என்னைப் பேசவிடுங்கள் – 02

உன்னதம் இதழில் வெளிவந்த என்னைப் பேசவிடுங்கள் 02 பத்தி. தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை கவிதை நூலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
வாசிக்க – http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/
 
17390475_10210283695026705_7652377388685012484_o

போ – ஹியூகோ – நான் மற்றும் கடவுள்

கடவுளின் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
இரும்பு மூட்டை ஒன்றை முதுகில் சுமந்தபடி
நான் வீதிக்கரை ஓரமாக
தேய்ந்து தேய்ந்து ஊர்கிறேன்.
கடவுள் டீக்கடையில் நிற்பதாக
எனக்கு முன்னால்
இன்னொரு இரும்பு மூட்டையுடன் ஊர்ந்துகொண்டிருக்கும்
ஆலன் போ சொன்னார்.
எனக்குப் பின்னால் ஊர்ந்து கொண்டிருந்த
விக்டர் ஹியூகோவிற்கும் அதையே சொன்னேன்.
ஆலன் போ ஒரு சந்தி முடக்கில்
இயலாமல் நின்று
“As others were—I have not seen
As others saw—I could not bring ”
என்றார்.
நான் சிரித்துக்கொண்டே
” அதைத்தான் நானும் சொல்கிறேன்
யாரும் கேட்பார் போலில்லையே ”
என்றேன்.
ஹியூகோ
” One white plume that like a star,
Streams along the plain afar ”
என்று மற்றப்பக்கம் திரும்பி ஊர்ந்தார்.
போ சந்தியில் நின்று குழம்ப
ஹியூகோ திரும்பி ஊர
நான் நடுவில் தத்தளித்தேன்.
தூரத்தில் கடவுள் டீக்கடையில் நின்று
அனைத்தையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.
 
Poems of relative ones’
https://www.poetryfoundation.org/poems/46477/alone-56d2265f2667d
http://www.gutenberg.org/files/8775/8775-h/8775-h.htm#link2H_4_0035

என்னைப் பேசவிடுங்கள்

” என்னைப் பேசவிடுங்கள்
உங்கள் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன. ”
– எஸ். போஸ்

” இன்று நிலவும் சூழ்நிலையில் கலப்பு கலாசாரப் பின்னணியில் இருந்து ஒரு இளம் எழுத்தாளராக தன் வேர்களை ஆழப்பதிக்க விளையும் ஒருவருக்கு இது இரு மெய்நிகர் உணர்வு ”
– காசுவோ இஷிகுரோ
உன்னதம் இதழில் வெளிவந்த ” என்னைப் பேசவிடுங்கள் ” பத்தி.
வாசிக்க –
http://unnatham.net/என்னைப்-பேசவிடுங்கள்/

நகரத்தின் குறிப்புகள் – 03

நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். முன்னால் கூனியபடி தலைக்கு முக்காடு மாதிரி ஒன்றால் மூடி சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார்.
பயணங்களின் போது நான் அருகிலிருப்பவர்களோடு பேசுவது மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் வந்தாலன்றி பேசுவதே இல்லை என்றுவிடலாம். பெரும்பாலும் இரண்டு நகரங்களுக்குத் தான் அதிகமான பயணங்களைச் செய்துள்ளேன். இரண்டும் எதிர் எதிர்த் திசையில் உள்ளவை. முதலாவது நகரத்திற்கு அதிகாலையில் போய் நடு வெயிலிற்கு திரும்பி விடுவேன். இரண்டு மூன்று மாதங்களை தொடர்ச்சியாக இதே போக்கினைப் பின்பற்றினேன். அதிகாலையில் நித்திரைக் குறையில் பேரூந்தில் ஏறுவதால் மிகுதி நித்திரையை பேருந்திலேயே முடித்துவிடுவேன். இதன் காரணமாக யாரிடமும் காலையில் பேசுவது கிடையாது. மத்தியானமும் இதே பிரச்சனை தான். கொளுத்துகின்ற வெயிலில் பேரூந்தில் ஏறி இரண்டரை மணித்தியாலங்கள் இலகுவாகக் கடக்க ஒரே வழி நித்திரை தான். இதனால் முதலாவது நகரத்தின் பேரூந்துப் பயணங்களில் எந்த நிகழ்வுகளும் மனதில் தங்கியதே கிடையாது. அப்படி ஏதாவது ஒன்றிரண்டு ஞாபகம் இருக்கும் என்றால் அது – நடத்துனர் பயணச் சீட்டுக்காக ஆழ்ந்த நித்திரையை குழப்பிய சந்தர்ப்பங்களாகவே இருக்கும்.
 
இரண்டாவது நகரத்தின் பயணங்களை இருட்டிலேயே தொடங்கி இருட்டிலேயே முடிந்து விடும். இரவு பதினொன்றிக்கு ஏறினால் காலை நான்கு முப்பத்திற்க்கு இறக்கிவிடுவார்கள். நினைவில் நிற்கக் கூடிய சம்பவங்கள் இருந்தாலும் மனிதர்கள் யாருடனுமே பேசிக்கொள்ளவில்லை. நினைவில் அதிகமாக நிற்கிற ஒரே விடயம் – இஞ்சி தேத்தண்ணீர். நடு ராத்திரி ஒன்று முப்பது மணியளவில் பேரூந்து கடை ஒன்றின் அருகில் நிறுத்தப்பட்டு சாப்பிடவும் மலசலம் கழிக்கவும் நிறுத்துவார்கள். அங்கே இருபது ரூபாய்க்கு இஞ்சி தேத்தண்ணீர் நல்ல சுவையாக இருக்கும். நடு ராத்திரிக்கு சூடான தீத்தண்ணீர் அருமையான பொருத்தம். இரண்டாவது நகரத்தில் நீண்ட நாட்கள் தங்கிவிடுவதால் அங்கிருந்து திரும்புவதும் இதே போன்ற ஒரு இருட்டிலேயே நடந்துமுடிந்துவிடுகிறது. எஸ் ராமகிருஷ்ணன் எதிலோ எழுதியது போன்ற ஒரு ஞாபகம் இருக்கிறது. சரியாக அதே வசனங்கள் இல்லா விட்டாலும் இதே கருத்தையே தரும். ” நான் பயணங்களின் போது மனிதர்களுடன் நட்புக்கொள்வது இல்லை. குறுகிய நேர இடைவெளியில் முடிந்து விடுகிற நட்புக்கள் வருத்தத்தை தருவன.” ஆனால் அவர் சொல்வதைப்போல நான் கொள்கை கோட்பாடுகளுடன் பயணங்களில் மனிதர்களை தவிர்த்தது கிடையாது.
இப்படியிருக்க நகரத்தின் குறிப்புகள் 03 இன் ஆரம்பத்தில் வருகின்ற அம்மா எங்கிருந்து வந்தார் என்ற கேள்வியுடன் தொடர்கிறேன். இரண்டாவது நகரத்தில் – இந்தக் கணத்திலிருந்து “நகரம்” என்றே அழைப்போம் – நான் இருக்கின்ற வீட்டிலிருந்து தினமும் போகவேண்டிய தூரம் 21 கிலோ மீட்டர். வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கி 1 கிலோமீட்டர் நடந்து பதின் மூன்று ரூபாய்க்கு முதலாவது பேரூந்து எடுத்து பின்னர் இறங்கி மீண்டும் 500 மீட்டர் அளவு தூரம் நடந்து முப்பத்தைந்து ரூபாய்க்கு இரண்டாவது பேரூந்து எடுத்து நீண்ட நேரம் – கிட்டத் தட்ட ஒன்றரை மணித்தியாலம் பயணம் செய்து இன்னொரு சந்தியில் இறங்கி மூன்றாவது பேரூந்து 10 ரூபாய்க்கு எடுத்து போய்ச் சேர்வேன். ஒரு நாளில் இரண்டு முறை இதே மாதிரியாக பயணம் செய்யவேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் போகவும் வரவும் செலவாகிவிடும். இனி வருகின்ற காலங்களில் இப்படியான சாத்தியம் மிகவும் குறைவாகிவிடும். ஏனென்றால் தினமும் போகவேண்டிய இடத்திற்கு மிகவும் அருகிலேயே வீடுபார்த்து போய்ச் சேர்ந்துவிடுவேன். அதனால்த் தான் நகரத்தின் குறிப்புகள் 03 – இந்த தினமும் நடக்கின்ற நான்கு மணித்தியாலப் பயணத்தைப் பற்றியதாக இருக்கப்போகிறது. முக்கியமாக அதில் சந்தித்த மனிதர்களைப் பற்றியது.
 
வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தேன். பின்னாலிருந்து ஒரு கை என்னைத் தட்டியது. அப்போது பேரூந்து தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அல்லது வாழ்வது போல தோற்றமளிக்கின்ற இடங்களினூடாக நகர்ந்துகொண்டிருந்தது. என்னைத் தமிழர் என்று எப்படி அடையாளம் கண்டுகொண்டார் என்பதைப் பற்றித் தெரியவில்லை. ஆனால்த் தமிழில் ,”ஒரு அம்பது ரூபா இருக்கா? டிக்கெட் எடுக்க காசில்லை.” என்றார். பார்க்க எழுபது மதிக்கத்தக்கவர். முன்னால் கூனிப்போய் தலைக்கு முக்காடிட்டிருந்தார். ஆனால் முஸ்லிம் இல்லை.
நான்கு இருபது ரூபாய்த் தாள்களுக்கு அடுத்திருந்த ஐம்பது ரூபாய்த் தாளை வெளியே எடுத்தேன். இங்கிருந்து அங்கு செல்வதற்கு இருபத்து மூன்று ரூபாய் மட்டும் தானே, என்று நினைத்தபடி பின்னால் திரும்பி அந்த அம்மாவிடம் பணத்தை நீட்டினேன். சந்தோசமாக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டார். தொடர்ந்து போகப் பணமில்லைப் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.
 
