எங்கள் எல்லோரிடமும் அழிக்கமுடியாத, அதே நேரத்தில் காரணமும் தெரியாத ஒரு வழக்கம் இருந்துகொண்டு வருகின்றது. ஒரு நேரத்தில் அதிகம் சிரித்தால் அடுத்து அதே அளவு அழவேண்டிவரும். அதற்காக எமது மகிழ்ச்சியான தருணங்களை வலுக்கட்டாயமாக குறைத்துக் கொண்டாடுவோம். இது சிறியவர்களில் இருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌதீக ரீதியில் சமானன எதிர் வினை எதற்கும் உண்டு என்பதை மீறிய உள்மன அடுக்குகளின் ஒரு எண்ணமே இது எனலாம். அதிகம் சிரித்துக்கொண்டிருக்கும் குழந்தை ஒன்று குறுகிய நேரத்தில் வீரியமாக அழுவதை பார்த்திருப்போம். அதை உதாரணமாகவே முன்னோர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறோம். இந்த வழக்கம் சிறுவர்களாக இருந்து வளந்த பின்னரும் தொடரப்படுகின்றது. இந்த எண்ணம் மனதில் இருக்கின்ற ஒருவர், கொண்டாடுகின்ற மகிழ்ச்சிக்குப் பின்னால் அவருக்கு வருகின்ற துக்கம், மகிழ்ச்சியின் காரணமாக உருவானதே என்ற ஆழமான முடிவு ஒன்றை எடுத்துவிட செய்கின்றது. மனதளவில் வலிமை இல்லாதோருக்கு இப்படியான சூழ்நிலைகள் வருகின்ற போது மனப் பிறழ்வுகள் ஏற்படுகின்ற சந்தர்பங்கள் உருவாகின்றது.

சாதத் ஹசன் மண்ட்டோவின் காலித் சிறுகதையும் அவ்வாறான மனப் பிறழ்வை சந்திக்கபோகின்ற ஒரு சாதாரண அப்பாவையும்(மும்தாஜ்) நோய்வாய்ப் பட்டிருக்கின்ற அவரின் மகன் காலித்தை சுற்றியும் நகர்கின்றது. காலித் தனது முதலாவது பிறந்தநாளுக்கு முன்னரே இறந்துவிடுவான் என்பது உறுதியானதே. இந்த உறுதியை மும்தாஜின் மனைவி அவ்வளவு தூரம் நம்பிவிடவில்லை. காலித்தின் ஆரம்ப கால செயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாகவும் அவனின் வளர்ச்சி மற்றைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது அதிகமாகவும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மும்தாஜ் இந்த விடயத்தால் மிகவும் சோர்வுற்றிருந்தான். எந்த நேரமும் காலித் இறந்துவிடக்கூடும் என்கின்ற நினைப்பு அவனை வாட்டியது. அதுவும் காலித்தின் முதல் பிறந்தநாள் நெருங்க நெருங்க இன்னும் அதிகமானது.
இவ்வளவு கதையோட்டத்திலும் இரண்டு நிதர்சன சமூகவியல் பார்வையும் அதனோடு தனிமனித எண்ணங்கள் திரிக்கப்படுகின்ற விதமும் சித்தரிக்கப்படுகின்றது. ஒன்று- ஒரு மனிதனின் இறப்பின் பின்னர் அவரை சுற்றியிருந்தவர்கள் இறந்தவரை பற்றி கதைப்பதை கேட்டிருக்கிறோம். அதன் சாரம் இதுவாகத்தான் இருக்கும். – இறப்பதற்கு முன்னர் மிகவும் பொலிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தார். எல்லோரது மனதையும் கவர்ந்தவராகவும் எல்லா விடயங்களிலும் ஆளுமை மிக்கவராகவும் இருந்தார். வழமையான அவரின் செயற்பாடுகளை விட சமீபத்திய செயற்பாடுகள் மிக நேர்த்தியாக இருந்தன. எல்லாம் அவரின் இறப்பிற்க்கான அறிகுறியாக இருந்து விட்டது. இந்த கதையின் ஓட்டத்தில் மும்தாஜின் மனதிலும் இந்த பார்வை இருந்தது, அவரின் மனைவியின் மனதிலும் இதே பார்வை இருந்தது. ஆனால் பார்வைகள் இரண்டு ஒன்றுகொண்டு வித்தியாசமானவை. மும்தாஜின் பார்வை இறப்பை நோக்கிய அறிகுறியாகவும் மனைவியின் பார்வை ஆரோக்கியமான குழந்தைக்குரிய அறிகுறிகளாகவும் தென்படுகின்றது. இந்த இடம் மும்தாஜை மனதளவில் வலிமையற்றவராக வெளிக்காட்டுகின்றது. இரண்டாவது முடிவுப் புள்ளியை நோக்கிய நெருக்குதல்கள். ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையிலும் அல்லது போனால் ஒரு வியாபர வேலையிலும் காலக்கேடு முடிகின்ற நேரம் ஏற்படுகின்ற மன அழுத்தம் மிகக் கொடியது. சாதாரண மனிதனின் நிலையிலிருந்து அவனின் நாளாந்தத்தை பறித்து விடுகின்றது. தன்னிலையிலிருந்து தள்ளாட வைக்கின்றது. இது சாதாரண வாழ்வில் வாழுகின்ற எல்லோருக்கும் பொருத்தமானது.
பிறந்தநாளுக்கான ஆயத்தங்களை மனைவி விமர்சையாக செய்துகொண்டிருக்கின்றாள். அவளின் சுற்றம் நண்பர்கள் என்று எல்லோருக்கும் அழைப்பு விடுகின்றாள். ஆனால் மும்தாஜால் விரைவில் நடக்கப்போகின்ற இழப்பை நினைத்துக்கொண்டே நாட்களை கடத்துகின்றார். மும்தாஜின் எண்ணம் போலவே அந்த நாட்கள் அமைந்து கொண்டு வந்தன. ஒருநாள் மனைவியின் கூக்குரலுக்கு ஓடிப்போய் குளியலறையில் பார்க்க, எப்போதும் கைகளை விலாசமாகவும் குதூகலமாகவும் அசைத்து குழைந்து தண்ணீரில் விளையாடுகின்ற காலித் சோர்ந்து போனவானாக நின்றான். மும்தாஜுக்கு இன்னும் இழப்பின் நாள்நோக்கிய வருத்தம் அதிகமாகின்றது. அந்த நேரத்திலும் அவனின் மனைவி தன்னையும் கணவனையும் சுதாகரித்துக்கொள்ளுமாறு சாட்டுகளைச் சொல்லுகிறாள். காலித் சோர்ந்தும் துவண்டும் போகின்ற சந்தர்பங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. வருகின்ற மருத்துவர்களும் காலிதிற்கு ஏற்பட்ட நோய் கொடியது இல்லை என்றும் அதற்கான மாத்திரைகளை உபயோகிப்பதன் மூலம் குணப்படுத்திவிடலாம் என்றும் ஆறுதல் கூறுகின்றனர். இருந்தும் நாட்கள் செல்லச் செல்ல காலித் தீவிரமாக நோய்வாய்ப்படுகின்றான். அவனோடு மும்தாஜின் நிலைமையும் மோசமாகின்றது. மும்தாஜ் உளவியல் ரீதியாக பாதிப்பையும் நெருக்கத்தையும் உணர்கின்றான். காலிதிற்கு நோய் தீவிரமடைய மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கபடுகின்றான்.
இதன் பின்னரான மும்தாஜின் செய்கைகள், அவரின் மனப்பிம்பங்கள் அதில் உண்டாகுகின்ற பிறழ்வுகள் அதன் பின்னணி – இவை வாததிற்க்குரியவை. காலித்தின் தந்தையாக மும்தாஜ் என்கிற தனிநபர் செய்கின்ற ஒவ்வொரு சிறிய செயல்களும் காலித்தை பாதிப்பதாக தன்னுள் எண்ணிக்கொள்கின்றார். வயிறு நிரம்ப தண்ணீர் குடிப்பதிலும் சிகரட் புகைப்பதிலும் காலித்தை மருத்துவ மனையில் சென்று பார்பதிலும் தான் அடைகின்ற நிறைவு காலிதிற்க்கு ஆபத்தை உண்டாகும் என நினைக்கின்றார். அவற்றையெல்லாம் செய்வதில் பின்வாங்குகின்றார். அவரின் உடலை இயக்குகின்ற மூளையின் பகுதியும் உணர்வுகளை இயக்குகின்ற மூளையின் பகுதியும் வேறுவேறாக செயற்படுகின்றது. இதையே மும்தாஜ் அசரீரியாக உணர்கின்றார். வலிமை குன்றிய மனதினை வலிமையான மறை எண்ணங்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டிப்படைகின்றது. ஒவ்வொன்றையும் செய்வதால் உன் மகன் இறந்து விடுவான் என்று கூறி கூறியே பாசத்தால் பணியவைத்து அசரீரி காய்களை நகர்த்திக்கொண்டு போகின்றது. ஒவ்வொரு நகர்விற்க்குப் பின்னும் மும்தாஜால் நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இருந்தும் மீண்டும் வலிமையாக சூழ்ந்துகொள்கின்ற அசரீரியை மீறி/ உடைத்துக்கொண்டு எழுகின்ற சக்தி அவன் மனதில் இல்லை. அதனால் முழுமையாக ஆட்கொள்ளப்படுகின்றான்.
கதையின் நிறைவில் மும்தாஜ் தன் மகனை எடுத்துக்கொண்டாவது அசரீரியை தன்னை பிரியும் படி வேண்டுகின்ற அளவு மனதளவில் பிறழ்வுஅடைந்திருப்பார். இறுதியில் காலித் இறந்து போனான். கதையை மாண்ட்டோ இப்படி முடித்திருப்பார்
பிறகு அவன் தன் மகனிடம் “ காலித் தயவு செய்து இந்தக் குரலை அழைத்துப் போவாயா ?” என்று கெஞ்சினான்.
காலித் தன் தலையை அசைத்து “ சரி “ என்று சொன்னதைகேட்டதாக அவன் சத்தியம் செய்தான்.
ஆரம்பத்தில் ஏதோ ஒன்றைப் பொருட்டு அதிகம் சிரத்தைகொள்வதனால் அதன் மூலம் அதிகம் கவலை அடைவதனால் மனப் பிறழ்வு அடைந்ததோ கடைசியில் அந்த கவலையே பொருட்டில்லாமல் ஆக்கும் அளவு அவை சக்தி வாய்ந்தவையாக மாறிக்கொள்கின்றன.
Author Archives: brinthan187
அஞ்ஞாதம். – சிறுகதை.
