நிதர்சனம். அன்டன் செக்காவின் வலிமையான மனப்பதிவுகள்

தி இந்துவின் 2016ஆம் ஆண்டின் தீபாவாளி சிறப்புமலரில் பிரசுரமாகியிருந்த அன்டன் செக்காவ் இன் வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எனக்கு சில நிதர்சன உண்மைகளை வெளிக்காட்டியது. வழமையான செக்காவின் சிறுகதைகள் போலவே நுண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஒரு படைப்பு தான் வலிமையான மனப்பதிவுகள்.
 
எங்கள் எல்லோரிடமும் பொதுவாக ஒரு குணம் இருக்கிறது. யாரும் அறவே இல்லை என்று மறுக்க முடியாது. பலர் வாழ்நாளில் தாங்கள் ஏமாற்றபட்டோமா என்று தெரியாமலே இறந்து போகின்றனர். சிலர் நெடுகாலத்தின் பின்னர் அறிகின்றனர். நான் கூறும் குணம் ஏமாற்றம் அடைவதே. எந்த பேதமுமே இல்லாமல் எல்லா தேசங்களிலும் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம் என்ற செயற்பாடு வெற்றிகரமாக நடைபெறுகின்றது. ஏமாறுகின்ற செய்கை நெடுகாலமாக இருந்து கொண்டே வருகின்றது. இந்த செய்கையில் பயன்படுத்தப்படும் உத்தியை மையமாக வைத்தே வலிமையான மனப்பதிவுகள் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது.
 
1880களில் எழுதபட்டிருக்க கூடிய இந்த சிறுகதையில் , அதில் வருகின்ற வழக்கறிஞர் என்ற பாத்திரம் பயன்படுத்துகின்ற உத்தி இன்றைய நவீன சூழலிலும் அதே வழிமுறையில் பயன்படுத்தபடுகின்றது ஆச்சரியமாக இருந்தது. எம்மை விமர்சனம் செய்கின்ற ஒருவர் முதலில் எப்போதுமே எம்மில் உள்ள நல்ல விடயங்களை ஆரவாரமாக சொல்வார். அந்த புகழ்ச்சியில் மதி மயங்கிப்போய் நாமும் அவரின் சொற்களுக்குள் ஒன்றித்து அவரின் மேல் அதீத நம்பிக்கை வைத்துவிடுவோம். அவரின் கருத்துக்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்ற மனநிலையை அவரின் புகழ்ச்சி ஏற்படுத்தி விடும். அவரின் புகழ்ச்சியின் வீரியத்தில் அவரின் சொற்கள் எல்லாமே வேத வாக்கியங்கள் ஆகிப்போகும். அப்படியே அவர் சற்று இறங்கி ஆனால்… என்று ஆரம்பிக்கும் மற்றைய பக்க விமர்சனமும் உண்மை பொய் என்ற வாதங்களுக்கு அப்பால் சரியானதாகவே இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற மனநிலையை நாம் உருவாக்கிகொள்வோம். மனம் பகுத்து அறிதல் என்பதையே மறந்து விமர்சகரின் மூளையில் சிந்தனை ஓட்டத்தோடு கலந்து போகும். மிக அப்பட்டமான பொய்யையும் மெய்யாக்குகின்ற வல்லமை அந்த விமர்சன உத்திக்கு இருக்கிறது.
 
இந்த நுட்பத்தில் தான் அந்த வழக்கறிஞர் தனது நண்பனின் மனதை மாற்றுவான். இதே நுட்பம் நம் வாழ்விலும் பல முறை சந்தித்திருப்போம். நம்முடன் பேச்சு கொடுத்து நம்மை அளந்து ஒரு உயரத்தில் வைத்து விட்டு பின்னர் அவர்கள் பேசுகின்ற வசையையெல்லாம் உள்வாங்குகின்ற மனநிலைக்கு எம்மை தயார்படுத்துவார்கள். இதை சாதாரண நபர்களால் செய்து விடமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது. உண்மையில் எல்லோராலும் இந்த உத்தியை பயன்படுத்த முடிகின்றது. பயன் படுத்துகின்றார்கள். சாதாரண வாழ்வில் ஒரு நாளில் பலமுறை இந்த அணுகுமுறையை இனி கூர்ந்து கவனித்தால் அறிந்து கொள்ளலாம். முக்கியமாக ஒதுங்கி கொள்ளலாம்.
 
வலிமையான மனப்பதிவு சிறுகதையில் இந்த நிதர்சன ஒன்றிப்பை உணரக்கூடிய சந்தர்பங்கள் அதிகம் இருகின்றன.

தேவை.

எனது மிக நெருங்கிய உறவினர் இறந்து விட்டார்
ஏதோ கண்காணாத தேசத்தில்,
 
அவருக்கென
ஒரு சவப்பெட்டி
ஆறடியில்.
 
நானும் அந்த மலர்ச்சாலைக்கு
போயிருந்தேன்.
 
விதம் விதமாக
ஒவ்வொரு விலையில்
பல மரங்களின் அர்ப்பணிப்பில்.
 
ஒரு பூ மட்டும் இரண்டு கதவுகளில்
இரண்டு பூக்கள் இரண்டு கதவிலும்
ஒரு பூச்செண்டு
அதனுடன் ஒரு பூ
 
நீங்கள் என்ன ரசனையில் எதிர்பார்கிறீர்கள்?
 
என்னோடு வந்தவர்
கஷ்டப்பட்டு ஒன்றை முடிவு செய்தார்.
 
எனக்கும் பிடித்திருந்தது,
ஆனால் கதவுகள் மூடும் விளிம்பில்
ஏதாவது ஒரு அலங்காரம் இருந்திருக்கலாம்,
இறந்தவர் வெளிநாட்டவர் ஆச்சே.
 
அவர் சுற்றி சுற்றி ஏதும்
உடைசல்கள் இருகின்றதா என்று பார்த்துகொண்டார்.
 
வெளிநாட்டவர் இறைத்த
சில்லறைகள் எங்காவது ஒரு சின்ன உடைசலுக்குள்லாலும்
வெளியே விழுந்து விடலாம்.
 
என் பேர்சில் இருந்த
அப்பா அம்மா  அக்கா
எனது நான்கு மாத தம்பி  எல்லோருடனும்
நான் நின்று எடுத்த
புகைப்படைத்தை பார்த்துவிட்டு
 
ஒரு முறை
அந்த
சவப்பெட்டியின்
விளிம்பில் விரலால் தேய்த்து
தொட்டேன்.
 
விளிம்பு கீறி
தரையெல்லாம் ரத்தம்.

தமிழ் சமூகமும் தமிழ் திரைப்படங்களும் – 01

இன்றைய தமிழ் சூழலின் வடிவமைப்பில் திரைப்படங்களின் வீச்சு மிக கூர்மையானது. இன்றைய பண்பாட்டு பரவலாக்கம் காரணமாக ஒரு சமூகத்தின் அனைத்து கூறுகளும் எல்லா சமூகத்தினரும் அவதானிக்க கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இந்த அவதானங்களின் மையப்பொருளாக, ஒரு சமூகத்தின் அடையாளாமாக எடுத்தாளப்படுகின்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கம் அசாத்தியமானது. எந்த சமூக ஊடகமும் அடைய முடியாத ஆழத்தையும் பரவலாகத்தையும் கற்று அறிந்த சமூகத்தில் தொடங்கி மேற்தட்டு மக்கள் நடுத்தர வர்கத்தினர் விளிம்புநிலை மக்கள் ஏழை வறியவர்கள் வரையும் வயது இன மொழி ஜாதி வேறுபாடின்றி தமிழ் திரைப்படங்கள் அவர்களுக்குள் ஒரு அங்கமாக அவர்களையும் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் வடிவமைக்கின்ற அல்லது வடிவமைக்கப்பட்ட சமுதாயத்தில் மாற்றத்தை உண்டு பண்ண கூடிய சக்தியாக உருவெடுத்து விட்டன.

பார்த்து உணர்ந்து சிந்தித்து பிரித்தறிதல் என்ற சாதாரண மனித செயற்பாடுகளுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் பார்த்ததை அமுல்படுத்தல் என்ற கொடிய செயற்பாட்டு தளத்தில் இயங்கும் அளவிற்கு இன்றைய மக்கள்  தமிழ் திரைபடங்களிடையே  கொண்டிருக்கின்ற பற்றுதல் மிக கேவலமான சமூகத்தின் அடையாளம். இதற்கு காட்சிகள் உருவாக்குகின்ற நியத்தன்மை பொருந்திய மாய சினிமா உலகம் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தும் திரை நிய வாழ்வியலை பிரித்தறிய முடியாத அளவு திரைபடங்கள் தமிழ் சமுதாயத்திற்குள் ஊடுருவி விட்டன.

அணுக்கம்.

நீங்கள் கவிதையினை எப்படி அணுகுவீர்கள்?
 
எந்த வசனத்திலிருந்து
அல்லது எந்த எழுத்திலிருந்து
அப்படியும் இல்லையா
அப்போது எந்த புள்ளியிலிருந்து ஆரம்பிப்பீர்கள்?
 
யாராவது தொட்டு காட்டுவார்களா ?
இல்லை அவர்களே வாசிப்பார்களா ?
 
காலையிலா ?
மாலையிலா ?
நடு நிசியிலா ?
அல்லது தூக்கத்தை இடையிலே கலைத்து விட்டு
அரை நித்திரையிலா ?
 
எப்படி தொடங்குவீர்கள் ?
முதல் பந்தியிலேயே ஆரம்பித்துவிடுவீர்களா?
கடைசி வரியிலிருந்து ஆரம்பிப்பீர்களா ?
அல்லது  இடையிடே தொட்டு தொட்டு போவீர்களா ?
 
எந்த நிலையில் இருப்பீர்கள் வாசிக்கும் போது
இருந்து
கிடந்தது
கால்மேல் கால் போட்டு
குப்புற கிடந்து
தலைகீழாக
கன்னத்தில் கை வைத்தபடி
கால்களை ஆட்டிய படி
எப்படி ?
 