எனக்கு கிடைக்கின்ற இந்த நான்கு மணித்தியாலங்களைப் பெரும்பாலும் வாசிப்பதற்கும் இசையை கேட்பதற்கும் பயன்படுத்திக்கொள்வேன். எப்போதுமே எனது பையுக்குள் ஒரு புத்தகம் இருக்கும். கனமான புத்தகங்களை எடுத்துச்செல்லமாட்டேன். மெல்லிய புத்தகங்கள் தான. கூடவே இயர் போன்களும். பயணங்களின் போது வாசிப்பிற்கு சிறந்தது எது என்று தெரியவில்லை. சிறிய புத்தகங்கள் எதுவாயினும் அதை எடுத்துக்கொண்டு போய்விடுவேன். முதன் முதலாக வசித்த புத்தகம் யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடம். பின்னர் பிரமிள் என்று நீண்டு செல்லுகிறது. இதுவரைக்கும் பயணங்களின் போது – நான் அவதானித்ததன் படி ஒரே ஒருத்தர் மட்டும் தான் புத்தகம் ஒன்றினை வாசித்துகொண்டிருந்தார். சுற்றி நன்றாக உறையிடப்பட்ட சிங்களப்புத்தகம். மூக்குக் கண்ணாடி அணிந்தவாறே என்னை நோக்கிப் புன்னகைத்துவிட்டு யன்னலோரம் தள்ளி இருந்தார். வயது அறுபதைத் தாண்டியே இருக்கவேண்டும். முகம், கழுத்து, கைகள் எல்லாம் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அப்போது வைத்திருந்த புத்தகத்தை விடியவே வசித்து முடித்து விட்டபடியால் மீண்டும் அதை எடுத்து புரட்டுவது எனக்கு செயற்கையாக இருக்கும் எனத் தோன்றியது.அந்தப் பெண்மணியே நான் பயணத்தில் சந்தித்த முதலும் கடைசியுமான வாசகர்.
 
சரி, அந்த அம்மா இவை எதையாவது வைத்துத் தான் என்னைத் தமிழ் என்று அடையாளம் கண்டுகொண்டிருப்பாரோ என்றால்- அதுதான் இல்லை. அன்று இசை தான் கேட்டுக்கொண்டிருந்தேன். சந்தோசமாக வாங்கிக் கொண்ட அந்த அம்மா, அடுத்த தரிப்பிலேயே இறங்கி விட்டார். ஒரு வேளை எனது நகரத்தின் குறிப்புகள் இரண்டை வாசித்த கோபத்தில் யாரேனும் ஒரு பிச்சைக்கார அம்மா என்னைப் பழிவாங்கத்தான் இப்படி சதி செய்திருப்பாரோ? இருக்கவே இருக்காது. அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை தான் அறுபத்து ஏழு ஆயிற்றே.
 
கூறியது போலவே மெல்லிய புத்தகங்களைத் தான் எடுத்துச் செல்வேன். விதிவிலக்காவதுமுண்டு. இரவு வாசித்து முடியும் தறுவாயில்களில் நிறுத்தப்பட்ட புத்தகங்களைக் கொண்டுபோய் வாசிப்பதும் உண்டு. Umberto Eco இன் The Prague Cemetery என்ற நாவலை இப்படித்தான் வசித்து முடித்தேன். பின்னேரம் மணி இரண்டு அல்லது மூன்று தான் வரும். யன்னலோர இருக்கையில் இருந்து நாவலை விரித்து கைத்தொலைபேசியில் அகராதியையும் திறந்து வைத்துக்கொண்டு ஆரம்பித்தேன். பத்து பதினைந்து நிமிடங்களின் பின்னர் எனது அருகில் மத்திம வயதினையுடைய ஒருத்தர் வந்திருந்தார். நான் வாசிப்பதை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். இடையிலே ஒருமுறை திரும்பி சிரித்தேன். பதிலுக்கு அவரும் சிரித்தார். நான் இறங்கும் புகைவண்டி நிலையத்திற்கே அவரும் பயணச்சீட்டினை எடுத்துக் கொண்டதால் இனிவருகின்ற ஒரு மணித்தியாலமும் எமக்கருகில் இவர்தான் என்று முடிவாகி விட்டது. அவர் சிங்களத்தில் ஏதோ கேட்டார். எனக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் – இனி உரையாடல் ஆங்கிலத்திலேயே தொடரும்.
“its ok. do you read novels? ”
” yes ” a deep silence prevails.
and gain he started,
“are you from kerala? ”
” no, i am from ……… , tamil ” , he might be confused by my color and looks.
“oh! what are you doing? ”
” i am …………………in …………….”
“isnt it? not every one in that field read this kind of books. ”
” may be you are correct, but in tamil there is a writer called Sujatha, he is also ……………… , and he also wrote many novels , short stories, columns. he is a significant figure in tamil literature ”
” oh really. its exiting. ”
and again a deep silence between us. and again he didn’t ask any question.
இதை ஏன் இவ்வளவு விவரமாக எழுதவேண்டிய தேவை வந்தது என்றால் – என் பயணங்களில் இவரைத்தவிர வேறு யாருமே என்னிடம் புத்தகங்கள் பற்றிப் பேசியதே கிடையாது.இப்போது தான் எனக்குள் அந்தக் கேள்வி உதித்திருக்கிறது. நான் அங்கே நடந்த புத்தகக் கண்காட்சி ஒன்றைப் பார்த்துவிட்டு கோபமாக –
” புத்தக கண்காட்சியின் எல்லா இடமும் சிங்கள புத்தகங்கள் நிறைந்து கிடந்தன. சிங்கள புத்தகங்களில் முழுமையானவையும் இலங்கையின் அச்சு துறையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டவை. சிங்கள இலக்கியத்தின் வளர்ச்சியும் விஸ்தரிப்பும் மேய் சிலிர்க்க வைத்தது. புனைவுகளும் அபுனைவுகளும் இந்த சிறிய தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தினரால் எழுதி குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தனிப்புத்தகம் என்றாலும் மக்கள் தொகையை விட அவர்களின் புத்தகங்கள் அதிகமானவையாகத் தான் இருக்கும். புத்தக வடிவமைப்பு சீரானதாக இருக்கின்றது. அட்டைப்படங்கள் அட்டைகள் காகிதங்கள் என்று எல்லாமுமே செய்நேர்த்தியுடன் இருக்கின்றது. அவர்களின் தனித்துவ இலக்கிய இருப்பிற்க்கான முயற்சியும் படைப்பூக்கமும் மேய்ச்சத்தக்கது. அதே நிலையில் எமது படைப்புக்கள்? ” என்று ……………புத்தக கண்காட்சி ………. என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். இதில் நான் கூறியிருப்பது போல பார்க்காமல் விட்டிருந்தாலும் ஒரு நாளுக்கு இருவர் கையில் புத்தகம் வைத்திருந்திருப்பார் என்று பார்த்தாலும் எத்தனையோ மனிதர்களை அல்லவா சந்தித்திருக்க வேண்டும்.
 
இந்தக் குறிப்புகள் முழுவதும் புத்தகங்களுடையே முடிந்து போய் விட்டது. ஆனால் இதைவிட ஞாபக அடுக்குகளில் பதிந்திருக்கின்ற சம்பவங்கள் இன்னமும் நிறைய இருக்கின்றன. அவை நகரத்தின் குறிப்புகள் 04 ஆக வரலாம் – வராமலும் போகலாம்.ஆனால் உடனேயே நகரத்தின் குறிப்புகள் 03 ஐ எழுதத் தூண்டியது ஒரே விடயம் தான். எனது நகரத்தில் இருக்கும் போது பேருந்துகளை பாவிப்பதும் அரிது. வாழ்க்கையில் பத்து முறைக்கு குறைவாகத் தான் இருக்கும். பெரும்பாலும் துவிச்சக்கர வண்டி தான். இன்று சன நெரிசலோடு எதிரே வந்த பேரூந்தைக்கு இடத்தை விட்டு துவிச்சக்கர வண்டியை திருப்பும் போது தான் என் வாழ்க்கையில் முதன் முதலில் எனது நகரத்துக்குள்ளேயே ஓடுகின்ற பேரூந்தின் இலக்கத்தை அவதானித்தேன். அப்படிப் பார்க்கையில் 100 , 101 ,154, 168, 255, 255/1 என்பவை என் அனுபவங்களில் முக்கியமானவை தான்.
 
 

குடிமைகள் – சாதியமும், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும்.