கண்கள் தான் அவளின் முகம். மேகலா என் சிறுவயது முதலே நல்ல நண்பி. அன்றிலிருந்து இன்று வரை எது வாங்கினாலும் பகிர்ந்துகொள்ளும் மனப்பக்குவம் எங்களிடம் இருந்தது. ஊர்த் தேர் திருவிழாவில் நான் வாங்கிக் கொடுத்த தஞ்ஞாவூர் பொம்மையை இன்றும் தான் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லிக்கொள்வாள். இரட்டை குடும்பி போட்டு ஒன்று முன்னே மற்றது பின்னே கழுதைக் காது போல சிறிதாக ஆடிக்கொண்டு திரியும் வயதிலிருந்து மேகலாவை நான் அவதானித்து வந்திருக்கிறேன். ஒன்றன் மீது அவள் ஆசையை வைத்துவிட்டாள் என்றால் உயிரே போனாலும் அதை அடையாமல் விடமாட்டாள். அடம்பிடித்து வீட்டு முற்றத்தில் வெறும் மேலோடு உச்சி வெயிலில் நின்று அப்பாவிடம் சைக்கிள் வாங்கினாள். அதைப் பெருமையாகவும் கருதினாள். அந்த சைக்கிளில் ஊர் உலகமெல்லாம் சுற்றித் திரிவாள். அவளின் அசட்டுத்தனமான தைரியம் ஒருமுறை என்னையும் அவளையும் ஆளில்லா கட்டில் தனியாக விட்டுவிட்டது. சைக்கிளோடு உச்சி வெயிலுக்குள் காட்டுக்குள் புகுந்த இருவருக்கும், களைப்பு மிகுந்ததால் ஓங்கி வளர்ந்திருந்த ஆல மரத்தின் கீழே நில வேர்களை தலைக்கு வைத்து நித்திரை கொண்டுவிட்டோம். களைப்பு அதிகமாக இருந்ததால் நேரம் காலம் போவது அறவே தெரியவில்லை. அவள் தான் என்னை வேகமாக தட்டி எழுப்பினாள். இருட்டில் அவள் யார் என்றே தெரியாமல் போனது. அலறியடித்துக்கொண்டு இருவரும் கைகளை கோர்த்து வீட்டுக்கு திரும்ப பாதையை தேடினோம். சைக்கிளில் தடக்குப்பட்டு குப்புற மூக்கு அடிபட நான் விழுந்தது தான் மிச்சம். இருவரும் சைக்கிளை கட்டிப்பிடித்துக்கொண்டு இரவை விளிப்போடே கழித்தோம். காலையில் வீட்டிற்கு போக, வீடு செத்தவீடு போல இருந்தது. என்னையும் மேகலாவையும் கண்ட ஊர் பெரியவர் ஒருவர் கொலை இழுவையாக இழுத்துக்கொண்டுவந்து வீட்டில் விட்டார். அன்றிலிருந்து மேகலா வெளியே எங்கேயும் போவது கிடையாது. அவளின் சைக்கிளும் பரணில் எறியப்பட்டது.
பின்னேரங்களில் அவளின் வீட்டிற்கு அம்மாவோடு போவேன். அவள் ஒரு சின்ன கதிரையில் இருந்து சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பாள். நான் அவளின் அருகில் போய் உட்காந்து , உகரம் எழுதும் போது சுழியை உள்ளங்கையால் அழித்து விடுவேன். அவள் என்னை அப்போது தான் திரும்பிப் பார்ப்பாள். அவளின் தனிமையை, அதனால் உண்டான வெறுமையை அவளின் கண்களில் பார்த்திருக்கிறேன். அடுத்தமுறை அழித்து விடக்கூடாது என்று உறுதியாகச் செல்வேன். ஆனால்அவளின் எழுத்துக்களில் இருக்கின்ற சுழி, அவளைவிட நளினமாக தெரிவதால் மீண்டும் அழித்து விடுவேன். எப்போதும் அம்மாவால் துணைக்கு வர முடியவில்லை. நான் தனியாக செல்வதை விரும்பவில்லை. அவள் பூப்படைந்து இரண்டு வருடங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடமே திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போய் விட்டாள்.
இரண்டு மாதங்களுக்கு முதல் தான் அவளை லண்டன் அல்லங்காடி ஒன்றில் சந்தித்தேன். அதே இரட்டை பின்னல் ஒன்று முன்னே மற்றையது பின்னே, மாட்டின் வாலைப்போலே நீளமாக கரும்பின் தாளைபோல அகலமாகவும் கரிய நிறமாகவும் இருப்பதை வைத்தே அவளை மட்டுப்பிடித்து விட்டேன். கணவருடன் சந்தோசமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். இடுப்புயர குழந்தைகள் இரண்டு. மேகலா நீங்கள் தானே என்பதற்குள் அவள் என்னை கண்டுபிடித்து விட்டாள். கண்களில் முன்னைய தனிமையும் வெறுப்பும் இப்போது இல்லவே இல்லை. அவளின் கணவனின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாள். அவளது கணவன் என்னைப்பார்த்த போது பல ஆண்டு பழகிய நண்பனைப்போல வாயை அகலமாக விரித்து அசட்டுத்தனமாக சிரித்தார். அவரின் புன்னகைக்கும் அவளின் கண்களின் தணிப்பிற்கும் இருந்த உறவை என்னால் அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர் என்கைகளை இறுக்கமாக குலுக்கி வீட்டில் இன்னும் அவள் பொம்மையை பத்திரமாக வைத்திருப்பதை மகிழ்ச்சியாக சொன்னார். அவளின் கண்கள் வேட்கத்தால் சுருங்கிப்போனதை என்னால் மட்டுமே உணரமுடிந்தது. அவளின் பையன்கள் கைகளை பிசைந்து கொண்டு இருவருக்கும் இடையில் கடக்கமுடியாத தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு நிற்பது போல உணர்வுகள் குவிந்து கொண்டிருக்கும் அங்காடியில் நீண்ட நேரம் நிற்கமுடியவில்லை.
சாலையின் இரண்டு புறங்களிலும் பனியை குவித்துக்கொண்டிருந்தது வாகனங்கள்.பொடி நடையாக ஐவரும் நடந்து சென்றோம். அவள் கைகளை கணவனின் கைகளோடு கோர்த்து விலாசமாக விசுக்கி விசுக்கி நடந்தாள். இப்பொது தலைக்கு குளிர் குல்லா ஒன்று போட்டிருப்பதால் பின்னல்கள் ஆடுவதை அவதானிக்கமுடியாமல் போனது. கதைகளின் இடைகளில் எல்லாமே அவள் சந்தோசமாக இருப்பதாக சொன்னாள். அவளின் கண்கள் அப்போதெல்லாம் மிகப் பிரகாசமாக மின்னியது.பையன்களுக்கு பழக்கபட்ட வீதிகளின் புறங்களில் குவிந்திருந்த பனியின் விளிம்புகளை தமது சப்பத்துக்களால் உதைந்து கொண்டே வந்தார்கள். மேகலா என்னை இராப்போசனம் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தாள். வீட்டிற்குள் புக முதலே போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் அடிப்படையிலேயே உள்ளே நுழைந்தேன். நுழைந்ததும் உட்காராமல் நேரே புகைப்படங்கள் தொங்கவிட்டிருக்கும் சுவரை நோக்கி நடந்தேன். முதலில் பையன்கள் இருவரும் சிறு வயதில் இருந்தபோது எடுத்த புகைப்படம். அதில் ஆளுக்கொருவர் அவர்களின் சட்டைக்கலரில் ஒவ்வொரு சைக்கிள் வைத்திருந்தார்கள். அடுத்த புகைப்படம் இவர்கள் இருவரது திருமணம். ஜோடியாக கைகளில் பூக்கொத்துடன் நின்றனர். மேகலாவின் பார்வை அப்போது வெறித்தபடியே இருந்தது. புகைப்படம் எடுத்த பெரியவருக்கே அது தெரிந்திருந்தது. மேகலாவின் சம்மதம் இல்லாமலே தான் திருமணம் நடந்தது. அவள் கணவனின் புகைப்படம் கூட பார்க்கவில்லை.வீட்டின் பெரியவர்கள் பார்தார்காளா என்று கூட தெரியவில்லை. அடுத்து முதல் பையனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம். பையன் அழுதபடியும் மேகலா சிரித்தபடியும் இருக்க கணவன் மேகலாவின் ஒரு தோளில் கையை இறுக்கமாக பிடித்திருக்க மேகலா அவரை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் மேகலாவிற்கு அவளின் கணவனை அதிகம் பிடித்திருக்க வேண்டும். கல்யாணமாகி இரண்டாம் நாள் மேகலாவின் வீட்டிற்கு சந்தோசமாகத்தான் வந்திருந்தாள். அப்போது தான் முதன் முறை மேகலாவை பெரிய பெண்ணாக பார்த்தேன். அடுத்தது இரண்டாவது மகனை தூக்கி வைத்திருக்கும் இருவரது தனிப்படம். முதலானவன் முகம் முழுக்க பௌடர் அடித்துக்கொண்டு கையில் கார் ஒன்றை வைத்திருந்தான். வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டு சென்று முடிவில் இருந்த கதிரையில் அமர்ந்தேன். மேகலாவின் கணவன் கையில் தஞ்ஞாவூர் பொம்மையுடன் சிரித்தபடியே வந்தார். அவரின் சிரிப்பில் மேகலாவின் சந்தோசமான வாழ்க்கை தெரிந்தது.
இன்று மதியம் மூன்று மணியளவில் தொலைபேசி மூலம் செய்தியறிந்தேன். விறுக்கென எழுந்து காரை எடுத்துக்கொண்டு மேகலாவின் வீட்டிற்கு புறப்பட்டேன். பாதையெங்கும் சூரியனின் வெளிச்சம். லண்டன் வாசிகள் எல்லாம் அரைகுறையாக நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். லண்டன் வெய்யில் காலங்களில் தான் அழகாகத் தெரியும். கடைகளில் எல்லாம் மட்டைகளும் தோரணங்களும் நீக்கமற நிறைந்திருக்கும். இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்தவர்களுக்கு லண்டனின் வெய்யிலையும் அழகையும் ரசிக்க கொடுத்துவைத்திருக்காது. அவர்களுக்கு இது தான் இலங்கைக்கு போக சரியான காலம். ஒவ்வொரு ஜோடியும் கைகளை கோர்த்து விலாசமாக விசுக்கி நடக்க, மேகலா என்னை ஞாபகப்படுத்தினாள்.
என்னையறியாமல் கண்கள் எல்லாம் கண்ணீரால் முட்டிப் போயிருந்தன.வாசல் கதவைத்திறந்து வேகமாக விறாந்தைக்குள் நுழைந்தேன். ஒரு மூலையில் மேகலா கதிரைபோட்டு சுவரைபார்க்க திரும்பி இருந்தாள். பையன்களில் ஒருவன் என் கால்களைப்பிடித்து தலையை தொடையில் முட்டிக்கொண்டான். அவனை தூக்கிக்கொண்டு மேகலாவை நோக்கி நடந்தேன். அவள் அதை உணர்ந்திருக்க முடியாது. அவளின் தலைமுடி குலைந்து அசிங்கமாக இருந்தது. வீடே இருட்டி இருந்தது. யன்னல்கள் சூரியக்கதிர்களை தடுத்துவைத்திருந்தன.
