கோமாளி கிங்ஸ் – அவதானங்களும் புரிதல்களும்

(01)
 
நேற்றிரவு கொட்டஹெனா சினிவேர்ல்ட் இல் – இரவு ஒன்பதரைக் காட்சியாகக்  கோமாளி கிங்சைப் பார்த்தேன். ஒன்பது மணிக்கே திரையரங்கிற்குள் நுழைந்துவிட்டேன். ஓரளவேனும் கூட்டமாக இருந்தால் தான் ஒன்பதரைக்குக் காட்சி, இல்லாவிட்டால் சற்று நேரமெடுக்கும் என்று பின்னேரமே காட்சிகள் குறித்து விசாரிக்கப் போனபோது அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். நான் நுழையும் போது ஐந்து பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். நான் ஆறாவது. வவுனியாவில் வசந்தி திரையரங்கில் நயன்தாராவின் மாயா திரைப்படத்தை மூன்று பேரோடு மட்டுமே இருந்து பார்த்தேன். படம் முடிந்த போது திரையரங்கில் நான்  தனித்து இருந்தேன். மற்றவர்கள் இடையிலேயே நழுவி விட்டிருந்தார்கள். அந்த வகையில் ஆறு பேர் என்பது ஓரளவு உவகையளித்தது. வழமை போல ஐந்நூறு ரூபா டிக்கெட்டினை எடுத்துக்கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்த போது மணி ஒன்பதே காலாகிவிட்டது. ஓரளவு முன் வரிசையில் சாவகாசமாக இருந்து ஆட்களின் வருகையை அவதானித்துக்கொண்டிருந்தேன். நேரத்தோடு ஆட்களின் வருகை அதிகரித்து அரங்கத்தின் அரைவாசியை நிறைக்க கோமாளி கிங்ஸ் திரையிடப்பட்டது. இதற்கிடையில் எனக்குப் பின்னாலிருந்த இளைஞர்கள் சிலர் அவர்களின் இன்னொரு நண்பனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ” அவன் இந்தியப் படங்களே பாக்கமாட்டான், இதுல இதுக்கு வரவா போறான் ” என்று அவர்களில் ஒருத்தன் சொன்னான். எம்மவர்கள் இடையே  திரைப்படம் என்றாலே இந்தியத் திரைப்படங்கள் தான் என்ற கருத்து இல்லாமற் போய்விட்டது. இன்று “படம் பார்த்துவிட்டீர்களா?” என்றால், “எது கோமாளி கிங்ஸா?” என்று பதிலளிப்பதைக் கேட்கின்ற போது  வெகுசன அடையாளம் ஒன்று இலங்கைத்  சினிமாக்கு ஏற்பட்டுவிட்டது என்பது  மகிழ்ச்சியாக இருந்தது.
 
கிட்டத்தட்ட நானும் அவர்கள் குறிப்பிட்ட நண்பனும் ஒரே குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறோம். படங்களே பார்ப்பதில்லை என்பதல்ல. கோமாளி கிங்ஸ் வெளியாகிய இரவு, நண்பரொருவர் முகப்புத்தகத்தினூடு தொடர்பு கொண்டு படத்தைப் பற்றி விசாரித்தார். ” இப்போதெல்லாம் கார்ட்டூன் மட்டும் தான் பார்ப்பேன் ” என்று பதிலளித்தேன். அவர் சிரிப்பு எமோஜி ஒன்றை அனுப்பினார். ஆனால் உண்மையும் அதுதான். இப்போது கார்ட்டூன்கள் மற்றும் ஆவணப்படங்களையே அதிகமாகப் பார்க்கிறேன். பரவலாக பேசப்படுகின்ற தொடர்களையோ அல்லது உலக சினிமாக்களையோ(!) பார்ப்பது மிக அரிதாகிவிட்டது. கடைசியாகப் பார்த்தபடம் என்றால் The Death of Stalin. இதுவும் கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு சார்ந்த நகைச்சுவையான திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் Coco என்ற கார்ட்டூன் படம் பார்த்தேன். இப்படியெல்லாம் இருக்க , கோமாளி கிங்ஸை பார்த்தாக வேண்டும் என்று உறுதியோடிருந்தேன். காரணம் இலங்கையிலேயே  முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட தமிழ் வணிகத் திரைப்படம். இலங்கைத் தமிழ் சினிமாவின் இன்னொரு அத்தியாயத்தைத் தொடக்கிவைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பினை உருவாக்குவதன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. நம்மவர்களின் படைப்பு என்று மனதளவில் திரைப்படத்தைப் பற்றிய நெருக்கமான சிந்தனைகள் உருவாக்கி உலாவவிடப்பட்டது.  மீண்டும் பின்னாலிருந்த இளைஞர் ஒருவர், மற்றப்பக்க வரிசையில் இருந்தவரிடம் ” எப்படா உண்ட படம் வருது ” என்றார். அதற்கு சீக்கிரம் கொண்டுவந்துவிடுவோம் என்று பதிலளித்தார் மற்றவர். கோமாளி கிங்ஸின் வருகை சினிமா என்ற கனவோடு காத்திருக்கின்ற பல இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான திருப்பம். படைப்புகளை உருவாக்கிவிடுவதை எளிமையாக முடித்துவிடலாம் என்று நம்பக்கூடிய பலருக்கு, அதை வெளிப்படுத்துவதும் சந்தைப்படுத்துவதும் கடினமான ஒன்றாகவே இதுவரை இருந்தது. ஆனால் கோமாளி கிங்ஸ் இவற்றை உடைத்து சந்தைப்படுத்தல் வெளியை உருவாகியிருக்கிறது. இதற்காக படக்குழு அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  முழுநீளத் தமிழ் திரைப்படம் ஒன்றை   மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது எளிதான விடயம் அல்ல. இனிவருகின்ற திரைப்படங்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகளவில் இருக்காது.
 
(02)
 
போரின் பின்னரான தமிழ்த் திரைப்படம் ஒன்றாகவே கோமாளி கிங்ஸை அணுகவேண்டிய தேவை எமக்குள்ளது. தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் போரின் குரல்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. போர் முடிந்துவிட்டது, இது மறுமலர்ச்சிக்காலம் என்றெல்லாம் இலகுவாகப் பேசிவிடமுடியாது. இன்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்கள், காணி மீட்ப்புப் போராட்டங்கள, அத்துமீறிய குடியிருப்புக்கள் என்று தமிழ்ப் பிரதேசங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை போரின் தொடர்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்திருந்தாலும் இன்னமும் நாங்கள் வேறொருவகையில் எமக்கான உரிமைகளுக்காக போராடிக்கொண்டிடருகிறோம். எம் பண்பாட்டுக் கூறுகள் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. எம் இனத்தின் மீது மௌனமாக பெரும் அரசியல் போரே நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து வருகின்ற ஒரு சினிமா என்ற அடிப்படையில் தான் கோமாளி கிங்ஸ் முதலாவதாக அடையாளப்படுத்தப்படும்.
 
கோமாளி கிங்ஸ் வெளிப்படுத்திய சமூகம் சார்ந்த பிரச்சனைகளாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பிரச்சனைகள் என்றே எதையும் குறிப்பிட முடியாது. ஒரு நகைசுவை திரைப்படமாக இருந்தாலும் உள்ளோட்டமாக நெருக்கடி ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த நெருக்கடி தான் சுயம். நகைச்சுவைத் திரைப்படம் கடத்த வேண்டியது நகைச்சுவைகளை அல்ல, அதற்குள் ஊடுருவியிருக்கின்ற சமூகம் பற்றிய கருத்தினை¹.  இக்கருத்து கனமான செய்தி ஒன்றினை பார்வையாளருக்குக் கொடுக்கவேண்டும். சினிமா என்பதை எம்மிடையே ஒரு  பொழுதுபோக்கு அம்சமாக கருதுகின்ற சூழ்நிலையை நாம் இன்னும் அடைந்துவிடவில்லை. இன்னும் நிறைவேற்றப்படாதா எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. இன்னும் எங்கள் வரலாற்றையும் போராட்டத்தையும் சரியாக பதிவு செய்யவில்லை. இயங்கு நிலை சமூகம் ஒன்றின் அடிப்படை நோக்கமே வாழ்வியலை ஆவணப்படுத்துவது தான். போருக்குப் பிந்திய சமூகம் ஒன்றிற்கு இதைப் பற்றிய பார்வை இன்னும் இன்னும் விஸ்தாரமாக இருக்கவேண்டும். இன அழிப்பின் பின்னரான எதிர்ப்பு ஒன்றினையும் அவற்றைப் பற்றிய சரியான புரிதல்களையும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கியமும் சினிமாவும் ஊடகங்களும் அவற்றிக்கு பெரும் பங்களிப்பை வழங்கவேண்டும். கோமாளி கிங்ஸ் இவை எதையும் செய்ய மறந்துவிட்டது.
 
மாறாக, கோமாளி கிங்ஸ் உருவாக்கிய பிம்பங்கள் கடும் விமர்சனத்திற்குரியவை. இந்திய முழு வணிகத் திரைப்படங்களில் கூட ஏதோ ஒரு பிரச்சனையினை மையக் கருவாகக் கொண்டு நகர்த்தப்பட்டிருக்கும். ஆனால் கோமாளி கிங்ஸ், வெளிநாட்டிலிருந்து தன் தாய் நாட்டிற்கு வருபவன் – இயந்திர வாழ்க்கையை வெறுத்து நாட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் – தாய் நாட்டிலேயே இருப்பதற்கு செய்கின்ற முயற்சிகள் தான் கதைக் கரு. வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்ததைக் கூட சாதாரணமாக வெளியேறியதாகவே வெளிக்காட்டுகின்றனர். அதற்காக எங்கும் போரைப் பிரதிபலிக்கவேண்டும், எப்போதும் போரையே பற்றிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று கூறவில்லை. இங்கு இனஅழிப்பு ஒன்று நடந்ததாக சிறு குறிப்புக்கூட திரைப்படத்தில் இல்லை. முழுக்க முழுக்க அழகிய இலங்கையை ஒளிப்பதிவு செய்கின்றார்கள். வடக்கு என்றால் நல்லுரையும் மன்னர் கருவாடையும் அடையாளப்படுத்துகின்றார்கள். இதன் மூலம் போரொன்றை முழுதாக மறந்துவிட்ட சமுதாயமாக எங்களை வெளிப்படுத்தியிருப்பதன் பின்னரான அரசியல் கேள்விகேட்கப்படவேண்டிய ஒன்று. உலகத்திற்கு எம்மைப் பற்றிய பிழையான விம்பம் கடத்தப்பட்டுவிட்டது.
 
(03)
திரைப்படத்தில் இரண்டு பகுதிகளாக கதை மாந்தர்களைப் பகுத்துள்ளார்கள். ஒன்று யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றவர்கள் மற்றையது கொழும்பில் பேசப்படுகின்ற கலப்புத் தமிழைப் பேசுகிறவர்கள். திரைப்படத்தின் படி யாழ்பாணத் தமிழைப் பேசுகின்றவர்களை நல்லவர்கள் போலவும், மற்றையவர்களை கெட்டவர்கள் அல்லது சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் போலவும்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சாதாரணமாக இதைக் கடந்துவிட முடியாது. இந்திய சினிமாவில் முஸ்லிம்களை எப்படி தீவிரவாதிகளாகவே மாற்றி வைத்திருக்கிறதோ இந்திய சினிமா அதே நிலையை இவர்களுக்கும் உருவாக்கிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களின் நடை, உடை, பாவனைகள், பேச்சு என்று  அனைத்தும் அநாகரீகமானதாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டும். முக்கியமாக அவர்களின் குழுவில் இருக்கின்ற பெண்ணின் பிரதிபலிப்புகள். கட்டையான உடைகளும் மற்றைய ஆண்கள் மீது இலகுவில் மையல் கொள்வது போல சித்தரிப்பதும், அந்தச் சமூகத்தின் எல்லாப் பெண்கள் பற்றிய விம்பமாகவே எடுத்துக்கொள்ளப்படப்போகிறது. ஆனால் அங்கு வந்திருக்கின்ற வெளிநாட்டுக் குடும்பம் பற்றியோ அல்லது கொழும்பிலேயே தங்கிருக்கின்ற யாழ்பாணக் குடும்பம் பற்றியோ எந்தக் குறையும் கூறிவிடாதபடி காட்டப்பட்டுள்ளது.  வயதான ஒருத்தர் தன் மனைவிக்கு பயந்து பயந்து மது அருந்துவதும் அதே மதுவினை மற்றைய  குழுவினர் பெண்களின் முன்னால் எந்தச் சலனமும் இன்றி குடிப்பதும் நகைப்புக்குரிய காட்சிகள் அல்ல.  வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்திலுகின்ற யுவதி ஒருத்தர் சிகரெட்டோ மதுவோ குடிப்பது கிடையாது என்றும் தான் மிகவும் சுத்தமானவள் என்றும் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்ற காட்சிகள் மேலும் மேலும் பிரிவினைக்கான அத்திவாரத்தை ஏற்படுத்திக்கொண்ட நகர்கின்றது. இதனை இயக்குனர் தெரிந்து செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்று தெரியவில்லை.
 
