ரிஷி வனம். – சிறுகதை ( திருத்தப்பட்டது )

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்படியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலையை முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன். வாகரை என்ற ஊரின் சுவாசம் ஆயிரத்து தொள்ளாயிரம்களிலேயே நின்றுவிட்டதாக பல்கலையில் இருக்கும் போது கிடைத்த சில புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அந்த அறிதல் என்னுள் இனம்புரியாத வேட்கையை உருவாக்கியிருந்தது . அதுதானோ என்னமோ என்னை இப்போது இங்கு சடலமாய்ப்போன ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. சொந்தங்கள் என்று பாடசாலை மற்றும் பல்கலை நண்பர்கள் மட்டும் தான். அன்னை தெரேசா இல்லத்தில் நினைவு தெரிந்த நாளில் இருந்தேன். அது தான் என் வீடு , குடும்பம் எல்லாம். நான் பல்கலை அனுமதி பெற்ற போது என்னை மகனாய் வளர்த்த தாய் , ” நீ பிறந்த குழந்தையாக இருந்த போது எங்கள் இல்லத்திற்கு ஒரு எண்பது மதிக்கதக்க ஒரு ஆச்சியால் கைத்தாங்கலாக கொண்டுவரப்பட்டாய். அளவான உடல் வாகு உடையவனாயும் மா நிறத்திலும் இருந்தாய். உன்னை நிர்வாணமாகவே கொண்டுவந்திருந்தாள். உன்னில் தாய்ப்பால் வசமே வீசவில்லை. எங்களிடம் உன்னை ஒப்படைத்தவள் நீ வாகரைக்கு வந்து சேர்வாய் என்றுவிட்டு சென்றாள். நீ இப்படி……” என்று தொடர்ந்து வாழ்த்துச் சொன்னார்.
பின்னரும் நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அன்றைய தினம் நூலகத்தில் வாசித்த அந்த குறிப்புகள் தான் என் வேட்கையை   மீண்டும் தூண்டியது. இதோ இப்போது செம்மண் பரவிய வாகரையை  நோக்கிய குறும் பாதை ஒன்றினூடாக நடந்து சென்றுகொண்டிருக்கிறேன். இரண்டு கிழமைக்கான உடைகள் , பொருட்கள் மற்றும் பிடித்தமான சில புத்தகங்கள் என  எல்லாம் பொதி செய்து முதுகில் ஒன்று கையில் ஒன்றாய் பைகளில் ஏந்திக்கொண்டு என் நீண்ட கேசம் வீசிய காற்றில் காதின் மடல்களை முத்தமிடுவதை உணர்ந்தவனாய் பின்னேரம் ஐந்து மட்டில் நடந்துகொண்டிருக்கிறேன். வானம் காவி கட்டிக்கொண்ட மாதிரி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதனால் என் நடையை வேகமாக ஆக்கிக்கொண்டேன். காற்றும் அதிகமான பலத்துடன் வீசியதால் என் கேசம் ருத்ரதாண்டவம் புரியத்தொடங்கியது. வலது நீள் காற்சட்டை  பைக்குள் கையை விட்டு தலைப்பட்டியை எடுத்து கேசத்தின் தாண்டவத்தை அடக்கி கொண்டேன். நீள் பார்வையில் வீதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. காட்டு பூனையும் மர அணிலும் குருவிகளும் போடும் சத்தம் தலைப்பட்டியினை கடந்து காதை அடைந்துகொண்டிருந்தன. இசையின் வேறொரு பரிமாணத்தில் சங்கமிப்பதாய் ஒரு உணர்வு மேலிட்டது.
எந்த முன்னறிவும் இல்லாமல், யார் எவர் ஊருக்குள் இருப்பார்கள் என்று தெரியாமல் மனிதர்கள் இருப்பார்களா என்றே தெரியாமல் , பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன் வாகரை செல்வதற்காக. யாரையும் விசாரிக்க மனத்திராணி இல்லாமல் பேருந்து பெயர்ப்பலகைகளாக தேடித் தேடி சுற்றினேன். கண்ணில் வாகரை என்ற பெயர் தென்படவே இல்லை. பேசாமல் திரும்பி விடலாம் என்றிருந்த போது தான் அந்த பெயர்ப்பலகை ” மண்ணுர் – வாகரை – தேனுக்கும் ” தென்பட்டது. அந்த நொடியே பேருந்துக்குள் தாவிக்கொண்டேன். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டார் நடத்துனர். ஆனால் ரசீது தரவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. ஜன்னலோரம் இருந்து கொண்டு கண்ணயர்ந்தேன். அந்த சிறு பாதையின் அருகில் வைத்துதான் நடத்துனர் வாகரை வந்துவிட்டதாக என்னை உலுப்பிச்  சொன்னார்.
கடந்த இருபது நிமிடங்களாக நடந்து கொண்டே இருக்கிறேன், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நடப்பேன். இருள இருள மனதில் பயம் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது.பாதையும் காற்றும் என்னோடு நிறைய நாள் பழகிய உணர்வை அளித்ததால் பயம் பெரிதாக என்னை பீடித்துகொள்ளவில்லை. நான் களைத்து விடவில்லை இருந்தும் வீசிய காற்று என்னை மோதி கடந்து செல்லும் போது என் சக்தியின் அனுவளவினையேனும் உறிஞ்சி செல்வதை உணர்ந்தேன். நீண்ட கோடு போன்ற பாதை முடிவிற்கு வந்து இடப்பக்கமாக வளைந்ததது. அடுத்த அடியினை இன்னும் பலமாக எடுத்து வளைவினில் திரும்பினேன். என்னால் கண்முன்னே விரிந்திருந்த காட்சியை நம்பமுடியாமல் இருக்கின்றது. வியப்பில் அடுத்த அடியினை வைக்க முடியாமல் , வைக்க சக்தி இல்லாமல் எல்லா சக்தியும் அந்த முடக்குடன் முடிந்து விட்டது போல இருந்தது. முடக்கின் இடது கரையோரம் பெரிய நீளமான உருண்டை மர குற்றியை அடியாய்க்கொண்டு இரண்டு கப்புகளில் தாங்கியபடி ஒரு பெயர்ப்பலகையில்  வாகரை என கறுப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. வாகரை என எழுதியிருந்த எழுத்துருவின்  வடிவமே ஏதோ ஒருவகையான சோகத்தை விளித்துநின்றது. மேலும் நடக்க முடியாதவனாய் அந்த நீளமான உருண்டை மரக்குற்றியில் இருந்தேன். இருட்டு மேலும் மேலும் வலுப்பெற்றது. இனியும் இருந்தால் சரிவராது என்று எண்ணிக்கொண்டு நகரத்தொடங்கினேன். வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்களும் சோலைகளுமாய் காட்சியளித்தது. பழைய வடிவமைப்பில் கட்டப்பட்ட இரண்டு மாடிவீடுகளும் ஓலையால் வேயப்பட்ட மாட்டு குடில்களும் நாய்களும் , புறாக்களும் , கோழிகளுமாய் முற்றிலும் முந்தைய நூற்றாண்டின் நெடி வீசியவண்ணம் அமைந்திருந்தது.
முன்னால் கொட்டகை இறக்கி நன்றாக பழுத்த கதலி ,கப்பல் மற்றும் சீனி வாழைக்குலைகள் தொங்கவிடப்பட்டிருந்த கடை ஒன்றின் அருகில் செய்யப்பட்ட குந்தின் மேல் பைகளை வைத்து விட்டு கடைக்குள் சென்று என்னைப்  பற்றியும் வாகரையை நான் அறிந்திருந்த விதம் பற்றியும் விளக்கினேன். கடைக்காரர் அடர்த்தியான பூச்சு மீசையும் மழித்த தாடியும் சுருட்டை முடியுமாய் சரத்துடனும் பெனியனுடனும் என்னை நோக்கி திருதிரு என விழித்தார். அவர் முக பாவனையே எதுவுமே தெரியாதவர் என்பதை காட்டியது. அவர் இங்கிருந்து நான்காம் வீட்டை சுட்டி காட்டி அங்கே விசாரிக்குமாறு கூறினார். தான் கிராமம் வந்து சில காலம் தான் என்றும் அவர்கள் வம்சம் வம்சமாய் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் பைகளை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கி விட்டேன். அவர் காட்டிய வீடு வெகு தூரத்தில் இல்லை. நூறு காலடிகளில்  அடைந்து விட்டேன். சிறிய சிறிய மரகப்புகளால் நேர்த்தியாக ஒரு கோபுரம் போல அடுக்கப்பட்டிருந்தது அந்த வீட்டின் கதவு. இரவாகி இருந்தமையால் வெளியில் நின்றே உள்ளிருப்பவர்களை கூவினேன். முதல் கூவல் ……. இரண்டாம்  ……. மூன்றா……. வீட்டின் கதவு திறக்கப்படுவதை உள்ளிருந்து வந்த பிரகாசமான மின்குமிழ் வெளிச்சம் காட்டியது. ஒரு பெண் மெதுவாக நடந்து  வெளிக்காதவின் அருகில் வந்து விசாரித்தாள். வெளிச்சம் குன்றியிருந்தமையால் சரியாக அவளை இனம் காண முடியவில்லை. விவரத்தை அவளிடம் கூறினேன்.
அவள் முகத்தில் பெயர் தெரியாத ஒருவகையான உணர்வு வெளிப்பட்டதை உணர்ந்தேன், அவள் என்னை வீட்டிட்குள் அழைத்து சென்றாள்.அவளின் வீடுதான் நான் அந்த வீதியில் கண்ட வீடுகளில்  ஒப்பீட்டளவில் சிறியது. நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்த வீட்டின் மேற்பக்கம் ஓட்டினால் அடுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிற பூச்சு கொஞ்சமும் அழுக்குறாமல் மழையால் தெறித்த செம்மண் தடங்கள் வெண்சுவற்றின் கீழ் விளிம்புகளில் கோலம் போட்டது மாதிரி தெறித்திருந்தது. என் உயரத்திற்கு ஏற்றாற்போல் மேல்முனை வளைந்த வாசலினூடாக அவளின் பின்னால் தாயை பின்தொடரும் குழந்தைபோல பின் தொடர்ந்தேன். நீண்ட செவ்வக வடிவ வரவேற்பறையில் அடுக்கப்பட்ட ஆறு கருங்காலி மரத்திலான கதிரைகளில் தனிக்கதிரை ஒன்றைக்காட்டி அமருமாறு பணிவாக வேண்டினாள்.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அவளது முகம் கட்டித் தயிரைப்போல திட்டு திட்டாக வெளிறிப்போய் இருந்தது. பெரிய உருண்டைக் கண்களும் வரம்புக்கு மீறிய இமைப்பரம்பலும் அவள் முகத்தை இன்னும் விகாரப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் மேலாக அவளது கறுத்த பொங்கிய உதடுகள் , சுருட்டு பிடித்து பிடித்தே வறண்டு போய் இருந்தது. இதெல்லாம் எனக்கு  வியப்பூட்டுவனவாக இல்லை. பைகளை கழட்டி ஒரு மரக்கதிரையில் வைத்துவிட்டு நான் அருகில் இருந்த கதிரையில் இருந்தேன் . அவள் என்னை  காத்திருக்குமாறு கூறிவிட்டு வீட்டின் அறை ஒன்றிற்குள் விரைந்தாள். கதவு திறக்கையில் அது சமையலறை என்பதை நான் ஊகித்திருந்தேன் . உடல் சோர்வுற்றிருந்த நான்  கால்களையும் கைகளையும் நீட்டி மூலி முறித்துக்கொண்டேன் . மனத்தால் உற்சாகமாக இருந்தாலும் உடலில் வலுவற்று போய் இமைகள் கண்களை மூடி என்னை தூக்கம் ஆட்கொண்டது. திடீர் என்று தூக்கத்தை அடித்துக்கலைத்தால் போல் தென் மேற்கு சுவரில் தொங்கியிருந்த ஒரு மூதாட்டியின் நினைவுப்படம் என் கண்களை கூசியது, அப்படத்திலிருந்து ஏதோ ஒரு ஒளிக்கீற்று என் உடல் முழுக்க பரவியது. அம்மூதாட்டி என்னை உற்று நோக்குவது போலவே தெரிந்தாள். இருந்தும் விரைவாக என்னை சுதாகரித்து கொண்டு பார்வையை நகர்த்தினேன். அந்த பெண் அம்மூதாட்டியின் பேத்தியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.அந்த மூதாட்டியின் படத்துடன் இன்னும் பலரின் நினைவுப்படங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் வண்ணமும் அவர்கள் வாழ்ந்த காலத்தினை குறிப்பிட்டு காட்டின
சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஒரு வெள்ளி கோப்பையில் ஆவிபறக்க தேநீர் தந்தாள். இரண்டாவது வாய் கோப்பையில் வைக்க மீண்டும் இன்னொரு அறைக்குள் நுழைந்தாள். தேநீர்  அவ்வளவு சுவையாக இருந்தமையால் அது என்ன அறை என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவில்லை. கொஞ்ச தேநீர் மீதமிருக்க அவள் கையில் ஒரு திறப்பு  கோர்வையுடன் வந்தாள். தேநீரை முடித்து விட்டு கதிரைக்கால் ஒன்றின் அருகில் வைத்து அவளை பார்த்தேன். அவள் ஒன்றும் பேசாமல் என் எதிரே இருந்த கதிரையில் வந்திருந்தாள்.  குரலில் கொஞ்சம் கவலை கூடியதாக இருக்க ,
” என் ராசா, அந்தா அதில  இருக்கிறது எங்க ஆச்சி , எங்கம்மாவோட அம்மா . எங்கம்மா அய்யாவோட ஊருக்கு போயிருக்குது.நான் மட்டுந்த்தான் இருக்கேன் இப்ப வீட்டுல, ”
என்பதற்குள் நான்,
“ராசாவா? நானா ? ” என்றேன் அவளிடம்.
” ஆமாங்க ராசா , எங்க அம்மாக்கு  ஆச்சியும் எனக்கு எங்க அம்மாவும் சொன்னதன் படி நீங்க தான் எங்க ராசா. உங்களுக்கு இங்க ஒரு பெரிய மாளிகை  இருக்கு. கொஞ்ச தள்ளி.ஆச்சி காலத்தில இருந்து நாங்கதான் அத துடச்சு பாதுகாத்துட்டு வாறம், ஒவ்வொரு நாளும் அங்க போயி நான் எல்லா சுமையும் செய்திட்டு வருவன். நீங்க வருவியல் எண்டு காலம் காலமா காத்திட்டு இருக்கம். வாங்க ராசா  போவம் ” என்று முடித்துக்கொண்டு எழுந்தாள்.
எழுந்தவள் திடுக்கிட்டு ” சேர் , மை நேம் இஸ் ………” என்று தன்னைப்பற்றி விபரித்தாள், அவள் கூறிய எதுவும் வியப்பளிக்கவில்லை , கூறிய விதம் தான் வியப்பளித்தது. முன் பேச்சுக்கும் பின் பேச்சுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி தெரிந்தது. எதையும் காட்டிகொள்ளாதவனாய் மனதிற்குள் சிந்தனை அலைகளை படர விட்டேன்.
“ஷால் வி கோ ? ” என்றாள்.
திடுக்கிட்ட நான் போலாமே என்ற பாவனையுடன் பைகளை எடுத்து மாட்டிக்கொண்டேன்.என்னிடம் இருந்த கைப்பையை வலோத்காரமாய் ஏந்திக்கொண்டாள்.அவளின் பேச்சில் இருந்த முரண் என்னை திகைக்க வைத்தது. இருந்தும் என் வீட்டைப்பார்க்க போகிறேன் என்ற எண்ணமே அதிகம் என்னுள்  இருந்ததால் பெரிதாக நான் அதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
இருட்டில் வாகரை மறைந்து போய் இருந்தது. அழகிய பெண்ணின் நுதல் போன்று நிலா காட்சி அளித்தது. இடையே முகில் கூட்டம் மறைத்ததால் அவளின் நுதல் போன்று சிதைந்திருந்தது. அந்த வாழைக்குலை கடை சாத்தப்பட்டிருந்தது. தூரத்து மின் ஒளியில் தெரிந்த மரங்கள் எல்லாமே என்னை வரவேற்பது போல மெல்லிய காற்றுக்கு அதன் இலைகளையும் கொப்புகளையும் மெலிதாக ஆட்டிநின்றன. அவள் என் முன்னால் நடக்க தொடங்கினாள். நானும் கூடவே வீதியில் இறங்கி நடந்தேன். நடக்கும் போது வெளிச்சத்துக்காக அவள் ஒரு லாந்தரை எடுத்துக்கொண்டு வந்தாள். நான் எனது தொலைபேசியில் இருந்த விளக்கினை பிடித்துக்கொண்டு நேரத்தை உற்று பார்த்தேன். மணி எட்டை காட்டியது. லாந்தர் விளக்கின் ஆட்டத்தில் அவள் நிழல் அங்கேயும் இங்கேயுமாக ஆடிக்கொண்டிருந்தது. தொலைபேசி வெளிச்சத்தில் என் நிழல் சீராக பின்தொடர்ந்து.
