தோமஸிலிருந்து புறப்படுதல் அல்லது “பொத்”தென விழுதல்.

1.

என்னிடமிருந்து
எதையாவது ஒன்றை எடுத்துச் சென்றுவிடுங்கள்
ஈரமான இந்தத் தரையிலிருந்து
ஒரு பிடி ஈரத்தையேனும்

2.

என் கைகளிலிருந்து தோமஸை விலக்கிக்கொண்டுபோய் என்ன செய்யப்போகிறீர்கள்? நேற்றும் அதற்கு முன் தினமும் அதற்கும் முதல் பல நாட்களிலும் நீங்கள் என்னிடமிருந்து பிரித்துக்கொண்டுபோன என் நண்பர்கள் என்னானார்கள்? என் வைரமான பிடிப்பையும் தாண்டி நீங்கள் இழுத்துச்சென்றவர்கள் என்னிடம் மீண்டும் வருவதற்காக கூச்சலிட்டு அழவில்லையா? உங்கள் மார்புகளை அவர்களின் வலிமையான கால்களால் உதைத்து வீழ்த்தி என்னிடம் வர எத்தணிக்கவில்லையா? நண்பர்களை என்னிடமிருந்து பிரிக்கமுன்னர் ஏன் என் கண்களை கறுப்புத் துணியினால் இறுகக் கட்டினீர்கள். ஓவென்று அழமுடியாதவாறு வாயை அடைத்தீர்கள். ஹ்ம் என்னவோ எல்லாம் செய்தீர்கள். இருந்தும் என்னால் முடிந்த எத்தனங்களைச் செய்தேன். உங்கள் கால்களையும் கைகளையும் பிடித்து தேம்பி தேம்பி அழுதேன். சுடுமணலை அள்ளி எற்றி உங்களைத் தூற்றினேன். சபித்தேன். நீங்கள் என் நண்பர்களைப் பிடித்துச் சென்ற பின்னர் அவர்களின் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்னைப் பைத்தியம் என்றார்கள். இவனுக்கென்னாயிற்று நண்பர்கள் தானே பிரிந்து போனார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அத்தனை வலிமையற்றவனா இவன் என்று என் காதலிகள் சிரித்துக்கொண்டார்கள். ஆனால் தோமஸ் மட்டும் என்மீது பரிதாபப்பட்டான். என் கிழிந்த ஆடையினை, மழிக்காத முடியினை, மெத்தையில் செரிக்காமல் வாந்தியெடுத்த வேகாத இறைச்சி துண்டுகள் மீது புழுத்த நாற்றத்தினை இன்னும் எத்தனையோ. எல்லாவற்றைப் பார்த்தும் வருத்தப்பட்டான். தோமஸ் எத்தனை பரிவான பெயர். அத்தனை பரிவானவன் அவன். மனிதர்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள்? மனித உறவுகள் ஏன் இத்தனை பலகீனமானதாக இருக்கிறது? தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் ஏதோ ஒரு நாள் முடிவிற்கு வருகின்றன? முடிவிற்கு வருவதற்காக தொடங்கப்பட்டவை எல்லாம் ஏன் தொடங்கப்பட்டன தோமஸ்? என் கைகளிலிருந்து நழுவி இழுத்துச் செல்லப்பட்டபோது நீயாவது அழுதாயா தோமஸ்?

3.

இந்தப் பூனைகளை பூமியிலிருந்து அழித்துவிடுங்கள்

சாத்தானே !
நீ கத்துவது
தொலைதூரத்திலிருந்து
என் நண்பன் அழுவதைப்போல கனக்கிறது.

4.

போதுமென்றளவு பேசிக்கொள்ள நண்பர்கள் இருந்த அந்த நாளில் தான் முதன்முதலாக நான் தனிமையை விரும்பத்தொடங்கினேன். அந்த நாளை என்னால் இன்னமும் சரியாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பனி படர்ந்த சவரக்கண்ணாடியின் மீது தெறித்தொதுங்கும் விம்பங்களைப்போல பல நாட்களை அடையாளங்கண்டு கொள்கிறேன். மிகச்சரியான அந்த நாளை, நொடியை என் பார்வையின் முன் நிறுத்தமுடியவில்லை. எரிந்து முடிந்த கடிதமொன்றிலிருந்து வார்த்தைகளைத் தேடி எடுப்பதைப்போல மழுங்கிப்போய்க்கொண்டிருக்கும் ஞாபகங்களிலிருந்து இவற்றை மீட்டி எடுப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது. அந்த நாளைப் பற்றிய நினைவுகளை ஓரளவேனும் மீட்டியெடுத்துவிட்டேன் என்று நினைத்த அந்தக்கணமே முடிவுறா வலியைத் தரும் அந்தக் கேள்வி எழுந்தது. காற்றாடிக்குள் சிக்கிக்கொண்ட ஈசலைப்போல சிறகுரிந்து உடல் சிதறிப் போனேன். “என் ஞாபகங்களில் எவை நியம்? எவை புனைவு?”. நிச்சயமாக என் ஞாபகங்கள் பொய்யில்லை. நியத்திலோ புனைவிலோ  எனக்குள் வாழ்பவர்கள் யாருமே பொய்யில்லை. அவர்கள்  அலட்சியமானவர்கள் அல்ல. சிந்திப்பவர்கள் இல்லை. அன்பைப் பற்றியும் தேவைகள் பற்றியும் சிந்தித்தவர்கள் இல்லை. வெள்ளைக் காகிதத்தின் மீது எறும்புகள் ஊர்வதைப்போல என்னுள்ளே அலைந்து திரிபவர்கள். அவர்களால் நான் அழுததில்லை. நான் அழுவதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து இறுக்கமாக முகத்தைப் பொத்தி நான் ரகசியமாக அழுவதைக்கூட அவர்கள் இலகுவாக அறிந்துவிடுகிறார்கள். தினமும் ஆயிரம் கேள்விகள் கேட்பேன். அவர்களுக்கு விடை தெரிந்திருக்காது. இருந்தும் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சுவாரஷ்யமே இல்லாத கதைகளை சொல்லிக்கொண்டிருப்பேன், சற்றும் சம்பந்தமே இல்லாமல் சம்பவங்களை கோர்த்துச் சொல்வேன், பூக்கள் பறக்கின்றன என்பேன், மரம் பேசுகின்றது என்பேன், மின்மினிப்பூச்சிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது என்பேன், இப்படி ஆயிரம் என்பேன். அவர்களும் சலிக்காமல் கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக பொய்யில்லை, ஆனால் என் ஞாபகங்கள் நியமானவையா ? புனைவுகளா? தச்சனொருத்தன் மரக்குற்றியொன்றிலிருந்து சிற்பமொன்றை செதுக்கி எடுத்ததைப்போல தூய்மையாக மட்டுமே நினைவிலிருக்கின்ற ஞாபகங்கள் எனக்குள் பெருஞ்சலனத்தை ஏற்படுத்துகிறன. கல்லொன்றில் மோதி தெறித்தழியும் நீர்த் திவலைபோல சிதறியொதுங்குகிறேன்.

இங்கிருந்து முன்னும் பின்னும் அருகிலும் இன்னும் எங்கெல்லாம் பார்வையும் அறிவும் படர்கிறதோ அங்கெல்லாம் நியமும் புனைவும் ஊடறுத்துக் கலந்த ஓவியமாகவே தெரிகிறது. எங்கெல்லாம் மனிதர்கள் கனமாகவும் கூரிய ஆயுதங்களோடும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் கறுப்பை அள்ளி எற்றிவிடுகிறேன். எங்கெல்லாம் என் புருவங்கள் தாழ்ந்து இதயத்தின் ஆழத்தில் ஒரு பிடியளவு ரத்தம் உலர்கிறதோ அங்கும் ஈரமான கறுப்பை ஊற்றிவிடுகிறேன். கரைத்தும் கலந்தும் ஊற்றி ஊற்றி எங்கும் இருளின் வண்ணமாயிற்று. எதுவுமில்லா ஒன்றிலிருந்து உண்டான ஞாபகங்களில் நியத்தையும் புனைவையும் எப்படிப் பிரித்தறிய. இத்தனை கனமான கேள்வியின் பின்னர் தனித்துப்போன நாளைப்பற்றிய ஞாபகங்களை ஒழுங்குபடுத்துவது எனக்கு இலகுவானதல்ல.

என்னுள்ளே ஒவ்வொன்றும் கேள்விகள் தான். தனிமை என்றால் என்ன? நான் உணர்கின்ற உணர்விற்கு தனிமை என்பது சரியான அடையாளமா? அல்லது எனக்கு முன்னர் இந்த உலகத்தில் வாழ்ந்து முடித்த என்னைப்போன்ற பலகீனமானவர்கள் தங்கள் சௌகரியங்களுக்காக வைத்துக்கொண்ட பெயரொன்றை என் உணர்வோடு பொருத்திப்பார்க்கிறேனா? எப்போது இந்த உணர்வு எனக்குள் உருவாகியது? அல்லது தொற்றிக்கொண்டது? யார் வைத்த சூனியம் இது? உண்மையில் ஏதோ ஒன்றை உணர்கிறேனா? அல்லது நாடகமாடுகிறதா இந்த மூளை? மூளை சிந்திக்கிறது என்றால் எப்போது எனக்குள் அந்த உணர்வு பற்றிய சிந்தனைகள் வந்தேறியது? நான் உணரும் உணர்வு என்னுடையது தானா? அல்லது பிரபலமான கவிஞரோ புனைவாசிரியரோ எழுதிவைத்த சொற்களின் வெளிப்பாடு தான் என் தனிமையா? இந்தத் தனிமை என்ன செய்துவிடும்? சிரிப்பதைப் போல அழுவதைப்போல வலிப்பதைப்போல பசிப்பதைப்போல இதை ஏன் எளிதாக தீர்க்கமுடிவதில்லை? தனிமை நண்பர்களை, உறவினர்களை, காதலியை மற்றும் எல்லோரையும் அந்நியமாக்கிவிடுமா? என்னை என்னிலிருந்தே பிரித்து சிறுகச் சிறுக அழிந்துவிடுமா? எல்லாம் அழிந்த வெறுமையில் வெறும் ஆன்மாவோடு மட்டும் நின்று தனிமை என்ன செய்துவிடப்போகிறது? தனிமை பயங்கரவாதியா? தீவிரவாதியா? அல்லது மனநோயாளியா? கேள்விகள் கேள்விகள் தான் எல்லாம்.

இவையனைத்தையும் யாரிடம் பேசித்தீர்த்துவிட முடியும். கேள்விகளில் இருந்து தப்பிக்க வழிகளைத்தேடுகிறேன். இந்தக் கேள்விகள் ஆபரணங்களைப்போல வீணாக ஒட்டியிருப்பவை அல்ல. இந்த கேள்விகளும் மற்றைய கேள்விகளும் வேறு அனைத்து கேள்விகளும் மட்டும் தான் நான். என்னிலிருந்து நான் தப்பிக்கவே வழிதேடுகிறேன். பாலூனுக்குள்ளிருக்கும் காற்று வெளியேறி பரந்த ஆகாயத்தில் கலப்பதைப்போல.

5.

அன்புள்ள நண்பன் தோமஸுக்கு,

உன் தோழி என்னிடம் கதறியழுதாள். என் அறையிலிருந்து அப்போது தான் ஓரான் பாமுக்கின் ” Memories of Istanbul” வாசித்துக்கொண்டிருந்தேன். உன்னிடம் பல முறை கெஞ்சியும் நீ வாசிக்க மறுத்த அதே பாமுக் தான். பாமுக்கை மட்டுமா நீ மறுத்தாய். நகுலனையும் சுந்தர ராமசாமியையும் ஆதவனையும் சுகுமாரையும் அனாரையும் ரமேஷையும் மார்கோசையும் ருஷ்டியையும் நெருதாவையும் இன்னும் நான் சொன்ன அனைவரையும் வேண்டாம் என்று ஒதுக்கினாய். உனக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறொன்றும் தேவையாகயிருக்கவில்லை. என் எதிர் வீட்டில் நகுலன் இருப்பதையும் பின்னேரங்களில் இரண்டாம் மாடியில் சுந்தர ராமசாமி உடுப்புக்களை உலரவிடுவதையும் சொன்னபோது என்னைப் பைத்தியம் என்றாய். போகட்டும். உனது பிறந்தநாளுக்கு நான் பரிசளித்த ” என் பெயர் ராமசேஷன் ” எங்கே. இருக்கட்டும். எனக்கு பாமுக்கின் பனி பிடித்திருக்கிறது என்றேன். நீயோ உனக்கு பனியில் தோழியுடன் நெருக்கமாக நடப்பது பிடிக்கும் என்றாய். உனக்கு நான் அத்தனை முக்கியமானவன் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் தோமஸ். நான் உன் கன்னங்களில் மென்மையாக தந்த முத்தங்களை வேண்டாம் என உதறினாய். எனக்குத்தெரியும், உனக்கு காமத்தில் ஊறிய முத்தங்கள் தான் பிடிக்குமென்று. என்ன செய்வது ஆணாகப்பிறந்து விட்டேனே. உன் தோழியுடன் நீ இருப்பதையே அதிகம் விரும்பினாய். நீங்கள் நெருக்கமாக அலைவதைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாளும் வஞ்சித்ததில்லை. உன்னைச்சுற்றி நூற்றுக்கணக்கில் நண்பர்கள் இருக்கிறார்கள். காலையில் தொடங்கிய சம்பாசனை நள்ளிரவு தாண்டியும் முடியாமல் போய்க்கொண்டிருப்பதை நீ சொல்லி அறிந்திருக்கிறேன். உன் தோழியுடனும் மற்றைய நண்பிகளுடனும் மணிக்கணக்கில் நேரிலும் எழுத்திலும் நீ பேசிக்கொள்வதை சாதாரணமாகச் சொல்லும் போது வியப்போடு பார்க்கிறேன். உன் கடிகாரம் மட்டும் பாரபட்சம் பார்க்காமல் வேகமாக சுழல்வதாக நினைக்கிறேன். தோமஸ், உன் தோழி மூடியிருந்த கதவினை வேகமாகத் திறந்து என்னருகில் வந்து நின்றாள். அன்று நீ காணாமல் போயிருந்த மூன்றாம் நாள். அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. என் உள்ளங்கைகள் இரண்டாலும் அவள் முகத்தை மூடி புதைந்திருந்து  அழுதாள். உள்ளங்கையில் சுடுநீரை ஊற்றியது போல அவளது கண்ணீர் எரித்துக்கொண்டு நனைத்தது. அவளால் எப்போதும் அழுகையை நிறுத்தமுடியாது என்று தோன்றியது. உள்ளங்கைகளை உயர்த்தி அவள் முகத்தை திறந்தேன். ரத்தநாளங்கள் ஓடிப்போயிருந்த முகத்தில் உன்னைக்காணாத வாட்டம் தெரிந்தது. அவளின் புருவங்கள் துடித்துக்கொண்டிருந்தன. நெற்றி சுருங்கியிருந்தது. அழுதழுது மூக்குச் சிவந்திருந்தது. நானும் நீயும் பிரிந்து மூன்று நாளாயிற்று என்று அவள் அறிந்திருக்கவில்லை. இந்தப் பிரிவைப்பற்றி சொல்ல எதுவுமிருக்கவில்லை என்பதுவும் உண்மைதான். எனக்குத்தெரிந்து பிரிவினை எளிதாக எடுத்துக் கடந்துவிடும் ஒரே ஒரு உயிரினம் மனிதாராகத்தான் இருக்கமுடியும். எனக்கு பலத்த நம்பிக்கையிருக்கிறது. உன் காதலி பிரிவின் துயரத்திலிருந்து இரண்டாவது மூன்றாவதோ நாள் நிச்சயம் மீண்டுவிடுவாள். உனக்கு மனிதர்கள் எளிமையானவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் உனக்கு எதையும் தரப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாய். நீயும் அவர்களுக்கு எதையும் கொடுக்கப்போவதில்லை. இந்த உண்மையை உன் தோழியிடம் எப்படி எடுத்துச்சொல்வேன். அன்பு சிந்தனைகளின் உற்பத்தி இல்லை தோமஸ். இப்படியெல்லாம் பேசுவது உனக்கு அயர்ச்சியளிக்கும். என்னசெய்வது. எனக்குத்தெரிந்த ஒரே மந்திரம் தந்திரம் எல்லாம் இந்த அன்பு தானே. நான் அன்பென்னும் பெரும் மலக்கிடங்கு. தோமஸ் ஒரு முறையாவது உன் தோழியிடம் வா. என்னிடம் வரவேண்டும் என்றில்லை. உன்னோடே இருந்து உனக்காகவே வாழ்ந்த அவளுக்காக ஒரு முறை வா. மென்மையான அவளின் கைகளைப்பிடித்து இந்த உலகத்தில் வாழும் ரகசியம் பற்றி ஓரிரு வார்த்தைகளேனும் சொல்லிவிட்டுப் போ. உன் தோழி என்னருகில் கதறி அழுகிறாள். உன் கண்கள் கலங்கவில்லையா தோமஸ்?

உதிர்ந்த இசைச்சொல்

(01)

 

பேகன் இறந்த இருபத்தாறாவது வருடத்தின் கனத்த பொழுதொன்றில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். உடல் முழுக்க ரத்தத்தைப் பாய்ச்சி அடிக்கும் வலிமையான இதயம் தனது வலிமையை இழந்துகொண்டிருக்கின்ற இந்தக் கணம் ஓவியங்களைப்பற்றி எழுதுவதொன்றும் இனிமையானதல்ல. அடுத்த தெருவில் இதயம் அடைத்து அதிகாலையில் இறந்து போன, தெரிந்தும் தெரியாததுமான ஒருவரின் ஆத்மா உடலிலிருந்து கிளம்பி இன்னொரு உடலைத் தேர்ந்தெடுக்கும் காலத்திற்குள் என்னால் எழுதுவதென்பது சாத்தியமற்ற ஒன்று. ஓவியம் மட்டுமல்ல, எந்தக் கலையைப் பற்றியும் அணுவளவும் தெரிந்திராத வதைக்கூடமொன்றுக்குளிருந்து எழுதுவது தண்டனை. சுய வெறுப்பைப் போல வேறெதுவும் கடினமானதல்ல என்றுணர்ந்த பொழுதில், அதன் அலைகள் கூட இன்னமும் அகன்றுபோகாத மென்மஞ்சள் வெயில் நாளொன்றில் பேகனைப் பற்றி எழுதி என்னாகிவிடப்போகிறது. சூரிய ஒளிக்கு கண்ணாடியைப்போல ஒளிர்ந்துகொண்டிருக்கும் பச்சை நிற இலைகளை ஒத்துக் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்றைத்தேடி உடைந்த மரச்சட்டகங்களும் கீலங்களாக கிழிக்கப்பட்டு குமித்துவைக்கப்பட்டிருக்கும் தடிப்பான மட்டைகளும் குத்திக் கிழிக்கப்பட்ட ஓவிய மிச்சங்களும் திண்மத் திட்டுகளாகிப்போன வண்ணக் கலவைகளுக்குள்  இறுகிப்போன தூரிகளும் கறுப்பும் பச்சையும் சாம்பலும் சிவப்பும் மண்ணிறமும் இன்னும் எத்தனையோ பெயர் அறியாப்பொருட்களும் நிறைந்திருந்த அந்தக் குப்பைக்கூடத்திற்குள் தெளிவற்று மங்கலாகிப்போன வட்டக் கண்ணாடியின் முன் பேகன் தன் முன்முடிகளை இடக்கையில் முதன்மூன்று விரல்களாலும் சீர்படுத்திக்கொண்டிருக்கும் அந்தக் கணம் நிர்வாணமான என் உடலை முன்னிறுத்தி பேகனின் தோளை அழுத்தமாகப் பிடித்துத் திருப்பினேன்.