அவளின் தோளில் மெதுவாக சென்று கையை வைத்தேன். கண்கள் சிவந்து வீங்கி ரத்த நாளம் எல்லாம் கண்களுக்குள் புடைத்துப்போய் முன்முடி கொஞ்சம் கீழே படர என்னை வெறித்து பார்த்தாள். அதே பார்வை அவளின் உகரத்தில் இருந்து நளினத்தை அழித்தபோது அவள் பார்த்த அதே பார்வை.
உலக இலக்கிய தொடர். பாகம் 01- டால்ஸ்டாயின் அன்னா கரீனினா.
அறிமுகம்.
நமது வாழ்கையில் இரண்டு வகையான தொழிற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று புறச்செயற்பாடு மற்றையது அகச்செயற்பாடு. இன்றைய சமூகத்தின் போக்கை ஒரு சாதாரண மனிதனால் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப தன்னை செயற்படுத்திக்கொள்ள புறச்செயற்பாடுகள்தான் காரணம். புறத்தே நிகழ்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு தனிமனித வாழ்வியலையும் பாதிக்கின்றது. எங்கோ நடக்கின்ற திருவிழாவும் எங்கோ நடக்கின்ற குண்டுவெடிப்பும் தூரத்தில் உதிர்கின்ற இலைகளும் எல்லாமுமே ஒரு வகையில் எம்மக்குள் பாதிப்புதான். ஒவ்வொரு பாதிப்பிலும் ஒவ்வொரு விதமாக நாங்கள் எங்களை சரிப்படுத்திக்கொண்டு அடுத்த பாதிப்பை நோக்கி செல்கிறோம். இதுதான் புறச் செயற்பாடு. இவ்வளவோடு எதுவும் முடிந்துவிட்டதென்பதில்லை.
ஒவ்வொரு புறச் செயற்பாடும் எம்முள் விதைக்கின்ற விதைகள்தான் மிக முக்கியமானவை. பாதைகளில் தடைகளை மட்டுமே புறச்செயற்பாடு காட்டும். அவ்வளவு தான் அதன் வலிமை. உண்மையில் நமது வாழ்க்கைக்கு பாதைகளே கிடையாதே. யார் சென்ற பாதையிலும் நாங்கள் செல்லப்போவதும் இல்லை. முன்னோடிகளா? அவர்களின் பாதையில் நாங்கள் செல்லப்போவது இல்லை. அவர்களின் பாதைகளை கவனித்து பயின்று பின்னர் எங்கள் பாதைகளை உருவாக்கிக்கொள்கிறோம். இது தான் யதார்த்தம். இந்த வெற்று வெளியில் பாதைகளை உருவாக்கிக் கொள்ள கருவிகள்தான் விதைகள். புறச்செயற்பாடு விதைத்த விதைகள். எல்லோரது வாழ்விலும் எண்ணற்ற விதைகளை விதைப்பதுண்டு. ஒவ்வொரு நொடியும் ஒரு புது விதை போடப்படுகின்றது; நேற்று போட்ட விதை துளிர்கின்றது; எப்போதோ போட்ட விதை விருட்சமாகின்றது; நெடுங்காலம் முதல் போட்டவை உதிர்கின்றன. இந்த செயல் வட்டம்தான் அகச்செயற்பாட்டு வாழ்க்கை.
இந்த விதைகளை விதைப்பதில் தான் அன்னா கரீனினா என்ற நாவல் வடிவம் பெறுகின்றது.
டால்ஸ்டாயும் அன்னா கரீனினாவும்.
லியோ டால்ஸ்டாய் (mosaicmagazine.com)
டால்ஸ்டாயின் மிக உன்னதமான நாவலான போரும் அமைதிக்கும் பிறகு அவர் எழுதிய இன்னொரு முக்கிய இலக்கியம்தான் அன்னா கரீனினா. குடும்ப வாழ்வின் திருப்பங்கள், அவற்றின் பிறழ்வுகள், ஒரு பெண்ணின் உளநிலை பிரச்சனைகள், காதல், சராசரி முடிவுகள் என்று முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை தழுவியே எழுதப்பட்ட நாவல். பொதுவாக நிலவுகின்ற டோல்ஸ்டயிடம் இருந்து வர்ணனைகள் எடுத்து விட்டால் மீதம் இருப்பது உப்பு சப்பு இல்லாத கருத்துகளே என்ற சாடலுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் எழுதபட்ட நாவல். டால்ஸ்டாயின் புனைவுகள் என்பதை மீறி டால்ஸ்டாய் தனது வாழ்கையை பதிவிடும் எழுத்துகளாக அன்னா கரீனினாவை எழுதியிருகின்றார். பொதுவாக டால்ஸ்டாயின் வாழ்க்கைக்கும் அவரது புனைவுகளுக்கும் இடையிலான தூரம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்னே கரீனினாவில் வருகின்ற லெவின் என்ற பாத்திரத்தை முற்று முழுதாக தன்னை உருவகப் படுத்தியே உருவாகியிருகின்றார்.
இந்த நாவல் ‘The Russian Messenger’ என்ற பத்திரிகையில் 1873 இலிருந்து 1877 வரையான நான்கு ஆண்டுகள் தொடராக வெளிவந்திருக்கிறது. அதையே பின்னர் கோர்த்து நூலாக்கியிருகின்றனர். இந்த நாவல் மொத்தமாக இருபத்தொன்பது மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருகின்றது. அன்னே கரீனினா நாவல் என்பதை தாண்டி ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் திரைப்படமாகவும் வெளிவந்திருகின்றது. Holleywood இல் மாத்திரம் நான்கு முறை திரைப்படமாக்கபட்டிருகின்றது. அன்னே கரீனினாவின் பின்னர் அன்றைய ரஸ்சிய மக்களால் புஸ்கினுக்கு அடுத்த மிக பெரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இந்த நாவல் பிரெஞ்சு மொழியிலும் சம காலத்திலேயே சமாந்திரமாக எழுதப்பட்டது.
அன்னே கரீனினா எழுதுவதற்கான பின்னணி.
(pinimg.com)
டால்ஸ்டாய் பத்திரிகை ஒன்றில் “அன்னே ஸ்டேப்நோவா“ என்ற குடும்ப பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தியை வாசிக்கின்றார். இந்த நிகழ்வு அன்றைய கால கட்டத்தில் அசாதாரணமானது. அதனால் டால்ஸ்டாய் இந்த நிகழ்வின் மீது கரிசனையும் அதிக கவனமும் செலுத்தி அதன் பின்னணியை ஆராய தொடங்குகின்றார். பிணவறையில் தலை மட்டும் தெளிவாக தெரியக்கூடிய உடலெல்லாம் சிதறிப்போன பெண்ணின் நிலையை கண்டு வேதனை அடைகிறார். அவளை பற்றி தேடியதில் அவளின் இறப்பிற்கு கள்ள காதல்தான் காரணம் என்றும் அறிந்து கொள்கிறார். அதைவிட மேலாக அந்த பெண் புஷ்கினின் மகள் என்ற உறுதிப்படுத்தபடாத செய்தியும் உண்டு. இவையெல்லாம் தான் டால்ஸ்டாயை அன்னே கரீனினா எழுத தூண்டியிருகிறது.
நாவலின் சிறப்பு பக்கங்கள்
அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார். (thefilmcricket.files.wordpress.com)
டால்ஸ்டாய் குடும்பம் என்ற சட்டகத்தில் இருந்து சமூகம் என்ற சட்டகத்திற்கு எவ்வாறு சிந்தனைகள் கடத்தபடுகின்றன என்பதை விவரித்திருப்பார். கூட்டுபண்ணையை உருவாக்குதல் பற்றியும் விவசாயத்தில் ஓடியிருக்கின்ற பழமையை இல்லாமல் ஒழித்து புதுமையான விவசாய புரட்சி செய்தல் பற்றியும் சாதாரண வாழ்கை தரத்திலிருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயத்திவிடுவது பற்றியும் மிக செறிவாக வாதிக்கின்றார்.
நாவல் சில ஆழமான குறியீடுகளை கொண்டிருகின்றது. அதில் முக்கியமானதாக புகைவண்டி காட்டபடுகின்றது. ஒரு புகைவண்டியின் அடிப்படை நோக்கம் ஒரு பயணியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லலே. இதை மிக நுட்பமாக டால்ஸ்டாய் அன்னாவின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்துகின்றார். அன்னா தான் விரும்பும் புதிய உலகிற்கு புகைவண்டி கொண்டு சேர்க்கும் என்ற மனநிலையை, தனது தேவைக்கான உலகத்தை உருவாக்க கூடிய வல்லமை வாய்ந்த ஒன்றாக புகைவண்டியை உருவகப்படுத்துகிறார்.
அதைவிட ஒரு வாழ்வின் மிக கொடூரமான எல்லா மறையான விடயத்திற்கும் குறியீடாக புகைவண்டியை பயன்படுத்தியிருக்கலாம். அன்னாவின் வாழ்கையை அப்படியே வந்து அடித்து சிதிலமாகுகின்ற மறையான விடயங்களை புகைவண்டியின் மூலம் குறியீடாக்கியிருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.
கதையில் வருகின்ற முக்கிய வசனங்கள்.
All happy families are alike; each unhappy family is unhappy in its own way.
In that brief glance Vronsky had time to notice the restrained animation that played over her face and fluttered between her shining eyes and the barely noticeable smile that curved her red lips. It was as if a surplus of something so overflowed her being that it expressed itself beyond her will, now in the brightness of her glance, now in her smile.
“Respect was invented to cover the empty place where love should be. But if you don’t love me, it would be better and more honest to say so.”
“. . . [M]y life now, my whole life, regardless of all that may happen to me, every minute of it, is not only not meaningless, as it was before, but has the unquestionable meaning of the good which it is in my power to put into it!”
அன்னா கரீனினாவும் விவாதங்களும்.
மிக எளிமையாக முடிக்கப்பட்ட ஒரு இறப்பிலிருந்து வாதங்களை அன்றைய அறிவார்ந்த சமூகத்தினர் அன்னாவின் மீது எழுப்பினார்கள். அன்றைய எல்லா அவைகளிலும் அன்னாவின் முடிவு சரியானதா பிழையானதா என்ற வாதம் எழுந்துகொண்டே இருந்தது. இன்றும் எழுந்தவண்ணமே இருகின்றது. வேறுபட்ட மனோபாவங்களையும் பல்வேறு சூழ்நிலை சிக்கல்களையும் எதிர்நோக்குகின்ற சாதாரண ஒரு பெண்ணின் முடிவு தற்கொலை தானா? என்ற காலத்தின் கேள்வியோடு வாதங்கள் தொடர்ந்தவண்ணமே இருகின்றன.
ஒரு உன்னத இலக்கிய படைப்பு காலத்தை மீறியது. காலக்கணிப்பு செய்யமுடியாத அர்த்தங்களை சுமப்பது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவும் காலத்தை கடந்த ஒரு உன்னத படைப்பு.