ஓர் இலக்கியப் பிரதி சமூகத்திற்கு எதையெல்லாம் கடத்தப்போகிறது என்கிற கேள்வியில் தான் ஆரம்பிக்கிறது விமர்சகர்  ஒருவரின் தேடல்.  வாசகர் ஒருவர்  இலக்கியப்பிரதி ஒன்றினை, அதுவும் சிறுகதை,கட்டுரை,கவிதைகளுக்குச் செலவழிக்கின்ற நேரத்தின்பங்கினை விடப் பலமடங்கு அதிக நேரத்தை ஒதுக்கி நாவல் ஒன்றை வாசிக்கும் போது; அவருக்குக் கலை என்பதைத் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது. மற்றைய எல்லா வடிவங்களிலும் கூறிவிடமுடியாத ஒன்றை, நாவல் கடத்தவேண்டிய தேவை ஒன்றிருக்கிறது. அது வாசகரைச்  சென்றடைகிறது/ இல்லை என்பதைத் தாண்டி வரலாற்றின் ஓட்டத்தில் அது கலந்து கொள்ளப்படவேண்டும். எந்த வேறு இலக்கிய வடிவத்திற்கும் இல்லாத இந்தத்  தனித்தன்மை நாவலிற்கு மட்டுமே உள்ளது. நாவல் வாசகருக்கு மட்டும் அல்ல, வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர், மாணவர், அரசியல் சார்புடையவர் என்று இன்னொரு சந்ததியின் மனிதர்களுக்கு, இன்னொரு கலாச்சாரத்தின் மனிதர்களுக்கு நாவலின் பண்பாட்டுச் சமூகத்தை கடத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. எம்மால் இன்றுபரவிப் பேசப்படுகின்ற தூரத்துக் கலாச்சாரங்களெல்லாம் நாவல் வழி உள்நுழைந்தவை தான். எந்தப்பண்பாடும் எழுத்துரு பெறப்படும்போது தான், நம்பிக்கையாகக் கடத்தப்படுகிறது. எனவே சமூகம் ஒன்றில் நாவல் உருவாக்கம் பற்றிய திடமான எண்ணநிலைமை வேண்டும். நாவல் ஒரு சமூகத்தையே கடத்துகின்ற வல்லமை பெற்றது. அதே சமயம், ஒரு சமூகத்தின் அடையாளத்தை அப்படியே அழித்துப் பூசிவிடக்கூடியதும்.   
நாவல்களின் மூலம் கடத்தப்படவேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சாதியம். இது ஏன் கடத்தப்படவேண்டும்? கடத்தப்படாமல் இருந்தால் அப்படியே அழிந்து போய்விடுமே என்ற கேள்விகள் மிகவும் மேலோட்டமானவை. இன்று இலங்கை வடக்கில் யாரும்சாதிய அடிப்படையில் பிரிந்து இருக்கவில்லை, அவர்களுக்கு என்று தனித்தனி பிரதேசங்களில் வேறு வேறு சாதிய அடிப்படையில் குடியிருக்கவில்லை, இன்று எல்லோரும் சிகை அலங்கரிக்கும் கடைகளில் தான் முடிவெட்டுகிறார்கள் – இதனால் சாதியம் இறந்துவிட்டது என்பது சரியா? இன்னும் சாதியம் ஒழிந்து போய்விடவில்லை என்பதற்கு, இன்றைய மரணச் சடங்குகளும் திருமணங்களும் ஆதாரம். இன்னும் பறை அடிப்பவர்களும் கட்டாடிமார்களும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். படித்து வளர்ந்தசமூகத்தினரிடமே சாதியவெறி இன்னும் ஒழியவில்லை. எனக்கு நெருக்கமான நண்பன், அவன் மருத்துவபீடம் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் என்னிடம் பேசுகின்ற போது, அவனுக்குச் சாதியினால் உண்டான தாழ்வு மனப்பான்மை குறித்து வருத்தத்துடன்குறிப்பிட்டான். என்ன தான் வளர்ந்தாலும் தாங்கள் டோபிகள்( சலவை செய்வோர்) என்ற சாதியக் கட்டமைப்பை உடைக்கவே முடியவில்லை என்று வருந்தினான். இது இன்னமும் ஒழிக்கப்படாத சாதிய ஊடுருவலின் கூறுகள். இதைப்பற்றிய அறிவு அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனால், சாதியம் என்ற பெயர் இல்லாமல் – அதே அமைப்பு முறை உருவாகிவிடும். இது மறைத்தல் பண்பாட்டின் பெரும்  சிக்கல். இந்த சாதிய அமைப்புக்கள் எல்லாம் அறிவித்தல் என்பதை காட்டிலும் கற்பித்தல் என்கிற வழியில், உண்மை நிலைகள் புலப்படுத்தப்படவேண்டும்.
இன்று ஈழத்து நாவல் ஒன்றில் அதிகம் பேசப்படவேண்டிய பொருள் யுத்தமாகவே உள்ளது. இது காலத்தின் இன்றியமையாத பிரதிபலிப்புச் செய்கை. போரிலக்கியங்கள் இன்று எதிர்பார்க்கின்ற அளவு, உள்ளடக்கத்திலும், எண்ணிக்கையிலும் கனதியானவை வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதிகமாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றன. உண்மையான போரின் மொழியும், அணிகலன்களும் உலக சமூகத்திற்குச் சரியாகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் உலகளாவிய கலாசாரம் பற்றிய நிகழ்த்துகை விவாதங்கள் இலக்கியங்களின் மூலம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எல்லா வகையான பருப்பொருள்களைப் பற்றியும் பேச்சுக்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்தும் பரவலாகப் பேசுகின்ற,  விவாதிக்கின்ற, ஆவணப்படுத்துகின்ற ஒரு  சமூகத்தில் சாதியம் பற்றிய முற்போக்கு வாதங்கள் மிகவும் குறைவு. தேசியம் பற்றியும் போரின் அழிவுகள் பற்றியும் பேசுபவர்கள் சாதியம் போன்ற உள் முரண்பாடுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசி சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்போராடும்போதே அவை முற்போக்குக் கருத்தியலாகும்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பஞ்சமர்களில் ஒரு பிரிவான அம்பட்டர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்ற நாவல் குடிமைகள்’. இந்நாவல்  இலங்கையின் மூத்த எழுத்தாளரான தெணியான் என்ற புனைபெயருடன் எழுதுகின்ற கந்தையா நடேசுவால் எழுதப்பட்டது. இலங்கை அரசினால் 2014ல் சாகித்ய ரத்னா என்ற உயர் விருது தெணியான் அவர்களுக்குக் ‘குடிமைகள்’ நாவல் மூலம் கிடைத்தது. இலங்கையின் வடக்கிலிருக்கின்ற ஒடுக்கப்படும் சாதியாகிய சிகை திருத்தும் தொழலாளர்களை மையமாக வைத்து, அவர்களின் வாழ்க்கை முறை, ஆசைகள் , பிரச்சினைகள், எதிர்ப்புக்கள், போராட்டம், புறக்கணிப்பு என்று எல்லாவித அக-புற வாழ்வியலினைத் தெணியான் குடிமைகள் மூலம் ஆவணம் செய்கின்றார். தனது ஐம்பது வருட அனுபவத்தையும், காட்சிப்புல நினைவுகளையும் ஒன்றிணைத்துக்குடிமைகள் நாவலை எழுதியுள்ளார். நாவல் இலங்கையின் வடக்கே இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் வடமராட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றது. இதைவிட மலையகத்தின் பதுளை நகருக்கும், கொழும்பு நகருக்கும் நாவல் நகர்ந்து போய் வருகின்றது. நாவல் 1960-70 காலப்பகுதியினை மையமாகக் கொண்டிருந்தாலும்,  நாவலில் நடக்கின்ற சம்பவங்கள் இன்றைய சமூகத்திலும் பரவலாகக் காணப்படுகின்றன. இன்னும் கிராமங்களில் ஒவ்வொரு சமூகத்தினரையும் பிரிக்க ஒரு வீதியோ ஒரு வெறும் நிலமோகாணப்படுகிறது. வளர்ந்து நிற்கின்ற நகரங்களில் இவற்றை அவதானிக்க முடியாது. எல்லாச் சமூகத்தினரும் ஒன்றோடு  ஒன்று கலந்தே வாழுகின்றனர். இருந்தும் அவர்களிடையே இருக்கின்ற உளவியல் வேற்றுமை மாறாமலேயே இருக்கின்றது. தெணியானுடைய நோக்கம் நாவலிலிருந்து அம்பட்டர் சமூகத்தின் பண்பாட்டையும் வாழ்வியலையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துவதே  ஆகும். பிறப்பின் மூலம் ஆதிக்க சாதியினர் உயர்ந்தவர்கள் என்றும் அம்பட்டர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெளியுலகத்திற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. ஆதிக்கச் சாதியினரால் பல வகைகளில் ஒடுக்கப்படும் சாதியினர் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை ஆழ்ந்து பேசுகின்ற தொனியே தெணியானின் குடிமைகள்.
(01)
மிகவும் முக்கியமானதொன்று நாவல் பேசுகின்ற அழகியல். விரிந்த பண்பாட்டு அமைப்புடைய சாதியம் ஒன்றின் பண்பாட்டு வெளிப்பாடு அதிகமாகப் பௌதீக அமைப்பிலேயே தங்கியிருக்கிறது. தனக்கென்று நிலம் இல்லாமல், வேளாளர் நிலத்தில் குடியிருக்கிறகுடிமைகளின் பௌதீக, உளவியல் அழகியல் மிகவும் வித்தியாசமானது. அவர்களது பௌதீகச் சூழல் முழுதாக ஆதிக்கச்  சாதியினரால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் தேவைகளுக்கு ஏற்பக் குடிமைகளின் சுற்றுச் சூழல் வடிவமைக்கப்படுகிறது. சொந்த நிலம் ஒன்று இல்லாமல், அதில் அடிப்படை  வசதிகள் சரியாக இல்லாமல், அதை வெளிப்படுத்துவதிலும் பெரும் இடர்களைச் சந்திக்கின்ற ஆனால் அந்தச் சூழலுக்கே தன்னை இசைவாக்கப்படுத்திக் கொண்ட தாழ்த்தப்பட்ட  சமூகத்தின் குரல் நாவலில் எல்லாத்திசைகளிலும் ஒலிக்கின்றது. அம்பட்டர் சமூகத்தின் நீர்ப்பிரச்சனை தான் நாவலின் தொடக்கப் புள்ளி. நீர்ப்பிரச்சனை இயற்கையானது அல்ல, அதுவும் ஆதிக்கச் சாதியின் அடக்கு முறையே என்கிறார்,
‘கட்டாடிக்கு கிணறுவெட்டிக்கொடுத்திருக்கிறார்கள். ………….. கோடைகாலம் வந்துவிட்டால் மழைநீர் தேங்கி நிற்கும் துரவுகள் வற்றிப்போகும்…….. வெள்ளாவியில் வைத்து வெளுப்பதற்கு தண்ணீருக்கு எங்கே போவது?…..நயினார்கள்மார் என்ன காரியம் செய்தாலும் தமக்குகிடைக்கக்கூடிய நன்மைகளை கணக்குப்போட்டுத்தான் செய்வார்கள்’ (குடிமைகள் : பக்கம் 29)
தெணியான் கிணற்றைச் சுற்றி வரைகின்ற வரைவுகள் முக்கியமானவை. கிணற்றில் தண்ணீரே அள்ள முடியாத சமூக இளம் பெண்களை, எந்த ஆதிக்க சமூக ஆணும் தீண்டத் தகாதவர்களாகப் பார்ப்பதேஇல்லை. அவர்களுடைய காமம் சாதியைப் பார்ப்பதுஇல்லை. தாழ்ந்த சாதியினரைக் குடிமைகள் தொழில் பார்க்க மட்டும் அல்ல, தமது இச்சைகளைத் தீர்க்கவும் போகப் பொருளாக பார்க்கிறார்கள். குடிக்கத் தண்ணீர் எடுக்க நாயினார்மார்களின் கிணற்றுக்கு வருகின்ற அம்பட்ட சமூக வயதான பொன்னிஅனுபவிக்கின்ற இன்னல், அவள் வயதோடு வேறுபட்டிருக்கின்றதே தவிர மாறவில்லை. ஆரம்பத்தில் உடலளவிலும் பின்னர் உளவியலாலும் நோகடிக்கப்படுகின்றாள். உயர் சாதிப்பெண்களிடம் இருந்து தண்ணீர் பெறுகின்ற நிலையைப் பிச்சை எடுக்கும் நிலையைவிட மோசமானதாகக் கருதுகின்றார்கள். அங்கே விழுகின்ற வசைகளுக்கும் வயது வித்தியாசத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயதான பொன்னிக்குத் தண்ணீர் ஊற்றிவிட யாரும் முன்வரவில்லை, முன்வந்தவர்கள் சினக்காமல் ஊற்றிவிடவில்லை, சொந்தமாகத் தண்ணீர் ஊற்றக் கூட தகுதி அற்ற குடிமைகள். கிணற்றைச் சுற்றித் தெணியான் கட்டி எழுப்புகின்ற கேள்விகள்  ஆழமானவை.
(02)
சாதியம் பிரிவினையை ஏற்படுத்துவது போலவே,அவ்வாறு பிளவுண்ட மனிதர்கள் தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்ற உயர்வு-தாழ்வைத் தெணியான் சித்திரிக்கின்றார். இரண்டு வெவ்வேறு இடங்களில் இதை வலியுறுத்துகின்றார்.
‘…எங்கடை சாதிக்காரர் எல்லாரும் எங்களுக்கு சமமே? ஒரு சாதிக்குள்ள எத்தினை பிரிவு எத்தனை பகுதி இருக்குது தெரியுமா?’ (குடிமைகள்:பக்கம் 112)
இளையவர்கள் சமூகக் கட்டமைப்புகளைத் தகர்க்க முயல்கின்ற போது, அங்கு மேலெழுகின்ற சமூகத் தலைமைகள்– இதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றது. ஒரே சாதிக்குள் கலந்து திருமணம் செய்வது கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவில்லை. தொழில் தகைமைகள், வருமானம், வசதி போன்றவற்றை வைத்து ஒரே சாதிக்குள் பிரிவினைகள் உருவாகின்றன.ஒரே சாதிக்குள் மெலிதாக உயர்ந்தவர் மற்றவர்களை அடக்கி அதிகாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நேரடியாக இந்த முறைமை வெளிப்படாமல்இருந்தாலும் குறித்த சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுவிடுகின்றது. சரவணை முதலாளி, மணியன் இருவரையும் நாவலூடு கொண்டு செல்கின்ற அடிப்படை விடயம் இதுவாகும். மணியனை முதலாளி கொடுமைப்படுத்துகின்ற இடங்களிலும் மணியன் அடங்கிப்போகின்ற இடங்களிலும் வாசகரோடு எழுந்து பயணிக்கின்ற அனுபவங்கள், எங்கோ ஒரு நகரத்திற்குச் சிறிய தொழில் ஒன்றினைச் செய்வதற்காக வயது குறைந்த பிள்ளையை அனுப்பிவிட்டுத் தவிக்கின்ற ஒவ்வொரு பொன்னிக்கும் வலியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. கூலியே இல்லாமல் வேலை செய்கின்ற மணியனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற திருப்பமும் அதன் மூலம் மணியன் அடையக்கூடிய அனுகூலங்களும் வாசகர்களைத் திருப்தி அடைய வைக்கின்றது.
தெணியான், மணியனைக் கற்றலில் நாட்டம் இல்லாத ஒரு மாணவனாகச் சித்திரித்து, அதற்கான காரணத்தை ஆசிரியர்களின் சாதி பற்றிய வசைகளே என்கிறார். தெணியான் ஆவணம் இணையத்திற்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஆழமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசிய இடங்களில் அடக்கப்பட்ட சாதியப் பாடசாலை வாழ்க்கை முறை ஒன்றாகும். பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்துகின்ற/ வழி நடத்தப்படுகின்ற முறைகள் பற்றியும் தனது அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். அடக்கப்பட்ட சாதி மாணவர்கள் பாடசாலை விளையாட்டுகளில் மிகவும் பிரகாசிக்கக்கூடியவர்கள். அவர்களின் பால்ய வாழ்க்கை அவர்கள் செய்கின்ற சிறு வேலைகள் என்பன அவர்களின் திடமான உடலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி பாடசாலையில் விளையாட்டுகளை வெற்றி கொள்வதில் தான் பாடசாலைச் சமூகம் கவனம் செலுத்தியதே தவிர அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் செலுத்த எத்தனிக்கவில்லை. அந்த ஆதிக்கத்திலிருந்து மீண்டு எழுந்து வந்தவர்களில் தெணியான் முக்கியமானவர் என்பதால் அவரின் எழுத்துகளும் அதையே முன்னிறுத்தி நிற்கின்றன.
(03)
மனித வாழ்க்கை கொண்டாட்டங்களுக்கானது.ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்டாலும் அவர்களுக்கான கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடவில்லை. மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருத்தி வைத்துக் கொண்டு வெளி உலகம் தெரியாமலே வைத்திருந்த முத்தன் –பொன்னியின் கவலையும் அதுதான். முத்தனுக்கும் வள்ளிக்கொடிக்கும் திருமணமான பின்னர் வள்ளிக்கொடி மைத்துனர் இருவருக்கும் திருக்கல் வண்டிலும் மாடும் அவளின் கொடியை விற்று வாங்கிக்கொடுத்துச் சந்தோசப்படுகிறாள். மேலேயுள்ள நிகழ்வுகள் நாவலில் நடக்கும் போது வாசகர் மனதிற்குள் அளப்பெரிய சந்தோசமும் திருப்தியும் உருவாகின்றது.
கொண்டாட்டம் எவ்வளவு திருப்தியளிக்கிறதோ அதைவிடப் பன்மடங்கு கவலையையும், சோகத்தையும் குடிமைகள் சுமக்கிறது.
 