 

என்னுடல் மீது கவிந்திருந்த இளங்கறுப்பும் அங்கங்கே மழிக்கப்படாமல் கற்றைகளாக வளர்ந்திருந்த முடிகளும் இறுக்கமற்றுப் போயிருந்த தசைகளும் முதற்பார்வையிலேயே பேகனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடும். சிறிய பலாக்கொட்டைகளைப்போன்ற கண்களிரண்டையும் இளம்பெண்ணுக்குரிய நளினத்தோடும் வெறுப்போடும் சிமிட்டியபடி என்னைப் பார்த்தார். ஒரு கிழமைக்கு முன்னர் மழித்த கன்னங்களில் அரும்புகளாக முளைத்திருந்த தாடியைக் கூர்ந்து பார்த்த பின்னர் தன்னுடைய கண்களை மேல்நோக்கிச் செருகி மேலுதட்டைக் கீழ்வாய்ப்பற்களுக்குள் இழுத்தார். மையிட்டிருந்த என் கண்களின் மீது அதீதமான கவர்ச்சியை அவர் உணர்த்திருக்கக்கூடும். பருத்திருந்த என்னுடலில்  கவர்ச்சியைத் தரக்கூடிய ஒரே உறுப்பு கண்களாகத்தான் இருக்கும். நாளொன்றில் இரண்டு வேளைகள் கண்களுக்குக்  கருமையிட்டு அழகுபார்த்துக்கொள்வேன். நிர்வாணமான ஆணுடலின்  மீது எந்தக் கறையும் இருப்பதில்லை. ஆணுடல் வெளிப்படையானது. நேர்த்தியற்றது. ஒழுங்கற்ற குன்றைப்போன்றது. பிடிப்பான தசைகளும் வெண்மையான தேகமும் நிர்வாணத்தில் பெண்மையையும் வெளிப்படுத்தக்கூடிய உடலல்ல என்னுடையது. என் அழுத்தமான பிடிப்பினை அவர் விலக்கியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தோம். எங்களால் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று மௌனமாயிருத்தல் மட்டுந்தான்.

 

(02)

 

” ஓரினச்சேர்க்கை அழகினால் மட்டுந்தான் ஏற்படுகிறது” என்று மௌனத்தை உடைக்கும் போது எனக்குள்ளிருந்த ஆண்மையை உணரத்தொடங்கினேன். பத்து வயது சிறுவனைப்போல பேகன் இதனைச் சொன்னார். வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்கத் தெரியாமல் இரண்டு பூக்கள் காற்றில் மோதிக்கொள்வதைப்போல அந்தச் சொற்கள் சத்தமிட்டன. நாங்கள் மௌனித்திருந்த அத்தனை நேரமும் என்னையொரு பெண்ணாக உணர்ந்திருந்தேன். மௌனத்தில் காமம் அடர்ந்திருந்தது. ஓவியம் ஒன்றிலிருந்து வழிந்தோடும் வண்ணம் போல உருகி ஓடியது. பேகனின் வெளிறிய மஞ்சள் நிறக்கண்கள் என்னிலிருந்து விலகி ஓரத்திலிருந்த மென்நீலச்சட்டையின் மீது தாவியது. அத்தாவல் முதலுறவில் வெட்கித்துப்போன பெண்ணொருத்தியின் பார்வையைப்போல தூய்மையாயிருந்தது. அந்த மேற்சட்டையையும் அதற்கு அங்காலிருந்த நீளக் காற்சட்டையையும் எடுத்து நீட்டினார்.  என் நிர்வாணத்தில் நீண்டநேரமிருக்க பேகன் விரும்பவில்லை. நிர்வாணம் ஒரு போதையல்ல என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார். என்னுடல் பிதுங்கிப்போகும் அளவு இறுக்கமான ஆடைகளை வலிந்து அணிந்து கொண்டேன். யாருக்கும் எதுவும் சரியாய்ப் பொருந்திப்போவதில்லை. நாம் தான் அவற்றிற்குள் செருகிக்கொள்ள வேண்டப்படுகிறோம். பேகனுக்காக ஆடைகளுக்குள்  செருகிக்கொண்டேன். அணிந்த ஆடை பேகனின் பார்வையைப்போல இதமாக அழுத்தியது.

 

” வா இவற்றை அள்ளிக் குவிக்கலாம் ” என்று அறையெங்கும் பரவியிருந்த கீலங்களைக் காட்டினார். ஒவ்வொன்றும் ஆயிரம் வண்ணங்களின் சேர்கையாகத் தெரிந்தது. நிச்சயம் அவை அவரின் ஓவியங்கள் தான். புயலொன்றில் சிதைந்துபோன கவிதையைப்போல அவை புள்ளிகளாக மிதந்துகொண்டிருந்தன. இசைத்தட்டொன்றின் பின்புறத்திலிருக்கின்ற வண்ணங்கள் மாயாயாலம் செய்வதைப்போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணத்தில் ஒவ்வொன்றாகத் தெரிந்தன. தன் கால்களால் அவற்றைக் குவிக்கதொடங்கினார். பேகன் ஓவியங்களை நேசிக்கவில்லை. கண்ணீரைப்போல மலத்தைப்போல அத்துமீறிவளர்ந்த நகத்தைப்போல ஓவியங்களையும் பொருட்டில்லாத பாவனை செய்தார். நான் இறுக்கமான காற்சட்டை கிழிந்துவிடும் என்ற பயத்திலும் நெருக்கடியிலும்  மெதுவாக குனிந்து கைகளால் குவிக்கத்தொடங்கினேன். அவை ஒன்றின் மீது ஒன்று மருவும் போதும் அருகருகில் சென்று குவியும் போதும் ஒன்று ஒன்றிற்குள் மறையும் போதும் புதுப்புது ஓவியங்களாக மாறிக்கொண்டேயிருந்தன. ஒவ்வொரு கணமும் தம்மை புதுப்பித்துக்கொண்டன. தாங்கள் சிதைந்ததை  எண்ணிக் கவலையுறவில்லை. அவை சந்தர்ப்பங்களில் தனித்து நின்றும் சேர்ந்து நின்றும் ஓவியங்களை வரைந்தன. ஒவ்வொன்றிற்கும் தனித்த மனமிருந்தது. அது பேகன் கொடுத்ததோ நான் கொடுத்ததோ அல்ல. எல்லாக்கீலங்களும் மரச்சட்டகங்களும் ஒருமிக்கக்குவிந்து பிரமாண்டமான ஒளியொன்றாய் உருவாகின. நிறமில்லாத தூய ஒளி. அவை அழகின்மையிலிருந்து  உருவாகிய ஒவ்வொரு உயிரினதும் ஒளி. உலகத்தில் தனித்துவிடப்பட்ட எல்லா பொருட்களினதும்  ஒளி. கைவிடப்பட்டு உக்கிப்போன என் பதின்ம வயது சைக்கிளின் ஒளி. எழுதி எழுதி அடுக்கப்பட்டு பின்னர் கொடுக்கவே முடியாமல் கரையான் அரித்து பொட்டலமாகிப் போன கடிதங்களின் ஒளி. அந்த நிறமற்ற பேரொளியில் மறைத்துவைத்த ஞாபகங்கள் உயிர்தெழுந்துகொண்டிருந்தன. ஒளியாலான பெருங்குவியல்  வண்ணத்துப்பூச்சியின் ஒரு பக்கச் செட்டையைப்போல துடித்துக்கொண்டிருந்தது. மற்றைய செட்டை எந்தச் சலனமுமின்றி மீதமிருக்கின்ற சில கீற்றுக்களை ஒவ்வொன்றாக குவியலுக்குள் தள்ளிக்கொண்டிருந்தது.

 

தன்னறையின் ஓரத்திலிருந்த மதுப்போத்தல் ஒன்றையும்  நீண்ட கழுத்துக்களைக்  கொண்ட இரண்டு கண்ணாடிக் குவளைகளையும் தூக்கிக்கொண்டு ” இந்த மலத்தை நீயே அள்ளிக்கொண்டு வா” என்று முகம் அருவருக்கச் சொன்னார். ” ஒரு குவளை போதும்” என்றேன். காற்றில் பனி படர்வதைப்போல சொற்கள் உறைந்து விரிந்தன. ” நான் குடிப்பதில்லை, அதன் வாசனை நாக்கினை தடிக்கச்செய்து விடுகிறது. வலது கால் பெருவிரல் கூட அதன் புளித்த நாற்றத்திற்கு வீங்கி நடக்கமுடியாமற் போகிறது “என்று தொடர்ந்தேன். குழந்தை புதிய நிறமொன்றை ஆச்சரியமாகப் பார்பதைபோல உறைந்து போன என் சொற்களைப் பார்த்தார். எப்போதும் இரண்டிற்கு மேற்பட்ட குவளைகளை நிறைத்திருக்கக் கூடிய பேகன், ஒன்றை மட்டும் எடுத்துச்செல்வதில் விருப்பமற்று ” சரி உன் இஷ்டம் ” என்றார். ஆனால் இரண்டு குவளைகளையும் காவினார். நான் முடிந்தளவு பக்குவமாய்க் கீலங்களையும் மரச்சட்டகங்களையும் அள்ளிக்கொண்டுபோய் வாகனத்தின் பின்புறத்தில் குவித்தேன். மூன்று முறையில் முழுவதுமாக எடுத்துமுடித்தவுடன் வாகனத்தின் அருகில் புகைத்துக்கொண்டிருந்த  பேகனை பார்த்துத் தலையசைத்தேன்.

 

அந்தி சாயும் நேரத்தில் அவருருவம் ஒரு குட்டிப்பன்றியைப்போலத் தெரிந்தது. கறுப்பு நிற நீள மேலங்கியை முழங்கைக்கு மேல் இழுத்துவிட்டு வெகு லாவகமாகப் புகைத்துக்கொண்டிருந்தார். இன்னும் முகச்சுருக்கமே விழத்தொடங்கியிராத இவர் எப்படி இறந்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே அறையில் என்ன மீதமிருக்கிறது என்று கேட்டார். “ஒரு வண்ணமும் சில துளி கண்ணீரும்” என்றேன். ஆழமாக இழுத்த புகையை தன் முகம் முழுக்க பரவுமாறு ஊதித்தள்ளி ” தூரமாகப் போவோம்” என்றார். நாம் வாகனத்தில் ஏறியிருந்த நேரம் உலகத்து வண்ணங்கள் மறைந்து அவற்றின் இடத்திலெல்லாம் கரு-மை ஊறத்தொடங்கியது .பொருட்கள் இருட்டில் மறைந்துகொண்டிருக்க  நாங்களிருவரும் ஊருக்கு வெளிப்புறத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம். பேகன் இடைவிடாமல் புகைத்துக்கொண்டிருந்தார். அவரின் உதவுகளிரண்டும் நறுக்கிவைத்த ஆப்பிள் துண்டுகள் போல பொலிவாயிருந்தது எனக்குள் ஆச்சரியத்தைத் தந்தது. ஜன்னலுக்கூடாக கூரிய அம்புகளாக காற்று வாகனத்திற்குள் பாய்ந்தது .

 

(03)

 

நகருக்கு ஒதுக்குபுறமாக வழிந்துகொண்டிருந்த அகன்ற ஆழமற்ற ஆற்றின் கரையில் வண்ணங்கள் அனைத்தும் நெருப்பாகியிருந்தன. குளிர்ந்த இராக்காற்று நெருப்பின் அடர்த்தியினை அழித்தும் ஆக்கியும் விளைடாடிக்கொண்டிருந்தது. ஈரலிப்பு அதிகமான காற்று நெருப்பின் வெக்கையோடு கலந்து ஒரு வித போதையான சூட்டைத் தந்தது. பேகன் முதல் சுற்றுக்கு தயாரான நிலையில் என்னிடம் என்ன  இசைக்கோர்வைகள் இருக்கிறன என்று கேட்டார். நான் அமைதியாகப்போய் விட்னியின் நோ வுமனை இசைக்கச்செய்தேன். கண்களிரண்டையும் மூடி நீண்டநேரம் இசையைக் கேட்ட பின் தனது  முதல் சொட்டைப் பருகினார். அவ்விசை கண்ணாடியின் மேல் நீர் பரவுவதைப்போல மனதிற்குள் வழுக்கிக்கொண்டு சென்று நிறைந்துவிடும். மீண்டும் கூர்மையாக சில நொடிகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு ” அற்புதம். என்னவொரு இசை, உடல் முழுக்க இனிப்பை கரைத்து ஊற்றியது போல சுவைக்கிறது” என்றபடி கைகளிரண்டையும் தோளளவிற்கு தூக்கி பெண்ணிற்குரிய எல்லா நளினத்துடனும் உடலை வளைத்து ஆடத்தொடங்கினார். ஒவ்வொரு நடன அசைவுகளிலும் மறந்திடாமல் இடுப்பை வட்டமாக அசைத்துக் கொண்டாடத்தவறவில்லை. ஆயிரக்கணக்கான கொண்டாட்ட  நடனங்களுக்குப் பழக்கப்பட்டவரைப்போல இசைக்கும் காற்றுக்கும் எந்த இடையூறுமின்றி நிதானமாக மதுவைப் பருகியபடி ஆடினார். எரி சுவாலையும் அவரின் உடலும் ஒருகணத்தில் ஒருங்கிசைந்து அசைந்தன. நடனம் விடுதலை என்று எனக்குள் தோன்றியது. தன் கைவசமிருந்த எல்லா ஓவியங்களையும் கருக்கி விட்டு அதிக போதை ஏறாத நிலையில் பேகன் ஆடுகின்ற நடனம் அவரின் விடுதலையை நோக்கியது. ஜான் இறந்த அறைக்குள் மீண்டும் ஒருமுறையிருந்து ஞாபகங்களை மறக்கமுடியாமல் வண்ணங்களால் கீறியபின்னரும், ஓயாமல் துரத்தும் கொடிய வேதாளம் போன்ற நினைவுகளை அழிக்க ஓவியங்களைக் கருக்கும் பேகனின் நடனம் வேறெந்த தேர்ந்த நடனக் கலைஞரின்  நடனத்தை விடவும் மேலான உயிர்ப்புடையது. நீண்ட சீத்தைத் துணிபோல மென்மையாக அசைந்துகொண்டிருந்த நதி பேகனின் அசைவில் தூண்டப்பட்டு சலங்கைச்சத்தம் போட்டவாறு குதித்துப் பாய்ந்தது. வியாபாரிக்கு மில்லியன்களும் எனக்கு கலையும் பேகனுக்கு மலமும் எரிந்துகொண்டிருந்தது. தான் செய்த காகிதக் கப்பலை தானே கல்லெறிந்து தாழ்த்தும் குழந்தையொன்றின் சந்தோசம் பேகனின் முகத்தில் தெரிந்தது.

 

தொடர்ந்து சாமுவேல் பார்பரின் அடகியோ போர் ஸ்ட்ரிங் இசைக்கத்தொடங்கியது. என் கைகளிரண்டையும் பிடித்திழுத்து பேகன் நெருப்பினருகிற் கூட்டிச்சென்றார். எந்த எதிர்ப்புமின்றி இசைந்தேன். அவரின் உள்ளங்கையில்  பற்றிக்கொண்ட  சதைத்துணுக்கு அகோர வெப்பத்திலிருந்து. எனக்கொரு நடனம் தேவைப்பட்டது. உண்மையில் விடுதலை. ஒரு மெல்லிய கோட்டைக் கடப்பத்தைப்போல சுலபமாகத்தெரிந்தாலும் யாராலும் காட்டிவிடமுடியாத விடுதலை. பேகன் ஆடத்தொடங்கிய கணமே எனக்குள்ளே துள்ளல் தொடங்கிற்று. பருத்த உடலாயினும் ஓரளவேனும் அசைவுகளோடு ஆடுவேன் என்ற நம்பிக்கை. பேகன் மற்றைய குவளைக்குள் மதுவை நிரப்பி கைகளில் நீட்டினார். மீண்டும் மறுப்பேதும் இன்றி வாங்கி ஊற்றினேன். வாய் நிறைய நுரைத்துக்கொண்டு உள்ளிறங்கியது. அடித்தொண்டை குளிர்ச்சியில் சிலிர்த்தது. முதல் குடிக்குரிய பரபரப்பேதும் இல்லாமல் கையில் குவளையை ஏந்தியபடி ஆடத்தொடங்கினேன். அது ஜொஹான் சபாஸ்டியனின் பக் இன் கம் ஸ்வீட் டெத். தீயைச் சுற்றி ஆடினோம். பெரும் அசைவுகள் ஏதுமின்றி எளிமையான முழுச்சுதந்திரத்தோடு நரம்புகளும் தசைகளும் அசைந்துகொண்டிருந்தன. பேகனின் கண்களில் போதையேறிய எந்த அறிகுறியும் தெரியவில்லை மாறாக நான் களைத்திருந்தேன், மயக்கத்திலிருந்தேன். இருந்தும் பேகனை முத்தமிடவேண்டும் போலிருந்தது. உடல் முழுமையாக வியர்வையிலூறி களைத்துப்போக பேகனின் அருகிற் சென்று தோள்களை கைகளால் அழுத்தி சிவந்த உதட்டோடு முத்தமிட்டேன். அது ” சுதந்திரத்தின்  முத்தம்”.

 

(04)

 

உடல் களைத்திருந்தது. இரவின் சுதந்திர நடனத்தில் தசைகள் இறுக்கமாகி வலித்தன. செவி மடல்களுக்குள் கண்ணாடி உடைசலைப்போல ஆற்று நீர் சலசலத்துக்கொண்டிருந்தது. இன்னும் விடிந்திருக்கவில்லை. கைக்கெட்டும் தூரத்துக்கு அப்பால்  உடல் முழுதும் சாம்பலை பூசியபடி பேகன் நிர்வாணமாகக் கிடந்தார். ஆற்றாமையில் அள்ளிப்பூசிக்கொண்ட சாம்பல் அது. முடிந்த இரவில் பிறை உச்சியைக் கடந்து நின்ற போது பாதி மயக்கத்தில் எழுந்திருந்தேன். என்னால் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. பேகன் ஆக்ரோஷமாக தண்ணீரைத் தலையிலும் உடல் முழுதும் அள்ளி ஏற்றிக்கொண்டது போலிருந்தது. இப்போது சாம்பல் பூசிய பேகனைக் காணும் பொழுது தான் அது தண்ணீரல்ல சாம்பல் என்று தெரிகிறது.  கழுத்து அசைக்கமுடியாமல் நொந்தது. தோள்பட்டை பற்றி சொல்லவே தேவையில்லை. மெதுவாக எழுந்து பேகன் அருகில் வலிமையற்று நகர்ந்தேன். அவர் இயல்புக்கு மீறி துவண்டுபோயிருந்தார். ஒரு சாம்பல் நிற பூனையைப்போல உடலை தனக்குள் சுருக்கிக்கொண்டு கிடந்தார். இரவிரவாக பாடி இன்னமும் ஓயாமல் ராபர்ட் ஸ்கமனின் ற்றமுறி இசைக்கத்தொடங்கியிருந்தது. மெல்லிய கீலமாக அதிகாலையின் மஞ்சளொளி ஆற்றுப்படுகையின் மீது தெறித்தது. எரிந்த குறையில் இரண்டொரு மரச் சட்ட்டகங்கள் ஆங்காங்கே கிடந்தன. பேகனைக் கைத்தாங்கலாக தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றினேன். கரையோரத்தில் அனாதையாகக் கிடந்த அவரது ஆடையை அணிவித்து மீண்டும் அவரின் ஓவியக்கூடத்திற்கு வாகனத்தைச் செலுத்தினேன். பேகன் அதுவரையில் இம்மியளவும் சுயநினைவாயில்லை. இரவு தீவிரமாக குடித்தும் ஆடியுமிருந்தார். பேகனின் உடல் பாரமற்றிருந்தது. ஒரு பலூனைப்போல மிதக்கின்றளவு பாரமில்லாமல். அந்த உடலின் எலும்புகளின் பாரத்திற்கும் தசைகளின் பாரத்திற்கும் அணுவளவும் பொருத்தமில்லாமல் பாரமற்றிருந்த உடலைக் காவியதில் எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.