முழு நாவல் – ஆங்கிலத்தில்
உசாத்துணைகள்
உலக இலக்கிய பேருரைகள் – எஸ்.ராமகிருஷ்ணன்
Spark Notes
குட்டை குடிநீர் – 03
தமிழ் இலக்கிய சூழலில் இன்று நின்று நிதானித்து வாசித்து கடக்கின்ற போக்கு அருகிப்போய் விட்டது. இதை எந்த கட்ட வாசிப்பு அல்லது இலக்கிய நிலை என்று கூறுவது சிரமம். ஒரு வகையில் வாசகனின் நேர முகாமைத்துவம் நேரடியான தாக்கத்தை செலுத்தினாலும் வாசகன் செலவு செய்கின்ற வீண் பொழுதுகளை கணக்கிடும் போது நேர சிக்கல் என்பது பொருட்டல்ல என்றே தோன்றுகின்றது. வாசிப்பு பரவலாக்கம் இன்று வியாபித்துப்போய் இருந்தும், வாசிப்பிற்க்கான ஊடகங்கள் அதிகரித்துபோயிருந்து வாசிப்பு மட்டம் மிக தாழ்வாகவே உள்ளது. வரலாற்று ரீதியில் இதை நியாயப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் உலக வாழ்வில் எந்த காலகட்டத்திலும் இதே போன்ற ஒரு குவிய வாசிப்பு பண்பாடு தான் இருந்திருகிறது என்கிறார்கள்.இந்த குவிந்த வாசிப்பு பண்பாடு முன்னைய காலகட்டத்திற்கு ஒரு சவாலாக இருக்கவில்லை. அன்றைய சமூக ஒழுங்கமைப்பில் வாசிப்பின் பங்கு கணிசமாக இருந்தாலும் வாசிப்பு பரவலாக்கம் ஒரு பெரிய பொறிமுறையாக தேவை இல்லாமல் இருந்தது. பல புரட்சிகளுக்கு வாசிப்பு அனுபவத்தின் தேவை அதிகமாக இருந்திருக்கவில்லை. அக்கால சூழலிய கட்டமைப்புக்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. புரட்சிக்கான விதை சமூகத்தாலே விதைக்கப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் இது எல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கான பதிலளிப்பிலே வாசிப்பின் பரவலாக்கத் தேவைக்கான அவசர அவசியம் உணரப்படும். தினசரி வாழ்கையில் நடக்கின்ற சம்பவங்களும் அதன் பின்னணிகளும் தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தின் மீதான கேள்விக்குறியை ஏற்படுத்துகின்றது. எம்மிடையே பரவிக்காணப்படுகின்ற மந்தமான சுய பகுத்தறிவு இதற்கு முக்கிய பங்கை ஆற்றுகிறது. ஒரு பிரச்சனையை அல்லது ஒரு நிகழ்வை பகுத்து ஆராய்ந்து ஆலோசித்து முடிவை எடுக்கின்ற சாதாரண மனிதப்பண்பு கூட இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. சூழ்ந்துள்ள சமூகம் அதற்கான எந்த வாய்ப்புகளையும் வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்களும் இதே மந்த கோட்பாட்டு வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே சூழலிய பிரச்சனை உங்களால் உருவாகிக்கொண்டு இருக்கும்.
இதற்கான தீர்வு எது என்பதை சிந்தித்துப் பார்க்கின்ற ஏற்பாடு எங்களிடையே இல்லை. அதற்கு முன்னர் சிந்தித்து கொள்வதற்க்கான கருத்தியலையும் அனுபவங்களையும் நாங்கள் திரட்டி கொள்வதில்லை. இந்த கருத்தியலையும் அனுபவங்களையும் நூல்களில் இருந்து பிரித்து எடுத்து வாழ்க்கைக்கு பிரதியீடு செய்து வாழ்ந்து பார்த்தல் என்ற பேச்சிற்கே இன்று இடம் இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இன்றைய பாடசாலையும் சமூகமும் குடும்பமும் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில்லை. மாறாக இன்னும் இழிய நிலைக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளார்கள். டெங்கிற்கு ஒலிபெருக்கிமூலம் அறிவுறுத்தி தண்டப்பணம் செலுத்தச் செய்வது போன்று கண்டிப்பாக வாசிக்க வைக்க அரசாங்கம் சட்டம் அமுலாக்குதலின்றி இந்த சமூகம் விரைவில் எதிர்கொள்ளப்போகும் உயிர்கொல்லி நோய்க்கு வேறு மருந்தில்லை.
தேவதைக்கதை. – சிறுகதை.
வீட்டு விறாந்தையின் கிழக்கு மூலையில் இருந்த மரக்கட்டில், இன்று விறாந்தையின் நடுவிற்கு கொண்டுவரப்பட்டது. நல்ல திடமான முதிரை மரத்தால் சீவி செய்யபட்டிருந்தது. அப்பப்பா சொன்னதன் படி இந்த கட்டில் என் பூட்டப்பாவின் அப்பா முதன் முதலில் பயன்படுத்தியிருந்தார். சந்ததி சந்ததியாக இந்த கட்டில் குடும்பத்தின் தலைவர்கள் வசமே இருந்தது . இந்த கட்டிலில் பெண்கள் ஏறக்கூடாது, தொடக்கூடாது என்பது வழக்கம். அவ்வாறு மாறி தொட்டால் கூட அது பெரும் இழுக்காகவே கருதப்படும். அதனால் நானோ என் அம்மாவோ பாட்டியோ அதற்கு அருகில் கூட செல்வதில்லை. பாய், தலையணை, போர்வையையும் பாட்டி , அப்பப்பாவிடம் சொல்லித்தான் சுருட்டி வாங்குவார். ஒருக்கால் அப்பப்பா கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுகொண்டிருக்கும்போது ,பாட்டி மூலிகைத்தண்ணீர் கொண்டு போய்க் கொடுக்க அருகே வரதே என்று காலால் கோப்பையையும் பாட்டியையும் உதைந்து தள்ளியது இன்னும் மனக்கண் முன் நிற்கிறது. பாட்டி எந்த சலனமும் இல்லாமல் கோப்பையை எடுத்துக்கொண்டு குசுனிக்கு போய் முடிய அப்பப்பா என்னை கூப்பிட்டு “ கொஞ்சம் தேதண்ணி தா மோனை “ என்று கேட்டது அடுத்த உதை எனக்கோ என்ற பயத்தை தூண்டியது.
என்னதான் நான் ஆம்பிள்ளையா இருந்தாலும் அந்த கட்டிலுக்கு கிட்ட போக செரியான பயம். எனது அப்பா எப்போதும் அப்பப்பா பற்றி சொல்லும் போது நல்ல கதை சொல்லி என்று பாராட்டுவார். அந்த கட்டிலில் அவரின் மடியில் தலை வைத்து அரைஞான்கொடியை கையில் வைத்து இழுத்துக்கொண்டே அவரின் பால்யம் முடிந்ததாக கூறும் போதெல்லாம் எனக்கும் ஒரு வித ஆசை உண்டாகும். அப்பப்பாவின் கதைகளில் பேயும் பிசாசும் நிறைய வரும் என்றும் அவரின் கதைகளில் எப்பொழுதும் ஒரு ஆண் தேவதை இருப்பார் என்றும் அப்பா சொல்லுவார். எனக்கு அந்த ஆண் தேவதை எப்படி இருப்பார் என்று கனவு கண்டே சித்தம் கலங்கி விடும் போலிருந்தது.ஒரு போதும் அப்பபாவிடம் இதைப் பற்றி கேட்டது கிடையாது.
அப்பப்பா கட்டிலின் மூலையில் , இரண்டு சுவர்கள் இணைகின்ற ட வளைவில் நடுவே தலையணை ஒன்றை வைத்து சாய்ந்தபடி ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டே இருப்பார். அவரின் கட்டில் மூலையில் மூன்று புத்தகங்கள் மட்டுமே எப்போதும் இருக்கும். அன்றைய பத்திரிகை, கல்யாண வீட்டு அழைப்பிதழ், அந்தியட்டி வீட்டு அழைபிதழ் சிலவும் ஓரத்தில் நேர்த்தியாக வைக்கபட்டிருக்கும். யாரும் ஆம்பிள்ளைகள் வந்தால் மட்டும் முகம் கொடுத்து கதைப்பார். அதுவும் எல்லா ஆம்பிள்ளைகளும் அவர் முன்னால் இருந்துவிட முடியாது. ஒரு வெற்றிலை பெட்டி ஒன்று கைத்தாங்கலாக வைத்திருப்பார். அவர் பெரிதாக போடுவது கிடையாது. வயலுக்கு செல்லும்போது மட்டும் வாய்நிறைய சப்பிக்கொண்டும் போகின்ற வழியெல்லாம் சிவப்பு சிவப்பாக உமிழ்ந்துகொண்டும் போவார். வீட்டு வாசலில் சிவப்பை பின்தொடர தொடங்கினால் அவரின் நிழல் எல்லைக்குள் சென்று இலகுவாக அடைந்து விடலாம். ஒரு முறை பாட்டி “ இம்புட்டு ரோசம் இருக்குறவர் ஏண்டா மோனை களத்துக்கு மட்டும் துப்பிட்டே போறார் எண்டு கேளன்” என்றார். ஆண் தேவதை பற்றியே கேட்க முடியாமல் இருந்த எனக்கு இந்த கேள்வி எம்மாத்திரம்.
என் அப்பாவிற்கு கட்டில் மேல் எல்லாம் பிரியம் கிடையாது. ஒரு வேளை வயது போய் முடிய வந்துவிடலாம். அப்பா கட்டிலின் அருகில் இருந்து அப்பப்பாவிடம் ஏதோ மெதுவாக கதைத்துகொண்டிருந்தார். பாட்டியும் அம்மாவும் நானும் சுவரில் நின்ற பல்லியும் கூர்ந்து கேட்டுகொண்டிருந்தோம். அப்பா சொல்ல சொல்ல அப்பப்பாவின் கண்கள் கணத்துக்கொண்டு வந்தன.சிறிது நேரத்தில் முகத்தில் எந்த மாறுதலுமின்றி அப்பா இடைத்தை விட்டு எழுந்து வெளியே போனார். அப்பப்பா கொஞ்ச நேரம் அப்பா போன தடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்து விட்டு தன்னிடம் இருந்த பழைய புத்தகங்களில் மிக பழையதை எடுத்து விரித்தார். நாம் நால்வரும் வைத்த கண் வாங்காமல் அப்பப்பாவின் செய்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தோம். அப்பப்பா மெதுவாக திரும்பி என்னை பார்த்து “ வா மோனை “ என்றார். பின்னாலிருந்த அம்மா உந்தி விட நான் பயத்தோடு கட்டிலுக்கு அருகில் ஊர்ந்தேன்.