இந்த எறும்புகள் போகுமே அப்படியா ?
வெட்ட வெளியில்
மக்கள் நடுவிலே
நின்று சிரிக்கும் ஏமாற்றி வித்தைக்காரனின்
கோமாளி குரங்கை போலாவா ?
 
எப்படி ?
 
ஆழ் சமுத்திரத்தில் முத்து எடுப்பதை போலவா ?
அகன்ற வானில் பட்டம் விடுவதை போலவா ?
 
விளக்கவுரை வாசிப்பீர்களா ?
யாருடையது ?
 
சாப்பிட முன்
நன்றாக கழுவிய  இலையை சுற்றி
தண்ணீர் தெளிப்பதை போல
விளங்காமலே வாசிப்பீர்களா ?
 
இல்லை
வாகனம் மோதிய
நாயின் அலறலை கேட்காத மாதிரி
போகும் சாரதியினை போல
விளங்கியும் விளங்காத மாதிரி வாசிப்பீர்களா?
 
விளங்கவில்லை.
எப்படி ஒரு கவிதையினை
நீங்கள் அணுகுவீர்கள் என்று.
 
அது சரி
பக்கங்களே  இல்லாத
புத்தகங்களில் எழுத்துகள் எப்படி இருக்கும்.
 
அதை அணுகவும்
மூட்டை கணக்கில்
வழிகாட்டிகள்.
 
இப்போதும் அதே சந்தேகம் தான்
 
நீங்கள் மூட்டைகளை எப்படி அணுகுவீர்கள்?

சிற்பி – கழைக்கூத்தாடியின் இசை – தேவி பாரதி

(01)
எழுத்தாளன் என்ற தொழிலின் புரவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளன் என்பவன் அதனாலேயே அடையாளப்படுத்தபடுகிறான். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளன் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவனின் வீச்சு எல்லையை அவன் நிர்ணயிப்பதில் தான் இருகின்றது. இந்த நிர்ணயிப்பில் வெற்றி பெறுகின்ற எழுத்தாளர்கள் தான் இலக்கியத்தில் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களின் விஸ்தரிப்பான எழுத்தின் வலிமையை , உருவாகின்ற அவர்களின் எழுத்துலக சிருஷ்டிப்புக்கள் தான் காட்டும். ஒரு சம்பவத்தை அல்லது ஒரு காட்சியை வாசகன் ஊடாக படரவிடுவதும் அதில் உலவுகின்ற பாத்திரங்களை வாசகனுடன் பேசவைப்பதும் அதனூடாக உணர்வுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதும் என்ற பொது மொழியைத்தாண்டி இலக்கியங்களையும் சினிமாவையும் கலக்கின்ற களத்தை உண்டாகிகொண்டு அதில் உணர்வுகளை பேசுகின்ற தனித்துவமான எழுத்து கழைக்கூத்தாடியின் இசை.
 
எழுத்தாளர்கள் கையாள்கின்ற மொழியின் உரு , அவர்களின் கதைகருவின் மீதான அதீதத்தை கூட்டுவதாக இருக்கும். எந்த வகை கருவிற்கும் இது பொருத்தமானது. சரியான  மொழியின் உருவில் உணர்வுகள் வெளிக்கொண்டுவரும் போது அதில் உருவாக்கப்படுகின்ற அழகியல் அற்புதமானதாக இருக்கும். பெரும்பான்மையான கதைகளில் இந்த உணர்வழகியல் கதை மாந்தர்களுக்கூடாகவே வெளிபடுத்தப்படும். வெகுசில படைப்புக்களில் தான் அதன் சூழலும் அதில் உள்ள  உயிரற்றவையும் கூட உணர்வழகியலை வெளிக்கொண்டுவரும். அந்த கதைக்களம் மற்றும் உணர்வுப்பின்னணி இரண்டும் ஒன்று சேரும் போது வாசனுக்கு கதையின் மீது ஏற்படுகின்ற ஒன்றிப்பு மிக பலமானதாக இருக்கும். வாசகன் களத்தில் நின்று ஒரு முறை களத்தை சுற்றி பார்க்கும் போது அங்கிருக்கின்ற சிலையிலிருந்து அசையும் மனிதர்கள் வரை எல்லோரிடமும் பீடித்துபோயிருகின்ற கதைப்பின்னணி உணர்வழகியலின் உச்சம்.
 
எந்த சந்தர்ப்பத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடக்கூடிய இந்த நுட்பம் கழைக்கூத்தாடியின் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் சில போதைக்குறியீடுகள் மூலம். சினிமா, சிகரட், மாது, காப்பி, காதல், இலக்கியம் எல்லாமே போதையின் குறியீடுகள் தான். அவை ஒவ்வொன்றிலும் இந்த உணர்வழகியல் ஊடுருவி செல்கின்றது. கதை மாந்தர்களிடம் பீடித்திருகின்ற அவலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக பேசப்படுகின்றது. எங்கிருந்தோ கடற்கரைக்கு காற்று வாங்க வருகின்றவர்களிடம் கூட.

“அந்த இடம் அரவாணிகளுக்கும் ஹோமோ செக்சுவல்களுக்குமுரியது. முகத்தைச் சுழித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் சுழித்துக்கொள்ளலாம். அடுத்த ஐம்பது மீட்டரில் வேசிகளின் உலகம் தொடங்குகிறது. கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நீண்டும் விரிந்தும் பரந்தும் கிடக்கும் அவ்வுலகமே இப்பெருநகரவாசிகளுக்கு அந்தப்புரம். உயரமான விளக்குத் தூண்களிலிருந்து கசியும் பாலொளிக்குக் கீழே படர்ந்திருக்கும் புகையிருளுக்குள் தம் மஞ்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இம்மாநகர ராஜாக்களும் ராணிகளும் கூத்திகளும் சேடிகளும். இப்பெருநகரில் காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்ள வேறு உருப்படியான இடமெதுவும் இல்லை. காற்று வாங்க வந்தவர்களுக்கு அருவருப்புத் தாளவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டு உறுமும் கடலை நோக்கி வேகமாக நடக்கிறார்கள். சிலர் கள்ளப் பார்வை பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு ஆச்சரியமளிக்கிறது,
“அம்மா, அம்மா”
“என்ன?”
“அந்த அங்கிளும் ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க?”
“வெளையாடறாங்க”
சங்கடத்துடன் பதிலளித்தபடி தாய் அவர்களை இழுத்துச் செல்கிறாள்.
“அது என்ன வெளையாட்டு அம்மா?”
“கண்றாவி, இதுகளுக்குக் கொஞ்சமாச்சும் வெக்க மிருக்குதா? பப்ளிக் பிளேஸ்ல இதென்ன நியூசென்ஸ்?”
“நீங்க பேசாம நடங்க”

 
(02)
சிறுகதை என்ற வரையறைக்குள் கதைக்குள் உலாவ வேண்டிய மாந்தர்களும் சம்பவங்களும் ஏற்ற இறக்கங்களும் சம்பவங்களும் வரையறைக்குட்பட்டவை. அந்த வகையில் சிறுகதை என்ற பரிமாணத்தை தாண்டி குறுநாவல் என்ற பரிமாணத்தை கழைக்கூத்தாடியின் இசை பெறுகின்றது. என்னால் வாசிக்கப்பட்ட தமிழை மூலமொழியாக கொண்டு எழுதப்பட்ட  முதல் குறுநாவல் இதுவே. புனைவுகளை ஆங்கிலத்தில் Flash fiction ,Short story ,Novelette ,Novella ,Novel என்று ஐந்து விதமாக வகைபடுத்துகின்றனர். கழைக்கூத்தாடியின் இசை Novelette என்கிற வடிவத்திற்குள் உட்புகுகிறது. ஒரு குறுநகர வாழ்வியலை ஒவ்வொரு அணுவாக பேசிக்கொண்டே நீள்கிறது கழைக்கூத்தாடியின் இசை. ஒரு பழைய மான்சனில் தொடங்கி வீதிகள், சாப்பாட்டு கடைகள், சிலைகளின் அடிவாரம், சினிமா தளங்கள், கடற்கரை, புகையிரத நிலையம், ஒரு அழுக்கான அறை என்று ஒரு மனிதன் சாதரணமாக நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் கதையினை ஓடவிட்டு ஒவ்வொரு சந்திலும் ஒவ்வொரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். எல்லா சந்திகளும் ஏதோ ஒரு சுமையுடன் செல்லும் வாசனுக்கு இன்னொருபடி சுமையினை ஏற்றிவிடுகின்றது. ஒரு நிதர்சன தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை ஒவ்வொரு புள்ளியும் விரிக்கின்றது.
 
ஆரம்பத்தில் எழுத்தாளர் உருவாகுகின்ற இலக்கிய உட்புகுத்தல்கள் ஒரு வாசகனாக கதையின் வீரியத்தை குறைப்பதாக தோன்றுகின்றது. ஒரு அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. நிதர்சன வாழ்க்கை என்ற புள்ளியில் நின்று சம்பவம் ஒன்றை விரித்துக்கொண்டு செல்லும் போது அந்த சுவாரஸ்யமான வாசிப்பு தன்மைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற உணர்வை உண்டாகியது. தெளிவாக சொல்ல போனால் இலக்கிய திணிப்பு போன்றது.
 

