டு செல்வதற்கானவை அல்ல. இந்த வளாகத்துக்குள்ளேயே வைத்து வாசிக்க வேண்டும்.”
4
ஆம். அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் முதுகிலும் ‘வளாகப் பயன்பாட்டுக்கு மட்டும்’ என்று சிவப்பு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.
“இவற்றை உள் அறையில் வைத்து வாசிக்க வேண்டும்,” என்றார் கிழவர்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். 5.20. “நூலகத்தின் வேலை நேரம் முடியப்போகிறதே. அம்மாவும் கவலைப்படுவார்கள். நான் போக வேண்டும்.”
கிழவரின் மயிரடர்ந்த புருவங்கள் நெரித்து ஒரே கோடாகின. “வேலைநேரம் முடிவதெல்லாம் பிரச்சனையே கிடையாது,” என்று முகம் சுளித்தார். “நான் சொல்வதைத்தான் செய்வார்கள்-இருக்கட்டும் என்று நான் சொன்னால் இருக்கட்டும்தான். கேள்வி என்னவென்றால், நான் செய்யும் உதவிக்கு உரிய மரியாதை தருகிறாயா இல்லையா என்பதுதான். இவ்வளவு கனமான புத்தகங்களை எதற்காக நான் சுமந்து வந்ததாக நினைக்கிறாய்? என் தேகப் பயிற்சிக்காகவா?”
“மன்னியுங்கள், உங்களைத் தொந்தரவு செய்வது என் நோக்கம் அல்ல. புத்தகங்களை வெளியே கொண்டு செல்லக் கூடாதென்று எனக்குத் தெரியாது.”
கிழவர் கொல்லென்று இருமி, கைக்குட்டையில் எதையோ கெட்டியாகத் துப்பினார். முகத்தில் இருந்த கரும்புள்ளிகள் வெறியோடு நடனமாடிக் கொண்டிருந்தன.
“உனக்கு என்ன தெரியும், தெரியாது என்பதைப்பற்றி அக்கறை இல்லை,” என்று சீறினார். “உன் வயதில் நான் இருந்தபோது இப்படியொரு வாய்ப்பு படிப்பதற்குக் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் இங்கே நீ நேரமாகிவிட்டது, சாப்பாட்டுக்கு தாமதமாகிவிடும் என்று சிணுங்கிக் கொண்டிருக்கிறாய். என்ன தைரியம் உனக்கு!”
“சரி, நான் இங்கேயே இருந்து படிக்கிறேன். ஆனால் வெறும் முப்பது நிமிடங்களுக்கு மட்டும்,” என்றேன். யாரிடமும் உறுதியாக முடியாது என்று சொல்வதில் நான் சமர்த்தன் இல்லை. “ஆனால் அதற்கு மேல் என்னால் தங்கியிருக்க முடியாது. நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.
கிழவரின் முகத்தில் இறுக்கம் சற்று தளர்ந்தது.
“ஆகவே, இங்கே தங்கி படிக்கிறாய்?”
“ஆம், ஆனால் முப்பது நிமிடங்களுக்கு மட்டும்.”
“சரி, இந்தப் பக்கமாக வா,” என்று கிழவர் தலையை அசைத்தார். உள் கதவுக்குப் பின்னால் இருட்டான நடைவழியில் ஒரேயொரு விளக்கு கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த ஏறக்குறைய இருட்டுக்குள் நுழைந்தோம்.
5
”என் பின்னால் வா,” என்றார் கிழவர். கொஞ்சதூரம் நடந்தவுடனேயே, நடைவழி இரண்டாகப் பிரிந்தது. கிழவர் வலப்பக்கம் திரும்பினார். அந்த வழியில் கொஞ்சதூரம் சென்றதும் இன்னொரு பிரிவு. இம்முறை இடதுபக்கம் திரும்பினார். அந்த நடைவழி இன்னும் செல்லச் செல்ல, இரண்டிரண்டாகப் பிரிந்து கொண்டே நீண்டுகொண்டிருக்க, கிழவர் சற்றும் தயங்காமல் வலமும் இடமுமாகத் திரும்பித் திரும்பி சென்று கொண்டேயிருந்தார். சில சமயங்களில் ஏதோ ஒரு கதவைத் திறந்து, முற்றிலும் வேறான இன்னொரு நடைவழிக்குள் நுழைந்தார்.
என் மனம் கலவரத்தில் இருந்தது. இது எல்லாமே அதீதமான விநோதம்தான். எங்கள் ஊர் நூலகத்திற்கு இப்படி ஒரு அடித்தளமும், அதில் இவ்வளவு விஸ்தார சிக்கலாக திருகுப்பாதைகளும் இருக்குமா? சாதாரணமாக பொது நூலகங்கள் எப்போதுமே பணப்பற்றாக்குளையில் இயங்குபவையாகவே இருக்கும். சின்னதாக ஒரு திருகுப்பாதையை அமைப்பது கூட அவர்களுக்கு கட்டுப்படியாகாது. இதைப்பற்றி கிழவரிடம் கேட்கலாமாவென்று யோசித்து, அவர் சத்தம் போடுவார் என்று பயந்து நிறுத்திக்கொண்டேன்.
கடைசியாக, இந்தப் பாதைப் பின்னால் ஒரு பெரிய இரும்புக் கதவில் முடிந்தது. கதவில் ‘வாசிப்பறை’ என்ற பலகை. அந்த வட்டாரமே நடுராத்திரியில் மயானம் போல படுநிசப்தத்தில் உறைந்திருந்தது.
கிழவர் பாக்கெட்டிலிருந்த கணகணவென்று ஒலிக்கும் ஒரு சாவிக் கொத்தை எடுத்து, இருப்பதிலேயே பெரிய, பழங்கால சாவியைத் தேர்ந்தெடுத்தார். சாவித்துளைக்குள் செருகிவிட்டு என்னைத் திரும்பி அர்த்த புஷ்டியோடு பார்த்தபடியே சாவியை வலப்புறமாகத் திருகினார். பூட்டு திறக்கும் சத்தம் பலமாக ஒலிக்க, கதவு நீளமாகக் கிறீச்சிட்டுக் கொண்டே திறந்தது.
“ம், ம், வந்தாகிவிட்டது,” என்றார் கிழவர். “உள்ளே போ.”
“உள்ளே வா?” என்று கேட்டேன்.
“ஆம், உள்ளேதான்.”
“கும்மிருட்டாக இருக்கிறதே?”
உள்ளே செல்ல மறுத்தேன். அண்டவெளியில் கருந்துளை ஒன்றை குத்தி வைத்திருப்பதைப்போல கதவுக்குப் பின்னால் இருட்டா இருந்தது.
6
கிழவர் என்னே நோக்கித் திரும்பி, நிமிர்ந்து முழு உயரத்துக்கு நின்றார். இப்போது திடீரென மிகவும் உயரமாக, பெரும் உருவத்தில் இருந்தார். அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவர் கண்கள் கீழே அந்திக்கருக்கலில் வெள்ளாட்டின் கண்களைப் போல பளிச்சிட்டன.
“அற்பத்தனமான விஷயங்களுக்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து புலம்புகிற பயலா நீ?”
“இல்லை சார், நான் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால் இது எனக்கென்னவோ-”
“போதும் உன் மழலைப் பேச்சு,” என்று கிழவர் கததினார். “ஏதாவது சாக்கு போக்கு, சமாதானம் சொல்லிக்கொண்டு, மற்றவர்கள் அக்கறையோடு உதவும் செயல்களை அலட்சியப்படுத்துபவர்களை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது, தெரிந்துகொள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் உதவாக்கரைகள் என்பேன்.”
“தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். உள்ளே செல்கிறேன்.” நான் ஏன் இப்படி இருக்கிறேன்? உடன்படாத விஷயங்களுக்கு உடன்பட்டுப் போவதும், செய்ய விருப்பமில்லாத விஷயங்களை மற்றவர்களின் கட்டாயத்துக்காக செய்வதும் என்று நான் இப்படி இருக்கிறேன்?
“கதவுக்கு வலதுபக்கத்தில் ஒரு படிக்கட்டு இருக்கும். கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அதில் கீழே இறங்கிச்செல். ஜாக்கிரதை, விழுந்துவிடாதே.”
நான் முதலில் மெதுவாக அடியெடுத்துச் சென்றேன். பின்னாலிருந்த கதவை கிழவர் மூடினதும், மொத்தமும் கும்மிருட்டாகிப் போனது. அவர் பூட்டும் சத்தம் தெளிவாக, உரக்கக் கேட்டது.
“ஏன் கதவைப் பூட்டுகிறீர்கள்?”
“அதுதான் விதி. கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.”
நான் என்ன செய்ய முடியும்? படியில் இறங்கினேன். அடித்தளத்துக்கு அடியில் இன்னொரு அடித்தளமா? முடிவின்றி படிகள் இறங்கிக் கொண்டே பிரேஸில்தான் வந்து முடியுமோ என்று தோன்றியது. கைப்பிடி துருவேறி சொரசொரப்பாக இருந்தது. சுற்றிலும், ஒரேயொரு ஒளித்துணுக்கும் தென்படவில்லை.
இறுதியில் படிக்கட்டின் முடிவை அடைந்தோம். தூரத்தில் ஒரு வெளிச்ச மினுங்கல் தெரிந்தது. உண்மையில் மிகவும் மங்கலான வெளிச்சம்தான், ஆனாலும் வெகுநேர இருட்டுக்குப் பழகியிருந்த என் கண்களைக் கூசவைக்கும்படி இருந்தது. அறையின் பின்னாலிருந்து யாரோ அணுகி என் கையைப் பற்றினர். அவன் குள்ளமாக இருந்தான். ஆட்டுத்தோலை உடையாக போர்த்தியிருந்ததை பார்க்க முடிந்தது.
“ஹேய், உன் வருகைக்கு நன்றி.” என்றான் அந்த ஆட்டு மனிதன்.
“குட் ஆஃப்டர்நூன்” என்ற பதிலளித்தேன்.
7
அது உண்மையான ஆட்டுத்தோல்தான். அந்த ஆட்டு மனிதனின் உடம்போடு அது ஒவ்வொரு அங்குலத்திலும் முழுமையாகப் பொருந்தி மூடியிருந்தது. முகத்துக்கு மட்டும் திறப்பு இருந்தது. அதன் வழியே ஒரு ஜோடி நட்பார்ந்த கண்கள் எட்டிப்பார்த்தன. இந்த உடை அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ஆட்டுமனிதன் என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்துவிட்டு, என் கையில் வைத்திருந்த மூன்று புத்தகங்களுக்கு பார்வையை திருப்பினான்.
“கடவுளே! நீ இங்கே படிப்பதற்காகத்தான் வந்தாயா? நிஜமாகவா?”
“ஆம்,” என்றேன்.
“அதாவது, உண்மையாகவே, நிஜமாகவே இந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவா வந்தாய்?”
ஆட்டு மனிதன் பேசும் விதத்தில் ஏதோ விளங்க முடியாத விநோதமான தன்மை இருந்தது. எனக்கு பதிலளிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.
“ம், சொல்லு,” என்று கிழவர் மிரட்டினார். “நீ இங்கே படிப்பதற்காகத்தானே வந்தாய்? அது உண்மைதானே? அவனுக்கு நேராகப் பதிலைச் சொல்லு.”
“ஆம், நான் இங்கே படிப்பதற்காகத்தான் வந்தேன்,”
கிழவர் ஆட்டு மனிதனிடம், “நன்றாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று சீறினார்.
ஆட்டு மனிதன் தயங்கினான்: “ஆனால், ஐயா . . . இவன் மிகவும் சிறுவன் அல்லவா?”
“பேசாதே!” கிழவர் இடியென வெடித்தார். பின்னால் வைத்திருந்த பையிலிருந்து ஒரு பிரம்பை உருவியெடுத்து ஆட்டுமனிதனின் முகத்துக்கு குறுக்காக அடித்தார்.” வாசிப்பறைக்கு இவனை கூட்டிச்செல்!”
அந்த அடியில் ஆட்டு மனிதன் கலங்கி, என் கையைப் பற்றிக் கொண்டான். பிரம்பு அவனுடைய உதட்டுக்குப் பக்கத்தில் சிவப்பு வடுவை ஏற்படுத்தியிருந்தது. “சரி, போகலாம்.”
“எங்கே?”
“வாசிப்பறைக்கு. படிப்பதற்காகத்தானே வந்திருக்கிறாய்?”
ஆட்டுமனிதன் ஒரு குறுகலான நடைவழியாக கூட்டிச் சென்றான். கிழவர் எங்களுக்குப் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு வந்தார். ஆட்டு மனிதனின் பின்புறத்தில் குட்டையாக வால் ஒன்று பொருத்தப்பட்டு, ஒவ்வொரு தப்படிக்கும் பெண்டுலம் போல அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டு வந்தது.
நடைவழியின் முடிவை அடைந்ததும் ஆட்டுமனிதன், “ஆ, வந்து சேர்ந்தாகவிட்டது நண்பனே,” என்றான்.
“ஒரு நிமிடம் பொறுங்கள், இது என்ன சிறைக்கூடமா?” என்று பயத்துடன் கேட்டேன்.
“ஆம்,” என்றான்.
“சரியாகச் சொல்லிவிட்டாயே!” என்றார் கிழவர்.
8
“நீங்கள் இப்படிச் சொல்லவேயில்லை,” என்றேன் கிழவரிடம் இவ்வளவு தூரம் நான் வந்ததே நாம் வாசிப்பறைக்குச் செல்கிறோம் என்று நீங்கள் சொன்னதால்தான்.”
“நீ பிடிக்கப்பட்டிருக்கிறாய்,” என்றான் ஆட்டுமனிதன். கூடவே தலையையும் ஆட்டினான்.
“ஆம், உன் கண்ணைக்கட்டி தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன்,” என்றார் கிழவர்.
“நீங்கள் எப்படி . . .”
“பேசாதே, முட்டாளே,” என்று சீறியபடியே பையிலிருந்து பிரம்பை எடுத்து என் தலையை நோக்கி வீசினார். சட்டென்று பின்னால் நகர்ந்து கொண்டேன். முகத்துக்குக் குறுக்கே தழும்பு வரவழைத்துக் கொள்ள விரும்பவில்லை நான்.
“உள்ளே போ. மேலே எதுவும் பேசக்கூடாது. இந்த மூன்று புத்தகங்களையும் முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை படித்து மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும். இன்றிலிருந்து ஒருமாதம் கழித்து நானே உன்னை சோதித்துப்பார்ப்பேன். இந்த மூன்று புத்தகங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டாய் என்றால் உனக்கு விடுதலை.”
“இவ்வளவு பெரிய புத்தகங்களை மனப்பாடம் செய்வது சாத்தியமில்லை. என் அம்மாவும் என்னைக் காணவில்லையென்று ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள் . . .”
கிழவர் பல்லைக் கடித்தபடி, பிரம்பை உருவியெடுத்து வேகமாக வீசினார். நான் துள்ளிக்கொண்டு விலக, அடி ஆட்டுமனிதனின் முகத்தில் விழுந்தது. மிகவும் பலமான அடி. நான் தப்பித்துவிட்ட கோபத்தில் ஆட்டுமனிதனை மீண்டும் அடித்தார். குரூரம்.
“இவனை சிறையில் தள்ளு. இந்த வேலை உன்னுடையது,” கிழவர் உத்தவிட்டு அகன்றார்.
ஆட்டுமனிதனிடம்,” வலிக்கிறதா?” என்று கேட்டேன்.
“பரவாயில்லை. ஹேய், எனக்கு இதெல்லாம் பழக்கம்தான்.” என்றான். அவனைப் பார்த்தால் நன்றாகத்தான் தெரிந்தான்.
“எனக்குப் பிடிக்கவில்லைதான், ஆனாலும் உன்னை உள்ளே வைத்து பூட்டியாக வேண்டும்.”
“நான் முடியாது என்றால்? உள்ளே போக மறுத்தால்? என்ன ஆகும்?”
“அப்புறம் அவர் என்னை மேலும் பலமாக அடிப்பார்.” அந்த ஆட்டு மனிதனைப்பார்க்கப் பாவமாக இருந்தது. சிறைக்குள் சென்றேன். ஒரு சாதாரண படுக்கை, ஒரு மேஜை, கை அலம்புமிடம், கழிப்பறை எல்லாம் உள்ளேயே இருந்தது. கை கழுவுமிடத்துக்குப் பக்கத்தில் டூத் பிரஷ்ஷும், ஒரு கப்பும் இருந்தன. இரண்டுமே புதிதாகவோ, சுத்தமாகவோ தெரியவில்லை. ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருந்த பற்பசை எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆட்டுமனிதன் மேஜை விளக்கை போட்டு, நிறுத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
“ஹேய், இங்கே பாரேன்,” என்னிடம் திரும்பி பல்லிளித்தான். “எல்லாமே நல்லாயிருக்கு இல்லே?”
9
“உனக்கு தினமும் மூன்றுவேளை உணவு எடுத்து வருவேன். மூன்று மணிக்கு சிற்றுண்டிக்காக டோநட் கேக்குகள் தருவேன். நானே சுட்டு எடுத்து வருவேன் மொரமொரப்போடு நல்ல சுவையில் இருக்கும்.”
புதிதாகச் சுட்ட டோநட்டுகள் என் அபிமான பண்டங்களில் ஒன்று.
“சரி, காலை நீட்டு.”
காலை நீட்டினேன்.
கட்டிலுக்கு அடியிலிருந்து கனமான இரும்பு குண்டையும் அதனோடு இணைந்திருந்த சங்கிலியையும் எடுத்தான். சங்கிலியை என் கணுக்காலில் சுற்றிப் பூட்டினான். சாவியை சட்டைப்பையில் போட்டுக் கொண்டான்.
“எனக்கு பயங்கரமாகக் குளிருகிறது,” என்றேன்.
“கவலைப்படாதே, பழகிவிடும்.”
“ஆட்டுமனிதரே, நான் உண்மையிலேயே இங்கு ஒரு முழு மாதத்துக்கு தங்கியிருக்க வேண்டமா?”
“ம்ம், அதுதான் கால அளவு.”
“ஆனால் இந்தப் புத்தகங்களை நான் முழுசாக மனப்பாடப்படுத்திவிட்டால் என்னை விடுவித்துவிடுவார், இல்லையா?”
“அப்படி நடக்குமென்று தோன்றவில்லை.”
“அப்படியானால் என்னை என்ன செய்வார்கள்?”
ஆட்டுமனிதன் தலையை ஒருபக்கமாக சாய்த்தான். “பையா அதையெல்லாம் கேட்காதே.”
“தயவுசெய்து சொல்லுங்கள். என் அம்மா வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்.”
“சரி, பையா. நேராகவே சொல்லிவிடுகிறேன். உன் உச்சந்தலையை வெட்டி, உன் மூளையை உறிஞ்சி சாப்பிட்டுவிடுவார்.”
விக்கித்து ஸ்தம்பித்தேன். நா எழவில்லை.
மெதுவாக சமாளித்துக்கொண்டு, “அதாவது . . . அதாவது, அந்தக் கிழவர் என் மூளையை சாப்பிடப் போகிறாரா?”
“ஆம், எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது, ஆனால் அப்படித்தான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது,” என்றான் ஆட்டுமனிதன் தயக்கத்தோடு.
10
படுக்கையில் சரிந்து உட்கார்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டேன். எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? நான் செய்த ஒரே தவறு இந்த நூலகத்துக்கு வந்து சில புத்தகங்களை எடுக்க வந்தது.
“கவலைப்படாதே,” என்று ஆட்டுமனிதன் என்னைத் தேற்றினான். “உனக்கு சாப்பாடு எடுத்து வருகிறேன். நல்ல சூடான உணவு எனக்கு ஆறுதல் அளிக்கும்.”
“ஐயா ஆட்டுமனிதரே, அந்தக் கிழவர் எதற்காக என் மூளையைச் சாப்பிட விரும்புகிறார்?”
“ஏனென்றால் அறிவு நிரம்பிய மூளைகள் உண்பதற்கு சுவையானவை, அதனால்தான் அவை மிகவும் ருசியாக, பாலேடுபோல இருக்கும். அதே நேரத்தில் ஒருவித மொரமொரப்போடும் இருக்கும்.”
“பிற்பாடு சாப்பிடலாம் என்பதற்காகத்தான் என்னை ஒரு மாதத்துக்கு மனப்பாடம் செய்யச் சொல்லியிருக்கிறாரா?”
“அதற்காகத்தான்.”
“என்னைப் பற்றி கொஞ்சம் யோசித்துப்பார். இது குரூரம் இல்லையா?”
“ஹேய், இதைப்போன்ற விஷயங்கள்தான் எல்லா இடங்களிலும் நூலகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே, தெரியாதா? அதாவது கிட்டத்தட்ட இதைப்போலவே.”
இந்தச் செய்தி என்னைத் துணுக்குற வைத்தது. “எல்லா நூலகங்களிலுமா?” என் குரல் திக்கியது.
“உனக்கு எல்லா அறிவுச்செல்வத்தையும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்க என்னதான் ஆதாயம் கிடைக்கப் போகிறது?”
“அதற்காக வருபவர்களில் தலையைப் பிளந்து மூளையைச் சாப்பிடுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அத்துமீறிய செயலல்லவா?”
ஆட்டுமனிதன் என்னை சோகமாகப் பார்த்தான். “உன்னுடைய துரதிருஷ்டம். அனுபவித்துதான் ஆகவேண்டும், வேறென்ன?”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
“இல்லை, அது நடக்காத காரியம். அதற்கு நான் உதவினால் என்னை கம்பளிப்பூச்சிகள் நிறைந்த ஒரு பெரிய ஜாடிக்குள் போட்டு அடைத்துவிடுவார். அது ஒரு மகாபெரிய ஜாடி. உள்ளே பல்லாயிரக்கணக்கான கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். மூன்று நாட்களுக்கு அடைத்து வைத்திருப்பார்.”
“பயங்கரம்.”
“அதனால், உன்னைத் தப்பியோட வைக்க என்னால் முடியாது, புரிகிறதா பையா? மன்னித்துக்கொள்.”
11
அச்சிறிய சிறை அறையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு ஆட்டுமனிதன் அகன்றான். அந்தக் கடினமாக மெத்தையில் குப்புறப் படுத்துக்கொண்டு முழுசாக ஒரு மணி நேரத்துக்குத் தேம்பித்தேம்பி அழுதேன். கோதுமை உமியால் நிரப்பப்பட்டிருந்த அந்த நீலநிறத் தலையணை தொப்பலாக நனைந்தது. கணுக்காலில் கட்டப்பட்டிருந்த இரும்புக் குண்டு ஒரு டன் இருக்கும்போல கனத்தது.
கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். சரியாக 6:30. அம்மா இரவு உணவை தயாரித்து முடித்துவிட்டு எனக்காகக் காத்துக்கொண்டிருப்பர். சமையலறைக்குள் குறுக்கம் நெடுக்குமாக கவலையோடு நடந்துகொண்டு நொடிக்கொருதரம் கடிகாரத்தை அவர் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பது மனக்கண்ணில் தோன்றியது. இன்னும் ஒருசில மணிநேரத்துக்கு நான் போகாவிட்டால் அவர் உடைந்து போய்விடுவார். அப்படிப்பட்ட அம்மாதான் அவர். எது நடந்தாலும் இருப்பதிலேயே மோசமானதை கற்பனை செய்துகொள்வார். இந்தக் கற்பனை வளர்ந்துகொண்டே போகும். ஒன்று எல்லாவற்றையும் கெடுதலாகவே முடியுமென்று நம்பிக் கொண்டிருப்பார், இல்லாவிட்டால் சோபாவில் அசையாமல் உட்கார்ந்து தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டிருப்பர்.
ஏழு மணிக்கு யாரோ கதவைத் தட்டினர். சுருக்கமான மெல்லிய தட்டல்.
“உள்ளே வரலாம்,” என்றேன்.
பூட்டில் சாவி திருகப்படுவது கேட்டது. ஒரு இளம்பெண் சின்ன தள்ளுவண்டியில் உணவு வகைகளை அடுக்கி தள்ளிக்கொண்டு வந்தாள். மிகவும் அழகான பெண். பார்க்கும்போதே கண்கள் கூசும் அளவுக்கு அதீத அழகு. என் வயதுதான் இருப்பாள். கழுத்து, மணிக்கட்டுகள், கணுக்கால்கள் எல்லாமே லோசாக இறுக்கினாலே உடைந்துவிடும் போலத் தோன்றினாள். அவளது நீண்ட நேரான கூந்தல் நகை இழைகளால் பின்னப்பட்டவைபோல மின்னின. என் முகத்தை ஒரு கணம் உற்றுப்பார்த்தாள். எதுவும் பேசாமல் வண்டியில் இருந்த உணவுப்பதார்த்தங்களை எடுத்து மேசையின் மேல் வைத்தாள். அவள் அழகில் ஸ்தம்பித்து, பேச்சிழந்து அமர்ந்திருந்தேன்.
உணவு வகைகள் உற்சாகம் எழுப்பக்கூடியனவாக இருந்தன. கடல் அர்ச்சின் சூப் கொதிக்கக் கொதிக்க இருந்தது. ஸ்பானிய மேக்கெரல் மீன் வறுவல் (துவர்ப்பு கிரீமோடு), எள்ளுவிதை தூவலோடு வெண்ணிற ஆஸ்பாரகஸ், பச்சடிக் கீரையும் வெள்ளரிக்காயும் சேர்ந்த கூட்டு, வெண்ணெயில் வறுத்த ரொட்டி. ஒரு பெரிய கிளாஸில் திராட்சைச் சாறு. எல்லாவற்றையும் அழகாக மேசையில் அடுக்கி வைத்துவிட்டு, என் பக்கம் திரும்பி, தன் கைகளினால் பேசினாள்: <<கண்ணீரைத் துடைத்துக்கொள். சாப்பிடத் தொடங்கு.>>
12
“உன்னால் பேசமுடியாதா?” என்று அவளிடம் கேட்டேன்.
<<இல்லை, என்னால் முடியாது. நான் சின்னவளாக இருந்தபோதே என் குரல்வளை அழிக்கப்பட்டுவிட்டது.>>
“அழிக்கப்பட்டதா?” என்று வியப்போடு கூவினேன். “யார் செய்தது?”
அவள் பதில் அளிக்காமல் இனிமையாகப் புன்னகைத்தாள். மிகவும் ஜகஜ்ஜோதியான புன்னகை அது. சுற்றியுள்ள காற்று அதில் ஜொலிப்பதைப் போலிருந்தது.
<<தயவுசெய்து புரிந்துகொள்,>> என்றாள். <<அந்த ஆட்டுமனிதன் கெட்டவர் அல்ல. இரக்கமனம் கொண்டவர். ஆனால் அந்தக் கிழவர்தான் அவரை பயமுறுத்தி வைத்திருக்கிறார்.>>
“புரிகிறது, ஆனாலும் . . .”
அவள் நெருங்கி வந்தாள். என் கை மீது அவள் கையை வைத்தாள். சிறிய, மிக மென்மையான கை. என் இதயம் இரண்டாக உடையப்போகிறது என்று நினைத்தேன்.
<<சூடாக இருக்கும்போதே சாப்பிட்டு வடு,>> என்றாள். <<சூடான உணவு சக்தி தரும்>>
தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள். மே மாதக் காற்றைப்போல இலேசாக, வேகமாக வீசிவிட்டு மறைந்து போயிருந்தாள்.
உணவு சுவையாகவே இருந்தது. ஆனால் அவற்றில் பாதியைத்தான் சாப்பிடமுடிந்தது. நான் இப்போது வீட்டுக்குப் போகாவிட்டால், அம்மாவுக்கு கவலை அதிகமாகி இன்னொரு மனக்குலைவு ஏற்படும். நான் வளர்த்துவரும் என் பிரியமான கரும்பச்சை குருவிக்கு உணவளிக்க மறந்து போவார், அது பட்டினியில் செத்துப் போகும்.
இங்கிருந்து எப்படி தப்பிப்பது? கணுக்காலில் கனமான இரும்புக்குண்டு கட்டப்பட்டிருக்கிறது, கதவு பூட்டப்பட்டிருக்கிறது. எப்படியோ கதவைத் திறந்துவிட்டாலும்கூட, அந்தச் சிக்கலான திருகுவழிப் பாதையில் புகுந்து எப்படி வெளியே வருவது? பெருமூச்செறிந்தேன். மீண்டும் அழுகை வந்தது. படுக்கையில் சுருண்டு தேம்பியழுது கொண்டிருந்தால் எதுவும் நடக்கப் போவதில்லை. என்னைத் தேற்றிக்கொண்டு மிச்ச உணவை சாப்பிட்டு முடித்தேன்.
13
பேசாமல் மேசையில் அமர்ந்து படிக்கத் தொடங்குவதுதான் நான் செய்யக்கூடிய நல்ல விஷயமாக இருக்குமென்று முடிவெடுத்தேன். தப்பித்துச்செல்ல ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டுமானால், முதலில் என் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும். அதாவது அவரது உத்தரவுக்கு கீழ்படிந்து நடப்பதைப்போல காட்டிக்கொள்ள வேண்டும். அதுவொன்றும் அவ்வளவு கடினமாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது என்ன இருந்தாலும். நான் உத்தரவுகளுக்கு உடனடியாகக் கீழ்படியும் பையன்தானே.
‘ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள்’ஐ எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்தப்புத்தகம் துருக்கிய செம்மொழியில் எழுதப்பட்டிருந்தது; இருந்தாலும் விநோதமாக அதை என்னால் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு சொல்லும் என் ஞாபகத்தில் பதிந்து கொண்டே வந்தது. என்ன காரணத்துக்காகவோ, படிக்கும் எல்லாவற்றையும் என் மூளை உறிஞ்சிக்கொண்டே வந்தது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட, இடுப்பில் கொடுவாளோடு இஸ்தான்புல்லின் தெருக்களில் வரிவசூல் செய்கின்ற துருக்கிய வரித்தண்டலர் இபின் அர்மத் ஹஸீராக மாறினேன். காற்றில் பழவாசனையும், கோழிகளும், புகையிலையும் காபியும் கலந்த மணம் தேங்கிப்போன ஆறைப்போல நகரத்தின் மீது கனமாக போர்த்தியிருந்தது. வணிகர்கள் தெருவோரங்களில் அமர்ந்து பேரீச்சம் பழங்களையும், துருக்கிய ஆரஞ்சுப் பழங்களையும் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர். ஹஸீர் அமைதியான, அலட்டிக்கொள்ளாத இயல்பினன். அவனுக்கு மூன்று மனைவிகள், ஆறு பிள்ளைகள். என்னிடம் இருக்கும் வளர்ப்புக் குருவியைப் போலவே அவனிடமும் ஒரு பேசும் கிளி இருந்தது.
ஒன்பது மணி கழித்து சற்று நேரத்தில் ஆட்டுமனிதன் கதவைத் திறந்து கொண்டு கோக்காவும் பிஸ்கட்டுகளும் எடுத்து வந்தான்.
“பரவாயில்லையே, மாறிவிட்டாய்!” என்றான். “ஹேய், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கொஞ்சம் கோக்கா சூடாகக்குடி.”
புத்தகத்தை வைத்துவிட்டு கோக்காவையும் பிஸ்கட்டையும் எடுத்தேன்.
“ஆட்டுமனிதரே, கொஞ்சநேரத்துக்கு முன் ஒரு அழகான இளம்பெண் வந்தாளே, யார் அது?”
“என்னது? இன்னொருமுறை சொல்லு. அழகான பெண்ணா?”
“எனக்கு இரவு உணவு கொண்டு வந்தாளே-அவள்.”
ஆட்டுமனிதன் முகம் குழம்பியது. “விநோதம் உனக்கு இரவு உணவு நான்தானே எடுத்து வந்தேன்? நீ படுக்கையில் படுத்து தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தாய். நன்றாகப் பார், நான் அழகான பெண்ணா? நான் வெறும் ஆட்டுமனிதன்.
ஒருவேளை நான் கனவு கண்டு கொண்டிருந்தேனோ?
ஆனாலும் அடுத்தநாள் காலையிலேயே அந்த மர்மப்பெண் மீண்டும் வந்தாள். இம்முறை சாலட்டோடு டூ லௌஸ் சாசேஸ், ஸ்டஃப்டு ஸ்நாப்பர், முள்ளங்கி சாலட் பெரிய க்ரவாஸே ரொட்டி, தேன் கலந்த பிளாக் டீ. பார்க்கும்போதே பசியெடுத்தது.
<<நிதானமாக சாப்பிடு. மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும்>> அவள் கைகளினால் பேசினாள்.
“தயவுசெய்து நீ யார் என்று சொல்,” என்றேன்.
<<நான், நான்தான். வேறென்ன?>>
“ஆனால் அந்த ஆட்டுமனிதர் உன்னை ஒரு கற்பனைத் தோற்றம் என்கிறார். நீ என்ற ஒன்று இல்லவே இல்லையென்று-”
அந்தப் பெண் விரலை உயர்த்தி அவளுடைய மெல்லிய உதட்டின் மேல் வைத்தாள். உடனே மௌனமானேன்.
<<ஆட்டுமனிதனுக்கென்று ஓர் உலகம் இருக்கிறது. எனக்கென்று ஒன்று. உனக்கென்று ஒன்று. நான் சொல்வது சரியா?>>
“சரிதான்.”
<<ஆட்டுமனிதனின் உலகத்தில் நான் இருக்கவில்லை என்பதற்காக நான் இல்லவேயில்லை என்று சொல்லிவிட முடியாதல்லவா?>>
“புரிகிறது,” என்றேன். “நமது உலகங்கள்-உனது உலகம், எனது உலகம், ஆட்டுமனிதரின் உலகம், எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. சில நேரங்களில் அவை ஒன்றின் மேல் மற்றொன்று கவிந்துகொள்கின்றன, சில நேரங்களில் தனித்திருக்கின்றன. இதுதானே நீ சொல்வது?”
அவள் சின்னதாக இருமுறை தலையசைத்தாள்.
நான் ஒன்றும் முழு மூடன் அல்ல. அந்தப் பெரிய கருப்புநாய் என்னைக் கடித்ததற்குப் பிறகு என் மனம் சற்றுக் குழம்பிவிட்டது. அதற்கப்புறம் முற்றிலுமாக சரியாகவே இல்லை.
அந்தப் பெண் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு மேசையில் நான் இரவு உணவை உண்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கைகள் முட்டிகளின் மீது அழகாக கோர்த்துக் கொண்டிருக்க, உதய ஞாயிறின் கதிர்களில் தோய்ந்தபடி அமர்ந்திருக்கும் கண்ணாடிச் சிலை போலத் தெரிந்தாள்.
15
“உனக்கு என் அம்மாவையும் என் வளர்ப்புக் குருவியையும் அறிமுகம் செய்தாக வேண்டும்,” என்றேன். “என் வளர்ப்புக்குருவி ரொம்ப கெட்டிக்காரக்குருவி. அழகாக இருக்கும்.”
அந்தப்பெண் தலையை லேசாக ஒரு பக்கம் சாய்த்தாள்.
“என் அம்மாவும் இனிமையானவர். ஆனால் என்னைப்பற்றி அதீதமாகக் கவலைப்படுவார். அதற்குக் காரணம் நான் சின்னவனாக இருந்தபோது ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டதுதான்.”
<<என்ன மாதிரியான நாய்?>>
“கருப்புநாய், அதன் கழுத்தில் நகைகள் பதித்த தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கண்கள். கனமான கால்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆறு கூரான நகங்கள். அதன் காதுகள் முனையில் இரண்டாகப் பிளந்திருந்தன. வெயிலில் கன்றிப்போனதைப் போல மூக்கு நுனி செம்பழுப்பில் இருந்தது. உன்னை எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா?”
<<இல்லை, கடித்ததில்லை. சரி, நாயைப்பற்றி பேசாமல், சாப்பிட்டு முடி>>
பேச்சை நிறுத்திவிட்டு, சாப்பிட்டு முடித்தேன். தேன் கலந்த டீயை குடித்தேன். இலகுவாக, இனிமையாக உணரத் தொடங்கினேன்.
