வெளிச்சத்தின் குரல் – அனாரின் கவிதைகள்

தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கையை முன்னிறுத்தி எழுதிய குறிப்பில் அவரின் கவிதைகள் பற்றி இப்படி எழுதியிருக்கிறேன்,
இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள்இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.”¹
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
 
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
 
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
 
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்” ²
 
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
 
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “²
 
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”²
 
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக்  கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும்  அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
 
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும்.  கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும்  நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
 
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”²
 
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”²
 
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது  படைப்பு வெளியிலிருந்து கவிதையினை  உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
 
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
 
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும்  என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”²  என்கிறார்.
 
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு  சிறந்த முன்னுதாரணமாக  மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
 
பின்குறிப்புகள்

  1. http://unnatham.net/தர்மினியின்-இருள்-மிதக்க/
  2. இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு        “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

தற்கொலைப்பள்ளம்

(1)

எனது பின்னேரங்களை அந்தப் பாறையின் கீழ் அடுக்குகளில் தான் கழிப்பேன். அகன்ற இறுக்கமான பிடிப்புகளுடன் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டிருக்கும் அந்த பாறைகள்அவ்வளவு நீளமானவை. மென்மையான துளைகளைக்கொண்ட வயல் மண்ணில் அந்தப்பாறைகள் எப்படி இவ்வளவு வீரியமாக பற்றிக்கொண்டிருக்கின்றன என்பது எனக்கு பெரும் வியப்பாக இருக்கும். சிறுவயதில் என் நண்பன் ஒருத்தன்பாறை மண்ணில் இல்லை, மண்தான் பாறையில் இருக்கிறது என்றான். அது பெரும் புதிரை உடைத்தது போல இருந்தது. அவன் எம்மளவில் பெரும் விஞ்ஞானியாக பேசப்பட்டான். சூரியன் தெற்கே மறைகின்ற நேரத்தில் அந்த அடுக்குகளில் இருந்து, அதனைத் தொடர்ந்து தொப்பென்று வீழ்கின்ற நிலசட்டகத்தை ஒருமுறையாவது எட்டிப்பார்த்து ரசித்து வராவிட்டால் அன்றைய இரவில் மிகக் கொடிய வெறுமை என்னைத் தொற்றிக்கொள்ளும். வெறுமையில் உழன்று போய், கால்கள் விறைத்துக் கைகள் நடுங்கிப் பார்வை இருட்டி,என்னை அந்த இரவு பாடாய்ப்படுத்திவிடும். அந்த இரவின் நீட்சி ஒரு பெருவெளியின் நீளம் போல விரிந்துகொண்டே போகும். எந்தப்பக்கம் திரும்பி நடந்தாலும் ஒரே பக்கமாகவே நடப்பது போல இருக்கும். கடிகாரத்தை சில மணி நேரம் முந்தி விட்டுக் கட்டிலின் விளிம்பில் சுவரோடு போர்வையை போர்த்திக்கொண்டு எங்கிருந்தோ வருகின்ற வெளிச்சத்தில் ஒளிர்கின்ற கடிகாரத்தை விறைத்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.கடிகார இயந்திர இயக்கம், வழமையினை விட மெதுவானதாக இருக்கும். இரண்டு முட்களும் காந்தத்தின் இரண்டு முனைகள் போல ஒன்றோடு ஒன்று ஒட்டி நகர விரும்பாமல் ஊரும். கண்களை விளித்துக்கொண்டே தான் இருப்பேன். ஆனால் கனவிலும் சஞ்சாரம் செய்வேன். கனவையும் நினைவையும் என்னால் அப்போது சரியாகப் பிரித்தறிய முடியாத நிலையிலிருப்பேன். எல்லோரும் காலையில் எழுந்து விட்டப் பிறகு போர்வையைச் சுற்றி போட்டு விட்டு முகம் கழுவுவேன்.

அந்தப் பள்ளத்தை எல்லோரும் தற்கொலைப் பள்ளம் என்றே அழைப்பார்கள். நிறையக் காலமாக மனதின் அலைச்சல்களைத் தாங்க முடியாதவர்கள் அங்கே சென்று தற்கொலை செய்துவந்தார்கள். மாதத்தில் ஒருமுறையாவது அவ்விடத்தில் ஒரு பிணம் கிடக்கும். சுற்றி நாலைந்து பேர் நின்று ஒப்பாரி வைத்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிறிது நேரத்தில் அவ்விடம் பழைய நிலைக்குத் திரும்பி விடும். அங்கு போலீசார் நின்று விசாரணை செய்வதை நான் பார்த்ததே இல்லை. ஆனால் மிக அருகாமையில் ஒரு போலீஸ் நிலையம் உண்டு. எனது பாட்டி இப்படியான தற்கொலைகள் ஒரு சடங்கு என்பார். அதைச் சொல்லும் போது அவரின் கைகள் தானாக மேல்நோக்கி கும்பிடும். அவர் அதை தெய்வத்திற்க்கான பலியாகவே எண்ணினார். தாத்தா இதைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆண்கள் பெரும்பாலும் அவ்விடத்தில் தற்கொலை செய்வதில்லை. தாத்தா தற்கொலை பற்றி பாட்டியுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மிகவும் கர்வமாகப் பேசுவார். புருவங்களை உயற்றி, இடையிடையே தனது பெரிய மீசையை முறுக்கி மிடுக்காக பேசுவார். காலத்தோடு மெல்ல மெல்ல தற்கொலைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சிறிது காலத்தில் தற்கொலைகள் அறவே இல்லாமல் போனது. அதன் பின்னர் கொஞ்ச காலம் யாரும் அவ்விடத்தில் பெரிதாக உலாவுவது கிடையாது. நாய்களும் பருந்துகளுமே அங்காங்கே தெரிந்தும்மறைந்தும் கொண்டிருந்தன. நாட்செல்ல சனங்கள் குப்பைகளை மெதுவாக பள்ளத்திற்குள் எறியப் பழகிக் கொண்டனர். பின்னர் சிகரட் குடிப்பவர்கள் அவ்விடத்தை பயன்படுத்தினர். விளிம்பில் நின்று ஒருமுறை உள்ளெடுத்து ஊதித் தள்ளினால், புகை அகன்ற வெளியில் துமி துமியாக சென்று மறைந்து போகும். அவர்களின் துன்பமும் அப்படியே மறைந்து போய்விடுவதாக சிகரட் குடிப்பவர்கள் நினைக்கத்தொடங்கினார்கள். கொஞ்ச காலத்தில் அதுவும் மறைந்து போய் காற்று வாங்க வருபவர்களின் இடமாக மாறிப்போனது. கோபத்தில் வீட்டிலிருந்து பகட்டுக்காய் வெளியேறுவோர், அதிக வெக்கையை வீட்டிற்குள் உணர்வோர், நேரம் போக்க வழிதெரியாதோர் எனப் பலதரப்பட்டோரும் அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.என் அப்பா நாற்பதுகளில் சிகரட் குடிக்கப் போயிருக்கிறார். நான் இருபதுகளில் காற்று வாங்கப் போய்க்கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான் தற்கொலைப் பள்ளத்தின் கதை.

கண்கள் இரண்டையும் தெளிந்த நீரில் கழுவிட்டு கண்ணாடியில் முகம் பார்த்தேன். இரத்தத்தில் தோய்த்து எடுத்த உள்ளியைப்போல கண்கள் சிவந்திருந்தன. இரண்டு மூன்று முறை வாளிக்குள் உள்ள தண்ணீருக்குள் முகத்தை அமுக்கி, மூச்சை அடக்கி கண்களை வெட்டி வெட்டி திறந்தேன். ஓரளவு கண்களின் சிவப்பு குறைந்தவுடன் வேலைக்குச் செல்ல வேகமாக இயங்கினேன். கரும் புகை பரவ வண்டி கிளம்பியது. அப்போதெல்லாம் வேலைக்கு போவதென்றாலே பெரும்காரியம். பெரும்பாலும் மத்திம வயது ஆண்களை யாரும் வேலைக்கு அனுப்புவதில்லை. பெரும்பாலான மத்திம வயது ஆண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருப்பார்கள். சமைத்தல், வீடு வாசல் கூட்டிக் கழுவுதல், துணி தோய்த்தல். இவை அனைத்தும் குறுகிய நேரத்துக்குள் முடிய மிகுதி நேரமெல்லாம் தூக்கம். இவற்றை என்னால் செய்யமுடியவில்லை. ஒரு துண்டு காணிக்குள் என் இளமை முடிந்து போவதை நான்விரும்பவில்லை. யுத்தம் தன் கூரிய பற்களால் எல்லோரையும் பலி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்இது போன்ற சிந்தனைகள் அபத்தமானவை தான். இருந்தும் எனது விஞ்ஞானி நண்பன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் எழுத்துப்பிழை திருத்தும் பணியில்அவனின் சிபாரிசில் இணைந்து கொண்டேன். யாரிடமும் நான் என்ன வேலை பார்க்கிறேன், எங்கு வேலை பார்க்கிறேன் என்று சொல்லியதே கிடையாது. லீலாவிற்கும் தான்.

உப காதை

அன்று விடிந்தும் விடியாததுமாய் அலறி அழுகின்ற சத்தங்கள் கேட்டுகொண்டே இருந்தன. சத்தத்தின் வலிமை காதுப் பறைகள் இரண்டையும் கிழித்துவிடும் போல இருந்தது. லீலாவின் வீட்டிலிருந்து தான் வருகின்றது. அது லீலாவின் அம்மாவின் அலறல். அவளது அம்மாவின் குரல் விளையாட்டு பொம்மையின் குரலைப்போல தடித்திருக்கும். லீலாவினது அப்பிடியானது அல்ல. அவள் பேசுகின்ற வார்த்தைகள் மிக மென்மையாக காற்றின் இடைவெளிகளினூடாக கரைந்து போகும். அவளுடன் மணிக்கணக்கில் இருந்து பேசியதே இல்லை. சறத்தை சுற்றிக்கொண்டு நானும், அப்பாவும் வெளிக்கதவுக்கு அருகில் வந்தோம். லீலாவின் அம்மா மண் முற்றத்தில் தலைவிரி கோலமாய் இருந்து மண்ணை அள்ளி எற்றியெற்றி அழுதுகொண்டிருந்தார். அவரைச் சுற்றி நாலைந்து பேர் வாயில் கைவைதபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இதொன்றும் புதிதல்ல. எல்லாம் வயதானவர்கள். அவர்கள் சிறுவர்களாக இருந்த போது மாதம் ஒருமுறை பார்த்திருப்பார்கள். லீலாவின் அக்கா தற்கொலை பள்ளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துவிட்டார். தலை சிதறிப்போய் முக அடையாளமே இல்லாமல் பிணம் கிடந்தது. நானும் அப்பாவும் இடத்திற்கு போய் பார்க்க சில பெரியவர்கள் இறங்கி பிணத்தை சுற்றி துணியால் போர்த்தி வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஒரு மாதம் லீலா பாடசாலை வரவில்லை. அவள் அந்தக் காலங்களில் வீட்டை விட்டு வருவதும் கிடையாது. அப்போது பாடசாலையில் உயர்தரம் படித்தது நாமிருவர் மட்டுமே. அவர்கள் லீலாவின் அக்காவிற்கு அந்தியேட்டி கிரியையும் செய்யவில்லை. அவளின் அக்கா இறந்து இரண்டாம் மூன்றாம் மாதம் அப்பாவை இயக்கம் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள். அன்றிலிருந்து இரண்டு கிழமைக்குள்ளேயே அம்மாவிற்கு புத்தி பேதலித்துப் போனது. நீண்ட காலத்திற்குப் பிறகு லீலாவின் அக்காவின் தற்கொலை தான் முதல் தற்கொலையாக இருந்தது. அதன் பின்னர் லீலாவின் வீடு இருண்டு போனது.

(11)

லீலா அவளின் வீட்டு வாசற்படியருகில் சிரித்த முகத்துடன் நின்றாள். அவளைத் தினமும் கடந்து செல்லும் போது கண்களாலே வழியனுப்பி வைப்பாள். அதில் துக்கம் நிறைந்திருக்கும். யாருமில்லா வீட்டில் புத்திபேதலித்த அம்மாவுடன் நித்தமும் வருந்துகின்ற அவள்ஏக்கமுடன் உதடுகளால் மட்டும் எனக்காக புன்னகைப்பாள். அவசரமாக அவளைக் கடக்கும் போது கூட, அவளின் வீட்டு வாசலினூடாக தூரத்து சுவரில் தொங்குகின்ற மாலையிடப்பட்ட அக்காவின் புகைப்படமும் அதன் கீழே சாய்வு நாற்காலியில் தலைவிரிகோலமாய் சிறுபிள்ளை போல ஆடுகின்ற அவளின் அம்மாவின் உருவமும் என்னைக் கலங்கடித்துவிடும். லீலாவின் வீட்டு முற்றத்தில் இருக்கின்ற நாற்காலிகளில் இருந்து நானும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவளின் அம்மா அழுவது சிரிப்பது தன்னோடு தானே பேசிக்கொள்வதும் அவளின் அப்பாவை நினைத்து சாப்பாடு பரிமாறுவதுமாக இருப்பார். ஆரம்பத்தில் லீலா என் கைகளை பற்றி அழ செய்தாள், நாட்ச்செல்ல அவளுக்குப் பழகிப்போனது.

அப்போதைய கால கட்டத்தில் பத்திரிகைத் தொழில் எளிதானதானதல்ல. யார் பக்கம் நின்றும் எதையும் எழுதிவிடமுடியாது. ஆமிப்பக்கம் நின்று நான்கு வரி போட்டு இயக்கப் பக்கம் நின்று நான்கு வரி போட்டு பின்னர் மக்கள் பக்கமும் நின்று நான்குவரி போட்டால் உண்மைச் செய்தியும் சம்பவமும் திரிந்து புது வடிவில் வந்துவிடும். அதையும் பத்திரிகை ஆசிரியர் தனது எழுத்துவித்தையால் இன்னொரு செய்தியாக்கிவிடுவார். பக்கம் பக்கமாக பொய்களையும் மழுப்பல்களையும் அச்சடித்தே காகிதங்களை வீணாக்கிக்கொண்டிருந்தோம். இத்தனை பொய்க்கும் எழுத்துப்பிழை பார்க்கும் அற்ப வேலை எனக்கு. ஒரு முறை தலைப்புச் செய்தியை இப்படி அச்சடித்து விட்டோம்.

காகித விலை ஏற்றத்தால் நாளை முதல் பத்திரிகை அளவுக்குறுக்கம் செய்யபடுகிறது.”

அடுத்தநாள் காலை வேலைக்குச் சென்று பார்த்தால் இரண்டு இடங்களில் கிரினைட் எறிந்து தீய்ந்து போயிருந்தது. சில நாட்களின் பின்னர், முதலாவது இயக்கத்தால் எறியப்பட்டதாகவும் பின்னர் ஆமி தம் பங்கிற்கு மற்றொன்றை எறிந்ததாகவும் அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள். கிரினைட் எறிந்ததோடு பத்திரிகை வேலையை நிறுத்தி விடலாம் என்று முதலாளி முடிவு பண்ணியிருந்தார். ஆனால் அந்த இரவே அவர் வீட்டு சுவருக்கும் கிரினைட் எறியப்பட முடிவை மாற்றிக்கொண்டார். அன்று முதல் இருபது பக்க வார இதழ் முப்பது பக்கமாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு தரப்பிலிலும் மூன்று செய்திகள் அதிகமாக அச்சடித்து சமாளித்துக் கொண்டிருந்தோம். மொத்தத்தில் பத்திரிகை நடத்திக்கொண்டிருப்பது கிரினைட் பயத்தில் தான். மாவீரர் நாள் அன்று பத்திரிகை விசேடமாக அலங்கரிக்கவேண்டும் என்ற கோரிக்கையில் அதிகாமாக இரண்டு பக்கங்கள் மாவீரர்களுக்காக அச்சிடப்பட்டது. பத்திரிகை விநியோகிக்கும் வண்டி மாவீரர் நாள் அன்று காலை தீயில் கருகியிருந்தது. இப்படி எந்த நிலைப்பாடும் இல்லாமல் மொத்த பத்திரிகை தொழிலுக்கே அழுக்கு ஏற்படுத்தும் போக்கில் நான் வேலை செய்யும் பத்திரிகை செயற்பட்டுக்கொண்டிருந்தது.