இங்கு யாரையும் ஏற்றியோ தாழ்த்தியே பேசவில்லை, கோமாளி கிங்ஸின் வெளிப்பாடுகள் இவை.
 
இலங்கை தமிழ் சினிமா, ஈழத்து சினிமா என்ற இரண்டு சொற்பிரயோகங்கள் பற்றிய கேள்வி என்னுள் எழுகின்றது. இன்று இவற்றைப்பற்றிய தெளிவான புரிதல்களை எமக்குள் உருவாக்காது கடந்துபோய்விட்டால், இலங்கையில் சினிமா தனிச் சக்தியாக இயங்குகின்ற காலத்தில் எமக்கான அனைத்து அடையாளங்களையும் இழந்து விடுவோம்.
 
(04)
 
சினிமா பற்றிய கனவுகளோடு இருப்பவர்களும் திரைப்படக்குழு  மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் திரைப்படத்தைக் கொண்டாட காரணங்கள் நிறைய இருக்கின்றன. சினிமா பற்றிய கனவுகளோடு இருக்கின்ற இளைஞர்கள் கோமாளி கிங்ஸை கொண்டாடக் காரணம், அவர்களின் படைப்புகளும் இன்னொரு நாள் வெளிவரப்போகிறது என்பதாகவே இருக்கிறது. எனக்கு சினிமா ஒன்றினை தொழில்நுட்ப ரீதியில் விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. முன்னரே கூறியது போல நான் கார்ட்டூன்களை ரசிப்பவன். ஆனால் ஒரு கலைவடிவம் ஒன்றின் சமூகப் பார்வை பற்றியும் அதன் பிரதிபலிப்புகள் பற்றியும் எனது பார்வைகளை முன்வைக்க முடியும். கோமாளி கிங்ஸ் ஒரு முன்னுதாரண சினிமா அல்ல. தவறான வழி ஒன்றிற்கு அத்திவாரம் தீட்டிவிட்டுப் போயிருக்கிறது. என் கவலைகள் அனைத்தும் இனி வரப்போகின்ற முழு நீளத் தமிழ் திரைப்படங்கள் பற்றியது தான்.
 
பின்குறிப்பு

  1. ஒரு கலைப் படைப்பாக இந்தத்  திரைப்படத்தை அணுகவேண்டிய கட்டாயத்தை இங்கு நான் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. முழுமையாக வெளிப்பாடுகள் பற்றிய அவதானங்கள் அடிப்படையிலேயே அணுகுகின்றேன்.

 
 
 
 
 

நகரத்தின் குறிப்புகள் – 05

மொறட்டுவையில் கட்டுபெத்தை சந்தி மிகவும் முக்கியமானதொன்று. கொழும்பிலிருந்து காலிக்கான அகன்ற வீதியிலிருந்து கொட்டவைக்குச்  செல்ல பிரிகின்ற இடம் தான் கட்டுபெத்தை சந்தி. ஏழு சமாந்தர வீதிகள். நிறைய நிற விளக்குகள். எப்போதும் சன நடமாட்டம் மிகுதியாகவே இருக்கும். தோள்களில் பைகளைப் போட்டுக்கொண்டு கைகளில் தொலைபேசியுடன் நடக்கின்ற கம்பஸ் மாணவர்களால் எப்போதுமே கட்டுபெத்தை சந்தி ஆரவாரமாகத் தெரியும். கட்டுபெத்தை சந்தியிலிருந்து கம்பஸிற்கு ஒரு கிலோமீட்டர் தூரமிருக்கும்.    முச்சக்கர வண்டியிற் போக எழுபது ரூபா. பேரூந்திற்குப் பத்து ரூபா. முன்பொருமுறை நகரத்தின் குறிப்புகளில் இந்த பேரூந்தைப் பற்றி எழுதியிருந்தேன். பெரும்பாலும் எல்லோரும் இந்தப் பேருந்து வழிப் பயணத்தையே விரும்புகின்றோம். ஏனென்றால் இதில் சேமிக்கின்ற அறுபது ரூபாய்க்கு இரண்டு கோழி இறைச்சி சாப்பாடு அல்லது ஒரு நூடுல்ஸ் அல்லது பன்னிரண்டு தேநீர் அல்லது இரண்டு பணிஸ் என்று ஏதாவது ஒன்றைச் சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட்டுவிடலாம். அல்லது இரவுத் தேவைக்கு ஒரு இணைய மீள்நிரப்பு அட்டை. என்னைப் பொறுத்தவரைக்கும் இன்னும் பத்து ரூபா சேர்த்து சிற்றுண்டிச்சாலையில் ஒரு போத்தல் கொத்மலே பால். எப்போதாவது யோர்கட். கட்டுபெத்தை சந்தியில் வந்திறங்கி, ஒரு சமிஞ்ஞையை கடந்து கடை வரிசையின் முன்னால் பேரூந்திற்குக்  காத்திருக்கவேண்டும். அதனருகிலேயே சிறிய சந்து ஒழுங்கைக்குள் முச்சக்கர வண்டிக்காரர்களும்  வரிசையில் நிற்பார்கள். கம்பஸ்சிற்குப் போக இரண்டு வகையான பெயர்பலகையுடன் பேரூந்துகள் வரும். ஒன்று 255 மற்றையது 255/1. கல்கிசையிலிருந்து தொடங்கி கொட்டவைக்கு 255உம், கட்டுபெத்தையிலிருந்து மொல்பேற்கு 255/1உம் சேவையிலிருக்கும்.  இரண்டுமே கம்பஸைத் தாண்டித்தான் செல்லும்.
 
255 சாதாரண பேரூந்து. கட்டுபெத்தை சந்தியில் நின்று காத்திருக்கின்ற ஆட்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்றுவிடும். கல்கிசையிலிருந்து ரத்மலான, கட்டுபெத்தை, பிலியந்தல ஊடாக கொட்டவையை அடையும் என்பதால் கட்டுபெத்தை சந்தியில் அதிக நேர மினக்கெடல் தேவையற்றது. ஆனால் 255/1 அளவில் சிறிய மினி ரகப் பேரூந்து. பழைய அலுமினியத் தகடுகளைக் பொருத்தி விளையாட்டு வாகனம் செய்தாற்போல ஆங்காங்கே வழிந்து தொங்கும். இரண்டு வேலை செய்யாத உருண்டை விளக்குகள், ஒரு சிறிய மாத நாட்காட்டி, பூக்கள் வைக்க சிறிய தட்டு கூடவே சில்லறைகள் இருக்கின்ற ஒரு தட்டு என்று சிறிய சிறிய பொருட்களால் பேரூந்து அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  ஆரம்பத்தில் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்கக் கூடும். இப்போது வெயில் சுட்டு மண்ணிறமாகிவிட்டது. அதில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று ஓட்டுனர்களை மட்டுமே  சந்தித்திருக்கிறேன். அவர்களும் பேரூந்தைப் போலவே வறட்சியாகத் தெரிவார்கள். மங்கிய பழுப்பு நிற மேற்சட்டையையும் அதற்குச் சற்றும் குறைவில்லாத நீளக் காற்சட்டையையும் அணிந்திருப்பார்கள். அவர்கள் கண்களில் அலைச்சலோ அல்லது கடுகடுபோத் தெரியாது. கட்டுபெத்தை சந்தியிலிருந்து மொல்பேக்கு வெறும் ஒன்றரை கிலோமீட்டர் தூர பயணத்திற்காக சேவையிலிருக்கிறது இந்தப் பேரூந்து. அனேகமான நேரங்களில் சந்தியில் தொடங்கி கம்பஸோடு பயணத்தை முடித்துவிடும். மொல்பேக்கு போக ஆட்கள் இருக்காது.  255 ஐ விடச் சற்று தாமதமானது. காலையில் கம்பஸிற்கு போகின்றவர்களாலும் பின்னேரங்களில் கம்பஸிலிருந்து திரும்புபவர்களாலும் மட்டுமே ஓரளவு நிறைந்த ஆட்களுடன் 255/1 சேவையில் ஈடுபடும். மற்றைய நேரங்களில் நான்கோ ஐந்தோ பேரோடு தான் பயணம். ஒரு சமயம் தனித்தே பயணித்திருக்கிறேன். அந்தச் சமயமும் நடத்துனர் சிரித்துக்கொண்டே காசை வாங்கினார். சில நேரங்களில் பேரூந்து நிரம்பி வழியும் கூட்டத்துடன் செல்லும். நடத்துனர் கூட்டத்தை உள்ளே தள்ளி, ஏறுகின்ற படிகளில் இருக்கின்ற அலுமினிய கைப்பிடிகளில் தனது  கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தலையை வெளியே நீட்டுவார். பேரூந்து வாரிபோட்ட காற்றில் அவரின் செம்பட்டை முடி அலை அலையாக மிதக்கும். அந்தக் காற்றிலே , நிரம்பிய கூட்டத்தை  எண்ணி மகிழ்ந்தவாறு புன்னகையினை உதிர்ப்பார். நிரந்தரமில்லாத அந்தப் புன்னகை கட்டுபெத்தை நாற்றத்தில் அமிழ்ந்து போய் விடும். 
நான் 255/1 இற்குள் யன்னல் கரையோரம் களைத்துப்போயிருந்தேன். வியர்வை பெனியனை நனைத்து மெல்லிய நீல அரைக் கை மேற்சட்டையினை ஈரமாக்கிக்கொண்டிருந்தது. கம்பஸிற்கு முன்னிருந்த தரிப்பில் பேரூந்து நின்றுகொண்டிருந்தது. அதிஷ்ட லாப சீட்டுக்களை பரப்பியபடி தகரக் கூட்டுக்குள் வாய்நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டு பெண்ணொருவர் பேரூந்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவரிற்கு அருகில் தோடம்பழ கரைசல் விற்றுக்கொண்டிருந்தார் இன்னொரு பெண். மத்தியான வெயில் தலைக்குள் இறங்கிக்கொண்டிருக்கும் போது முப்பது ரூபாய் மதிப்புள்ள தோடம்பழக் கலவை சிறந்த நிவாரணியாகத் தோன்றும்.  கரைசல் தொண்டைக்குள் சுழற்றிக் கொண்டு இறங்கும் போது ஊடுருவியிருந்த வெப்பம் அனைத்தும் கணப்பொழுதில் மறைந்துவிடும். என்னோடு கூட நான்கைந்து பேர்.  இன்னும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் கிளம்பிவிடும். நடத்துனர் தனது இடது கையினை பேரூந்தில் பிடித்தவாறு வலது கையினால் தனது இறுதி அழைப்பினை விடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், 255 வேகமாக வந்து நானிருந்த பேரூந்திற்கு முன்னே நிறுத்தியது. நானிருந்த பேரூந்தில் சாரதி இயந்திரத்தினை உறுமி, பயண ஆயத்தத்தை உணர்த்திக்கொண்டிருந்தார். நானிருந்த பேரூந்திற்குளிருந்து முன்னிறுத்தப்பட்ட பேரூந்தைக் கண்ட மூவர் – கிளர்ச்சியுடன் இதிலிருந்து வேகமாக இறங்கி அதற்குள் பாய்ந்தார்கள். யாரின் வருகையையும் எதிர்பாராத 255 சாதாரணமாகக் கிளம்பியது. இதனை அவதானித்த நடத்துனர்,  இன்னொரு முறை இறுதிக் கூவலை விடுத்தார். எப்போதும் போல அது யாரின் காதுகளையும் சேர்ந்துவிடாமல் கிளம்பிய 255 இன் சத்தத்தில் மறைந்துபோனது. எங்கள் மூவருடன் அந்த எந்திர வாகனம் கிளம்பியது.
 