இடையே அவளின் பெயரை விசாரித்தேன்.
” நூத்தாயி …..”
இதயம் நின்று போனது.
” அஞ்சலி… ”
திருத்திக்கொண்டாள் . மெதுவாக என்னை திரும்பி பார்த்து புன்முறுவல் செய்தாள். லாந்தரின் மங்கிய ஒளியில் அவளின் முகம் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை புலப்படுத்தியது. இருந்தும் அங்கு வீசிய காற்றும் அந்த நிலவொளியும் எனக்கு பழகிப்போன ஒரு சூழலை ஞாபகப்படுத்தியதால் எதையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து போயிருப்போம். களைப்பு அதிகமானது. கால்களில் ஆணி குத்துவது போல குதிக்கால் எலும்பு குத்த தொடங்கியது. நான் தொலைபேசி வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் இயற்கையை ஆராய்ந்தபடியே நடந்தேன். எல்லா வீடுகளும் இருளில் தோய்ந்திருந்தது. எங்காவது ஒரு சில இடங்களில் மின்குமிழ் ஒளி தென்பட்டாலும் அதன் வீரியம் குன்றியதாகவே இருந்தது. இந்த இருள்மைதான் எவ்வளவு புனிதமானது. மனிதர்களில் சுத்தாமனோர் அசுத்தமானோர் என்று இல்லாமல், நல்லவர் கேட்டவர் என்று இல்லாமல் , வெள்ளை கறுப்பு என்றுமில்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரி காட்டிகொள்கிறது. இருட்டில் இருபவரின் விளக்கு இன்னொருவரை வெளிச்சமாக்குகிறது. எவ்வளவு புனிதமான செயல் அது. இருட்டில் தான் வெளிச்சம் வலுப்பெறுகிறது. நாய்களின் வேட்டைபல்லை இருள் காட்டுவது கிடையாது. எல்லாருமே அதற்கு ஒரே மாதிரி தான்.என்று எண்ணியவாறு நடந்தேன். நடந்தேன் . நடந்தோம் . நிறுத்திக்கொண்டாள். என்னை திரும்பி பார்த்து இருட்டி இருந்த ஒரு வெளியை நோக்கி சுட்டுவிரலை நீட்டினாள். ` லாந்தர் பலமிழந்து போய் இருந்ததால் , வெற்றிடத்தை நோக்கி தொலைபேசி வெளிச்சத்தை திசைதிருப்பினேன்.
வெளிச்சத்தை முன்னோக்கி பரப்பினேன். கறுத்த நிறத்தில் பொன்னிறமான வேலைப்பாடுகளுடன் இரண்டு ஆள் உயரத்துக்கு அகன்ற கதவு. துருவோ , கறையோ சுத்தமாக இல்லை. கதவின் அடியில் நீண்ட செவ்வக அடி மட்டம் இடப்பட்டு கதைவை பிரிக்கும் பொன்னிற தகட்டில் மயில் உருவ வேலைப்பாடுகளுடன் ஓரளவு உயரமான சிறு சிறு கம்பிகள் கதவுக்கு மேல நீட்டி இருக்க அதன் முனைகளில் வேல் செதுக்கப்பட்டிருந்தது. கதவு இரண்டாக திறக்கும் பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதோடு பெரிய பழைய ஆனால் சீரியமாக பாதுகாக்கப்பட்ட பூட்டால் பூட்டப்படிருந்தது. ஒவ்வொரு பாதியின் நடுவிலும் நிறைந்து வழியும் நெற்குட செதுக்கல் காணப்பட்டது. அவள் என் பை தூக்கிய கையில் இருந்த திறப்பு கோவையை லாந்தரை  அருகில் வைத்துவிட்டு எடுத்து , பூட்டை திறந்தாள். லாந்தர் முழுமையாக அணைந்திருந்தது.
அவள் லாந்தரை எடுப்பாள் என்று வெளிச்சத்தை நிலம் நோக்கினேன், அவள் பொருட்படுத்தாமல் கதவை தள்ளி திறந்தாள். எந்தவித சத்தமும் இல்லால் மிக அமைதியாக கதவு தன்னை திறந்து கொண்டது. நான் லாந்தருக்கு விலகி கொடுத்து உள்ளே நடந்தேன்.
விலாசமான புற்தரை வாசலில் இருந்து ஆரம்பித்து நீண்டு சென்றது. இருளில் அங்கங்கே சிறிய சிறிய பன்னம் மரங்களும் ஓரிரண்டு பெரிய மரங்களும் நின்றன. மங்கிய இருட்டு ஒளியில் மரங்களை இனம் காணமுடியாமல் இருந்தது. வாசலில் இருந்து சென்ற ஓரளவு பெரிய தரையைக்கொண்ட பாதையில் அவள் நடக்க தொடங்கினாள். நான் சுற்றமெல்லாம் வெளிச்சத்தை பரப்பி நிலத்தை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். அவள் ஓரிடத்தில் போய் நின்றாள். நான் வீட்டு வாசலை அடைந்து விட்டோம் என ஊகித்து கொண்டேன்.அவள் கையை சுவரில் தடவி கொண்டிருந்தாள். ஒரு வெளிச்சம் , இதை விட பிரகாசமான வெளிச்சத்தை என் வாழ்நாளில் உணர்த்ததே இல்லை. கண்கள் கூசத்தொடங்கின. அவளும் அதையே உணர்ந்திருக்க வேண்டும் கண்களை கசக்கி கொண்டாள் . மெதுவாக திறப்பு கோர்வையில் இருந்த மிகப்பெரிய திறப்பை கதவின் துளைக்குள் இருட்டு திருகினாள். அது ஒரு விற் கதவு. ஒரு செவ்வகமும் அரை வட்டமும் சேர்ந்த உருவம்,  அன்னத்தின் செதுக்கல்கள் அங்குமிங்குமாய் சிறியனவும் பெரியனவும் சேர்ந்து கலைக்கோவில் வாசல் போல தென்பட்டது. வாசலின் செவ்வக முடிவில் மாவிலைகள் போல செதுக்கப்பட்டிருந்த திரண்ட மரசெதுக்கல்கள் கொள்ளை அழகாக இருந்தன. பார்த்த மாத்திரத்தில் என் வம்சத்தை நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். கதவுகளில் ஒன்றை தள்ளி கொண்டு அவள் உள்நுழைந்தாள். அதிக ஆவலுடல் உள்ளே சென்றேன்.
வெளிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் நடுப்பிரவாகம் மட்டும் தெரிந்தது. மேற்தளத்தில் செவ்வக வடிவ புகைப்படங்ள் மட்டும் மங்கியிருந்தன. செம்மஞ்சள் நிற கைப்பிடியை கொண்ட விளிம்புடைய மேற்தள தரை. மீண்டும் திடீரென வெளிச்சம்.  வீடு முழுக்க ஒளி சிதறியது. ஒரே சீரான நிரையில் பத்து கணக்கில் மின் குமிழ்கள், ஆடம்பரமானவை.
வீட்டின் பிரதான பாகத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வீட்டை அந்த பேர் ஒளியில் நின்ற நிலையிலேயே ஒரு சுற்று சுற்றி பார்த்தேன். எல்லாமே அப்படியே இருந்தன, என் கனவு வீடு. இதே போல ஒன்றினைத்தான் கட்டவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போது நண்பனுக்கு கீறிக்காட்டிய அதே அடுக்குகள். சிறிய கவலை மட்டும். எனது கனவு வீட்டில் எங்குமே கண்ணாடிகளால் ஜொலிக்கவிட்டிருந்தேன் ஆனால் இங்கே அவ்வாறில்லை. எல்லாமே சுவர்கள். அடைத்துவிடப்பட்டிருந்த யன்னல்கள். ஒரே ஒரு ஆளுயர கண்ணாடிமட்டும் இருந்தது. தென்பக்க மூலையோடு எட்டு அடுக்கு ராக்கையும் ஏழு அடிநீளமும் கொண்ட வட்ட நீள்வட்ட ஜாடிகளை கொண்ட அலமாரி. அதன் நடுவில் தான் இந்த கண்ணாடி. என் விம்பத்தை அப்படியே தன்னுள் செதுக்கிக்கொண்டிருந்தது. அது கட்டாயம் பிரதிபலிப்பு இல்லை செதுக்கல்தான். காற்றின் இடைவெளியில் உள்ள வெறுமையில் இருந்து வெளிப்பட்ட ஒளிபிளம்புகள் போல. நான் அதனருகே நகர அதுவும் என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. கண்களில் உணர்வு வேட்கை உதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்கள் பிசைந்தபடி. கால்கள் விடுவிடுவென வேகமாக்கியது. மிக அருகில் போனபோது அது என் விம்பம் தான் என உணர்ந்துகொண்டேன்.காற்றின் வெறுமைகளில் ஏமாற்றம் நிரம்பிகொண்டது. அருகில் இருந்த ஜாடிகளை ஒவ்வொன்றாக எடுத்து சுற்றி சுற்றி பார்த்து கொண்டேன். சிலது கனமானவையாகவும் சிலது வெறுமையாகவும் காணப்பட்டன. எல்லாவற்றிலும் மருந்து திரவியங்களின் நெடி வீசியது. சில ஜாடிகள் சூடாக இருந்தன என என்னால் நிச்சயமாக கூறமுடியும். அவற்றை நான் அதிகநேரம் கையில் வைத்துக்கொள்ளவில்லை.
ஐ வில் பிரிங் தி டின்னர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அவளின் குரல் அசல் நகரத்து பெண்போல இருந்தது. விடுக்கென திரும்பாமல் மெதுவாக திரும்பி வேணாம் என்று சொல்லுவோம் என்று கண்ணாடி ஊடு அவளை பார்த்தேன் . செக்க சிவந்த அவள் உதடுகள் மெல்லிய புன்னகைத்துக்கொண்டு இருந்தது. இது வரை என்னோடு வந்த அவளா இவள்? காலையில் சூரியனை நோக்கி பூக்கும் பூப்போல என்னைநோக்கி பூத்தபடி அந்த அழகி நின்றுகொண்டிருந்தாள். அந்த கெட்டி தயிர் முகத்தில் சகிக்க முடியாமல் இருந்த அவளே தான். கண்ட பொழுதே புலன்கள் அனைத்தையும் தொலைத்து விட்டேன்.
யா சுவர் , பசிக்குது சீக்கிரம் வாங்க
கண்ணாடியை பார்த்தபடியே நின்றேன். அவள் மெதுவாக விலகி சென்றாள்.கதவை தாண்டும் வரை அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் போய் முடிந்துவிட்டாள். மங்கிய இருளில் அந்த பேரழகி இவ்வளவு அசிங்கமாக தெரிந்தாளே என்று இருட்டின் அமைதியை நொந்துகொண்டேன். இறக்கிய பைகளை அவள் ஒரு மேசையில் வைத்திருந்தாள்.மனதில் இருளை நொந்தபடி அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் போய் கிடந்தேன். முள்ளந்தண்டு கிடையோடு அறுபது இருக்குமாறு சாய்வினை கொண்ட அந்த கதிரை சுற்றி வைரமான மரத்தாலும் நடுவில் தங்கநிற தொய்யாத இறுக்கமான பின்னலையும் கொண்டிருந்தது. உடற் களை என்னை ஆட்கொண்டது.
கண்களை மூடிக்கொண்டேன். கண்ணாடி உடைகின்ற சப்தம். நிலத்தில் எல்லாமே சிதறுண்டு தெறித்துக்கொண்டிருக்கும் சப்தம். அலறல் ஒலி. உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் கால்களை கீறுவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழும்பி கண்ணாடியை நோக்கினேன். என்னை விறைத்து பார்த்தபடியே என் செதுக்கல். கதிரையில் இருந்து கைகளை ஓரங்களில் முண்டுகொடுத்து முள்ளந்தண்டை நிமிர்த்து எழும்பினேன். அடிமேல் அடிவைத்து கண்ணாடி அருகில் போய் என்கண்களை உற்று பார்த்தேன். அதில் ஓடியிருந்த வெறுமை பெரும் வறட்சி உள்ள வயலைப்போய் என்கண்களை ஆக்கிவிட்டிருந்தது. வாயால் ஆழ் சுவாசக்காற்றை கண்ணாடியில் படரவிட்டேன். கண்ணாடியில் என் விம்பம் மங்கிப்போயிருந்தது. கண்கள் மட்டும் அப்படியே. வெறித்தபடி. கண்களை கூர்ந்து நோக்கினேன்.
முகத்திலிருந்து சிறிய கூரிய  பரு வருவதைப்போல கண்ணாடியில் இருந்து அந்த மாநிற தோற் துண்டு வெளிப்பட்டது. பயம் ஒரு புறம் இருக்க பழகிப்போன , நெருக்கமான காட்சிபோல இருந்தது. வெடுக்கென என்கண்களை பார்த்தேன். கண்ணெல்லாம் சாந்தம். வெள்ளை நிலாவில் கருந்துளை போல கண்கள் எதோ புரியாத உணர்வினால் என்னை பார்த்துக்கொண்டிருந்தன. என்கால்களில் ஏதோ முட்டுவது போல குளிர்ந்த நீரோடையில் கால்வைத்தது போல. கண்களை கீழே உருட்டினேன். வெண்ணிற பாதங்கள். குழந்தையின் விரல்கள் போல மெல்லிய பார்க்க மிருதுவான தோற்றம். பாதம் வெளியே வந்தது. கூடவே வெள்ளை மடிப்புகள். தூய்மையான வெள்ளை நிறம். கொஞ்சகொஞ்சமாக எல்லாமே. சர்வமும் வெளிப்பட்டது. அந்த மடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததில் எதையுமே கவனிக்கவில்லை. காற்றில் ஆடி என் முன்னங்கால்களை தொட்ட மடிப்புகள் மனதுள் சில முகில்களை உருவாக்கின. என் முன்னங்கால்கள் நிலத்தை பார்க்க குனிந்து கொண்டு துவண்டு கைகளை நெஞ்சுக்குள் மடித்து சுருட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிய நினைவுகள். அந்த துணியில் கட்டப்பட்ட ஊஞ்சலில் இருக்கும்போது இருந்த அதே உணர்வு. அந்த சேலையின் வருடல்கள். என்னையறியாமல்
அம்மா
எந்த பதிலும் இல்லை. மீண்டும்
அம்மா
அவர் கைகள் என் மேலே பட்டிருந்ததை உணர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அம்மாவின் முகம் தான். இப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர் முகம் முழுக்க துணியால் சுற்றியிருந்தார். சுவாசிக்க மூக்கும் பார்க்க கண்களிரண்டும் மட்டுமே வெளியில் தெரிந்தன. முழுமையாக வெள்ளை நிற உடையையே அணிந்திருந்தார். முகத்தை சுற்றியிருந்த துணி கூட. அவரின் நீண்ட கேசம் கலைந்து போயிருந்தது. எந்த விசையோ தெரியவில்லை. உடனே என் தலைப்பட்டியை கழற்றி அவரின் கலைந்த கேசத்தை பின்னி கட்டிவிட்டேன். இதுவரைக்கும் பின்னி பார்த்ததுகூட கிடையாது. என் இரண்டு கண்களும் முன் முடியால் மூடியிருக்க அம்மா தன் கைகளால் என் கேசத்தை விலக்கி கண்களை பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குள் என் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு நடத்தி கொண்டு கதிரையை அடைந்தார். என்னை இருத்தி என்கால்களை மடியில் வைத்துக்கொண்டு அவர் கீழே அமர்ந்தார்.
என்னை பார்த்தபடியே கால்விரல் ஒவ்வொன்றாக மெடுக்கு உடைத்து கொண்டிருந்தார். நான் என் கேசத்தை கஷ்டப்படுத்தில் அமைதியாக்கி விட்டிருந்தேன். மெதுவாக என் பாதங்கள் ஈரமாவதை உணர்த்தவனாய் கைகளால் அம்மாவின் தலையை நிமிர்த்திக்கொண்டு அவரின் முகத்தை சுற்றியிருந்த வெள்ளைத்துணியை அகற்ற கைகளை கொண்டு சென்றேன். கண்ணீர் பட்ட இடமெல்லாம் ரத்த சிவப்பு நிறம் துணியில் ஊறியது. துணியை கழற்ற போவதை அறிந்த அம்மா என் கால்களை உதறிவிட்டு எழுந்து கண்ணாடியை நோக்கி ஓடினார். அம்மாவை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
மேடுக்குடைத்த கால்விரல்கள் ஒதுக்கிவிட்ட கேசம் பிடித்து நடத்திய உள்ளங்கை என அம்மா தொட்ட இடமெல்லாம் வலிக்க தொடங்கியது. மிக நாசுக்காக விரல் நுனிகளை பிளேடினை கொண்டு சிறிது சிறிதாக அரிவதைபோன்ற நுண்ணிய வலி. சிறிய வயதில் ஆசிரியர் எல்லாம் உன் பெற்றோர் செய்த பாவம் என்று சபித்த வார்த்தைகள், உருண்டு பிரண்டு சண்டை பிடித்து பெருவிரலில் காயத்துடன் சென்று அறையில் ஓய்வெடுக்கும் போது பல்கலையில் நொந்து கொண்ட தருணங்கள், வெளிச்சத்தை மறந்து இருட்டை நேசிக்க தொடங்கி அதில் இழையோடுகின்ற நிசப்த இரைச்சலில் கலந்து போன நிமிடங்கள் எல்லாமுமே என்னை நிறுத்த எத்தனிக்கவில்லை.
 