“ ஏறி இரு மோனை “
மெல்லியதாக கைகளை கட்டிலின் விளிம்பில் ஊன்றி சாவகாசமாக அமர்ந்து கொண்டேன். அப்பப்பா என் தலையில் கையை வைத்து அழுத்தி தன் தொடையில் கிடத்தினார்.என் கண்கள் கண்ணீரால் நிரம்பி முட்டிகொண்டிருந்தது. அப்பப்பாவின் வேட்டி நனைந்துவிடக்கூடாது என்று அடக்கிகொண்டேன். அவர் தனது கண்களை அருகிலிருந்த துவாயால் துடைத்து விட்டு கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார். தேவதைக்கதை…. ஆண் தேவதைக்கதை …… கதை ஒரு மெழுகிய வழுக்கும் தரையைப்போல மிருதுவாகவும் சலனமற்றும் இருந்தது. அப்பப்பா ஒரு நல்ல கதை சொல்லி தான். அம்மாவும் பாட்டியும் கதைசொல்ல தொடங்கும் போதே உள்ளே போய் விட்டார்கள். நானும் பல்லியும் மட்டும் கதையை நீண்ட நேரம் கேட்டுகொண்டிருந்தோம். இடையில் நானும் தூங்கிவிட்டேன்.
அப்பப்பா வெற்றிலை பெட்டியிலிருந்து வெற்றிலையை வாய்நிறைய சப்பிக்கொண்டும் துப்பிக்கொண்டும் வயலுக்கு போனதாக பல்லி சொல்லி பின்னாளில் கேள்விப்பட்டேன்.
முதன் முதலில் கதை கேட்கும் போது எனக்கு வயது இருபத்தைந்து. இப்போது எழுபது. என் நான்கு பேரக்குழந்தைகளையும் என் மகள் இருவரையும் என் மனைவியையும் வைத்துகொண்டு அதே கட்டிலில் சந்தோசமாக தேவதைகளின் கதையை சொல்லி முடித்து விட்டேன். பெண்தேவதைகளின் கதையை. என் பெண் பேரக்குழந்தைகளில் ஒன்று என் மடியின் மீது சிறுநீர் கழித்தது கூடத்தெரியாமல்.
ஒரு மணி நேரம் முன்பு. – முத்துலிங்கம் என்ற கதைசொல்லியின் நிறைவு.
ஆ.முத்துலிங்கம் ஈழ இலக்கியத்தின் முக்கிய அடையாளம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. ஒரு கதை சொல்லியின் மிக தேர்ந்த வடிவமே முத்துலிங்கம். கதைகளை வாசகர் சிரமப்பட்டு அணுகாமல் மெல்லிய நீட்சியுடன் விரிகின்ற நுட்பமான கதைசொல்லல் அவரது. முத்துலிங்கத்தின் பல கதைகளின் முடிவும் அதனால் வாசகனுக்கு நீளுகின்ற வாசிப்பின் பின்னான அமைதியும் அவரின் எழுத்தாளுமையின் வலிமையே.
இறுதி காலச்சுவட்டில் வெளியான ஒரு மணி நேரம் முன்பு என்ற சிறுகதையும் வாசிப்பின் பின்னான நீண்ட அமைதியை தருகின்ற அவரின் படைப்பாகும். கல்வியை ஆதாரமாகக் கொண்டு வறுமையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் தாய் மகன் உறவினை கதையாடலாக கொண்டு எழுதப்பட்டிருகின்றது. நிதர்சனமாக பேசப்படவேண்டிய கரு. இன்றைய சூழலில் கல்வி நிறுவனங்களில் காணப்படுகின்ற அயர்ச்சியான போக்கு வறிய மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற வகையில் இருக்கின்றது. பொதுவாக பல்கலைக்கழக தேர்வு முறை எந்த தரப்பினையும் சாராது சமத்துவமாக இருந்தாலும் அதைத்தாண்டி விரிந்துபோய்க்கொண்டிருக்கின்ற தனியார் கல்வி மையங்களும் இதர அரச கல்வி நிலையங்களும் வறிய மாணவர்களை அடைகின்ற விகிதம் மிக சொற்பமாகவே உள்ளது. கையில் பணம் இருக்கின்ற எவரும் எவ்வித தகுதிகளும் இன்றி பொறியியலாளர்களாவும் மருத்துவர்களாகவும் கணக்காளர்களாகவும் வேறு வேறு உயர்நிலை உத்தியோகத்தர்களாகவும் உருவாக்க கூடிய கல்வியல் நிலைமை இன்று எழுந்துள்ளது.
இதில் வறுமை கோட்டின் கீழ் மிக திறமையுடன் இருக்கின்ற மாணவர்கள் வெளிப்படையாக ஒதுக்கப்படுகிறார்கள். இன்றைய இலங்கையில் இருக்கின்ற பல்கலைகழக நுழைவு முறையில் உட்புக தவறுகின்ற வறிய மாணவர்களின் எதிகாலம் கேள்விக்குறியாகின்றது. அவர்களுக்கான சரியான வழிநடத்தல் அதன் பின்னர் கிடைப்பதில்லை. அவர்கள் வழமை போலவே அவர்களின் குடும்ப தொழிற்கு திரும்பி விடுகின்றனர். இலங்கையில் இருக்கின்ற ஏனைய தொழில் துறை சார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான சரியான விளக்கம் உரிய நேரத்தில் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இதிலிருந்து வறிய சமூகத்தின் பின்னடைவு இன்னும் அதிகரிகின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்தின் அறிகுறி அல்ல.
இதே பிரச்சனையின் மையத்தில் தான் கதை நகர்கின்றது. சிறந்த கல்வி வலிமை உடைய ஒரு சிறுவனை பெரிய பாடசாலை ஒன்றில் சேர்க்க தாய் எடுக்கின்ற அடுக்குகளோடு கதை ஆரம்பமாகின்றது. கதையின் ஆரம்பத்தில் சிறுவன் கடைக்கு சென்று , ஒரு வீட்டின் அடிப்படை உணவு விகுதி உப்பை கேட்பதும்; கடைக்காரனால் பழைய மிகுதியை செல்லுத்தும்படியும் உப்பு கொடுக்க மறுக்கப்பட்ட நிலையிலும் வீடுவந்து சேர்கிறான். உப்பில்லாத கஞ்சியை சிறுவன் குடித்துவிட்டு தாய் வெறும் வயிறுடன் கிளம்புகின்ற வறுமைக்குறிப்புகள் கதையின் ஆரம்பத்தில் பரவுகின்றன.
ஒரு தாயின் மனநிலையை, தனது மகனை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடவேண்டும் என்ற ஒரே நோக்கை உடைய ஒரு தாயின் தாயார்ப்படுத்தல்கள் ஆழமான குறியீடுகளால் உணர்த்தப்பட்டிருகின்றது. படித்த, வசதியான சமூகத்தில் இருந்து வருகின்ற பெண்களின் லட்சணங்களை அவனின் தாய் உருவகித்திருந்த பாங்கில் தன்னையும் ஒரு வசதியான பெண்ணாக அலங்கரித்துகொள்ளும் இடம்; அந்த தாயின் ஆழமான மனசிக்கல்களை எடுத்து நிற்கின்றது. தன் அலங்கோலமே மகனின் கல்விக்கு முட்டு போடக்கூடாது என்கிற மனநிலையை முத்துலிங்கம் சொல்லாமல் சொல்லுகின்றார்.
அதே தாய் காலதாமதத்தால் நழுவப்படுகின்ற வாய்ப்பின் பின்னர் மீண்டும் வழக்கமாக அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற பக்குவம் வறுமையின் மிக சிறந்த படிப்பினையாக தோன்றுகின்றது. ஏமாற்றங்களும் வலிகளும் தினம் தினம் பழக்கிப்போன ஒன்றாகவும் கவலைகள் தோன்றுவதும் மறைவது வறிய சமூகத்தின் எழுதபடாத வழக்கமாகவும் இருகின்றது.
அதிக கவனமாக சிரத்தையுடன் பள்ளிக்கு மாகாணத்தில் முதல்நிலை பெற்ற மகனை அழைத்து செல்லுகின்ற அந்த தாயின் ஆர்வமும் , வாய்ப்பின் மீது பற்றிருந்தும் வறுமையை நோக்கி விழிப்படைந்த மகனின் ஆறுதல்களும் காலைக்கும் மாலைக்குமான வித்தியாசத்தை சரியாக புரிந்து வைத்துள்ள குடும்பங்களின் பிரதிநிதிகள்.
முத்துலிங்கம் என்ற கதை சொல்லி யாரோ ஒரு பிரதிநிதிக்கு முழுமையாக கதைசொன்ன நிறைவை வாசகன் பெற்றுக்கொள்கிறான்.
பெருவெளியிலிருந்து அஞ்சலிகள். – கவிக்கோ அப்துல் ரகுமான்.
இன்று முக்கியமான நாள். சிலரது வருகை நமது வாழ்கையை வேறு திசைக்கு திருப்பி விடுவதுண்டு. அவர்களின் எண்ணங்கள் எம்மை வேறு தளத்திற்கு கொண்டு சேர்ப்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஆராதித்து கொண்டே இருப்போம். அந்த அராதிப்பு சுயநலம் சார்ந்த ஒன்றுதான். அப்படி ஒரு தூய ஆராதனை அப்துல் ரகுமான் மீது எனக்குண்டு.

முன்னைய பதிவில் தான் அப்துல் ரகுமானை தேடி தேடி வாசித்தேன் என்று எழுதியிருந்தேன். தமிழ் மான்றதின் கவிதை பயிலரங்குகள் நடந்துகொண்டிருந்தது. உள் வேலைகள் இருந்தபடியால் பார்வையாளனாக பங்கேற்க முடியாமல் போனது. கவிதைகளை பற்றியும் கவிஞர்களை பற்றியும் ஒவ்வொருவரது நுட்பங்கள் பற்றியும் அனுபவங்களை வளவாளர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். நான் வெளியில் நின்று சோடா ஊற்றிக்கொண்டிருந்தேன். மண்டபத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு ஒலியிலும் மிதமான கவிக்கோவின் பெயர் உச்சரிக்க கேட்டபோதும் என்னுள் இருந்த வைரமுத்துக்கும் வாலிக்கும் பழனி பாரதிக்கும் ஆன இடைத்தை அந்த ஒலி நிரப்பிக்கொள்ள முடியவில்லை. ஆனால் பெரிய கவிஞர்கள் எல்லாம் கவிக்கோவின் ரசிகர்கள் என்பதை மிக ஆழமாக என்னுள் பதித்து கொண்டேன்.
அதன் பின்னர் எப்படி அப்துல் ரகுமானின் ரசிகன் ஆனேன் என்று தெரியவில்லை. ஆனால் புத்தக நிலையங்களிலும் கண்காட்சிகளிலும் அதிகம் பைகளை நிரப்பியவர் அவர்தான். எல்லோருக்குமே கவிதைகள் வாசிப்பில் ஒரு ஆரம்பம் இருக்கும். அந்த கவிதைகளை சொல் அலங்காரதிற்காகவும் உச்சரிப்பு அழகிற்காகவும் ஒழிந்திருந்த புதிர்களை லாவகமாக அவிழ்க்கும் நுட்பதிற்க்காகவும் பிடித்திருக்கும். இன்னும் சிலருக்கு கவிதைகள் காதலிக்காக பிடித்துபோயிருக்கும். அந்த நிலையில் நின்று விடமுடியாது. அதைத்தாண்டி அடுத்த தளதிற்கு செல்ல ஒரு வழிகாட்டி தேவைபடுகிறது. என்னை கைத்தாங்கலாக கூட்டி சென்ற வழிகாட்டி அப்துல் ரகுமானே. கவிதைகளின் ஆன்மாவை உணர கற்று தந்தவர். கவிதைக்குள் கவிஞனும் அவனின் வாசகனும் சஞ்சாரம் செய்யும் புள்ளியில் நின்று கவிஞன் கவிதையை திரிக்கவேண்டும் என்று இன்றளவில் நான் எழுதுகின்ற மிக சில கவிதைகளுக்கு ஆன்மாவை அளித்தவர்.