இது என்னைச் சுற்றியிருந்த எல்லோருக்கும் சாதாரணமாகப்பட்டிருக்கலாம். எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் மீண்டும் எனது சுற்றத்தின் மீதான வெறுப்பை அதிகரித்தது. கம்பஸ் முடிந்து போகின்றபோது, அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் பெரிய பொருட்டல்ல. அந்தக்  குறுகிய காத்திருப்பு மூவருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. அவர்களின்  இயங்கு நிலைச் சூழலின் மீதான அக்கறையின்மை என்னைப் பாதித்தது. நானிருக்கும் பேரூந்தின் சாரதி மீதும் நடத்துனர் மீதும் உயிரற்று இயக்கிக்கொண்டிருக்கின்ற பேரூந்தின் மீதும் கவலை படர்ந்தது. என் சமூகத்தின் எளிமையான அலட்சியம் பல கேள்விகளை உண்டாக்கியது. மிகவும் இலகுவாக அற்ப காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கின்ற மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள், நினைவுகள் அனைத்தும் ஏதோ ஒரு இயங்கு நிலையின் பிரதான காரணிகளாக இருக்கும். அந்த அலற்சியம்  என்  உணர்தலைப் பெரிதும் சலசலப்பிற்கானதாக மாற்றிவிடுகிறது. இந்தச் சம்பவம்  கூடவே இன்னொன்றையும் நினைவுபடுத்தியது.
 
நதியா பெரேராவின் ” நீ உறங்கிய வேளை ” என்ற குறுந்திரைப்படத்தை கடந்த வருட மார்கழி மாத இரண்டாம் திகதி உலக மகளிர் உச்சி  மாநாட்டுத்  திரையிடல் பகுதியில் பார்த்தேன். சீன முதலீடுகளின் வருகை போருக்கு பின்னர் அதிகரித்துள்ளது – சுதேச முதலீடுகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை குறியீடாக உணர்த்துகின்றது. அதே போல சமீப காலமாக பாதைகள் நெடுகிலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நடமாட்டத்தை அதிகமாகக் காணக்கிடைக்கிறது. அதில் பெரும்பாண்மையானோர் சீனர்கள். அத்தோடு, சில கிழமைகளுக்கு முன்னர் வீதியோரத்தில் கைகளில் சீனக்குழந்தையை ஏந்தியபடி இலங்கைத் தாய் பிச்சையெடுத்துக்கொண்டு திரிந்ததையும் அவதானித்தேன். அவளின் கண்கள் இனம் புரியாத மிரட்சியுடன் இன்னொரு பத்து ரூபாய்க்காக காத்திருந்தது. அந்தக் குழந்தை முகத்தில் எந்த சலனமும் இல்லை. 
 
இவையனைத்தும் அந்தக் கணப்பொழுதில் தோன்றிப் பயணம் முழுதும் ஆக்கிரமித்துவிட்டன.
 

The End Tour – Black Sabbath – 02

தொடர்ந்து Black Sabbath இன் பாடல்களைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். மூன்று நாட்களாக நேரமிருக்கின்ற போதெல்லாம் கணனியிலும் கைத்தொலைபேசியிலும் Black Sabbath இன் பாடல்கள் தான். கூடவே அவர்களின் இறுதிப் பயணமான The End Tour இல் பாடிய பாடல்கள் அனைத்தினதும் காணொளிகளையும் பார்த்துக்கொண்டுவருகிறேன். கடவுள் பூமிக்கு இறங்கி வந்தால் மக்களின் ஆரவாரமும் ஆர்பரிப்பும் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது அங்கிருக்கின்ற மக்களின் செய்கைகள். கடவுளுக்கு நிகராக இசையினைப் பாவனை செய்து ஆன்மா உருக ரசிக்கிறார்கள். எல்லோரும் தங்களை மறந்து குதூகலிக்கிறார்கள். ஒவ்வொரு வரியையும் ஆத்மார்த்தமாக உச்சரிக்கிறார்கள். உடல் எல்லைகள் எல்லாவற்றையும் மீறி இசை அலைகளுடன் சங்கமிக்கின்ற உன்னத தருணமாக இசை நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. கிறீஸ்த்தவர்களின் செப நிகழ்ச்சி ஒன்றில் இறைவனிடம் கத்திக் கூச்சலிட்டு கண்ணீர்விட்டு அழுது தீர்ப்பதைப்போல ஒவ்வொருவரும் ஆன்ம சுதந்திரம் அடைய இசையின் மூலம் பாதைகளைத் தேடுகிறார்கள்.அடர்ந்திருக்கின்ற இருட்டுக்குள் ஒளிக்கீலங்கள் பாய்ச்சப்படுவதைப்போல ஒவ்வொருவரும் அவர்களுக்கான ஒளியினைப் பெற்ற சந்தோசத்தில் திளைக்கின்றார்கள். Ozzy Osbourne இன் lead vocals – Rap இசையின் வேகத்திற்கும் துடி துடிப்பிற்கும் இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கிறது. கூட்டத்தை ஒவ்வொரு முறை விளிக்கும் போதும் இன்னும் இன்னும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. Tony Iommi இன் lead guitar மற்றும் Geezer Butler இன் bass guitar உடன் Tommy Clufetos – drums சேர்ந்து அண்டத்தின் எல்லா உற்சாகத்தையும் ஒரே அரங்குக்குள் அடங்கிவிடுகின்றன. உடலை வருத்தி ஆன்மாவின் வழியாக இசையை தருகின்றார்கள். ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் கண்களிலும் இசை மீது காதல் கவிந்து கிடக்கின்றதை அவதானிக்கிறேன். எதையாவது ஒன்றை அடைய தீவிரமாக முயற்சி செய்யக்கூடிய எவருக்கும் Black Sabbath இன் இசை தேசிய கீதம்.
நிகழ்ச்சியின் பெரும்பாலான பாடல்கள் சிறந்த ஒளியமைப்பில் காணொளியாக YouTube இல் கிடைக்கின்றன.

 
இந்த இணைப்பினூடாக தொடர்ந்து எல்லா இசையினையும் கேட்கலாம்.

War Pigs – Black Sabbath

Heavy metal music இசை வகையின் முன்னோடிகள் என்றழைக்கப்படும் இங்கிலாந்தின் ராக் இசைக்குழுமம் ஒன்றின் படைப்பு War Pigs. இது அவர்களின் இரண்டாவது இசைத் தொகுப்பில் வெளியாகிய பாடல். அவர்களின் முதலாவது இசைத்தொகுப்பு 1970 இல் வெளியாகிய Black Sabbath. பின்னாளில் அவர்கள் Black Sabbath குழுவினர் என்றே அழைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அதே வருடத்தில் உருவாகிய Paranoid என்ற தொகுப்பில் தான் War Pigs, Walpurgis என்ற பெயரில் வெளியானது. ஆரம்பத்தில் ஏழு நிமிடம் ஐம்பத்தியேழு வினாடிகள் நீளமாக உருவாகிய பாடல் நாற்பது வருட காலத்தில் வெறும் மூன்றே நொடிகள் மட்டும் அதிகரிக்கப்பட்டது. அவ்வளவு நேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருக்கும். Terence Michael Butler, Tony Iommi, John Osbourne மற்றும் William Ward ஆகியோரின் கூட்டணியில் எழுதப்பட்ட வரிகள் – முழுக்க முழுக்க அமெரிக்கச் சர்வாதிகாரத்தையும் போரையும் எதிர்ப்பதாக அமைகின்றது. முக்கியமாக வியட்நாம் போரினை. தங்களின் சுயநலத்தின் பேரில் உருவாக்கப்படுகின்ற போர்களில் வறிய மக்கள் வெள்ளந்தியாக அனுப்பப்பட்டு கொல்லப்படுவதைச் சாடி வரிகள் எழுதப்பட்டிருக்கிறன. வறியவர்கள் இலகுவாக மூளைச்சலவை செய்யப்பட்டு போரிற்கு அனுப்பப்படுவதாகவும் – எல்லா வறிய மக்களும் இறந்த பின்னர் வெறும் சாம்பல் மேடு மட்டுமே மிஞ்சியிருக்கும் தேசம் ஒன்றில் – சாத்தான்களிடம் அதிகாரத்தில் இருப்போர் மண்டியிட்டு தங்கள் பாவங்களை இல்லாதொழிக்கக் கெஞ்சிக்கொண்டிருப்பதாக – எளிமையான வரிகள் மூலம் அதிகாரத்தை எதிர்த்திருக்கிறார்கள். கூடவே அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் குற்றவாளிகள்- தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டிக் கொன்றுகுவிக்கின்ற கொடூரத்தையும் எழுதியிருக்கிறார்கள். பாடல் முழுக்க இறைவனை விளித்தே பாடப்பட்டிருக்கின்றது. பாடலின் வரிகள் இவ்வாறு வரும்.
Generals gathered in their masses,
just like witches at black masses.
Evil minds that plot destruction,
sorcerer of death’s construction.
In the fields the bodies burning,
as the war machine keeps turning.
Death and hatred to mankind,
poisoning their brainwashed minds…Oh lord yeah!
Politicians hide themselves away
They only started the war
Why should they go out to fight?
They leave that role to the poor
Time will tell on their power minds
Making war just for fun
Treating people just like pawns in chess
Wait `till their judgement day comes, yeah!
Now in darkness, world stops turning,
ashes where the bodies burning.
No more war pigs have the power,
hand of god has struck the hour.
Day of judgement, god is calling,
on their knees the war pigs crawling.
Begging mercy for their sins,
Satan, laughing, spreads his wings…Oh lord, yeah!
– azlyrics இணையதளம்
Ozzy Osbourne இன் ஈரம் ஊறிய குரளின் மூலம் அவலத்தைச் சரியாக வெளிப்படுத்தியிருப்பார்கள். போரெதிர்ப்பு உணர்வு எதிர்பார்க்கப்பட்ட அளவு வெளிப்பட்டிருக்கும். பாடல் முழுக்கச் சூழ்ந்து கொள்ளும் கிட்டார் இசையினை Tony Iommiயும் bass கிட்டாரினை Geezer Butlerஉம் இசைத்திருப்பார்கள். எந்தக்கணமும் புலன்களை சிதற விடாமல் கட்டிப்போடும் வீரியமான இசையினை War Pigs கொண்டிருக்கிறது.
இதைவிட நீர்த்தன்மையான காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். மிகவும் நுட்பமாக கலை நேர்த்தியுடன் இயக்கியிருக்கிறார். காட்சியமைப்பில் குறியீடுகள் நிரம்பி வழிகின்றன. இசை – வரிகள் – காட்சியமைப்பு என்று பார்வையாளரை அசையவிடாமல் தன்னுடன் War Pigs இணைத்துக்கொள்ளும்.

இணைய வாசிப்பில் முரகாமி

இன்று ஹாருகி முரகாமியின் பிறந்த தினம். முதன் முதலில் ஹாருகி முரகாமியை அறிமுகப்படுத்தியவர் ஜி. குப்புசாமி அவர்கள். தோற்றத்தில் மென்மையானவராகத் தெரிபவரான முரகாமியின் எழுத்துக்களும் மென்மையானவை. உலக இலக்கியப் பரப்பில் எந்த விதத்திலும் நிராகரித்துக் கடந்தவிடக்கூடியவர் அல்ல. வெகுசீக்கிரம் அவரைப் பேசலாம். அவரின் நாவல்கள், சிறுகதைகள் என்று எதையும் பற்றிப் பேசாமல் இப்போது அவரின் இணைதளத்தைப் பற்றிய குறிப்பொன்றைத் தரலாம் என்று நினைக்கிறேன். இன்றைய வாசிப்பு இணையத்தினூடாக பரவலாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால் இணையத்தின் வழியாக ஹாருகி முரகாமியை அணுகுவது சுவாரஸ்யமானது. http://www.harukimurakami.com இந்த இணையதளம் அவரின் பிளாக்கர் இல்லை. இதில் முரகாமி நேரடியாக எழுதுவதும் இல்லை. ஆனால் முரகாமியின் அறிமுகத்தை பெற விரும்புகின்ற வாசகர் ஒருத்தர் கட்டாயம் ஒருமுறையாவது இதன் வடிவமைப்பைப் பார்க்கவேண்டும். முரகாமியின் எழுத்துக்களைப்போல அழகியலும் இசையும் கலந்த கலைவடிவம் இந்த இணையதளம். அத்தனை நேர்த்தியான கலைப்படைப்பு. சமகாலத்தில் எழுதுகின்ற ஈழத்து எழுத்தாளர்களாக இருந்தாலும் தமிழ் நாட்டின் எழுத்தாளர்களாக இருந்தாலும் பிரபலமான வெளிநாட்டு எழுத்தாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் படைப்புகளின் இருக்கின்ற கலைத்தன்மை அவர்களின் ப்ளோக்குகளில் இருப்பதில்லை. இணையத்தின் வழி வாசிப்பிற்குள் நுழைகின்றவர்கள் – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த எழுத்தாளர்களை இணையத்தினுள் தேடமுயற்சி செய்கின்றார்கள். அந்த அடிப்படையில் முரகாமி கொடுக்கக்கூடிய முதல் இணைய அனுபவம் அவரின் பின்பால்(Pin Ball) போன்று சாகசமான கலை அனுபவம். இணையதளத்தின் நிறச்சேர்க்கைகள், எழுத்துருக்கள், படங்கள், விவரிப்புக்கள், பக்கங்கள் மாறுகின்ற விதம், தரவுகளை காட்சிப்படுத்துகின்ற முறை என்று ஒவ்வொன்றும் மிகவும் தீவிரமான நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை முரகாமியே முழுக்க வடிவமைத்திருக்கமாட்டார் – ஆனால் வடிவமைப்பில் கட்டாயம் கணிசமான பங்கு அவரிற்கு இருந்திருக்கும். ஏனென்றால் முரகாமி போன்ற ஒரு கலைஞரால் மட்டும் தான் இவ்வாறான ஒரு இணையதளத்தை உருவாக்கிவிடமுடியும். அவரைப்போல என்னைக்கவர்ந்த இன்னொரு இணையதளம் ஹாரிபாட்டரின் ஆசிரியர் ஜெ.கே.ரௌலிங்கினுடையது. முரகாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னைப் பேசவிடுங்கள் 03 – எஸ் போஸின் கவிதைகள் 02