(111)

தெளிவற்ற அவளின் முகத்திலிருந்த களங்கமற்ற புன்னகையைக் கடந்து பத்திரிகை அலுவலகத்தை அடைந்தேன்.எப்போதும் இல்லாதவாறு அன்றுதான் முதன் முதலாக தற்கொலைப் பள்ளம் சம்பந்தமாகவும் லீலாவின் அக்காவின் தற்கொலை சம்பந்தமாகவும் எழுதியிருக்கவேண்டும் என்று ஆசிரியரிடம் கூறினேன். அவருக்கு எல்லா விவரங்களும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவர் எதையுமே எழுதியிருக்கவில்லை. இனி எழுதப்போவதும் இல்லை என்ற முடிவில் நிச்சயமாக இருந்தார்.போர் சூழலில் இவ்வாறான சிறிய சம்பவங்கள் முக்கியத்துவம் இல்லாமல் போகின்றன, இது தகாத செய்தியென்று மூடி விட்டார்.

லீலாவின் வீட்டைத் தாண்டி ஒரு பத்துநிமிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்தால் தற்கொலைப்பள்ளம் வந்துவிடும்.சோர்வாக வேலையை முடித்துக்கொண்டு ,அவளின் அம்மாவின் விம்பங்கள் மனதின் அத்தனை மூலைகளிலும் தெறித்துக்கொண்டிருக்க அன்றைய நாளின் பின்னேரத்தை தற்கொலைப் பள்ளத்தின் பாறை இடுக்குகளில் சாய்ந்திருந்த வானத்து முகில்களை பார்த்துக்கொண்டிருந்தேன். முகில்கள் முன்னே நகர்வதும், காற்று திசை மாற பின்னே நகர்வதுமாக இருந்தன. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வருகின்ற இளம் பிஞ்சிலைகள் வேகமாக வீசிய காற்றில் சுழன்று வெளியில் அலைந்து அல்லல்ப்பட்டு பள்ளத்தினுள் விழுந்தன. இவற்றை எல்லாம் வியந்து பார்த்துக்கொண்டிருந்த விட்டு வீட்டிற்குத் தூங்கப் போனேன்.

இரவு இரண்டு மணியிருக்கும். ஜீப்களின் சத்தமும் வாகனங்களின் சத்தமும் நித்திரையைக் குழப்பிக்கொண்டு இருந்தன. கூடவே இரண்டொரு வெடிச்சத்தம் வேறு. முழுமையாக நித்தரை கலைந்து போனது. எனக்கு முன்னரே அம்மாவும் ,அவருக்கு முன்னரே அப்பாவும் எழுந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வெடிச்சத்தம் சற்று உக்கிரமாக கேட்கத்தொடங்கியது. அது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து வருவதாகத் தெரியவில்லை. வானத்தின் மீது வெறுமையாகச் சுடுவது போல இருந்தது. இமை மடல்களில் பயம் பற்றிக்கொண்டது. மடல்கள் இரண்டும் கனக்கத்தொடங்கியது. ஒவ்வொரு கண் சிமிட்டலும் வலியை உண்டாக்கியது. பின்னர் காது மடல்கள், உதடு என்று மென்மையான பகுதிகள் ஒரு விதமான வலியை ஏற்படுத்தின. இயந்திரங்கள் மட்டும் இரவின் தூய்மையான காற்றினை கிழித்துக்கொண்டு, அவற்றின் மூர்க்கமான சொற்களின் மூலம் பேசிக்கொண்டிருந்தன. வாகனங்கள் வேகமாக அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருந்தன. இத்தனை வெளிப்படையான நடவடிக்கை என்றால் அது ஆமியினது தான் என்று அப்பா அடித்துகூறினார். இராத்திரி அந்த சலசலப்போடு முடிந்தது. காலையில் வெளியேசெல்ல அனைவருமே பயந்தோம். அப்பாவும் நானும் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்தோம், அம்மாவும் பாட்டியும் எங்களை பேசினார்கள். வானம் விடிந்திருக்கவில்லை. என்னதான் வெளிச்சமாக இருந்தாலும்; புகைபோல இருட்டு எங்களை சுற்றிக்கொண்டது. நாங்கள் கேற்றடிக்கு போக சந்திக்கடை சுகுமார் மாமா சறத்தை வண்டியில் இழுத்துக் கட்டிக்கொண்டு விறுவிறு என நடந்தார். அப்பா எதுவும் பேசாமல் அவரைத் தொடர்ந்து நடக்க நானும் பின்னால் நடந்தேன். சுகுமார் மாமா தற்கொலைப் பள்ளத்திற்க்குத் தான் நடக்கிறார் என்பதை நாமிருவரும் ஊகித்துகொண்டோம்.

பெரும்பாலும் எந்த வீட்டிலும் ஆட்களை வெளியே காணவில்லை. சிலர் தமக்குள்ள கிசுகிசுத்துப் பேசிக்கொண்டு, நாங்கள் செல்லும் பாதையிலேயே நடந்தார்கள். சில வீடுகளின் வாசற்படிகளில் வயதான ஆச்சிமார் தலையை சுவரில் சாய்த்தபடி மேல் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தூரத்திலேயே சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. பெரிய வாகனங்களின் சில் அடையாளங்கள் சேற்றுப் பாதையின் ஓரங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது. நெருங்க நெருங்க சன இரைச்சல் அதிகமாகிகொண்டிருந்தது. வருவதும் போவதுமாக சனங்கள் இருந்தார்கள். அங்கிருந்த பலரின் கண்கள் கண்ணீரால் முட்டியிருந்தது. அது இறப்பின் அறிகுறிதான். லீலாவின் அக்காவின் தற்கொலையில் கூட இத்தனை சனக்கூட்டம் இல்லை. எல்லோரும் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் எவருமே இல்லை. ஓரிரு கிழவிகள் மட்டுமே பெண்கள் பக்கம் நின்றார்கள். பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு அதைப்பார்க்கும் திராணியற்றவர்கள். இறப்பின் வாடை நாசிகளில் படரத் தொடங்கியது.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு போவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. யாருமே விரும்பி பார்த்துக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவராக தோளில் தொட்டு விலக்கும் போதும் அவர்களின் முகமும் கண்களும் வாயும் மூக்கும் சொக்குத் தசைகளும் கோபத்தாலும் கவலையாலும் வெளிப்படுத்தமுடியாத கலவையான உணர்ச்சிகளைக் காட்டின. அவர்களின் கண்கள் சிவப்பாக இருந்தன. அவர்களின் கால்கள் நிலையற்றுப்போய் இருந்தன. எவருமே தமக்கிடையே பேசிக்கொள்ளவில்லை. தமக்குத் தாமே பேசிக்கொண்டனர். எத்தனையோ தற்கொலைகளை கண்ட வயது போனவர்கள் கூட நொருங்கிப்போயிருந்தனர். எனக்கு முதல் சுகுமார் மாமாவும் அப்பாவும் எட்டிப் பார்த்துவிட்டு வர அவர்களின் முகத்தைப் பார்க்காமல் தற்கொலைப் பள்ளத்தை எட்டிப் பார்த்தேன்.

இரவில் கடிக்கின்ற நுளம்புகளைச் சிறுவர்கள் அடித்துக் கொன்று குவித்து வைப்பது போல, ஒரு குவியல் மனித நுளம்புகள் ரத்தசகதியில் ஊறிப்போயிருந்தன. உடம்பில் ஒரு துணிகூட இல்லால்ஆண்கள் பெண்கள் என்று எந்த பேதமுமே இல்லாமல் சமத்துவமாய், முகங்களின் ஒவ்வொரு தசை நார்களிலும் காயங்களுடன் உடம்பின் ஏதோ ஒரு பாகத்தில் துளைத்த சன்னத்தின் துளையுடன், சீவி எடுக்கப்பட்ட காதுடன் மூக்குடன் விரல்களுடன் , தலைமுடிகள் பிடுக்கப்பட்டது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்பலர் ஏதோ சொல்லவந்ததைபோல வென்று வாயைத் திறந்தபடி நிசப்தமாக கிடந்தனர். கைகள் கால்களை இரண்டும் கட்டப்பட்டிருந்தன. சிலரின் ஒரு கை அவரின் ஒரு காலுடன் கட்டப்பட்டிருந்தது. ஓரிருவரின் கைகள் இன்னொருவரின் காலுடன் கட்டப்பட்டிருந்தன. ஒருத்தரின் கைகள் பின்னால் கட்டப்பட்டு கமக்கட்டு இடைகளுக்கூடாக விறகு செருகப்பட்டிருந்தது. இன்னொருத்தனின் கால்கள் இரண்டும் நேர்கோடு போல விரிந்திருந்தது. அவர்கள் எல்லோரும் ஒருவருக்குள் ஒருவர் செருகியிருந்தார். அதில் எவருமே நிர்வாணமாக இல்லை. அவர்களின் அந்தரங்கள் மறைப்பதற்கு இருக்கவில்லை. அரைகுறையாகவும் அடியோடும் சீவப்பட்டிருந்தன. பார்க்கின்ற எல்லோருமே நிர்வாணமாக நின்றோம். மறைக்கவேண்டியது எங்களின் நிர்வாணமாகவே இருந்தது. அவர்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எல்லோரினதும் இரத்தத்தின் வாடையும் ஒரு நாற்றமாகவே இருந்தது. அந்த நாற்றம் மூளைக்கு ஏறி ரத்த நாளம் ஒவ்வொன்றையும் விறைப்படையச் செய்தது. கிட்டத்தட்ட இருபது பேர் இருப்பார்கள். சரிக்குச் சரி பெண்கள். ஆண்களில் ஒரு சிலர் தாடியோடும் பலர் தாடி முளைக்காமலும் கிடந்தார்கள். பதினைந்து வயதிலிருந்து இருக்கலாம். ஒருத்தரின் முதுகுத் தோல் உரிக்கப்பட்டு ரத்தத்தில் ஊறி மெல்லிய சிவப்பாக இருந்தது. இன்னொருத்தியின் கையயொன்று கழுத்தின் பின்புறமாக சுற்றி முன்புறம் இழுக்கப்பட்டிருந்தது. சிலரின் ஒரு கண் குழிக்குள் இமை மடல் சென்றிருந்தது. ஆண்கள் பலரின் பின்பக்க தசைகளும் தோல்களும் அற்றுப்போயிருந்தது. பெருவிரல்கள் வாய்க்குள் திணிக்கப்பட்டு சிலர் கிடந்தார்கள்.

அவர்களின் உறவினர்கள் தலையை பாறையின் மீது முட்டி மோதி அழுதுகொண்டிருக்கிறார்கள். பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருத்தன், வெறும் மேலுடன் கண்களில் கண்ணீர் வடிய பள்ளத்தை எட்டிப்பார்த்துக்கொண்டு நின்றான். அவனின் காற்சட்டையை ஒரு கையிலும் மயங்கிக் கிடக்கின்ற தாயின் கைகளை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு நடுவே கறுத்த பாவாடையும் நீல மேற்சட்டையும் போட்டிருந்த குழந்தை ஒன்று என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டு நின்றது. அந்தப்பார்வை அவருடையது தான்லீலாவின் அம்மாவினுடையது. முதுகில் தட்டி அப்பா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

அன்றிலிருந்து மூன்று நாட்கள் பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்லவில்லை. நான்காம் நாள் சென்று அவலம் நடந்த தின பத்திரிகைத் தலைப்புச்செய்தியைப் பார்த்தேன்.

சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகப் போகின்றன

மொண்ணைக்குறிப்பு – 2

மொண்ணைக்குறிப்புகள்

  1. முன்கதைச் சுருக்கம் -//நிற்க, அப்படி ஒரு தீவிர வாசகனைத்தான் அதிஷ்டவசமாகக் கொழும்பில் சந்தித்தேன்.
    சதா தேவகாந்தனின் கனவுச்சிறைதான் தமிழிலேயே சிறந்த நாவல் எனப் பேசிக்கொண்டே இருந்தார். மலேசியா வந்து இரண்டு வாரத்திற்குப் பின்பும் அவரது வல்லினம் வருகையைக் கிண்டலடித்திருக்கும் அவரது வலைப்பதிவில் தேவகாந்தனின் கனவுச்சிறை சிறந்த நாவல் என்ற குறிப்பும் இருந்தது. அவர் இணையத்தளத்தில் புகுந்து ஆராய்ந்தேன். அதை மீறி அது ஏன் சிறந்த நாவல் என ஒரு பதிவை அவரால் விரிவாக எழுதமுடியவில்லை. இந்த மெத்தனம்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தைக் கொன்றது. இந்த அசட்டுப்பேச்சுகளை உதிர்ப்பவர்கள்தானே பின்னர் அந்நாட்டின் படைப்பாளிகளாகி விடுகிறார்கள். தங்கள் இலக்கியச் சூழலைத் தற்காத்து கேலியான ஒரு மொண்ணைக்குறிப்பை எழுதியதால் அவர் இலங்கை இலக்கியத்தில் கவனிக்கப்படும் எழுத்தாளராகிவிடுவார் இல்லையா.// – நவீன்.
  2. ஒரு கதையும் சில கிளைக் கதைகளும் – குடோன்களை பெரும்பாலும் கீழ்த்தளத்திலே பார்த்திருந்த எனக்கு மேற்தளத்தில் இருந்த குடோனைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து உடனே மீள முடியவில்லை. “கீனோ” வினை ஒரு பேரூந்துப் பயணத்தில் வாசித்திருந்தேன். அதன்மூலம் ஸ்ரீதர் ரங்கராஜ் எனக்கு அறிமுகமாகியிருந்தார். பின்னர் முகப்புத்தக நட்பிலும் இணைந்தோம். எல்லோரும் வலு தீவிரமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். பொருத்தமான வழிகாட்டலுடன் புகைப்படச் சடங்கு முடிந்ததும் கூட்டம் கலையத்தொடங்கியது. எந்தப் புகைப்படத்திற்கும் என்னை அழைக்கவில்லை என்பதை இப்போது நினைத்து உள்ளூர சந்தோசித்துக்கொள்கிறேன். கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே தாயாஜியிடம் வல்லினம் 100 பிரதி ஒன்றைக் கேட்டேன். கைவசம் இல்லை என்றார். சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். கலைந்துகொண்டிருந்த அந்த மெலிவான கூட்டத்திற்குள் ஸ்ரீதர் ரங்கராஜை கண்டுபிடித்து என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவரின் கீனோ பற்றிய என் அபிப்பிராயத்தை முன்வைத்தேன். இருவருக்குமான ஆரோக்கியமான உரையாடலின் தொடக்கமாக இது இருந்தது. மொழிபெயர்ப்பு, மூலப்பிரதியினை வாசித்த பின்னர் மொழிபெயர்ப்பை வாசித்தல், மொழிபெயர்ப்பிலுள்ள இடர்கள், மொழிபெயர்ப்பின் தேவைகள் என்று குடோன், குடோன் வெளித்தளம், படிகள், கண்ணாடி பொருத்தப்பட்ட கீழ்த்தளத்தின் இடைச்சுவர், ரசீது சரிபார்க்கும் மேசை என்று சிறிது நேரம் உரையாடல் நீண்டது. இந்த உரையாடலின் இடையில் தேவகாந்தனைப் பற்றியும் கனவுச்சிறையைப் பற்றியும் ஸ்ரீதர் ரங்கராஜிற்கு அறிமுகம் செய்தேன். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் இது என்று “கிளைம்” பண்ணினேன். பின்னர் கலிங்கு நாவலையும் ஆதித்தாய் சிறுகதை தொகுப்பையும் அறிமுகம் செய்தேன். அதன் பின்னர் தொடர்ந்து உரையாடிக்கொண்டு போனோம். இடையில் அவர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் பற்றிய சலசலப்புகள் வந்தன. பேசிக்கொண்டே வாசலை அடைந்தோம். அப்போது தான் நவீன் எங்களுக்கண்மையில் வந்தார். நான் ஸ்ரீதர் ரங்கராஜிடம் சொல்லிவிட்டு நவீனிடம் சென்று கைகுலுக்கி அறிமுகமானேன். முப்பது செக்கன்கள் கூட நீளாத சந்திப்பு, உடனடியாக முடிந்தது. அவர்களை ஏற்றும் வான் வந்தது. கிளம்பிவிட்டார்கள். இங்கு “நிற்க” வேண்டாம் மூன்றாம் குறிப்பாக மிகுதியை எழுதுகிறேன்.
  3. முப்பது செக்கனும் தீவிர வாசகனும் – முப்பது செக்கன் உரையாடலில் என்னைத் தீவிர வாசகனாக உணர்ந்துகொண்ட நவீனுக்கு இலங்கையில் இலக்கியம், அரசியல், பொருளாதாரம், யாப்புகள் மற்றும் இன்னபிற பௌதீக உருவ, அருவ,அருவுருவ கூறுகளை உணர்ந்துகொள்ள ஏழு நாட்கள் என்பதே அதிகம் எனக் கருதுகிறேன். “ஒரு கதையும் சில கிளைக் கதைகளும்” என்ற குறிப்பை மறந்துவிடுங்கள். “சதா தேவகாந்தனின் கனவுச்சிறைதான் தமிழிலேயே சிறந்த நாவல் எனப் பேசிக்கொண்டே இருந்தார்.” இப்படியான ஒரு பொய்யினைச் சொன்னால் பூபாலசிங்கம் புத்தக கடையின் சிற்றூழியர் கூட நம்பமாட்டார். வேண்டுமென்றால் அங்கிருக்கின்ற கண்காணிப்புக் காமராகளை சாட்சியாக அழைக்கிறேன். பெரும்பாலும் நான் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன் என்று ஸ்ரீதர் ரங்கராஜ் உங்களுக்கு கூறியிருக்கக்கூடும். ஆனால் மேற்கூறியதை விட, Kafka on the Shore பற்றியும் Norwegian Wood பற்றியும் பேசியதையும் சேர்த்துக்கூற மறந்துவிட்டார் போலும். அதன் பின்னர் முகப்புத்தகம் வழியாக வரலாறும் புனைவுகளும் பற்றியும் இலக்கிய அறம் பற்றியும் இலக்கிய அரசியல், தனிமனித இலக்கிய படைப்புச் சுதந்திரம் என்று தொடர்ந்து உரையாடியவையெல்லாம் ஆவியாகிப்போக தேவகாந்தனின் கனவுச்சிறையைப் பற்றி பேசிய சில நிமிடங்களை மட்டும் கருத்தில்கொண்டு சதா தேவகாந்தன் துதி பாடுகிறேன் என்றால் ஸ்ரீதர் ரங்கராஜின் அறம் எதற்குள் ஒளிந்துகொள்ளும். ” மன்னிக்கணும் நவீன் நீங்க இதுக்க எப்ப வந்தீங்க? ” இவ்வளவு அசட்டுப்பேச்சையும் கட்டுரையில் கொட்டிவிட்டு நான் கிளைம் பண்ணியதை அசட்டுப்பேச்சு என்று சொல்லும் உங்கள் தன்னடக்கம் மெய்சிலிர்க்கிறது( தேய்வழக்குத் தான் இது உங்களுக்கு போதும் ).
  4. “இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும்” என்று இந்தப்பெரிய தற்காப்பு குறிப்பொன்றை உதிர்த்துவிட்டு “தங்கள் இலக்கியச் சூழலைத் தற்காத்து கேலியான ஒரு மொண்ணைக்குறிப்பை எழுதியதால்” என்று எழுதுவதில் பெரிய நியாயங்கள் இருப்பதாக தெரியவில்லை. எப்படி கனவுச்சிறை பெரும்பொருள் ஆனதோ அதே மாதிரி இந்த மொண்ணை என்னும் வார்த்தை பிடித்துப்போய் இப்படி எழுதவேண்டியதாகப்போயிற்று.

மொண்ணைக்குறிப்பிற்கான பின்குறிப்புகள்

  1. முன்குறிப்பு முழுக்க என்னைப்பற்றி எழுதியவற்றிக்கு நன்றி செலுத்தும் படலம் நடந்தது. இப்படி விளிப்பதனால் பின்குறிப்புகள் வேறொன்றைப் பற்றி பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அதன் மிச்ச சொச்சம்தான் இது .
  2. “அவர் இணையத்தளத்தில் புகுந்து ஆராய்ந்தேன். அதை மீறி அது ஏன் சிறந்த நாவல் என ஒரு பதிவை அவரால் விரிவாக எழுதமுடியவில்லை. இந்த மெத்தனம்தான் மலேசிய தமிழ் இலக்கியத்தைக் கொன்றது.” ஏன் சிறந்த நாவல் என்று என்னோடு விவாதித்திருக்கலாம் நவீன். அதை விட்டுவிட்டு இணையதளத்திற்குள் உலாவி பதிவைத்தேடி, அது இல்லை என்றவுடன் விரிவாக எழுதவில்லை – மெத்தனம் – இலக்கியத்தை கொன்றது போன்ற சொற்களை பாவித்து உங்கள் கருத்தை முன்வைப்பது ஸ்ரீதர் ரங்கராஜ் பாணியில் மிகப்பெரிய கிளைம் அல்லவா. நான் அறிமுகப்படுத்திய பின்னரே தேவகாந்தனை அறிந்த நீங்கள் இன்னமும் கனவுச்சிறையை வாசித்து – ஏன் வாங்கிக்கூட இருக்க மாட்டீர்கள் என்றே தோன்றுகிறது. உங்கள் கூற்றின் படி நான் உங்களுக்கே(நவீன்) கிளைம் பண்ணியதாக இருக்கட்டும். உடனே மறுத்துப்பேசியிருக்கலாமே. முப்பது செக்கன்கள் கொஞ்சம் அதிகம் என்றாலும் முயற்சித்திருக்கலாம். முன்கதைச்சுருக்கத்தில் சொன்னது போன்ற மூன்றாம் நபர் கூற்றை உங்கள் கூற்றுப் போல எந்த பிரக்ஞையும் இல்லாமல் சொல்வதை விடவா எனது கிளைம் இலக்கியத்தைக் கொல்லப்போகிறது.
  3. நவீன இலக்கிய கிளாசிக்(நிதானமான புரிதலுக்குரிய தொனியில்/வேகத்தில் வாசிக்க) -வெட்டுக்கிளியும் அடர் வனமும் (aka) மொண்ணைக்குறிப்பு 01 இல் Italo Calvino எழுதிய கிளாசிக்குகள் பற்றிய கட்டுரையின் இணைப்பினை கொடுத்திருந்தேன். தமிழ்ச் சூழலில் கிளாசிக்குகள் உருவாகின்ற சூழல்கள் எல்லாம் கடத்தப்பட்டுவிட்டன என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஒரு கிராமம் போரினால் முற்றாக சிதறிப்போன கதையினை அரசியல் சார்பின்றி மனித அறத்தில் நின்று விரிக்கிறது கனவுச்சிறை. ஒவ்வொரு வாசிப்பும் இன்னொரு தளத்தில் இன்னொரு பார்வையில் (இதுவே மறுவாசிப்பு) விரிகின்ற எல்லாச் சாத்தியங்களும் நாவலிற்குள் இருக்கின்றன. கதை மாந்தர்கள் – கையாளப்படுகின்ற முறைமை – அடையாளப்படுத்துகின்ற முறைமை – அடையாளங்கள் மாறுகின்ற தன்மை – அடையாள அழிப்பு என்று ஒரு சமூகத்தின் கிளாசிக் கனவுச்சிறை.
  4. மேலும் வாசிக்க – https://arunmozhivarman.com/2015/09/01/தேவகாந்தனின்-கனவுச்சிறை/ – மேலதிக தகவல் – இந்தக் கட்டுரையினை எழுதியவர் இங்கிலாந்தின் Gloucestershire ஐச் சேர்ந்த எழுத்தாளர்.
  5. இன்னொரு கிளைமும் உள்ளூர சந்தோசிப்பும் – என்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கேட்டதே கிடையாது. படைப்பாளி என்று கூடச் சொன்னதில்லை. 57 முறை மலேசியா – சிங்கப்பூரிலிருந்து என் தளத்தை பார்வையிட்டதன் மூலமும் முப்பது செக்கன் உரையாடல் மூலமும் “அவர் இலங்கை இலக்கியத்தில் கவனிக்கப்படும் எழுத்தாளராகிவிடுவார் இல்லையா ” போன்ற உள்ளூர கிளர்ச்சியைத் தருகின்றன கூற்றினை கிளைம் பண்ணுகிறார் நவீன். நன்றி ம. நவீன்.

சில சீரியஸான(தீவிரமான) குறிப்புகள்:
“எனக்குத் தெரிந்து பேராசிரியர் நுஃமான் மட்டுமே மலேசிய புத்தக நிறுவனத்துக்கும் (உமா பதிப்பகம்) இலங்கை பூபால சிங்கம் புத்தக நிறுவனத்துக்கும் இணைப்பை ஏற்படுத்தி இரு நாட்டுக்குமான புத்தக பகிர்வை ஏற்படுத்த முதற்கட்ட முயற்சியை மேற்கொண்டார். இங்குள்ள மலாய் கவிதைகளை மொழிப்பெயர்த்து இலங்கையில் அறிமுகம் செய்தார். இம்முறை அவர் துணையுடன் இந்தப்பயணத்தில் எங்கள் கண்களில் பட்ட 200க்கும் குறையாத இலங்கை நூல்களை மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக தமிழ் நூலகத்தில் சேர்த்துள்ளோம். ஓரளவு நல்ல சேமிப்பு. இனி அங்கிருந்து இலங்கை இலக்கிய அறிமுகங்கள் தொடங்கலாம். இதை செய்ய எழுத்தாளன் தேவையில்லை. அந்நாட்டில் இலக்கிய வாசகனாகச் சொல்லிக்கொண்டிருக்கும் யாரேனும் கொஞ்சம் முயன்றாலும் செய்திருக்கலாம். ஆக, அறிவுழைப்பில் எழுத்து, உரையாடல், விமர்சனங்கள் வழி படைப்புகளையும் முன்னெடுக்க முடியாத; உடல் உழைப்பில், இருக்கின்ற நூல்களை தமிழ் புழங்கும் தேசங்களில் பரவச்செய்யவும் முடியாமல் (அங்கு ஏதோ இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும்) வாசகப் பரப்பு என்னதான் செய்கிறது? உங்கள் பணிதான் என்ன? அப்படி ஒன்றும் இல்லையென்றால் உங்கள் நாட்டு இலக்கியத்தை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ள ஒரு படைப்பாளி குறித்த வசைகளைப் பொழிய உங்களுக்கு என்ன அருகதை உண்டு?” – நவீன்
வாசகர் பரப்பின் பணிகளாவன,
இருநாட்டு புத்தக நிலையங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தல்
வேற்று மொழிக்கவிதைகளை மொழிபெயர்தல்
அறிவுழைப்பில் எழுத்து, உரையாடல், விமர்சனங்கள் வழி படைப்புகளையும் முன்னெடுத்தல்
இருக்கின்ற நூல்களை தமிழ் புழங்கும் தேசங்களில் பரவச்செய்யதல் (இங்கு ஏதோ இருப்பதாகச் சொல்லிக்கொள்வதால்)
அப்படியானால் வாசிப்பது அவர்களின் பணி இல்லையா?

  1. இங்கிருக்கும் எல்லா தீவிர- நவீன இலக்கிய வாசகர்களும் உங்களைப்போல பணபலம் படைத்தவர்கள் கிடையாது. அப்படிப்படைத்திருந்தாலும் சிங்கப்பூர் – மலேசியா சுற்றுப்பயணம் செய்து 100 புத்தகங்களை இங்கிருக்கின்ற அலமாரிகளுக்குள் அடுக்க என்ன இருக்கிறது அங்கு?( உங்கள் தொனியில்)
  2. “நான் சந்திக்காத அந்தத் தரமான வாசகர்கள் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் மேலும் இலங்கையின் சமகால இலக்கியத்தை அறிய உதவியாக இருக்கும்.” – நான் சந்தித்த வாசகர்கள்/ எழுத்தாளர்கள்/பத்திரிகையாளர்கள்/நூலகர்கள் செய்த பணிகளை பட்டியலிடுமாறு நான் வேண்டினால் என் செய்வீர்? வல்லினம் இலக்கிய குழுமத்தின்( இப்போது பலத்த சந்தேகம் எழுந்துவிட்டது) பிரதிநிதிகளாக நீங்கள் அழைத்துவந்தவர்கள் ஆவணப்படுத்திய – பதிவேற்றிய சிங்கப்பூர் – மலேசியா இலக்கிய செயற்பாட்டாளர்கள் தொடர்பான பணிகளின் பட்டியலாக அமைந்திருத்தல் நன்று.
  3. “இம்முறை இலங்கை பயணத்தில் மு.பொன்னம்பலத்தின் தொகுப்பில் காலச்சுவடு பதிப்பகம் மூலம் வந்திருக்கும் ‘மு.தளையசிங்கம் படைப்புகள்’ எனும் மொத்தப்படைப்புகள் தொகுப்பை வாங்கினேன். இதை சொல்ல காரணம் உண்டு. ஒரு வாசகனான நான் தமிழ் இலக்கியம் புழங்கும் ஒரு மண்ணின் பிரதான கலைஞனைத் தேடி அடைவது தமிழகத்தில் இருக்கும் விமர்சகர்கள் வழி. தெளிவத்தை ஜோசப் எனும் ஒரு படைப்பாளியை அறிந்ததும் ‘குடை நிழல்’ நாவலை வாசித்ததும் விஷ்ணுபுரம் விருதுக்குப் பின்பே.” – நான் நவீனை அவரோடு வந்திருந்த மற்றவர்கள் எழுதிய விமர்சன, திறனாய்வுக்கட்டுரைகள் மூலமும், வல்லினத்தினை மலேசிய சிங்கப்பூர் தீவிர இலக்கிய வாசகர் எழுதிய பதிவின் மூலமும் தான் அறிந்தேன். சிரிப்பாக இல்லையா நவீன்? கோணங்கியும் ஜெயமோகனும் தான்.