அங்கிருந்து நேர் கிழக்கே நடந்தால் காற்சிலம்பை உயர்த்திப்பிடித்தபடி ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருக்கும் கண்ணகியின் பொற்பாதங்களைச் சேரலாம். “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?” எனப் பரிவுடன் கேட்க அங்கே அவளுக்கு யாருமில்லை. சாலை நெடுகிலுமுள்ள கோட்டைக் கொத்தளங்களுக்குச் சுழலும் விளக்குகளுடன் விரையும் அமைச்சர் பெருமக்களுடையவும் துறைச் செயலாளர்களுடையவும் இயக்குனர்களுடையவும் காவல்துறை அதிகாரிகளுடையவும் வாகனங்களின் இடையறாத சைரன் ஒலி. அடிக்கொருதரம் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், இளைய சமுதாயத்தின் அசுரவேக இருசக்கர வாகனங்கள். எல்லாக் கண்காணிப்புக்களையும் மீறிச் சிலசமயங்களில் யாருக்காவது மண்டை சிதறுகிறது, முட்டிகள் உடைகின்றன. ‘ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தன் அரும்பெறர்ப் புதல்வனை யாழியின் மடித்தோனின் பெரும்பெயர் புகாரை’ப் போல இல்லை அவளுக்குக் காற்சிலம்பை உயர்த்திக்காட்டி நிற்கக் கிடைத்திருக்கும் மேடை அமைந்துள்ள காமராஜர் சாலை. 

 
இது போன்ற மிக சொற்பமான இடங்களில் அவரின் வழமையான நடையில் கடந்திருக்க மிகத்தரமான அகச்சூழல் பார்வையினை ஏற்படுத்திஇருக்கும்.
 
(03)
குறுநாவல் ஒன்றுக்குள் பல சம்பவங்கள் அனுபவங்கள் கருத்துகள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். ஒவ்வொரு இடத்தையும் கோர்த்து எடுத்துக்கொள்ள கதைமாந்தர்கள் பயன்படுத்தபடுவார்கள். கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி கதைமாந்தர்கள் உலாவுவார்கள். ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு ஒரு நகரத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவருவது என்பது, அவனின் பயணிப்பிலும் நாளாந்ததிலும் கேள்விகளை ஏற்படுத்தி உயிர்ப்பை இல்லாமல் செய்துவிடும். கழைக்கூத்தாடியின் இசை எல்லா முடுக்குகளிலும் பயணிக்கும் பாத்திரம் ஒன்றை எதிர்பார்கிறது. அந்த எதிர்பார்ப்பை எழுத்தாளர் கைக்கொண்ட விதம் போற்றுதலுக்குரியது.
 
சினிமா என்ற ஊடகம் தோற்றத்தில் பிரமிப்பையும் உள்ளடக்கத்தில் சொல்லமுடியாத வேதனைகளையும் துயர்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்பையும் கொண்டது. சினிமாவுக்கு சமவுடமை வாதம் கிடையாது. ஒருவகையான மேலாதிக்க வாத போக்குடைய சினிமாவில் அதிகம் உழன்று போகின்ற உழைப்பாளர் வர்க்கம் தான் உதவி இயக்குனர்கள். இதிலும் மூன்றாம் படி நான்காம் படி உதவி இயக்குனர்கள். ஒரு நகர வாழ்க்கைக்கு அதன் எல்லா பிரவாகங்களுக்கும் மிக கச்சிதமான படைப்புகள் அவர்கள். அவர்கள் அனைத்து விதமான மக்களுடனும் பழகும் பாக்கியம் பெற்றவர்கள். எல்லா தட்டு மக்களின் வாழ்கையையும் வாழ்பவர்கள். நகரின் பெரும்பாண்மையை தம்முள் இணைத்து கொண்டவர்கள்.
 
இலக்கியம் தெரிந்த உதவி இயக்குனர்கள் என்றால் என்ற கற்பனை உத்திதான் கதையின் முழு நகர்விற்கும் அச்சாணி. காணுமிடமெல்லாம் இலக்கியத்தாலும் இலக்கிய கர்த்தாகளாலும் அவர்களின் சிருஷ்டிபுக்களினாலும் கதா மாந்தர்களை நகர்த்தி அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நகர்வையும் இலக்கிய ரசனைக்குட்படுத்தி இருக்கிறார்.
 
(04)
 
கழைக்கூத்தாடியின் இசை.
 
ஒரு பிரமிப்பான தலைப்பும் பொருத்தமும்.ஒரு அவலத்தின் குறியீடாக ஒரு இறுக்கமான முயற்சியும் அதற்க்கான மிக குறைவான கூலியும் என்ற துன்பியல் வாழ்க்கை கழை கூத்தாடிகளின் உடையது. ஒரு சீரான என்ற எதிர்பார்ப்புடன் உயரத்தில் வைக்கப்படும் தடியின் மேல் இன்னொரு தடியை கைகளின் அகலங்களில் விரிந்து புடித்துக்கொண்டு அசைவுகளுக்கு ஏற்ப தடியை சமநிலைப்படுத்தி தள்ளாட்டத்தில் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுள் மிக சிறிய பெண் குழந்தையிடம் தட்டினை கொடுத்து சன்மானம் கேட்டு அனுப்புவார்கள். அந்த குழந்தையோ ஒரு தட்டு ராபானையோ அல்லது ஏதாவது ஒரு ரலிய இசைக்கருவியை வாசித்துக்கொண்டு சோக கீதம் பாடிக்கொண்டு கூத்தடியினை சுற்றி சுற்றி வரும். அந்த இசையின் கொடூரம் கூத்தாடியின் கவனத்தை இன்னும் கூர்மையாகும். இந்த உளவியல் பின்னணி அந்த இசைக்குண்டு.
 
அதே வாழ்க்கை தான் ஒவ்வொருவரினதும் எம்மா சுற்றி இருகின்ற இசை இன்னும் கவனிக்கிசெய்வதற்கு உரியதே தவிர சேர்ந்து உழல்வதற்கு அல்ல.
 
அந்த குழந்தை கேட்கும் பணம் பிச்சை அல்ல உழைப்பின் கூலி.
 
மிக கச்சிதமான குறுநாவல் ஒன்றை வாசித்த திருப்தி கழைக்கூத்தாடியின் இசையினை வாசித்த போது கிடைத்தது. தேவி பாரதி என்ற ஆளுமையின் ஆழமான எழுத்து இன்னும் கொண்டாடப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனாக வாசகனுக்கு தேவி பாரதி வெற்றி கழைக்கூத்தாடியின் இசையில் கௌதம நீலாம்பரனின் இதழ்களிலிருந்து சத்தமில்லாமல் உதிர்ந்து தன் காலடியில் விழுந்து நசுங்கிய பழுப்பு நிறப் புன்னகை போன்றது.
 
தேவி பாரதியின் கழைக்கூத்தாடியின் இசை என்ற குறுநாவலை வாசிக்க
http://www.kalachuvadu.com/archives/issue-197/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
அவரின் ஏனைய படைப்புக்களை வாசிக்க
http://devibharathi.blogspot.in/

உருவாக்கம்.

மனநோயாளியிடம்
கதைத்துக் கொண்டிருந்த
வைத்தியர்,
தன்னறைக்குள் சென்று
தலையை
சோறிந்து கொண்டார்.

மனநோயாளிகள் பிறப்பதில்லை ; உருவாக்கப்படுகிறார்கள்.

சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦1

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
 
எனது சுஜாதா – அவரின் வாசகர்கள் என்ற பதிவு தொடர்பாக எழுந்த கருத்து பகிர்வுகள்.
https://brinthansite.wordpress.com/2017/05/03/சுஜாதா-அவரின்-வாசகர்கள-2/
இந்த பதிவின் பின்னர்
மதன் குமார்  :-  சுஜாதா வெகுஜன எழுத்தாளர் என்ற புள்ளியிலிருந்து அவ்வப்போது விலகி தீவிர இலக்கியப் பக்கமும் தலைகாட்டிப் போயிருக்கிறார். தீவிர இலக்கியத்தில் ஈடுபட காரணமாக இருந்தவை அவரின் வாசிப்பாககூட இருக்கலாம். சுஜாதா நல்ல சிறுகதையாளன் என்ற பிம்பத்தை வெகுஜன இலக்கியமே தந்தது தீவிர இலக்கியம் இல்லை.
அவர்காலத்திய எந்த எழுத்தாளரும் இப்படி நிலையில் இல்லை. பின்னர் வந்த நல்ல சொம்பு தூக்கிகலால் பேருறுவாக மாற்றப்பட்டார்.
நான் :-  சுஜாதா என்ற ஆளுமை மீது எனக்கு விமர்சனம் கிடையாது. வெறும் ஜனரஞ்சக எழுத்துக்குள்ளேயே ஒரு எழுத்தாளனை அடக்கிவைத்த அவர் வாசகர்களைத் தான் விமர்சிக்கிறேன். சுஜாதாவை சிறிய வட்டத்துக்குள் குறுக்கிய சுயநலம் கொண்டவர்கள் அவரின் வாசகர்கள் என்கிறேன். சுஜாதாவை ஜனரஞ்சக எழுத்துலகு பீடித்திருக்காவிட்டால் அவரின் எழுத்துகள் வலிமையாகியிருக்கும். அவரின் கோட்பாடுகள் விரிவடைந்து இருக்கும். சுஜாதாவிற்கு இருக்கும் இலக்கிய கேள்விக்குறிகள் சில வேளை அவரின் வாசகர்கள் நினைத்திருந்தால் இல்லாமல் போயிருக்கலாம். இப்போது பிரயோசனம் அற்ற கூச்சல்கள் தான் மிஞ்சும்.
மதன் குமார் :- சுஜாதா என்ற ஆளுமை வெகுஜன எழுத்தில் பிரபலமடைந்தவர். நல்ல இலக்கியப் படைப்பை அவர் எழுத வாசகர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. சில நல்ல சிறுகதைகளும் தீவிர இலக்கியப் புலத்தில் வந்திருக்கிறது. எந்த இடத்தில் அவருக்கான வரவேற்ப்பு அதிகமோ அந்த இடத்தில் நின்று தன் படைப்பை தந்திருக்கிறார் அவ்வளவே.
அசோகமித்திரனுக்கும் அவ்வாரான வரவேற்ப்புகளும் இருந்திருக்கக்கூடும். அவர் ஏன் தீவிர இலக்கிய விசிறிகளால் கொண்டாடப்படுகிறார். சுஜாதா ஏன் வெகுஜன எழுத்துலகில் போற்றப்பட்டார் என்பதை கொஞ்சமாக ஆராய்ந்தால் போதும் விளங்கிவிடக்கூடும்.
வெகுசிலருக்கு சுஜாதா தெரிந்த அளவு அ.மியை தெரியவில்லை. இலக்கிய பரிச்சியம் உள்ளவர்களுக்கு சுஜாதா எந்த நிலையிவ் வைக்கப்படுகிறார் என்பது அவரவர் வாசிப்பைப் பொருத்தே அமைகிறது.
 