ஆதிக்கச் சமூகத்திற்கு எதிராகப் போராட்டம் செய்யவில்லை, மிகச் சிறிய உரிமைகளை வேண்டிக் கேட்ட போது மறுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள்  தம் போக்கில் தொழிலையும், சமூகக் கட்டமைப்பையும் ஏற்படுத்துவதற்கும் இடையூறாக ஆதிக்க சாதியினர் இருக்கின்றார்கள். நாவலின் மையப்பாத்திரமாகக் கருதத்தக்க முத்தன் சமூகக் கட்டமைப்புகளை உடைக்கவும் தமக்கென உரிய அடிப்படை மனித சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு சமயத்தில் முயற்சி செய்கிறார். அதற்கு அவரது நண்பர்கள்களும் உதவுகின்றார்கள். நயினைமார்களை எதிர்த்து முத்தன் தொழில் செய்யத்தொடங்குகிறார். அதுவரை குடிமைகளாக இருந்த முத்தன் வீதிகளில் தலைநிமிர்ந்து நடக்கத்தொடங்குகிறார். அவருக்கான சுதந்திர வாழ்க்கையை, குடும்பதிற்கான அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளான அண்ணனையும் தம்பியையும் ஒரு சிறிதளவேனும் சம்பாத்தியம் செய்யக்கூடிய தொழிலினை உருவாக்கிக்கொள்கிறார். நண்பர்களான மற்றைய பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி செய்யத்தொழிலைத் தொடங்குகிறார். ஆனால், இறுதியில் சப்பாணிகளான இரண்டு சகோதரங்களையும் இழக்கிறார். அவரது சலூனும் தீ வைக்கப்படுகிறது. இறுதியில் வீடும் தீ வைக்கப்படுகின்றது. முத்தனும் குடும்பமும் அந்த ஊரை விட்டே போய்விடுகின்றனர். தெணியானின் ஐம்பது வருட அனுபவம், அவரின் கூர்ந்த அவதானிப்பு, சிந்தனை என்பவை மூலம் ஒடுக்கப்பட்டவர்களது போராட்டம் ஆதிக்க சாதியின் முன்னால் நிலைத்து நிற்கமுடியாமல், தளர்ந்து போனது. ஆனால், தோற்றுவிடவில்லை என்பதில் தெணியான் உறுதியாக இருக்கிறார்.
(04)
   