அதி தீவிர நவீன இலக்கிய வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தேடிவந்த நீங்கள் ஏன் ஒரு இடத்தில் கூட “புதியசொல்” இதழைப் பற்றி எழுதவில்லை. நீங்கள் வருவதாகவும் கட்டாயமாகவும் சந்திக்கச் சொன்ன கிரிஷாந்த் பற்றியும் ஈழத்தை அடிப்படியாகக் கொண்டு இயங்குகின்ற சிறுபத்திரிகையான புதிய சொல் பற்றியும் நீங்கள் எழுதியிராதது மறதியின் காரணாமாக இருக்கலாம் என்று இந்தச் சிறுமனம் சொல்லுகின்றது.
முடிவுரை மற்றும் இன்னும் சில மொண்ணைக் குறிப்புகள்

  1. மொண்ணைக்குறிப்புகள் 01 அதாவது வெட்டுக்கிளியும் அடர்வனமும் பகடியாக எழுதப்பட்ட ஒன்று அல்ல. நவீனின் கட்டுரைக்கு எதிர்வினையும் அல்ல. ஜெயமோகன் வைத்த ஐயம், எதன் அடிப்படையில் எழுந்தது, ஏன் அதை எதிர்க்கிறேன் என்பதைப்பற்றியது தான். மொண்ணைக்குறிப்புகள் 02 பகடியானது – அதற்கு மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் – நவீன்! உங்களிடம் இல்லை.
  2. இதில் தன்னிலை விளக்கம் மட்டுமே இருக்கிறது, அதை மீறி விவாதிக்க உங்கள் கட்டுரையில் ஆழ்ந்த பொருள் எதுவும் இல்லை. ஒரு உலக சுற்றுப்பயணம் ஒன்று செய்வதாக திட்டமிட்டிருக்கிறேன். இந்தியா 7 நாட்கள் பாகிஸ்தான் 6 நாட்கள் அங்கிருந்து அல்ஜீரியா 5 நாட்கள் மேலே இங்கிலாந்து 4 நாட்கள் ஸ்பெயின் 3 நாட்கள் ஜப்பான் 2 சீனா 1 மலேசியா 1/2 சிங்கப்பூர் 1//4 நாட்கள். எல்லாம் முடித்து வந்து “வேர்வை பியர் : உலகப் பயண அனுபவங்கள்” என்று கறாரான கட்டுரை ஒன்றினை எழுத இருக்கிறேன். கோபமாக கட்டுரை எழுதி பதிவதை நவீன் வழக்கமாக கொண்டிருக்கலாம். ஆனால் அது முறையல்ல. அதைவிட, ஜெயமோகன் விவாதித்தல்,எதிர்வினை ஆற்றல் போன்றவை குறித்து எழுதியதை நவீன் வாசித்திருப்பார். சில நேரம் மறந்திருக்கலாம். அதனால் இப்போது இணைக்கிறேன்.
  3. 1. என்னுடன் விவாதம் செய்பவர் என் மீது அடிப்படை மரியாதை உடையவராக இருக்க வேண்டும். என்னை அயோக்கியன் என்றோ முட்டாள் என்றோ சொல்லும் ஒருவரிடம் என்ன விவாதிப்பது? நான் அயோக்கியன் அல்ல முட்டாள் அல்ல என்றுதான் அவ்விவாதம் அமையும். அது விவாதித்து நிறுவப்படவேண்டிய ஒன்றாக நான் நினைக்கவில்லை
    2. எனக்கு நான் விவாதிப்பவரிடம் மரியாதை இருக்கவேண்டும். அவரது கல்வி, நுண்ணுணர்வு, நேர்மை மீதான நம்பிக்கை இருக்கவேண்டும். ஒருவரிடம் நான் விவாதிக்கிறேன் என்றாலே அவரை நான் எனக்கு நிகரானவராகவோ அல்லது என்னை விட மேலானவராகவோ நினைக்கிறேன் என்றுதான் பொருள். மட்டம்தட்டுவதற்கான விவாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை3. விவாதம் விவாதப்பொருள் சார்ந்ததாக மட்டுமே இருக்கவேண்டும், தனிமனிதர்களைச் சார்ந்ததாக அல்ல.
    4 விவாதத்திற்கு ஒரு பொதுமுறைமை இருக்கவேண்டும். ஒன்றை நிரூபிப்பதற்கு கையாளும் வழி முறை இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.
    5 விவாத மொழியில் அந்த தர்க்கத்தன்மை இருக்கவேண்டும். வெற்று உணர்ச்சிகள் அல்லது உணர்ச்சிப்பாவனைகளுடன் விவாதிக்கமுடியாது
    5 நல்ல விவாதமென்பது விவாதிக்கும் இருதரப்புக்கும் நலமளிக்கவேண்டும். கவனிப்பவர்களுக்கு பயனளிக்கவேண்டும்
    (https://www.jeyamohan.in/61256#.Ws-sQdNuau4)
  4. மொண்ணைக்குறிப்புகள், கதைகள், உப கதைகள் எல்லாம் இத்தோடு நிறைவு பெறுகின்றன.

ஒரு சிறிய சினிமாக்குறிப்பு

  1. குருவி படம் பார்த்திருப்பீர்கள், அதில் விவேகின் பயணம் பார்த்திருப்பீர்கள், ஞாபகம் வந்தது சும்மா சொன்னேன்.

வெட்டுக்கிளியும் அடர் வனமும்

முன்குறிப்புகள்

  1. எம். ஏ. சுசிலாவின் பாராட்டு விழாவில் பேசிய ஜெயமோகனின் காணொளியை பார்க்கக் கிடைத்தது. கிளாசிக் நாவல்கள் பற்றிய உரையாகவே இது அமைந்திருந்தது. இணைப்பு – https://www.youtube.com/watch?v=D4HesSrL5Dg&t=1947s இதனை சுருதி டிவி தெளிவாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
  2. Why Read the Classics?” என்னும் தலைப்பில் Italo Calvino எழுதிய கட்டுரையினை வாசித்துப்பார்க்கலாம்.
  3. தமிழில் பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். “நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? – இடாலோ கால்வினோ“.
  4. வல்லினம் நவீன் எழுதிய இலங்கை வருகை பற்றிய கட்டுரை – http://vallinam.com.my/version2/?p=5191
  5. இக்கட்டுரையினை வாசித்த பின்னர் ஜெயமோகன் தனது ப்ளோகில் எழுதிய குறிப்பு – https://www.jeyamohan.in/108034#.WsrzUtNuau5
  6. அனோஜனின் கேள்வியும் ஜெயமோகனின் பதிலும் –https://www.jeyamohan.in/108231#.WswUotNuau4

வவுனியா பொது நூலகத்தில் என் வாசிப்பு கிளாசிக்குகளுடனேயே ஆரம்பமானது. முதன்முறைகளில் இரவல் பகுதியில் நவீன நாவல்களென்று எதுவும் என் கண்களுக்கு தென்படவில்லை. ஆனால் இதற்கு முன்னரே சில லத்தின் அமெரிக்க நாவல்களை வாசித்திருக்கிறேன். நூலகத்தின் இரவல் வாங்குகின்ற பகுதியின் தொங்கல் சுவரோடிருக்கின்ற ராக்கைகளில் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் அடுக்கிவைத்தபடியே இருக்கும். பெரும்பாலும் ஒவ்வொரு வருட கணக்காய்வின் போது மட்டுமே எடுத்து மீண்டும் அடுக்கப்படும் என்ற துயர நிலையிலிருந்தன. ஆனால் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு மட்டும் நான்கு பிரதிகள், கரமசோவ் சகோதரர்கள் இரண்டு, துர்கனேவின் தந்தையும் தனயரும் இரண்டு பிரதிகள் என்று பின்பக்கத்தில் ஒரு இரவல் முத்திரை கூட அடிக்கப்படாலே மீண்டும் மீண்டும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. உயர்தரம் முடித்து தனித்திருந்த காலத்தில் ஒவ்வொன்றாக இரவல் வாங்கிக்கொண்டுபோய் வாசிக்கத் தொடங்கினேன். அதே சமகாலத்தில் நவீன இலக்கியம் நெருக்கமாகிக்கொண்டிருந்தது. இதனால் நூலக இரவல் பகுதிக்குள் ஒளிந்து கிடந்த நவீன நாவல்களையும் ஒவ்வொன்றாக வாசிக்கத்தொடங்கினேன். இப்போது யோசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ராக்கைகளுக்குள் சாரு நிவேதிதாவின் ராஸலீலாவும் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல்கள், விஷ்ணுபுரமும் கோணங்கியின் சலூன் நாற்காலியில் சுழன்றபடி தொகுப்பும் அசோகமித்திரனின் ஒற்றன், தண்ணீரும் யாரோ ஒரு சிலரால் வாசிக்கப்பட்டு மீண்டும் உறங்குநிலையில்(dormancy) கிடந்திருக்கின்றன. அதே சமயம் நாவல்கள் என்றால் புத்துயிர்ப்பு போல இருக்கவேண்டும் என்றும் மனதிற்குள் பதிந்துவிட்டது.
அருண்மொழிவர்மனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தேவகாந்தனையும் ” கனவுச்சிறை”யையும் அறிமுகப்படுத்தினார். கனவுச்சிறை நூலகத்தின் இரவல் வாங்கும் பகுதியில் இருந்ததைப்பார்த்து நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அதைவிட அதிக ஆச்சரியம் கனவுச்சிறை வாசிப்பின் பின்னர் கிடைத்தது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான நாவல் கனவுச்சிறை. அதன்பின்னர் இரண்டு முறை வாசித்தும் அதன் பிரமாண்டம், உள்ளடக்கம், வாழ்க்கை, அழகியல் என்று விஸ்தாரமாக நகர்கின்ற தன்மை கிளாசிக் ஒன்றிற்கான அறைகூவலாகவே இருக்கின்றது. இதனை என்னோடு இலக்கியம் பற்றிப் பேசுபவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இப்படியான சம்பவம் ஒன்று தான் இது.
வல்லினம் குழுவினர் கொழும்பிற்கு வருகை தருவதாக கிரிசாந்தும் பின்னர் திலீப்குமாரும் அறிவித்தல் தந்தார்கள். இருவருமே கட்டாயம் சென்று சந்திக்கச் சொன்னார்கள். அறிவித்தல் கிடைக்கும் போது கொட்டஹேனாவில் இருந்தேன். செட்டியார் தெரு பூபாலசிங்கம் புத்தகசாலையில் சந்திப்பு என்பதால் போக வசதியாக இருந்தது. திடீரென ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதால் முகப்புத்தகத்திலோ அல்லது வேறு வழியாகவோ எந்த அறிவித்தல்களும் உரியநேரத்தில் கிடைக்கவில்லை. சரியான நேரத்திற்கு பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு சென்றுவிட்டேன். வல்லினம் குழுமத்தை கோணங்கி எழுதிய “கதைபோடுகிறாள் கனிப்பெண்” என்ற கட்டுரையின் மூலமாக அறிமுகம், நவீனை ஜெயமோகனின் தளத்தில் நடந்த விவாதங்களின் மூலமும் ஸ்ரீதர் ரங்கராஜை “கீனோ” மொழிபெயர்ப்பின் மூலமாகவும் தான் அறிமுகம். வேறு யாரையும் அறிந்திருக்கவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த மேமன்கவி, ஹாஸிம் உமர், ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் , அங்கிருந்தவர் நானறியாத ஒருத்தர் தவிர மிகுதி எல்லோரும் வல்லினக் குழுவினர். நவீனின் உதிரக் கள் என்கிற இலங்கை பயண அனுபவங்களை வாசிக்கும் போது இதே நிலை தான் மற்றைய இடங்களிலும் நடந்திருக்கிறது என என்னால் அறிந்துகொள்ளமுடிகிறது. கூட்டத்தில் ஒவ்வொருவரினதும் அறிமுகம் நடந்தது. வரிசையாக அறிமுகம் செய்துவைத்துகொண்டுவந்த மேமன்கவி என்னிடம் வந்து மௌனமானார். என்னை அறிந்திருக்க வாய்ப்பில்லை. என் அறிமுகம் இல்லாதது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இதை எழுதுவதற்கும் கூட இலகுவாக உணர்கிறேன். வல்லினம் குழுவினரின் ஒவ்வொருத்தராக எழுந்து தம்மைப் பற்றியும் தங்களின் பணிகள் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மட்டமான கேள்விகள் கேட்கப்பட்டு பதில்களும் வழங்கப்பட்டன. அந்நியமாக இருந்த அவ்விடத்தில் தயாஜியோடு பேச்சுக்கொடுத்தேன். அறிமுகமானேன். மற்றபடி ஒவ்வொருத்தரும் தங்களின் பணிகளாக மலேசியாவில் உள்ள தமிழ் தவிர்ந்த மற்றைய மொழி இலக்கியங்களை தமிழிற்கு மொழி பெயர்த்துக்கொண்டிருப்பதாகவும் ஊடக சுதந்திரம் இல்லாததை இட்டு கோபமுற்று தனித்த ஆளாக நின்று பத்திரிக்கைகளில் அரசியல் எழுதுவதாகவும் , அப்படியாக இன்னபிற என்று இலக்கியத்திற்கு உவப்பே இல்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். நவீன் உதிரக் கள்லில் எடுத்த முடிவைப்போல நானும் எடுப்பதாக இருந்தால் சிங்கப்பூர்- மலேசிய இலக்கியம் காட்டுக் குப்பை என்றும் எழுத்தாளர்கள் என்பதை அந்தஸ்தைதாக வைத்திருப்பவர்கள் என்றும் முடிவெடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே சந்திப்பில் ஒரே உரையாடலில் இந்த முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். நவீனின் குறுகிய காலப் பயணம் ஈழத்து இலக்கியம் பற்றிஅடிப்படையான புரிதல்களைக் கூட ஏற்படுத்தியிருக்காது. ஈழத்தின் புறச்சூழலைக் கூட ஒரு கிழமைப் பயணத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியாது. இதிலெங்கு இலக்கியம் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்வது?
கூட்டம் முடிந்தவுடன் ஸ்ரீதர் ரங்கராஜ் என்னும் அருமையான மனிதரை சந்திக்க முடிந்தது. மென்மையான பேச்சும் சிந்தனையும் உடையவர். கீனோ பற்றி நிறைய உரையாடினோம், கூடவே மொழிபெயர்ப்புகள் பற்றியும். அந்த நீண்ட வாதம் பற்றி பின்னராக எழுதவேண்டும். அப்போது தான் ஈழத்து நாவல்கள் பற்றிய பேச்சு தொடங்கியது. புத்தகசாலையில் நின்றதால், முன்னரே ஓரிரு முறை அங்கு கனவுச்சிறையை பார்த்திருந்ததாலும் கனவுச்சிறை பற்றிய அறிமுகத்தை வழங்கினேன். தேவகாந்தனை தான் அறிந்திருக்கவில்லை என்று சொன்னார். பெயரளவில் கூட. நான் நாவலை மேல் ராக்கையொன்றிலிருந்து எடுத்து நீட்டினேன். அவர் உடனே ” டூ மச் போர் எ நொவல்” என்றார். நிற்க.
காலை ஜெயமோகனின் கிளாசிக்குகள் பற்றிய உரையின் மிகுதினை பார்த்துக்கொண்டும் கிரகித்துக்கொண்டும் இருந்தபோது ஸ்ரீதர் ரங்கராஜ் சொன்ன இந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. நவீனத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டதால் அவரிற்குள் இந்த எண்ணம் வந்திருக்கலாம். நான் பிழை கூறவில்லை. ஜெயமோகனின் உரை இந்த எண்ண உருவாக்கங்கள் பற்றி மிகவும் தெளிவான வெளிப்படுத்தல்களை கூறுகின்றது. கனவுச்சிறை அதற்கான பாரிய இடத்தையும் அளவையும் கோருகின்றது. பிரமாண்டமான மனித இயக்கங்கள் பற்றிய உரையாடலுக்கு கனவுச்சிறை கொடுத்திருக்கக்கூடிய அளவு சரியானதே. ஆரம்பத்திலும் இப்போதும் தொடர்ந்து கிளாசிக்குகளை வாசிக்காமல் தவிர்த்திருந்தால் இதுபோன்றொதொரு சிந்தனை எனக்குள்ளும் ஏற்பட்டிருக்கலாம்.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, மீண்டும் ஜெயமோகனின் தளத்தை பார்வையிட்ட போதுதான் “அங்கே இலக்கியவாசகர் என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயத்தையே நவீன் குறிப்பு உருவாக்குகிறது.” என்ற நவீனின் கட்டுரையினை அடிப்படையாகக் கொண்ட அவரின் கூற்றினை பார்க்க நேர்ந்தது. ஜெயமோகன் தன் சொந்த கருத்துக்களின் அடிப்படையில் இதை எழுதியிருந்தால் அவரின் தனிப்பட்ட கருத்து என்று கடந்துவிடலாம். ஆனால் நவீனின் கட்டுரையினை அடிப்படையாக வைத்து ஐயத்தினை உருவாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தான் சந்தித்தவர்களையும் , அவரைச் சந்தித்தவர்களையும் வைத்துக்கொண்டு எழுதிய கட்டுரை அது. இங்கிருக்கின்ற தீவிர இலக்கிய வாசகர்களையோ படைப்பாளிகளையோ சந்திருக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு ஏற்படவில்லை. நவீனை வந்து சந்தித்து பேச வேண்டும் என்ற எந்தத் தேவையும் இங்கிருக்கும் வாசகர்களுக்கு இருந்திருக்காது. ஸ்ரீதர் ரங்கராஜிற்கு எப்படி தேவகாந்தனை அறிந்திருக்கவில்லையோ அதைப்போலவே இங்கிருப்பவர்கள் நவீனையும் அறிந்திருக்கமாட்டார்கள் என்ற எளிய முடிவிற்கு வந்துவிடலாம். உண்மையில் நவீன் இலக்கிய சந்திப்புக்கள், விவாதங்களுக்காக இலங்கை வந்திருந்தால், உத்வேகத்தோடு இயங்கி வாசகர்களை சந்தித்திருக்கவேண்டியது அவரின் பொறுப்பு. புரிந்துணவுடைய எழுத்தாளர் ஒருவரிற்கு இவற்றைச் சொல்லி வலியுறுத்தவேண்டிய தேவை இருக்காது. மேலும் அவரின் பயணத்தின் நோக்கம் ஈழத்து இலக்கியத்தை அறிவதாகவோ அல்லது வாசகர்களை சந்தித்து விவாதிப்பதாகவோ இருக்கவில்லை. “இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.”,”பொதுவாகவே ஒரு நாட்டின் பொருளியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அந்நாட்டில் பல்லடுக்கு நிலையில் வாழும் மக்களையும் எவ்வித ஆய்வும் இன்றி பொருத்திப் பார்ப்பது மந்தமான பார்வை. மலேசியத் தமிழர்கள் கலை வெளிப்பாட்டின் சாதக, பாதகங்களை அறிய அவர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ‘வல்லினம் 100’ களஞ்சியம் அத்தகையதொரு குறுக்குவெட்டு பார்வையை வழங்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எனவே அதை சிங்கப்பூர், தமிழகத்தை அடுத்து இலங்கையில் பரவலான கவனத்திற்கு எடுத்துச் செல்வது உலகத் தமிழர்கள் பார்வைக்கு மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தைக் காட்டும் பணி என்றே உருவகித்துக்கொண்டோம்.” இவற்றை கடமையாக கொண்டு பயணித்தவர்களிடம் வாசகர்கள் பற்றிய புரிதல்களை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
நவீனின் கட்டுரையை முன்னமே படித்து ஓரமாக வைத்துவிட்டேன். அங்கு அறியாமையைத்தவிர விவாதப்பொருள் எதுவுமிருக்கவில்லை. ஆனால் ஜெயமோகன் நவீனின் கட்டுரையினை அடிப்படியாகக் கொண்டு ஒரு சிக்கலான ஐயத்தினை முன்வைக்கும் போது பெரும் அயற்சியளிக்கிறது. பரந்த வாசிப்பும் புரிந்துணர்வும் கொண்ட ஜெயமோகனால் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது.