நான்  :-  இதில் சில கருத்துக்களோடு உடன்படுகிறேன். சுஜாதா வெற்றி பெற்ற வெகுஜன ஊடகம் , அதே சுஜாதவை கேள்விக்கும் உட்படுத்துகிறது. சாதாரண வாசிப்பு படிநிலையில் தாண்டிய ஒரு வாசகன் சுஜாதாவை உடனே விமர்சனப் படுத்துகின்ற மேற்போக்கான இலக்கிய எழுத்துகளை சாட்சிப் படுத்துவது ஏற்கமுடியாது. அவரது எழுத்துக்கள் வரவேற்புக்கே என்ற பிறகு இலக்கிய ஆழத்தை தேடுவானேன். அசோகமித்திரன் ஆரம்ப நிலைகளில் (பின்னரும் கூட ) அறியப்படாத எழுத்தாளராக இருந்தார். இந்த நிலை தான் அவரின் வலுபெற்ற எழுத்துகளுக்கும் உள்ளடக்கங்களுக்கும் காரணம். அங்கீகாரம் ஏற்படவேண்டும் என்ற முனைப்பு தான் அசோகமித்திரனின் இலக்கிய பிரவேசத்துக்கு காரணம். சுஜாதா தன் வாசகனுக்கு மகுடி ஊத தொடங்கியதில் இருந்து தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டார். தமிழ் வாசகர் வட்டத்தின் தற்கால நிலையில் இருந்து உங்கள் கருத்துடன் முரண் படுகின்றேன் . ரமணிச்சந்திரனை சுஜாதாவை விட பலருக்கு பரிச்சயம் என்பதால் இலக்கிய உலகில் ரமணிச்சந்திரனின் இடத்தை பற்றி விவாதிப்பது எவ்வளவு அபத்தம். பொழுதுபோக்கு வாசகர்கள் சுஜாதவை அடுத்த இடத்திற்கு இப்போது கொண்டு செல்ல நினைப்பது அவர்களின் காரணப்பெயருக்கு இழுக்கு.
 
இதோடு வாதம் நிறைவு பெற்றது.

சுஜாதா – அவரின் வாசகர்கள் , வாதம் ௦2

வணிக எழுத்து பற்றியும் வாசகர் தரமறிதல் பற்றியும் முகப்புத்தகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள்.
இது லதீபன் அண்ணா அவர்களால் வாசிப்பு , சுஜாதா தொடர்பாக பகிரப்ட்ட பதிவிற்க்கான பின்னூட்டங்கள்

பதிவு

மற்றவர் பாராட்ட வேண்டும்,நம்மை கொண்டாட வேண்டும் என்ற நினைப்பிலே எழுத்துற்கு வந்தால் நீ நாசம்.
இங்கே நிறைய குப்பைமேடுகள் உண்டு அதிலே போய் உறக்கம் கொள்ளும் உன் எழுத்து.ஒருநாள் சரியத்தான் போகுது.
நிறைய விடயங்கள் வாசிக்க உண்டு.உலகம் போய்க்கொண்டிருக்கும் கடைசி விம்பநிலையினை நுனிப்புல் தனை மேய்ந்து விட்டேனும் எழுத்துக்கு வரலாம்
பாகுபலிகள், IPL, அனைவருக்கும் பிடிக்கிறது, ஆகா ஓகோ என்கிறார்கள்.ஆனால் உள்ளுக்குள் இருப்பதென்ன உன் id மனநிலையை காவு கொள்ளும் விடயங்கள் தான்.
வெறும் Cake இன் Icing மட்டும் நன்றாக இருப்பதால் அதை சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம் தானே?
அவ்வாறு தான் வாசிப்பற்ற எழுத்தும், வேண்டும் என்றால் சுஜாதாவின் சீடனாகலாம்.

எழுதுவதற்கு முதல் வாசிக்க நிறையவே உண்டு.வாசித்தவற்றை மற்றவர்களுடன் கலந்துரையாடும் போதே அது முழுமையாகும்.
ஆகவே இளந்தலைமுறையான நாங்கள் நிறைய வாசிப்போம் கலந்து பேசும் அதன் பின் எழுதுவோம்.

எனது பின்னூட்டம்

 
இங்கு சொடுகப்பட்டேன் என்னும் காரணத்தினால் எனக்கும் இந்த வாதங்களில் பங்குண்டு என்று எடுத்துக்கொள்கிறேன்.
பதிவின் நோக்கம் வலிமையான இலக்கிய எழுத்துக்கள் எம்மிடையே எழ வேண்டும் என்ற நோக்கில் எழுதபட்டிருப்பதாக எனக்கு தெரிகின்றது. பதிவை ஒரு பொழுதுபோக்கு வாசகன் என்ற நிலையில் இருந்து பார்க்காமல் தமிழ் இலக்கிய நலன் விரும்பி என்ற நிலையில் பார்க்கும் போது பதிவின் அத்தியாவசியத்தை விளங்கிக்கொள்ளலாம். என் தலைமுறை வாசகர்கள் வணிக எழுத்து என்ற மீளமுடியா வட்டத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை இன்று விஸ்தரித்து போய் விட்டது. வணிக எழுத்துகள் அளவுக்கு மீறி எம்மை சுற்றி இருப்பதால் வாசகன் அவற்றை படித்து பகுத்து அறிந்து கொள்ளும் கால எல்லை மிக நீளமானதாகவே நினைக்கிறன். பலர் மீளமுடியாமல் போன இடங்களும் உண்டு. இந்த அதிக கனமான எழுத்துக்குவியல் வாசகனை வாசகன் என்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டுவராது.
ஆரம்ப நிலை வாசகன் சுஜாதாவிலிருந்து ஆரம்பித்தல் பொருத்தமானதே. ஆனால் அவனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு தகுந்த வழிகாட்டல் அவசியமே. எம் சமூகத்தில் பலரின் வழிகாட்டல் மேலும் மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்றுவிடகூடும். இதனால் வாசிப்பை பற்றிய வாதங்களும் பகிர்வுகளும் கலந்துரையாடல்களும் எம்மிடையே அவசியம். இன்று எம்மவர்கள் பலர் சரியான வாசிப்பு வழிநடத்தல்கள் இன்றி மட்டமான படைப்புகளை வெளிக்கொண்டுவருவது அவர்களின் பிழை இல்லை. சரியான வழிநடத்தல்கள் இன்மையே காரணம். இதை அனுபவம் உள்ளவர்கள் செய்வது மிக குறைவு.
 

சுஜாதா – அவரின் வாசகர்கள்.

இன்று தமிழின் முக்கிய எழுத்தாளுமையான சுஜாதா என்கிற ரங்கராஜனின் பிறந்தநாள் ஆகும்.
 
வணிக எழுத்துலகு என்றால் அதுவும் தமிழ் வணிக எழுத்துலகு என்றால் மிக முக்கியமாக பலரின் புலன்களுக்குள் அகப்படுபவர் சுஜாதா. தமிழ் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நம்பியிருக்கும் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் உற்பத்தியாகிய எழுத்தாளர்ளுள் முக்கியமானவர். அன்றைய தமிழ் சமூக அறிவுநிலையையும், அவர்களின் பொழுதுபோக்கு தேவையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எழுததொடங்கினார். இந்த புள்ளி தான் சுஜாதாவின் எழுத்தாளுமையின் அளவு கோல் ஆகும். எழுத்தாளன் ஒரு வரையறைக்குள் தனது சிந்தனைகளையும் எழுதும் புலன்களையும் ஒடுக்கும் போது உள்ளடக்க பற்றாக்குறையும் அழகியல் பற்றாக்குறையும் எழுந்து விடும். சுஜாதாவிற்கு நடந்ததும் இதுவே. சுஜாதாவின் ஆரம்ப எழுத்துகள் ஒரு எழுத்தாளனின் கீழ் நிலையையும் எழுத்தாளன் வாசிப்பாளர் உறவு நிலையையும் மையபடுதியதாகவே இருந்தது. இந்த எழுத்தியல் உறவு நிலையை பற்றி பிடித்துக்கொண்ட சுஜாதா வாசகர்களின் கவனத்தை பெறுகின்றார்.
 
இந்த உடன் கவனிப்பும் ஆதரவும் தான் சுஜாதா என்ற எழுத்தாளனை முடங்க செய்ததாக உணர்கின்றேன். ஒரு எழுத்தாளனுக்கான அடிப்படை போராட்டம் அவற்றிற்கு இருக்கவில்லை. வெகுஜன ஊடக வாசகர்கள் சுஜாதாவை ஆதரித்த விதம் சுஜாதாவின் பேனைகள் தொடவேண்டிய பல இடங்களுக்கு முட்டுகையாக இருந்திருக்கிறது. எல்லா தரப்பு வாசகர்களையும் கவர வேண்டிய ஊடக கட்டாயம் அவரின் பரந்த கற்பனை உலகை இல்லாமல் செய்து விட்டது. தனது எழுத்துலக வாசகர் என்ற அளவுகோலையே தன் எழுத்துகளின் அளவுகோலாக மாற்றி அமைத்து கொண்டார். அவரின் சிந்தனைகளை வாசனுக்காய் குவியப்படுத்த வேண்டிய கட்டாயம் அவரின் எழுத்தழகியலை மழுங்கடித்து விட்டது. வாசகனுக்காய் எழுதியவற்றிலிருந்து உன்னத புனைவுகளை பிரித்தெடுப்பது சுஜாதா வாசகர்களுக்கு மிக கடுமையான விடயம். ஒரு வகையில் அவர்கள் அதை செய்யபோவதும் இல்லை.
 