 
என் பயணப்பைக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திருகிக்கொண்டிருந்தேன்.  அந்த ஜாடியின் அதே சூடு. அதே நெடி. அந்த பெண் இராத்திரி உணவோடு அதே கறுத்த திரண்ட உதடோடு அசிங்கமாக புன்னகைத்தாள். என்னை நோக்கி வந்து முகத்தை சுற்றியிருந்த கறுப்பு துணியையும் முன் முடியையும் விலத்திவிட கைகளை நீட்டினாள். நான் வேகமாக , இன்னும் , இன்னும் அதிகமாக கண்ணாடியை நோக்கி ஓடினேன். கால்கள் எல்லாம் சிதறியிருந்த கண்ணாடி துகளுடு மெல்லிய ரத்தம் வழிய பாய்ந்துகொண்டிருந்தன. அந்த கண்ணாடியும் அதன் கீழிருந்த தலைபட்டியும் என்னை வரவேற்றன. அந்த ஜாடிகள் எல்லாமே மெதுவாக குலுங்க தொடங்கின. இருள் சூழ்ந்து கொண்டது. இன்னும் கண்ணாடியை நோக்கி வேகமாக ஓடுகிறேன்.
வாகரை.

ஜெயகாந்தன்- அருண்மொழி வர்மன்

சில விமர்சனங்கள் எனது மனதிற்கு மிக அண்மித்ததாக இருக்கும்.  விமர்சனத்தின் முழு உள்ளடக்கத்தை விளங்கும் அளவு அறிவும் அனுபவமும் இல்லை என்றாலும் , விமர்சனத்தில் வருகின்ற சில குறிப்புக்கள் எனது மன எண்ணங்களாகவும் இருக்கும். ஜெயகாந்தன் பற்றி முதன்முதலில் அறிந்த விதம் ஒரு கசப்பான அனுபவ பகிரவாகவே இருந்தது. அது தான் என்னை வாசிக்கவும் தூண்டியது.  அவரின் எழுத்துலக பின்னணியையும் சொந்த வாழ்க்கை பின்னணியையும் தேடவைத்தது. அவரின் சொற்பொழிவுகளையும் கறாரான விமர்சனங்களையும் ரசிக்க தொடங்கினேன். இன்று அருண்மொழி வர்மன் அண்ணாவின் ஜெயகாந்தன் பற்றிய பதிவை வாசித்த போதும் மனதிற்கு அண்மித்த பார்வைவையாக இருந்தது.
 