பாதுகை – எடை இல்லாத கலை

கோமாளி கிங்ஸ் பற்றிய எனது பார்வையினை பலர் விமர்சித்திருந்தார்கள். நான்கைந்து நேரடி விவாதங்களிலும் கலந்துகொண்டேன். எனக்கு எதிராக வைக்கப்படுகின்ற அனைத்து கேள்விகளுக்கும் அதே கட்டுரையில் பதிலிருக்கின்றது. நான் எதிராக விமர்சிக்கிறேன் என்ற புள்ளியில் நின்று என்னை அணுகுபவர்கள் “எதற்காக விமர்சிக்கிறேன்” என்று கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இதனால் அவர்களுடனான விவாதங்கள் அயற்சியளிக்கின்றன. “எப்போது சினிமா என்ற பொழுதுபோக்கு கலையாகின்றது” என்ற கேள்வியினை மீண்டும் மீண்டும் தமக்குள் கேட்டுக்கொண்டும் அகமும் புறமும் தேடிக்கொண்டும் இயங்க வேண்டிய தேவையினை நம்மவர்கள் உணரவேண்டும்.
 
பிரெஞ்சு திரைப்பட இயக்குனரும் கதாசிரியருமான Alain Resnais, சினிமாவை “Manipulation of Reality through image and sound“¹ என்கிறார். எதார்த்தத்தை என்பதை வெளிப்படுத்துவதில்  நுட்பமான பல விடயங்களைக் கையாளலாம். அதற்கான வெளி-சுதந்திரம் சினிமாவில் உண்டு. எல்லையற்ற இந்தச் சுதந்திரத்தின் மூலம்  எதார்த்தத்தை மூடி மறைத்துவிட முடியும். ஆனால் இது அறமாகாது. இந்த அறம் ஒவ்வொரு மொழிக்கும் தேசத்திற்கும் தனிநபருக்கு வேறுபடும். ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய தனித்த அறத்தில் நின்று செயற்படுகின்றோம். இலங்கை – ஈழத்து சினிமாவை பொறுத்தவரையில் எமக்கான கூட்டு அறம் ஒன்றினை வரையறுக்கவேண்டிய கட்டாயத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். அது சுதந்திரம் ஒன்றை வேண்டிநிற்கின்ற ஒரு இனத்தின் அறமாக இருக்கவேண்டும்.
 
மதி சுதாவின் குறும்படமான  “பாதுகை“² யினை முகப்புத்தகத்தினூடாக பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. கதைப் போக்கிலிருந்து உண்மைக்கதை ஒன்றின் தழுவலாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கிறேன். தொழில்நுட்ப உத்திகள், நேர்த்தியான ஒலிப்பதிவு போன்றவை இல்லாமலும் ஒரு நெருக்கமான கலைப்படைப்பினை உருவாக்கியிருக்கிறார் மதிசுதா. இன்று கிராமங்களுக்கு மின்சாரம், வசதியான குடிமனைகள், சீரான வீதிகள் என்று எல்லா வசதிகளும் கிடைத்துவிட்டாலும், எப்போதும் போல இவை ஒவ்வொன்றிலிருந்தும் விலக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற  குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் தனி ஒருவராக குடும்பத்தை நடத்துகின்றவர்களையே பாதிக்கின்றது. பாதுகை இங்கிருந்து அணுக்கமாகத் தொடங்கின்றது. குறும்படத்தில் வருகின்ற பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் எமது நாளாந்தத்தின் பிரதிபலிப்புகளாக காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. இதுவே காட்சிகள் – கலையாக மாறக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. கீரைப் புட்டிலிருந்து அதை வைத்து சாப்பிடும் கோப்பையின் வடிவம் வரை எமக்குரியது என்ற மனநிலையை உருவாக்குவதன் மூலம், இது ஈழத்து சினிமா என்று உணர்வினை இயக்குனர் ஏற்படுத்திவிடுகிறார். இயல்பான வன்னியின் மொழிப் பிரயோகம் உணர்வு நிலை உரையாடல்களை பலமாக்குகிறது.
 
பாதுகையின் கதை மீது எனக்கு ஈர்ப்பில்லை. “Land without people are lands without History“³ என்ற  J.R.Michell இன் புகழ்பெற்ற கூற்று ஒன்றிருக்கிறது. இன்று வன்னி நிலப்பரப்பின் குக்கிராமங்களின் சுதேச குடிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மறுப்பதன்மூலம் – அல்லது தட்டிக்கழிப்பதன் மூலம் அக்கிராமங்கள்  “Land without people” ஆக்கப்படுகின்றன. அக்கிராமங்களின் அயல் காடுகளை செப்பனிட்டு சிங்களக்குடியேற்றங்களை அமர்த்துவதன் மூலம் வரலாறு மாற்றியெழுதப்படுகின்றது. இந்தக் களத்தில் நின்று மதிசுதா பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கதை நகர்வில் இதனை வலிமையாக காட்டியிருக்கலாம். மதிசுதா கதையின் மீது இன்னும் அவதானம் செலுத்தியிருக்கலாம். நீண்ட காலத்திற்கு ஆவணப்படுத்தல்களை காட்சிப்படுத்துவதன் மூலம் மட்டும் எமக்கான சினிமாவினை உருவாகிவிடமுடியாது.
 
குறும்படம் வெளிப்படுத்துகின்றன இன்னொரு முக்கியமான உண்மை, போருக்கு பின்னாலான வாழ்க்கை. தான் கட்டமைத்து வைத்திருக்கின்ற எல்லா சமூக கட்டமைப்புகளையும், பேரழிவு ஒன்றின் பின்னலான ஈழத்து தமிழ் சமூகம் மீண்டும் உருவாக்குகின்றது என்பதை குறும்படம் காட்டுகிறது. அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலை என்று ஒன்றிருக்க, தன் சமூகத்தாலேயே கைவிடப்பட்ட இன்னொரு நிலையும் எமக்குள் இருக்கின்றது. இதனை சாதியத்துடன் இணைக்கிறார். புற, அக காரணிகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் எளிமையான யதார்த்த உரையாடல்கள் மூலம் குறும்படம் நிரப்பப்படுகிறது.
 
பின்குறிப்புகள்
1. https://www.jstor.org/stable/3245771?seq=1#page_scan_tab_contents
2. https://www.youtube.com/watch?v=z_FQH9OpodI
3. Historical Geography, London, 1954 , p.41.

29351584_1902662689778192_8542491170371164585_o.jpg
 

அந்நியன்

தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண். அம்மம்மா வீட்டின் முன் விறாந்தையோடு சேர்ந்தாற்போல ஒரு அறையிருக்கிறது. பழைய பொருட்களை எல்லாம் அடுக்கி அங்கு வைத்திருக்கிறார்கள்.  மெத்தையில்லாத கட்டில், பழைய பாய்கள் இரண்டு மூன்று, மேல் விளிம்பால் வெடித்துப் போன கண்ணாடி, பழைய கொப்பிகளைப் போட்டு கட்டிவைக்கப்பட்ட பெட்டிகள்,  காலுடைந்த மின்விசிறி ஒன்று, என் உடுப்புகள் உள்ள ஒரு பக்கம் துருப்பிடித்து சுவரில் சாய்ந்து நிற்கின்ற அலுமாரி மற்றும் என்னுடைய நான்கடுக்கு  புத்தக ராக்கைகள். இவையனைத்து எலிகளும் சிலந்திகளும் வேறு பல ஜந்துக்களும் குடியிருக்கும் எல்லோராலும் கைவிடப்பட்ட அந்த மென்னீல பூச்சு அறைக்குள் சிதறிக்கிடக்கின்றன. எல்லோரது வீட்டிலும் இப்படியான அறையொன்றிருக்கும். கொழும்பிலிருந்து வவுனியாவிற்குப் போனால் சாமியறைக்குள் தூங்கிவிடுவேன். பெரிதாக உடுப்புகள் எதையும் காவிக்கொண்டு போகமாட்டேன். முன்னறை அலுமாரிக்குள் இருக்கின்ற ஒன்றிரண்டு நல்ல உடுப்புகளே போதுமானதாக இருக்கும். முன்னர் அதே அலுமாரிக்குள் என்னுடையதும் தம்பியினுடையதும் உடுப்புகள் எமக்குரிய பகுதிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் . எமது பாடசாலைத் துணிகளும் அதற்குள் தான். பாடசாலைக் கால கடுஞ்சிவப்பான பாண்ட் உடுப்பு பத்து ரூபா பொலித்தீன் பைக்குள் கவனமாக மடித்து வைக்கப்பட்டிக்கும். சில காலத்தில் என் தம்பியின் பாண்ட் உடுப்பும் வந்து சேர்ந்தது. இப்போது தம்பியின் எல்லா உடுப்புகளும் உள்ளறை ஒன்றிற்குள் மாற்றப்பட்டுவிட்டன. முன்னறையின் மங்கிய மஞ்சளொளியில் பொருத்தமான உடுப்பொன்றினை கிளறி எடுக்கும்போதெல்லாம், வீட்டிற்கு அந்நியனாகப் போய்விட்டதாக தோன்றுகிறது.
 
எப்போதும் என்னால் நிறைந்திருந்த வீடொன்றில்  என் நினைவுகள் இறந்து போய்க்கொண்டிருக்கின்றன. சாப்பாட்டு மேசையிலும் உடுப்புகள் தொங்குகின்ற ஹாங்கரிலும் கதிரைகளிலும் எனக்கான எதுவுமே இப்போது இருப்பதில்லை. முன்னரிருந்த ஒதுக்கமான கழிப்பறையிருந்து எல்லோரும் உள்ளக வசதியான குளியலறைக்கு மாறிவிட்டார்கள். புத்தகங்களை உருண்டு கிடந்து வாசித்து தேய்த்த சிவப்பு மை பூசிய நிலம் என் வாசத்தை அறவே மறந்து விட்டது. இப்போது அந்நியனாய்ப்போய் வெறுந்தரையின் குளிரினை வாங்கிக்கொண்டிருக்கிறேன். அண்ணாந்து வெறும் மேலுடன் வீட்டு நிலத்தின் குளிரினை உடலுக்குள் செலுத்துவதைப்போன்ற ஆனந்தம் வேறெதிலும் இல்லை. முதன் முதலாக வெறும் முதுகு குளிர்ந்த தரையினைத் தொடுகின்ற போது கரு விழித் துளைக்குள் ஊசியினைப் பாய்ச்சுவதைப்போல உடல் சிலிர்க்கும். முள்ளந்தண்டின் வழியே மூளை நரம்புகளுக்கு குளிர் சென்று அதி போதையைத் தரும். அலுமாரியில் எதிரில் தான் நான்கடுக்கு  புத்தக ராக்கை இருக்கிறது. திறந்த ராக்கையாக இருப்பதால் தூசு பிடிக்கும். இதற்காக கட்டில் விரிபொன்றினால் மூடப்பட்டிருக்கிறது. முதல் தட்டில் சிறுகதை, நாவல்கள் கீழே கவிதைகள், கட்டுரைகள் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கடைசியில் கோப்புக்கள். இது இறுதியான வரிசைப்படுத்தல்தான். இதற்கு முன்னர் வித்தியாசம் வித்தியாசமான முறைகளில் அடுக்கி வைத்திருந்தேன். நவீன இலக்கியம் ஒரு பக்கம், நவீனத்திற்கு முந்திய இலக்கியங்கள் ஒரு பக்கம். அதற்கும் முதல் அப்துல் ரகுமான் ஒரு பக்கம் மற்றவர்கள் எல்லாம் இன்னொரு பக்கம். நவீன இலக்கியப் பாகுபாட்டிலும் இதே கூத்துக்கள் நடக்கும். ஜெயமோகனுக்கு முன்னுரிமை பின்னர் சாருக்கு முன்னுரிமை. சுஜாதா அளவோடு தான் இருந்துகொண்டார். இப்போது எல்லாம் கெட்டு, வாசித்தவை ஒரு பக்கம் வாசிக்காதவை இன்னொருபக்கம் என்றாகிற்று.  புத்தகங்களை வாசிப்பதைப்போல அடுக்குவதிலும் எனக்கு அலாதிப் பிரியம்.
 