வாசிக்க – http://unnatham.net/எஸ்போஸின்-கவிதைகள்/

கொழுக்கட்டைத் திருவிழா

எனக்கு உருவாகின்ற கனவுகளைப் பற்றி ஏற்கனவே ஒரு தடவை எழுதியுள்ளேன். ” கனவும் சமூகமும் ” என்ற தலைப்பில் எழுதிய அந்தப் பதிவில் – ஒரே மாதிரியான கனவுகள் பல தடவைகள் வருவதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். கனவுகளைப் பற்றி நிறைய கேட்டும் வாசித்தும் அறிந்திருக்கிறேன். எல்லோருக்கும் போல விதம் விதமான கனவுகள் எனக்கு ஏற்படுவதில்லை. குறிப்பிடத்தக்க சில கனவுகளே மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவத்தில் வந்து போகும். அப்படியான கனவுகளுக்கு விளக்கங்களையும் தேடி வாசித்திருக்கிறேன். அதில் Sigmund Freud இன் The Interpretation of Dreams உம் C.G. Jung இன் The Undiscovered Self உம் முக்கியாமானவையாகத் தெரிகின்றன. அதை விட காலம் காலமாக நம்பப்பட்டு வருகின்ற கனவுகள் பற்றிய விளக்கங்களையும் அறிந்துகொண்டேன். இந்தக் கனவின் விளக்கத்தையும் கேளுங்கள்.
எப்போதும் என் பற்கள் ஒவ்வொன்றாக விழுகின்ற மாதிரிக் கனவுகள் காண்பேன். கொத்தாக விழாமல் – ஒவ்வொன்றாக – என் முழுப் பிறக்ஞையுடன் விழுவதைப்போல. பற்கள் விழுந்தால் நெருங்கிய சொந்தத்தில் யாரவது இறப்பார்கள் என்பது பொதுவான கருத்து. அப்படிப்பார்த்தால் இன்று என் வம்சமே அழிந்திருக்க வேண்டும். அத்தனை முறை பற்கள் விழுவதைப்போன்று கனவுகள் ஏற்பட்டுள்ளன. இப்படியான கனவுகள் வருகின்ற நாட்களின் முன்னைய பகலை ஆராய்ந்தேன். அன்றைய பகல் வேளைகளில் நான் அறிந்து ஒரு சிறு பொய்யையேனும் சொல்லியிருக்கிறேன். என்னை அறிந்து பொய்கள் சொல்கின்ற நாட்களில் பற்கள் விழுவதைப்போல கனவுகள் ஏற்படுகின்றன என்ற பொதுத் தன்மையை அறிந்தேன். ஒரு முறை என் கொடுப்பு பல்லொன்று விழுவதைப்போல கனவு கண்டேன். சாதாரணமாக அல்ல. அகோர வலி. கொடுப்புக்குள் குண்டூசிகளால் குத்துவதைப்போல. சிறிது நேரத்தில் அந்தப்பல் முரசோடு கழன்று விழுந்தது. முழுதும் அழுகிப்போன முரசு. கறுத்து துளைகள் விழுந்து கல் போன்றிருந்தது. அந்த அழுக்குக் முரசின் கீழ் என் பல் தூய்மையாகத் தெரிந்தன. இதைக் கனவு கண்டு சில நாட்களிலேயே எனக்குத் தெரியாத நெருக்கமான உறவினர் ஒருத்தர் இறந்து போனார். அதிக வயது – இயற்கை இறப்பு. அதன் பின்னரும் பொய் சொல்லும் நாட்களில் இதே கனவுகள் வந்துகொண்டிருந்தன.
ஒன்று முப்பத்திற்கு பல்கலைக்கழகத்தை முடித்துக்கொண்டு சாப்பிடாமல் பேரூந்து எடுக்க நடந்து வந்துகொண்டிருந்தேன். கொளுத்தும் வெயில். அகன்ற வீதி ஒன்றைக் கடக்கவேண்டும். சமிஞ்சை வீதியைக் இன்னும் எண்பத்தாறு வினாடிகள் காத்திருக்க வேண்டும் என்றது. இலேசாக பசித்தது. ஆனால் பொறுத்துக்கொள்ளக்கூடிய பசி தான். இருந்தும் அருகிலிருந்த கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பேஸ்ட்ரி ஒரு முறை ருசிக்கத் தூண்டியது. வேகமாக கடைக்குள் நுழைந்து காசைக்கொடுத்து பேஸ்ட்ரியை வாங்கிக்கொண்டன். பார்க்க மொறு மொறு என்று திட்டு திட்டாக அவித்துப் பொரித்த மா எச்சில் ஊற வைத்தது.வேகமாக எடுத்து முன்வாயில் வைத்துக் கடித்தேன். நறுக்.
நான் பல பேரோடு இதைபற்றிக் கதைத்திருக்கிறேன். சம்பவம் நிகழ முன்னரும் பின்னரும். பல்வரிசையில் மம்பட்டிப் பற்கள் இரண்டிற்கும் நேரே கீழிருக்கின்ற இரண்டு பற்களும் முளைத்ததிலிருந்து இன்னமும் விழுந்து மீண்டும் முளைக்கவில்லை. பாற்பற்கள் இரண்டும் இன்னமும் புதிதாகவே இருக்கின்றன. கறையோ சூத்தையோ பிடிக்காமல் மற்றைய எல்லாப் பற்கள் மாதிரியும் புதிதாக இருந்தன. தற்போது இரண்டு மூன்று மாதங்களாக அப்பற்களின் கீழுள்ள முரசு கரைவதும் வலி உண்டாவதுமாக இருக்கின்றது. இரண்டு பற்களில் ஒன்றில் வேர் மட்டும் சாதுவான நோவை ஏற்படுத்துகிறது. நானறிந்த மட்டில் இன்னமும் பாற்பற்களுடன் அலைகின்ற இருபது அல்லது அண்டிய வயதுடையவர்களைக் காணவில்லை. அப்பற்கள் இரண்டும் சிறியதாகவே இருப்பதனால் சிலருடன் கதைத்துக்கொண்டிருக்கும் போது அவ்விடம் ஒட்டையைப் போலத் தெரியும். அவர்கள் விசாரித்தபோது பற்களைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்வேன். அப்பற்களை அண்டிய பகுதிகளில் அதற்கான புதிய பற்கள் முளைக்கவில்லை. அதனால் மருத்துவரிடம் அணுக வேண்டிய தேவையும் இருக்கவில்லை. இப்படியான பாற்பற்களாற் தான் பேஸ்ட்ரியைக் கடித்தேன்.
பார்க்க மொறு மொறு என்றிருந்த பேஸ்ட்ரி என் பாற்பற்களில் ஒன்றைப் பதம்பார்த்து விட்டது. பேஸ்ட்ரி அத்தனை கடிமையாக இருந்தது. அந்தப் பல் ஆடத்தொடங்கி விட்டது. இருபது வருட இருப்பின் ஆட்டம் அது. பேஸ்ட்ரியை ஏறிய மனமில்லாமல் பைக்குள் வைத்துக்கொண்டு சோகமாக நடக்கத் தொடங்கினேன். இன்னமும் அந்தப் பல் விழவில்லை. ஆடிக்கொண்டே இருக்கிறது. ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. கொடுப்பிற்குள் வைத்து சாப்பிடுவதற்கு என்ன பிரச்சனை என்று கேட்டீர்களா? காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தாற் தான் தெரியும் என்று கடந்துவிடுகிறேன். அந்த இடத்தில் மீண்டும் பல் முளைக்குமா தெரியவில்லை. அப்படி முளைத்தாலும் அதற்கான இடம் சரியாக பொருந்துமா என்பது பெரிய பிரச்சனை. விழுந்தது பாற்பல். சிறியது . முளைக்காவிட்டால் ஓட்டை வாயாகிவிடும். சொத்தியாக முளைத்தால் சொத்திப்பல். இப்படிப் பல பிரச்சனை.
ஆனால் இந்தப் பல் இப்போது துருத்துவது எனது சிறிய வயது ஞாபகங்களை மீட்டுகிறது. மற்றைய பற்கள் ஆடி விழும் போது ஏற்படுகின்ற பயம், பல் விழுந்த பின்னர் முரசில் இருக்கின்ற அதன் வேரை நாக்கால் வருடும் போது உருவாகும் சிலிர்ப்பு , நாக்கால் ஆடுகின்ற பல்லை விழும் வரை தள்ளித் தள்ளி ஆட்டுகின்ற சுகம் என்று அத்தனை சிறுவயது ஞாபகங்களை இரண்டு நாட்களாக என்னைப் பின்தொடர்ந்து வருகின்றது. ஆச்சி கொழுக்கட்டை கொட்டிவிடுவோம் என்றார். ஜோடியாக இருந்த பற்களில் ஒன்று இரண்டு மூன்று நாட்களுக்குள் விழுந்துவிடும். விழுத்திவிடுவேன். காதலர்கள் பிரியப்போகிறார்கள். பல்லியிடம் ஒரு பல் தஞ்சமடையப்போகிறது. இந்த முறை பல்லிக்கு பற்களைக் கொடுக்காமல் வருகின்ற கனவுகளுக்கு சமர்ப்பணம் செய்து அவ்வகைக் கனவுகளை சாந்தி செய்வோமா என்று தீவிரமாக யோசிக்கிறேன்.
“பற்கள் விழுவதான கனவுகளின் விளக்கம் – பற்கள் விழுவது தான் அன்றி வேறொன்றும் இல்லை.”

நகரத்தின் குறிப்புகள் – 04

நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதுவதற்காக எடுக்கப்பட்ட குறிப்புகளைத் தொகுத்துள்ளேன். இந்தக் குறிப்புகளை நான் பேரூந்தில் பயணிக்கும் போதும் பேரூந்திற்க்காகக் காத்திருக்கும் போதும் மேலும் வேறு சில இடங்களிலுமிருந்து எடுத்திருக்கிறேன். ஒழுங்கமைக்கப்படாத குறிப்புகளை தொகுப்பது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் எல்லாத் தனிமனிதர்களிடமும் குறிப்புகள் நிறையக் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொருவரினதும் தினசரி வாழ்க்கையே மிகவும் நல்ல குறிப்புக்கள். புதிதாக ஒவ்வொருவரிடமும் பேசும் போதும் ஏதாவது ஒரு புதிய விடயத்தைச் சுவீகரித்துக்கொள்கிறேன். அப்படித்தான் எல்லோரும். வெளிப்டையாகப் பேசக்கூடியவை, பேசமுடியாதவை என்று அவற்றைப் பகுத்துக்கொள்ளலாம். சரி – இப்படியாக கொட்டிக்கிடக்கின்ற குறிப்புகளை ஒழுங்குபடுத்துவது தான் கஷ்டமான வேலை. இதனாற் தான் எல்லோரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. என்னுடைய குறிப்புகளை ஒழுங்குபடுத்துவதில் பலமுறை தோற்றுப்போனேன். போய்க்கொண்டிருக்கிறேன். அருணா சாய்ராமின் தர்பார் கச்சேரிகளைக் கேட்டுப்பாருங்கள். என்னால் ஏன் அவரைப்போல எழுத்துக்களைக் கோர்வையாகக் கோர்க்கமுடியவில்லை என்று கவலைப்படுகிறேன். எனக்கென்னவோ எழுத்தாளர் ஒருத்தர் கட்டாயம் இசையினைக் கேட்டு ரசிக்கவேண்டும் என்றே தோன்றுகின்றது. லாவகமாக ஸ்வரங்களில் ஏற்றங்களையும் இறக்கங்களையும் கையாண்டு காதுகளையும் ஆன்மாவையும் கட்டிப்போடும் தந்திரம் இசைக்கு அதிகமாக இருக்கிறது.
 
