நகரத்தின் குறிப்புகள் – 01

நகரம் ஒன்றினைப் பற்றி உங்களுக்குச் சொல்லுவது எளிதான விடயம் ஒன்றல்ல. மனிதனின் ஆதி முதல் – ஒவ்வொருவரும் தங்கள் நகரங்களைப் பற்றியும் தாங்கள் வாழ்ந்த நகரங்கள் பற்றியும் வாழ விரும்புகின்ற நகரங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்ட நகரங்கள் பற்றியும் அவர்களே தமக்குள்ள உருவாக்கிக்கொண்ட நகரங்கள் பற்றியும் பேசி, எழுதி விவாதித்திருக்கிறார்கள். இவற்றில் ஏதோ ஒரு வகை நகரத்தைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். இந்த நகரம் பற்றிச் சொல்ல முதல் – இன்னொரு நகரத்தைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்கள்.
-“……..ட கட்டடங்களுக்கு இடையே அந்த நதி ஓடிக்கொண்டிருந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர்தான் அந்த நதியின் பெயரை யூசோ என்றறிந்தேன். தெளிந்த வெள்ளை நீரினூடாக நதியின் ஆழத்திலிருக்கின்ற கற்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. அவை செயற்கையாக அங்கே பதிக்கப்பட்டவை. அவற்றின் இருப்பில் நேர்த்தியான ஒழுங்கின்மை இருக்கிறது. நீருக்குள் நிறைய வண்ணங்களில் மீன்கள் நீந்திக்கொண்டு திரியும். அவை எல்லாமே ஒரே இனம். பார்ப்பதற்கு மின்சாரத்தில் இயங்குகின்ற மீன்கள் போலவே இருக்கும். ஆனால் அவை உயிருள்ளவை.எல்லாம் ஒன்றாக தமது உடலை வளைத்து உன்னோக்கி உதைப்பது போல நீந்தும். கொத்துக் கொத்தாக ஆற்றில் பரவிக்காணப்படும்………”
 
இது புகழ்பெற்ற லத்தின் அமெரிக்கா எழுத்தாளர் ஒருவரின் பிரசுரிக்கப்படாத குறிப்பு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். இவற்றை வாசித்துக்கொண்டிருக்கும் போது எனது நகரத்தை ஊடறுத்து செல்லுகின்ற ஆறுகள் ஞாபகத்திற்கு வந்தன. அதில் ஒன்றைப்பற்றித்தான் இப்போது எழுதப்போகிறேன்.
-“……..பாலத்தின் மீது நின்றுகொண்டு கீழே ஓடுகின்ற ஆற்றைப் பார்க்கிறேன். எந்த சலசலப்பும் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கின்றது . ஆற்றின் வேகத்தைப்பற்றி ஊகிக்க முடியவில்லை. அகன்ற ஆறு அது. ஒழுங்கற்ற கரைகளைக்கொண்டது. கரையின் ஓரங்களில் பொலிதீன் பைகளும் உணவுக்குப்பைகளும். அவை குமியலாக ஓரங்கள் எங்கும் பரவிக்கிடந்தன. ஒவ்வொரு குமியாலும் மெதுவாக அதிரகரிக்கின்ற குப்பைச்சுமைகள் ஆற்றுக்குள் விழுத்திக்கொண்டிருந்தன. ஆறு -நகரத்தின் பெரிய கட்டடங்களின் பின்பக்கமாக இருக்கிறபடியால் – கட்டடங்களின் குப்பைகளை எளிதாக அகற்றிவிடமுடிகிறது. ஆற்றின் கரைகளுக்குப் பல கிளைகளிலிருந்து கழிவுநீர் திசைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குழாய்க்குள்ளாகவுமிருந்து ஆற்றுக்குள் வீழ்கின்ற கழிவு நீர் கருமையான திட்டுக்களாக வழிந்துகொண்டிருந்தது. ஆற்றின் ஓட்டத்துடன் கலந்து ஆற்றின் ஒரு பகுதியாக மாறுகின்றன.ஆக இந்த ஆற்றின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு குழாய்க்குலிருந்து வெளியேறிய திண்மத்திட்டுத்தான். அதிலிருக்கின்ற கழிவு நீர்தான் இந்த ஆற்றை உருவாக்கியிருக்கிறது……..”
 
நீண்ட நாட்களுக்கு முன்னர் நண்பன் ஒருத்தன் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் ஒன்றின் பகுதியினை வாசிக்க அனுப்பியிருந்தான். அவனுக்கு நாவல் எழுத வரவேயில்லை. அவனால் நாவல் ஒன்றின் உருவாக்கம் பற்றிய சரியான புரிதல் இருக்கவில்லை. அவனின் மொழி பயங்கரமாக இருந்தது. வார்த்தைகளை ஒன்றிணைத்து வாக்கியம் ஒன்றினை எழுதுவதிலும், அவற்றை ஒன்றிணைத்து பந்தியாக்குவதிலும் நிறையப் பிழைகள் இருந்தன. இருந்தும் அந்தப்பகுதியில் உள்ளடக்கம் அபாரமானது. அது நகரம் ஒன்றின் ஆற்றங்கரைக் குடியிருப்புக்கள் பற்றியது. அவனின் மோசமான எழுத்துக்களால் சரியான முறையில் வசனங்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் அவை இவ்வாறு அமைந்திருக்கும்.
 
-“…….எங்களுக்கு அந்த நோய் பற்றி தெரிந்திருக்கவில்லை. தொட்டால் பரவுமா, நுளம்புகளால் பரவுமா, நீரின் மூலம் பரவுமா, காற்றிலே பரவுமா அல்லது உணவுகள் மூலம் பரவுமா என்று எந்த அறிவும் இல்லை. ஆனால் பரவியது. மிகவும் வேகமாக. இங்கே சாதாரணமாக எல்லோரும் கீழ் மட்டத்தொழில்கள் தான் செய்கிறோம். பெரும்பாலான சாலைகளில் சப்பாத்துக்கள் தைப்பவர்களாகவும் அதிஷ்டலாபச் சீட்டு விற்பவர்களாகவும் கால்வாய்கள் துப்பரவு செய்பவர்களாகவும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒழுங்குகளைச் செய்பவர்களாகவும் இருக்கின்றோம். நகரத்தின் எந்தப் பகுதியில் பரவுகின்ற நோய் உண்டானாலும்; அது எமது குடியிருப்புகளில் பரவத்தொடங்கிவிடும். அப்படியான ஒன்றாகக் கூட இந்த நோய் இருக்கலாம்.
எங்கள் வீடுகளுக்கு முன்னே இருக்கின்ற வீதியினால்த்தான் இரவு நேரங்களில் பெரிய வாகனங்கள் குப்பைகளை எடுத்து வந்து எதிரில் இருக்கின்ற ஆற்றுக்குள் கொட்டுவார்கள். அப்போது நாற்றம் மூச்சுத் துவாரங்களை அடைத்துவிடும். வழமையாகவே எவ்வளவு நாற்றத்தையும் பொறுத்துக்கொள்கின்ற எம்மால், இந்த நாற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. எங்கள் குழந்தைகளுக்கு கடியும் சொறியும் அடுத்த நாளே வந்துவிடும். குமட்டி குமட்டி அழத்தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளால் சொறியவும் முடியாது. அவர்களின் கருமையான தேகத்தில் வட்ட வட்டமாக கொப்புளங்களும் அவற்றில் நுண் துளைகளும் வந்து விடும். அவற்றின் மீது நாம் சித்தலெப்பை தேய்ப்போம். அது அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டும். நான்கு ஐந்து நாட்கள் இது நீடிக்கும். பின்னர் அதுவே பழகிப்போகும். இப்போது பிறக்கின்ற குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வருவதில்லை.அவர்கள் கடி சொறி இல்லாமல் தமது குழந்தைப் பருவத்தை தாண்டுகிறார்கள். பெரியவர்களுக்கு எப்போதுமே இந்தப்பிரச்சனை வருவதில்லை. ஆனால் இந்த நோய் எல்லோரையும் பிடித்திருக்கின்றது. எல்லோரும் மெலிந்து போகின்றார்கள், அவர்களால் சரியாக நடக்க முடியவில்லை. விரல்களும் நகங்களும் சூம்பிப்போகின்றன. சிறுவர்கள் தங்கள் கால்ப்பகுதியை சொறிந்தபடியே திரிகிறார்கள். குழந்தைகள் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. முகங்களிலும் மெல்லிய தோல்ப் பகுதிகளிலும் தேமல்கள். தேமல்கள் காய்ந்து போகின்ற நேரத்தில் இளைஞர்கள் அவற்றை உரித்து எடுப்பார்கள். கடும் எரிச்சலுக்குட்படுத்திய தேமல்களை உரிப்பது சுகமாக இருக்கும். சில வயதானவர்கள் அதை உரிக்கும் போது தோலும் சேர்ந்து உரிந்து, எரிச்சலை கிளப்பும். சிலரின் பாதி முகம் முழுவது தேமல் படர்ந்திருக்கும்…..”
 
இப்படி அது நீண்டு செல்லும். இருந்தும் அவனால் அந்த நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. நகரத்தின் பெரிய சாப்பிட்டு கடை ஒன்றில் வேலையாளாக பணியாற்றுகிறான். அவனுக்கு அதைத் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்பொழுது அவனின் கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகின்றமையால் – கடையில் அதிக நேரம் வேலைசெய்யவேண்டியதாக இருக்கின்றது. அதற்கேற்ற சம்பளமும் கிடைக்கின்றது. அது போதுமே, உடல் வேலைக்கேற்ற சம்பளம்.

ஒரு வருடம் – மறா

(01)
எந்த ஒரு விடயத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து செய்யும் போது மனத்திருப்தியுடன் கூடிய முன்னேற்றம் உருவாகும் என்பதை அறிந்த சந்தர்ப்பங்களுள் எனது வலைப்பூவும் ஒன்று. சாதாரண தரம் எழுதிவிட்டு உடனேயே எல்லோரும் உயர்தரத்திற்கு தயாராக தொடங்கிவிடுவார்கள். இலங்கையில் பெரும்பாலான உயர்தரக் கல்வி தனியார் வகுப்புகளை நம்பியே இருந்தது. சிறுவயது முதல் ஒன்றாக படித்துக்கொண்டுவந்த எனது நண்பர்களிடம் இருந்து , நான் தெரிவு செய்த துறையும் தனியார் கல்வி நிறுவனமும் மெல்லிய இடைவெளியை ஏற்படுத்த தொடங்கியது. அவர்களின் கதையாடல்கள் மெதுவாக அந்நியமாகத் தொடங்கின. உயர்தரம் முடிந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணியிருந்தது கூட முழுமையாக நிவர்த்தியாகவில்லை. உயர்தரம் எழுதி முடித்து வருகின்ற ஓய்வு நாட்களின் மாலைகளில் நண்பர்களுடன் விளையாடுவதாயும்  பேசி மகிழ்வதாயும் கழிந்தன. இருந்தும் அவர்களிடம் அந்த மூன்று வருடங்களில் உருவாகியிருந்த பிணைப்பில் என்னால் நுழையவே முடியவில்லை. அவர்களிடம் அப்போதிருந்த சுதந்திரம் – என்னிடமிருந்தும், எனக்கான வெளி வேறாக இருந்தது. என் சுதந்திரம் முழுவதும் அவ்வெளியின் கூறுகளால் நிரப்பப்பட்டன. இந்த இடைவெளி நீண்ட பிரிவு ஒன்றிற்கு காரணமாக இருக்கும் என்பதை நான் அறியாமலில்லை. உயர்தர பெறுபேறுகள் வெளிவர, நான் தனித்துப்போனேன்.
 