அருண்மொழி வர்மன் அண்ணாவின் ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை என்ற பதிவை வாசிக்க

ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை


 
ஜெயகாந்தன் பற்றிய ஆவண படத்தை பார்வையிட

தொடர்ந்து youtube இல் ஆவணப்படத்தை பார்க்கலாம்.

தமிழ் சிறுகதை முன்னோடிக்கு வாழ்த்துக்கள்.

இன்று எல்லோருமே சிறுகதை உலகத்திற்குள் நுழைந்து விட்டார்கள். எல்லோருமே சிறுகதைகளை எழுதவும் விமர்சிக்கவும் தொடங்கியிருகிறார்கள். சிறுகதைகள்  ஏதோ ஒரு வகையில் அனைவரையும் சென்றடைந்து விட்டது.  இதனால் சிறுகதைகள் சந்தையில் மலிந்து போய் விட்டது. தரமாக வருகின்ற சிலதும் கஞ்சலுடனே இல்லாமல் போகின்றன. இப்படியான துர்ப்பாக்கிய நிலை இன்றைய சிறுகதைகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதேபோல எப்போதும் ஊதுகின்ற சங்குபோல முன்னோடிகளை வாசிக்கவும் விமர்சிக்கவும் வாழ்த்தவும் மறந்து விடுகின்றோம்.
 
இன்று தமிழ் சிறுகதைகளின் முன்னோடியான சோ. விருதாசலம் என்கின்ற புதுமைப்பித்தன் பிறந்த நாள். தமிழ் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த நாப்பதிரண்டு வருடங்களில் பதினைந்து வருடங்களே இலக்கிய பணியில் ஈடுபட்டார். வறுமையை கருவாக கொண்டே ஆரம்ப கால சிறுகதைகளை வீரியமாக எழுதினார்.மணிக்கொடியின் ஆசிரியாக இருந்தவர் அவரின் பெரும்பாலான கதைகளை மணிக்கொடியிலேயே பிரசுரம் செய்தார். நாற்பத்தி ஐந்து கதைகள் வாழும் காலத்தில் பிரசுரமாகியும் நூற்றி இரண்டு கதைகள் மொத்தமாக அவரின் இறப்புக்கு பின்னர் தொகுக்கப்பட்டும் உள்ளது.சிறந்த இலக்கிய விமர்சகராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்திருகின்றார்.
 
ஒரு சாதாரண விழுமிய குடும்பத்தின் வாழ்வியல் சிக்கல்கள் , மனிதர்களிடையே பரவியிருந்த மூட நம்பிக்கைகள் , என சிறுகதை கருக்களை அதிகமாக கையாண்டுள்ளார். அவரின் மிகச்சில கதைகளையே வசித்திருகின்ற படியால் விரிவாக எழுத முடியாமல் உள்ளது. விரைவில் புதுமைப்பித்தன் பற்றிய பதிவொன்று நீளமாக நிறைய தகவல்களுடன் பதிவிடுவேன்.
தமிழ் சிறுகதைகளின் முன்னோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
அவரின் சிருகதைகளை வாசித்துகொள்ள இந்த சுட்டி உதவும்
Click Here
 

எயிறு. – சிறுகதை

“அவன் கதவை தாழிட்டு கொண்டான்.” ,
என அந்த கதை முடிந்திருந்தது. நான் அதன் கடைசி முற்று புள்ளியை வெறித்துபார்த்துகொண்டு சில மணிநேரம் இருந்தேன். அந்த முற்றுபுள்ளியை தாண்டி அங்கால் ஏதும் எழுதப்பட்டிருக்க கூடாதா என்று மனதின் ஆழத்தில் பெரும் ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த சில மணி நேரங்களில் முற்றுப்புள்ளிக்கு அடுத்த வெற்றிடத்தில் சில ஈக்கள் வந்திருந்துவிட்டு போனது. எனக்கு அவற்றை கலைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை. அவை எவற்றையாவது எழுதிவிட்டு செல்லாதா என்று தான் காத்திருக்க வைத்தது. இவ்வளவு நேரம் நான் எதற்காகவும் காத்திருந்ததில்லை. முதன் முதலாக என் காதலியை பார்க்க கோவிலுக்கு சென்றிருந்த போது ,அவள் வர சிறிது நேரம் தாமதமாகி விட்டது. அவள் அங்கு வந்த போது நான் அங்கிருந்து போயிருந்தேன். அவளை அவமதிப்பதாக அவளுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் எனக்கு காத்திருப்பு பிடிக்காது என்று அறிவுறுத்துவதர்க்காகவே நான் சென்றிருந்தேன். அதன் பின் அவள் சரியான நேரத்திற்கு வந்துவிடுவாள். நான் சில நேரங்களில் பிந்துவதுண்டு. அவள் அதை பொருட்படுத்தமாட்டாள். என்னைப் பார்த்து அவளின் சிவந்த மெல்லிய உதட்டால் ஓரப்புன்னகை செய்வாள். எனக்குள் இருக்கின்ற ஆண் என்ற கர்வம் இன்னும் ஒரு படி அதிகமாகிக்கொள்ளும்.
 
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஜன்னலூடாக வீசுகின்ற மெல்லிய காற்றில் மிதந்துவருகின்ற நுண்மையான தூசுகள்  அந்த முற்றுபுள்ளிக்கு அடுத்துள்ள வெற்றிடத்தை உரசும் போது எதையாவது எழுதக்கூடும் என்று அந்த வெற்றிடத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். வெற்றிடம் வெற்றிடமாகவே இருந்தது. நைலோனால் பின்னப்பட்ட சதுர சட்டக கதிரை என் இருப்பை அண்ட ஆரம்பித்தது. தலையும் தோளும் முதுகுத்தண்டின் மீது அனைத்து பாரத்தையும் வைப்பது போல இருந்தது. முதுகுப்பக்கம் மெல்லியதாக நெளியச்செய்தது. கழுத்தின் இரு மருங்கிலும் சுமக்க முடியாத சுமையை அள்ளிவைத்தது போல நொந்தது. இனி யாரும் அந்த வெற்றிடத்தில் எழுதிவிடப்போவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டு மெதுவாக அரை எழும்பல் செய்து கதிரையை சற்று பின்னே அரக்கி விட்டு முழுமையாக எழுந்துகொண்டேன். மாதக்கணக்கில் நித்திரை கொண்டு எழுந்தது போல உடம்பெல்லாம் இனம்தெரியாத வழியை உணர்ந்துகொண்டே இருந்தது. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு வலது புறமும் இடது புறமும் மெதுவாக சாய்ந்து உடலை சோர்விலிருந்து மீட்டுக்கொள்ள அசைந்தேன். என்னை சுற்றி இருந்த எல்லோரும் என்னையே உற்றுநோக்கினார்கள். எல்லோரது கண்களும் என்னை ஏளனமாக பார்ப்பது போல இருந்தது. யாரும் இந்த புத்தகத்தை இதுவரையிலும் படித்ததில்லையா? இல்லை அவர்களுக்கு அந்த முற்றுப்புள்ளிக்கு அப்பால் இருந்த வெற்றிடத்தை நிரப்பிகொள்ளகூடியதாக இருந்ததா? அவர்களின் பார்வையை என்னைல் வேறுபிரித்து அறியமுடியவில்லை. ஆனால் அந்த கண்காணிப்பாளர், என்னை சாதரணமாகவே பார்த்தார். அதை பார்த்தபோது தான் மனதுக்குள் மெல்லிய இறகால் வருடியது போல இருந்தது. வயதாகிப்போன மின் விசிறிகள் எனக்கு மேலே என்னை ஆதரிப்பது போல சத்தங்களை இட்டன. எல்லோரது கண்களும் அவற்றின் மேல் திரும்பின. நான் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டேன். வேகமாக அந்த புத்தகத்தினை மூடி கையில் எடுத்துக்கொண்டேன். ஓரளவு பழைய தோல் உறையினை கொண்ட புத்தகம். எல்லா பக்கங்களும் மங்கிய மஞ்சள் தாள்கள். தட்டச்சில் அடிக்கப்பட்ட எழுத்துருக்கள். முதற்பக்கம் தொடங்கி எந்த பக்கத்திலும் படங்களே கிடையாது. ஏன் பக்க இலக்கம் கூட அச்சடிக்கப்படவில்லை. இருந்தும் அந்த புத்தகம் என்னை கவ்விகொண்டதிற்கு அதன் வாசனை ஒரு காரணமாக இருக்கலாம்.
 
நீங்கள் நூலகத்தில் எப்படி வாசிப்பிற்கு புத்தகங்களை எடுகின்றீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்னை புத்தகங்கள் தான் எடுத்துகொள்கின்ற்ன. நீண்ட ராக்கைகளின் அருகில் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது ஒரு வாசனை என்னை ஈர்க்கும். அது ஒரு அறுசுவை உணவின் வாசனையோ அல்லது நாட்பட்ட அழுகிய உணவின் வாசனையோ இல்லை. அது ஒரு கவர்ச்சியின் வாசனை. நீ என்னை உன்விரல்களால் தீண்டவேண்டும் என்று ஒரு காதலி அழைக்கும் வாசனை. உன் கண்களால் என் மேல் மாலை தொடுக்க வேண்டும் என்று பூக்கள் அழைக்கும் வாசனை. அப்படியான ஒரு வாசனைதான் இந்த புத்தகத்தையும் ராக்கையில் இருந்து பிரிக்க வைத்தது. வாசகர்கள் சூழ்ந்திருந்த நூலக அறையில் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் தனிமைபடுத்தப்பட்டுகொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்த இடம் வந்து விட்டது. அருகில் இருந்த புத்தகங்களுக்கு வலிக்காமல் அதை உள்ளே அனுப்பினேன். மற்றவற்றை விட கொஞ்சம் கூடவே உள்ளே தள்ளினேன். யாரும் என்னோடு அந்த வெற்றிடத்திற்கு பயணித்துவிடக்கூடாதென்ற வஞ்சகத்தில். பெரும் நிசப்தத்திற்கு மத்தியில் அந்த மின் விசிறிகள் ஆர்பரித்துகொண்டிருந்தன.அதன் இரைச்சல் நான் வாசிக்கும் அவ்வளவு நேரமும் கேட்காதது மனதினை ஒருவகையில் சந்தோசப்படுத்தியது.
 
நூலகத்தை விட்டு தலையில் தொப்பியை போட்டுக்கொண்டு வீதிக்கு இறங்கி வீட்டிற்கு நடக்கத்தொடங்கினேன். அப்போது கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி வரும். எனது புத்தகப்பையை முதுகில் இறுக்கி கொழுவிக்கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். பின்னேர வகுப்பிற்காக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக தமக்குள்ள சிரித்தும் பேசியும் மகிழ்ந்தபடி சைக்கிளை உளக்கிக்கொண்டு என்னை முந்தி சென்றனர். அவர்கள் எனக்கு சமாந்தரமாய் வருவதிலிருந்து முடக்கில் திரும்புவது மட்டும் அவர்களையே பார்த்துகொண்டிருப்பேன். திரும்பியவுடன் இன்னொரு ஒத்த கூட்டம் எனக்கு சமாந்தரமாய் வந்துவிடும். எல்லா கூட்டத்திலும் அதிகளவாக பெண்களையே உற்று பார்ப்பேன். யாராவது மஞ்சள் கலந்த தூசின் நிறமாக இரட்டை ஜடை போட்டு சுடிதார் அணிந்து மிக சிறிய ஒட்டு போட்டு வைத்து இடக்கண் ஓரப்பார்வையுள்ள மங்களகரமான பெண் யாராவது அவர்களில் இருந்து விடக்கூடாதா என்ற எண்ணம் என்னை ஆட்டிபடைக்கும். நான் உற்றுபார்ப்பதை சில பெண்கள் அவர்களின் தோழியரிடம் சொல்லி சிரிப்பதையும் வேறு மிக சிலர் எனை முறைத்துவிட்டு செல்வதையும் நான் பொருட்படுத்துவது கிடையாது. உடனே திரும்பி பார்க்கும் அவர்களின் தோழியருக்கு அந்த லட்சணங்கள் இருகின்றதா என பார்த்துகொள்வேன். ஒரு முறை நான் உற்று பார்த்த சிவப்பு சுடிதார் அணிந்த பெண் அவளின் காதலனுடன் வந்து நடுவீதியில் என்னோடு வாக்குவாதப்பட்டு சென்றிருக்கிறான். எனது அம்மாவிற்கு வாக்குவாதம் பற்றி கூறியபோது முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு என்னை சமாதானப்படுத்தியிருகிறார். புத்தகங்களை போல எந்த பெண்ணும் என்னை தெரிவு செய்து கொள்ளவில்லை.
 