“இந்த இடத்திலிருந்து நான் தப்பித்தாக வேண்டும் என் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். என் குருவிக்கு நான் தீனி போடாவிட்டால், சாப்பிடாமல் செத்துப் போகும்.”
<<என்னையும் உன்னோடு கூட்டிச் செல்கிறாயா?>>
“நிச்சயமாக. ஆனால் எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. இரும்பு குண்டை காலில் கட்டிவைத்திருக்கிறார்கள். வெளியே செல்லும் வழி வலைப்பின்னலாக இருக்கிறது. நான் தப்பிச் சென்றுவிட்டால் அந்தக் கிழவர், ஆட்டுமனிதருக்கு பயங்கரமான தண்டனை கொடுப்பார். என்னைத் தப்பவிட்டதற்காக.”
<<ஆட்டு மனிதனையும் நம்மோடு கூட்டிச் சென்றுவிடலாம் நாம் மூவரும் ஒன்றாகத் தப்பித்துவிடுவோம்.>>
“அவர் நம்மோடு சேர்ந்து கொள்வார் என்று நினைக்கிறாயா?”
அவள் பிரகாசமாகப் புன்னகைத்தாள்.
பின், முந்தைய நாளைப்போலவே சற்றே திறந்திருந்த கதவின் இடைவெளியில் லாவகமாகப் புகுந்து வெளியேறினாள்.
அவள் சின்னதாக இருமுறை தலையசைத்தாள்.
நான் ஒன்றும் முழு மூடன் அல்ல. அந்தப் பெரிய கருப்புநாய் என்னைக் கடித்ததற்குப் பிறகு என் மனம் சற்றுக் குழம்பிவிட்டுது. அதற்கப்புறம் முற்றிலுமாக சரியாகவே இல்லை.
அந்தப் பெண் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு மேசையில் நான் இரவு உணவை உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கைகள் முட்டிகளின் மீது அழகாக கோர்த்துக் கொண்டிருக்க, உதய ஞாயிறின் கதிர்களில் தோய்ந்தபடி அமர்ந்திருக்கும் கண்ணாடிச் சிலை போலத்தெரிந்தாள்.
15
“உனக்கு என் அம்மாவையும் என் வளர்ப்புக் குருவியையும் அறிமுகம் செய்தாக வேண்டும்,” என்றேன். “என் வளர்ப்புக் குருவி ரொம்ப கெட்டிக்காரக்குருவி அழகாக இருக்கும்.”
அந்தப்பெண் தலையை லேசாக ஒரு பக்கம் சாய்த்தாள்.
“என் அம்மாவும் இனிமையானவர். ஆனால் என்னைப் பற்றி அதீதமாகக் கவலைப்படுவார். அதற்குக் காரணம் நான் சின்னவனாக இருந்தபோது ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டதுதான்.”
<<என்ன மாதிரியான நாய்?>>
“கருப்புநாய். அதன் கழுத்தில் நகைகள் பதித்த தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கண்கள். கனமான கால்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆறு கூரான நகங்கள். அதன் காதுகள் முனையில் இரண்டாகப் பிளந்திருந்தன. வெயிலில் கன்றிப்போனதைப் போல மூக்கு நுனி செம்பழுப்பில் இருந்தது. உன்னை எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா?”
<<இல்லை, கடித்ததில்லை. சரி, நாயைப்பற்றி பேசாமல், சாப்பிட்டு முடி.>>
பேச்சை நிறுத்திவிட்டு, சாப்பிட்டு முடித்தேன். தேன் கலந்த டீயை குடித்தேன். இலகுவாக, இனிமையாக உரைத் தொடங்கினேன்.
“இந்த இடத்திலிருந்து நான் தப்பித்தாக வேண்டும். என் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். என் குருவிக்கு நான் தீனி போடாவிட்டால், சாப்பிடாமல் செத்துப் போகும்.”
<<என்னையும் உன்னோடு கூட்டிச் செல்கிறாயா?>>
“நிச்சயமாக ஆனால் எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. இரும்பு குண்டை காலில் கட்டிவைத்திருக்கிறார்கள். வெளியே செல்லும் வழி வலைப்பின்னலாக இருக்கிறது. நான் தப்பிச் சென்றுவிட்டால் அந்தக் கிழவர், ஆட்டுமனிதருக்கு பயங்கரமான தண்டனை கொடுப்பார். என்னைத் தப்பவிட்டதற்காக.”
<<ஆட்டுமனிதனையும் நம்மோடு கூட்டிச் சென்றுவிடலாம் நாம் மூவரும் ஒன்றாகத் தப்பித்துவிடுவோம்.>>
“அவர் நம்மோடு சேர்ந்துகொள்வார் என்று நினைக்கிறாயா?”
அவள் பிரகாசமாகப் புன்னகைத்தாள்.
பின், முந்தைய நாளைப்போலவே சற்றே திறந்திருந்த கதவின் இடைவெளியில் லாவகமாகப் புகுந்து வெளியேறினாள்.
16
மேசையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது பூட்டில் சாவியைத் திருகும் சத்தம் கேட்டது. ஆட்டுமனிதன் ஒரு தட்டில் டோநட்டுகள் லெமனேட் சகிதம் உள்ளே நுழைந்தான்.
“உன்னிடம் முன்பு வாக்களித்திருந்த டோநட்டுகள். அடுப்பிலிருந்து நேராக எடுத்து வருகிறேன்.”
“நன்றி, ஆட்டுமனிதர் அவர்களே.”
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஒரு டோநட்டை எடுத்துக் கடித்தேன். மேலே மொரமொப்பாகவும், உள்ளே மெத்தென்றும் அற்புதமான சுவையுடன் வாயிலிட்டவுடன் கரைந்தது.
“நான் சாப்பிட்டதிலேயே மிகவும் சுவையான டோநட் இதுதான்,” என்றேன்.
“இப்போதுதான் இவற்றை சுட்டு முடித்தேன். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்வேன்.”
“நீங்கள் மட்டும் டோநட் உணவகம் திறந்தால் அமோகமாக நடக்கும்,” என்றேன்.
“நானும் அதைப்பற்றி யோசித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கும், இல்லையா?”
“உங்களால் முடியும்.”
“ஆனால் யார் என்னுடைய கடைக்கு வருவார்கள்? நான் விநோதமாக உடையணிபவன். அப்புறம் என் பற்களைப்பார். சுத்தமாகப் பராமரிப்பதே கிடையாது.”
“நான் உங்களுக்கு உதவுகிறேன்,” என்றேன். டோநட்டுகளை நான் விற்கிறேன். வாடிக்கையாளர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். பண விவகாரங்களையும், விளம்பரம் தருவதையும்கூட நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் கடையின் பின்கட்டில் டோநட்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும். எப்படி பல் விளக்குவது என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.”
“ஆஹா, இது நல்ல யோசனை,” என்றான் ஆட்டுமனிதன்.
17
ஆட்டுமனிதன் கிளம்பிச் சென்றதும் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். முன்பைப்போலவே ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள் நூலின் ஆசிரியர் இபின் அர்மூத் ஹஸீராக மாறினேன். பகல் முழுக்க இஸ்தான்புல் வீதிகளில் வரிவசூல் செய்து கொண்டிருந்தேன். மாலையானதும் வீட்டுக்குத் திரும்பி எனது பேசும் கிளிக்கு உணவளித்தேன். இரவு வானில் மெல்லி கோடாக பிறைச்சந்திரன் மிதந்து கொண்டிருந்தது. தூரத்தில் யாரோ புல்லாங்குழல் வாசிப்பது கேட்டது. என்னுடைய ஆப்பிரிக்க வேலையாள் அறையில் ஊதுவத்தி ஏற்றி வைத்துவிட்டு, கொசுவிரட்டி போன்ற ஏதோவொன்றை வைத்து பூச்சிகளை வைத்து விரட்டிக் கொண்டிருந்தான்.
என் மூன்று மனைவிகளில் ஒருத்தியான அந்த மிக அழகான இளம்நங்கை எனக்காக படுக்கையறையில் காத்திருந்தாள். ஒவ்வோரிரவும் எனக்கு உணவு பரிமாறுவது அவள்தான்.
<<அழகான நிலா>> என்றாள். <<நாளை அமாவாசை. வானம் முழு இருட்டாக இருக்கும்.>>
“கிளிக்கு உணவளிக்க வேண்டும்,” என்றேன்.
<<கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்கள் கிளிக்கு உணவிட்டுவிடவில்லையா?>> என்று கேட்டாள்.
“நீ சொல்வது சரிதான். நான் உணவிட்டுவிட்டேன்,” என்றேன் இபின் அர்மூத் ஹஸீராகிய நான்.
அவளுடைய பட்டுமேனி பிறைநிலவொளியில் மின்னியது. நான் மெய்மறந்திருந்தேன்.
<<அழகான நிலா>>, அவள் திரும்பவும் சொன்னாள். <<அமாவாசை நமது தலைவிதியை மாற்றும்>>
“அப்படியானால் நல்லது,” என்றேன்.
18
குருட்டு டால்ஃபினைப்போல அமாவாசை இரவு மௌனமாக நெருங்கி வந்தது.
அன்று மாலை கிழவர் என்னைப் பார்ப்பதற்கு வந்தார். நான் புத்தகத்தில் சூழ்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சியைக் கண்டு எனக்கும் மகிழ்ச்சி கூடியது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
தாடையைச் சொறிந்து கொண்டே, “உன்னைப் பாராட்ட வேண்டும்,” என்றார். “நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படித்துவந்திருக்கிறாய். நல்ல பையன்தான் நீ.” என்றேன். மற்றவர்கள் பாராட்டினாலும் எனக்குப் பிடிக்கும்.
“நீ எவ்வளவு வேகமாக இந்தப்புத்தகங்களை மனப்பாடம் செய்து முடிக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரமாக உனக்கு விடுதலை கிடைக்கம்,” என்றார். கிழவர் ஒரு விரலை உயர்த்திக்காட்டி, “புரிகிறதா?” என்றார்.
“ஆம்,” என்றேன்.
“வேறு ஏதாவது வேண்டுமா?”
“ஆம், என் அம்மாவும், என் வளர்ப்புக் குருவியும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து சொல்வீர்களா? அதுதான் எனக்கிருக்கும் கவலை.”
கிழவர் முகத்தை சுளித்தார். “உலகம் தனக்கான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது, தெரிகிறதா?” என்றார். “ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைவுகள், ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் செல்கின்றனர். உன் அம்மாவும் அப்படியே, உன் குருவியும் அப்படியே. எல்லோருக்கும் அப்படியே. உலகம் தனக்கான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.”
அவர் என்ன சொல்கிறார் என்று புரியாவிட்டாலும், அவர் பேசி முடித்ததும் கீழ்படிந்து, “ஆம், ஐயா” என்றேன்.
19
கிழவர் கிளம்பிச்சென்ற சிறிதுநேரத்தில் அந்தப்பெண் வந்தாள். எப்போதும் போலவே, சற்றே திறந்த கதவின் பிறவு வழியே வழுக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.
“இன்றிரவு அமாவாசை,” என்றேன்.
படுக்கையின் மீது மௌனமாக அமர்ந்தாள். மிகவும் சோர்வுற்றிருப்பவன் போல காணப்பட்டாள். அவளுடைய நிறம் மங்கிவிட்டிருந்தது. முழு உடலும் மெல்லீடாக மாறி, அவளுக்குப் பின்னால் இருந்த சுவர் ஊடுருவித் தெரிந்தது.
<<இது அமாவாசையால்தான்>> என்றாள். <<பல விஷயங்களை இந்தநாள் நம்மிடமிருந்து இழக்க வைத்து விடுகிறது.>>
“இதனால் என் கண்கள்தான் கூசுகின்றன,” என்றேன்.
அவள் என்னைப்பார்த்து அழகாகத் தலையை அசைத்தாள். <<நிலவு உன்னை பாதிப்பதில்லை. அதனால் உனக்கு எந்த சிக்கலும் வராது. நிச்சயமாக நீ தப்பிச் சென்றுவிடுவாய்.>>
“அப்படியானால் நீ?”
<<என்னைப்பற்றி கவலைப்படாதே. நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தப்பிக்க முடியுமாவென்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நான் பின்னால் வந்து சேர்ந்து கொள்வேன்.>>
“நீ இல்லாமல் திரும்பிச் செல்லும் வழியை நான் எப்படி கண்டுபிடிப்பேன்?”
அவள் பதில் அளிக்கவில்லை. பதிலாக அருகில் வந்து என் கன்னத்தில் சின்னதாக முத்தமிட்டாள். பின்னால் நழுவிச் சென்று, கதவுப் பிளவின் வழியே புகைபோல நுழைந்து வெளியேறினாள். ஸ்தம்பித்து, வெகுநேரம் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தேன். அந்த முத்தம் என்னை முற்றிலுமாக உலுக்கியெடுத்துவிட்டதில், எதையுமே தெளிவாக சிந்திக்க முடியாதிருந்தது. அதே நேரத்தில் என் கவலை அனைத்துமே கவலை தவிர்த்த கவலையாக மாறிவிட்டிருந்தது. குறிப்பாக கவலையென்ற ஒன்று இல்லாத எந்தக் கவலையும் இறுதியில் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத கவலையாகத்தான் ஆகிவிடுகிறது.
20
கொஞ்சநேரத்தில் ஆட்டுமனிதன் திரும்பிவந்தான். தட்டில் டோநட்டுகளை உயரமாக அடுக்கி வைத்திருந்தான்.
“ஹேய், என்ன விஷயம்? ரொம்பவும் சோர்வாகத் தெரிகிறாய். உடம்பு சரியில்லையா, என்ன?”
“இல்லை, யோசித்துக் கொண்டிருந்தேன்.”
“நான் கேள்விப்பட்டது நிஜமா? இன்றிரவு இங்கிருந்து தப்பிக்கப் போகிறாயாமே? நானும் கூட வந்துவிடட்டுமா?”
“தாராளமாக, நீங்களும் வரலாம். சரி, உங்களுக்கு யார் சொன்னது?”
“கொஞ்சநேரத்துக்கு முன்னால் தாழ்வாரத்தில் ஒரு பெண் கடந்துபோனாள். அவள்தான் சொன்னாள். நீங்கள் இருவரும் தப்பித்துப் போகப் போவதாகச் சொன்னாள். இந்த இடத்தில் இப்படி ஒரு அழகான பெண் இருப்பது இதுவரையில் எனக்குத் தெரியாது. அவள் உன் தோழியா?”
“அது . . . ம் ம் ம் . . .” என்று இழுத்தேன்.
“ஓஹோ . . . அய்யோ, என்ன அழகு அந்தப் பெண்! இப்படி ஒரு பெண் தோழியாகக் கிடைப்பது அதிருஷ்டம்தான்.”
“ஆட்டு மனிதரே, இங்கிருந்து நாம் தப்பிச்சென்றுவிட்டால், உங்களுக்கு இவளைப்போல எவ்வளவோ அழகான தோழிகள் கிடைப்பார்கள்.”
“ஆஹா, நினைக்கவே இனிக்கிறது. ஆனால் நமது தப்பிக்கும் முயற்சி மட்டும் தோல்வியடைந்துவிட்டால் நாம் இரண்டு பேரும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரும்.”
“மோசமான விளைவு என்றால், பத்தாயிரம் கம்பளிப்பூச்சிகள் கொண்ட ஜாடியா?”
ஆட்டுமனிதன் சோகமாக, “ஆமாம், அவ்வளவு பெரிய ஜாடிதான் நமக்கு,” என்றான்.
பத்தாயிரம் கம்பளிப்பூச்சிகளோடு நானும் ஆட்டுமனிதனும் ஒரு ஜாடிக்குள் மூன்று நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சியை கற்பனை செய்து பார்த்தபோது முதுகுத்தண்டு சில்லிட்டது. ஆனாலும் சூடான டோநட்டுகளும், அந்தப்பெண் என் கன்னத்தில் பதித்த முத்தமும் பயத்தை கலைப்பனவாக இருந்தன. நான் மூன்று டோநட்டுகளும், ஆட்டுமனிதன் ஆறும் சாப்பிட்டோம்.
“வயிறு காலியாக இருந்தால் என்னால் ஒரு அடி நகர முடியாது,” என்றான் ஆட்டுமனிதன் மன்னிப்பு கேட்கும் தொனியில், வாயோரத்திலிருந்து சர்க்கரைத் துணுக்குகளை அவனுடைய தடித்த விரல்களால் துடைத்துக் கொண்டான்.
21
எங்கேயோ மணி ஒன்பது அடித்தது. ஆட்டுமனிதன் எழுந்து சட்டையின் கைப்பகுதியை பலமுறை தட்டி, உதறிக்கொண்டு ஆட்டு உடையை சரிப்படுத்திக்கொண்டான். நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. என் காலில் கட்டப்பட்டிருந்த இரும்புக்குண்டையும் சங்கிலியையும் கழற்றினான்.
அறையிலிருந்து வெளிவந்து மங்கலான இருட்டில் தாழ்வாரத்தில் நடந்தோம். வெறும் காலில் நடக்கும்போதுதான் அவசரத்தில் என் ஷுக்களை அறையிலேயே விட்டுவிட்டது உறைந்தது. அம்மா வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கப் போகிறார். அது மிக அருமையான, தோல் ஷு. பிறந்தநாள் பரிசாக அளித்திருந்தார். ஆனால் இதுவும் நல்லதுக்குத்தான். காலணி சத்தம் கிழவரை எழுப்பிவிட்டிருக்கும்.
அந்த உலோகத்தரையில் நடக்கும்போது என் காலணிகளைப் பற்றி யோசித்துக் கொண்டே வந்தேன். ஆட்டுமனிதன் வழிகாட்டியபடியே முன்னால் சென்றான். அவனைவிட நான் சற்று உயரம் என்பதால் நடக்கும்போது அவனுடைய இரண்டு காதுகளும் என் மூக்கிற்கு எதிரே மேலும் கீழும் குதித்துக்கொண்டே வந்தன.
“ஹே, ஆட்டு மனிதரே,” என்று கிசுகிசுப்பாக கூப்பிட்டேன்.
“என்ன?” அவனும் கிசுகிசுத்தான்.
“கிழவருக்கு காது நன்றாகக் கேட்குமா?”
“இன்று அமாவாசை என்பதால் அறைக்குள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். ஆனால் எவ்வளவு கெட்டிக்கார ஆசாமி என்று உனக்கே இதற்குள் தெரிந்திருக்கும். ஷுக்களைப் பற்றி கவலைப்படாதே. எப்போது வேண்டுமானாலும் இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம். ஆனால் மூளையையோ, உயிரையோ வாங்கமுடியாது.”
“உண்மைதான் ஆட்டு மனிதரே.”
“இப்போது மட்டும் அவர் எழுந்து வந்து அந்தப் பிரம்புக்குச்சியோடு எதிரே நின்றாரென்றால், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என்று அர்த்தம். அதன் பிறகு உனக்கு எந்த விதத்திலும் உபயோகரமாக இருக்கமாட்டேன். அவர் விளாச ஆரம்பித்துவிட்டால் நான் அவ்வளவுதான். உடனடியாக பரிபூர்ண அடிமையாகிவிடுவேன்.”
“அந்தப் பிரம்புக்கு அப்படி ஏதாவது விசேஷ சக்தி இருக்கிறதா என்ன?”
“சரியாகச் சொல்லிவிட்டாய்,” என்றான் ஆட்டு மனிதன் ஒரு கணம் யோசித்தான். “அது பார்ப்பதற்கு சாதாரணப் பிரம்பு போலத்தான் இருக்கிறது. ஆனால் என்னவோ தெரியவில்லை.”
22
“அந்தப் பிரம்பைக் கொண்டு உங்களை அடிக்க ஆரம்பித்தால், செயலிழந்து போய்விடுகிறீர்கள், அப்படித்தானே?
“அதேதான். அதனால் உன் ஷுக்களை மறந்துவிடு.”
“அதை நான் எப்போதோ மறந்துவிட்டேன்.”
அந்த நடைவழியில் இன்னும் சற்று தூரத்துக்கு எதுவும் பேசாமல் நடந்தோம்.
பின் திடீரென, “ஹே?” என்றான்.
“என்ன?”
“உன் ஷுக்களை மறந்துவிட்டாய்தானே?”
“ஆமாம், மறந்துவிட்டேன்,” என்றேன். அவனது கேள்வியினால், மறந்துபோன ஷுக்களின் ஞாபகம் மீண்டும் மனதில் புகுந்துகொண்டது.
படிக்கட்டுகள் சில்லிட்டு இருந்தன. ஏறும்போது கால்கள் வழுக்கின. கற்படிக்கட்டுகளின் விளிம்புகள் தொடர்ந்த பயன்பாட்டில் மழுங்கியிருந்தன. அவ்வப்போது பாதத்துக்கடியில் வண்டைப்போல ஏதோ மிதிபட்டுக் கொண்டேயிருந்தது. வெறும் காலோடு கும்மிருட்டில் நடப்பது பெரிய இம்சை. சிலநேரங்களில் காலில் மிதிபடுபவை மெத்தென்று இருந்தன. மிதிபட்டவுடனே ‘பச்சக்கென்று நசுங்கின. சில முறை நறநறவென்று நொறுங்கின. ‘அடச்சே, ஷுக்கள் அணிந்து வந்திருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டேன்.
கடைசியில் படிக்கட்டுகளின் முடிவில் அந்த இரும்புக்கதவை அடைந்தோம். ஆட்டுமனிதன் சட்டைப்பையிலிருந்து பெரிய சாவிக்கொத்தை எடுத்தான்.
“சத்தமெழுப்பாமல் திறக்க வேண்டும். கிழவர் எழுந்து விடுவார்.”
“ஆமாம்,” என்றேன்.
அவன் ஒரு சாவியை பொருத்தி இடதுபுறமாகத் திருகினான். ‘கச்சங்க்’ என்று பலமாக சத்தம் எழுந்து, கதவு நீளமாக கிரீச்சிட்டபடியே திறந்தது. இதுவா சத்தமெழுப்பாமல் திறப்பது?
“இந்த இடத்திலிருந்து சிக்கலான வலைப்பாதை ஆரம்பித்துவிடும்,” என்றேன்.
“ஆம். இந்தத் திருகுவழி எனக்குக்கூட அதிகம் பரிச்சயம் இல்லை. பரவாயில்லை, சமாளிப்போம்.”
இதைக்கேட்டதும் எனக்குக் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. இதைப்போன்ற வலைப்பாதையில் செல்லும்போது சரியான பாதையில் திரும்பினோமாவென்று கடைசியில்தான் தெரியவரும். தப்பான பாதையில் திரும்பியிருந்தால், திரும்பி வந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு மிகவும் தாமதமாகிவிடும். வலைப்பாதைகளின் பிரச்சனை அதுதான்.
23
எதிர்பார்த்ததைப் போலவே, ஆட்டுமனிதன் பலமுறை தேர்ந்தெடுத்த வழியை புறக்கணித்து, திரும்பி வந்து வேறுவழிகளில் கூட்டிச் சென்றான். இருந்தாலும் எனக்கென்னவோ கடைசி வாசலை மெல்ல, மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வப்போது வழியில் நின்று விரலை சுவரின் மீது ஓட்டிப் பார்த்து, வாயில் வைத்து தீர்க்கமாக யோசித்தான். சிலமுறை கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்து, தரையில் காதை வைத்து கேட்டான். கொஞ்சதூரம் சென்றதும், கூரையில் வலை பின்னியிருந்த சிலந்திகளிடம் தாழ்ந்த குரலில் ஏதோ பேசினான். பல வழிகளாகப் பிரியும் முனைகளில் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு விநோதமான முறையை கையாண்டான். இருந்த இடத்திலேயே வேகமாக பம்பரமாக சுற்றிச் சுழன்றான். சட்டென்ற நின்று எதிரில் இருக்கும் வழியை தேர்ந்தெடுத்தான். அந்த திருகுப்பாதையின் வழியை இப்படித்தான் நினைவுக்கு கொண்டு வரமுடிவதாகச் சொன்னான். ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு இப்படிப்பட்ட உத்தியை எத்தனைபேர் கையாள்வார்கள்?
நேரமாகிக் கொண்டே சென்றது. விடியல் நெருங்கிக்கொண்டே வர, அமாவாசை இருட்டு மெதுவாகத் தளர்ந்து கொண்டிருந்தது. ஆட்டுமனிதனும் நானும் வேகவேகமாகச் சென்றோம் விடிவதற்குள் அடைந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் கிழவர் எழுந்து, தேடிக்கொண்டு வந்துவிடுவார்.
“நம்மால் முடியுமென்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன்.”
“ஆம் சுலபம்தான். இங்கிருந்து கொஞ்ச தூரம்தான்,”
அவனுக்கு இனிமேல் வழி நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். தீர்மானத்தோடு அப்படியும் இப்படியுமாகத் திரும்பித் திரும்பி, நிற்காமல் அந்த நடைவரியில் ஓடினோம். இறுதியில் கடைசி தாழ்வாரம் எதிரே வந்தது. அதன் முடிவில் இருந்த கதவு தெரிந்தது. கதவின் இடுக்கின் வழியே வெளிச்சம் கசிந்தது.
ஆட்டுமனிதன் பெருமையாக, “சொன்னேன், பார்த்தாயா?” என்றான். “வழியை சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.
இனி, அந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியே போகவேண்டும். அப்புறம் உனக்கும் எனக்கும் விடுதலை,” என்றான்.
கதவைத்திறந்தான். கிழவர் அங்கே எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
24
அது நான் அவரை முதன்முதலாகப் பார்த்த அதே அறை. நூலகத்தின் அடித்தளத்தில் இருந்த அறை எண் 107. அவரது மேஜைக்குப் பின்னால் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
கிழவருக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய கருப்புநாய் உட்கார்ந்திருந்தது. பச்சை நிறக் கண்களும், நகைகள் பதித்த கழுத்துப் பட்டையும் கொண்டிருந்த நாய். தடிமனான கால்கள். ஒவ்வொரு பாதத்திலும் ஆறு கூர் நகங்கள். காதுகளின் முனைகளில் பிளவுண்டிருந்தது. மூக்கு செம்பழுப்பு நிறத்தில் கன்றிப்போயிருந்தது. பல வருடங்களுக்கு முன் என்னைக் கடித்த அதே நாய். என்னருமை வளர்ப்புக்குருவி அதன் பற்களுக்கிடையில் சிக்கியிருந்தது.
நான் வீறிட்டலறி பின்னால் சாய, ஆட்டுமனிதன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
“வெகு நேரமாகக் காத்துக்கொண்டே இருந்தோம். ஏன் இவ்வளவு நேரம்?” என்றார் கிழவர்.
“ஐயா, எல்லாவற்றையும் உங்களுக்கு விளக்குகிறேன்,” என்று ஆட்டுமனிதன் ஆரம்பித்தான்.
“பேசாதே, முட்டாளே, என்று கிழவர் வெடித்தார். பிரம்பை பின் பாக்கெட்டிலிருந்து உருவியெடுத்து மேஜையின் மேல் அடித்தார். நாய் தன் செவிகளை உயர்த்தி, விறைத்துக்கொண்டது. ஆட்டுமனிதன் வாயை மூடிக்கொண்டான். அறைக்குள் மரண அமைதி கவிந்தது.
“ சரி, உங்கள் ரெண்டுபேரையும் இப்போது எப்படி தீர்த்துக்கட்டுவது?” என்றார் கிழவர்.
“அமாவாசையென்று நீங்கள் நன்றாகத் தூங்கிவிடுவீர்கள் என்று நினைத்தோம்,” என்றேன் ஹீனமாக.
“நீ ரொம்ப கெட்டிக்காரன்தான்,” கிழவர் சீறினார். “இதைப்போன்ற தகவல்களை எங்கிருந்து பெற்றாய் என்று தெரியவில்லை. ஆனால் என்னை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. உச்சிவெயில் நேரத்தில் தர்பூசணிப் பழத்தைக் கண்டுபிடிப்பதைப் போல உங்கள் இரண்டுபேருடைய மனதையும் சுலபமாக என்னால் அறிந்துகொள்ள முடியும்.”
அறை என் கண்முன்னால் இருண்டது.
எனது அஜாக்கிரதை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. என்னருமை வளர்ப்புக்குருவி கூட இதற்கு பலியாகியிருக்கிறது. எனது நல்ல ஷுக்களை தொலைத்துவிட்டேன். என் அம்மாவை இனி ஏறெடுத்தும் பார்க்க முடியாது.
“உன்னை என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?” கிழவர் பிரம்பை ஆட்டுமனிதனை நோக்கி நீட்டினார்.” உன்னை சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி பூரான்களுக்கு உணவாகப் போடப் போகிறேன்.”
ஆட்டுமனிதன் உடல் முழுக்க விதிர்விதிர்த்தபடி என் பின்னால் பதுங்கினான்.
25
கிழவர் என் பக்கம் திரும்பினார். “என் இளம் நண்பனே, உன்னை என்ன செய்வதாக உத்தேசம் தெரியுமா?” என்றார். “இந்த நாய்க்கு உன்னை தீனியாகப் போடப்போகிறேன். இது உன்னை உயிரோடு கிழித்து தின்னப்போகிறது. மெதுவாக, நிறுத்தி நிதானமாக சாகப்போகிறாய். வீறிட்டு கத்திக்கொண்டே சாகப் போகிறாய். ஆனால் உன் மூளை மட்டும் எனக்குச் சொந்தம். அந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் நீ படித்து முடித்திருந்தால் உன் மூளை நல்ல சுவையோடு இருந்திருக்கும். ஆனாலும் பரவாயில்லை. ஒரு துளி விடாமல் மொத்த மூளையையும் வழித்து சாப்பிட்டுவிடுவேன்.”
கிழவர் பற்களைக்காட்டி கோரமாக சிரித்தார். நாயின் பச்சைக்கண்கள் ஆர்வத்தில் பளிச்சிட்டன.
இதே நேரத்தில்தான், அந்த நாயின் பற்களுக்கிடையில் சிக்கியிருந்த குருவி அளவில் பெரிதாக வீங்கிக்கொண்டே வருவதை கவனித்தேன். ஒரு கோழியின் அளவுக்குப் பெருத்தும் நாயின் தாடைகள் காரின் ஜாக்கிபோல மேலும் மேலும் விரிந்து பிளந்து கொண்டிருந்தன. நாய் ஊளையிட முயற்சிக்கும்போதெ, அதன் வாய் முழுசாக கிழிக்கப்பட்டது. எலும்புகள் உடையும் சத்தம் கேட்டது. கிழவர் திடுக்கிட்டு, பிரம்பை உருவி குருவியின்மேல் வெறித்தனமாக அடிக்கத் தொடங்கினோம். ஆனால் குருவி தொடர்ந்து பெருத்துக் கொண்டே வந்தது. எருதின் அளவுக்குப் பெரிதாகியது. கிழவரை சுவரோடு சுவராக வைத்து அழுத்தியது. அச்சிறிய அறை முழுக்க வலுவான சிறகுகள் படபடக்கும் சத்தம் நிரம்பியது.
<<ஓடு. இதுதான் உனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு>> என்றது குருவி. இது அந்தப் பெண்ணின் குரல்.
“நீ எப்படி தப்பிப்பாய்?” என்றேன் பெண்ணாக இருந்த அக்குருவியிடம்.
<<என்னைப்பற்றிக் கவலைப்படாதே. நான் பின்னாலேயே வந்துவிடுவேன்>>
நான் தயங்கினேன்.
<<சீக்கிரம். இப்போது வேகமாக ஓடாவிட்டால், ஒருபோதும் தப்பிக்கவே முடியாது,>> என்றது பெண்ணாக இருந்த குருவி.
அவள் சொன்னபடியே செய்தேன். ஆட்டுமனிதனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அறையைவிட்டு ஓடினேன். திரும்பிப் பார்க்கவேயில்லை.
அது அதிகாலை நேரம். நூலகம் வெறிச்சோடியிருந்தது. படிகளைத் தாவி மையக்கூடத்தைக் கடந்து, வாசிப்பறையின் சன்னலை அடித்துத் திறந்து வெளியே குதித்தோம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி பூங்காவை அடைந்து, புல்தரையில் தொப்பென்று விழுந்தோம். கண்களை மூடி, மூச்சிரைக்க அப்படியே கிடந்தோம். கொஞ்ச நேரத்துக்கு நான் கண்களையே திறக்கவில்லை.
கண்ணைத்திறந்தபோது, ஆட்டுமனிதனை காணவில்லை. எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். அவன் பெயரை அடித்தொன்ணடையிலிருந்து கத்தி கூப்பிட்டேன். பதிலே இல்லை. காலைச் சூரியனின் முதற்கிரணங்கள் மரங்களின் இலைகளை ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தன. ஆட்டுமனிதன் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மறைந்துவிட்டிருந்தான். அதிகாலைப் பனி ஆவியாவதைப் போல.
26
வீட்டை அடைந்தபோது அம்மா எனக்காக உணவு மேஜையில் சூடான காலை உணவை தயாரித்து எனக்காக காத்துக்கொண்டிருந்தார். என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏன் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு வரவில்லை, கடந்த மூன்று நாட்கள் இரவு எங்கே தங்கினேன், எங்கே எனது ஷுக்கள்-ஒரு கேள்வியும் கேட்கவில்லை. திட்டவும் இல்லை. இது அம்மாவின் இயல்பே அல்ல.
என் வளர்ப்புக் குருவியைக் காணவில்லை. காலியான கூண்டுதான் இருந்தது. என்ன நடந்தது என்று நானும் கேட்கவில்லை. இந்த விஷயத்தை எடுக்காமல் இருப்பதே நல்லது என்று நினைத்தேன். அம்மாவைப் பார்க்க சற்று கருத்திருப்பதைப் போல இருந்தது. அவரைச் சுற்றி ஏதோ நிழல்கள் சூழ்ந்திருப்பதைப்போல. ஆனால் இது என் கற்பனையாகக்கூட இருக்கலாம்
அதற்குப்பிறகு அந்த நகர நூலகத்துக்கு நான் செல்லவேயில்லை. இந்த இடத்தை நிர்வகிக்கும் பெரிய மனிதர்களிடம் எனக்கு நடந்ததைப் பற்றியும், நூலகத்தின் அடித்தளத்துக் கீழே பாதாளச்சிறை இருப்பதைப்பற்றியும் நான் சொல்லியிருக்க வேண்டும் என்றே நினைத்தேன். இல்லாவிட்டால் நான் அனுபவித்ததைப் போல இன்னொரு குழந்தைக்கும் நடக்கலாம். ஆனாலும் அந்திக்கருக்கலில் அந்த நூலகக் கட்டிடத்தைப் பார்க்கும்போதே, என் கால்கள் அதை நோக்கி நகராமல் ஸ்தம்பித்துவிடும்.
அடித்தளத்தில் விட்டுவிட்டு வந்த அப்புதிய தோல் ஷுக்களைப்பற்றி அவ்வப்போது நினைப்பேன். உடனே அந்த ஆட்டுமனிதன், குரலில்லாத அந்த அழகிய பெண் ஞாபகங்கள் தொடர்ந்து வரும். அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இருட்டு.
அமாவாசை இரவைப்போல கும்மிருட்டு.