கால அந்தாதி
நரைத்துத் தோன்றி
கறுத்து உதிரும்
தின ரோமங்களைச்
சவுரி செய்யச்
சரித்திரம் திரட்டும் ;
என் நினைவுகளும் தான்
அவரிடம் ஒரு கவிதையை வாசகனுக்கு எப்படி கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நுட்பம் தெளிவாக தெரியும். அவரின் பல புத்தகங்களில் கவிதையை வெறுமனே கவிதைகளாக முடித்துவிடாமல் வாசகன் உள்ளார்ந்து செல்ல முன்னுரையும் விளக்கவுரையும் தருவார். அதுவும் மிக சிறந்த கவிதை வடிவிலேயே இருக்கும். ஆ.. எனக்கும் அவருக்குமான முதலாவது வாசிப்பு உறவு இல்லையிலும் இருக்கிறான். அந்த வடிவமைப்பு என்னை மிகவும் பாதித்தது. குறியீட்டு கவிதைகளுக்கு அவர் எழுதுகின்ற உரையில் லயித்து போயிருக்கிறேன். ஒரு கவிதையை அனுபவ வாசகனாக அணுகுகின்ற நுட்பம் அவரிடம் இருந்து உரையாடல் பகுதியில் இருந்து கற்றுகொண்டதே. நான் சொற்பமாக எழுதிவருகின்ற கவிதை ரசித்தல் தொடர் , அந்த அனுபவத்தின் நீட்சியே.
அப்துல் ரகுமான் அவரின் புத்தகங்களில் அறிமுகம் செய்யும் உருது அரபி மலையாள மேல்நாட்டு கவிஞர்கள் ஆரம்பத்தில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இப்போது அதிகமாக பாதிக்கின்றார்கள். அவர்களின் கவிதைகளுக்கான திறவுகோலும் அவரே. செம்மொழி ,கவிதை ஓர் ஆராதனை,பூக்காலம்,தட்டாதே திறந்திருகின்றது,இல்லையிலும் இருக்கிறான்,தொலைபேசிக்கண்ணீர் ,பூப்படைந்த சபதம்,பித்தன் ,அவளுக்கு நிலா என்று பெயர், மரணம் முற்றுப்புள்ளி அல்ல,மகரந்த சிறகுகள்,சொந்த சிறைகள்,முட்டைவாசிகள்,சுட்டு விரல்சோ திமிகு நவகவிதை,தாகூரின் சித்ரா,கம்பனின் அரசியல் கோட்பாடு, பால்வீதி போன்ற அவரின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன். பத்திரமாக வைத்திருக்கிறேன்.

உதிரும் சிறகுகள்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
நான் என்னும் நப்பாசை 2 இல் நான் ,
இடையில் வாசிப்பும் அனுபவ பகிர்வும் (தமிழ் மாமன்ற நிகழ்வு , தமிழ்மாமன்றம் பற்றி விரிவாக எழுதவேண்டும் ,எழுதுகிறேன் காலதாமதமாக ) நடந்த போது தன அப்துல் ரகுமான் அறிமுகம் ஆனார். நான் வாசித்த தனிநபர் எழுதிய புத்தகங்களில் அதிகமானவை இவருடையதே. அன்று வரை இலகுவாக இருந்த கவிதைகள் இவரால் புது பரிமாணம் பெற்றன. ஒவ்வொரு வரிகளுக்கு பின்னும் சமுத்திர பரப்பு விடயங்கள் பொதிந்து இருப்பதை அவர் காட்டினார். சொற்களின் கோர்வைகள்தான் கவிதை ஏன்டா விம்பம் சிதறி பல கோர்வையான விடயங்கள் சில சொற்களில் என்று புரிய ஆரம்பித்தது. கவிதையை மட்டும் அன்றி பல கவிஞர்களையும் அறிமுகம் செய்தார் . இன்று நான் மொழிபெயர்க்கப்பட்ட அரபுக்கவிதைகளை வாசிக்கவும் இரசிக்கவும் அவரே பிள்ளையர் சுழி . அவரின் புத்தகங்கள் என்னை இன்னொரு தளத்திட்கு எடுத்து சென்றது. இன்று நான் வியந்து பார்க்கும் கவிஞர் அப்துல் ரகுமான் என்பதில் என் வாசிப்பு வட்டம் அடைந்துள்ள விருத்தியை உணரக்கூடிய அளவு உள்ளது.
என்று எழுதியிருக்கிறேன். வாசிப்பு நீட்சி இன்று அதிகமாகிவிட்டதால் சில கருத்துக்கள் மாறி இருக்கலாம். ஆனால் அப்துல் ரகுமான் மாறிவிடவில்லை.
சமீபகாலமாக கவிக்கோவின் உரைகளை இணையத்தில் பார்த்து வருகிறேன். அவை கலகலப்பானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை உணர்கிறேன்.
தமிழ் மாமன்றத்தின் வாசிப்பும் அனுபவ பகிர்வும் நிகழ்வில் அவரின் பித்தன் நூலை பற்றி நீண்ட விமர்சன பகிர்வு செய்திருக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமானிற்கு என் கனவுப்பெருவெளியிலிருந்து அஞ்சலிகள்…
ஒரு படைப்பாளியும் மூன்று மனநிலையும். – சுந்தர ராமசாமியின் பிறந்த நாள் நினைவு.
அன்று தமிழ் மாருதம் விமர்சையாக நடந்துகொண்டிருந்தது. இலக்கிய நிகழ்வுகளோடு மண்டபத்தின் அருகில் இருந்த நீண்ட திறந்த வெளியில் பூபாலசிங்கம் புத்தக நிலைய புத்தக விற்பனை மையமும் போடப்பட்டிருந்தது. வரிசைக்கு நான்கு ஐந்து மேசைகள் வைத்து புத்தகங்களை பரவி விட்டிருந்தார்கள். நிகழ்வுகளை கவனிக்கும் அதே வேளை பார்வையாளர்களையும் கவனிக்கவேண்டி இருந்ததால் இரண்டு மூன்று கட்டமாக புத்தகங்களை கொள்வனவு செய்தேன். அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகள் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. நிகழ்வுகளுக்கு முன்னரே இருக்கின்ற அவரின் புத்தகங்களில் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று வாங்கியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அவ்வாறே அதுவும் நிறைவேறியது. இடையிடையே பலரோடு புத்தகங்களை பார்க்கவும் அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் முயன்றேன். மதுரகன் அண்ணாவுடன் புத்தகங்களை பார்த்துகொண்டு சென்றபோது தான் அந்த நிகழ்வு நடந்தது.
அப்துல் ரகுமானின் சில புத்தகங்களை காட்டிவிட்டு ஒரு அறுபது பக்க அளவுள்ள சிறிய கருமை நிற மட்டையில் பென்சிலால் யாரோ ஒரு கிழவனின் சித்திரம் வரையப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டினார். பள்ளம் என்று தலைப்பிடப்பட்டிருந்தது கீழே சுந்தர ராமசாமி என்று அச்சிடப்பட்டிருந்தது. வித்தியாசமான எழுத்து பிடித்திருந்தால் வாசித்து பார்க்கலாம் என்று கூறி அதை அன்பளிப்பாகவும் தந்தார். உண்மையில் ஒதுக்கியிருந்த பணத்தை ஏற்கனவே அப்துல் ரகுமான் கைப்பற்றி விட்டதால் பள்ளம் அன்பளிப்பனது. இது மற்றவர்கள் கூறுவது போல எதேச்சையாக கிடைத்த பொக்கிசமாக எல்லாம் நான் கருதவே இல்லை. சிறுகதை வாசிப்பிலும் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. வாங்கிகொண்டுவந்து ஒதுக்கி வைத்து விட்டேன். உள்ளே திறந்து கூட பார்க்கவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அப்துல் ரகுமானை முழுமையாக வாசித்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தேன். எல்லோர் போலும் இல்லாமல் கல்கியை ஆரம்பத்தில் வாசிக்கவில்லை, சாண்டில்யனை வாசிக்கவில்லை, சுஜாதாவை வாசிக்கவில்லை, ராஜேஷ்குமாரை வாசிக்கவில்லை. நான் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தனினுடையது. காலத்தால் பிந்திப்போன முற்போக்கு சிறுகதைகளை வாசித்த மாத்திரத்தில் எனக்குள் எந்த சஞ்சலமும் ஏற்படவில்லை. அவரிலிருந்து வாசிப்பை கொஞ்ச பரவலாக்கி மற்றைய எல்லோரையும் சமாந்தரமாக வாசிக்க தொடங்கினேன். இதில் கூட சுந்தர ராமசாமின் அகப்படவில்லை. ஒருவர் தனது உரையில் சுந்தர ராமசாமியை பற்றியும் அவரின் கருத்து நிலையை பற்றியும் தொட்டு செல்ல பள்ளம் ஞாபகம் வந்தது. சுந்தர ராமசாமியை விக்கிபீடியாவில் தேடிய அறியாமை என்னுள் இருந்தது. காலச்சுவட்டின் பிரதம ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது சுந்தர ராமசாமியை எனக்குள் ஒரு உச்ச நிலைக்கு உயர்த்தியது. பின்னரான காலத்தில் எனது ஒப்பியல் அறிவை நினைத்து சிரித்துக்கொள்ள இதுவும் சான்றானது. பின்னர்தான் பள்ளம் சிறுகதை தொகுப்பை திறந்தேன்.
முதலாவது கதையே ரத்னாபாயின் ஆங்கிலம், அவ்வளவு கொடுமையான வாசிப்பு அனுபவம் சாரு நிவேதிதாவின் மொழிபெயர்ப்பு கதைகளில் தவிர வேறு எதிலும் வந்ததில்லை. அத்தோடு மூடி வைத்து விட்டேன். சுந்தர ராமசாமியாவது? பள்ளமாவது?

2006 ம் ஆண்டு காலச்சுவட்டில் அரவிந்தன் எழுதிய சுந்தர ராமசாமி பற்றிய மதிப்புரை போன்ற கட்டுரை ஒன்றை வாசித்தேன். அந்த கட்டுரையில் சுந்தர ராமசாமியை அரவிந்தன் உயர்த்திக்கொண்ட பாங்கு என்னை வியக்க வைத்தது. மிக கொடுமையான எழுத்துகளை எழுதுபவர் ஒருவரையா இவர் இப்படி எழுதுகின்றார்? என்ற எண்ணம் ஓடியது. அதில் அறிமுகமாகியது தான் குரங்குகள் சிறுகதை.
