புதிய சொல். – ஈழத்து இலக்கிய சிற்றிதழ்.

ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் முயற்சியில் புதிய சொல்லை முக்கிய படைப்பாகக் கருதுகின்றேன். காலாண்டு இதழாக வெளிவருகின்ற புதிய சொல் இதுவரை தனது ஆறு இதழ்களை வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. ஆறாவது இதழ் இந்தவருடம் ஜூலை மாதம் வெளிவந்திருக்கின்றது. இந்த இதழ் ஏப்ரல் – ஜூலை காலாண்டிதழ்.
 
சமகால இலக்கிய சூழல் என்கிற வரையறைக்குள் இருக்கின்ற சமூகத்தின் இயக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றது. சமகால ஈழத்து எழுத்தாளர்களின் செயற்திறன் எல்லை மிகக் குறுகியதாகவே இருக்கின்றது. அவர்களின் செயற்பாட்டு எல்லைக்கு வெளியே சென்று சாதாரண சமூகத்தினரிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்க முடியாமல் உள்ளது. படைப்பாளிகளையும் அவர்களின் வாசகர்களையும் தவிர ஏனையோருக்கு ஒரு இலக்கியப் பதிவு போய்ச்சேருவது மிக மந்தமாக இருக்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஏறத்தாள இதே நிலைதான். எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஏதோ எழுத்தாளர்கள் அனைவரும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக எழுதிக்கொண்டு இருப்பது போல சாதாரண மக்கள் அவர்களை கடந்து செல்கின்றார்கள். அவர்களின் தனித்த படைப்புக்கள் வெளிவருகின்றபோதும் இதே நிலை தான். அது ஒரு புறம் இருக்க, இன்றைய சிற்றிதழ்களின் நிலையை கவனிக்க வேண்டும். அதிலும் ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் மிக குறுகிய வாசிப்பு வட்டத்தையே கொண்டிருக்கின்றன. நலிந்த வாசகர்களைக் கொண்டு ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்துவது என்பது மிகக் கடுமையான காரியம். இதனாலேயே பல சிற்றிதழ்கள் இன்றைய சமூகத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கின்றன.

அந்த வகையில் புதிய சொல்லில் தற்போதைய நிலைமை ஓரளவுக்கு ஈழத்து சிற்றிதழ் நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் புதிய சொல்லின் செயற்பாட்டுக் குழு இளைஞர்களாக இருக்கின்றமை. அவர்களின் தீவிர பரப்பு நடவடிக்கைகள் புதிய சொல்லில் இருப்புக்கு வழி செய்கின்றது. அதே போல புதிய சொல்லில் வெளிவருகின்ற ஆக்கங்களின் புதுமைத்தன்மையும் ஒரு காரணம். என்னதான் எத்தனை புதுமைகளைச் செய்தாலும் வாசிப்பு வட்ட விஸ்தரிப்பு இன்றி நிலைக் கொண்டுவிடமுடியாது. பொழுதுபோக்கு இதழுக்கு ஏற்படுத்தக்கூடிய வாசிப்பு வட்டத்தின் அளவை ஒரு போதும் இலக்கிய சிற்றிதழ்கள் ஏற்படுத்திவிடமுடியாது. இது சம்பிரதாயம். ஆனால் வாசிப்பு ஊடகத்தை பரவலாக்குவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தலாம்.
 
எனக்கு புதிய சொல்லின் ஆசிரிய குழுமத்தை தெரிந்துகொள்வதற்கு முதலே புதிய சொல்லை தெரிந்தும் வாசித்தும் இருந்தது புதிய சொல்லில் வாசிப்பு விஸ்தரிப்பின் எழுச்சியான போக்கைக் காட்டியது. பல சிற்றிதழ்களை வற்புறுத்தித் திணித்தி அனுப்புகின்ற சூழலில் தனக்கென வாசகர் பரப்பை குறுகிய காலத்தில் புதிய சொல் ஏற்படுத்தியிருப்பது அவர்களின் வெற்றி. அதைத் தொடர்ந்து தக்கவைத்துகொண்டிருப்பது இலகுவானதல்ல. அதையும் கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
 
புதிய சொல் 06
 
எப்போதுமே புதிய சொல்லில் அட்டைப்படம் ஆழ்ந்த குறியீட்டு மொழியிலேயே இருக்கும். இந்தமுறையும் நல்லையா சவேசனின் கைவண்ணத்தில் child art முறையில் அரசியல் – பாலியல் – வன்முறைகள் அடிப்படையில் வரையப்பட்டு பிரசுரிக்கப்ட்டிருக்கின்றன. ஆசிரியர் குறிப்பில் உரையாடல்களுக்கான தளத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து இலக்கிய வளர்ச்சிக்கான அழைப்பை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முன்னைய இரண்டொரு இதழ்களில் நான் கண்ட வாசக இலக்கிய வாத பிரதிவாதங்களை  இதில் காணாதது கவலையே. அதற்கான அழைப்பும் ஆசிரியர் குறிப்பில் விடுக்கபடுகின்றது.
 
புத்தகாயம் – இராகவன் ,துயர் மிகு இருள் – தீபன் சிவபாலன் , ஒழுங்குபடுத்தலின் வன்முறை – அருண்மொழிவர்மன் , Silence in the Courts அதிகாரத்தின் துஷ்பிரயோகம் – அத்தியா , காலங்களை கண்களில் நிரப்பியவன் – அனார் , மக்ரலின் அறுபதாயிரம் புறாக்கள் – யதார்த்தன் , சோலையூர் காண்பியக்காட்சி பற்றிய ஒரு பார்வை – தனுசியா , சல்வீனியா – தர்மு பிரசாத் , விளமீன் – ஜே கே , சாக வாய்க்காத நாட்கள் – நபீல் ,நான்கு காட்சிகள் ஒரு கவிதை – கேயல்.நப்லா , நட்சத்திரங்கள் சேகரிப்பவள் , கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள் – விருபா குமரேசன் , சினிமா வட்டங்களும் ஓர் இயக்கமும் – அனோஜன் பாலகிருஷ்ணன் , விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு – எஸ்.சத்தியதேவன் என கட்டுரைகளும் கவிதைகளும் சிறுகதைகளும் உள்ளடங்கலாக புதியசொல் 06 வெளிவந்துள்ளது.
 
 
இறுதி உள் மட்டையில் தொன்மையாத்திரை என்ற நிகழ்வு சம்பந்தமான புகைப்பட ஆவணப்படுத்தலும் சிறுகுறிப்பும் உள்ளது.
 
மற்றைய புதிய சொற்களுடன் ஒப்பிடும் போது இது பௌதீக அளவில் குறுக்கம் உடையதாக இருக்கின்றது கவலை அளிக்கின்றது. அத்தோடு இந்த இதழில் கட்டுரைப் பல்வகைமை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் கவலையே.
 
எல்லா இலக்கிய ஆர்வலர்களும் , சாதாரண மக்களும் புதிய சொல்லை வாசித்து அறிந்து பகிர்ந்து கொள்ளுதல் இதழின் வளர்ச்சி என்பதைத் தாண்டி ஈழத்தில் சிற்றிதழுக்கான அங்கீகாரத்தையும் அவர்களுக்கான சரியான தளத்தையும் அமைத்துக்கொடுக்கும் என நம்புக்கின்றேன்.
 
அதே போல இந்த இதழில் உள்ள கட்டுரைகள் அதன் மையம் அடிப்படையில் அடுத்தகட்ட விவாதத்திற்கு உரியவை. ஆசிரியர் குழு அதற்கான ஆவலுடன் இருப்பதும் தெரிகின்றது. வாசகர்கள் அவர்களின் வாதப்பொருளையும் வாதங்கள் பிரதிவாதங்களையும் முன்னகர்த்திச் செல்லவேண்டியது மேலும் அவர்களுக்கு ஊட்டம் அளிக்கும் என திடமாக நம்புகிறேன்.
 
புதிய சொல் குழுமத்திற்கு வாழ்த்துக்களும் அன்பையும் பரிமாறிக்கொள்கிறேன்.

பெண்ணியம் – கருத்து நிலை விளக்கம்.

சமூகத்தின் கட்டமைப்பில் இருக்கின்ற அடிப்படை அத்துமீறல்கள் காரணமாக ஏற்படுகின்ற கருத்துருவாக்கங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செறிந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கருத்துருவாக்கங்கள் அக்கால கட்டத்தின் சமூக நிலைமையையும் மக்களின் எண்ணப் பரவலாக்கத்தையும் காட்டும். ஒரு வலிமையான கருத்து எழுந்த போது ஆதரவுகளும் வளர்ச்சியும் பரவலாக்கமும் மாறுதல்களும் எதிர்ப்பும் மிகச் சாதாரணமாக எழுந்துவிடுகின்றன. சில கருத்தியல்கள் காலம் காலமாக கடத்தப்பட்டும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு கருத்தின் நீண்டநாள் இருப்பு இரண்டு விடயங்களை வெளிப்படையாக சுட்டும். ஒன்று கருத்தின் ஆழம், மற்றையது கருத்தின் அமுலாக்கமின்மை. இவ்விரண்டும் ஒரு கருத்தியலின் நீண்ட இருப்பிற்கு காரணம்.
 
பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாகிய கருத்தியல், இன்று வரை அதே வீச்சுடன் பேசபட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது என்றால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் அந்த கருத்தியலின் நோக்கம் நிறைவேற்றப்படாமையே ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டு மேன்னாட்டு மக்களிடையே மெதுவாக பரவிய முற்போக்கான சிந்தனையே பெண்ணியம். பெண்ணியம் என்ற வார்த்தைக்குள் பெண்களின் அகம் புறம் சார் அத்தனை கூறுகளும் உள்ளடக்கப்படும். வாழ்க்கைமுறை, கல்வி, திருமணம், ஆசைகள், நிராசைகள், பொறுப்புக்கள், சட்டங்கள் என்று எல்லா துறைசார் விடயங்களும் அடங்கும். வார்த்தை என்பதை தாண்டி பெண்ணியம் என்ற உணர்வுக்குள் உள்ள உள்ளடக்கம் வித்தியாசமானது. பெண்ணியம் என்ற உணர்வு சொல்லுகின்ற செய்திகள் ஆழமானவை.
 
படைப்பின் அடிப்படையிலேயே பெண்கள் மென்மையானவர்கள் என்ற விஞ்ஞான கோட்பாடுகள் உண்டு. மென்மையானவர்கள் என்ற காரணத்தினால் அடிப்படை உரிமைகளை பெறவும் விவாதிக்கவும் பொருத்தமில்லாதவர்கள் என்ற பொருள் அல்ல. எங்கோ ஒரு இடத்தில் உருவாகிய ஆண் மேலாதிக்க இயல்பு கேள்விகள் எதுவுமின்றி தொடர்ந்துகொண்டே வந்தது. எப்போதும் குற்றமுள்ளவர்கள் தான் ஆதிக்கம் உடையவர்கள் என்ற கோட்பாட்டின் படியே காலம் காலமாக இந்த மரபு முறையை பேணிக்கொண்டு வந்தார்கள். மறுப்புகளை பேணுவதில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் அந்த மரபிலிருந்து எழுகின்ற பிரச்சனைகளை தீர்த்து கொள்ளமுடியாமல் மீண்டும் மரபு என்ற பெயரிலே ஆதிக்கம் செலுத்துவது தான் பெண்ணியம் என்ற கருத்தியல் ஆரம்பிக்க கருவாக இருந்தது.
 
பெண்ணியம் என்கிற உரையாடல் வழக்கு மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. மிதவாதப்பெண்ணியம், தீவிரவாதப்பெண்ணியம் மற்றும் சம தர்ம பெண்ணியம் என்பவை அவை.
பதினெட்டாம் நூற்றாண்டிலே மேன்னாட்டு மக்களிடையே முதலாவது அலை பெண்ணியம், இரண்டாவது அலை பெண்ணியம் என்று அவ்வப்போது பெண்கள் தமக்குரிய சில அடிப்படை உரிமைகளுக்காக குரல்களை எழுப்ப தொடங்கினர். குறுகிய பிரதேசத்துக்கு ஒலித்த குரல் ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்படும். பின்னர் வேறொங்கோ ஒலிக்கும் அங்கேயும் இதே நிலைமையை காணலாம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வப்போது ஒலித்த குரல்களின் சேர்க்கை கொஞ்சம் தீவிரமாக பரவ தொடங்கியது.
 
ஒவ்வொரு பிராந்திய குரல்களும் ஒவ்வொரு பிரச்சனையை முன்வைத்து ஒலித்தன. பொதுப்படையாக கல்வி கற்கும் உரிமை, விரும்பியவரை மணக்கும் உரிமை, பணி புரியும் உரிமை, சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, வாக்குரிமை, தத்தெடுக்கும் உரிமை என்பன முக்கியமானவை. இதில் அதிக கவனமாக வாக்குரிமை தொடர்பான குரல்கள் மேல்லோங்கி ஒலித்தது. மேலை நாடுகளின் இருந்த மேட்டுக்குடி மற்றும் பாட்டாளி  சமூக பெண்களின் பிரச்சனைகள் வேறு வேறாக இருந்தன. மேட்டுக்குடி பெண்கள் எல்லோருமே மனையுறை மகளீராகவே இருந்தனர். அவர்களின் பொழுதுகள் எல்லாம் தமது ஆண்களுக்கு பணிவிடை செய்வதிலேயே கழிந்து போனது. அவர்கள் ஆண்களின் குறைகளை தேடித்தேடி அறிந்து நிவர்த்தி செய்யும் பொறுப்பிலேயே இருந்தார்கள். அவர்களிடம் படிப்பறிவு இருந்தது, ஆனால் அனுபவ அறிவு சுத்தமாக இருந்திருக்க வில்லை. மேட்டுக்குடியினரிடம் வினையே ஆடவர்க்கு மனையே மகளீர்க்கு என்ற பொதுத் தன்மை காணப்பட்டது. இதனால் மேட்டுக்குடி பெண்களின் பிரச்சனை அவர்களின் சுதந்திரமாகவே இருந்தது. அவர்கள் வெளிஉலகை காணவும் , உலக நடவடிக்கைகளோடு தாமும் பங்கு பற்றவும் முனைந்தார்கள். இவர்களின் குரல்கள் இப்படியாக இருக்க பாட்டாளி வர்க்க பெண்களின் குரல்கள் வேறுவிதமாக இருந்தன.
 
வயலில் தொழில் புரியும் உழத்திகள், கடையர் , தயிர் விற்கும் ஆச்சியர், பூவிலைப் பெண்டீர், உப்பு விற்கும் உமட்டியர், பண்ணியம் விற்கும் சிறு வணிகப்பெண்கள், தினைப்புனம் காக்கும் மகளீர் என்று பாட்டாளி வர்க்க பெண்களின் தேவை கல்வி அறிவாகவும், அடிப்படை சமூக அந்தஸ்தை பெற்றுகொள்வதாகவுமே அமைந்திருந்தது. அவர்கள் இருந்த சமூகம் அவர்களுக்கான உரிமைகளை கொடுக்க மறுத்தது. சாதி வர்க்க பிரிவனை அவர்களை வாட்டியது. ஆண் ஆதிக்க சமூகத்தின் இச்சைகளை நிவர்த்தி செய்கின்றதும் மற்றைய நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றதுமான நிலைமை காணப்பட்டது. மேட்டுக்குடியினரின் சுதந்திரம் புறமாகவும் பட்டளிமக்களின் சுதந்திரம் அகம் புறம் இரண்டுமாகவும் இருந்தது.
 
சூசன் பாஸன்ட், “பெண்ணியம் வர்க்கம் இனம் தொடர்பானது. இருவரது பின்னணியும் தேவைகளும் புரட்சிகளும் வேறுவேறானவை. அவர்களுக்கான சுதந்திரம் வேறு வேறாக வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.
 
1975 இல் உலக நாடுகளின் பேரவை அந்த ஆண்டை அகில உலக பெண்கள் ஆண்டாக பிரகனப்படுத்தியது. 1975- 1985 வரையான பத்து ஆண்டுகளும் அனைத்துலக மகளீர் பத்தாண்டுகளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகளும் அங்கீகாரமும் பின்னைய காலங்களில் பெண்ணியம் பெரும் கருத்தியலாக ஊன்றி நிற்க மிகப்பெரும் இட்டது.
 
இவ்வாண்டுகளுக்கு முதலே இலங்கையின் உட்கட்டமைப்பு பிரிவுகளில் பெண்களின் வருகை நடந்தேறியது. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்த பெண்கள் கல்வியின்மை காலத்தோடு குறைந்து, பெண்கள் ஒவ்வொரு துறைகளிலும் தங்கள் பங்களிப்பை செய்யதொடங்கினார்கள். 1881 இல் 3 சதவீதமாக இருந்த பெண்கள் கல்வியறிவு 1921 இல் 21 சதவீதமாக வளர்ச்சி கண்டது. இது இலங்கையில் பெண்ணிய கருத்துகளின் பரவலாக்கதிற்கு சான்றாகிறது. எப்போதுமே ஒரு சமூகத்தில் ஒரு இனமோ ஜாதியோ தமக்கனான இடத்தை காட்டிக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்றால் அவர்கள் தங்களை கல்வி மட்டத்தில் உயர்த்திக்கொள்ளவேண்டும். கற்ற சமூகம் அடிமைத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற கோட்பாடு பெண்ணிய கருத்தியல் செயற்பாட்டாளர்களிடம் வலிமையாக காணப்பட்டது.
 
இலங்கையில் 1890 களில் பறங்கிய இனப் பெண் ஒருவர் இலங்கை மருத்துவ கல்லூரிக்கு தெரிவானார். அவரைத்தொடர்ந்து அலிஸ் டி போயர், வினி பிரெட் என்ற இரு பறங்கிய பெண்கள் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு மருத்துவம் கற்க சென்றார்கள். (Brohier-1994) 1904 இல் முதல் சிங்களபெண் லூசி டி ஆப்று மருத்துவ கல்லூரிக்கு சென்றார். 1930 இல் சட்ட கல்லூரி பெண்களுக்கான கல்விக்கு அனுமதி அளித்தது. 1934இல் இரண்டு பெண்கள் சட்ட கல்லூரிக்கு பிரவேசித்தார்கள். இதைவிட வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் இங்கே ஏற்படுத்தப்படிருகின்றன.  1933 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் படித்த எசிலின் ஒபெசெகரா ( தரணிகல) 1930 இல் இந்திய பார்ஸி சமூகப்பெண் அவபாய் மேத்தா போன்றோர் சட்டதரனிகளாக வேலைசெய்திருக்கின்றனர்.
 