 

(05)

 

பேகனை மீண்டும் சந்திக்கத் தோன்றவில்லை. அவரின் ஓவிய அறைக்குள் நுழைவதைவிட திரும்புவது சிரமாமாக இருந்தது. அந்த அறை மனித நிர்வாணத்தில் பெருங்கூடாகத் தெரிந்தது. அன்றைய இரவுக்குப் பின்னர் எனது நிர்வாணம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. எல்லா மனிதர்களின் நிர்வாணமும் எனக்குள் வாழ்தல் பற்றிய அச்சத்தினை வலுப்படுத்த்திக்கொண்டே சென்றன. பேகனின் ஓவியங்களில் வாழ்வதற்கான கொச்சைக் காரணங்கள் கிடைக்கும். நேரமிருக்கும் போதெல்லாம் அவரின் கண்காட்சி கூடத்திற்குச் சென்றுவருவேன். கண்காட்சிக்கூடம் பல கண்ணாடிகள் பொருந்திய என்னுடைய குளியலறையைப்போல தோற்றமளிக்கும். எல்லா முகங்களும் உடல்களும் எனக்குரியதாகவும் அவற்றின் உணர்ச்சிகள் அனைத்தும் எனக்கேயானதாகவும் தோன்றும். நான் ஒவ்வொரு ஓவியமாகக் கூர்ந்து கவனிப்பேன். அது ஒரு மயக்கநிலை. மந்தமான போதையில் உருவங்கள் திரிந்து அங்கொன்றும் இங்கொன்றும் தனித்து அலைவதைப்போல ஓவியங்கள் முன்னோக்கியும் பின்னோக்கியும் ஆழமாகவும் மேலாகவும் மீனின் கண்களைப்போலவும் நீரின் தளம்பல் போலவும் ரத்தக்கறை போலவும் விதம் விதமாக தோன்றி மறையும். பெரும்பாலான ஓவியங்கள் அழுவதையே  கேட்டிருக்கிறேன். தன்னிலிருந்து வெட்டி அகற்றப்பட்ட பாகமொன்றிற்காக அவை வருத்தப்பட்டு அழுகின்றன. பேகனின் ஓவியங்கள் நிறைவுறுவதில்லை. அவை பார்க்க பார்க்க குறைந்துகொண்டே போய் ஒரு இரசம் பூசப்பட்ட கண்ணாடியாய் திரிந்து நிறைவுறும். கடைசியில் என் விம்பத்தை விரல்களின் நுனிகளால் உரசிப்பார்த்துவிட்டு திரும்புவேன். ஓவியம் நிறைவுறும் கணம் அது. அக்கணம் கண்ணாடிக்குள் இழுக்கப்பட்டு கரைந்துவிடுவதைப்போல உணர்வேன். என்னாலன்றி வேறு எவராலும் என்னை மீட்கமுடியாத நிலை வரும். அப்போது கண்காட்சிக்கூடத்தை விட்டு வலிந்து வெளியேறிவிடுவேன்.

 

(06)

 

நிறைபோதையில் பேகனின் அறைக்குள் நுழைந்த போது நான்கைந்து மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஆணொருத்தனின் முகத்தை வரைந்து முடிக்கும் நிலையிலிருந்தார். சிகரெட் புகையின் வாசமும் வண்ணக்கலவையின் நாற்றமும் புரைக்கேறும் அளவு தலைக்குளிறங்கியது. நாசித்துவாரங்கள் கரகரத்தன. ரத்தம் முழுக்க நாற்றம் பரவுவதை என்னால் சகிக்கமுடியவில்லை. உடல் குறுகுறுத்து தாடைகள் இறுகிக்கொண்டன. பேகன் தன்னிலை மறந்து வண்ணங்களைச் சேர்ப்பதில் தீவிரமாயிருந்தார். அருகில் அரைவாசி மீதமிருக்கின்ற மதுப்போத்தலும்  சிகரெட் துண்டுகளும் நிறைந்திருந்தன. பேகனின் பின்புறம் மட்டுமே தெரிந்தது. தலை முடி வியர்வையில் மினுங்கியது. மேற்சட்டையில்லை. உடல் வியர்த்துக் கண்ணாடியின் மேல் பனித்துகளிகள் வழிந்து ஓடுவதைப்போல் ஈரமாயிருந்து. அன்று பார்த்ததைவிட இரண்டுமடங்கு மரச்சட்டகங்களாலும்  ஓவியங்களாலும் அறை நிறைந்திருந்தது. அவை அன்றிருந்த மோசமான நிலையிலில்லை. உண்மையில் ஒழுங்காகவும் இல்லை. நாற்காலி ஒன்றையெடுத்து அவரிலிருந்து சற்றுத் தொலைவில் வைத்தேன். மேற்சட்டைப்பைக்குள்ளிருந்து சிகரட்டொன்றை எடுத்துப் புகைக்கத்தொடங்கினேன். நான் குடிக்கத்தொடங்கிய சில நாட்களில் புகைக்கவும் செய்தேன். பேகன் சிவப்பு நிற தூரிகையையெடுத்து அத்தனை நேரமும் கீறிக்கொண்டிருந்த ஓவியத்தின் இடப்பக்க மூலையில் எற்றினார். அதொரு கோபக்கார முதியவர் திடகாத்திரமான இளைஞனை தன் நடக்கும் பொல்லால் விளாசியது போலிருந்தது. எனக்கொருகணம் தலை விறைத்தது. ஓவியத்திலிருந்த முகத்தின் பாதி இரத்தத்தில் நனைந்தது.

 

சிகரெட்டொன்றைப் பற்றவைத்து மதுவும் ஒரு முரடு மென்றுவிட்டு மீண்டும் மெல்லிய கறுப்பு தூரிகையால் வரையத்தொடங்கினார். நிழலொன்றை அவதானிப்பதைப்போல அவரின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக பதினாறு சிகரெட்கள் தீர்ந்த பின்னர் பேகன் என்னை நோக்கித் திரும்பினார்.
காயமடைந்த பேகனின் முகத்தைப் பார்த்ததில் அதிர்ச்சியேதும் ஏற்படவில்லை. இடக்கண்ணில் பெரிய ரத்தக்கண்டல். முழி விகாரமடைந்திருந்தது. வாயோரம் சிறிய திட்டுப்போல சிவந்த காயம். அவர் ஓவியத்தில் இருந்தார். ஓவியமும் முகமும் ஒரே மனநிலையிலிருந்தன. நான் சிகரெட்டை கீழே போட்டு ” பேகன் என்னாயிற்று ” என்றேன்.
தன்னை கஷ்டப்படுத்தி செயற்கையாக சிரித்துக்கொண்டே ” கீறினேன் ” என்றார். நான் மௌனமாயிருந்தேன். அவரின் உடலிலிருந்து ஓயாமல் வியர்வை வழிந்துகொண்டே இருந்தது. அவரின் இடப்பக்க முகம் எந்தப் பாவனையும் செய்ய முடியாதளவு வீங்கியிருந்தது. அவர் முகத்தையும் உடலையும் பாவமாக வைத்துக்கொண்டு அடிவாங்கிய குட்டி நாயைப்போல தெரிந்தார். எனக்கு உண்மையில் அழுகை வந்தது. கண்களிரண்டும் முட்டி நின்றன. ” பேகன் உங்கள் முகத்திற்கு என்ன நடந்தது” என்றேன். வெளிப்படையாக சொல்லப்போனால் விம்மினேன்.

 

” மனிதர்கள் கறுப்பை விரும்பவும் வெள்ளையை வெறுக்கவும் செய்கிறார்களே. ஏன் ? ” என்றார்.
நான் எதுவும் பேசவில்லை, ஏன் கேள்வியைக்கூட சரியாக உள்வாங்கவில்லை. சிறிது நேரத்தில் ” கறுப்பில் எதுவும் கிடையாது; வெள்ளையில் எல்லாமிருக்கின்றன. மனிதர்கள் எதுவுமில்லாமற் போகவே விரும்புகிறார்கள்.” என்றார்.
மௌனம் ஒரு பாலைவனத்தைப்போல மிக வீரியமாகப் பரவியது. அந்த அறை வெறுமையில் தத்தளித்தது. நா வறண்டு என்னுடல் இயல்பாக வியர்க்கத்தொடங்கியது. மனிதர்கள் எதுவுமில்லாமற் போகவே விரும்புகிறார்கள் என்ற ஓசை காதுகளை மீண்டும் மீண்டும் அடைந்துகொண்டேயிருந்தன.  ஆயிரம் குண்டூசிகளின் முனைகளில் வார்த்தைகள் செருகி காதுப்பறையின் மேல் குத்திநின்றன. பேகன் எதுவுமில்லாற் போகத்தான் தன்னை வருத்திக்கொள்கிறார். ஓவியங்களை வரைகிறார். எரிகிறார். குடிக்கிறார். புகைக்கிறார். காயப்படுகிறார். நானும் அப்படித்தான். பேகனின் கண்களை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு கதிரையில் இருந்து எழுந்து நடந்தேன். மனிதர்கள் எதுவுமில்லாமற் போகத்தான் வாழ்கிறார்கள். ஹ்ம்! ஒன்றுமில்லாமற் போகத்தான்.

தோமஸிற்குத் திவசம்

மெல்லிய சாம்பல் நிறமாக முன்காலை வெளித்திருந்தது. பருவம் தவறி சுழன்றடிக்கும் ஆடிக்காற்று பழுத்த மஞ்சள் நிற இலைகளை லாவகமாக பிடுங்கி எறிந்துகொண்டிருந்தது. அவை சருகுகளாக முற்றம் முழுக்க சிதறிக்கிடந்தன. போஃகி தன் உடலை  வளைத்து பின்னங்காலினை நக்கியது. அது தன் உடல் முழுதும் படிந்திருந்த புழுதியை பாம்பொன்றின் லாவகத்துடன் வளைத்து உதறிக் கொட்டியது. என்னை அண்மித்து காலடியில் சுருண்டு கொண்ட கணம், நான் தோமஸின் திவசம் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன். தோமஸ் இறந்து இருபத்தொரு நாளாகியும் யாரும் திவசம் பற்றி சிந்திப்பதாய் இல்லை. தோமஸின் இறப்பைப் பற்றி சிறிதளவேனும் வருந்துவோர் கூட இதைச் சட்டை செய்வதாய் தெரியவில்லை. அது சரி, நெடுஞ்சாலையில் அனாதையாய்க் கிடந்தவனை பெக்கோவால் அள்ளி புதைத்தவர்களாயிற்றே.
 
தோமஸ் எந்த மதத்தையும் பின்பற்றிகொண்டவனாய் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எந்த மார்க்கத்தையும் பண்பாட்டையும் கூட. அவன் தன் தாய் தந்தையர் பற்றியோ குலம் கோத்திரம் பற்றியோ எப்போதும் என்னிடம் சொல்லிக்கொள்ளவில்லை. எங்களுக்கு முகங்களையோ அடையாளங்களோ தேவைப்படவில்லை. அவன் எதன் மீதும் பயத்திலிருக்கவில்லை. அதனால் அவனுக்கு அடையாளங்கள் தேவைப்படவில்லை. பயத்திலிருப்பவர்கள் தானே அடையாளங்களை தரித்துக்கொள்வார்கள். என்னிடம் ஒரு முறை மெதுவாகச் சொன்னான், ” நான்  மனிதர்கள் மீது பயத்திலிருக்கிறேன்” என்று. நானும் அவனும் பயத்தைப்பற்றி பேசிக்கொண்ட இரவை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன். அவன்  வலிமையான மனதினைக் கொண்டவனாயிருந்தான். மிகச்சிறிய விஷயத்திற்கே உடைந்து அழுதுவிடும் என்னோடு அவனிருந்தது ஆச்சரியமான ஒன்றுதான். அன்றைய இரவு என் பகற்கனவுகளை எண்ணி  பயந்துபோயிருந்தேன். நிலத்திலும் கட்டிலிலும் கதிரையில்  கண்களை மூடமுடியாதளவு பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. தடிப்பான கரும் போர்வை ஒன்றைப்போல பயம் என்மீது கவிந்திருந்தது. இரக்கமற்ற சொற்களும் வசைகளும் என்னைச்சுற்றிக் குடைந்துகொண்டிருந்தன. அறைக்கதவு இறுக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சிறிய யன்னல் ஓட்டைக்கூடாக உடலை செலுத்தி இறந்துவிடலாம் என்று எத்தனித்த போதும் என் பருத்த உடல் நுழைய மறுத்தது. பருமமான என்னுடல் முதன்முறையாக  என்னை வஞ்சித்தது. முகமூடியுடன் உடலற்றவர்களும் உடலோடு முகமற்றவர்களும் நிறைந்து போயிருந்தார்கள். அவர்களின் நெருக்கத்தில் என்னால் மூச்செடுக்கக் கூட முடியவில்லை. இறப்பு இப்படியாவது என்னை அழித்துவிடட்டும் என்று அடங்கிக்கொண்டிருந்த கணம் தூரத்திலிருந்து தோமஸின் குரல் கேட்டது. அது நிச்சயமாக தோமஸின் குரல் தான் என்பதை உணர்ந்துகொண்டேன். அவனது குரல் வெள்ளிக் குவளைக்குள் சல்லிக்கற்களை போட்டது போல கூர்மையாக இருக்கும்.  நான் உயிர்பிழைப்பதற்கான எல்லாச் சாத்தியங்களையும் அந்தக்குரல் கரகரத்து இரையும் வரை உரக்கக் கத்திக்கொண்டிருந்தது.  கும்மிருட்டுக்குள் மின்மினி ஒன்று தன்னுடலிலிருந்து வெளிச்சத்தை எனக்குள் பாய்ச்சியது. அது மிக மிக நுண்ணிய வெளிச்சம். இரண்டு விரல்களால் பிடித்துக்கொள்ள முடியாதளவிருந்து. அறைகுளிருந்த கதிரையொன்றிலேறி கழுத்தை உயர்த்தி விட்டத்தைப் பார்த்து மூச்செடுத்தேன். காற்றின் வழியாக உயிர் உடலை நிரப்பியது. தன் வாழ்நாளின் கடைசிக் கணங்களில் இருந்துகொண்டிருக்கும் காற்றாடி தலைக்கு மேலே கீறீச் சத்தத்தோடு என்னை நோக்கி சிரித்தது. தலைக்கு மேலும் காலுக்கு கீழும் இறப்பு காத்திருக்க தோமஸ் முன்கதவைத் திறந்தான்.
 
தோமஸிற்கு திவசம் செய்வதை அவன் விரும்புவானோ தெரியவில்லை. ஒரு வேளை இறப்பின் பின்னர் கடவுளை அவன் கண்டிருக்கலாம். இறை நம்பிக்கையுள்ளவனாய் மாறியிருக்கலாம். தோமஸும் மிகச் சாதாரணமான மனிதர் தானே. என்னோடிருந்த போது குழந்தைகளிடத்தே அதிக அன்பு செலுத்தினான். குழந்தைகளை ஒளி என்றான். ஒளியைப் பேசவிடாமல் இயற்கை எப்போதும் தடைவிதித்தபடியே வைத்திருக்கிறது.  அதனால் குழந்தைகள் பேசமாட்டார்கள் என்றான். குழந்தைகள் மௌனமாக்கப்பட்டார்கள், நானும் நீயும் மௌனித்திருக்கிறோம் தோமஸ். குழந்தைகளுக்கு அழுக்கும் இனிப்பும் ஒன்றுதான். தாய்ப்பால் மறந்த குழந்தை தான் ஞானி என்றேன். அவன் ஆமோதித்தான். முழுதும் திறந்த நீலவிழியன் இறந்து போகக்கூட ஒரு சாண் நிலம் தேவையாய் போயிற்றே. ஏதுமற்ற வெளி ஒன்றை இந்த புறவுலகில் புத்தனாலும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. தோமஸ் நீ கிறிஸ்தவனா?” In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. “, அவன் கிறிஸ்தவன் இல்லை. அவனிடம் பைபிள் இருந்திருந்தால் பற்றவைத்து ஆற்றில் கரைத்திருப்பான். முடிந்த முடிவாய் ஒன்றைச்சொல்லும் மதத்திடம் அவன் எக்காலமும் ஒன்றியிருந்திருக்கமாட்டான். பிறகெப்படி நீ தோமஸாவாய்? அது சரி நீ எப்போது உன்னை தோமஸ் என்றாய்.
 
எல்லோரிடமும் முன்கூட்டியே பதிலளிக்கப்பட்ட புத்தகம் ஒன்றுள்ளது. அதில் எல்லாக் கேள்விகளும் கதைகளும் போதனைகளும் கூடவே பதில்களும் உள்ளது. மனிதர்களை எளிமையாக ஏமாற்றிவிடலாம். அந்தக் கதைகளால் எனக்கு பதிலளிப்பதன் மூலம் என்னையும் ஏமாற்றிவிடுகிறார்கள். உண்மையில் ஏமாற்றப்பட்டேன். ஆயிரம் முறையேனும். பதிலளிக்கப்பட்ட  புத்தகங்களிலிருந்து இந்த உலகம் தோன்றியது என்று நம்பவைக்கப்படுகிறார்கள். தடிப்பான அந்தப் புத்தக அட்டைகளுக்குள் உலகம் சுருங்கியும் விரிந்தும் காலம் காலமாக சுழன்று வருகிறது என்கிறார்கள். மதப்புத்தகங்கள் இன்னொரு வரலாற்று நாவல்கள் என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. அவர்களின் நம்பிக்கையின் மீதான கேள்விகளை அபத்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதையும் தீட்டு என்கிறார்கள். தோமஸ் சில பத்தாயிரம் சடலங்கள் குவிந்து கிடந்த இந்த மண்ணை விடவா இந்தக் கேள்விகள் பெருந்தீட்டு. யேசுவிடம் கல்லை அப்பமாக்க கேட்ட துஷ்டனைப் போல என்னைப் பார்க்கிறார்கள். தோமஸ் நாங்கள் எக்காலமும் மதங்களைப்பற்றி உரையாடியதில்லை. ஆனால் இப்போது நான் அதைப்பற்றி சிந்திக்கிறேன். உனக்காக. உனக்கு திவசம் செய்வதா வேண்டாமா என்று ஒரு தீர்க்கமான முடிவு காணவேண்டும். மீண்டும் மீண்டும் உன்னை இவர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொள்ளும் சடங்கொன்று தேவைப்படுகிறது. இவர்கள் அந்த சில பத்தாயிரம் போல் உன்னையும் காற்றில் கரைக்கப்பார்கிறார்கள். நான் விடமாட்டேன். தோமஸ் இங்கு தீர்க்கப்படாத கணக்குகள் மிச்சமிருக்கின்றன.
 