ஒக்ட்டோபர் மாத இறுதி நாட்களில் தான் முதன் முதலாக வலைப்பூ ஒன்றினை தொடங்குவதற்கான எண்ணம் வந்தது. அப்போது ஜெயமோகனும் சாருவும் தீவிரமாக தமது வலைப்பூவில் எழுத்துக்கொண்டிருந்தார்கள். அத்தோடு கீற்று, மலைகள், காலச்சுவடு போன்ற இணைய இதழ்களையும் வாசித்துக்கொண்டிருந்தேன். கூடவே மதுரகன் அண்ணாவின் வலைப்பூவும் பரீட்சயமாக இருந்தது. நான் அப்போது சிறு சிறு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். வாசித்துக்கொண்டும் இருந்தேன். சரி, எனக்கான வலைப்பூ ஒன்றை தொடங்குவதற்கு முடிவு செய்துவிட்டேன். எப்படியும் காசு செலவு செய்து சொந்த டொமைனில் வலைப்பூ ஒன்றினை எழுதமுடியாது என்று இலவச வலைத்தளங்களை தேடினேன். Weebly, wordpress, blogspot, 123site, wix, zoho என்று ஒவ்வொன்றிலும் மாறி மாறி ஒவ்வொரு விதமான வடிவத்திலும் ஒரே கவிதையை வைத்து செய்வது அழிப்பதுமாக இருந்தேன். முதன் முதலில் நீண்ட காலம் – இரண்டு கிழமை அளவு , பாவனையில் இருந்த தளம் 123site இன் மூலம் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று மாத கால அளவில் wordpress இன் இலவச தளத்தில் மெது மெதுவாக கவிதைகள், குறும் கதைகள், கட்டுரைகள் என்று சேர்க்கத்தொடங்கினேன். முதலாம் மாத இறுதியளவில் எனது தளத்திற்கான பார்வைகள் அதிகாமாகத் தொங்கியது. அந்த நேரத்தில் எனது குட்டியிடம்(அம்மாவின் தங்கை) பணம் வாங்கி எனக்கான சொந்த டொமைன் ஒன்றை வாங்கிக்கொண்டேன். brinthanonline.com -இப்போது அது  hacked by sulaiman hacker என்ற பெயரில் கிடப்பில் கிடக்கிறது. இன்றிலிருந்து மூன்று  மாதங்களுக்கு முன்பு, எனது டொமைனை யாரோ ஹாக் செய்துவிடடார்கள். எனது டொமைன் ப்ரொவைடரிடம் (வழங்கி) கேட்டும் மீட்டுப் பெறமுடியவில்லை. அப்படியே அதை விட்டு விட்டு மீண்டும் wordpress இன் இலவச இணைய தளத்தில் அனைத்து பதிவுகளையும் பிரதி செய்து, புத்துருவாக்கம் செய்தேன். இன்றுவரை அதில் பதிவிட்டு வருகிறேன்.
 
இவ்வருடம் தையிலிருந்து ஆவணி வரையிலான எட்டு மாதம், நண்பர்கள் பெரிதும் இல்லாத தனிமையை நிரப்பிக்கொண்டது எனது வாசிப்பும் வலைத்தளமும் தான்;இன்றுவரையும். கடந்த மூன்றாம் திகதி இம்மாதம், எனது முதல் குறுகிய 123site இணைய தளத்தில் முதல் பதிவை பதிவு செய்தேன். ஒரு ஆண்டு முடிந்து விட்டது.  
Screen Shot 2017-11-05 at 1.00.27 PM 
 
(02)
ஈழத்து சினிமா என்பது மிகவும் மேலோட்டமான முறையில் நகர்ந்து கொண்டிருப்பதை வைத்து அதன் அவசியத்தையும் பலத்தையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இலங்கை தமிழ் மக்களிடையே பரவலான பயன்பாட்டில் உள்ள ஊடகம் சினிமா. தென்இந்திய தமிழ் திரைப்படங்கள் இலங்கையின் எல்லா இடங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. பாலாபிஷேகம், பெரிய உருவப்படங்கள் , மாலை , ஆராத்தி என்று எல்லாவற்றுக்கும் மேலாக வைத்து கொண்டாடுகின்ற நிலைமையை சமீபகாலமாக மிகவும் தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது. இன்று முகப்புத்தகங்களிலும் நண்பர்கள் குழுக்களுக்கிடையேயும் வீதிகளிலும் சாதாரணமாக நடக்கின்ற சினிமா வாக்குவாதங்கள் – எமது சமூகத்தில் சினிமாவின் ஊடுருவலை உணர்த்தி நிற்கின்றன.
 
இன்றைய இந்திய தமிழ் சினிமாவின் தாக்கத்தால்  மீளமுடியாமல் இருக்கின்ற எம்மிடையே ஈழத்து சினிமா பற்றிய புரிதல் மிகவும் மந்தமாக இருக்கிறது. இந்திய தமிழ் சினிமாக்கள் ஏற்படுத்துகின்ற விம்ப மாயை பற்றிய அறியாமையில், இன்றைய நாட்களில் எழுகின்ற ஈழத்து முழுநீள, குறும்படங்கள் – அதன் நீட்சியாகவே உருவாகின்றன. இந்த நீட்சியே எமக்கான தனித்துவமான சினிமா அடையாளத்தை உருவாக்க முடியாமல் செய்கின்றது. இந்திய சினிமாவை பீடித்திருக்கின்ற வர்த்தக நோக்கம் கொண்ட திரைப்படங்களின் பெரும் பாய்ச்சல் – அவர்களின் தனித்துவமான அடையாளங்களை அழிப்பதைப் போன்று ; இந்திய சினிமாவின் ஆதிக்கம் எமக்குரிய தனித்துவமான கலையையும் பார்வையையும் மழுங்கடித்துக்கொண்டு இருக்கின்றன. இதே தொடர்ச்சியினை குறும்படங்களும் கையாளத்தொடங்கிவிட்டன.
 
மறா எனது நண்பர்களால் உருவாக்கப்பட்ட குறும்படம். படப்பிடிப்பு , இசை  எல்லாம் முடிந்து இறுதிநேரத்தில் தான் படம் பற்றிய செய்தியே எனக்கு கிடைத்தது. ஆவலாக காத்திருந்து இணைப்பு கிடைத்தவுடனேயே பேருந்தில் படத்தை பார்த்து முடித்தேன். அவர்களின் முயற்சிக்கு முதல் பெருத்த நன்றிகளும் பாராட்டுகளும். மறாவில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரினதும் எண்ணங்களும் சிந்தனைகளும் பற்றிய சிறிய புரிந்துணர்வாவது இருக்கும் என்ற எண்ணத்தில் – இதைப்பற்றிய உரையாடலை முன்வைக்கிறேன். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு போதியளவு கிடைத்திருக்கும். நான் மேலும் பாராட்டி எழுதுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. அதனால் மறாவின் சினிமா அரசியல் பற்றிய எனது கருத்துக்களை பகிர்கிறேன். இது அவர்களுக்கு பொருந்தாமலும் போகலாம், ஏனையவர்களுக்கு பொருத்தமானதாகவும் இருக்கலாம்.
 
கதையின் கரு பற்றி சினிமா ஆளுமைகளிடம் இருந்து கருத்துக்கள் விவாதங்கள் நடந்திருக்கும் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை. கதை திரைப்படம் ஒன்றில் நடித்து தோற்றுப்போகும் நாயகன், தனது கனவில் சென்று தன் குறைகளை திருத்த முயல்கிறான்; முடியாமல் போக இன்னொரு கனவில் சென்று குறைகளை இல்லாமல் செய்து பூரணம் அடைகிறான். கனவுகளை மட்டும் இல்லாமல் செய்து விட்டு கதையின் கருவை பார்த்தால் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டாம் சுற்று வெற்றியின் ரகசியம் போலத் தெரியும். இது நகைச்சுவை இல்லை. கதையின் கருவும் எமது சூழலும் விலகி நிற்கின்ற புள்ளி அது தான். கோடம்பாக்கத்திற்கு வருகின்ற ஒரு நடிகனின் முதல் படம் தோல்வியில் முடிய தனது இரண்டாம் படத்திற்கு தன்னிடம் இருந்த குறைகளை நீக்கிக் கொண்டு வெற்றிபெற வருவது போல. இலங்கையின் தமிழ் சூழலில் இதன் சாத்தியப்பாடு தான் எனது கேள்வி. இன்று இளைஞர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் அரசியல் ரீதியாக , சமூக ரீதியாக, ஆன்மீக ரீதியாக, உளவியல் ரீதியாக ஏற்படுகின்றது. அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இப்படியான இந்திய தமிழ் சினிமா கலாசார தொனியில் படம் வந்ததன் நோக்கம் தான் பிரச்சனை. இது இயக்குனரின் சுதந்திரம் என்று வாதிடுவது சரியானதே, ஆனால் ஈழத்து குறும்படம் என்ற அடையாளம் எதன் மூலம் உருவாக்கம் பெறப்போகிறது.
இரண்டாவது பார்வையாளருக்கு திரைப்படத்திற்குமான தொடர்பு. இதே பிரச்சனை தற்கால சில கவிதைகள் மீதும் எனக்குண்டு. இரண்டிற்கும் பொதுவாக, எப்போதுமே ஒரு படைப்பு  ஒன்றில் அப்படைப்புக்கும் வாசகருக்கும்/ பார்வையாளருக்கு ஏதோ ஒரு புள்ளியில் இணைப்பு ஏற்படும் போது தான் அது கலைப்படைப்பாக உருமாற்றம் அடைகின்றது. சம்பவங்களை அடுக்குதல் பின்நவீனத்தின் முக்கிய கூறு என்றாலும், அது வாசகரை/ பார்வையாளரை ஒரு கணத்தின் உள்வாங்கும் போது தான் உன்னதம் அடையும். இந்தச் சிக்கலை மறாவை பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது. இயக்குனர் காட்டுகின்ற காட்சிகள் சிதறிய கண்ணாடி போல புதிர்த்தன்மை வாய்ந்தது. வேறு வேறான காட்சி அமைப்புக்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. குறியீடுகள் தென்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இவை நெய்ல் பேர்கரின் காட்சி அமைப்புகளையும் கதை சொல்லையும் நினைவுபடுத்துகின்றன. ஒளிப்பதிவும் அவ்வளவு நேர்த்தியாகவே இருக்கின்றது. ஆனால் அந்த சிதறிய காட்சிகள் ஒன்று சேரும் இடம் பற்றிய கேள்வி தான், படத்தின் மீதான விமர்சனத்தை ஏற்படுத்துகின்றது. காட்சிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது, பார்வையாளர்களுக்கு  எப்படி காட்சிகளின் மூலம் இணைப்பை ஏற்படுத்துவது என்பதைத் தான் பிரபல இயக்குனர்கள் எல்லோரும் சரியாகச் செய்கின்றனர். சிதறுண்ட காட்சிகள்/ சொற்கள் மூலம் யாரும் எதையும் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு இயக்குனர்/ கவிஞர் தான் சொல்லவந்த கருவை காட்சிகளுடனும் பார்வையாளர்களுடனும்/ வாசகர்களுடனும் இணைக்கத்தான் பெரும் முயற்சி எடுக்கவேண்டி இருக்கின்றது. அந்த முயற்சி செய்யப்படுகின்ற படைப்பு கலைப்படைப்பாக மாறுகின்றது. மறாவில் இயக்குனரின் பங்கு வெறுமையாக விடப்பட்டுள்ளது. இயக்குனர் சொல்வதைப்போல கதையை ஊகிக்க முடியாத நிலை, இயக்குனரின் தோல்வியே தவிர பார்வையாளரின் அல்ல.
22792295_1970568726537324_2263350883293001022_o

“வினோத நூலகம் – வாசிப்பறிமுகம் – ஹருகி முரகாமி”