நடனத்திற்கு பிறகு – இரு தளங்களின் கூடல்.

அன்றாட வாழ்வில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் எம்மை சென்றடைகின்றன என்ற சிறிய கேள்விக்கான விடையின் பரப்பு மிகப்பெரியது.எந்த வாழ்வில் நாம் இருந்துகொண்டிருக்கிறோமோ அந்த வாழ்வியலில் உள்ள அக புறக் கூறுகள் எம்முள் செலுத்தக்கூடிய ஆதிக்கத்தின் அளவை ஆராய்தல் மிக முக்கியமானது. புறக்கூறுகளும் அத்தியாவசியமான ஒன்றே இருந்தும் அக்கூறுகள் செலுத்தக்கூடிய நுட்பமான நகர்வுகளை புறக்கூறுகள் நடத்திவிட முடியாது. மிகச் சிறிய நிகழ்வுகளில் இருந்து பெரும் படியான நிகழ்வுகள் வரை அதன் அகக்கூறுகள் கொண்டிருக்க கூடிய கனதியினை புறக்கூறுகள் கொண்டிருக்குமா என்பது சந்தேகம். இவ்வளவு கனதியான அகக்கூறுகள் எம்முள்ளே ஏற்படுத்துகின்ற உளவியல் மாற்றங்கள் பற்றி பேசுவதே நடனத்திற்கு பிறகு என்ற டால்ஸ்டாயின் சிறுகதை.
 