சுஜாதாவின் மொழிநடை எளிமை என்று வரையறைபடுத்தமுடியாது. எளிமையான மொழிநடையை கையாண்ட அசோகமித்திரனின் தாக்கம் சுஜாதாவின் மொழிநடையில் இருப்பதனால் அவ்வாறான முடிவினை எடுத்துவிடுகின்றோம். ஆனால் சுஜாதா கொண்டிருந்த மொழி வணிகத்தனமானது. இருவழிகளில் அதை நிறுவலாம். ஒன்று அவரின் வாசகர்களில் அதிகரிப்பதால் பத்திரிகையோ சஞ்சிகையோ ஏற்படுத்தக்கூடிய வணிகம். இரண்டு எழுத்தியல் கூறுகளில் ஏற்படுத்தக்கூடிய வியாபர வணிகம். இவை இரண்டையும் ஒருங்கே சேர்த்த மொழிநடை அவரது. ஒரு லாபநோக்கான மொழிநடையில் புலமைக்கான கூறுகள் பஞ்சமே.
 
சிறுகதைகளிலும் சரி நாவல்களிலும் சரி விடயபரப்பை  தாண்டிய பார்வை சுஜாதாவிடம் இருந்திருக்கவில்லை. இன்று மகத்தான இலக்கியங்கள் எல்லாமே ஒரு பரந்த உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். சாதாரண பொழுது போக்கி வாசகன் எதிர்பார்க்கின்ற விறுவிறுப்பு அசாத்திய ஏற்ற இறக்கம் சுஜாதாவை விடயபரப்பின் மீது கொள்ள கூடிய கரிசனையை குறைகின்றது. பொழுதுபோக்கு என்பதை தாண்டி வாசிக்க நகர்கின்ற வாசனுக்கு வெறும் எழுத்துக்களையே மிச்சம் வைக்கின்றன. இந்த வெறுமையை வாசகன் ஏதோ ஒரு நிலையில் அடைந்துவிடுகிறான். அதன் பின்னர் விமர்சிக்க தொடங்குகிறான். சுஜாதவை ஆதரித்ததும் அவனாகவே விமர்சிப்பவனும் அவனாகவே இருக்கின்ற படிநிலை மாற்ற கால எல்லைக்குள் சுஜாதா வணிக எழுத்தாளனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.

ரிஷி வனம். – சிறுகதை ( திருத்தப்பட்டது )