இன்றைய இலக்கிய சூழலில் மிகுந்த கவனத்திற்கு உரியவராக ஹருகி முரகாமி கருத்தப்படுகின்றார். 1949 இல் ஜப்பானில் பிறந்த முரகாமி -The Guardian  பத்திரிகையின் இந்நாளில் வாழுகின்ற சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது படைப்புகளில்  A Wild Sheep Chase (1982), Norwegian Wood (1987), The Wind-Up Bird Chronicle (1994–95), Kafka on the Shore (2002), மற்றும்   1Q84 (2009–10) என்பன குறிப்பிடத்தக்கன.
வினோத நூலகம் குறுநாவல் வகையை சேர்ந்த இலக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் Novella என்று அழைப்பார்கள். அளவில் இது குறுநாவலாக கருதப்பட்டாலும் பேசுகின்ற கருத்தளவில் இதை சிறுகதையாகவே கருதுகிறேன். இதை தமிழில் ஜி.குப்புசாமி மொழி பெயர்த்துள்ளார். மிகவும்நேர்த்தியான மொழி பெயர்ப்பு. விமர்சகர்காளால் ஒற்றை தளத்தில் நகர்கின்ற கதை என விமர்சிக்கப்பட்ட வினோத நூலகம், என்னளவில் மிகவும் சிறந்த படைப்பு ஆகும். எளிய மொழி நடையில் எழுதுகின்றமையால் இவ்வாறானதொரு விமர்சனம் எழுந்திருக்கலாம். முரகாமி மென்மையாக எழுகின்றவர். நவீன இலக்கியத்தின் முக்கிய பண்பான சொற்சிக்கனத்தை கடைப்பிடிப்பவர். குறுகிய மையக்கருத்தை வைத்து நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துபவர். இதை நுண்மையான கருத்தின் பெரும் உரையாடல்கள் எனலாம். வினோத நூலகமும் அதன் பிரதியே.
கதை ஒரு தளத்தில் எழுதப்பட்டிருந்தாலும் வாசகன் கதையை நகர்த்திச்செல்ல பல நுழைவாயில்கள் கதைக்குள் இருகின்றன. வெறுமனே சம்பவங்களை அடுக்கிக்கொண்டு போகின்ற தட்டையான கதையாக முதலில் விநோதநூலகம் விமர்சிக்கபட்டாலும், சம்பவங்களினூடு உணர்வுகளை கடத்திச்செல்கின்ற குறியீடு கதை முழுவது காணப்படுகின்றது. இதை நவீன இலக்கியத்தின் புதிய முயற்சி என்று கூட சொல்லலாம். அக உணர்வுகளை , தேவைகளை சொற்களின் ஊடாக வெளிப்படுத்தி விடாமல் அவற்றை சம்பவங்களாக குறியீடு செய்கின்ற தன்மை மூலம் கதையை நகர்த்துகின்றார். ஆழ்ந்து வாசின்ற வாசகர் ஒருவரால் இதனை அடையாளப்படுத்திகொள்ளமுடியும். இந்த நுட்பமான அணுகுமுறை புரியாத பொழுது, படைப்பு வெறும் சம்பவங்களினால் ஆனா தொகுப்பு போலவே தோன்றும். இந்த வாசிப்பனுபவம் வாசகர்களுக்கு புதியது அல்ல. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் இதே போன்ற சம்பவங்களின் ஊடாக உணர்வுகளை கடத்துகின்ற பிரதியே. மேலோட்டமான வாசிப்பில் சம்பவங்களின் கோர்வை போன்ற உருவம் இருந்தாலும் சம்பவங்கள்  கடத்துகின்ற உணர்வுகள் பின்னைய கால ஆழ்ந்த வாசிப்பில் உணரப்பட்டன. கட்டமைப்பு மீறலை செய்கின்ற பின் நவீனத்துவ முயற்சியாக இதை கருதுகின்றேன். ஹருகி முரகாமியை அணுக இதை ஒரு வழியாக கையாண்டு பார்க்கலாம்.
வினோத நூலகம், ஒரு உணர்வின் பன்மை பரிமாணம் பற்றிய விரிப்பு. ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற மெல்லிய, ஆழமான உணர்வுகள் – அவனுக்குள் புற உலகைத் தாண்டி இன்னொரு அக உலகினை கட்டுமானம் செய்கின்றது. அந்த அக உலகு நிஜமான உலகத்தினைப் போல சாதாரணமான கட்டமைப்பினைக்கொண்டிருக்காது. அவ்வுலகு விசித்திரங்காளால் ஆனது. எந்த உணர்வால் தாக்கப்பட்டோமோ அந்த உணர்வின் நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாக இருக்கும். அவ்வாசைகள் செய்யக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். அந்த ஆசையை ஒட்டிய எண்ணங்களின் சித்தரிப்புக்கள் காணப்படும். எந்த உணர்வால் பீடிக்கப்பட்டோமோ, அதன் எல்லக்கூறுகளும் கலந்த ஒழுங்கற்ற அக உலகம் ஒன்றினை மனிதன் உருவாக்கிகொள்வான். இதையே உணர்வு ஒன்றின் பன்மைப் பரிமாணம் என்கிறேன். விநோதநூலகம், இப்படியான ஆழமான உணர்வு ஒன்றினால் பீடிக்கப்பட்ட சிறுவன் ஒருத்தனின் பன்மைப் பரிமாணம் பற்றியது.
தனக்கு மிகவும் நெருக்கமான அம்மாவினதும்  குருவியினதும் இறப்பால் வருந்துகின்ற சிறுவன் ஒருத்தன் கட்டமைத்துக்கொள்கின்ற அக உலகம் தான் வினோத நூலகம். வழமையாக அவன் செல்கின்ற நூலகம் அவனுக்கு அன்று விசித்திரமானதொன்றாகத் தெரிகின்றது. அதுவரை அறிந்திராத புதிய கீழ்த்தளம் ஒன்று அவனுக்கு தெரிகின்றது. அதனுள் விசித்திரமான மனிதர்களும் விலங்குகளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இவையனைத்தும் அவனுள் ஊடுருவியிருகின்ற சோகத்தால் உருவாகியவை. அதுவரை அவன் ஆழ்ந்த சோகம் ஒன்றினை அனுபவித்திராதவனாக இருந்திருக்கலாம். இந்த புதிய சோகமான உருகல் அவனிற்கு புதிய தளம் ஒன்றினை உருவாகுகின்றது. அதுவே அந்த வினோத நூலகத்தின் கீழ்த்தளமாக முரகாமி சித்தரிகின்றார்.
அந்த அறையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறிய உணர்வு மாற்றத்தின் மிகவும் பெரிய பிரதிபலிப்பாக அவன் உணருகிறான்.
“கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ, அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது.”
அவனை வதைக்கின்ற பிரிவு– அவனை பழைய உணர்ச்சிகளுக்குள் உழல வைக்கின்றது. தனது தாய் அவனை தேடுவார் என்றும்; தனது கிளி தன்னை தேடும் என்றும் பிரிவின் பெரும் துயரை ஒவ்வொரு நொடியும் அகப்பட்டுகொண்டிருக்கும் பாதாள அறைக்குள் இருந்து யோசிக்கிறான். இது எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொதுவானது ஒன்றுதான். ஒருத்தரின் இழப்பின் பின்னர் அவரைப்பற்றிய ஞாபகங்களும் நிகழ்ச்சிகளும் மாறி மாறி மனதை துளைத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அம்மாவின் இழப்பு உருவாக்குகின்ற துயர் கொடியது. முரகாமி அவனின் துயரத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிகழ்வுகளாக பாத்திரங்களாக வடிக்கின்றார்.
“நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத் தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்.”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச் செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
பாதாள அறையில் பேசுகின்ற விடயங்களும் சம்வங்களும் விசித்தரமானவை. பொதுவாக முரகாமி இப்படியான சேரலிச முறைமையை அதிகம் தனது படைப்புகளில் பயன்படுத்துவார். இதனாலேயே ஜப்பானிய சமூகத்தினரால் வேற்றுமொழி எழுத்தாளராக விமர்சனமும் செய்யப்பட்டார். ஆனால் அவரின் பெரும்பாலான படைப்புகள் தன்னிலை எழுத்துக்களாகவே இருக்கும். இது ஜப்பானியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்ற முறையாகும். வினோத நூலகமும் தன்னிலையில் எழுதப்பட்ட கதையாகும். பாதாள அறைக்குள் ஆரம்பத்தில் இரண்டு பாத்திரங்கள் அறிமுகமாகி பின்னர் ஒரே பாத்திரமாகி அதன் பின்னர் இரண்டு பாத்திரங்களாக மாறும். இதை நிலை மயக்கமாக முரகாமி எழுதுகின்றார். இதுவே அவனின் கனவுலக இருப்பையும் காட்டுகின்றது. ஆரம்பத்தில் ஆட்டு மனிதன் , குரலில்லாத பெண் இருவரும் அறிமுகம் ஆவார்கள். பின்னர் ஆட்டு மனிதனே குரலில்லாத பெண்ணாக தெரிவார். பின்னர் இருவரும் தனித்தனியாக தெரிவார்கள். கதையின் முடிவில் குரலில்லாத பெண் குருவியாக மாறிவிடுவார். கடைசியில் எல்லோரும் மறைந்து போய்விடுவார்கள்.
இதே வினோத நூலகத்தை இன்னொரு விதமான அனுபவமாகவும் கருத முடியும். தனது அம்மாவின் இறப்பினை முன்கூட்டியே அறிவிக்கின்ற நிகழ்வுகளாக வினோத நூலக கனவுகள் அவனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மிக நெருக்கமானவர்களின் இறப்பினை ஊகிக்க கூடிய கொடிய உணர்ச்சி மனிதர்களுக்கு உண்டாவதுண்டு. அப்படியான ஒரு கொடிய முன் கூடிய கனவாக முழு நிகழ்ச்சியும் அமைந்திருக்கலாம். இதை வாசகரே தீர்மானிக்க வேண்டிய இருண்மையாக முகாமி வடிவமைத்திருப்பார்.
அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என் ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச் சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என் ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும் தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை.
செல்லக்குருவி இல்லை.
ஆட்டுமனிதன் இல்லை.
அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத் தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
முரகாமியின் இந்த நுட்பங்களின் கூட்டாக விநோதநூலக்த்தை எழுதுகின்றார். பின் நவீனத்துவ எழுத்துக்களில் முக்கியமான பிரதியாக வினோத நூலகம் அமைகின்றது.
வினோத நூலகம் குறுநாவலை வாசிக்க
 
வினோத நூலகம் வாசிக்க
*** ஹருகி முரகாமி பற்றிய நேர் மறை விமர்சனங்கள் இன்றைய சூழலில் அதிகமாக எழுந்துகொண்டு இருக்கின்றது. முரகாமி பற்றிய விவாதம் தேவையான ஒன்று. அது அவரின் படைப்புக்களை அணுகுவதைப் பற்றியதாக இருக்கவேண்டும். முரகாமி உருவாக்கிக்கொண்டுள்ள மொழி பற்றியும் நுட்பங்கள் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உரையாடப்படவேண்டும். மிக இலகுவாக அவரைப் புறம்தள்ளி விடமுடியாது. சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் வாசகர் கடிதம் ஒன்றில் கேட்கப்பட்ட முரகாமி பற்றிய கேள்விக்கு, “முரகாமி ஏற்கனவே ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் வாசகர்களுக்காக எழுதுபவர். யசுநாரி கவபத்தா தனக்கான வாசகர்களை தானே உருவாக்கிக்கொண்டவர். கவபத்தாவிடம் இருக்கும் ஜப்பானிய தனித்தன்மை முரகாமியிடம் இல்லை. இவ்வகை எழுத்தைத்தான் நான் நட்சத்திரவிடுதியின் சாம்பார் என்பேன். சாம்பாரேதான், ஆனால் ஐரோப்பிய நாக்குக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே சாம்பார் அல்ல.” என்று நகைச்சுவையாக பதிலளித்திருப்பார். அன்றிரவே முகப்புத்தகம் மூலமாக நானும் ஜி.குப்புசாமியும் இதைப்பற்றி குறுகிய உரையாடல் ஒன்றை நிகழ்த்தினோம். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் அனோஜன் பாலகிருஷ்ணன்,”ஹருக்கி முரகாமி‘யின் கதைகளைத் தேர்ந்த இலக்கிய கதைகளாக என்னால் ஒப்புக்கொள்ளவே முடிவதிவில்லை. கடினப்பட்டு நான் வைத்திருக்கும் இலக்கிய போத்தலுக்குள் அவரை நுழைத்தாலும். பிடிவாதமாக திமிறிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ஆனால், ஆங்கிலம் வழியேயான வாசிப்புக்குள் நுழைய அவரின் கதைகள் கைகொடுக்கும். மிக எளிமையான நடை. பிடித்து மேலேறிவிடலாம்.” என்று முகப்புத்தக பதிவொன்றினை இட்டிருந்தார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முரகாமியின் வினோத நூலகம் என்ற சிறுகதை/ குறுநாவலுக்கு வாசிப்பறிமுகம் செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயமோகனின் பதிவு– http://www.jeyamohan.in/98517#.WfIhxVuCzIU

ஒழிதல்

என் அறையில் என்னைத்தவிர

மூன்று பிசாசுகள் உள்ளன;

 

எல்லாமே என்னோடு

நன்றாகப் பேசும்,

அதனால் ஒன்றும் சத்தம் கேட்கப்போவதில்லையே.

 

எல்லாம் என்னோடு

சேர்ந்து வாசிக்கும்,

பெரும்பாலும் என்னை விட அதிகமாக.

 

எப்போதும் அழுதபடியே இருக்கும்,

அவை நினைத்தபடி

அவற்றால் வாழமுடியாததை எண்ணி.

 

அவை ஒரு போதும் தூங்காது,

என்னை தூங்கவும் விடாது – நீங்கள்

எப்போவதாவது அவற்றைப் பார்த்தால்

தயவு  செய்து தூங்கச் சொல்லுங்கள்.

 

நான் இருக்கும் கதிரைக்கு

செங்குத்தாக ஒவ்வொரு திசைகளில்

இருந்துவிடும்,

நான் புத்தகம் ஒன்றை படிக்க எடுத்தால்

அவற்றை வேண்டி அலறல் செய்யும்.

நான் கணத்துக்கு கணம்

புத்தகத்தை செங்குத்தாக

மாற்றியபடியே இருப்பேன்.

 

அவற்றில் ஒன்று மிகவும் அசிங்கமானது.

எதையாவது தேடியபடியே அலையும்,

கட்டிலுக்கு கீழ்

மேசைக்கு கீழ்

உடைகளுக்குள்

தண்ணீர் கோப்பைக்குள்

என் முதுகின் மேல்

 

ஒரு முறை பழைய துணி ஒன்றை எடுத்து

அதன் அசிங்கமான முகத்தை இறுக்கி கட்டியது,

கண்கள் மட்டும் தெரியும் படி.