மாலை சூரியன் எனக்கு பின்னால் ஒளிந்து கொள்ள மஞ்சள் வெயில் நடுவில் என் கறுப்பு நிழல் விழுந்தது. எனது ஒவ்வொரு அடியும் நிழலை மிதித்து மிதித்துகொண்டே இருந்தது. அன்று, அந்த இரவில் அந்த கறுப்பு உருவத்தை இப்போது மிதிப்பது போல மிதித்திருந்தால் இன்று எந்த காதலனிடமும் பேச்சு வாங்கியிருக்க தேவையில்லை. எந்த பெண்ணையும் முடக்குவரை உற்றுபாத்திருக்க தேவை இல்லை. என் அம்மா முகத்தை சோகமாக வைத்திருந்திருக்க தேவை இல்லை.
 
நானும் அம்மாவும் தங்கச்சியும் இரவு ஒன்றாக இருந்து குசுனிக்குள் ரொட்டியும் சம்பலும் அம்மா சுட்டு தர நான் இரண்டு தங்கச்சி ஒன்று என்ற ஒழுங்கில் மாறி மாறி சாப்பிட்டுகொண்டிருந்தோம். இடைக்கிடை அம்மா என்தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து தன் பசியையும் போக்கிகொண்டார். பாடசாலையிலும் பின்னேர வகுப்பிலும் நடந்தவற்றை நான் அம்மாக்கு சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருந்தேன், தங்கச்சி அதை கவனமாக கேட்டுகொண்டிருந்தாள். அம்மாவின் சம்பல் கொஞ்சம் காரமாக இருக்கும். அதனால் மெல்லியதாக சம்பலுக்கு மேலே சீனி தூவித்தான் இருவரும் சாப்பிட்டோம்.அம்மா லாவகமாக சீனி இல்லாத சாம்பலின் பக்கத்தால் ரொட்டி துண்டை மடித்து உறைக்க உறைக்க சாப்பிட்டார். இருவரும் பெரிய ஆக்கள் ஆன பிறகு இப்படித்தான் சாப்பிடுவோம் என்றும் கூறினார்.
 
வெளியில் ஆட்டோ ஒன்று வந்து நிற்பது போல இருந்தது.வழமையாக இந்த நேரத்தில் பெரியப்பா குடும்பம் தான் எங்களை பார்க்க வருவார்கள்.அப்பாவை ஆமி கொண்டு போனதில் இருந்து அவரை சடலமாக குளத்திற்குள் எடுத்தது முதல் இன்று நானும் தங்கச்சியும் படிக்கின்ற செலவுவரை அவர்தான் பார்த்துகொள்கிறார்.அப்பா இறந்தபின்னர் அம்மா இருக்கின்ற காணிகளை விற்று குடும்பத்தைகொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்து பெரியப்பாவிடம் ஆலோசனை கேட்ட போது , அவர் அம்மாவை பேசி சொத்துகள் ஒரு காலத்தில் தங்கச்சிக்கு பயனாக இருக்கும் என்றும் தான் குடும்பத்தை பார்த்து கொள்கிறார் என்று விடாபிடியாக கூறினார். அன்றிலிருந்து எந்த முடிவேடுப்பதென்றாலும் பெரியப்பாவின் ஆலோசனை கட்டாயமாக இருக்கும். அவர் ஒரு கடும் பச்சை நிற ஆட்டோ வைத்திருக்கின்றார். அதில் தான் அவரும் அவரின் குடும்பமும் எங்களை பார்க்க வருவார்கள். பெரியப்பா கச்சேரியில் வேலை செய்வதாலும் வீட்டின் பின் தோட்டம் வைத்திருப்பதாலும் பெரும்பாலும் இரவில் தான் எங்களை பார்க்க வருவார்கள். ஆனால் இன்று புது விதமாக இருந்தது. வழமையாக அவர் தொலைபேசி அழைப்பொன்றை எமக்கு தந்துவிட்டே அவர்களின் வீட்டில் இருந்து கிளம்புவார்கள். ஆனால் இன்று அப்படி எந்த அழைப்பும் வரவில்லை. அம்மா சாதுவாக சந்தேகப்பட்டார். எதற்கும் ஒரு முறை பெரியப்பாவிற்கு எடுத்து விசாரிப்போம் என்று அழைப்பை ஏற்படுத்தினார்.மறுமுனையில் இருந்து பேசிய பெரியப்பாவிடம் விசாரித்த அம்மாக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்வீட்டில் இருப்பதாக சொன்னார். அம்மா அவரை கஷ்டபடுத்தாமல் அது எதிர் வீட்டிற்கு வந்திருந்த ஆட்டோ போலும் என்று கூறிவிட்டு வைத்தார். அம்மா உண்மையிலேயே அப்படிதான் நினைத்தார்.
 
கொஞ்ச நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் போனது, வழமையாக முன் விறாந்தையில் படுத்துக்கொள்ளும் மூவரும் சாமி அறைக்குள் படுத்துகொண்டோம். நான் பயத்தில் போர்வையை முகத்தை மூடும் வரை இழுத்து போர்த்திக்கொண்டு நித்திரை ஆகி விட்டேன்.
 
எழுந்து பார்த்த போது லேசாக தலை வலித்தது. கைகள் இரண்டும் விறைத்தது போலே இருந்தது. கட்டிலில் இருந்து இறங்கி கால்களை நிலத்தில் வைத்தபோது கால்களும் விறைதிருப்பதை உணர்ந்தேன். என் அருகில் இருந்த அம்மாவையோ தங்கசியையோ காணவில்லை. சில நேரங்களில் அதிகாலையிலே அவர் இருவரும் எழுந்து காலை வேலைகளை பார்க்கபோவது வழக்கம். ஆனால் மனது பதைபதைத்து கொண்டே இருந்தது. வெளியிலிருந்து எந்த சத்தத்தையும் கேட்கமுடியாமல் உள்ளே ரத்த ஓட்டம் சல சலப்பதை மட்டும் பெருவெளியில் சிறிய இரைச்சல் போல உணர்ந்தேன்.மெதுவாக விறாந்தைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று பேர் தமக்குள்ள வாயசைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களில் நீர் ஓடியிருந்தது. இன்னும் கொஞ்சம் தள்ளி வர அம்மா தலைவிரித்தபடி ஒரு துணியால் மூடிய கட்டை போன்ற வடிவுடையத்தை அடித்து அழுதுகொண்டிருந்தார். என்னை கண்டவுடன்
 
“ தம்பீ …….” என்ற பலத்த சத்தத்தில் கதறிஒடி வந்தார். காதருகே அடுகுண்டைப்போட்டல் போல வெடித்து சிதறியது அடைப்பு. சுற்றியிருந்த சலசலப்பு என்னை நிலைகுலைய வைத்தது. அம்மா எழுந்து ஓடிவரும் போது அவர் அருகில் இருந்த உருவம் என்னை அடித்து போட்டது. மங்கியிருந்த கண்கள் ஒரு வேகத்தில் விளித்துகொண்டன. வெள்ளை துணி போர்த்தி என் தங்கச்சி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தாள். என் மூளைக்குள் பெரிய வண்டு போய் அரிப்பது போலவும் தாடைகள் இரண்டும் ஒன்றை ஒன்று முட்டி மோதி கால்கள் கைகள் எல்லாம் நடுங்க தொடங்கியது.தங்கச்சியின் அருகில் ஓடிசென்றேன். அம்மா என்கண்களை பொத்தி கொண்டார். இருந்தும் வலுகட்டாயமாக கைகளால் அவரின் கைகளை விலத்தி சாய்ந்திருந்த உயிரை பார்த்தேன். காதுகளின் நுனிகள் இரண்டும் பிய்ந்து , கழுத்தை அடையாளபடுத்த முடியாமல் சிவப்பை ரத்தம் உறைந்தும் அவளின் ரெட்டை சடை எல்லாம் ரத்தத்தில் தோய்ந்து போயும் அவரின் ஓரக்கண் என் என்னை, எப்போது தருவாய் என் கைவிசேசத்தை என்ற ஏக்கத்துடன் பார்த்தபடியும் தங்கச்சி விறைத்து போயிருந்தால்.
 
ஒரு சலவை இயந்திரத்துக்குள் மாட்டிக்கொண்ட பஞ்சைப்போல முட்பதருக்குள் சிக்கிக்கொண்ட மயிலிறைகைப் போல என் உடம்பெல்லாம் சுருட்டி வாரி போட்டது. தங்கச்சிக்கு அருகிலேயே எதுவும் பேசமால் அமர்ந்து விட்டேன். சுவரின் மூலையை வெறித்து பார்த்தபடி, இரவு அம்மா போட்டு விட்டு வர சொன்ன தாழ்பாள் அப்படியே குத்தனமாய் சுவரில். அதை சுற்றி யாரோ சிலர் குசு குசுத்துகொண்டு.
 
ஒரு அசாத்திய சக்தியுடன் என் நிழலை மிதித்து அடுத்த அடியை எடுத்து வைத்தேன்.
 
அந்த கதாசிரியர் அதற்கு பின்னும் ஏதாவது எழுதி இருக்க வேண்டும்.
 
“அவன் கதவை தாழிட்டு கொண்டான்”.

எளிமை சொல்லும் அனுபவங்கள் – அகளங்கன்

சொந்த வட்டார வழக்கில் ஒரு கதையை வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒன்றிப்பு ஆலாதியானது. அத்தோடு கதைக்களமும் சம்பவங்களும் கண்களின் முன்னே இருக்கும் போது கதைசொல்லி ஒரு வீதியினூடாக கதைமாந்தர்களை அழைத்துச் சென்றால் வாசகனின் மனம் அதன் கிளைவீதிகளை எல்லாம் நினைவுபடுத்திக்கொள்ளும். இது வீதிகளைப் போலவே சம்பவங்களுக்கும் பொருந்தும். ஒரு சில சம்பவங்களில் நாம் முதலாம் நிலையிலும் பல சம்பவங்களில் நாம் மூன்றாம் நிலையிலும் நின்று பாக்கின்ற வழக்கத்தை உடையவர்கள். முதலாம் நிலை கதை சொல்லியின் உணர்வு எப்போதும் மூன்றாம் நிலை வாசகனை எளிதாக அடைந்து விடுவதில்லை. இருந்தும் அதிகளவான எழுத்தாளர்கள் இந்த பிளவினை இல்லாது உணர்வுநிலை ஓட்டத்தை கதையில் ஏற்படுத்துவதற்கு கதைகள வட்டார வழக்கினை பயன்படுத்துகின்றனர். இந்த வட்டார வழக்கில் எழுதபடுகின்ற கதைளை இன்னொரு சாராரால் அணுக முடியாமல் போவது , ஒரு சில வட்டாரவழக்கு கதைகளின் வழுவே. இந்த நிலை பெரும்பாலும் இலங்கையில் இருக்கின்ற வட்டார வழக்கு கதைகளுக்கு ஏற்படுவதில்லை. ஈழத்தின் பேச்சு வழக்கு இலக்கண தமிழை அண்மித்ததாகவே இருக்கின்றது.
 
ஒரு கதையின் எளிமை அக்கதைக்கு சில நேரங்களில் பலமாகவும் சில நேரங்களில் பலவீனமாகவும் அமைந்துவிடுகின்றது.  இந்த எளிமை கதை கேட்பவருக்கு சௌகர்யமாக இருக்கிறது, இருந்தும் கதையினை வாசிப்பவருக்கு ? வாசகன் என்ற நிலையில் ஒரு சிறுகதை எளிமையாக இருபதனால் ஏற்படுகின்ற ஒன்றிப்பின்மை தவிர்க்க முடியாதது. ஒரு வேற்று களத்தை வாசகனுக்கு விபரிக்கும் போது அல்லது ஒரு மூன்றாம் நிலை வாழவியலை கூறும் போது எளிமையாக கூறல் என்ற நுட்பம் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். இருந்தும் அதே களத்தில் அதே வாழ்வியலில் வாழ்ந்த ஒருவர்க்கு அந்த கதை விரிக்கின்ற கோண பரிமாணங்கள் மிக பெரியவை. இதை வேற்று வாசகாரால் உணர்ந்துகொள்ள கடினமாக இருக்கும்.
 