 
 

உண்மையின் இசை

ஒரு உரையாடலை பெரும்பாலும் தொடங்குவதற்கு இயல்பான வடிவம் கேள்விகளை எழுப்புவதாக இருக்கக்கூடும். பெரும்பாலான உரையாடல்கள் கேள்விகள் மட்டும் எஞ்சி நிற்கவே  முடிவதுமுண்டு. நான் நினைப்பதைப்போலவோ நீங்கள் நினைப்பதைப்போலவோ உரையாடல்களில் கேள்விகளுக்கான விடைகள் கிடைப்பதில்லை. மாறாக கேள்விகள் மேலும் வலுப்பெறுகின்றன. கேள்விகள் இன்றி முடிந்து போகும் அசாதாரணமான வாழ்க்கையில் இணைந்துகொள்ள பெரும் கஷ்டமாக இருக்கிறது. நான், என்னோடு அதிகமாக கேள்விகளைப்பற்றி உரையாடிக்கொள்கிறேன். ஒரு பித்துநிலை  உரையாடல்கள். ஒரு நாளிற்கு ஆரம்பத்தையும் முடிவையும் நாங்கள் பிரக்ஞைபூர்வமாக நிர்ணயித்துக்கொள்வதைப் போல உரையாடல்களையும் நாங்களே மட்டுப்படுத்திக்கொள்கிறோம். அது முடிவில்லாத வெளிக்குள் இரண்டு கம்பங்களை குற்றி, இடையில் உள்ளவற்றைப்பற்றி உரையாடிக்கொள்வது. என் நீண்ட முடிவில்லாத உரையாடல்களின் இரண்டு சிறிய கம்பங்களுக்கிடையிலான வெளியாகவே இதைக் கருதுகிறேன்.  இதற்கு உண்மையின் இசை என்று பெயர் வைத்திருக்கிறேன். இதற்கு முதல் புதிய சொல்லில் முரகாமியின் வினோத நூலகம் பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகக் கூட இதை எண்ணிக்கொள்கிறேன்.
எனக்கு பிடித்த புத்தகங்களைப்போல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. ஒருவேளை அப்படி இல்லாமல் போனது தான் அந்தப் புத்தகங்கள் பிடித்துப்போக காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. டொரு போல பல பெண்களோடு மனது திறந்து பேச ஆசைப்படுவதெல்லாம் நாவலிலேயே மறைந்துபோய்விடுகிறது. டொரு  நவோகோவுடன் உரையாடுவதைப்போல எந்தப்பெண்ணிடமாவது அணுகினால் ஏமாளி என்ற ஏச்சோடு திரும்பிவரவேண்டிய துர்பாக்கிய சூழல் இங்கு. ஒரு வேளை அப்படியான பெண்கள் நாவலில் மட்டும் வருவதன் ரகசியம் எனக்குத்தெரியவில்லை. இந்த நவீன எழுத்தாளர்களுக்கு மட்டும் சுவாரஸ்யமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. அல்லது சுவாரஷ்யமாக கதை சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள். முரகாமிக்கும் அப்படித்தான். இந்த சலிப்பான வாழ்க்கையில் இருப்பதையெண்ணி கொஞ்சமாக வருந்தியிருக்கிறேன். நான் டொரு ஆக இருக்கவே விரும்புகிறேன். உலகத்து பெண்கள் எல்லோரையும் எல்லையற்று காதலித்துக்கொண்டு. ஆனால் இருப்பது என்னவோ நவோகோ மாதிரி. கிஸுகி பற்றிய துக்கத்திலும் டொரு பற்றிய குழப்பத்திலும். ஆனால் நவோகோவைத்தான் சமூகம் ஓரளவேனும் ஏற்றுக்கொள்கிறது. டொருக்கள் எத்தனை இனிமையானவர்களாக இருந்தும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.நவோகோவாக இருந்து டொருவாக மாற எத்தணிக்கும் ஒருவர் இந்த நாவலை வாசித்த அனுபவமாக இதைக் கொள்ளலாம். அல்லது டொருவானபின்னர் நவோகோ பற்றிய ஞாபகங்களாக இந்த நாவல் வாசிப்பைக் கருத்திக்கொள்ளலாம். இதுவுமல்லாவிட்டால் இதையும் புனைவென்றெண்ணி  மோசமான புனைவு இது என்று விமர்சிக்கலாம்.
 
ஒன்றைப்பற்றி விரும்பாமல் வேண்டாவெறுப்பாக பேசவிரும்பவில்லை. இந்த நாட்களில் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் இன்  நூற்றாண்டு தனிமை பற்றியோ அல்லது மரியோ வர்கஸ் லோஸா இன் நாவல்கள் பற்றியோ பேசுவது எனக்கு செயற்கையாகப்படுகிறது. அதற்காக அவர்கள் ஒருபோதும் குறைத்தவர்களில்லை. அவர்களைப்பற்றிய உரையாடல்கள் மிகவும் இனிமையானவை. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மனநிலையிலிருக்கிறேன். எளிமையாக அம்மனநிலைகளிலிருந்து தொலைந்துபோக  ஒவ்வொரு விதமான வடிவங்களைக் கையாள்கிறேன். அது இசையாகவும் புத்தகங்களாகவும் மோசமான முறையில் சொன்னால் முகப்புத்தகமாவும் அமைந்துவிடுகிறது. இங்கு தொலைதல் என்பதை மறத்தல் என்று அர்த்தப்படுத்தவில்லை. சரியாகச் சொன்னால் விலகி –  சிந்தனைகளை மாற்றி வைத்திருக்கிறேன். “இலக்கியம் பெரும்பாலும் எனக்கு கவனக்கலைப்பான்” ஆக இருந்திருக்கிறது. எல்லா நாட்களும் எனக்குப் பிடித்த நாளாக அமைந்துவிடுவதில்லை. அதிகமான நாட்களை வெறுப்போடே கடந்து செல்லவேண்டியிருக்கிறது. வெறுப்பு மிகுந்த நாட்களில் உருவாகக்கூடிய எண்ணங்கள் கொடூரமானவை. அவை ஊசியையும் நூலையும் கொண்டு எல்லாச் சம்பவங்களுக்கும் முடிச்சைபோட்டு மனதை சுதாகரிக்க முடியாத பெரும் குழப்பத்தில் அமிழ்த்திவிடுகின்றன. அந்த நேரங்களில் எழுத்துக்கள் நேரத்தை கடித்து செரித்துக்கொண்டிருந்தன. நானாக புனைவுலகம் ஒன்றை உருவாக்கவோ அல்லது இன்னொருவர் உருவாக்கிய புனைவுலகில் வாழவோ முடிகிறது. கஷ்டமான தருணங்களில் தாயின் மடியில் சாய்ந்துகொள்வதைப்போன்ற ஆறுதல் இவற்றில் கிடைப்பதாக நம்புகிறேன்.
 
ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணத்தை உங்களால் ஞாபகப்படுத்த முடிகிறதா? அந்தப் பாடலின் முழு வடிவத்தையும் நான் ஒருபோதும் கேட்டதில்லை. இந்த பிரதி திரைப்படமாகவும் வந்திருக்கிறது. எனக்கு சந்தர்ப்பமும் மனநிலையும் பார்க்க உருவாகவில்லை. ஆனால் ரெய்கோ கிதார் இசைகின்ற பகுதியை மட்டும் பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது. அந்த நிலவொளியில் டொரு, நவோகோ, ரெய்கோ என்று மூன்று பேர் இருந்தார்கள். நான் நோர்வேர்ஜியன் வூட் வாசிக்கின்ற தருணங்களில் டொரு, நவோகோ ,ரெய்கோ  மூன்று பேராகவும் நானே இருக்கிறேன். மூன்று வெவ்வேறு மனிதர்களாக. சில சமயங்களில் கூடியும் குறைந்தும் மனிதர்கள் இருக்கலாம். நவோகோவைப்போல கடந்த காலத்தின் மீது எனக்கிருக்கின்ற ஒழுங்கீனமான ஞாபகங்களை நினைத்துக்கொண்டும், அதே சமயம் நான் நினைப்பதை ஏதோ ஒரு வகையில் நிறுத்தமுயற்சிக்கும் இன்னொரு டொரு ஆக -அதாவது நானாகவும்- இவை எல்லாவற்றையும் தூண்டிக்கொண்டும் அதை இசையைப்போல எழுத்துக்கள் ஆக்கிக்கொண்டிருக்கும் இன்னொன்றாகவும், அதை வேடிக்கை பார்க்கும் இன்னொன்றாகவும் அப்படி எத்தனையோ இன்னொன்றுகளாகவும் விரிந்து ஆழ்ந்தும் மிதந்தும் அலைந்தும் அழிந்தும் உருவாகியும் இருப்பதும் பெரும் வாதைதானே. தன்னை இன்னும் அழகாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும் ஒருத்தர் கண்ணாடியின் முன்னால் விரும்பியோ விரும்பாமலோ நிற்பதைப்போல நானும் நோர்வேர்ஜியன் வூட்வாசிக்கிறேன். கண்ணாடி அழகாக்கிறதோ இல்லையோ நோர்வேர்ஜியன் வூட் அழகாக்கிறது.
 
நான் ரெய்கோவைப் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். அவள் கிதாரையும் சுருக்கங்களையும். அவளின்  குழந்தை- அவளைவிட இளமையான கணவன் இவர்கள் எல்லோரையும். முரகாமியின் மிகச் சிறந்த அனுபவம் ரெய்கோ என்றே தோன்றுகிறது. வலிமையற்று தற்கொலை செய்துகொண்ட நவொகோவை விடவும் இசைப்பள்ளிக்கு ரயிலில் ஏறிய ரெய்கோ சிறந்தவள்.  நோர்வேர்ஜியன் வூட் இரண்டு எதிர் நிலைகளுக்குள் அறத்தைப்பற்றி சொல்லவில்லை. தர்மம் அதர்மம், சட்டம் ஆராயகம், உண்மைகள் பொய்கள், நேர்மை புரட்டு என்று எதிர் நிலைகளுக்குள் இருக்கும் போராட்டம் அல்ல இது. ஒரு உண்மைக்கும் இன்னொரு உண்மைக்கும் இடையிலான போராட்டம். ஒரு நேர்மைக்கும் இன்னொரு நேர்மைக்குமான போராட்டம். யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது. இந்தப் போராட்டம் மிகவும் நுண்மையானது. இங்கு அறம்,  எதிர் அறம் பற்றிய உரையாடல்கள் இல்லை. அறத்துக்குள்ளேயே எதிர் நிலைகளைப்பற்றியும், சந்தர்ப்பம் ஒன்றிற்க்கான அறம் பற்றியும் உரையாடுகிறது. ரெய்கோவைத்  தவிர எல்லோருக்கும் யாரோ ஒருத்தர் எப்போதும் உறுதுணையாக இருக்கிறார்கள்.  கைவிடப்பட்டவளாகிறாள். ஆனால் மிகவும் பிரஞையுடம் எல்லோரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறாள். உறவுகளே இல்லாத ஒரு நிலையில் கூட அடுத்த கட்டம் நகர்கிறாள். டோருக்கு கடைசியாக ரெய்கோ எழுதிய கடிதம் என்னை பாதித்தது. நீங்கள் எவ்வளவு தூரம் அந்த கடிதம் இலக்கியத் தரம்  மிகுந்தது என்று கேட்கலாம். இப்போது நான் இலக்கியத்தில் இல்லை. நான் ஒப்புக்கொடுத்த பிரதி ஒன்றில் எனக்கு இலக்கியம் தெரியவில்லை. நான் அன்பை பார்க்கிறேன். யாராவது யாருடனும் முத்தமிட்டுக்கொள்ளும் போதோ  உறவில் இணையும் போதோ எனக்குள் சந்தோசம் பெருகுகிறது. டொரு மழைக்குள் மிடோரியை முத்தமிடும் கணத்தில் என்னைச்சுற்றி மழையின் குளிரும் எனக்குள் முத்தத்தின் சூடும் பரவிக்கொண்டது. மிடோரியை நினைக்கும் போதெல்லாம் inside edge இல் வருகின்ற analyst ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கிறது.
 
ரெய்கோ டொருவிடம் கடிதமொன்றாவது எழுதக்கோருவதைப் பற்றி மிகச்சிலருடன் பகிர்ந்திருக்கிறேன். இந்த மிகச்சிலர் இரண்டு அல்லது மூன்று பேர் தான். நான் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மிகவும் நிதானமாக இருந்து கடிதம் எழுதும் பழக்கமுடையவன். அப்போது பெரும்பாலும் நடுச்சாமம் கடந்து போயிருக்கும். இதற்கு முதல் டொரு நாவொகோவிற்கும், நாவொகோ டொருவிற்கும் சில நீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். அவை அன்பின் நிமித்தம் வலிமையானவை. கடிதம் நீண்டகாலமாக காத்துவருகின்ற ரகசியங்கள் பெறுமதிமிக்கவை. மிகச்சிறிய வயதில் நீங்கள் நினைத்து சிரிக்கப்போவதை விட அதிகமான வயதில் எனக்கிருந்த ஒரே ஒரு காதலிக்கும், அவளோடு சண்டைபோட்டுக்கொண்ட தருணங்களில் அவளின் நண்பிக்கும் நானெழுதிய கடிதங்களில் மாறி மாறி ஒரே காதலை விதம்விதமான சொற்களால் விபரித்ததை அன்றி வேறெதுவும் செய்யவில்லை. அதற்கு பின்னர் பல்கலைக்கழகமானியத்திற்கு தான் கடிதம் அனுப்பினேன். ஆனால் மிகக்குறைவாக சிறுகுறிப்புக்களாக சில கடிதங்களை நெருக்கமானவர்களுக்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறேன். அவற்றைப்போன்ற ஒரு விரிவான நீட்சியாக இந்தக் கடிதங்களை உணர்கிறேன். கடிதமொன்றில் பெரும்பாலும் உண்மைகளே எழுதப்படுகின்றன என்று நம்புகிறேன். இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் நானெழுதிய அச்சிறுவயது கடிதங்களில் என் காதலும் டொரு நாவொக்கவிற்கு மிடோரியைப்பற்றிய மறைத்து எழுதிய கடிதங்களிலும் சந்தர்ப்ப உண்மை இருப்பதாய் நம்புகிறேன். பயத்தைப்பற்றிய என்னிடம் கேட்டால் இயலாமை என்றும் ஜிட்டுவிடம் கேட்டால் இறந்த கால நிகழ்கால இணைப்புணர்வு என்றும் யுயியிடம் கேட்டார் ” idiot i dont see that ” என்றும் சொல்வோம். என் நெருங்கிய நண்பர் சொல்வதைப்போல இங்கு சமனான நிறைய உண்மைகள் இருக்கின்றன. இதை ஏற்றுக்கொள்ள எனக்கு நிறைய நாட்கள் தேவைபட்டன. இந்த சமனான உண்மைகள் பற்றிய சிந்தனையை உணர்ந்துகொள்ள நிறைய நாட்கள் தேவைப்பட்டன. நோர்வேர்ஜியன் வூட்இலும்  எல்லோரிடமும் உண்மைகள் இருக்கின்றன. சமனான உண்மைகள். இந்த சமனான உண்மைகளுக்கு இடையிலான போராட்டம்/ ஆரோக்கியமான உரையாடல்  என்றும் norwegian wood ஐ சொல்லலாம்.
 
ரெய்கோவிற்கு டொரு,  நாவொகோ மற்றும் மிடோரி பற்றி  ஒரு கடிதத்தில் எழுதுவான்,

” நான் எப்போதும் நவோகோவை நேசித்து வந்திருக்கிறேன். இப்போதும் நான் அவளை நேசிக்கிறேன். ஆனால் மிடோரிக்கும் எனக்கும் இருப்பதென்னவென இறுதியாக தீர்மானிக்கும் கட்டம் வந்திருக்கிறேது. என்னைத் தடுக்கவியலாத சக்தி ஒன்று எதிர்காலத்திற்கு இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது. நவோகோவிடம் நான் உணர்வது பெரிதும் அமைதியான, நாகரிகமான வெளிப்படைத்தன்மையான காதல், ஆனால் மிடோரியிடம் நான் உணர்வது முற்றிலும் மாறுபட்ட உணர்வு. அது தன்போக்கில் செயற்படுகிறது, அதன் உயிர்ப்பும் சுவாசமும் துடிப்பும் என் இருப்பின் ஆழம் வரை நுழைந்து என்னை வேரோடு அசைக்கிறது. “

என்னைப்பொறுத்தவரையில் இது மிகவும் கடினமான சூழ்நிலை. ஒரு நடுநிலையான ருசியைக் கொண்டவர் டீ, கோப்பி இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதைவிட மிகவும் கடினமான ஒன்று. காதலின்- உண்மையில் அன்பின், இருவேறு சமமான நிலைகளுக்கிடையிலான அந்தரிப்பு. ரெய்கோ பதில் எழுதும் போது மிக உன்னதமான ஒன்றை எழுதுவார், நாவல் எளிமையாக மனதிற்கு மிக அருகில் சென்று உரசும் இடமாக இதைக்கருத்துகிறேன். ரெய்கோவின் பதில் இவ்வாறிருக்கும்,

“நமது மகத்தான பெரிய உலகில் இது மாதிரியான விஷயங்கள் எல்லாநேரமும் நிகழ்த்தபடிதான் இருக்கிறது. இது அழகான நாளொன்றில் அழகான ஏரியில் படகில் சென்றபடி, ஆகாயமும் ஏரியும் அழகாக இருப்பதாக இருப்பதாக சிந்திப்பதைப்போன்றது.”

இந்த நிலையை நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா, நான் பெரும்பாலும் உணர்ந்ததுண்டு,  வேறு வேறு சந்தர்ப்பங்களில். அன்பும் விழிப்புணர்வும் எதிரெதிரே உரையாடிக்கொள்ளும் போது. கல்வியும் நானும் உரையாடிக்கொள்ளும் போது நானும் இன்னொருவரும் உரையாடிக்கொள்ளும் போது. ஒரு இசையைப்போல. அது நிச்சயமாக “உண்மையின் இசை” தான்.
 
பின்குறிப்புக்கள்

  1. பத்தொன்பதாம் திகதி ஆவணி மாதம் தேசிய காலை இலக்கியப் பேரவை நடத்திய உரையாடலில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம் இது.38747540_2132387343688237_432731922305646592_n

2. கட்டுரை வாசிப்பிற்கு முன்னைய நாட்களில் முகப்புத்தகத்தில் கட்டுரை வாசிப்பு சம்பந்தமாக எழுதிய சிறுகுறிப்பு.

எந்தவொரு பிரதியையும் ஆய்வுசெய்து கட்டுரையாக்குவதோ அல்லது விமர்சனம் செய்வதோ அதுவுமன்றி அறிமுகம் செய்வதும்கூட என்னளவில் கடினமான விஷயம். அவற்றை நான் முயற்சிக்கவில்லை. ஆனால் இன்று அனேகமாக இது மலிந்துபோயிருக்கிறது. வாசிப்பதற்கான அளவுகோல்கள், வரையறைகள், வரையறையின்மைகள், கோட்பாடுகள், அரசியல் என்று எல்லாத்தரப்பாலும் ஒரு பிரதி அணுகப்படுகிறது. இது ஒரு பிரதிக்கு மட்டுமன்றி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். இவை ஒரு கூட்டு அறிவின் பிரதிபலிப்பாகவோ அல்லது தனித்த மனிதரின் புரிதலாகவோ வெளிப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒன்றாக நோர்வேஜியன் வுட் பற்றிய எனது உரை அமைந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் எந்த அடிப்படையுமின்றிய வாசிப்பு என்னுடையது. ஒரு தொழில், பொழுதுபோக்கு, ஆத்மார்த்தமான உணர்வு என்பதெல்லாம் அன்றி வேறொரு புரிதலும் தளமும் வாசிப்பிற்கிருக்கிறது. அது பின்னர் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்குமாக விரிகிறது என்று நம்புகிறேன். நோர்வேஜியன் வுட் எவற்றையெல்லாம் எனக்கு ஒவ்வொரு வாசிப்பிலும் நினைவூட்டியது என்பதிலிருந்து உரை தொடங்கலாம் அல்லது வேறொன்றிலிருந்தும் தொடங்கலாம்.

3. ரெய்கோ நோர்வேர்ஜியன் வூட் ஐ தன் கிதாரில் வாசித்த தருணம்

4. நோர்வேர்ஜியன் வூட் தமிழில் க. சுப்பிரமணியால் மொழிபெயர்க்கப்பட்டு எதிர் வெளியீடாக 2014 ஜீன் மாதம் வெளியாகியது.