 

விரைந்து என் புத்தக அலமாரிக்குள்

நுழைந்து கொண்டது,

முக்கி முனகி

ஒரு புத்தகத்தை எடுத்துவந்தது.

 

அவற்றில் இன்னொன்று மிகவும் கறுப்பானது.

வெயில், மழை, காற்று, புயல்

எதுவுமே ஒரு பொருட்டல்ல.

 

புழுக்கள் மிதக்கும் வீதியின்

எல்லா மூலைகளுக்கும் எல்லா எல்லைகளுக்கு

வெறிபிடித்துப்போய் அலையும்.

 

கால்களில் சிதழ் வடிகின்ற

பிச்சைக்காரனுக்கு அருகில் போய் நின்று கொள்ளும் ;

வாய்முழுக்க வெற்றிலை வெடுக்கு வீசும்

கைகளில் சிறுகுழந்தையை வைத்திருக்கும்

நாடோடிக்கு அருகில் போய் நின்றுகொள்ளும்;

கால்களை இழுத்துக்கொண்டு

சதைப்பிண்டங்களாக அலையும்

ஊனமுற்றவர்கள் பின்னால் அலைந்து திரியும்.

 

சேரிகளில் அருகில்

புளுத்துக்கொட்டிப்போய் அசையாமல்

திரண்டு போயிருக்கும் கழிவுக்கால்வாயின்

அருகில் போய்நின்றுகொண்டு

உரத்து கத்தும்;

வெருண்டுபோய்

மீண்டும் உரத்துக்கத்தும்;

படிந்துபோயிருக்கின்ற

நூற்றாண்டுக்கழிவுகளின் திண்ம திட்டுக்கள்

அதிர்ந்து போகுமளவு- ஆனால்

என்னைத்தவிர யாருக்கும் இது கேட்பதேயில்லை.

 

மூன்றாவது மிகவும் நல்லது,

எப்போதும் தூக்கியபடியே இருக்கும்.

அதற்கு

இம்மையும் மறுமையும் கிடையாது;

இரவும் பகலும் கிடையாது;

தனிமை சேர்க்கை கிடையாது;

இன்பம் துன்பம் கிடையாது;

காதல் வெறுப்பு  கிடையாது;

சிரிப்பு அழுகை  தெரியாது.

 

இறப்பை எதிர்பார்த்துக் கிடைக்கும்

ஒரு துண்டுப் பிண்டம்.

அவற்றிக்கு செல்கள் சுவாசிக்கும் சத்தம் கேட்கும்,

இறந்த செல்கள் அழிந்து நொறுங்கும் சத்தம் கேட்கும்.

இவைபோதாதா?

 

இருட்டில்

பெரிதாக எதுவும் தெரியப்போவதில்லை என்ற

நம்பிக்கையில் தான்

புரண்டு புரண்டு தூங்கும்.

 

நீங்கள் நினைக்கிறீர்களா

இவற்றோடு என்னால் இயல்பாக

இயங்க முடியும் என்று,

 

ஒரு பெரிய

பொலிதீன் பைக்குள்

தவளையைக் கட்டி

வெறும் தரையில் விட்டது போலத்தான்;

 

துள்ளும் போதும்

நகரும் போதும்

புரளும் போதும்

அறையின் சுவர்களில்

முட்டி மோதிக்கொள்கிறேன்,

 

என்னைப்பார்த்து சிரித்தபடியே

மூன்றும்;

இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

Big Bad Wolf Books – Numero Zero

நீண்ட நாட்களாக நடைபெற்ற Big Bad Wolf Books புத்தக கண்காட்சிக்கு இரண்டு தடவை சென்றுவந்தேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் ஏற்பட்ட சலிப்பும் உறுத்தல்களும் இதில் ஏற்படவில்லை. முக்கியமான காரணம் இது முழுக்க முழுக்க ஆங்கில புத்தகங்களுக்கான சந்தையாக இருந்தது. ஆரம்பித்து இரண்டாம் நாள் ஒரு முறையும் கடைசி தினத்திலொரு முறையும் போனேன். எழுபத்தைந்து வீத கழிவில் புத்தகங்கள் இருப்பதனால், ஒன்றிரண்டை வாங்கி கொள்ளவும் முடிவோடு போனேன். அகன்ற இலங்கை கண்காட்சி கூடத்தில் புத்தகங்கள் பகுதி பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட இருந்தன. Fictions, Non-Fictions, Cookery, Architecture, Childern section என்று பலவாறு வகைப்படுத்தப்பட்டு புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இடக்கைப் பக்க சுவரினூடு நீளுகின்ற மேசைகளில் நாவல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நவீன சூப்பர் சந்தைகளில் பொருட்களை தள்ளுகின்ற வண்டி ஒன்றை தந்து அனுப்பினார்கள். அதற்குள் ஐம்பது புத்தகங்கள் வைக்குமளவு இடமிருக்கும். இரண்டு தடவையும் பெரும்பாலானோர், அவர்களின் குழந்தைகளை அதற்குள் வைத்து ஒன்றிரண்டு புத்தகங்களோடு தள்ளிச்சென்றதையே அவதானித்தேன். மேலும் சிலர் புத்தகங்கள் நிறைய அடுக்கிக்கொண்டு போனதையும் பார்த்தேன். அவர்களில் பெரும்பாலானோர் வயதான வெளிநாட்டவர்கள். அந்த வண்டியை வைத்து அங்கிருக்கும் சிறுவர்கள் வண்டில் பந்தயம் நடத்திக்கொண்டிருந்தார். நாவல்கள் ஒன்றிரண்டை பிரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த வெளிநாட்டவரோடு அறிமுகமானேன். அவர் ஒரு நாவலை நீண்ட நேரமாக பார்த்துக்கொண்டே இருந்தார். இடையில் ஒருமுறை தனது கைபேசியையும் எடுத்து ஏதோ செய்துவிட்டு என்னிடம் திரும்பினார். நான் மௌனமாக புன்னகை செய்தேன். அவர் தாழ்ந்த குரலில், ” இந்தப்புத்தகத்தை எனது நாட்டில் அறுபது டாலர் கொடுத்து வாங்கினேன், இப்போது இங்கே நான்கு டாலர் பெறுமதியில் கிடைக்கிறது.” என்றார். அது என்னவோ உண்மைதான் பெரும்பாலான நாவல்கள் 550, 600, 700 ரூபாய் மட்டில் தான் இருந்தன. அப்போதிலிருந்து அவரும் நானும் கையிலிருக்கின்ற புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். சில புகழ்பெற்ற நாவல்களைத் தவிர மிகுதி எல்லாம் சமீபத்தில் வெளியான நாவல்கள். மெல்லிய ஜாஸ் இசையுடன்  அனைத்து நாவல்களையும் கையில் தூக்கி அழகு பார்த்தேன். அதிலிருந்து மூன்றை வாங்கிக்கொண்டு வந்தேன்.
இரண்டாவது முறை போவதற்கு முக்கியமான காரணம் Umberto Eco இன் Numero Zero. முதல்தடவை பார்த்துவிட்டு வந்தாலும் என்னுள் அந்த நாவல் சலசலப்பை ஏற்படுத்தியபடியே இருந்தது. எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று கொட்டும் மழைக்குள் கண்காட்சி கூடத்திற்குள் வந்து சேர்ந்தேன். மழையை விட அதிகமாக நான் கண்ட காட்சி என்னை நனைய வைத்தது.இடப்பக்க மூலையில் இருந்த அந்த நீண்ட நாவல்கள் பகுதியை அடையாளமே இல்லாமல் முடித்து விட்டார்கள். அங்கே அப்படியான ஒரு பகுதி இருந்ததிற்க்கான அடையாளமே இல்லை. ஆங்கில நாவல்கள் வாசிக்கின்ற வாசகர்கள் மிகவும் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன். Numero Zero சில பிரதிகள் வேறு புத்தகங்களோடு கலந்து இருந்தன. நம்பிக்கை இன்மையில் ஒரு முறை அங்கிருக்கின்ற ஏற்பாட்டாளர்களிடம் போய் விசாரித்தேன், அவர்களும் மகிழ்ச்சியாக விற்று தீர்ந்துவிட்டது என்றார்கள். மற்றைய பகுதிகள் இன்னமும் மீதமிருக்கின்றனவே என்றேன். அவர் , மற்றைய பகுதிக்குரிய புத்தகங்களில் ஒன்று 200 பிரதிகள் வைத்திருந்தால் நாவல்கள் 10 பிரதிகள் தான் வைத்திருப்போம் என்றார். Umberto Eco இன் Numero Zero நாவலின் அட்டைப்படத்தில் 0 பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஒரு முறை மௌனித்துப்போய் நகர்ந்தேன். 

நிகனோர் பரா – 01

ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தேவைப்பட்டது. ஒவ்வொரு இடைவெளியிலும் மனம் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. கவிதைகள் தருகின்ற அமானுஷ்ய உணர்வு இடைவெளிகளில் பரவும் போது முற்றிலும் வேறு ஒரு சூழல் உருவாகி விடுகிறது. புகையிரதம் எத்தனை வீரியமாக சத்தம் எழுப்பிக்கொண்டு விரைந்த்தாலும், மெல்லிய மேகத்தின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜன்னலினூடாக தென்றல் முகத்தின் தசைகளை வருடினாலும், பாலைவனம் போன்ற வெம்மை இருக்கும். எதிரிலே இருக்கின்ற அத்தனை மனிதர்களும் அழகாக தோன்றுவார்கள் அல்லது அலங்கோலமாக தோன்றுவார்கள் அல்லது மறைந்து போவார்கள். கவிதைகள் மேற்ப்பரிப்பினூடு மகிழ்சியையும் ஆழ்ந்து போகும் போது இறுக்கத்தையும் தரலாம். ஆறு மணிநேரமும் எத்தனையோ சூலுக்கும் உலகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைந்து கொடுத்து வந்திறங்கினேன்.
 
சிலி நாட்டு கவிஞர்களான நிகனோர் பராவையும்(Nicanor Parra) என்றிக் லிஹ்னையும்(Enrique Lihn) முதன் முதலில் வாசித்தேன். இருவரும் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள். நிகனோர் பரா தனது நூற்றி மூன்றாவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1914இல் பிறந்தவர். என்றிக் லிஹ்ன் 1929- 1988 காலப்பகுதியில் வாழ்ந்தவர். நிகனோர் பரா இன்றும் தனது கவிதைகளை எழுதி பிரசுரித்து வருகின்றார்.
 
The Pilgrim – Nicanor Parra
 
எங்களது சாதாரண தர ஆங்கில இலக்கிய தொகுப்பில் Monkeys என்ற ஒரு சிறுகதை இருந்தது-  பெயர் சரியாக ஞாபகம் இல்லை. ஒரு சிறிய வயதுடைய சமனேரா என்னும் பையன், பௌத்த பிக்கு ஆவதற்காக பௌத்த மடம் ஒன்றில் சேர்க்கப்படுகிறான். அவனின் ஆசைகள் பற்றிய வரைவாக அந்த சிறுகதை நகர்ந்து செல்லும். அதில் சமனேரா அதிக நேரத்தை குன்றுகளில் குரங்குகளோடு களிப்பான். அது அவனிற்கு உவகை ஊட்டுவதாக அமையும். இதே போன்ற ஒரு பௌதீக சூழலை இந்த கவிதை நினைவூட்டியது.
மிகவும் சிறிய வயதில் துறவுநிலைக்கு கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுவன், – உலக சந்தோசங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற சாதாரண மனிதர்களை நோக்கி இறைஞ்சுவதாக பரா எழுதுகின்றார். சிறுவனை அடையாளப்படுத்த பரா பயன்படுத்துகின்ற யுத்தி ஆழமானது. அதே நேரத்தில் எனக்கு கவலையை அளித்ததும் கூட.
But, I am a child calling to its mother from behind rocks,
I am a pilgrim who makes stones jump as high as his nose
சாதாரண குன்றின் பின்னால் நின்றுகொண்டு, குன்றை மீறி எட்டிப் பார்த்து தனது அம்மாவை அழைக்க பாய்கின்றபோது மூக்கு உயரம் மட்டுமே மேலேளும்பக்கூடிய சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். நான் வசித்துவந்த நகரத்தின் வீட்டிற்கு எதிரே பௌத்த விகாரை ஒன்றிருக்கிறது. அங்கே பௌத்ததுறவிகள் ஆவதற்காக சிறுவர்கள் வந்திருப்பார்கள். மிகவும் சிறியவயதில் முழுமையாக முடிகளை அகற்றி காவித்துணியும் உடுத்தி உலகின் எல்லா சுகங்களையும் துறந்தவர்கள் போல விகாரைக்கும் அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கும்(அருகில்) ஓடித்திரிவார்கள். பின்னேரங்களில் தங்களை மறந்து இயங்குவதையும் விகாரைக்கு வருகின்ற சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்து விளையாட அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். இவையெல்லாம் சமயத்தின் படி தவறுகள் என்றாலும் மனிதத்தின் படி?
நிகனோர் பரா இதையே வினவுகின்றார். எல்லா மனிதர்களைப்போலவும் தானே நாங்களும் – கனவுகளையும் ஆசைகளையும் வெறுத்து ஒதுக்கிவிட முடியாத போதும் கட்டாயப்படுத்தி அடைத்துவைக்கின்ற நிலைமையை கேள்வி கேட்கின்றார். புத்தர்கூட உலக சந்தோசங்களை அனுபவித்துத் தான் துறவறம் பூண்டார். தங்கள் சொந்த தேவைகளுக்காக பிள்ளைகளின் சந்தோசங்களை அழிக்கின்ற தானம் பற்றி கேட்கின்றார்.
 