அடிமை முறையிலும் மிகக் கொடுமையானது சாதிய முறை என்கிறார் அம்பேத்கர். ஒரு மிகச் சாதாரண அம்பட்டர் குடும்பம், கொடிய சாதிய அடக்குமுறையால் அனுபவிக்கின்ற இன்னல்கள் குடிமைகளில் பதிவாகின்றது.  
     ‘வரலாற்றை உருவாக்குவது ஒடுக்குமுறையாளர் தான். அவர்கள் எழுதுகின்ற வரலாறு அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக இருப்பதில்லை. அது சூறையாடுகின்ற, வன்புணர்ச்சி செய்கின்ற, வறுமையை உருவாக்குகின்ற அவர்களது சொந்த வரலாறே! இதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களால் வேறொரு வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த வரலாறை உருவாக்குபவர்கள் நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தானே தவிர தொழில்ரீதியான அல்லது கல்வித்துறை சார்ந்த வரலாற்றாளர்களல்ல’ என்று ஃபிரான்ஸ் ஃபனொன் கூறுகின்றார். அந்த வகையில் தெணியான் கடத்தியிருக்கின்ற வரலாறு அத்தியாவசியமானது.  டானியலோடும் டொமினிக் ஜீவாவோடும் என்.கே.ரகுநாதனோடும் சேர்ந்து சாதியத்தின் வீரியத்தை அழிக்கின்ற பணியைத் தெணியான் ‘குடிமைகள்’ மூலம்தொடர்கின்றார்.
உசாத்துணைகள்:
வேலைக்காரிகளின் புத்தகம் – ஷோபாசக்தி
அசோகமித்திரன் கட்டுரைகள் –  2
ஆவணம் இணையதளம்

பொருட்காட்சி – இரவு ஒன்று முப்பது.

மணி இரவு ஒன்று முப்பது. குளிரூட்டப்பட்ட பேருந்திலிருந்து இறங்கி – பின்பக்கமாக சாப்பாட்டுக் கடைக்குள் நுழைவதற்காக நடந்தேன். முழு நித்திரைக் கலக்கத்தில் இருந்ததால் மந்தமான பார்வையில் இன்னொரு பேரூந்து எமக்கருகில் நிறுத்தப்பட்டிருந்தது. தனியார் பேரூந்து. மேலும் முன்னே நடந்து கடைக்குள் செல்வதற்கு முன்னர்- வழமையை விட அவ்விடம் அதிக சனக்கூட்டமாக இருந்தது , வெள்ளை தலைக்கவசத்துடன் பொலிஸார் வீதிக்குக் குறுக்க மறுக்க நடந்து திரிந்தார்கள், இருவர் அளவு நாடா கொண்டு வீதியின் நீளத்தை அளந்துகொண்டிருந்தார்; அந்த இடம் வழமையை விட விசித்திரமாக இருந்தது. அதுவரை தூக்கக் கலக்கம் குறையவில்லை. கடைக்குள் சென்று கறி ரொட்டி ஒன்றும் பிளேன் டீ ஒன்றும் வாங்கிக்கொண்டு வாசலில் நின்று நிதானமாக ஒவ்வொன்றாக அவதானித்தேன்.
வீதியில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிப் போயிருந்தன. அண்ணளவாக முப்பது மீட்டர் தூரத்திற்கு வீதியில் கீறல்கள். அப்படியே திரும்பி பேரூந்தைப் பார்த்தபோது தான் முழு நித்திரைக் கலக்கமும் கலைந்தது. எமது பேரூந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து – அதன் சாரதியால் நிதானமாக நிறுத்தப்படவில்லை என்பதை உணர்ந்தேன். விபத்து. எல்லோரும் அதைப்பார்த்துக்கொண்டுதான் நின்றார்கள். அவர்கள் கைகளிலும் தின்பண்டங்களும் குடிபானங்களும் இருந்தன. அந்த விபத்தின் நிகழ்த்துகைக்குப் பின்னரான காட்சியினை ரசித்துக்கொண்டிருந்தார்கள். தெளிவாக சுற்றிலும் பார்த்தேன். கடைக்கு அடுத்ததாக அவ்வளவு ஆழமில்லாத பள்ளம். அந்தப் பள்ளத்தில் விழாமலும் கடையுடன் மோதாமலும் வீதி நெடுகிலும் நிற்கின்ற மின்சாரக் கம்பங்களை முறிக்காமலும் அந்தரத்தில் ஆனால் பாதுகாப்பாக பேரூந்து நிறுத்தப்பட்டிருந்தது. கடையின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழக்குவியலுடன் இடித்திருக்கிறது. மின்சாரக் கம்பம் இல்லை அது தொலைபேசி வயர்கள் செல்லுகின்ற கம்பம். அதுவும் இடையில் கொஞ்சமாக முறிந்திருந்தது. இவ்விடத்தில் இருந்த சைகைப்பலகை ஒன்றையும் பேரூந்து மோதி கிளப்பி விட்டதாக அருகில் நின்ற சிங்களவர் ஒருத்தருக்கு இன்னொருவர் சொல்லிக்கொண்டிருந்தார். வீதியில் வருகின்ற வாகனங்கள் வேகத்தை குறைத்து விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்க, போலீசார் முகங்களைக் கடுமையாக வைத்துக்கொண்டு – வாகனங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
நான் பேரூந்தின் மற்றைய பக்கமா நடந்து வந்தேன். அது தனியார் பேரூந்து. ஏறுகின்ற வாசலுக்கு அடுத்த ஆசனத்தின் கண்ணாடியில் வவுனியா – அனுராதபுர – கொழும்பு என்று சிங்களத்தில் எழுதியிருந்தது. பேரூந்தின் சாரதி ஆசனத்திற்கு மேல் இன்னமும் காற்றாடி சுழன்றது. உள்ளே ஒருத்தர் பொறிகளுடன் ஏதோ வேலைசெய்துகொண்டிருந்தார். யாரிடமும் இதைப்பற்றி விசாரிக்க மனம் வரவில்லை. அவர்கள் ஒரு பொருட்காட்சியை ரசிப்பது போல விபத்தின் காரணத்தையும் சாரதியின் சமயோசிதத்தையும் பற்றி பேசிக்கொண்டார்கள்.
எதையும் காது கொடுத்து கேட்கும் நிலையில் நானில்லை. கையிலிருந்த கறிரொட்டியை தூக்கி பற்றைக்குள் எறிந்துவிட்டு பிளேன் டீயினை உதடுகளுக்கு அருகில் கொண்டுவர மனமே இன்றி அதையும் பற்றைக்குள்ளே ஊற்றி நேராகக் கடைக்குள்ச் சென்று கோப்பையை வைத்து விட்டு எனது பேரூந்திற்குள் ஏறினேன். மணி இரண்டைக் காட்டியது. வழமையாக இங்கே பத்து பதினைந்து நிமிடம் தான் சாப்பிட நிறுத்துவார்கள். இப்போது அரைமணித்தியாலம் ஆகிவிட்டது. ஆசனத்தில் இருந்து முகப்புத்தகத்தைத் திறந்தேன். கிரிஷாந்த் “சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா! ” என்ற பாரதியின் பாடலைப் பதிந்து அதற்கு கீழே சுவேதா மோகன் பாடிய இணைப்பையும் வழங்கியிருந்தார். காதுகளுக்குள் கேட்பொறியை (headphone) அணிந்து பாடலை கேட்டேன்.
“நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!”
பொருட்காட்சி முக்கால் மணிநேரம் நடந்தது. பின்னர் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டனர். அத்தனை பொருட்காட்சியையும் ரசித்துப்பார்த்த அவர்கள் ஒவ்வொருவரது முகத்தையும் ஏறிக்கொண்டிருக்கும் போது உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
“சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ! “