இவையெல்லாம் உலகம் பெண்ணிய கருத்தியலை தீவிரமாக்குவதற்க்கு முன்னரே இலங்கையில் உண்டான புரட்சிகள். இவை ஒரு புறமிருக்க, இன்னொரு சமூகத்தின் நிலை இன்றுவரை மோசமாகவே உள்ளது. இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒருவகையில் பெண் அடிமைத்தனம் தலை தூக்கியவாறே உள்ளது. இன்று கல்விகற்ற பெண் சமூகம் தமது ஆதிகத்தை செலுத்துகின்ற அதே நேரம் அடிப்படை கல்வி அறிவை பெறமுடியாத நிலையில் பின்தங்கிய கிராமத்து பெண்களின் நிலை இருக்கிறது. இன்றைய தமிழ் சமூகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற பாலியல் வன்முறைகள் இன்னும் பெண் பாகுபாடு ஒழிந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. இதை ஆணாதிக்கம் அல்லது பெண் நிலை இழிவு என்பதை தாண்டி பெண்ணிய கருத்தியல் சரியான முறையில் சென்றடையவில்லை எனலாம்.
 
எல்லா நிலை சமூகத்திலும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. கற்று அறிந்த சமூகத்தில் ஓரளவுக்கு குறைவு என்றாலும் மறைமுகமாக இன்னும் நடத்தப்பட்டுகொண்டே இருக்கின்றன. கிராமியபுறங்களில் இன்னும் அதே வழக்கத்தில் படிதாண்டா பெண்களை காணக்கூடிய நிலைமை இருக்கின்றது. அப்படியும் அதிலிருந்து கிளர்ந்து வருகின்ற பெண்கள் மேலிடங்களில் சுயலாபத்திற்காக கொடுமைப்படுத்தபடுகின்றதும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதையும் தினசரி அறிகிறோம். இவையல்லாவற்றையும் கடந்து மிளிர்கின்ற கோடியில் ஒரு பெண்ணால் பெண்ணியம் என்ற கருத்தியல் வலுப்பெறுகிறது. ஆனால் முடக்கபடுகின்ற மற்றைய பெண்களும் கொள்கை அடிப்படையில் வெற்றி பெறும் போதே முழுமையாக பெண்ணிய கருத்துகள் வெற்றி பெறும்.
 
இன்னும் பெண்ணிய கருத்தியல் பரவலாக இருக்கின்றமைக்கு காரணம் கருத்தியலின் சரியான அமுலாக்கமின்மையும் சரியான விழிப்புணர்வு இன்மையுமே ஆகும். இதிலிருந்து மீள பெண்ணிய கருத்துக்கள் சமூகத்தின் எல்லா மட்டத்திற்கும் எல்லா மக்களிற்கும் ஒரே அளவில் தெளிவாக்கப்படவேண்டும். பெண்களின் சமத்துவம் அவர்களின் உரிமைகள் எல்லோருக்கும் தெரிவிக்கப்படவேண்டும். மீறுகின்ற பட்சத்தில் சரியான தண்டனைகளை கொடுக்கப்படவேண்டும்.
 
இல்லையெனில் பெண்ணியம் பெயர் அளவில் காலா காலமாக எம்முள் இருந்துகொண்டே இருக்கின்ற வலிதற்ற கருத்தியலாகவே போய் விடும்.

அறையைப் பற்றி எழுதுதல்.

எல்லோரும்
அவர்களின் அறையைப் பற்றி
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்?

நான் காணாத
எவற்றையெல்லாம் அது வைத்திருக்கிறது?
ஒரு நாளில்
சராசரியாக பத்து மணித்தியாலங்கள்
அதற்குள் தூங்குகிறேன் ;
இரண்டு மணித்தியாலங்கள்
அதற்குள் தூங்குவது போன்று
புரள்கின்றேன்.
அத்தனை நேர சொப்பனத்திலும்
காணாத ஒன்றை,
மிகுதி நேர
விழிப்பிலும் காணாத ஒன்றை,
அப்படி என்னதான் இருக்கிறது அறைக்குள்?
வலிந்து நின்று தவிர்த்தாலும்
அறை மட்டும்
லாவகமாக புகுந்து கொள்கிறது
அனைத்திலும்.
பெரிய தேவாலயத்தின்
முகப்பு போல
அதன் வாசல்:
இல்லை – ஏழை விவசாயியின்
குறுகிய ஓடை போல
வாசல்;
இல்லை ,
அது எது போலவும் இல்லை.
அதற்குள் எத்தனை தடவை
நுழைந்திருப்பேன்,
லட்சம் முறை?
கோடி முறை?
ஆனால் ஒரு முறை கூட
சரியாக பார்க்கவில்லையே!
அலுப்பாகத்தான் இருக்கிறது
அறைக்குள் செல்ல
என்ன செய்ய,
என்
தொடக்கமும் முடிவும்
அது தானே!
எல்லோரும்
அவர்களின் அறையைப் பற்றி_யே
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்

வாசிப்பும் பகிர்வும்.

நமது வாசிப்பு அனுபவத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வாசிப்பு வேட்கை இருக்கும். நாம் நாளாந்தம் நெருக்கமான உணர்வுகளைச் சீண்டிவிடுகின்ற வாசிப்பியையும் கடந்துபோகின்றோம். வாசித்தவுடன் தொடர்பற்றுப்போகின்ற வாசிப்பையும் கடந்து தான் போகின்றோம். இதை எந்நிலை வாசிப்பு அனுபவம் கொண்டவராலும் தவிர்க்கமுடியாது. நாம் தேர்ந்தெடுத்து வாசிக்கின்றோம் என்றாலும் அதில் பல அணுக்கமாகவும் அதே அளவு பல அந்நியமாகவும் இருந்துவிடுகின்றன. அதே நேரம் தேர்ந்தெடுகின்றவற்றிற்கு அப்பால் பல நல்ல படைப்புகளை தவறவிடுகின்றோம். இது சூழ்நிலை விதியே ஒழிய வேறொன்றும் இல்லை.
 
வாசிக்கின்ற பலதில் இன்னொருவர் வாசிக்க பொருத்தமானதாக இருக்கும் என நாம் நினைக்கின்ற படைப்புகளை சிறந்த வாசகர்கள் வெளிவிடுவார்கள். சுயலாபம் என்பது இல்லாமல் பொதுமையான வாசிப்பு பெருக்கத்திற்கு இது அதிகம் பயன்படும். தேர்வுகளில் இல்லாத தவறவிடக்கூடிய நல்ல படைப்புகளை நுகரக்கூடியவாறு இருக்கும். இதை சிறந்த வாசகன் மட்டும் செய்வது என்றில்லாமல் எல்லா வாசகர்களும் செய்யவேண்டும். சிறந்த வாசகன் என்பது அவனை விட சிறந்த வாசகனை பார்க்கும் வரை மட்டும் தானே.
 
இன்று பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொடுக்க பாடசாலைகளோ சமய கூடங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ முன்நிற்பது இல்லை. அனுபவங்களை எடுத்துக்கொள்ளும் சூழலையும் ஏற்படுத்தித் தருவதில்லை. ஆயிரத்தில் ஒருவன் இரண்டு பேர் தப்பிப் பிழைக்கின்றனர். அது மட்டும் போதுமா? சமூகத்தின் ஆயிரங்களில் இருவர் தனிய நின்று என்ன செய்துவிடமுடியும்? அவர்களின் கதி தேர் கூட்டத்தில் தவறவிட்ட பலூனின் நிலை தான். இன்றைய சமய கூடங்களின் நிலை இன்னும் பரிதாபம். இங்கொன்றும் அங்கொன்றுமாய்த் தான் வளரும் பருவதினரைக் காணமுடிகிறது. அவர்களின் நோக்கம் சுயலாபமாகவே இருக்கிறது. கோவில் கருவறை தவிர்ந்த எல்லா இடங்களிலும் செல்பியும் கையுமாகத்தான் திரிகின்றனர். இங்கிருந்து பண்பாட்டை எடுத்துச் செல்லல் என்பது நடக்கமுடியாத காரியம்.
 
எதிலிருந்து எமது சமூகத்தைப் பண்படுத்துவது என்று அவர்களிடமே கேட்டாலே புத்தகங்களின் மூலம் என்கிறார்கள். புத்தகம் என்று உச்சரிப்பதோடு சமூகம் பண்பாட்டுப் போய்விடுமா? வாசிப்புத் தான் பண்பாட்டு இடப்பெயர்வின் அஸ்திவாரம். உள்ளூர தேடவும் வெளியே வாழவும் வாசிப்பு அவசியமாகிறது. அடுத்த நபருக்கு பழக்க பகிர்வு அவசியமாகிறது.
 
அடுத்தவர் ஏற்றுக்கொள்ளல் அல்லது மறுத்தல் , சரியானவற்றைப் பகிர்தல் என்ற வாதங்களை எல்லாம் தாண்டி பகிர்வு என்னும் செய்கை அவசியமாகிறது. ஒவ்வொருவரது வாசிப்பு வட்டமும் வெவ்வேறானவை. அவரகளின் தேடலுக்கு எட்டாதவை பல நம் வாசிப்பில் இருந்திருக்கும். பகிர்வதால் அவை பயன்பட்டுப்போகும். வாசிப்பனுபவம் உருவாக்கிகொடுக்கின்ற பண்பாடே இனி வருகின்ற சமூகத்தின் பண்பாடாக இருக்கும் என்பது எனது சொந்த கருத்தாகும்.