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு படிக்க வந்தபோது இரண்டு பெரிய சூட்கேஸ் நிறைய புத்தகங்களைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டேன். இருந்தும் இன்னமும் அரைவாசிக்கு மேல் அந்த புத்தக ராக்கைகளில் இருக்கின்றன. அவை பெரும்பாலும் இரண்டாவது வாசிப்பிற்கு உவர்ப்பில்லாதவை. என்னுடைய தம்பி சமீபகாலமாக அவற்றைப் புரட்டத் தொடங்கியிருக்கிறான். இப்போது வவுனியா செல்லுகின்ற வேளைகளில் வைரமுத்துவோ மேத்தாவோ அல்லது அப்துல் ரகுமான் வீட்டு மேசையில் இருப்பார்கள்.  கண்டவுடனே எடுத்துகொண்டுபோய் ராக்கையில் சேர்த்துவிடுவேன். புத்தகம் அனாதையாகக் கிடப்பது என்னை முடமாக்குவது போல இருக்கும். நானில்லாத வீட்டில் என் புத்தகங்கள் அலைவது என்னை ஒரு போதும் திருப்திப்படுத்தப்போவதில்லை. இப்போது வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கின்ற எனது புத்தகங்களில், தம்பியின் வாசமே வீசுகிறது. அவை மீண்டும் ராக்கையை சென்றடையும் போது தான் எனதாகின்றது. அலுமாரியைப் போலன்றி புத்தக ராக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. அதில் இன்னொருவனின் நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்துகொண்டிருக்கின்றன. புத்தகங்கள் மறுபிறப்படைகின்றன. அந்த அறையின் இருட்டும், படிந்திருக்கின்ற தூசின் வாசனையும் மறந்து போய்விட்டேன். இப்போதிருக்கின்ற வாடகை அறையில் என் தலைக்கு மேல் அரையடி உயரத்திலிருந்தது புத்தகப் பரண் வாஞ்சையோடு பார்த்துக்கொண்டும் கண்ணாடி யன்னலின் இடுக்குகளிற்கூடாக கசிந்து  பரணில் பட்டுத்தெறித்து வருகின்ற காற்றினை  ஆழமாக சுவாசித்தவாறும் நிற்கிறேன். அணுவளவு கூட எனக்குள் திருப்தி  வரவில்லை.
 
நேற்றிரவு முன்னறையினை வாடகைக்கு விடப்போவதாக அறிந்தேன். மனம் பதைபதைக்கத் தொடங்கிவிட்டது. ஐம்புலன்களில் ஒன்று ஊனமாகிக்கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன்.  ப்ளேட் துண்டு ஒன்றினால் உடலின் மென்மையான சவ்வுகள் கிழிக்கப்படுகின்றன. நான் என்பது வெறும் உணர்வுகள் மட்டுமா? என் நினைவுகள் பலமிழந்தவையா? வெறும் தசையும் என்பும் ரத்தமும் தான் மனிதர் என்றால் அவையிருந்தும்  வெளியை  நிரப்பமுடியாமல் போகின்றது ஏன்? அப்படியானால்  இருப்பு என்பது எதனால் அடையாளப்படுத்தப்படுகிறது?  புத்தக ராக்கைகள் பற்றிய கவலை இப்போது எனக்கில்லை. எல்லாம் அந்த அலுமாரியும் என் பழைய உடுப்புகளும் அதிலிருக்கும் என்  வாசனையும் பற்றியவை தான். விறாந்தையில் நான்  குழந்தையாக இருக்கும்  புகைப்படம் ஒன்று தொங்குகிறது. நான் வீடற்றவனாகிக் கொண்டிருக்கிறேன்.
 
புகைப்படம் –

© The Estate of Francis Bacon. All rights reserved, DACS/Artimage 2018. Photo: Prudence Cuming Associates Ltd

Earth: One Amazing Day – 02

முன்குறிப்புகள்

  1. Earth: One Amazing Day – 01 பதின்மூன்று பெயரால் மட்டுமே பார்க்கப்பட்டுள்ளது. இதில் நான் இணைப்பு அனுப்பியவர்கள் மூவர்.
  2. ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஒரே ஒருத்தரால் விமர்சிக்கப்பட்டது. அதுவும் நான் வலிந்து கேட்டுக்கொண்டபடியால்.
  3. இன்னொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். அண்ட்ராக்டிக்கா பனிமலை உருகுவதைப் பற்றியது. Earth: One Amazing Day இனை இரண்டாம் பாகத்தோடு நிறுத்திவிடப்போவதால், இதனைப் பற்றி எழுதுவது சாத்தியம் இல்லை என்றே எண்ணுகிறேன்.
  4. கௌதம சித்தார்த்தனின் சினிமா பற்றிய பார்வை எனக்கு மிகவும் பிடிக்கும். உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் என்ற அவரின் புத்தகம் மிகவும் முக்கியமானதொன்றாகும். சினிமா என்பதை தொழில்நுட்பம் சார்ந்து பார்க்கின்ற ஒருவகைப்பார்வை பரவலாக உண்டு. இதைவிட ஒரு கலைப்படைப்பாக, அரசியல் பின்னணியுடைய படைப்பாக, சமூகசிந்தனைகள் அடிப்படையில் எழுந்த படைப்பாக பல்வேறு கோணங்களில் நின்று அவதானிக்கலாம். மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி என்ற பிரசன்ன விதானகேயின் With You, Without You பற்றிய கட்டுரை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. தொகுப்பில் வாசித்தவுடன் இணையத்தில் தேடி இணைப்பொன்றையும் முகப்புத்தகத்தில் பதிந்திருந்தேன். மீண்டும் இங்கே பகிர்வதற்காக தேடியபோது அந்த இணைப்பில் கட்டுரையைக் காணவில்லை.   உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் தொகுப்பில் கட்டுரை காணப்படுகின்றது.
  5. நேற்றிரவு the killing of a sacred deer என்ற திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. திரைப்படம் பேசுகின்ற மொழி, அரசியல், உளவியல் சம்பந்தமாக பேசுவதற்காக கௌதம சித்தார்த்தனைத் தொடர்புகொண்டேன். அவரும் பார்த்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் திரைப்படத்தைப் பற்றி நான்கைந்து கட்டுரைகள் வாசித்தேன் எதுவும் திருப்தியளிக்கவில்லை. தமிழில் ஏதும் கிடைக்குமா என்று தேடியபோது, ஒன்றுமில்லை. அல்லது எதுவும் என் கண்களுக்கு சிக்கவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அறியத்தாருங்கள்.

கதை 03
முதுமலைக் கிழவி கதையை முடித்துக்கொண்டாள். தூரத்து காட்டிலிருந்து வந்த குளிர்ந்த காற்றில் கள்ளின் நெடி வீசியது. பாலைவனத்தைப் போல திரண்டுபோயிருந்த முகச்சுருக்கங்களின் இடையே நதியினைப்போல கண்ணீர் வழிந்தது. அது காலத்தின் கண்ணீர். மாய் கல்லினைப் புரட்டி எடுத்துக்கொண்டு கிளம்பிய பின்னரிலிருந்து எப்போதும் இறைக்கப்படாமல் தேங்கிநின்ற கண்ணீர். காலம் கண்ணீரால் தான் கடத்தப்படுகின்றது. வரலாற்றின் எந்தப்புள்ளியிலும் கண்ணீர் ஒன்றின் உறைநிலைப் படிமம் காணப்படும். அன்று கிழுதிப்பற்றைவாசிகள் அழுதிருந்தால் காலம் அங்கிருந்து கடந்து வந்திருக்கும். முதுமலைக் கிழவி இப்போது வடித்த உப்பற்ற வெறுந்தண்ணீரால் காலம் கடந்தது. என் கண்களின் முன்னே காலம் உருண்டது. மரங்களுக்கு வயதானது. பறந்து திரிந்த பூச்சிகள் எல்லாம் விழுந்து மடிந்து சாம்பலாகிப் போயின.  என் கால்களைச் சுற்றி புதர் எழுந்தது. கிழவியிருந்த இடத்தில் புற்றெழுந்து கணப்பொழுதில் அவள் காணாமற் போனாள். அவளையும் அவளைச்சுற்றியிருந்த அனைத்தையும் காலம் தன் பிடியிலிருந்து தளர்த்தி மோட்சமளித்தது.
குறிப்பு 03
நன்பெரியல் குறிப்புக்கள் என்று எட்டு குறிப்புகள் எழுதியிருந்தேன். பதுளைக்கு அடுத்திருக்கின்ற நன்பெரியல் என்ற மலைக்குச் சென்ற அனுபவங்கள் பற்றியது அவை. இதில் பெருந்துயர் என்னவென்றால், இரண்டு நாட்கள் தங்கியிருந்ததில் ஒரு நாளுக்கான குறிப்புகள் மட்டுமே எழுதக்கூடியவாறு இருந்தன. உண்மையின் இரண்டாம் நாள் அனுபவங்கள் தான் அலாதியானவை. எழுதுவதற்கான காலமும் மனநிலையும் இன்னமும் எனக்கு வாய்க்கவில்லை. இரண்டாம் நாட்சம்பவங்களில் சுவாரஸ்யமான ஒன்றைப்பற்றி இங்கு எழுதுகின்றேன்.
Baker’s Bend
நன்பெரியல் மலையின் 5000 அடி உயரத்தில் இந்த பேக்கேர்ஸ் பெண்ட் இருக்கிறது. மலையின் உச்சத்திற்கு ஏறுகின்ற பாதை இந்த வளைவில் 180 பாகையூடகத் திரும்பும். முழுக்க பனி நிறைந்திருக்கின்றபடியால் வளைவிலிருந்து நேரே கீழே ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்பார்வையில் அகன்று விரிந்த மலைப்படுக்கைகளும் உதிக்க மறுத்து முகில்களுக்குள் உறங்குகின்ற சூரியனின் செம்மஞ்சள் ஒளியும் கண்ணெதிரே சொர்க்கம் ஒன்றினை பிரதிபலித்துக்கொண்டிருக்கும். “பத்”தை முடித்துக்கொண்டு கைகளைக் கழுவிவிட்டு பேக்கர்ஸ் பெண்டடின் கட்டிலிருந்து சப்பாத்துக்களைக் கழற்றினேன்.
மலையேறும் போது Short Cuts  என்று சொல்லி, இதற்கு முன்னர் வந்தவர்கள் சில பாதைகளைச் சொன்னார்கள். நிலைக்குத்தாக ஏறுகின்ற செம்மண் படிவுகளுக்கூடாக சிலதும் பெரும் மலை இடுக்குகளுக்கு இடையில் சிலதும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையிலான சிலதும் இருந்தன. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் செல்வது எளிது. பெரும் உழைப்பை எடுக்காது. ஆனால் செம்மண் படிவுகளோ மலை இடுக்குகளோ கடினமான பாதைகள். சிலது குத்தன ஏறுவதாகவும் இருந்தன. ஏறுவதற்கு இலகுவாக அடுக்கப்பட்டிருந்த சிறிய கற்களில் கால்களை வைத்து சமநிலையில் தேயிலைச் செடிகளுக்கூடாக இலகுவாக ஏறிவிடலாம். ஆனால் ஆபத்தும் அங்குதான் இருந்தது. அட்டைகள்.
சப்பாத்துக்களை கழற்றி போட்டத்தை உயர்த்தினால் இரண்டு குதிக்கால்களிலும் ரத்தம். உறைந்து போயும் ஓடிக்கொண்டும் இருந்தது. இரண்டு குதிகளிலும் அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சி  விழுந்துவிட்டன. இப்போது அட்டைகள் எதுவுமில்லை. ஆனால் பிசினைப்போல ரத்தம் விடாமல் வந்துகொண்டிருந்தது. சிறு வலிகூட இல்லை. இதற்கு முன்னரே ஏறும்போது எம்மில் பலருக்கு அட்டைகள் கடித்துவிட்டன. ஆனால் ரத்தம் இவ்வளவாகப்  போகவில்லை. பத் சுற்றிவந்த கடதாசியினைக் கிழித்து இரண்டு குதிகளிலும் காயத்தின் மேல் அழுத்தமாக வைத்து விட்டு மேல்நோக்கி நடந்தோம்.
Baker’s Bend பின்குறிப்பு
Baker’s Bend பற்றி விரிவாக எழுதவில்லை. இவ்வளவும் போதும். நன்பெரியல் குறிப்புகளில்
Baker’s Bend ஐப் பற்றி விரிவாக எழுதுவது எழுதுவது ஏற்புடையது. இங்கு அல்ல.
நூற்குறிப்பு 01
இப்போது மடுப் பிரதேசத்தில் கால்நடை வைத்தியராக இருக்கிறார் கிருபானந்த குமாரன் அண்ணா. உயர்தரம் முடிந்து பல நாட்களின் மாலைப் பொழுதும் முன்னிரவுப் பொழுதுகளும் அவரின் கிளினிக்கிலேயே கழிந்து போய்விடும். இருவரும் கரடி பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். கரடிகள் வாழ்வியலைப் பற்றியும் கரடிகள் பற்றி வெளியான திரைப்படங்கள் பற்றியும் மடுப்பிரதேசத்தில் நடந்த கரடியோடு தொடர்புடைய உண்மைச்சம்பவங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். பேசியதில் அணுவளவு சம்பவங்களையும் தரவுகளையும் தமிழ் மாருத இதழில் எழுதியிருக்கிறார். வாசித்துப்பார்க்கலாம் நண்பர்களே.
நூற்குறிப்பு 02
புதிய சொல் 08 இல் கபிலின் மோசஸ் ஜனித்திருப்பார் என்றொரு சிறுகதை வெளிவந்திருக்கிறது. மோசஸுடன் ஒரு நாயும் சுற்றிக்கொண்டே இருக்கும். நான் ஏழாம் எட்டாம் ஆண்டு படிக்கும் போது பொக்கட் நாய்க்குட்டி ஒன்றை வாங்கிவந்தார்கள். வெள்ளை பூல் போன்று காற்றில் மிதந்து திரிந்தது.  ஒரு மாதம் கூட எங்களோடு இருக்கவில்லை. என் தம்பிக்கு ஆஸ்துமா இருப்பதனால் அம்மம்மாவின் அக்காவின் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். அதைப்பிரிந்ததில் எனக்கு பெரிய வருத்தம் எதுவும் இருக்கவில்லை. அங்கு ஒன்றிரண்டு வருடங்கள் இருந்திருக்கலாம் அந்த நாய். ஒருநாள் மாலை யாரோ ஒரு வழிப்போக்கன் ” ச்சு ச்சு ” என்றுகூப்பிட என்னைப்போலவே இதுவும் வாலைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டது. இதற்கு முன்னர் எங்கள் வீட்டில் கட்டையான மண்ணிற நாய் ஒன்று நின்றிருக்கிறது. பெயர் லக்கி.  ஆனால் அது அன்லக்கி. யாரோ இரவோடு இரவாக மருந்துவைத்துக் கொன்றுவிட்டார்கள். இப்போது எங்கள் வீட்டில் கிளி ஒன்று இருக்கிறது. என்னைத் தவிர எல்லோரது பெயரையும் சொல்லும். இவையெல்லாம் இருக்கட்டும் , மோசஸ் ஜனித்திருப்பார் ஐ ஒரு முறை எல்லோரும் வாசித்துப்பாருங்கள். நல்ல கதை.
பின்குறிப்புகளும் முடிப்பும்

  1. the killing of a sacred deerஐப் பெற http://www.foumovies.com/the-killing-of-a-sacred-deer-full-movie-download-free-hd-fm2/
  2. நன்பெரியல் குறிப்புகளை வாசிக்க https://brinthansite.wordpress.com/2017/12/30/நன்பெரியல்-குறிப்புகள்-01-06/
  3. இதன் முதல் பாகத்தை வாசிக்க  https://brinthansite.wordpress.com/2018/03/15/earth-one-amazing-day-01/
  4. முகப்பு ஓவியம் – “Treasure Lost”

 

Earth: One Amazing Day – 01

முன்குறிப்பு 
 

வரலாறு எனப்படுவதும் கதைகள் எனப்படுபவையும் எங்கிருந்தோ  தான்தோன்றித்தனமாக தோன்றியவை அல்ல. உலகில் எங்கோ, யாரோ ஒருத்தர் ஒவ்வொரு நொடியும் புனைந்துகொண்டிருப்பவை.