நாவல்களில் தனக்கான நிரந்தர அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட டால்ஸ்டாயால் சிறுகதைகளில் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை, என்ற குறையை போதுமானவரை நிரப்பிக்கொள்வதற்கு சான்றாக இந்த சிறுகதையை குறிப்பிடலாம். இந்த கதை அவரின் சிறுவயது அனுபவத்தின் வெளிப்பாடாகவே அவரின் 75வது வயதில் எழுதப்பட்டிருக்கிறது. டால்ஸ்டாய் பெரும்பாலும் தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் குறிப்புகளாக்கி வைத்துக்கொள்ளும் பழக்கமுடையவர். அவற்றிக்கு சிறு புனைவுகளை சேர்த்து நாவல்களாயும் சிறுகதைகளாயும் எழுதுகின்றவர். சுந்தர ராமசாமி குறிப்பிடுவார்,” பெரும்பாலான காலம் கடந்து வந்திருக்கின்ற எழுத்துக்கள் எல்லாமுமே அனுபவங்களின் குறிப்புகள் தான்.”  மற்றவை எல்லாம் மின்னல் போல பளிச்சிட்டு மறைந்துவிடும் , அனுபவங்கள் வானத்தை போல நீள அகலமற்ற நிலவுகையை உடையவை.
 