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன்.

ஒரு நீண்ட குற்றப்பத்திரிகை எழுதுவதாக
உத்தேசித்திருக்கிறேன்.
1.சம்பவம்.

நான்
இருட்டின் வெளிச்சத்தில்
உறங்கிக்கொண்டிருந்தேன்.
அது ஒரு முழுப் பௌர்ணமி நிலவு.
என் படுக்கை அறையின்
கதவு ஓரத்திலிருந்து
நிலத்தாலும்
சுவராலும்
எறும்புகள் என் கட்டிலுக்கு
படையெடுத்தன.
ஜன்னல் ஊட்டாலும்
பூக்கற்களின் ஓட்டைகளாலும்
கதவு திறப்பிடும் துளைகளாலும்
ஈக்களும் பூச்சிகளும்
முட்டி மோதிக்கொண்டு
மொய்த்தன.
கட்டிலின் மேலே
ஒரு மரக்குற்றி சரிந்து கிடப்பதைப்போல
நான் பிரண்டு கிடந்தேன்.
2.குற்றம்.
இறந்தது நான் தான்,
பிணமாய் கிடப்பது என் உடல் தான்,
எறும்புகளும் ஈக்களும்
மொய்ப்பது என் மேல் தான்,
இவை அனைத்தையும்
என்னைப் பார்க்க வைத்தது ஏன்?
எல்லாம் பிரிந்து இறந்த பின்னர்
இத்தனை அவலத்தையும்
காண செய்தது ஏன்?
3.காரணம்.
பொது நூலக வீதியின்
முடக்கு சந்திக்குள்
புதராய் வளர்ந்துபோயிருந்த
காட்டுச் செடிகளின் மேலே
அவளை கண்டேன்.
எத்தனை அவலம் அது.
ஒரு புழுவை கம்பியால் குற்றி
வேக வைத்தது போல
குறண்டு வெளுத்து போயிருந்தது
அவளின் உடல்.
நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
4.பின்புலம்.
பத்து நாட்களுக்கு முன்னர்…..
ஆலயத்தை சுற்றி வளைத்தனர்,
பூசாரி உட்பட நான் அவள் என அனைவரையும்
சம்பவ விசாரிப்பிற்க்காய் அழைத்துச் சென்றனர்.
பூசாரியையும் என்னையும் உடனே
அனுப்பி விட்டனர்.
பின்னர் ஒவ்வொருவராய் அனுப்பினார்கள்.
அவளைத் தவிர
5.குற்றப்பத்திரிகை வாசிப்பு
இன்ன திகதி இன்ன இடத்தில்
இன்ன பெயரைக்கொண்டவர்
தன் காதல் தோல்வியால்
தற்கொலை செய்து கொண்டார்.
6.முடிப்பு.
அவள் யாரோ
நான் யாரோ
குற்றப்பத்திரிகை வேறு என்னவோ

உலக இலக்கிய தொடர் – பாகம் 2 தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் – முற்குறிப்பு.

முன்னைய கட்டுரையில் டால்ஸ்டாயின் அன்னே கரீனினா பற்றிய அறிமுகத்தை எழுதியிருந்தேன். டால்ஸ்டாய் மனிதத்தின் வெளிச்சத்தின் பகுதிகளை புனைகிறார் என்றால் தஸ்தாயெவ்ஸ்கி மனிதத்தின் இருண்மையை புனைகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துலகம் வித்தியாசமானது. அதுவரை – இன்னமும் யாராலும் கொண்டுசென்று காட்டமுடியாத ஒரு உலகு. ஒரு ஆழ்ந்த இருண்மையான அதல பாதாளத்தில் கைகளில் விளக்குடன் எம்மை கூட்டிச் செல்கிறார். அவருக்கு மட்டுமே தெரிந்த பாதை அது. அவருக்கு அந்த பாதைகள் அத்துப்படி. அத்தனை இருட்டையும் மெது மெதுவாக விலக்கிக்கொண்டு – ஒரு வழிகாட்டி தான் அடைந்த புதையல்களை மற்றவர்களுக்கு காட்டுவது போல – பாதாளத்தின் ஒவ்வொரு மூலைகளையும் சொல்லிக்கொண்டு போகின்றார். நாம் பாதாளத்தின் முடிவு இதுதான் என்று வியந்து பார்க்கின்ற தருணம் அதனிலிருந்து இன்னொரு ஆழமான பாதாளத்திற்கு கூட்டிக்செல்கின்றார்.

“ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (wordpress.com)

தஸ்தாயெவ்ஸ்கி – வரலாறு

ரஷ்ய – பிரான்சிய மோகம்.

1850 களில் ரஷ்சியா மாய வலையில் சிக்கியிருந்தது. அது பண்பாட்டு மாயவலை. எப்படி இன்றைய இலங்கையும் தமிழர்களும் ஐரோப்பிய கலாசாரதின் மீதும் ஆங்கில மொழி மீதும் மோகம் கொண்டிருக்கிறார்களோ, அப்படியான ஒரு மாய மோகம். பிரான்சின் கலாசாரம் மீதும் பிரான்சிய மொழி மீதும் ரஷ்சியர்கள் அளவு கடந்த மோகத்தை கொண்டிருந்தனர். மேல்வர்க்க குடியினர் முழுக்க முழுக்க பிரான்சிய கலாசாரத்தில் மூழ்கிப்போயினர். அவர்களின் வீடுகளிலும் ஒன்றுகூடல்களிலும் பிரான்சிய காலாசாரம் மேலோங்கி காணப்பட்டது. அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாடுவதை அவர்களினது வளர்ச்சியின் வெளிப்பாடாக கருதினார்கள்.
இலக்கியங்களிலும் இந்த தாக்கம் வெகுவாக இருந்தது. அன்றைய கால இலக்கிய சிருஷ்டிகளின் முழு போக்கும் பிரான்சிய பின்னணியை மையப்படுத்தியது. அவர்களுக்கு வர்த்தக ரீதியில் வருமானத்தை தரக்கூடியதாகவும் இருந்தது. இவான் துர்கனேவ் ரஷிய இலக்கியத்தில் மிளிர்ந்துகொண்டிருந்தார். அவரின் எல்லாப் படைப்புகளும் பிரான்சிய சாயலுடனேயே வெளிவந்தது. அவரின் மேன்னாட்டு கருத்தியலை மறு பேச்சின்றி ஆமோதிக்க கற்றறிந்த சமூகமும் தயாராக இருந்தது. ஒரு பிரபல  இலக்கிய முன்னோடியின் வழி எதுவோ , அதை லாவகாம பற்றிக்கொண்டு செல்லுகின்ற இன்றைய சமூகத்தைப் போலவே – ரஷ்ய எழுத்தாளர்களும் துர்கனேவை உதாரணமாக கொண்டு பிரான்சிய பின்னணியில் எழுத தொடங்கினார்கள். அக்காலத்தில் வெளியாகிய ராச்சிய இலக்கியங்கள் எல்லாம் பிரான்சிய  போலிகளாகவே இருந்தன.

சிந்தனை ஓட்டத்தில் வார்த்தைகள் அவரைக் கைவிடும் பொழுது தனது எண்ணங்களை கையெழுத்துக் கிறுக்கல்களாக பதிவு செய்துகொள்வார் (tumblr.com)

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்ப பின்னணி

தஸ்தாயெவ்ஸ்கியின் குடும்பம் கடவுளால் சபிக்கப்பட்ட குடும்பம் என்கிறார், சுந்தர ராமசாமி. உண்மையும் அதுதான். பிரான்சிய பண்பாட்டு இலக்கியங்கள் குவிந்து கொண்டு இருக்கையில், அதன் மீளமுடியாத மோகத்தில் சிக்குண்டு இருக்கையில் – எது தஸ்தாயெவ்ஸ்கியை பிரித்துகாட்டுகின்றது என்று பார்த்தால் அவரின் வாழ்க்கை இன்னல்களே.
தஸ்தாயெவ்ஸ்கி என்ற ஆளுமையின் நிறைவில் இருக்கின்ற மகா ஷக்தி – வாழ்க்கை அவனுக்கு கொடுத்த வடுக்கள்.
1821 இல் மாஸ்கோவில் தஸ்தாயெவ்ஸ்கி பிறந்தான். அவனது தந்தை வைத்தியர். ஆரம்பத்தில் வசதியாக இருந்தவர்கள் தந்தையின் மூர்க்க குணத்தால் காலம் செல்ல வறுமைப்படுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் ஆரம்ப வாழ்க்கை அனுபவம் அவன் குடியிருந்த வைத்திய குடியிருப்பிலேயே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இறப்பு, நோய், அலைச்சல் என்பவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்து வருகின்றான். தனது பதினான்காவது  வயதிலேயே தாயையும், தொடர்ந்து இரண்டாம் வருடம் தந்தையையும் இழந்து அண்ணனுடன் வாழ்கின்றான்.
தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், அதை அவரின் கொடூரம் தாங்க முடியாத வேலையாட்களே செய்ததாகவும் குறிப்பிருக்கிறது. அண்ணன் மைகேல் மீது மிகுந்த பாசம் உடையவானாக இருக்கிறான் தஸ்தாயெவ்ஸ்கி. இருவரும் இராணுவ பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கற்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி கற்கை நெறிகளில் சிறந்து விளங்குகின்றார். இருந்தும் இறுதி பரீட்சையில் சூழ்ச்சிகளால் பின்தள்ளப்படுகின்றார். அண்ணன் தேர்வாகி இருந்தாலும் உடல்நிலை குறைவால் தொடர்து இயங்க முடியாமல் போகிறது. இதுவெல்லாம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வருத்தத்தை அளிக்கின்றது.