அமைதி என்றால் மென்மையானதும் , அழகானதும் என்ற விம்பம் என் மனதில் இருந்ததே கிடையாது. எப்போதுமே அப்படியான ஒரு மாய விம்பத்தின் நிழலில் இருக்க ஆசை கொண்டதும் கிடையாது. நான் பல்கலையை முடித்து விட்டு சில நாட்களை கழிப்பதற்காக , என் மூதாதையர் வாழ்ந்து மடிந்த ஊர் என்று என் பால்யத்தில் கூறிய வாகரைக்கு வந்திருக்கிறேன். வாகரை என்ற ஊரின் சுவாசம் ஆயிரத்து தொள்ளாயிரம்களிலேயே நின்றுவிட்டதாக பல்கலையில் இருக்கும் போது கிடைத்த சில புத்தகங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அந்த அறிதல் என்னுள் இனம்புரியாத வேட்கையை உருவாக்கியிருந்தது . அதுதானோ என்னமோ என்னை இப்போது இங்கு சடலமாய்ப்போன ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கு குடும்பம் என்று சொல்லிக்கொள்ள யாருமே இல்லை. சொந்தங்கள் என்று பாடசாலை மற்றும் பல்கலை நண்பர்கள் மட்டும் தான். அன்னை தெரேசா இல்லத்தில் நினைவு தெரிந்த நாளில் இருந்தேன். அது தான் என் வீடு , குடும்பம் எல்லாம். நான் பல்கலை அனுமதி பெற்ற போது என்னை மகனாய் வளர்த்த தாய் , ” நீ பிறந்த குழந்தையாக இருந்த போது எங்கள் இல்லத்திற்கு ஒரு எண்பது மதிக்கதக்க ஒரு ஆச்சியால் கைத்தாங்கலாக கொண்டுவரப்பட்டாய். அளவான உடல் வாகு உடையவனாயும் மா நிறத்திலும் இருந்தாய். உன்னை நிர்வாணமாகவே கொண்டுவந்திருந்தாள். உன்னில் தாய்ப்பால் வசமே வீசவில்லை. எங்களிடம் உன்னை ஒப்படைத்தவள் நீ வாகரைக்கு வந்து சேர்வாய் என்றுவிட்டு சென்றாள். நீ இப்படி……” என்று தொடர்ந்து வாழ்த்துச் சொன்னார்.
பின்னரும் நான் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அன்றைய தினம் நூலகத்தில் வாசித்த அந்த குறிப்புகள் தான் என் வேட்கையை   மீண்டும் தூண்டியது. இதோ இப்போது செம்மண் பரவிய வாகரையை  நோக்கிய குறும் பாதை ஒன்றினூடாக நடந்து சென்றுகொண்டிருக்கிறேன். இரண்டு கிழமைக்கான உடைகள் , பொருட்கள் மற்றும் பிடித்தமான சில புத்தகங்கள் என  எல்லாம் பொதி செய்து முதுகில் ஒன்று கையில் ஒன்றாய் பைகளில் ஏந்திக்கொண்டு என் நீண்ட கேசம் வீசிய காற்றில் காதின் மடல்களை முத்தமிடுவதை உணர்ந்தவனாய் பின்னேரம் ஐந்து மட்டில் நடந்துகொண்டிருக்கிறேன். வானம் காவி கட்டிக்கொண்ட மாதிரி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. இதனால் என் நடையை வேகமாக ஆக்கிக்கொண்டேன். காற்றும் அதிகமான பலத்துடன் வீசியதால் என் கேசம் ருத்ரதாண்டவம் புரியத்தொடங்கியது. வலது நீள் காற்சட்டை  பைக்குள் கையை விட்டு தலைப்பட்டியை எடுத்து கேசத்தின் தாண்டவத்தை அடக்கி கொண்டேன். நீள் பார்வையில் வீதியில் எந்த மனித நடமாட்டமும் இல்லை. காட்டு பூனையும் மர அணிலும் குருவிகளும் போடும் சத்தம் தலைப்பட்டியினை கடந்து காதை அடைந்துகொண்டிருந்தன. இசையின் வேறொரு பரிமாணத்தில் சங்கமிப்பதாய் ஒரு உணர்வு மேலிட்டது.
எந்த முன்னறிவும் இல்லாமல், யார் எவர் ஊருக்குள் இருப்பார்கள் என்று தெரியாமல் மனிதர்கள் இருப்பார்களா என்றே தெரியாமல் , பேருந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன் வாகரை செல்வதற்காக. யாரையும் விசாரிக்க மனத்திராணி இல்லாமல் பேருந்து பெயர்ப்பலகைகளாக தேடித் தேடி சுற்றினேன். கண்ணில் வாகரை என்ற பெயர் தென்படவே இல்லை. பேசாமல் திரும்பி விடலாம் என்றிருந்த போது தான் அந்த பெயர்ப்பலகை ” மண்ணுர் – வாகரை – தேனுக்கும் ” தென்பட்டது. அந்த நொடியே பேருந்துக்குள் தாவிக்கொண்டேன். ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டார் நடத்துனர். ஆனால் ரசீது தரவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. ஜன்னலோரம் இருந்து கொண்டு கண்ணயர்ந்தேன். அந்த சிறு பாதையின் அருகில் வைத்துதான் நடத்துனர் வாகரை வந்துவிட்டதாக என்னை உலுப்பிச்  சொன்னார்.
கடந்த இருபது நிமிடங்களாக நடந்து கொண்டே இருக்கிறேன், இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நடப்பேன். இருள இருள மனதில் பயம் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது.பாதையும் காற்றும் என்னோடு நிறைய நாள் பழகிய உணர்வை அளித்ததால் பயம் பெரிதாக என்னை பீடித்துகொள்ளவில்லை. நான் களைத்து விடவில்லை இருந்தும் வீசிய காற்று என்னை மோதி கடந்து செல்லும் போது என் சக்தியின் அனுவளவினையேனும் உறிஞ்சி செல்வதை உணர்ந்தேன். நீண்ட கோடு போன்ற பாதை முடிவிற்கு வந்து இடப்பக்கமாக வளைந்ததது. அடுத்த அடியினை இன்னும் பலமாக எடுத்து வளைவினில் திரும்பினேன். என்னால் கண்முன்னே விரிந்திருந்த காட்சியை நம்பமுடியாமல் இருக்கின்றது. வியப்பில் அடுத்த அடியினை வைக்க முடியாமல் , வைக்க சக்தி இல்லாமல் எல்லா சக்தியும் அந்த முடக்குடன் முடிந்து விட்டது போல இருந்தது. முடக்கின் இடது கரையோரம் பெரிய நீளமான உருண்டை மர குற்றியை அடியாய்க்கொண்டு இரண்டு கப்புகளில் தாங்கியபடி ஒரு பெயர்ப்பலகையில்  வாகரை என கறுப்பு சாயத்தால் எழுதப்பட்டிருந்தது. வாகரை என எழுதியிருந்த எழுத்துருவின்  வடிவமே ஏதோ ஒருவகையான சோகத்தை விளித்துநின்றது. மேலும் நடக்க முடியாதவனாய் அந்த நீளமான உருண்டை மரக்குற்றியில் இருந்தேன். இருட்டு மேலும் மேலும் வலுப்பெற்றது. இனியும் இருந்தால் சரிவராது என்று எண்ணிக்கொண்டு நகரத்தொடங்கினேன். வீதியின் இரு மருங்கிலும் தோட்டங்களும் சோலைகளுமாய் காட்சியளித்தது. பழைய வடிவமைப்பில் கட்டப்பட்ட இரண்டு மாடிவீடுகளும் ஓலையால் வேயப்பட்ட மாட்டு குடில்களும் நாய்களும் , புறாக்களும் , கோழிகளுமாய் முற்றிலும் முந்தைய நூற்றாண்டின் நெடி வீசியவண்ணம் அமைந்திருந்தது.
முன்னால் கொட்டகை இறக்கி நன்றாக பழுத்த கதலி ,கப்பல் மற்றும் சீனி வாழைக்குலைகள் தொங்கவிடப்பட்டிருந்த கடை ஒன்றின் அருகில் செய்யப்பட்ட குந்தின் மேல் பைகளை வைத்து விட்டு கடைக்குள் சென்று என்னைப்  பற்றியும் வாகரையை நான் அறிந்திருந்த விதம் பற்றியும் விளக்கினேன். கடைக்காரர் அடர்த்தியான பூச்சு மீசையும் மழித்த தாடியும் சுருட்டை முடியுமாய் சரத்துடனும் பெனியனுடனும் என்னை நோக்கி திருதிரு என விழித்தார். அவர் முக பாவனையே எதுவுமே தெரியாதவர் என்பதை காட்டியது. அவர் இங்கிருந்து நான்காம் வீட்டை சுட்டி காட்டி அங்கே விசாரிக்குமாறு கூறினார். தான் கிராமம் வந்து சில காலம் தான் என்றும் அவர்கள் வம்சம் வம்சமாய் இங்கேயே இருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே நான் பைகளை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கி விட்டேன். அவர் காட்டிய வீடு வெகு தூரத்தில் இல்லை. நூறு காலடிகளில்  அடைந்து விட்டேன். சிறிய சிறிய மரகப்புகளால் நேர்த்தியாக ஒரு கோபுரம் போல அடுக்கப்பட்டிருந்தது அந்த வீட்டின் கதவு. இரவாகி இருந்தமையால் வெளியில் நின்றே உள்ளிருப்பவர்களை கூவினேன். முதல் கூவல் ……. இரண்டாம்  ……. மூன்றா……. வீட்டின் கதவு திறக்கப்படுவதை உள்ளிருந்து வந்த பிரகாசமான மின்குமிழ் வெளிச்சம் காட்டியது. ஒரு பெண் மெதுவாக நடந்து  வெளிக்காதவின் அருகில் வந்து விசாரித்தாள். வெளிச்சம் குன்றியிருந்தமையால் சரியாக அவளை இனம் காண முடியவில்லை. விவரத்தை அவளிடம் கூறினேன்.
அவள் முகத்தில் பெயர் தெரியாத ஒருவகையான உணர்வு வெளிப்பட்டதை உணர்ந்தேன், அவள் என்னை வீட்டிட்குள் அழைத்து சென்றாள்.அவளின் வீடுதான் நான் அந்த வீதியில் கண்ட வீடுகளில்  ஒப்பீட்டளவில் சிறியது. நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்த வீட்டின் மேற்பக்கம் ஓட்டினால் அடுக்கப்பட்டிருந்தது. வெள்ளை நிற பூச்சு கொஞ்சமும் அழுக்குறாமல் மழையால் தெறித்த செம்மண் தடங்கள் வெண்சுவற்றின் கீழ் விளிம்புகளில் கோலம் போட்டது மாதிரி தெறித்திருந்தது. என் உயரத்திற்கு ஏற்றாற்போல் மேல்முனை வளைந்த வாசலினூடாக அவளின் பின்னால் தாயை பின்தொடரும் குழந்தைபோல பின் தொடர்ந்தேன். நீண்ட செவ்வக வடிவ வரவேற்பறையில் அடுக்கப்பட்ட ஆறு கருங்காலி மரத்திலான கதிரைகளில் தனிக்கதிரை ஒன்றைக்காட்டி அமருமாறு பணிவாக வேண்டினாள்.