A tree crying out to be covered with leaves.
 
எல்லாவற்றையும் மரத்துக்கு தருகின்ற இலைகளை போல அனைத்தையும் வேண்டி நிற்கின்ற சிறுவர்களின் மனநிலையை நிகனோர் பரா எழுதுகின்றார்.
 
இந்தக்கவிதையை ஸ்பானிஷ் மொழியிலிருந்து W.S.Merwin ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருகின்றார்.
 
இந்தக்கவிதையை வாசித்து முடித்தபின்னர் பேரமைதி சூழ்ந்துகொள்கிறது.

சுடர்.

கடிதத்தை நீட்டிய போது அவன் வியப்படையவில்லை. காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டு வழமையான தனது கறுப்பும் சாம்பலும் கலந்த சீருடையை கொடியிலிருந்து எடுத்து இஸ்திரி போடும் பெட்டி உள்ள மேசைக்கு அருகில் நீளமாக இருந்த வரிசையில் அமர்ந்தான். சுற்றியிருந்த எல்லாருமே ஒவ்வொரு கையடக்க தொலைபேசிகளை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரினதும் முகங்களும்  தொலைபேசி வெளிச்சத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஒருத்தன் வேகமாக இரண்டு கட்டை விரல்களையும் திரையில் அமத்திகொண்டிருந்தான். இன்னொருத்தன் தொலைபேசியை கிடையாக மடியில் வைத்து யாருடைய பேட்டியோ அல்லது செய்தியோ பார்த்துகொண்டிருந்தான். பெரும்பாலனவர்கள் கைகளில் நவீனமான தொலைபேசிகளையே வைத்திருந்தார்கள். ஒருத்தன் கையில் மூடிவைத்திருந்த தொலைபேசியின் திரை விட்டு விட்டு மின்னியது. அதைப்பார்த்த போது அவனுக்கு சிறிய வயதில் கோவில் திருவிழாக்களின்  வண்ண விளக்குகளின் ஞாபகத்தில் வந்தது. அப்பாவின் கையையும் அம்மாவின் கையையும் பிடித்து தொங்கியபடியே பார்த்து முடித்த தேர் திருவிழாவும் அடுத்த நாள் தீர்த்தத்திற்கு வந்திருந்த அன்றைய பிரபல வழக்கறிஞ்சறின் மனைவிக்காக வைத்திருந்த குண்டில் அவன் அம்மா அகப்பட்டு இறந்து போனதையும் அந்த மின்னும் ஒளியின் பின்னணியில் மனம் படம் போட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதிரைகளில் இருந்தபடி தங்களின் அம்மாவிடமோ அப்பவிடமோ சகோதரங்களிடமோ மனைவியிடமோ உறவுகளில் யாரவது ஒருவருடனோ கதைத்து கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு நாள் பயணமும் அடுத்த நாளின் விடிவை நிச்சயிக்க முடியாததாகவே இருக்கும். அவனோடு சேர்த்து வெகு சிலர் மட்டுமே இன்னும் பழைய நோக்கியாவை வைத்து காலம் தள்ளுகிறார்கள்.
மகிழன் தரம் ஆறு மட்டுமே படித்திருக்கிறான். அம்மா குண்டு வெடிப்பில் இறந்த பின்னர் தனது தந்தையுடன் தோட்டவேலைகளுக்கு போய்க்கொண்டிருந்தான். இருபது வயதுகளை அவன் நெருங்கும் போது மெலிந்த உயரமான தோற்றத்தையும் சுறுசுறுப்பான போக்கையும்  கொண்டிருந்தான். அவனின் கண்களில் யாரிடமும் இல்லாத தனிமை எப்பொழும் ஒட்டிக்கொண்டே இருக்கும். அதற்காக அவன் தனிமையில் இருப்பவன் என்று சொல்லி விடமுடியாது. அவனுக்கென நண்பர்கள்  இருந்தார்கள். அவனுடனே தரம் ஆறு மட்டும் படித்து பின்னர் சாதாரண தரம் வரை படித்த சுகந்தன் அவனுடைய நல்ல நண்பன். காலையிலும் மாலையிலும் பாத்திகளுக்கு தண்ணீர் கட்டும் வேளைகளையும் தவிர்த்து மற்றைய பொழுதை சுகந்தனுடனே கழித்து வந்தான். சுகந்தன் தனக்கென ஒரு சிறிய சாப்பாட்டு கடை வைத்திருந்தான். உரிமையாளனும் ஊழியனும் அவனே. சுகந்தனுக்கு ஒத்தாசையாகவும் தனது பொழுதை போக்கவும் சாப்பாட்டு கடையை மகிழன் அணுகினான். அங்கிருக்கும் பணிசையும் டீயையும் காலை உணவாகவும் பின்னேரம் சுகந்தன் போடுகின்ற சுடச் சுட அப்பத்தை இரவுக்கு தனக்கும் அப்பாவுக்கும் உணவாகவும் கட்டிக்கொண்டு போவான். மத்தியானங்களில் பெரும்பாலும் அப்பாவுடனே வீட்டில் சோறும் ஒரு கறியும் வைத்து இருவருமாக சாப்பிடுவார்கள். அப்பாவிற்கு வயதாவதை அவரின் சாப்பாடு மகிழனுக்கு காட்டிக்கொண்டே இருந்தது. சுகந்தனுடன் கதைக்கும் போதெல்லாம் அப்பாவையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளத்தக்க வேலை ஒன்றில் வெகு சீக்கிரம் சேர்ந்தாகவேண்டும் என்று கூறுவான். சுகந்தனுக்கும் ஒரு சத பிரயோசனம் இல்லாத சாப்பாட்டு கடையை மூடிவிட்டு நிரந்தர தொழில் ஒன்றில் சேரவேண்டும் என்று ஆசை இருந்தது. இருவரும் பலதடவைகள் வேலை வாய்ப்புகள் பற்றி பேசிக்கொள்வார்கள்.ஒரு தடவை மத்தியான நேரத்தில் மகிழன் பேச்சை தொடங்கினான்.
“ அடேய் , இண்டைக்கு காலம அப்பா காணிண்ட மூலையில இருந்த மரக்குந்து ஒண்ட வெட்ட கோடரியால ஒன்கியிருக்காரு. அது குந்துல பட்டு தெறிச்சு அப்பாட முழங்காலுக்கு கீழ நேர வந்து அடிச்சிட்டு. அவர் அய்யோ எண்டு கத்தேக்க தான் நான் பாத்தன். காலில பெரிய வீக்கம். பக்கத்தில இருக்கிற ஆஸ்பத்திரிக்கு போவம் எண்டா வேணாம் எண்டுட்டார்.”
“பேயா நீ எல்லோ கொண்டுபோயிருக்கணும், எலும்பு கிலும்பு முறின்சிட்டா என்ன செய்வா. “
“நான் எவளவோ கேட்டுட்டன்டா. அவர் வரவே மாட்டன் எண்டுட்டார். போய் ஏதோ இல குல எடுத்து கட்டி வச்சிருக்கார். “
“ அவருக்கும் அறுபதுக்கு மேல ஆயிடிச்சு, இனியும் கொத்தி குனிச்சு வேல செய்ய ஏலுமா? “
“என்னடா செய்வம் ? எனக்கெண்டா ஒண்டுமா விளங்கல”
“ பேசாம இயக்கத்தோட போய்டுவமாடா?”
“ உனக்கென விசரா, ஒரு கொஞ்ச காசும் வராது. ஆமியோட சேந்தா மாசம் மாசம் காசாவது வரும்”
“அதுக்கு உங்க அப்பா ஓமாம ? உன்ன அடிச்சே கொண்டு போடுவார் “
‘இனியும் பொறுக்க ஏலதுடா”
இருவருக்குமான  உரையாடலை நீட்டிக்கொள்ளாமல் மகிழன் எழுந்தான். மத்தியான சாப்பாட்டிற்கு வீட்டை நோக்கி புறபட்டான்.
மகிழன் தன்னுடன் கதைத்த வார்த்தைகள் அவனுக்கு உறுத்திக்கொண்டு இருந்தது. ஆமியில் சேர்வது என்னவோ சரியான வழிமுறைதான், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? இயக்கத்திற்கு போவது தானே வீரம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் தமிழுக்காய் இறப்பது தானே சிறப்பு. இங்கு வாண்டுகளில் இருந்து வயதானார்கள் வரை போராடுகிறார்களே. நமக்கு என்ன குறைச்சல். பக்கத்து வீட்டு ராஜன் வயது பத்தொன்பது தான். பதினேழு வயதில் இயக்கத்துக்கு போனான். இப்போது தனக்கென ஒரு அணியை வழிநடத்தில் செல்கிறான். அவனின் தாத்தா பாட்டி அப்பா அம்மா எல்லோரும் எவ்வளவு பெருமையாக பேசிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு வீரனாக அல்லவா இருக்க வேண்டும். உடல் முழுக்க சீருடையும் தலையில் கவசமும் மார்பில் கவசமும் கையில் உயர் ரக துப்பாக்கியும் கால்களில் பூட்சும் இடுப்பு பட்டியில் எறிவெடிகளும். ஒரு ஐந்து பேரை கூட்டிக்கொண்டு காட்டின் வழியே போர்டரை அடைந்து ஆமியின் தளம் ஒன்றை வெடிக்க செய்தால் எவ்வளவு மதிப்பு மரியாதை. வெடிப்பில் அங்கேயே இறந்தாலும் பறுவாயில்லை. பெயர் சுகந்தன் இல்லை! கப்டன் சுகந்தன்.
“தம்பி ஒரு டீ “
கதிரையில் அண்ணாந்து கிடந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். வாயிலிருந்து வழிந்திருந்த வீணீரை துடைத்து சின்க் அருகில் போய் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிக்கொண்டான். அருகிலிருந்த கண்ணாடி குவளைக்குள் தண்ணீரை நிரப்பி ஒரு அலசு அலசி சின்க்இற்குள் ஊற்றி விட்டு பால்மா பெட்டியை திறந்தான்.
அப்போது சண்டை பெரிதாக ஆரம்பித்திருக்கவில்லை. ஊரில் இருந்த பல குடியினர் ஊரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டை தொடங்கபோவதை முன்கூட்டியே அறிந்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு பக்கத்தாலும் பெரும் நெருக்கடி உருவாகிவிடும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். ஒரு பக்கம் ஆமி, மற்றப்பக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் சின்ன சின்ன குழுக்கள். வயது பால் பேதமின்றி தத்தம் அணிக்கு பலம் சேர்க்கும் ஆட்சேகரிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரில் எல்லோரும் இயக்கபக்கம் தான். எல்லோருக்குமே இயக்கம் வெல்லவேண்டும் தனி தேசியம் வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. அதற்காக குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் துப்பாக்கி ஏந்திய குடும்பமும் இருந்தது. இப்போது இல்லை. சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இயக்கத்தை மதமாகவும் மொழியாகவும் செயலாகவும் சொல்லிகொடுத்தே வளர்த்து விட்டார்கள்.
வெயிலுக்குள் சென்றவனின் உச்சந்தலையில் சூடு பொக்கென இறங்கியது. போனதும் செருப்பை வீட்டு வாசலில் சுழற்றி விட்டு வெறுந் தரையில் கையிரண்டையும் தலைக்கு முட்டு கொடுத்து மல்லாக்காகப்படுத்தான். அப்பா சாப்பாட்டை பற்றி கேட்ட போது காலம் தாழ்த்தி சாப்பிடுவதாக சொல்லி விட்டான். அப்பா ஒரு காலை கதிரையில் வைத்து மட்டையால் விசிக்கியபடி சாய்ந்திருந்தார். வீடு முழுக்க புழுக்கம்.
“ அப்பா ஒரு பேன் வாங்கணும்”