ஆழ்ந்த அனுபவமுள்ள எழுத்தாளனாக கருவினை விடய சித்தரிப்புக்கள் மூலம் அணுகுகின்ற யுக்தியை இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது. நடனத்தின் பின் என்ன என்ற தேடலை உருவாக்குகின்ற காதல் கலந்த அக்கால சூழ  பின்னணியிலேயே கதையின் தளம் அமைகின்றது.
 
இந்த சிறுகதை இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளில் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. இரவிரவாக சந்தோசமாக ஆடப்பட்டு முடிந்த mazurka என்ற நடன இரவொன்றை பற்றியும் அடுத்தநாள் காலை வன்மையாக தாக்கப்பட்டு இராணுவத்தால் இழுத்துவருகின்ற தாத்திரியன் பற்றியும் வெவ்வேறு உணர்வு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் பொதுவானவர்கள் கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் உம் முதல் நாள் இரவு அவருடன் நடனமாடிய வரிங்கா என்ற உயர்குலப்பெண்ணின் தந்தை ஆவார்கள். வரிங்காவின் தந்தையார் ராணுவத்திலே உயர்பதவிவகிக்கின்றவர். இவர்கள் இவரோடு முதல் நாள் இரவு வரிங்கா அடுத்தநாள் காலை தாத்திரியன் என நான்கு முக்கிய பாத்திர வார்ப்புகள் இருக்கின்றன.
 
முதல் நாள் இரவில் பிரமாண்ட விருந்துபசாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது கூடவே mazurka என்ற போலந்தில் ஆரம்பமான ஆடற்கலையும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. அந்த விருந்து தான் கதைசொல்லிக்கும் வரிங்கா என்ற இளம் அழகிய மாதுக்குமான காதல் உருவாகிய புள்ளியாகும். அத்தனை வருட மொழி அனுபவமும் திரண்டு அந்த நடனத்தின் எழிலையும் இவான் வாசிலியேவிச் மற்றும் வரிங்காவின் காதலையும் கொண்டாடிக்கொண்டிருந்தது. அணுவணுவாக அங்க அசைவுகளையும் இருவருக்குமான ஒருங்கிணைப்பையும் ஒரு பூவின் இதழ் மேலே விழுகின்ற பனித்துளியினை போல வர்ணித்துக்கொண்டு செல்வார். காலம் ஆக ஆக இவான் வாசிலியேவிசின் காதல் ஆற்றாமை எழுகின்ற வீரியமும் இருவரும் நடனத்தின் முடிவில் பிரிந்து சென்றதும் இவான் வாசிலியேவிச் வரிங்காவை நினைத்து உழல்வதும் சொற்களோடு உணர்வுகளையும் கடத்திக்கொண்டு செல்கின்றது. இது ஒருபுறம் செல்ல இன்னொருபுறம் அதே இரவில் தந்தை மகளுக்கான உணர்வுகளை அதே பொறுமையுடன் டால்ஸ்டாய் விவரிக்கின்றார். தன் மகளின் விருப்பத்திற்கு இணங்க தனக்கு பொருத்தமில்லாத காலணியை அணிந்து கொள்ளும் தந்தையாக  காட்டப்படுகிறார். அந்த இரவை அதோடு முடித்து விடாமல் நீட்சியாக்கி இவான் வாசிலியேவிச் வீடு சென்று காதல் வழியால் துடிப்பதாகவும் காலை அவளை நேரில் சென்று சந்தித்தேஆக வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தி அடுத்த நாள் நிகழ்விற்கு நிகழ்வு கோர்ப்பை ஏற்படுத்துகிறார்.
 
முதல் நாளில் இருவேறு விதமாக காதல் என்ற மென்மையான உணர்வுநிலையை வெளிக்கொண்டுவந்த டால்ஸ்டாய் ஒரே இரவில் வாசகரின் உணர்வு போக்கை மாற்றி விடுகிறார். அன்பை உருகி கொட்டிக்கொண்டிருந்த எழுத்துக்கள் செந்தழல் போல கடுமையாகிப்போனது. காலையில் வரின்க்காவை பார்ப்பதற்க்கு வீதியில் இறங்கிய இவான் வாசிலியேவிச்க்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதுவரை ஒரு மிக சிறந்த தந்தையாக தெரிந்த வரிங்காவின் தந்தை ஒரு கொடூரமான ராணுவஅதிகாரியாக தெரிகின்றார். தாத்திரியனை ஈவுஇரக்கமின்றி தாக்குகின்ற அணியை வழிநடத்தும் கொடூரனாக காணப்படுகின்றார். அவ்விடங்களில் டால்ஸ்டாய் அன்றைய ரஸ்சியன் சமூகத்தினுள் விதைந்து கிடந்த சாதியத்தை எடுத்தாளுகிறார். உணர்வு ரீதியில் ஒரு தாத்திரியனுக்கும் உயர்குல இராணுவ அதிகாரிக்குமான முண்டல் இதில் பேசப்படுகின்றது. இதையெல்லாம் கண்ணுற்ற இவான் வாசிலியேவிச் தன் காதலை அதோடு முடித்து கொண்டு அரச வேலைக்கு இனி சேரப்போவதில்லை என்ற முடிவுடன் வீடு திரும்புகிறான். இதோடு கதைசொல்லியான இவான் வாசிலியேவிச் தன் அனுபவத்தை முடித்துகொள்கிறார்.
 
முதல் இரவில் பிரமாண்டமாகவும் ஆழமாகவும் ஆத்மாத்தமாகவும் கருதப்பட்ட காதல் இரண்டாம்நாளில் இடமற்றுப்போகின்றது. ஒரு ஆழமான உணர்வின் நிலவுகை நிரந்தரமானது இல்லை. சந்தர்ப்பங்கள் திசைதிருப்பக்கூடியன என்ற ஆழமான கருத்தியலை விதைக்கின்றது. வரிங்காவின் தந்தையின் உண்மை முகம் இராத்திரி விருந்தில் இருந்ததாகவும் அவரின் பணியே இந்த கடுகடுப்பான நிலைக்கு அவரை உருமாற்றியதாகவும் இவான் வாசிலியேவிச்நினைத்து அரசவேலையை வெறுத்திருக்கலாம். ஆனால் அவனின் தீராத காதல் தாகம் சில நொடிகளுக்குள் வற்றிப்போனதிற்கான காரணத்தை தேடிய வாசகரை கொண்டு செல்கிறது நடனத்திற்கு பிறகு. இவான் வாசிலியேவிச் ஏற்பட்ட உணர்வு நிலை போராட்டத்தில் மேலோங்கிய தடுப்புகள் அவன் ஆழமற்ற உணர்வுகளை உந்தி வெளியேற்றியிருக்க கூடும் என்றே எண்ண தோன்றுகின்றது. இப்படியான நுண்ணிய நகர்வுகளுடன் செல்வது தான் வாழ்க்கை என்ற யதார்த்தமான பார்வையையும் வாசகனுக்கு கூறிச்சென்றிருக்கின்றது.
 
After the dance ஐ ஆங்கிலத்தில் வாசிக்க
https://ebooks.adelaide.edu.au/t/tolstoy/leo/after_the_dance/

என் சில இரவுகளின் கள்வனுக்கு பிறந்தநாள்.

வாசிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பல எழுத்தாளர்கள் அவர்களின் ப்லோக்ஸ் மூலமாகவே அறிமுகமானார்கள். அவர்களில் எஸ். ராமகிருஷ்ணனும் ஒருவர். வாசிக்க தொடங்கிய காலத்தில் யார் எவர் என்று இல்லாமல் எல்லோரையும் தின்றுகொண்டிருந்தேன். இன்றும் கூட. எஸ்.ரா இன் படைப்புக்களில் ஆரம்பத்தில் வாசிக்க தொடங்கியது அவரது சிறுகதைகள். அவரது சிறுகதைகள் வாசிக்க எளிதாகவும் , விளங்கிக்கொள்ள சிரமம் அற்றதாகவும் இருந்ததால் என்னை ஈர்த்துக்கொண்டது. அவரது ப்ளோகில் இருக்கின்ற பெரும்பாலான சிறுகதைகளை ஒரே இரவில் வாசித்து முடித்தேன். கதையின் கருவை வாசகனுக்கு விளித்துக்கூறுவதில் எஸ்.ரா மிக திறமையானவர். அப்போது உயிர்மெய் இதழில் வெளியான சீட்டாட்டம் என்ற சிறுகதை தான் எனக்கும் அவருக்குமான முதல் தொடர்பு. இதை அவரது ப்ளோகில் பிரசுரித்திருந்தார். அதற்கு பின்னரான இரவில் தான் அவரின் சிறுகதை உலகிற்குள் சஞ்சரித்திருந்தேன். நாக்கு வலிக்காமல் கண் நோகாமல் அனைத்தையும் வாசித்து முடித்தேன். எல்லா கதைகளிலும் எஸ்.ரா என்னும் கதைசொல்லி என்னூடே இருந்துகொண்டிருந்தார். அப்படி அன்னியோன்யமாக கதைகள் இருந்தன.

சில நாட்களிலேயே அவரது உரைகள் காணொளியாக பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் தனது கதைகளை பற்றியும் சமகால எழுத்தாளர்கள் பற்றியும் உலக இலக்கியங்கள் பற்றியும் குறிப்பாக ரஸ்சியன் இலக்கியங்கள் பற்றியும் அவர் ஆற்றிய உரைகள் என்னுள் கருத்தியல் பலவற்றை உருவாக்கியது. மிக முக்கியமாக ரஸ்சியன் இலக்கியங்களை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் எஸ்.ரா . அவர் பரிந்துரைத்த அனைத்து கதைகளையும் நாவல்களையும் குறிப்பெடுத்துக்கொண்டு ஒன்றொன்றாய் வாசித்து முடித்தேன். அதன் பின்னராக அவரின் நாவல்களுக்குள் நுழைந்துகொண்டேன். ஆரம்பத்தில் யாமம் , உபபாண்டவம் ,ஏழு தலை நகரம் போன்றவற்றை வாசித்தேன். எதற்குமே நோகாமல் அவரின் நாவல்கள் இருந்தன. வாசிப்பில் களைப்பு கொஞ்சம் கூட ஏற்படவில்லை. அதனாலே தொடர்ந்து தேடத்தொடங்கினேன். கதாவிலாசம், துணையெழுத்து , அன்னா கரீனினா, தேசாந்திரி,என்றார் போர்ஹே கட்டுரைகள் போன்ற நாவல் கட்டுரை தொகுப்புகளை வாசித்தேன். லத்தீன் அமரிக்கா எழுத்தாளர்கள் பலரின் அறிமுகம் சாரு நிவேதிதாவால் கிடைத்திருந்தாலும் , அந்த இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான ஜோர்ஜ் லூயி போர்ஹேயை அறிமுகம் செய்தவர் இவரே.
இன்று எஸ்.ராவை வாசிக்கும் போது எழுத்தின் மீள்மை தென்படுகிறது ( Repetitive Writing).தன்னை சார்ந்தோரை வலிந்து எழுதுகின்ற பழக்கம் இவருக்கு பின்னடைவே. இருந்தும் இன்றும் அவரின் எழுத்துக்கள் காயப்படுத்தாதவையாகவே இருப்பது ஆச்சரியமே. எஸ்.ரா என்னும் ஆளுமை என்னால் எந்நாளும் நினைவுகூறக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர். இன்று பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள்.