நகரத்தின் குறிப்புகள் மூன்றைப் பற்றிய சில சோகக் குறிப்புகளைக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். இருபத்து மூன்று பேர்களால் முகப்புத்தகத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. எனது தளத்திலும் அதேயளவு தான். பேரூந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்து நகரத்தின் குறிப்புகள் மூன்றின் மோசமான நிலைமையை யோசித்துக்கொண்டு வீடுநோக்கி திரும்பினேன். மூன்றாவது குறிப்போடு நிறுத்திக்கொண்டாலும் கேட்பார் யாருமில்லை. இராசயனவியலில் ஊக்கி முன்னிலையில் மட்டும் தான் சில தாக்கங்கள் நிகழும் என்பதைப்போல – பேரூந்தில் யோசித்துக்கொண்டே கொளுத்தும் வெயிலில் 155 இல் வந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தமது சுற்றத்தைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஜோடி ஒன்று இடைவிடாது காதலில் குழைந்துகொண்டிருந்தார்கள். காதல் என்பது முடிவில்லாத குழைவின் ஆதியூற்று. தனியாக இருவருக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய விரட்டமுடியாத பிரம்மை. மொத்த சமூகத்திலிருந்து இருவரை தனிமைப்படுத்தி ஒவ்வொரு கணத்தையும் ஆராதிக்கவைக்கும். இத்தனை சொற்களின் உருவமாக ஒரு ஜோடி. முன்னால் வீதியில் விபத்தொன்று என்றாலும் வயோதிபர் ஒருத்தர் நிற்க முடியாமல் நின்றாலும் இன்னமும் எத்தனை துன்பம் சூழ்ந்தாலும் அவர்கள் ஆராதித்துக்கொண்டே இருப்பார்கள்.  
 
எனக்குள் பல வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கை போதவில்லை. ஒரே பிறப்பில் நான் விரும்பும் வாழ்க்கை அத்தனையையும் வாழ்ந்து தீர்த்துவிட முடியாது. இந்த வாழ்க்கை போதாமையின் குறியீடு. இயலாமையின் ஆக்கிரமிப்பு. பெரும்பாலானவர்களால் அவர்கள் விரும்பும் ஒரேயொரு வாழ்க்கையைக் கூட வாழ்ந்து தீர்த்துவிட முடியவில்லை. அப்படியிருக்க நான் விரும்பும் அசாத்திய வாழ்க்கைகளை எழுத்துக்கள் மூலம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போதாமையாலும் இயலாமையாலும் நிறைந்து போன வாழ்க்கைக்கு சமாந்தரமாக ஒவ்வொரு வாழ்க்கையையும் புனைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நிசப்தத்திற்குள் சஞ்சாரம் செய்கிறேன். இருத்தலின் பெருவெளிக்குள் நுழைகிறேன். உலக இன்பங்கள் அனைத்தையும் வாழ்ந்து தீர்க்கிறேன். புனைவுலகத்தை ஆராதிக்கிறேன். ஆக இப்போது நகரத்தின் குறிப்புகள் நான்கினை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
பெரும்பாலான வேளைகளில் சிங்களப் பாட்டுகளைக் கேட்கும் போது உச்சக் கோபம் அடைவேன். கேட்பொறியினை மறந்து பேரூந்தில் ஏறினால் அதோகெதிதான். சிங்களவர்களின் அநேகமானோர் மிகவும் அழகானவர்கள். ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்பதனால் என்னை இலகுவாகக் கவர்ந்துவிடுவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஹிந்தி நாடக நடிகைகளை விட சிங்களப் பெண்கள் அழகானவர்கள். எனது சிங்கள நண்பர்களுடன் இரண்டு நீண்ட பயணங்களைச் செய்திருக்கிறேன். பயணங்களின் போது மேலே ரபானைக் கொண்ட  நீண்ட குழலின் ஒரு பக்கம் கம்பிகளால் இழுக்கப்பட்ட இசைக்கருவி ஒன்றி தட்டிப் பைலா பாடினார்கள். குதூகலத்துடன் பைலை சேரும்போது துடிப்பு இன்னும் அதிகரிக்கும். என்னிடம் தமிழில் பைலா பாடச்சொன்னார்கள். எதைப் பாடுவது? சிங்களவர்களிடம் பைலா என்ற ஒரே ஒரு இசை வடிவத்தைத் தவிர கேட்டு ரசிக்குமளவு வேறெந்த இசை வடிவமும் கிடையாது. ” சமணலயா ” என்று தொடங்குகின்ற பாடல் ஓரளவு ரசிக்கக் கூடியமட்டிலிருக்கும். இதைத்தான் சிங்களவர்களின் சுதேச இசை வடிவம் எனப்போகிறீர்களா? அவர்களின் தோற்றத்திற்கும் ரசனைக்கும் அணுவளவு கூட சம்பந்தமில்லை. அண்மையில் தமிழில் பைலா ஒன்றை  ரசித்தேன். பைலா என்றவுடன் டொங்கு டொங்கு என்ற சந்தத்தில் கத்துவது மட்டுமல்ல. இஷா யோக மையத்தில் 2013 ஆம் ஆண்டு அருணா சாய்ராம் பாடிய “மாடு மேய்க்கும் கண்ணே” என்ற தமிழ் பைலாவைக் கேட்டுப்பாருங்கள். பேரூந்தில் ஏறி அத்தனை கத்தலுக்கும் கதறலுக்கும் மத்தியில் அமைதியாகத் தியான நிலையில் இருக்க நான் ஒன்றும் சத்குரு அல்ல. சாதாரண மனிதன்.
 
இதை எழுதும் போது இன்னொரு நிகழ்வும் ஞாபகத்திற்குள் வருகின்றது. மலை நகரத்திலிருந்து சொந்த நகரத்திற்கு பேரூந்தில் வந்துகொண்டிருந்தேன். கூடவே சித்தாவுமிருந்தார். ஏறிப் பத்து நிமிடத்தில் பிக்குவின் போதனைகளைப் போடத்தொடங்கினார்கள். மூன்று மணித்தியாலம் அளவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டிய கொடுமை. இடையில் காசு போனாலும் பரவாயில்லை வேறு பேரூந்தில் ஏறிவிடுவோமோ என்றும் நினைத்தேன். சித்தா இல்லாவிட்டால் கட்டாயம் ஏறியிருப்பேன்.
 
இதை எனது அவதானம் என்றுகூடச் சொல்லலாம். நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். எனது தினசரிப் பிரயாணம் நீண்ட நேரத்தை எடுக்கும் என்பதனால் குளிரூட்டப்பட்ட சிறிய ரக பேரூந்தில் பயணிப்பது அதிகம். இயலாத கட்டத்தில் சாதாரண பேருந்துகளிலும் பயணிப்பேன். குளிரூட்டப்பட்ட பேரூந்தின் நடத்துனர் என்னிடம் இயங்குகின்ற விதமும் சாதாரண பேரூந்தின் நடத்துனர் என்னிடம் நடந்துகொள்ளும் விதமும் வித்தியாசமானவை. மேலே தேவை கருதி நான் எனப் பாவிக்கிறேன் – பயணிகள் என்றும் வரலாம். குளிரூட்டப்பட்ட பேரூந்தின் ஓட்டுநர் மிகவும் குளிர்மையாக கையாளுவார். பேச்சிலும் நடத்தையிலும் அமைதியும் நிதானமுமிருக்கும். அதே போல எரிச்சற்படமாட்டார். காசுத் தாள்களை நேர்த்தியாக அடுக்கிவைத்தத்திருப்பர். மிகுதிப்பணம் உடனே இல்லை என்றால் பண்பாகக் கூறி மறக்காமல் தந்துவிடுவார். சாதாரண பேருந்துகளின் நடத்துனர்கள் பெரும்பாலும் இவர்களுக்கு நேரெதிர். மீதிப்பணத்தை நாங்களாகக் கேட்டாலன்றிக் கிடைக்காது. ஒரு வேளை சாதாரண பேருந்துகளை வாட்டுகின்ற உஷ்ணம் ஒரு காரணமாகவிருக்கலாம். சனநெருக்கடிக்குள் லாவகமாகப் புகுந்து எல்லோரிடமும் காசு வாங்குவது கஷ்டமான காரியம். ஏறுபவர் இறங்குபவர் என்று இருவரையும் கண்காணிக்கவேண்டும். கொஞ்ச நெருக்கடியான கூட்டம் என்றாலே போதும் நடத்துனர் நிதானமிழக்க. குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் நெருக்கம் என்பது அரிதான ஒன்று. அதனால் நிதானமாக டிக்கட்டுகளை கொடுக்கமுடியும். எல்லா நிறுத்தங்களில் நிற்காது. வேகாமகப் பறந்துவிடும். இப்படியான சில காரணங்களால் எனக்கு குளிரூட்டப்பட்ட பேரூந்துகளையும் அவற்றின் நடத்துனர்களையும் இயல்பாகப் பிடித்துப்போகிறது.
 
255 பற்றி சொல்லியே ஆகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பயணம் தான். இந்தப் பயணம் பழகிப்போனால்  உலகத்தில் எந்த நெருக்கடியான பேருந்துகளிலும் சாதாரணமாகப் பயணித்துவிடலாம். இனி ஏற்ற இடமில்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகும் நடத்துனர் ” இஸ்ஸர யண்டகோ  மஹத்தையா ” என்று சத்தமிட்டு எங்காவது சிறிய இடம் தெரிகிறதா என்று பார்த்துத்தான் பேரூந்தை நகர்த்துவார்கள். எவ்வளவு சுத்தமாக குளித்து வந்தாலும் நேர்த்தியாக உடைகளை அழுத்தி வந்தாலும் இறங்கும் போது கந்தல். அத்தனை நெருக்கமான கூட்டத்திலும் ஈ ஒன்று நகர்வதைப்போல நடத்துனர் நுழைந்து வந்து டிக்கட் தந்துவிடுவார். பொதுவாக நடத்துனர்கள் மெல்லியதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். 255 எவ்வளவு பிரசித்த பெற்ற பேரூந்து என்றால் – பல்கலைக்கழத்தில் சிறுகுறிப்பு வரைய சில தலைப்புக்கள் தரப்பட்டன. அதிலொன்று 255 பேரூந்தில் அனுபவம். 255 என்றாலே உடம்பு வியர்க்கத் தொடங்கிவிடும்.
 
நான்கிற்கான குறிப்புகளைத் தருவதாகக் கூறிவிட்டு முழுவதையும் எழுதிவிட்டானே என்று யோசிக்கிறீர்களா?
 
அருணா சாய்ராமின் ” மாடு மேய்க்கும் கண்ணே ”

ஜனவரி ஒன்றிற்கான கனவு!

எனக்குப்  புதுவருடம் ஒன்றைப்பற்றிய கனவொன்று உள்ளது. இதுவரையில் ஜனவரி ஒன்றைப்  புதுவருடமாகக் கொண்டாடியதில்லை.எனது எண்ண அடுக்குகளில் ஜனவரி ஒன்றிற்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. சரியான முறையில் வெடி கொளுத்தத் தெரியாது என்ற காரணத்தினால் ஒழுங்கை நெடுக வெடி கொளுத்திய அனுபவமும் இல்லை. வில்லியம் ஜோசப்பின் Nothing Else Matters என்கிற அற்புதமான இசையினைக் கேட்டுக்கொண்டே எனது ஞாபக அடுக்குகள் ஒவ்வொன்றிலும் கடந்து வந்த புத்தாண்டுகளில் ஏதாவது ஒன்றைப்பற்றிய பதிவுகளேனும் கிடைக்குமா தேடிக்கொண்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்தது குறைந்தளவு கிறிஸ்தவர்களைக் கொண்ட வவுனியா நகரம் என்பதால் புத்தாண்டைப் பற்றிய நினைவுகள் எதையும் மீட்டமுடியவில்லை. ஒரு சில நிகழ்வுகளைத் தவிர கடந்த மூன்று நான்கு வருடங்களுக்கு முந்தைய எதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. குழந்தையாக இருக்கும் போது அல்லது சிறுவனாக இருக்கும் போது புத்தாண்டைக் கொண்டாடியிருக்கலாம்.
 