தூர்ந்துபோன தோமஸிற்கு கடிதம்

அன்புள்ள தோமஸிற்கு,
 
உன் உடல் சீராக எரிந்து சாம்பலாகும் கணம் வரை எனக்கும் உனக்குமான உறவைப்பற்றி யாரிடமும் நான் சொன்னதில்லை. இப்போதும் அதற்கான தேவைகள் வரவில்லை. இங்கு எல்லோரும் அவர்களின் தோமஸை எண்ணி அவதானமாயிருக்கிறார்கள் அல்லது அது போன்று பாவனை செய்கிறார்கள். சுடுகாட்டின் வாசலில் நின்றுகொண்டும் கூட உன் இறப்பை சந்தேகப்பட்டேன். நீ இறந்ததில் பெருந்துயர் உன் காதலிக்கோ, தாய் தந்தையருக்கு, மனைவிக்கோ கிடையாது. அவர்கள் உன் இறப்பை வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த உலகத்து மக்களில் பெரும்பாலானோர் உன் இறப்பை ஆதரிக்கிறார்கள். நீ இறந்தேயிருப்பது அவர்களுக்கு இலகுவாய் போயிற்று. அவர்கள் உன்னைப் பார்க்கவிரும்பவில்லை. உன்னிடம் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை. தோமஸ் இறந்ததன் மூலம் அவர்கள் உருப்பெறுகின்றார்கள். உனக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகிறதா? நீ ஒன்றும் யேசு கிடையாதே, மீண்டும் உயிர்த்தெழ. அதனால் அவர்கள் சந்தோசமாக கொண்டாடுகின்றார்கள். ஒரு அரக்கன் அழிந்த நாளாக இனிப்புகளையும் பட்டாசுகளை கொளுத்தி அவர்கள் திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள். நள்ளிரவு பன்னிரண்டைத்தாண்டி அரைமணித்தியாலத்தின் பின் “போஃகி” ஊளையிடுவதைக்கேட்டு சந்தோசித்து கதவைத்திறந்து உன் வரவை எதிர்பார்த்து ஏமாற்றமடைகிறேன். இது நீ இறந்து ஒரு வார காலமாகியும் தவறாமல் நடந்துகொண்டேயிருக்கிறது. எனக்கு பைத்தியம் என்றோ பேய் பிடித்துவிட்டதொன்றோ பட்டம் கட்டுவதன் மூலம் எல்லோரும் தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள். அதை அவர்கள் பாட்டிற்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள். உலகத்தின் எல்லா நிகழ்ச்சிகளும் செய்கைகளும் இயல்பாக நடக்கிறது என்று நம்புகிறார்கள். இயல்பானவர்களையும் இயல்பானவற்றையும் சிந்தித்து சிந்தித்து முடியாமல் போயிற்று. பூக்கள் மலர்வதை இயல்பாக பார்ப்பது போல தோமஸ் இறப்பையும் இயல்பாக பார்க்கிறார்கள்.  உனக்கு அந்தநாளைப்பற்றிய ஞாபகம் இருக்கிறதா? நீ தான் இறந்து போயிற்றியே அதனால்  உன் ஞாபகங்களும் இறந்துபோயிருக்குமா என்ன? நாங்கள் சுயநலமாவார்கள். எங்களுக்கு உவப்பானவற்றையும் வெறுப்பானவற்றையும் மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். மற்றைய எல்லாவற்றையும் இயல்பாக நடந்தேறுகிறது என்று விட்டுவிடுகிறோம். ஞாபகங்களைக் கூட தேர்வு செய்து அடுக்கிவைக்கிறோம். இருந்தும் உன் ஞாபகங்கள் பற்றி எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவை நித்தியமானவை. எதையும் புறக்கணிக்காதவை. அவர்கள் எனக்கு “பத்”தும் “கூல் ட்ரிங்ஸ்”உம் தந்து என் சகோதரர்கள் இறப்பை கொண்டாடிய போது நீ கூடத்தானே இருந்தாய். உனக்கு அவற்றை அள்ளித் தின்னும் போது மலத்தை தின்பதைபோல அருவருத்ததாக சொன்னாயே. நீ கடுங்கோபமுற்று அந்த மனிதர்களை தாக்க முயன்ற போது நான் படாதபாடுபட்டு உன்னை அடக்கி அறைக்குள் திணித்தேன். ஆனால் என்னையும் உன்னையும் தவிர மிச்ச எல்லோரும் ” கட்டச்சம்பல் நல்லா இருக்கு ” என்று இயல்பாக சாப்பிட்டார்கள். அவர்கள் உன்மீது கடுங்கோபமுற்றிருந்ததை அறிவேன். ஆனால் உன் இறப்பை திருவிழாவாக்கி கொண்டாடுமளவு நீயும் நானும் மலினமானவர்களா என்ன. சுடுகாட்டில் யாருக்கும் தெரியாமல் உன்னைப் புதைக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது ஒருக்காலும் முடியாது என்று உணர்ந்தேன். ஏனென்றால் அவர்கள் தங்களை புத்திசாலியாக காட்டிக்கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். இப்போது கூட உன்னை சுடுகாட்டில் ஏதோ பெருஞ்சாலை ஒன்றில் அடிபட்டு அழுகிப்போன விசர் நாயொன்றைப் புதைப்பதைப்போல ஓரமாய் புதைத்திருக்கிறார்கள்.
 
நீயும் நானும் பேசிகொண்டவற்றையெல்லாம் எந்தப் புதைகுழிக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அவர்கள் நாங்கள் உரையாடுவதை விரும்பவேயில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து உரையாடினோம். நேரம் காலம் இடம் என்று எந்த பேதமுமின்றி. உன்னோடு முரண்பட்டு உன்னை தூற்றிய போதெல்லாம் சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். நானே உன்னை அழித்து விடுவேன் என்று பலமாக நம்பினார்கள். அவர்களிடம் எதன் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள் என்றேன். எதுவும் நிலையில்லை என்றேன். இப்போது நான் இங்கு இருப்பது கூட என்னளவிலும் என்னை உணர்பவர்கள் அளவிலும் மட்டும் தான் உண்மை என்றேன். நான் பார்ப்பது மரம் ஒன்றினையா அல்லது நான் மரமாக நினைத்த ஒன்றினையா என்று வினவினேன். நீங்கள் உணர்வது இருப்பது ஒன்றைத்தானா அல்லது நீங்கள் அறிந்துவைத்திருக்கின்ற இல்லாத ஒன்றையா என்றேன். உங்களிடம் எதுவுமில்லை எல்லாம் புகுத்தப்பட்டது என்றேன். நீங்கள் சிந்திக்கவில்லை, தெரிந்துகொண்ட ஒன்றை திரும்பிச் சொல்வதை சிந்தனை என்று பொய்ப்பேர் சூட்டுகிறீர்கள் என்றேன். அவர்கள் வெகு எளிமையாக ” நிறையப் புத்தகங்கள் படிக்காதே என்று இதான் சொல்றது ” என்றார்கள். ஆனால் புத்தகங்கள் எனக்கோ உனக்கோ எதையும் தரவில்லை என்பதை உணரும் திறனை அவர்கள்  மழுங்கடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நானும் நீயும்  இதைப்பற்றியெல்லாம் கதைத்தோம் என்றபொழுது அவர்கள் சிரித்தார்கள். வேலையில்லாதவர்கள் என்றார்கள். சந்நியாசி ஆகப்போறான் என்றார்கள். ஆனால் தாங்கள் ஞானம் அடைந்ததாக சொல்லிக்கொள்கிறர்கள். அதுவும் பிரபஞ்ச ஞானம். அதைபார்த்தீர்களா என்றேன். எந்த தயக்கமுமில்லாமல் என்னை அடிமுட்டாள் இது தெரியாதா என்றார்கள். நீயே சொல்லு தோமஸ் உனக்கு புத்துயிர்ப்பு அவசியம் தானா?
 
அன்புடன்,
உன் அறைத்தோழன்.

குர்ரத்துலைன் ஹைதர் – உதிரும் இலைகளின் ஓசை

at the drop of the hat – நான்கு கவிஞர்கள் பற்றிய அறிமுக குறிப்புகள்

at the drop of the hat

 

நன்றி

உன்னதம் – எஸ்போஸ், தர்மினி பற்றிய கட்டுரைகள் உன்னதம் இணைய இதழில் 2017 மார்கழி 15, 23 ஆம் திகதிகளிலும் 2018 தை 10 ஆம் திகதியும் வெளியானது.
 
ரஷ்மி – எஸ்போஸின் கோட்டோவியம்
வடலி – எஸ்போஸின் தொகுப்பின் முன்னட்டை
குங்குமம் – சுகுமாரனின் புகைப்படம்
முகப்புத்தகம் – மற்றைய எல்லாப் படங்களும் அவரவர் முகப்புத்தகங்களில் இருந்து பெறப்பட்டது.
 
அனார், சுகுமாரன் பற்றிய கட்டுரைகள் இரண்டும் எனது வலைதளத்தில் சுயாதீனமாக வெளியிடப்பட்டவை.
முகப்பு படம் என்னால் வடிவமைக்கப்பட்டது.
இக்கட்டுரைகள் எழுதும் போது உடனிருந்து திருத்தங்கள் செய்த அருண்மொழிவர்மன், கிரிஷாந்த் மற்றும் உன்னதம் கௌதம சித்தார்த்தன் ஆகியோருக்கு நன்றிகள்.

கட்டுரைகள்

 

  • எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்

  • தர்மினி – அவளொருத்தி கீறிய படம்

  • அனார் – வெளிச்சத்தின் குரல்

  • சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

 
 

எஸ் போஸ் – அவசரமாக பேசித்தீர்ந்த வார்த்தைகள்

 


ஓவியம் – ரஷ்மி
(01)
போரிலக்கியங்களில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. பெரும்பாலான போரிலக்கிய கவிதைகளின் போக்கு தமக்கான தேசத்தை வேண்டியோ அல்லது உரிமைகளை மீட்டெடுக்கவோ அல்லது இழந்த  உயிர்களையும் உடைமைகளையும் பற்றிப் பாடுவதாகவோ  அமைந்துவிடுகிறது. விரும்பியோ விரும்பாமலோ கவிதைகளின் பாடுபொருள் மேற்கூறிய ஒன்றிற்குள் வகைப்பட்டுவிடுகிறது. இதனால் போரிலக்கிய கவிதைகளின் பொதுத்தன்மையான ஒன்றை முன்வைப்பது இலகுவானது. ஆதிக்கசக்தி ஒன்றிற்கு எதிரான குரல்களே கோபமாகவும் கவலையாகவும் போராட்ட குணத்துடனும் வெளிப்படுகின்றது. பெரும்பாலானவை ஆதிக்க சக்தியை எதிர்த்து நின்று போராடுபவையாக பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் –  சாதாரண மனிதரது அவலங்களையும் உணர்வுகளையும்  சொற்பமாகவே பாடுகின்றனர். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் எஸ் போஸ் எனப்படுகின்ற சந்திரபோஸ் சுதாகர். அவரின் சுயம் என்ற கவிதையினூடாக பத்தியினைத்தொடங்கலாம்.
 
“என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன”
 
அடக்குமுறைக்கு கீழே இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களினதும் கோஷமும் கருத்து சுதந்திரமாகவே இருக்கும். சிலி நாட்டின் கவிஞர் விக்தோர் ஹாராவை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர்கிறேன். இறுதியில் சிறைச்சாலையில் விக்தோர் ஹாரா கொல்லப்பட்டதைப்போலத் தான் எஸ் போஸும். பெரும்பாலும் ஆதிக்க சக்திக்கு எதிராக குரல்கொடுக்கின்ற மனிதர்களின் முடிவு ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. எஸ் போஸும், தான் பேசவே கேட்கிறார். ஆனால் பிரச்சனை அடுத்த வரியிலேயே தொடங்கிவிடுகிறது. யாருக்கு மத்தியிலிருந்து தன்னை பேசக் கேட்கிறார்? “உங்கள்” என்று யாரை விளிக்கின்றார்? ராணுவத்தையா? புரட்சியாளர்களையா? அல்லது தன்னோடிருக்கும் சக மக்களையா? யார் அவரின் காயங்களை ஆழமாகக் கிழிப்பது?
 
“எனது குரல்கள் உங்கள் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைக்கின்றது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.”
 
கவிஞர்கள் எப்போதும் தங்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கால்களின் கீழே ஒடுங்கிப்போவதாகவே பாடுவார்கள். ஆனால் எஸ் போஸ் அதைவிட மெல்லிதான பாதச்சுவட்டின் ஒலியிலேயே ஒடுங்கிப் போகின்றார். அல்லது உரத்துப்பாடுகின்ற எஸ் போஸின் குரலை விட மற்றைவை எல்லாம் ஓங்கியிருக்கின்றன. கொடூரமான யுத்தத்தின் பின்புலத்தில் இந்த சிறு கவிஞனின் குரல் எப்படி கேட்கப்போகிறது. ஆனாலும் எஸ் போஸ் தன்னை ஒரு கவிஞனாகவோ கலைஞனாகவோ முன்னிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர் எப்போதும் தன்னைப்போலவே இருக்க விரும்புகிறார். ஒரு சாதாரண குடிமகனாக. அதற்காகவே பாடுகிறார்.
 
“வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்,
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக்குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்.”
 
செல்களையும் மிதிவெடிகளையும் நட்சத்திரங்களாகவும் விதைகளாகவும் உருவகிக்கிறார். செல்கள் வெடிக்கும் போதும் மிதிவெடிகள் சிதறும் போதும் “நீங்கள்” என்று எஸ் போஸ் விழிப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்காக தலைகுனியவும் செய்கிறார். இதிலிருந்து நீங்கள் என்பது யாராக இருக்கமுடியும் என்று ஊகிக்க தொடங்கலாம். சந்நதம் என்பது ஆவேசம். போரொன்றின் போது கூச்சலும் ஆவேசமும் அடைகின்ற தரப்பு – எப்படியும் யுத்தத்தில் முன்னேறுகின்ற தரப்பாகவே இருக்கும். அதுவும் இக்கவிதை எழுதப்பட்ட 1999 களில் ?
 
ஆதிக்க சக்தி ஓர் இனத்தையே அழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அழிப்பின் மூலம் கைப்பற்றுகின்ற ரத்தம் தோய்ந்த  நிலங்களின் மீது நின்று கூச்சலடைகின்றார்கள். உடன்பிறப்புக்களினதும் சொந்த இனத்தினதும் குருதியின் மீது நிற்கின்றவர்களைப் பார்த்து வெட்கிக்கின்ற மனோபாவம் எஸ் போஸிற்குரியது.  இங்கே எஸ் போஸ் ஒரு கவிஞர் என்பதைத் தாண்டி உணர்வுள்ள மனிதராகப் பரிமாணம் எடுக்கிறார்.
 
எஸ் போஸ் போரை விரும்பவில்லை. நிலமீட்பையும் நிலக்கைப்பற்றலையும் விரும்பவில்லை. எப்போதும் போல உயர் மட்டங்களே முடிவெடுத்து முடிக்கின்ற விடயங்கள் மீது சாதாரண மக்களின் நிலைப்பாட்டையும் கேட்கச் சொல்கிறார். எல்லாவற்றையும் பேசியே தீர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கடைசிவரை நின்றார்; அதையே பாடினார். கண் முன்னே தன் இனமே அழிந்து சீரழிகின்ற போது ஒரு கவிஞன் வேறு எதைத்தான் கேட்டுவிட முடியும்.
 
“எனது உடைந்த குரலில்
நானும் பாடவிரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை”
 
ஒரு கவிஞனின் குரலாக மட்டுமே எஸ் போஸின் கவிதைகளை அணுகமுடியாது. இது ஓர் இனத்தின் குரல். சாதாரணமான வாழ்க்கையை வாழ விரும்புகின்ற – ஆனால் வாழமுடியாத அளவு போர் மூண்டுள்ள சூழலில் உழல்கின்ற மனிதர்களின் குரல். அதனாலேயே எஸ் போஸும் நானும் பாடவிரும்புவதாக சொல்கின்றார்.
 
(02)
 
 
மனிதர்களில் எல்லோரும் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை நிதர்சனத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அல்ல. உலகத்திலிருக்கின்ற மீளமுடியாத சுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்குண்டவர்கள். இருந்தாலும் எல்லா மனிதர்களின் கனவு வெளி எப்போதும் முடிவில்லாமல் திறந்திருக்கிறது. நனவுலகம் நகரமுடியாமல் கட்டிப்போட்டிருக்கின்ற மனிதனின் உடலை – கனவுலகம் கட்டவிழ்க்கின்றது. சிறிய மனித மூளைக்குள் முடிவில்லாத கனவு வெளியைச் சிருஷ்டிக்கின்றது. மனிதன் எல்லையற்ற வலுவுடைய பறவையாக உருவெடுத்து பரந்த வெளிமுழுவதும் நிபந்தனைகள் அற்றுப் பறந்துதிரிகின்றான். பறத்தல் என்ற இயல்பை பெற்றவுடன் மனம் ஆர்ப்பரித்து எல்லையற்று விரிகின்றது.
 
உலகத்தின் கோரப் பற்களாலால் குதறப்பட்ட மனிதர்கள் – ஒடுக்குமுறைகளுக்குள் வாழுகின்ற மனிதர்கள் – கனவு வெளிகளின் அசாத்திய எல்லைகளை அனுபவிக்கிறார்கள். போர் சூழப்பட்ட நிலம் ஒன்றில் வாழுகின்ற மனிதர்களின் கனவுலகம் சுதந்திரக் கனவுகளால் நிரம்பியிருக்கும். விடுதலை பற்றியும் சந்தோசங்கள் பற்றியும் நிறைந்திருக்கும். நிலத்திற்கான போராட்டம் ஒன்றில் நிலம் பற்றிய கனவுகளை மனிதர்கள் அதிகமாக உருவாக்குவார்கள். தமிழர்களுக்கு நிலம் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களுக்குள் சாதிய அமைப்பே நிலத்தை அடிப்படையாகக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதி சுதந்திரம், பெண்விடுதலை போன்று காணி நிலத்தையும் வேண்டிப்பாடியுள்ளார். தமிழர்கள் நிலங்களை உயிருள்ளவையாக பாவிக்கிறார்கள். உயிரின் உற்பத்திக்கான களமாக நினைக்கின்றார்கள். தோட்டமும் வயலும் கால்நடைகளும் சந்தோஷங்களும் சோகங்களும் இறப்புகளும் இழப்புகளும் நினைவுகளும் நிறைந்ததாக நிலத்தை அணுகுகிறார்கள். ஈழத்து நிலங்கள் இவற்றுடன் கூடவே போரையும் வீரத்தையும் துரோகத்தையும் நினைவுபடுகின்றன.
 
நாங்கள் ஒரு இரவில் நூறு கனவுகளைக் காண்கிறோம்
பிரிவு பற்றிய கனவுகள்
பிரிவு பற்றிய கனவுகள்
எல்லாமே அது தான்.
எங்கள் கனவுகளில்
பாலைவனங்கள் எங்கள் தலைகளின் மேலே சுழல்கின்றன.
மனிதர்களற்ற தெருக்களில்
கூரைகள் இல்லாத வீடுகளில்
பயிர்களற்ற தோட்டங்களில்
காளான்கள் பூத்தன
முட்கள் பெருகிப் பெருகி வானையளந்தன.
 
கற்பனை சாத்தியமாகின்ற பெருவெளியிலும் நாங்கள்  பிரிவையே கனவு காண்கிறோம். எங்களுக்குள் சாத்தியமான எல்லா வெளியையும் பிரிவு நிரப்பிவிடுகின்றது. பிரிவு என்பது எங்களோடு பிரிக்கமுடியாத ஒன்றாகிப்போனது. போராட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும்  ஒருத்தரை இணைக்கவேண்டிய கட்டாயத்தின் மூலம் எல்லாக்  குடும்பத்திலும் பிரிவு வலுக்கட்டாயமாக சேர்ந்துகொண்டது. கூடவே இடப்பெயர்வு. நிலங்களைச் செல்கள் உழுது தள்ள – உயிரைக் காப்பாற்ற சொந்த நிலங்களிலிருந்து அகதிகளாகவும் நாடோடிகளாகவும் லட்சக்கணக்கில் கிளம்பிய மனிதர்களின் கனவுகளில் பிரிவைத் தவிர வேறு எது ஆக்கிரமிக்க முடியும். இயற்கையினையும் சொந்தங்களையும் கட்டிக்கொண்டு வனப்பாக வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழந்து ஆளரவம் அற்ற தெருக்களையும் செல்களாலும் கிளைமோர்களாலும் சிதறடிக்கப்பட்ட வீடுகளையும் குருதியுறைந்த தெருக்களையும் இராத்திரிகளில் கேட்கின்ற அழுகுரல்களையும் சிதைந்து போன உடல்களையும் கடந்து இடம்பெயரும் போது பிரிவுத்துயர் அன்றி வேறெதுவும் நினைவிலும் கனவிலும் எழாது.
 
ஒவ்வொரு கிராமமாக இடம் பெயர்ந்து செல்லும் போதும் அவர்களை வரவேற்க  புதிய கிராமங்கள் மீதம் வைத்திருப்பது முன்னைய மக்களின் பிரிவுத்துயர் மட்டுமே. ஆட்கள் இல்லாமல் கைவிடப்பட்ட கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் போதும் அங்கே கவனிக்க ஆட்கள் இல்லாமல் பற்றை எழும்பிப்போன நிலங்கள் அவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரே சேதி பிரிவு. அகதிகளின் கனவுகள் நிலம் ஒன்றின் பிரிவைப் பற்றியதாகவே  இருக்கும்.
 