தஸ்தாயெவ்ஸ்கியும் இலக்கியமும்.

இராணுவ பொறியியல் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே தஸ்தாயெவ்ஸ்கிக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ரஷ்ய இலக்கியங்கள், ஜெர்மானிய இலக்கியங்கள், கொலை வழக்குகள், சிற்றிதழ்கள் என்று தஸ்தாயெவ்ஸ்கி ஒரு தீராத வாசகானவே இருந்தான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது.(listal.com)

தனது இருபத்தைந்தாம் வயதில் முதலாவது நாவலான “ஏழை எளியவர்” (Poor People) ஐ எழுதுகின்றார். தஸ்தாயெவ்ஸ்கியின் சமூகப்பார்வையை முழுக்க முழுக்க உள்ளடக்கமாக கொண்டு இலட்சிய தஸ்தாயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பாக இது இருந்தது. தனது சமூக நிலை பற்றி வருந்திய தஸ்தாயெவ்ஸ்கி முதலாவது நாவலை பதிப்பிட பின்நிற்கிறார். பின்வந்த காலப்பகுதியில் ரஷ்யாவின் மதிப்பு மிகுந்த சிற்றிதழ் ஒன்றுக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நண்பன் “ஏழை எளியவர்கள்” நாவலை கொடுக்க, அதற்கு மிக சிறந்த விமர்சனமும் பெறப்படுகிறது.
தஸ்தாயெவ்ஸ்கி அன்று பரவியிருந்த இயக்கங்களிலும் தனது பங்களிப்புகளை வழங்கியிருந்தார். அந்த சமயம் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் அவருக்கு விதிக்கபடுகிறது. நிறைவேற்றப்படும் கடைசி நிமிடத்தில் தண்டனை ரத்து செய்யப்பட மீண்டும்  தஸ்தாயெவ்ஸ்கி சிறைவாசம் செல்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி தனது  வாழ்கையில் இறப்பிற்க்கான கடைசி நொடி மட்டும் சென்று, இறப்பின் வலி , அதற்கு முன்னரான மனதின் போராட்டம், எண்ண அலைச்சல்கள், வாழ்க்கை மீதான துச்சம் என்று மனிதனின் கடைசி நொடியில் உணரும் அனைத்து மனச் சிக்கல்களையும் அனுபவித்து விடுகின்றார். அதன் பின்னரான கைதி வாழ்கையும் அவருக்கு இலகுவானதாக அமைந்து விடவில்லை. (கைதி வாழ்க்கை எப்போதும் இலகுவானது அல்லவே!) தனது வாழ்வின் இருண்ட நாட்களை விதம் விதமான சிறைக்கைதிகளுடன் கழிக்கின்றார். ஒரு வகையில் அனைத்தையும் உணர்ந்த தேவ நிலையிலிருந்த தஸ்தாயெவ்ஸ்கி – சக கைதிகளின் மன ஆறுதலுக்கும் தன்னாலான உதவிகளையும் ஆற்றுகின்றார்.
1854 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றார். ஏழை எளியவர் மூலம் அறிமுகமாயிருந்த தஸ்தாயெவ்ஸ்கியை ரஷ்ய சமூகம் மறந்துபோயிருந்தது.  வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. இறுதியில் அண்ணனுடன் சேர்ந்து காலம் என்ற இதழை தொடங்குகிறார். மிக குறுகிய காலத்தில் காலம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகிறது.

வழமையான எழுத்துகளை போலல்லாமல் – மேற்றட்டு எழுத்துக்கள் – மனதின் ஒவ்வொரு பாகத்திலும் விரிந்து இருந்த வாழ்வின் இருண்ட கணங்களை கையிருப்பில் வைத்திருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. (radissonblu.com)

இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய நாளில் சாதாரணமாக எந்த சிற்றிதழ்களும் கணக்கிலேயே எடுக்கப்படுவதில்லை. அத்தோடு எதையும் அரசாங்கம் நிறுத்தியதாய் அறியவும் இல்லை. இது அரசாங்கத்தின் அறிவீனமா? அல்லது சிற்றிதழ்களின் மந்த நிலையா? மீண்டும் ‘யுகம்’ என்ற இதழை தஸ்தாயெவ்ஸ்கி தொடங்குகிறார். இதழ் சோர்வாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கையிருப்பு காலியாகி கடனும் ஏறிக்கொண்டிருந்த பொழுது தஸ்தாயெவ்ஸ்கியை விட்டு அவரின் அண்ணன் இறந்து போகிறான். கூடவே தஸ்தாயெவ்ஸ்கிக்கு சூதாட்டமும் பழகி வெறியாகிப்போகிறது. தஸ்தாயெவ்ஸ்கி அனைத்தையும் இழந்து வீதிக்கு வருகிறார். மீண்டும் மீண்டும் துன்பம் சூழ்ந்து கொள்கிறது. அப்போது எழுதிய நாவல் தான் ‘குற்றமும் தண்டனையும்’.
எப்போதும் இருக்கிற ரஷ்ய எழுத்தாளர்களைப்போல இவரும் அங்கொன்று இங்கொன்றாய் திருமணம் செய்கிறார். குற்றமும் தண்டனையும் எழுதுவதற்கு ஒரு காரிய தரிசியை ஒழுங்கு செய்கிறார் – அவள் பெயர் அன்னா. இறுதியில் தஸ்தாயெவ்ஸ்கி வாழ்கையில் நடந்த பெரும் திருப்பங்களுக்கும் அவரின் எழுத்துகளின் ஒன்றினைப்புக்கும் அன்னா ஒரு மனைவியாக உதவுகிறாள். இக்காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கி “ஒரு பெரும் பாவியின் வாழ்க்கை” என்ற ஐந்து பாக தொடர் நாவலை எழுத திட்டமிட்டபோதும் அப்பெயரில் அதே ஒழுங்கில் வரவில்லை. அங்கொன்று இங்கொன்றாய் சில பகுதிகள் வெளி வந்தன. அவற்றுள் ஒன்று தான் கரமசோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). கரமசோவ் சகோதரர்கள் மூலம் புகழின் உச்சத்தையே அடைகிறார்.
தொடரும்…

தற்கொலையும் டீச்சரம்மாவும். – அசோகமித்திரனின் தண்ணீர்.

 
தண்ணீர் நாவலின் பதினெட்டாவது அத்தியாயம் நாவலிற்கும் சரி வாசகனிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். தற்கொலைக்கு முயற்சி செய்த யமுனாவை அந்தத் தெரு ஆசிரியை ஒருத்தி ஆற்றுப்படுத்துவதாய் அந்த அத்தியாயம் நகரும். யமுனா வாழ்கையின் சிக்கற் தன்மையை எதிர்கொள்ளமுடியாது உழன்று போய் தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவளின் வீட்டு முதலாளி அம்மா அதைத் தடுத்து விடுவார். யமுனாவுடன் ஓரளவுக்குப் பழக்கம் உடைய ஆசிரியைக்கு இது ஏதோ வகையில் தெரிந்து போக, ஆசிரியர்- இனி கதையின் படி டீச்சரம்மா, யமுனாவை தேற்றிகொள்ள முயற்சி செய்வதாக அந்த உரையாடல் அமையும்.
 