வவுனியாவின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை அகளங்கள்(நா.தர்மராஜா) ஆவார். அவரது சிறுகதைகளின் தொகுப்பு முற்றத்துகரடி. அதிலுள்ள யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும் என்ற இருசிறுகதைகள் பற்றிய எனது பார்வையும் இவ்வாறான ஒன்றே. அவருக்கே உரிய மிக தெளிவான மொழிநடையும் எளிமையான கதைசொல்லலும் முற்றத்துக்கரடி முழுவதும் காணப்படுகின்றது. வவுனியாவின் இரு கிராமங்களை களமாகக் கொண்டு இரு வேறான பொருளாதார நிலையை உடைய மக்களின் கதைகள் தான்  யாழ்தேவி மற்றும் நாளைக்கும் பூ மலரும். யாழ்தேவி தாண்டிக்குளத்தில் வசிக்கின்ற ஒரு ஏழை சிறுவனையும் குடும்பத்தையும் பற்றியும் நாளைக்கும் பூ மலரும் நடுத்தர பொருளாதார நிலையை உடைய ஆசிரியரின் குடும்பத்தை பற்றியும் இருவருக்குமிடையேயான பொதுமையான போர் சூழல் பற்றியும் பேசுகின்றது.
 
யாழ்தேவி
 
விளிம்பு நிலை மனிதர்கள் என்பதற்கு செம்மையான உதாரணம் கூறக்கூடிய குடும்பம் ஒன்றிலிருந்து பாத்திரங்கள் வார்க்கபடுகின்றன. குடும்பத்தின் வறுமையாலும் அம்மாவின் இயலாமையாலும் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் பாடசாலைக்கும் செல்லகூடிய திறமையாக கற்க கூடிய ஒரு பத்து வயது சிறுவனின் ஒரு நாள் வாழ்கையை தான் யாழ்தேவி. போரின் நிலவுகையை விரும்பக்கூடிய தொழில் செய்கின்ற சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். அப்படியான மனநிலையில் உள்ள ஒருவனை தாய் , அவர்களது வாழ்வில் போரினால் உண்டான இழப்புகளை பற்றி கூறி போரின் கொடூரத்தை விவரிப்பதாக கதையை ஆசிரியர் முடித்துக்கொள்வார். ஒரு எளிமையான கதைகூறலின் ஊடாக இந்த உணர்வுநிலை பரிமாற்றத்தை நிகழ்த்தியிருப்பார்.
 
நாளைக்கும் பூ மலரும்
 
அதே ஒரு நாள் வாழ்க்கை , அதே போர்ச்சூழல் ஆனால் தனிமனித உணர்வு போராட்டம். நாளைக்கும் பூ மலரும் கதையின் மைய பாத்திரம் ஒரு ஆசிரியர். நான்கு குழந்தைகளுடனும் மனைவியுடனும் சாதாரண நடுத்தர குடும்பத்திற்குரிய வாழ்வியலை வாழுகின்றார். குண்டு வெடிப்பினால் உருவாகின்ற மன அலைச்சலே மேலோட்டமான கதை.ஆனால் அதில் கதாசிரியர்  உள்ளோட்டமாக சொல்லுகின்ற போரின் போக்கு முதலில் காப்பாற்றபட்டும் பின்னர் இறந்து போகின்ற நாய்க்குட்டியால் படிமபடுத்தபடுகின்றது.
 
நூலகம் இணையத்தளத்தினால் ஆவணபடுத்தப்பட்ட முற்றத்துக்கரடியை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
ஆசிரியரின் ஏனைய நூல்களை வாசிக்க
http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

அசோகமித்திரன் – குறிப்புணர்தல் – தண்ணீர்.

சமகால எழுத்து வட்டத்தில் முன்னோடிகளின் படைப்புகளில் இருந்து இலக்கியத்தை விரித்து எடுத்தல் என்ற செயற்பாடு சொற்பமாகவே நடைபெறுகின்றது. ஒரு இலக்கியத்தின் அடைவு மட்டம் எதைக்கொண்டு நிர்ணயிக்கபடுகின்றது என்ற கேள்வி எல்லோரிடமும் உண்டு. நான் இலக்கிய அடைவு மட்டம் என்பது எம் முன்னோடிகளின் படைப்புகளை எமது படைப்புக்கள் தாண்டும் போது ஏற்படுகின்றது என்பேன். தாண்டிய பின்னர் அதை அடுத்த தலைமுறை தாண்டும் போது இன்னொரு அடைவு மட்டம் எனவும் பின்னர் இன்னொன்றாகவும் காலம் காலமாக விரித்துக்கொண்டு போகவேண்டிய ஒன்றாக கருதுகின்றேன். இந்த எழுத்து மீறல்கள் அத்தியாவசியமானவையே. இது ஆரோக்கியமான எழுத்துலகம் உருவாகும் சாத்தியத்தை உண்டு பண்ணும். இலக்கிய வரம்புகள் என்று ஒன்று உள்ளதை யாரும் மறுத்துவிடமுடியாது. நாம் காலத்தை மீறிய படைப்புக்கள் என்று கருதுகின்ற படைப்புக்கள் எல்லாமே ஒருவகையில் ஏதோ ஒரு வகையில் இலக்கிய வரம்புக்குள் நின்று தன்னை வெளிப்படுத்தியதாகவே உள்ளது. ஒரு படைப்பை இன்னொன்று மீறிச்செல்லல் என்ற அடிப்படையில் எழுகின்ற படைப்புக்கள்  இலக்கிய அத்துமீறல்களுக்கு உள்ளாகின்றன.
 
படைப்பாளி தன் நோக்கத்தை வெளிபடுத்த பயன்படுத்தப் படுகின்ற எந்த இலக்கிய வடிவமும் வெறும் அனுபவங்களின் கோப்புக்களாகவோ அல்லது புனைவுகளின் சஞ்சாரமாகவோ அமைந்து விடுகின்றது.  இது ஒரு இலக்கிய மந்த நிலையே.இதை யாராலும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை. அப்படி முயன்ற பலர் வேறு தளங்களை அடைந்தார்களே ஒழிய செம்மையான இலக்கியம் ஒன்றை வெளிக்கொண்டுவர முடியவில்லை. இந்த கட்டுரை எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் தண்ணீர் என்ற படைப்பை நாவல் என்ற வடிவத்திற்குள் கொண்டுவருவதில் உள்ள கருத்து வேற்றுமைகளை பற்றியது.
 
தண்ணீர் என்ற படைப்பு 1973 ஆம் ஆண்டு வெளியாகி 2005 இலும் மறுபதிப்பு செய்யப்பட்ட முக்கிய இலக்கிய படைப்பு. முன்னுரையிலேயே அசோகமித்திரன் இது தண்ணீர் என்ற பொருளைத்தாண்டி வாழ்கையின் நெருக்கடி என்ற விடயத்தை வெளிபடுத்தியுள்ளதாக கூறுகின்றார். முதல் பிரச்சனை அங்கிருந்தே ஆரம்பமாகின்றது.
வாழ்கையின் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் என்று அவர் விளிக்கின்ற துன்பம் , ஏமாற்றம் , கவலை , வாழ்கையை வாழமுடியாமல் சாகின்ற முடிவை ஏற்படுத்தும் தருணங்கள் என்பவை நாவலின் மேலோட்டமான தண்ணீர் பிரச்சனை என்ற படலத்தை தாண்டி வெளிவந்திருகின்றதா என்றால் இல்லை என்ற மனநிலையையே உருவாக்குகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் நாவலில் இருக்கின்ற இருமை தன்மை. ஒரு பக்கம் ஆழமான தண்ணீர் பிரச்சனை இன்னொருபக்கம் சாதாரண வாழ்க்கைக்கு உட்பட்டிருக்க கூடிய தங்கை அக்கா வாழ்கை இன்னல்கள், இவை இரண்டையும் பிணைந்து உருவாக்கபட்டிருகின்ற எழுத்தோட்டத்தில் தண்ணீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு கொடுக்கின்ற ஆழமான விவாதங்களை மற்றைய பக்கம் கொடுக்க தவறுகின்றார். இதில் சமநிலை அல்லது உட்பொருள் மேலோங்குகின்ற தன்மை இல்லாமல் போகின்றபடியால் தண்ணீர் பிரச்சனையோடே கதை முழுதும் நகர்ந்து விடுகின்றது.
 
ஒரு நாவலுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு அதன் விரிவு. இவ்விரிவை பலவிதமாக பிரித்துகொள்ளலாம். கதைக்கரு விரிவு, கதைக்கள விரிவு, கதாமாந்தர்களின் விரிவு, சம்பவங்களின் விரிவு, என கூட்டி கொண்டே செல்லலாம். இந்த விரிவில் தான் ஒரு நாவல் தனது திடமான உருவினை பெறுகின்றது. இன்றைய இலக்கிய வாசகர்களால் மகத்தான இலக்கியம் என்று பேசக்கூடிய ருச்சியன் இலக்கியங்கள் இந்த விரிவினை மிக சரியாக கையாண்டிருப்பார்கள். இந்த விரிவு வாசகனுக்கு ஒவ்வொரு முறை வாசிப்பிலும் ஒவ்வொரு கோணத்தில் நாவலை அணுக வழிசெய்யும். ஒவ்வொரு வாசலாக திறந்து விடும். ஒரு பரந்த அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த விரிவு வழிசெய்யும்.
 
தண்ணீரில் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை விரிவு என்ற வடிவமே இல்லாமல் ஒரு தேக்கமாகவே சென்றுகொண்டிருகிறது. நான்கு வீட்டிற்க்குள் இரண்டு தெருவுக்குள் ஆறு ஏழு கதா மாந்தர்களோடு கதை முற்று பெறுகின்றது. இந்த பௌதீக குறுக்கம் வாசகனையும் குறுக்கி விடுகின்றது.யமுனாவும் சாயாவும் டீச்சரும் மீண்டும் மீண்டும் ஒரே உணர்வலைகளுடன் வந்து ஒரு பாத்திர குறுக்கத்தை உள்ளாக்கிறார்கள். பாத்திர பெருக்கத்திற்கு ஏற்றவாறு கதையின் போக்கு அல்லது களம் அமைந்து கொள்ளவில்லை. டீச்சர் பற்றிய விவரணத்துக்குள் சென்ற அ.மி தனது கருவிற்கான உந்துதலை மட்டுமே அளிக்கும் வகையில் சம்பவங்களை கோர்த்து விட்டு விலகுகிறார். அதே போன்று யமுனாவும் சாயாவும் தங்கள் பாட்டி வீட்டிக்கு செல்லும் போதும் அதே விரிவின்மை தலை தூகுகின்றது. சாயாவின் கணவன் பிள்ளை என்ற உறவுகள் ஆகட்டும் யமுனாவின் கள்ள காதலன் என்ற உறவாகட்டும் மேலோட்டமாக வந்து போகின்ற ஆழமற்ற பாத்திர சித்தரிப்புகளாக காணப்படுகின்றனர்.அதே போன்று தான் தூய்மையற்ற தண்ணீர் சம்பந்தமான பிரச்சனையும் இன்ஸ்பெக்டர் பிரச்சனையும் எந்த நகர்வுகளுமே கதைக்குள் செலுத்த முடியாத தட்டையான கதை சொல்லலாக முடிந்து போகின்றது. கதையின் போக்கு கதையில் மடிப்புகளை உருவாக்கி வாசகரை திறக்க செய்ய முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.
 
இவை போன்று சில குறிப்பு பிழைகள் தண்ணீரில் இருக்கத்தான் செய்கிறது.

நீள்வட்ட இறப்பு.

எப்போதாவது நீங்கள்
இறந்திருகிறீர்களா?
ஒரு முறையாவது ?
மெல்லிய மழைத்துளி
கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல
சிதறியிருகிறீர்களா ?
ஆழமான கடலின் அடியில்
யாரையாவது சந்திக்கபோகும் போது,
சில வேளைகளில் சந்தித்த பிறகு
எப்போதாவது
இறந்திருகிறீர்களா?