அப்பா ஒண்டுமே சொல்ல வில்லை. விசிக்கி கொண்டே இருந்தார். மழையே இல்லாத வறண்ட காலநிலையால் வயலாலும் தோட்டதாலும் இலாபம் கிடையாது. இரண்டு மாதத்திற்கு முதல் விற்ற கெளப்பியால் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு மாதத்திற்கு அதை வைத்து சமாளித்து விடலாம். அதற்கு பிறகு என்ன செய்வது? எங்காவது கூலி வேலை தான் செய்ய வேண்டும். வயதும் ஆகிவிட்டது. இனி எங்கே கூலி வேலைக்கு கூப்பிட போகிறார்கள். கூப்பிட்டாலும் எவ்வளவு நேரம் வேலை செய்ய முடியும். பேசாமல் இருக்கின்ற ஒரு தோட்டக்காணியை விற்று விடவேண்டியது தான். வேறு வழியில்லை. விற்று விட்டு எங்கேயும் ஒரு சிங்கள குடியேற்றமாய்ப்போய் இருந்து விட வேண்டியது தான். மகிழனுக்கு ஒரு சிறிய வேலையை எடுத்து குடுக்க வேண்டும். விற்று வருகின்ற பணத்தில் எப்படியும் இரண்டு வருடங்கள் தள்ளி விடலாம். அப்புறம் மகிழன் பார்த்து கொள்வான். அவன் என்ன சின்ன பொடியனா?
“ அப்பா நான் வேலைக்கு போகணும். உங்களுக்கும் உடம்புக்கு ஏலாம வந்திட்டு. இனி நீங்க கஷ்டப்பட முடியாது. நான் போறன், எங்கயாவது ஏதோ ஒரு வேலை பாக்கிறன்.”
அவர் இதற்கும் பதில் அளிக்க வில்லை. அவர் மனதில் நினைத்த எதையும் காட்டிக்கொள்ளாமல் மட்டையை  இன்னும் வேகமாக விசுக்கிகொண்டிருந்தார்.
பின்னேரம் மகிழன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு சுகந்தனின் கடைக்கு போய் டீ ஒன்றை போட்டன். மேசைக்கு எடுத்துக்கொண்டுவந்து சுகந்தனுக்கு ஒன்று தனக்கு ஒன்றாக பிரித்து தனித்தனி கண்ணாடி குவளைக்குள் ஊற்றிவிட்டு காத்திருந்தான். சுகந்தன் எல்லாம் முடியும் வரை பாத்துகொண்டிருந்துவிட்டு எழுந்து வந்து மகிழனின் எதிரில் அமர்ந்தான். இருவரும் பேசிக்கொள்ளாமல் டீயை குடித்தார்கள். ஒவ்வொரு இழுவையின் பின்னும் ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொள்வது போல பார்த்தார்கள். மகிழனின் பார்வை சுகந்தனுக்கு கவலையின் குறியீடாகவே தெரிந்தது. சுகந்தனின் பார்வையை மகிழன் அறிந்து கொள்ளுமளவு நிதானத்தில் இருக்கவில்லை.
ஒவ்வொரு கைத்தொலைபேசியும் ஏதோ ஒரு வகையில் உறவுகளை மேம்படுத்திக்கொண்டே இருப்பதாக அவனுக்கு தோன்றியது. தனக்கு அருகிலும் முன்னாலும் இருந்தவனுக்கு அழைப்பு வர அவன் பெரு மகிழ்ச்சி பிரவாகத்தில்  எழுந்து யன்னல் ஓரத்தில் இருந்த இரும்பு வலைகளில் கை விரல்களை கோர்த்துக்கொண்டு கதைக்க தொடங்கினான். மகிழன் எழுந்து தனது சீருடையை எடுத்து மேசையில் வைத்து இஸ்திரி பெட்டியின் சூட்டை கூட்டி இழுக்க தொடங்கினான். கொலர், தோள், கை, வயிறு என்று ஒவ்வொன்றாக இழுக்கப்பட்டு கசங்கியிருந்த பகுதியெல்லாம் சீர் செய்யப்பட்டது. அடுத்து காற்சட்டை , இன்னும் இஸ்திரி பெட்டியின் சூட்டை அதிகரித்தான். முன்னதைப்போல இல்லாமல் வேகமாக இரண்டு இழுவை இழுத்துக்கொண்டு சூட்டினை வழமையான நிலைக்கு திருப்பி விட்டு அவனின் அறைக்கு திரும்பினான். திரும்பும் வழியில் தான் சுகந்தன் அந்த கடிதத்தை நீட்டினான். மற்றவர்களைப்போல அவனுக்கு யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை.அவன் அவசரப்படாமல் அந்த கடித்ததை வாங்கி இஸ்திரி போட்டு கொண்டுவந்த சீருடைகளோடு கையில் ஏந்திக்கொண்டு சுகந்தனோடு அவர்களின் அறைக்கு சென்றான். நேரம் ஆறைத்தாண்டி விட்டது.
சுகந்தன் ஏற்கனவே சீருடை உடுத்தவனாக நின்றான். இன்னும் பூட்ஸ் போடவில்லை. அதற்குள் மகிழனுக்கு கடிதம் வந்திருப்பதாக அறிவிக்கப்பட , மகிழன் குளித்துகொண்டிருந்தான். அதனால் சுகந்தானே சென்று கையொப்பம் இட்டு கடிதத்தை வாங்கிகொண்டான். இது ஒன்றும் முதல் முறையல்ல. மகிழன் அப்பாவை விட்டு பிரிந்து வந்ததிலிருந்து மாதா மாதம் அப்பா மறக்காமல் கடிதம் போடுவார். பதிலுக்கு இவனும் எழுதுவான். இடைக்கிடை தொலைபேசியில் நீண்ட நேரம் இருவரும் பேசிக்கொள்வார்கள். கடிதம் எழுதுவது வீண்வேலைதானே என்று மகிழன் அப்பாவிடம் சொல்லும் போதெல்லாம், தொலைபேசி எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி விடாது. ஆனால் எழுத்துக்கள் அப்படியில்லை, என்று உறுதியாக கடிதங்கள் எழுதுவதில் இருந்தார். மகிழனுக்கு அப்பாவின் கையெழுத்தை கடிதத்தில் பார்க்கும் போதெல்லாம் அவர் அருகில் இருப்பது போல இருக்கும். அதனால் அவனும் கடிதங்களை ஒரு வகையில் விரும்பினான்.அப்பாவின் கையெழுத்துக்கள் அவரைப்போலவே வர வர நோய்வாய்ப்பட்டுக்கொண்டே வந்தன. மகிழன் சீருடையை மேசையின் மீது வைத்து விட்டு, போட்டிருந்த காற்சட்டையை கழற்றி உள்ளாடைகளையும் சீருடையையும் அணிந்தான். அவனின் மெல்லிய உடம்பிற்கு சீருடை தொழ தொழ என்றிருந்தது. அவனின் சகபாடிகள் எல்லோரும் இதை பலமுறை கிண்டல் செய்துள்ளார்கள்.
அவன் சீருடையில் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துகொண்டான். கண்ணாடியில் சீருடையின் மங்கிய விம்பம் பிரதிபலித்தது. அதற்குள் சுகந்தன் பூட்ஸ் போட்டுக்கொண்டு வந்து விட்டான். சுகந்தன் ஆரம்பித்தான்,
“ என்ன மாப்பிள்ளை மாரி நிக்கிற, அடுத்த வருஷம் எப்பிடியும் புது மாப்பிளை தானே, இந்த கடிதமும் அது சம்பந்தமா தான் இருக்கும்.”
“ அப்பிடித்தான் நினைக்கிறன், இந்த ஏலாதவயசிலையும் அப்பா பண்ற வேலைய பாரடா”
“அப்பா எண்டா அப்பிடித்தான்”
“அதுக்காக சேந்த நாலு மாசத்திலேயா ?”
“வயசுக்கு தெரியுமா வேலை பத்தி “
“மனசுக்கு தெரியுமே “
தனது கட்டிலின் கீழிருந்த பூட்சை எடுத்து சொக்சால் பூட்ஸின் மேல்பக்கங்களை தட்டி விட்டு சொக்சை இரண்டு காலிலும் போட்டு விட்டான் மகிழன் பேசியபடியே.
“அப்பா தனிய தான் இருக்கார் , சமச்சு கொடுக்க ஒருத்தி வேணும் அதுக்காகத்தான் ஒம் என்டன்”
“சரி கடிதத்த பிரி “
“இல்ல இருக்கட்டும் வந்து பாப்பம் , நேரமாச்சு . எப்பிடியும் ஒருத்திய முடிவு பண்ணிட்டு தான் கடிதத்த போட்டிப்பார், வேணுமெண்டால் பாரன்” என்று சிரித்துக்கொண்டே கட்டிலிருந்து எழுந்து நிலத்தில் ஒரு துள்ளு துள்ளி மகிழன் எழுந்து நின்றான்.
சுகந்தனுக்கு இது புதுசாக இருந்தது.
மகிழனின் அப்பா மேசையில் அரசாங்க முத்திரை குத்திய சில கடதாசிகளை வைத்திருந்தது பற்றி அப்பாவிடம் முகிழன் எதுவும் பெரிதாக கேட்டு கொள்ளவில்லை. அந்த தாள்கள் வீட்டினதும் தோட்ட காணியினதும் என்று அவனால் ஊகித்துகொள்ளக்கூடியதாகஇருந்தது. அப்பா, முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார் என்பது மட்டுமல்ல மகிழனுக்கும் ஒரு காரணத்தேவை இருந்தது. அடுத்தநாளே பத்திரங்கள் ஒப்பமிடப்பட்டது. வந்திருந்தவர்களுக்கு டீயினை சுகந்தன் கடையிருந்து மகிழன் வாங்கிகொண்டுவந்ததை பார்த்தவர்கள் வீட்டிற்க்கு ஒரு பெண்ணாவது வேண்டும் என்று அப்பாவிற்கு சாடமாடையாக சொன்னார்கள். மகிழனின் அப்பாவிற்கு அது முக்கிய சொற்களாக பட்டது. காணியிலிருந்து இருவரும் குறுகிய நாட்களுக்குள்ளேயே கிளம்பிவிட்டர்கள். சுகந்தன் தான் கட்டில் அலமாரி எடுத்து ட்ரக்டரில் ஏற்றுவதற்கு ஒத்தாசையாக நின்றான்.அவனுக்கு மகிழன் எந்த தேசம் போனாலும் டீ குடிக்க அவனின் காடைக்கு வந்தே தீருவான் என்று ஆழமான நம்பிக்கை வைத்திருந்தான். சுகந்தன் மிக நிதானமாக சாமான்களை பெட்டியில் அடுக்குவதிலும் பின்னர் புது வீட்டில் இறக்கி ஒழுங்குபடுத்துவதிலும் மும்முரமாக வேலை செய்தான். மகிழனுக்குத் தான் சங்கடமாக இருந்தது, அவனை விட்டு பிரிந்து போகபோகின்றோமே என்று மனதுக்குள்ளே கவலைபட்டுக்கொண்டான். எல்லாக்கவலையும் இருவரும் கூம்இற்கு போகும் மட்டும் தான் இருந்தது.
கூம் ஒரு மிதிவெடி அகற்றும் தனியார் நிறுவனம். தனியார் நிறுவனம் என்றால் சம்பளம் அதிகம். வேலைப்பழு அதிகம் தான் ஆனால் அதற்கு ஏற்ற சம்பளம் ஆகிற்றே. கூம் இலங்கையில் ஆரம்பித்து சில வாரங்களே என்பதால் பெரும் திரளான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அவர்களுக்குள் மகிழனும் சுகந்தனும் இணைந்து கொண்டார்கள். சுகந்தன் அந்த டீ கடையை மூடிவிட்டான். முதல் இரண்டு மாதம் பயிற்சி, பின்னர் வேலை.இப்போது நான்கு மாதங்களாகி விட்டது. மகிழனின் அப்பா அவனுக்கு பெண் பார்க்க தொடங்கியும் ஆறு மாதங்கள் ஆகின்றது.
கூமைபற்றி இருவரும் ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களது எண்ணங்கள் எல்லாம் இயக்கத்திலும் ஆமியிலும் மட்டுமே இருந்தன. இளைஞர்கள் பெரும்பாலானோர் இயக்கதிற்க்கே சென்று கொண்டிருந்தனர். வெகு சிலர் வேறு தனியார் குழுக்களுக்கும் சென்று கொண்டிருந்தனர். எழுந்து நடக்க தெரிந்தால் போதும் ஏதாவது ஒரு படையில் சேர்ந்துகொள்ள. மகிழனின் அப்பாவிற்கு சண்டைக்குள் மகனை விட விருப்பமே இல்லை. எங்காவது ஒரு சிறிய வியபாரமாவது அவன் செய்தால் போதும் என்று நினைத்துகொண்டிருந்தார். அவ்வேளை தான் இந்த கூமிற்கு ஆக்கள் சேர்க்கும் நடவடிக்கை மெதுவாக தொடங்கியது. மூவருக்கும் கூம் பாதுகாப்பானதாக தோன்றியது.