ஒரு தனிமனிதனின் வாழ்க்கை என்பது தனிமைப்பட்டது அல்லது அந்தரங்கமானது என்ற கூற்று உண்மையில் கருத்துப்பிழை உடையது. எந்தளவு ஒருத்தரின் வாழ்க்கை அந்தரங்கமாகிக் கொள்கிறதோ அந்தளவு வாழ்கையின் விஸ்தரிப்பு குறுகிக் கொள்கிறது. அதே போல தனிமைப்பட்ட வாழ்க்கை என்று ஏதுமில்லை. ஒரு சூழ்நிலை ஒருத்தரின் வாழ்கையின் போக்கை அப்படியே திருப்பிப் போடக்கூடியது. இதில் தன்னிலை நியாயம் என்பதை விட சூழ்நிலை நியாயத்தை புரிந்துகொண்டு அதன்படி சிந்தித்து செயலாற்றுதல் தான் சரியான வாழ்க்கைமுறை. பிரச்சனை என்பதை சவால் என்று எடுத்துகொள்ளல் ஒருபுறம் இருக்க, அதைத் தாண்டி செயலாற்றல் என்பது முக்கியமானது. விரைவாக எதிர்க்கொண்டு அதைத்தாண்டிச் செல்லல் என்பது சாதாரணமானதே. வாழ்கையின் ஒரு புள்ளியில் ஏற்படுகின்ற விபத்து, வாழ்நாள் முழுவதுமே ஆக்கிரமிக்கப் போகிறது என்று தெரிந்த பின்னும், மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்தும் மீளாமை, அதை கொண்டு நடத்தி வெற்றி பெறல் என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இப்படியான சூழ்நிலை சிக்கலால் வாழ்நாள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டவர் தான் டீச்சரம்மா.
பதினைந்து வயதிலேயே திருமணம் செய்தவர். கணவர், –  என்பதைவிட நோயாளி என்பதே சரியான பதம்; முழுமையாக காச நோயால் பீடிக்கப்பட்டவர். எழுந்து திரிந்து வாழ்கையை நடத்தத் திராணி அற்றவர். பார்வைக்கோலத்தில் மிக பயங்கரமானவர். அருவருப்புகுரியவர். இத்தனையையும் சகித்துக்கொண்டு திருப்பதியே இல்லாத வாழ்க்கைக்குள் நுழைகிறார் டீச்சரம்மா. அவரின் கணவரோடு பழகிப்போன கணவரின் குடும்பம் எதுவும் செய்வது போலத் தெரியவில்லை. பதினைந்து வயது சிறுமிக்கு இந்த சூழ்நிலை மிகக் கொடுமையானதே. இருந்தும் சூழ்நிலையை ஏற்றுக்கொள்கிறார். நிலைத்து நிதானித்து முடிவு செய்கிறார். குடும்பம் என்பதைத் தாண்டி சமூகத்திலும் வேலைத்தளத்திலும் பிரச்சனைகள் வருகின்றன, உருவாக்கப்படுகின்றன. அத்தனையையும் சமாளித்து தாண்டுகின்றார். வாழ்க்கை என்பது பிரச்சனைகளின் நீண்ட கோர்வை தான் என்ற மனப்பக்குவம் வருகின்றது. இத்தனைக்குப் பின்னும் டீச்சரம்மா ஒருமுறை கூட தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. தன்னுடைய அனுவத்தின் மூலம் யமுனாவின் வாழ்கையை தொகுத்துக்கொள்கிறார்.
 
இந்த உரையாடலை மேற்சொன்ன சம்பவ கோர்ப்பின் அடிப்படையில் அசோகமித்ரன் புனைந்திருப்பார்.
 
அமியின் உட்பொருள் பற்றி பேசியாகவேண்டும். ஒரு மனிதனின் இருப்பு சார்ந்து உரையாடல் நிகழ்கிறது என்பது தெளிவு. வாழ்கையின் வளைவு நெளிவுகளுக்கு திரும்பி திரும்பி இன்னும் ஒரு முறை வளைய முடியாது என்கிற நிலையில் இருக்கின்ற யமுனாவின் பாதையில் இன்னும் வளைவுகள் வருகின்ற சாத்தியத்தையும் , அதை எதிர்க்கொள்ளுகின்ற துணிவையும் இந்த உரையாடல் அவளுக்கு அளிக்கிறது. ஒவ்வொரு தனி மனித இருப்பும் ஏதோ ஒரு வகையில் அவசியமாகின்றது. உலகின் நீண்ட இயக்கத்தின் சாரமே இருப்பின் அடிப்படியில் தான் அமைகின்றது. இந்த இருப்பை தகர்கின்றபோது ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகின்றது. இயற்கையின் சூட்சுமத்தில் சாதாரணமான மரணங்களால் ஏற்படுகின்ற வெற்றிடம் நிரப்பிகொள்ளபடுகிறது. ஆனால் இயற்கையை மீறிய மரணங்களுக்கு? தற்கொலைகளுக்கு?
 
தற்கொலைகள் இயற்கை இயக்கத்தை குலைக்கும் நடவடிக்கைகள்.
 
யமுனா இன்னொரு தற்கொலைக்கு முயற்சி செய்யக் கூடாது என்பதும்  வாசகர்களில் இருக்கின்ற, இனி ஏதோ ஒரு எளிய நிகழ்ச்சியால் யமுனா அகப்போகின்ற, யமுனாவை அருகிலும் சுற்றத்திலும் வேறு எங்கோ ஒரு மூலையிலும் காணப்போகின்ற டீச்சரம்மாக்களும் சார்ந்தோருக்கு நிகழ்த்தவேண்டிய பாடம் இதுவாகும்.
 
அசோகமித்திரன் என்னும் எழுத்தாளன் இவற்றைக்கூறும் போது மகத்தான எழுத்தாளனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான்.

கலகக் குரலின் ஆன்மீகம். – குற்றம் கடிதல்.

கலகக் குரலின் ஆன்மிகம் என்ற தலைப்பில் கத்தார் பற்றிய குறிப்புக்களோடு இரா. திருநாவுக்கரசு காலச்சுவடு மே 2017 இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார். அதில் கோவிலுக்கு செல்வதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுவதும் மத சார்பின்மை என்றவாறு கட்டுரையை நகர்த்தியிருப்பார். இது எவ்வளவு சதவீதம் உண்மை?
 
கடவுள் என்ற சக்தியின் திணிப்பு பிறந்தது முதலே எமக்குள் ஊட்டபடுகிறது. இன்று நாத்திகன் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள் ஏதோ ஒரு காலத்தில் ஆத்திகராக இருந்து மாறியிருகிறார்கள். இது ஒரு நீண்ட புரிதலால் ஏற்பட்டிருக்கலாம். அல்லது குறுகிய வெறுப்பினால் ஏற்பட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் தன் சுய விருப்பு வெறுப்பின் பெயரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அனுபவங்களின் முதிர்ச்சியே ஒருத்தனை ஆத்திகன் நாத்திகன் என்று வேறு பிரிக்கக் கூடிய ஒரே பொருள். எல்லோருக்கும் மேலும் ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி ஏதோ ஒருவகையில் உலக இயக்கத்தில் பங்காற்றுகிறது என்பதையும் நம்புகிறோம். பிறப்பின் போதும் இறப்பின் போதும் உயிரின் உண்மையினை புரிந்துகொள்கிறோம். இவை எல்லாவற்றையும் ஒரு சக்தி இயக்குகிறது. அது இயற்கையோ கடவுளோ. ஒன்று உள்ளது.
 
ஒரு வேலைத்தளத்தில் மேலதிகாரிக்கு ஏதோ ஒரு வகையில் நாம் வணக்கம் செலுத்துகிறோம். அவரின் நிலை அதிகாரத்திற்கு மதிபளிக்கிறோம். அதே சமயம், அவற்றை கருத்தில் கொள்ளாது நடக்கின்ற ஊழியர்களும் இருப்பார்கள். ஆனால் இருவருமே ஒரே அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்த் தான் இயங்குவார்கள். இதில் முதலாமவர் ஆத்திகர் மற்றவர் நாத்திகர்.
ஆதிகால மனிதன் கல்லையும் மரத்தையும் இடியையும் மின்னலையும் இயற்கையையும் வணங்கினார்கள். கற்கள் காலம் செல்லச் செல்ல உருவங்களாக மாறத்தொடங்கின. தமக்கு ஏற்றவாறு கற்களை செதுக்கினார்கள். உருவம் கொடுத்தார்கள். வர்ணம் தீட்டினார்கள். அவர்களை மீறிய சக்தியை கொண்டாடினார்கள். அதுவே மதமானது. மனிதனின் சிந்தனை வளச்சியில் சிந்தனைகள் வேறுபட மார்க்கங்கள் பிரியத்தொடங்கின. பொதுமை மதம் பிரிவுக்குள்ளானது. மதங்கள் உருவாகின. மனிதனின் சிந்தனை இன்னமும் வேறுபட மதங்களை நிராகரித்தான். பின்னர் மதங்களின் உருக்களான தெய்வங்களை நிராகரித்தான். நாத்திகன் ஆனான். அவ்வளவே. இருப்பு இல்லை என்பது அவரவர் சிந்தனை வழியே.
 
இதில் ஆத்திக அடையாளபடுத்தல் என்றொரு விடயம் இருக்கின்றது. ஆத்திகனாக தன்னை பிரகடனபடுத்தியவன் அவனுக்குரிய மார்க்க அடையாத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. அதை அவன் கட்டயப்படுத்துகிறான். இந்த நிகழ்வின் பின்னணி ஒரு மத பரப்பு கொள்கையாகவும் இருக்கலாம். கூட்டம் சேர்க்கும் நோக்கமாகவும் இருக்கலாம். என்னவாக இருந்தாலும் அவனுக்கு அடையாளபடுத்தல் அவசியமாகிறது.
 
கத்தாரின் கோவில் பிரவேசமும் அப்படியே.
 
 
கட்டுரையை வாசிக்க
இங்கே சொடுகவும்.

பித்தன் 01 – அறிமுகமும் அம்பலமும். – அப்துல் ரகுமான்.

மீண்டும் ஒரு முறை பித்தன் கவிதை தொகுப்பை வாசித்துப் பார்த்தேன். 26.11.2016 அன்று நடந்த தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவப் பகிர்வும் நிகழ்வில் பித்தன் கவிதை தொகுதிக்கு அறிமுக அனுபவ பகிர்வு ஒன்றைச் செய்திருந்தேன். ஆனால் பதிவு செய்து இருக்கவில்லை. அதன் குறிப்புக்களும் என்னிடம் இப்போது இல்லை. பித்தன் தொடர்பாக விரிவாக எழுதவேண்டும் என்று ஆசையிருந்தது. தொகுப்பை நான் அணுகிய முறை, அதிலிருந்து விரிந்த கவி உலகம், அது வெளிப்படுத்தும் மானிட அடிப்படைவாத கேள்விகள், அதற்கு முன்வைக்கும் பதில்கள் என இன்னபிற நிறைய விடயங்களை பதிவுசெய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.