Home-2

ரிஷி வனம். – சிறுகதை

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்பிடியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலை படித்து முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன். வாகரை என்ற ஊரின் சுவாசம் ஆயிரத்து தொள்ளாயிரம்களிலேயே நின்று விட்டதாக பல்கலையில் இருக்கும் போது கிடைத்த சில புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அந்த அறிதல் என்னுள் இனம்புரியாத வேட்கையை உருவாக்கியிருந்தது . அதுதானோ என்னமோ என்னை இப்போது இங்கு சடலமாய்ப்போன ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. சொந்தங்கள் என்று பாடசாலை பல்கலை நண்பர்கள் மட்டும் தான். அன்னை தெரேசா இல்லத்தில் நினைவு தெரிந்த நாளில் இருந்தேன். அது தான் என் வீடு , குடும்பம் எல்லாம். நான் பல்கலை அனுமதி பெற்ற போது என்னை மகனாய் வளர்த்த தாய் , ” நீ பிறந்த குழந்தையாக இருந்த போது எங்கள் இல்லத்திற்கு ஒரு எண்பது மதிக்கதக்க ஒரு ஆச்சியால் கைத்தாங்கலாக கொண்டுவரப்பட்டாய். அளவான உடல் வாகு உடையவனாயும் மா நிறத்திலும் இருந்தாய். உன்னை நிர்வாணமாகவே கொண்டுவந்திருந்தாள். உன்னில் தாய்ப்பால் வசமே வீசவில்லை. எங்களிடம் உன்னை ஒப்படைத்தவள் நீ வாகரைக்கு வந்து சேர்வாய் என்றுவிட்டு சென்றாள். நீ இப்படி……” என்று வாழ்த்து சொன்னார்.
பின்னரும் நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அன்றைய தினம் நூலகத்தில் வாசித்த அந்த குறிப்புகள் தான் என் வேட்கையை தூண்டியது. இதோ இப்போது செம்மண் பரவிய வாகரையை  நோக்கிய குறும் பாதை ஒன்றினூடாக நடந்து சென்றுகொண்டிருக்கிறேன். இரண்டு கிழமைக்கான உடைகள் , பொருட்கள் மற்றும் லியோ டால்ஸ்டாயின் Resurrection என்ற நாவல்   எல்லாம் பொதி செய்து முதுகில் ஒன்று கையில் ஒன்றாய் பைகளில் ஏந்திக்கொண்டு என் நீண்ட கேசம் வீசிய காற்றில் காதின் மடல்களை முத்தமிடுவதை உணர்ந்தவனாய் பின்னேரம் ஐந்து மட்டில் நடந்துகொண்டிருக்கிறேன். வானம் காவி கட்டிக்கொண்ட மாதிரி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதனால் என் நடையை வேகமாக ஆக்கிக்கொண்டேன். காற்றும் அதிகமான பலத்துடன் வீசியதில் என் கேசம் ருத்த்ரதாண்டவம் புரியத்தொடங்கியது. வலது நீள் காற்சட்டை  பைக்குள் கையை விட்டு தலைப்பட்டியை எடுத்து கேசத்தின் தாண்டவத்தை அடக்கி கொண்டேன். நீள் பார்வையில் வீதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. காட்டு பூனையும் மர அணிலும் குருவிகளும் போடும் சத்தம் தலைப்பட்டியினை கடந்து காதை குளிர்ச்சியாக்கியது. இசையின் வேறொரு பரிமாணத்தில் சங்கமிப்பதாய் ஒரு உணர்வு மேலிட்டது.
எந்த முன்னறிவும் இல்லாமல் யார் எவர் ஊருக்குள் இருப்பார்கள் என்று தெரியாமல் மனிதர்கள் இருப்பார்களா என்றே தெரியாமல் , பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன் வாகரை செல்வதற்காக. யாரையும் விசாரிக்க மனத்திராணி இல்லாமல் பேருந்து பெயர்ப்பலகைகளாக தேடித் தேடி சுற்றினேன். கண்ணில் வாகரை என்ற பெயர் தென்படவே இல்லை. பேசாமல் திரும்பி விடலாம் என்றிருந்த போது தான் அந்த பெயர்ப்பலகை ” மண்ணுர் – வாகரை – தேனுக்கும் ” தென்பட்டது. அந்த நொடியே பேருந்துக்குள் தாவிக்கொண்டேன். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டார் நடத்துனர். ஆனால் ரசீது தரவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. ஜன்னலோரம் இருந்து கொண்டு கண்ணயர்ந்தேன். அந்த சிறு பாதையின் அருகில் வைத்துதான் நடத்துனர் வாகரை வந்துவிட்டதாக என்னை உலுப்பிச்  சொன்னார்.
கடந்த இருபது நிமிடங்களாக நடந்து கொண்டே இருக்கிறேன், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நடப்பேன். இருள இருள மனதில் பயம் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பழகிப்போன பாதையும் காற்றுமாய் இருந்த உணர்வு பயத்தின் வலுவை குறைத்தது. நான் களைத்து விடவில்லை இருந்தும் வீசிய காற்று என்னை மோதி கடந்து செல்லும் போது என் சக்தியின் அனுவளவினை உறிஞ்சி செல்வதை உணர்ந்தேன். நீண்ட கோடு போன்ற பாதை முடிவிற்கு வந்து இடப்பக்கமாக வளைந்ததது. அடுத்த அடியினை இன்னும் பலமாக எடுத்து வளைவினில் திரும்பினேன். என்னால் என் கண்முன்னே விரிந்திருந்த காட்சியை நம்பமுடியாமல் இருக்கின்றது. வியப்பில் அடுத்த அடியினை வைக்க முடியாமல் , வைக்க சக்தி இல்லாமல் எல்லா சக்தியும் அந்த முடக்குடன் முடிந்து விட்டதாய் இருந்தது. முடக்கின் இடது கரையோரம் பெரிய நீளமான உருண்டை மர குற்றியை அடியாய்க்கொண்டு இரண்டு கப்புகளில் தாங்கியபடி ஒரு பெயர்ப்பலகை வாகரை என கறுப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. வாகரை என எழுதியிருந்த எழுத்துருவில் வடிவமே ஏதோ ஒருவகையான சோகத்தை விளித்துநின்றது. மேலும் நடக்க முடியாதவனாய் அந்த நீளமான உருண்டை மரக்குற்றியில் இருந்தேன். இருட்டு மேலும் மேலும் வலுப்பெற்றது. இனியும் இருந்தால் சரிவராது என்று எண்ணிக்கொண்டு நகரத்தொடங்கினேன். வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்களும் சோலைகளுமாய் காட்சியளித்தது. பழைய வடிவமைப்பில் கட்டப்பட்ட இரண்டு மாடிவீடுகளும் ஓலையால் வேயப்பட்ட மாட்டு குடில்களும் நாய்களும் , புறாக்களும் , கோழிகளுமாய் முற்றிலும் முந்தைய நூற்றாண்டின் நெடி வீசியவண்ணம் அமைந்திருந்தது.
முன்னால் கொட்டகை இறக்கி நன்றாக பழுத்த கதலி ,கப்பல் மற்றும் சீனி வாழைக்குலைகள் தொங்கவிடப்பட்டிருந்த கடை ஒன்றின் அருகில் செய்யப்பட்ட குந்தின் மேல் பைகளை வைத்து விட்டு கடைக்குள் சென்று என்னைப்  பற்றியும் வாகரையை நான் அறிந்திருந்த விதம் பற்றியும் விளக்கினேன். கடைக்காரர் அடர்த்தியான பூச்சு மீசையும் மழித்த தாடியும் சுருட்டை முடியுமாய் சரத்துடனும் பெனியனுடனும் என்னை நோக்கி திருதிரு என விழித்தார். அவர் முக பாவனையே எதுவுமே தெரியாதவர் என்பதை காட்டியது. அவர் இங்கிருந்து நான்காம் வீட்டை சுட்டி காட்டி அங்கே விசாரிக்குமாறு கூறினார். தான் கிராமம் வந்து சில காலம் தான் என்றும் அவர்கள் வம்சம் வம்சமாய் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் பைகளை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கி விட்டேன். அவர் காட்டிய வீடு வெகு தூரத்தில் இல்லை. நூறு காலடிகளில்  அடைந்து விட்டேன். சிறிய சிறிய மரகப்புகளால் நேர்த்தியாக ஒரு கோபுரம் போல அடுக்கப்பட்டிருந்தது அந்த வீட்டின் கதவு. இரவாகி இருந்தமையால் வெளியில் நின்றே உள்ளிருப்பவர்களை கூவினேன். முதல் கூவல் ……. இரண்டாம் கூவல் ……. மூன்றா……. வீட்டின் கதவு திறக்கப்படுவதை உள்ளிருந்து வந்த பிரகாசமான மின்குமிழ் வெளிச்சம் காட்டியது. ஒரு பெண் மெதுவாக நடந்து  வெளிக்காதவின் அருகில் வந்து விசாரித்தாள். வெளிச்சம் குன்றியிருந்தமையால் சரியாக அவளை இனம் காண முடியவில்லை. விவரத்தை விளம்பினேன்.
அவள் முகத்தில் புன்சிரிப்பு மலர்வதைப்போல் உணர்ந்தேன், அவள் என்னை வீட்டிட்குள் அழைத்து சென்றாள்.அவளின் வீடுதான் நான் அந்த வீதியில் கண்ணுற்ற ஒப்பீட்டளவில் சிறியது. நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்த வீட்டின் மேற்பக்கம் ஓட்டினால் அடுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிற பூச்சு கொஞ்சமும் அழுக்குறாமல் மழையால் தெறித்த செம்மண் தடங்கள் வெண்சுவற்றின் கீழ் விளிம்புகளில் கோலம் போட்டது மாதிரி தெறித்திருந்தது. என் உயரத்திற்கு ஏற்றாற்போல் மேல்முனை வளைந்த வாசலினூடாக அவளின் பின்னால் தாயை பின்தொடரும் குழந்தைபோல பின் தொடர்ந்தேன். நீண்ட செவ்வக வடிவ வரவேற்பறையில் அடுக்கப்பட்ட ஆறு கருங்காலி மரத்திலான கதிரைகளில் தனிக்கதிரை ஒன்றைக்காட்டி அமருமாறு பணிவாக வேண்டினாள்.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அவளது முகம் கட்டித் தயிரைப்போல திட்டு திட்டாக வெளிறிப்போய் இருந்தது. உருண்டைக்கன்களும் வரம்புக்கு மீறிய இமைப்பரம்பலும் அவள் முகத்தை இன்னும் விகாரப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் மேலாக அவளது கறுத்த பொங்கிய உதடுகள் , சுருட்டு பிடித்து பிடித்தே வறண்டு போய் இருந்தது. இதெல்லாம் எனக்கு  வியப்பூட்டுவனவாக இல்லை. பைகளை கழட்டி இன்னொரு மரக்கதிரையில் வைத்துவிட்டு நான் அருகில் இருந்த கதிரையில் இருந்தேன் . அவள் என்னை  காத்திருக்குமாறு கூறிவிட்டு வீட்டின் அறை ஒன்றிற்குள் விரைந்தாள். கதவு திறக்கையில் அது சமையலறை என்பதை நான் ஊகித்திருந்தேன் . உடல் சோர்வுற்றிருந்த நான்  கால்களையும் கைகளையும் நீட்டி மூலி முறித்துக்கொண்டேன் . மனத்தால் உற்சாகமாக இருந்தாலும் உடலில் வலுவற்று போய் இமைகள் கண்களை மூடி என்னை தூக்கம் ஆட்கொண்டது. திடீர் என்று தூக்கத்தை அடித்துக்கலைத்தால் போல் தென் மேற்கு சுவரில் தொங்கியிருந்த ஒரு மூதாட்டியின் நினைவுப்படம் என் கண்களை கூசியது, அப்படத்திலிருந்து ஏதோ ஒரு ஒளிக்கீற்று என் உடல் முழுக்க பரவியது. அம்மூதாட்டி என்னை உற்று நோக்குவது போலவே காட்சியளித்தாள். இருந்தும் விரைவாக என்னை சுதாகரித்து கொண்டு பார்வையை நகர்த்தினேன். அந்த பெண் அம்மூதாட்டியின் பேத்தியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.அந்த மூதாட்டியின் படத்துடன் இன்னும் பலரின் நினைவுப்படங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் வண்ணமும் அவர்கள் வாழ்ந்த காலத்தினை குறிப்பிட்டு காட்டின
சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஒரு வெள்ளி கோப்பையில் ஆவிபறக்க தேநீர் தந்தாள். இரண்டாவது வாய் கோப்பையில் வைக்க மீண்டும் இன்னொரு அறைக்குள் நுழைந்தாள். தேத்தண்ணீர் அவ்வளவு சுவையாக இருந்தமையால் அது என்ன அறை என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவில்லை. கொஞ்ச தேநீர் மீதமிருக்க அவள் கையில் ஒரு திறப்பு  கோர்வையுடன் வந்தாள். தேநீரை முடித்து விட்டு கதிரைக்கால் ஒன்றின் அருகில் வைத்து அவளை நோக்கினேன். அவள் ஒன்றும் பேசாமல் என் எதிரே இருந்த கதிரையில் வந்திருந்தாள்.  குரலில் கொஞ்சம் கவலை கூடியதாக இருக்க ,” இங்கேருங்கோ எசமானே , அந்த போட்டோவில இருக்கிறது எங்க ஆச்சி , அம்மாள்ட அம்மாள். எங்கம்மாள் அய்யாவோட ஊருக்கு போயிருக்குது.நான் மட்டுந்த்தான் இருக்கேன் இப்ப வீட்டுல, ” என்பதற்குள் நான், “எஜமானா? நானா ? ” என கூறினேன்.
” ஆமாங்க எசமான் , எங்க ஆத்தாளுக்கு ஆச்சியும் எனக்கு எங்க ஆத்தாளும் கத்துத்தந்த படி நீங்க தான் எங்க எசமான். உங்களுக்கு இங்கிட்டு ஒரு பெரிய விலாஸ் இருக்கு. கொஞ்ச தள்ளி.ஆச்சி காலத்தில இருந்து நாங்கதான் அத துடச்சு காத்துட்டு வாறம், ஒவ்வொரு நாளும் அங்க போயி நான் எல்லா சுமையும் செய்திட்டு வருவன். நீங்க வருவியல் எண்டு காலம் காலமா காத்திட்டு இருக்கம். வாங்க எசமான் போவம் ” என்று முடித்துக்கொண்டு எழுந்தாள். எழுந்தவள் திடுக்கிட்டு ” சேர் , மை நேம் இஸ் ………” என்று தன்னைப்பற்றி விபரித்தாள், அவள் கூறிய எதுவும் வியப்பளிக்கவில்லை , கூறிய விதம் தான் வியப்பளித்தது. முன் பேச்சுக்கும் பின் பேச்சுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி தெரிந்தது. எதையும் காட்டிகொள்ளாதவனாய் மனதிற்குள் சிந்தனை அலைகளை படர விட்டேன்.
“ஷால் வி கோ ? ” என்றாள்.
திடுக்கிட்ட நான் போலாமே என்ற பாவனையுடன் பைகளை எடுத்து மாட்டிக்கொண்டேன்.என்னிடம் இருந்த கைப்பையை வலோத்காரமாய் ஏந்திக்கொண்டாள்.அவளின் பேச்சில் இருந்த முரண் என்னை திகைக்க வைத்தது. இருந்தும் என் வீட்டைப்பார்க்க போகிறேன் என்ற எண்ணமே அதிகம் இருந்ததால் பெரிதாக நான் அதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
இருட்டில் வாகரை மறைந்து போய் இருந்தது. அழகிய பெண்ணின் நுதல் போன்று நிலா காட்சி அளித்தது. இடையே முகில் கூட்டம் மறைத்ததால் அவளின் நுதல் போன்று சிதைந்திருந்தது. அந்த வாழைக்குலை கடை சாத்தப்பட்டிருந்தது. தூரத்து மின் ஒளியில் தெரிந்த மரங்கள் எல்லாமே என்னை வரவேற்பது போல மெல்லிய காற்றுக்கு அதன் இலைகளையும் கொப்புகளையும் மெலிதாக ஆட்டிநின்றன. அவள் என் முன்னால் நடக்க தொடங்கினாள். நானும் கூடவே வீதியில் இறங்கி நடந்தேன். நடக்கும் போது வெளிச்சத்துக்காக அவள் ஒரு லாந்தரை எடுத்துக்கொண்டு வந்தாள். நான் எனது தொலைபேசியில் இருந்த விளக்கினை பிடித்துக்கொண்டு நேரத்தை உற்று பார்த்தேன். மணி எட்டை காட்டியது. லாந்தர் விளக்கின் ஆட்டத்தில் அவள் நிழல் அங்கேயும் இங்கேயுமாக ஆடிக்கொண்டிருந்தது. தொலைபேசி வெளிச்சத்தில் என் நிழல் சீராக பின்தொடர்ந்து.
இடையே அவளின் பெயரை விசாரித்தேன்.
” நூத்தாயி …..”
இதயம் நின்று போனது.
” அஞ்சலி… ”
திருத்திக்கொண்டாள் . மெதுவாக என்னை திரும்பி பார்த்து புன்முறுவல் செய்தாள். லாந்தரின் மங்கிய ஒளியில் அவளின் முகம் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை புலப்படுத்தியது. இருந்தும் அங்கு வீசிய காற்றும் அந்த நிலவொளியும் எனக்கு பழகிப்போன ஒரு சூழலை ஞாபகப்படுத்தியதால் எதையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து போயிருப்போம். களைப்பு அதிகமானது. கால்களில் ஆணி குத்துவது போல குதிக்கால் எலும்பு குத்த தொடங்கியது. நான் தொலைபேசி வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் இயற்கையை ஆராய்ந்தபடியே நடந்தேன். எல்லா வீடுகளும் இருளில் தோய்ந்திருந்தது. எங்காவது ஒரு சில இடங்களில் மின்குமிழ் ஒளி தென்பட்டாலும் அதன் வீரியம் குன்றியதாகவே இருந்தது. நடந்தேன். நடந்தேன் . நடந்தோம் . நிறுத்திக்கொண்டாள். என்னை திரும்பி பார்த்து இருட்டி இருந்த ஒரு வெளியை நோக்கி சுட்டுவிரலை சுட்டினாள். லாந்தர் பலமிழந்து போய் இருந்ததால் , வெற்றிடத்தை நோக்கி தொலைபேசி வெளிச்சத்தை திசைதிருப்பினேன்.
வெளிச்சத்தை முன்னோக்கி பரப்பினேன். கறுத்த நிறத்தில் பொன்னிறமான வேலைப்பாடுகளுடன் இரண்டு என்னை சேர்த்தால்  உயரத்துக்கு அகன்ற கதவு. துருவோ , கறையோ சுத்தமாக இல்லை. கதவின் அடியில் நீண்ட செவ்வக அடி மட்டம் இடப்பட்டு கதைவை பிரிக்கும் பொன்னிற தகட்டில் மயில் உருவ வேலைப்பாடுகளுடன் ஓரளவு உயரமான சிறு சிறு கம்பிகள் கதவுக்கு மேல நீட்டி இருக்க அதன் முனைகளில் வேல் செதுக்கப்பட்டிருந்தது. கதவு இரண்டாக திறக்கும் பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதோடு பெரிய பழைய ஆனால் சீரியமாக பாதுகாக்கப்பட்ட பூட்டால் பூட்டப்படிருந்தது. ஒவ்வொரு பாதியின் நடுவிலும் நிறைந்து வழியும் நெற்குட செதுக்கல் காணப்பட்டது. அவள் என் பை தூக்கிய கையில் இருந்த திறப்பு கோவையை லாந்தரை  அருகில் வைத்துவிட்டு எடுத்து , பூட்டை திறந்தாள். லாந்தர் முழுமையாக அணைந்திருந்தது.
அவள் லாந்தரை எடுப்பாள் என்று வெளிச்சத்தை நிலம் நோக்கினேன், அவள் பொருட்படுத்தாமல் கதவை தள்ளி திறந்தாள். எந்தவித சத்தமும் இல்லால் மிக அமைதியாக கதவு தன்னை திறந்து கொண்டது. நான் லாந்தருக்கு விலகி கொடுத்து உள்ளே நடந்தேன்.
விலாசமான புற்தரை வாசலில் இருந்து ஆரம்பித்து நீண்டு சென்றது. இருளில் அங்கங்கே சிறிய சிறிய பன்னம் மரங்களும் ஓரிரண்டு பெரிய மரங்களும் முற்றத்தில் நின்றன. மங்கிய இருட்டு ஒளியில் மரங்களை இனம் காணமுடியாமல் இருந்தது. வாசலில் இருந்து சென்ற ஓரளவு பெரிய தரையைக்கொண்ட பாதையில் அவள் நடக்க தொடங்கினாள். நான் சுற்றமெல்லாம் வெளிச்சத்தை பரப்பி நிலத்தை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். அவள் ஓரிடத்தில் போய் நின்றாள். நான் வீட்டு வாசலை அடைந்து விட்டோம் என ஊகித்து கொண்டேன்.அவள் கையை சுவரில் தடவி கொண்டிருந்தாள். ஒரு வெளிச்சம் , இதை விட பிரகாசமான வெளிச்சத்தை என் வாழ்நாளில் உணர்த்ததே இல்லை. கண்கள் கூசத்தொடங்கின. அவளும் அதையே உணர்ந்திருக்க வேண்டும் கண்களை கசக்கி கொண்டாள் . மெதுவாக திறப்பு கோர்வையில் இருந்த மிகப்பெரிய திறப்பை கதவின் துளைக்குள் இருட்டு திருகினாள். அது ஒரு விற் கதவு. ஒரு செவ்வகமும் அரை வட்டமும் சேர்ந்த உருவம்,  அன்னத்தின் செதுக்கல்கள் அங்குமிங்குமாய் சிறியனவும் பெரியனவும் சேர்ந்து கலைக்கோவில் வாசல் போல தென்பட்டது. வாசலின் செவ்வக முடிவில் மாவிலைகள் போல செதுக்கப்பட்டிருந்த திரண்ட மரசெதுக்கல்கள் கொள்ளை அழகாக இருந்தன. பார்த்த மாத்திரத்தில் என் வம்சத்தை நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். கதவுகளில் ஒன்றை தள்ளி கொண்டு அவள் உள்நுழைந்தாள். அதிக ஆவலுடல் உள்ளே சென்றேன். வெளிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் நடுப்பிரவாகம் மட்டும் தெரிந்தது. மேற்தளத்தில் செவ்வக வடிவ புகைப்படங்ள் மட்டும் மங்கியிருந்தன. செம்மஞ்சள் நிற கைப்பிடியை கொண்ட விளிம்புடைய மேற்தள தரை. மீண்டும் திடீரென வெளிச்சம்.  வீடு முழுக்க ஒளி சிதறியது. ஒரே சீரான நிரையில் பத்து கணக்கில் மின் குமிழ்கள், ஆடம்பரமானவை.
வீட்டின் பிரதான பாகத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வீட்டை அந்த பேர் ஒளியில் நின்ற நிலையிலேயே ஒரு சுற்று சுற்றி பார்த்தேன். எல்லாமே அப்படியே இருந்தன, என் கனவு வீடு. இதே போல ஒன்றினைத்தான் கட்டவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போது நண்பனுக்கு கீறிக்காட்டிய அதே அடுக்குகள். சிறிய கவலை மட்டும். எனது கனவு வீட்டில் எங்குமே கண்ணாடிகளால் ஜொலிக்கவிட்டிருந்தேன் ஆனால் இங்கே அவ்வாறில்லை. எல்லாமே சுவர்கள். அடைத்துவிடப்பட்டிருந்த யன்னல்கள். ஒரே ஒரு ஆளுயர கண்ணாடிமட்டும் இருந்தது. தென்பக்க மூலையோடு எட்டு அடுக்கு ராக்கையும் ஏழு அடிநீளமும் கொண்ட புஸ்தக அலுமாரி. அதன் நடுவில் தான் இந்த கண்ணாடி. என் விம்பத்தை அப்படியே தன்னுள் செதுக்கிக்கொண்டிருந்தது. அது கட்டாயம் பிரதிபலிப்பு இல்லை செதுக்கல்தான். நான் அதனருகே நகர என் சிலையும் என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. கண்களில் உணர்வு வேட்கை உதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்கள் பிசைந்தபடி. கால்கள் விடுவிடுவென வேகமாக்கியது. மிக்காருகில் போனபோது அது என் விம்பம் தான் என உணர்ந்துகொண்டேன். அப்படியே அருகில் இருந்த ராக்கையில் உள்ள தோல் உறை போட்ட சதுர தடிமனான புஸ்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். தினசரி பாவனையில் இருக்கும் புஸ்தகம் போல அதன் முதல் தொடுகை உணர்த்தியது. திறந்து பார்த்தேன். Resurrection.
ஐ வில் பிரிங் தி டின்னர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அவளின் குரல் அசல் நகரத்து பெண்போல இருந்தது. விடுக்கென திரும்பாமல் மெதுவாக திரும்பி வேணாம் என்று சொல்லுவோம் என்று கண்ணாடி ஊடு அவளை பார்த்தேன் . செக்க சிவந்த அவள் உதடுகள் மெல்லிய புன்னகைத்துக்கொண்டு இருந்தது. இது வரை என்னோடு வந்த அவளா இவள்? காலையில் சூரியனை நோக்கி பூக்கும் பூப்போல என்னைநோக்கி பூத்தபடி அந்த அழகி நின்றுகொண்டிருந்தாள்.
யா சுவர் , பசிக்குது சீக்கிரம் வாங்க
கண்ணாடியை பார்த்தபடியே நின்றேன். அவள் மெதுவாக விலகி சென்றாள்.கதவை தாண்டும் வரை அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் போய் முடிந்துவிட்டாள். மங்கிய இருளில் அந்த பேரழகி இவ்வளவு அசிங்கமாக தெரிந்தாளே என்று இருட்டின் அமைதியை நொந்துகொண்டேன். இறக்கிய பைகளை அவள் ஒரு மேசையில் வைத்திருந்தாள். என் கையில்கிடந்த புஸ்தகத்துடன் அந்த மேசையைத்தாண்டி இருந்த நாட்காலியில் சாய்ந்து கொண்டேன். முள்ளந்தண்டு கிடையோடு அறுபது இருக்குமாறு சாய்வினை கொண்ட அந்த கதிரை சுற்றி வைரமான மரத்தாலும் நடுவில் தங்கநிற தொய்யாத இறுக்கமான பின்னலையும் கொண்டிருந்தது. உடற் களை என்னை ஆட்கொண்டது.
கண்களை மூடிக்கொண்டேன். கண்ணாடி உடைகின்ற சப்தம். நிலத்தில் எல்லாமே சிதறுண்டு தெறித்துக்கொண்டிருக்கும் சப்தம். அலறல் ஒலி. உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் கால்களை கீறுவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழும்பி கண்ணாடியை நோக்கினேன். என்னை விறைத்து பார்த்தபடியே என் செதுக்கல். கதிரையில் இருந்து கைகளை ஓரங்களில் முண்டுகொடுத்து முள்ளந்தண்டை நிமிர்த்து எழும்பினேன். அடிமேல் அடிவைத்து கண்ணாடி அருகில் போய் என்கண்களை உற்று பார்த்தேன். அதில் ஓடியிருந்த வெறுமை பெரும் வறட்சி உள்ள வயலைப்போய் என்கண்களை ஆக்கிவிட்டிருந்தது. வாயால் ஆழ் சுவாசக்காற்றை கண்ணாடியில் படரவிட்டேன். கண்ணாடியில் என் விம்பம் மங்கிப்போயிருந்தது. கண்கள் மட்டும் அப்படியே. வெறித்தபடி. கண்களை கூர்ந்து உற்று நோக்கினேன்.
முகத்திலிருந்து சிறிய கூறிய பரு வருவதைப்போல கண்ணாடியில் இருந்து அந்த மாநிற தோற் துண்டு வெளிப்பட்டது. பயம் ஒரு புறம் இருக்க பழகிப்போன , நெருக்கமான காட்சிபோல இருந்தது. வெடுக்கென என்கண்களை பார்த்தேன். கண்ணெல்லாம் சாந்தம். வெள்ளை நிலாவில் கருந்துளை போல கண்கள் எதோ புரியாத உணர்வினால் என்னை பார்த்துக்கொண்டிருந்தன. என்கால்களில் ஏதோ முட்டுவது போல குளிர்ந்த நீரோடையில் கால்வைத்தது போல. கண்களை கீழே உருட்டினேன். வெண்ணிற பாதங்கள். குழந்தையின் விரல்கள் போல மெல்லிய பார்க்க மிருதுவான தோற்றம். பாதம் வெளியே வந்தது. கூடவே வெள்ளை மடிப்புகள். தூய்மையான வெள்ளை நிறம். கொஞ்சகொஞ்சமாக எல்லாமே. சர்வமும் வெளிப்பட்டது. அந்த மடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததில் எதையுமே கவனிக்கவில்லை. காற்றில் ஆடி என் முன்னங்கால்களை தொட்ட மடிப்புகள் மனதுள் சில முகில்களை உருவாக்கின. என் முன்னங்கால்கள் நிலத்தை பார்க்க குனிந்து கொண்டு துவண்டு கைகளை நெஞ்சுக்குள் மடித்து சுருட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிய நினைவுகள். அந்த துணியில் கட்டப்பட்ட ஊஞ்சலில் இருக்கும்போது இருந்த அதே உணர்வு. அந்த சேலையின் வருடல்கள். என்னையறியாமல்
அம்மா
எந்த பதிலும் இல்லை. மீண்டும்
அம்மா
அவர் கைகள் என் மேலே பட்டிருந்ததை உணர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அம்மாவின் முகம் தான். இப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர் முகம் முழுக்க துணியால் சுற்றியிருந்தார். சுவாசிக்க மூக்கும் பார்க்க கண்களிரண்டும் மட்டுமே வெளியில் தெரிந்தன. முழுமையாக வெள்ளை நிற உடையையே அணிந்திருந்தார். முகத்தை சுற்றியிருந்த துணி கூட. அவரின் நீண்ட கேசம் கலைந்து போயிருந்தது. எந்த விசையோ தெரியவில்லை. உடனே என் தலைப்பட்டியை கழற்றி அவரின் கலைந்த கேசத்தை பின்னி கட்டிவிட்டேன். இதுவரைக்கும் பின்னி பார்த்ததுகூட கிடையாது. என் இரண்டு கண்களும் முன் முடியால் மூடியிருக்க அம்மா தன் கைகளால் என் கேசத்தை விலக்கி கண்களை பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குள் என் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு நடத்தி கொண்டு கதிரையை அடைந்தார். என்னை இருத்தி என்கால்களை மடியில் வைத்துக்கொண்டு அவர் கீழே அமர்ந்தார்.
என்னை பார்த்தபடியே கால்விரல் ஒவ்வொன்றாக மெடுக்கு உடைத்து கொண்டிருந்தார். நான் என் கேசத்தை கஷ்டப்படுத்தில் அமைதியாக்கி விட்டிருந்தேன். மெதுவாக என் பாதங்கள் ஈரமாவதை உணர்த்தவனாய் கைகளால் அம்மாவின் தலையை நிமிர்த்திக்கொண்டு அவரின் முகத்தை சுற்றியிருந்த வெள்ளைத்துணியை அகற்ற கைகளை கொண்டு சென்றேன். கண்ணீர் பட்ட இடமெல்லாம் ரத்த சிவப்பு நிறம் துணியில் ஊறியது. துணியை கழற்ற போவதை அறிந்த அம்மா என் கால்களை உதறிவிட்டு எழுந்து கண்ணாடியை நோக்கி ஓடினார். அம்மாவை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
Resurrection இல் முதல் அத்தியாயம் முடிந்து போயிருந்தது.
என் பயணப்பைக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திருகிக்கொண்டிருந்தேன். அந்த பெண் இராத்திரி உணவோடு அதே கறுத்த திரண்ட உதடோடு அசிங்கமாக புன்னகைத்தாள். என்னை நோக்கி வந்து முகத்தை சுற்றியிருந்த கறுப்பு துணியையும் முன் முடியையும் விலத்திவிட கைகளை நீட்டினாள். நான் வேகமாக , இன்னும் , இன்னும் அதிகமாக கண்ணாடியை நோக்கி ஓடினேன். கால்கள் எல்லாம் கண்ணாடி துகள்கள்.
வாகரை…..