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த அவளது முகம் கட்டித் தயிரைப்போல திட்டு திட்டாக வெளிறிப்போய் இருந்தது. பெரிய உருண்டைக் கண்களும் வரம்புக்கு மீறிய இமைப்பரம்பலும் அவள் முகத்தை இன்னும் விகாரப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் மேலாக அவளது கறுத்த பொங்கிய உதடுகள் , சுருட்டு பிடித்து பிடித்தே வறண்டு போய் இருந்தது. இதெல்லாம் எனக்கு  வியப்பூட்டுவனவாக இல்லை. பைகளை கழட்டி ஒரு மரக்கதிரையில் வைத்துவிட்டு நான் அருகில் இருந்த கதிரையில் இருந்தேன் . அவள் என்னை  காத்திருக்குமாறு கூறிவிட்டு வீட்டின் அறை ஒன்றிற்குள் விரைந்தாள். கதவு திறக்கையில் அது சமையலறை என்பதை நான் ஊகித்திருந்தேன் . உடல் சோர்வுற்றிருந்த நான்  கால்களையும் கைகளையும் நீட்டி மூலி முறித்துக்கொண்டேன் . மனத்தால் உற்சாகமாக இருந்தாலும் உடலில் வலுவற்று போய் இமைகள் கண்களை மூடி என்னை தூக்கம் ஆட்கொண்டது. திடீர் என்று தூக்கத்தை அடித்துக்கலைத்தால் போல் தென் மேற்கு சுவரில் தொங்கியிருந்த ஒரு மூதாட்டியின் நினைவுப்படம் என் கண்களை கூசியது, அப்படத்திலிருந்து ஏதோ ஒரு ஒளிக்கீற்று என் உடல் முழுக்க பரவியது. அம்மூதாட்டி என்னை உற்று நோக்குவது போலவே தெரிந்தாள். இருந்தும் விரைவாக என்னை சுதாகரித்து கொண்டு பார்வையை நகர்த்தினேன். அந்த பெண் அம்மூதாட்டியின் பேத்தியாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.அந்த மூதாட்டியின் படத்துடன் இன்னும் பலரின் நினைவுப்படங்கள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் வண்ணமும் அவர்கள் வாழ்ந்த காலத்தினை குறிப்பிட்டு காட்டின
சில நிமிடங்களிலேயே அந்த பெண் ஒரு வெள்ளி கோப்பையில் ஆவிபறக்க தேநீர் தந்தாள். இரண்டாவது வாய் கோப்பையில் வைக்க மீண்டும் இன்னொரு அறைக்குள் நுழைந்தாள். தேநீர்  அவ்வளவு சுவையாக இருந்தமையால் அது என்ன அறை என்பதை ஆராய்ச்சிக்குட்படுத்தவில்லை. கொஞ்ச தேநீர் மீதமிருக்க அவள் கையில் ஒரு திறப்பு  கோர்வையுடன் வந்தாள். தேநீரை முடித்து விட்டு கதிரைக்கால் ஒன்றின் அருகில் வைத்து அவளை பார்த்தேன். அவள் ஒன்றும் பேசாமல் என் எதிரே இருந்த கதிரையில் வந்திருந்தாள்.  குரலில் கொஞ்சம் கவலை கூடியதாக இருக்க ,
” என் ராசா, அந்தா அதில  இருக்கிறது எங்க ஆச்சி , எங்கம்மாவோட அம்மா . எங்கம்மா அய்யாவோட ஊருக்கு போயிருக்குது.நான் மட்டுந்த்தான் இருக்கேன் இப்ப வீட்டுல, ”
என்பதற்குள் நான்,
“ராசாவா? நானா ? ” என்றேன் அவளிடம்.
” ஆமாங்க ராசா , எங்க அம்மாக்கு  ஆச்சியும் எனக்கு எங்க அம்மாவும் சொன்னதன் படி நீங்க தான் எங்க ராசா. உங்களுக்கு இங்க ஒரு பெரிய மாளிகை  இருக்கு. கொஞ்ச தள்ளி.ஆச்சி காலத்தில இருந்து நாங்கதான் அத துடச்சு பாதுகாத்துட்டு வாறம், ஒவ்வொரு நாளும் அங்க போயி நான் எல்லா சுமையும் செய்திட்டு வருவன். நீங்க வருவியல் எண்டு காலம் காலமா காத்திட்டு இருக்கம். வாங்க ராசா  போவம் ” என்று முடித்துக்கொண்டு எழுந்தாள்.
எழுந்தவள் திடுக்கிட்டு ” சேர் , மை நேம் இஸ் ………” என்று தன்னைப்பற்றி விபரித்தாள், அவள் கூறிய எதுவும் வியப்பளிக்கவில்லை , கூறிய விதம் தான் வியப்பளித்தது. முன் பேச்சுக்கும் பின் பேச்சுக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளி தெரிந்தது. எதையும் காட்டிகொள்ளாதவனாய் மனதிற்குள் சிந்தனை அலைகளை படர விட்டேன்.
“ஷால் வி கோ ? ” என்றாள்.
திடுக்கிட்ட நான் போலாமே என்ற பாவனையுடன் பைகளை எடுத்து மாட்டிக்கொண்டேன்.என்னிடம் இருந்த கைப்பையை வலோத்காரமாய் ஏந்திக்கொண்டாள்.அவளின் பேச்சில் இருந்த முரண் என்னை திகைக்க வைத்தது. இருந்தும் என் வீட்டைப்பார்க்க போகிறேன் என்ற எண்ணமே அதிகம் என்னுள்  இருந்ததால் பெரிதாக நான் அதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
இருட்டில் வாகரை மறைந்து போய் இருந்தது. அழகிய பெண்ணின் நுதல் போன்று நிலா காட்சி அளித்தது. இடையே முகில் கூட்டம் மறைத்ததால் அவளின் நுதல் போன்று சிதைந்திருந்தது. அந்த வாழைக்குலை கடை சாத்தப்பட்டிருந்தது. தூரத்து மின் ஒளியில் தெரிந்த மரங்கள் எல்லாமே என்னை வரவேற்பது போல மெல்லிய காற்றுக்கு அதன் இலைகளையும் கொப்புகளையும் மெலிதாக ஆட்டிநின்றன. அவள் என் முன்னால் நடக்க தொடங்கினாள். நானும் கூடவே வீதியில் இறங்கி நடந்தேன். நடக்கும் போது வெளிச்சத்துக்காக அவள் ஒரு லாந்தரை எடுத்துக்கொண்டு வந்தாள். நான் எனது தொலைபேசியில் இருந்த விளக்கினை பிடித்துக்கொண்டு நேரத்தை உற்று பார்த்தேன். மணி எட்டை காட்டியது. லாந்தர் விளக்கின் ஆட்டத்தில் அவள் நிழல் அங்கேயும் இங்கேயுமாக ஆடிக்கொண்டிருந்தது. தொலைபேசி வெளிச்சத்தில் என் நிழல் சீராக பின்தொடர்ந்து.
இடையே அவளின் பெயரை விசாரித்தேன்.
” நூத்தாயி …..”
இதயம் நின்று போனது.
” அஞ்சலி… ”
திருத்திக்கொண்டாள் . மெதுவாக என்னை திரும்பி பார்த்து புன்முறுவல் செய்தாள். லாந்தரின் மங்கிய ஒளியில் அவளின் முகம் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை புலப்படுத்தியது. இருந்தும் அங்கு வீசிய காற்றும் அந்த நிலவொளியும் எனக்கு பழகிப்போன ஒரு சூழலை ஞாபகப்படுத்தியதால் எதையும் பொருட்படுத்திக்கொள்ளவில்லை.
கொஞ்ச தூரம் நடந்து போயிருப்போம். களைப்பு அதிகமானது. கால்களில் ஆணி குத்துவது போல குதிக்கால் எலும்பு குத்த தொடங்கியது. நான் தொலைபேசி வெளிச்சத்தில் சுற்றி இருக்கும் இயற்கையை ஆராய்ந்தபடியே நடந்தேன். எல்லா வீடுகளும் இருளில் தோய்ந்திருந்தது. எங்காவது ஒரு சில இடங்களில் மின்குமிழ் ஒளி தென்பட்டாலும் அதன் வீரியம் குன்றியதாகவே இருந்தது. இந்த இருள்மைதான் எவ்வளவு புனிதமானது. மனிதர்களில் சுத்தாமனோர் அசுத்தமானோர் என்று இல்லாமல், நல்லவர் கேட்டவர் என்று இல்லாமல் , வெள்ளை கறுப்பு என்றுமில்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரி காட்டிகொள்கிறது. இருட்டில் இருபவரின் விளக்கு இன்னொருவரை வெளிச்சமாக்குகிறது. எவ்வளவு புனிதமான செயல் அது. இருட்டில் தான் வெளிச்சம் வலுப்பெறுகிறது. நாய்களின் வேட்டைபல்லை இருள் காட்டுவது கிடையாது. எல்லாருமே அதற்கு ஒரே மாதிரி தான்.என்று எண்ணியவாறு நடந்தேன். நடந்தேன் . நடந்தோம் . நிறுத்திக்கொண்டாள். என்னை திரும்பி பார்த்து இருட்டி இருந்த ஒரு வெளியை நோக்கி சுட்டுவிரலை நீட்டினாள். ` லாந்தர் பலமிழந்து போய் இருந்ததால் , வெற்றிடத்தை நோக்கி தொலைபேசி வெளிச்சத்தை திசைதிருப்பினேன்.
வெளிச்சத்தை முன்னோக்கி பரப்பினேன். கறுத்த நிறத்தில் பொன்னிறமான வேலைப்பாடுகளுடன் இரண்டு ஆள் உயரத்துக்கு அகன்ற கதவு. துருவோ , கறையோ சுத்தமாக இல்லை. கதவின் அடியில் நீண்ட செவ்வக அடி மட்டம் இடப்பட்டு கதைவை பிரிக்கும் பொன்னிற தகட்டில் மயில் உருவ வேலைப்பாடுகளுடன் ஓரளவு உயரமான சிறு சிறு கம்பிகள் கதவுக்கு மேல நீட்டி இருக்க அதன் முனைகளில் வேல் செதுக்கப்பட்டிருந்தது. கதவு இரண்டாக திறக்கும் பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதோடு பெரிய பழைய ஆனால் சீரியமாக பாதுகாக்கப்பட்ட பூட்டால் பூட்டப்படிருந்தது. ஒவ்வொரு பாதியின் நடுவிலும் நிறைந்து வழியும் நெற்குட செதுக்கல் காணப்பட்டது. அவள் என் பை தூக்கிய கையில் இருந்த திறப்பு கோவையை லாந்தரை  அருகில் வைத்துவிட்டு எடுத்து , பூட்டை திறந்தாள். லாந்தர் முழுமையாக அணைந்திருந்தது.
அவள் லாந்தரை எடுப்பாள் என்று வெளிச்சத்தை நிலம் நோக்கினேன், அவள் பொருட்படுத்தாமல் கதவை தள்ளி திறந்தாள். எந்தவித சத்தமும் இல்லால் மிக அமைதியாக கதவு தன்னை திறந்து கொண்டது. நான் லாந்தருக்கு விலகி கொடுத்து உள்ளே நடந்தேன்.
விலாசமான புற்தரை வாசலில் இருந்து ஆரம்பித்து நீண்டு சென்றது. இருளில் அங்கங்கே சிறிய சிறிய பன்னம் மரங்களும் ஓரிரண்டு பெரிய மரங்களும் நின்றன. மங்கிய இருட்டு ஒளியில் மரங்களை இனம் காணமுடியாமல் இருந்தது. வாசலில் இருந்து சென்ற ஓரளவு பெரிய தரையைக்கொண்ட பாதையில் அவள் நடக்க தொடங்கினாள். நான் சுற்றமெல்லாம் வெளிச்சத்தை பரப்பி நிலத்தை ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தேன். அவள் ஓரிடத்தில் போய் நின்றாள். நான் வீட்டு வாசலை அடைந்து விட்டோம் என ஊகித்து கொண்டேன்.அவள் கையை சுவரில் தடவி கொண்டிருந்தாள். ஒரு வெளிச்சம் , இதை விட பிரகாசமான வெளிச்சத்தை என் வாழ்நாளில் உணர்த்ததே இல்லை. கண்கள் கூசத்தொடங்கின. அவளும் அதையே உணர்ந்திருக்க வேண்டும் கண்களை கசக்கி கொண்டாள் . மெதுவாக திறப்பு கோர்வையில் இருந்த மிகப்பெரிய திறப்பை கதவின் துளைக்குள் இருட்டு திருகினாள். அது ஒரு விற் கதவு. ஒரு செவ்வகமும் அரை வட்டமும் சேர்ந்த உருவம்,  அன்னத்தின் செதுக்கல்கள் அங்குமிங்குமாய் சிறியனவும் பெரியனவும் சேர்ந்து கலைக்கோவில் வாசல் போல தென்பட்டது. வாசலின் செவ்வக முடிவில் மாவிலைகள் போல செதுக்கப்பட்டிருந்த திரண்ட மரசெதுக்கல்கள் கொள்ளை அழகாக இருந்தன. பார்த்த மாத்திரத்தில் என் வம்சத்தை நினைத்து பெருமைப்பட்டு கொண்டேன். கதவுகளில் ஒன்றை தள்ளி கொண்டு அவள் உள்நுழைந்தாள். அதிக ஆவலுடல் உள்ளே சென்றேன்.
வெளிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டின் நடுப்பிரவாகம் மட்டும் தெரிந்தது. மேற்தளத்தில் செவ்வக வடிவ புகைப்படங்ள் மட்டும் மங்கியிருந்தன. செம்மஞ்சள் நிற கைப்பிடியை கொண்ட விளிம்புடைய மேற்தள தரை. மீண்டும் திடீரென வெளிச்சம்.  வீடு முழுக்க ஒளி சிதறியது. ஒரே சீரான நிரையில் பத்து கணக்கில் மின் குமிழ்கள், ஆடம்பரமானவை.
வீட்டின் பிரதான பாகத்தில் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வீட்டை அந்த பேர் ஒளியில் நின்ற நிலையிலேயே ஒரு சுற்று சுற்றி பார்த்தேன். எல்லாமே அப்படியே இருந்தன, என் கனவு வீடு. இதே போல ஒன்றினைத்தான் கட்டவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் போது நண்பனுக்கு கீறிக்காட்டிய அதே அடுக்குகள். சிறிய கவலை மட்டும். எனது கனவு வீட்டில் எங்குமே கண்ணாடிகளால் ஜொலிக்கவிட்டிருந்தேன் ஆனால் இங்கே அவ்வாறில்லை. எல்லாமே சுவர்கள். அடைத்துவிடப்பட்டிருந்த யன்னல்கள். ஒரே ஒரு ஆளுயர கண்ணாடிமட்டும் இருந்தது. தென்பக்க மூலையோடு எட்டு அடுக்கு ராக்கையும் ஏழு அடிநீளமும் கொண்ட வட்ட நீள்வட்ட ஜாடிகளை கொண்ட அலமாரி. அதன் நடுவில் தான் இந்த கண்ணாடி. என் விம்பத்தை அப்படியே தன்னுள் செதுக்கிக்கொண்டிருந்தது. அது கட்டாயம் பிரதிபலிப்பு இல்லை செதுக்கல்தான். காற்றின் இடைவெளியில் உள்ள வெறுமையில் இருந்து வெளிப்பட்ட ஒளிபிளம்புகள் போல. நான் அதனருகே நகர அதுவும் என்னைநோக்கி வந்துகொண்டிருந்தது. கண்களில் உணர்வு வேட்கை உதிர்ந்துகொண்டிருந்தது. கைவிரல்கள் பிசைந்தபடி. கால்கள் விடுவிடுவென வேகமாக்கியது. மிக அருகில் போனபோது அது என் விம்பம் தான் என உணர்ந்துகொண்டேன்.காற்றின் வெறுமைகளில் ஏமாற்றம் நிரம்பிகொண்டது. அருகில் இருந்த ஜாடிகளை ஒவ்வொன்றாக எடுத்து சுற்றி சுற்றி பார்த்து கொண்டேன். சிலது கனமானவையாகவும் சிலது வெறுமையாகவும் காணப்பட்டன. எல்லாவற்றிலும் மருந்து திரவியங்களின் நெடி வீசியது. சில ஜாடிகள் சூடாக இருந்தன என என்னால் நிச்சயமாக கூறமுடியும். அவற்றை நான் அதிகநேரம் கையில் வைத்துக்கொள்ளவில்லை.
ஐ வில் பிரிங் தி டின்னர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
அவளின் குரல் அசல் நகரத்து பெண்போல இருந்தது. விடுக்கென திரும்பாமல் மெதுவாக திரும்பி வேணாம் என்று சொல்லுவோம் என்று கண்ணாடி ஊடு அவளை பார்த்தேன் . செக்க சிவந்த அவள் உதடுகள் மெல்லிய புன்னகைத்துக்கொண்டு இருந்தது. இது வரை என்னோடு வந்த அவளா இவள்? காலையில் சூரியனை நோக்கி பூக்கும் பூப்போல என்னைநோக்கி பூத்தபடி அந்த அழகி நின்றுகொண்டிருந்தாள். அந்த கெட்டி தயிர் முகத்தில் சகிக்க முடியாமல் இருந்த அவளே தான். கண்ட பொழுதே புலன்கள் அனைத்தையும் தொலைத்து விட்டேன்.
யா சுவர் , பசிக்குது சீக்கிரம் வாங்க
கண்ணாடியை பார்த்தபடியே நின்றேன். அவள் மெதுவாக விலகி சென்றாள்.கதவை தாண்டும் வரை அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன் அவள் போய் முடிந்துவிட்டாள். மங்கிய இருளில் அந்த பேரழகி இவ்வளவு அசிங்கமாக தெரிந்தாளே என்று இருட்டின் அமைதியை நொந்துகொண்டேன். இறக்கிய பைகளை அவள் ஒரு மேசையில் வைத்திருந்தாள்.மனதில் இருளை நொந்தபடி அங்கிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் போய் கிடந்தேன். முள்ளந்தண்டு கிடையோடு அறுபது இருக்குமாறு சாய்வினை கொண்ட அந்த கதிரை சுற்றி வைரமான மரத்தாலும் நடுவில் தங்கநிற தொய்யாத இறுக்கமான பின்னலையும் கொண்டிருந்தது. உடற் களை என்னை ஆட்கொண்டது.
கண்களை மூடிக்கொண்டேன். கண்ணாடி உடைகின்ற சப்தம். நிலத்தில் எல்லாமே சிதறுண்டு தெறித்துக்கொண்டிருக்கும் சப்தம். அலறல் ஒலி. உடைந்த கண்ணாடி துகள்கள் எல்லாம் கால்களை கீறுவது போன்ற உணர்வு. திடுக்கிட்டு எழும்பி கண்ணாடியை நோக்கினேன். என்னை விறைத்து பார்த்தபடியே என் செதுக்கல். கதிரையில் இருந்து கைகளை ஓரங்களில் முண்டுகொடுத்து முள்ளந்தண்டை நிமிர்த்து எழும்பினேன். அடிமேல் அடிவைத்து கண்ணாடி அருகில் போய் என்கண்களை உற்று பார்த்தேன். அதில் ஓடியிருந்த வெறுமை பெரும் வறட்சி உள்ள வயலைப்போய் என்கண்களை ஆக்கிவிட்டிருந்தது. வாயால் ஆழ் சுவாசக்காற்றை கண்ணாடியில் படரவிட்டேன். கண்ணாடியில் என் விம்பம் மங்கிப்போயிருந்தது. கண்கள் மட்டும் அப்படியே. வெறித்தபடி. கண்களை கூர்ந்து நோக்கினேன்.
முகத்திலிருந்து சிறிய கூரிய  பரு வருவதைப்போல கண்ணாடியில் இருந்து அந்த மாநிற தோற் துண்டு வெளிப்பட்டது. பயம் ஒரு புறம் இருக்க பழகிப்போன , நெருக்கமான காட்சிபோல இருந்தது. வெடுக்கென என்கண்களை பார்த்தேன். கண்ணெல்லாம் சாந்தம். வெள்ளை நிலாவில் கருந்துளை போல கண்கள் எதோ புரியாத உணர்வினால் என்னை பார்த்துக்கொண்டிருந்தன. என்கால்களில் ஏதோ முட்டுவது போல குளிர்ந்த நீரோடையில் கால்வைத்தது போல. கண்களை கீழே உருட்டினேன். வெண்ணிற பாதங்கள். குழந்தையின் விரல்கள் போல மெல்லிய பார்க்க மிருதுவான தோற்றம். பாதம் வெளியே வந்தது. கூடவே வெள்ளை மடிப்புகள். தூய்மையான வெள்ளை நிறம். கொஞ்சகொஞ்சமாக எல்லாமே. சர்வமும் வெளிப்பட்டது. அந்த மடிப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததில் எதையுமே கவனிக்கவில்லை. காற்றில் ஆடி என் முன்னங்கால்களை தொட்ட மடிப்புகள் மனதுள் சில முகில்களை உருவாக்கின. என் முன்னங்கால்கள் நிலத்தை பார்க்க குனிந்து கொண்டு துவண்டு கைகளை நெஞ்சுக்குள் மடித்து சுருட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடிய நினைவுகள். அந்த துணியில் கட்டப்பட்ட ஊஞ்சலில் இருக்கும்போது இருந்த அதே உணர்வு. அந்த சேலையின் வருடல்கள். என்னையறியாமல்
அம்மா
எந்த பதிலும் இல்லை. மீண்டும்
அம்மா
அவர் கைகள் என் மேலே பட்டிருந்ததை உணர்ந்தேன். நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தேன். அம்மாவின் முகம் தான். இப்படித்தான் இருந்தாக வேண்டும். அவர் முகம் முழுக்க துணியால் சுற்றியிருந்தார். சுவாசிக்க மூக்கும் பார்க்க கண்களிரண்டும் மட்டுமே வெளியில் தெரிந்தன. முழுமையாக வெள்ளை நிற உடையையே அணிந்திருந்தார். முகத்தை சுற்றியிருந்த துணி கூட. அவரின் நீண்ட கேசம் கலைந்து போயிருந்தது. எந்த விசையோ தெரியவில்லை. உடனே என் தலைப்பட்டியை கழற்றி அவரின் கலைந்த கேசத்தை பின்னி கட்டிவிட்டேன். இதுவரைக்கும் பின்னி பார்த்ததுகூட கிடையாது. என் இரண்டு கண்களும் முன் முடியால் மூடியிருக்க அம்மா தன் கைகளால் என் கேசத்தை விலக்கி கண்களை பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குள் என் கையை மெதுவாக பிடித்துக்கொண்டு நடத்தி கொண்டு கதிரையை அடைந்தார். என்னை இருத்தி என்கால்களை மடியில் வைத்துக்கொண்டு அவர் கீழே அமர்ந்தார்.
என்னை பார்த்தபடியே கால்விரல் ஒவ்வொன்றாக மெடுக்கு உடைத்து கொண்டிருந்தார். நான் என் கேசத்தை கஷ்டப்படுத்தில் அமைதியாக்கி விட்டிருந்தேன். மெதுவாக என் பாதங்கள் ஈரமாவதை உணர்த்தவனாய் கைகளால் அம்மாவின் தலையை நிமிர்த்திக்கொண்டு அவரின் முகத்தை சுற்றியிருந்த வெள்ளைத்துணியை அகற்ற கைகளை கொண்டு சென்றேன். கண்ணீர் பட்ட இடமெல்லாம் ரத்த சிவப்பு நிறம் துணியில் ஊறியது. துணியை கழற்ற போவதை அறிந்த அம்மா என் கால்களை உதறிவிட்டு எழுந்து கண்ணாடியை நோக்கி ஓடினார். அம்மாவை பிடித்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை.
மேடுக்குடைத்த கால்விரல்கள் ஒதுக்கிவிட்ட கேசம் பிடித்து நடத்திய உள்ளங்கை என அம்மா தொட்ட இடமெல்லாம் வலிக்க தொடங்கியது. மிக நாசுக்காக விரல் நுனிகளை பிளேடினை கொண்டு சிறிது சிறிதாக அரிவதைபோன்ற நுண்ணிய வலி. சிறிய வயதில் ஆசிரியர் எல்லாம் உன் பெற்றோர் செய்த பாவம் என்று சபித்த வார்த்தைகள், உருண்டு பிரண்டு சண்டை பிடித்து பெருவிரலில் காயத்துடன் சென்று அறையில் ஓய்வெடுக்கும் போது பல்கலையில் நொந்து கொண்ட தருணங்கள், வெளிச்சத்தை மறந்து இருட்டை நேசிக்க தொடங்கி அதில் இழையோடுகின்ற நிசப்த இரைச்சலில் கலந்து போன நிமிடங்கள் எல்லாமுமே என்னை நிறுத்த எத்தனிக்கவில்லை.
 
 
என் பயணப்பைக்குள் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மூடியை திருகிக்கொண்டிருந்தேன்.  அந்த ஜாடியின் அதே சூடு. அதே நெடி. அந்த பெண் இராத்திரி உணவோடு அதே கறுத்த திரண்ட உதடோடு அசிங்கமாக புன்னகைத்தாள். என்னை நோக்கி வந்து முகத்தை சுற்றியிருந்த கறுப்பு துணியையும் முன் முடியையும் விலத்திவிட கைகளை நீட்டினாள். நான் வேகமாக , இன்னும் , இன்னும் அதிகமாக கண்ணாடியை நோக்கி ஓடினேன். கால்கள் எல்லாம் சிதறியிருந்த கண்ணாடி துகளுடு மெல்லிய ரத்தம் வழிய பாய்ந்துகொண்டிருந்தன. அந்த கண்ணாடியும் அதன் கீழிருந்த தலைபட்டியும் என்னை வரவேற்றன. அந்த ஜாடிகள் எல்லாமே மெதுவாக குலுங்க தொடங்கின. இருள் சூழ்ந்து கொண்டது. இன்னும் கண்ணாடியை நோக்கி வேகமாக ஓடுகிறேன்.
வாகரை.