முதல்ப் புனைவு

சரியோ பிழையோ – எப்போதுமே முதன்முதல் செய்தவற்றை மீட்டிப்பார்க்கும் போது ஒரு வித சந்தோசம் உருவாகும். அதுவும் முதன்முதலில் உருவான கலைப்படைப்பு ஒன்றை மீட்டுதல் அலாதியான சந்தோசம். சரியாக இதே நாளில்த் தான் எனது முதலாவது கதையினைச் சொன்னேன். இது மிகவும் ஆரம்ப வாசிப்பு நிலையில், கதையா இல்லையா என்றெல்லாம் தெரிந்திராத போது எழுதப்பட்டது. எனது நண்பர்களால் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த பொய்யர் என்னும் முகப்புத்தக பக்கம் ஒன்றில் வெளியானது. இதை பின்னர் அப்போது இயங்கிக்கொண்டிருந்த வலைத்தளத்திலும் வெளியிட்டேன். இந்த நாள் பொய்யரில் வெளிவந்த நாளா இல்லை வலைதளத்தில் பதிவேற்றிய நாளா என்று தெரியவில்லை. ஆனால் முதன்முதலில் எழுதிய நினைவுகள் சந்தோசத்தை அளிக்கின்றன. கதை ஒன்றை எழுதவேண்டும் என்றால் எப்படியும் முடிவில் வாசகன் ஊகிக்க முடியாத பெரிய திருப்பம் ஒன்றைவைக்கவேண்டும். அந்தத் திருப்பத்தை எந்த விதத்திலும் வாசகன் முன்கூட்டியே ஊகிக்க முடியாதபடி கதையின் போக்கை நகர்த்தவேண்டும். முக்கியமாக அதுவரை பொய்யரில் வெளிவந்திராத – மனதை உலுக்கக்கூடிய புதிய தளத்தில் இருக்கவேண்டும். கதையினைப்பற்றிய இப்படியான சிந்தனைகளோடு எழுத ஆரம்பித்தேன். குறுகிய கதையாதலினால் முழுவதும் கைபேசியிலேயே எழுதி பொருத்தமான பி.சி.சிறிராமின் புகைப்படம் ஒன்றையும் இணைத்து அனுப்பினேன். இதற்கு முன்னர் எழுதிய இரண்டொரு கவிதைகள் தவிர்த்து எழுதிய முதலாவது புனைவு வடிவம் இதுவாகும். இதிலுள்ள எழுத்துப்பிழைகள், வசனப் பிழைகள்உட்பட கதையே பிழையாக இருந்தாலும் – இது தான் எனது முதல் புனைவின் பிரதி என்று முகப்புத்தகம் காட்டியபோது இதயத்திற்குள் உருவாகி உடலெல்லாம் பரவுகின்றது பூரிப்பு ரத்தம்.

 வாசிக்க –

நிறம் தீட்டுவோம் – ஆவணப்படம்.

பொதுவாகவே நான் சினிமா பார்ப்பது  குறைவு. முக்கியமான படைப்புகளையும் பரிந்துரைகளையும் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வேன். இருந்தும் சமீபகாலமாக சினிமாவின் முக்கிய பிரிவான ஆவணப்படங்களை விரும்பிப்பார்க்கிறேன். எழுத்திலக்கியத்தில் கட்டுரைகளுக்கு அதாவது non- fictionsக்கு இருக்கின்ற அதேயளவு கணத்தினை இந்த ஆவணப்படங்களில் காண்கிறேன். அதே போல நாவல் ஒன்றினை வாசித்துமுடித்த திருப்தியினையும் பெறுகின்றேன். எனக்கு சினிமா மீதிருந்த அவநம்பிக்கையை ஆவணப்படங்கள் இல்லாமல்செய்துகொண்டிருக்கின்றன.
வவுனியாவில் முதன் முதலில் ஆவணப்படம் ஒன்றை மோகனரங்கன் அண்ணாவின் மூலம் பார்த்தேன். அவர் இயக்கிய போர்க்கால சூழலில் தமது அங்கங்களை இழந்தவர்கள் பற்றியது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படம் என்று நான் கேள்விப்படுவது விபீசன் அண்ணாவினுடையது. சமீபத்தில் அதற்கான ஒரு படத்தினையும்(poster) வெளியிட்டிருந்தார். ஆவணப்படம் ஒன்றினை இயக்கி வருகிறார் என்பதை முதலே அறிந்திருந்தாலும் எதைப்பற்றியது என்ற எந்த பிரக்ஞையும் இருக்கவில்லை. இப்போது தான் அறிந்தேன். நிறம் தீட்டுவோம் என்று அழகிய எழுத்துருவுடன் ஒரு பாடசாலைப்பையன் கண்ணாடியுடன் கைகாட்டி சிரித்துக்கொண்டிருக்குமாறு படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மோகனரங்கன் அண்ணாவின் ஆவணப்படத்தையும் விபிசன் அண்ணாவின் குறும்பட வெளியீட்டில்தான் திரையிட்டார்கள்.
“பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின் இன்றையநிலைப்பாட்டை தேவைகளை அவை நிவர்த்தியாக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ளல் .. அவர்களைப்பற்றிய சமூகத்தின் உணர்திறனை ஆய்வு செய்தல்..” – என்று தனது முகப்புத்தகத்தில் ஆவணப்படத்திற்கான அறிமுகத்தை செய்திருக்கிறார்.
 
திகதி சரியாக ஞாபகம் இல்லை, இது வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம். தமிழ் மாமன்றத்தின் விவாதப்பயிலரங்குகளில் ஒன்றிற்காக முதல் நாளே எல்லா ஆயத்தங்களையும் செய்துவிட்டு மூன்று பாடசாலைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தோம். எப்போதும் போல நேரம் பிந்திச்செல்ல – நான் பாடசாலையின் முன் வாசலில் நின்று நிலவரத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வரவுகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் நிகழ்வு நடக்கின்ற பாடசாலையைத் தவிர வேறு பாடசாலை எதுவும் வரவில்லை. இருந்தும் ஒரு நம்பிக்கையோடு வாசலில் நின்றேன். அப்போது தான் கலைச்செல்வனை முதன்முதலில் பார்த்தேன். ஒருத்தரின் உதவியோடு வாசலின் அருகில் வந்து நிகழ்வுகள் நடப்பதைப்பற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு பார்வைப்புலன் இல்லை அறிந்துகொண்டு என்னோடு நின்ற நண்பன் ஒருவனின் உதவியோடு நிகழ்வு நடக்கின்ற இடத்திற்கு அனுப்பி வைத்தேன்.
மாணவர்கள் பயிலரங்கிற்கு புதிது என்பதால் மௌனமாகவே இருந்தார்கள். ஆனால் ஒருத்தர் மட்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். புதிய அவையை எதிர் நோக்குவதையிட்டு பயம் எதுவும் இல்லாமல் தனது கருத்துக்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட இருந்தார் – கலைச்செல்வன். உண்மையில் மாணவர்களிடையே மிகவும் துடிதுடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார். அவர் மூலமாக ஒரு ஆவணப்படம் உருவாகியிருப்பதைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
விபீசன் அண்ணாவிற்கு படக்குழுமத்திற்கும் வாழ்த்துக்கள்!

ஸீரோ டிகிரியும் மறாவும்.

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியில் ஆறாவது அத்தியாயத்தியாயத்தில் இரண்டு கதைகளை ஒன்று விட்டு ஒன்றாக வசனங்களை மாற்றி மாற்றி எழுதியிருப்பார். ஸீரோ டிகிரி வாசித்து மாதக்கணக்கு ஆனாலும் மீண்டும் இதை நினைவுபடுத்த வேண்டிய தேவையை உணர்கிறேன். ஒரு நடிகையைப்பற்றியும் தீவிரவாதி ஒருத்தர் தனது சகாவால் கொள்ளப்பட்டது பற்றியும் – குறுகிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.நாவல் முழுவதும் பின்நவீனத்துவத்தின் கூறுகள் பரந்து காணப்படும். சிதறிய போக்கு, மையமின்மை, முடிவின்மை என்று வேறு வேறு பல உத்திகளை கையாண்டிருப்பர் சாரு நிவேதிதா. ஆறாவது அத்தியாயம் முதலாம் வாசிப்பில் சிக்கலானது. இரண்டு வேறு வேறு நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து குழப்பி எழுதப்பட்டிருக்கும். வாசகர் இதனை சிறிது வாசித்துக்கொண்டுபோகக் கண்டுபிடித்துவிடுவார். அத்தியாயம் இடையிலே இரண்டு நிகழ்வுகளும் கலக்கும் புள்ளி தென்பட, அத்தியாயம் இவ்விரு நிகழ்வுகளுக்குமான சம்பந்தப்படுத்தலை உறுதி செய்து நிறைவுறும்.
charuu-blog
இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாயம் ஆறை மட்டும் நினைவுபடுத்தவேண்டிய தேவை – எனது நண்பர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மறா குறும்படத்தினால் ஏற்பட்டது. முன்னைய குறிப்பு ஒன்றில் அதன் கருவின் முக்கியத்துவம் மற்றும் கருவின் வெளிப்பாடு பற்றி எழுதியிருந்தேன். அப்போது குறும்படம் தொடர்பான வாதங்கள் ஏற்பட வேண்டும் என்றும், அது பற்றிய உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூறினேன். அதன் பின்னரும் இன்று வரை உரையாடல்கள் பொது வெளியில் நிகழ்த்தப்படவில்லை. ஈழத்து சினிமா என்பதை இப்பொழுது அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் நாம், இவ்வாறான முயற்சிகளைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்துவது ஆரோக்கியமானதாக இருக்கும். இன்று முகப்புத்தகங்களில் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை இமாலயமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சரி பிழை என்பதற்கு அப்பால் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகின்ற தன்மை ஆரோக்கியமானது. ஆனால் இப்படியானவர்கள் பார்வை சுதேச புது முயற்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே எனது ஆதங்கம்.
 