குட்டை குடிநீர் – 01

உலகில் எந்த அணுவும் முயற்சி இன்றி இடம்பெயராது. சுய முயற்சியோ உந்துதலோ எதுவானாலும் சரி, முயற்சி என்ற சக்தி அங்கு பரிமாற்றப்படவேண்டும். இந்த சக்தி பரிமாற்றம் நிகழவில்லை என்றால் எந்த ஒரு விடயத்திலும் தேக்க நிலை ஏற்பட்டு விடும். ஒவ்வொன்றும் ஆங்காங்கே தேங்கிப்போனால்! தேக்கநிலை வாழ்வியல் உண்டாகும். பின்செல்லல் என்பதை விடுத்து தேங்கிநிற்றல் என்ற நிலை கருதுவோம். முன்னோ பின்னோ நகராத நிலை. பெரிய மைதானத்தில் கால்கள் அற்ற வெளியில் வைக்கப்பட்ட உதைப்பந்து போல. அதற்கும் கால்கள் இல்லாமல் உதைக்கவும் கால்கள் இல்லாத நிலை. இதை ஆராய்தல் காலக்கட்டயம். தேக்க நிலையின் விளைவுகள் கொடூரமானது. உங்கள் ஆளுமையையும் அடையாளங்களையும் இல்லாமலே ஒழித்து விடக்கூடிய வல்லமை நிறைந்தது. உங்கள் விம்பங்களை மங்கச்செய்து கண்ணாடிகளை கரும்பலகைகள் ஆக்கி அதன் மொழிகளை எழுதத்தொடங்கிவிடும் தேக்கங்கள். எழுத்தாளர்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
 
இன்றைய சூழ்நிலையில் எழுத்தாளர்கள் கவனிக்கப்படுவதில்லை, எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை அவருக்கான மதிப்பு கிடைக்கப்பெறுவதில்லை என்று ஓயாமல் ஓலமிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஓலத்தின் பின்னணி அடுத்து நாமும் கவனிக்கப்படமாட்டோம் என்பது தான். என் அடையாளங்கள் யாரோ பத்து பேருடன் முடிவடைந்து போகப்போகிறது என்ற பயத்தில் தான். அந்த பத்து பேரை ஒரு நூறு பேருக்கு தெரியுமென்றால் அதில் நான் ஐந்து பேருக்கு தான் கடத்துப்பட்டிருப்பேன். இது தான் நிதர்சனம். காலம் காலமாக காக்கவேண்டிய இலக்கியங்கள் எல்லாம் இரண்டு தலைமுறைகளுடனேயே முடிந்து போகின்றது என்பது கவலை தான். இதை எல்லாம் எண்ணிக்கவலைப்படும் எழுத்தாளர்கள் இதற்காக என்ன வழி செய்தோம் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை கட்டாயமாகிறது.
இன்றைய நூறு பேரில் தொன்னூறுபேர் எழுத்தாளர்கள் தான். மற்றைய பத்துபேர் எழுத வாசிக்க தெரியாதவர்கள். இந்த தொன்னூறு பேரில் ஏன் ஒருவர்கூட மூன்றாம் தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை? ஏன் என்றால் தொன்னூறு பேரும் தொன்னூறு திசைகளில் இருக்கிறார்கள். யாரும் யாரையும் கவனிப்பதில்லை. அருகில் இருப்பவன் எழுதுகிறானா என்ற விழிப்புக்கூட இருக்காது. ஆனால் இருவரும் எழுதிக்கொண்டே இருப்பார்கள். இந்த இடத்தில் தான் தேக்க நிலை உருவாகின்றது. தேக்க நிலை எழுத்துக்களின் வலிமை மிக கொடியது. தன்னையும் அழித்து சுற்றத்தையும் அழித்துவிடும். நாங்கள் யாரையும் சிரத்தையுடன் வாசிப்பது கிடையாது. வாசித்தாலும் அதற்கான நேர் மறை விமர்சனங்களை முன்வைப்பது கிடையாது. எந்த சாராரும் இதே நிலைதான். கடுமையான , முகம்சுளிக்க வைக்கும் விமர்சனங்கள் தான் செதுக்கு உளிகள். அடுத்த இடம்பெயர்வுக்கான விசை அதிலிருந்து தான் பெறப்படுகின்றது. டால்ஸ்டாயும் செக்காவும் கார்கியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வார்கள். அவர்களின் ஒவ்வொரு அடுத்த படைப்பும் இன்னும் செம்மையாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அடுத்த எழுத்தின் மீதான அதீதம் அவர்களை சூழ்ந்து கொண்டது. இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் இறந்த பின் மற்றோருவர் இறந்தவரின் படைப்பை அடுத்த தளத்திற்குக்கொண்டு சென்றார். இந்த ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய விமர்சனங்கள் எம்மத்தியில் அறவே இல்லை. இருக்கின்றவை கவனிப்பாரில்லாமல் ஆறு விமர்சகர்கள் காரசாரமாக விமர்சிக்க ஐந்து கேட்போர் தலையாட்டிவிட்டு போகும் துர்ப்பாக்கியநிலை மேலோங்கிவிட்டது. இந்த நிலை மாற்றப்படவேண்டும். எழுத்துக்கள் தேக்கநிலையை அடைத்துவிடக்கூடாது. கவனிப்போர் இல்லாத இலக்கியக்கூட்டங்கள் திருவிழாக்கள் ஆக்கப்படவேண்டும். எழுத்துக்கள் பாரபட்சம் இன்றி விமர்சிக்க படவேண்டும். விமர்சனங்கள் தான் தேக்கநிலை எழுத்துக்களை இல்லாமல் ஒழிக்கும். ஒரு எழுத்தாளன் வாழும் போது விமர்சிக்கப்படவேண்டும். இல்லாமல் போனபின்பு அர்ச்சிக்கப்படவேண்டும். அவரின் எழுத்துக்கள் காலமெல்லாம் கடத்தப்படவேண்டும்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 06 “கரகம்”