இருவரும் ஒன்றாகவே அவர்களின் வீடுகளுக்கு திரும்புவார்கள். இந்த ஆறு மாதங்களில் இருவரும் மூன்றுமுறைதான் வீடுகளுக்கு போயிருக்கிறார்கள். மூன்று முறை தான் அவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டது. இன்று நான்காவது முறை.
அவசரம் அவசரமாக அறைக்கு வந்த மகிழனும் சுகந்தனும் அவர்களது நீண்ட காலுறையை கழற்றி கட்டிலின் கீழே போட்டு விட்டு இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளையும் பேஸ்ட் பிரஷ் சோப் என்பவற்றையும் பைகளுக்குள் உருட்டி திணித்தனர். எல்லா அறைகளிலும் இந்த நிகழ்ச்சி சமாந்தரமாக நடந்துகொண்டிருந்தது. மேசையில் இருந்த கைபேசியையும் வண்டி திறப்பையும் மகிழன் எடுத்துகொண்டு சுகந்தனை வேகப்படுத்தினான்.
“ எடுடா எடுடா ஏற்கனவே நேரமாகீற்று “
“அப்பவே சொன்னான் தானே, கடைல மினகடதா எண்டு “
“என்னடா செய்ய வாங்க வேண்டியதா போயிற்று”
“ சரி கதைய குடுக்காம இரு, லெட்டர் எடுத்திட்டியா ?”
“ இல்லடா பாத்தியா , இன்னும் பிரிக்க கூட இல்ல “
மகிழன் அவசரம் அவசரமாக அவனின் மடித்து வைக்கபட்டிருந்த உடைகளை கிளறினான்.
“ எடுத்திட்டியா ?”
“ இல்லடா நீ வெளிக்கிட்டியா ?”
“ ஓமடா “
“அப்ப வா போவம், எப்பிடியும் இண்டைக்கு அவர நேர்ல பாக்க தானே போரம் “
“சரி சாவி எடுத்தியா “
மகிழன் திறப்பை உயர்த்திக்காட்ட சுகந்தன் சிரித்துக்கொண்டே முதுகை தட்டினான்.
மணி 11 ஐ தாண்டிய நிலையில் தார்வீதிகளில் இருந்து வண்டி மண் வீதிக்கு இறங்கியது. சனநடமாட்டமே இல்லாத இருண்ட வெளியாக இரவு இருந்தது. காற்று வேகமாக இன்னும் வேகமாக வண்டியின் வேகத்திற்கு இணை கொடுத்து ஜக்கெட்டுகளை கிழித்தது. தென்னை இடுக்குகளில் இருந்த சந்திரன் வெட்ட வெளிக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தான். உலகில் எதுவுமே தூய்மை இல்லை என்பது போல இருட்டின் கனதி மிக அதிகமாக இருந்தது. பகல் முழுக்க வேலை செய்த அயர்ப்பும் காகிதத்தில் என்ன இருக்கும் என்ற யோசிப்பும் மகிழனை ஒரு முறை உலுப்பியது. மகிழன் மெதுவாக வண்டியின் வேகத்தை குறைத்து சுகந்தனிடம் பேச்சை கொடுத்தான்.
வண்டி மண் வீதியின் ஏற்றதில் ஏறி இறங்கியது.
பேச்சு கொடுக்க திரும்பிய மகிழன் தூரத்தில் நான்கைந்து வட்ட மஞ்சள் ஒளிபொருந்திய சில வண்டிகள் எதிர்த்துக்கொண்டு வருவதை கண்டான். பேச்சை கொடுக்காமல் திரும்பி வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.பொதுவாக இந்த நேரத்தில் யாரும் கூட்டமாக பயணம் போகமாட்டார்கள். தனியாகவே செல்லுவார்கள். இப்படி ஒரு குழுமமாக வண்டிகளை பார்த்ததும் மகிழன் சுகந்தனை தயார்படுத்தினான். சுகந்தனுக்கு இந்த வீதிக்கு கிளை வீதிகள் எதுவுமே கிடையாது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. இருந்தும் ஒன்றாவது உருவாகியிருக்க கூடாத என்று கடவுளிடம் கெஞ்சி கேட்டான். அவர்களிடம் கூமில் வேலை செய்யும் அடையாள அட்டை இருந்தது. அப்படி மறித்தால் அதைக்காட்டி சென்று விடலாம் என்று இருவரும் பேசிக்கொண்டார்கள். வெளிச்சங்களை நெருங்க நெருங்க அங்கிருந்து எந்த அசைவும் தெரியவில்லை. இன்னும் நெருங்க வாகனங்கள் சில நகராமல் வெளிச்சத்தை மட்டும் பாய்ச்சிய வண்ணம் நின்றது. கட்டாயம் அது ஆமியோ போலிசோ கிடையாது. சில நேரம் உளவுத்துறையாக இருக்குமோ?
நன்கு வளர்ந்த பருமனான ஒருவன் கைகளை காட்டி இறங்க சொன்னான். வண்டி முழு வேகத்தையும் குறைத்து படபடப்புடன் அவர்கள் இறங்கி பின் பாக்கெட்டுக்குள் கையை விட்டு பேர்செய் திறந்து அடையாள அட்டைகளை எடுத்து காட்டினார்கள். அவன் அடையாள அட்டைகளை வாங்கி கொண்டு போய் அங்கிருந்த இருவரிடம் நீட்டினான்.
அவ்விடத்தில் இரண்டு ஆட்டோக்களும் ஒரு மோட்டார் வண்டியும் நின்றது. சிவப்புநிற ஆட்டோக்கள் தான் இரண்டும். வெளிச்சத்தில் அங்கிருந்த எட்டு பேரின் முகத்தையும் உடல் வாகுவையும் மகிழனால் அறிய முடிந்தது. கைத்தொலைபேசியில் இருந்து வந்த ஒளியில் மின்னிய அவனின் தோழர்களின் முகங்களை போல வாகன வெளிச்சத்தில் இவர்களின் முகமும் ஒரு இறுக்கமான பிடியுடன் தெரிந்தது. எல்லோரது முகங்களிலும் நெடுநாளாக மழிக்காத தாடியும் மீசையும் அழுக்காக படிந்திருந்தது. யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் சிங்களவர்கள் அல்ல.
இவை அனைத்தையும் கவனிக்க முன்னரே அவர்கள் மகிழனையும் சுகந்தனையும் சுற்றி கொண்டார்கள். இருவர் ஆட்டோக்குள் சென்று ஒரு பெரிய லாரி டயரை தூக்கிக்கொண்டு வந்தார்கள். சுற்றிருந்தவர்களில் ஒருத்தன் கைகளில் கயிறுடன் வந்தான், இன்னொருத்தன் ஒரு கானுடன் வந்தான். சுற்றியிருந்தவர்கள் இருவரையும் நெருங்க மகிழனும் சுகந்தனும் மிக சத்தமாக தம்மை விடும் படி அலற ஆரம்பித்தார்கள். சுற்றி எங்குமே வீடில்லாத வீதியில் அவர்களின் குரல் காற்றோடு கலந்து நிசப்தமாய் போனது. மகிழன் ஒரு முறை திமிறி அவர்களின் பிடியிலிருந்து விலக எத்தனித்தான். அவர்களின் பிடியிலிருந்து அணுவும் விலக முடியவில்லை. இன்னும் சத்தாமாக கத்தினான். சுகந்தன் மெதுவாக முனகினான். மகிழன் உரத்தை கூட்டி கத்தினான். அடித்தொண்டையின் வளை அதிருமாறு தலையை மேலும் கீழும் ஆட்டி திமிறியவாறு கால்களை நிலத்தில் குத்தி எம்பி எழ எத்தனித்து கத்தினான். சுற்றியிருந்தவர்காளால் அவனின் அலறலை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களில் ஒருத்தன் விறகு குற்றி ஒன்றை கொணர்ந்து மகிழனின் வாய்க்குள் அடித்து இறுக்கினான். விறகின் சிராய்கள் வாய்களின் புறங்களை கிழித்து ரத்தம் சீறி பாய்ந்தது. மகிழன் வலியால் கண்களாலும் காதுகளாலும் மூக்காலும் முனகினான். வாயிலிருந்து ரத்தம் அவனின் மார்பெல்லாம் வழிந்தது.
கையில் கயிறுடன் நின்றவன் இருவரையும் இணைத்து கைகளை மடக்கி கால்களையும் சேர்த்து கால் வயிறு கைகள் கழுத்து என மகிழனையும் சுகந்தனையும் இறுக்கி ஒன்றாக கட்டி விட்டான். அவர்களில் இன்னொருத்தன் மற்றவர்களின் பிடிகளை தளர்த்தி விட்டு தன் கால்களால் இருவரையும் அழுத்தமாக உதைந்தான். இருவரும் மண்ணின் மீது ஒன்றாக கவிழ்ந்தார்கள். விறகு கட்டை மகிழனின் வாயினை இன்னும் ஆழமாக தாக்கியது. மகிழன் மயங்கி போனான். சுகந்தன் சுயநினைவை இழந்து போய் இரண்டு சடலாங்களாகி போனார்கள்.
இருவரையும் சிலர் இழுத்துக்கொண்டு வந்து அருகில் இருந்த நீரோடாத வாடிப்போன வாய்க்காலுக்குள் தள்ளி விட டயரை இருவர் கொணர்ந்து இருவரின் மேலே போட்டார்கள். கொணர்தவர்களின் கண்களில் எந்த சலனமும் இல்லை. நடந்து திரிகின்ற பிணங்கள் போலவே அவர்களும் இருந்தனர். இதுவரை அவர்கள் எவரும் பேசிக்கொண்டாதாய் இல்லை. அவர்களின் உடலும் இயக்கமும் எந்திரதனமாக இருந்தது. நள்ளிரவிலும் அவர்களின் நேர்த்தியான முனைப்பும் இறுக்கமும் உறுதியாக இருந்தது.
அடுத்தவன் கானிலிருந்த மஞ்சள் திரவத்தை அவர்களின் மேலே ஊற்றினான். ஒரு கடவுளுக்கு பாலாபிசேகம் செய்வதை போல மிக மெதுவாக எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றினான். அவர்களில் யாருமே ரசித்ததையும் வெறுத்ததாயும் தெரியவில்லை. மஞ்சள் ஒளியின் மங்கிய பிரகாசத்தில் திரவம் மினுக்கம் கட்டியது. ஒருத்தன் கட்டிபோட்ட இருவரின் அருகிலும் வந்து அவர்களின் அடியாள அட்டைகளை அவர்கள் மீது எறிந்தான்.
மற்றையவன் தனது பின் ஜீன்சுக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்து சுகந்தனின் தலைக்கு குறிவைத்து சன்னத்தை பாய்ச்சினான். துப்பாக்கி முனை ஒரு கணம்  இருட்டில் பற்றி பிடித்து அணைந்தது போல இருந்தது.
குபுக்கென பற்றிக்கொண்டு எரிந்தது டயர், கூடவே இரண்டு பிண்டங்களும்.அந்த வீதி முழுக்க ஒளி அவ்வளவு பிரகாசமாக பரவியது. முனுமுனுத்துக்கொண்டே இருந்து அவர்களின் இறுதி நேரத்து சொற்கள் எல்லாம் வெளிச்சத்தில் கலந்து காத தூரம் போய் அடையாளங்கள் அற்று மறைந்து போயின. தண்ணீரே படாத மண்வீதியின் வாய்கால் திரவத்திலும் ரத்தத்திலும் உறைந்து போனது. டயருடன் மகிழனும் சுகந்தனும் கருகிப்போனார்கள்.
அவ்வளவு நேரம் எரித்தவர்கள் நிற்கவில்லை. அவர்களுக்கு கட்டளையும் அப்படி வழங்க படவில்லை.சன்னம் பாய்ந்த அடுத்த நிமிடம் அவர்களும் வண்டிகளில் பாய்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இது வெறும் தொழிலே. கொள்கைகள் இல்லாமல் சுற்றித்திரிந்த அவர்கள் தெரிந்தெடுத்த பிழையான பாதையினால் மிக சரியாக குழிக்குள் விழுத்தப்பட்ட நிலையே அவர்களது.
ஒரு வாய்க்காலுக்குள் இரண்டு புழுக்கள் நெளிவதைப்போல முடிந்து போனது அந்த இரவும் முகிழன் சுகந்தன் இருவரின் வாழ்கையும்.
மகிழனின் வண்டிக்கு பின் கட்டியிருந்த இருவரது பைகளுக்குள் மகிழனின் பைக்குள் இருந்த  திணித்த உடைகளுக்குள் கண்ணீர் வழிய அப்பாவின் கடிதம் எல்லாவற்றியும் மௌனமாக பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தது.
 