காலத்தை நெய்தவனை
சபித்தன உக்கிப்போன பொம்மைகள்.
எங்களைக் கடந்துபோகின்ற ஒவ்வொரு சுவடுகளிலிருந்தும்
பெருமூச்சு விடுகின்ற பட்சிகள்
எங்கள் கனவுகளின் காட்சிகள்
தெளிவற்றும் உருவமற்றும்
இரவில் சிதறின
திசைகளில் எது சூரியனின் திசை
எது நாங்கள் பயணிக்கின்ற திசை?
 
மக்கள் கொத்துக்கொத்தாக இடம் பெயர்கின்றார்கள். தங்கள் உடமைகளை சைக்கிளிலும் வாகனங்களிலும் கட்டிக்கொண்டு பிள்ளைகளை இடுப்பில் சுமந்தபடி மழை வெயில் இரவு பகல் என்று எதையும் பொறுப்படுத்தாமல் இடம்பெயர்கிறார்கள். அடர்ந்த வன்னிக்காடுகளுக்குள்ளாக இருட்டினில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு நடக்கிறார்கள். முன்னரே மக்கள் நடந்த தடங்களிலும் – இனி வரப்போகின்ற மக்கள் நடப்பதற்காக தங்களையும் உருவாக்கியபடி நடக்கிறார்கள். நிலத்தைப்பற்றிய கனவுகள் இருட்டில் சிதற அழிய இந்த கொடூர காலங்களை நெய்தவனை சபித்தபடியே திசையறியாத வனாந்தரத்துக்குள் உக்கிப்போன பொம்மைகளாக நடக்கிறார்கள்.
 
 
நாங்கள் பிரிந்து விட்டோம்
எமது நிலத்தை, எமது பூர்வீகத்தை
எமது பொறுமையை, எமது மௌனத்தை.
 
பின்குறிப்பு.
எஸ் போஸின் “காலத்தை நெய்தவனைச் சபித்தன பொம்மைகள்” என்ற கவிதையினை முன்னிறுத்தி இக்கட்டுரையின் பகுதி (02)   எழுதப்பட்டிருக்கிறது.
 
* எஸ் போஸின் படைப்புகள்  முழுமையாக தொகுக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்தன. 2007 சமாதானக் காலப்பகுதியில் வவுனியாவில் உள்ள தனது வீட்டில்  ஏழு வயதுப் பிள்ளையின் முன்னர்  இனந் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒன்பது வருடங்களின் பின்னர் 2016இல் வடலிப் பதிப்பகம் மூலம் கருணாகரன், ப. தயாளன் மற்றும் சித்தாந்தனின் விடா முயற்சியால் “எஸ் போஸ் படைப்புகள்” என்று தொகுக்கப்பட்டன. ஆனால் இன்னமும் தொகுக்கப்படாமல் அவரின் சில  படைப்புகள் மறைந்து வாழுகின்றன.
 

தர்மினி – அவளொருத்தி கீறிய படம்

 


 
இந்தப் பத்தி ஈழத்து பெண் கவிஞர் தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கை என்ற கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆரம்பிக்கிறது. இருள் மிதக்கும் பொய்கை கருப்பு பிரதிகளால் 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. தர்மினி இப்போது பாரிஸில் வசிக்கின்றார். இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கவிதைகளினையும் காலம் – உணர்வு அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் தர்மினியின் வாழ்க்கை கவிதையினூடாக பிரதிபலிக்கப்படுவதை அவதானிக்கலாம். ஒரு தொகுதிக் கவிதைகள் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் சாதாரண மக்களைப் பற்றியும் , இன்னொரு தொகுதி இடம்பெயர்வு – புலம்பெயர்வுகள் பற்றியும் இன்னுமொரு தொகுதிக் கவிதைகள் புலம்பெயர் அகதி வாழ்க்கை பற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்துவாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப் பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப்போன ஒரு இனத்தின் கதறல்கள்.
 
வெளிச்சத்தின் உண்மைகள்
இருட்டில் மன்னிக்கப்படுகின்றனவா?
மறைக்கப்படுகின்றனவா?
 
என்று ” குரல்கள் ” என்ற கவிதையில் கேள்வி கேட்கின்ற தர்மினி
 
இருளே உண்மை
இருளோ வெட்கம் அறியாது
அது கசிந்த மனதுகளைத் துடைக்கும் கடுதாசி.
 
என “இருளைத் தரிசிக்க…. ” என்ற கவிதையில் அவரே பதிலளிக்கிறார்.
 
சுதந்திரம் என்பதை என்னவென்றே அறியாத காலத்தில் உழன்ற மக்களின் உணர்வுகளை பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. போராட்ட குழுவும் அரசாங்கமும் ஒப்பந்தங்கள் செய்வதும் – குறுகிய காலத்திலேயே அவை அனைத்தும் மீறப்பட்டு மீண்டும் இருள் சூழ்வதும் ஈழத்து மக்களுக்கு புதிதான ஒன்றும் இல்லை. இருந்தும் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் சுதந்திரத்தைப் பற்றிய கனவு மேலெழுகிறது. சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே சுதந்திரத்தை அளிப்பதைப் போன்ற அவல நிலைமையை அடைந்துவிட்டார்கள். இதனால் சுதந்திரம் என்பதே என்னென்று அறியாமல் – அதற்காக காத்திருக்கின்றார்கள். சுதந்திரத்தைப் பற்றி பாடியும் எழுதியும் அலுத்துவிட்டார்கள். எழுதிய அனைத்துமே சருகுகளாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
 
வெளியே மழையில்லை
கருமுகிலில்லை
புழுக்கமில்லை
ஆயினும் மழை பற்றிக் கதைக்கலாம் தானே?
 
– மழை முறியுமா?
 
உதிரும் மிகுதி வார்த்தைகளின்
குவியலைச் சுமக்கிறது அடிமரம்.
 
– அவளொருத்தி கீறிய படம்
 
போர்க்கவிதைகள் வெறுமனே வார்த்தைகளையும் உணர்வுகளையும் மட்டும் கொண்டுவருவன அல்ல. போர்க்கவிதை ஒன்றின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. கவிதையுடன், அதன் பின்னணியில் ஓடுகின்ற வரலாறும் கடத்தப்படுகிறது. எந்த ஒரு இலக்கியத்தின் பின்னும் அதன் பின்னணி வரலாறு காலம் காலமாக கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிலும் போரிலக்கியங்கள் கடத்துகின்ற வரலாறு மிகவும் வலிமையானது. “1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி ” என்ற கவிதை பொதுவான வாசிப்பில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் தர்மினி குறித்த தினத்தைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றார்,
 
” இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.
 
அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள் உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம். ” – அவரின் தூமை வலைப்பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.
 
கவிதையாக உருவெடுக்கின்ற பொழுது,
 
அதே நாட்கள்
அதே மழை
அதே வீதி
அதே நாவற்குழிப்பாலம்
அதே சாவகச்சேரி
அதே கிளாலி
அதே கிளிநொச்சி
அதே பசி
அதே அந்தரிப்பு
அதே ஆதரிப்பு
நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.
 
தர்மினியை – பொதுவாக கலைஞர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டு பின்னர் அடிமையாகிப்போகின்ற தனிமை சூழ்ந்துகொள்கிறது. அகதியாக அந்நியதேசத்து சென்ற எல்லா சாதாரண மனிதர்களையும் தனிமை வாட்டும் என்றால் ஒரு கலைஞரை எத்தனை சித்திரவதை செய்திருக்கும். ஊரைப்பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஞாபகத்திலிருந்து பாடவேண்டிய துர்பாக்கிய நிலையை புலம்பெயர் கலைஞர்கள் அடைந்துவிடுகின்றார்கள். இதனால் தர்மினியின் கவிதைகளில் தனிமையோடு ஏக்கமும் பிரிவுத்துயரும் சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது.
 
” சுவர்கள் ஒட்டிக் கிடக்கின்றன
விளக்கின் நிழல்
ஒரு பூச்சி
தனித்துலையும் மனது ”
 
– இருளோடு
 
” ஒன்றொன்றாய் …
பிடிக்காத நாளை
பிடிக்காத மனிதரை
பிடிக்காத எதுவொன்றையாவது நினைத்து
கிழித்தபடி
இதோ மிச்சமாக
தனியாக
நானும் இக்கணமும் ”
 
– நாட்களைக் கழித்தல்
 
” மறுபக்கம் திரும்பி என்னிடம்
நீயொரு அகதி என்கிறது
மற்றொரு நாவு
பொது வெளியில்
ஒளிந்துகொள்கிறது
உயர்த்த முடியாத
குரலுக்காக மௌனிக்கிறது ”
 
– என் நாவு பிளந்து
 
தர்மினியின் ” முத்தங்கள் ” என்ற கவிதை முக்கியமானதொன்று. கவிதை முழுதும் உணர்வுகள் கொட்டிக்கிடந்தாலும் – அதை மீறி கவிதை எடுத்துக்கொண்ட கலாசார வேற்றுமை மிகவும் முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் முத்தங்கள் சாதாரணமானவை. முத்தங்கள் ஆதரவின் குறியீடு. அன்பின் வெளிப்பாடு. எல்லாச் சந்திப்புகளிலும் முத்தங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. ஆனால் எமது பணப்பாடுச் சூழல் அப்படியானதல்ல. அந்நியர்களுடனான முத்தம் காமத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. சொந்தங்களுக்கு முத்தம் கொடுப்பது ஐந்து ஆறு வயதுகளோடு மறைந்துபோய் விடுகிறது. பின்னர் முத்தம் சொந்தகளுக்கு வெட்கத்தின் குறியீடாகவும் அந்நியர்களுக்கு அருவருப்பின் குறியீடாகவும் மாற்றமைடைகின்றது. அம்மா- மகன் முத்தங்கள் வெளிப்படுத்துகின்ற அர்த்தங்களை விட; அப்பா- மகள் முத்தங்கள் விமர்சனப் பார்வையில் பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் இந்த மண்டிப்போன கலாசாரத்தின் குப்பைகளாக இருக்க தர்மினி இன்னொரு முத்தத்தைப் பற்றிப் பாடுகிறார். கொடுக்கப்படாத முத்தம். மகள் அம்மாக்கு கொடுக்க மறந்த முத்தத்தைப் பற்றியது. புலம்பெயர்ந்த தேசத்தில் யார்யாருக்காகவோ ஒட்டுகின்ற கன்னங்கள் குவிக்கின்ற உதடுகள் – அம்மாவிற்காக ஒட்டவும் குவியவும் மறந்ததைப்பாடுகின்றார்.
 
“யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக்
கொஞ்சி அணைத்திருக்கலாமோ?”
 
– முத்தங்கள்
 
மழையைப் பற்றி கவனத்துக்குரிய மூன்று கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. முதலாவது மழையும் நெருப்பும். ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டம் – போராட்டக் குழுவும் அரசாங்கமும் போரில் உக்கிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த போது போக்குவரத்து , பண்டப்பரிமாற்றம் என்பன கூடுதலாக தடைப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்க – பொருட்கள் தீர்ந்துவிட்டன. கள்ளமாக பொருட்களை கொண்டுவந்து சேர்த்தாலும் கேள்வியின் அளவிற்கு போதாமல் போனது. கூடவே ஒவ்வொன்றினது விலையும் பத்து பன்னிரண்டு மடங்காக உயர்ந்தது. காரணம் பொருட்களுடன் உயிரையும் பணயம் வைத்தே பண்டப் பரிமாற்றம் நடந்தது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய பால்மாக்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதே சமயம் வெளிநாட்டு உதவிகள் நிறையைக் கிடைத்து கைநிறையப் பணம் புழங்கியது. ஆனால் பொருட்கள் தான் இல்லை.
 
” கொள்ளைக்காசிருந்தும் விற்கயாருமில்லை ”
 
– மழையும் நெருப்பும்
 
மற்றைய இரண்டு மழைக் கவிதைகளும் ஒப்பீட்டுக் கவிதைகள். ” சத்தமில்லாத மழை ” மற்றையது ” மழைச்சத்தம்” . இவ்விரண்டு கவிதைகளும் வெவ்வேறான மனநிலைகளிலிருந்து எழுதப்பட்டவை. வெவ்வேறான நிலச்சட்டகம். எங்கள் ஊர்களில் மழையின் சத்தம் என்பது வெறும் முகில்களில் இருந்து நீர்த்தாரைகள் வீழ்வது மட்டுமல்ல –
 
” மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி
கிணறு வழிய
பள்ளத்து வெள்ளங்களில்
தவளைகள் கத்தும் ”
 
– மழைச்சத்தம்
 
இதையெல்லாம் பார்த்து கேட்டு சிலிர்த்த உடல் அந்நிய தேசம் ஒன்றில் மழையின் சத்தத்தை –
 
” மின்னி ஒரு வெளிச்சம்
என் முன் விழ
திரைவிலக்கி வானம் பார்த்தால்
மழைக் கயிறுகள்
மண்ணில் ”
 
– சத்தமில்லாத மழை
 
ஊர்களில் –
 
” கூதலும் சத்தமுமாக மழை ”
 
– மழைச்சத்தம்
 
அந்நிய தேசத்தில்
 
” மண்ணில் கரைந்து கொண்டிருந்தன ”
 
– சத்தமில்லாத மழை
 
” ஒரு குருவி
அதற்கான வானொன்றைப் படைத்த
இரு கரங்களிடம்
முறைப்பாடுகளை வைப்பத்தைத் தவிர
வேறு வழியில்லை ”
 
– முடிவற்றது
 
 
பின்குறிப்பு
 
தர்மினியால் “1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி” என்ற தலைப்பில் தூமை இணைய தளத்தில் எழுதப்பட்ட கட்டுரை. தூமை இணையதளத்தை மேலும் துலாவிய பொழுது – இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக தர்மினி மற்றும் மோனிக்கா ஆகியோர் செயற்படுகிறார்கள் என்றும் பெண்ணியம் சார்ந்த உரையாடல்கள் பெண்களின் படைப்புக்கள் என்று முற்றுமுழுதாக பெண் இயக்கத்தால் நடத்தப்படுகிறதும் என்றும் புரிந்துகொண்டேன். தொடர்ச்சியான இயங்குகையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தூமை -ஒரு  காரணப்பெயராக அடையாளப்படுத்தப்படுகிறது. “இச்சமூகத் தூய்மையாக்கங்களிலிருந்து பெண்கள் வெளியேறி மேற்கொள்ளும் ஒரு எழுத்து முயற்சி என்பதற்காகவே இத்தலைப்பு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.
 
 

அனார் – வெளிச்சத்தின் குரல்

 
 


 
இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.
 
இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.
 
தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
 
“உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்”
 
ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.
 
“இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு “
 
“அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன”
 
அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக்  கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும்  அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.
 
கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும்.  கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும்  நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.
 
“ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி”
 
“எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை”
 
அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது  படைப்பு வெளியிலிருந்து கவிதையினை  உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.
 
மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,
 
“யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.”
 
அனார் இதனை,
“வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும்  என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை”  என்கிறார்.
 
அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு  சிறந்த முன்னுதாரணமாக  மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் “அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்”.
 
பின்குறிப்புகள்
 
இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு        “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.
 

சுகுமாரன் – பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

 

9
நன்றி – குங்குமம்

 
மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
****************
 
 
 
 
 
 
 
 
 
 

கழைக்கூத்தாடியின் இசை – திருத்தப்பட்ட வடிவம்


முன்குறிப்பு
2017 ஆம் ஆண்டு இதே திகதியில் எழுதப்பட்ட கட்டுரையான “சிற்பி – கழைக்கூத்தாடியின் இசை – தேவிபாரதி” இன் திருத்தப்பட்ட வடிவம் இது. ஆண்பால் விகுதிகள் பலர்பாலிற்கு மாற்றியதோடு மிக எளிய வசன அமைப்பு மாற்றங்கள் சிலதையும் செய்துள்ளேன். மற்றபடி தகவல்கள், கருத்துக்கள் எதிலும் மாற்றமோ சேர்க்கையோ செய்யவில்லை.
(01)
எழுத்தாளர் என்ற தொழிலின் புறவுருவயமான விளக்கம் இலக்கியத்தையும் மக்களின் தேவைகளையும் எழுதுவது என இன்றைய சூழலில் கருத்து நிலவுகிறது. ஒரு வகையில் அது மறுக்கமுடியாத உண்மை.எழுத்தாளர் என்பவர் அதனாலேயே அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த இலக்கியங்களையும் மக்கள் தேவைகளையும் எழுதுகின்ற சமூகப்பணியில் எழுத்தாளர் தனக்கென அடைகின்ற ஆத்ம திருப்தி அவரின் வீச்சு எல்லையை அவரே நிர்ணயிப்பதில் தான் இருகின்றது. இந்த நிர்ணயிப்பில் வெற்றி பெறுகின்ற எழுத்தாளர்கள் தான் இலக்கியத்தில் வெற்றி பெறுகின்றார்கள். அவர்களின் விஸ்தரிப்பான எழுத்தின் வலிமையை, அவர்கள் உருவாக்குகின்ற எழுத்துலக சிருஷ்டிப்புக்கள் தான் காட்டும். ஒரு சம்பவத்தை அல்லது ஒரு காட்சியை வாசகர் ஊடாக படரவிடுவதும் அதில் உலவுகின்ற பாத்திரங்களை வாசகருடன் பேசவைப்பதும் அதனூடாக உணர்வுகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வதும் என்ற பொது மொழியைத்தாண்டி இலக்கியங்களையும் சினிமாவையும் கலக்கின்ற களத்தை உண்டாகிகொண்டு அதில் உணர்வுகளை பேசுகின்ற தனித்துவமான எழுத்து கழைக்கூத்தாடியின் இசை.
எழுத்தாளர்கள் கையாள்கின்ற மொழியின் உரு , அவர்களின் கதைகருவின் மீதான அதீதத்தை கூட்டுவதாக இருக்கும். எந்த வகை கருவிற்கும் இது பொருத்தமானது. சரியான மொழியின் உருவில் உணர்வுகள் வெளிக்கொண்டுவரும் போது அதில் உருவாக்கப்படுகின்ற அழகியல் அற்புதமானதாக இருக்கும். பெரும்பான்மையான கதைகளில் இந்த உணர்வழகியல் கதை மாந்தர்களுக்கூடாகவே வெளிபடுத்தப்படும். வெகுசில படைப்புக்களில் தான் அதன் சூழலும் அதில் உள்ள உயிரற்றவையும் கூட உணர்வழகியலை வெளிக்கொண்டுவரும். அந்த கதைக்களம் மற்றும் உணர்வுப்பின்னணி இரண்டும் ஒன்று சேரும் போது வாசகருக்கு கதையின் மீது ஏற்படுகின்ற ஒன்றிப்பு மிக பலமானதாக இருக்கும். வாசகர் களத்தில் நின்று ஒரு முறை களத்தை சுற்றி பார்க்கும் போது அங்கிருக்கின்ற சிலையிலிருந்து அசையும் மனிதர்கள் வரை எல்லோரிடமும் பீடித்துபோயிருகின்ற கதைப்பின்னணி உணர்வழகியலின் உச்சம்.
எந்த சந்தர்ப்பத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடக்கூடிய இந்த நுட்பம் கழைக்கூத்தாடியின் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதுவும் சில போதைக்குறியீடுகள் மூலம். சினிமா, சிகரட், மாது, காப்பி, காதல், இலக்கியம் எல்லாமே போதையின் குறியீடுகள் தான். அவை ஒவ்வொன்றிலும் இந்த உணர்வழகியல் ஊடுருவி செல்கின்றது. கதை மாந்தர்களிடம் பீடித்திருகின்ற அவலம், கதையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆழமாக பேசப்படுகின்றது. எங்கிருந்தோ கடற்கரைக்கு காற்று வாங்க வருகின்றவர்களிடம் கூட.