கதை 01
எங்கள் அம்மம்மாவின் ஊர் கொந்தக்காரன்குளம். அதனை அடுத்து வண்ணாங்குளம். ஒரு வருடத்திற்கு முதல் கொந்தக்காரன்குளம் போயிருந்த போது வண்ணாங்குளத்திற்கும் தனியாகச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பொற்கோவில் இருக்கின்றது. செருப்பை வாகனத்தின் அருகில் வைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தேன். திருகோணமலையிலும் பொற்கோவில் ஒன்று உள்ளது. இதனைப் போல பன்மடங்கு பெரியதும் ஆடம்பரமானதும். அங்கும் இரண்டு முறை சென்றிருக்கின்றேன். அந்தக் கோவில் ஆடம்பரத்தின் உருவமாகத் தெரிந்தது. எங்கும் நிரம்பியிருக்கின்ற பக்தர்கள்,உல்லாசப்பயணிகள், கோஷங்கள், பஜனைகள் என்று மெல்லிய அருவருப்பையும் அணுக்கமின்மையையும் தோற்றுவித்தது. அங்கிருக்கின்ற சுருவங்கள், சிலைகள், பீடங்கள் என்று அனைத்தும் ஒவ்வாமையை கூட்டிகொண்டே போயின. ஆனால் வண்ணாங்குளம் பொற்கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே மனதிற்கு ஈசலைப்போல ஒன்று துருத்திக்கொண்டிருந்தது. கோவிலை நான்கு ஐந்து முறை சுற்றிவந்து எதையோ ஒன்றினைத் தேடிக்கொண்டிருந்தன கண்கள். மனதின் பெருத்த இடைவெளியில் உருவமில்லாத ஒன்று கணத்துக்கொண்டிருந்தது. இயற்கைக்கு கோவில் திறந்துவிடப்பட்டிருந்தது. சுற்றியிருந்த காடுகளிலிருந்து கிளம்பிவருகின்ற குளிந்த தூய்மையான காற்று காட்டின் வாசனையை கோவிற் கட்டடங்கள் எங்கும் பூசிவிட்டுச் சென்றன.
பீடங்களிலிருக்கின்ற சிலைகள் ஒவ்வொன்றாக கண்கள் துருத்தி துருத்திப் பார்த்தன. இன்மை கோவில் முழுக்க நிறைந்திருந்தது. அத்தனை சுவாத்தியமான நிலப்பரப்பிலும் மனம் நெளிந்து சுழன்றது. எல்லாச் சிலைகளையும் கூர்ந்து பார்த்து மீண்டும் வெறுமையாக அதே மனக் கனப்புடன் ஓய்ந்தன கண்கள். மூலஸ்தானதிற்கு எதிரிலிருந்த தூணில் சாய்ந்தேன். களைப்பு மனதிலிருந்து உடலுக்கும் பரவியிருந்தது. மனதிற்குள் நிற்கும் அருவம் பற்றிய தேடலில் கிடைத்த இன்மை கோவிலைச் சோபையிழக்கச் செய்தது. விரல்கள் நிலத்தின் மீது வளைவுகளாக வரைந்துகொண்டிருந்தன. நிலத்திலிருக்கின்ற குறுனிக் கற்களை ஒவ்வொன்றாக அணைத்தும் விலத்தியும் வளைகோடுகள் நீண்டன. உள்ளுணர்வு அருவம் பற்றிய பிரஞையை ஏற்படுத்தத்தொடங்கியது. இன்மையில் நீடித்திருந்த மனதின் இடைவெளிகள் குருணிக்கற்கள் மூலம் இணைந்த உருவத்தால் நிரம்பத்தொடங்கின. எல்லாப் பௌதீக விதிகளையும் மீறி கற்கள் ஒன்றிணையத் தொடங்கின. தூரத்து காட்டிலிருந்து வந்த காற்று பச்சையத்தின் மணத்தைக் காவிக்கொண்டு வந்தன.
கைகளிரண்டையும் நிலத்தில் ஊன்றி வேகமாக எழுந்தேன். கோவில் காரியாலயத்திற்குச் சென்று ஆட்கள் இருக்கின்றனரா என்று நோட்டமிட்டேன். மூவர் நின்றார்கள். ஒருத்தரை மெதுவாக வெளியே அழைத்துவந்தேன். அவரிடம் எதுவும் பேசவில்லை. தன்னை எதற்க்காக இழுச்செல்கிறான் என்று தெரியாமல் என்னுடைய  வலுக்கட்டாயமாக இழுப்பில் ஓரமாக வந்து சேர்ந்தான். எனக்குள்ளிருந்த படபடப்பினை அவனுணர்த்திருக்கக் கூடும். அவனது இடக்கையினை வெடுக்கெனப் பிடித்தேன். என் நடுக்கம் அவனுக்குள் பாய்ந்தது. தொடுகையின் மூலம் உணர்வுரீதியான ஒன்றிணையலாம் என்று நம்பினேன். அவனுக்குளிருந்து , அவனறியாமலே காலம் காலமாக கடத்தப்பட்டுவருகின்ற ஒன்றினை அறிந்துவிட இந்தத் தொடுகை உறுதுணையாக இருக்கும். இழையாகத் தொடர்ந்துவருகின்ற வரலாறு ஒன்று அவனுக்குள்ளும் இருப்பதாக நம்பினேன்.  பதினாறு தலை நாக சிலையைப் பற்றி விசாரித்தேன். விழித்தான். இது உண்மை இல்லை. அவனுக்கு எப்படியும் சிலை பற்றித் தெரிந்திருக்கும். மீண்டும் அதட்டிக்கேட்டேன், அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்போது மனம் பதபதைக்கவில்லை. மெதுவாக அவனது கையிருந்த பிடியைத் தளர்த்தினேன். அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நெடுங்காலமாக ஊரில் வசித்துவருகின்றவர்களைப் பற்றி விசாரித்தேன். முதுமலைக் கிழவி பற்றி அப்படித்தான் முதன்முதலாக அறிந்துகொண்டேன்.
குறிப்பு 01
வவுனியா, முல்லைதீவு எங்கும் நாகர் வழிபாட்டுத்தலங்கள் விரவிக்கிக் கிடக்கின்றன. ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை இவற்றைப்பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். வழிபாட்டிற்கான நாக சிலைகள் முழுமையாகவும் சிதைத்தவாறும் காணப்படுகின்றன. ஒன்று, இரண்டு, மூன்று என்று பதினாறு வரையான தலைகளை உடைய நாக சிலைகளை வைத்து வழிபட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.
கதை 02
முதுமலைக் கிழவியின் மீது காலம் உறைந்திருந்தது. அவரின் எழுபத்தாறு வயதிற்குப் பின்னர் காலம் நகர்ந்து செல்லவில்லை. இப்போது அவருக்கு இருநூற்றுப் பத்து வயது இருக்கலாம். இன்னும் பொல்லுபிடித்து நடக்கிறார். பற்கள் வெண்மையாகத் தெரிகின்றன. முகச்சுருக்கங்கள். வெண்ணிறமான அடர்த்திக்குறைந்த தலைமுடி. கண்பார்வையை முழுமையாகவும் குரலைப் பகுதியாகவும் இழந்திருந்தார். உருவங்களை ஓரளவு அடையாளப்படுத்துகிறார். வெளிக் கேற்றுத் தடிகளை ஒவ்வொன்றாக விலக்கிவிட்டு கிழவிக்கு அருகில் நடந்தேன். கிழவியிடம் சிலை பற்றிய தகவல்கள் ஏதும் இருக்கலாம். இருநூற்றுப் பத்து ஆண்டுகளுக்குள் ஒரு முறையேனும் சிலையினைப்பற்றி அறிந்திருக்க மாட்டாளா என்ன. அவளது வீடு பொற்கோவிலுக்கு அண்மையில் நூறு மீற்றருக்குள் இருந்தது. சுற்றி பற்றை வளந்து, பூச்சி பூரான்களின் நடமாட்டம் அதிகமாக தென்பட்டது. முதுமலைக் கிழவியின் வெண் சவ்வு படர்ந்த கண்களினை உற்றுப் பார்த்தபடி அருகில் போனேன். இளமஞ்சள் ஒளியில் கருத்த நிழலின் அசைவில் துணுக்குற்றாள். தடியின் மேல் சீத்தைத் துணி படர்ந்தாற்போல என்புகளின் மேலே மெல்லிய தோல் தொங்கியது. முழங்கை மூட்டு கரகரத்த சத்தத்தோடு அசைந்தது. மேசையினை நிலத்தில் வைத்து இழுக்கும் போது உருவாகும் சத்தத்தை ஒத்தது. மென்மையான குரலில் பதினாறு தலை நாக சிலையைப் பற்றி விசாரித்தேன்.
அவள் பதிலளிக்கவில்லை. ஒரே இருக்கையில் இருந்து காதுகளுக்குள் தூசுகள் அடைந்திருக்கும். சிலந்தியும் இன்னபிற பூச்சிகளும் காதுகளுக்குள் குடிகொண்டிருக்கலாம். மேலும் அருகிற் போய் சத்தமாக கேட்டேன். எங்கிருந்தோ வந்த ஓணான் ஒன்று சத்தத்தைக்கேட்டு திமிறிக்கொண்டு ஓடியது. முதுமலைக்கிழவி கண்களை உருட்டி என்னைப் பார்த்தாள். அவளுக்குள் உறைந்திருந்த காலம் உருகி ஒழுக்கத் தொடங்கியது.
முதுமலைக் கிழவி சொன்ன கதை
வண்ணாங்குளத்திற்கு அடுத்து இப்போதிருக்கின்ற காட்டுப்பிரதேசம் நெடுகாலத்திற்கு முன்னர் முதுமலை என்று அழைக்கப்பட்டது. வன்னியின் ஓரளவு உயரமான குன்றுகள் செறிந்த இடம் முதுமலை. மலைத்தேனுக்கு எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். இங்கிருக்கின்றவர்கள் பெரிய மரங்களில் லாவகமாக ஏற்கக்கூடிய திறமைவாய்ந்தவர்கள். இன்று கூட ஊர்களில் தேய்ங்காய் ஏறிப்பிடுங்கி தொழில் செய்பவர்கள் முதுமலையை அண்டிய கிராமப்புறங்களிலிருந்தே வருகின்றார்கள். வலிமையான உடற்கட்டு உடைய இவர்கள் எதற்கும் பயந்தவர்களில்லை. காட்டு எருமைகளை தனித்து நின்று வேட்டையாடி குடில்களுக்கு தனித்தே தூக்கிவருவார்கள். இரவுகளில் வெளிச்சமின்றிய பாதைகளில் கூட தைரியமாக அலைந்து திரிவார்கள். பெரும் மரக்கொப்புகளில் இரவுகளில் உறங்குவார்கள். அகன்ற தாடையும் பின்பக்க கூனலும் சிலிர்த்த ரோமமும் குரங்கு ஒன்றின் மூப்பினைப்போல இவர்களை அடையாளப்படுத்தும். முழங்கால் சற்று முன்னே மடிந்திருப்பது மரங்களில் ஏற வசதியாக இருக்கும். இவர்களில் ஒருத்தன் மாய். மாயவன்.
முதுமலையில் கள்ளு கிடையாது. குன்றுகள் மிகுந்த இடத்தில் கள்ளு மரம் முளைக்காது என்று நம்பியிருந்தார். இப்போது வண்ணாங்குளம் என்றழைக்கப்படும் கிழுதிப்பற்றையில் நன்றாகக் கள்ளு கிடைக்கும். ஆறேழு நாட்கள் மலை முகடெல்லாம் அலைந்து திரிந்து களைத்த முதுமலைவாசிகள் ஒரு நேர நித்திரைக்காக கள்ளுக் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.  மாய் கள்ளிற்காக கிழுதிப்பற்றைக்கு தேங்காய் இறக்கப்போவான். மாய்க்கு கள்ளிறக்க அனுமதி கிடையாது. கள்ளு நாக தேவிக்குரியது. நாகதேவி என்றால் சர்ப்பம். ஒன்றல்ல இரண்டல்ல பதினாறு சர்ப்பம். ஊருக்குள் பிறக்கின்ற கரிய குழந்தைகளை நெடுகாலமாக முறுக்கிக் கொல்லும் கொடிய உடும்பு ஒன்றினை பதினாறு பாம்புகள் ஒன்று சேர்ந்து திரண்டு அழுத்தி கொன்றதனாலேயே நாகதேவி உருவானாள் என்ற ஐதீகம் இன்னமும் வண்ணாங்குளம் மக்களிடம் பலமாக இருக்கிறது. தினமும் நாகதேவிக்கு கள்ளுச் சாத்துவார்கள். கள்ளு திரையும் முன்னர் கிழுதிப்பற்றைவாசிகள் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். மீதத்தை மாய்க்குக் கொடுப்பார்கள். மாய்க்கு போதுமானளவு கிடைப்பதேயில்லை. ஊர்வாசிகளிடம் கேட்டாலும் கொடுப்பதில்லை.  மாய்யிற்கு இது பெரும் உளைச்சலாக இருந்தது.
மாய்யிற்கு நாகதேவியைத் தூக்க பெருஞ்சிரமம் ஒன்றும் ஏற்படவில்லை. நாகதேவியே இதை விரும்புவதாக அவன் நினைத்துக்கொண்டான். முதுகில் அந்த இரண்டடிக் கல்லை கவிட்டு முதுமலைக்கு சுமந்துசென்றான். நாகதேவியைக் காணாத கிழுதிப்பற்றைவாசிகள் நாகதேவி இருளோடு கரைந்துவிட்டாள் என்றும் இனி கள்லென்பது இந்த மண்ணில் கிடையாது என்றும் நம்பினார்கள். கள்ளு அவர்களின் கள்ளு மரத்திலேயே திரைந்து மறைந்தது. இரவுகளில் நாகதேவி கள்ளுக்குடிக்க வானத்திலிருந்து இறங்குவதாகவும் கதைகள் சொல்லப்பட்டன.
குறிப்பு 02
BBC Earth Films இன் Earth: One Amazing Day என்கிற ஆவணப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். நான் பார்த்த ஆவணப்படங்களுக்குள் மிகவும் நெருக்கமான படம் இதுவாகும். பூமியை அத்தனை தூரம் நேசிக்க வைக்கும்.  இருத்தலியல் சிக்கலில் இன்றுள்ள பலர் இருக்கின்றனர். வவுனியாவில் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டு போகிறது. உலகத்தின் மீதான பற்றற்ற நிலையை எல்லோரும் உணரத்தொடங்கியிருக்கிறார்கள். காதல் பிரிவிலும், சிறிய சிறிய பிரச்சனைகளிலுமிருந்து விடுபட தற்கொலையை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். இறத்தல் பிரச்சனைகளை விடுவித்துவிடும் என்று பலமாக நம்புகிறார்கள். கிழுதிப்பற்றைவாசிகள் போல. குழந்தைகள் முதல் எல்லோரும் ஒரு முறையாவது Earth: One Amazing Dayஐயை பாருங்கள்.
 