ஒன்றிரண்டு வயதுகளில் வவுனியாவில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வாழுகின்ற இறம்பைக்குளத்தில் கூட்டுக்குடும்பமாக நாங்கள் இருந்ததாக அம்மம்மா சொல்வார். அங்கே பெரிய கிறிஸ்தவத் தேவாலயம் ஒன்றிருக்கிறது. எனது நண்பர்கள் இப்போதும் கிறிஸ்மஸ், வருடப்பிறப்பு அந்த தேவாலயத்திற்குப்  பிரார்த்திக்கப் போய்விடுவார்கள். அவ்வளவு முக்கியத்துவமான தேவாலயம் அருகில் இருந்தமையால் குழந்தையாகவிருக்கும் போது கொண்டாடியிருக்கலாம். என்னைப் பக்குவமாய் ஒரு மூலையில் தூக்கிவைத்துக்கொண்டு மாமாவும் பெரியம்மாக்களும் சித்தியாக்களும் வெடி, சீறுவானம், சக்கரவானம் போன்றவைக் கொளுத்தி என்னைச் சந்தோசப்படுத்தியிருக்கலாம். வெறும் தடியிலிருந்தும் தாள்களிலிருந்தும் வெளிச்சமும் சத்தமும் உண்டாவதைப் பார்த்து ரசித்திருக்கலாம். அந்தத் தேவாலயத்தில் பலர் மெழுகுவத்தியேற்றி கவலைகள் நீங்கியதாகவும் ஆனால் தான் எவ்வளவு கவலைகள் பிரச்சனைகள் வந்தாலும் மெழுகுவத்தி ஏற்றியதே கிடையாது என்று அம்மம்மா என்னிடம் சொல்லியதை ஞாபகப்படுத்தும் போது குழந்தையிலும் ஜனவரி ஒன்றை சாதாரணமாகக் கடந்து சென்றிருப்பேன் என்று தோன்றுகிறது. இப்போது Brooklyn Duo இன் All of Me இசைத்துக்கொண்டிருக்கிறது. இன்று ஜனவரி இரண்டு.
 
இருபது வருடங்களுக்குப் பிறகு புதுவருடக் கொண்டாட்டம் ஒன்றைப்பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. கொழும்பு கொட்டஹேன வீதி நெடுக வெடிகளை  நூறு மீட்டர் தூரம் அடுக்கி முதலாம் திகதி  இரவு பன்னிரண்டுக்கும் மதியம் பன்னிரண்டிற்கும் என்று இப்போது வரை ஓயாமல் கொளுத்திக் கொண்டாடிக்கொண்டிருக்கும் எல்லோரும் பொறாமையைக் கிளப்புகிறார்கள். இது இரண்டு காட்சியறைகளின் ஊழியர்களுக்கு இடையிலான போட்டியாக கடந்த பல வருடங்களாக நடந்துவருகிறது. வெடித்துச் சிதறும் போது அவர்களின் ஆன்மாவும் காற்றில் வெடித்துச் சிதறுவது போல பூரிக்கிறார்கள். தேவாலய வீதிகளாலும் கோவில் வீதிகளாலும் காரை நகர்த்த முடியவில்லை. ஒரு வருடத்திற்கும் சேர்த்து  முழுமையாக பிரார்த்தித்துவிடும் உத்தேசத்தில் பக்த கோடிகள் அறக்கப் பறக்க செயற்பட்டார்கள். அவர்களின் முகம் புதுவருட களிப்பில் மலர்ந்திருந்தது. தேவதைகள் பூமிக்கு இறங்கி வந்தாற்போல பெண்கள் மினுங்கினார்கள்.
 
எல்லாவற்றையும் கண்காணித்தபடி செட்டியார் தெருவில் நடந்தேன். எத்தனை மகிழ்ச்சியான முகங்கள். இரண்டு நண்பர்கள் என்னைக்கண்டு கைகுலுக்கி  வாழ்த்துத் தெரிவித்தார்கள். கூடவே பூபாலசிங்கம் புத்தகசாலை இன்று அரைநேரம் – மூடிவிட்டோம் என்றார்கள்.
 
எனக்குப்  புதுவருடம் ஒன்றைப்பற்றிய கனவொன்று உள்ளது.

நன்பெரியல் குறிப்புகள் 01 – 08

01. முதல் நாளுக்கு முன்னைய நாட்கள்

சில கிழமைகளுக்கு முன்னர் காலியில் உள்ள ருமசலவிற்கு சென்றிருந்தேன். காடுகள் மலைகளின் நடுவே அமைந்த அழகிய கடற்கரை. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் உப்புத்தண்ணீரில் ஊறினேன். அதிகளவான கூட்டம் இல்லாத கடற்கரை. அதே நாளில் தான் கொழும்பு உட்பட மேற்குப் பக்கம் தாழ் அமுக்கமும் கடும் மழையுமாக இருந்தது. இது எதுவுமே அறியாமல் பளிங்கு நீரின் மேல் நீந்தத் தெரியாமல் மிதந்துகொண்டிருந்தேன். அதற்கு அடுத்ததாக இந்த மாதம் 26 , 27களில் பலாங்கொடைக்கு அடுத்திருந்த நன்பெரியல் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். நன்பெரியல் செல்லுவதற்கான திட்டம் ருமசல போய்த் திரும்பும் வழியிலேயே முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியான வாட்சப் குழுக்கள் திறந்து தீவிரமாக திட்டங்கள் தீட்டினார்கள். துரதிஷடவசமாக எனக்குச் சிங்களம் தெரியாததால் அவற்றில் பங்குபற்ற முடியவில்லை. கூடவே திட்டமும் விளங்கவில்லை. 25, 26 என்றிருந்தது பின்னர் 26, 27 ஆக மாற்றினார்கள் என்று அறியத்தந்தார்கள். பொருட்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு வீட்டிலிருந்து 25ஆம் திகதி இரவு கொழும்பு புறப்பட்டு அடுத்த நாட் காலை பெட்டா புகையிர நிலையத்தில் இறங்கி பின்னர் மஹரகம சென்று அங்கிருக்கும் சில நண்பர்களோடு நேராக பலாங்கொடை பயணிப்பதே திட்டம். வவுனியாவிலிருந்து பலாங்கொடைக்கு தனியாக பேரூந்து அல்லது புகையிரம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்த் தான் இப்படியான சுற்றுப் பாதை.
எப்போதும் போல இரவு பத்தே முக்காலுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்ற குளிரூட்டப்பட்ட பேரூந்தில் வவுனியாவில் நின்று ஏறுவதாக திட்டம். சாதாரண பேரூந்தில் அல்லது புகைவண்டியில் அதிக தூரம் பிரயாணம் செய்வது எனக்கு மிகவும் கஷ்டம். தினகரன் பேரூந்திற்கு முன்கூட்டியே தொலைபேசியில் அறிவித்துவிட்டு பத்தே முக்காலுக்காக காத்திருந்தேன். சரியாக நான் ஏறுகின்ற இடத்திற்கு பத்தே முக்காலுக்கு வந்துவிடும். நான் அவ்விடத்திற்கு பத்தரைக்குச் சென்றுவிடுவேன். பத்து இருபது போல பேரூந்து நடத்துனர் தொலைபேசியில் தாண்டிக்குளத்தைக் கடந்துவிட்டதாகச் சொன்னார். தாண்டிக்குளத்திற்கும் நான் ஏறுகின்ற இடத்திற்கும் இடையில் இரண்டு கிலோமீட்டர் தூரம். நெஞ்சு முழுக்க படபடக்கத் தொடங்கியது. எவ்வளவு வேகமாச் சென்றாலும் பிடித்துவிடமுடியாது. போய் விட்டது என்றால் சாதாரண பேரூந்திற் தான் போகவேண்டும். அவசர அவசரமாக விடைபெற்று மாமாவுடன் ஏறுகின்ற இடத்தை அடைத்தேன். அங்கே எப்போதும் போல சிலர் பேரூந்துகளுக்காக காத்திருந்தார்கள். அவற்றுள் எனது பாடசாலை நண்பனும் அம்மாவோடு நின்றான். பதபதைப்போடு இறங்கி அவனிடம் நலம் கூட விசாரிக்காமல் தினகரன் போய்விட்டதா என்றேன். இல்லை என்றான். நிம்மதியாக இருந்தது. ஒரு வேளை அவன் கவனிக்கத் தவறிய கணம் ஒன்றில் மின்னல் வேகத்தில் கடந்திருந்தால்? இருக்காது. அவனிடமோ அம்மாவிடமோ பேசச் சந்தர்ப்பதைத் தராமல் பேரூந்து வந்து சேர்ந்தது இரண்டு மூன்று நிமிடங்களில். பத்து முப்பத்தைந்து வரும். இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். குறிப்புகள் எடுக்கவும் சரியான ஒழுங்கில் நிகழ்வுகளைக் குறிக்கவும் குறிப்புப் புத்தகம் ஒன்றைக் காவிச்சென்றேன். ஆனால் எழுத ஒன்றும் கொண்டுபோகவில்லை. அங்கே கடைகளிலோ நண்பர்களிடமோ வாங்குவது கடினமான காரியம் இல்லை. இருந்தும் வாங்கவில்லை. அதனால் அங்கங்கே சிதறியும் உருக்குலைந்து குறிப்புகள் வரலாம்.
பேரூந்து ஓட்டுநர் வழமையானவர் இல்லை. ஒருவேளை ஓமந்தையை தாண்டிக்குளம் என்று நினைத்துச் சொல்லியிருப்பாரோ? ஓமந்தை தாண்டிக்குளத்திலிருந்து 11 கிலோமீட்டர் முன்னால் இருக்கின்றது. நான் பின்னால் இருந்த இருக்கை ஒன்றிற்ப் போய் இருந்து குளிர்ச்சட்டையையும் தலைக்குள்ளவையும் அணிந்தேன்.

 

02. மாற்றுத் திறனாளிகளும் நம்பிக்கைத் துரோகமும்

பேரூந்தின் கடைசி ஐந்து இருக்கைகளிலும் சாவகாசமாக நித்திரை கொண்டபடியே அடுத்தநாட் காலை மூன்று முப்பதிற்கு பெட்டா புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். கொழும்பு நகரிற்குள் பெரும்பாலும் பேருந்துகளில் சன நெரிசலாகவே இருக்கும். ஆனால் அதிகாலைப்பொழுதில் அப்படியில்லை. இரண்டு மூன்று முறை மொறட்டுவைக்கு அதிகாலையிற் போன அனுபவம். 138ற்க்காக காத்திருந்தேன். நினைத்ததை விட புகையிர நிலையத்தில் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. என்னிலிருந்து சிறிய தூர இடைவெளியில் வாய்பேசாத காது கேட்காத ஐவர் சைகைகள் மூலம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் வித்தியாசமான முறையில் உடுத்தியும் தலைமுடியை நிறம் தீட்டியுமிருந்தார்கள். என்னருகில் அழகான இளம் பெண்ணொருவர் தனது பயணப் பையுடன் உறவினருக்காக காத்திருந்தார். அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் மூலம் அரை குறையாக விளங்கிக்கொண்டேன். ஐவரும் எனக்கருகில் வந்து மெதுவாக சைகைகள் மூலம் அருகில் நின்ற பெண்ணை வம்பிழுக்கத் தொடங்கினார்கள். அப்பெண்ணின் கண்களில் பயம் தெரிந்ததது. அதைவிட அதிகமாக எனக்குப் பயமாக இருந்தது. என்னைப் பார்த்து உதவுமாறு வேண்டுவதாக கண்கள் பேசின. என்னை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கினார். அதற்குள் காலி – கொழும்பு பேரூந்து வர ஐவரும் பாய்ந்து ஓடி ஏறினார்கள். அவர் குனிந்து பயணப்பையை நிமிர்த்திய போது தான் உணர்ந்தேன் – போகும் போது அந்தக் காவாலிகள் அவரின் பயணப்பையை எத்திவிட்டு ஏறியிருக்கிறார்கள். நான் மன்னிப்புக்கூற அவரை நோக்கித் திரும்பினேன். அவரின் கண்கள் பணித்திருந்தன.

முன் கண்ணாடியில் பனி படர்ந்திருக்க 138 வந்தது. 138 இன் உள்ளே ஏறவே பெரும் கூட்டம் பாய்ந்துஅடித்து வந்தது. அடப்பாவிகளா இத்தனை நேரம் எங்கிருந்தீர்கள் என்று நினைத்துக்கொண்டு நெருக்கி ஏறினேன். இடமே இல்லாமல் மிகவும் நெருக்கமாக நின்றோம். அதிகாலையில் எப்போதுமே சில இருக்கைகள் காலியாக இருக்கும் என்ற மனஎண்ணத்தை மாற்றிக்கொண்டேன். மஹராகமவிற்கு ஒரு பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு கூகிள் வரைபடத்தை திறந்தேன். வேலை செய்யவில்லை. முன்னர் மஹரகமவிற்குப் போன அனுபவமும் இல்லை. வீதியில் பெரிய வெளிச்சமும் இல்லை. கடைகளின் பெயர்ப்பலகைகளும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு நடுவில் சிங்களப் பாட்டுக்கள் வேறு. சிறிது நேரத்திற்கு ஒருமுறை வரைபடத்தை பார்த்தேன். ம்ஹும் – வேலை செய்வதாய்த் தெரியவில்லை. மஹரகம பஸ்டாண்ட் பகிண்ட என்று குரல் கேட்க கூட்டத்தைப் பிய்த்துக்கொண்டு இறங்கினேன். கூகுளை நம்பிக் கேட்டது இது முதன்முறை அல்ல.