அறிமுகம்.

எப்போதுமே ஒரு கவிஞன் அவன் வாழ்ந்த காலத்தின் குறியீடாகவே கருதப்படுகிறான். அவனது எழுத்துக்கள் வழியே வெளிவருகின்ற உணர்வுகள் ஒவ்வொன்றும், அந்த சமுதாயத்தின் உணர்ச்சிகளே. கவிஞன் ஒரு கருவி. ஒரு கவிஞனின் எழுத்தில் பிரதிபலிக்க கூடிய பல்வகைமை, அவனுள் பதிந்த மானிடர்களின் அனுபவங்கள். பித்தன் தொகுப்பும் அப்படித்தான். ஒட்டுமொத்த சமூகத்தின் கேள்விகள், அவர்களின் அறியாமை, அவர்கள் கண்மூடித்தனமாக செய்கின்ற பழக்கவழக்கங்கள் என்பவை குறித்துத் தான் அப்துல் ரகுமான் எழுதுகின்றார்.

பித்தனின் அறிமுக கவிதையில் ரகுமான், இந்த தொகுப்பு முழுவதிலும் உலகத்தை தான் நின்று பார்த்த கோணத்தை விபரிக்கிறார். உலகின் ஒவ்வொரு தூண்டலிலும் இரண்டு துலங்கல்கள் இருக்கும். ஒன்று நேரானது மற்றையது மறையானது. எல்லோரது கண்களுக்கும் இரண்டுமே தெரியும். இரண்டையும் உணர்ந்து கொள்வார்கள். அப்துல் ரகுமான் அப்படி இல்லை. அவர் நேர் என்று நாம் குறிக்கும் துலங்கலில் உள்ள மறையை கண்டுகொள்கிறார்.  எல்லோராலும் வெறுக்கத்தக்க மறையான துலங்கல்களை ஆதரிக்கிறார். அதன் அழகை போற்றுகிறார். நேரானதில் காணாத இன்பம் மறையில் இருப்பதை விளக்குகிறார்.

பித்தன்
எதிர்களின் உபாசகன்

 

அதனால்
இருளிலிருந்து ஒளிக்கு என்ற
முழக்கத்திற்கு எதிராக
ஒளியிலிருந்து இருளுக்கு
என்று முழங்குபவன்.

 

அவன்
இல்லையின் தூதுவன்.

 

உண்மைக்குப்
பலமுகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன்

 

முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.

அப்துல் ரகுமானின் இல்லையிலும் இருக்கிறான் தொகுப்பு கடவுளின் இருப்பு தொடர்பானதாக இருக்கும். அதில் ஒரு வலிதான வாதம் ஒன்றை முன்வைப்பார். இன்று மேசையில் ஒரு மெழுகுவர்த்தி இருந்தது. நாளை இல்லை என்றால் இருந்திருக்கிறது என்று தானே பொருள். அது போலத் தான் கடவுள் இல்லை என்றால் இங்கு இப்போது இல்லை என்று அர்த்தபடுத்திகொள்ளலாமே தவிர இல்லை என்று முடிவு கொள்ள முடியாது என்கிறார். இந்த நூலில் அவர் இல்லையின் தூதுவானாக வந்திருக்கிறார். எப்போதோ இருந்து இன்று இல்லாமல் போன ஒன்றை பேச வந்திருப்பது போல, நாமெல்லாம் மறந்து போன ஒன்றை ஆராய வந்திருப்பது போல, எமது அறியாமையை விலக்க முயற்சி செய்வது போல இல்லையின் மகத்துவத்தை எழுதுகிறார்.

உண்மைக்கு பல முகங்கள் உண்டு என்கிறார் அப்துல் ரகுமான், எங்களுக்கு பொய்களை திரித்தும் திருத்தியும் பேசித்தான் பழக்கம். பொய்களுக்கு வித்தியாசமான முகங்களை உருவாக்கிக் கொள்கிறோம்- எமக்கு சாதகமாக. ஆனால் உண்மைக்கே பல முகங்கள் உண்டு என்கிறார். அது அத்தனையையும் அறிந்தவன் பித்தன் என்கிறார். ஒரு உலகியல் உண்மையை அசைக்கிறார்.

அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகிவிட்டேன். – கலைஞர் மு. கருணாநிதி .

முன்னுரையில் இவ்வாறு கூறுகின்றார், –

பாசிடிவ், நெகடிவ் என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அது தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக சேர்ந்தால்தான் ஒளியே கிடைக்கும். முதலில் நெகடிவ் தயாராகிறது. புகைப்படத்திலே கூட முதலில் தயாராவது நெகடிவ்; பிறகு அது பாசிடிவ் ஆக படமாக உருவாகிறது. அதை மனதில் வைத்துகொண்டு படித்தால் எல்லாம் பாசிடிவ்விலேயே – அந்த அணுகுமுறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகியிருகின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.

என்கிறார்.

அம்பலம்

கவிதைக்கு செல்லமுன்னர் surrealism பற்றி தெரிந்து கொள்வோம்.

Surrealism

1920களை உலகம் தாண்டிக்கொண்டிருக்கும் போது நாளேடுகளிலும் சஞ்சிகைகளிலும் சில மரபுகள் உருவாக்கப்பட்டன. வழமையான பண்பாட்டு சித்திரங்களை மாற்றி புதிய அணுகுமுறை தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. வாசகர்களின் ரசனை மாற்றப்பட்டது. அதுவரை வாசர்களுக்கு கருத்துக்கள் கொடுக்கப்பட்ட முறைமை மாற்றப்பட்டது. நேரடியாக கருத்துக்களை வாங்கப்பழகியவர்கள், ஒரே வாசிப்பில் கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு அவர்கள் கொண்டுவந்த புதுமுறை எழுத்துருவாக்கமும் ஓவிய முறைமையும் அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. வாசகர்கள் தங்களை வருத்தாமல் வாசித்தும் அறிந்துகொண்டிருந்த காலத்துக்கு விடைகொடுக்க தொடங்கினர். வருத்தி வாசித்தறிதல் என்ற கோட்பாட்டுக்குள் உள்நுழைந்தார்கள். ஆரம்ப கட்டமாக வாசிப்பும் ஓவியங்களும் படிப்பறிவுள்ளவர்களுக்கு விளங்கிக்கொள்ள ஓரளவு இலகுவாயும் மற்றையவர்களுக்கு புரிதல் கஷ்டமாகவும் தென்பட்டது. காலம் நகர கீழ் மட்டத்தினரும் வாசிக்கவும் அறியவும் தொடங்கினர். இந்த வாசிப்பனுபவத்தைத் தான் surrealism என்போம்.

இந்த நுட்பம் கவிதைகளின் ஆரம்பத்திலிருந்தே அவதானிக்க கூடியவாறு உள்ளது. அம்பலம் பித்தனை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருக்கிறது. வாசகன் இனி நான், நான் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறேன். ஆடைகள் கிழிந்த முகங்களில் சுருக்கம் விழுந்த கிழவன் ஒருத்தனை மக்கள் கூட்டம் திருடனை அடிப்பதைப்போல கற்களால் தாக்கிகொண்டு இருக்கிறார்கள். அவன் சிரித்துக்கொண்டு இருக்கிறான். அவனின் உடலின் அனைத்து பாகங்களிலும் காயம் உருவாகி விட்டது. முதன் முதலாக அவனை அன்று தான் பார்கிறேன்.

அவன் சிரித்துகொண்டிருந்தான்
அவன் காயங்களும்
சிரித்துகொண்டிருந்தன.

அருகில் போன நான் அவனிடம் இப்படி அடிவாங்கியும் சிரித்துகொண்டு இருக்கிறாயே நீ என்ன பித்தானா என்று கேட்கிறான். அவன் லாவகமாக நீ கல்லா என்றான். அவனை நோக்கி கற்கள் மட்டுமே வந்திருக்கின்றன. அவனை நோக்கி வெறுப்புகள் தான் வந்திருக்கின்றன. என்னையும் அவற்றில் ஒன்றாக, இதுவரை வந்த வெறுப்புகளில் ஒன்றாக, இனி வரப்போகும் வெறுப்புகளின் ஆரம்பமாக பார்கிறான். அவனின் பார்வை என்னுள் மிக ஆழமான தாகத்தை ஏற்படுத்தியது. அவனிடம் தொடுத்த கேள்விகளுக்கான பதில்களின் சாரம் இப்படித்தான் இருந்தது.

அவன் உண்மையின் இன்னொரு பக்கத்தை பார்த்ததால் பித்தனாகி இருக்கிறான். உலக மக்களின் அந்தரங்கங்களை – அப்படி அவர்கள் நினைத்துகொள்ளும் ஒன்றை – உடைத்து உண்மையை வெளிபடுத்த எத்தனிக்கிறான், அதனால் தான் கல்லடி படுகிறான். தங்களின் சுயத்தை மறைத்து பொய் முகமூடிக்குள் வாழுகின்ற மனிதர்களை அம்பலப்படுத்துகிறான். அதனால் வெறுக்கப்படுகிறான். அதனால் தான் அவனை எல்லோரும் பித்தன் என்கிறார்கள்.
பித்தன் முடிக்கிறான்,

நான் உடைந்தேன்.