“அந்த இடம் அரவாணிகளுக்கும் ஹோமோ செக்சுவல்களுக்குமுரியது. முகத்தைச் சுழித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் சுழித்துக்கொள்ளலாம். அடுத்த ஐம்பது மீட்டரில் வேசிகளின் உலகம் தொடங்குகிறது. கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை நீண்டும் விரிந்தும் பரந்தும் கிடக்கும் அவ்வுலகமே இப்பெருநகரவாசிகளுக்கு அந்தப்புரம். உயரமான விளக்குத் தூண்களிலிருந்து கசியும் பாலொளிக்குக் கீழே படர்ந்திருக்கும் புகையிருளுக்குள் தம் மஞ்சங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இம்மாநகர ராஜாக்களும் ராணிகளும் கூத்திகளும் சேடிகளும். இப்பெருநகரில் காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்ள வேறு உருப்படியான இடமெதுவும் இல்லை. காற்று வாங்க வந்தவர்களுக்கு அருவருப்புத் தாளவில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டு உறுமும் கடலை நோக்கி வேகமாக நடக்கிறார்கள். சிலர் கள்ளப் பார்வை பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு ஆச்சரியமளிக்கிறது,
“அம்மா, அம்மா”
“என்ன?”
“அந்த அங்கிளும் ஆண்ட்டியும் என்ன செய்யறாங்க?”
“வெளையாடறாங்க”
சங்கடத்துடன் பதிலளித்தபடி தாய் அவர்களை இழுத்துச் செல்கிறாள்.
“அது என்ன வெளையாட்டு அம்மா?”
“கண்றாவி, இதுகளுக்குக் கொஞ்சமாச்சும் வெக்க மிருக்குதா? பப்ளிக் பிளேஸ்ல இதென்ன நியூசென்ஸ்?”
“நீங்க பேசாம நடங்க”

(02)
சிறுகதை என்ற வரையறைக்குள் கதைக்குள் உலாவ வேண்டிய மாந்தர்களும் சம்பவங்களும் ஏற்ற இறக்கங்களும் சம்பவங்களும் வரையறைக்குட்பட்டவை. அந்த வகையில் சிறுகதை என்ற பரிமாணத்தை தாண்டி குறுநாவல் என்ற பரிமாணத்தை கழைக்கூத்தாடியின் இசை பெறுகின்றது. என்னால் வாசிக்கப்பட்ட தமிழை மூலமொழியாக கொண்டு எழுதப்பட்ட முதல் குறுநாவல் இதுவே. புனைவுகளை ஆங்கிலத்தில் Flash fiction ,Short story ,Novelette ,Novella ,Novel என்று ஐந்து விதமாக வகைபடுத்துகின்றனர். கழைக்கூத்தாடியின் இசை Novelette என்கிற வடிவத்திற்குள் உட்புகுகிறது. ஒரு குறுநகர வாழ்வியலை ஒவ்வொரு அணுவாக பேசிக்கொண்டே நீள்கிறது கழைக்கூத்தாடியின் இசை. ஒரு பழைய மான்சனில் தொடங்கி வீதிகள், சாப்பாட்டு கடைகள், சிலைகளின் அடிவாரம், சினிமா தளங்கள், கடற்கரை, புகையிரத நிலையம், ஒரு அழுக்கான அறை என்று ஒரு மனிதர் சாதரணமாக நடமாடக்கூடிய இடங்களில் எல்லாம் கதையினை ஓடவிட்டு ஒவ்வொரு சந்திலும் ஒவ்வொரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். எல்லா சந்திகளும் ஏதோ ஒரு சுமையுடன் செல்லும் வாசகருக்கு இன்னொருபடி சுமையினை ஏற்றிவிடுகின்றது. ஒரு நிதர்சன தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை சிக்கல்களை ஒவ்வொரு புள்ளியும் விரிக்கின்றது.
ஆரம்பத்தில் எழுத்தாளர் உருவாகுகின்ற இலக்கிய உட்புகுத்தல்கள் ஒரு வாசகராக கதையின் வீரியத்தை குறைப்பதாக தோன்றுகின்றது. அந்நியத்தன்மையை ஏற்படுத்துகின்றது. நிதர்சன வாழ்க்கை என்ற புள்ளியில் நின்று சம்பவம் ஒன்றை விரித்துக்கொண்டு செல்லும் போது அந்த சுவாரஸ்யமான வாசிப்பு தன்மைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற உணர்வை உண்டாகியது. தெளிவாக சொல்ல போனால் இலக்கிய திணிப்பு போன்றது.

அங்கிருந்து நேர் கிழக்கே நடந்தால் காற்சிலம்பை உயர்த்திப்பிடித்தபடி ஆகாயத்தை வெறித்துக்கொண்டிருக்கும் கண்ணகியின் பொற்பாதங்களைச் சேரலாம். “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்?” எனப் பரிவுடன் கேட்க அங்கே அவளுக்கு யாருமில்லை. சாலை நெடுகிலுமுள்ள கோட்டைக் கொத்தளங்களுக்குச் சுழலும் விளக்குகளுடன் விரையும் அமைச்சர் பெருமக்களுடையவும் துறைச் செயலாளர்களுடையவும் இயக்குனர்களுடையவும் காவல்துறை அதிகாரிகளுடையவும் வாகனங்களின் இடையறாத சைரன் ஒலி. அடிக்கொருதரம் விரைப்பாக நின்று சல்யூட் அடிக்கும் போக்குவரத்துக் காவலர்கள், இளைய சமுதாயத்தின் அசுரவேக இருசக்கர வாகனங்கள். எல்லாக் கண்காணிப்புக்களையும் மீறிச் சிலசமயங்களில் யாருக்காவது மண்டை சிதறுகிறது, முட்டிகள் உடைகின்றன. ‘ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தன் அரும்பெறர்ப் புதல்வனை யாழியின் மடித்தோனின் பெரும்பெயர் புகாரை’ப் போல இல்லை அவளுக்குக் காற்சிலம்பை உயர்த்திக்காட்டி நிற்கக் கிடைத்திருக்கும் மேடை அமைந்துள்ள காமராஜர் சாலை.

இது போன்ற மிக சொற்பமான இடங்களில் அவரின் வழமையான நடையில் கடந்திருக்க மிகத்தரமான அகச்சூழல் பார்வையினை ஏற்படுத்தியிருக்கும்.
(03)
குறுநாவல் ஒன்றுக்குள் பல சம்பவங்கள் அனுபவங்கள் கருத்துகள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். ஒவ்வொரு இடத்தையும் கோர்த்து எடுத்துக்கொள்ள கதைமாந்தர்கள் பயன்படுத்தபடுவார்கள். கதையின் தேவைக்கு ஏற்ற மாதிரி கதைமாந்தர்கள் உலாவுவார்கள். ஒரு சாதாரண மனிதனைக்கொண்டு ஒரு நகரத்தின் அவலத்தை வெளிக்கொண்டுவருவது என்பது, அவனின் பயணிப்பிலும் நாளாந்ததிலும் கேள்விகளை ஏற்படுத்தி உயிர்ப்பை இல்லாமல் செய்துவிடும். கழைக்கூத்தாடியின் இசை எல்லா முடுக்குகளிலும் பயணிக்கும் பாத்திரம் ஒன்றை எதிர்பார்கிறது. அந்த எதிர்பார்ப்பை எழுத்தாளர் கைக்கொண்ட விதம் போற்றுதலுக்குரியது.
சினிமா என்ற ஊடகம் தோற்றத்தில் பிரமிப்பையும் உள்ளடக்கத்தில் சொல்லமுடியாத வேதனைகளையும் துயர்களையும் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் புறக்கணிப்பையும் கொண்டது. சினிமாவுக்கு சமவுடமை வாதம் கிடையாது. ஒருவகையான மேலாதிக்க வாத போக்குடைய சினிமாவில் அதிகம் உழன்று போகின்ற உழைப்பாளர் வர்க்கம் தான் உதவி இயக்குனர்கள். இதிலும் மூன்றாம் படி நான்காம் படி உதவி இயக்குனர்கள். ஒரு நகர வாழ்க்கைக்கு அதன் எல்லா பிரவாகங்களுக்கும் மிக கச்சிதமான படைப்புகள் அவர்கள். அவர்கள் அனைத்து விதமான மக்களுடனும் பழகும் பாக்கியம் பெற்றவர்கள். எல்லா தட்டு மக்களின் வாழ்கையையும் வாழ்பவர்கள். நகரின் பெரும்பாண்மையை தம்முள் இணைத்து கொண்டவர்கள்.
இலக்கியம் தெரிந்த உதவி இயக்குனர்கள் என்றால் என்ற கற்பனை உத்திதான் கதையின் முழு நகர்விற்கும் அச்சாணி. காணுமிடமெல்லாம் இலக்கியத்தாலும் இலக்கிய கர்த்தாகளாலும் அவர்களின் சிருஷ்டிபுக்களினாலும் கதா மாந்தர்களை நகர்த்தி அவர்களின் வாழ்கையின் ஒவ்வொரு நகர்வையும் இலக்கிய ரசனைக்குட்படுத்தி இருக்கிறார்.
(04)
கழைக்கூத்தாடியின் இசை.
ஒரு பிரமிப்பான தலைப்பும் பொருத்தமும்.ஒரு அவலத்தின் குறியீடாக ஒரு இறுக்கமான முயற்சியும் அதற்கான மிக குறைவான கூலியும் என்ற துன்பியல் வாழ்க்கை கழை கூத்தாடிகளின் உடையது. சீரானது என்ற எதிர்பார்ப்புடன் உயரத்தில் வைக்கப்படும் தடியின் மேல் இன்னொரு தடியை கைகளின் அகலங்களில் விரிந்து பிடித்துக்கொண்டு அசைவுகளுக்கு ஏற்ப தடியை சமநிலைப்படுத்தி தள்ளாட்டத்தில் வாழ்கின்ற வாழ்க்கை அவர்களுடையது. அவர்களுள் மிக சிறிய பெண் குழந்தையிடம் தட்டினை கொடுத்து சன்மானம் கேட்டு அனுப்புவார்கள். அந்த குழந்தையோ ஒரு தட்டு ராபானையோ அல்லது ஏதாவது ஒரு ரலிய இசைக்கருவியை வாசித்துக்கொண்டு சோக கீதம் பாடிக்கொண்டு கூத்தடியினை சுற்றி சுற்றி வரும். அந்த இசையின் கொடூரம் கூத்தாடியின் கவனத்தை இன்னும் கூர்மையாகும். இந்த உளவியல் பின்னணி அந்த இசைக்குண்டு.
அதே வாழ்க்கை தான் ஒவ்வொருவரினதும் எம்மா சுற்றி இருகின்ற இசை இன்னும் கவனிக்கிசெய்வதற்கு உரியதே தவிர சேர்ந்து உழல்வதற்கு அல்ல.
அந்த குழந்தை கேட்கும் பணம் பிச்சை அல்ல உழைப்பின் கூலி.
மிக கச்சிதமான குறுநாவல் ஒன்றை வாசித்த திருப்தி கழைக்கூத்தாடியின் இசையினை வாசித்த போது கிடைத்தது. தேவி பாரதி என்ற ஆளுமையின் ஆழமான எழுத்து இன்னும் கொண்டாடப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனாக வாசகனுக்கு தேவி பாரதி வெற்றி கழைக்கூத்தாடியின் இசையில் கௌதம நீலாம்பரனின் இதழ்களிலிருந்து சத்தமில்லாமல் உதிர்ந்து தன் காலடியில் விழுந்து நசுங்கிய பழுப்பு நிறப் புன்னகை போன்றது.
இந்தக் கட்டுரையின் முன்னைய வடிவம்
https://brinthansite.wordpress.com/2017/05/09/சிற்பி-கழைக்கூத்தாடியி/
தேவி பாரதியின் கழைக்கூத்தாடியின் இசை என்ற குறுநாவலை வாசிக்க
http://www.kalachuvadu.com/archives/issue-197/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
அவரின் ஏனைய படைப்புக்களை வாசிக்க
http://devibharathi.blogspot.in/

பூனைகளைப் பிரிந்து வாழ்தல்

மூன்றாம் மாடியிலிருக்கிறது எனது அறை. தடிப்பான கண்ணாடி யன்னலும் பழுத்த மஞ்சள் நிறமுடைய கதவையும் தவிர அறைக்குள் காற்று போகவும் வரவும் வழி கிடையாது. அறைக்கு வந்து சில நாட்களில் முன்பிருந்த மர யன்னலை கழற்றிவைத்துவிட்டு கண்ணாடியினைப் பொருத்தினார்கள். ஓரத்தில் இரண்டடுக்கு மரச்சட்டகம் ஒன்று சுவரோடு அறையப்பட்டிருக்கிறது. வீட்டிலிருந்து காவிக்கொண்டுவந்த புத்தகங்களை குறை மனதோடு அதற்குள் சிறை வைத்தேன். அறைக்கு மேலே கட்டடங்கள் கிடையாது. வெயிலுக்கு திறந்துவிடப்பட்ட மொட்டைத் தலை போல எனது அறை. உலகத்தின் முழு உஷ்ணமும் அதற்குள் தான். கண்ணாடி யன்னலைத் திறந்தால் சிங்களப் பாடசாலை ஒன்றின் வெட்டை மைதானம். விரும்பிக்கூட குளிர்காற்றை தரமுடியாத நிலைமை மைதானத்திற்கு. ஜன்னலைத் திறந்து அருகில் கதிரையைப் போட்டிருந்தால் வருகின்ற அனல் காற்று முகத்தின் மெல்லிய குழிகளுக்கூடாக ஊடுருவி முகத்தெலும்புகளை சூடாக்கும்.  மாடியிலிருந்து இறங்குகின்ற சூட்டை வயதான காற்றாடி வலிந்து அறை முழுக்கப் பரப்பும். ராத்திரி பன்னிரண்டிற்கும் முகமும் மேலும் பிசுபிசுப்பாகவே இருக்கும். நிறைந்து பெய்கின்ற மழையின் போதும் இதே நிலைமை தான். யன்னலுக்கருகில் வயதாகிப்போய் கிளைகள் மட்டும் எஞ்சிய பெயர் தெரியாத மரமொன்று நிற்கிறது. அதற்கு காற்று என்று பெயர் வைத்திருக்கிறேன். எல்லாமும் இழந்து இறந்துபோய்க்கொண்டிருக்கிறது அது. மைதானத்தின் எதிர்க்கரையில் ஆறேழு வாழைமரங்கள் நிற்கின்றன. அனைத்தும் ஒருமித்து காற்றில் அசைய எனது காற்றோ விறைப்பான பிளாஸ்டிக் பொம்மை மாதிரி நிற்கும். உடம்பு மடிந்திருக்கின்ற இடங்களிலெல்லாம் உஷ்ணக்காற்று வியர்வையையும் கடியையும் தற்காலிகமாக ஏற்படுத்திவிடும். குறுகிய குளியலறைக்குள் சிலை போல நின்று சுற்றி தண்ணீர் தெளித்துவிட்டுவந்தால் கொஞ்ச நேரத்திற்கு நிம்மதியாக இருக்கும். அப்படியும் சகித்துக்கொள்ளாத நேரங்களில் அறையைவிட்டு வெளியேறி கீழே இறங்கிவிடுவேன். காற்று சுத்தமானதாக இருக்காது தான், அகற்றப்படாத குப்பைகளின் வெடுக்கோடு குமட்டுகின்ற வாசம், இரண்டு மாதங்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. கீழே இறங்கினால் அம்மல் இருக்காது. பிசுபிசுப்பு இருக்காது. வெதுப்பகம் ஒன்றிலிருந்து தப்பித்துவந்த பச்சை மாவைப்போல மனதோடு நிம்மதி ஒட்டிக்கொள்ளும்.
 
உடல் முழுக்க வியர்த்து கண்கள் இரண்டும் எரிந்துகொண்டிருந்த நாளொன்றில் கீழே இறங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டு படிகளில் இறங்கினேன். இரண்டு மாடிகள் இறங்கி கீழ் தளத்திற்கான படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது தான், வெள்ளையும் வெளிர்ந்த மஞ்சள் நிறமுமுடைய பூனை என்னை மறித்தது. சதா காலமும் இதே படிகளில் இதே வேகத்தோடு இதே வெறுப்போடு இதே அலைச்சலோடு  ஏறுகிறேன் இறங்குகிறேன். எப்போதும் இடை மறிக்காத பூனை இன்று உடலை இறுக்கமாக வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறது.
 
சிறியவனாக இருக்கும்போதே மிருகங்களை வளர்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. முக்கியமாக பூனைகள். மூன்றாமாண்டு படிக்கும் போது அழகியல் பாடத்திற்காக அம்மா பாரதியின் வெள்ளைநிறத்தொரு பூனையை சொல்லித்தந்தார். அம்மாவின் கண்கள் பிரகாசமானவை. எந்த நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கண்களையும் உதட்டினையும் சுளித்து அவர் எனக்குச் சொல்லித்தந்த பாடலை ஐந்தாம் ஆண்டு முடியும் வரை  நடித்துக்காட்டி அழகியல் பாடத்தை தேற்றிக்கொண்டிருந்தேன். அம்மாவிலிருந்த நளினம் ஒவ்வொரு முறை நான் பாடி நடிக்கும் போதும் எனக்குள் ஒட்டிக்கொள்ளும். எங்கள் வீட்டில் எப்போதும் தாய்ப்பூனையும் குட்டிகளும் அலைந்தபடியே திரியும்.  வீட்டின் ஓரத்தில் ஒதுக்கமாக இருக்கும்  பழைய உடுப்பு பெட்டிகளுக்குள் குட்டி போட்டுவிட்டு வீடு முழுக்க குட்டிகளை பாதுகாத்துவைத்து தன்னை ஒரு ரகசிய போராளியைப் போல நினைத்துக்கொண்டு திரியும். முதன்முதலாக எங்கிருந்தோ வீட்டிற்கு வந்து சேர்ந்தது வெள்ளையும் கறுப்பும் கலந்த பெண் பூனையொன்று. அன்றிலிருந்து எங்கள் வீடு பூனைகள் சரணாலயம் ஆனது. அந்தப் பூனையின் மூன்று தலைமுறையினைப் பார்த்திருக்கிறேன். வீட்டைவிட்டு வரும் போது அதன் மூன்றாம் தலைமுறை தன் அடுத்த  தலைமுறை உலகத்திற்கு கொண்டுவர சுமந்துகொண்டிருந்தது. நான் அவற்றைத் துரத்தவிட எத்தணித்ததில்லை. எப்போதும் கவனித்துக்கொண்டிருப்பதைத் தவிர பூனைகள் பற்றி நான் சிந்தித்தது கிடையாது. ஆரம்பத்தில் அவை எல்லோருக்கும் அருவருப்பாக தெரிந்தன.  நசுங்கிக்கொண்டு திரிகின்ற குணத்தை எங்கள் வீட்டில் எல்லோரும் இயல்பாக வெறுத்தார்கள். இதனால் ஆரம்பத்தில் எல்லோரும் சேர்ந்து பிடித்துக்கொண்டுபோய் தொலைதூரத்தில் விட்டு வந்தாலும் அடுத்தநாள் அதே கள்ளக்கண்களை விழித்தபடி வந்துநிற்கும். ஒரு முறை வீட்டிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருக்கின்ற ஓமந்தைக் காட்டில் துரத்திவிட்டு அப்பா வீட்டிற்கு வந்த இராண்டாவது நாளே அவை வீட்டிற்கு வந்து சேர்ந்தன. பூனைகளைக் குட்டிகளாக இருக்கும் போதே பிடித்துக் கடத்திவிட வேண்டும். நீங்கள் நினைப்பதை விட இன்னும் சிறிய குட்டிகளாக. இப்படித்தான் சற்று வளர்ந்த குட்டியினைப் பிடிக்கப்போய் எங்கள் தெருவின் மூலைவீட்டு அக்கா கைகளிரண்டிலும் நகக்கீறல்களோடு அவளது வீடு திரும்பினாள். பூனைகள் கொடூரமான சகவாசிகள். எங்கள் வீட்டிலிருந்த பூனை, எங்கிருந்தோ எல்லாம் பூனைகளை அழைத்து வீட்டில் விட்டுவிடும். குடலைப் பிடுங்குகிற நாற்றம் எடுக்கிற கறுப்பு பூனை ஒன்றை ஒருமுறை கொண்டுவந்தது இரண்டாம் தலைமுறைப் பூனை. தனி மஞ்சள் நிற பூனை ஒன்றை மூன்றாம் தலைமுறைப் பூனை கொணர்ந்தது. வாழ்க்கையில் நான் சந்தித்த மிகக் கொடூரமான உயிரினங்கள் அவையிரண்டும். அவற்றின் உடலிலிருந்து வீசுகின்ற பிண நாற்றம் நரகத்தை ஞாபகப்படுத்தும். அவை வெளி விறாந்தை, அறைகள் என்று கடைசியில் சமயலறைக்குள்ளும் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு அமசடக்கு கள்ளன் மசிவதைப்போல என்னைப் பார்த்ததும் நடந்துகொள்ளும். இப்போது இவையனைத்தையும் விட இன்னொரு பூனையை எதிர்கொள்கிறேன். என்னை மறிக்க நாதியற்ற இந்த பெருநகரத்தின் நெருக்கலான குடியிருப்புகளில் பூனையொன்று இடைமறிக்கிறது.
 