03. கலையும் பிச்சைக்காரனின் காரும்

மஹரகமவிற்கு என்று தனியாக பேரூந்துத் தரிப்பிடம் கிடையாது. பெயரில் ” கம ” என்று இருப்பதனாலோ என்னவோ. இரண்டு வீதிகளுக்கு இடையில் ஓடை ஒன்றிற்குற் தான் பேரூந்துகள் நிறுத்தப்படும். இப்போது கூகிள் வரைபடம் வேலை செய்தது. வீதியோரங்கள் ஓடைகள் என்று எல்லா இடங்களிலும் சாலையோரக் கடைகள். குறிப்பாக உடுப்புகள் விற்கின்ற கடைகள் ஏராளமாக காணப்பட்டது. இறங்கி மஹரகமவிலிருந்து என்னோடு இணைந்து வருகின்ற நண்பனுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். நேரம் நான்கு மணியிருக்கும். அவன் ஐந்து முப்பதளவில் வருவதாகக் கூறினான். ஒன்றரை மணித்தியாலம் மீதமிருந்தது. மீண்டும் இங்கே தான் வந்து சந்திக்க வேண்டும். மஹரகமவைச் சுற்றிப்பார்க்க நடக்கத் தொடங்கினேன். முக்கால்வாசிக்கு மேல்ப் பெண்கள் தான் நின்றார்கள். பலர் ஏற்கனவே மரமேசையில் உடுப்புகளை விரித்திருந்தார்கள். பெரும்பாலானவை உள்நாட்டில் தைக்கப்பட்டவை. ஆண்கள் உடைகள் பெண்கள் உடைகள் குழந்தைகளினுடையவை என்று எல்லாவகையான உடுப்புகளும் இருந்தன.நான்கு மணிக்கு முன்னரே வியாபாரத்தைத் தொடங்கியிருந்தார்கள். தலையைக் குள்ளாக்கள் கவ்வியிருந்தன. குளிர் அங்கி அணிந்திருந்தார்கள். அவர்கள் எவரின் முகத்திலும் சோம்பலையோ நித்திரைக் கலக்கத்தையோ காணவில்லை. பெரும்பாலும் அவர்களின் வியாபாரத்திற்கென நிரந்தர இடம் இருக்காது. முன்னால் வருகின்றவர்கள் இடங்களைப் பிடித்துக்கொள்வார்கள். சிலர் தமது வாகனங்களில் வந்து இடைவெளிகளில் உடுப்புகளை வேகமாக இறக்கி தமக்கான வியாபார இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள். மந்தமான வெளிச்சத்தில் மஹரகமவின் வியாபாரம் தொடங்கியது.
நான் நண்பனுக்காக காத்திருக்கவேண்டிய இடம் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால். கூகிள் வரைபடத்திற் தேடி நடக்க ஆரம்பித்தேன். வியாபாரம் நேரத்துடன் அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சன நடமாட்டம் அதிகமான இடமாக விரைவாக மாறியது. வரைபடத்தைத் தொடர்ந்து நடந்தேன். நான் கண்ட பல பெண்கள் தமது காரிலேயே உடுப்புகளைக் கொண்டுவந்து – எடுத்து – அடுக்கினார்கள். எனக்கு மனதிற்குள் மெலிதாக சில எண்ணங்கள் தோன்றின. அவர்கள் வசதியானவர்கள். உடைகளை விற்பதை வியாபாரமாக இல்லாமல் மனநிறைவாகப் பார்க்கின்றார்கள். தாமே தைத்து எடுத்துவந்த ஆடைகள் விலைப்படும் போது அவர்கள் சந்தோஷிக்கின்றார்கள். தமக்கான அங்கீகாரம் கிடைப்பதாக உணர்கிறார்கள். இவை எல்லாம் தான் குளிரின் மத்தியில் இந்த அதிகாலையில் அத்தனை செழிப்பாக அவர்களை வைத்திருக்கின்றது. அவர்கள் இதைக் கலையாக உணர்கிறார்கள்.
ஒருவழியாக தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு முன்னால் வந்து நின்று பார்த்து திகைத்துப்போனேன். அவ்விடம் நான் முதலில் பேருந்திலிருந்து இறங்கிய இடத்தின் எதிர்ப்பக்கம். நிதானமாக யோசித்துப்பாருங்கள். இரண்டு பெரிய வீதிகள் இடையில் ஒரு வெற்றிடம். அது தான் மஹரகமவின் பெயரிடப்படாத பேரூந்து நிலையம். இறங்கியது ஒரு பக்கம் – இப்போது நிற்பது எதிர்ப்பக்கம். இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேலே நேரம் மீதமாக இருக்கிறது. கடை ஒன்றிற்குள் நுழைந்து நெஸ்கோப்பி ஒன்றும் மீன் பணிஸ் ஒன்றும் சாப்பிட்டேன். மீண்டும் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு அருகில் நடந்துவந்து லொத்தர் சபை ஒன்றின் கூடாரத்திலிருந்த மரப் பலகையிலாலான இருப்பதற்கு ஏற்ற குற்றி ஒன்றிலிருந்தேன். அருகில் லொத்தர் போட்டியில் வெற்றி பெற்றால் கொடுப்பதற்காக கார் ஒன்று புதிதாக நிற்பாட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் யாருமில்லை. குற்றியிலிருந்தபடி வியாபாரம் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன்.
சிறிது நேரத்தில் வயது போன ஒருத்தர் என்னை நோக்கி நடந்துவந்தார். பார்க்க மிகவும் ஏழையாகத் தெரிந்தார். கந்தலான உடுப்பே அணிந்திருந்தார். என்னைச் சுற்றி வந்து அங்கு நின்ற காரின் பின் கதவைத் திறந்து கையில் பற்தூரிகையுடன் வெளியே வந்தார்.

04. வித்தியாசம்

நான் திகைத்துப்போய் ஸ்தம்பிதம் ஆனேன். அது ஒரு டொயாட்டோ கார். சுற்றி விளம்பரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த வயதானவர் பல்லை மினுக்கி முகமும் கழுவிக்கொண்டு துவாயையும் காருக்குள் இருந்தே எடுத்துத் துடைத்தார். அவர் தனது அறையைப்போல காரினைப் பயன்படுத்தினார். நான் பெரும் குழப்பமடைந்தேன். மிகவும் கேவலமான உடை – டொயாட்டோ கார் – பெரும் முரண் ஒன்று. என்னிடம் சிங்களத்தில் ஏதோ சொன்னார். அவரின் சிங்களத்தில் நான் அறிந்த சிங்களம் எதுவும் இன்மையால் ஒன்றுமே புரியவில்லை. நான் சிரித்தபடியே பதிலளித்தேன். இருந்தும் குழப்பம் தீரவே இல்லை. சாத்தியமற்ற நிகழ்வு. இப்படி யோசித்துக்கொண்டிருக்கும் போது, மஞ்சள் கோட்டில் வயதானவர் ஒருத்தர் கால்களை அரக்கி அரக்கி வீதியைக் கடந்தார். அவரால் சிறிது நேரம் வாகனக் குளறுபடி ஏற்பட்டது. எனக்குப் பின்னால் நின்ற அதிசயமான மனிதர் – அந்த வயதானவரைப் பற்றி என்னிடம் நக்கலாகச் சிரித்துக்கொண்டு ஏதோ சொன்னார். அது பெரும்பாலும் அந்த வயோதிபரின் நடையைப் பற்றியதாகவே இருக்கும். அவருக்கு நடை வித்தியாசமாக இருந்திருக்கலாம் – எனக்கு நீங்களே வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல மொழி தெரியவில்லை.

இப்படித்தான் லொத்தரிலும் குலுக்கல்களிலும் பரிசாக விழுகின்ற பொருட்கள் இருக்குமா? புதிதானது என்ற பெயரில் தரப்படுகின்ற பரிசில்கள் – இப்படி ஏதோ ஒரு விதத்தில் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தால்.
நான் குற்றியில் இருக்க நண்பன் வந்து சேர்ந்தான். தனித்திருந்த பொழுதுகள் நிறைவுற்றன. மெலிதாக வானம் வெளிக்கத்தொடங்கியது. இருட்டிற்குள் தனியாக அலைந்து திரிந்தது ஒன்றை உணர்த்திச் சென்றது. நான் நினைப்பது போல மனிதர்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் இல்லை.

 

05. இரண்டு சுவரொட்டிகள்

என்னோடு சேர்த்து ஆறு பேர் மஹரகமவிலிருந்து பதுளை புறப்படுகின்ற பேரூந்தில் ஏறினோம். பதுளைக்குச் செல்லுகின்ற வழியிற் தான் பலாங்கொடை. பலாங்கொடையிலிருந்து அடுத்த இடம் நான்பெரியல். சரியாக பலாங்கொடையை அடைய மூன்று அரை மணித்தியாலங்கள் எடுக்கும். தொங்கல் இருக்கைகளில் யன்னற் பக்கமாக அமர்ந்துகொண்டேன். இது குளிரூட்டப்பட்ட பேரூந்து அல்ல என்பதால் மனம் மெதுவாக சஞ்சலப்பட்டது. பயணம் தொடங்கியது. நேரம் ஆறு மணியிருக்கலாம். குளிர்ந்த காற்றின் மெல்லிய வருடலோடு அயர்ந்து தூங்கினேன். இதனைத் தூக்கம் என்று சொல்வது மிகச் சரியாக இருக்காது. குறுகிய நேரத்திற்கு ஒரு முறை ஏற்படுகின்ற பெரிய குழுக்களில் விழித்துக்கொள்வேன். பயணத்தின் போது வெளிச்சம் பரவியதே ஒழிய சூரியனைக் காணவில்லை. சாப்பிட ரத்னபுரியில் இறங்கினோம். மற்றபடி தொடர் குலுக்கல்களும் நித்திரையும் தான். கண்விழித்துப்பார்க்கின்ற இடங்களில் எல்லாம் இரண்டு விடயங்களைத் தவறாமல் கண்டேன். ஒன்று தேர்தல் சுவரொட்டிகள். மற்றையது பிரத்தியோக வகுப்பின் சுவரொட்டிகள். இரண்டு வகையான சுவரொட்டிகளும் ஒரே பாணியில் இருந்தன. அரசியல்வாதி யார் ஆசிரியர் யார் என்பதே தெரியவில்லை. பெருமபாலான சுவரொட்டிகளில் இருக்கின்ற சின்னங்களை வைத்தே பிரித்தறிந்துகொண்டேன். அதிலும் சில சின்னங்கள் அலங்காரப்பொருட்கள் மாதிரித் தெரிந்தன. ஆசிரியர் காதுகளில் கேட்பொறியும் மாக்கர்களுமாக நின்றார்கள். வர்த்தகப்பொருள்களின் விளம்பரங்கள் கூடக் கண்களுக்கு அகப்படமுடியாத அளவு வகுப்புகளுக்கான விளம்பரங்கள் யுத்தியாக ஒட்டப்பட்டிருந்தன. இந்தக் கலாசாரம் வவுனியாவில் இல்லை என்பது ஓரளவு சந்தோசம். அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் கூட ஆசிரியர்களின் அளவு நுட்பமாக எடுக்கப்படவில்லை. பலாங்கொடை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அண்மையில் இறங்கி பலாங்கொடையில் வசிக்கின்ற நண்பன் வீட்டிற்கு செல்ல தயாரானோம். நண்பனின் வருகைக்காக ஒரு கார் திருத்தும் கடை அருகில் இறக்கப்பட்டிருந்த ஷெட் ஒன்றின் கீழ் நின்றோம். அங்கிருந்த கார்கள் முதலிற் பார்த்த டொயாட்டோ காரையும் பல்லுவிளக்கிய அதிசய மனிதனையும் மீண்டும் ஞாபகப்படுத்தின.
 