Earth: One Amazing Day இல் ஒரு காட்சிவரும். வருடக்கணக்கில் நிலத்திற்குள் ஒழிந்து கிடக்கின்ற உடும்புகளுக்காக பெருந்தொகையான பாம்புகள் கடற்கரை வெளிகளில் காத்திருக்கும். உடும்புகளுக்கும் இது தெரிந்திருக்கும். மணற்பரப்பை மெதுவாக கிளப்பிக்கொண்டு உடும்புகள் வெளியேற , பொறுத்த நேரத்தில் பாம்புகளும் பாய்ந்துவிடும். வாழ்வுக்கும் இறப்பிற்கும் ஆனா போராட்டத்தில் நெடுகாலம் உணவற்றிருந்த பலமில்லாத உடும்புகள் வெகுண்டு ஓடும். பாம்புகளின் சுற்றுகைக்குள் மாட்டி இறப்பவையும் உண்டு, தப்பித்துக் கொள்பவையும் உண்டு.
 
 
இணையத்தில் Earth: One Amazing Day யினைப் பெற
http://ajhdmovies.com/earth-one-amazing-day-bluray-1080p-full-hd-direct-download/
 
ஓவியம் – Raphael

Stephen Hawking – அஞ்சலி

Stephen Hawking தனது 76 ஆவது வயதில் காலமாகிவிட்டார்.  “காலமாகுதல்” என்ற வினைப்பிரயோகம் Stephen Hawkingஐப்  பொறுத்தவரையில் மிகவும் பொருத்தமானதொன்று.
 
சிறுவயதில் அப்பாவைப் போலவும் எனக்குப் படிப்பித்த ஆசிரியர்கள் போலவும் விசித்திரமாகத் தெரிகின்ற மனிதர்கள் போலவும் ஒருமுறையாவது நடித்துப் பார்த்திருப்பேன். முன்னர் இயற்கையாக நடந்த இந்தச் சம்பவங்கள் பின்னர் Dubmash என்ற செயலி மூலம் பிரபலமாக்கப்பட்டது.  எப்போதாவது அகண்ட நீளமான கதிரை ஒன்றில் இருக்கும் போது உடனே மனத்திற்குள் தோன்றுகின்ற ஒரு நபர் Stephen Hawking. கதிரையின் சாய்வுப் பக்கமாக முதுகினைத் தாழ்த்தி – தலையை ஒருபுறம் தொய்வாக விட்டு – கண்களை அதீத கருணையுடனும் வாயினை ஒரு பக்க கோணலுடனும் வைத்து Stephen Hawking போல பத்துக்கு குறையாமல் செய்திருக்கிறேன். இப்படிச் செய்கின்ற ஒவ்வொரு முறையும் நானும் அவரைபோலத்தான் என்று  பூரித்துக்கொள்வேன். மார்க்ஸைப் பற்றி அறியாமல் அவர்மீதும் மார்க்சியம் மீதும் ஈர்ப்புவருவதைப் போல – ஐன்ஸ்டீன், பெரியார், ஜாப்ஸ் என்று மேலும் பலரையும் சேர்க்கலாம் – Stephen Hawking பற்றி எதுவும் அறியமுன்னமே ஒரு ஈர்ப்பு எனக்குள் உண்டானது.
 
2016 ஆம் ஆண்டு தமிழ் மாருத புத்தகக் கண்காட்சியில் வைத்து “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” என்ற “A Brief History of Time” இன் தமிழ் மொழிபெயர்ப்பை வாங்கினேன். நெடுங்காலம் கிடப்பில் கிடந்தது. 2017 இன் பின்பகுதிகளில் ஒருமுறை கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு புகையிரதத்தில் வந்த போது    ” The Theory of Everything ”   திரைப்படத்தைப் பார்த்தேன். Traveling to Infinity என்ற Jane Hawking இன் குறிப்புகளை வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். அதுவரை பெரும் சக்தியாகவும் மேதையாகவும் எனக்குள் இருந்தவர், திரைப்படத்தைப் பார்த்தபின்னர் “எளிமையான மனிதர்” ஆனார்.  திரைப்படம் முழுக்க  Stephen Hawking மெல்லிய சிரிப்பும் சடுதியான கோபமும் ஆழந்த காதலும் உடையவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். மனதளவில் எந்நேரமும் குழந்தையாகத் திரிபவராகவும் அதே நேரம் வாழ்க்கை தொடர்பாகவும் மற்றவர்களின் உணர்வுகள் தொடர்பாகவும் ஆழ்ந்த புரிந்த உடையவராவாகவும் இருந்தார்.  திரைப்படம் பார்த்த ஒரு கிழமைக்குள் “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” வாசித்து முடித்தேன்.
 
Stephen Hawking இன் மரணம் இப்போதுவரை எனக்குள் ஒரு செய்தியாகவே இருக்கின்றது. அவரைப் பற்றிய தேடல் இல்லாத காலங்களில் எனக்குள் இருந்த விம்பத்தை முக்கியமானதொன்றாக கருதுகிறேன். Stephen Hawking என்ற மனிதர் அதே விம்பத்துடன் என்னுள் இருந்திருந்தால் இந்த மரணம் எனக்குள் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.
 
இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இன் பிறந்த தினம் கூட.
 
“My expectations were reduced to zero when I was 21. Everything since then has been a bonus.” – Stephen Hawking
 

“ஒழுங்குபடுத்தலின் வன்முறை” – உரையாடல்களின் அவசியம்

ஆறாவது புதிய சொல்லில் அருண்மொழிவர்மன் எழுதிய “ஒழுங்குபடுத்தலின் வன்முறை” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, ஏழாவது புதிய சொல்லில் எனது கருத்துக்கள் வெளியாகியிருந்தன. சமகால சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தலின் வன்முறை பற்றிய உரையாடல்கள் அவசியப்படுகின்றன. பொதுஜனங்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் பரவலாக்கப்படவேண்டும். எட்டாவது புதிய சொல் வருகை தந்த நிலையிலும் பொதுவெளி உரையாடல்கள் எதுவும் இடம்பெறாமை வருத்தமளிக்கிறது.
அருண்மொழிவர்மனின் ” ஒழுங்குபடுத்தலின் வன்முறை ” யை வாசிக்க
'Good morning.  I'm Mr Elton.  Your teacher-security guard.'
புதிய சொல் 07 இல் வெளிவந்த எனது கருத்துக்கள்
இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கும் அதன் தவறிய பாதைக்கும் காரணமான சமூக கலாசாரம் ஒன்றின் மீதான கேள்வி எழுப்பப்படுகின்ற போது தான் மனிதனின் உயிர்ப்பு உறுதிசெய்யப்படுகின்றது. மாற்றத்தின் தேவை உணரப்படும் இன்னும் முன்னேற்றமே இல்லாத துர்ப்பாக்கிய அரசியல் அமைப்புக்குள் இருக்கின்ற நாம், எமது தேவையினை உணர்த்துகின்ற போது  அது சமூகத்தில் விழிப்படையும். சமூகத்தின் அமைப்பில் கேட்கப்படவேண்டிய கேள்விகள் பல கேட்கப்படாமலே அமர்ந்து போவதனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு பாதிக்கப்படுபவர்களுக்கு கூட கிடைப்பதில்லை. இதை பற்றிய பேச்சுக்கள் சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்படவேண்டும். அது வாதிக்கப்படவேண்டும். அது பற்றிய பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் முன் கொண்டுவரப்பட்டு ஆராயப்படவேண்டும். இவை எல்லாம் எச்சமூகத்தில் பொறுப்பாக நடைபெறுகின்றதோ அச்சமூகம் முன்னேற்றமடைந்த சமூகமாக மாறுகின்றது.
ஒழுங்குபடுத்தலின் வன்முறை என்ற அருண்மொழிவர்மனின் கட்டுரையும் அதற்கான  அழைப்பே. ஒரு மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பாடசாலை என்பதன் பங்கு முக்கியமானது. மனிதனின் மூளை வளர்ச்சியின் பெரும்பாண்மைக்காலம் பாடசாலைக்காலம். இதனால், பாடசாலைகளில் மாணவர் எவ்வாறு வழிநடத்தப்படுகிறாரோ அதுவே சமூகத்தின் அமைப்பாகப்போகின்றது. இலங்கையில் இன்றைய பாடசாலைக் கல்வி முறை பற்றிய விவாதம் இன்று அவசியமாகிப்போய்க்கொண்டிருக்கின்றது. இன்று முன்னேறிய உலக நாடுகளில் இருக்கின்ற கல்வி முறைமையிலிருந்து நாம் அரை நூற்றாண்டு பின்தங்கியிருக்கின்றோம். அதனாலேயே சமூக பொருளாதார அடிப்படையிலும் பின்தங்குகின்றோம். இது அடிப்படைப் பிரச்சனையாகும். ஆசிரிய மாணவர் உறவு பற்றியே அவரின் கட்டுரை ஆராய்கிறது. பாடசாலையின் நடவடிக்கைகளில் அதிகமானவை ஆசிரிய மாணவ உறவினாலேயே முன்நகர்த்தப்படுகின்றது.
இன்றைய ஆசிரியர்களின் போக்கு, அவர் குறிப்பிடுகின்ற ஆசிரியர்களின் போக்கிலிருந்து வித்தியாசமானது. உடலியல் தாக்குதல்களைக் குறைத்து உளவியல் தாக்குதல்களை ஏற்படுத்தும் இழிவான முன்னேற்றம் இன்றைய ஆசிரியர் சமூகம் அடைந்துள்ளது. உடலளவில் ஒருவனை பலவீனப்படுத்துவதை விட மனதளவில் பலவீனப்படுத்துதல் அதிக கொடூரமானது என்ற கருத்தின் அடிப்படையில் இன்றைய ஆசிரியர்கள் இயங்குகிறார்கள். இதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தின் மீதும் குற்றம் சுமத்தவில்லை. பத்தில் ஒன்றாக இருக்கின்ற களைகள் மொத்த பயிரையே நாசம் செய்வது போல. ஒரு ஆசிரியரின் தொழில் இயலாமை நிலை மாணவனைத் தூண்டி இயங்க வைப்பது தான். பல இடங்களில் இயலாமை நிலை  மாணவன் இன்னும் இன்னும் பின்தங்கிப்போதல் சாதாரணமாகிப் போகின்றது. மாணவருக்கு ஆசிரியர் மேல் வெறுப்பும் : அதுவே பின்னர் பாடத்தின் மீதான வெறுப்பாகவும் : தொடர்ந்து பாடசாலை, கல்வி , சமூகம் என்று தன்னை வெறுக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். அருண்மொழிவர்மன் கூறிய உடலியல் தாக்குதல்கள் செய்யமுடியாத கொடூரத்தை மனதளவிலான தாக்குதல்கள் செய்கின்றன. ஆசிரியர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்கள் தம்மைப் புகழ்கின்ற தமக்கு பின்னர் வால் பிடிக்கின்ற மாணவர்களை ஆதரித்து தனித்து சிந்திக்கின்ற மாணவனை அளவுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்லிச் சிரிப்பதை நேரடியாகவே கண்டிருக்கிறேன். பாட நடுவில் எழும்பி கல்விகளை சரியானமுறையில் மாணவர்கள் கேட்கும் போது, ஆசிரியருக்கு அதற்கான பதில் தெரியாதவிடத்து அவனை அவமானப்படுத்தி தன்னை நியாயப் படுத்துகின்ற ஆசிரியர்கள் இன்னும் மறையவில்லை. இன்று பிரம்பின் பாவனை குறைந்திருந்தாலும் சொற்களின் பாவனை அதிகமாகி விட்டன. குடும்ப பின்னணியை வைத்து மாணவனை பேசுதல், ஆசிரியருக்கு பிடித்தமான இன்னொரு மாணவனுடன் ஒப்பீடு செய்து பேசுதல், வகுப்பின் நாசுக்காக இழிதல், வகுப்பிலிருந்து ஒதுக்கிவைத்தல், பொதுத் தண்டனைப் பாகுபாடு என்பன அவர்களின் செயல்களில் சில. அதை விட ஒரு நிகழ்ச்சிக்கோ போட்டிக்கோ போகின்ற போது ஆசிரியப் பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமை மிக அபத்தமானது. இது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகியது  என்று தெரியவில்லை. இதனால் எத்தனையோ மாணவர்களின் திறமை வளர்க்கப்படாமலே அழிந்து போயிருக்கின்றது. இந்த சமூகத்தின் பார்வையில் ஒவ்வாதவன் ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு ஆசிரியரின் கையிலிருந்து நழுவி விழுந்தவனாகவே இருக்கின்றான். ஆசிரியர்களின் பிடி உறுதியானதாயின் அவ்வாறான நழுவல்கள் ஏற்படாது: அல்லது குறையும்.
9877339_orig
(கோட்டுச் சித்திரம் – http://assessingteachers.weebly.com/assessment-by-students.html)
அடிமைகளை உருவாக்குதல், அவற்றை பயன்படுத்திக்கொள்ளல்-ஆதிக்க மனநிலை என்பதன் அடிப்படை எண்ணக்கரு பாடசாலைகளிலேயே இன்றைய நாட்களில் விதைக்கப்படுகின்றன. பாடசாலைகள் போராட்ட குணமுள்ள மாணவர்களின் வாழ்க்கைக்கு பெரும் தடையாக இருக்கிறது. ஆசிரிய மாணவர் இடைவெளி என்பது ஆதிக்க சக்தியின் இடைவெளியாக கருத்தப்படுகின்றதே ஒழிய அறிதலுக்கானதும் அறியாமையின் தேடலுக்கானதுமான இடைவெளியாக உணரப்படவே இல்லை. இந்த இடைவெளியால் உருவாகின்ற மந்தைத் தனமே பல்கலைக்கழகத்திலும் தொடரப்படுகின்றது. சிந்தனைக்கான திறவுகோல் இயலாமை உணரப்படும்போதே திறக்கப்படுகிறது.
ஒழுங்கு படுத்தலின் வன்முறை நீண்ட விவாதம் ஒன்றின் தொடகப்பொருளாக்கப்படுகின்றது. இது ஒரு விவாதமாக மட்டும் அன்றி சமுகத்தில் தாக்கம் ஒன்றினையும் இதற்கு எதிரான கோஷங்களும் எழுப்பப் படவேண்டும்.
(முகப்பு ஓவியம் – https://www.aft.org/ae/fall2015/blank_villarreal)