குரங்குகள் பெயரை கேட்ட மாத்திரத்தில் பள்ளம் சிறுகதை தொகுப்பில் தலைப்பை மட்டும் பார்த்த நினைவு எழுந்தது. குரங்குளை வாசித்தேன். அதுவரையில் யாருடைய மொழி நடையிலும் கதை சொல்லலிலும் ஒன்றிப்போகாத நான், குரங்குகளோடும் சுராவோடும் ஒன்றிப்போனேன். குரங்குகளில் இருந்த முற்போக்கு தனம், அவரின் கருத்து நிலை ஆழம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டேன். வாசித்த உடனேயே ரத்னாபாயின் ஆங்கிலத்தையும் வாசித்தேன். எனது வாசிப்பின் பரிமாண வளர்ச்சிக்கு ரத்னாபாயின் ஆங்கிலம் ஒரு அளவுகோலாக இருந்தது. கொடூரமான எழுத்து என்று வசை பாடிய ரத்னாபாயின் ஆங்கிலம் இன்றுவரை வாசித்த மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகியது. சாருவின் மொழிபெயர்ப்பு சிறுகதைகளும் இன்றைய நாளில் வாசிக்க சுவைப்பவையாக இருகின்றதிற்கு காரணம் சாருவா அல்லது அசல் எழுத்தர்களின் ஆளுமையா தெரியவில்லை.
தொடர்ந்து அவரின் புத்தகங்களை வவுனியாவில் தேடிப்போனால் வேறு ஏதாவது புத்தகங்களோடு தான் வந்து சேரவேண்டிய நிலைமை இருந்தது. இலக்கிய பகுதியை காட்டச் சொன்னால் , அப்படி ஒரு பிரத்தியோக பகுதி இல்லை என்றார்கள். நாவல்கள் சிறுகதைகள் கேட்டால் , ரமணிச்சந்திரனின் பக்கம் கையை நீட்டுகிறார்கள். ஒரு முறை ராமனிச்சந்திரனுடன் இருந்த சாதத் ஹசன் மண்ட்டோ அலட்சியப்படுத்தப்பட்டு சில காலத்திற்கு முதல் அதே இடத்திலிருந்து அணுவளவும் அசையாமல் கிடைக்கப்பெற்றார். இந்த நிலையில் எங்குபோய் சுராவை தேடுவது?

அவரின் சிறுகதைகளை இணையத்தில் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொள்வேன். ஒரு முறை அவரின் கவிதை ஒன்றையும் காணுற்ற போது தான் சுரா கவிதைகளையும் எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். உண்மையில் அதுவரையில் சுந்தர ராமசாமியை வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளராகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் நூலகத்தில் அங்கத்துவமும் கிடைத்தது. முதலில் சென்று எடுத்த புத்தகம் டால்ஸ்டாயின் போரும் அமைதியும். வாசிக்காமலே திரும்பி கொடுத்து விட்டு காகங்கள் சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். ஒவ்வொரு சிறுகதையாக வாசிக்க தொடங்கி மூன்று நாட்களுக்குள் முடித்துக்கொண்டு உடனே ஆளுமைகள் மதிப்பீட்டினையும் வாசிக்க தொடங்கினேன். ஆளுமைகள் மதிப்பீடு இன்று வரை என் வாசிப்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்ற ஒரு படைப்பாகவே இருக்கின்றது.
தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஒரு புளியமரத்தின் கதை , ஜே ஜே சில குறிப்புகள், பிரசாதம், தொலைவிலிருக்கும் கவிதைகள் , நடுநிசி நாய்கள், இதம் தந்த வரிகள் ,விரிவும் ஆழமும் தேடி , யாரோ ஒருவனுக்காக போன்றவற்றை வரவழைத்து உடைமை ஆக்கிக்கொண்டேன். நூலகத்தில் குழந்தை பெண்கள் ஆண்கள், மற்றும் சில கட்டுரைகளையும் வாசித்தேன்.
சுந்தர ராமசாமியின் கதைகளை பிராமணிய தொனியுடன் , நளினத்துடன் வாசிக்கும் போது எனக்கு இன்னும் உவர்ப்பாக இருந்தது. எழுத்தாளன் என்பதை தாண்டி ஒரு சிறந்த விமர்சன உரையாளனாகவும் பேச்சாளனாகவும் இருந்தார்.
சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம் பார்த்து அவரின் வாழ்க்கை மீதும் அவரின் எழுத்துநிலை விளக்கங்கள் பற்றியும் அறிந்தேன். சுந்தர ராமசாமியின் கருத்தியலை ஆதாரமாக்கி பல எழுத்தாளர்கள் தமது விமர்சனங்களை செய்வதை ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். இன்றைய சூழலில் ஆளுமைகள் மதிப்பீடு என்னை மிகவும் பாதித்த/ எனக்குள் சுய விமர்சனம் செய்யகூடிய திறனை வளர்க்க உதவிய/ எனக்கான கருத்தியலுக்கு அடித்தளமிட்ட படைப்பாகி விட்டது.
அப்போது வித்தயாசமான எழுத்து என்றும் கொடுமையான எழுத்து என்றும் ஒதுக்கிய எழுத்துகள் இன்று என்னுள் பரந்து விரிந்து போய் இருக்கின்ற மாயம் சுந்தர ராமசாமி என்னும் மகத்தான படைப்பாளியால் செய்ய முடிந்தது.
சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படம்.
அரவிந்தனின் சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரை.
https://azhiyasudargal.wordpress.com/2010/10/14/%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/
அழியாச்சுடரில்
http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
களைகள்.
மிகச் சமீப காலமாக எம்மிடையே பரவிக்கொண்டிருகின்ற இரண்டு வற்றாத நோய்கள் பற்றி எனது தனிப்பட்ட பார்வை என்பதால் இதிலுள்ள கருத்தியல் மிக மட்டமாகவும் கீழ்த்தனமானதாகவும் இருக்கலாம். இதை பற்றி விவாதித்து கொள்ள தேவையில்லை.
இலங்கைத் தமிழர் இடையே காலம் காலமாக இருந்துகொண்டிருந்த செந்தீ சமீபத்தில் கீழ் பக்கங்களில் திரண்ட வெள்ளத்தால் அணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எத்தனையோ ஆண்டுகள் சுமந்து வந்த வலியையை மிக சாதாரணமாக வெள்ளம் அணைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் மே மாதத்தில் நடந்திருப்பது தமிழ் மக்களின் மனதில் இன்னும் இன்னும் குளிர்ச்சியை கிளறிவிட்டிருகின்றது. உதவும் கரங்கள், கால்கள், டிப்பர்கள் என்று கீழ் பக்கத்திற்கு சென்றுகொண்டிருகின்றன. வலியென்றால் இதுதான், காலம் தன் வேலையை செய்தே தீரும், பழிக்கு பழி, மே இரு இனத்திற்கும் கறுப்பு மாதம் என்று தமிழையும் உணர்வுகளையும் சந்தோசங்களையும் கூடவே நீங்கள் தயார் என்றால் நாங்கள் வருகின்றோம், சிங்கள சகோதரர்களே என்று போலி ஆட்டின் முகமூடியை போர்த்திகொண்டும் பழிக்கு பலி தீர்த்த இயற்கைக்கு வணக்கம் செய்யும் இழி நிலையில் இன்றைய தமிழ் மக்கள் இருப்பது வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது.
சாதாரண மனித பண்புகளை மீறிய அடக்குமுறைக்கும் பேராசை வேட்கைக்கும் நொந்து போயிருக்கிறோம் என்ற வெளிப்படை உண்மையை இவை எனக்கு எடுத்துகாட்டுகின்றன. இதில் உதவும் மனப்பாங்கு என்பது வேறு விதமான அர்த்தத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. “இதுவரையும் எந்த உதவியும் செய்யாத சிங்கள பேரினவாதிகளே பாருங்கள்! நாங்கள் உங்களுக்கு ஒன்று என்றால் உடனே வந்து உதவி செய்கிறோம். மனிதப்பண்பு மிக்க எங்கள் தமிழ் இனத்தையா நீங்கள் அழித்தீர்கள்? “ என்பது தான் இன்றைய ஒவ்வொரு உதவியின் பின்னலான உண்மைகள்.
இங்கு கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு ஆவணமும் ஒரு மிகப்பெரிய பிரதி உபகாரத்தை நோக்கியே இருகின்றது. சிலதை தவிர இங்கே எங்களின் (தமிழ் மக்களின்) சுயநலம் மேலோங்குகின்றது போல எனக்கு தோன்றுகின்றது.
அடுத்த விடயம் இன்று சிந்தனை செயல் இரண்டு தளத்திலும் நடக்கின்ற மிக திறமையான விடயங்கள், அதன் பின்னால் நின்று உழைத்த ஆளுமைகள் யார் என்றே தெரியாமல் மெழுகப்பட்டு லாவகமாக உடை குச்சிகள் ஏறிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். வெளிப்படையாக எந்த தகுதியும் இல்லாதவர்கள் வேடமிட்டுக்கொண்டு உரியவர்களின் ஆளுமைகளை மறைப்பது எந்நாட்டிலும் மிக கொடிய குற்றம், தெரிந்தோ தெரியாமலோ (சம்பிரதாயத்திற்காக) இன்றைய கற்று அறிந்த சமூகத்தினர் இதில் மிக தீவிரமாக ஈடுபடுகின்றனர். இது தான் தீவிரவாதம். எமது சமூக ஆளுமைகளை அடியோடு அமர்த்தும் கொடிய தீவிரவாதம்.
சங்கடமான செய்தி என்னவென்றால் நடைபெறுகின்ற குப்பை கேளிக்கைகளில் நாங்கள் எந்தப்பக்கம் என்பதிற்கு மிக நுட்பமான உரையாடல்கள் வேறு. இதை எந்த திசையில் ஆரம்பித்து களைய வேண்டும் என்பதே தெரியவில்லை.
முதலாவது விடயம் இனத்தின் இழுக்கு இரண்டாவது தனிமனித இழுக்கு.
எதைக்களைவது முதலில்?
வடக்கின் மறக்கப்பட்ட நாட்டார் இலக்கியங்கள் 08 – நாட்டார் கதைகள் II
மனித நாகரிக வளர்ச்சியுடன் கூடவே வளர்ந்து வந்த முக்கிய கூறு மனிதப் பண்புகள். மனித நாகரிகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதப் பண்புக உருவாகி வளர்ச்சியடைந்து முதிர்ந்து போய் செப்பனான முறையில் வரையறுக்கப்பட்டு இன்று வெளிவந்து விட்டன. சொல்லளவில் மிக முதிர்ச்சியான மனிதப்பண்புகள் இன்று எல்லா சமூகங்களிலும் ஊடுருவியிருகின்றன. எம் சமூகத்தில் இன்றிருக்கின்ற எல்லா மதத்தினருக்கும் நன்கு வரையறுக்கப்பட்ட மனிதப் பண்புகளை கூறுகின்ற மத நூல்கள் எழுத்துவடிவில் இருக்கின்றன.