06. பத்

சிறிது நேரத்திற்குள் நண்பன் காரில் வந்து சேர்ந்தான். எல்லோருக்கும் இடம் போதாமையால் முச்சக்கர வண்டி ஒன்றையும் பிடித்துக்கொண்டோம். பதுளை செல்லுகின்ற வீதியில் கிளை வீதியாக அல்லது தெருவாக குத்தன எழுந்து போகின்ற தெருவின் கடைசி வீடு அவனது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணிநேர பிரயாண அலுப்பு. தலை கழுத்து கை கால் என்று உடெல்லாம் தூக்கிப்போட்டது. அவனது வீட்டிலேயே குளித்துவிட்டு காலை உணவை எடுத்தோம். சிறிய நேர இடைவெளிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேரவேண்டியவர்களும் வந்து சேர்ந்தார்கள். எல்லோருமாக காலை உணவை எடுத்தோம். எமது வீடுகளில் காலை உணவாக பிட்டோ இடியாப்பமோ தோசையோ ரொட்டியோ அல்லது பாணோ சமைப்பார்கள். ஆனால் முழுப்பிராயணத்திலும் ஆறுவேளை சாப்பிட்டேன். ஆறு வேலையும் ” பத் ” தான். அவர்களுக்கு சோறு பிசா போலத் தெரிகிறது. வீட்டில் ஒரு வேலை சோறு சாப்பிடுவதே பெரிய விடயம். ஆறுவேளை தொடர்ந்து சோறு என்றால். சிங்களவர்கள் பழக்கப்பட்டிருந்தார்கள். இரண்டாவது நாளின் இரவுச்சாப்பாட்டை வெளியில் எடுக்கவேண்டியதாகப் போயிற்று. இரண்டு பேர் சாப்பாடு எடுத்துவருகிறோம் என்று வெளிக்கிட்டார்கள். நானும் இப்போதாவது பாராட்ட, கொத்து என்று ஏதாவது கொண்டுவருவார்கள் என்று பார்த்தால் அப்போதும் பத் தான். ஆனால் ஒன்று ஒவ்வொரு வேளை பத்துடனும் கோழிக்கறியும் கருவாடும் நன்றாக சமைத்துத் தந்தார்கள். இரண்டாம் நாள் காலை மலை ஏறுவதற்காக காலை மற்றும் மதிய உணவுகளைக் காவிக்கொண்டு போகவேண்டும். மலையில் ஏறும்போது எமது உடலைக் காவுதலே பெரும்பாடு இதில் இரண்டு வேளை சாப்பாட்டையும் காவுதல் மெத்தக் கஷ்டமான விஷயம். எப்படியும் மதியம் சோறு தான். காலைக்கு இடியாப்பமோ பணிசோ பாரமற்ற சாப்பாட்டை எடுத்து சென்றிருக்கலாம். ம்ஹிம் – அப்போதும் பத் தான். சரி சாப்பாட்டைப் பற்றிச் சொல்லியதால் இன்னமும் தொடர்வோம்.

முதல் நாள் மதியமும் இரவும் மட்டும் தான் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட்டோம். நாம் தங்கியிருந்த இடம் பலாங்கொடையிலிருந்து சற்றுத் தூரத்திலிருக்கிறது. பதுளை வீதி தான். அதிலிருந்து பிரிகின்ற வீதி ஒன்றினூடாக ஒரு கிமீ பயணம் செய்தால் நன்பெரிய விடுதி வரும். நன்பெரிய விடுதி முழுக்க முழுக்க ஆமியால் நடத்தப்படுகிறது. அங்கே ஐந்து கொட்டகைகள் இறக்கப்பட்டிருந்தன. அதில் முதல் மூன்றும் எங்களுக்கு. கொட்டகைக்கு அருகில் இரண்டுமாடிக் கட்டடம். மேலே சாப்பிட்டு இடம் – கீழே குளியறைகள். இந்த சாப்பிடும் இடத்தில் தான் முதல் நாள் மதியமும் இரவும் மட்டும் சாப்பிட்டோம். அதை விட தேநீர் தந்தார்கள். அந்த கட்டடம் மலையின் இடையில் இருக்கின்ற சமவெளியில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து விழுந்தால் பரலோகம். அடுத்த நாட் காலை உணவை கடல் மட்டத்திற்க்கு மேலே 5000 அடியில் இருக்கின்ற பேக்கர்ஸ் வளைவிலிருந்து சாப்பிட்டோம். அப்போது சுற்றி எதுவுமே தெரியவில்லை. முழுக்க பனிமூட்டம். அந்த நாள் மதிய உணவை பங்களா என்று அழைக்கப்படுகின்ற கட்டடத்திற்கு கீழ் இருக்கின்ற ஒரு தமிழரின் வீட்டில் வைத்து சாப்பிட்டோம். பேக்கர்ஸ் வளைவு பற்றியும் பங்களா தமிழ் குடும்பங்கள் பற்றியும் பின்னர் எழுதுகிறேன். மதிய சாப்பட்டைச் சாப்பிட்டு விட்டு குப்பைத்தொட்டியை தேடினோம். அப்போது அந்த வீட்டு அம்மா குப்பைகளை எரிக்கவேண்டும் என்றும் கீழே எடுத்துச் செல்வதில்லை என்றும் கூறினார். அந்த நாளின் இரவு உணவை பலாங்கொடை நண்பனின் வீட்டில் சாப்பிட்டோம். சாப்பாடு என்றாலே பத் தான்.

 
07.குளிர் காற்று
நாங்கள் தங்கியிருக்கப் போகின்ற கொட்டகைகள் வீதியிலிருந்து உள் நோக்கி 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தன. எங்கள் வருகைக்கு முன்னரே கொட்டகைகள் எல்லாம் அடித்து தயாராக வைத்திருந்தார்கள். எல்லோரும் ஆமி. அவர்களே எல்லா வேலைகளையும் செய்தார்கள். எங்களை மாத்தையா என்றே அழைத்தார்கள். நாங்கள் தங்கியிருக்கும் கொட்டைகைகளுக்கு மற்றப் பக்கம் ஒரு பெரிய மரத்தடியினை குத்தி வைத்து அதைச்சுற்றி சிறிய மரக்கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தார்கள். எங்களை அன்புடன் வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் உடைமைகளை கொட்டகைக்குள் வைத்துவிட்டு குளிப்பதற்காக மாற்று உடுப்புகளுடனும் கரப்பந்துடனும் நடக்கத்தொடங்கினோம். அப்போது நேரம் இரண்டு அல்லது மூன்று மணியிருக்கும். குளிப்பதற்காக ஆறிற்கு செல்லவேண்டும். ஆறு நாமிருக்கின்ற இடத்திலிருந்து 500மீட்டர் மேல்நோக்கியிருக்கிறது. நாங்கள் கதைத்துக்கொண்டே நடந்தோம். வீதியின் கரைகளில் நின்ற மரங்களுக்கு சிங்களத்தால் பெயர்பலகையிட்டிருந்தார்கள். அவற்றை உச்சரித்தபடியே நடந்தேன். எங்களைக்கடந்து வாகனங்கள் போகவும் வரவும் பார்த்தோம். எதிரே வீதி இரண்டாகப் பிரிந்தது. நாங்கள் ஒடுங்கிய பாதையை தெரிவு செய்து வாகனங்கள் தரிப்பிடத்தைத் தாண்டி நடக்க கரப்பந்தாட்ட மைதானம் தெரிந்தது.

அருகில் நின்ற மரம் ஒன்றின் கீழே மாற்றுடுப்புகளை வைத்துவிட்டு பந்தை எத்தினோம். நான் முன்னரெல்லாம் விளையாடும் போது சில பிரச்சனைகள் தானாக வந்துவிடும். அவற்றை ஒன்று அணியினைப் பிரிப்பது. ஆனால் நாங்கள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இரண்டாகப் பிரிந்தோம். பந்து வலையின் மேலாக மிதக்கத்தொடங்கியது. நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. இந்த வருட பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டியில் கரப்பந்தாட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற அணி நாங்கள். சூரியனின் அனைத்து உஷ்ணமும் எங்கள் உடலுக்குள் சேர விளையாட்டு உக்கிரமானது. சிங்களத்தில் கர்ச்சித்தபடி பந்தை அடிக்கத்தொடங்கினோம். தலை முழுக்க வியரத்து கண்கள் எரியத்தொடங்கின. மேற்சட்டை வியர்வையில் தோய்ந்தது. மூன்று செட் விளையாடினோம். பின்னர் உடுப்புகளை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினோம். 100 மீட்டர் தூரத்தில் பெரிய பாறை ஒன்றைக் குடைந்து வழியை உருவாக்கியிருந்தார். உடலை மெல்லிய குளிர் காற்று அடித்துப்போட்டது. சுவாசக்காற்றில் ஈரம் தெரிந்தது. தண்ணீரின் சலசலப்பு கேட்டது. நாங்கள் ஆற்றின் ஒரு கரையை அடைந்திருந்தோம்.
08.குளிர்
ஏற்கனவே இருபது பேர் அளவில் அங்கங்கே குளித்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பாறையின் வழி கீழே இறங்கி ஆற்றின் மற்றப் பக்கத்தை அடைந்தோம். ஆற்றின் வழியெங்கும் பாறைகள் தென்பட்டன. இரண்டு அல்லது மூன்று கற்களின் இடுக்குகளினூடாக தூய்மையான தண்ணீர் பீச்சிக்கொண்டு பாய்ந்தது. உள்ளங்கால் நீரில் பட உடெல்லாம் சிலிர்த்தது. ஆற்றுப் படுக்கையினூடாக சிதறியிருந்த குறுகிய பெரிய பாறைகளைக் கடந்து 100 மீட்டர் அளவில் நடந்தும் அரக்கியும் ஊர்ந்து சென்று குளிப்பதற்கான சரியான இடத்தைக் கண்டு பிடித்தோம். அதில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையினூடாக தூய்மையான நீர் வேகமாகப் பாய்ந்து வந்தது. பின்னர் ஒரு சமதரையான இடம். நான் முதலில் வேகமாகப் பாய்ந்து வருகின்ற நீரில் முதுகை ஒத்தியவாறு அமர்ந்து ஆற்றின் முழுகுளிரையும் என்னுள்ளே இழுத்தேன். தண்ணீர்த் துளிகள் முதுகில் பட்டு கழுத்தின் இருபுறமாகவும் பாய்ந்தது. ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள். எங்களுக்கென நிரந்தமான இடம் என்று ஏதும் இல்லாமல் அங்கும் இங்கும் நகர்ந்து குளிரினை வாங்கிக்கொண்டோம். மற்றவர்களுக்கு சலிக்காமல் குளிரினைக்கொடுத்தோம். தண்ணீரினை ஏத்தி ஏத்தி விளையாடினோம். பளிங்கு போன்ற தண்ணீரின் நிறம் எப்போதும் மாறவில்லை.

பாறைகளுக்கு மேலேறி நின்று குளிர்ந்த காற்றில் உடம்பில் ஒட்டியிருந்த நீர்த் திவலைகளைக் காயவைத்தோம். அப்படியான ஒரு கணத்தில் திசை தெரியாத பக்கத்திலிருந்து குளிர்த்தண்ணீர் வந்து நனைக்க மீண்டும் ஆற்றுக்குள் இறங்குவோம். இதை ஒன்றிரண்டு அல்ல பல முறை செய்தோம். விரும்பிய கோணங்களில் நின்று நீரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் தண்ணீர் என்பதும் நீரோட்டம் என்பதும் காற்றைப்போல ஒன்றாகப் பழகிப்போனது. நேரத்தோடு ஆற்றின் ஓட்டமும் அதிகரித்தது. கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் நீரில் ஊறியிருக்க இருட்டத் தொடங்கியது. நீரின் வேகமும் அதிகரித்ததால் மேலும் நிற்காமல் மீண்டும் பழைய இடங்களிற்குச் சென்று உடைகளை மாற்றினோம். எல்லாம் சரியாகி வெளிக்கிடும் தருணம் கனத்த மழை பெய்யத்தொடங்கியது. கைகளில் யாரிடமும் குடைகள் இல்லை. எங்களை விட குளிக்கவந்த மாற்றிய எல்லோரும் பாறையின் கீழே வந்து ஒதுங்கிக்கொண்டார்கள். அப்போது ஐம்பது பேர்மட்டில் அதிகரித்திருந்தார்கள். சிலர் வேகமாக உடலை உலர்த்திக்கொண்டு குடைகளை கைகளில் ஏந்திக்கொண்டு நடந்தார்கள். நாங்கள் பொறுத்திருந்தோம். அரைமணிநேரம் பொருத்தலின் பின்னரும் விடாத மழையை வைதுவிட்டு கொட்டகைக்கு துவாய்களை தலையில் போட்டுக்கொண்டு ஓடினோம். அங்கே சுடச் சுட பால்த் தேநீர் காத்திருந்தது.
ஆ அந்த கொட்டகைகள் தாயாராகியிருந்த இடத்தின் பெயர் “கெமுனு வாச்”.

This slideshow requires JavaScript.