கொழும்பு புத்தக கண்காட்சி 2017 – பாகம் 02

தமிழ் அரங்குகளில் இருந்த புத்தக பல்வகைமை பற்றி பேசியே ஆகவேண்டும். புத்தக தேர்வு என்பது இன்றைய இலங்கை தமிழ் சமூகத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. கொழும்பு போன்ற அவசர நகரங்களில் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறைக்குள் இலக்கிய வாசிப்பு என்பதை எதிர்பார்க்க முடியாத ஒன்று. அவர்களுக்கு கிடைக்கின்ற ஓரளவு நேரங்களில் மனதை சந்தோசப்படுத்தக் கூடிய சில நாவல்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் அரங்கங்களில் முழுமையாக வணிக நாவல்களே இருந்தன. பாலகுமாரன், லட்சுமி, எட்மூரி, ராஜேஷ்குமார், அனுராதா என்று இன்னும் பலர். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவை அவர்களின் ராக்கைகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், ஒரு வணிக நிறுவனம் அதிகம் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய புத்தகங்கள் வணிக நாவல்களாகவே இருப்பதில் எந்தப்பிழையும் இல்லை. ஆனால் அங்கு வருகின்ற நூறில் எப்போதாவது ஒருத்தர், சிறந்த இலக்கியத்தை தேடுகிறார். பல சிறந்த புத்தகங்களை தேடி, இல்லை என்னும் போது மனவருத்தத்துடன் திரும்புகிறார். அவருக்கு இலக்கிய சமூகம் கொடுக்க கூடிய பதில் என்ன? அவரின் வாசிப்பை ஊக்குவிக்காமல் முற்றுமுழுதாக வணிக நோக்கத்துடன் இயங்குதல் என்பது பிழை இல்லை, இழுக்கு.
குறுகிய கால இடைவெளிக்குள் என்னால் இரண்டு புத்தக கண்காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாண நல்லூரில் நடந்த கண்காட்சியில் பங்குபற்றிய சில இலக்கிய வாசகர்கள் ஜெயமோகனை அதிகமாக தெரிவு செய்தார்கள். கொற்றவை, விஷ்ணுபுரம் , வெண்முரசு போன்றவை அதிகம் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறேன். கொழும்பு புத்தக கண்காட்சியில் சிலரால் அதிகம் தேடப்பட்டவர்கள் சாரு, காரல் மார்க்ஸ்(தற்போதைய) , பெருமாள் முருகன், பிரபு காளிதாஸ் போன்றோர். அங்கு அகிலனின் புத்தகத்தை கையில் வைத்திருந்த ஒருவரை  புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்போடு வழியனுப்பினேன்.நான் இங்கு வாசிப்பின் பல்வகைமையை அவதானித்தேன். என்ன தான் இருந்தும் வந்தவர்களுக்கு பெரும்பாலும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
ஓரளவு வயது வந்து வேலைக்கு செல்பவர்கள் தான் வணிக எழுத்தை பொழுதுபோக்குக்காக வாசிக்கிறார்கள் என்றால் பாடசாலை மாணவர்களும் அதையே தெரிவுசெய்கின்றனர். கல்கி சாண்டிலியன் கூட அவர்களால் வாசிக்க முடியவில்லை. வாசிக்க தெரியவில்லை. அவர்கள் தெரிவு செய்யும் புத்தகங்களில் பெரும்பாலானவை குடும்ப நாவல்களாகவே இருந்தன. சில மாணவர்களிடம் வேறு சில புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் பரிந்துரைத்தால் அவர்களுக்கே உரிய திமிருடன் கடந்து செல்கின்றார்கள். அவர்கள் காந்தியையும் சேகுவாராவையும் ஹொப்கின்ஸையும் கூட வாசிக்க நினைக்கவில்லை. எதேர்ச்சியாக YouTube இல் அமெரிக்காவின் நடுத்தர பாடசாலை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினைப் பார்த்தேன். அதில் மாணவர்களிடம் யாரை நீங்கள் வாசிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் உலக இலக்கிய மேதைகளையும் தற்போதைய லத்தீன் அமெரிக்கன் எழுத்தாளர்களையும்  வசிப்பதாக சொன்னர்கள். இவற்றை உண்மையாக வாசிப்பார்களா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. அவர்களுக்கு அவர்களின் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் தெரிந்திருக்கிறது. எம்மவர்களுக்கு அது கூடத் தெரியவில்லை.

பாதி வெளிச்சம்.

பாதி வெளிச்சம் உள்ள ஒரு அறையினைத் திறந்து
நீண்ட நேரம் காத்திருக்கிறேன்,
செக்கு நாற்றம் வீசும் மேனியின் மேல்
செம்மஞ்சள் காவி ஒன்றை சுற்றியபடி :

சுற்றல் ,
அலைதல் ,
தோண்டுதல் ,
பிரித்தல் ,
கிழித்தல்.
இந்த நாற்றம் வீசும் கந்தல் புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும் தான்
என்னை செதுக்கியது,
மன்னிக்கவும் – ஒதுக்கியது
அறையின் சுவர்களில் எதுவுமே எழுதியிருக்கவில்லை
அதனால்,
எழுத கைகள் அற்றவன் என்றோ,
எழுத சக்தி அற்றவன் என்றோ ,
எழுத தெரியாதவன் என்றோ ,
எழுத பழகாதவன் என்றோ அர்த்தமில்லை.
ஒரு பச்சை காகிதத்தின்
மீது பென்சில் கூர் ஒன்றினால் தான் எழுதவேண்டும் ,
பாதி வெளிச்சம் உள்ள பக்கம்
மெல்லிய அதிசயம் ஒன்றிற்காய்
காத்திருக்கிறேன்.
என் இருட்டிய பக்கத்தில்
இருக்கின்ற கிறுக்கல்கள் எல்லாம்
அந்த மெல்லிய வெளிச்சத்தில்
பூக்கட்டும்.

முதலாவது பிறந்ததினம் – அசோகமித்திரன்

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளி அரோகமித்ரனின் பிறந்த நாள். அவரின் இறப்பின் பின்னரான முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே இது அவரின் முதல்ப்பிறந்த நாளாக கொண்டாடுவதில் பிழைகள் எதுவும் இல்லை. அசோகமித்திரன் பற்றிய எனது பார்வையை  இரண்டு காலகட்டமாகப் பார்க்கிறேன். இது வாசிப்பு அனுபவத்தின் படிநிலை வளர்ச்சி/ வீழ்ச்சியின் பொருட்டு நடந்திருக்கலாம்.
அசோகமித்திரனின் முக்கியமான படைப்புக்கள் ஆரம்பத்தில் எனக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. இவற்றையெல்லாம் சொல்ல, பதிய ஒரு எழுத்தாளன் தேவை தானா? அசோகமித்திரனைப்போல் சாதாரண அறிவு உடையவர்கள் கூட எழுதிவிடமுடியுமே? எதிலும் விரிவு இன்றி மேலோட்டமான பார்வை உடைய இவர் எவ்வாறு சிறந்த எழுத்தாளர் ஆவார் ? என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் இருந்தன. தண்ணீர் நாவலை முதன் முதல் வாசித்து விட்டு மனமுடைந்து ஒரு பதிவையும் போட்டிருந்தேன். அதன் பின்னர் அசோகமித்திரனை வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். இந்தக்கால கட்டம் எழுத்தின் மேல் உள்ள அதீத நம்பிக்கையின் காலமாக இருந்திருக்கிறது. எளியவற்றைப் பதிவிடுதல் எவ்வளவு அபத்தமான படைப்புருவாக்கம் என்ற மனநிலை எனக்குள் இருந்தது.
அசோகமித்திரனின் தண்ணீரை இரண்டாம் முறை வாசித்த அனுபவம் உண்மையாகவே மறுவாசிப்பிற்குரியது. மேலோட்டமாக எழுதியிருக்கிறாரே என்று அலுத்துக்கொண்ட பல இடங்கள் என்னை ஆக்கிரமித்தன. எளிமையின் மூலம் நீண்ட கருத்தாடலை உருவாக்குகின்ற வல்லமை அமியின் எழுத்துக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன். அசோகமித்திரனை வாசிக்க தொடங்கிய சிறிது நாட்களிலேயே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அதன் பின்னர் அவரை தேடி வாசித்தது தான் அதிகம் என்பேன்.
யாழ்ப்பாணத்தில் அசோகமித்திரனுக்கு நினைவுக்கூட்டம் கிரிஷாந்தன் மற்றும் அவரின் நண்பர்களால் நடத்தப்பட்டது. அசோகமித்திரன் என்ற ஆளுமை பற்றிய அவர்களின் பார்வை என்னை வியப்பூட்டியது. அதுவே மேலும் அவரை வாசிக்கவும் செய்தது. அதன் பின்னர் தமிழ் மாமன்ற ஏற்பாட்டில் வவுனியாவில் அமிக்கு நினைவுக்கூட்டம் நடத்தினோம்.
அசோகமித்திரனின் பெண்பாத்திரங்கள் மிகவும் வலிமையானவையாக கருதுகிறேன். எல்லா படைப்புகளிலும் பெண் முன்னிலைப்படுத்துகின்ற சமூகத்தை ஏதோ ஒரு வகையில் படைக்கின்றார். அசோகமித்திரனின் எளிமையில் இருக்கின்ற நுட்பமான உரையாடல்கள் வியக்கக்கூடியவை. சமூகப்பிரச்சனை ஒன்றினை முன்வைத்து எழுதப்படுகின்ற அவரின் நாவல்களில் பெரும்பாலானவை காரிய நிறைவு கொண்டவை.
அசோகமித்திரனின் நேர்காணல்களில் காலச்சுவடு இதழில் தேவிபாரதிக்கும் சுகுமாரனுக்கும் வழங்கியிருக்கின்ற நேர்காணல் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாகவும். இதில் அவர் ” அப்படியெதுவும் எதையும் யோசிக்கவில்லை. என்னுடைய கதைகள் எல்லாமே எனக்குத் தெரிந்த மனிதர்களுக்கு நான் செலுத்துகிற அஞ்சலிதான். என்ன பெரிய மகா இலக்கியம்? அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நண்பரைப் பற்றி ஒரு கதை எழுதினேன். அவர் செத்துப் போய்விட்டார். நான் அவரைப்பற்றி எழுதினேன். நாங்கள் இரண்டுபேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவருக்கு ஹிந்தி தெரியும். எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சினிமா பார்க்கும்போது முக்கியமான வசனங்களையெல்லாம் எடுத்துச் சொல்லுவார். ஹிந்திப் பாட்டுகள் அத்துபடி. எந்தப் பாட்டைப் பற்றிச் சொன்னாலும் அது யார் பாடியது எந்தப் படம் என்று டக்கென்று சொல்லி விடுவார். இன்னொரு நண்பர் இருந்தார். அவர் சீரியசானவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பெர்னார்ட் ஷாவையெல்லாம் படித்துப் பேசுவார். ஆர்.கே. ராமசந்திரன், அவர் ஆர்.கே. நாராயணனுடைய சகோதரர்.அவரும் ரொம்ப சுவாரசியமானவர். அவரும் செத்துப் போய் விட்டார். என்னுடைய நண்பர்கள் எல்லோருமே செத்துப் போய் விட்டார்கள்.
(சிறிய மௌனமும் பிறகு பெரிய சிரிப்புமாகத் தொடர்கிறார்)
மகா இலக்கியம் செய்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி எழுத ஆள் இல்லை. எனக்கு இது போதும். ” என்பார்.
அசோகமித்ரன் எழுதுகின்ற பாணி அவருக்கு தனித்தேயான பாணி, அவரைத்தொடர்ந்து அப்பாணியை யாராலும் வெற்றிகரமாக பின்பற்ற முடியவில்லை.
அசோகமித்திரன் என்னும் எளிமையான இலக்கிய மேதை இன்று தனது முதலாவது பிறந்த நாளைக்கு கொண்டாடுகிறார்.
 
காலச்சுவடில் தேவிபாரதி சுகுமாரன் பெற்ற நேர்காணல்
http://devibharathi.blogspot.com/2017/04/blog-post_29.html
எனது அசோகமித்திரன் தொடர்பான கட்டுரைகள்
https://brinthansite.wordpress.com/2017/04/22/அசோகமித்திரன்-குறிப்பு/
https://brinthansite.wordpress.com/2017/06/27/தற்கொலையும்-டீச்சரம்மாவ/