 

காலம் காலமாய்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.

தனது வருகையால் காலா காலமாக தம்மை மறைத்து வைத்திருந்தோரின் முகத்திரைகள் ஒழிந்து போகின்ற, என்கிறான்.

“கூனல்” – தெளிவத்தை ஜோசப் – மௌனிக்கும் குரல்கள்.

என்னதான் நாங்கள் சமத்துவமும் சமஉரிமையும் பேசிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் திரிந்தாலும் நம் கண்முன்னே இன்னும் காலா காலமாக உரிமைகளை சரிவரப் பெறமுடியாத  மலையக சமூகத்தின் ஆதங்கங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவே இல்லை. தொழிலாளர் வர்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவந்து இன்று வரை தொழிலாளர் வர்க்கமாகவே வாழ்ந்து விட்டு செல்லும் துர்பாக்கிய நிலையில் மலையக மக்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். தினக்கூலிக்கும் மிக குறுகிய மாத சம்பளத்திற்கும் அடிமைகளாக தேயிலை தோட்டங்களில் இன்னமும் மிஞ்சி இருக்கின்ற சாதாரண மனிதர்களின் அவலம் மிகக் கொடியது. குறுகிய லயன்களில் போதிய வசதி எதுவும் இல்லாமல் மருத்துவம் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் சரிவர இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் குளிரில் வாடி மடிகின்ற மலையக  தொழிலாளர் வர்க்கத்தின் குரல்கள் வெளிப்படுத்தப் படவேண்டும். என்னதான் வாக்குரிமை வசதிகள் என்று நுண்மையாக அரசியல் வழிநடத்தல்களோடு உரிமைகள் கொடுக்கப்பட்டுகொண்டிருந்தாலும், அதே சமயத்தில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்னொரு சமூகம் இருந்துகொண்டே இருக்கின்றது. எல்லோரின் போர்வையிலும் அவர்களும் அடிபட்டுப் போனாலும் அங்காங்கே எழுகின்ற இலக்கிய குறிப்புக்களில் தெளிவாக பதிவிடப்படுகின்றனர். சாதியத்தாலும் அவர்களின் ஆரம்ப கால வருகை நோக்கத்தினாலும் புண்படுத்தப்பட்டு, இறைச்சி சதையின் மேல் நெளிகின்ற புழுவைப்போல அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பாட்டாளி வர்க்கத்தினர்  இன்னமும் பார்க்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.
 
இந்த தொழிலாளர் முதலாளி  வர்க்க பேதம் பற்றி மிக நுண்மையான கதையாடல் மூலம் வெளிபடுத்துகின்ற தெளிவத்தை ஜோசப்பின் படைப்புத் தான் கூனல் சிறுகதை.
 
சிறுகதை இலக்கியத்தின் ஒரு கூறான மெய் தரிசனத்தை இந்த கதையின் பின்னணியில் காணலாம். கதையின் ஆரம்பத்திலிருந்து சாதாரண தேயிலை ஆலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நகர்வுகளோடு தொடங்குகின்றது கூனல். மேற்ப்பார்வையாளர் தனது மேற்பார்வைக்கு வருகின்ற கணம் வரை , அவர்களின் வேலை பரபரப்பிலாமலும் அமைதியாகவும் நடந்துகொண்டிருக்கின்றது. மேற்பார்வையாளரின் முன் வேலையை பரபரப்பாக்கிக் கொள்கின்ற முறையும், அந்த பரபரப்பு வெறும் செய்கையில் மட்டுமே இன்றி உற்பத்தி வேகத்தை ஒரு போதும் அதிகரித்ததில்லை என்ற நிதர்சனமான பார்வையையும் ஜோசப்பின் மொழியாடலின் மிக லாவகாமாக வெளிப்படுகின்றது. தொழிற்சாலையின் ஒவ்வொரு கூறுகளும் அதில் வேலைசெய்கின்ற தொழிலாளர்களும் அவர்களின் உடல் அசைவுகள் , மன சிக்கல்கள், தேவைகள் , கஷ்டங்கள் என்று நுட்பமான விபரித்தல் ஊடாக கொண்டு சென்று கதையின் மைய பகுதிக்குள் நுழைகின்றார்.
 
கதையின் மைய பகுதி ‘பெனிங்சின்’ என்கிற உயர் வகைத் தேயிலையை கையாள்கின்ற பெயர் குறிப்பிடாத தொழிலாளி பற்றியது. அந்த பெயர் குறிப்பிடாத நபர் முழு தொழிலாளர் வர்க்கத்தின் அடையாளமாக நகர்த்தபடுகின்றார். அவனின் மனநிலை பற்றிய சித்திரமாக ஜோசப் ஒவ்வொரு மலையக தொழிலாளியையும் முன்நிறுத்துகின்றார்.
 
லயன்களில் வசிக்கின்ற மக்களின் பொதுமையான தொழில் தேயிலை தோட்டம் சார்ந்ததாகவே இருக்கும். தேயிலை களத்தில் வேலைசெய்கின்ற ஒரு சாரார், தேயிலை ஆலையில் வேலைசெய்கின்ற ஒரு சாரார் , தேயிலை போக்குவரத்தில் வேலை செய்கின்ற இன்னொரு சாரார் என தேயிலையின் உற்பத்திகளோடு ஒன்றித்து வேலைசெய்கின்ற மக்கள் அவர்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதற்கு மிக பொருத்தமான உதாரணம் அவர்கள் குடிக்கின்ற தேநீர். என்னதான் உயர் ரக தேயிலையுடன் வேலை செய்தாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ கடைசி தரத்திற்கு முன்னைய தர தேயிலையாகும். கடைசி தர தேயிலை மரங்களுக்கு உரங்களாக பயன்படுத்தப்படும். ரேசன் அரிசி வாங்குவது போல தேயிலையை அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். இரண்டாம் வடித்தலுக்கு சாயம் வராத கஞ்சல்கள்(தேயிலை) சீக்கிரம் தீர்ந்து போக அயலவர்களிடம் வாங்கி சமாளித்துக் கொள்வார்கள். எத்தனை நாட்களுக்கு இதே போக்கில் செல்வது. மாத முடிவுகளில் வெறும் சுடு தண்ணீர் குடித்துவிட்டு குளிருக்குள் வேலைக்கு செல்கின்ற துயரம் மிக்க வாழ்க்கை அவர்களது. கதையின் நாயகனது.
 
மனதின் பாய்ச்சலில் நல்ல தேநீர் அருந்தி விடவேண்டும் என்று உயர் ரக தேயிலை சிறிய அளவை தனது கைகளில் மடிப்புக்குள் நிறைத்து சுருட்டி விடுகின்றான். மாடு மாதிரி வேலைகளை செய்து விட்டு இறுதியாக சோதனை செய்யும் இடத்தில், முகத்தில் வெறுமையும் பயமும் மிரட்சி கொள்ள காத்திருக்கிறான். துரதிஷ்டவசமாக அவனின் திருட்டு பிடிபட்டு விட்டது. எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுகிறான். குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். அவன் வியாபாரத்திற்க்கோ அல்லது வேறு தீய நோக்கத்திலோ தேயிலையை திருடியிருக்கவில்லை. அவனின் சிறிய ஆசைக்கு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மிக சிறிய விருப்பிற்கு அங்கே முட்டுக்கட்டை போடப்படுகிறது.
 
சிறுகதையின் இறுதி வரிகள், இதுவரை வாசகன் சுற்றிக்கொண்டிருக்கும் உலகத்தின் இருண்ட பக்கங்களை வெளிபடுத்துகிறது. இரவில் மூடை மூடையாக தேயிலை ஒரு கருப்பு காரில் ஏற்றப்படுவதும் அதை காவலாளி சலனமின்றி அவதானிப்பதும் திட்டமிட்ட முதலாளித்  திருட்டை அமபலபடுத்துகிறது. ஒரு சிறிய அளவு தேயிலையை விருப்பிற்காக கொண்டு செல்லும்போது குற்றவாளியாக பிடிபட்ட தொழிலாளியும், அதே தேயிலையை இருட்டில் மூடை மூடையாக சொந்த லாபத்திற்காக முதலாளி களவாடும் போது காவலாளி மௌனமாக ஆதரிப்பதும் வர்க்க பேதத்தின் பரவலாக்கத்தை விளிகின்றது. சோதனை செய்யும் இடத்தில் அவன் ஒரு பெருமனதோடு விடுவிக்கப்பட்டிருக்கலாம், இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் அந்த விடுதலையை தடுப்பது தொழிலாளி என்ற வர்க்க நிலையே. இதுவே முதலாளி  வர்க்கம் சுரண்டு மூடையாக குவிக்கும் போது “ யான் ஒன்றும் அறியேன் பராபரமே” என்றிருப்பதும் வர்க்க நிலையே.
 
தெளிவத்தை ஜோசப் கூனல் என்ற சிறுகதையின் மூலம் கூனலாகிப்போன மலையாக தொழிலாளர் வர்க்க உணர்வு நிலை போராட்டத்தை பதிவிடுகின்றார்.