இறந்திருப்பீர்கள்
தெரியாமலே.
அவர்களின் கை குலுக்கல்கள்
புன்சிரிப்பு
நட்பான பார்வை
இதில் எதாவது
உங்களை கவர்ந்திருக்கலாம்.
உங்கள் தூக்கத்தை
அவர்கள் கெடுக்க விரும்பாமல்
மிக மெதுவாக
செய்திருக்கலாம்.
யாருமே உங்களை
எழுப்ப நினைத்திருக்க மாட்டார்கள்,
அவர்களும்
இதோ
இப்பொது
அந்த ஆழ் கடலின்
அடிக்கு அவர்களுக்கு நெருக்கமானவரை
சந்திக்க சென்றுகொண்டு இருப்பார்கள்.
அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்
“மெல்லிய மழைத்துளி
கருங்கல்லில் பட்டுத் தெறிப்பதைப் போல
சிதறியிருகிறீர்களா ?’’
அவர்கள் ஏளனமாக
சிரிப்பார்கள்.
உங்களால் பொறுக்கமுடியாமல் போகும்
நீங்கள் அடுத்த இறப்பிற்கு
தயாரகிக்கொண்டிருபீர்கள்.

வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 07 – “நாட்டார் கதைகள்”

வழமை போல இலக்கியங்களுக்குள் ஒருவனாய் நின்று ஆராயாமல் ஒரு பார்வையாளனாக வடக்கு பிரதேசங்களில் உலவுகின்ற நாட்டுப்புற கதைகள் சம்பந்தமான இந்த கட்டுரையினை எழுதலாம் என்ற நோக்கம் தான் இந்த காலதாமதத்துக்கு ஒரு காரணம். எப்போதும்போல இலக்கிய வர்ணனைகளுடன் ஆராய்வதற்கு கதைகளின் எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதனால், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஆராய்தல் மிக பொருத்தமானதாக இருக்கும். இந்த கட்டுரையினை எழுதுவதற்காக கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கதைகளை வாசித்துள்ளேன். இணையத்தில் இருந்தும் சுற்றத்தில் இருந்தும் முக்கியமாக கலாநிதி கி. விசாகரூபன் எழுதிய ஈழத்து நாட்டுப்புறக் கதைகள் என்ற தொகுப்பிலிருந்து என்னால் பெருமளவான கதைகளை திரட்ட முடிந்தது.

கதைகள்- ஓர் அறிமுகம்

(mamtavn.files.wordpress.com)

இன்றிலிருந்து சுமார் 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக அனுமானிக்கப்படுகின்ற மனித இனம் வழி வழியாக கடந்து வந்த பாதையின் குறிப்புகளே கதைகள். இந்த குறிப்புகளின்  உண்மைத்தன்மை என்பதை மீறிய ஒரு பதிவு நுட்பம்தான் கதைகளின் கரு. சிறிய சிறிய விடயங்களில் தொடங்கி உலகின் மிகப்பெரிய வரலாற்றுத் தடங்கள் வரை எல்லாமுமே கதைகளின் கோப்புகள்தான். இன்று கிடைத்திருக்கின்ற வரலாற்று தடயங்களில் இருந்து உருவாகின்ற அனுமானங்கள் எல்லாமே கதைகள் தான். கல்லை உரசி பொறி துவக்கினானிலிருந்து கணனியில் பொறி கிளப்பினான் வரை எல்லாம் கதையின் பரிமாணங்கள் தான். ஒரு சம்பவமோ சில சம்பவ கோர்ப்புகளோ வெளிப்படும் போது அவை கதைகளாக மாற்றம் கொள்கின்றன. ஒரு காதாசிரியன் கதைகளை உருவாக்குகிறான் என்ற இன்றைய போக்கிலிருந்து சற்றே விலகி சாதாரண மாந்தர்கள் எல்லாருமே கதாசிரியர்கள் ஆகின்றார்கள் வரலாற்றில். பொதுவாகவே அனுபவங்கள் தான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட்டுவருகின்ற கதைக்குறிப்புகளாக இருக்கின்றன. ஓர் உண்மைச்சம்பவமோ அல்லது புனைவோ அனுபவமாக கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த எச்சங்கள்தான் இன்றைய கதைகள்.

வடக்கின் நாட்டுப்புறக் கதைகள் – தெய்வீக கதைகள் ஒரு பார்வை

கதைகளுக்கு பிறப்பிடம் கிராமங்கள் தான். இதில் வேற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஏனென்றால் ஆதி வரலாறுகளில் கிராமங்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. வடக்கின் புவியியல் அமைப்பு, விளிம்புகளில் கரையோரமாகவும் மத்திம பகுதிகளில் விளைநிலமாகவும் அடியில் காட்டு நிலமாகவும் இருந்திருக்கின்றது. இந்த நிலவியல் அடிப்படையிலேயே கதைகளும் அதன் போக்கை வகுத்துக்கொள்கின்றன. வெவ்வேறு நிலவியலில்  வாழுகின்ற மாந்தர்கள் அந்தந்த நிலவியலின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அந்த நிலவியல் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்திருக்கின்றன. இந்த பயத்தின் குறியீடே அவர்களின் கதைகளில் உள்ளூர ஓடிக்கொண்டிருக்கின்றன.
கதை 01- வேளாங்கண்ணி மாதா

“……….. நடுக்கடலில் பெரிய புயல் வீசி கப்பல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க கப்பலில் இருந்த எல்லாரும் “மாதா” என அலறிக்கொண்டிருந்தனர். …………”

கதை 02- உக்கிர வைரவர்

“……..தண்ணி உக்கிரமாய் பாயத்தொடங்கியது. வர வர தண்ணீர் வேகமாக அடித்துகொண்டுவருவதைப்பார்க்க இவருக்கு ஐமிச்சம் ஆகிவிடுகிறது….. வேட்டி சால்வை எல்லாவற்றையும் மம்பட்டிக்கு சார்த்தி விட்டு ஓடி வந்துவிட்டார்…… “

இந்த பயத்தை ஏற்படுத்தும் ஊடகமாக இயற்கையே பயன்படுத்தப்பட்டது. இயற்கை கொள்கின்ற சீற்றம் அவர்களுக்கு தெய்வ குற்றமாகப் படுகின்றது. அந்த இடத்திலே ஏற்படுகின்ற உதவியை அவர்கள் தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட உதவியாகவும் அதன் பின்னரான சம்பவங்கள் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட குறீயீடுகளே என்ற நம்பிக்கை ஒவ்வொரு கதைகளிலும் பலமாக எதிரொலிக்கிறது.
கதை 03- லொரென்சியார் கோவில்

“…. தாமஸ் (ஐயம்பிள்ளை) லொரென்சியாரை பூசித்துவரும் காலத்தில் தீவாலய முன்றலில் நிறுவுவதற்கு கொடிமரம் இல்லையே என்று மனம் வருந்திய சில நாட்களில் பரவைக்கடலில் முப்பத்தைந்துஅடி உயரமான சவுக்கு மரம் ஒன்று வந்தடைந்தது ………”

பெரும்பாலான கதைகளின் பின்னணி அவ்வூர்களில் இருக்கின்ற கோவில்கள் தேவாலயங்கள் பற்றியே இருக்கின்றன. பக்தி என்ற பயத்தை மனிதர்களிடையே ஏற்படுத்துவதற்காக முன்னைநாள் அனுபவங்களை சொல்லுகின்ற பின்னணியை கதைகள் கொண்டிருக்கின்றன.

(pixabay.com)

கதைகளில் மையக் கருவாக இருக்கின்ற பக்தியினை உறுதிப்படுத்த புனைகின்ற சம்பவங்கள் அனைத்தும் தெய்வத்தை அலட்சியப் படுத்துகின்றதன் விளைவையோ அல்லது மிக இக்கட்டான சூழ்நிலையில் தெய்வத்தின் உதவியையோ காரணப்படுத்தி கூறப்படுகின்றன.
கதை 04 – காளியாச்சி

“………… பிறகு ஒரு நாள் ஒரு சோனக மனுசி அந்த அம்மன் கோவிலுக்கு முன்னால தலையை விரித்து அந்த முடியை கையால் கோரி விட்டுக்கொண்டு அம்மனை அலட்சியமாக பார்த்துவிட்டு போனாள். அப்படி பார்த்த மனுஷியின் தலை அப்படியே திரும்பி விட்டது…………..”

கதை 05 – அற்புத இளநீர்

“……….. அடுத்த நாள் அபிஷேகத்துக்கு பால் பழம் கொண்டு கோயிலுக்கு போனார்கள். கோயில் ஐயாவிடம் இளநீர் கிடைக்காததை எண்ணி வருந்த ஐயா தோட்டத்தில் போய் பார்க்குமாறு கூறி அனுப்பிவிடுகிறார். அங்கு சென்று பார்த்தபோது செவ்விளனி குலையாக காய்த்து கிடந்தது…….”

பக்தியோடு உள்ளூர சாதியமும் கதைகளில் ஓடுகின்றது. கீழ் சாதியினரை ஊர் மக்கள் வெறுப்பதாகவும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க மறுக்கின்ற அல்லது ஓதுகின்ற போக்கினையையும் எடுத்துக்காட்டுகின்றது.
கதை 05 – அற்புத இளநீர்

“….. பறையனுக்கு வீட்டில் இளநீர் இருந்தும் கொடுக்க மறுக்கின்றனர்……..”

கதை 06 – பாவம் கழித்தல்

” …….. அவர்கள் இந்த வளவுக்குள் வரக்கூடாது. மீறிவந்தால்உங்களையும்  அவர்கள் போலவே நினைத்துக்கொள்வேன். ……”

(pixabay.com)

சில கதைகள் மதப்பிரிவினை இருந்ததை கூறுகின்றன. மதங்களுக்கிடையே வன்முறை முற்றி இருப்பதை, அவர்கள் மற்றைய மதங்களை மதிக்காமல் இருப்பதையும் காட்டுகின்றது. இன்று வடக்கில் பேசாமல் ஒளிந்து காணப்படுகின்ற மதப்பிரிவினை ஒருகாலத்தில் பெரும் கலவரமாகலாம். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனித மனங்களுக்கிடையே காணப்படுகின்ற விரிசல் மிக வலிமை வாய்ந்தது. எவ்வளவுதான் நாம் ஒன்றாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டாலும் புரிந்துணர்வு இல்லாமலே இந்த சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் மூன்று சமய வணக்கஸ்தலங்களும் ஒன்றாக இருந்தாலும், கூடவே இருக்கின்ற மீன் இறைச்சி சந்தையின் நிலவுகை இன்றைய வவுனியா சூழலில் இருக்கின்ற மத, மன நல்லிணக்கத்தின் சிறந்த குறியீடு.
போர்த்துக்கேய ஒல்லாந்தர் ஆங்கிலேய கால கட்ட கதைகளின் போக்கு இன்னொருவிதமானது. இதில் கிறிஸ்தவ மத பின்னணியை கொண்ட புனைவுகளே அதிகமாக காணப்படும். அவர்களின் மத தாக்கம் அல்லது மத திணிப்பு கதைகளில் பரவலாக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமியர்களும் சரி இந்துக்களும் சரி எந்த பேதமுமின்றி கிறிஸ்தவர்களாகும் கதைகளே காணப்படுகின்றன. மேலை நாட்டவர் நீர் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்தமையால் கதைப்பின்னணி கடலோர வாழ்வியலை மையப்படுத்துகிறது. அவர்களால் உருவாக்கப்பட்ட தேவாலயங்கள் எல்லாமே இறைவனின் உதவிக்கு நன்றியாக கட்டப்பட்டிருக்கின்றன. மதம் மாற்றல் என்ற கொள்கையோடு உருவாக்கப்பட்ட கதைகள் அந்த பருவ காலத்துக்குரியவை.
கதை 07 – சவேரியார் கோவில்

“……………..முஸ்லீம் யாத்திரைகள் யாவரும் சவேரியாரின் நாமத்தை கோஷித்த வண்ணமே வந்து அவரின் அடியை வணங்கினார்கள். நிலைமையை புரிந்துகொண்ட சவேரியார் ஜெசுவின் நாமத்தை உச்சரித்து குமாரனை உயிர்பித்தார். ………..”