மறாவின் முடிவில் Impulse என்று எனக்கும் பங்கொன்றினை அளித்திருந்தார்கள். Impulse என்பதை உந்துவிசை என்ற அர்த்தத்தில் பாவித்திருந்தார்கள். எனது முதலாவது குறுங்கதையின் அடியில் இந்த சொல்லை பாவித்திருந்தேன், அதுவும் இதே சக நண்பர்களால் தொடங்கப்பட்ட பொய்யர் என்ற முகப்புத்தக பக்கத்திற்கு எழுதப்பட்டது. அதிலிருந்து அந்த வார்த்தையை எடுத்து என்னோடு சேர்த்திருக்கலாம்.
22365461_2514478085342262_7088084095692592887_n
ஸீரோ டிகிரியின் ஆறாம் அத்தியாயமும் மறாவும் – ஓரளவு ஒரே வகையான கதை நகர்த்தல் உத்தியை கையாளுகின்றன. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுள்ள நிகழ்வுகளை ஒழுங்கின்றி காட்சிப்படுத்தலின்மூலம் இரண்டுமே கதையை நகர்த்துகின்றன. இதை non linear வகை கதை நகர்த்தல் என்கிறார்கள். நாவல் ஒன்றின் ஒரு பகுதியை எழுத்துருக்களின் மூலம் non linear ஆக வடிவமைப்பு செய்து – வெளிப்படுத்துவது பெரியளவு வாசக மனநிலையை சமநிலையிழக்கச் செய்யாது. நாவல் ஒன்றில் முழு கதை சொல்லலுக்குள் ஒரு குறுகிய பகுதியாக வருகின்ற அத்தியாயம் ஏற்படுத்துகின்ற பாதிப்பு குறைவு. இருந்தும் சாரு நிவேதிதா இதனை லாவகமாகக் கையாண்டிருப்பர். மறாவில் நிலைமை வேறு. குறும்படம் ஒன்று non linear முறை கதைசொல்லலூடாக அதன் கருவினை வெளிப்படுத்தப்படப்போகின்றது என்பது மிகவும் சிக்கலான விடயம். வலிமையான கரு ஒன்றினைக்கூட – அதுவும் சாதாரண கதை சொல்லலின் மூலம் சரியாக வெளிப்படுத்தமுடியாத நிலைமைகள் இருக்கின்ற சூழலில், வலிமையற்ற கருவினை non linear முறை கதை சொல்லலுக்குள் உள்வாங்கி இன்னமும் வெளிப்பாடற்ற தன்மையை மறாவின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். இதை நான் திரைக்கதையின் பிறழ்வு என்பேன்.

நகரத்தின் குறிப்புகள் – 02

சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. நித்திரையில் போது உடலின் உஷ்ணம் தாங்கமுடியாமல் இருக்கின்றது. உண்மையில் நித்திரை என்பதைவிட அயர்ந்த நிலை என்பதே சரியாக இருக்கும். முதுகின் பின்னாலிருந்து நெருப்புத் தணல்களை பற்றவைத்து பிடித்துக்கொண்டிருபோல உணர்வேன். இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு முறையும் இரண்டு மணிக்கு ஒரு முறையும் கிடப்புக்கொள்ளாமல் எழுந்து விடுகிறேன். அதன் பின்னர் நிலையை மாற்றியும் இடத்தை மாற்றியும் நித்திரைகொள்ள பெரும் முயற்சியை எடுக்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு இரவு  தான் இது. இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதிய நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நகரத்தின் குறிப்புகள் 01 இனை வாசிக்கும் போது சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று ஞாபகத்தில்  வருகின்றது.
 
Emilie Muller 1994ஆம் ஆண்டு Yvon Marciano இனால் இயக்கப்பட்ட குறும்படம். ஒரே தளத்தில் நகர்கின்ற காட்சி அமைப்பு மட்டுமே இருக்கும். நடிகைக்கான தேர்வு ஒன்றிற்கு செல்லுகின்ற பெண் ஒருவரிடம், தேர்வினை நடத்துகின்ற இயக்குனர் அவளின் கைப்பைக்குள் இருக்கின்ற பொருட்களைப் பற்றி விசாரிப்பதாக நகரும். ஒவ்வொன்றைப்பற்றியும் அவளும் விவரணம் அளித்துக்கொண்டிருப்பாள். தேர்வு முடிய அவளும் கிளம்பிவிடுவாள். மற்ற வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த இயக்குனர் திடீரென்று அவளின் கைப்பை எதிரிலிருக்கும் தாங்கியில் தொங்குவதைப்பார்த்துவிட்டு எதிரிலிருப்பவரிடம் அந்தப்பெண் தனது கைப்பையை வைத்துவிட்டு சென்றுவிட்டாள், அதனால் அவளை போய் நிறுத்துமாறு கூறுவார். அதற்கு மற்றவர் அது இங்கு வேலை செய்யும் பெண்ணொருத்தியினுடையது என்பதை உறுதிப்படுத்த – இயக்குனர் வெளியில் சென்ற அவளை நோக்கி ஓடுவதாக குறும்படம் முடியும்.
 
இப்படியான ஒரு பெண்ணின்  பார்வை தான் இந்த நகரத்தின் குறிப்புகள் போலத்  தெரிகின்றது. எங்கிருந்தோ வந்தவன் ஒருத்தன் நகரத்தின் மீதுள்ள வெறுப்பில் எழுதுவது தான் இந்த நகரத்தின் குறிப்பு போலத் தெரிகின்றது. முதுகு மெதுவாக எரியத்தொடங்குகின்றது. மணி இரண்டைத்தாண்டிக்கொண்டு போகின்றது. மெதுவாக இரவு முடிந்து பஸ்ஸில் ஏறிட்டேன். பாதங்கள் புகுந்துள்ள சப்பாத்துக்களின் கணத்தை  என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு யன்னலோர இருக்கையில் இருந்து நகரத்தின் சாலை ஓரங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறேன்.
 
இது 21/08/17 அன்று எழுதிய டயரியிலிருந்து கத்தரிக்கப்பட்டது.
 
-“…….முதன்முதலாக பார்ப்பது அல்ல இது. எல்லா இடங்களிலும் இவர்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இவர்கள் இப்போது மட்டும் வித்தியாசமாகத் தெரிகின்றனர். எங்கள் இடங்களிலுள்ள பிச்சைக்காரர்கள் எனக்கு வித்தியாசமாகவும் புறம்பாகவும் தெரிந்ததில்லை. அவர்களையும் தினமும் பார்த்தவன் தான். ஆனால் இந்த நகரத்தின் பிச்சைக்காரர்கள் கண்களை உறுத்துகிறார்கள். நவீன உடைகளும் ஆடம்பர வாகனங்களும் வானுயர வளர்ந்து நிற்கின்ற கட்டடங்களுக்கும் மத்தியில் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கின்றது…….”
 
பிச்சைக்காரர்கள் என்னும் போது ஆநாகரீகமாகத் தெரிகின்றதா? அப்படித்தானே நானும் நீங்களும் பேசிக்கொள்கின்றோம். பேசும் போது தெரியாத அநாகரீகம் எழுதும்போது மட்டும் தெரிவது ஏன்? நகரத்தின் குறிப்பில் பிச்சைக்காரர்கள் மிகவும் எளிமையாகப்  புகுந்து விடுகிறார்கள்.
 
21/08/17 டயரியில் இருந்து
 
-”……மிகவும் பிரசித்தி பெற்ற வர்த்தக நிறுவனம் ஒன்றின் முன்னர் உருளும் நாற்காலியில் எழுபது வயது மதிக்கத்தக்க வயதிபரையும் அவரின் அருகில் மனைவியையும் பார்க்கிறேன். இன்று காலை தான் அந்த காட்சியினைப் பார்த்தேன். ஒரு முழு பகலுக்குள் காட்சி மங்கிவிட்டது. அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றோ எப்படி இருந்தார்கள் என்றோ சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை சூழலிலும் புறம்பாகத் தெரிந்தார்கள்……”
 
அதனாலேயே தான் நாட்குறிப்பின் பக்கம் ஒன்றை நிரப்பியிருந்தார்கள். தொடர்ந்து பயணித்த நேரங்களை அவர்களை காணக்கிடைக்கவில்லை. அவர்கள் இருவரையும் அந்த நாளின் பின்னர் இன்று தான் இப்போது தான் உங்களுக்குச் சொல்லும் போது ஞாபகம் வருகிறது. அவர்களின் பின்னர் நான் கடந்து வந்த பிச்சைக்காரர்கள் பற்றி எழுதிய நாட்குறிப்புக்கள் இவை.
 