ஏன் இதையெல்லாம் பதிவிடுகிறோம்? புத்தகத்துக்கோ அல்லது திரைப்படத்துக்கோ மிஞ்சி போனால் சமூக நிலைமைக்கோ கட்டுரைகள் அல்லது விமர்சனங்கள் எழுதினால் நிறைய நாட்கள் நீடித்து நிற்கமுடியும், கூடவே மக்கள் மத்தியில் இஸ்திரமான ஒரு நிலையை அடையமுடியும். எத்தனை பேர் இதை வாசிப்பார்கள்? துடிப்பான சுவாரஸ்யமான தகவல்கள்தான் அதிக கவன ஈர்ப்பினை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சரி இது போன்ற தலைப்புகளில் எழுதுவதற்கு அனுபவமும் அடையாளமும் தேவையே, அங்கீகாரம் பெற்றவர்கள் எதை எழுதினாலும் அது கவனிக்கப்படுகிறதே, அங்கீகாரம் பெற்ற பிறகு எழுதிக்கொள்ளலாமே. இது போன்ற கருத்துக்களை நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் கொடுக்கலாமா இல்லையா என்ற மனநிலையில் இல்லை என்று சுதாகரித்து கொண்டு கிளம்பி விட்டேன்.
இன்றைய வடக்கு சூழலில் அருகிவருகின்ற ஒரு வழிபாட்டு முறை தான் கரகாட்டம். முன்னைய காலங்களில் பஞ்சம், தோற்று நோய், இயற்கை சீற்றங்களின் போது மாரியம்மனை வேண்டி வழிபட்ட ஆடலும் பாடலும் நிறைந்த வழிபாட்டு முறை தான் கரகாட்டம். இது தமிழ் மக்களுக்கே உரிய மிகப்பழைமையான நாட்டார் வழிபாட்டு ஆடற்கலை ஆகும். காலத்தினால் இது தொழிலுக்காக ஆடப்படுகின்ற கண்காட்சி ஆடல் முறையாக மாறிப்போனது. பணத்துக்காகவும் கேளிக்கைக்காகவும் ஆடப்படுகின்ற ஆடல் முறையாக இது மாறிப்போனது தமிழ் சமுகத்தின் இழிநிலையை காட்டுகின்றது. பயத்தால் புனிதமாக ஆடப்பட்ட கலையின் இன்றிய நிலை வருத்தத்திற்குரியதே. இருந்தும் சமகாலத்தில் கோயில் வழிபாட்டுடன் ஆடப்படும் கரகமும் நிலைத்தேயுள்ளது.பொதுவாக கரகம் ஆண்களுக்குரியதொன்றாகும். ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது.

ஆனாலும் சிறுபான்மை பெண்களாலும் ஆடப்படுகிறது. (staticflickr.com)

கரத்தில் இருவகைகள் உள்ளன. ஒன்று சக்தி கரகம் மற்றையது ஆடு கரகம். முன்னையது தொன்மையானது பின்னையது தொழில்முறையானது. சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். இக்கரகம் இறை வழிபாட்டுடன் தொடர்புடையது. பக்தியின் விளைவாக எடுக்கப்படுகிறது. ஆடு கரகம் ஆண்கள் பெண்கள் என இருவகையினராலும் ஆடப்படுகிறது. இது தொழிலுக்காக எடுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செம்புகளும் ஆடுகரகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சக்தி கரத்தை அபிநயங்களை கூட்டியும் அம்பலமாகவும் கேளிக்கைக்காகவும் பணத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் மாற்றப்பட்டு ஊர் ஊராக ஆடு கரகம் ஆடப்படுகிறது.
வழிபாட்டுக்காக எடுக்கப்படும் காரகத்தினுள் புனித நீர் வைக்கப்படுகின்றது. உழவர்கள் ஏர்மங்கல விழாவின்போது இந்த புனித நீரையும், அதே போல பெண்கள் முளைப்பாலிகையையும், – முளைகள் உள்ள ஓடு, எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்வர். ஆண்கள் பக்தியுடன் எடுத்துச் செல்லும் புனிதநீர் அடங்கிய செம்பே கரகச்செம்பு என்றும் அதை எடுத்துச் செல்லும் உழவரை கரகக்காரர் என்றும் அழைப்பார்கள். இதே போன்ற செய்முறையில் கரகக்காரர்கள் ஒன்பது செம்புகளை எடுத்துச்செல்வார்கள்.

” ஒண்ணா கரகமடி எங்கள் முத்துமாரி
ஒசந்த கரகமடி எங்க முத்துமாரி ” எனத்தொடங்கும் நாட்டார் பாடலில்
“ஒன்பதாம் கரகமடி எங்கள் முத்துமாரி
ஒலகம் செழிக்கவேணும் எங்க முத்துமாரி ” என முடிவுறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இது வழிபாட்டு முறை என்றால் ஆடற்கரக முறை பல அடுக்குகளை கொண்டமைந்தது.
ஓரளவு தோதான அலுமினிய அல்லது கலப்புலோக செம்பு அல்லது குடம் தெரிவுசெய்யப்பட, அதனை சுற்றி பூக்களாலும் மாலைகளாலும் அலங்காரங்கள் செய்யப்படும். குடத்தினதோ செம்பினதோ வாயிலிருந்து கோபுரவடிவான- அதாவது கூம்பு வடிவ எழுப்பம் ஏற்றப்படும். அதை சுற்றி வண்ணங்களாலும் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு உச்சியில் பொம்மைக்கிளி சொருகப்படும்.

சக்திகரகம் ஆண்களால் மட்டுமே எடுக்கப்படும், பெண்கள் தீட்டு உடையவர்கள் என்பதால் எடுப்பதில்லை என்பார்கள். (pinimg.com)

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர். ஆடுகரகம் எடுப்போர் குடம் முழுக்க மணலை நிரப்புவர். பௌதீகவியல் ரீதியில் சமநிலையை பேணுவதற்காக உள்ளடக்கம் செய்யப்படுவதாகவும், இந்து சமய ஐதீகங்களின் படி கரகச்செம்பை உடலாக உருவகித்தால் உள்ளடக்கம் உயிராக உருவகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கரகாட்டம் மூன்று நிலைகளை கொண்டது. தொடக்க நிலை, வேக நிலை மற்றும் அதிவேக நிலை என்பவை அவையாகும். ஊரவர் மத்தியில் கேளிக்கைக்கான நேரத்தினை ஏற்படுத்துவதற்காக கரகக்குழுவில் எல்லோரும் ஆயத்தம் அடையும் நிலையே தொடக்க நிலை.
கரகக் காரருடன் எல்லா வாத்தியங்களும் பொருந்த கரகக்காரர் தன்னை நேர்த்தியாக்கிக்கொண்டு கரகமும் உறுதிச்சமநிலையில் இருக்கின்றதா என சரிபார்த்துக்கொள்ளும் நிலை. நையாண்டி மேள இசையோடு எல்லா கூறுகளும் பொருந்துகின்ற ஒரு நிலையை அடையும் மட்டும் பக்கவாத்தியங்கள் கரகக்காரர்கள் என எல்லோரும் மெதுவாக அசைவுகளை ஏற்படுத்திக்கொண்டு ஒரு பெரிய சபாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவர்.
ஒருங்கிசைவு பெறப்பட்டவுடன் மெது மெதுவாக வாத்திய வேகத்தை அதிகரிக்க ஆட்டவேகமும் அதிகரித்துக் கொள்ளும். இது இது வேகநிலை. இதன் போது தாளசுதிக்கும் வாசிக்கும் இசைக்கும் ஏற்ப எவ்வித வேறுபாடும் தெரியாமல் கலைஞர்கள் ஆடுவர். இதனை சமநிலை என்றும் கூறுவார்கள். எல்லாம் பொருந்திய உச்சநிலையில் கரகாட்டம் அதிவேக நிலைக்கு செல்லும். ஒரு புயல் மைய்யம் கொண்டதுபோல கரகாட்டக்காரர் வலப்பக்கம் சுழன்று சுழன்று கரகம் கீழேவிழாமல் சமநிலையில்  இருக்கவும்  காண்போர் சமநிலை அற்று போகுமாறும் ஆடிக்கொண்டிருப்பர். தாளம் முறியாமலும் ஜாதிமுறியாமலும் முகமெது முதுகெது என அடையாளம் காணமுடிய படி சுழன்றுகொண்டிருப்பர்.

ஆதிகால கரகவழிபாடு மாரியம்மனை நோக்கியதென்பதால் கிளி சொருகப்படும் ஐதீகம் உண்டு. இக்கிளியினை அம்மன்கிளி என அழைப்பர் (thenewsminute.com)

இப்பிடி ஓய்ந்த புயலில் மழையின் இடைவெளி சிரிப்பொலி போல கோமாளிகள் வந்து ஆடுவதுண்டு. இதன் நோக்கம் ஆட்டக்காரர் ஓய்வெடுப்பதாக இருக்கும். கோமாளி அவ்வூர் பேச்சுமொழியில் ஆபாசம் கலக்க நகைச்சுவையாக பேசுவான்.
கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும்.
காலில் மணிக்கச்சம் – ஆடுபவர் காலில் கட்டிக்கொள்ளும் சதங்கை, தலையில் செம்பை வைத்து தன் அங்கங்களில் சிக்கலான அசைவுகளை சிக்கலான இயக்கங்களை நடனக்காரன் மிகவும் நளினமாகவும் சாமர்தியமாகவும் வெளிப்படுத்திடுவார். இரண்டு நாதஸ்வரங்கள், ஓர் ஒத்து, தவில், தாளம், பம்பை, தமுக்கு போன்ற கருவிகளின் உதவியால் எழுப்பப்படும் நையாண்டி மேளம் என்ற ஒருவகை இசை இதற்கு பின்னணியாக திகழும், கரகமாடுபவன் தலையில் கரகத்துடன் நாத வேறுபாடுகளிற்கு  ஏற்ப தன் உடலின் பாவங்களை வெளிப்படுத்துவான். (சடகோபன் )
கரகாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அடிவைத்து மாறி மாறி வைப்பதுண்டு . இம்மாற்றம் களம் எனப்படும். கரகத்தில் உள்ளதற்கு மேற்பட்ட களக்கணக்குகள் உண்டு. இக்களம் நையாண்டி மேளத்தின் தாள கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது. எனவே நையாண்டி மேளம் இன்றியமையாததொன்றாகும். ( குணசேகரன் )
வல்வெட்டித்துறையில் ஊறணி என்ற இடத்தில் இந்திய வம்சாவழியினரால் இவ்வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனையோர் உடுக்கு நாதஸ்வரம் தவில் போன்றவற்றையே கையாளுகின்றனர். கரகம் ஆடுவதற்கென எந்த மேடை அமைப்பும் இல்லை. ஒரே ஒரு தளம் மட்டும் போதும். மக்களுக்குள் சென்று ஆடும் ஆடற்கரக வழக்கமும் உண்டு.

கரகத்தை கூத்து சாயலில் ஆடுகின்ற வழக்கமும் உண்டு. “கருப்பாயி கூத்து” , “குறவன் குறத்தி கதை “, இராணி இராசா ஆட்டம் ” என்பனவும் கரகத்தை மையப்படுத்திய கூத்து வகைகளாகும். (tampabay.com)

கரகக் காரரின் உடையமைப்பு மிக அழகாக இருக்கும். முன்னைய காலத்தில் சட்டையும் பாவாடையும் தலையில் குடத்தை தாங்க குடுமியும் அணிந்து கொள்வர். இன்றைய காலத்தில் கீழே ஜீன்ஸ்-உம் மேலே முழங்கால் வரையே நீளுகின்ற மேற்சட்டையும் அணிவர். சில இடங்களில் திரைப்பட பாதிப்பில் பரத உடையும் அணிவதுண்டு.
கரகத்தை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர். கிழக்கு இராமநாதபுரத்தில் தஞ்சாவூரில் கரக செம்பு என்றும், திருநெல்வேலி மக்கள் கரகக்குடம் என்றும் கன்னியாகுமாரி மக்கள் கும்ப ஆட்டம் என்றும் இந்தியாவிலும் யாழிலும் கரகம், கரகாட்டம் என்று இருவகையாலும் மலை நாட்டில் செம்பாட்டம், கரக கூத்து என்றும் மட்டக்களப்பில் கரகம் என்றும் அழைப்பர்.
கரகத்தின் அடி நாதம் அற்றுப் போயிருந்தாலும் இன்றும் நிலைத்து நிற்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தோடு நடனங்கள் என்ற பகுதிக்கு விடைகொடுத்துக்கொண்டு வடக்கு நாட்டார் கதைகள் என்ற சுவாரஸ்யமான பகுதிக்குள் அடுத்த முறை செல்லலாம் என எண்ணுகிறேன். அடுத்த தலைப்புடன் சந்திக்கலாம்.

திருக்குறள் பக்கம் 12

இன்றைய சமூகம் இப்படி இருக்கலாம், இன்றைய அரசியலை இப்படி மாற்றலாம் , இன்றைய பொருளாதார முறைமைகளை இவ்வாறு சீர்செய்யலாம் , மனதை இதன் மூலம் தூய்மைப்படுத்தலாம் , இப்படித்தான் எழுதவேண்டும் , இதைத்தான் செய்ய வேண்டும் , இன்னும் இதை சேர்த்திருக்கலாம் என்று எண்ணற்ற கருத்துக்களை கொண்டோரை கொண்டமைந்தது தான் எமது சமூகம். பணக்காரன் ஏழை மத்தியஸ்தன் என்ற பேதமே இல்லாமல் எல்லோரும் ஆளுகின்ற சொத்துதான் இந்த இ னாவில் தொடங்கும் இம்சைகள். உலக அரசியலில் இருந்து ஆழ்மன சிருஷ்டிகள் வரை உள்ள பிரச்சனைகளுக்கும் நிதர்சனங்களுக்கும் எம்மவரிடம் மருந்து இருக்கும். உந்திவிட சொற்கள் இருக்கும். விசை இருக்காது.

எங்களை மாற்றிஅமைத்துக் கொள்ள அவர்களிடமும் எல்லா விதமான கருதுகோள்களும் இருக்கும். மிக வேகமான மிக இலகுவாக எங்கள் இலக்குகளை அடைய அவர்களிடம் சமன்பாடுகள் கொட்டிக்கிடக்கும். எம்மை புத்தனாக்கும் தத்துவாந்தங்கள் அவர்களிடம் விரிந்துபோய் இருக்கும். இது எல்லாமே சொற்களாய் காற்றிலும் காகிதத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
காற்றோ காகிதமோ சமன்பாடுகளைத்தான் சொல்லும், பிரதியீடுகளை அல்ல. உந்த விசை சொல்லில் இருக்கும் ஊதக்கூட முடியாத அவர்களின் சொற்களை கேட்டல் எளிது தீர்த்தல் கடிது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். ( குறள் 664 )
வாய்ச்சொல்லில் வலிதாவதெல்லாம் செயலில் நிறைவுறுவது எளிதல்ல.

தவிப்பு

என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது,
ஊரில் நீண்ட கடற்கரை இருந்தது,
உளக்கி உளக்கி
மண்ணை பதப்படுத்திக்கொள்கிறேன்,

எப்போதோ வரப்போகும்
பஞ்சத்திற்காய்.

காவி

சமர்ப்பணம் செய்யும் முன்பே
சாம்பலாகிப்போன
காகிதங்கள் ,
உச்சியில் இட்ட
குங்கும சிவப்பு ,

இருட்டில்
ஒழித்து வைக்க முயன்ற
எல்லாமே தீப்பற்றிகொள்கின்றன
குங்குமம் சாம்பலாக்கிக்கொண்டிருக்கின்றது

திருக்குறள் பக்கம் 11

இன்று ஆனந்த விகடனில் வந்திருந்த ஜெமோ எழுதிய அசோகமித்திரன் பற்றிய அனுபவ பகிர்வுபோன்றதொரு கட்டுரையை வாசித்தேன். எழுத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஒரு மனிதன் இவ்வளவு அவா வைக்கமுடியுமா என்று என்னை அசோகமித்திரன் என்னும் ஆளுமை வியப்படைய செய்திருந்தார். இந்த அவா கொடிய வறுமையையும் கண்டுகொள்ளாமையையும் தாண்டி பயணித்திருந்ததை எண்ணும் போது இலக்கியத்தில் இன்புறல் என்பது எவ்வளவு இனிமை என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
” போறச்சே ….. நர்மதா பதிப்பகம் போய் ‘இன்று’ நாவல் ஒரு காப்பி வாங்கிட்டு போங்க . யாருமே வாங்கிறதில்லேன்னு ராமலிங்கம் வருத்தப்பட்டார்.” – அசோகமித்திரன் ஜெமோக்கு.

அமி மறைந்த நாள் அன்று “நிறங்கள் குருட்டுத்தனமுள்ளவை.” என பதிந்திருந்தேன்.அவரின் வண்ணங்கள் எதுவுமே பணத்தை பார்த்தவை அல்ல.
எழுத்தாளருக்கு என்று மட்டுமல்ல அனைத்து துறை சார் வல்லுனர்களும் அப்படித்தான். சமாந்தர ஊதியம் தரும் ஆதாயம் இல்லை என்றால் வாழ்வு துன்பியல் தான்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. ( குறள் -374 )
ஏதோ ஒரு வண்ணம் எஅதோ ஒரு குருட்டுத்தனம் உடையது தான்.