கதை 08- லொரென்சியார் கோவில்

“…………ஐயம்பிள்ளையாரின் ஏற்கனவே இருந்த நாச்சிமார் கோவில் மறைய அவ்விடத்தில் கண்டெடுத்தல் கல்லை வைத்து லொரென்சியார் கோவில் அமைத்து வணங்கினார். நாச்சிமாரை வணங்கிய சமூகம் லொரென்சியாரை வணங்க தொடங்கியது…….”

(pixabay.com)

 
வெளிநாட்டவர்கள் மதத்தை வலுக்கட்டாயப்படுத்தி திணித்ததாக எந்த கதைகளுமே கூறவில்லை. மேலான சமயம் ஒன்றிக்கு தாமாக மாற்றப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. கோவில் அழிப்புக்கள் பல தாமாகவே மறைந்ததாகவும் அந்த இடத்திலே கிறிஸ்தவ தேவாலயங்கள் உருவானதாகவுமே வலிந்து கூறப்படுகின்றன.
வரலாற்றை மறைக்க புனையப்பட்ட வெறும் பொய்க்கதைகளாகவே இதை கருத முடிகின்றது. கதைகளில் பல இருவரோ அல்லது ஒருவருடனேயே முடிவடைந்து விடுகின்றன. வெளிப்படைத்தன்மையில்லாத நிகழ்வுகள் அங்கிருக்கும் ஆட்சிக்கோ நம்பிக்கைக்கோ ஏற்ப திரிபுபடுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்க வேண்டும். காலத்தின் நிலைமையோடு வழிபாடும் கடவுள்களின் சக்திகளும் அவர்களால் செய்யப்படுகின்ற அற்புதங்களும் வலுவைமாற்றிக்கொள்கின்றன. அந்த அந்த இடங்களில் வலுப்பெற்றிக்கின்ற சமயத்தினை பொருட்டு அற்புதங்களும் வேறுபடுகின்றன. இதிலிருந்து கதைகளில் உள்ள புனைவுத்தன்மை வெளிப்படுகின்றது. இவற்றினை ஒட்டுமொத்தமாக நோக்கும் பொருட்டு மிகத்தெளிவாக திரிபாக்கப்பட்ட கதைகளின் வடிவமாகவே தெய்வீக கதைகள் இன்று உலவுகின்றன என்பது ஓரளவு ஊர்ஜிதமாகின்றது.
இது சமய விருப்பு வெறுப்பு இன்றி எழுதப்பட்டது. கதைகளின் மீதான எனது தனிப்பார்வையிலேயே கட்டுரை ஆக்கப்பட்டுள்ளது. எந்த திணிப்புகளும் இதிலில்லை.
அடுத்த கட்டுரையில் சமூகம் சார்ந்த கதைகளையும் சமூக விழுமியங்கள் சார்ந்த கதைகளையும் அரசு ஆட்சி போன்றவை சம்பந்தமான கதைகளும் பற்றி ஆராயலாம்.

அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

சிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலைப்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில் பனி படர்கின்றது. வெறுப்பின் உச்சத்தில் போய் மணிக்கட்டை அறுத்துகொள்ளும் போது கை நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போகின்றது. முதல் கடிதத்தை காதலிக்கு கொடுத்துவிட்டு ஒளிந்திருந்து  என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் போது கண்கள் படபடத்து கொள்கின்றன. கதை மாந்தர்கள் நகரும் இடமெல்லாம் நாமும் நகர்ந்து போகின்றோம். அவர்களின் உணர்வுகள் எங்களினுள்ளும் தொற்றிகொள்கின்றது. இந்த அனுபவம் தான் சிறுகதை. இதில் உண்டாகும் தருணங்கள் மகத்தானவை. கறுப்பு புள்ளி எழுத்துகளின் ஊடு இந்த பிரபஞ்ச அசைவுகளை எல்லாம் அனுபவித்து விடுகின்றோம்.
 
அப்படித்தான் நாய் வீட்டு ராஜரத்தினத்தின் வீட்டு ஒழுங்கையும். யாழ்பாணம் என்றில்லாமல் வடக்கின் எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு ராஜரத்தினமும் ஒழுங்கையும் இருந்துகொண்டிருகிறது. எங்கள் வீட்டின் எதிர் ஒழுங்கையிலும் அந்த ராஜரத்தினம் இருந்துகொண்டிருக்கின்றார். இந்த மனநிலை உருவாக்கம் மனதினில் ஆழப்பதிவதாக ஜூட் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது. சிறுகதை ஒன்றின் நீள் கால நிலைப்பு, அதில் பதியப்படுகின்ற கூறுகளின் கனத்திலேயே தங்கியிருகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்வியலின் தடயங்களை பெரிதளவில் இலக்கியங்களிலிருந்தே சேகரித்து கொள்கிறோம். அடுத்த சந்ததிக்கு அதை பாதுகாத்து கடத்த முயற்சி செய்கிறோம். இந்த செயன்முறைக்கு ஏதுவான இலக்கியங்களே மகத்தான இலக்கியங்கள். சிறுகதைகளையும் அந்த நோக்கோடு பார்க்கலாம். ஒரு சிறுகதையால் சமூகத்தில் மாற்றம் உருவாகிவிட முடியாது. சமகால அயல் எழுத்தாளர்களை அவர்களே அறிமுகப்படுத்தும் வரை நாமறியோம் என்னும் கீழ் நிலை சமூகத்தில் இருக்கும் போது சமூக மாற்றம் இயலாத ஒன்று. ஆனால் ஒரு சிறுகதையால் மனதில் மூலைகளில் கஞ்சலாய் கிடக்கின்ற அனுபவங்களை மீட்டி கொண்டுவந்து தரமுடியும். அந்த களத்தில் எம்மை அமர்த்தி ரசித்திகொள்ள முடியும். சிறுகதை என்ற கலை வடிவத்தின் வெற்றி அந்த பிணைப்பில் தான் இருகின்றது. ஜூட் இல் வருகின்ற கீர்த்தனாவும், சியாமளனும், தங்கராசும் எம்முள் இருகின்றவர்களே. வீதியில் செல்லும் போது அந்த வீதி முடிவு மட்டும் விடாமல் துரத்திக்கொண்டு வருகின்ற ஜூட்கள் எம்மத்தியில் இருகின்றனவையே. இந்த கதைமாந்தர் அன்னியோன்யம் கதையை மூளைக்கு வலிக்காமல் செலுத்த பெரும் உதவி புரிகின்றது.
 
கதையின் பின்னணி பெரும்பாலும் இரண்டாயிரத்து ஐந்து ஆறுகளில் இருந்திருக்க கூடும். போர் சுற்றிகொண்ட காலம். ஒரு சாதாரண எழுத்தாளான் பார்வையில் யாழ் நகர மக்கள் வாழ்வு வெறிச்சொடிப்போய் இருந்திருக்கும். புறவயமாக அவர்களின் இன்னல் நாட்கள் மனக்கசப்புகள் என போரின் மீதான கொடூரம் எழுத்துகளை எரித்துகொண்டிருக்கும். ஆனால் ஜூட் வேறுவிதமாக நகர்கின்றது. யாழில் வாழ்ந்த எழுத்தாளன் போரின் நடுவில் காணுற்ற கொண்டாட்டம் உவகையளிக்கின்றது. ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக்கிகொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை கூறுகின்றது. இயல்பற்ற அவர்களின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற சந்தோஷமான விடயங்களை கூறுகின்றது.
 

வெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது.  ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.

 

ராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம்.

 
யாழ் பற்றி கேள்வியுராத சில வாழ்வியலை அறியக்கொடியவாறு உள்ளது. இந்த தகவல் தளத்தினூடான சிறுகதையின் பயணிப்புதான் அதன் வலுவை கூட்டி கொள்ளும்.
 

சைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே புடிக்காது 

 
 
நிதர்சனமான சிக்கலையும் அதன் பின்னாலான சம்பவகோர்ப்புக்களும் கதையின் தளத்தை மாற்றிவிடாமல் கொண்டு செல்ல வழிசெய்கின்றன. இன்றைய சிறுகதைகள் உலகில் பெருவாரியான கதைகள் மிருகங்கள் பறவைகள் என்ற உயிரின வட்டத்துக்குள் நின்று பேசுகின்றன. அதில் ஒன்றகாவே இந்த கதையில் இருந்து அழகியலை எடுத்துவிட்டால் எஞ்சும். கதையின் கருவுக்கு அதிக கவனம் செலுத்து இருக்கலாம் போல தோன்றுகிறது. யாழ் செம்மண் வீதிகளில் இருந்து லண்டனுக்கு மாறியபோது உண்டாகின்ற கதைப்பிளவு தள மாற்றத்தை சீராக ஏற்படுத்துவதில் சிக்கலை உண்டாகுகின்றது. ஜூட் இன் மறைவில் எழுத்தாளர் ஏற்படுத்தி இருக்ககூடிய கனம் யாழின் பெரும் சோகத்தை கொண்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை மிக சாதாரணமாக கடந்து செல்கிறார்.
 
கதையின் நடுபகுதியில் வருகின்ற கீர்த்தனாவின் முன்னை நாள் அனுபவங்கள் தொய்வினை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதிலும் எழுத்தாளர் உருவாக்குகின்ற யாழ் பின்னேர வகுப்பின் பின்னரான மெல்லிய கூடல்கள் ரசிக்க வைக்கிறது.
மிகையில்லாமல் சாதாரண ஒரு வாழ்க்கையையும் வாழ்வியலையும் ரசிக்கும் படியாக , மிக முக்கியமாக யாழின் அழகியலை பதிகின்ற விதமாக ஜூட் என்ற சிறுகதை எல்லா வயதெல்லைக்கும் ஏற்புடையதாக எழுதப்பட்டுள்ளது. எந்த சலனமும் இல்லாமல் முற்று முழுதாக யாழையும் நாக்கில் எச்சில் வழிந்து கொண்டிருக்கும் ஜூட்களையும் அனோஜன் பாலகிருஷ்ணன் அவரின் தெளிவான விவரிப்புக்கள் மூலமும் கதை சொல்லல் மூலமும் வாசகனை அணுகியிருப்பது ஜூட் இன் வலிமையான இருப்பை உறுதிசெய்கின்றது.
ஜூட் சிறுகதையை வாசிக்க

ஜூட் – சிறுகதை

“வினோத நூலகம்” – சிறுகுறிப்பு

எந்த சிறுகதையை நான் வாசித்தபோதும் “வினோத நூலகம்” என்ற சிறுகதையை வாசித்ததில் கிடைத்த அனுபவம் அவை எதிலும் கிடைத்ததில்லை. ஜி. குப்புசாமி மொழி பெயர்ப்பில் கல்குதிரையின் கார்கால இதழ் ஆவணி புரட்டாசி 2016 இல் வெளிவந்த ஹாருகி முராகாமி இன் சிறுகதை தான் வினோத நூலகம். கதைக்கு விமர்சனம் என்றெல்லாம் எழுதமுடியாதஅளவு என்னுள் தாக்கம் செலுத்துகிறது இந்த புனைவு. ஒரு மிக சாதாரண நிகழ்ச்சியில் தொடங்கி வரிக்கு வரி விரிந்துகொண்டே போகின்ற புனைவுத்தன்மையில் மூழ்கிப்போய்விட்டேன். கதை எந்த பக்க நகர்வினை கொண்டு செல்கின்றது என்ற கேள்வி இன்னும் என்னுள் விதைத்த படியே இருக்கின்றது. மூன்று முறை வாசித்ததிலும் மூன்றுவிதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகசியமாக அதில் வருகின்ற எல்லா நிகழ்வுகளும் அதில் கொடுக்கப்படுகின்ற எல்லா உணவுகளும் அதிலே வினோதமாக சஞ்சாரம் செய்கின்ற கிழவரும் ஆட்டுத்தலை காவலரும் உருவை மாற்றிக்கொண்டே இருக்கின்ற நிலவாகவும் குருவியாகவும் மாறுகின்ற அழகிய பெண்ணும் என் மனதின் மூலைகளில் ஒளிந்துகொண்டிருக்கின்ற புதுவிதமான அழகியலை தூண்டுகின்றன.
விநோதநூலகம் என்ற சிறுகதையை வாசிக்க
https://brinthansite.wordpress.com/2017/04/16/விநோத-நூலகம்-ஹாருகி-முர/