22/08/17
 
-”……..அவர்களைக் காணவில்லை. இன்னொரு வர்த்தக நிலையத்தின் முன்போ பிரார்த்தனை செய்கின்ற இடங்களின் முன்போ சென்றிருக்கக் கூடும். அதிக தூரம் அவர்களால் சென்றிருக்க முடியாது. தனது கணவனை உருளும் நாற்காலியில் இருத்திக்கொண்டு வயோதிபப்  பெண்ணால் எவ்வளவு தூரம் நடந்துவிட முடியும். என் கண்களுக்குப்  புலப்படாத தெரு ஒன்றில் இயலாத கணவனை வைத்துக்கொண்டு பிச்சை கேட்டுக்கொண்டிருப்பாள். இன்று இன்னொரு வயதானவரை உருளும் நாற்காலி ஒன்றில்  கண்டேன். நாற்காலிக்கு குறுக்கே தனது ஊன்றுகோலை வைத்து அதில் தனது கால்கள் இரண்டையும் கிடத்தியிருந்தார். கால்கள் இரண்டிலும் பாதங்கள் அற்றுப்போயிருந்தன. எஞ்சியிருந்த கால்களில் புண்ணும் சிதளுமாக பரவியிருந்தது. அவர் பிச்சை எடுப்பது போல தெரியவில்லை. ஆனால் அவரைச்சுற்றி சில்லறைகள் மட்டும் இருந்தன. இலையான்கள் புண்களை சுற்றிக்கொண்டிருந்தன. அவரால் தனது கால்களை அணிந்திருந்த சறத்தால் மறைத்திருக்க முடியும். ஏனோ அவர் செய்யவில்லை. இன்றைய நாள் முழுவதும் அவரின் சீழ் வடிகின்ற கால்கள் தான் ஞாபகத்தில் வருகின்றன. அவர் அத்தனை இயலாமைக்குள்ளும் ஏன் தற்கொலை பண்ணிவிடவில்லை. நானாக இருந்தால் தற்கொலை பண்ணியிருப்பேன். மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமான வீதி ஒன்றில் என்னால் இந்தக்கோலத்தில் இருக்க முடியாது……”
 
28/08/17
 
-”….எத்தனையோ பிச்சைக்காரர்களை கடந்து விட்டேன். ஆனால் அவள் நினைவை விட்டு போவதாகத் தெரியவில்லை. இந்தக்குறிப்பில் எழுதுவதன் மூலமாவது போகட்டும். பஸ் கடற்கரை அருகில் செல்லுகின்ற அகலமான வீதியின் முதல் தரிப்பிடத்தில் நிற்கின்றது. அவளும் இரண்டு வயது குழந்தையும் குறுகிய நேரம் நிறுத்தியிருந்த பஸ்ஸின் முன் இருக்கையிலிருந்து வேகமாக கைகளை ஜன்னலருகே நீட்டியபடி ஓடி வருகின்றார்கள். அவள் தான் கைகளை நீட்டாமல் குழந்தையின் கைகளை விரித்து ஜன்னலோரமாக நீட்டுகின்றாள். முன்னேயிருந்து இருபது ரூபாயும் சில்லறைகளை சில கை விசுக்கல்களும் கிடைக்கின்றது. தனது வாயிலிருந்து வெற்றிலை சிவப்பாக வடிய ஒவ்வொருவராக கடந்து என்னிடம் வருகின்றாள். நான் சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து குடுக்க, அவசரமாக எனக்கு பின் இருக்கைக்கு நகர்கிறாள். அவளின் கையிலிருந்த குழந்தை அழ – அவள் குழந்தையின் கைகளை மடக்கி வேகமாக உருவிட்டு மீண்டும் நீட்டவும் -பின் இருக்கையிலிருந்து பெண்மணி ஐந்து ரூபாயை நீட்டிப்  போடவும் -பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. அந்த ஐந்து ரூபாய் அந்தரத்தில் மிதந்து சிறிது தூரம் தள்ளி விழுந்தது. நான் கிளம்பிய பஸ்ஸிலிருந்து பின்னால் திரும்பி பார்க்க அவள் தனது குழந்தையை தரிப்பிடத்தில் இருத்திவிட்டு அந்த உருண்டு போன ஐந்து ரூபாயை எடுக்க ஓடிக்கொண்டிருந்தாள்…..”  
 
04/10/17
 
-”…..மீண்டும் நிறைய காலத்திற்கு பின்னர் ஒரு பிச்சைக்காரியினைப் பற்றி எழுதுகிறேன். நான் அப்போது கண்ணாடியைத் திறந்திருக்கவில்லை. அவள் கையில் ஐந்தாறு விளையாட்டு பொம்மைகள் பொருத்திய கீடேக்குகள் வைத்திருந்தாள். அதில் ஒன்றை வாங்குமாறு கைகளால் சைகை செய்துகொண்டிருந்தாள். உச்சி எரிகின்ற வெயிலில் அவள் வயிற்றில் குழந்தையுடன்  தலையை முக்காடிட்டுகொண்டு நின்றாள். அப்படி எத்தனையோ பெயரினைப் பார்த்திருக்கிறேன். நான் வேண்டாம் என்று சைகை செய்தேன். அவள் மீண்டும் பொம்மைகளைத்  தூக்கிகாட்டினாள். பின்னர் மெதுவாக கண்ணாடியைத் தட்டி இறங்குமாறு வேண்டினாள். இறங்கிவிட தேநீர் குடிக்க காசு கேட்டாள். கொடுத்து விட்டு கண்ணாடியினை மூடிவிட்டேன். அப்போது எனக்கு அந்த இருபது ரூபாய் பெரிதாகத்தெரியவில்லை. அவளும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத் தாயினூடு வளரப்போகின்ற குழந்தை தான் என்னை உறுத்துகிறது. அன்றொருநாள் கண்ட அந்தக் குழந்தை போலத்தானே பஸ் தரிப்பிலோ அல்லது வேறொரு இடத்திலோ………..”
 
12/11/17
 
-”……..மீணடும் மீண்டும் பிச்சைக்காரர்களைப் பற்றிப் பேசுவது சலிப்பை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் ஏதோ ஒரு வகையில் எனது நாளந்தத்திற்குள் வந்து போகின்றார்கள். எப்போதும் பயணத்தின் போது அவர்களைக் கடந்தே செல்கிறேன். எல்லாப் பிச்சைக்காரர்களும் என்னை ஈர்ப்பதில்லை. எவராவது ஓரிருவர் குறுகிய கால நினைவு ஒன்றை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த நினைவுகள் இன்னொரு பிச்சைக்காரரைப் பார்க்கும் போது மீட்டப்படுகிறது அல்லது மீட்டப்படாமலும் போகின்றது. அவர்களைப் பற்றி நெடுநேரம் யோசித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி என்னால் எனது வாழ்க்கையைப் பற்றி பெரிதான மதிப்பீடுகள் இல்லாமல் கொண்டு நடந்த முடிகின்றதோ அதே போல அவர்களாலும் மதிப்பீடுகளுடனோ அல்லது எந்த மதிப்பீடுகளும் இல்லாமலோ வாழ்க்கையை வாழமுடிகின்றது . அந்தக் கால்கள் அழுகிய பிச்சைக்காரன் ஏன் தற்கொலை பண்ண வேண்டும்? அவனை விட அதிக பிரச்சனைகளுடன் சாதாரணமாக கண்ணுக்கு தெரிவோர் எத்தனை பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்…….”
 
நீங்களும் நானும் பிரச்சனைகள் இல்லாமலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியிருக்க ஏன் பிச்சைக்காரர்கள் மட்டும் என் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்கள். இப்போதெல்லாம் நான் குளிரூட்டப்பட்ட பஸ்களிலேயே பயணம் செய்கிறேன். ஜன்னல் திரையை இழுத்துமூடிவிட்டால் பாதைகளும் தெரியாது பாதையோரங்களில் நிற்கின்ற பிச்சைக்காரர்களையும் தெரியாது. இனி ஒரு முறை எனது நாட்குறிப்பில் அவர்களைப்பற்றிய சேதி எதுவும் இருக்காது.
 
இன்று வேண்டும் என்றே ஜன்னலினூடாக சாலையோரத்தைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். இப்போது பிச்சைக்காரர்கள் என் பார்வைக்கு புறம்பாகவும் விசித்திரமாகவும் தெரியமாட்டார். அவர்களைத்தான் நான், என்னைப்போல சாதாரண மனிதர்களாக நினைவில் நிறுத்திவிட்டேன். இன்னமும் யாரும் எங்களுக்கு பிச்சைக்காரர்களாகத் தெரியவில்லை. உண்ணிப்பாக கவனிக்கிறேன். அதோ அந்த பிரதான தெருவிலிருந்து பிரிந்து செல்கின்ற கிளைத்தெரு ஒன்றின் மூலையில்……….