அதை விட ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதற்கே உரிய மிக தொன்மையான வாய்வழி இலக்கியங்கள் மிக பலமான மனித பண்புகளை கடத்திக்கொண்டு இருகின்றது. இவையெல்லாம் வெறும் எழுத்துரு சொல்வழி தளத்தில் இயங்குகின்றனவே ஒழிய சமூகத்துக்குள் ஊடுருவி புழங்குகின்ற தன்மை அற்றனவாக காணப்படுகின்றன. இந்த புழக்கம் இன்மையின் வினைதான் இன்றைய சமூக சீர்கேடுகள். எமது சமூகங்களுக்கு மனிதப்பண்புகளை உருவாக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் அமுல்படுத்தவேண்டிய, பின்பற்றவேண்டிய தேவை இருகின்றது. இதை யாரும் மறுத்துவிட முடியாது.
வடக்கு நட்டார் இலக்கியங்களின் இறுதிப் பகுதியான நட்டார் கதைகளின் நிறைவுப் பாகம் இது. வடக்கில் காலம் காலமாக இருந்த மக்களிடையே வாய்மொழியாக பேசப்பட்டு பின்பற்றப்பட்டு கடத்தப்பட்ட மனித நேய பண்புகளை கூறும் கதைகள்தான் இந்த பாகத்தின் மையப்பொருள். வடக்கு மனிதர்களிடையே காலம் காலமாக இருக்கின்ற இருபிரச்சனைகளை சுற்றியே எல்லா மனிதநேய கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
(staticflickr.com)
ஒன்று ஆட்சி, இன்னொன்று குடும்பம். இவை இரண்டிலும் நாளாந்த வாழ்வியலில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கலை கருவாக கொண்டு நல்லது இது கெட்டது இது என்று வரையறை செய்கின்ற கதைகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன. இரண்டு அரசு மற்றும் குடும்ப கட்டமைப்புக்களை களமாக கொண்டு பிரச்சினையை முன்வைத்து பின்னர் அதனால் உழல்கின்ற மக்களின் வாழ்வியலை காட்டி கடைசியாக பிரச்சனையிலிருந்து மீள்கின்ற வழியினை போதித்து கதையை முடித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கதைகள் இந்த கட்டமைப்பிலேயே இருக்கின்றன.
கதைகளில் சில நுட்பமான குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தில் இருக்கின்ற தீய சக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னணி இப்படியாக அமைகின்றது. அதிகாரங்களில் இருப்பவர்களிடையே இருக்கின்ற தீய எண்ணம் கொண்டவர்களை எதிர்த்து வெளிப்படையாக கதைக்கக்கூடிய அல்லது போராடக்கூடிய திறன் அற்றவர்களாக இருந்த மக்கள், அவர்களை ஐந்து அறிவு படைத்த மிருகங்களாகவே கருதினார்கள். அவர்கள் செய்கின்ற அட்டகாசங்களை பிறருக்கும் அறிவிக்கின்ற, அறிவுறுத்துகின்ற வகையில் அதிகாரத்தில் இருக்கின்ற தீயவர்களை மிருகங்களுக்கு ஒப்பாக கருதி மிருகங்களாகவே வடித்துள்ளனர். அவர்களுடனான சாதாரண மக்களின் உரையாடல்களும் போராட்டங்களும் வெற்றியும் தோல்வியும் அதனூடு வெளிப்படுகின்ற நல்ல, தீய மனிதப்பண்புகளின் பிரிவினையையும் இந்தக் கதைகளினூடாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்த குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சியில் இருக்கின்றவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர்.
(blogspot.com)
கதை 1
“……… ஒரு நாள் நெல்லை காயவைத்துகொண்டிருக்கும் பெண்ணிடம் சென்று ‘உன்னை கடிக்கட்டா இல்லை நெல்லை கொறிக்கட்டா?‘ என்றது காட்டு பன்றி, அவள் பயத்திலேயே ‘நெல்லை கொறித்துகொள்‘ என்றாள்…………..”
கதை 2
“……………….கல்யாணத்தன்று குரங்கு அவனிடம் இதைக்கூற அவன் மறுத்துவிட்டான். பின்னால் ஏதோ ஒரு வகையில் குரங்கு அவனிடம் பேசி சம்மதிக்க வைத்தது………….”
கதை 3
“……………. அவளை மயக்கிக் கொண்டு சென்ற புலி ஒரு அழகான ஆண் புலிக்குழந்தையை அவளுக்கு கொடுத்தது…………………..”
கதை 4
“……………..தவளையிடம் அரசியை பார்த்து வரும் படி அவன் தூது அனுப்பினான். அதை அரச கழுகு கவனித்து ராஜாவிடம் சொல்லி விட்டது……..”
சில கதைகளில் மனித அறியாமையும் அதனால் ஏற்படுகின்ற தவறுகளும் அதற்கு உதவுகின்ற மாந்தர்களும் என உதவி செய்தலையும் செய்த உதவியை மறக்காமல் இருத்தலையும் ஆழமாக கூறுகின்றன. இவற்றுள் பொதுவாக குடும்ப பின்னணியே பயன்படுத்தபடுகின்றது.
கதை 5
“ ஒரு விவசாயி தினமும் பெரிய பெரிய கிழங்குகளை பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வருவான். ஆசையுடன் மனைவியிடம் கொடுத்து காய்ச்சச் சொல்வான். அவளும் பக்குவமாக பெரிய கிழங்குகளை அடியிலும் சிறிய கிழங்குகளை மேலும் வைத்து காச்சுவாள். காய்ச்சிய கிழங்குகளை அவன் தட்டில் குப்புற கொட்டுவாள். எப்போதும் அவனுக்கு சிறிய கிழங்குகளே கிடைக்கும். அதனால் மிக வருத்தம் அடைந்தவனாய் நண்பனிடம் ஒருநாள் சென்று விவரத்தை கூறினான். நண்பன் நெய்யை மனைவிக்கு தெரியாமல் தாச்சியின் அடியில் பூசி விட்டு விவரத்தை பார் எண்டான். இவனும் அப்படியே செய்தான் அண்டைக்கு எல்லா கிழங்குகளும் அவன் தட்டில் விழுந்தன. மனைவி தான் செய்த அறியாமையின் தவறை உணர்ந்து மனிப்புகேட்டாள். விவசாயி நண்பனுக்கு நன்றியுடையவனாக இருந்தான்.”
இந்த வாய்வழி கதை; உதவி, மன்னிக்கும் மனப்பாங்கு, நன்றிமறவாமை என்ற மனிதப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. இருந்தும் இதன் பின்னணியில் இருக்கின்ற, இதே போன்ற சில கதைகளின் பின்னணியில் இருக்கின்ற வெளிப்பாடுகள் பெண் அறியாமை என்ற கருவில் பேசுகின்றன.
(yartmagazine.com)
அடுத்து மிக முக்கியமாக கதைகளில் இருக்கின்ற பண்பு பாசம். அம்மா-மகன், அண்ணன்-தங்கை, கணவன்–மனைவி என்ற பாசப்பிணைப்புக்கள் போன்றவை கதைகளில் இழையோடி இருக்கிறன. எந்த சந்தர்ப்பத்திலும் மகனை விட்டுக்கொடுக்காத அம்மா, ஐந்து அண்ணன்களை தனது சாகசத்தால் மீட்ட தம்பி, தங்கையின் பாசத்துக்காக மனைவியை துறந்த அண்ணன் என்று கதைகள் ஒவ்வொன்றும் விதவிதமான பாசப்பிணைப்புகளை காட்டுவதாகவே அமைகின்றன.
கதை 6
“……….அண்ணா! அண்ணி செய்யும் கொடுமைகளை பார் என்று கேட்பது போல அவனுக்கு அவன் நான்கு தம்பியரின் பார்வைகள் இருந்தன, அவன் மனைவியை துரத்திவிடவில்லை. பக்குவமாய் பல மொழிகள் சொன்னான். அவளும் வெகு விரைவில் திருந்தி அண்ணனும் தம்பிமார்களும் அண்ணியும் மருமகளும் மிக சந்தோசமாக வாழ்ந்தார்கள்……….”
கதை 7
“………….புலி மரத்தின் மேலே நின்றதைப்பாரத்த அண்ணன் அது தாவும் முன்னர் தங்கச்சியை காப்பாற்ற புலி மீது பாய்கிறான்……..”
அரசாட்சிக்குள் நடக்கின்ற பிரச்சனைகளையும், அதில் ஏற்படுகின்ற கவனக்குறைவால் உண்டாகின்ற பிழைகளையும் மந்திரி ஊழியர் அரசர் உறவுகளையும் இளவரசியின் காதல், உதவுகின்ற மனப்பாங்குகளையும் போர்யுக்தி அரச பரஸ்பர உறவுமேம்பாட்டயும் அதிலே உண்டாகின்ற உன்னத மனித பண்புகள் பற்றியும் சில கதைகள் விவரிக்கின்றன.
மனிதப்பண்பு என்ற வகையோடு பேய்க்கதைகள் மந்திரக்கதைகள் என அமானுஷ்யங்களை பற்றிய கதைகள் வெகு சிலவும் காணப்படுகின்றன.
(google.lk)
இந்த பேச்சு வழி கதைகள் எல்லாம் எந்தக்குறையும் இன்றி கடத்தப்படுகின்றனவே ஒழிய பயன்படுத்தபடுகின்றன்வா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதிலிருந்து முடிவுகளையும் அனுபவங்களயும் எடுத்துக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிக உன்னத பண்பாடு நாகரீகம் என்று வெறும் புறவய நிலுவைகளை கொண்டாடுகின்றோமே ஒழிய அகவயமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் நிதர்சனம்.
இந்த மறக்கப்பட்ட வடக்கு நாட்டார் இலக்கியங்கள் என்ற தொடர் இத்துடன் என்வழியே முற்று பெற்றாலும் ஆழமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பயன்படுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. தொடரின் ஆரம்பத்தில் கூறியது போல
“இன்றைய ஈழத்திலிருந்து வரும் படைப்புக்களில் பெரும்பாலானவை போர் என்ற பின்னணி தாங்கிய வரலாற்று சுவடுகளே. இதில் மறுக்கவோ எதிர்க்கவோ எதுவுமே இல்லை. எழுத்தாளன் எதை சுற்றி இருக்கிறானோ அதுதான் அவன் எண்ணங்களைத் தீர்மானிக்கும். அதுவே பேனா வழியே வழியும். வடக்கு எழுத்தாளர்களில் சுற்றம் போரும் அதன் வடுவும் அதன் பின்னான வாழக்கையையும் தாங்கியது. அதுதான் அவர்களின் படைப்புக்கள். அதுதான் இலக்கியங்கள். இந்த மரபு இன்று நேற்று இல்லை, காலம் காலமாக இருக்கின்ற உண்மை கருத்தியல். இதனாலேயே இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படுகின்றன.”
இன்று இத்தோடு முடிகின்ற அத்தியாயம் இன்னொரு முறை மிக ஆழமாக எழுதப்படும்.