மனிதர்கள் தவிர
மற்ற பிராணிகளுடன்
பழக்கமில்லை எனக்கு
 
எனினும்
உள்ளங்கைச் சூடுபோல
மாறாத வெதுவெதுப்புள்ள
பூனைகளின் சவகாசம்
சமீபகாலமாய் பழக்கமாச்சு
 
மயிலிறகை அடை வைத்த பருவத்தில்
கால் குலுக்கக் கை நீட்டி
விரல் கிழித்த பூனையால்
‘மியாவ்’ என்று நீண்ட நாள் பயந்தேன்
 
இதயத்தின் தசையில் மனிதக் கீறல்கள்
வடுவாக மிஞ்சிய இப்போது
பூனைப்பயம் பொய்த்துப் போச்சு
 
வீடு மாறியபோது புரிந்தது –
நன்றியின் சொரூபம்
நாய்களல்ல
பூனைகள்
 
நாய்கள்
மனிதரைச் சார்ந்தவை
சுதந்திரமற்றவை
 
எப்போதோ
சிரட்டையில் ஊற்றிய பாலின் நினைவை
இன்னும் உறிஞ்சியபடி
காலி வீட்டில் பூனைக்குரல் குடியிருந்தது
 
பூனைகள்
வீடுகளைச் சார்ந்தவை
சுதந்திரமானவை
 
நாய்களின் பார்வையில் அடிமையின் குழைவு
பூனையின் பார்வையில் நட்பின் கர்வம்
 
உலர்ந்த துணியில் தெறித்த
சொட்டு நீர் ஓசையுடன் நடக்கும்
பூனைகளுடன் இப்போது
பகையில்லை எனக்கு
 
உடல் சுத்தம்
சூழ்நிலைப் பராமரிப்பு
ரசனையுள்ள திருட்டு
காதற்கால கதறல்
பொது இடங்களில் நாசுக்கு – என்று
பூனைகளைப் புகழ காரணங்கள் பலப்பல
 
எனினும்
என்னைக் கவரக்
காரணங்கள் இரண்டு
 

இதுவரை சுகுமாரன், இனி நான்

 
இல்லை
ஒன்றே ஒன்று
 
பூனைகள்
என்வீட்டின் ஒவ்வொரு அணுவையும்
எனக்குள் உருவாக்கி
மீட்டுகின்றன
 
 
என்னையறியாமல் அந்தக் கணத்தில், என்னை வழிமறித்து தன் பின்புறத்தை தூக்கி உடலை சிலிர்ப்பிக்கொண்டு நிற்கின்ற இந்தப் பூனையின் முன் கண்களை மூடி மண்டியிடுகிறேன். என்னுடன் முழுதும் கண்ணீர்.
 
எங்கள் வீட்டிலிருக்கின்ற மூன்று தலைமுறைப் பூனைகளும் உரத்துச் சத்தமிடாது. தமக்கு மட்டுமே கேட்கின்ற அலைவரிசையில் பேசிக்கொள்ளும். ஆனால் இடையிடையே வந்து போகின்ற நாற்றமடிக்கும் நசுங்கற் பூனைகளின் அலறல் பயப்படுத்துபவையாக இருந்தன. நள்ளிரவில் தாயைப் பிரிந்த குழந்தையொன்றைப்போல அழும். எப்போதும் கேட்காத பூனைகளின் சத்தம் காதின் மென்சவ்வுகளில் உறைந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
 
நானும்
கண்மூடுகிறேன் ‘மியாவ்’
 
 
 
 
 
 
 
 
 
 

கிழிந்த இறகொன்றின் காதல் நினைவுகள்

கருநீலப்பூச்சி

 
வெளிச்சுவரின் கட்டிலிருந்துகொண்டு தூண் பக்கமாக முதுகைச் சரிக்கிறேன். அகன்ற முதுகிற்குள் ஒடுங்கிய தூண் பொருந்திக்கொள்கிறது. கருநீலநிற பூச்சி ஒன்று தன் மெல்லிய ஒளி ஊடுபுகக் கூடிய இறக்கையினை காற்றின் மீது எத்தி, அதன் கூர்மையான நீண்ட உடலை எம்பி நீச்சல்காரனைப் போல என்னை நோக்கி வருகின்றது. தட்வெப்பகால பூச்சி அது. மழைக்கால ஓய்வில் வெளிக்கிளம்பி வருபவை. ஒளிக்கும் வெப்பத்திற்கும் ஒத்திசைவாக்கப்பட்டவை. மழைக்காலத்தில் தன் உடலை இறக்கைகளுக்குள் சுருக்கி, ஒரு சாக்கடைப்புழுவைப் போல சுருண்டு இறப்பொன்றினை எதிர்பார்த்துக்கிடக்கும். மழைக்காலத்தின் பின்னர் வெயில் வரும் என்பதை அவை ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை. நீண்ட மழைக்காலத்தினை தம் இறப்பிற்குரிய ஆரம்ப அறிகுறியாக கருதிக்கொள்பவை. ஈரலிப்பான ஏதோ ஒன்று அவற்றின் மீது பூசப்படும் போது – அது ஒரு மழைத்துளியாக அல்லது வெள்ளத் தெறிப்பாக அல்லது எச்சிலாக அல்லது மூக்குச் சளியாக அல்லது சிறுநீராக – இறப்பின் அழைப்பாக கருத்திக்கொள்கின்றன. தம் உடல் புனித பயணம் ஒன்றிக்காக தயார் செய்யப்படுகின்றது என்று நினைக்கின்றன. அவை அனைத்திற்கும் புனித பயணம் ஒன்றைப்பற்றிய பொதுமையான கனவொன்றிருந்தது. இறந்து போன கருநீலநிற பூச்சிகளில் எதுவும் மீண்டும் தம்மிடத்தே வராததால் புனித பயணத்தைப் பற்றிய பொதுமையான கனவொன்றையே தமக்குள் சித்தரித்துக்கொண்டன. காகிதப் பூக்களை விட மென்மையான அவற்றின் உடல் காற்றில் நறுமணங்களால் கொண்டு செல்லப்படுகின்றது. மழைக்கால ஊர்வலத்தில் ஏனைய சக கருநீல பூச்சிகளால் பங்குபெற்றமுடியாததால் அவை எழுந்து தம் இறக்கைகளை விரித்து பறப்பதில்லை. ஏன் கண்களைக்கூட விரிப்பதில்லை. நறுமணத்தினை நுகர்க்கூடிய பொழுதுகளில் இறப்பொன்று நடந்துவிட்டதை உணர்ந்துகொள்ளும். யாருடைய இறப்பென்றதை அறியமுடியாது, அது தன்னுடைய இறப்பாக இருந்தாலும் கூட. தொடர்ந்து வருகின்ற  வெயில் காலமொன்றின் சூட்டினை உணரும் போதுதான் உயிரோடிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும். அவை இறப்பொன்றிக்கு செய்யும் அஞ்சலி மௌனமாக இருப்பது. காற்றிலே மிதந்து செல்லும் இறந்துபோன கருநீல உடலிற்கு இறக்கைகளை விரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமே ஏற்படுவதில்லை. நறுமணம் கொண்டு சென்ற கருநீலப் பூச்சிக்கு என்னானது என்று மற்றவை பேசிக்கொள்வதில்லை. புனித பயணத்தில் இணைந்துள்ளது அவ்வளவு தான். செதில்களாலான கூரிய மண்ணிற உடல் சூட்டை உணர்கின்றன தருணத்தில் வெயில் கால வருகையினை உணர்ந்துகொள்கின்றன. இறப்பிலிருந்து தப்பித்து வந்ததாக அல்லது இறந்து மீண்டும் பிறந்து வந்ததாக நினைத்துக்கொள்கின்றன. தம்முடைய இறக்கைகள் பிஞ்சுப் பசையினால் ஒட்டியிருக்க அவற்றினை கிழிந்திடாமல் விரிப்பதை பெருஞ்சிரமமாக செய்கின்றன. இறக்கைகள் இல்லாத அவை, தம்மைத் தாமே உமிழ்ந்து இறந்து போவதை பெரிதாக கருதுகின்றன. கருநீல நிறப்பூச்சி என்னை நோக்கி வருவதை சாதாரண நிகழ்ச்சியாக உணரவில்லை. சத்தம் இல்லாமல் துடிக்கின்ற இறகுகள் எனக்குள் பேரிரைச்சலை உண்டாக்குகின்றன.
 
வெட்ட வெளிச்சமான வானத்தில் இருள் கண்டிப்போனது. காற்று தன் உடலில் ஈரலிப்பை பொருத்தி காவிக்கொள்ளத் தொடங்கியது. சௌகரியமாக சாய்ந்திருந்த தூணிலிருந்து முதுகை விடுத்து, கருநீல பூச்சியினை நோக்கி வாயினை ஆவென்று திறக்கிறேன். அது என் வறண்ட நாக்கினை உற்றுநோக்கியதாக உணர்கிறேன். இல்லையென்றால் இப்போது எனது வாய்க்குள் புகுந்திருக்காது. உடலின் உஷ்ணக் காற்றினை வாய்க்குள் நிரப்பி பூச்சிக்கு வெம்மையளிக்கிறேன். பிரபஞ்சத்தில் உணர்வற்றுக்கிடக்கும் முகமூடி ஒன்றோடு இனி பயணிக்கப்போவதை எண்ணி வருந்தியிருக்கக்கூடும். அதைபற்றி எனக்கு கவலையில்லை. காற்றில் கனத்திருக்கின்ற ஈரலிப்பு கருநீல பூச்சியினை ஒன்றும் செய்துவிடக்கூடாது. இறப்பினைத் தாண்டி என்னிடம் ஏதோ சொல்லவோ கேட்கவோ வந்திருக்கும் இது, என் விருந்தாளி. நண்பன். வாயைத் திறந்தவுடன் குடிகொண்டுவிட்டதே. என் நண்பர்களிடம் இருந்து ஒவ்வொரு கதையினை வாங்கிக்கொள்வேன். கொடுக்க கதைகள் எதுவும் இருப்பதில்லை. நிழலை மீறி மேகத்தின் இருட்டு வெளியை  நிரப்பியது. வெங்காற்று நிரம்பிய வாயினை பொத்திக்கொண்டு அறைக்குள் விரைந்தேன். கண் கிடங்குகள் காதுச்சவ்வுகள் அடைக்கத் தொடங்கின. மூக்குத்துவாரங்களால் மூச்செடுக்க முடியும் என்ற உண்மையை அவ்விருள் கடத்திக்கொண்டு போய்விட்டது. வாய்க்குள் எச்சில் சுரக்கமுன்னர் பூச்சினை விடுத்தாகவேண்டும். இல்லையென்றால் இருட்டிடமிருந்து பூதம் கைப்பற்றியதாக ஆகிவிடும் அதன் நிலை. மேசையின் மேல் அருகாண்மையில் உதட்டினை திறந்தேன். புதைக்க மறந்த நாய்ப்பீயின் நாற்றத்தோடு பிண்டம் விழுந்தது. அருவருத்த நாக்கினை நீட்டி இரண்டுவிரல் நிகங்களாலும் வழித்துக் காறித்துப்பினேன். வாயினை நன்றாக கொப்பளித்து விட்டு மேசையின் அருகில் கதிரையில் இருந்து கருநீலப் பூச்சினை அவதானித்தேன். என்னை கருணை உணர்வோடு பார்ப்பதாக தோன்றியது. என்னிடம் சொல்லல வார்த்தைகள் இருப்பதாக. கண்ணின் மணியினை உயர்த்தி என்னைப்பார்த்து ஏழைச்சிறுவன் பிச்சைத் தட்டினை நீட்டி வயிற்றைத் தடவுவது போல தன்னை வெளிக்காட்டியது. அது இயலாமையின் அடையாளம். ஒற்றை மழைத்துளியில் கரைந்து போய்விடக்கூடிய ஒன்று இன்னமும் தன்னை வருத்தி வாழ எத்தனிக்கிறது என்றால் – என்னிடம் வந்து சரணடைந்திருக்கிறது என்றால் – நான் கேட்கவேண்டிய கதையொன்று அதனிடம் இருக்கிறது.
 

சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி

 
மென்பச்சையும் நீலமும் கலந்த மார்பிள் தரையில் ஒட்டிக்கிடந்த என் கறுத்த உடலை எழுப்பி, விறைத்தபடி கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்ற மழையினை கண்ணாடி யன்னலினூடாக பார்க்கிறேன். தன் எச்சத்தை கண்ணாடியின் மேல் பீய்ச்சி அடிப்பது என்னை ஏளனம் செய்வதைப்போலவே இருக்கிறது. காற்று புகமுடியாத அடைத்த அறையொன்றிலிருந்து மழையினை உணர்தல் என்பது கொடுங்காரியம். கண்ணாடிக்கு எதிரே பச்சைய வாசத்தை தீவிரமாக பரப்பிக்கொண்டிருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடி, எல்லாவற்றையும் மறந்துபோய் மழையில் நடனமாடுகிறது. அது அவளின் உடலசைவுகளை எனக்குள் திரட்டுகின்றன. அவளை வெள்ளை நிற சுடிதாரில் பார்த்தது இல்லை. ஆனால் மழையோடும் குளிர்ந்த காற்றோடும் நிலத்தினை ஊடறுத்துப்பாய்கின்ற நீர்த்திவலைகளோடும் பார்த்திருக்கிறேன். சகதி பூசிய தரையினை கடந்து போக நீளமாக எறிந்து விடப்பட்ட ஓரளவான கற்களை சிரிப்போடு தாவிக் கடக்கின்ற அவளின் நளினத்தை அச்செடி ஞாபகப்படுத்துகின்றது. அகன்ற கண்ணாடியின் உடலெங்கும் மின்னல் வெளிச்சம் பரவுவதை இமைப்பொழுதில் கண்களில் தெறித்து மறைக்கின்றன. துளிகள் பெருகி கண்ணாடியில் அழுகின்ற காட்சி என்னைத் துருத்துகின்றது. தூரத்திருந்து தனக்குள்  வெடித்து அழுவதால்  தானாக கண்ணீர் வடித்தன அவளின் கண்கள். அந்தரத்தில் தொங்குகின்ற பூச்சாடிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. மீதம் வழிந்த மழை ஓடிச்சென்று  கடைசில் கடலில் உவர்ப்பாகிப்போகின்றது. நிரம்பியிருந்த இருட்டின் மீது சிறிது பனி பரவத்தொடங்கியது. கண்ணாடியின் உள்புறம் அப்பழுக்களற்ற பனியினால் பூசப்படுகிறது. மில்லிமீட்டர் தடிப்புடைய கண்ணாடியின் இரண்டுபக்கமும் ஒட்டிநின்று காதல் செய்துகொண்டிருக்கிறது மழைத்துளிகளும் பனிப்படலமும். உள்ளிருக்கின்ற பனியினை அடைந்துவிடமுடியாத ஏக்கத்தில் அழுகின்றன மழைத்துளிகள். சிறிய வெள்ளைப் பூக்கள் பூக்கின்ற செடியின் நடனம் என் தீர்க்கமுடியாத கனவொன்றினை ஏளனம் செய்வதைப்போல உணர்கிறேன்.
 
கொடிய கனவுகளில் மனிதர்களின் முகங்களும் அவர்களின் வார்த்தைகளும் மட்டுமே தெரிகின்றன. அவற்றைத்தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சிகள் எனக்கு விரும்பியவாறே நடந்தேறுகிறது. அதனாலேயே கொடிய கனவென்கிறேன். எதை ஆசைப்படுகிறேனோ எவ்வாறு ஆசைப்படுகிறேனோ அது அவ்வாறே நடந்து முடிந்து தீர்ந்துபோவதையிட்டு கவலையடைகிறேன். கனவினை மீட்டிப்பார்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் முடிந்து விட்டதே என்ற கவலை மேலெழுந்து கொடுங்கனவாக மாறிவிடுகின்றது.
 

கணவாய்கள் நிறைந்த செவ்வகப்பெட்டிகள்

 
இயக்கமற்ற உடலொன்றாய்க் கிடக்கிறேன். ஒரு கணவாயைப் போல அருவருக்கத்தக்க கரிய உடலை நிலத்தோடு கிடத்தி மழை ஓய்ந்த பின்னிரவொன்றில் செய்வதறியாது ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக்கொள்கிறேன். மழையின் பின்னரான இவ்விரவு குளிர்மையானதாக இல்லை. இந்த செவ்வகப் பெட்டிக்குலிருக்கும் எந்த உயிரினத்திற்கும் இவ்விரவு மழையின் பின்னரான இரவொன்றாக இல்லை. மெல்லிய படையாக பிசுபிசுப்பான திரவமொன்று உடலைச் சுற்றி  சுரக்கிறது. மழையில் அச்சமூட்டுவதாக தெரிந்த வாகன விளக்குகள், இப்போது வெறும் ஒளிப்பொட்டாக தெரிகின்றன. மழைக்குப் பின்னர் எந்தப் பெரிய இரைச்சலான மாநகரமும் அணிந்துகொள்கின்ற பேரமைதி எனக்கு ஆச்சரியமூட்டுகிறது. மழைக்கு முன்னரும் மழையின் போதும் ஆரவாரமாகவும் சுறுசுறுப்போடும் இயங்கிய மனிதர்கள் மழைக்கு பின்னர் சோபையிழந்து போகிறார்கள். அவர்களின் படபடப்பு ஓய்ந்துபோகிறது. அத்தனை படபடப்பும் எனக்குள் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறது. உடலுக்குள் ஆயிரம் பூரான்கள் ஊர்வதைப்போல பிறாண்டிக்கொண்டிருக்கிறது. செவ்வக அறையை விட்டு இந்த கரிய உடலை விட்டு விலகிப்போக ஏதோ ஒன்று துடித்துக்கொண்டிருக்கிறது. இணைப்பறுந்து தூக்கி எறியப்பட்ட பழைய தொலைபேசி ஒன்றினைப்போல உலகத்தோடு தொடர்பற்றுப்போயிருக்கும் ஏதோ ஒன்று வெளியேறும் கடைசி கணத்தில் செவ்வக பெட்டியைவிட்டு வெளியே வந்துவிடவே எத்தனிக்கிறேன்.
 
சாலையில் மழைக்கான தடயம் எதுவும் இருக்கவில்லை. மிகச்சில மனிதர்கள் அவசரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிந்துபோன நாளொன்றின் நினைவுகளை மீட்டிக்கொண்டு வெறுப்பவற்றை தூக்கி எறிந்தும் நேசிப்பதை தனக்குள் சேமித்துக்கொண்டும் செல்கிறார்கள். என்னைத்தவிர எல்லாமுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கடைகளுக்கு முன்னிருக்கின்ற படிகளிலும் பேரூந்து தரிப்பிடங்களிலும் எங்கெல்லாம் ஒதுங்குகின்றளவு இடமிருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சைக்காரர்கள் கிழிந்த துணிகளால் தம்மை இழுத்துப்  போர்த்திக்கொண்டு அமைதியாக தூங்குகிறார்கள். நீரில் தோய்ந்து நனைந்துப்போன கிழிந்த இறகொன்று காற்றில் மிதந்து முடிவின்றி அலைகின்றது.